Wednesday, February 29, 2012

கங்கை சாட்சியாக என் நாட்டைப் பகிர்ந்து கொள்கிறேன்

தந்தை என்னமோ எளிமையைக் கடைப்பிடித்தார். ஆனால் மகனுக்கு அதில் இஷ்டமில்லை. வெறுப்பே ஏற்பட்டது. சின்ன வயது முதல் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டுக்கும் தேவையான எளிமையான பொருட்களே பரத்வாஜரின் ஆசிரமத்தில் இருக்கும். தேவைக்கு மேல் எந்தப் பொருளும் இராது. தகப்பனின் இந்தப் போக்கு மிகக் கடுமையாகத் தோற்றமளித்தது துரோணருக்கு. உரிய காலம் வந்ததும் உபநயனம் முடிந்து குருகுலம் அடைந்தார் துரோணர். அந்தோ! அங்கேயும் அவர் தினசரி உணவுக்காக பிக்ஷை எடுக்க வேண்டி இருந்தது. பிரமசரிய ஆசிரமத்தின் முக்கியமான விதியாம். அதுவும் அன்றைய தேவைக்கு மேல் இருக்கக் கூடாது, மேலும் தூங்குவதும் மான் தோலிலே தான் தூங்கியாக வேண்டும். துரோணருடன் படித்த மற்ற அந்தணச் சிறுவர்கள் உள்ளூர இந்த பிரமசரிய ஆசிரமத்தின் விதிமுறைகளில் பெருமை கொண்டிருப்பதை துரோணர் புரிந்துகொண்டார். ஆனாலும் அவருக்கு என்னமோ இது பிடிக்கவில்லை. வறுமை; வறுமை; வறுமை.

எப்போதும் வறுமை; உடுத்தும் துணியும் அரை முழம் தான். உடலின் ஒரு பாதியைத் தான் மறைக்கிறது. இம்மாதிரிக் கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள வறுமையை நான் வெறுக்கிறேன். துரோணர் தனக்குள்ளாக சொல்லிக் கொள்வார். இதிலே எந்தப்பெருமையும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அதே அந்த க்ஷத்ரிய இளைஞர்கள் எப்படி வசதியாக வாழ்ந்திருக்கின்றனர். இங்கேயும் அவர்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. கேட்டால் அரசகுமாரர்களாம். எப்படி இருந்தால் என்ன? என்னுடைய திறமையிலோ, வேதங்களை ஓதும் விதமோ, அஸ்திரப் பயிற்சிகளோ அவர்களுக்கு வருமா? அவற்றில் நான் அன்றோ அவர்களை விடவும் முன்னணியில் இருக்கிறேன். இதில் துரோணருக்கு உள்ளூரப் பெருமை தான். கர்வமும் கூட. ஆனால் இந்த வறுமை! சே! ஏன் அந்தணனாகப் பிறந்தோம்! க்ஷத்ரியனாக இருந்தேனெனில் குறைந்த பக்ஷமாக ஒரு தளபதியாகவோ சேனாபதியாகவோ இருந்திருப்பேன். ஏன், என் திறமையால் ஒரு நாட்டின் அரசனாகக் கூட ஆகி இருப்பேன். என் அதிகாரம் விரிந்து பரந்து பட்டிருக்கும். என் காலடியில் எத்தனை எத்தனை மக்கள் அரசன் என்ற பணிவோடு வந்து விழுவார்கள். ஆஹா! நினைக்கவே சுகம்! இந்த பிராமணனாக இருந்து பிரம்மத்தை அறிந்து கொண்டு, வித்யையும், தபஸும் புரிந்து அனைவருக்கும் என்ன கிடைத்தது? உலகத்தின் சுகதுக்கங்களை அனுபவிக்காமல் ஏழ்மையிலும், வறுமையிலும் தங்கள் தபஸை நினைத்து மட்டும் பெருமைப் பட்டுக்கொண்டு. சீச்சீ, அதுவும் ஒரு வாழ்க்கையா?

குருகுலத்தில் இருக்கையிலேயே துரோணர் தன்னுடைய எதிர்காலத்திற்காகத் திட்டம் போட்டார். நன்கு ஆலோசித்து அங்கிருந்தவர்களிலேயே மிகவும் வலிமை வாய்ந்த பாஞ்சால தேசத்தின் இளவரசன் ஆன துருபதனை சிநேகிதன் ஆக்கிக்கொண்டார். அவனுடன் நெருங்கிப் பழகினார். அவனும் துரோணரோடு நெருங்கிப் பழகியதோடு அல்லாமல், தனக்குக் கிடைத்த சில செளகரியங்களையும் துரோணரோடு பகிர்ந்து கொண்டான். துரோணருக்கு உள்ளூர சந்தோஷம். ஆனாலும் அவனுடன் வெறும் நட்பு மட்டும் போதாது; அவனையும் தனக்குக் கீழ் தனக்குக் கட்டுப்பட்டவனாகக் கொண்டு வர வேண்டும். முதலில் அவன் நம்பிக்கையைப் பெறுவதோடு அவன் விரும்பும் வண்ணமும் நடந்து கொள்வோம். அவ்வாறே துரோணர் பாஞ்சால இளவரசனின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்றார். இருவரும் எங்கு போனாலும் சேர்ந்து போனார்கள். அனைத்துக்கலைகளையும் ஒன்றாகக் கற்றார்கள். இளவரசனுக்குத் தெரியாதவற்றை துரோணர் தனிப்பட அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவன் தவறுகளைத் திருத்தினார். இவ்வாறு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த துரோணர் அவனுடன் நட்பையும் தாண்டியதொரு அர்ப்பணிப்பு நிலைக்கு அவனைக் கொண்டு வந்தார். துரோணருக்காக எதையும் தருவேன் என்னும்படியான நிலைமைக்கு துருபதன் வந்துவிட்டான். அவர் மீது ஒரு பக்தியே வைத்திருந்தான். ஒரு நாள் மாலை வேளை. இருவருமே மாலை நேரத்து அநுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்த சமயம், துரோணர் விளையாட்டாக, “துருபதா, என்ன இருந்தாலும் நீ அரசகுமாரன்; அதுவும் பட்டத்து இளவரசன். ஆகவே நீ பட்டமேறினால் என்னை எங்கே நினைவில் வைத்திருப்பாய்!” என்றார். அதைக் கேட்ட துருபதன் திடீரெனத் தோன்றிய ஓர் மெய்ம்மறந்த உணர்வில், துரோணரின் கைகளில் கங்கை நீரை வார்த்து, தான் பாஞ்சால நாட்டு மன்னனாக ஆகும்போது, தன்னுடைய ராஜ்யத்தை, சாம்ராஜ்யத்தை துரோணருடன் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வதாக கங்கையை சாட்சிக்கு வைத்து வாக்களித்தான். அவ்வாறே தத்தமும் செய்தான்.

Tuesday, February 28, 2012

குரு வம்சத்தினரின் ஆசாரியர் துரோணர் பராக்! பராக்!!!!

