Saturday, August 27, 2011

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்!

பாட்டனார் கெளசிகரின் அரண்மனை குண்டினாபுரம் நகருக்கு வெளியே அமைந்திருந்தது இந்தச் சமயம் மிகவும் வசதியாக அமைந்தது. அவரின் அரண்மனையின் முன்முற்றம் மிகவும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. அருகேயே இருந்த ஷ்வேதகேதுவின் ஆசிரமப் பகுதியிலும் யாதவத் தலைவர்கள் தங்க இடம் ஒதுக்கப்பட்டுத் தக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. செய்தி வந்ததுமே இந்த ஏற்பாடுகளை விரைவில் செய்து முடித்தார் கெளசிகர். கண்ணனைக் காணக் கோட்டை வாயிலுக்குச் சென்றும் விட்டார். அவருடன் விந்தன், அநுவிந்தன், சேதி நாட்டு அரசனும் கண்ணனின் அத்தை கணவனுமான தாமகோஷன் ஆகியோரும் சென்றிருந்தனர். மக்கள் கூட்டத்தைப் பிளந்து கொண்டு கண்ணன் வரும் திசையில் எதிர் கொண்டு அழைத்தனர் கெளசிகரும் அவருடன் வந்தோரும். மக்கள் கூட்டம் ஜெய் வாசுதேவா! வாசுதேவனுக்கு மங்களம்! கிருஷ்ணன் புகழ் ஓங்கட்டும்! என்றெல்லாம் கோஷங்கள் போட்டனர். கடைசியில் ஜராசந்தனுக்கும், அவன் தோழர்களுக்கும் பயந்து, பீஷ்மகன் நேரில் செல்லாமல் தன் மந்திரியை அனுப்பிவிட்டான். ஆனால் அந்த மந்திரியோ மிகவும் திறமை வாய்ந்த பண்டிதர்களான பிராமணர்களைத் தன்னுடன் அழைத்து வந்து வேத கோஷங்கள் முழங்கக் கண்ணனுக்குப் பூரண மரியாதையைக் கொடுத்துவிட்டார். மந்திரி கண்ணனிடம், பீஷ்மகன் உடல்நிலை சரியில்லை எனவும், உடல்நிலை சரியானதும், கண்ணனை நேரில் சந்தித்து வரவேற்பான் என்றும் சமாதானங்களைக் கூறினார்.

“ஓ, அப்படியா! கற்றறிந்த பண்டிதரான மஹா மந்திரியே! உம் அரசரின் உடல்நிலை சரியில்லை என்பது என் மனதுக்கு உவப்பைத் தரவில்லை. அவரை நான் சந்தித்தே ஆகவேண்டும். அப்போது தான் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாவேன். ஆனால் அவசரமெல்லாம் எதுவும் இல்லை. நான் இங்கே வசந்தோற்சவம் முடியும் வரை இருந்துவிட்டுச் செல்வதாகவே எண்ணம்.” கண்ணனின் திடமான தீர்மானம் அவன் சுயம்வரத்தின் போது இரண்டில் ஒன்று பார்க்காமல் செல்லப் போவதில்லை என்பதை மறைமுகமாய்த் தெரிவித்தது. கூட்டத்திலிருந்த பலருக்கும் கருட இனத்தவரின் பறவை முக அலங்காரமும், அவர்களின் நடவடிக்கைகளும் மிகவும் வேடிக்கையைத் தந்தது. தன் கன்னிமாடத்தின் உப்பரிகையில் இருந்து கண்ணன் வருவதையும், ரதத்தில் இருந்து இறங்குவதையும் பார்த்துக்கொண்டு இருந்த ருக்மிணி, தன் அருகே இருந்த தன் அண்ணியின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். “அண்ணி, என் அருமை அண்ணி, அதோ பார்! வாசுதேவக் கிருஷ்ணனை! எவ்வளவு அற்புதமாக இருக்கிறான் இல்லையா? அவன் நளினமும், எழிலும் எவ்வளவு உயர்ந்ததொரு ரசனையோடு உள்ளது?” சுவ்ரதாவின் கழுத்தில் அவள் கைகள் இறுகின. சுவ்ரதா போலிக்கோபத்தோடு, “அடி, பெண்ணே, என்னை விட்டு விடு. அந்தக் கண்ணன் என்ன பொல்லாத கள்ளனோ! இல்லை மந்திரவாதியோ! உன்னை இப்படி மயக்கி வைத்திருக்கிறானே! லேசில் மயங்குபவளா நீ!” என்று கேலி செய்தாள்.

கண்ணன் தங்கி இருந்த பகுதிக்குப் பாட்டனார் கெளசிகர் விஜயம் செய்தார். கண்ணனைப் பார்த்து, “வாசுதேவா, சென்ற முறை நீ வந்தபோது எவருக்கும் தெரியாமல் ஒரு பரதேசியைப் போல் வந்திருந்தாய்! உன்னைச் சரியான முறையில் என்னால் கவனித்து உபசரிக்க இயலவில்லை. இம்முறை என் முழுச் செல்வாக்கையும், பலத்தையும் காட்டி உன்னை உபசரிக்கப் போகிறேன்.” என்று சந்தோஷமாய்க் கூறினார். கண்ணனோ அடக்கம் குரலில் பூரணமாய்த் தெரிய, “தாத்தா அவர்களே, எனக்கெனத் தனியான உபசாரங்கள் எதுவும் தேவையில்லை. என்னை அதிகம் கவனித்தீர்களெனில் மற்ற அரசர்கள் மனம் புண்பட்டுவிடும். அவர்களை விடவும் நான் பெரியவனுமில்லை; நான் ஓர் இளவரசனுமில்லை. மரியாதைக்குரிய பாட்டனார் அவர்களே, ஜராசந்தனிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ள வேண்டி நான் ஓடிக்கொண்டிருந்த சமயம் எனக்குத் தக்க அடைக்கலம் கொடுத்தீர்கள். அதை நான் மறக்கவே மாட்டேன். என் உயிருள்ள வரையிலும் மறக்க மாட்டேன்.என் உயிர் உம்முடையது. நான் எவ்விதத்திலாவது உமக்கு என் நன்றிக்கடனைச் செலுத்தவும் விரும்புகிறேன்.” கண்ணன் தான் கிழவருக்குக் கொண்டு வந்த பரிசுகளை அவரிடம் அளித்து அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.

“வாசுதேவ கிருஷ்ணா, பீஷ்மகன் உன்னை சுயம்வரத்திற்கு அழைக்காதது எனக்குப் பெரிய குறைதான்; அவனிடம் எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. அதனால் இந்தச் சுயம்வரத்தின் ஏற்பாடுகளில் மாபெரும் குறை ஏற்பட்டுவிட்டது. ஆசாரியர்கள் அந்தக் குறையை நிவர்த்தி செய்யப் படாத பாடுபட்டனர். அவர்களாலும் இயலவில்லை.” சற்றே தயக்கத்துடன் கெளசிகர் பேசினார். மேலே பேசத் தயக்கமும் காட்டினார். ஆனால் கண்ணனோ புரிந்து கொண்டவனைப் போல், “ தாத்தா, தாத்தா, நான் என்ன இளவரசனா? அல்லது எந்த நாட்டுக்காவது யுவராஜாவாக இருக்கிறேனா? எனக்குத் தெரியும் தாத்தா நான் யார் என்று. யாதவர்களின் ஒரு குழுவின் தலைவனான ஷூரத் தலைவன் வசுதேவனின் பிள்ளை என்று தானே எண்ணுகிறீர்கள்?? இல்லை தாத்தா, இல்லை. நான் ஒரு காலத்தில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடையன்; ஆனால் தாத்தா, ஒரு விஷயம்; அதற்காக நான் என்றுமே வருந்தியதில்லை.” கண்ணன் குரலில் இனம்புரியா மென்மை. “அவை என் உயிர் நண்பர்கள் தாத்தா, இந்த அரசர்களோடு சேர்த்து வைத்துப் பேச எந்தவிதமான தகுதியும் இல்லாதவன் நான். ஜராசந்தனோ அல்லது ருக்மியோ எனக்கு இதைக் கஷ்டப்பட்டுப் புரிய வைக்க வேண்டாம் தாத்தா. எனக்கே மிக நன்றாய்ப் புரிந்த ஒரு விஷயம் இது.” கண்ணன் குரலில் எந்தவிதமான வருத்தமோ, கோபமோ, அசூயையோ இல்லை. இயல்பாகப் பேசினான் கண்ணன்.

“கோவிந்தா! அப்படி எல்லாம் பேசாதே! இங்கே வந்திருக்கும் மன்னர்கள் அனைவரையும் விட நீ உயர்ந்தவன். பெருமைகள் பல அடைந்தவன்; இன்னும் அடையப் போகிறவன். இங்கிருக்கும் அதிபுத்திசாலிகளான அரசர்களையும், இளவரசர்களையும் விட நீ மிகவும் புத்திசாலி. இளையவன் தான்; வயதில் சிறியவனே நீ; ஆனால் உன்னுடைய திறமையும், புத்திசாலித்தனமும் அவர்கள் எவரிடமும் இல்லை. ஆனால் குழந்தாய், உன்னை சுயம்வரத்திற்கு அழைத்திருந்தால் நீ போட்டியில் கலந்து கொண்டிருக்க முடியாது. க்ஷத்திரியர்களின் சட்டப்படி நீ அதற்கான தகுதி வாய்ந்தவன் அல்ல. அதோடு அமர்வதற்கு உன்னை விடவும் உயரமாகவும், உனக்குக் கொடுப்பதைவிடவும் அதிக மரியாதைகளோடும் மற்ற அரசர்கள் எதிர்பார்ப்பார்கள். குழந்தாய் நீ புரிந்து கொள்கிறாய் அல்லவா? அந்த மாதிரியான தர்மசங்கடத்தைத்தவிர்க்க வேண்டியே உன்னை அழைக்க வேண்டாம் என முடிவெடுத்ததற்கு நானும் ஒரு மாதிரியாகச் சம்மதம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.”

“எனக்கு நன்றாகவே புரிகிறது பாட்டனாரே!உங்களைப் போன்ற பரம்பரைப் பெருமை வாய்ந்த ஒரு அரசன் என் போன்ற சாமானிய இடையனை எதிர்கொண்டு அழைத்தது கூடத் தகாதுதான். என் அத்தை கணவர் தாமகோஷனிடமும், விந்தன், அனுவிந்தனிடமும் நான் இதற்கான ஆக்ஷேபணையைத் தெரிவித்தேன்.” இதைச் சொல்கையில் கண்கள் மினுமினுத்தன கண்ணனுக்கு. முகம் மட்டுமின்றி உடலே குறும்பில் கொப்பளித்தது.

“வாசுதேவா! நீ தர்மத்திற்கென வாழ்கிறாய். அதை நிலை நிறுத்தப் பாடுபடுகிறாய். உன்னைக் குறித்து அனைவருமே தர்மதேவதை எனச் சொல்கின்றனர். உன் போன்ற ஒருவனுக்கு இவ்வகையில் எங்கள் வணக்கங்களைத் தெரிவிப்பதில் தவறே இல்லை; ஏனெனில் இந்தப் பரந்த பூமியில் உன்னை விட்டால் இதற்குத் தகுதியானவர்கள் எவரும் இல்லை. தெய்வமே மனித உருக்கொண்டு வந்தாற்போல் நீ வந்திருக்கிறாய். நீ வேறு; அந்த தெய்வம் வேறு அல்ல. சகலவிதமான வழிபாட்டுக்கும் நீ தக்கவனே; அதில் சந்தேகமே வேண்டாம். உன்னைக் கடவுள் என்று சொல்பவர்கள் தவறேதும் செய்யவும் இல்லை; நீ கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார். எவருக்கும் ஒரு சின்ன அடி கூடக் கொடுக்காமல் நீ ஜெயித்து வந்திருக்கிறாய்.”




Tuesday, August 23, 2011

கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை!

அனைவருக்கும் முன்னால் தலைமை தாங்கி வந்தது சாத்யகி. கோட்டை வாயிலை அடைந்ததும் அவன் தன் கொம்பை எடுத்து ஊத, கோட்டைக்காவலர்கள் வந்தனர். அவர்களிடம் தங்கள் செய்தியைக் கூறினான் சாத்யகி.

“நான், கிருஷ்ண வாசுதேவன், யாதவர்களில் சிறந்தவரான வசுதேவரின் குமாரன், மஹாராஜாவான பீஷ்மகரையும், அவரின் தந்தையான கெளசிகரைக் காணவும், அவருக்குத் தன் பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்ளவும் விரும்புகிறேன். பாட்டனார் கெளசிகருக்கெனத் தனியான பரிசில்களை எடுத்து வந்துள்ளேன். கோமந்தக மலைக்குச் செல்லுகையில் கிருஷ்ண வாசுதேவனான என்னை மிகவும் நல்ல முறையில் கவனித்துக்கொண்டார் பாட்டனார் கெளசிகர். அதற்கு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நகரத்திலிருந்து ஒரு யோஜனை தூரத்தில் நாங்கள் தண்டு இறங்கி இருக்கிறோம். “

மாட்சிமை பொருந்திய வாசுதேவ கிருஷ்ணன், தன் சகோதரனும் சிறிய தந்தை தேவபாகனின் மகனுமான உத்தவனுடனும், ஆச்சார்ய ஷ்வேதகேது, கரவீரபுரத்தின் ஷக்ரதேவன், அவனுடைய குருவான சாந்தீபனி ஆச்சாரியரின் மகனான புநர்தத்தன், அக்ரவனத்தின் மற்ற அரசர்கள், வைநதேய நாட்டின் இளவரசன் கருடன், தற்சமயம் கருடர்களின் அரசன் மட்டுமில்லாமல் காட்டையும் ஆண்டு, விண்ணையும் தன் பாதுகாப்பில் வைத்துள்ளான். இவர்கள் அனைவருடனும் கிருஷ்ண வாசுதேவன் உம்மைக் காண விரும்புகிறான்.”

“இவர்களோடு, ஷூரர்களின் தலைவனான தேவபாகனின் இன்னொரு மகனான சித்ரகேதுவும் அரசர் பீஷ்மகனுக்கும், பாட்டனார் கெளசிகருக்கும் பரிசில்கள் எடுத்து வந்திருக்கிறான். யாதவ அரசரான உக்ரசேனர் சார்பில் வந்திருக்கும் அவன், தன்னுடன் வசுதேவரின் மனைவியும், கிருஷ்ண வாசுதேவனின் தாயுமான தேவகியின் அந்தரங்கத் தோழி திரிவக்கரையை அழைத்து வந்திருக்கிறான். திரிவக்கரை தேவகி அம்மாவின் அந்தரங்கச் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறாள். செய்தி இளவரசி ருக்மிணியிடம் கூறப்படும். அதோடு தேவகி அம்மாவின் பரிசுப் பொருட்களும், பட்டாடைகளும், நகைகளும் இளவரசி ருக்மிணிக்கு அர்ப்பணம் செய்யப் படக் காத்திருக்கின்றன.”

“வாசுதேவ கிருஷ்ணனின் மேற்கண்ட செய்திகளைத் தாங்கி வந்திருக்கும் நான், யுயுதானா சாத்யகி. உங்கள் மன்னன் பீஷ்மகனிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள். உங்கள் மன்னனின் ஆணையைப் பெற்று வாருங்கள்.” என்று முழக்கமிட்டு நிறுத்தினான் சாத்யகி. கோட்டைத்தலைவன் சாத்யகியின் செய்தியைப் பெற்றுக்கொண்டு திட்டிவாசல் வழியே கோட்டைக்குள் நுழைந்து அரண்மனையை நோக்கி விரைந்தான். இயல்பாக அவ்வளவாய் தைரியம் இல்லாத பீஷ்மகன் இந்தச் செய்தியைக் கேட்டதும் கலவரமடைந்தான். உடனடியாக என்ன செய்வது என விழித்த பீஷ்மகன், சக்கரவர்த்தி ஜராசந்தனையும், மற்ற அரசர்களையும் உடனடி ஆலோசனைக்கு வரும்படி அழைத்துவிட்டுத் தன் தகப்பனின் அரண்மனையை நோக்கித் தானே விரைந்தான். ஆனால் கெளசிகனோ இதைக் கேட்டுச் சற்றும் அஞ்சவில்லை. கிருஷ்ணனா! வரட்டுமே! வரட்டும், வரட்டும், இளைஞன், வீரன், காவியங்களிலும், கதைகளிலும் பேசப்படக்கூடிய அளவுக்கு வீரதீர சாகசங்கள் செய்த மாபெரும் கதா நாயகன். அவன் வந்தால் என்ன? தாராளமாய் வரட்டும். யாதவர்களின் நிகரற்ற தலைவன்; பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறான். அவனின் அறிவும், விவேகமும் பெரிதும் பேசப்படுகிறது. மேலும் இங்கே அவன் போருக்கு வரவில்லையே! அனைவருக்கும் பரிசுகளை அல்லவோ எடுத்து வந்திருக்கிறான். மரியாதை நிமித்தம் வருகிறான். நம்மைப் போன்ற ஆரியர்களுக்கு விருந்துபசாரம் என்பது புதிதல்ல, நம் வீடு தேடி வந்திருக்கும் அதிதியைத் திருப்திகரமாய் உபசரித்து அனுப்புவதே முறை. அவனை சகல மரியாதைகளோடும் வரவேற்று உபசரித்து அனுப்ப வேண்டும். பீஷ்மகன் தனியாய்ப் போனாலும் சரி. போய் அவனை எதிர்கொண்டு அழைத்து வந்து நன்கு உபசரிக்க வேண்டும். கெளசிகனின் விருப்பம் இதுவே.

விஷயம் ருக்மிணியின் கன்னிமாடத்தின் அந்தப்புரம் வரை சென்றது. என்ன செய்வதென்று புரியாத ருக்மிணி ஆனந்தத்தின் உச்சியில் குதித்தாள்; நாட்டியமாடினாள்; தோழிகளுக்குத் தன் கழுத்திலிருந்து நகைகளைக் கழற்றிப் பரிசாய்க் கொடுத்தாள். ஒரு சமயம் சிரித்தாள்; இன்னொரு சமயம் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வந்தது. தனக்குத் தானே பேசிக்கொண்டாள். கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள். என்ன செய்வது என்று புரியாமல் அரண்மனையின் பணிப்பெண்களை வரவழைத்துச் சுயம்வரத்திற்காக ஏற்பாடுகளைச் செய்யும்படியும், தான் தயார் ஆவதற்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டாள். தன் பாட்டனை உடனே சென்று பார்த்தாள். கும்மாளம் கூத்தாடும் ருக்மிணியின் முகத்தைப் பார்த்த கெளசிகனுக்கு அது ரசிக்கவில்லை.

“குழந்தாய், குழந்தாய், இத்தனை ஆனந்தம் தேவையா! உன்னை நீயே கட்டுப்படுத்திக்கொள் அம்மா. இல்லை எனில் பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவாய். என் கண்ணின் கருமணியே, உன் மனம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் கோவிந்தனை, கிருஷ்ண வாசுதேவனை நீ எவ்வாறு மணக்க இயலும்? அவனுக்குப் பல தகுதிகள் இருக்கின்றன. வீரன், அசகாய சூரன், பல அற்புதங்களை நிகழ்த்துகிறான். ஆனால், அம்மா, ருக்மிணி, அவன் ஒரு இளவரசனோ, அரசனோ அல்ல; நீ ஒரு மாபெரும் ராஜ்யத்தின் இளவரசி என்பதை மறவாதே!”

ஆனால் ருக்மிணியோ அதைக் கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். தன் பேத்தியைப் பரிதாபமாய்ப் பார்த்தான் கெளசிகன். நகரம் முழுமைக்கும் செய்தி பரவியது. கிருஷ்ண வாசுதேவன், ஜராசந்தனை ஓட ஓட விரட்டியவன், ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்று அவன் நாட்டில் நல்லாட்சியை நிறுவியவன் , இங்கே குண்டினாபுரத்திற்குப் பாட்டனார் கெளசிகரைச் சந்தித்துத் தன் மரியாதையைத் தெரிவித்துக்கொள்ள வந்திருக்கிறான். ஆஹா, ஆச்சாரியன் ஷ்வேதகேதுவும் கிருஷ்ணனோடு வந்திருக்கிறாராமே? ஷ்வேதகேதுவின் சீடர்களுக்கு ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே ஷ்வேதகேதுவின் மூலம் கிருஷ்ணனின் சாகசங்கள் பற்றிய கதைகளை நிறையக் கேட்டிருந்தார்கள். அதோடு கெளசிகர் இந்த வயது முதிர்ந்த நேரத்திலும் தானே நேரில் சென்று கிருஷ்ண வாசுதேவனை எதிர்கொண்டு வரவேற்கச் செல்கிறாராம். ஊர்மக்கள் தாங்களும் அலங்கரித்துக்கொண்டு செல்ல ஆயத்தமாக, ஷ்வேதகேதுவின் சீடர்கள் கோட்டை வாயிலில் தங்கள் குருவோடு வரும் கிருஷ்ணனை வரவேற்க ஆயத்தமாய் அணி வகுத்தனர். ஆனால்……..

அரண்மனையில் சக்கரவர்த்தி ஜராசந்தனோடும் தன் அருமைக்குமாரனோடும் ஆலோசனைகள் செய்த பீஷ்மகனிடம் ருக்மி உடனடியாகப் படைகளைத் திரட்டி அந்த மாட்டிடையனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்தான். ஆனால் பீஷ்மகனோ பயந்தான். கலவரம் நேரிடும் எனக் கவலைப் பட்டான். தன் தகப்பனே நேரில் சென்று வரவேற்கப் போவதாயும், அதனால் வேறு வழியின்றித் தானும் செல்ல வேண்டும் எனவும் கூறினான். மேலும் ருக்மியிடம், “ருக்மி, ஷ்வேதகேதுவின் சீடர்கள் அனைவரும் போஜ நாட்டின் சிறந்த படைத்தலைவர்களின் புதல்வர்கள். அவர்கள் அனைவருமே கிருஷ்ண வாசுதேவனை வரவேற்கச் சென்றிருக்கிறார்கள் எனில் அவனுடைய பிராபல்யத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் அவனை என் மரியாதைக்குரிய அரசாங்க விருந்தாளியாக அங்கீகரித்து வரவேற்கத் தான் வேண்டும். அதோடு கிருஷ்ண வாசுதேவனோடு எத்தனை ரதங்கள் வந்திருக்கின்றன என்பதை நாம் தெளிவாக அறிய மாட்டோம். இந்நிலையில் அவனோடு வலுச்சண்டைக்குச் செல்வது ஏற்புடையது அன்று.”

இவ்வாறு கூறிய பீஷ்மகன் கண்ணனை வரவேற்கத் தானும் சென்றான்.


Monday, August 22, 2011

கண்ணன் வந்தான்; அங்கே கண்ணன் வந்தான்!

முந்தைய பதிவு ஏற்கெனவே வந்ததன் மீள்பதிவா எனப் பித்தனின் வாக்கு அவர்கள் கேட்டிருக்கிறார். இல்லை; பொதுவாய் யாரானும் கேட்டாலொழிய மீள்பதிவு போடுவதில்லை. ஹிஹிஹி, இது ரெண்டு தரம் பப்ளிஷ் ஆயிருக்கு. :P


முன்னர் நாம் மதுராவில் பார்த்த சமயம் ப்ருஹத்பாலன் யுவராஜ பட்டாபிஷேஹத்திற்கெனத் தன் சிநேகிதர்களைத் தன் வசப்படுத்திக்கொண்டிருந்தான். அப்போது தான் ருக்மிணியின் சுயம்வரம் குறித்தும், அதற்குச் செல்வது குறித்தும் பேச்சு நடந்தது. ரதப்போட்டிக்கான ஆயத்தங்களும் நடந்து கொண்டிருந்தது; அதன் தொடர்ச்சியே இது. வெற்றிக்கான விலையை நாம் கொடுக்கத் தயாராகவேண்டும் என்ற கண்ணனின் விருப்பத்தைக் கேட்டதுமே விராடன், “என்ன விலை கொடுக்க வேண்டும்? கண்ணா” எனக் கேட்டான். “அனைத்து யாதவத் தலைவர்களையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி ரதப்போட்டியில் கலந்துகொள்ளத் தயாராகச் சொல். அதன் பின்னர் நம் வலிமை என்ன என்பதை இந்த ஆர்யவர்த்தம் அறிந்துகொள்ளும். வெற்றி நம்மைத் தேடி வரும்.” என்றான் கண்ணன்.
“ஹா, இந்த விளையாட்டின் மூலம் என்ன வெற்றி நிர்ணயிக்கப் படும் கிருஷ்ணா!:” விராடன் மீண்டும் கேட்டான்.

“நூற்றுக்கணக்கான யாதவ வீரர்கள் தங்கள் பலத்தையும், உடல் வலிமையையும், அவ்வளவு ஏன் உயிரையும் பணயம் வைத்தே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்படியாக இருக்கும்; வெளி உலகுக்கு அவர்கள் விளையாட்டு வீரர்களென மட்டும் அறியப்பட மாட்டார்கள். மஹாரதர்களாகவும், அதிரதர்களாகவும், போர்க்களத்தில் ரதங்களில் விரைவாகச் சென்று சாகசம் செய்பவர்களாகவும் அறியப் படுவார்கள்.”


“கண்ணா, நீ என்ன உள்நோக்கம் வைத்திருக்கிறாய்? புரியவில்லை! உன் கருத்தைத் தெளிவாய்ச் சொல். நாம் ஜராசந்தனுடன் போர் செய்யத் தயார் செய்து கொள்கிறோமா?” சாத்யகிக்கு சந்தேகம்.

“இல்லை, நாம் கருஷனைப் போன்ற சிறிய நாட்டோடும் போர் செய்யப் போவதில்லை; ஜராசந்தன் போன்ற சக்கரவர்த்திகளோடும் பொருதப் போவதில்லை. அதற்கான சமயம் இது அல்ல; வலுச்சண்டைக்கும் நாம் போக வேண்டாம். இந்த ரதப் போட்டி மட்டும் நான் எதிர்பார்க்கிற மாதிரி நடந்து முடிந்து விட்டால் இந்த ஆர்ய வர்த்தம் மட்டுமின்றி, திராவிடர்களும் இந்த மதுராவை ஒரு கெளரவத்துடனும், பெருமையுடனும், மரியாதையுடனும் பார்க்க ஆரம்பிப்பார்கள். மதுராவும் ஒரு வலிமையான நாட்டின் தலைநகர் எனப் புரிந்து கொள்வார்கள். வலிமையான அரசுகளிலே இந்த உக்ரசேனரின் யாதவ அரசையும் சேர்த்துக்கொள்வார்கள்.”

“நாங்கள் என்ன செய்யவேண்டும்?” சாத்யகி கேட்டான்.

“ப்ருஹத்பாலனை ஒதுக்க வேண்டாம். எப்படியானும் சமாதானம் செய்து அவனையும் நம்மோடு ரதப் போட்டியில் கலந்துகொள்ளச் செய்யுங்கள். சாத்யகி, நானூறு மஹாரதிகள் ஒருசேர மதுராவின் ரதப்போட்டியில் பங்கெடுப்பது என்பது குறித்து நீ என்ன நினைக்கிறாய்? உன் பார்வையில் அதன் தாக்கம் எப்படி உள்ளது?”
“கண்ணா, உன் நோக்கம் புரிகிறது. குண்டினாபுரமும், அதன் வீரர்களும் நாம் வலிமையடையும் வரை காத்திருக்கட்டும். ஆனால் ஒன்று; உன்னுடன் ஒரே ஒரு நிபந்தனையுடனேயே நான் சேர்ந்து கொள்கிறேன்; நீ எப்போது நம் எதிரியைத் தாக்க நினைக்கிறாயோ, அப்போது அந்த மாபெரும் படைக்கு நான் தலைமை வகித்துச் செல்வேன். இந்த நிபந்தனைக்கு நீ ஒத்துக்கொள்ள வேண்டும்.”

கண்ணன் இளநகை மாறாமல் சாத்யகியை அணைத்துக்கொண்டே, “நீ இல்லாமல், உன் தலைமை இல்லாமல் நம் படை ஒரு போதும் இந்த நகரத்தை விட்டுக் கிளம்பாது.” என வாக்குக் கொடுத்தான். யமுனைக்கரையிலே நடக்கப் போகும் ரதப்போட்டிக்கான அறிவிப்பு முறையாக உக்ரசேன மஹாராஜாவின் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் பட்டது. மாக மாசத்தின் சுக்லபக்ஷத்தில் வசந்த உற்சவத்தின் ஐந்தாம் நாள் ரதப்போட்டி நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆயிரக்கணக்கான யாதவ இளைஞர்கள் குரு சாந்தீபனியால் பயிற்சி கொடுக்கப்பட்டனர். விருந்தாவனம் சென்றிருந்த பலராமனும் திரும்பி வந்தான். ரதப்போட்டியிலோ, முக்கியமாய்க் குதிரைகளைப் பழக்குவதிலோ ஆர்வம் இல்லாதபோதும், பலராமன் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் கருதி, அனைவருக்கும் தேவையான உதவிகளை அவ்வப்போது செய்தான். ரதப்போட்டி ஆரம்பிக்கப்பதினைந்து நாட்கள் இருக்கையில் திடீரென ஒரு நாள் நடு இரவில் நூற்றுக்கணக்கான யாதவ இளைஞர்களோடு சாத்யகி தலைமை வகிக்க எங்கே சென்றார்கள் என அறிய முடியாதபடிக்கு மறைந்தார்கள். ஏதோ மாயம், மந்திரம் போல் இருந்தது; ஆனால் ஊர் மக்கள் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். பலராமனுக்கும், சாத்யகிக்கும் பலத்த சண்டை எனவும், அதனால் சாத்யகி கோபத்தில் வெளியேறிவிட்டான் என்றும் பேசிக்கொண்டார்கள். யாருக்கும் கண்ணனைக் கேட்க தைரியம் இல்லை; அவனோ எதுவுமே நடவாதது போல் ரதப்போட்டிக்கு மிச்சம் இருந்தவர்களைத் தயார் செய்ததோடு தானும் தயாராகிக்கொண்டிருந்தான். போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. அப்போது பூரண கவசம் அணிந்த யாதவ இளைஞர்களோடு நானூறு ரதங்களும் நடு இரவில் மாயமாய் மறைந்தன. இப்போது கண்ணனையும் காணோம்.

ஆனால் மதுராவின் மக்களோ இப்போது கவலையோ, அச்சமோ கொள்ளவில்லை; இது நிச்சயம் கோவிந்தனின் வேலைதான் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மதுராவின் கெளரவத்தை மீட்டெடுக்கக் கண்ணன் செய்த உத்தி என மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கண்ணன் எங்கே சென்றான்??

குண்டினாபுரத்தை நோக்கி நானூறு ரதங்களும் அணி வகுத்துச் செல்லக் கண்ணன் குண்டினாபுரத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் சென்ற உத்தவனும், சாத்யகியும் செய்த பலமான ஆயத்தங்களால் குண்டினாபுரத்துக்காரர்கள் எவருக்கும் கண்ணன் கிளம்பி வந்து கொண்டிருக்கும் செய்தி குறித்த எந்தத் தகவலும் எட்டவில்லை. மெல்ல மெல்லக் குண்டினாபுரத்தில் அரசவையில் கூடி இருந்து ஆலோசனைகள் செய்து வந்த மன்னர்களுக்கும் செய்தி எட்டியது. அழைக்கப்படாத மதுராபுரியின் இளவரசர்கள் தங்கள் படையோடு குண்டினாபுரம் நோக்கி வருவதை அறிந்து கொண்டனர். எவருக்கும் இதில் விருப்பம் இல்லை. சுயம்வரத்திற்கு வருகை புரிந்த மற்ற மன்னர்களுக்கும் விபரம் தெரிவிக்கப்பட அங்கே சிலருக்குக் கண்ணன் வருகையில் நிம்மதி; பலருக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் ஒற்றர்களை அனுப்பிச் சரியான செய்தியைத் தெரிந்து வரச் செய்தார்கள். குண்டினாபுரத்தின் மக்களோ மேன்மாடங்களில், மரத்தின் உச்சிகளில், உயர்ந்த கட்டிடங்களில் என ஏறிக்கொண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் கண்ணனின் படை தெரிகின்றதா என ஆர்வத்தோடு பார்த்தார்கள்.

இங்கே பீஷ்மகனின் தர்பாரில் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தவர்களில் தாமகோஷனும், விந்தன், அனுவிந்தனும் இருந்தார்கள். அவர்களுக்கும் இந்தச் செய்தி கிட்டியது. படைகள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றும், வெறும் புழுதிக்காற்று அடிப்பதுதான் தெரிய வருகிறது என்றும் கூறினார்கள். ஆனால் ஒரு நூறு, நான்கு நூறு ரதங்களின் சடச்சட, சடச்சட என்ற சப்தமும் அவைகளில் பூட்டப்பட்ட நூற்றுக்கணக்கான குதிரைகளின் டக், டக், டக் டக், என்ற சப்தமும் பேரோசை போல் கேட்கிறது என்றும் ஒற்றன் மூலம் அறிந்தனர். அதோடு இந்தச் சப்தங்களால் சஞ்சலமடைந்த பறவையினங்களின் அபயக்கூச்சலும், எல்லாவற்றுக்கும் மேல் பிணம் தின்னிக்கழுகளின் ஓங்காரத் தொனியும் அனைவர் மனதையும் கலங்க அடித்தது. அதையும் மீறிக்கொண்டு அது என்ன?? என்ன சப்தம் அது?? ஆஹா, அவன் வந்துவிட்டான், வந்தே விட்டான். தாமகோஷனுக்கும், விந்தனுக்கும், அனுவிந்தனுக்கும் சற்றும் சந்தேகமே இல்லை. இது அந்தப் பாஞ்ச ஜன்யம் தான். கண்ணன் வந்துவிட்டான்.

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாஞ்சஜன்யம் நீண்ட முழக்கம் கொடுத்தது. கண்ணன் வந்துவிட்டான்.



Sunday, August 14, 2011

கண்ணனுக்காக: கண்ணனோடு ஒரு கலந்தாலோசனை!

 .

கண்ணனோடு ஒரு கலந்தாலோசனை!

இங்கே மத்ராவில் என்ன நடந்தது என்று பார்ப்போமா? ப்ருஹத்பாலன் மிகவும் சமயோசிதமாகத் தனக்கு அளிக்கப்பட்ட யுவராஜா பதவியை மறுதலித்து விட்டான் என்பது உக்ரசேனர் மூலம் கண்ணனுக்குத் தெரிவிக்கப் பட்டது.  யாதவத் தலைவர்களில் பலரும் உக்ரசேனரிடம் கிருஷ்ணன் யுவராஜா ஆவதற்குத் தங்கள் விருப்பத்தை முழுமனதோடு தெரிவித்தனர்.  இதன் மூலம் யாதவர்கள் குல கௌரவம் உயரும் என்றும் யாதவர்களின் வலிமை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்த்தனர்.  ஜராசந்தனுக்கு உள்ள கர்வம், பீஷ்மகனின் அகங்காரத்தைக் கண்ணன் ஒருவனாலேயே ஒடுக்க முடியும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.  ஆனால் கிருஷ்ணன் பணிவோடு அவர்களை மறுத்தான்.  ‘பெரியோர்கள் அனைவரும் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் நன்றி செலுத்துகிறேன்.  நம்முடைய கௌரவம் அதற்காக நாம் நம் உயிரை விடும்போது தான் நிலைநிறுத்தப்படும்.  நம்மிடம் ஆயுதங்கள் உள்ளன.  குதிரைகள், கணக்கற்ற ரதங்கள்! நம்மால் ஒரு ரதப்போட்டியை நடத்தும் அளவுக்கு உறுதி கூட இல்லை.  நம் நண்பர்கள் இதை ஓர் அற்ப விஷயமாகக் கருதுகின்றனர்.  நம்மால் ஒரு  ரதப் போட்டியைக் கூட நடத்த முடியவில்லை எனில், நம் குதிரைகளை அந்த வேகத்துக்குப் பழக்கவில்லை எனில், எப்படி நம்மால் போஜர்கள், சேதி நாட்டவர்கள், மகதர்கள் ஆகியோருடன் போரிட்டு வென்று நம் கௌரவத்தை நிலை நாட்ட இயலும்? நம் வலிமையே இங்கே கணக்கெடுக்கப்படுமே அன்றி போரில் பங்கெடுப்பதில் இல்லை.”

“நாம் அனைவரும் போர் புரியத் தயாராகவே இருக்கிறோம்.  நீ தலைமை தாங்கிச் செல்.” சாத்யகி சொன்னான். “முதலில் என்ன செய்யவேண்டுமோ அதைத் தான் செய்ய வேண்டும்.  நீ மட்டும் என்னுடன் இந்த ரதப் போட்டிக்குத் தயாராக ஆகிவிடு.  இது மட்டும் நடந்தால் இந்த ஆர்யவர்த்தமே யாதவ குலத்தைத் திரும்பிப் பார்க்கும். “ கண்ணன் பதில் கூறினான்.  “ஆனால் நாம் இதன் மூலம் அவமானத்தையும் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கும்.” சாத்யகி கூறக் கண்ணனோ, “எந்த அவமானமும் ஏற்படப் போவதில்லை.  இதை நாம் ஒதுக்கினோமெனில் ஏற்படலாம்.” என்று கூறினான். 

“கண்ணா, நீ குண்டினாபுரத்தில் நடைபெறப்போகும் போலி சுயம்வரத்தை உடைத்தெறிந்துவிட்டு, இளவரசி ருக்மிணியைத் தூக்கி வந்துவிடு.  அது தான் சரியானது.” என்று அப்போது அனைவரிலும் மூத்தவன் ஆன கடன் கூறினான். அதற்குக் கண்ணன், “பாட்டனாரே, போலி சுயம்வரம் எவ்வளவு அபகீர்த்தியை விளைவிக்குமோ அதற்கு ஈடானது இஷ்டமில்லாத பெண்ணைத் தூக்கி வருவதும். ஆனால் இளவரசிகள் இளவரசர்களையோ அல்லது அரசர்களையோ தான் மணக்கவேண்டும் என்னும் விதி இருப்பதை மறவாதீர்கள்.” என்றான்.”பாட்டனாரே, என் மீது உமக்கு நம்பிக்கை இருந்தால் இந்த ரதப்போட்டியை நான் நடத்துவதற்கு எனக்கு உதவுங்கள்.  நம் எதிரிகளின் கண்களைத் திறந்து விட்டு நம் வலிமையை அவர்களுக்கு உணர்த்தும்.  என் கைவசம் உடனடியாகக் காத்திருக்கும் வேலையைச் சரிவரச் செய்து அதன் மூலம் நான் கௌரவத்தைத் தேடிக்கொள்ள விழைகிறேன்.  காத்திருக்க வேண்டியவற்றில் கவனம் செலுத்துவதில் இல்லை. “ என்று கண்ணன் உறுதியாகச் சொன்னான். 

“உன்னிடம் எங்கள் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கை உள்ளது கோவிந்தா!” என்று அக்ரூரர் கனிவுடன் கூறினார்.  “எது சரியெனத் தோன்றுகிறதோ அதைச் செய் கண்ணா!” என்ற உக்ரசேனர் சாத்யகி பக்கம் திரும்பி, “நீ மிகுந்த ஊக்கத்துடனும், ஆர்வத்துடனும் இருக்கிறாய்.  உன் வீரமும் நான் அறிந்ததே.  அதைக் காட்டுவதற்குக் காத்திருக்கும் பொறுமை இல்லாதிருக்கிறாய். நம்பிக்கையுடன் காத்திரு;  கிருஷ்ணன் ஒருவனால் தான் நமக்குத் தலைமை வகித்து நடத்திச் செல்ல இயலும்.” என்றான்.

“ஆம், ஆம், அதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாய்க் கண்ணன் வழிநடத்துவான்.” என வழிமொழிந்தார் அக்ரூரர்.
“சரி, ஐயா, நாங்கள் இப்போது மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம்.  கிருஷ்ணன் எப்படி எல்லாவற்றையும் பார்க்கிறான்; புரிந்து கொள்கிறான் என்பது எங்களுக்கு விளங்கவில்லை.  ஆனால் அவன் சொல்படி கேட்கக் காத்திருக்கிறோம்.  ரதப் போட்டியை வெற்றியடையச் செய்கிறோம்.” என்றான் சாத்யகி.

அனைவரும் கலைந்து சென்றதும் விராடனும், சாத்யகியும் கண்ணனைச் சந்தித்தனர்.  “வாசுதேவா, ப்ருஹத்பாலனுடனான உறவை முறித்துக் கொண்டு நீயே கதி என வந்து இருக்கிறோம் நாங்கள். உன்னுடன் பணி புரியக் காத்திருக்கிறோம்.” என்றான் சாத்யகி. “ம்ம்ம்ம் ஆனால் இது ப்ருஹத்பாலனுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.” என்றான் கண்ணன்.  “ஓ, ஓ, கண்ணா, தவறு எங்களுடையதே அல்ல.  அவன் கோழைத்தனமாக நடந்து கொள்கிறான். அவனுக்கு எங்களுக்குத் தலைமை தாங்கி வெற்றியை நோக்கி நடத்திச் செல்லும் திறமை அறவே இல்லை.” என்றான் சாத்யகி.  “எப்படியோ, அவன் புத்திசாலி தான்.  ஏனெனில் நாம் இப்போது சரிவர ஒருங்கிணைக்கப்பட்டு இல்லை.  நாம் அனைவருமே சிதறி இருக்கிறோம்.  இப்படியானவர்களைக் கொண்டு எந்த வெற்றியை ப்ருஹத்பாலனால் அளிக்க இயலும்? நமக்கு வெற்றியும் வேண்டும்.  ஆனால் அதற்கான விலையை நாம் கொடுக்கவும் மாட்டோம்.” என்றான் கண்ணன்.  “எப்படிப் பட்ட விலையைக் கொடுக்க வேண்டும் கண்ணா?” விராடன் கேட்டான்.

Saturday, August 13, 2011

ஷ்வேதகேதுவின் வெளியேற்றம்!

இந்த பிராமணன் தான் கற்றறிந்தவன் என்ற திமிரிலே பேசுகிறான். ஆஹா, இதுவே மகதமாக இருந்திருந்தால்! கற்றறிந்தவன் என்பதாலோ, ஆசாரியன் என்பதாலோ சக்கரவர்த்தியை மீறிப் பேசினால்! அவன் தலை இரண்டாகத் துண்டிக்கப்பட்டிருக்குமே! என் எதிரில் எவரும் வாய் திறக்கவே அஞ்சுவார்களே! என் தளபதிகள் துண்டிக்கவில்லை எனில் நானே துண்டித்திருப்பேனே! இது என்ன அநியாயம்! இங்கே வந்திருப்பதால், பீஷ்மகனும், தாமகோஷனும் கடைப்பிடிக்கும் அதே தர்மத்தை, ஆரியர்களின் தர்மத்தை நானும் கடைப்பிடித்துத் தொலைக்கவேண்டியுள்ளதே! முட்டாள்கள் இந்த ஆரியர்கள்! மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். இந்த பிராமணன் நாட்டை விட்டே போய்த் தொலைந்தால் தான் என்ன குடி முழுகிவிடும்! இப்படிக் கெஞ்சுகிறான் இந்த பீஷ்மகன்!

ஆனால் ஷ்வேதகேதுவின் குரலில் அதே விநயம், மரியாதை! ஜராசந்தனைப்பார்த்து, “எல்லாமுமே இங்கே அதர்மத்தின் போக்கில் தான் செல்கிறது சக்கரவர்த்தி! இதை இந்தக் குண்டினாபுரத்து மக்கள் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அவரவர்கள் கூடிப்பேசிக்கொள்வதிலிருந்து புரிந்தாலும் நேற்று அவந்தி நாட்டு இளவரசன் அனுவிந்தனின் பேச்சிலிருந்து பூரணமாய்த் தெரிய வந்தது. மணமகனை நீங்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள். இங்கே சுயம்வரம் என்பது பெயரளவில் தான் நடைபெறப் போகிறது. அதற்கென நீங்கள் அழைப்பு அனுப்பி வரவழைத்திருக்கும் அரச விருந்தாளிகள் அனைவரும் சக்கரவர்த்தியான உம்முடைய கட்டளையின் பேரில் உம்முடைய விருப்பத்தை நிறைவேற்றச் சம்மதித்திருக்கின்றனர். அப்படிச் சம்மதம் கொடுத்தவர்கள் மட்டுமே அழைக்கப் பட்டிருக்கின்றனர். உங்களுக்குப் பயந்து வீரனும், திறமைசாலியுமான எந்த இளவரசனும் ஆயுத, சாஸ்திர வித்தைப்போட்டிகளில் கலந்து கொண்டு சிசுபாலனை எதிர்க்கப் போவதில்லை.”

“ஒருவேளை சிசுபாலனைத் தவிர வேறொரு இளவரசன் மணமகளை மணக்க எண்ணி இருந்தாலும் அவன் தன் ஆசையைக் குழி தோண்டிப் புதைக்கத் தான் வேண்டும். உம்மை மீறி சிசுபாலனைத் தவிர வேறெவரும் அவளை மணக்க முடியாது. அல்லது இளவரசியே தனக்குப் பிடித்த இளவரசனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றால்! ஹூம் அதுவும் இயலாது. இளவரசி சிசுபாலனைத் தான் தான் தேர்ந்தெடுத்திருப்பதாய் அவையோருக்கு அறிவிக்க வேண்டும். இது ஒரு சுயம்வரம்! குண்டினாபுரத்தின் இளவரசியும், பீஷ்மகனின் கண்ணின் கருமணியுமான ருக்மிணி தேவியை நான் என் சொந்த சகோதரி போல் கருதி அன்பு செலுத்துகிறேன். இளமையும், அழகும், புத்திசாலியுமான அவளை உம்முடைய அரசியல் வியாபாரத்தில் விற்கப் படும் ஒரு பொருளாய்க் கருதி பேரம் பேசி உள்ளீர்கள். அவள் வாழ்க்கையைப் பணயம் வைத்து உம்முடைய பேத்திக்கு ஒரு வாழ்க்கையைத் தேடி இங்கே உங்களை ஸ்திரப் படுத்த நினைக்கிறீர்கள். அதற்கு ருக்மிணி தேவி ஒரு பகடைக்காய். “

“ஈசா, மஹாதேவா! ஏதேனும் அற்புதம் செய்து இந்த நிலையை மாற்றுவாய் என நேற்று வரை நினைத்திருந்தேனே! உன்னுடைய கருணைப்பார்வை எங்கள் மேல் படவில்லையே! ஆம், சக்கரவர்த்தி! அந்த மஹாதேவன் அருளால் அனைத்தும் சரியாகிவிடும் என நேற்று வரை நினைத்தேன். ஆனால் அவனோ என் வேண்டுகோளை நிராகரித்துவிட்டானே. என்ன நடக்கக் கூடாதோ அது நடக்கப் போகிறது. அரசியல்காரணங்களுக்காக இளவரசி ருக்மிணியின் வாழ்க்கை பணயம் வைக்கப் படுகிறது. தன் சொந்த நாட்டின் நலனுக்காக ருக்மிணி தன் வாழ்க்கையைத் தியாகம் செய்யப் போகிறாள். மஹாதேவா! என்னால் இதைத் தடுக்க இயலவில்லையே! ஈசா, எந்த முகத்துடன் நான் அவளை ஆசீர்வதிப்பேன்! ஆம், சக்கரவர்த்தி, என்னால் இதைத் தடுக்கவும் இயலவில்லை; அதே சமயம் என்னால் ருக்மிணிக்கு ஆசிகள் வழங்கவும் இயலாது; ஆகவே நான் இங்கிருந்து செல்கிறேன்.”
மூச்சுவிடாமல் தன் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்த ஷ்வேதகேது எழுந்து நின்று மூன்று அரசர்களையும் ஒரு முறை உற்றுக் கவனித்தான். பீஷ்மகனைப் பார்த்து, “மாட்சிமை பொருந்திய மன்னா! உண்மைகள் கசக்கும். அந்தக் கசக்கும் உண்மையை நான் இங்கே இப்போது பேச நேர்ந்ததற்காக வருந்துகிறேன். உனக்கும் அவை பிடித்திருக்காது; ஆனால் என் செய்வேன்! சக்கரவர்த்தியின் தொடர்ந்த வற்புறுத்தல் என்னைப் பேச வைத்துவிட்டதே! நான் உங்கள் அனைவரையும் விட்டு இப்போது பிரிந்து செல்கிறேன் மன்னா! சேதி நாட்டு அரசனும் இந்தச் சூழ்ச்சியில் பங்கு கொண்டிருப்பது என்னை மிகவும் வருத்துகிறது. அரசர்களே, எது எப்படி ஆனாலும் என் ஆசிகள் உங்களுக்கு உண்டு. இந்த அதர்மத்தின் பாதையிலிருந்து நீங்கள் மீண்டு தர்மத்தின் பாதையில் தொடர்ந்து செல்ல எல்லாம் வல்ல மஹாதேவன் அருளுவானாக!”

ஷ்வேதகேது அரண்மனையிலிருந்து வெளியே வந்தபோது அவன் மாணாக்கர்கள் மூலம் ஊர் மக்கள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க மாளிகை வாசலில் பெரும் கூட்டம் கூடி இருந்தது. கூட்டத்தைத் தலைமை வகித்த அவன் மாணாக்கர்கள் அவன் காலில் விழுந்தனர். கூட்டமோ செய்வதறியாமல் தங்களை ஆசீர்வதிக்கச் சொல்லிக் கெஞ்சியது. ஷ்வேதகேது கண்களில் பட்டவர்களை ஆசீர்வதித்துக்கொண்டே தன் தண்டத்தையும் கமண்டலத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கோட்டை வாயிலை நோக்கி நடந்தான். அவனை அப்நவியும், ஜாஹ்னுவும் பின் தொடர்ந்தனர். ஷ்வேதகேதுவின் ஆயுதங்களான வில், அம்புகளையும், வாள், கதை போன்றவற்றையும் இருவரும் தூக்கிக்கொண்டு சென்றனர். குண்டினாபுரத்து மக்கள் ஷ்வேதகேது போன்றதொரு ஆசாரியன் தங்கள் நாட்டை விட்டுக் காட்டை நோக்கிச் செல்ல வேண்டுமானால் எப்படிப் பட்ட அதர்மம் நடக்கிறது என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அந்தக் கடவுளுக்கே வெறுத்துப் போய்த் தங்கள் நாட்டு மன்னனை அதர்ம வழியிலிருந்து காக்கவில்லையோ எனவும் பேசிக் கொண்டனர். நடக்கப் போகும் போலியான சுயம்வரத்தின் பின்னர் எப்படிப் பட்ட நிகழ்வுகளை இந்த நாடும், நாமும் சந்திக்கப் போகிறோமோ என்ற கவலையிலும் ஆழ்ந்தனர்.

குண்டினாபுரத்தில் இத்தனையும் நடக்க மதுராவிலோ கண்ணன் புன்னகை புரிந்து கொண்டிருந்தான். அதற்குக் காரணம் பாட்டன் உக்ரசேனன் அவனிடம் கூறிய செய்திதான். ப்ருஹத்பாலன் யுவராஜா பட்டத்தை வேண்டாம் என மறுத்துவிட்டானாம். இது தான் பாட்டன் தன் அருமைப் பேரனிடம் கூறிக்கொண்டிருந்தது. ஆஹா, கண்ணனுக்கா தெரியாது! இது இப்படித் தான் நடக்கும் என! ஆனால் யாதவத் தலைவர்கள் கண்ணனையே யுவராஜாவாக வற்புறுத்தினார்கள். கண்ணனோ திடமாக மறுத்தான். அப்போது அங்கே ருக்மிணியின் சுயம்வரம் குறித்த பேச்சும் எழுந்தது.





Thursday, August 11, 2011

ஜராசந்தனின் கோபம்! ஷ்வேதகேதுவின் உறுதி!

ஜராசந்தனுக்கு ஷ்வேதகேதுவின் வார்த்தைகளில் ஏதோ உள் அர்த்தம் பொதிந்திருப்பதாயும், சூது இருப்பதாயும் மனதில் பட்டது. ஆனால் பீஷ்மகனுக்கோ எதுவும் புரியவில்லை. அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அவன் பேசுவதற்குள்ளாக ஜராசந்தன் குறுக்கிட்டு, “இதோ பார், பிராமணனே, இங்கே அப்படி என்ன தவறு நடந்திருக்கிறது?? எல்லாம் சரியாகவே நடந்து வருகிறது. உன்னுடைய தர்மம் எதுவோ அதை நீ இங்கே அனுசரிப்பதில் என்ன ஆகிவிடும்?? பீஷ்மகன் உன்னை எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பூஜிக்கிறான் என்பதை நீயே நன்கறிவாய்; மேலும் அவனுடைய உபசாரங்களில் என்ன குறை கண்டாய் நீ?” கோபம் கண்களில் மட்டுமின்றிக் குரலிலும் தெரியப் பேசினான் ஜராசந்தன்.

ஷ்வேதகேது சற்று நேரம் ஜராசந்தனையே உற்றுப் பார்த்தான். ஜராசந்தன் தர்ம சங்கடமாய் உணர்ந்தான். பின்னர் ஷ்வேதகேது, “பீஷ்மகனைப் போன்ற அரசர்களைக் காண்பது அரிது. உயர்ந்த மனிதர் அவர். அவரால் எனக்கு எந்தவிதமான மனக்கிலேசமும் ஏற்படவில்லை. வேத சாஸ்திரங்களுக்கோ, தர்மத்திற்கோ விரோதமாய் எதுவும் செய்ய நினைக்கக் கூட இல்லை அவர்.”

“பின்னர்?? என்ன தடை உனக்கு?” அதிகாரம் தொனித்தது ஜராசந்தன் குரலில்.

“மன்னர் கருணை உள்ளவர். அதிலும் என் போன்ற பிராமணர்களிடம் மரியாதை மிக்கவர். என்னிடம் மிகவும் மரியாதை கொண்டு எனக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் நான் கேட்காமலேயே செய்து கொடுத்தார். நானும் அதற்குத் தகுந்தவனாக, நல்லதொரு ஆசாரியனாகவே நடந்து கொண்டேன். நான் ஒரு ஆசாரியன். அனைத்துக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன். ஆகவே எனக்குத் தெரிந்த வித்தையை நான் கற்றுக்கொடுத்தே ஆகவேண்டும். இது என் முக்கியமான தர்மம். அதற்கிணங்க இங்கே உள்ள மாணாக்கர்களில் வேதப் பயிற்சி தேவைப்பட்டோருக்கு அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆயுதப் பயிற்சி தேவைப்பட்ட வீரர்களுக்கு எனக்குத் தெரிந்த சகல அஸ்திர, சாஸ்திர வித்தைகளையும், வில், வாள், வேல், போன்ற பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். மந்திரப் பிரயோகங்களின் மூலம் வில்லில் அம்பு தொடுத்துப் பிரயோகம் செய்யும் வித்தையையும் சிலருக்குக் கற்றுக் கொடுத்தேன். அவர்களில் சிலர் போஜனின் படைத் தளபதிகள்; தளபதிகளின் பிள்ளைகள்; பெரும் வீரர்கள். இதற்கு மேல் நான் செய்வதற்கு எதுவும் இல்லை; நான் இங்கே வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கைகளுடன் தான் வந்தேன். இங்கிருந்து செல்கையிலும் அதே வெற்றுக்கைகளோடு செல்கிறேன், சக்கரவர்த்தி அவர்களே!”

ஷ்வேதகேது மேற்கண்ட வார்த்தைகளை மிக்க மதிப்புடனும், மரியாதையுடனும் சொன்ன விதத்தில் பீஷ்மகனுக்கும் ஜராசந்தனுக்கும் உள்ளூரக் கூச்சம் ஏற்பட்டது. தங்களை மிகவும் சிறியவர்களாக உணர்ந்தனர் இருவரும். மன்னிப்புக் கேட்கும் குரலில் பீஷ்மகன், “ ஆசாரியரே, நீர் எமக்குப் பலவிதங்களிலும் உதவி இருக்கின்றீர். மிகச் சிறு காலமே இங்கே இருந்தாலும் அந்தக் காலத்துக்குள்ளே குண்டினாபுரத்தையும், அதன் மக்களையும் கல்வி, கேள்விகளிலும், வீரத்திலும் சிறந்தவர்களாக மாற்றிவிட்டீர்கள்; இங்குள்ள இளம் போஜ வீரர்களுக்கு நீர் ஓர் ஆதர்ச புருஷர் எனவும், அவர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி ஊக்கமளித்த மகான் நீர் என்பதையும் நான் நன்கு அறிவேன். உம்முடைய தபஸும், அதில் விளைந்த அதீத ஞானமும், வித்தைகளின் தேர்ச்சியும் விதர்ப்ப மக்களால் ஒரு நாளும் மறக்கவொண்ணாதது. அவர்கள் உம்மை மிகவும் மதிக்கின்றனர். ஆகவே இந்தச் சமயம் நீர் இங்கிருந்து சென்றால் மக்கள் மனம் புண்பட்டுவிடும். தயவு செய்து நீர் இங்கேயே இரும்.”

ஜராசந்தன் சற்றே இறுமாப்புடன் சிரித்துக்கொண்டான். பீஷ்மகன் ஷ்வேதகேதுவைப் புகழ்ந்து அதன் மூலம் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடுவான் என உள்ளூர மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் ஷ்வேதகேதுவோ, “நான் செல்ல வேண்டும். என் சங்கல்பத்தை உடைக்க முடியாது.” என்றான். “உம்முடைய சங்கல்பம் நீர் இங்கே இருப்பதை எவ்வாறு குறுக்கிட்டுத் தடுக்கிறது ஐயா? எனக்குப் புரியவில்லையே? இவ்வளவு நாட்கள் இங்கே இருந்தவர் இப்போது போகிறேன் என்றால் என்ன அர்த்தம்? நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், உம்மை அவமதித்திருந்தால் எங்களை மன்னிக்கவும். தவறைச் சரி செய்துவிடுகிறேன். என்ன ஆணையிட வேண்டும். அதை மட்டும் சொல்லுங்கள்.”

“மன்னர்களின் உயர்வான போஜமன்னனே! “ ஷ்வேதகேதுவின் கண்களில் எதற்கும் மசிய மாட்டேன் என்ற உறுதி தெரிந்தது. “ மன்னா, உன்னால் இயலாத ஒன்றைக்குறித்துப் பேசி என்ன பயன்? நீ நினைத்தாலும் உன்னால் எதுவும் செய்ய இயலாது; உதாரணமாக இந்தச் சுயம்வரத்தை உன்னால் நிறுத்த இயலுமா?”

ஷ்வேதகேதுவை எவ்விதமேனும் பயமுறுத்திப் பணிய வைக்க நினைத்த ஜராசந்தன், சற்றே கர்வத்துடன், “உன்னுடைய எந்த விரதத்துக்கு இந்தச் சுயம்வரத்தால் பங்கம் ஏற்பட்டது? இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? “ என்றான்.

“மரியாதைக்குரிய மன்னா! உம் எதிரில் ஒரு சின்ன உண்மையை நான் கூற அனுமதி உண்டா?”

“ஏன்? என்ன ஆயிற்று? நான் எப்போது வேண்டாம் என்று சொன்னேன்?” ஜராசந்தன் கொஞ்சம் ஆச்சரியமும், திகைப்பும் கலந்து கேட்டான்.

“ஓ,ஓ, ஓ, சக்கரவர்த்தி, உம் மனதுக்கு எது சம்மதமோ, எதை நீர் கேட்க விரும்புகிறீரோ அதை மட்டுமே உம்மிடம் பேசலாம் அல்லவா? அப்போது தான் மக்களை நீர் பேசவே இடம் கொடுப்பீர். இது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. அதனால் தான் கூறுகிறேன்; நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை நீர் கேட்க விரும்ப மாட்டீர்.”


"நான் என்ன அவ்வளவு பொல்லாதவனா?" ஜராசந்தன் கேட்டான்.

"உலகம் அப்படித் தான் சொல்கிறது. நான் இங்கே வந்ததன் காரணமே இங்கிருந்து செல்கையில் என் ஆசிகளையும், நல்வாழ்த்துகளையும் மன்னன் பீஷ்மகனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதே. அதோடு இங்கிருந்து அமைதியாகவே செல்ல விரும்புகிறேன். ஆனால் நீர் என்னைப் பேசச் சொல்கிறீர்; காரணங்கள் கேட்கிறீர். அதை நான் சொல்லாமலேயே இங்கிருந்து செல்ல விரும்பினேன். ஆனால் இப்போது நான் சொல்லவில்லை எனில் உம்மிடம் உள்ள பயம் காரணமாகச் சொல்லவில்லை என்று ஆகிவிடும். உம்மிடம் எனக்குப் பயம் ஏதுமில்லை, சக்கரவர்த்தி! நான் ஏன் இங்கிருந்து செல்கிறேன் தெரியுமா? நடைபெறப் போகும் சுயம்வரம் உம்முடைய கட்டளையின் பேரில், விருப்பத்தின் பேரில் உம்முடைய ஆணையின் பெயரில் பெயரளவுக்கு நடைபெறப் போகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். இது தர்மத்திற்கு விரோதம். ஆகவே நான் இங்கிருந்து செல்கிறேன்."

"தர்மம்! அதர்மம்! எங்கிருந்து வந்தது இவை? என்ன அதர்மத்தைக் கண்டாய் இந்தச் சுயம்வரத்தில்? என்ன தவறைக் கண்டாய்?" ஜராசந்தனின் கோபம் அதிகமானது. கஷ்டப்பட்டு அடக்கிய கோபம் இப்போது எரிமலை பொங்குவது போல் பொங்கியது.


Monday, August 8, 2011

ஷ்வேதகேதுவின் சங்கல்பமும், பீஷ்மகனின் அதிர்ச்சியும்!

ஆழ்ந்த யோசனையோடு பேசினான் ஷ்வேதகேது. “நேற்று இரவு வரையிலும் ஏதேனும் அதிசயம், அற்புதம் நடக்கும் என எதிர்பார்த்தேன். என் இறையை, என் கடவுளை முழு மனதோடு பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். ஆனால், என் பிரார்த்தனைகள் பயனற்றுப் போயின. என் கடவுள், என் தலைவன் என் பிரார்த்தனைகளை நிராகரித்துவிட்டானோ?? தெரியவில்லை! எந்த அற்புதமும் நடக்கவில்லை. எனில் நான் எடுத்துக்கொண்ட சங்கல்பத்தின் காரணமாக மேற்கொண்டு இங்கே நான் தங்குவதில் எந்தப் பொருளுமில்லை. நான் தங்குதல் தவறாகவும் இருக்கலாம். இங்கே நான் மேலும் தங்க இயலாது. மேலே எதுவும் என்னைக் கேட்காதீர்கள். சொல்லும் நிலையில் நான் இல்லை.” கொஞ்சம் துக்கத்தோடு பேசினாலும், தன் மாணாக்கர்களிடம் உள்ள கனிவையும், பாசத்தையும் குறைக்காமல் பேசிய ஷ்வேதகேது அனைவரையும் ஆசீர்வதித்து விட்டு அப்லவனும், ஜாஹ்னுவும் பின் தொடர அங்கிருந்து அகன்றான்.

பீஷ்மகனின் தர்பார் மண்டபம். அவனுடன் சக்கரவர்த்தி ஜராசந்தன் சற்றே உயரமான சிங்காதனத்தில் வீற்றிருக்க, அங்கே இருந்த தாமகோஷனோடும், ஜராசந்தனோடும், பீஷ்மகன் சுயம்வர ஏற்பாடுகள் குறித்தும், அடுத்துச் செய்ய வேண்டியவை பற்றியும் ஆலோசனைகள் செய்து கொண்டிருந்தான். அப்போது காவலாளி ஆச்சாரியர் ஷ்வேதகேது வந்து கொண்டிருப்பதைக் கூறிச் செல்ல பீஷ்மகனும், தாமகோஷனும் இயல்பான மரியாதையோடு முன் சென்று வரவேற்க ஆயத்தமாயினர். ஆனால் ஜராசந்தனோ இருந்த இடத்தை விட்டு சற்றும் நகரவில்லை. ஷ்வேதகேது உள் நுழைய மன்னர் இருவரும் வணங்கி வரவேற்று ஷ்வேதகேது அமர்ந்த பின்னர் தாங்களும் அமர்ந்து கொண்டனர். கவிஞர்களோ, அறிஞர்களோ தன்னைத் துதித்துப் பாடுபவர்களை மட்டுமே மதித்துப் பேசும் சுபாவம் கொண்ட ஜராசந்தன், மனதுக்குள் எத்தனை சொன்னாலும் இந்த ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் இந்தத் துறவிகளையும், ஆசாரியர்களையும் வணங்கும் இழிவான பழக்கத்தைக் கைவிடவே மாட்டேனென்கிறார்களே! இது அவ்வளவு நல்லதில்லை என்றாலும் கேட்பதில்லை என நினைத்துக்கொண்டான். இந்த நினைப்பில் அவன் முகம் சற்றே சுளுக்கிக்கொண்டது.

எல்லாவற்றையும் கவனித்தும் கவனியாது போல் ஷ்வேதகேது அமர்ந்திருந்தான். பீஷ்மகன் பணிவோடு, “ஆசாரியரே, தாங்கள் இந்த அரசவையைத் தேடி வரும்படியான சூழ்நிலை எவ்வாறு ஏற்பட்டது?? தாங்கள் அழைத்திருந்தால் நானே நேரில் வந்து தங்களுக்கு ஆவன செய்திருப்பேனே? “ என்றான். ஜராசந்தனுக்கு இந்தப் பணிவையும் விநயத்தையும் கண்டு கோபம் வந்தது. ஆனால் அடுத்து ஷ்வேதகேது பேசியதைக் கேட்டதும் உள்ளூர மகிழ்வும் வந்தது. ஷ்வேதகேது, “போஜமன்னனே, அரசர்களில் சிறந்தவனே! நான் இங்கிருந்து விடைபெறும் தருணம் வந்துவிட்டது. அதைச் சொல்லிவிட்டு என்னுடைய ஆசிகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவிக்கவே வந்தேன்.” பீஷ்மகனுக்கு உண்மையிலேயே தூக்கிவாரிப்போட்டது. இதை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
“ஆஹா, இது என்ன நான் கேள்விப் படுவது? விடை பெறுகிறீரா?? குண்டினாபுரத்தை விட்டு வேறு எங்கே செல்கிறீர்?? அதுவும் இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் இந்நகரத்தை விட்டு நீர் செல்லும் காரணம் என்னவோ?? ம்ம்ம்ம்???? ஒருவேளை, யாரேனும் உம்மை அவமரியாதையாய்ப் பேசிவிட்டார்களா? எவர்? சொல்லுங்கள் எனக்கு! அவனுக்குத் தக்க தண்டனையை உடனே அளிக்கிறேன்.”

“மதிப்பும், மாட்சிமையும் பொருந்திய மன்னா! நான் குண்டினாபுரத்தை விட்டுச் செல்கிறேன். என் மாணாக்கர்களிடம் நான் விடைபெற்று அவர்களுக்குச் சொல்ல வேண்டிய அறிவுரைகளைச் சொல்லி ஆசிகளும் வழங்கிவிட்டேன். மன்னா! நான் இங்கு வந்தபோது நீர் எனக்குக்கொடுத்த சொத்துக்கள், பசுக்கள், நிலம் அனைத்தையும் ஆசிரமத்தின் மொத்தச் செல்வத்தையும் இந்தக் கோட்டையின் பாதுகாவலனிடம் ஒப்படைத்துவிட்டேன். இங்கே வந்து உம்மிடம் விடைபெற்றுவிட்டு உமக்கும் உம் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த ஆசிகளை வழங்க வேண்டியே வந்தேன்.”…..

“எங்கே செல்கிறீர்?”

“இறைவன் என்னை எங்கே போகச் சொல்லிக் கட்டளை இடுகிறானோ! அவன் ஆணை என்னை எங்கே இழுத்துச் செல்கிறதோ! அங்கே செல்வேன். ஆனால் இங்கிருந்து நான் செல்லவேண்டும்.”

“சரி, ஆசாரியரே? ஆனால் உடனே ஏன் செல்ல வேண்டும்? எனக்குப் புரியவில்லையே!” பீஷ்மகனால் இன்னமும் இந்த அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஜீரணிக்க முடியவில்லை. “ஆசாரியரே, என் நாட்டின் விருந்துபசாரத்தில் குறை ஏதேனும் கண்டீரா? இங்கே உம்மைச் சரியாகக் கவனிக்கவில்லையோ? தவறு நிகழ்ந்து விட்டதோ?” உண்மையான கவலை தொனிக்கக் கேட்டான் பீஷ்மகன்.

“மாட்சிமை பொருந்தி மன்னா! நீர் மிக அருமையானவர். என்னிடம் மிகவும் கருணையும், பாசமும் கொண்டு இங்கே தங்க வைத்து என்னை நன்றாகவே உபசரித்தீர். ஆனால் உம்முடைய இந்த உபசாரங்களை நான் இன்னமும் ஏற்க இயலாது. “

“தயவு செய்யுங்கள், ஆசாரியரே! குருதேவரே, நீர் இங்கிருந்து சென்றுதான் ஆகவேண்டும் எனில் செல்லுங்கள். ஆனால் சுயம்வரம் முடியட்டும். அரண்மனையில், நாட்டில் ஒரு மங்கல நிகழ்ச்சி நடக்க இருக்கையில் அந்தணரும், தபஸ்வியான பிரமசாரியுமான நீர் இங்கிருந்து செல்வது நன்மைக்கு உரியதாய் எனக்குத் தோன்றவில்லை. ஏதோ கெட்ட சகுனமாகத் தெரிகிறது.” பீஷ்மகன் குரலில் கவலை தோய்ந்திருந்தது.


அவ்வளவு நேரமும் கஷ்டப்பட்டுப் பொறுமை காத்த ஜராசந்தன், எரிச்சல் மிகுந்த குரலில், “ஏ, பிராமணனே, நீ எங்கே வேண்டுமானாலும் போய்க் கொள். ஆனால் சுயம்வரம் முடியும் வரைக்கும் இருந்து தொலை. “ மறைமுகமாகத் தன் கோபத்தைக் காட்டிய ஜராசந்தன் உள்ளூர ஷ்வேதகேதுவின் வலிமையிலும் திறனிலும் பயம் கொண்டிருந்தான். ஷ்வேதகேது சாந்தீபனியின் முதன்மைச் சீடன் என்பதும், அவந்தி நாட்டு இளவரசர்களின் முக்கியமான ஆசாரியர் என்றும், ராணுவ தளவாடங்களையும், அஸ்திர, சஸ்திரங்களையும், வில், அம்பு வித்தைகளிலும் , மிக மிகத் தேர்ந்தவன் என்பதையும் ஜராசந்தன் சற்றும் மறக்கவில்லை. அவனிடம் வித்தை கற்க தேச தேசங்களின் ராஜகுமாரர்கள் காத்திருக்கின்றனர் என்பதையும் அறிவான். மேலும் இங்கே போஜனின் நாட்டில் ஷ்வேதகேதுவுக்கு மிக உயர்ந்த உன்னதமான ஒரு ஸ்தானத்தைக் கொடுத்துக் கெளரவித்திருந்தார்கள் என்பதையும் இங்குள்ள பெரிய பெரிய படைத்தளபதிகளும், வீரர்களும் ஷ்வேதகேதுவிடம் மேற்கொண்டு பயிற்சிகள் எடுத்துக்கொண்டு தங்கள் திறனை மேம்படுத்த ஆவல் கொண்டிருக்கின்றனர் என்பதையும் தன் ஒற்றர்கள் மூலம் அறிந்திருந்தான். ஆகவே அவனுக்கும் உள்ளூர ஷ்வேதகேது இந்தச் சமயம் திடீரென நகரை விட்டு வெளியேறினான் எனில் நாட்டு மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் இது கெட்ட சகுனம் என்று நம்புவார்கள்; பின்னர் நாம் நினைத்த எதுவுமே நடவாமல் மக்களே தடுத்துவிடுவார்கள்; என்று அச்சம் ஏற்பட்டது. மக்கள் என்ன? இந்த ஆரியவர்த்தத்தின் ராஜாக்களும், இளவரசர்களுக்குமே அச்சம் ஏற்படும். பலருக்கும் இப்படிப் பல்வேறு வித்தைகளையும் கற்றுத் தேர்ந்த ஒரு ஆசாரியன் அதுவும் ஆசிரமம் நடத்தி சீடர்களை உருவாக்கிக் கொண்டிருந்தவன், திடீரென நாட்டை விட்டுச் சென்றால் அது நாட்டுக்கோ, மன்னர் குலத்துக்கோ கேடு என்பதை நம்புவார்கள். அதை எண்ணிக் கலக்கம் அடைவார்கள்.

“நான் இப்போதே செல்ல வேண்டும். என் சங்கல்பத்தை உடைத்துவிடுவேன்; என் புனிதமான சங்கல்பம் நான் இங்கிருந்து செல்லாமல் தங்கினால் உடைந்துவிடும்.” என்றான் ஷ்வேதகேது.

தாமகோஷனுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் மிகுந்தது. கிருஷ்ணனும், பலராமனும் தங்களுக்கு வேதங்கள் கற்றுக்கொடுத்த குருவான ஷ்வேதகேதுவைப் பற்றிப் பலமுறை கூறி உள்ளார்கள். எல்லாவற்றுக்கும் மேலே குருசாந்தீபனி தன் முதன்மைச் சீடன் ஆன ஷ்வேதகேதுவைப் பற்றிப் பேசாத நாளே இல்லை. எல்லாவற்றையும் இப்போது நினைவு கூர்ந்த தாமகோஷன் தான் அமர்ந்திருந்த இடத்தில் நிமிர்ந்து அமர்ந்து, “ ஆசாரியரே? ஏன் திடீர்ப் பயணம்?? நிச்சயமாக இந்தச் சில நாட்களுக்குள் உங்கள் மனம் வருந்தும்படியான சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே நடந்தது என்ன? சொல்லுங்கள் கேட்போம்.” என்றான்.

ஷ்வேதகேது கம்பீரம் குறையாமலேயே பேசினான்;”சேதி நாட்டு மன்னா! நான் நேற்றிரவு வரையிலும் தெளிவோடு தான் இருந்தேன். அவந்தி நாட்டு இளவரசர்கள் வந்து என்னைச் சந்தித்துப்பேசினார்கள். அதன் பின்னரே மனம் மாறினேன். மன்னா, சில காலம் நான் என்னை மறந்து, என் நிலையை மறந்து ஒரு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். அதை நீர் நன்கு அறிவீர். ஒரு ஆசாரியனாக நான் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிட்டுவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். போஜ மன்னா, நீர் என்னை அழைத்த சமயம் நான் இவற்றைப் பற்றி உம்மிடம் விரிவாகக் கூறியுள்ளேன். ஒரு அற்புதத்தின் காரணமாக, அதிசயமாக அந்த வீழ்ச்சியில் இருந்து நான் மீண்டு வந்தேன். ஒரு வருடம் முன்னர் உம்முடைய வேண்டுகோளின் பெயரில் இங்கே ஆசாரியனாக அமர்ந்தேன். மன்னா! கரவீரபுரத்தில் இருந்து அந்த அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து அதிர்ஷ்டவசமாக நான் காக்கப் படவில்லையெனில் எவ்வாறு இருந்திருப்பேன் என்பதைக் கூறுவதும் கடினம். மன்னா! அங்கிருந்து அந்தச் சுழலில் இருந்து நான் காக்கப் பட்டபோது நான் ஒரு சங்கல்பம் செய்து கொண்டேன். இனி, இந்த நிமிடம் முதல் தர்மம் எங்கே காக்கப் படுகிறதோ அந்த இடத்திற்கே, அந்த நாட்டிற்கே நம் சேவை பயன்படவேண்டும். எந்த இடத்தில் தர்மமானது இம்மியளவுக்காவது விலகுகிறதோ அங்கிருந்து உடனே கிளம்பிவிட வேண்டும். இதுவே நான் கொண்ட உறுதி, சங்கல்பம், என் விரதம், தவம்.”




Sunday, August 7, 2011

ஷ்வேதகேது வெளியேறுகிறான். கண்ணன் வருவான் 2-ம் பாகம்

அன்று காலை எப்போதும்போல் எழுந்த ஷ்வேதகேது தன் காலைக்கடன்களை விரைவாக முடித்துக்கொண்டு அநுஷ்டானங்களையும் செய்துவிட்டு, நகரை விட்டுச் சற்றே தள்ளி இருந்த தன் ஆசிரமத்தை வந்தடைந்தான். கைசிகனுக்கும் சரி, பீஷ்மகனுக்கும் சரி ஆசாரியர்களிடம் இருந்த மதிப்பும், மரியாதையும் சற்றும் குறையவில்லை. ஆகவே ஒரு படித்த அந்தணன் வந்தாலே எல்லா மரியாதைகளையும் செய்து அவனுடைய சுக, துக்கங்களைக் கவனிக்கும் அவர்களுக்கு அஸ்திர, சாஸ்திரங்களில் நிபுணனும், ஆயுதப் பயிற்சிகளில் வல்லவனும் ஆன ஷ்வேதகேதுவிடம் இயல்பாகவே மதிப்பு ஏற்பட்டது. அதுவும் குரு சாந்தீபனியின் முதன்மை சீடன் என்றும் தெரிந்ததில் இருந்து இன்னும் மரியாதை காட்டி ஷ்வேதகேதுவுக்கு வேண்டிய வசதிகளைத் தாங்களே மனமுவந்து செய்து கொடுத்திருந்தார்கள். குண்டினாபுரத்தின் சாதாரண மக்களே ஷ்வேதகேதுவை மிகவும் மதித்து மரியாதையுடன் நடத்தினார்கள். அவன் மாணாக்கர்களுக்குக் கேட்கவும் வேண்டுமா? வேதங்கள் கற்றுக்கொள்ளும் இளைஞர்களானாலும் சரி, ஆயுதப் பயிற்சி கற்பவரானாலும் சரி, ஷ்வேதகேது கண்ணால் காட்டுவதை உடனடியாக நிறைவேற்றுபவர்களில் வல்லவர்களாக இருந்தனர். ஷ்வேதகேதுவே ஒரு இளைஞனாக இருந்தாலும், அவனுடைய பிரமசரிய தபஸ் காரணமாயும், அவன் கற்ற அஸ்திர, சாஸ்திர வித்தைகளின் காரணமாயும், அவன் உடல் வஜ்ராயுதம் போல் உறுதியுடன் இருந்ததல்லாமல், தபஸின் காரணமாய் முகமும் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. மாணவர்கள் அனைவருக்கும் ஷ்வேதகேதுவின் சீடர்களாய் இருப்பதில் பெருமை மிகுந்தது.

அன்றைய பாடங்களைக் கவனிக்க உள்ளே நுழைந்த ஷ்வேதகேதுவை மாணாக்கர்கள் நமஸ்கரித்து வணங்கினர். சற்று நேரம் வேத பாடங்களைச் சொல்லிக் கொடுத்தான் ஷ்வேதகேது. யாகத்திற்கு என வளர்க்கப் பட்டிருந்த அக்னியில் யாக மந்திரங்களைச் சொல்லி அவற்றை நிறைவு செய்தான். பின்னர் தன்னிரு கரங்களையும் உயர்த்தி மாணாக்கர்களை ஆசீர்வதித்த ஷ்வேதகேது தன் மாணாக்கர்களை நோக்கிக் கூறினான்.
“என்னருமைக் குழந்தைகளே! உங்களிடம் இப்போது நான் விடைபெறவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. ஒரு வருடம் முன்னால் நான் இங்கு வந்தேன். போஜ அரசர்களின் தயவாலும், அவர்களின் விருந்து உபசாரங்களாலும் இங்கே என்னால் ஆசிரமத்தைச் சிறப்பாக நடத்த முடிந்தது. குழந்தைகளே, நீங்களும் என்னிடம் நீங்காத பிரியமும், பாசமும் வைத்துள்ளீர்கள். உங்கள் தகுதிக்கு ஏற்பச் சிலர் வேதங்களை அப்யசிப்பதிலும், சிலர் ஆயுதப் பயிற்சிகளிலும், சிலர் சிற்ப, சித்திரக்கலைகளிலும் திறமை வாய்ந்தவர்களாய் உள்ளீர்கள். எனக்குத் தெரிந்ததை எல்லாம் உங்களில் அனைவருக்கும் நான் சொல்லிக் கொடுத்துவிட்டேன். ஆகவே இப்போது நான் இங்கிருந்து செல்ல வேண்டும். விடை கொடுங்கள்.”

மாணவர்கள் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து போய்ப் பேசமுடியாமல் தவித்தனர். அதைப் பார்த்த ஷ்வேதகேதுவுக்கும் உணர்ச்சி மேலிட்டது. “நான் இந்தக் கோட்டையின் காவலனை இங்கே வரச் சொல்லி இருக்கிறேன். ஒரு வருடம் முன்னர் இந்த நாட்டு அரசன் இந்த ஆசிரமத்தை நடத்த வேண்டி எனக்குக் கொடுத்த அனைத்துச் சொத்துக்களையும், பசுக்களையும் இந்தக் கோட்டைக்காவலனிடம் நான் திரும்ப ஒப்படைக்கிறேன். பின்னர் இவை முறைப்படி அரசன் பீஷ்மகனைப் போய்ச் சேரும். நானும் தனிப்பட்ட முறையில் பீஷ்மகனைச் சென்று சந்தித்து விட்டே விடைபெறுகிறேன். என்னை விட்டுப்பிரிய நேர்ந்ததற்காக எவரும் வருந்த வேண்டாம். நீங்கள் எங்கே சென்றாலும் என் ஆசிகள் உங்களை விட்டுப் பிரியாது. உங்களுடனேயே இருக்கும். நீங்கள் எங்கே சென்றாலும் மாட்சிமை பொருந்திய பரசுராமரின் சீடரும், குருவுமான சாந்தீபனியின் முதன்மைச் சீடனான ஷ்வேதகேதுவின் வழியில் மகத்தானதொரு குரு பரம்பரையில் வருகிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.


“பிரமசாரிகளே, உங்கள் தபஸ் தான் இவ்வுலகத்தை அதர்மத்தில் இருந்து மீட்டு என்றென்றும் தர்மத்தின் பாதையில் செல்ல வைக்கும் என்பதை மறவாதீர்கள். மேலும் நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆயுதப் பயிற்சியை நீங்கள் தர்மத்தைக் காக்கவேண்டியே பயன்படுத்த வேண்டும். அதர்மத்திற்குத் துணை போகப்பயன்படுத்தக் கூடாது. சுயநலத்திற்காகவோ, பணம் சம்பாதிக்கவோ பயன்படுத்தாதீர்கள். பாவங்களைச் சேர்த்துக்கொள்ளாமல் தர்மத்தின் பாதையில் சென்றீர்களானால் செல்வம் உங்களை நாடி வரும். பாவங்களைச் சேர்த்துக்கொள்ளாதீர்கள். பாவங்களில் பங்கெடுக்காதீர்கள். உங்களுடைய தவத்தின் சக்தியாலும், தர்மத்தின் பாதையில் செல்வதாலும் நீங்கள் அனைவரும் மேன்மையடைவீர்கள். இது தான் விடைபெறும் முன்னர் நான் உங்களுக்கு அளிக்கும் மகத்தான பரிசு என்பதையும் மறவாதீர்கள்."

கீழே இருந்த மான் தோலை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக்கொண்ட ஷ்வேதகேது, தன் தண்டத்தையும், கமண்டலத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஆனால் அவன் மாணாக்கர்களோ அவனைச் செல்ல விடாமல் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் ஷ்வேதகேதுவின் இந்தத் திடீர் அறிவிப்பில் திகைத்திருந்ததால் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் ஷ்வேதகேதுவை நோக்கித் தலைக்குத் தலை கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். "குருதேவரே, எங்களை இப்படிப் பாதியில் விட்டு விட்டு நீர் செல்லலாமா?" என்று சிலரும், "நாங்களும் உம்மோடு வருவோம்." என்று சிலரும், கூற ஷ்வேதகேது அவர்களைப் பார்த்து, " என் அருமைக் குழந்தைகளே! உங்களில் எவரையும் நான் அழைத்துச் செல்ல இயலாது. நீங்கள் அனைவரும் போஜராஜனின் படைத் தளபதிகளின் அருமை மக்கள். நான் செல்லப் போவது ஒரு கடினமான பாதையில். அந்தக் கடினமான பாதையில் செல்லும் அளவுக்கு உடல் வலுவோ, மனப்பக்குவமோ உங்களுக்கு இல்லை." என்றான்.

"குருதேவா, உங்களுக்கு என்ன நடக்குமோ அது எங்களுக்கும் நடக்கட்டும். நாங்கள் உங்களுடன் வந்து உங்கள் சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்." என்றனர் மாணவர்கள். அவர்களில் அப்லவன் என்பவனை மட்டும் ஷ்வேதகேது பார்த்து விட்டுத் தலை அசைத்தான். "அப்லவா, நீ வேறு மாதிரியானவன். உனக்கு என யாருமில்லாதவன். தாயோ, தந்தையோ இல்லாதவன். ஆகவே உனக்கு எவர் அநுமதியும் தேவையும் இல்லை. நீ என்னுடன் வரலாம், ஆஹா, நீயும் தான் ஜஹ்னு, உனக்கும் எவரிடமும் அனுமதி கேட்கத் தேவை இல்லை அல்லவா? நீயும் வரலாம். உங்கள் இருவரையும் அழைத்துச் செல்ல எனக்குத் தடை ஏதும் இல்லை. ஆனால் என்னுடன் வந்தால் பல நாட்களுக்கு, ஏன் பல மாதங்கள் கூட ஆகலாம். சரியான சாப்பாடோ, இரவு படுக்கச் சரியான படுக்கையோ கிடைக்காது. உங்களால் இயலுமா?" என்று கேட்டான் ஷ்வேதகேது.

"எல்லாம் சரியே குருதேவா? ஆனால் ஏன் இந்த திடீர்ப் பயணம்?? என்ன ஆயிற்று? இவ்வளவு விரைவில் இங்கிருந்து கிளம்பும்படி என்ன நடந்தது?" என்று இன்னொருவன் கேட்டான்.

Monday, August 1, 2011

சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளில் ருக்மி! கண்ணன் வருவான்!

நாட்கள் நகர்ந்தன. மாகமாதம் வசந்தோற்சவம் நடக்கும் மாதம் ஆகும். மாக பெளர்ணமியில் ஆரம்பிக்கும் வஸந்தோற்சவம். பெளர்ணமி கழிந்த ஐந்தாம் நாளன்று தான் ருக்மிணியின் சுயம்வரத்திற்கான நாள் நிச்சயிக்கப் பட்டிருந்தது. பெளஷ மாதத்தின் முடிவில் இருந்தே இளவரசர்களும், அரசர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட்டனர். குண்டினாபுரமே அவர்களின் பரிவாரங்களால் நெருக்கடியும், நெரிசலும் மிகுந்து காணப்பட்டது. எங்கே பார்த்தாலும் அரசர்களின் ராஜ்யச் சின்னத்தைக் குறிக்கும் கொடிகள். பதாகைகள், அவர்களின் மெய்க்காவலர்களின் அணிவகுப்பு. அரசர்கள் வருவதைக் குறிக்கும் கட்டியக்காரர்களின் ஓங்கிய குரலோசை என ஒரே சப்தமயமாய்க் காட்சி அளித்தது குண்டினாபுரத்துக் கோட்டையின் தலைவாயில். அவர்களில் பல அதிரதர்களும், மஹாரதர்களும் இருந்தனர். அவர்கள் கொண்டு வந்த விதவிதமான ரதங்களின் தோற்றமும், அழகும் கண்ணைக் கவர்ந்தது. சில இளம் அரசர்களும், இளவரசர்களும் தங்கள் ரதங்களை வேகமாய் ஓட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் மிஞ்சப் பார்த்தார்கள். இங்கனம் மறைமுகப் போட்டிகளும் ஒரு பக்கம் நடந்த வண்ணம் இருக்க, மறுபக்கம் கூட்டுச் சதியாலோசனையும் நடந்து வந்தது.

தன் ஒரே மகளின் சுயம்வரத்தை முன்னிட்டு அரசன் பீஷ்மகன் மிக ஆடம்பரமாகவும் விமரிசையாகவும் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான். வந்திருந்த அரச விருந்தாளிகளுக்கு மட்டுமின்றி சுயம்வரத்தையும், அதன் ஏற்பாடுகளையும், நகர அலங்காரங்களையும், எல்லாவற்றுக்கும் மேல் வந்திருக்கும் அரச விருந்தினர்களையும் காணவேண்டி அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து வரும் ஜனங்களுக்கும் சேர்த்து விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அரசர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசவும், கலந்து பழகவும் வேண்டி நகரின் முக்கியமான ஒரு இடத்தில் அரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பேரிகைகளும், எக்காளங்களும், முரசுகளும், சங்குகளும் ஒலித்தவண்ணமும் யாரானும் ஒரு அரசர் வருகையைக் குறித்துக் கூறியவண்ணமும் இருந்தன. ஒரு சில அரசர்கள் நகருக்கு வெளியே தங்களுக்கென அழகிய கூடாரங்களும் அமைத்துத் தங்கினர். பீஷ்மகன் தனிப்பட்ட முறையில் சிறப்பு விருந்தாளியாக அழைத்திருந்த ஜராசந்தன் அனைவருக்கும் முன்னர் கிளம்பி வந்துவிட்டான். அவனுடன் அவனுடைய ராஜ்யத்தைச் சேர்ந்த சில சிற்றரசர்களும், இளவரசர்களும் வந்திருந்தனர். எங்கும் ஒரே கோலாகலமாக இருக்கச் சேதி நாட்டு மன்னன் தாமகோஷனும் வந்து சேர்ந்தான். அவனுடன் அவன் மகன் சிசுபாலனும் வந்தான். எல்லாரையும் விட முக்கிய விருந்தாளிகள் அல்லவோ இவர்கள்? அதுவும் ஆர்யவர்த்தம் முழுதும் பேசப்படும் அழகு வாய்ந்த இளவரசி ருக்மிணியின் கரம் பிடிக்கப் போகும் பாக்கியசாலி அல்லவா சிசுபாலன்?? மணமகனின் முக்கியத்துவம் கருதி அவர்கள் இருவருக்கும் பீஷ்மகன் மிகச் சிறப்பானதொரு அரண்மனையை அலங்கரித்துக் கொடுத்திருந்தான்.

செளப நாட்டு மன்னன், சால்வன், கருஷ நாட்டின் அரசன் தந்தவக்ரன், அவந்தி தேசத்து விந்தன், அநுவிந்தன் மற்றும் ஆர்யவர்த்தத்தின் முக்கியமான அரசர்கள், இளவரசர்கள் என அனைவராலும் நிரம்பி வழிந்தது குண்டினாபுரம். எல்லா அரசர்களுக்கும் இந்தச் சுயம்வரத்தின் தன்மை குறித்தும் சிசுபாலன் தான் மணமகன் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்ததால் தங்களுடன் சிறு பரிவாரம் ஒன்றுடன் மட்டுமே வந்திருந்தனர். சாதாரணமாக மற்ற சுயம்வரங்களில் நடப்பது போல் இங்கே போட்டியோ, வீரத்தைக் காட்டும் நிகழ்வோ எதுவும் இல்லை என்றும், இருக்கும் ஒரே நிகழ்ச்சியும் சிசுபாலனைத் தேர்ந்தெடுக்க வேண்டி நடைபெறப்போகும் நிகழ்ச்சி என்பதாலும் அனைவரும் கோலாகலமான ஒரு நிகழ்வுக்கும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கும் தயாராக வந்திருந்தனர். பீஷ்மகனை விடவும் ருக்மியே வந்திருந்த விருந்தினர்களை மகிழ்விக்கும் முயற்சியில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தான். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் ருக்மி! இந்த முட்டாள் பெண்ணைச் சம்மதிக்க வைத்து இப்படி ஒரு சுயம்வரத்திற்கு ஜராசந்தனையும் ஒப்புக்கொள்ள வைத்துத் தானும் அவனின் மருமகனாக ஆவதற்கும் முயற்சிகள் எடுத்து!! அப்பப்பா! ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அதன் சக்கரவர்த்தியாகப் பெயர் எடுக்க வேண்டுமென்றால் என்னென்ன தகிடுதத்தங்கள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? நான் போடப் போகும் இந்த அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டுமே! முட்டாளும், பிடிவாதக்காரியுமான ருக்மிணி எந்த நேரம் என்ன செய்வாளோ யார் அறிவார்? ருக்மிக்கு உள்ளூரக் கலக்கம் தான்.

ருக்மி யோசித்தான்: “ஆஹா, இந்த ருக்மிணி ஒரு மிகப்பெரிய தொந்தரை பிடித்தவளாகிவிட்டாளே. என்னமோ அவளுக்குத் தான் நியாயமும், தர்மமும் தெரியும் என்பது போல் பேச்சு வேறு. எப்போ என்று தெரியாத காலகட்டத்திலேயே பல யுகங்கள் முன்பிருந்தே பெண்கள், அதுவும் இளவரசிகள் சாம்ராஜ்யங்களை நிறுவவும், அதன் ஸ்திரத்தன்மையை பலப்படுத்தவுமே கருவிகளாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இவர்களை அடித்தளமாகப் போட்டே பல சாம்ராஜ்யங்கள் எழும்பி இருக்கின்றன. எங்கோ ஒன்றிரண்டு இளவரசிகள் தங்கள் இஷ்டம் போல் மணமுடிக்க நினைத்திருக்கலாம். தாய், தகப்பனின் ஆசைகளை மிதித்துத் தங்கள் மனம் போல் நடந்திருக்கலாம். என்றாலும் பின்னர் அவர்கள் உணர்ந்திருப்பார்கள். இதெல்லாம் இந்த முட்டாள் பெண் ருக்மிணிக்குப் புரியுமா? சின்ன வயசில் இருந்தே அவள் மனம் போன போக்கில் நடந்து கொள்வாள். யாருக்கும் அடங்க மாட்டாள். எல்லாம் இந்தப் பாட்டனாரும், தந்தையாரும் கொடுத்த அளவுக்கதிகமான செல்லம் தான் காரணம். ம்ம்ம்ம்ம்??? ஆனால் அவளுடைய தற்போதைய நடத்தை மாறிவிட்டதே? என்ன ஆயிற்று அவளுக்கு?

முதலில் என்னோடு சண்டையிட்டாள். சிசுபாலனை மணக்க முடியாது என்றும் சொன்னாள். கன்னிமாடத்தின் கதவுகளை அடைக்கவும் உத்தரவிட்டாள். எவரும் அவளைச் சென்று பார்க்க இயலாவண்ணம் தன்னைத் தானே சிறைப்படுத்திக்கொண்டாள். உண்ணாவிரதமும் இருந்தாள். சில நாட்களில் இந்தச் சுயம்வர ஏற்பாடுகளைக் குறித்துக் கேலி பேசுவதும், துச்சமாய்க் கருதுவதும் அனைவருக்கும் எதிரே என்னைக் குறை கூறுவதுமாய் இருந்தாள். ஆனால் இப்போது எல்லாம் அடங்கி விட்டதோ?? ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மாதிரி தலைக்கனம் பிடித்து அடங்காமல் இருக்கும் பெண்கள் இப்படித் தான் அடங்குவார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது என்பது அவர்களுக்குப் புரிய நேரமாகும். ருக்மிணி அந்த நிலைக்கு வந்துவிட்டாள். ஆம்… இனி என்ன செய்ய இயலும் அவளால்?? நல்லவேளை, அந்த மதுரா யாதவர்களில் எவனாவது வந்து இங்கே தொந்தரவு கொடுப்பானோ என எண்ணினேன். அது மாதிரி எதுவும் நடக்கவில்லை. சுயம்வரம் எந்தத் தடையும் இல்லாமல் நடைபெறும் என்பது உறுதியாகிவிட்டது. மதுராவில் கிழவன் உக்ரசேனன் அவனுடைய பெண் வயிற்றுப் பேரன் எவனுக்கோ அரசன் என்ற பதவியைக் கொடுக்கப் போவதாய் ஒற்றர்கள் கூறினார்கள். ம்ம்ம்?? அவனைக் கூட உக்ரசேனன் அழையா விருந்தாளியாகச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளச் சொன்னான் எனக் கேள்விப் பட்டோமே? வந்திருக்கிறானா அவன்? தன் ஒற்றர்களை அழைத்தான் ருக்மி.

அவர்கள் மூலம் ப்ருஹத்பாலன் தான் அரசனாக முடிசூட்டிக்கொள்ளப் போவதில்லை என்றும் மதுராவின் சார்பில் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் கூறியதாகத் தெரிந்து கொண்டான். ருக்மியின் மனதில் நிம்மதி பிறந்தது. அதோடு சுயம்வர தினத்தன்று தான் மதுராவில் ரதப் போட்டி ஒன்றும் ஏற்பாடாகி இருக்கிறதாம். மதுராவின் இளைஞர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ளத் தயார் செய்து கொண்டு வருகின்றனராம். ஆகவே எவனும் இங்கே வரமுடியாது. ருக்மிக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது. மேலும் மாக மாத ஆரம்பத்தில் பெரும்படையுடன் ஆர்யவர்த்தத்தின் மிகப் பெரிய அரசன் ஒருவன் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறான் என்ற செய்தியும் ஒரு வதந்தியே என்பது நிரூபணமாகிவிட்டது. பெரும்பாலான அரசர்கள் வந்துவிட்டார்கள். அழைத்தவர்களில் வந்தவர்களைத் தவிர மற்றவர்கள் தங்களால் வர இயலாது என்பதைத் தெரிவித்ததோடு அல்லாமல், பரிசுகளையும் கொடுத்து அனுப்பி இருந்தார்கள். பரிசுகள் மூலமாவது இந்த சுயம்வரத்தை அங்கீகரிக்கவில்லை எனில், ஜராசந்தன் என்ன செய்வானோ என்ற அச்சமே காரணம் என்பது ருக்மிக்குப் புரிந்திருந்தாலும் அவன் வெளிப்படையாக சந்தோஷத்தையே காட்டினான். ஆர்யவர்த்தத்தின் மிகப் பெரிய அரசர்களில் இன்னும் இருவரான அஸ்தினாபுரத்து திருதராஷ்டிரனோ, அவன் மக்களோ இதில் கலந்து கொள்ள இயலாமைக்குத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டார்கள். அவ்வாறே பாஞ்சாலத்து துருபதனும் வர இயலாது என்றும் தன் மகனுக்கும் வர முடியாது என்றும் கூறி உள்ளான். ஆகவே இந்த சுயம்வரத்தை எதிர்ப்பவர்கள் எவரும் இல்லை. நிம்மதி பரிபூரணமாய் மனதை ஆக்கிரமிக்க ருக்மி தன் ஏற்பாடுகளில் தானே திருப்தி அடைந்தவனாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்.