Monday, May 2, 2016

எரிந்தது திரும்பி வருமா?

ஆதுரத்துடன் தன் மகனைப் பார்த்த பராசரர் அவன் தோளில் கை வைத்துத் தட்டிக் கொடுத்தார். ஆனாலும் அவர் பார்வை எங்கோ தொலைதூரத்தில் இருந்தது. “குழந்தாய்! இது ஒரு காலத்தின் என்னுடைய ஆசிரமமாக இருந்தது.என்னுடைய நூற்றுக்கணக்கான சீடர்களுடனும் ஏராளமான மாணாக்கர்களுடனும் நான் இங்கே வேதங்களைக் கற்பித்து வந்தேன். அதற்காக என் வாழ்க்கை அர்ப்பணித்திருந்தேன். “ சற்றே நிறுத்திய பராசரர் மீண்டும் தன் வலுவை எல்லாம் திரட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தார். அவர் கண் முன்னே அவர் ஆசிரமம் அழிந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் தோன்றின. அந்த மனப் பிரளயத்திலிருந்து தன்னைக் கஷ்டத்தோடு மீட்டுக் கொண்டு இப்போதைய நிலைக்கு வந்தார். தந்தையின் மனோவேதனையை த்வைபாயனன் உடனே புரிந்து கொண்டு விட்டான். அவன் வயதுக்கும் அனுபவத்துக்கும் இது அதிகம் தான். ஆனாலும் வெகு புத்திசாலிக் குழந்தையாதலால் அவர் மனநிலையை அவன் அப்படியே உணர்ந்தான். தன் தந்தையை ஆதுரத்துடன் தொட்டுத் தடவிக் கொடுத்தான். முனிவர் மேலும் பேசினார்:” ம்ம்ம்ம்…. பின்னர் அந்தக் கொடிய அரசன் என் ஆசிரமத்திற்கும் வந்துவிட்டான். என் ஆசிரமத்தில் வசிப்பவர்களை எல்லாம் கொன்று குவித்தான். என் சீடர்கள் உயிருக்குத் தப்பி அங்குமிங்கும் ஓடினார்கள். அவர்களில் பலர் இறந்தனர். பெண்கள் அவன் வீரர்களால் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். என்னிடம் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்தனர். பசுக்கள் அவர்களால் கொல்லப்பட்டன அல்லது இழுத்துச் செல்லப்பட்டன.”

“தாங்கள் அப்போது எங்கே இருந்தீர்கள், தந்தையே? அந்தக் கொடிய அரசன் வந்தபோது தாங்கள் ஆசிரமத்தில் இல்லையா?”

“இல்லை, நான் ஆரியவர்த்தத்தின் அரசர்களை எல்லாம் சந்தித்து இந்தக் கொடிய அரசனின் பாதகங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தேன். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து அவனை எதிர்க்கவில்லை எனில் இந்த ஆர்யவர்த்தத்தில் உள்ள ரிஷிகள் அனைவரின் ஆசிரமங்களையும் அவன் அழித்து ஒழிப்பான் என்று எடுத்துக் கூறினேன். வேதங்கள் ஓதுவது நின்று போய்விட்டால் நமக்குக் கடவுளரின் கருணை எப்படிக் கிடைக்கும்? ஆரியர்களின் வாழ்க்கை நடைமுறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுச் சீரழிந்து போய்விடுமே! பழமையான சம்பிரதாயங்களும், கலாசாரமும் மறைந்துவிடும். இவற்றை எல்லாம் மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் எடுத்துச் சொல்லி எச்சரித்தேன்; பின்னர் நான் திரும்பி என் ஆசிரமத்துக்கு வந்தால் அது ஏற்கெனவே அழிக்கப்பட்டு விட்டது. ஆசிரமவாசிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர்.”

த்வைபாயனன் கண் முன்னே தோன்றிய அந்தக் கோரக்காட்சியை நினைக்கவே அவன் மிகவும் நடுங்கினான். அவன் மனமும், உடலும் ஒருசேர நடுங்கியது.

“தனியாகவே அந்தக் கொடியவனை நான் எதிர்கொள்ள நினைத்தேன். என்னுடைய தபோபலத்தினால் கடவுளர் அந்தக்கொடியவனை எதிர்கொள்ளும் சக்தியை எனக்குத் தருவார்கள் என்று எண்ணினேன்.” முனிவர் கண்களில் மெல்ல மெல்லக் கண்ணீர் கசிந்தது. முகம் முழுவதும் வேதனையில் ஆழ முனிவர் மேலும் பேசுவார்!” அந்தக் கொடியவன் வந்த ரதத்தை நான் தடுத்து நிறுத்தினேன். அவனிடம் நான் மனிதருக்கு மனிதர் வேற்றுமைகளைக் கற்பித்துக் கொண்டு அவர்களைக் கொடுமை செய்யவேண்டாம் என்று வேண்டினேன். குறிப்பாக குருகுலங்கள் நடக்கும் ஆசிரமங்களைத் தாக்கி அழிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன். தவத்தில் ஈடுபடும் முனிவர்களைத் தாக்கவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவனோ அவனுடைய வாளினால் என்னைத் தாக்கினான். அதைக் கண்ட அவன் வீரர்களில் ஒருவன் என் காலை ஒடித்தான். பின்னர் ஒரு பிசாசைப் போல் சிரித்தவண்ணம் அவன் அங்கிருந்து அகன்றான். நான் மூர்ச்சை அடைந்து விழுந்ததைக் கூட லக்ஷியம் செய்யாமல் அவன் ரதம் பறந்து விட்டது! வீரர்களும் அவனைத் தொடர்ந்து சென்றுவிட்டனர்.”

“உங்களுடன் அப்போது யாருமே இல்லையா?”

“இல்லை, மகனே! ஆனால் உன் தாயும் அவளின் பெற்றோர்களையும் கடவுள் தான் அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் எப்போதும் போல் ஆசிரமத்தில் இருக்கும் என்னைப் பார்க்க வந்தார்கள். அப்போது தான் உன் தாய் என்னை மயக்கம் அடைந்த நிலையில் பார்த்தாள். தன் பெற்றோரிடம் அவள் சொல்ல அவர்களும் பார்த்துவிட்டு என்னைக் கல்பிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு எனக்குத் தக்க வைத்தியம் செய்து என் உயிரைக் காப்பாற்றினார்கள்.”

தன் தந்தையின் சோகக்கதையைக் கேட்ட த்வைபாயனன் மனம் மிகவும் நெகிழ்ந்தது. “உங்களுக்கு இதை விட்டால் வேறு ஆசிரமம் இல்லையா?” என்று மெதுவாகக் கேட்டான். அதற்குப் பராசரர், “நான் மீண்டும் உடல் வலிவு பெற்றுக் குணம் அடைந்ததும், இந்தச் சாம்பல் பிரதேசத்துக்கு வந்தேன். இங்கேயே மரங்களில் உள் பொந்துகளில் மறைந்து வாழ்ந்த அஸ்வலும், பைலாவும் என்னைக் கண்டதும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள்.”

“இவர்கள் இருவரைத் தவிர வேறு எவரும் உயிருடன் இல்லையா?”

“ஒரு சில சீடர்கள், மாணாக்கர்கள் உயிருக்குத் தப்பி ஓடியவர்கள் இந்த யமுனைக்கரையில் சிறிய ஆசிரமங்கள் சிலவற்றைக் கண்டு அங்கேயே இருந்துவிட்டார்கள். கோதுலியில் நாம் பார்த்த கௌதமரும் அப்படியான சீடர்களில் ஒருவர் தான். நான் ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் போய் அவர்களுக்குத் தேவையானதைச் சொல்லி வந்தேன். அவர்களை உற்சாகப்படுத்தி வந்தேன். கிராமங்களில் வசித்து வரும் கிராமவாசிகளை நேர்மையாகவும், உண்மையாகவும் வாழ்க்கையை நடத்தச் சொல்லிக் கொடுத்தேன். உடல் நலமில்லாதவர்களைக் குணப்படுத்தினேன். எல்லாவற்றுக்கும் மேல் வேதங்களைக் கற்பித்தேன்.”

த்வைபாயனனுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. “நீங்கள் ஏன் தந்தையே இன்னொரு ஆசிரமம் ஏற்படுத்தவில்லை?” என்று கேட்டான். “இதை விடப் பெரிதாக ஒரு ஆசிரமம்! ஏற்படுத்தி இருக்கலாமே!” தன்னிரு கரங்களையும் இரு பக்கமும் விரித்துக் கொண்டு அதன் மூலம் எவ்வளவு பெரியது என்பதைத் தந்தைக்குப் புரிய வைக்க முயன்றான் த்வைபாயனன். “அப்போது தான் நான் ஒரு முனிவராக ஆக முடியும், உங்களைப் போல! நிறைய நிறைய, நிறையச் சீடர்களுடன்!”

No comments: