Tuesday, February 28, 2012

குரு வம்சத்தினரின் ஆசாரியர் துரோணர் பராக்! பராக்!!!!

ஹஸ்தினாபுரம்……… ஆசாரிய துரோணரின் குருகுலம் கங்கைக்கரையில் மிகப் பெரிய அளவிலான நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் மாணாக்கர்களுக்கு வேத அத்தியயனம் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் கொஞ்சம் படிப்பில் முன்னேறிய மாணவர்கள் ஒரு குழுவாக வாத,விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். மற்றச் சில மாணவர்கள் சுவடிகளைப் பிரித்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தனர். கொஞ்சம் தள்ளி இருந்த யுத்தசாலையோ பல பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இங்கிருந்து தான் அதிகமாய்ச் சப்தமும் வந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் மல்யுத்தம் பழகும் மாணவர்கள். இரு குழுக்களாகப் பிரிந்து மல்யுத்தம் பழகிக் கொண்டிருந்தனர். அவர்களை ஆதரித்தும், எதிர்த்தும் மற்ற மாணவர்களும் இரு குழுக்களாய்ப் பிரிந்து கோஷமிட்டனர். இன்னொரு பக்கம் வாள் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. வாள்கள், “டண்டணார்” என ஒன்றோடொன்று மோதும் சப்தமும், வீரர்கள், அவரவருக்கு இஷ்ட தெய்வத்தை வாழ்த்திய வண்ணம் வாளோடு வாள் மோதும், "கணீர்" சப்தமும் காதைத் துளைத்தது.

இன்னும் கதைப் பயிற்சி, ஈட்டியை எறிந்து பயிற்சி எடுத்தல் ஆகியவற்றோடு வில்லும், அம்பும் வைத்தும் பயிற்சி நடந்தது. அங்கு தான் அஷ்வத்தாமா காணப்பட்டான். துரோணரின் பிரியத்துக்கு உகந்த ஒரே மகன். அவன் மனம் சுணங்கினால் துரோணரின் உள்ளமும் சுருங்கும். அவன் நலம் அவருக்கு மிகவும் முக்கியம். அவனைக்கண்டு உள்ளூரப் பெருமிதம் கொண்ட துரோணர் தன் பார்வையைத் திருப்பினார். இதைத் தவிரவும் வீரர்களுக்கும், அரசகுமாரர்களுக்கும் யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதத்தை ஓட்டிக்கொண்டே வில்லையும், அம்பையும் குறி பார்த்துக் குறிதவறாமல் செலுத்தும் பயிற்சி, அஸ்திரப் பயிற்சி போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட்டன. இந்த அஸ்திரப் பயிற்சி என்பதை அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க முடியாது. அதற்குப் பல படிகள் தாண்டவேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் வேத அப்யாசம் தேவை. மனம் ஒருமைப் படுத்துதல் தேவை. அந்த அந்த தேவதைகளைக் கட்டுக்குள் கொண்டுவரத் தெரியவேண்டும். ஒவ்வொரு அஸ்திரமும் ஒவ்வொரு தேவதையின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்களைத் துதித்து மன ஒருமையுடன் பிரார்த்தனைகள் செய்து வேறு வழியில்லாமலே இந்த அஸ்திரப் பிரயோகம் செய்யப்படுகிறது என நிரூபித்துப் பின்னரே அஸ்திரப் பிரயோகம் செய்ய முடியும். இது எல்லாராலும் முடியாது. கெடுதலான நோக்கத்தோடு இதைக்கற்றுக்கொண்டால் சரியான சமயத்தில் அஸ்திரம் பலனைத் தராமல் ஏமாற்றிவிடும். எல்லாரும் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பதும் இல்லை. இங்கே துரோணரின் குருகுலத்தில் சொல்லிக் கொடுக்கப்படும். அதனாலேயே அஸ்திரப் பயிற்சிக்கென நாலாதிசைகளிலிருந்தும் மாணாக்கர்கள் குவிந்தனர்.

யுத்த சாலையை ஒட்டி ஒரு பெரிய மாளிகை காணப்பட்டது. துரோணருக்கு எனக் குரு வம்சத்து அரச குலத்தவர் கட்டிக் கொடுத்திருக்கும் மாளிகை அது. அங்கு தான் அவர் வசிக்கிறார். குரு வம்சத்து இளவரசர்களுக்கு குருவாக இருந்து வரும் துரோணர் பல போர்களில் குரு வம்சத்தைக் கட்டுப்படுத்தி வந்த பீஷ்மரோடு துணையாகச் சென்று வெற்றி தேவதையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். குருவம்சத்தினருக்கு துரோணரிடம் உள்ள பாசமும், நேசமும் அளவிடமுடியாதவை எனில் துரோணருக்கும் அவர்களிடம் நன்றி நிறையவே இருந்தது. துரோணர் ஒன்று சொல்லி அதைக் குருவம்சத்தினர் தட்டினார்கள் என்பது இல்லை. அன்று காலை வேளை……….

மாளிகைக்கு எதிரே திறந்த மைதானம். அங்கே ஓர் அடர்ந்த ஆலமரம். அதைச் சுற்றிப் போடப்பட்டிருந்த மேடையில் துரோணர் அமர்ந்திருந்தார். அவர் கண்கள் கங்கையையும் அதில் வேகமாய் ஓடும் பிரவாஹத்தையும் பார்த்த வண்ணம் இருந்தாலும், மனம் ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. நதியில் நீந்திக் கொண்டிருந்த பெரிய பெரிய மீன்களுக்கும், ஆமைகளுக்கும் துரோணர் உணவளித்த வண்ணம் அமர்ந்திருந்தார். இந்த வேலையை இயந்திரத் தனமாக அவர் கைகள் செய்தன. ஆனால் மனமோ……. இந்த இடம் தான் துரோணருக்குப் பிடித்தமான இடம். இங்கே அமர்ந்த வண்ணம் தான் அவர் தன் திட்டங்களைப் போடுவார்; மாணாக்கர்களுக்கு உத்தரவிடுவார். சீடர்களைக் கண்காணிப்பார். அந்தச் சமயம் மீன்களுக்கு உணவிடுவது என்னும் ஒரு சாக்கைத் தவிர வேறெதையும் நினைக்க மாட்டார். இப்போதும் அப்படித்தான். இதோ துரோணர். அறிமுகம் செய்து கொள்ளலாமா?

மற்ற பிராமணர்களைப் போல் அல்லாமல் இவர் பட்டுத் துணியில் உடுத்தி இருக்கிறாரே! ஆச்சரியம் தான்! ஆனால் எல்லா அந்தண குருக்களையும் போல் தலையைத் தூக்கிக் கட்டியிருக்கிறார். வேறெந்த நகைகளையும் போடவில்லை. அவர் அணிந்திருப்பது பட்டுத் துணியானாலும் அமர்ந்திருப்பது புலித்தோலில். பரசுராமரின் சீடர் என்பதை நினைவு படுத்திக்கொள்ளும் எண்ணமோ என்னவோ புலித்தோலில் அமர்ந்திருந்தார். பரசுராமர் இடையிலேயே புலித்தோலை அணிந்திருப்பார். இவர் அதில் அமர்ந்திருந்தார். அதோடு பரசுராமரை விட்டுக் கோடரி எப்போதும் பிரியாமல் இருந்ததைப் போலவே இவரும் தன்னருகே ஒரு வில்லையும், அம்புகளையும் வைத்திருந்தார். கரிய தாடியும், கருப்பான தலைக்குடுமியும் நன்கு எண்ணெய் பூசிச் சீவப் பட்டு ஒழுங்காக எடுத்துக் கட்டப்பட்டிருந்தது. அவருடைய தீர்க்கமான நாசியும், ஸ்திரமாக, அவரின் உறுதியான மனதைக் காட்டும் மெல்லிய உதடுகளும் அவருடைய உறுதியைக் காட்டின. கண்களோ சின்னஞ்சிறியனவாக இருந்தன. என்றாலும் அவருடைய மன உறுதியும், திடமான மனதும் அந்தக் கண்களின் வழியே தெரிய வந்தது எனச் சொன்னால் மிகையாகாது. ஒளிவீசிய கண்களைப் பார்த்தால் தீயை உமிழ்கின்றதோ என்னும் வண்ணம் செக்கச் சிவந்து காட்சி அளித்தன. துரோணர் மனம் பின்னால் போனது. கடந்த காலம் அவர் கண் முன்னே விரிந்தது.

பரத்வாஜ ரிஷியின் குமாரர் துரோணர். பரத்வாஜர் ஞானமும், அறிவும் நிரம்பிய ரிஷி. அவரிடம் குருகுல வாசம் செய்ய எங்கெங்கிருந்தோ மாணாக்கர்கள் வந்தனர். ஒரு துறவி போலவே வாழ்ந்து வந்தார் பாரத்வாஜர். அவர் ஆசிரமத்தில் எப்போதுமே தேவைக்கு மேல் எந்த உணவுப் பொருளும் இருக்காது. இருக்கும் உணவுப் பொருளும் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கே போதுமானவையாக இருக்கும். பிரம்மத்தை அறிந்த, பிரம்மத்தைப்போதிக்கும் ஒரு பிராமணன் எப்படி வாழவேண்டும் எனச் சொல்லி இருக்கிறதோ அப்படியே வாழ்ந்து வந்தார் பாரத்வாஜர். தேவைக்கு மேல் எதையும் சேமித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் அவரிடம் இல்லை.

2 comments:

priya.r said...

அந்த காலங்களில் இவ்வளவு பயிற்சிகள் இருந்து இருப்பதை நினைத்தால்
வியப்பாக இருக்கிறது !

Unknown said...

இருந்தும் பயனி்ல்லை