ஹஸ்தினாபுரம்……… ஆசாரிய துரோணரின் குருகுலம் கங்கைக்கரையில் மிகப் பெரிய அளவிலான நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் மாணாக்கர்களுக்கு வேத அத்தியயனம் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் கொஞ்சம் படிப்பில் முன்னேறிய மாணவர்கள் ஒரு குழுவாக வாத,விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். மற்றச் சில மாணவர்கள் சுவடிகளைப் பிரித்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தனர். கொஞ்சம் தள்ளி இருந்த யுத்தசாலையோ பல பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இங்கிருந்து தான் அதிகமாய்ச் சப்தமும் வந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் மல்யுத்தம் பழகும் மாணவர்கள். இரு குழுக்களாகப் பிரிந்து மல்யுத்தம் பழகிக் கொண்டிருந்தனர். அவர்களை ஆதரித்தும், எதிர்த்தும் மற்ற மாணவர்களும் இரு குழுக்களாய்ப் பிரிந்து கோஷமிட்டனர். இன்னொரு பக்கம் வாள் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. வாள்கள், “டண்டணார்” என ஒன்றோடொன்று மோதும் சப்தமும், வீரர்கள், அவரவருக்கு இஷ்ட தெய்வத்தை வாழ்த்திய வண்ணம் வாளோடு வாள் மோதும், "கணீர்" சப்தமும் காதைத் துளைத்தது.

இன்னும் கதைப் பயிற்சி, ஈட்டியை எறிந்து பயிற்சி எடுத்தல் ஆகியவற்றோடு வில்லும், அம்பும் வைத்தும் பயிற்சி நடந்தது. அங்கு தான் அஷ்வத்தாமா காணப்பட்டான். துரோணரின் பிரியத்துக்கு உகந்த ஒரே மகன். அவன் மனம் சுணங்கினால் துரோணரின் உள்ளமும் சுருங்கும். அவன் நலம் அவருக்கு மிகவும் முக்கியம். அவனைக்கண்டு உள்ளூரப் பெருமிதம் கொண்ட துரோணர் தன் பார்வையைத் திருப்பினார். இதைத் தவிரவும் வீரர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும் யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதத்தை ஓட்டிக்கொண்டே வில்லையும், அம்பையும் குறி பார்த்துக் குறிதவறாமல் செலுத்தும் பயிற்சி, அஸ்திரப் பயிற்சி போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட்டன. இந்த அஸ்திரப் பயிற்சி என்பதை அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க முடியாது. அதற்குப் பல படிகள் தாண்டவேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் வேத அப்யாசம் தேவை. மனம் ஒருமைப் படுத்துதல் தேவை. அந்த அந்த தேவதைகளைக் கட்டுக்குள் கொண்டுவரத் தெரியவேண்டும். ஒவ்வொரு அஸ்திரமும் ஒவ்வொரு தேவதையின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்களைத் துதித்து மன ஒருமையுடன் பிரார்த்தனைகள் செய்து வேறு வழியில்லாமலே இந்த அஸ்திரப் பிரயோகம் செய்யப்படுகிறது என நிரூபித்துப் பின்னரே அஸ்திரப் பிரயோகம் செய்ய முடியும். இது எல்லாராலும் முடியாது. கெடுதலான நோக்கத்தோடு இதைக்கற்றுக்கொண்டால் சரியான சமயத்தில் அஸ்திரம் பலனைத் தராமல் ஏமாற்றிவிடும். எல்லாரும் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பதும் இல்லை. இங்கே துரோணரின் குருகுலத்தில் சொல்லிக் கொடுக்கப்படும். அதனாலேயே அஸ்திரப் பயிற்சிக்கென நாலாதிசைகளிலிருந்தும் மாணாக்கர்கள் குவிந்தனர்.

யுத்த சாலையை ஒட்டி ஒரு பெரிய மாளிகை காணப்பட்டது. துரோணருக்கு எனக் குரு வம்சத்து அரச குலத்தவர் கட்டிக் கொடுத்திருக்கும் மாளிகை அது. அங்கு தான் அவர் வசிக்கிறார். குரு வம்சத்து இளவரசர்களுக்கு குருவாக இருந்து வரும் துரோணர் பல போர்களில் குரு வம்சத்தைக் கட்டுப்படுத்தி வந்த பீஷ்மரோடு துணையாகச் சென்று வெற்றி தேவதையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். குருவம்சத்தினருக்கு துரோணரிடம் உள்ள பாசமும், நேசமும் அளவிடமுடியாதவை எனில் துரோணருக்கும் அவர்களிடம் நன்றி நிறையவே இருந்தது. துரோணர் ஒன்று சொல்லி அதைக் குருவம்சத்தினர் தட்டினார்கள் என்பது இல்லை. அன்று காலை வேளை……….

மாளிகைக்கு எதிரே திறந்த மைதானம். அங்கே ஓர் அடர்ந்த ஆலமரம். அதைச் சுற்றிப் போடப்பட்டிருந்த மேடையில் துரோணர் அமர்ந்திருந்தார். அவர் கண்கள் கங்கையையும் அதில் வேகமாய் ஓடும் பிரவாஹத்தையும் பார்த்த வண்ணம் இருந்தாலும், மனம் ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. நதியில் நீந்திக் கொண்டிருந்த பெரிய பெரிய மீன்களுக்கும், ஆமைகளுக்கும் துரோணர் உணவளித்த வண்ணம் அமர்ந்திருந்தார். இந்த வேலையை இயந்திரத் தனமாக அவர் கைகள் செய்தன. ஆனால் மனமோ……. இந்த இடம் தான் துரோணருக்குப் பிடித்தமான இடம். இங்கே அமர்ந்த வண்ணம் தான் அவர் தன் திட்டங்களைப் போடுவார்; மாணாக்கர்களுக்கு உத்தரவிடுவார். சீடர்களைக் கண்காணிப்பார். அந்தச் சமயம் மீன்களுக்கு உணவிடுவது என்னும் ஒரு சாக்கைத் தவிர வேறெதையும் நினைக்க மாட்டார். இப்போதும் அப்படித்தான். இதோ துரோணர். அறிமுகம் செய்து கொள்ளலாமா?

மற்ற பிராமணர்களைப் போல் அல்லாமல் இவர் பட்டுத் துணியில் உடுத்தி இருக்கிறாரே! ஆச்சரியம் தான்! ஆனால் எல்லா அந்தண குருக்களையும் போல் தலையைத் தூக்கிக் கட்டியிருக்கிறார். வேறெந்த நகைகளையும் போடவில்லை. அவர் அணிந்திருப்பது பட்டுத் துணியானாலும் அமர்ந்திருப்பது புலித்தோலில். பரசுராமரின் சீடர் என்பதை நினைவு படுத்திக்கொள்ளும் எண்ணமோ என்னவோ புலித்தோலில் அமர்ந்திருந்தார். பரசுராமர் இடையிலேயே புலித்தோலை அணிந்திருப்பார். இவர் அதில் அமர்ந்திருந்தார். அதோடு பரசுராமரை விட்டுக் கோடரி எப்போதும் பிரியாமல் இருந்ததைப் போலவே இவரும் தன்னருகே ஒரு வில்லையும், அம்புகளையும் வைத்திருந்தார். கரிய தாடியும், கருப்பான தலைக்குடுமியும் நன்கு எண்ணெய் பூசிச் சீவப் பட்டு ஒழுங்காக எடுத்துக் கட்டப்பட்டிருந்தது. அவருடைய தீர்க்கமான நாசியும், ஸ்திரமாக, அவரின் உறுதியான மனதைக் காட்டும் மெல்லிய உதடுகளும் அவருடைய உறுதியைக் காட்டின. கண்களோ சின்னஞ்சிறியனவாக இருந்தன. என்றாலும் அவருடைய மன உறுதியும், திடமான மனதும் அந்தக் கண்களின் வழியே தெரிய வந்தது எனச் சொன்னால் மிகையாகாது. ஒளிவீசிய கண்களைப் பார்த்தால் தீயை உமிழ்கின்றதோ என்னும் வண்ணம் செக்கச் சிவந்து காட்சி அளித்தன. துரோணர் மனம் பின்னால் போனது. கடந்த காலம் அவர் கண் முன்னே விரிந்தது.

பரத்வாஜ ரிஷியின் குமாரர் துரோணர். பரத்வாஜர் ஞானமும், அறிவும் நிரம்பிய ரிஷி. அவரிடம் குருகுல வாசம் செய்ய எங்கெங்கிருந்தோ மாணாக்கர்கள் வந்தனர். ஒரு துறவி போலவே வாழ்ந்து வந்தார் பாரத்வாஜர். அவர் ஆசிரமத்தில் எப்போதுமே தேவைக்கு மேல் எந்த உணவுப் பொருளும் இருக்காது. இருக்கும் உணவுப் பொருளும் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கே போதுமானவையாக இருக்கும். பிரம்மத்தை அறிந்த, பிரம்மத்தைப்போதிக்கும் ஒரு பிராமணன் எப்படி வாழவேண்டும் எனச் சொல்லி இருக்கிறதோ அப்படியே வாழ்ந்து வந்தார் பாரத்வாஜர். தேவைக்கு மேல் எதையும் சேமித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் அவரிடம் இல்லை.

Monday, February 27, 2012

தன்னுள்ளே தெளிவும், சலிப்பிலா மகிழ்ச்சியும்!

“என்ன? ஹஸ்தினாபுரம் செல்லப் போகிறாயா? கண்ணா, அங்கே உனக்கு நல்வரவு இருக்காது. துரியோதனன் உன் வருகையை விரும்ப மாட்டான்.” சாந்தீபனி கூறியதைக் கேட்ட கண்ணன், “குருதேவரே, எனக்கு அங்கே கிடைக்கும் வரவேற்பை எண்ணிக்கொண்டெல்லாம் நான் அங்கே செல்லவில்லை. யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோரு நகுல, சகாதேவருடன் அங்கிருந்திருந்தால் நீதியும், நேர்மையும், தர்மமும் அங்கே பீடுநடை போட்டுப் பிரகாசிக்கும். கோடி சூரியனைப் போல் தர்மதேவதை ஒளிர்வாள். ஆனால் இப்போதோ! குருவே, தர்மதேவதை என்னும் சூரியனை அதர்மம் என்னும் கிரஹணம் பிடித்திருக்கிறது. இதை நான்போய்த் தான் சரியாக்கவேண்டும்.” கண்ணன் குரலில் தீர்மானம் தெரிந்தது. திடீரென ஒரு இறுக்கமும் பதட்டமும் நிறைந்த சூழ்நிலை தென்பட்டது. அனைவர் மனதிலும் ஒரு கலக்கம். கண்ணன் அனைவரையும் உள்ளே அழைத்தான்.

“இன்னும் இரு நாட்களில் நான் ஹஸ்தினாபுரம் செல்லப் போகிறேன். தேவையான பரிவாரங்களோடும், 60 ரத சாரதிகளோடும் சாத்யகி பிரயாண ஏற்பாடுகளைக் கவனிப்பான். அவனும் என்னோடு வருகிறான். கூடியவரையில் குறுக்கு வழியில் அது பாலைவனங்களைக் கடந்து செல்லும்படியாய் இருந்தாலும் பரவாயில்லை; குறுக்கு வழியில் விரைவில் ஹஸ்தினாபுரத்தை அடைய விரும்புகிறேன்.”

“கண்ணா, ஏன் இத்தனை அவசரம்?” சாந்தீபனி கண்ணனைக் கேட்டார்.

“குருவே, நான் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் பாண்டவர்களுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆசாரியரே, என் உள்மனம் எப்போதும் எனக்குச் சரியான பாதையையே காட்டும். அது இப்போது பாண்டவர்களை ஆபத்து நெருங்குவதாகச் சொல்கிறது. ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கப் போகிறது. அது நடைபெறுவதற்கு முன்னர் நான் அங்கே போக வேண்டும்.” கண்ணன் தீர்மானம் அவன் குரலில் தெரிந்தது. அவன் கண்கள் இப்போது ஜொலித்தன. அவன் அமைதியாகக் காணப்பட்டாலும் உள்ளூரப் பரபரப்புடன் இருப்பது அவன் புருவங்களை நெரித்த விதத்திலும், ஆழ்ந்த யோசனை தென்படும் கண்களும் கூறின. தன்னையறியாமல் அரசனைப் போன்றதொரு ஒரு கம்பீரம் அவனிடம் வந்து குடிகொண்டது. “குருவே, நான் உங்களிடம் அளித்த செய்தியை துருபதனுக்கு இப்போது அனுப்ப வேண்டாம். ஷ்வேதகேது என்னோடு வரட்டும். முற்றிலும் மாறுபட்ட மற்றொரு செய்தியுடன் நான் அவனை காம்பில்யத்திற்கு அனுப்பி வைக்கிறேன்.”

“கண்ணா, அந்தச் செய்தி என்னவென நான் அறியலாமா?” சாந்தீபனி கேட்டார்.

“குருவே, இதோ!” கண்ணன் ஷ்வேதகேதுவைப் பார்த்துத் திரும்பி, “ஷ்வேதகேது, இதோ என் செய்தி! “ துருபத மன்னரே, உங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். உங்கள் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க நீங்கள் நினைப்பது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நீங்கள் அனுமதித்தால் நான் நேரே காம்பில்யம் வந்து உங்களுடன் இது குறித்துத் தனிமையில் சில ஆலோசனைகளைச் செய்ய விரும்புகிறேன். அதன் பின்னரே, என் தகப்பனார் வசுதேவரிடமோ, பாட்டனார் உக்ரசேனரிடமோ இது குறித்து நான் எதுவும் கூற இயலும்.”

கண்ணனின் இந்தச் செய்தியைக் கேட்ட சாந்தீபனிக்குத் தூக்கி வாரிப் போட்டது. எந்நேரமும் தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்வித்துக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாய்க் கழித்துக் கொண்டிருந்த இந்த இளைஞனை இப்போது பார்த்தால் என் மாணாக்கன் என என்னாலேயே நம்பமுடியவில்லையே! இவன் முகத்தின் கம்பீரமும், கண்களின் கருணையும், தீர்க்காலோசனையும், தர்மத்தைக் காப்பதில் உள்ள உறுதியும், நம்பிக்கையும், தீர்மானமாக முடிவெடுக்கும் தன்மையும், சாதாரண மனிதனாக நினைக்கத் தோன்றவில்லை. அந்த சாக்ஷாத் பரவாசுதேவனே இங்கே நேரில் வந்துவிட்டானோ எனத் தோன்றுகிறது. கை எடுத்து வணங்கித் தொழும் எண்ணம் வருகிறது.


“கண்ணா, குழந்தாய், சூழ்நிலைகளை நன்கு கவனித்து ஆலோசித்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதில் நீ வல்லவன்; உன் முடிவில் எப்போதும் பிழை இருக்காது. இந்த மாதிரியானதொரு முடிவை நீ ஏன் எடுத்தாய் என்பதை நான் உன்னிடம் கேட்கப் போவதில்லை. விளைவுகளை நீ அறியாமல் இருக்கமாட்டாய். குழந்தாய்! உன் வாழ்க்கையில் வெளிச்சம் காட்டிக் கூட வரும் தர்மம் இப்படியும் வந்தால்! அதன் மூலம் தர்மம் நிலை நாட்டப்பட்டால். குழந்தாய்! நீ தர்மத்தின் பாதையில் தான் செல்கிறாய். உனக்கு அது புரிகிறது. நான் குறுக்கிட மாட்டேன். உனக்கு மங்களம். என்னுடைய பரிபூரண ஆசிகள் உனக்கு உண்டு. நீ எடுக்கும் எல்லாக் காரியங்களுமே நன்மையிலேயே முடியும். என் ஆசிகள் உன்னைத் தொடர்ந்து வரும். சென்று வா!”


ஹஸ்தினாபுரத்தில் துரோணரின் குருகுலம்; அங்கே யுத்தப்பயிற்சிகள் அளிக்கும் யுத்தசாலை! பாரத தேசமெங்கிலும் உள்ள க்ஷத்திரிய இளைஞர்கள் போர்ப்பயிற்சி மேற்கொள்ள துரோணரைத் தேடி வந்து கொண்டிருந்தார்கள். துரோணருக்கும் ஓய்வு ஒழிச்சல் இல்லை; குரு வம்சத்தினரின் முக்கியமான ஆசாரியராக இருந்தார். குரு வம்சத்தினர் அவரை மிகவும் போற்றினார்கள். வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தனர். துரோணரின் மனம் பெருமிதத்தில் விம்மியது. அதே கணம் ஒரு மின்னல் போல் தோன்றியது துருபதன் குறித்த எண்ணமும். துரோணர் மனம் சுருங்கியது. அவர்.....................

Tuesday, February 21, 2012

தர்மம் பாரினில் தழைத்திட வேண்டும்

ஷ்வேதகேது கண்ணனைக்கண்டதுமே அவனைக் கட்டித்தழுவிக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தினான். பின்னர் ஆசாரியரின் எதிரே கண்ணனையும் அமரச் சொல்லி, தானும் அமர்ந்தான். சாந்தீபனி ஷ்வேதகேதுவிடம் பாண்டவர்கள் வெளியேற்றப்பட்ட விபரத்தைக் கண்ணனிடம் விளக்கிச் சொல்லும்படி கூறினார். அதன் மேல் ஷ்வேதகேது கூறியதாவது: ஹஸ்தினாபுரத்தில் மூன்று ஆயுதப் பயிற்சிக்கான மாணவர்களைத் தன் குருகுலத்தில் சேர்க்கவேண்டி அதற்கான சோதனைக்குச் சென்றான் ஷ்வேதகேது. அங்கே உத்தவனைச் சந்தித்தான். அவன் ஐந்து சகோதரர்களோடு வாரனவதத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். மேலும் ஷ்வேதகேது கூறியதாவது: “கண்ணா, மன்னன் திருதராஷ்டிரனுக்கு துரியோதனனை அடக்க முடியவில்லை. அவன் பிடிவாதம் தாங்க முடியாமல் வேறு வழியும் தெரியாமல் திருதராஷ்டிரன் யுவராஜா யுதிஷ்டிரனை யுவராஜப் பதவியை விட்டு விலகச் சொல்லி ஆணையிட்டான். மகன் மேலுள்ள பாசம் அந்தக் குருட்டுக் கண்களை மட்டுமல்லாமல் அவன் இதயத்தையும், புத்தியையும் குருடாக்கிவிட்டது. யுதிஷ்டிரனை அவன் தாயையும், மற்ற நாலு தம்பியரையும் அழைத்துக்கொண்டு வாரணாவதம் சென்று வாழும்படியும் ஆணையிட்டிருக்கிறான். முதலில் இந்த விஷயம் ஹஸ்தினாபுரத்து மக்களுக்குத் தெரியாமல் இருந்தது; ஆனால் எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்?”

“வேறு வழியில்லாமலும், பாண்டவர்கள் வெளியேறுகையிலும் மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அனைவரும் சொல்லவொண்ணா துக்கத்தில் ஆழ்ந்து போயினர். குருவம்சத்தின் மற்ற வாரிசுகளும், மற்றப் பெரியோர்களும், சிறியோர்களும் இதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். அரண்மனைப் பெண்டிர் பகிரங்கமாகவே புலம்பி அழுதனர். ஐந்து சகோதரர்களும், ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்கையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் அவர்களைத் தொடர்ந்து கண்களில் கண்ணீரோடு ஒரு யோஜனை தூரம் சென்று பிரியாவிடை கொடுத்தனர். “

கிருஷ்ணன் முகத்தில் கவலை மட்டுமல்லாமல் தீவிர யோசனையும் தெரிந்தது. “ஷ்வேதகேது, எனக்கு ஒரு சந்தேகம். பிதாமகர் பீஷ்மரை எதிர்த்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்தின் அரசன் கூட எதுவும் செய்ய முடியாது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். யுதிஷ்டிரனை யுவராஜா பதவிக்கு பட்டாபிஷேஹம் செய்து வைத்ததும் அவருடைய ஆலோசனையின் பேரில் எனச் சொல்வார்கள். இப்போது இப்படி ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்கையில் அவர் எவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தார்?”

“கண்ணா, ஹஸ்தினாபுரத்தில் நான் இருந்தது சிறிது நேரமே. அந்த நேரத்துக்குள்ளாக என்னால் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் நான் பார்த்த சிலர் கூறியதன் பேரில் மன்னன் திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனுக்கு இந்த யோசனையைக் கூறியதுமே யுதிஷ்டிரன் எந்தவிதத் தடங்கலும் சொல்லாமல் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்கின்றனரே. அவன் தம்பியருக்கு சம்மதம் இல்லையாம்; ஆனாலும் மூத்த அண்ணனை எதிர்க்கக் கூடாது எனப்பேசாமல் இருந்துவிட்டனராம்.” ஷ்வேதகேது கூறினான்.

பல்வேறு விதமான எண்ணங்கள் மோதக் கண்ணன் அவற்றில் மூழ்கினான். கண்ணன் முகத்தைப் பார்த்த சாந்தீபனி, “கண்ணா, இப்போது நீ ஹஸ்தினாபுரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை; அதை விடவும் நீ காம்பில்யத்திற்குச் செல்லலாம். நான் ஷ்வேதகேதுவிடம் நீ கூறிய செய்தியைக் கூறி அனுப்பி வைக்கிறேன். அதன் பின்னர் நீ காம்பில்யம் செல்வாய். கண்ணா, உன் அத்தை குமாரர்களான ஐந்து சகோதரர்களும் குரு வம்சத்தின் ரத்தினங்கள்; அனைவராலும் நேசிக்கப்பட்டனர். இப்போது அவர்களில் ஒருவர் யுவராஜாவாக இல்லாமல் துரியோதனன் யுவராஜாவாக இருக்கையில் நீ அங்கு செல்வது சரியாக இருக்காது. குழந்தாய், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதுவும் நன்மைக்காக இல்லை; மேலும் மோசமாக ஆவதற்கே மாறி இருக்கிறது. நீ இந்தச் சமயம் அங்கே செல்வது உனக்குத் தகுதியும் அல்ல.”

கண்ணன் முகம் உறைந்து காணப்பட்டது. சிறு குழந்தையைப் போல் சிரித்துக்கொண்டு காணப்படும் வழக்கமான சிரிப்பைக் காணோம். அவன் கண்களின் கருமணிகளில் எப்போதும், குறும்பும், மகிழ்வோடும் காணப்படும். இப்போதோ உணர்ச்சிகளற்ற ஆழமான கிணற்றுக்குள் காணப்படும் கற்களைப் போல் காணப்பட்டன. முகத்திலே கண்களின் ஆழம் அளவிடமுடியாத ஆழத்துக்குப் போய்விட்டாற்போல் காணப்பட்டன. “குருதேவா,” ரகசியம் பேசுபவனைப் போல் வெகு ஆழத்தில் கீழே விழுந்து கிடப்பவன் போல் கிருஷ்ணன் குரல் மெல்லக் கேட்டது. “குருதேவா, காலம் எனக்கு இடப்போகும் முக்கியமான வேலையைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த வேலையும் வந்துவிட்டது; வேளையும் வந்துவிட்டது. இது எனக்கிடப்பட்ட வேலை; நான் தான் செய்யவேண்டும். நான் ஹஸ்தினாபுரம் செல்கிறேன்.”

"கண்ணா, ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன் உன்னை வரவேற்க மாட்டான். வேண்டாம் செல்லாதே!"

"ஆசாரியரே, துரியோதனனின் வரவேற்பை எதிர்பார்த்துக்கொண்டு நான் அங்கே செல்லவில்லை. யுதிஷ்டிரனும், பீமனும், அர்ஜுனனும், நகுல, சகாதேவர்களோடு ஹஸ்தினாபுரத்தில் இருந்தவரைக்கும் தர்மம் உயரத்தில் விண்ணை விட உயரமாக சூரியனைப் போல் பிரகாசித்துக்கொண்டிருந்தது. இப்போது அதற்கு கிரஹணம் பீடித்துவிட்டது. ஆகவே நான் அங்கே தான் இப்போது இருந்தாகவேண்டும். " கண்ணன் குரலில் தெரிந்த கடினம் சூழ்நிலை எவ்வளவு கடினம் என்பதைச் சூசகமாகத் தெரிவித்தது.

சட்டெனச் சூழ்நிலையில் ஒரு விவரிக்கவொண்ணாப் பதட்டம் சூழ்ந்தது.

Sunday, February 19, 2012

மன்னவன் கண்ணன் நாளுங் கவலையில் மூழ்கினோன்!

தன் மாணாக்கனைப் பெருமையுடன் பார்த்த சாந்தீபனி இத்தகையதொரு மனநிலை ஆர்யவர்த்தத்தில் அனைத்து அரசர்களிடையேயும் காணப்பட்டால் நாட்டில் போரே நிலவாதே! என்ற எண்ணம் தோன்றியது. “கண்ணா, நான் உன்னை நன்கறிவேன். நீ இத்தகைய ஆசைகளுக்கெல்லாம் அவ்வளவு எளிதில் மசிந்து கொடுக்கமாட்டாய் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன். அதையே துருபதனிடம் ஏற்கெனவே சொல்லியும் விட்டேன். ஆனாலும் அவனுடைய வற்புறுத்தல் தாங்காமலேயே நான் அவன் செய்தியைத் தாங்கி வந்து உன்னிடம் கூறி உள்ளேன். கிருஷ்ணா, துருபதனிடம் நான் கண்ணனை அவ்வளவு எளிதில் வழிக்குக்கொண்டு வரமுடியாது என்பதையும் கூறினேன். உனக்கான, உன் வாழ்க்கைக்கான முடிவை மற்றவர் உனக்காக எடுக்க நீ அனுமதிக்க மாட்டாய் என்பதையும் கூறி விட்டேன்.”

“ஆஹா, குருதேவரே, இது என்ன! என்னைப் பற்றி இவ்வளவு மோசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறீர்?” கண்ணன் கண்கள் குறும்பு கூத்தாட இதை மொழிந்ததும், ஒருவரை ஒருவர் அன்பு ததும்ப நோக்கிக் கொண்ட குருவுக்கும், சீடனுக்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. “என் அருமைச் சீடனே, உன்னைப் போன்ற பல சீடர்களை நான் பெறும்படி அந்த மஹாதேவன் எனக்கு அருள் செய்ய வேண்டும். அது போகட்டும் அப்பனே, துருபதனுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?”

“குருதேவரே, துருபதனுக்கு என்னுடைய தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு இத்தகைய மாபெரும் பரிசை எனக்குக் கொடுக்க முன்வந்ததற்கு நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதைத் தெரிவியுங்கள். அதோடு யாதவர்கள் பிரபாஸ க்ஷேத்திரத்தில் மன அமைதியோடும், மகிழ்வோடும், குறைவில்லாச் செல்வத்தோடும் நிம்மதியாக வாழ்வதாகவும், இங்கிருந்து கிளம்பும் எண்ணம் அவர்களில் எவருக்கும் இல்லை என்றும் சொல்லுங்கள். துருபதனால் எனக்கு அளிக்கப்படும் மாபெரும் சேவையை நிறைவேற்ற நான் துளியும் தகுதியற்றவன் என்பதையும் எடுத்துக் கூறுங்கள். “

“கண்ணா, துருபதனின் வேண்டுகோளை அவ்வளவு எளிதில் நீ நிராகரிக்க இயலாது; அதன் விளைவுகளச் சிறிதானும் சிந்தித்துப் பார்த்தாயா?” ஆசாரியரின் முகம் கல்லைப் போன்று உணர்ச்சியற்றுக் காணப்பட்டது. கண்ணன் திடுக்கிட்டான். “சொல்லுங்கள் ஆசாரியரே!” என்றான். “குழந்தாய், துருபதனின் வேண்டுகோளை நீ நிராகரித்தால் அவன் கோபம் மட்டுமில்லாமல் வெறுப்பும் சேர்ந்து கொண்டு அவனை எந்த நிலைக்குக்கொண்டு போகும் எனச் சொல்ல முடியவில்லை; அவ்வளவு ஏன்? திரெளபதியை ஜராசந்தனுக்குக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டான். அதன் மூலம் குரு வம்சத்தினரின் மேல் படையெடுக்கவும் தயங்க மாட்டான். குருவம்சத்தினர் மேல் படையெடுப்பதன் மூலம் துரோணரின் பகையையும் தீர்த்துக்கொள்ள முடியும். அதன் பின்னர் இந்த ஆர்யவர்த்தத்தில் அமைதியோ, சத்தியமோ, தர்மமோ இருக்க முடியாது.”

“உண்மைதான் ஆசாரியரே! இந்த மாபெரும் கேடு நிகழாமல் தடுக்கப்படவேண்டும்.” கண்ணன் குரலிலும் கவலை தெரிந்தது. “துருபதனின் வெறுப்பு அவனை எவ்வளவு மோசமானவற்றையும் சிந்திக்கச் செய்வதோடு, செய்யவும் சொல்லும்.” என்று சாந்தீபனி கூற, “துரோணர் மட்டும் சாமானியரா?” எனக்கிருஷ்ணன் கூற குருவும், சீடனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கிருஷ்ணன்,, “இதை நன்கு ஆலோசித்துத் தெளியவேண்டும் குருதேவரே!” எனக் கூற அர்த்தமுள்ள பார்வை ஒன்றை அவன் மீது வீசினார் சாந்தீபனி. ஒருவருக்கொருவர் வாய்விட்டுப்பேசாமலே மற்றவர் மனதில் உள்ளவற்றைப் புரிந்து கொண்டனர்.

“ஆசாரியரே, என் அத்தை வழி சகோதரர்களைப் பார்க்க வேண்டி நான் ஹஸ்தினாபுரம் செல்லப் போகிறேன். அங்கிருந்து காம்பில்யம் வந்து துருபதனை நேரில் சந்திப்பதாய்க் கூறிவிடுங்கள். “ கண்ணன் முடிப்பதற்குள்ளாக சாந்தீபனி, “என்ன, ஹஸ்தினாபுரத்துக்குப் போகப் போகிறாயா? கண்ணா, வேண்டாம், வேண்டாம்; இது தக்க சமயம் அல்ல; இப்போது நீ அங்கே போகவேண்டாம். உனக்கு விஷயமே தெரியாதா? யுதிஷ்டிரன் இப்போது யுவராஜா அல்ல.”

இப்போது கண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. எழுந்தே விட்டான். “என்ன?” என்றான் ஆச்சரியத்துடன். “ஆம், அப்பா, ஷ்வேதகேது அனைத்தையும் நேரில் பார்த்திருக்கிறான். பாண்டவர்கள் ஐவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டனர். திருதராஷ்டிரன் அவர்களை நாடு கடத்திவிட்டான். ஷ்வேதகேதுவுக்கு மேலும் விஷயங்கள் தெரிந்திருக்கக் கூடும். நான் முழுதும் கேட்டுக்கொள்ள வில்லை. இப்போது தான் அவன் பிருகு தீர்த்தத்தில் இருந்து அவன் திரும்பி வந்துள்ளான். இதோ அவனை அழைக்கிறேன். நீயே நேரில் கேட்டுக்கொள்.” சாந்தீபனி தம் கைகளைத் தட்ட ஒரு மாணாக்கன் எட்டிப்பார்த்தான். ஷ்வேதகேதுவைத் தாம் அழைப்பதாகக் கூறச் சொல்ல அவ்வாறே அவனும் வந்து சேர்ந்தான். கண்ணனைக் கண்டதும் ஆரத் தழுவிக் கொண்டான்.

அவனிடம் சாந்தீபனி ஹஸ்தினாபுரத்தில் நடந்த விஷயங்களைக் குறித்துக் கண்ணனுக்கு விபரமாகச் சொல்லும்படிக் கூற அவனும் பேச ஆரம்பித்தான். “பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.”

Saturday, February 18, 2012

எண்ணம், விசாரம், எதுவும் அவன் பொறுப்பு!

“ஆசாரியரே! தங்களால் அளிக்கப்படும் வேலைகளைச் செய்ய நான் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பேன்; அவை ருசிகரமானவை; மனதை மயக்கும் வல்லமை கொண்டவை. இப்போது நீங்கள் அளிக்கும் செய்தியில் இருந்து மிகவும் விரும்பக்கூடிய ஒன்றாகவும், நான் ஒரு நல்ல மருமகனாக இருப்பேன் என்பதையும் சொல்கிறது. ஆனால் ஒரு மாபெரும் அரசனுக்கு, சக்கரவர்த்தியின் மருமகனாக ஆக ஏற்றத் தகுதி வாய்ந்தவனா நான் என்பது கேள்விக்குரியது.”

“ஆசாரியரே, அனைவருமே பழைய விஷயங்களை மறந்துவிட்டனர் போலும். ஆனாலும் நான் மறக்கவில்லை ஆசாரியரே. இதே அரசர்கள் என்னுடன் சரிசமமாக அமரக் கூட மறுத்திருக்கின்றனர். என்னை பீஷ்மகனின் மகளின் சுயம்வரத்திற்கு அழைக்கக் கூடாது என்று ஒற்றுமையாகக் கூறியதோடு நானாகச் சென்றபோதும் எனக்குச் சரியான மரியாதை கொடுக்காததோடு , “கோபாலன்” “இடைச் சிறுவன்” என்றே அழைத்திருக்கின்றனர். இன்று இப்படித் திடீரென எப்படி ஆசாரியரே!”

கண்ணன் குரலில் வருத்தமே இல்லை, கேலியாகவே பேசினான். சாந்தீபனியும் அந்தக் கேலியில் கலந்து கொண்டார். சிரித்த வண்ணம், “துருபதன் உனக்கு உதவி செய்வதாக மட்டும் சொல்லவில்லை. அவனும் உன்னிடம் உதவி ஒன்றை நாடியே உன்னை மருமகனாக ஏற்கக் கோருகிறான்.”

“ஆஹா, எந்த விதத்தில் பாஞ்சாலச் சக்கரவரத்தி துருபதனுக்கு நான் உதவி செய்ய முடியும்?”

“கிருஷ்ணா! ஆம், ஒரு வழி இருக்கிறது என்பது துருபதன் கருத்து.” சற்றே நிறுத்திய சாந்தீபனி மேலும் கூறினார்:” துருபதனும், துரோணரும் குருகுலத்து சகோதரர்கள் என்பதும், துரோணரால் துருபதன் அவமானப்படுத்தப்பட்ட கதையையும் நீ நன்கறிந்திருப்பாய். துரோணர் குருவம்சத்தினரின் ராணுவத்தை ஆட்டி வைக்கும் வல்லமை கொண்ட மாபெரும் தளபதியாக இருக்கிறார். யுத்தகளத்தில் அவரின் வலிமையும், புத்திகூர்மையும் அளவிடமுடியாத ஒன்று என்பதையும் அறிவாய். அப்படிப்பட்ட துரோணரால் பாஞ்சால தேசத்தின் ஒரு பகுதியை துருபதன் இழக்க நேரிட்டிருக்கிறது. பாஞ்சாலத்தின் முக்கியப் பகுதியான கங்கையின் வடபாகத்தை துரோணரிடம் இழந்ததில் இருந்து துருபதன் வாழ்வதே துரோணரைப் பழிவாங்குவதற்காகத்தான். தன்னை இழிவு செய்த துரோணரை எப்படியேனும் பழிவாங்க வேண்டும் என்பதே அவன் வாழ்க்கையில் லக்ஷியமாய்க் கொண்டிருக்கிறான். அதற்கு அவன் உன் உதவியை எதிர்பார்க்கிறான்.”

கிருஷ்ணனுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. “இதற்கு எனக்கு திரெளபதியைச் சம்பளமாகத் தருகின்றார்களா? அல்லது செய்யப் போகும் வேலைக்கு முன்பணமா?”

சாந்தீபனி சிரித்துக்கொண்டே ஆட்காட்டி விரலை நீட்டிக் கண்ணனை எச்சரிக்கும் பாவனையில் பார்த்துச் சிரித்தார். “கண்ணா, இது ஒரு முட்டாள் தனமான யோசனை என்றோ வேடிக்கைப் பேச்சு என்றோ எண்ணாதே. திரெளபதியை நான் நன்கறிவேன். அவளை நன்கறியாமல் அவளைக்குறித்துப் பேசுவது நியாயம் இல்லை. உயர்ந்த குடியில் பிறந்த உயர்ந்த மனம் கொண்ட பெண் அவள். அவள் தந்தையிடம் தீவிரமான பக்தியைச் செலுத்துகிறாள். தன் வாழ்க்கையையே அவருக்காகச் சமர்ப்பணம் செய்கிறாள். இந்த ஆரியவர்த்தத்திலேயே சிறந்ததொரு போர் வீரனை, வில்லாளியை மணக்க விரும்புகிறாள். அவனை மணப்பதன் மூலம் தன் தகப்பனின் சபதத்தை நிறைவேற்ற விரும்புகிறாள். கண்ணா, எல்லாப் பெண்களும் தகப்பனிடம் அன்பு செலுத்துவார்கள்; ஆனால் யாருமே திரெளபதியைப் போல் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்ய மாட்டார்கள். இங்கே திரெளபதி அப்படித் தான் செய்கிறாள்.”

“ஆசாரியரே, ஆனால் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தனர்? இந்த ஆரியவர்த்தத்தில் என்னை விட்டால் வேறொரு வீரனே கிடைக்கவில்லையா? அவர்களில் எவனையாவது தேர்ந்தெடுக்கட்டும்; அவள் தகப்பனின் எண்ணம்/சபதம் நிறைவேறும்.” கண்ணன் மீண்டும் சிரித்தான்.

“அவள் நீ தான் மிகச் சிறந்தவன் என நினைக்கிறாள்; அல்லது அவளால் உன்னைத் தான் தேர்ந்தெடுக்க முடிந்ததோ என்னவொ!” சாந்தீபனி மேலும் தொடர்ந்தார். “இப்போது இருக்கும் அரசகுமாரிகளிடையே திரெளபதியைப் போல் சிறந்தவர்கள் எவரும் இருக்க முடியாது.”

கண்ணன் முகத்தில் தீவிர பாவம் தெரிந்தது. “ம்ம்ம்ம்ம், ஆசாரியரே, துருபதனின் கோரிக்கை பின்னர் இதைத் தான் தெரிவிக்கிறது. ம்ம்ம்ம்ம்?? ஒரு உறுதி படைத்த பெண்ணை நான் மணக்கவேண்டும். அதன் பின்னர் துரோணரோடு போர் புரியவேண்டும். இந்தப்போரில் துரோணரோடு மட்டுமே நான் போர் செய்யும்படியாக இராது; அவருடைய சீடர்களோடு போர் புரிய வேண்டும். அவர்களில் குரு வம்சத்து இளவரசர்களும் இருப்பார்கள். திரெளபதியின் தந்தையின் வெற்றியை இவ்வகையில் நான் உறுதி செய்ய வேண்டும். ஐயா, இங்கே ஒரு தன்மானம் நிறைந்த யாதவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இந்நிலையில் இருந்து கீழிறங்கிப் பாஞ்சால மன்னனுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசன் நிலைக்கு இறங்க வேண்டும். அதோடு இந்த அழகிய பிரபாஸ க்ஷேத்திரத்தை விட்டுவிட்டு ஜராசந்தனின் கொடூரத்தினால் பாழ்பட்டுக் கொடிய வனாந்தரமாக மாறி இருக்கும் ஒரு பிரதேசத்தைச் செப்பனிட்டு வாழ ஆரம்பிக்கவேண்டும். ஆஹா, என்ன ஒரு மனம் கவரும் வண்ணம் வேண்டுகோள் விடுத்திருக்கிறான் பாஞ்சால மன்னன்!

கண்ணன் மிகத் தெளிவாகவே பேசினான். எந்தவிதமான மாறுபட்ட மறைபொருளையும் காணமுடியவில்லை. உள்ளது உள்ளபடிக்கு அப்போதைய சூழ்நிலையை அலசினான்.

Wednesday, February 15, 2012

மன்னர் குலத்திடைப் பிறந்தவளை இவன் மருவ நிகழுமோ?

குருதேவரே, உங்கள் மேலான ஆசிகளாலேயே அனைத்துக் கடவுளரும் என் பக்கம் இருந்து எனக்கு உதவி செய்தனர். என்னிடம் அதீதக் கருணையும், அன்பும் காட்டி வருகின்றனர். உங்கள் ஆசிகள் இல்லையேல் என்னால் யாதவர்களை இவ்வளவு செளகரியமாகவும், வசதியாகவும் குடியமர்த்தி இருக்க இயலாது; அவர்களால் இவ்வளவு பணம்படைத்தவர்களாகவும் ஆகியிருக்க முடியாது.”

“கண்ணா, யாதவர்களைப் பணக்காரர்களாகவும், செல்வந்தர்களாகவும், அரசர்களாகவும் ஆக்குவதற்கென நீ பிறக்கவில்லை. எங்கு அதிக அளவில் பணம் இருக்குமோ அங்கு தர்மம் சரியாகச் செயல்பட இயலாது. தர்மமும், செல்வமும் ஒன்றாக இருக்க முடியாது.”

“குருதேவரே, அனைவரும் சொல்கின்றனர். நான் ஏதோ அதிமுக்கியதொரு காரியத்தை நிறைவேற்றப் பிறந்துள்ளேன் என்கின்றனர். நான் ஏன், எதற்காகப் பிறந்தேன் என எனக்குத் தெரியாது. தங்கள் கருணையாலும், தவ வலிமையாலும் அதை அறிந்து சொன்னீர்கள் எனில் நன்றி உடையேனாக இருப்பேன். நான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் தாங்களே தெரியப்படுத்துங்கள்.”

“கிருஷ்ணா, நான் மட்டும் அத்தனை தகுதி வாய்ந்தவனாக இருந்தால்!” பெருமூச்சு விட்டார் சாந்தீபனி. “ஆனால், வாசுதேவ கிருஷ்ணா! ஒரு விஷயம் நிச்சயமாய்ச் சொல்வேன். யாதவர்களின் நலனைக் கவனிக்க மட்டுமே நீ பிறக்கவில்லை; இந்தப் பரந்த உலகின் அனைத்து மக்களுக்காகவும், அவர்களை அதர்மத்தில் இருந்து நல்வழிப்படுத்தித் தருமத்தின் பால் அவர்களைச் செலுத்தவும் மட்டுமே நீ பிறந்திருக்கிறாய். தர்மத்தின் வழி தான் உன் வழி. இந்த அசாதாரணமான செயலை உன்னால் மட்டுமே நிறைவேற்ற முடியும். தர்மத்தை நிலைநாட்ட நீ ஒருவனே தகுதி வாய்ந்தவன்.”

“எனக்கு இடப்பட்ட, என்னால் இயன்ற அளவுக்கு வேலைகளை நான் கூடியவரையில் தர்மத்தின்பாற்பட்டே செய்து வருகிறேன் ஆசாரியரே! புதியதாக இன்றுவரை எதுவும் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வரவில்லை.”

“நல்லது மகனே. இதோ ஒரு வேலை. முக்கியமான ஒன்று. உன்னுடைய குருவான என் மூலம் வந்துள்ளது.” சாந்தீபனி தொடர்ந்தார். “ மகனே, உன்னுடைய குருவாகிய நான், பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் செய்தியைத் தாங்கி ஒரு தூதுவனாக வந்துள்ளேன். அவன் சார்பில் அவன் செய்தியை உன்னிடம் தெரிவிக்கிறேன். பாஞ்சால மன்னன் உன்னிடம் ஒரு மாபெரும் உதவியை எதிர்பார்க்கிறான். உன்னால் தான் அது இயலும் எனக் கருதுகிறான். அதைக் குறித்து உன்னிடம் நான் விவரமாகச் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னபிறகு, உனக்கு அதில் விருப்பமிருந்தால்………..” தயங்கினார் சாந்தீபனி. பின் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அப்பனே, உக்ரசேன ராஜாவிடமும், உன் தகப்பன் வசுதேவனிடமும் பேசி நான் சம்மதம் வாங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல்………..”

கண்ணன் இடைமறித்தான்.” ஆசாரியரே, குறுக்கிடுவதற்கு மன்னிக்கவேண்டும். பாஞ்சால மன்னனா செய்தியை அனுப்பியுள்ளான்?” கண்ணன் முகத்தில் உண்மையான திகைப்பும், ஆச்சரியமும். என்னவாக இருக்கும்?

கண்ணனை வெகுநேரம் காத்திருக்க விடாமல், சாந்தீபனி விஷயத்துக்கு நேரடியாக வந்தார். “கண்ணா, துருபதனின் ஒரே மகள் திரெளபதியை உனக்கு மணமுடிக்க துருபதன் விரும்புகிறான். “ கண்ணனின் முகத்தில் ஏதேனும் மாற்றங்கள் தென்படுகின்றனவா எனக் கூர்ந்து கவனித்த வண்ணம் தொடர்ந்தார் சாந்தீபனி. “துருபதன் மகள் கருநிறத்து அழகி கிருஷ்ணா, உண்மையிலேயே பேரழகு வாய்ந்தவள் மட்டுமல்லாமல், புத்திசாலியும், திறமைசாலியும் கூட. அவளுக்கு இவை எல்லாம் இயற்கையாக அமைந்த பரிசுகள் எனலாம். கண்ணா, நீ மட்டும் அவளை மணந்து கொண்டாயானால், ஶ்ரீதனமாக உனக்குப் பாஞ்சால நாட்டின் ஒரு பகுதி மட்டுமல்லாமல், ஜராசந்தனால் அழிக்கப்பட்டு நாசமாகிக் கிடக்கும் மதுராவையும் சீரமைத்து யாதவர்களுக்கு மறுவாழ்வும் கொடுக்கலாம். அதற்கு துருபதன் தேவையான உதவிகளைச் செய்வான்.”

Monday, February 13, 2012

கண்ணனோடு ஒரு ஆலோசனை!

அதோடு யுதிஷ்டிரன் யுவராஜாவாக ஆனது தனக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை என்பதை துரியோதனன் வெளிக்காட்டிக்கொண்டான். யுதிஷ்டிரன் மட்டுமில்லாமல் பாண்டுவின் புத்திரர்கள் ஐவரின் மேலும் அவனுக்குப் பொறாமை அதிகம் என்பதையும் வெளிப்படையாகவே சொன்னான். அதோடு தான் துவாரகைக்கு வந்ததன் நோக்கமே யாதவர்கள் திருதராஷ்டிரன் மகன்களான நூற்றுவர் பக்கமா? பாண்டுவின் மகன்களான் ஐவர் பக்கமா என்பதைத் தெளிவாக அறியவேண்டியே என்பதையும் ஒத்துக்கொண்டான். கிருஷ்ணனுக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை; என்றாலும் துரியோதனன் தன் பயிற்சியை முடித்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்ப ஒரு வருஷம் ஆகும் என்ற செய்தி அவனுக்கு உவப்பையே தந்தது; இந்த ஒரு வருஷத்தில் பாண்டவர்கள் தங்கள் நிலையை ஹஸ்தினாபுரத்தில் ஸ்திரப் படுத்திக்கொள்ளலாம். வலிமையைப் பெருக்கிக்கொள்ளலாம். கிருஷ்ணனுக்கு மனசுக்குள் உவகையும் கூட.

யுதிஷ்டிரன் தர்மத்தின் பாதையில் செல்லவே விரும்புவான்; அரச தர்மத்திலிருந்து சிறிதும் பிறழமாட்டான். அதோடு தன் தம்பிகள் நால்வரையும் தன் உயிரினும் மேலாகக் கருதுகிறான். அதே போல் அவன் தம்பிகளும் யுதிஷ்டிரன் சொன்ன சொல்லை மீறுவதில்லை. அவனுக்கு மிகவும் மரியாதை கொடுத்து நடந்து கொள்வார்கள். பாண்டவர்கள் ஐவரின் ஒற்றுமையும் வியக்கத்தக்க விதத்தில் இருந்தது. கடைசி இருவரான நகுலனும், சகாதேவனும் குந்தியின் புத்திரர்கள் இல்லை; மாத்ரியின் புத்திரர்கள் என்பதை எவரேனும் சொன்னால் தவிர யாரும் நம்பவே மாட்டார்கள். உடன் பிறந்த சகோதரர்களைப் போல அவ்வளவு ஒற்றுமையுடன் இருந்தனர். பீஷ்மபிதாமகரும் சரி, வேதவியாசரும் சரி பாண்டவர்களை மிகவும் உயர்வாகப் பேசியதோடு மனதளவிலும் அவர்களிடம் வைத்திருந்த நம்பிக்கையை வெளிக்காட்டினார்கள்.

யுதிஷ்டிரன் தலைமையில் அர்ஜுனன் துணையோடு பாண்டவர்கள் ஆர்யவர்த்தத்தில் தர்மராஜ்யம் ஸ்தாபிக்கப் போகின்றனர் என்பதில் கண்ணன் மாறாத நம்பிக்கை கொண்டிருந்தான். ஆனால் துரியோதனன் தன் பயிற்சியை முடித்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் போனதிலிருந்து கண்ணனுக்குக் கிடைத்த செய்திகள் மனதில் கவலையை ஏற்படுத்தியது. பாண்டவர்கள் அரசாளுவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்பதும் புரிய வந்தது கிருஷ்ணனுக்கு. ஆகவே அவன் தானும் வடக்கே சென்று ஹஸ்தினாபுரத்தின் தன் அத்தை வழி சகோதரர்கள் ஆன பாண்டவர்களுக்குத் துணையும்,உதவியும் செய்ய விரும்பினான். ஆர்யவர்த்தத்தின் பெரிய அரசர்களில் எவருடைய உதவியும், கூட்டும் பாண்டவர்களுக்குக் கிடைக்கலாம் எனவும் நம்பினான். சில மாதங்கள் முன்னர் யுதிஷ்டிரன் கிருஷ்ணனுக்கு ஹஸ்தினாபுரம் வருவதற்கு அழைப்பு அனுப்பினான். கிருஷ்ணன் தன் வழக்கப்படி உத்தவனை முதலில் அனுப்பி வைத்தான். அதன்படி உத்தவன் ஹஸ்தினாபுரம் சென்றிருந்தான்.

சாந்தீபனியின் அழைப்பின் பேரில் கிருஷ்ணன் கர்காசாரியாரின் ஆசிரமத்திற்கு மதிய உணவு முடிந்ததும் சென்றான். சாந்தீபனி அங்கே தான் தங்கி இருந்தார். ஒரு ஆலமரத்தடியில் சீடர்கள் புடைசூழ மான் தோலை விரித்துக்கொண்டு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கண்ணனைக் கண்ட அந்தச் சீடர்கள் வாய் திறந்து யாரும் எதுவும் சொல்லாமலேயே இருவரையும் தனியே விட்டு நகர்ந்தனர். அந்த நேரத்தின், அந்தக் குறிப்பிட்ட சம்பாஷணையின் முக்கியத்துவத்தை அவர்களும் அறிந்திருந்தனர் போலும். சாந்தீபனி நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட நினைத்தார். கண்ணனைக் கண்ட அவர் கண்களில் தெரிந்த பாசமும், அன்பும், அவர் குரலிலும் தெரிய, யாதவர்கள் அனைவரும் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்களா என விசாரித்தார். கண்ணன் அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் அவனுக்குத் திருப்தி தானே எனவும் கேட்டுக் கொண்டார். இறைவன் அருளால் தான் மேற்கொண்ட அந்தக் காரியம் நன்மையாகவும், திருப்தியாகவும் முடிந்தது எனச் சொன்ன கண்ணன் குருநாதர் ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கூறப் போகிறார் என்பதையும் உணர்ந்து கொண்டான்.