Wednesday, September 22, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேதுவின் மாற்றம்!

"ஐயா, அவன் ஒரு ரதத்தில் வந்திருக்கிறான். ரதசாரதி இளம் கருடன் ஒருவன். அவனுடைய முகமே கண்ணனின் கொடியிலும் காணப்படுகின்றது. ஒரு கதை, வில், அம்புகள் நிறைந்த அம்புறாத்தூணி, புதியதொரு ஆயுதமான ஒரு சக்கரம், அப்புறம் ஒரு சங்கு! அந்தச் சங்கைத் தான் தன் வரவைத் தெரிவிக்கப் பயன்படுத்துகிறான். தங்களுடன் நட்பை நாடியே வந்திருப்பதாய்த் தெரிவித்தான்.”

“என் நட்பு! இந்த ஸ்ரீகாலவ வாசுதேவன் ஒரு சாமானிய இடைச்சிறுவனோடு நட்புப் பாராட்டுவதா? என்ன தைரியம் அவனுக்கு?”

ஐயா, எனக்குச் சற்று அவகாசம் கொடுத்தால், கிருஷ்ணன் கூறியதை முழுவதும் கூறிவிடுவேன். “ என்று ஸ்வேதகேது, இறைஞ்ச, “விரைவாய்ச் சொல்!” என அதிகாரத் தொனியில் ஸ்ரீகாலவன் கூறினான். அதன் மேல் ஸ்வேதகேது, “கிருஷ்ணன் சொன்னான்:”சிலகாலம் வரை நான் பொறுத்திருப்பேன். என்னிடம் உத்தவனும், புநர்தத்தனும், அவனின் பாட்டனார் ருத்ராசாரியாரும், மற்ற ஆசாரியர்களும் எந்தவித சேதமும் இல்லாமல் ஒப்படைக்கப் படவேண்டும். அப்படி எவரும் வரவில்லை எனில், கோட்டைக்கதவுகள் என்னால் உடைத்துத் திறக்கப் படும்.” இது தான் ஸ்வாமி கிருஷ்ணன் கூறியவை!” என்று முடித்தான் ஸ்வேதகேது.

கூடியிருந்த ,மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. ஸ்ரீகாலவவாசுதேவனை எதிர்த்து ஒருவன் பேசுகிறானா? கரவீரபுரத்தை ஒரு சாதாரணமான, சாமானியமான மன்னன் ஆளும் தலைநகரம் என நினைத்துவிட்டானா? இது ஸ்ரீகாலவ வாசுதேவன் குடியிருக்கும் கோயில் அல்லவோ? புனிதத்திலும் புனிதமான ஒன்றல்லவோ? ராணி பத்மாவதியின் கைகளும், கால்களும் நடுங்கின. பயத்தின் எல்லையைத் தாண்டி இனம் புரியாததொரு கலக்கம் அவள் நெஞ்சை அலைமோத , மெல்ல, தன் கணவனைப் பார்த்து, “ஸ்வாமி, தயவுசெய்து ஆசாரியர்கள் அனைவரையும் விடுவியுங்கள். அவர்களைச் சிறையில் அடைத்திருப்பது நல்லதல்ல!” என்று கெஞ்சினாள்.

“எனக்கு நீ புத்திமதி சொல்லும் அளவுக்குத் துணிந்தாவிட்டாய்??” கோபமாய்க் கேட்ட ஸ்ரீகாலவன் குரல் இடியோசை போல் எழுந்தது. அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ராணி பத்மாவதிக்கு மயக்கம் வர அவளைப் பிடித்துக்கொண்ட ஷாயிபாவின் முகத்தில் தன் பெரிய தகப்பனின் வீரத்தைக் குறித்த பெருமை தாண்டவம் ஆடியது. அவள் முகத்திலேயே பெருமையும், சந்தோஷமும் தெரியத் தன் பெரியப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஷக்ரா என்னும் பெயர் உள்ள இளவரசன், ராணி பத்மாவதிக்கும், ஸ்ரீகாலவனுக்கும் பிறந்த பையன், ஓடோடி வந்து தன் தாயைக் கட்டிக் கொண்டு அழுதான். தன் மகனை வெறுப்போடு பார்த்த ஸ்ரீகாலவன், “அந்த இடையன் என் கோட்டைக் கதவுகளைத் தொடும் முன்னரே நம் தெய்வீகக் கோபம் அவனைச் சுட்டுப் பொசுக்கி நிர்மூலமாக்கிவிடும். ஸ்வேதகேது, நம் படையின் சிறந்த வீரர்களைத் திரட்டி உம் தலைமையில் அழைத்துச் செல்லும். தன் தாய் மாமனைக் கொன்ற அந்தக் கொலையாளியும், இடைக்குலத்தில் பிறந்தவனுமான கிருஷ்ணனின் தலையை வெட்டிக் கொண்டு வாரும்! ம்ஹ்ம்! ஜராசந்தன், பிரஹத்ரதனின் குமாரன், மகதச் சக்கரவர்த்தி, ஒரு கோழையைப் போல் ஓடிவிட்டானா?? அவன் வேண்டுமானால் ஓடுவான்! ஆனால் நாம் மூவுலகும் வணங்கும் பரவாசுதேவனாக இருந்துகொண்டு இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை என்றால் நீதி என்பதே இருக்காது!” தீர்மானமாய்ச் சொன்னான் ஸ்ரீகாலவன்.


தலை சுற்றியது ஸ்வேதகேதுவுக்கு. இக்கட்டான ஒரு நிலைமையில் தான் இருப்பதும் புரிந்தது. ஒரு பக்கம் ஸ்ரீகாலவன் கிருஷ்ணன் தலையைக் கொண்டுவரும்படி திட்டவட்டமாய் ஆணை பிறப்பிக்கிறான். இன்னொரு பக்கம் ஷாயிபா அவன் என்ன செய்யப் போகிறான் என்ற எதிர்பார்ப்போடும், தன் பெரியப்பனின் வீரத்திலும், அவனின் தெய்வீகத்திலும் அளவற்ற நம்பிக்கையோடும் ஈடுபாடோடும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். உத்தவனோ ஸ்வேதகேது என்ன பதில் சொல்லப் போகிறான் என்று காத்துக்கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது. அதோடு கூடவே, மயங்கி விழுந்திருக்கும் ராணி பத்மாவதியின் பரிதாபமான முகத் தோற்றமும், அவள் வாழ்நாள் பூராவும் ஸ்ரீகாலவனின் கொடுங்கோன்மையால் பட்டு வரும் கஷ்டங்களும் அணி வகுத்தன. எல்லாவற்றுக்கும் மேல் ஸ்வேதகேதுவின் காதுகளில் ஒலித்த அந்த மந்திரக் குரல், அவற்றின் வசீகரத் தன்மை! அவை சொன்ன மிருதுவான வார்த்தைகள், வார்த்தைகளைச் சத்தமாய்ச் சொன்னால் கூட அவற்றுக்கு வலிக்குமோ என்னும்படிக்கு மென்மையாக, அதே சமயம் உறுதியாகக் கண்ணன் கூறியவை!

“ஸ்வேதகேது, நாம் அனைவரும் சேர்ந்து சோமநாதம் என அழைக்கப்பட்ட க்ஷேத்திரத்தில் வணங்கினோமே மஹாதேவர் அவரல்லவோ நம் அனைவருக்குக் கடவுள்?” கண்ணன் கூறிய இந்த வார்த்தைகள் ஸ்வேதகேதுவின் மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது மட்டும் அவன் ஸ்ரீகாலவன் சொன்னபடி செய்தான் எனில், ஷாயிபாவின் காதல் கிட்டலாம். ஒருவேளை திருமணத்துக்குக் கூட அவள் சம்மதிக்கலாம். அவளும் மிகுந்த எதிர்பார்ப்போடு நம்மைப் பார்க்கிறாளே? மேலும் ஸ்ரீகாலவனை எதிர்த்தால் என்ன நடக்குமோ?? ஷாயிபாவும் லேசுப்பட்டவள் அல்லவே! இருவரும் சேர்ந்து என்ன செய்வார்களோ?? ஆனால்…….ஆனால்………. கண்ணன், கண்ணன், என் அருமை நண்பன், என் பிரியத்துக்கு உகந்த சீடன், என்னிடம் வேத அத்யயனம் செய்தவர்களிலேயே மிகச் சிறந்தவன், அவனோடு எவ்வளவு முறை சோமநாத்தின் கோயிலுக்குப் போய் மஹாதேவரை வணங்கி மந்திர கோஷம் செய்திருக்கிறோம்??

எல்லாவற்றுக்கும் மூலப் பொருளும், எவரும் அறியமுடியாத, புரிந்துகொள்ள முடியாத தன்மை படைத்தவரும், அடிமுடிகாணா ஜோதிவடிவானவரும் ஆன அவரன்றோ நம் அனைவருக்கும் கடவுள்?? அவரை விடுத்து சாதாரண மனிதன் ஆன இந்த ஸ்ரீகாலவனின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என்ன செய்கிறேன் நான்??? ஷாயிபாவா, கண்ணனா? என்று ஊசலாடிய ஸ்வேதகேதுவின் மனம் கண்ணன் பால் சாய்ந்தது. அவன் தலை நிமிர்ந்தது.
“மன்னிக்கவேண்டும் அரசே! வேறு என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்து விடுகிறேன். ஆனால் கண்ணனை எதிர்த்துப் போரிடுவது மட்டும், ஒருகாலும் நடவாது!” உறுதியாகச் சொன்னான். ஸ்ரீகாலவனின் முகம் விகாரமாக மாற, ஷாயிபாவின் தொண்டையில் இருந்து விநோதமானதொரு சத்தம் எழும்பியது. “என்ன?” இடியோசை போல் கேட்ட ஸ்ரீகாலவனின் குரலையும் மீறிக்கொண்டு கண்ணனின் குரல் இனிமையானதொரு சங்கீதம் போல் கேட்டது ஸ்வேதகேதுவுக்கு. “என்னால் கண்ணனுடன் சண்டை போட முடியாது. உங்களுக்குத் தேவை எனில் என் சிரத்தைத் துண்டியுங்கள். நான் எதற்கும் தயார்!” என்றான்.

கூடியிருந்த மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. இன்று வரையிலும் ஸ்ரீகாலவனின் எதிரே, அவன் எதிரே தாங்கள் இருப்பதே மிகவும் புனிதமான ஒன்று எனக் கருதி வந்த அந்த மக்களுக்கு, தங்கள் கடவுள் எதிரே இப்படியும் ஒருவன் பேசுவான், பேசமுடியும் என்பது அவர்களை வியப்பின் எல்லைக்கு இட்டுச் சென்றது. இம்மாதிரிப் பேசிய எவரும் இதுவரையிலும் உயிர் தப்பியதில்லை. ஸ்ரீகாலவ வாசுதேவனின் தெய்வீகத் தன்மையின் உதவியோடு தண்டனை அளிக்கப்பட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றனர். இவனுக்கும் அதுதான் நடக்கப் போகிறது!

இதுதான் தப்பிச்செல்ல தக்க சந்தர்ப்பம் என நினைத்த உத்தவன், மெல்ல ஒருவரும் கவனிக்காதபடிக்கு அங்கிருந்து நழுவினான். அவன் இன்னும் ஸ்ரீகாலவனின் அதிகாரிகளின் அதிகாரபூர்வ உடையிலேயே இருந்து வந்ததால் அப்போது கண்ணனை உள்ளே விடுவது அவனுக்கு எளிதாகவும் இருக்கும். செல்லும்போது சற்றே திரும்பி ஷாயிபாவைப் பார்த்த உத்தவன் அவள் முகத்தில் கொதித்த கோபக் கனலைக் கண்டு அதிர்ந்தான்!

2 comments:

priya.r said...

நல்ல பகிர்வு
சபாஷ் ! வா கண்ணா வா
இப்போதாவது ஸ்வேதகேதுக்கு அறிவு
வந்ததே !

sambasivam6geetha said...

LK, Priya, romba nanri.