Thursday, October 31, 2013

ஷகுனி, நண்பனா விரோதியா?

ஷகுனி மஹாபாரதத்தின் முக்கியக் கதாபாத்திரம்.  காந்தார நாட்டு இளவரசன்.  ஆனால் அவன் ஏன் இங்கே குரு வம்சத்தினரோடு இருந்து வருகிறான்?  ஹஸ்தினாபுரத்தில் ஏன் இருக்கிறான்?  அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு மேலே தொடருவோம்.  ஏற்கெனவே சொல்லிவிட்ட நினைவு இருக்கு என்றாலும் மீண்டும் நினைவூட்டிக் கொள்வோம்.  காந்தார அரசன் சுலபன்/சுவலன், நூற்றுக்கும் மேல் பிள்ளைகளும், காந்தாரி என்ற பெண்ணும் உடையவன்.  உரிய வயதில் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான்.  அரண்மனை ஜோதிடர்கள் இளவரசி காந்தாரியின் ஜாதகப் படி அவளுக்கு இரண்டு திருமணங்கள் என்றும், முதல் கணவன் உயிருடன் இருக்கமாட்டான், அவளை மணந்ததுமே உயிரை விட்டு விடுவான் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.  அப்போது தான் குரு வம்சத்து இளவரசர்களுக்குப் பெண் கேட்டு பீஷ்மர் தூது அனுப்பி இருந்தார். இந்தத் தகவல் அவர்கள் காதுகளுக்கு எட்டாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமே!  சுவலன் யோசித்து முடிவெடுத்தான்.  தன் மகளுக்கு ஓர் ஆட்டுக்கடாவை மணமகனாகத் தேர்ந்தெடுத்து ஆட்டுக்கடாவோடு மகளுக்குத் திருமணமும் செய்வித்து அந்த ஆட்டை உடனே வெட்டி பலி கொடுக்கவும் கட்டளையிட்டான்.  அவ்வாறே நடந்தது.  ஆனால் இவை அனைத்தும் பரம ரகசியமாகப் பாதுகாக்கப் பட்டது.  அப்படித் தான் சுவலன் நினைத்து வந்தான். 

பின்னர் திருதராஷ்டிரனோடு காந்தாரிக்குத் திருமணம் முடிந்து அவளும் ஹஸ்தினாபுரம் வந்து விட்டாள்.  அவளுடன் வந்த சில சேடியர்களின் பேச்சின் மூலம் காந்தாரி ஒரு விதவை எனக் கேள்விப் படுகிறார் பீஷ்மர்.  இந்த விஷயம் பாண்டுவின் காதுகளிலும் விழுகிறது.  உடனே ஒற்றர்களை  காந்தாரத்துக்கு அனுப்பி உண்மை எதுவெனக் கண்டறியும்படி பீஷ்மர் கூறினார்.  ஒற்றர்களும் காந்தாரத்தில் உளவறிந்து காந்தாரிக்கு ஓர் ஆட்டுக்கடாவை மணமுடித்ததையும், அப்போதைய சட்டப்படி அவள் விதவையே என்றும் சொன்னார்கள்.  மேலும் ஆடு பலி கொடுத்ததாலேயே திருதராஷ்டிரன் உயிர் பிழைத்தான் என்றும் இல்லை எனில் அவன் உயிரிழந்திருப்பான் என்றும் ஒற்றர்கள் கூறவே பீஷ்மருக்கு உண்மையை மறைத்துக் கல்யாணம் செய்து வைத்த காந்தார அரசன் மேல் கோபம் வந்து அவர்கள் மேல் போர் தொடுக்கிறார்.  எவராலும் வெல்ல முடியாத பீஷ்மருக்குப் பாண்டுவும் துணைக்குச் செல்ல காந்தார அரசனும், இளவரசர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு ஹஸ்தினாபுரம் கொண்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 

பீஷ்மருக்கு இருந்த கோபத்தில் அவர்களைக் கொல்ல வேண்டும் என நினைத்தாலும் அப்படிச் செய்வது தர்ம விரோதம் என்று புரிந்தவராய் தினமும் ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே அவர்கள் நூற்றுவருக்கும் உணவாக அளிக்கச் சொல்கிறார்.  ஒரு கைப்பிடி அரிசியில் ஒரு மனிதனே உண்ண முடியாதபோது காந்தார அரசனும், அவனின் பிள்ளைகள் நூறுபேரும் உண்பது எப்படி?  இன்னும் கொஞ்சம் உணவு தா எனக் கேட்பதும் அரசர்களுக்கு உரிய தர்மம் இல்லை;  அதுவும் பெற்ற மகள் வீட்டில் உணவே அளிக்கவில்லை என்றாலும் கேட்கலாம்;  தினம் ஒரு கைப்பிடி உணவு அளிக்கையில் போதவில்லை என்பதோ, சிறையிலிருந்து தப்பிப்பதோ சரியல்ல என்ற முடிவுக்கு வந்த அனைவரும், தங்களில் இளையவன் ஆன ஷகுனியைத் தேர்ந்தெடுத்து அந்தக் கைப்பிடி அரிசியைத் தினமும் அவன் ஒருவனையே உண்ணும்படி வற்புறுத்தினார்கள்.  குரு வம்சத்தினரைப் பழி வாங்க அவன் ஒருவனாவது மீதம் இருக்க வேண்டும் என்று அவனிடம் எடுத்துக் கூறினார்கள்.  ஷகுனியின் கண்ணெதிரே அவன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மடிந்து வந்தனர்.  ஒரு நாள் சுவலன் ஷகுனியின் கால் ஒன்றை கணுக்காலில் அடித்து உடைத்தான்.  ஷகுனியிடம், “ இனி நீ நன்றாக முன்போல் நடக்க இயலாது;  நொண்டி நொண்டி தான் நடப்பாய்.  நொண்டும் ஒவ்வொரு முறையும் கெளரவர்களைப் பழி வாங்க வேண்டியதன் காரணத்தை நினைவு கூர்ந்து வா.  அவர்கள் உனக்கும் நம் வம்சத்துக்கும் செய்த அநீதியை ஒரு போதும் மறவாதே!” என்று கூறினான். 

ஷகுனி நன்றாக தாயம் ஆடுவதும், சூதாட்டத்தில் பெரு விருப்பம் கொண்டவன் என்பதும் தகப்பன் ஆன சுவலன் நன்கு அறிவான்.  தான் சாகும் தருவாய் நெருங்கிவிட்டதை அறிந்த சுவலன் ஷகுனியை அழைத்து, “ நான் இறந்ததும் என் கைவிரல் எலும்புகளால் தாயம் ஆடும் தாயக்கட்டையை உருவாக்கு.  அதில் முழுதும் என் ஜீவன் நிரம்பி இருக்கும்.   கெளரவர்கள் பால் கொண்ட என் ஆத்திரமும் நிரம்பி இருக்கும்.  நீ அந்த தாயக்கட்டையை உருட்டி என்ன கேட்கிறாயோ அது தான் வரும்.   நீ விரும்பும் வண்ணமே எண்ணிக்கை விழும்.  நீயே வெற்றி பெற்று வருவாய்!’  என்று கூறினான்.    சிறிது காலத்தில் சுவலனும் இறந்து போனான்.  அனைவரும் இறக்க ஷகுனி ஒருவனே மிஞ்சினான்.  அவன் மிகவும் இளையவனாக இருந்த காரணத்தாலும் காந்தார நாட்டுக்கு ஒரே வாரிசாக இருந்ததாலும் பீஷ்மரின் கண்காணிப்பில் ஹஸ்தினாபுர அரண்மனையிலேயே வளர்ந்தான்.  ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் கெளரவர்களை எவ்விதம் தான் பழி வாங்குவது என்பதிலேயே தன் மூளையைச் செலவழித்தான்.  வெளிப்பார்வைக்குக் கெளரவர்களின் நண்பன் போல் காட்டிக் கொண்டு பீஷ்மர் எப்படித் தன் குடும்பத்தை அழித்தாரோ அதே போல் அவர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை அழிக்கத் திட்டம் தீட்டினான்.  அவனுக்கு துரியோதனனின் ஆத்திரம், ஆங்காரம், பேராசை, பொறாமை ஆகியன உதவி செய்தன.


Tuesday, October 29, 2013

குனிகரின் யோசனையும், ஷகுனியின் கேலிகளும்!

தன்னிரு கரங்களையும் ஆசீர்வதிக்கும் பாவனையில் கூப்பியவண்ணம் பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் எதிரே நின்று துரோணர் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மந்திரங்களை உச்சரித்த வண்ணம் குருவம்சத்தினருக்கு ஆசிகளை வழங்கினார்.  ம்ம்ம்ம்ம்ம் ஆனால், பாண்டவர்கள் மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால்!  இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு சபை கூட்டப்பட்டிருந்தால்? என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்தை மட்டும் அவரால் தவிர்க்க முடியவில்லை.  பாண்டவர்கள் ஐவருமே அவரின் பிரியத்துக்கு உகந்த மாணாக்கர்கள் தான்.  ஆனால்!!!!!!!  அவர் மனதில் வருத்தம் சூழ்ந்தது.  முட்டாள் தனமாக யுதிஷ்டிரனை யுவராஜ்ய பதவியிலிருந்து அகற்றவேண்டி துரியோதனனுக்கு யோசனை சொன்னது அவரன்றோ!   ஆனால் அதற்கு ஒரு காரணமும் அப்போது இருந்தது.  ஆத்திரமும், ஆங்காரமும் நிறைந்த துரியோதனனைத் தன் வழிக்குக் கொண்டு வந்து ஹஸ்தினாபுரத்தையே நாம் மறைமுகமாக ஆட்சி செய்யலாம் என்றல்லவோ துரோணர் நினைத்தார்!  குருவம்சத்தினரும், ஹஸ்தினாபுரத்தின் அதிகாரமும் நம் கைகளில் என்றல்லவோ துரோணர் நினைத்திருந்தார்.  அவர் எண்ணம் பொய்த்துவிட்டது.   இன்று வரை அவர் போட்ட திட்டங்கள் பொய்த்ததில்லை.  இது தான் முதல்முறையாக இருக்கும்.  நேர்மையும், நற்குணமும் வாய்ந்ததொரு லக்ஷியவாதிக்கு வழிகாட்டுவது எளிது.  ஆனால்!!  ஆத்திரத்துடன் நடந்து கொண்டு அதிர்ச்சி உண்டாக்கும் வண்ணம் நடந்து கொள்ளும் ஒரு முட்டாளை எவ்விதம் கையாளுவது!

தன்னிடத்தில் போய் அமர்ந்து கொண்ட ஆசாரியர் துரோணரிடம் அதுவரை சபையில் நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளின் சாரத்தை திருதராஷ்டிரன் தெரிவித்தான்.  “மரியாதைக்குரிய ஆசாரியரே, ஒரு முக்கியமான முடிவை இப்போது நாம் எடுத்தாக வேண்டும்.  துருபதனின் அழைப்பை ஏற்று நம் இளவரசர்களை திரெளபதியின் சுயம்வரத்தில் பங்கு கொள்ள அனுப்பி வைக்கலாமா?  அது சரியானதா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான்.   தன் குருட்டுக் கண்களை மகன் துரியோதனன் இருக்கும் பக்கம் திருப்பிய வண்ணம் திருதராஷ்டிரன் மேலும் கூறினான்:” இது ஒரு முக்கியமான விஷயம்.  நாமே கவனித்து முடிவு செய்ய வேண்டிய ஒன்று.  அவசரமாக எந்த முடிவுக்கும் வரக்கூடாது.  ஏனெனில் பாஞ்சால நாட்டு அரசன் நம் நண்பன் அல்ல; எதிரி.  அவன் மகளை நம் இளவரசர்களில் ஒருவருக்கு மணமுடித்து நம் அரண்மனைக்கும், நம் நாட்டுக்கும் அழைத்து வருவது முடிவில்லாத கிளர்ச்சிகளிலும், அதன் மூலம் பேராபத்துக்களையும் எதிர்கொள்ள நேரிடும். “  துரோணர் பீஷ்மபிதாமகரின்   அவரின் மன ஆழத்தை அளக்க விரும்புபவர் போல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தார்.  ஆனால் எதற்கும் கலங்காத பீஷ்மரோ  சற்றே அநிச்சையாகத் தன் முகத்துத் தாடியைத் தடவிக் கொடுத்தவண்ணம் எவர் அறிவுக்கும் எட்டாவண்ணம் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார்.  அதற்குள் திருதராஷ்டிரன், குனிகனைப் பார்த்து, “குனிகா, நீ எங்களிடம் சொன்னதை அப்படியே ஆசாரியரிடம் சொல்வாயாக!” என உத்திரவிட்டான்.

தன் கைகளைக் கூப்பியவண்ணம் மிகவும் வயதான மூத்த மந்திரி குனிகன், முதுமையின் காரணத்தால் ஓயாது துடித்துக் கொண்டிருக்கும் கண்ணிமைகளோடு சிரமப்பட்டுப் பார்த்துக் கொண்டு பேசலானான். “அரசே, தங்கள் கட்டளைப்படியே!  பிதாமகர் பீஷ்மரின் உத்தரவும் அநுமதியும் பெற்றுக் கொண்டு நான் முன்னர் பேசியதைத் திரும்பச் சொல்கிறேன்.  பாஞ்சாலம் நம் பக்கம் ஒரு கூரிய முள்ளைப்போல் உள்ள நாடு.  கிழக்கே நாம் எந்தப் போரும் செய்ய முடியாமல் எங்கேயும் வெற்றி அடைய முடியாமல் தடுத்த வண்ணம் உள்ளது.  உறுதியான தீர்மானங்களை எடுக்கும் துருபதன் நீண்டநாட்களாக நம்முடன் போர் புரிய ஆயத்தங்கள் செய்து வருகிறான்.  இதோ, இங்கே வீற்றிருக்கும், நம் மரியாதைக்குரிய அரச குரு, நம் படைகளின் தலைவர் ஆசாரியர் துரோணரைத் தன் முக்கிய எதிரியாகக் கருதியும் வருகிறான்.  அவன் மகன் யுவராஜா த்ருஷ்டத்யும்னனின் வீரத்தைக் குறித்தோ, அவன் மேன்மேலும் உயர்வடைய விருப்பம் கொண்டவன் என்பதிலோ, எதையும் எளிதில் மன்னிக்கும் சுபாவம் இல்லாதவன் என்பதிலோ நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.  இளவரசி கிருஷ்ணா என அழைக்கப்படும் திரெளபதியோ அசாத்திய மனோபலம் கொண்டவளாகவும் தன் தகப்பனின் அனைத்துக் குறைகளையும் ஏற்றுக் கொண்டு அவளும் அதே அளவு குறைகளை உடையவளாகவும் தகப்பனின் சபதத்தை முடிப்பதில் தீர்மானம் கொண்டவளாகவும் இருக்கிறாள் என ஒற்றர்கள் மூலம் விசாரித்து அறிந்ததில் தெரிய வருகிறது.”

“நம் பிதாமகர் பீஷ்மர் மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடு ஹஸ்தினாபுரத்தின் நிர்வாகத்தையும், குருவம்சத்தினரையும் பாதுகாத்து வருகிறார்.  இப்போது இந்தப் பாஞ்சால இளவரசி மட்டும் நம் இளவரசர்களில் ஒருவருக்கு மனைவியாக இந்த அரண்மனையிலும், ஹஸ்தினாபுரத்திலும் அடி எடுத்து வைத்தாளானால், இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதோடு அல்லாமல் பெரும் ஆபத்துக்களும் நேரிடலாம்.   புனிதமான பரத அரசனின் நினைவைப் போற்றும் வண்ணம் உருவான குரு வம்சத்தினருக்குப் பெரிய விபத்து நேரிடலாம்.  பிதாமகரே, அரசே, ஆசாரியர்களே, இளவரசர்களே, சபையோர்களே, மனுநீதியில் சொல்லி இருப்பதை இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.  மனு நீதியில், “ஒரு பெண்ணை மணந்து கொள்ளும் முன்னர் அவள் பெற்றோர் வந்த வழியையும் கவனித்துப் பாருங்கள்.” என்று சொல்லி இருப்பதை நினைவூட்டுகிறேன்.  இதைத் தவிரவும் ஒரு முக்கியமான கறை அந்தக் குடும்பத்தில் உள்ளது.  திரெளபதியின் சகோதரர்களில் ஒருவன், துருபதனின் மகன்களில் ஒருவன், ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்று சொல்கின்றனர்.   மாட்சிமை பொருந்திய சபையோர்களே, அவனுக்கு தஷார்னாவின் இளவரசியை மணமுடித்திருக்கின்றனர்.  “

“ஆஹா, என்ன சொல்ல! அந்த இளவரசியை இந்த இளவரசனோடு வாழ வேண்டி காம்பில்யம் அழைத்து வரும் சமயம்--- இந்த இளவரசன் --- அல்லது இளவரசி—எப்படி வேண்டுமோ சொல்லிக் கொள்ளுங்கள்---- இவன் நாட்டை விட்டே ஓடி விட்டானாம்.  அதுவும் சக்கரவர்த்தி துருபதன் தான் இப்படிச் செய்துவிட்டான் என்கின்றனர்.  இவன் ஆணில்லை, பெண் என்பது அவனை மணமுடித்த அந்த இளவரசிக்குத் தெரிந்து விட்டால்?  அதன் மூலம் தனக்குத் தலைக்குனிவு ஏற்பட்டு விடும் என்பதால் துருபதனே அவனை நாட்டை விட்டு ஓடச் செய்துவிட்டான் எனப் பேசிக் கொள்கின்றனர்.  “  இத்தனையையும் பேசி முடித்த குனிகன் மீண்டும் தன்னிரு கரங்களையும் கூப்பிய வண்ணம் அனைவரையும் வணங்கினான். ஆசாரியர் துரோணருக்கு ஷிகண்டினின்  மறைவு குறித்து உலகத்தார் பேசிக் கொள்ளும் விதம் பற்றி ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.  ம்ம்ம்ம்ம்… குனிகனுக்குத் தெரியாது.  ஆசாரியர் துரோணர் தான் ஷிகண்டினை ஒரு மாபெரும் வீரனாகவும், பூரண ஆண்மகனாகவும், ஒரு கதாநாயகனாகவும் மாற்றப் போகிறார் என்பதைக் குனிகன் அறிய மாட்டான்.  துரியோதனனுக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை.  அவன் கோபத்தோடு குனிகனைப் பார்த்தான்.  வெடுக்கென்று பேச ஆரம்பித்தான். “ குனிகரே, குரு வம்சத்து இளவரசர்களை என்னவென்று நினைத்தீர்கள்?  அவர்கள் அவ்வளவு பலஹீனமானவர்களா?  தங்கள் மனைவியரின் கைப்பாவைகளாக ஆடுவார்களென்றா நினைத்தீர்கள்?” என்று கோபமாய்க் கேட்டான்.
“யுவராஜாவின் மன்னிப்பைக் கோருகிறேன்.” வயது முதிர்ந்தவரானாலும் அரச குலத்தவருக்கு அளிக்கும் மரியாதையில் இருந்து சற்றும் தவறாத குனிகர் மேலும் தொடர்ந்து, “ வீட்டுக்கு வரும் மருமகளின் கைகளிலிருந்து எந்த மனிதனும், எந்தக் குடும்பமும் தப்ப இயலாது.  அதோடு சாந்தமான மருமகளாக இருந்தாலுமே, ஒரு கணவனுக்கு மனைவியானதுமே  எந்தப் பெண்ணுமே கடைசியில் அவனை ஒரு மந்தமானவனாக, முட்டாளாக மாற்றிவிடுவாள் என்று பழைய பழமொழி ஒன்று சொல்லும்.  ஆனால் யுவராஜா அவர்களே, இவளோ? மன உறுதிக்கும் திடத்துக்கும் பெயர் போன பெண்மணி.  இவளால் என்னதான் முடியாது?”

துரோணருக்கு துரியோதனன் மனதில் ஓடும் எண்ணங்கள் தெளிவாகப் புரிந்தன;  பானுமதி சரியாகத் தான் சொல்லி இருக்கிறாள். துரியோதனன் எவ்வாறேனும் திரெளபதியின் கரம் பிடிக்கத் துடிக்கிறான்.  அதில் சந்தேகமே இல்லை.  இப்போது அரசனின் கண்கள் ஷகுனி வீற்றிருந்த திசையில் திரும்பின. “காந்தார இளவரசே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? தங்கள் கருத்து என்ன?” என்று கேட்டான்.  இகழ்ச்சியான பார்வை ஒன்றை வீசினார் துரோணர். அவர் தன் எண்ணத்தைச் சற்றும் மறைக்கவில்லை.  தன் மாணாக்கனைக் கெடுத்து அவனுக்குக் கேடு விளைவிக்கும் எண்ணங்களை அவன் மனதில் புகுத்தும் இந்தப் போக்கிரியை அவர் வெறுத்தார்.  துரியோதனன் மேல் அவன் செலுத்தும் ஆதிக்கத்தையும் வெறுத்தார்.  இதன் மூலம் குரு வம்சத்தின் ராஜ சபைக்கும், அதன் நடவடிக்கைக்கும் அவன் கொடுக்கும் ஓயாத தொல்லைகளையும் அவரால் பொறுக்க இயலவில்லை.   எதற்கும் கவலைப் படாத ஷகுனி சிரித்தான். “ கற்றறிந்த, வயதில் மூத்தவரான, விவேகமுள்ள மந்திரி குனிகனின் கருத்தோடு என் கருத்து சற்றும் ஒத்துப் போகாது.  ஆனால் பெருமை மிகுந்த பரத வம்சத்தினரின் இந்த ராஜசபைக்கு உரிய நியாயத்தோடு அவர் நடந்து கொள்ளவில்லை.” ஒரு வெற்றிப் புன்முறுவலோடு துரியோதனனையும் துஷ்சாசனையும் பார்த்த ஷகுனி மேலும் தொடர்ந்து, “குரு வம்சத்தினரின் இளவரசர்கள் என்ன கோழைகளா? சிங்கங்கள், சிங்கக் குட்டிகள்.   பாஞ்சால நாட்டு இளவரசி இவர்களில் ஒருவனை மணந்தால் அவனுக்கு விசுவாசமுள்ள  மனைவியாக இருப்பதல்லாமல் அவளால் வேறென்ன செய்ய முடியும்? “ துரியோதனனைப் பார்த்துக் கண்ணடித்த வண்ணம் இதைச் சொன்ன ஷகுனி மேலும் அவனுடைய பாதி ஏளனமானதும், பாதி கேலியானதுமான தொனியில் தொடர்ந்து, “பிதாமகர் பீஷ்மர் அல்லவோ குரு வம்சத்தின் பாதுகாவலர்!   அவர் இருக்கையில் என்ன பிரச்னை!  துரியோதனன் யுவராஜா! மந்திரி குனிகனோ நல்லமுறையில் ஆலோசனைகள் சொல்வதில் வல்லவர், அதோடு நம் தளபதியான ஆசாரியர் துரோணர் இருக்கையில் என்ன கவலை நமக்கு?  போர்களை எல்லாம் ஜெயிப்பது தானே நம் வேலை?  ஒரு இளவரசனால் வேறென்னதான் செய்ய இயலும்?”



Sunday, October 27, 2013

ராஜ சபை கூடியது!

நெற்றிப் புருவம் நெரிய, வாயிலில் தனக்காகக் காத்துக் கொண்டிருந்த  ரதத்தில் துரோணர் ஏறினார்.  மெல்ல நடந்தாலும், அவர் நடையில் ஒரு தீர்மானமும், நிச்சயமும் விசேஷமாகத் தெரிய நடந்து சென்றார்.  தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் உள்ளூர அவர் கொதித்துக் கொண்டிருந்தார்.   மழைக்காலம் வந்து சென்றுவிட்டது.  அந்த நீண்ட கங்கைக் கரை நெடுஞ்சாலை பயணத்துக்காக நெடுந்தூரப் பயணிகளுக்கென திறக்கப்பட்டு விட்டது.  கங்கை மழைக்காலத்தின்  சேறு நிறைந்த வேகமான புது வெள்ளம் குறைந்து இப்போது பூரண அமைதியுடன் சலசலவென ஓடிக் கொண்டிருந்தாள்.  முடிவில்லா ஓட்டம்!  இரண்டு நாட்கள் முன்னர் தான் காம்பில்யத்திலிருந்து வந்த படகுகளில் சில பிராமணர்கள் வந்தனர்.  மெத்தப்படித்த பண்டிதர்களான அந்த பிராமணர்கள் காம்பில்யத்தின் ஒரு சிறந்த அமைச்சரின் தலைமையில் குரு வம்சத்தினரின் இளவரசர்களை திரெளபதிக்கு நடக்கவிருக்கும் சுயம்வரத்திற்கு அழைப்பு விடுக்க வந்திருந்தனர்.  சித்திரை மாதம் பூர்ணிமைக்குப் பின்னர் வரும் முதல்நாளில் சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறின.  துரோணரின் ஜென்ம வைரியான துருபதனின் மகள் திரெளபதிக்கு சுயம்வரம்!

குரு வம்சத்து இளவரசர்களை சுயம்வரத்திற்கு அழைத்த விபரங்கள் அனைத்தும் காட்டுத் தீ போல் பரவி ஹஸ்தினாபுரம் முழுதும் இதே பேச்சாக இருந்தது.  ஆசாரியர் துரோணருக்கும் இந்தச் செய்தி தெரிய வந்தது.  அத்தோடு நின்றதா?  இன்று காலை தான் யுவராஜாவான துரியோதனனின் மனைவி பானுமதியும் இதே செய்தியைத் தூக்கிக் கொண்டு வந்து ஆசாரியரின் காதுகளில் போட்டாள்.   காம்போஜ இளவரசியான பானுமதியை ஆசாரியர் துரோணர் தன் சொந்த மகளுக்கும் மேலாக நேசித்து அன்பு பாராட்டி வந்தார்.  எளிதில் உணர்ச்சி வசப்பட்டாலும் உற்சாகத்தில் குறைவில்லாமல் அதே சமயம் அனைவரும் தனக்கே சொந்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணமும் கொண்டவளான பானுமதி இந்த ஆசாரியரின் சவால்களும், சங்கடங்களும்,  போர்களும்  நிறைந்ததொரு அரச வாழ்க்கையில் மலர்ச்சியையும், ஆனந்தத்தையும் எப்படியோ கொண்டு வந்து விட்டாள்.  துரோணர் அவள் தந்தையான காம்போஜ அரசனின் நீண்ட நாள் நண்பன் என்பதோடு துரியோதனனுக்கும் ,பானுமதிக்கும் திருமணம் நடக்கக் காரணமாகவும் இருந்தார்.  துரியோதனனின் முதல் மனைவியும் பானுமதியின் மூத்த சகோதரியுமான இளவரசி இறந்ததும், பெரு முயற்சிகள் செய்து பானுமதியை துரியோதனனுக்குத் திருமணம் செய்விக்கக் காரணமாக இருந்தவர் துரோணர். துரியோதனன் பால் அவள் அன்பு ஊற்றைப் போலத் தடையின்றிப் பீரிட்டுப் பொங்கிப் பிரவாகம் எடுத்த வண்ணம் இருந்தது.  சுயநலத்தை முன்னிட்டு அவன் செய்த பல செயல்களும் அவளுக்குத் தன் கணவனின் சக்தியையும், வீரத்தையும் வெளிப்படுத்துவதாகத் தோன்றவே அவன் பால் தன் விசுவாசத்தை எல்லையின்றிக் காட்டி வந்தாள்.

பல சமயங்களிலும் அவனுடைய பல்வேறு செயல்களுக்கு நியாயம் கற்பித்ததோடு அல்லாமல், அவனுக்கு உறுதுணையாக நின்று தன் அன்பான வார்த்தைகளாலும், ஆதரவான அணைப்பினாலும் அவனை ஆறுதல் படுத்தினாள்.  தன் மனைவி தன் மீது எல்லையற்ற அன்பு செலுத்துவதும், தன்னை வணங்கி பூஜிப்பதும் துரியோதனனுக்கு வசதியாகவே இருந்தது.  அவள் முந்தானையில் தன் தவறுகளை மறைத்துக் கொண்டு அதில் சுகம் கண்டான்.  இப்படியான இந்த ஆனந்த வாழ்க்கையில் இப்போது விரிசல் கண்டு விட்டது.  பானுமதிக்குத் தாங்க முடியவில்லை.  தன் கணவன் காம்பில்ய நாட்டு இளவரசி திரெளபதிக்கு நடைபெற விருக்கும் சுயம்வரத்தில் பங்கு பெறப் போகிறான் என்பதைக் கேட்டதிலிருந்தே அவளுக்கு நிலை கொள்ளவில்லை.  அதிர்ச்சியில் ஆடிப்போன பானுமதி செய்வதறியாமல் இந்த மாபெரும் பேராபத்திலிருந்து தன்னைக் காக்கவேண்டி ஆசாரியரை நாடி வந்தாள்.  அவர் இதில் தலையிட்டுத் தன்னைக் காக்கும்படி வேண்டினாள்.  ஆசாரியர் துரோணருக்கு இது முற்றிலும் புதிய செய்தியாக இருந்தது.  பாவம், பானுமதி!  எவ்வளவு நல்ல பெண்! வெகுளியும் கூட!  துரியோதனன் பால் அளவற்ற பாசமும், அன்பும் கொண்டவள்.  துரியோதனன் பால் அன்பு காட்டியதன் மூலம் தன் அன்பையும் பாசத்தையும் வீணாக்கி விட்டாளோ!  அவள் வாழ்க்கையும் வீணாகிவிட்டதோ!  ஹூம் அவள் மட்டும் என்ன?

அவரும் தான் தன் வாழ்நாளை துரியோதனனை ஒரு நல்ல  வீர, தீரப்  பராக்கிரமங்கள் நிறைந்த கதாநாயகனாக மாற்றுவதில் ஈடுபட்டுத் தோல்வி தான் அடைந்துள்ளார்.  எவ்வளவு சக்தியையும், நேரத்தையும் அவன் பால் செலவிட்டிருப்பார்!  அனைத்தும் வீணாகி விட்டது.  ஹூம், அர்ஜுனனைப் போன்றதொரு அருமையான சீடன் இனி கிடைப்பானா?  அவன் மட்டும் உயிருடன் இருந்தால்!!! துரோணர் பெருமூச்சு விட்டார்.  துரோணரின் மாணாக்கர்களில் ஒருவன் அந்த துருபதனைத் தோற்கடித்து, வெற்றிப் பரிசாக திரெளபதியின் கரங்களைப் பற்றினால்!!  இது துரோணரால் ஓரளவுக்கு சகித்துக் கொள்ள முடியும்.  ஆனால்! துரியோதனனோ!  சாதாரணமான ஒரு யுவராஜாவாகச் சென்று இளவரசி திரெளபதியைத் தனக்கு மணமுடிக்குமாறு கேட்கப் போகிறான்.  இது அவன் பிறந்த குரு வம்சத்துக்கு மட்டுமில்லை;  துரோணரின் சீடன் என்ற முறையிலும் அவரது கெளரவத்துக்கும் சேர்த்து இழுக்கு. முடியாது; முடியாது;  துரோணர் இதை ஒரு நாளும் அநுமதிக்க மாட்டார்.  துரியோதனன் இந்த சுயம்வரத்துக்குச் செல்வதிலிருந்து தடுப்பது அவர் பொறுப்பு.  பிதாமகர் பீஷ்மருக்குக் கூட குரு வம்சத்தின் யுவராஜா இத்தகையதொரு சுயம்வரத்தில் கலந்து கொள்வதில் சம்மதம் இராது.   இதைக் கேவலமாக நினைப்பார்.

துரோணரின் தேர் அரண்மனை வாயிலை நெருங்கியது.  துரோணருக்கு திடீரென கிருஷ்ண வாசுதேவன் நினைவு வந்தது.  அவனை என் எதிரி என நினைத்திருந்தேனே!  உண்மையில் அவன் எதிரியே அல்ல;  நண்பன். அதுவும் என்னிடம் மிகவும் மரியாதை வைத்திருக்கும் நண்பன்.  அவனுக்கு எவ்வளவு அறிவும், ஞானமும் இருந்திருந்தால், அவரை ஒரு மகா வீரராகவும், போர்த்தளபதியாகவும், போர்ப்பயிற்சிகளில் சிறந்ததொரு ஆசாரியராகவும் மட்டும் நினையாமல், ஒரு பெண்ணைச் சிறந்ததொரு ஆணாக, போர் வீரனாக, யுத்த தந்திரங்களில் சிறந்தவனாக மாற்ற முடியும் என உறுதியோடு சொல்லி இருப்பான்!   ஆஹா!  இந்த இடைச்சிறுவன் அற்புதமானவன்.  ஹூம், அவன் ஹஸ்தினாபுரம் வந்தபோது அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் மட்டும் கிடைத்திருந்தால்!!  சட்டென்று அவருக்கு துரியோதனன் செய்யவிருக்கும் மடத்தனம் நினைவில் வந்தது.  அவன் மட்டும் காம்பில்யம் சென்றால்!  ஆசாரியர் துரோணர் இங்கே குரு வம்சத்தினரோடு தொடர்ந்து இருக்க மாட்டார்.  விலகி விடுவார்..  ஆசாரியர் துரோணர் சாமானியமானவரா என்ன!

தன் சுயமரியாதையைத் துறந்து செல்வமோ, அதிகாரமோ, பதவிகளோ பெறுவதில் ஆசைகளே இல்லாத ஒரு பிராமணன், உண்மையான பிராமணன்  ஆன ஜமதக்னி முனிவரின் மகனான, சாக்ஷாத் பரசுராமரின் சீடர்.  பரசுராமரின் நேரடி சீடரான இந்த துரோணரை வெல்வதற்கும் ஒருவர் உண்டோ?  துரியோதனன் மட்டும் திரெளபதியைத் திருமணம் செய்து கொண்டான் எனில், ஹஸ்தினாபுரத்தில் இருந்தே துரோணர் சென்று விடுவார்..இதோ, அரண்மனை ராஜசபை வந்துவிட்டது. ஆசாரியர் அரண்மனையின் ராஜசபை நடைபெறும் இடத்திற்குச் சென்ற சமயம் அங்கே ஏற்கெனவே இந்த சுயம்வரம் குறித்த விவாதங்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன.  தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த  பீஷ்மப் பிதாமகர் வழக்கத்தை விட உயரமாக, சிம்மாசனத்தை விடவும் உயரமாகக் காணப்பட்டார்.  இந்த வயதில் கூடச் சற்றும் தளர்ச்சியில்லாத அங்க, அவயவங்களோடு மன உறுதியும், உடல் பலமும் , பிரமசரியத்தின் தேஜஸோடும் விளங்கினார்.  கண்ணில்லாக் குருட்டு அரசனான திருதராஷ்டிரனோ, பீஷ்மர் பக்கம் அமர்ந்த வண்ணம் எதுவுமே பார்க்க இயலாக் குருட்டுக் கண்களை அப்புறமும், இப்புறமும் உருட்டிய வண்ணம் அமர்ந்திருந்தான்.  விறைப்பாகவும், கம்பீரமாகவும் அமர்ந்திருந்த பீஷ்மர் அருகே இவன் தொய்ந்து போய் தளர்வோடு அமர்ந்திருப்பது காணவே விசித்திரமானதாக இருந்தது.  இவ்வளவு வருடங்களாக பீஷ்மர் கஷ்டப்பட்டுக் கட்டிக் காத்து வந்த அதிகாரங்கள் அனைத்தும் அவன் முன்னே தொய்ந்து ஒன்றுமில்லாமல் போய் விட்டதாக துரோணர் உணர்ந்தார்.

திருதராஷ்டிரன் அருகே அமர்ந்திருந்த துரியோதனன் தன் வழக்கமான ஆங்காரமும், ஆத்திரமும் கண்களில் தெரிய அமர்ந்திருந்தான்.   அவனருகே அமர்ந்திருந்த துஷாசனனோ அங்கிருந்த அனைவரையும் உற்று நோக்கிய வண்ணம் தன் நெடிய மெலிந்த உருவம், இன்னமும் மெலிந்தாற்போல் காணப்பட்டான்.  அவனருகே தன் கண்களிலேயே சூழ்ச்சியையும், வஞ்சகத்தையும், பேராசையையும் காட்டிய வண்ணம் காந்தார நாட்டு இளவரசன் ஆன ஷகுனி அமர்ந்திருந்தான்.  அவனுடைய பருத்த உடல் பார்க்கவே எண்ணெய்ப் பிசுக்கோடு இருக்கின்றான் போலக் காட்சி அளித்ததோடு அல்லாமல், அவனிடம் நல்ல குணங்களே மருந்துக்கும் இல்லை என்பதையும் வஞ்சகமானவன் என்பதையும் தெரிவித்தது.   ஷகுனியின் அருகே அமர்ந்திருந்த தேரோட்டி அதிரதனின் மகன் ஆன கர்ணன், தன் புத்திசாலித்தனத்தையும், உயர்ந்த அறிவோடு கூடிய ஞானத்தையும் உடையவன் என்பதை சூரியனைப் போல் பளிச்சிடும் கண்களால் காட்டியவண்ணம் அமர்ந்திருந்தான்.  அவன் கண்களின் மொழியிலிருந்து அங்கே நீண்ட நேரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விவாதம் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதைக் காட்டியது.  தன்னால் இதை எளிதாக நேரடியான ஒரு தீர்வின் மூலம் முடிக்க முடியும் என்பதை அவன் முகம் சொல்லாமல் சொல்லியது.  கர்ணன் பக்கத்தில் துரோணரின் அருமை மகன் அஸ்வத்தாமா அமர்ந்திருந்தான். துரியோதனனுக்கு அஸ்வத்தாமா வலக்கரம் போன்றவன்.  அவனில்லாமல் துரியோதனனுக்கு எதுவும் முடியாது.

ஆஹா, இது என்ன?? துரோணருக்கு ஆச்சரியம் மிகுந்தது!  பீஷ்ம பிதாமகரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், மஹா ஞானி என்று பெயரெடுத்தவரும் நீதிக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டு எனச் சொல்லப்படுபவரும் ஆன விதுரரை அங்கே காணோம்.  ஆனால்  தந்திரமும், புத்தி நுட்பமும் மிகுந்த மந்திரி குனிகன் அங்கே இருந்தார்.  வயதின் காரணமாகத் தசைகள் சுருங்கிக் கண்கள் இடுங்கிக் காணப்பட்டார் அவர். துரோணரின் மைத்துனரும், குரு வம்சத்தினரின் ஆதி குருவுமான கிருபாசாரியாரும் அங்கே வீற்றிருந்தார். துரோணர் சபைக்குள் நுழைந்தார்.




Monday, October 7, 2013

மனம் மாறிய துரோணர்!

கண்ணன் தன்னிடம் கூறியதை அப்படியே எடுத்து உரைத்த ஷிகண்டினைப் பார்த்த துரோணர், “நீ அதற்கு என்ன மறுமொழி கூறினாய்?” என்று கேட்டார். 

“நான் அவனிடம் கேட்டேன்:”வாசுதேவா, துரோணாசாரியார் என்னைத் தன் சீடனாக ஏற்க மறுத்துவிட்டால்? அப்போது நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டேன்.”

“வாசுதேவன் என்ன சொன்னான்?” துரோணர் கேட்டார்.

“ஆசாரியரே, வாசுதேவன் இவ்விதம் கூறினான்:”துரோணர் ஒரு நல்ல திறமையுள்ள குரு. உண்மையான, பிராமணர்.  பிராமணருக்குரிய அனைத்து நியதிகளையும் கடைப்பிடிக்கிறவர்.  அத்தகையவர் ஒரு சீடன் தன்னிடம் வந்து மாணாக்கனாக ஏற்றுக்கொள்ளச் சொல்லி வேண்டுகையில், அவனை, “நான் ஏற்க மாட்டேன்.” என்று சொல்லக் கூடியவர் அல்ல.  அதுவும் கற்றலில் ஆர்வம் உடைய, அதற்கேற்ற தகுதிகள் உள்ள ஒரு மாணாக்கனைத் திருப்பி அனுப்ப மாட்டார்.  ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள் ஷிகண்டின்.  அவரிடம் நீ செல்கையில் உன் மனத்திலிருந்து வெறுப்பின் கடைசிச் சுவடு கூட இல்லாமல் மனதைப் பளிங்கு போல் சுத்தமாக வைத்துக் கொண்டு செல்வாயாக!  

"நேர்மையுடனும், வெளிப்படையாகவும் உண்மையைத் தவிர வேறொன்றும் பேசாதே!  அவருக்கு ஒரு மகனைப் போல் சேவைகள் செய்து வா.  இன்னும் சொல்லப் போனால் நீ அவர் பெற்ற மகனைப்போல் நடந்து கொள்.  உன் தகப்பன் துருபதன் என்பதை அடியோடு மறந்து துரோணரின் பெற்ற மகன் அவரிடம் எவ்விதம் நடந்து கொள்வானோ அவ்வாறு நடந்து கொள்.  எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாய்த் தெரியும் ஷிகண்டின்.  உன்னை எவராவது ஆண்மகனாக ஆக்க முடியும் எனில் அது துரோணரால் மட்டும் தான் இயலும். “ இவ்வாறு வாசுதேவன் கூறினான்.” ஷிகண்டின் இவற்றைச் சொல்கையில் கடைசி வாக்கியங்களைச் சொல்லும்போது அவன் குரல் உணர்ச்சிவசத்தில் தழுதழுத்தது.  எதற்கும் அசைந்து கொடுக்காத துரோணரைக் கூட அந்த உணர்வு வெள்ளம் அசைத்துப் பார்த்தது.

“நீ ஒத்துக்கொண்டாயா?” என்று கேட்டார்.

“இதில் கேள்விக்கே இடமில்லை குருதேவரே!  வாசுதேவ கிருஷ்ணன் என்னைக் காப்பாற்றி விட்டான்.  அவன் என் ரக்ஷகன்.  நான் அவன் காலடியில் விழுந்தேன்.  நான் உடனே ஒரு பிரமசாரிக்குரிய உடைகளை அணிந்து கொண்டேன்.  ஆசாரியர் ஷ்வேதகேது என்னை ஒரு படகுக்கு அழைத்துச் சென்றார்.  அந்தக் கும்மிருட்டில் அந்தப் படகில் பயணித்தேன்.  பின்னர் மெல்ல மெல்ல நீங்கள் இருக்கும் இந்தக் குருகுலத்துக்கு வந்து யுத்தசாலைக்கும் வந்து சேர்ந்தேன்.”


துரோணாசாரியாரின் மனம் விசித்திரமாக ஷிகண்டினின் பால் கவரப் பட்டது.  என்றாலும் அவருள் எழுந்த சந்தேகங்களையும் அவரால் தவிர்க்க முடியவில்லை.  “ உன் தந்தைக்கு உதவி செய்வதற்காகக் கிருஷ்ண வாசுதேவன் உன்னை ஏன் இங்கே உளவாளியாக அனுப்பி இருக்கக் கூடாது?” என்று கேட்டார். தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம் துரோணரை நமஸ்கரித்தான் ஷிகண்டின்.

“ஆசாரியரே, என்னைத் தங்களுடனேயே வைத்துக்கொள்ளுங்கள்.  என்னைப் பலவிதங்களிலும் சோதித்துப் பாருங்கள்.  என் நினைவுகளிலோ, வார்த்தைகளிலோ, செயல்களிலோ நான் ஒரு மோசடிக்காரன், வஞ்சகன், சூழ்ச்சிக்காரன் என்பது நிரூபணம் ஆனால்  நான் உங்கள் காலடியில் என் உயிரைச் சமர்ப்பிக்கிறேன்.  என் உயிர் உங்களுடையது.  நீங்கள் என் ஞானகுரு.  ஆன்மிகத் தந்தை!” என்றான்.  துரோணாசாரியார் உடனே எதுவும் பேசவில்லை.  சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தார்.  “ஷிகண்டின், உனக்கு ஒரு ஆண் மகனாக மாறவேண்டும் அல்லவா?  உண்மையான ஒரு தீரம் மிக்க ஆண்மகனாக?” என்று கேட்டார்.

“நான் ஒரு ஆணாக இருக்கத் தான் விரும்புகிறேன்.  ஆனால் அது நடக்கக் கூடியதா?” என்றான் ஷிகண்டின் பெருமூச்சுடன்.

“ஒருவேளை நடக்கக் கூடாதது என்னால் நடத்தி வைக்கப்பட்டால்?  மிகக் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.  அவற்றுக்கு நீ தயாராக இருக்கிறாயா?  எவ்வளவு கடுமையான சோதனைகளானாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.  மன உறுதி வேண்டும். “

ஷிகண்டினின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. “ஆசாரியரே, நான் நீங்கள் சொல்லுவதைக் கேட்கிறேன்.  தயவு செய்து என்னை ஒரு ஆண்மகனாக தீரம் மிக்கவனாக மாற்றுங்கள்.”

“ஷிகண்டின், எனக்கு ஒரு யக்ஷனைத் தெரியும்.  அவன் பெயர் ஸ்தூனகர்ணன். அவனுக்கு ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும் தெரியும். அவனுக்கு அந்த வித்தை நன்கு தெரியும்.   ஆனால் பல மாதங்களுக்கு நீ கடுமையான, பயப்படுத்தக் கூடிய கஷ்டங்களை அனுபவித்தே தீரவேண்டும்.  நீ அவனிடம் சென்று கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராகி இருக்கிறாயா?”


“என் குருவான நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதற்கு நான் கீழ்ப்படிகிறேன்.  என்ன சோதனைகள் இருந்தாலும் எதிர்கொள்கிறேன்.  உங்கள் இஷ்டம் போல் என்னிடம் நீங்கள் நடந்து கொள்ளலாம்.” என்றான் ஷிகண்டின்.



Sunday, October 6, 2013

துரோணரையும் கவர்ந்த கண்ணன்!

தன்னுடைய இருப்பின் மூலமும், பார்வையின் மூலமும் கிருஷ்ணன் எப்படி ஒவ்வொரு மனிதரிடமும் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பதை நினைத்து நினைத்து துரோணாசாரியாருக்கு ஆச்சரியம் மிகுந்தது.  ஆச்சரியத்தை அவரால் தவிர்க்க இயலவில்லை.  அந்த ஆச்சரியம் மாறாமலேயே, “ஆகவே நீ இறக்கவேண்டாம் என முடிவெடுத்தாய்?” என்று ஷிகண்டினிடம் கேட்டார்.

“இல்லை. நான் அவனிடம் அனைத்தையும் மறக்காமல் ஒன்றுவிடாமல் கூறிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன்.   நான் வளர்ந்த விதம், என்னுடைய உணர்வுகள், என்னுடைய துன்பங்கள்,  அனுபவித்த துன்பங்கள் மட்டுமில்லாமல், தொடர்ந்து வரும் துன்பங்கள் என ஒன்றுவிடாமல்.  கிருஷ்ணனின் ஆசாரிய வழி சகோதரனும், நண்பனுமான ஷ்வேதகேதுவிடம் , “என்னைக் கிருஷ்ணனைப் பார்க்க அழைத்துச் செல் எனக் கெஞ்சினேன்.  அப்போது தான் நான் கிருஷ்ணனைப் பார்க்கப் போவது ஒருவரும் அறியாமல் இருக்கும்.”

“நீ அவனைப் பார்த்தாயா?”

“ஆம்,  அவன் தங்கி இருந்த மாளிகையிலிருந்து வெளியே வந்து அங்கிருந்த வெட்டவெளியில் என்னையும் அழைத்துக் கொண்டு இருவரும் சிறிது நேரம் நடந்தோம்.  ஆஹா, கிருஷ்ணனின் கருணையை என்னென்பது!   நான் என்னுடைய துரதிர்ஷ்டவசமான வாழ்க்கையைக் குறித்து அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன்.”  ஷிகண்டின் கிருஷ்ணனின் பெருமையைக் குறித்துச் சொல்வதில் அளவு கடந்த பெருமிதம்  அடைகிறான் என்பதை துரோணர் புரிந்ந்து கொண்டார். அவனைக் குறித்துப் புகழ்ந்து சொல்வதிலும் அவன் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறான் என்பதைக் கண்டார்.  ஷிகண்டின் தொடர்ந்தான்.

“அவன் பொறுமையுடன் என்னைச் சகித்துக் கொண்டதோடு நான் சொல்வதைக் கவனித்துப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். என்னுள்ளே நான் அன்றுவரை சொல்லமுடியாமல் வெளிக்காட்டிக் கொள்ள இயலா உணர்வுகளை என் மன ஆழத்திலிருந்து தோண்டிக் கண்டு பிடித்து அவனிடம் பகிர்ந்து கொள்ள வைத்தான்.   அவனிடம் என் மனதைத் திறந்து காட்டினேன்.  நான் எவ்வாறு சிறு வயதிலிருந்தே ஒரு ஆண்மகனாக வாழ நினைத்தேன் என்பதைச் சொன்னேன்.  அந்த முயற்சியில் படிப்படியாக நான் எப்படி என் மாறுபட்ட பாலினத்தால் திணறித் திக்குமுக்காடினேன் என்பதையும் கூறினேன்.   நான் வெறுப்பின் பலிக்கடாவாக எவ்வாறு ஆக்கப் பட்டேன் என்பதையும் எடுத்துக் கூறினேன்.  இத்தனைக்கும் நடுவே எனக்குத் திருமணம் ஆனதையும், என் மாமனார் என் மனைவியை என்னோடு வாழ அனுப்ப முயற்சி செய்து வருவதையும் அதன் காரணமாக நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்ததையும் எல்லாவற்றையும் கண்ணனிடம் சொன்னேன்.”

“ம்ம்ம்ம், வாசுதேவன் அதற்கு என்ன மறுமொழி கூறினான்?”

“என்னுடைய துக்கம் நிறைந்த இந்தத் துயரமான வாழ்க்கையைக் குறித்து அவனிடம் சொல்லும்போதே என் கஷ்டங்கள் மறைந்து கொண்டு வருவதாக நான் உணர்ந்தேன்.  கிருஷ்ணன் அப்படி ஒரு தீவிர கவனத்துடனும், கருணையுடனும் நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டான்.  என் துன்பத்தைக் குறித்து நான் கூறிக் கதறியபோது அவன் என்னைப் பார்த்துக் கருணைபொங்கச் சிரித்தான்.  அந்தச் சிரிப்பும், அந்தக் கண்களின் பார்வையும்!  ஆசாரியரே, அவன் கண்களிலிருந்து பெருகிய அந்தக் கருணா சமுத்திரத்தில் நான் மூழ்கிப் போனேன்.  அத்தகையதொரு கருணையைக் கிருஷ்ணன் ஒருவனால் மட்டுமே தர முடியும்.  சிறு குழந்தையைப் பெற்ற தந்தை கன்னங்களைப் பிடித்துக் கொஞ்சுவதைப் போல் கண்ணன் என் கன்னங்களைத் தன்னிரு கரங்களால் பிடித்து அழுத்தி என் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.  அதன் பிறகு அவன் பேசிய போது மழையே காணா வறண்ட பாலைவனத்தில் செல்லும் ஒருவனுக்கு அபூர்வமாகக் கிடைக்கும் மழைத்துளியைப் போன்று அவன் சொற்கள் என்னைக் குளிர வைத்தன.  என் மன தாகத்தைத் தீர்த்து வைத்தன.  “

“அப்படி என்னதான் சொன்னான் கிருஷ்ணன்?”

“ஆசாரியரே!  அவன் இந்த மாதிரி ஏதோ சொன்னான்: “என் குழந்தாய்,  தர்மத்தைக் கடைப்பிடித்துக் கொண்டு வாழும் வாழ்க்கையை வாழ முடிந்த வரை நீ வாழ்ந்தே தீரவேண்டும்.  அதற்குள்ளாக  உன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்காதே!   இன்றுவரையிலும் சோதனைகள் நிறைந்த உன் வாழ்க்கையை நீ தைரியமாக எதிர் கொண்டிருக்கிறாய்.  இப்போது போய் உன் தைரியத்தைக் கை விடலாமா? “ என்று கிருஷ்ணன் கேட்டான்.  நான் சொன்னேன், “கண்ணா, இனி என்னிடம் தைரியம் என்பது மருந்துக்குக்கூட இல்லை. “ என்றேன்.  அதற்கு அவன் சிரித்துவிட்டு, “கோழையாக, கோழைத்தனத்தோடு இறக்க விரும்புகிறாயா?” என்றான்.  நான் “இல்லை” என்றேன்.  அதற்கு அவன் சொன்னான்:”  இறப்பை தைரியமாக நீ எதிர்கொள்ள விரும்பினால்,   நீ தைரியமாக இறக்க நான் வழி சொல்கிறேன். “  அதை அவன் சொன்னது எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை.  ஆனால் அதன் பின்னர் என்னுடைய கஷ்டங்களுக்கு விடிவு பிறந்துவிட்டது என்பதை என்னால் உணர முடிந்தது.”  துரோணாசாரியாருக்கு இந்த இளைஞனிடம் ஒரு புதிய ருசி பிறந்துவிட்டது.  இறக்கத் துணிந்த ஒருவனுக்கு வாழ்ந்து காட்டும் தைரியத்தைக் கொடுத்த அதிசய மனிதன் கிருஷ்ணன்.  அவனால் தைரியம் அடைந்த இந்தச் சிறுவன். துரோணர் அவனைப் புதிய கண்களால் பார்த்தார்.  “பின்னர் என்ன நடந்தது?” என்றார்.

“ஆசாரியரே, கிருஷ்ணன் என்னிடம், கேட்டான்:” ஷிகண்டின், நீ ஒரு ஆண்மகனாக ஆக விரும்புகிறாயா?  உண்மையான ஆணாக, ஒரு போர் வீரனாக, சிறந்த மேன்மையுள்ள மனிதனாக ஆக விரும்புகிறாயா?” “ஆம் வாசுதேவா!” என்றேன் நான்.  தன்னிரு கரங்களையும் என் தோள்பட்டையில் வைத்த வண்ணம் என் கண்களை நேருக்கு நேர் பார்த்தான் வாசுதேவன்; “  குரு துரோணாசாரியாரிடம் செல்வாயாக!   அவரிடம் மாணவனாகச் சேர்!  அவர் ஒருவரால் தான் உன்னுள்ளே மறைந்திருக்கும் மனிதனைக் கொண்டு வர முடியும்.  அவர் சிறந்ததொரு ஆசாரியர்.  இந்த பூவுலகு முழுதும் தேடினாலும் அவரைப் போன்றதொரு சிறப்புகள் வாய்ந்த ஆசாரியரைக் காணமுடியாது.  களிமண்ணைக் கூடத் தங்கமாக மாற்றும் சக்தி அவரிடம் உள்ளது.”

துரோணருக்கு ஷிகண்டின் தன்னிடம் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன.  கிருஷ்ணனை முதன்முதல் பார்த்ததும் தன்னுள் எழுந்த உணர்ச்சிகளை ஷிகண்டின் விவரித்ததை நினைவு கூர்ந்தார்.  அவனுடைய உணர்வுகளை இப்போது அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.  விவரிக்க ஒண்ணாத மகிழ்ச்சியும், பெருமையும் அவர் மனதில் நிரம்பி வழிந்தது.  “அவன் அப்படியா சொன்னான்?  இதே வார்த்தைகளைச் சொன்னானா?” என்று கேட்டார்.


“ஆம் ஐயா, நான் ஒரு வார்த்தையைக் கூட விடவும் இல்லை;  மறக்கவும் இல்லை.  ஒவ்வொரு வார்த்தையும் எனக்குப் பூவின் தேனைச் சுவைக்கும் வண்டு எப்படி அந்தத் தேனின் சுவையில் மயங்குமோ அத்தகையதொரு உணர்வைத் தந்தது.  ஆனால் முதலில் அவன் இதைச் சொன்னதும் எனக்குத் திகைப்பே ஏற்பட்டது.  நான் கிருஷ்ணனிடம், என் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்தால் ஒருக்காலும் என்னை துரோணரிடம் சென்று மாணவனாகச் சேர அனுமதிக்க மாட்டார்.  என் தந்தையின் பரம வைரி அவர்.” என்றேன். “

“நான் என்ன அவ்வளவு பொல்லாதவனா?” துரோணர் சிரித்தவண்ணம் கேட்டார்.   எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மனம் விட்டு அவர் சிரிப்பதும், அவர் மகிழ்வின் உச்சத்தில் இருப்பதும் புரிந்தது.

“உங்களுக்குக் காரணம் புரியும் என் ப்ரபுவே!” என்றான் ஷிகண்டின்.

“ஆம், எனக்குத் தெரியும்! வாசுதேவன் அதற்கு என்ன சொன்னான்?”

“அவன் சொன்னான்:”ஷிகண்டின், நீ உன் தந்தையைக் கேட்டுக் கொண்டா உன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள எண்ணினாய்?  அதைப் போலவே உன் தந்தையின் சம்மதம் இல்லாமலேயே நீ துரோணரிடம் மாணவனாகச் சேரலாம்.  அதற்கு வேண்டிய தைரியம் உன்னிடம் உள்ளது.  ஒரு பூரணமான ஆண்மகனாக ஆவதற்கு நீ உன் தந்தையைக் கேட்க வேண்டாம்.  இங்கிருந்து ஒரு பரிபூரணமான வீரம் நிறைந்த ஆண்மகனாக நீ திரும்பிச் செல்கையில் உன் தந்தை உன்னை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்பார்.”



Friday, October 4, 2013

இவன் மனிதனா? மாயாவியா? பரம்பொருளா? துரோணரின் சந்தேகம்!

“என்ன!! உன் தந்தைக்குத் தெரியாமல் வந்தாயா?  என்னை இதை நம்பச் சொல்கிறாயா? ஷிகண்டின், நீ ஒரு பாரம்பரியம் மிக்க அரசகுடும்பத்தின் இளவரசன்/இளவரசி!  உன் தந்தைக்கு அறிவிக்காமல் நீ எப்படி வந்திருக்க முடியும்?” துரோணர் கோபத்தின் உச்சியில் இருந்தார்.

“ஐயா, இது உண்மையே.  முற்றிலும் உண்மை.  அங்கிருந்து நான் இரவோடிரவாகத் தப்பி ஓடி வந்துவிட்டேன். காம்பில்யத்திலிருந்து ஓடி வந்துவிட்டேன்.  ஓடிவரவில்லை எனில் ஏதானும் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி என்னை நான் சாகடித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அதுவும் என் மனைவியாகிய அந்தப் பெண் வருவதற்குள் நான் தப்பியாக வேண்டுமே! எனக்கு வேறு என்ன வழி?”

“ஆனால் என்னிடம் ஏன் வந்தாய்?”

“ஐயா, இந்த மூவுலகிலும் தேடினாலும்  ஒரு பெண்ணை நல்லதொரு போர்வீரனாக மாற்றுவதற்கு ஏற்றதொரு ஆசாரியர் உங்களை விட்டால் எவருமில்லை எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். “இதைச் சொல்கையில் ஷிகண்டினுக்கு மனதில் வருத்தமும் சந்தேகமும் ஏற்பட்டு விட்டது.  துரோணர் தன்னைச் சீடனாக ஏற்க மறுத்துவிடுவார் என்றதொரு அச்சம் ஏற்பட்டது.  ஆனால் துரோணரோ, “ நான் ஒரு பெண்ணை என் மாணாக்கராக எடுத்துக்கொள்வேன் என்று உன்னிடம் சொன்னவன் முழு முட்டாள் என நினைக்கிறேன். இல்லை எனில் அப்படிச் சொல்லி இருக்கமாட்டான்.” என்றார் துரோணர்.  “இல்லை, ஐயா, என்னிடம் சொன்னவரின் நேர்மையையோ, அவரின் வார்த்தைகளையோ சந்தேகிக்க இயலாது!  என் வாழ்க்கையில் இது வரை நான் பார்த்தவர்களில் இவரைப் போன்றவர்கள் அரிதானவர்கள்!” என்றான் ஷிகண்டின்.

“யார் அது?”

“வாசுதேவக் கிருஷ்ணன்!”

இந்தப் பெயரைக் கேட்டதும் துரோணருக்குத் தூக்கிவாரிப் போட்டது என்றால் அது மிகையில்லை.  அலக்ஷியமாக அமர்ந்திருந்தவர் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து ஆழ மூச்சை உள்ளிழுத்துப் பின் நிதானமாக வெளியிட்டார்.  ஆஹா, இந்த கிருஷ்ண வாசுதேவன் உண்மையில் மனிதன் தானா?  தன்னைச் சுற்றி ஒரு மாயவலையைப் பின்னிக்கொண்டு அதில் அகப்படும் அனைத்து மனிதர்களையும் தன்பால் கவர்ந்திழுக்கிறானே!  காம்பில்யத்திற்குச் சென்றிருக்கிறானா?  ஆஹா, துருபதனின் மகளை அவன் அல்லவோ மணக்கப் போவதாய்ச் சொல்கின்றனர்!  என் பரம வைரியின் மகளைக் கிருஷ்ண வாசுதேவன் மணக்கப்போகிறானா?  இப்போது என் பரம வைரியின் இன்னொரு மகளை என் யுத்தசாலைக்கு அனுப்பி என்னைச் சோதிக்கிறான் போலும்.  ம்ம்ம்ம்ம், துரோணருக்கு இப்போது அனைத்துமே புரிந்தாற்போல் இருந்தது.  எல்லாம் தெளிவாகிவிட்டாற்போல் இருந்தது.   கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்தால் அவனுக்கு மேல் நாம் செய்ய மாட்டோமா?  தந்திரத்தை தந்திரத்தால் வெல்லலாம்.  அவன் சொந்தப் பகடைக்காயைக் கொண்டே அவனை வீழ்த்தலாம்.  துரோணர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.  ஷிகண்டினைப் பார்த்து, “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு நீ ஒரு பெண் என்பது தெரியுமா?” என்று கேட்டார்.  “நான் அவரிடம் அனைத்தையும் விளக்கிக் கூறிவிட்டேன்.” என்றான் ஷிகண்டின்.

“எப்படிப் பட்டவன்?  அந்தக் கிருஷ்ண வாசுதேவன்?” துரோணர் கேட்டார்.
“அற்புதமான மனிதன். மிக அற்புதமானவன்.” ஷிகண்டினின் கண்களில் கனவு காண்பது போன்றதொரு தோற்றம்.  வாசுதேவக் கிருஷ்ணனைக் குறித்த அந்த அருமையான நினைவுகளில் மூழ்கியவனாய் மீண்டும் பேச ஆரம்பித்தான். “ ஐயா, அவன் காம்பில்யத்துக்கு வந்திருந்தான்.  காம்பில்யத்தின் இறுக்கமான சூழ்நிலையை மகிழ்வான ஒன்றாக மாற்றிவிட்டான்.  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்தோம்.  என் தந்தை உட்பட!  அவன் அருமைகளில் நாங்கள் முற்றிலும் கரைந்து போனோம்.”

துரோணருக்கு இப்போது முழுவதும் தன்னிலை திரும்பி விட்டது.  இத்தனை நேரம் ஒரு வித அலக்ஷியத்தோடேயே கேட்டு வந்தவர். இப்போது தன்னை முற்றிலும் சுதாரித்துக் கொண்டு விட்டார். அவருடைய எச்சரிக்கை உணர்வு மீண்டும் எழுப்பப்பட்டு விட்டது.  அந்த உணர்வோடேயே இப்போது காம்பில்யத்தில் நடந்த அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினார்.  அவர் தன் எச்சரிக்கை உணர்வைக் கைவிடாமலேயே ஷிகண்டினிடம், “உன் தந்தையின் முடிவுக்கு, திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்குச் சம்மதித்தானா கிருஷ்ண வாசுதேவன்?”

“உங்களுக்கு இது குறித்து ஏற்கெனவே தெரியுமா?” கேட்ட ஷிகண்டின் தன் கண்கள் விரிய மேலே கூறியதாவது:” ஆசாரியரே, கிருஷ்ண  வாசுதேவன் அந்த வேண்டுகோளுக்கு என்ன சொன்னான் என்பதை நீங்கள் அறிய வேண்டுமா?  என் சகோதரி கிருஷ்ணாவை மணக்க மறுத்துவிட்டான்.  ஒரு அரசனின் பழிவாங்கும் முடிவுக்காக ஒரு இளவரசியை மணந்து கொண்டு அந்த அரசனின் கைப்பாவையாகத் தன்னால் இயங்க முடியாது எனத் திட்டவட்டமாய்த் தெரிவித்து விட்டான்.”  துரோணரோ இதை எதிர்பார்க்கவே இல்லை.  இந்த வார்த்தைகள் அனைத்தும் ஏதோ கனவில் சொல்லப்படுவது போல் அவர் காதுகளில் விழுந்தன.  அவரால் தன் காதுகளை நம்பவும் முடியவில்லை.   என்றாலும் ஷிகண்டினின் இந்த வெளிப்படையான பேச்சால் நாம் ஏமாறக் கூடாது என அவர் நினைத்தார்.  ஷிகண்டின் தன்னை ஏமாற்றுவதாகவும் நினைத்தார்.  ஆகவே அவனைப் பார்த்து,” உனக்கு எப்படித் தெரியும்?  கிருஷ்ணன் உன் சகோதரியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததை நீ எவ்வாறு அறிவாய்?”

“நான் மறைந்திருந்து ஒட்டுக் கேட்டேன்.” என்றான் ஷிகண்டின்.  இவன் உண்மையையே பேசுகிறான் என்பதை துரோணர் உணர்ந்தார்.  ஆகவே அவருள் மாற்றம் ஏற்பட்டது. “ கிருஷ்ண வாசுதேவன் எப்படி என்னிடம் போகச் சொல்லி உனக்கு ஆலோசனை கொடுத்தான்?”  என்று கேட்டார்.  ஷிகண்டின் ஆரம்பித்தான்:” வாசுதேவ கிருஷ்ணன் காம்பில்யம் வந்த போது என் மாமனாரின் செய்தியும் வந்திருந்தது.  என் மனைவியைக்காம்பில்யம் அழைத்து வரப் போவதாய்ச் செய்தி வந்திருந்தது.  இதைக் கேட்டதுமே என் தந்தை, குடும்பத்தின் மற்றவர்கள், ஏன் பாஞ்சாலம் முழுதுமே,  ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது எனலாம்.  அவள் வந்ததுமே நான் யார் என்பதைக் கண்டறிவாள்.  பின்னர் இவ்வுலகம் அனைத்துமே எங்கள் குடும்பத்தைப் பரிகசிக்கும்; கேலி செய்யும்.  தூற்றும்.   என் தந்தை, நேர்மைக்குப் பெயர் பெற்றவர், என்னை ஒரு ஆண்மகன் என்று சொல்லப்பட்டதால் ஏமாற்றுக்காரன் என்ற பெயரை வாங்கிக் கொள்ள நேரும்; எல்லாவற்றுக்கும் மேல் தஷர்ணாவின் இளவரசியோடு மணமுடித்ததற்காகவும் ஏசப்படுவார்!”

“உண்மைதான்! பின்னர்?


“பின்னர் என்ன!  நான் என்னைக் குறித்த ரகசியம் வெளியாகும் முன்னர் இறக்க வேண்டும்;  அல்லது அரண்மனையை விட்டுப் பாஞ்சாலத்தை விட்டே வெளியேறியாக வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.  ஆனால் அப்போது தான், வாசுதேவனை நான் பார்த்தேன்.  விசித்திரமாக, விந்தையாக என் மனதில் புதியதொரு நம்பிக்கையை அவன் விதைத்தான்.”


“எப்படி?  என்ன நம்பிக்கையை அவன் உனக்குக் கொடுத்தான்?”
“உண்மையில் ஐயா, வாசுதேவன் எனக்கு எந்த நம்பிக்கையையும் கொடுத்துப் பேசவில்லை.  ஆனால் அவன் அருகாமையே ஒருவருக்கு நம்பிக்கையையும்,  மகிழ்ச்சியையும் கொடுக்கும்.  அவன் எங்கே சென்றாலும் தன்னுடன் இவற்றையும் எடுத்துச் செல்கிறான்.”

“வாசுதேவக் கிருஷ்ணனிடம் உன் மனதைப் பறி கொடுத்திவிட்டாய்!” துரோணர் ஒரு புன்னகையுடன் இதைக் கூறினார்.   “இல்லை, இல்லை.  அந்த அதிசயத்தை நான் நேரிலேயே பார்த்தேன்.  அது தந்தையிடம் வேலை செய்தது.   தந்தைக்கு மட்டுமின்றி அந்த அதிசயக் காற்று என் சகோதரன் த்ருஷ்டத்யும்னனுக்கும், என் சகோதரி திரெளபதிக்கும் கூட அடித்தது.   அப்படியே என் மேலும் அந்தக் காற்று வீசியது.  நாங்கள் அனைவருமே எங்கள் வழிகளிலேயே எல்லாவற்றையும் புதியதொரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தோம்.”

துரோணர் நினைவுகளில் அமிழ்ந்து போனார்.  இந்தக் கிருஷ்ண வாசுதேவனிடம் இருக்கும் மாயம் தான் என்ன?  அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.   ஹஸ்தினாபுரத்துக்கு அவன் வந்ததிலிருந்து அவனிடம் இருக்கும் அந்த மந்திரக்காற்று இங்குள்ள மொத்தச் சூழ்நிலையையும் மாற்றும் வண்ணம் ஆகி உள்ளது.  அவன் வந்ததுமே இங்குள்ள சூழ்நிலையின் இறுக்கமே போய்விட்டது.  “அப்படி என்னதான் செய்தான் அவன் உங்களுக்கு எல்லாம்?” துரோணர் ஷிகண்டினிடம் மீண்டும் கேட்டார்.  தன் பேச்சு சாதுரியம் முழுவதையும் பயன்படுத்திக் கிருஷ்ண வாசுதேவன் குறித்துக் கூற எண்ணினான் ஷிகண்டின்.

“குறிப்பாய் அவன் எதுவும் சொல்லவில்லை;  செய்ய வில்லை.  ஆனால் எங்கள் ஒவ்வொருத்தரிடமும் தனிப்பட அவன் காட்டிய அன்பிலும், அவன் பேசிய வார்த்தைகளிலும்  அவனுக்கும் எங்களுக்கும் அப்போது தான் அறிமுகமே ஏற்பட்டது எனத் தோன்றவில்லை.  நீண்ட நாள் பிரிந்திருந்த ஒரு நண்பனைப் போலவே அவன் பேசினான்.  எங்கள் ஒவ்வொருவரையும் அந்தரங்கமாய்த் தனித் தனியாய் அறிந்திருந்தான்.  அவன் பார்வை எங்கள் மேல் பட்டதுமே நாங்கள் வித்தியாசமாய் உணர்ந்தோம்.  அந்த உணர்வு விவரிக்க முடியாதது.  ஒரு அமைதி ஏற்படுத்திய பார்வை அது.   அனைவரையும் மயக்கும் ஒருவித சக்தி அந்தக் கண்களில் இருந்தது.    அவன் என்னைப் பார்க்கும்போதெல்லாம், நானும், அவனும் மட்டுமே தன்னந்தனியாக இந்தப் பூவுலகில் இருக்கிறோம் என்றும், எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்றும், நானும் அவனும் இணைந்து எல்லா உண்மைகளையும் பரிமாறிக் கொள்கிறோம் என்றும் தோன்றியது எனக்கு.  என் மனதின் ஆழத்தில் வெகு ஆழத்தில், அவன் கண்களால் ஊடுருவிப் பார்த்தான்.  அதை நான் உணர்ந்தேன்.  அத்தோடு மட்டும் அல்ல;  என் மனதின் பலவீனமான சக்தியை அவன் புதியதொரு ஆக்கபூர்வமான சக்தியாக மாற்றியதையும் உணர்ந்தேன்.  அனைத்தையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை என்னுள் விளைந்தது.  போராட்ட குணம் மிக்கவனாக மாறினேன்.  ஆஹா, குருதேவரே, என்னால் பூரணமாகச் சொல்ல இயலவில்லை.  எப்படி விவரிப்பேன்?  ஆனால் நான் அப்போது தான் புதியதாய்ப் பிறந்ததாக உணர்ந்தேன் என்பது மட்டும் உண்மை! சொல்லுக்கடங்கா சக்தி என்னுள் நிறைந்தது.”