Sunday, September 6, 2015

பாமாவும் கண்ணனும்!

அதோடு அவள் தந்தைக்கு சூரியனின் அருளினாலும் கருணையினாலும் கிடைத்த இவ்வளவு அரிய சொத்துக்களில் இருந்து சிறு பாகமே ஆனாலும் அவர் ஏன் பிரித்துக் கொடுக்க வேண்டும்! அவர் சேர்த்த சொத்துக்கள் அவருக்கே உரியவை! வேறு யாருக்கும் கொடுக்க இயலாது! அதிலும் பாண்டு புத்திரர்களுக்கு நிச்சயமாய்க் கொடுக்க இயலாது. சத்ராஜித் பாண்டவர்களுக்கு உதவ மறுத்த அந்தக்குறிப்பிட்ட நாளில் இருந்து மற்ற யாதவ உயர் தலைவர்களுக்கும், சத்ராஜித் குழுவினருக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வந்தது. ஆனாலும் இது அவள் தந்தையின் தவறே அல்ல! ஹூம்! ஏழை மானுடர்கள் இப்படித் தான் பணக்காரர்களைக் கண்டு பொறாமைப் படுவார்கள். என்ன செய்வது!

அது போகட்டும்! இதற்காகவெல்லாம் கண்ணனைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவை பாமா மாற்றிக் கொள்வாளா? ஒருக்காலும் இல்லை! வரவேற்பு நிகழ்ச்சிக்கு சுபத்ராவுடன் சென்ற மகளிர் கூட்டத்தில் அவளும் இணைந்து கொண்டாள். கூட்டம் நகர வாயிலுக்கு அருகே சென்றதும் இரு வரிசையாகப் பிரிந்து நின்றது. அனைவரும் கண்ணனின் புகழைப்பாடும் நாடோடிப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். வேத பிராமணர்கள் பலரும் அங்கே வந்திருந்து வேத கோஷங்களை முழக்கிக் கொண்டிருந்தனர். அனைவர் மேலும் அக்ஷதைகளைத் தூவி ஆசீர்வதித்தனர். அந்தக் கண்கொள்ளாக் காட்சியை பாமா ஒரு நாளும் மறக்கவே மாட்டாள். தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அங்கே வந்த யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணன், பலராமன் தலைமையில் தங்கள் ரதங்களிலிருந்து கீழிறங்கி அங்கே வந்து அவர்களை வரவேற்கக் காத்திருந்த உக்ரசேனரை வணங்கினார்கள். பின்னர் வசுதேவன், சாத்யகன் மற்ற யாதவத் தலைவர்களையும் வணங்கினார்கள். வணங்குபவர்கள் கூட்டத்தில் பாமாவின் கண்கள் கிருஷ்ணனைத் தேடின! அதோ அவன்! பாமா கிருஷ்ணனைப் பார்த்துவிட்டாள்! ஆஹா! எவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்கிறான்! இத்தனை நாட்கள் வெளியே இருந்துவிட்டு வந்தவன் துளிக்கூட மாறவே இல்லை. அன்றிருந்த அதே கிருஷ்ணனாய் இளமையுடனேயே காட்சி அளிக்கிறான். இவனுக்கு முதுமையே வராது போலும்! அவன் தன் ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்த அந்தக் காட்சியானது அனைவர் கண்களையும் ஈர்த்ததோடு அல்லாமல் அவர்கள் நாள் முழுதும் செய்து கொண்டிருந்த அலங்காரத்தை எல்லாம் ஒன்றுமில்லாததாக ஆக்கிக் கொண்டிருந்தது. அனைவரும் தாங்கள் இரவல் உடையை அணிந்து வந்திருப்பது போல் உணர்ந்தனர்.

பாமாவின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவன் காலில் விழ வேண்டும்; தன்னை அர்ப்பணிக்க வேண்டும்; என்றெல்லாம் அவள் நினைத்தாள். அவனில் ஓர் அங்கமாக விரும்பினாள். ஊர்வலம் மெல்ல மெல்ல நகருக்குள் சென்றது. பெண்மணிகள் அனைவருக்கும் சுபத்ரா தலைமை தாங்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத மக்களைத் தவிர அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்து ஊர்வலத்தைப் பார்க்கக் கூடி இருந்தனர். யாதவர்களில் பெருந்தலைவர்கள் அனைவரும் அங்கே திரண்டிருந்தனர். அவர்களில் அவள் தந்தையும்,அவள் சிற்றப்பன் பிரசேனனும் அவர்களின் மற்ற சிநேகிதர்களும் மட்டும் காணப்படவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை அவள் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தாள். ஊர்வலம் வசுதேவரின் மாளிகையில் சென்று முடிந்தது. கூட்டம் அங்கே கலைந்து சென்றது. சுபத்ரா கிருஷ்ணனிடம் ஓடோடிச் சென்றாள். கூடவே தன் கைகளில் பிடித்திருந்த பாமாவையும் இழுத்துச் சென்று விட்டாள். கிருஷ்ணனை நெருங்கியதுமே தன் கைகளில் இருந்த பானையை அருகே இருந்த ஓர் பெண்மணியிடம் கொடுத்த சுபத்ரா கிருஷ்ணன் தோள்களில் குழந்தையைப்போல் சாய்ந்து விட்டாள்.

இந்தப் பீறிடும் அன்பை அங்கே எவரும் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் சுபத்ராவின் வயதில் இத்தகையதொரு நிகழ்வை யாருமே நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. பதினைந்து வயதான சுபத்ரா இப்படி அனைத்துப் பெரியோர்களுக்கும் முன்னால் நடந்து கொள்வாள் என்பதை யாரும் எதிர்பாக்கவில்லை. அனைவருக்கும் இது அதிர்ச்சியைத் தந்தது. அவள் அப்படிச் செய்திருக்கக் கூடாது. அவன் கால்களில் விழுந்து வணங்கி இருக்கலாம். அவன் பாததூளியைச் சிரசின் மேல் தரித்திருக்கலாம். ஆனால் கிருஷ்ணன் இதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அவள் தலையைத் தடவிக் கொடுத்து, காதைத் திருகிப் பின் அவளிடம் சொன்னான்:”சுபத்ரா! எவ்வளவு வேகமாக வளர்ந்து விட்டாய்!” அவன் குரலில் தான் எவ்வளவு பாசம்! அந்தக் குரலின் இனிமை பாமாவையும் மயக்கியது. தங்கை மேல் இவ்வளவு பாசமா? அதன் பின்னர் அவன் நிமிர்ந்தபோது பாமா அவன் கண்களில் பட்டாள். கிருஷ்ணனை அவள் பார்த்த அதே நேரம் அவனும் அவளைப் பார்த்தான்! அவன் அருகே பாமா நின்று கொண்டிருந்தாள். அந்த அண்மையே அவளை என்னவோ செய்தது! அப்படி இருக்க இப்போது இருவர் பார்வைகளும் மோதிக்கொள்ள, பாமாவுக்கு அந்த க்ஷணமே அவன் தோள்களில் சாய்ந்துவிடலாமா என்றே தோன்றியது. அந்த ஆசை அதிகரித்தது அவளுக்கு.

வெகு நாட்களாக அவள் அவனைத் தன் கனவுகளிலேயே கண்டு கொண்டிருந்தாள். அப்போது தான் அவள் சந்தோஷம் அடைந்து வந்தாள். ஆனால் அவை எல்லாம் அவளுடைய ரகசியங்கள். ஆனால் இது கனவில்லை! நனவு! நிஜம்! இதோ அவன் நேரில் எதிரே நிற்கிறான். உயிரும் உணர்வுகளுமாக! நீல நிற மேனியில் மஞ்சள் வண்ணப் பீதாம்பரம் அணிந்து தலையில் மயில் பீலி சூடிக் கழுத்தில் வண்ணமயமான மாலைகளை அணிந்து கொண்டு நிற்கிறான். அவள் தான் உயிருடன் இருப்பதன் பொருளே இந்தச் சந்திப்பு ஒன்றிற்காகத் தான் என நினைத்தாள். அவள் தான் உயிருடன் இருப்பதைக் குறித்து மகிழவும் செய்தாள். மற்ற எந்த மனிதனையும் விட இவன் ஒருவனே நிஜமான மனிதன்! அவ்வளவு ஏன்! அவள் அறிந்த மற்ற எந்த மானுடனையும் விட ஆண்களையும் விட இவன் ஒருவனே சிறந்த ஆண்மகன்! இது நிச்சயம்!

அவள் மனதில் அப்போது புரட்சிகரமான எண்ணங்கள் ஓடின. அதனால் அவள் குழப்பமடைந்தாள். இவன் விருந்தாவனத்து கோபியர் மனதிலும் குடி இருந்தான்; இருக்கிறான். அங்கே யாரோ ராதையாமே! இவனுக்கு அணுக்கமானவள்! அதைத் தவிர இவன் முதல் மனைவி ருக்மிணி, பின்னர் இன்னொரு மனைவியான ஷாயிப்யா! இவர்கள் மட்டுமா!  துரியோதனன் மனைவி பானுமதி! பின்னர் காம்பில்யத்து இளவரசி திரௌபதி! ஆனாலும் இத்தனையையும் தாண்டிக் கொண்டு அவன் அவள் மனதில் குடி புகுந்தான். நிரந்தரமாக வசிக்கிறான். வேறு எவருக்கும் அங்கே இடமில்லாதபடி முழுமனதையும் அவன் ஒருவனே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான்.  வேறு எந்தப் பெண்ணின் மனதிலும் இவன் இப்படிக் குடி இருந்திருக்க முடியாது! அவள் மனதில் தோன்றிய எண்ணங்களினால் அவள் உணர்ச்சி பீறிட்டு எழுந்தது. அதனால் அவளுள் தோன்றியதோர் எண்ணம் இவன் நிச்சயம் கடவுளே தான்! அந்த மஹாவிஷ்ணுவே தான்! இவனை எவராலும் வெல்ல முடியாது. இவனால் வெல்ல முடியாப் போர்க்களங்களும் இருக்க முடியாது! இவனால் தோற்கடிக்க முடியா எதிரிகளும் இருக்க மாட்டார்கள். இப்படிப் பட்ட ஒருவனுக்கு அவள் மனைவியாக வேண்டும்! ஆம்! என்ன நடந்தாலும் சரி! என்ன விலை கொடுத்தாலும் இவன் மனைவியாகத் தான் வேண்டும்.

அப்போது கண்ணன் அருகே நின்றிருந்த சாத்யகி கண்ணனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்:”வாசுதேவா, இந்த இளம்பெண் யாரென நீ அறிவாயா?”
“ஓ! எப்போதோ ஓர் முறை இவளைப் பார்த்த நினைவு எனக்கு இருக்கிறது!” என்ற வண்ணம் அவளைப் பார்த்து மோகனமாகச் சிரித்தான் கண்ணன். சத்யபாமாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. “ஆனால் இவள் தந்தை யார்? யாருடைய பெண் இவள்? எனக்கு அது நினைவில் இல்லை!” என்றான். மேலும் கூறினான்: “இப்போது எனக்கு இவளை தங்கப்பானையுடன் கூடிய தங்க யுவதி என்னும் அளவிலேயே நினைவில் இருக்கும்.” என்றும் சொன்னான். அப்போது சுபத்ரா இடை மறித்தாள்.

“கோவிந்தா! இது என்ன நீ சொல்வது! உண்மையிலேயே இவள் யாரென நீ அறிய மாட்டாயா?” என்றவள், “இவள் என் அருமைச் சிநேகிதி! சத்யபாமா! சத்ராஜித்தின் ஒரே மகள்!” என்றதும் கிருஷ்ணன் உடனே சாத்யகியைத் திரும்பிப் பார்த்து, “ஓஹோ! இந்தப் பெண் தானே உன்னைக் கடத்தினவள்?” என்றும் கேட்டான். பின்னர் கண்ணன் அவள் பக்கம் திரும்பி மகிழ்ந்தவன் போலக் கேட்டான்! “ இளம்பெண்ணே! மிக அருமை! நானும் எத்தனையோ கடத்தல்கள் குறித்துக் கேட்டிருக்கிறேன். அவ்வளவு ஏன்? விதர்ப்ப நாட்டு இளவரசியை நானே கடத்தி வந்தேன்! ஆனால் சாத்யகி போன்ற ஓர் சகல கலா வல்லவனை, வீரனைக் கடத்திய முதல் பெண்மணி நீ தான்!” என்ற வண்ணம் கண்ணன் சிரித்தான். அங்கே ஓர் இனிமையான இன்னிசை கேட்பதாக பாமா நினைத்தாள். அவள் மனதில் பூச்சொரிந்தது. அவன் பேசினாலும் இசை, சிரித்தாலும் இசை!

ஆனால் இந்தப் புகழ்ச்சி! புகழ்ச்சியா இது! இதைக் கேட்டுவிட்டு பாமாவிற்குத் தர்மசங்கடமாக இருந்தது. அவள் வாயையே திறக்கவில்லை. ஆனால்  கிருஷ்ணன் மேல் மின்னலைப் போன்றதொரு ஒளி கொடுக்கும் பார்வையைத் தன் கீழ்க்கண்களினால் பளிச்சிட்டுக் காட்டினாள். இதற்குக் கிருஷ்ணன் மறுமொழி சொல்வான் என அவள் எதிர்பார்த்திருந்தால் அதில் தோற்றுப் போனாள். கிருஷ்ணன் அதற்கு எவ்விதப் பிரதிபலிப்பையும் காட்டவில்லை. சுபத்ரா பக்கம் திரும்பி “சரி, சுபத்ரா, நீ உன் அந்தப்புரம் செல்! நான் அம்மாவைப் போய்ப் பார்க்க வேண்டும்! என் வணக்கங்களைத் தெரிவிக்க வேண்டும்! “என்ற வண்ணம் பாமா பக்கம் பார்த்தவன்,”சத்ராஜித்தின் மகளே! நீ என்னையும் என் நண்பர்களையும் வரவேற்க வந்தது உன் கருணையினால். உன் அன்பான உள்ளத்தினால். உன் தந்தையையோ அல்லது உன் சிற்றப்பாவையோ பல மாதங்களாக நான் பார்க்கவே இல்லை. ஒரு நாள் உங்கள் மாளிகைக்கு வந்து அவர்கள் இருவருக்கும் என் நமஸ்காரங்களைத் தெரிவிக்கிறேன்.” என்றான்.  சத்யபாமாவுக்குத் தன் தந்தையும் சிற்றப்பனும் கிருஷ்ணன் விஷயத்தில் நடந்து கொள்ளும் முறையினால் அவமானமாக இருந்தது. ஹூம்! கிருஷ்ணன் வரப்போகிறான் என்று தெரிந்தே நான்கு நாட்கள் முன்னால் யாகத்தை அவள் தந்தை ஆரம்பித்து வைத்துவிட்டார். சரி, அதுதான் போகட்டும் எனில் வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சிற்றப்பா பிரசேனனையோ, அண்ணன் பாங்ககராவையோ அனுப்பி வைத்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை! என்ன மனிதர் அவர்!

அந்தக் கூடத்தில் ஊஞ்சலில் ஆடியபடியே யோசித்துக் கொண்டிருந்த பாமாவின் மனதில் அடுக்கடுக்காக எண்ணக்குவியல்கள் தோன்றிய வண்ணம் இருந்தன. எண்ணங்களின் வேகத்துக்கு ஏற்ப ஊஞ்சலும் வேகமாக ஆடியது. யந்திரத்தனமாக அவள் கைகள் தன் செல்லப்பூனை ஊர்வசியின் முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன. அவள் மனமெல்லாம் கிருஷ்ணனே நிறைந்திருந்தான். அவனைப் பார்க்க நேர்ந்த அந்த நேரம் அவள் கண்கள் எதிரே தோன்றியது! கிருஷ்ணனே அவள் முன் தோன்றினான். அவன் புன்சிரிப்பு அவள் மனதைக் கவர்ந்தது! எப்படிச் சிரித்தான் அவளைப் பார்த்து! அந்தக் கண்களில் தான் எவ்வளவு கருணை! ஹூம்!

அப்போது பார்த்து ஒரு சேடிப் பெண் உள்ளே நுழைந்தாள். உடனே அவள் எண்ணச் சங்கிலி பட்டென அறுந்தது. ஊஞ்சல் ஆட்டுவதை நிறுத்தினாள். ஊர்வசி அவள் மடியிலிருந்து கீழே குதித்தது. தன் வாலை உயரே உயர்த்திய வண்ணம் அந்தச் சேடிப் பெண்ணைப் பார்த்துச் சீறியது. சேடிப் பெண் பாமாவிடம், “அம்மா! பிரபு அவர்கள் தங்களை உடனே பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களை உடனே வரச் சொன்னார்.” என்று சொன்னாள். “அடக் கடவுளே!” என்று தனக்குள்ளே முணுமுணுத்தாள் பாமா! இனி என்ன செய்யலாம்! வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போன போது அணிந்திருந்த விழாக்கால உடைகளை அவள் மாற்றாமல் இருந்து விட்டாளே! அதோடு நகைகளை வேறு நிறைய அணிந்து கொண்டிருந்தாள். அவற்றை எல்லாம் எடுக்க இப்போது சமயமே இல்லையே! இதனால் அவள் தாமதமாகச் சென்று தந்தையைச் சந்தித்தால் அவருக்குக் கோபம் வரும். அவரைக் காத்திருக்க வைத்திருக்க இயலாது. அவள் தன் உடைகளைக் கொஞ்சம் சரி செய்து கொண்டு அவரைச் சந்திக்கச் சேடிப் பெண்ணோடு சென்றாள்.

No comments: