Saturday, September 10, 2016

த்வைபாயனருக்கு விடுதலை!

அரண்மனைப் படகு கோதுலி ஆசிரமத்தின் எஞ்சி இருந்த மைதானத்தின் பக்கம் வந்து நின்று நங்கூரமிட்டது. அதிலிருந்து வில்லாளிகளும், மற்ற வீரர்களும் கைகளில் ஈட்டி, வேல்கம்பு போன்றவற்றை ஏந்திய படகோட்டிகளும் இறங்கினார்கள். அங்கிருந்த பழங்குடியினரின் இரு காவல்காரர்களும் கூட்டமாக வந்து இறங்கிய வீரர்களைக் கண்டு திகைத்துப் பின்னர் காட்டுக்குள்ளே ஓட்டம் பிடித்தனர். படகிலிருந்த மற்றப் பெண்கள், பிரமசாரிகளைக் குனிகர் இறங்க அனுமதி கொடுத்ததும் அவர்களும் படகிலிருந்து கீழே குதித்து இறங்கினார்கள். அங்கிருந்த வீரர்களில் மூன்று அல்லது நான்கு படகோட்டிகளைத் தேர்ந்தெடுத்துக் குனிகர் அங்கே இருந்து ஆசிரமப் பகுதியைக் காவல் காக்கச் சொன்னார். பெண்களையும் பிரமசாரிகளையும் அங்கேயே தங்கி இருக்கவும் கூறினார்.

ஷார்மியும் அதற்கு உடனே ஒத்துக் கொண்டாள். “ஆம், மந்திரி, நாங்கள் இங்கே தான் தங்கி இருக்கவேண்டும். நாங்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்து இந்த இடத்தை நன்கு சுத்தம் செய்து புனிதமான அக்னி வளர்க்கத் தக்க இடமாக மாற்றுகிறோம். ஆனால் நீங்கள் பாலமுனி இல்லாமல் இங்கே திரும்பக் கூடாது!” என்று கண்டிப்புடன் கூறினாள். அதன் பின்னர் குனிகர் க்ரிவியிடம் திரும்பி பழங்குடியினரின் தலைமையகம் செல்லும் வழியைக் காட்டும்படி கூறினார். விரைவில் போய்ச் சேரும்படியான சுருக்கு வழியையும் கூறும்படி கேட்டார். க்ரிவியோ ஓவென்று வாய் விட்டு அழுதான். மோசா தன்னைக் கொன்று விடுவான் என்று கூறிக்கொண்டே வாய் விட்டுக் குழந்தையைப் போல் அழுதான். கோபமாக க்ரிவியை அச்சுறுத்தும் வண்ணம் பார்த்த குனிகர் அவனுக்கு ஓர் அடியைக் கொடுத்தார். பின்னர், “மோசா நாளைக்குத் தான் உன்னைக் கொல்வான். ஆனால் நீ வழி சொல்லவில்லை எனில் நான் இன்றே கொன்றுவிடுவேன். எழுந்திரு, வழியைக்காட்டு!” என்று அதட்டினார்.

“சரி, சரி, இதோ காட்டுகிறேன்.” என்ற வண்ணம் எழுந்தான் மோசா. “நான் அங்கே உங்களை எல்லாம் அழைத்துச் சென்றால் மோசா கொன்று விடுவான். அழைத்துச் செல்லவில்லை எனில் நீங்கள் கொல்வீர்கள். இப்படியே எல்லோரும் என்னைக் கொல்லுவதிலேயே மும்முரமாக இருங்கள். என் பையன்கள் எனக்குப் பின்னர் என்ன ஆவார்கள்? அவர்கள் கதி என்ன?” என்று கேட்டான். “அவர்களுக்கோ அல்லது உனக்கோ எதுவும் நடக்காது. நீ மட்டும் நான் சொன்ன பேச்சைக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டுவிட்டால் எதுவும் நடக்காது. இப்போது வந்து வழியைக் காட்டிக் கொண்டு முன்னே செல்!” என்றார் குனிகர். க்ரிவி தன் மனதிற்குள்ளாக எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு, வேறு வழியில்லாமல் தங்கள் குடியிருப்பின் பக்கம் குரு வம்சத்து மந்திரியையும் மற்றவர்களையும் அழைத்துச் சென்றான்.

அவர்கள் பழங்குடியினரின் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே வந்து சேர்ந்தது தான் தாமதம். க்ரிவி எந்த வார்த்தையும் பேசாமல் எதையும் சுட்டிக் காட்டாமல் குனிகரைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தான். உயிர் அவனுக்கு மிக மதிப்பு வாய்ந்த ஒன்று. அதை எக்காரணம் கொண்டும் இழக்க அவன் விரும்பவில்லை. இப்போதிருக்கும் நிலையில் மோசாவையோ குனிகரையோ பார்த்தால் ஏதேனும் ஓர் தரப்பில் இருந்து நிச்சயம் மரணம். ஆகவே அவர்களைப் பார்க்கவே கூடாது! அவர்கள் வந்து சேர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் சில பழங்குடியினர் நின்ற வண்ணம் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த குனிகர், தன் வில்லாளிகளைப் பார்த்து அந்தப் பழங்குடியினரின் யாரேனும் ஒருவர் மேல் குறி பார்த்து அம்பை எய்யச் சொல்லி ஆணையிட்டார். அவனும் அப்படியே செய்தான். அது ஓர் பழங்குடியின் மேல் போய்ப் பாயந்தது. அவன் அலறிக்கொண்டே கீழே விழுந்தான். பரிதாபமான அவன் குரலைக் கேட்ட அங்கிருந்த மற்றவர்கள் ஓட்டமாக ஓடிவிட்டனர்.

அந்தக் குடியிருப்பின் வீடுகளின் மேல் கூரையில் கலசம் போல் எழுப்பப்பட்டிருந்தவற்றின் மீது அம்புகளைக் குனிகர் எய்யச் சொல்ல அவையும் குறிபார்த்துப் பாய்ந்துக் கலசங்களை உடைத்தன. அந்தக் குடியிருப்பில் எங்கும் பதட்டம் சூழ்ந்தது. அனைவர் மனதில் பயமும், அச்சமும், குழப்பமும் மிகுந்தது. பேரிகைகளை முழக்கினார்கள். சங்குகள், எக்காளங்கள் ஊதப்பட்டன. ஆபத்து என்று அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் தங்களை ஒளித்துக் கொண்டனர். குடிசைகளிலிருந்து பழங்குடியினர் ஓடோடி வந்து அங்கிருந்த திறந்த வெளி மைத்தானத்தில் அனைவரையும் எதிர்க்க ஓடினார்கள். அவர்கள் அந்த மைதானத்தை அடையும் முன்னரே குனிகர் அந்த இடத்தைத் தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். அந்தப் பழங்குடியினர் அன்று வரை இத்தனை தேர்ந்த வில்லாளிகளையும் ஈட்டியையும் வேல்கம்பையும் குறிபார்த்து எய்பவர்களையும் கண்டதே இல்லை. பயத்திலும் கலக்கத்திலும் பாதுகாப்பாகக் கொஞ்சம் தள்ளியே நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள். செய்வதறியாது திகைத்தனர்.

மீண்டும் குனிகரும் அவருடைய ஆட்களும் வேறு சில குடிசைகளின் கலசங்களையும் உடைத்தெறிந்தனர். அந்த சப்தமானது அந்தக் காட்டிலே எதிரொலித்து எங்கும் கலக்கத்தை உண்டாக்கியது. அந்த வீரர்களில் ஒருவனுக்கு அந்தப் பழங்குடியினரின் மொழி தெரிந்திருந்தது. அவன் முன்னே வந்து அவர்களிடம் தாங்கள் குரு வம்சத்து இளவரசனும், அனைவரும் நடுங்கும்படியான யுத்த தந்திரத்தைக் கையாளுபவருமான பயங்கரமான சபதங்கள் போட்டவருமான பீஷ்மர் என்னும் காங்கேயரின் சார்பாக வந்திருப்பதாகக் கூறினான். அவர் பெயரால் தான் ஆணையிடுவதாகவும் கூறினான். இப்போது உடனே அவர்கள் தலைவன் ஆன மோசாவை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாலமுனி த்வைபாயனருக்கு ஒரு சின்னக் காயம் கூட இல்லாமல் அப்படியே அவரையும் ஒப்படைக்கவேண்டும் எனவும் கூறினான்.  பாலமுனியைக் கடத்தி வைத்திருப்பது மாபெரும் குற்றம் எனவும் தங்கள் கட்டளைகள் உடனுக்குடன்  ஏற்றுக்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அப்படி இல்லை எனில் அவர்கள் குடியிருப்பையே மொத்தமாக அழிப்பதோடு எல்லோரையும் கூண்டோடு கொன்றுவிடப் போவதாகவும் அச்சுறுத்தினான்.

மோசாவின் ஆட்களான ஒரு சில பழங்குடியினர் காட்டுக்குள்ளே தூரமாகச் சென்று மறைந்து கொள்ளப் போய்விட்டனர். மோசா இல்லாத சமயம் அவன் சார்பில் தலைவனாகச் செயல்படும் க்ருபா இப்போது முன்னே வந்தார். குனிகரிடம் வந்த அவர், அவரைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பி வணங்கினார். க்ருபாவுக்கு ஆரியர்களின் மொழி தெரிந்திருந்தது. ஏனெனில் அவருக்கு கோதுலி ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. ஆகையால் இப்போதும் ஆரியர்களின் மொழியிலேயே பேச ஆரம்பித்தார். “வீரமும், துணிவும் மிக்க தலைவரே! நான் ஷார்மி அன்னையின் தந்தை ஆவேன். சற்றே பொறுத்திருங்கள். நான் இப்போது உடனே சென்று உங்கள் ஆசாரியரான பாலமுனியை அழைத்து வருகிறேன்.” என்றார். குனிகருக்கு இப்போது தான் மூச்சு வந்தது. ஆஹா, ஆசாரியருக்கு நல்லவேளையாகக் கெடுதல் ஒன்றும் நிகழவில்லை. பத்திரமாக இருக்கிறார். எனினும் அவர் சந்தேகம் விலகவில்லை. “இதோ பார், கிழவா! நீ மட்டும் என்னை ஏமாற்றினாய் எனில், இந்தக் குடியிருப்பு மொத்தமும் அழிந்து விடும்! ஜாக்கிரதை!” என்று எச்சரித்தார். குனிகரும் அவருடைய வீரர்களும் அங்கேயே த்வைபாயனருக்காகக் காத்திருக்க அங்கே கூடி இருந்த பழங்குடியினரும் சற்றுத் தூரத்தில் நின்றவண்ணம் க்ருபா திரும்பி வரக் காத்திருந்தார்கள்.

சற்று நேரத்தில் த்வைபாயனர் முன்னே வர க்ருபா பின் தொடர்ந்து வந்தார். த்வைபாயனர் முகத்தில் எப்போதும் போல் அதே சிறுபிள்ளைத் தனமான புன்முறுவல். விஷமம் செய்யும்போது அகப்பட்டுக் கொண்ட சிறுவனைப் போல் நாணம் கலந்த சிரிப்புக் காணப்பட்டது. அவர் கண்கள் விசித்திரமான ஒளியில் ஒளிர்ந்தன. “மந்திரி, குனிகரே, இங்கே வரும் சிரமத்தை மேற்கொண்டது ஏன்? எனக்கு எவருடைய உதவியும் தேவையாய் இருக்கவில்லை. அதோ அந்தக் கடவுளரின் உதவியை மட்டுமே நான் கேட்டிருந்தேன். அது தவிர வேறெதுவும் தேவைப்படவில்லை. என்னிடமுள்ள பிரம்ம தேஜஸ் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டது. இப்போது தயவு செய்து உன்னுடைய அம்புகளை எல்லாம் எடுத்துத் திரும்ப அம்புறாத் தூணியிலேயே போட்டுவிடு!” என்றார்.

குனிகர் ஆசாரியரைக் கீழே விழுந்து வணங்கினார். அதைப் பார்த்த மற்ற வில்லாளிகளும் வீரர்களும் கீழே விழுந்து வணங்கினார்கள். ஆசாரியர் அவர்களை ஆசீர்வதித்த வண்ணம் கூறினார்:” நீங்கள் அனைவரும் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும். இங்குள்ள மஹிஷனின் பிள்ளையாக மதிக்கப்படுபவன் மனதில் அமைதி நிலவ வேண்டும்.உங்கள் ஆயுதங்களை எல்லாம் கீழே போடுங்கள். விற்கள், அம்புகள், ஈட்டிகள், வேல்கம்புகள் அனைத்தும் அதனதன் இடத்திற்குச் செல்லட்டும். க்ருபா, உன் மக்களிடமும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்!” என்றார்.

அங்கிருந்த வீரர்கள் அனைவரும் த்வைபாயனர் சொன்னதும் குனிகரின் கண் ஜாடைப்படி தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டனர். க்ருபாவும் பழங்குடி மக்களிடம் அவ்வாறே கூற அவர்களும் போட்டனர். க்ருபாவைப் பார்த்த த்வைபாயனர், “மதிப்புக்குரிய க்ருபா, நாம் இப்போது பழங்குடியினரின் சிறப்பு உணவை உண்ணலாம். எங்கே குழந்தைகள். அவர்களை எல்லாம் கூப்பிடு! அவர்களுக்குப் பசிக்குமே!” என்று கவலையுடன் கூறினார். “அதெல்லாம் சரி ஆசாரியரே, மோசா எங்கே போனான்?” என்று ஆச்சரியத்துடன் வினவினார் குனிகர். “அவன் தன்னைத் தானே அவர்களுடைய மஹிஷாசுரனின் கோயிலில் சந்நிதிக்கு முன்னர் சிறை வைத்துக் கொண்டிருக்கிறான்.” என்ற த்வைபாயனர் கலகலவென நகைத்தார்.

No comments: