Monday, November 14, 2016

சூது களித்திடச் செய்யும் மந்திரமொன்று மனத்திடைக் கொண்டான்!

அந்தக் குறிப்பிட்ட வருடம் திரௌபதி யுதிஷ்டிரனுடன் வசிக்க வேண்டிய வருடமாக அமைந்திருந்தது. ஆகவே அவளுக்கு யுதிஷ்டிரனின் தவிப்பும், அமைதியின்மையும் நன்கு புலப்பட்டது. எங்கோ கவனமாக ஏதோ சிந்தனையாக அருகிலிருக்கும் அனைத்தையும் மறந்தவனாக அடிக்கடி யுதிஷ்டிரன் தனிமையில் நேரத்தைக் கழிப்பதைக் கண்டாள். ராஜசூய யாகத்தின் மூலம் எதிர்பார்த்த சமாதானமோ, அமைதியோ, சாந்தியோ நிலவவில்லை என்பதே யுதிஷ்டிரனுடைய பெரும் கவலையாக இருந்தது. அந்தக் கவலை அவன் மனதில் பாரமாகத் தெரிந்தது. பாண்டவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் அரசர்களின் நட்போ அல்லது அவர்களுடன் சேராமல் தனித்திருப்பதாக அறிவித்த அரசர்களின் நட்பின்மையான போக்கோ, ஏதோ ஒன்று யுதிஷ்டிரனின் மனதை மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அது உள்ளுக்குள்ளாக ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது. ஆனால் திரௌபதியின் இந்தக் கண்டுபிடிப்பைக் குடும்பத்தின் மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரும் கொண்டாட்டமான, சந்தோஷமான மனோநிலையில் இருந்ததோடு அல்லாமல் சிசுபாலனைக் கண்ணன் கையாண்ட விதத்தையும் அவனை அடியோடு ஒழித்துக் கட்டியதையும் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிசுபாலன் கங்கை மைந்தரான பீஷ்ம பிதாமஹரை மிகவும் கேவலமான வார்த்தைகளால் அவமானம் செய்ததுக்கு அவனுக்கு இம்மாதிரியான தண்டனை அளிக்கப்பட்டது தகுதியானதே என்னும் எண்ணம் அவர்களிடம் இருந்தது.

ஆனால் இதை எல்லாம் குறித்துப் பேசுவதற்கு யுதிஷ்டிரன் தயாராக இல்லை. அதையும் திரௌபதி கவனித்தாள். ஆனால் யுதிஷ்டிரனோ தன் எண்ணங்களில் மூழ்கி இருந்தான். அவனுடைய ஒரே எண்ணம் க்ருஷ்ண த்வைபாயனரின் தீர்க்க தரிசனமான நிகழ்வுகளை எவ்வகையில் பொய்யாக்குவது என்பது ஒன்றே. அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம் திடீரென இரு ரதசாரதிகள் வந்து, ஹஸ்தினாபுரத்திலிருந்து அமைச்சர் விதுரர் மஹாராஜா யுதிஷ்டிரரைக் காண வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள். யுதிஷ்டிரன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஹஸ்தினாபுரத்தில் மட்டுமல்ல விதுரர் குரு வம்சத்தினர் அனைவராலும் மிகவும் மதிக்கப் பெற்றார். அவருக்கெனக் குறிப்பிட்ட அந்தஸ்து இருந்தது. அவர் ஓர் முக்கியமான அமைச்சராக இருந்ததோடு முக்கியமான முடிவுகளையும் அவர் மூலம் எடுக்கப்பட்டு வந்தன. காசி தேசத்து இளவரசிகள் இருவரும் க்ருஷ்ண த்வைபாயனரோடு கூடி நியோக முறையில் திருதராஷ்டிரனையும், பாண்டுவையும் பெற்ற போது மூத்தவளிடம் இன்னொரு முறை கூடுமாறும் இம்முறை குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் திடமாகவும் பிறக்க வேண்டும் என்றும் சத்யவதி வேண்டுகோள் விடுத்திருந்தாள்.

ஆனால் காசிதேசத்து மூத்த இளவரசியோ தான் மீண்டும் வியாசரிடம் செல்வதற்கு அச்சமும் அதிருப்தியும் கொண்டு தன் அந்தரங்கத் தோழியும் தன் அந்தரங்கச் சேடியுமான பெண்ணைத் தயார் செய்து விதுரரிடம் அனுப்பி வைத்துவிட்டாள். க்ருஷ்ண த்வைபாயனரைக் கண்டு அஞ்சாமலோ அல்லது வெறுப்பைக் காட்டாமலோ வேண்டா வெறுப்பாகவோ இல்லாமல் அந்தப் பெண் முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்க, க்ருஷ்ண த்வைபாயனரும் தர்மத்தின் காவலனாக ஓர் மகன் பிறப்பான் என்ற ஆசிகளுடன் அந்தப் பெண்ணை ஏற்றுக்கொண்டிருந்தார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையே விதுரர் என்பதால் திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவுக்கும் இவர் சகோதர முறையிலும் ஆகிவிட்டது. மேலும் விதுரர் முழுக்க முழுக்க திருதராஷ்டிரனோடு சேர்ந்தே வளர்ந்து வந்ததால் திருதராஷ்டிரனிடம் இயல்பாகவே அவருக்குப் பாசமும் பற்றும் இருந்து வந்தது. அதே போல் திருதராஷ்டிரனும் பாசம் காட்டினான்.

விதுரர் பார்ப்பதற்குத் தன் தாயைப் போன்ற முகத்தோற்றதுடன் காணப்பட்டாலும் குணாதிசயங்கள் தந்தையான க்ருஷ்ண த்வைபாயனரைப் போலவே ஒழுக்கசீலராகவும், நல்ல உயர்ந்த பண்புகளுடனும் காணப்பட்டார். சிறு வயதிலிருந்தே தர்மத்தின் நெறிகளைக் கடைப்பிடிப்பதிலும், அதீத புத்திசாலியாகவும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்குடனும் எந்நேரமும் குரு வம்சத்து அரசர்களின் நல் வாழ்க்கை குறித்துமே சிந்தித்துச் செயலாற்றி வந்தார். குரு வம்சத்தினரின் நன்மையே தன் நன்மை என்று முற்றிலும் நம்பினார். வயதாக ஆக அரசியலிலும் நிர்வாகத்திலும் நிபுணராக ஆகிவிட்டார் விதுரர். நீதி சாஸ்திரத்தில் விதுரரை மிஞ்சியோர் இல்லை என்னும்படியாகப் பெயர் பெற்று விளங்கினார். மக்களின் மனோபாவத்தைப் புரிந்து கொள்வதிலும் மனிதரின் குணாதிசயங்களைப் புரிந்து கொள்வதிலும் சிறந்து விளங்கினார். ஆகவே ஹஸ்தினாபுரத்து அரசியலில் விரைவில் முக்கிய இடத்தைப் பெற்றதோடு அல்லாமல் அந்த அரசவையில் முக்க்கியமான  பிரதான மந்திரியாக விளங்கி வந்தார்.

அவரிடமிருந்த விசித்திரமான உணர்வின் மூலம் அவரால் அடுத்தவர்களின் உணர்வுகளை அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்தவரின் நியாயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவர் அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதோடு அல்லாம் அனைவராலும் மதிக்கப்பட்டார். அவ்வளவு ஏன்? ஒருவரையும் லட்சியம் செய்யாத துரியோதனன் குடும்பத்தினர் கூட விதுரரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டார்கள். அரச குடும்பம் முழுவதுமே அவரைப் போற்றியது. ஆனாலும் அவர் மனதில் துரியோதனனின் மரியாதை எல்லாம் அவன் நினைத்த காரியம் முடியும்வரைதான் என்னும் எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஏனெனில் ஏற்கெனவே அவர் பாண்டுவின் குமாரர்களை பீஷ்மரும் சத்யவதியும் ஏற்றுக் கொண்டு அரண்மனையில் அவர்களை இளவரசர்களாக அங்கீகரித்தபோது விதுரரின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. வெளிப்படையாகவே விதுரர் இதை ஆதரித்தார். அதோடு இல்லாமல் தங்கள் உயர்ந்த பண்புகள் மூலமும் அனைவரிடமும் அன்பாகவும் பரிவாகவும் பேசி அனைவருடனும் அனுசரணையாக நடந்ததன் மூலமும் இளவயதிலிருந்தே பாண்டவரக்ளிடம் தனியான அபிமானத்தைக் காட்டி வந்தார் விதுரர். அவர்கள் ஐவருமே அவரின் அன்புக்குப் பாத்திரமானார்கள். அவர்களும் அவரை ஓர் தந்தைக்கு மேல் மதித்துக் கொண்டாடினார்கள்.

விதுரர் தன்னால் இயன்றவரையிலும் துரியோதனாதியருக்கும், பாண்டவருக்கும் இடையிலான பிரச்னைகளைப் பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்த்து இருபாலாரும் ஒருவர் மீது ஒருவர் நட்புடன் இருக்கும்படி செய்யப் பிரயத்தனங்கள் செய்தார். இதனால் துரியோதனனுக்கு அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் குறைந்து போய் அவனும் அவன் சகோதரர்களும் அவரை ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்தனர். துரியோதனன் பாண்டவரை வெறுப்பது போல் விதுரரையும் வெறுக்க ஆரம்பித்துவிட்டான். மேலும் அவர் சேடிப்பெண்ணின் பிள்ளை என்றும் ஏளனம் செய்தான். வேலைக்காரியின் பிள்ளைக்கு அமைச்சர் பதவியா என்று அகந்தையுடன் கேட்டான். அவர்கள் தந்தையான திருதராஷ்டிரனிடம் விதுரருக்கு இருந்த செல்வாக்கின் காரணமாகவே தங்கள் தந்தையும் பாண்டவர்கள் பக்கம் பேசுவதாக கௌரவர்கள் அனைவரும் நினைத்தார்கள்.

அதிலும் கௌரவர்களின் தாய் மாமன் ஆன ஷகுனி அவர்களோடு நிரந்தரமாகத் தங்க ஹஸ்தினாபுரம் வந்ததிலிருந்து துரியோதனாதியரின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஷகுனியே பொறுப்பாக இருந்தான். அதோடு இல்லாமல் விதுரரைக் குறித்தும் அவன் கீழ்த்தரமாகப் பேசி அவரும் தங்கள் வரையில் ஓர் வல்லமை மிக்க எதிரியே என்று சொல்லி வந்தான். இதனால் எல்லாம் துரியோதனனுக்கும் அவன் குழுவினருக்கும் விதுரரிடம் நம்பிக்கையும் இல்லை; அவரை மதிக்கவும் இல்லை. அவர்களுடைய தந்திரமான, சூழ்ச்சித் திறன் மிக்க நடவடிக்கைகளின் ஊடேயும் விதுரருக்கு பிதாமஹர் பீஷ்மரிடமும், ராஜமாதா சத்யவதியிடமும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. திருதராஷ்டிரனிடம் வாழ்நாள் முழுவதும் நட்போடு இருக்கவே விதுரர் விரும்பினார். ஆனால் திருதராஷ்டிரனோ விதுரரையும் அவர் காட்டிய சுயநலம் அற்ற அன்பையும் புறம் தள்ளிவிட்டுத் தன் மகனுடைய கட்சியில் சேர்ந்து கொண்டான். துரியோதனனோ தன் தந்தைக்குத் தன் மீது இருந்த அன்பைத் தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டான்.

இத்தகைய சூழ்நிலையில் தான் ராஜசூய யாகத்தில் கலந்து கொண்ட பின்னர் ஹஸ்தினாபுரம் திரும்பிய விதுரர் மீண்டும் இந்திரப் பிரஸ்தத்துக்கு வந்தார். அவர் வருகையின் மூலம் தவிர்க்க முடியாததொரு பேரிடரைத் தாங்கள் சந்திக்கப் போகிறோம் என்றும் இனி வரும்நாட்கள் குழப்பங்கள் நிறைந்தவையாக இருக்கும் என்றும் யுதிஷ்டிரனுக்குத் தோன்றியது. விதுரரின் வருகை அதைத் தான் முன்கூட்டியே தெரிவிப்பதாக நினைத்தான். என்றாலும் முறைப்படி தங்கள் சித்தப்பனுக்கு சகோதரர்கள் ஐவரும் மரியாதையாகவும் அன்புடனும் வரவேற்பு அளித்தார்கள் விதுரரும் ஐந்து சகோதரர்களையும் தனித்தனியாகக் கட்டி அணைத்து ஆசி கூறித் தானும் குந்தியின் கால்களில் விழுந்து ஆசிகளை வாங்கிக் கொண்டார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் பார்த்து நலம் விசாரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சற்று நேரத்தில் அவர் உணவு உண்டு முடித்து ஓய்வுக்காகத் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றார். அங்கே அவரைப் பாண்டவரக்ள் ஐவரும் குந்தி தேவியுடனும், திரௌபதியுடனும் சென்று சந்தித்தார்கள். அப்போது விதுரரின் முகத்தில் காணப்பட்ட சிரிப்பு காணாமல் போய்விட்டது. அவர் கண்களில் பதட்டமும் கவலையும் கலந்ததொரு விசாரமான போக்குக் காணப்பட்டது.
யுதிஷ்டிரன் விதுரரைப் பார்த்து, “சித்தப்பா, தங்கள் வருகையின் காரணம் என்ன? எதன் காரணமாகத் தாங்கள் இங்கே வருகை புரிந்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள்?” என்று கேட்டான். விதுரர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார். பின்னர் யுதிஷ்டிரனைப் பார்த்து, “ஒரு செய்தியை உன்னிடம் சொல்லத் தான் வந்திருக்கிறேன். ஆனால் அந்தச் செய்தியை என் மூலம் அனுப்பி வைத்ததற்கு நான் வருந்துகிறேன். மிக வருந்துகிறேன்.” என்றார். அந்த அழகான அமைதியான ஒருவருக்கொருவர் அன்பினால் பிணைக்கப்பட்டிருந்த குடும்பத்தைப் பார்த்த விதுரர் இவர்கள் சந்தோஷம் எல்லாம் ஒரு கணத்தில் இல்லாமல் போய்விடப்போகிறதே! மிகப் பெரிய பேரிடர் இவர்களைச் சூழ்ந்து கொள்ளப் போகிறதே! என்று வருந்தினார். ஆனால் பீமனோ தைரியமாக அவரைப் பார்த்து, “என்ன விஷயம் சித்தப்பா? சொல்லுங்கள்!” என்றான். அவன் வரையில் எதையும் எதிர்கொள்ளத் தயாராகி விட்டான்.

“மாட்சிமை பொருந்திய மன்னர், உங்கள் பெரியப்பா திருதராஷ்டிர மன்னர் உங்கள் அனைவரையும் ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்திருக்கிறார்.”

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் மிகுந்தது. பீமன் கண்கள் விரிய விதுரரைப் பார்த்து, “ஏன், சித்தப்பா? ஏன்?” என்று கேட்டான். விதுரரோ நீண்ட பெருமூச்சு விட்டார். “குழந்தாய்! அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை! எப்படிச் சொல்வது என்றே புரியவில்லை!” என்று மிகுந்த வருத்தம் தொனிக்கக் கூறினார். “காரணத்தைச் சொல்லுங்கள் சித்தப்பா! நாங்கள் இதற்கெல்லாம் மிகவும் பழகி விட்டோம். ஹஸ்தினாபுரத்திலிருந்து கெட்ட சகுனங்களோடு கூடிய அழைப்பு எங்களுக்கு வருவது இது ஒன்றும் முதல் தடவை அல்லவே!” என்று பீமன் விடாமல் கேட்டான்.

“உனக்கு மயன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சபா மண்டபத்தைப் பார்த்ததில் இருந்து துரியோதனனுக்கு அதைப் போன்ற போலித் தோற்றம் கொடுக்கும் சபாமண்டபம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது. அப்படி ஒன்றை ஜயந்த் என்னுமிடத்தில் துரியோதனன் கட்டிவிட்டு அதைப் பார்க்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறான்.” என்றார் விதுரர். ஆனால் பீமனுக்கு இதில் சமாதானம் ஆகவில்லை. “வெறும் சபாமண்டபத்தைப் பார்த்துக் கருத்துச் சொல்வதற்காக துரியோதனன் எங்களை அழைத்திருக்க மாட்டான்! அதுவும் இதற்காக உங்களை ஏன் அவன் அனுப்ப வேண்டும்? சித்தப்பா, இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. உண்மையான காரணம் என்ன?” என்று கேட்டான் பீமன்.  அதற்கு விதுரர் சொன்னார்: “அவன் உண்மையாக உங்களை அழைத்திருப்பது அரசர்களின் பொழுதுபோக்கான சதுரங்கம் எனப்படும் சொக்கட்டான் ஆடுவதற்காக! இன்னும் சொல்லப்போனால் அந்த ஆட்டத்தில் உங்களிடம் அவன் சவால் விடுக்கிறான். அவனை வென்று காட்ட வேண்டும் என்பதே அவன் சவால்! எந்த க்ஷத்திரிய அரசனாலும் இதை மறுக்க முடியாது!” என்று சோகம் கொப்பளிக்கக் கூறினார் விதுரர்.

“என்ன அரசர்களின் விளையாட்டான சொக்கட்டான் ஆடவேண்டுமா?” யுதிஷ்டிரனுக்குள் ஆச்சரியம் முகிழ்த்தது. ஆனால் பீமன் முகம் கோபத்தில் சிவந்தது. அர்ஜுனனோ யோசனையில் முகத்தைச் சுருக்கிக் கொண்டான். திரௌபதி தாங்கொணாக் கோபத்தில் ஆழ்ந்தாள். அர்ஜுனன் யோசனையுடன், “அண்ணா அவர்கள் இந்த விளையாட்டில் நிபுணரே இல்லையே! அதோடு இல்லாமல் இதை நாம் விளையாடுவது வேறு மாதிரியில்! சூதாட்டம் போல் அவர்கள் ஆடுவார்கள். நாம் அப்படிப் பழகவில்லையே! ஆகவே நம்மிடம் இத்தகையதொரு சவாலை விடுத்தது தேவையற்றது: அநீதியானது!” என்றான். உடனே பீமன், “நாம் ஏன் ஹஸ்தினாபுரம் போக வேண்டும்? நாம் போக மறுத்துவிடுவோம். அதிலும் இந்தச் சூதாட்டம் ஆடச் சம்மதிக்கக் கூடாது. இதெல்லாம் அந்த ஷகுனியின் சூழ்ச்சிதான்! நாம் இங்கே சந்தோஷமாகவும் அநேகச் செல்வங்களோடும் மகிழ்ச்சியாக வாழ்வது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. ஆகவே அந்த சூழ்ச்சிக்கார ஷகுனி இப்படி ஒரு வழியைக் கண்டுபிடித்து நம்மைத் தோற்கடித்து நம் செல்வங்களை எல்லாம் பிடுங்கப் பார்க்கிறான். இதற்கு ஒருநாளும் நாம் ஒத்துக் கொள்ளவே கூடாது!” என்றான். “யுதிஷ்டிரா, மகனே! நீ இதற்கு என்ன சொல்லப் போகிறாய்? என்று கேட்டார் விதுரர்.

No comments: