Tuesday, June 4, 2013

நாகர்களின் நடுவே உத்தவன்!

நாகர்களின் முக்கியக் கடவுளான பசுபதியிடம் இருந்து நேரடியாக உத்தரவுகளை ஆர்யகன் பெற்று வருவதாகவும் ஒரு நம்பிக்கை அந்த மக்களிடம் இருந்து வந்தது.  ஆகவே அவன் தங்களுக்கு அரசன் எனச் சொல்வதை விடக் கடவுளாகவே அம்மக்கள் நினைத்தனர்.  மஹரிஷி உத்தவனைக் காட்டி, ஆர்யகனிடம் இவன் உன் பெண்ணின் பேரன்;  உனக்குக் கொள்ளுப் பேரன் என்றதும் ஆர்யகன் மனம் மகிழ்ந்து உத்தவனை அருகே அழைத்து உச்சி முகர்ந்து தன் மூத்த பேரனும், தன் மகன்  கார்க்கோடகனின்  மூத்தமகனுமான மணிமானிடம் உத்தவனைக் கவனித்துக்கொள்ளுமாறு ஒப்படைத்தான்.  ஐம்பது வயதான கார்க்கோடகனும், இருபத்தி ஐந்து வயதிருக்கும் மணிமானும் நாகர்களில் சிறந்த வீரர்களாகக் காணப்பட்டனர்.   உடல் முழுதும், சிவப்பு, வெள்ளை நிறங்களில் கோடுகள் தீட்டி இருந்தது.  தலையில் இறகுகள் கொண்ட கிரீடமும், அரச குலத்தவரான நாகர்களின் பாரம்பரிய ஆயுதமான ஈட்டியும், கேடயமும் கைகளில் ஏந்தி இருந்தனர். 

புனர்தத்தனை மீட்க வேண்டிக் கடலுக்கு அப்பால் இருந்த நாகலோகத்துக்குக் கிருஷ்ணனுடன் சென்றிருந்தான் உத்தவன்.  எனினும் இப்போது தான் தன் தந்தையின் தாயார் எங்கிருந்து வந்தாளோ அவர்களுக்கு நடுவே இருக்கிறான்.  அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் கொண்டான். ஆர்யகன் உத்தவனைத் தன் பல்லக்கின் அருகிலேயே கூடவே வரச் சொல்லி வற்புறுத்தினான்.  அங்கே  பல்லக்கின் இரு பக்கங்களிலும் பசுபதி நாதருக்கு வழிபாடுகள் செய்து வரும் பூசாரிகள் கைகளில் பெரிய தண்டத்தைத் தூக்கிக் கொண்டு மழுங்க மொட்டை அடித்த தலையோடு வந்து கொண்டிருந்தனர்.   செல்கையில் உத்தவனிடம் ஆர்யகன் உத்தவனோடு பேசிக் கொண்டே வந்தான்.  உத்தவனின் தாத்தா ஷூரன் எப்படித் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நேரிட்டது என்பது தெரியுமா என்றும் கேட்டான்.  உத்தவன் அதைக் குறித்துத் தனக்குத் தெரியாது என்றதும், ஆர்யகன் தன் மகள் மரிஷா எப்படி யாதவர் தலைவன் ஷூரனைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது என்பதைச் சொல்ல ஆரம்பித்தான்.

“அது நடந்து பல வருடங்களுக்கும் மேல் இருக்கும்.  யமுனைக்கரையில் யாதவக் குடிமக்களான விருஷ்ணி குலத்தவர், ஷூரர்கள், அந்தகர்கள் அனைவரும் காடுகளை அழித்துத் தாங்கள் குடியிருக்க ஒரு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  ஷூரன் மிகவும் தைரியசாலியான தலைவன்.னொரு முறை வேட்டைக்குச் சென்ற அவன் மிகக் கொடூரமான காட்டு ஓநாய்களால் சூழப்பட்டான்.  அந்த ஓநாய்களோடு போரிட்டதில் கிட்டத்தட்ட அவை அவனைக் கொன்றே போட்டிருக்கும்.  அப்போது தான் அதிசயம் நிகழ்ந்தது.  நாகர்கள் அங்கே வந்தனர்.  ஒரு குழுவாக வந்த நாகர்கள் ஷூரனைக் காப்பாற்றினார்கள்.   என்றாலும் ஓநாய்களின் தாக்குதலால் காயமடைந்த ஷூரன் மயக்கமாகவும் கிடந்தான்.  அங்கிருந்த நாகத் தலைவர்கள் தங்கள் அரசன் ஆன ஆர்யகன் இருக்கும் இடத்துக்கு அவனைத் தூக்கி வந்தனர்.  “

இது வரை கதை போல் சொல்லி வந்த ஆர்யகன் இப்போது நேரிடையாக உத்தவனிடம், “நான் பார்த்ததுமே அவன் மஹா வீரன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டேன்.  என் சொந்தக் குடிலுக்கே அவனை எடுத்துச் சென்று என் குடும்பத்தினரை விட்டே மருத்துவமும் பார்க்கச் செய்தேன்.   அப்போது தான், மரிஷா, என் மூத்த மகள், உடல்நலமின்றி இருந்த ஷூரனை மிகக் கவனமாகப் பாதுகாத்தாள்.”  தன் மகளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியவாறே தொடர்ந்து, “ மரிஷா ஒரு அழகான பெண் மட்டும் இல்லை; விவேகம், புத்தி சாதுர்யம், தைரியம் அனைத்தும் நிரம்பியவள்.  எழில் நிரம்பிய அவளின் நடை, உடை, பாவனைகள் அனைத்துமே ஒரு அழகான பெண் பாம்பைப் போல் இருக்கும்.  அவள் மனதில் யாதவத் தலைவன் ஷூரன் நிரம்பி விட்டான்.  அவனையே மணக்கவேண்டும் என நினைத்தாள்.  ஷூரனுக்கும் மெல்ல மெல்ல நினைவு திரும்பியது.  மரிஷா தன்னைக் கவனித்துக் கொண்டதோடு அல்லாமல் தன் மேல் வைத்திருக்கும் அன்பையும் நினைத்து அவனும் அவள் பால் ஈர்க்கப் பட்டான்.”

சற்றே நிறுத்தி விட்டு மேலே தொடர்ந்தான் ஆர்யகன்:” யாதவத் தலைவர்கள் வேட்டைக்குச் சென்ற ஷூரனைக் காணவில்லை எனத்  தேடிக் கொண்டு வந்தார்கள்.  அப்போது அவர்களுடன் ஷூரன் சென்றாலும் அவன் மனமெல்லாம் மரிஷாவிடமே.  யாதவர்களின் இருப்பிடம் சென்ற ஷூரன் தன் உடல்நிலை நன்கு தேறியதும் மீண்டும் என்னைத் தேடி வந்தான்.  மரிஷாவைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாய்க் கேட்டான்.  ஆனால் யாதவர்கள் எவருக்கும் இதில் சம்மதமே இல்லை;  மிகக் கோபம் அடைந்தனர்.  அவர்கள் தங்களைக் குறித்தும், தங்கள் குலம் குறித்தும் மிகவும் கர்வம் கொண்டவர்கள்.  அப்படிப் பட்ட குலத்தின் தலைவன் நாகர்களின் மகளையா திருமணம் செய்து கொள்வது?  ஆனால் ஷூரன் கெட்டிக்காரன் மட்டுமல்ல; திறமைசாலியும் கூட.  என்னுடன் நாககூடத்துக்கு வந்து என் மகளை முறைப்படி திருமணம் செய்து கொண்டு பின்னர் அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்.”


சற்று நேரம் மூச்சு விட்டுக் கொண்ட, ஆர்யகன்,”ஆஹா, அது எத்தனை பெரிய விழாவாக நடந்தது தெரியுமா?  யாதவர்கள் ஒரு பக்கம், நாகர்கள் இன்னொரு பக்கம், பெரிய பெரிய விழாக்களை எடுத்து விருந்து வைத்துக் கொண்டாடினார்கள்.  என் மரிஷாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அருமையான பெண் அவள்!  விரைவில் பல திறமையான கெட்டிக்காரர்களான மகன்களைப் பெற்றாள்:  அவளைப் போன்ற அழகான பெண்களையும் பெற்றாள்.”  ஆர்யகன் குரலில் தன் மகளைக் குறித்த கர்வம் மேலோங்கியது.

6 comments:

ஸ்ரீராம். said...

படிச்சுட்டேன்.

பி ஆர் சோப்ராவின் இதற்கும் என்ன வித்தியாசம்? எதில் விவரங்கள் அதிகம் உண்டு?

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுவரை அறியாத அற்புதமான கதை. படித்தேன். சுவாரஸ்யமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

இன்னம்பூரான் said...

ஆம். எனக்கும் புதிது.

sambasivam6geetha said...

சோப்ரா முழு மஹாபாரதம் தொடராக எடுத்தார். அதோடு அதில் பல மொழி பாரதத்தில் உள்ளவையும் சேர்த்திருந்தார். வியாசர் தான் ஒரிஜினல்.கிஸாரி மோஹன் கங்குலியின் ஆங்கில மஹாபாரதத்தைப் படித்துப் பாருங்கள்.

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார்,

வாங்க "இ" சார்,

உங்கள் இருவரின் பாராட்டுக்கும் முன்ஷிஜியே உரியவர். நன்றி.

அப்பாதுரை said...

எத்தனை கிளைத்தகவல்கள்!

சிறு நிரடல்களை ப்புருப்பு ரீடிங்கில் எடுத்துருங்க.. (உம்: 'செல்கையில் உத்தவனிடம் ஆர்யகன் உத்தவனோடு பேசிக் கொண்டே வந்தான்')