Sunday, March 29, 2015

பீமன் மறுப்பு! ஜாலந்திரா அதிர்ச்சி!

பீமன் சீறினான்! “என்ன கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க வேண்டுமா? அதற்கு என் உதவி தேவையா உனக்கு? எதற்காக என் உதவியுடன் அவனைச் சந்திக்க விரும்புகிறாய்? அவன் தான் நாள் முழுவதும் அமர்ந்த வண்ணம் மாறாப்புன்னகையுடன், அவனிடம் வருபவர்கள் அனைவரிடமும் தன் மாறா அன்பைக் காட்டிக் கொண்டிருக்கிறானே! அது ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, கிழவனோ யாராக இருந்தாலும் சரி அவனுக்கு. நீயும் அவர்களோடு ஒருத்தியாய் அவனைப் போய்ச் சந்திக்க வேண்டியது தானே! இதற்கு என் உதவி ஏன்? ம்ம்ம்ம்ம்ம்??? அநேகமான பெண்கள் தங்களுக்கு ஆண் மகவு பிறக்க வேண்டும் என்று அவனிடம் போய்ப் பிரார்த்திக்கின்றனர். அப்படி ஏதேனும் உனக்கும் பிரார்த்தனை இருக்கிறதோ?”

“முதலில் எனக்கு ஒரு நல்ல கணவனை அளிக்கச் சொல்லி அவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.  ஆனால் இப்போது அது முக்கியம் இல்லை!” என்று அதே கேலியுடன் கூறிய ஜாலந்திரா, கொஞ்சம் முக்கியத்துவம் நிறைந்ததொரு குரலில், “பிரபு! நான் இப்போது கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க விரும்புவது எவரும் அறியாமல்!  ஆம்! ரகசியமாகச் சந்திக்க விரும்புகிறேன்!” என்றாள்.

“ஹா, உன் வேண்டுகோள் மறுக்கப்பட்டு விட்டது!  என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய் நீ? நான் இங்கே இருக்கும் ஒவ்வொரு இளவரசியையும், மற்ற அழகான பெண்களையும் என்னுடைய அந்த வசீகரமான அத்தை வழிச் சகோதரனோடு சந்திக்க வைக்கத் தான் இருப்பதாக எண்ணுகிறாயா? அவன்  பெண்களைக் கவர்ந்திழுப்பதோடு, அவர்கள் மனதை அவன் பால் திருப்பி, அவனுக்காக மனது உடைந்து போகவும்  வைக்கிறான். அத்தகையக் கவர்ச்சியான  அத்தை வழி சகோதரனுடன்  பெண்களை ரகசியச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் காரியக்காரன் என நினைத்து விட்டாயா? இத்தகைய வேலைகளைச் செய்யும் ஆள் நான் இல்லை! இதற்கெல்லாம் வேறு ஆளைப் பார்!” தன் இரு கைகளையும் விரித்துத் தன்னால் இயலாது எனத் தெரிவித்ததோடு அல்லாமல் கைகளைக் கூப்பியும் மறுத்தான் பீமன். “ஆஹா, இந்தக்  கண்ணன் தான் எப்படிப் பட்ட மனிதன்! அனைவரையும் தன்பால் கவர்ந்திழுக்கிறானே! எத்தனை வயதாக இருந்தாலும்! ஆணோ, பெண்ணோ எவராக இருந்தாலும் அவனைக் கண்டால் மயங்காதவரே இல்லை!”

“ஆஹா, வ்ருகோதர அரசரிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. உண்மையாகச் சொல்கிறீர்களா? கொஞ்சம் தீவிரமாகச் சிந்தித்துப் பேசுங்கள் ஐயா! இது மிக முக்கியமான ஒரு விஷயம்! என் சகோதரி பானுமதி கிருஷ்ண வாசுதேவனிடம் சேர்ப்பிக்கச் சொல்லி ஒரு செய்தியை என்னிடம் கொடுத்திருக்கிறாள்.  அதை நான் நேரடியாகக் கிருஷ்ணனிடம் சொல்ல வேண்டும்.”தன் அழகான விழிகளால் பீமனைக் கெஞ்சும் விதமாகப் பார்த்துக் கொண்டே சொன்னாள் ஜாலந்திரா.

“யார், உன் அக்கா? துரியோதனன் மனைவி தானே!  ஏன், அவளுக்கு என்ன?  அவளே நேரிடையாகக் கிருஷ்ண வாசுதேவனிடம் போய்ப் பேச வேண்டியது தானே!”

“அப்படி முடிந்தால் தான் பரவாயில்லையே! ஐயா, துரியோதனன் என் அக்காவைக் கிருஷ்ணனைச் சந்திப்பதில் இருந்து தடுத்து விட்டார். கிருஷ்ணனைத் தன் எதிரியாகக் கருதுகிறார் அவர்!”

“ம்ம்ம்ம்ம்? அப்படி எனில் தன் கணவனின் எதிரிக்கு என்ன செய்தியை அனுப்ப விரும்புகிறாள் உன் அக்கா?” பீமனுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

“ஐயா, அது எங்கள் ரகசியம்! என்னுடையதும், என் அக்காவினுடையதும் ஆன ரகசியம்!”

“ என்ன சொல்கிறாய் நீ? உனக்கு ஒன்று தெரியுமா? துரியோதனன் என்னைத் தான் அவனுடைய முக்கிய எதிரியாக நினைப்பதை நீ அறிவாயா? துரியோதனன் எனக்கும் எதிரி தான்.  என் எதிரியின் மனைவிக்கு நான் ஏன் உதவ வேண்டும்?”

“ஏனெனில் துரியோதனனைப் போல் கொடுமைக்காரர் அல்ல வ்ருகோதர அரசர்.  மென்மையானவர்.  ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவர். “உடனடியாகப் பதில் சொன்னாள் ஜாலந்திரா. பீமனுக்கு உள்ளுக்குள் இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளினால் சந்தோஷம் வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “இந்த உலகிலேயே நான் ஒருத்தன் தான் இருக்கிறேனா உனக்கு உதவ?  என் என்னைத் தேர்ந்தெடுத்தாய் இந்த மர்மமான உதவியைச் செய்ய?” என்று ஜாலந்திராவிடம் கேட்டான்.

“அது என் ரகசியம்!” என்றாள் ஜாலந்திரா. பீமனைப் பார்த்து வசீகரமான புன்னகை ஒன்றையும் சிந்தினாள்.  ஆனால் “உன் வழியில் செல்ல உன்னை விட்டு விட்டேன் ஆனால், துரியோதனன் என்னைச் சும்மா விடமாட்டான். என்னை மட்டுமில்லாமல் எங்கள் அனைவரின் எதிர்காலத்தையும் சுட்டுப் பொசுக்கி விடுவான்.” என்றான் பீமன்.

“ஆஹா, வ்ருகோதர அரசரின் தைரியமும், துணிச்சலும் நான் அறியாததா?  அவரை எவராலும் வெல்ல முடியாது.  அவரின் எதிர்காலத்தையும் எவராலும் சுட்டுப் பொசுக்க முடியாது. எப்போதுமே அவருக்கு ஜெயம் தான்!” மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னாள் ஜாலந்திரா.

“எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை, அந்த ரகசியத்தை அதுவும் என் எதிரியின் மனைவியினால் அனுப்பப்பட்ட செய்தியை என் சகோதரன் முறையான கிருஷ்ண வாசுதேவனுக்கு ரகசியமாகச் சொல்லுவதில் நானும் எப்படிப் பங்கெடுப்பது என்றே எனக்குப்புரியவில்லை.  இதைக் குறித்து நான் எதுவுமே அறிய மாட்டேனே!” என்றான் பீமன். ஜாலந்திராவை அனுப்பித் தன்னிடம் உதவி கேட்பதன் மூலம் துரியோதனன் ஏதோ பெரிய சதி செய்கிறான் என்னும் சந்தேகம் முற்றிலும் அகலவில்லை பீமனுக்கு.  அவனுக்கு இன்னமும் சந்தேகமாகவே இருந்தது.

“ஐயா, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேனே! அப்புறமும் சந்தேகமா?” என்று தயவாகக் கேட்டாள் ஜாலந்திரா!  “ஆம்” என்று சற்றும் தயங்காமல் பீமன் சொல்ல, ஜாலந்திரா அதிர்ச்சி அடைந்தவளாகக் காணப்பட்டாள். மெல்லத் தனக்குள் பேசிக் கொள்வது போல்!”ஆஹா, மஹாதேவா, கடவுளே!  நான் எவ்வளவு முட்டாள்! பெரிய தவறு ஒன்றை அல்லவோ செய்து விட்டேன்!  என்னைப் போல் முட்டாள் உண்டா?” என்று கூறினாள்.


Thursday, March 26, 2015

தலை அலங்காரம் புலப்பட்டது!

இருட்டு கருமையாக எங்கும் அப்பிக் கிடந்தது. விண்ணில் இருந்து தெரிந்த நட்சத்திரங்கள் பீமன் செல்வதையே உற்றுப் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டன. அதாவது அப்படி பீமன் நினைத்துக் கொண்டான்.  மரங்களின் பசுமையான செழுமையான கிளைகளுக்குள்ளே இருந்து கிளம்பினாற்போல் காற்று மிக மென்மையாகவும் நறுமணப் பூக்களின் வாசத்தைச் சுமந்து கொண்டும் வீசிக் கொண்டிருந்தது. இரவே அழகாய்த் தோன்றியது. எங்கும், எதிலும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் விரவிக் கிடந்தது பீமனின் மனதைப் போல. தன்னுள்ளே பொங்கிப் பிரவாகிக்கும் சந்தோஷத்தையே இயற்கையும் பிரதிபலிப்பதாக பீமன் நினைத்தான்.  ஆனாலும் அவனுக்குள்ளே ஜாலந்திராவின் நினைவு வந்து சென்றது. எதற்காக அவள் தன்னைத் தனியே பார்க்க விரும்புகிறாள்? பீமனின் ஆவல் அதிகரித்தது.

அவள் இந்த இரவில் தனியாக பலியாவின் மல்யுத்த மைதானத்தில் தன்னைச் சந்திக்க வருவதோ, அல்லது வந்து சந்தித்துச் சென்ற பிறகோ அது  வெளியே தெரிந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.  வாழ்நாள் முழுமைக்கும் அவமானத்தைச் சுமந்து கொண்டு இருக்க வேண்டும் ஜாலந்திரா! அவள் நற்பெயரும் கெடுவதோடு அல்லாமல் காசி தேசத்தின் மீதும் களங்கம் ஏற்படும். எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த வண்ணம் பலியாவின் வீட்டினுள் நுழைந்த பீமனுக்கு பலியா அங்கே திறந்திருந்த ஓர் அறைக்கதவைக் காட்டினான். இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் தெரிந்தோ என்னமோ வாய்திறந்து பேசவே இல்லை அவனும். உள்ளே நுழைந்த பீமனுக்கு அங்கிருந்த மங்கிய விளக்கொளியில் அரண்மனைச் சேடிப் பெண்களின் உடைகளை அணிந்த இரு பெண்கள் நிற்பது தெரிந்தது. உயர்குடிப் பெண்கள் அல்லாத மற்றச் சேடிப் பெண்கள் தங்கள் சேலையின் முந்தானையின் ஒரு பகுதியால் தலையையும், மார்பையும் மூடிக் கொள்வதோடு ஆண்களுடன் பேசுகையில் முந்தானையின் நுனியால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும்.  தலை குனிந்தே பேச வேண்டும். இது பொதுவான மரபு. இவர்கள் இருவருமே சேடிகளா?

அங்கிருந்த இரு பெண்களில் சற்று வயதானவள் பீமனைக் கண்டதுமே அவனை நமஸ்கரித்தாள். பின்னர் அறை வாசலுக்காகச் சென்று அறைக் கதவைச் சார்த்தி மூடிவிட்டு அதன் மேல் சாய்ந்த வண்ணம் நின்று கொண்டாள். வயதில் இளையவளோ தன் கைகளைக் கூப்பிய வண்ணம் அடக்கமாக நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்த கயிறுகளால் பின்னப்பட்ட ஆசனத்தில் பீமன் அமர்ந்து கொண்டான்.  அவன் எடையைத் தாங்க முடியாமல் அது ஆட்டமாக ஆடியது. நின்ற இளம்பெண்ணைப் பார்த்து, “என்னைப் பார்க்க விரும்பிய இளம்பெண் நீதானா?” என வினவினான் பீமன். இதை அவன் சம்பிரதாயமாக சம்பாஷணையை ஆரம்பிக்க வேண்டிக் கேட்டாலும் அந்தப் பெண் ஜாலந்திராதானா என்னும் அவன் ஆவல் அதில் மீதூறிக் கிடந்ததை அவனால் மறைக்க முடியவில்லை. அந்த இளம்பெண்ணோ வாயையே திறக்காமல் தலையை மட்டும் ஆட்டி பதிலைத் தெரிவித்தாள். “ஆஹா! நீ ராக்ஷச அரசன் வ்ருகோதரனைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தாயாம்.  நீ வ்ருகோதரனால் உண்ணப்படுவாயே! அதை அறிய மாட்டாயா?  அவன் உன்னைக் கொன்று தின்று விட்டால் என்ன செய்வாய்?” சிறு பிள்ளைத் தனமான குரலில் அதே சிறுபிள்ளைத்தனமான சிரிப்புடன் கேட்டான் பீமன்.

அந்த இளம்பெண்ணோ மீண்டும் தன் தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்து விட்டுப் பின்னர் வாய் விட்டுச் சிரித்தாள். பீமனுக்கு அந்தச் சிரிப்பைக் கேட்டதும் மனம் சந்தோஷத்தில் குதித்தது.  அந்த அறையே நடனம் ஆடுவதாகத் தோன்றியது அவனுக்கு.


“அது சரி, பெண்ணே! இந்த அர்த்த ராத்திரியில் என் போன்ற ஓர் இளைஞனைத் தனியாகச் சந்திப்பது எவ்வளவு பயங்கரமான ஒரு விஷயம் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லையா? இதில் உள்ள ஆபத்து உனக்குப் புலப்படவில்லையா?”

“ஓ, அப்படி ஏதேனும் என் மேல் அவதூறு கிளம்பினால் ராக்ஷச அரசன் வ்ருகோதரன் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார்?  என்னைக் காப்பாற்ற மாட்டாரா?” அவள் அவன் எதிரில் தரையில் உட்காருவதை பீமன் கண்டான்.

“எல்லாம் சரி பெண்ணே! முதலில் நீ யார் என்பதை எனக்குத் தெரிவிப்பாய்! முன் பின் தெரியாத எவருடனும் என்னால் பேசவோ அவர்களுக்கு உதவுவதோ இயலாத ஒன்று. எனக்குத் தெரியாத பெண்களிடம் நான் பேசக் கூட மாட்டேன்.”


சிரித்தாள் அந்தப் பெண். கண்களில் குறும்பு பளிச்சிட்டது.”நான் யார் என்றா கேட்கிறீர்? ம்ம்ம்? எங்கள் நாட்டில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?  நீர் அதை அறிவீரா?  வ்ருகோதர அரசன் தனக்கு முன் பின் தெரியாத ஒரு இளம்பெண்ணை ஆற்றில் மூழ்குவதிலிருந்து  காப்பாற்றியதோடு அல்லாமல் அவளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டும் சென்றான் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.  அதை நீர் அறிவீரா? அந்தப் பெண்ணை உங்களுக்கு முன்பின் தெரியுமா?  எப்போதிலிருந்து வ்ருகோதரர் இப்படி மாறினார்?”


அவள் தன்னைக் கேலி செய்வதைப் புரிந்து  கொண்டான் பீமன். அவனும் விடாமல், “பெண்ணே! உன்னை எனக்குத் தெரியும் எனில், நீ ஏன் சேடிப் பெண்களைப் போல் உன் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.  ஜாலந்திரா மெல்லத் தன் முகத்தை மூடிக் கொண்டிருந்த சேலையின் முந்தானையை விலக்கினாள்.  மேகங்களால் சூழப்பட்டிருந்த சந்திரன் மேகங்கள் விலகியதும் ஒளி வீசிப் பிரகாசிப்பது போல் அவள் அழகான முகம் பளிச்சிட்டது.  அதோடு அவள் தலையில் கவனமுடன் பூக்களை வைத்துச் செய்து கொண்டிருந்த தலை அலங்காரமும் புலப்பட்டது.


அவள் மூக்கில் அணிந்திருந்த வைர மூக்குத்திகளின் ஒளி அந்த விளக்கொளியில் மிக அதிகமாகச் சுடர் விட்டுப் பிரகாசித்ததோடு அவள் கன்னங்களையும், முகத்தின் பக்கவாட்டையும் பிரகாசிக்க வைத்தது.  அவள் முகத்தின் இயற்கையான ஒளியோடு இந்த வைரங்களின் ஒளியும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக பீமன் நினைத்தான்.  எத்தனை வைரங்களை அணிந்திருந்தாலும் அவை இந்தப் பெண்ணின் முகத்தின் ஒளிக்கு ஈடாகாது என்பதையும் உணர்ந்தான். அப்போது பீமனைப் பார்த்து அவள், “நான் என்ன சேடிப் பெண்ணைப் போலவா தோற்றமளிக்கிறேன்? நன்றாகப் பாருங்கள்!” என்ற வண்ணம் முந்தானையை முழுதும் விலக்கினாள் ஜாலந்திரா.

“காஷ்யா, காஷ்யா, நீ ஒரு சேடியைப் போல் அல்லவோ உன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாய்!  சரி போகட்டும், ஏன் என்னைச் சந்திக்க விரும்பினாய்?”

“உங்களை மீண்டும் பார்க்கும் ஆவலில் தான்!” வெகு சாமர்த்தியமாகச் சொன்னாள் ஜாலந்திரா.

“ஆஹா, என்னை முட்டாள் என்றா நினைத்தாய் ஜாலந்திரா?  என்னைத் திரும்பவும் பார்க்க வேண்டி நீ இத்தகையதொரு ஆபத்தான செயலில் இறங்குவாய் என என்னை நம்ப வைக்க  முயற்சி செய்கிறாயா? எந்த மூடனும் அதை நம்ப மாட்டானே! ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து நீ என்னுடன் பேச விரும்புவதாக ரேகா என்னிடம் சொன்னாள். என்ன அந்த முக்கியமான விஷயம்?  அதிலும் வாழ்வா, சாவா என்பதைப் பற்றியது என்றும் கூறினாளே! அத்தகைய முக்கியமான விஷயம் தான் என்ன?”

“நான் கிருஷ்ண வாசுதேவனைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.  அதற்குத் தங்கள் உதவி தேவை!” என்றாள் ஜாலந்திரா.

Wednesday, March 25, 2015

பீமன் பறந்தான்!

“நான் எப்போதுமே எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஈடு கொடுக்கத் தயாராக இருக்கிறேன், தாத்தா அவர்களே, கவலை வேண்டாம்!” என்று சொன்ன பீமன் மீண்டும் அவரை வணங்கி அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு திருதராஷ்டிரனின் மாளிகை நோக்கிச் சென்றான். தன் பெரிய தந்தைக்கும், பெரிய தாய்க்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டான் பீமன்.  அவர்களும் வழக்கப்படி தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக் கொண்டனர். எல்லாம் சம்பிரதாயமாகவே நடைபெற்றன.  ஒவ்வொரு பேச்சு வார்த்தையும் முன் கூட்டித் திட்டமிட்டது போல் குறிப்பிட்ட சில விசாரணைகளுடன் நிறைவு பெற்றன. உள்ளன்புடன் பீமனும் பேசவில்லை;  அவர்களும் பேசவில்லை. இது பார்க்கும் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகப் புரியும்படி இருந்தது. அதன் பின்னர் பீமன் தாங்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்படும் முன்னர் தங்கி இருந்த தங்கள் சொந்த மாளிகைக்குத் திரும்பினான்.  அந்த மாளிகை தான் இப்போதும் பாண்டவ சகோதரர்களும், அவர்கள் தாயும், புது மணமகள் திரௌபதியும் வசிக்கவெனத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது.  இதை ஏற்கெனவே அறிந்திருந்த பீமன் உண்மையிலேயே அதே மாளிகைக்குத் தாங்கள் திரும்பி வந்ததன் மூலம் தாங்கள் அனைவருமே வெற்றி அடைந்து விட்டதாக எண்ணினான்.  இது தான் உண்மையான வெற்றி என்றும் நினைத்துக் கொண்டான்.

கொடூரமான நாடு கடத்தல் என்னும் தண்டனையின் மூலம் அவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இப்போதோ?? அவர்கள் ஐவரும் வெற்றி பெற்றவர்களாக மட்டும் அல்ல, பலம் பொருந்திய துருபதனின் மருமகன்களாகவும் திரும்பி இருக்கின்றனர். இதை எல்லாம் எண்ணிக் கொண்டிருந்தாலும் பீமனின் உள் மனது வேறொன்றையே நினைத்துக் கொண்டிருந்தது.  அது தான் அந்தத் தாமரைப் பூப் போன்றப் பறக்கும் பாதங்களைக் கொண்ட காசி தேசத்து இளவரசி அவனைத் தனியே சந்திக்க இருப்பது தான்.  அவள் எப்போது, எங்கே, எப்படி அவனைச் சந்திக்க வருவாள்? பீமனின் உள்மனம் அதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது பார்த்து கோபு அவனிடம், “பிரபுவே, உங்கள் தண்டாயுதத்தைக் கொண்டு வந்து தரவா?” என்று கேட்கவும் பீமனுக்குச் சிரிப்பு வந்தது. அவனைப் பார்த்து அவன் இரு காதுகளையும் தன் கைகளால் திருகிய வண்ணம், “முட்டாளே, இப்போது எதற்கு தண்டாயுதம்? நான் என்ன பலியாவின் தலையை உடைக்கப் போகிறேனா? அல்லது வேறு ஏதேனும் இளம்பெண்ணின் மண்டையை உடைக்கப் போகிறேனா?  எனக்குப் பிடித்த ஆயுதம் அது என்பது சரியே!  ஆனால் இப்போது எதற்கு?” என்று கேட்டான்.

பீமனின் விளையாட்டுத் தனமான எண்ணங்களில் இப்போது ஒரு விசித்திரமான எண்ணம் குறுக்கிட்டது.  தற்செயலாக அவன் ஜாலந்திராவின் மண்டையை உடைத்து விட்டால்?  பின் அவளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு அவளை ஆறுதல் செய்யும் வண்ணம் அழலாமே!  நன்றாக அழலாம். தனக்குள் இந்த எண்ணத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டான் பீமன். அவன் மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் போனது.  நடக்கையிலேயே அவன் கனவு காண ஆரம்பித்தான். அந்தக் கனவிலேயே ஜாலந்திரா அவன் மனைவியாக இதே மாளிகையில் அவனுடன் தங்குவதாகக் கண்டான் பீமன். அது மட்டுமா?  அவனுக்கும் ஜாலந்திராவுக்கும் குழந்தைகள் கூடப் பிறக்கின்றன!  ஆஹா! திரௌபதியை மறந்து விட்டோமே!  ஆம், ஆம், அவனுக்கும் திரௌபதிக்கும் கூடக் குழந்தைகள் பிறக்கின்றான. ஆஹா, அவன் குடும்பமே வீரதீர சாகசங்கள் செய்யும் கதாநாயகர்கள் நிறைந்த குடும்பமாக இருக்கும்.  இதைப்பார்க்கும் துரியோதனன், (அது வரைக்கும் அவன் உயிரோடு இருந்தால்) பொறாமைத் தீயில் வெந்து போவான்.  அதுவும் அவன் மனைவியின் சொந்த சகோதரி, பீமனைத் திருமணம் செய்து கொண்டதை அவன் ஒருக்காலும் விரும்ப மாட்டான்.  நினைத்து நினைத்துப் புழுங்குவான்.

ஒருவழியாக நினைவோட்டங்களிடையே பீமன் மாளிகையின் உட்புறத்துக்கு வந்து விட்டான்.  அவன் தாய் குந்தி உட்பட அனைவருமே அரச விருந்துக்குத் தயார் ஆகிக் கொண்டிருந்ததைக் கண்டான் பீமன். அர்ஜுனன் பொறுக்கி எடுத்த சிறப்பான உடைகளையும், ஆபரணங்களையும் தரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதுமே தன் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்னும் எண்ணமும் உண்டு;  தான் நன்றாக இருக்கிறோம் என்னும் எண்ணமும் உண்டு. அர்ஜுனனைப் பார்த்து பீமன்,”அர்ஜுனா, குரு துரோணரைப் பார்த்துவிட்டாயா?” என்று கேட்க, “பார்த்தேன்!” என்று சுருக்கமாக அர்ஜுனன் சொன்னான். “இப்போதைய நிலைமை குறித்து அவர் என்ன நினைக்கிறார்? உன்னிடம் ஏதேனும் சொன்னாரா?” பீமன் கேட்க, “சகோதரச் சண்டையில் ஒருவரை ஒருவர் கொன்று கொள்ளப் போகிறோம் என்பது அவர் எண்ணம்.” என்றான் அர்ஜுனன்.

“ஓஹோ, அப்படியா?  அவர் நம் பக்கம் இருந்து நமக்கு உதவி செய்வாரா?”

“தெரியவில்லை.  அவர் ஒரே மகன் அஸ்வத்தாமா ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கினால் அவரும் இங்கிருந்து சென்று விடுவாராம்.  அவருடைய பழைய இடமான ஆகிச்சத்திரத்துக்கே. “

“ம்ம்ம்ம்? கிருபாசாரியார்?”

“அவரும் தன் மாப்பிள்ளையுடனே சென்று விடுவார்.”

“ஆஹா, நல்லது; நல்லது. இவர்கள் அனைவருமே ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கும் அந்த நாளே மிக மிக நல்ல நாளாக இருக்கப் போகிறது. நாமும் நமக்குள் நாமே சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கொல்வதை விடுத்து மற்ற நாடுகளின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்டால் அங்கு சென்று போரிட்டு அவற்றை வெல்ல முயலலாம்.  அவற்றை வென்று நம் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளலாம். நம்முடைய சக்தி எல்லாம் சகோதரச் சண்டையில் வீணாகாமல் தடுக்கலாம்.  அது சரி, குரு வம்சத்துப் படை வீரர்கள், படைத் தளபதிகள், இவர்கள் நினைப்பு என்னவோ?”

“ம்ம்ம்ம், வந்திருக்கும் விருந்தாளிகள் செல்லும் வரை எதுவும் நடக்காது என நம்புகிறார்கள்.  அவர்கள் சென்றதுமே இங்கே ஒரு மாபெரும் யுத்தம் நடக்கும் என எதிர்பார்க்கின்றனர்.  ஆனால் அனைவருமே தாத்தா பீஷ்மரின் பக்கமே நிற்பதாக வாக்குக் கொடுத்திருக்கின்றனராம்.”

அவ்வளவில் பீமன் அங்கிருந்து கிளம்பிச் சென்று நதியில் நீராடி, சற்று நேரம் நீச்சல் அடித்துப் பயிற்சி செய்து விட்டுப் பின்னர் நதிக்கரையிலேயே தன் நியம, நிஷ்டைகளை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வந்தான்.  அனைவரோடும் தாத்தா அவர்கள் அளிக்கும் மாபெரும் அரச விருந்தில் கலந்து கொண்டான்.  ஹஸ்தினாபுரத்துக் குடிமகன்கள் அனைவருமே இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  இத்தனை விருந்தினர் கூடி இருந்த இந்தச் சமயத்திலும் நிலைமையில் ஒரு பதட்டம் இருந்ததை அனைவருமே உணர்ந்திருந்தனர்.  விருந்து என்னவோ கோலாகலமாகத் தான் நடைபெற்றது. வரப் போகும் சச்சரவின் அடையாளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்ததை அனைவரும் அலட்சியம் செய்ய நினைத்தாலும், மறக்க நினைத்தாலும் அதுவே வெளிப்படையாகத் தெரிந்தது.

ஜாலந்திராவைச் சந்திக்கப் போகும் நள்ளிரவுக்காக பீமனின் மனம் காத்திருந்தது.  என்றாலும் அவன் அந்த விருந்தை நன்கு ரசிக்கவே செய்தான். என்றாலும் நள்ளிரவுச் சந்திப்பையே அவன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். ஏற்கெனவே கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவனை இந்த அரச விருந்தின் சுவை இன்னமும் கனவுலகில் மிதக்கச் செய்தது. உணவு முடிந்து அரச விருந்தின் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தவுடன் யுதிஷ்டிரனும், திரௌபதியும் அவர்களுக்கென அலங்கரிக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றனர்.  மற்றச் சகோதரர்கள் நால்வரும் அரண்மனை முன்றிலில் படுத்தனர். தன் படுக்கையை மற்றச் சகோதரர்கள் படுக்கும் இடத்திலிருந்து தள்ளிப் போடும்படி கோபுவிடம் சொன்னான் பீமன்.  அதன்படியே அவனுக்குப் படுக்கை தயாரிக்கப்பட்டது.

அனைவரும் படுத்தனர். ஒவ்வொரு விளக்காக அணைக்கப்பட்டது. பீமன் தன் படுக்கையில் படுத்து உறங்குவது போல் பாசாங்கு செய்தான். சற்று நேரத்தில் அர்ஜுனன், நகுலன்,சஹாதேவன் ஆகியோர் உண்மையிலே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிடத் தன் படுக்கையிலிருந்து குதித்து எழுந்த பீமன் தன் வாளை எடுத்து இடுப்பின் உறையில் செருகிக் கொண்டு கோபுவின் துணையோடு பலியாவின் மல்யுத்த மைதானம் நோக்கிப் பறந்தான்.

Thursday, March 19, 2015

பாட்டனும், பேரனும்!

பீமன் இதற்குக் கடும் ஆக்ஷேபம் தெரிவித்தான். “ராணிமாதா, நான் எந்தச் சண்டைக்கும் போவதில்லை; யாருடனும் சண்டை போடும் எண்ணமும் எனக்கு இல்லை;  ஆனால் சண்டை, சச்சரவு என்னைத் தேடி வந்தால் விட மாட்டேன். அதில் என் பக்கம் தான் நியாயமும் இருக்கும். என் பக்கமே ஜெயிக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.” என்று சர்வ நிச்சயமாகச் சொன்னான்.

“குழந்தாய், நீ அப்படி நினைக்கப் போதுமான காரணங்கள் ஏராளமாகவே உள்ளன. ஆனால் கெடுதல்  செய்வோரையும், நினைப்போரையும் நாம் நல்லது நினைப்பதன் மூலமும், செய்வதன் மூலமுமே வெல்ல முடியும்.  நீ முதலில் அதைப் புரிந்து கொள். அதைக் கற்றுக்கொள்!” என்றாள் சத்யவதி. பீமன் அப்பாவியாக, “ஆஹா, நான் சொன்னால் நம்புவீர்களோ மாட்டீர்களோ, பாட்டியாரே, நான் அப்படித் தான் நடந்து கொள்ள இதுவரை முயன்று வருகிறேன். இன்னொரு விஷயம் தெரியும் அல்லவா உங்களுக்கு? என் மூத்த அண்ணார் யுதிஷ்டிரருக்குப் பட்டம் சூட்டினால் துரியோதனன் தற்கொலை செய்து கொள்வானாம்.  எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, பாட்டியாரே, அவன் சகோதரர்கள் அனைவரும் காந்தாரம் சென்றுவிடுவார்களாம். இங்கே இருக்க மாட்டார்களாம். பாட்டியாரே, நீங்கள் ஒரு விஷயத்தில் என்னை தாராளமாக நம்பலாம்.  இந்தக் கௌரவர்கள் அனைவரும் சுகமாகக் காந்தாரம் போய்ச் சேரவும் அங்கே அமைதியான வாழ்க்கை நடத்தவும் என்னால் இயன்றதைச் செய்வேன். அதில் நீங்கள் என்னை நம்பலாம்.” சற்றும் சிரிக்காமல் இதைச் சொன்ன பீமன் திடீரென என்ன நினைத்துக் கொண்டானோ, தன் சாமர்த்தியமான பேச்சுக்குத் தானே சிரித்துக் கொண்டான். பின்னர் ராணிமாதாவை மீண்டும் நமஸ்கரித்து, “உங்கள் ஆசிகள் எனக்கு வேண்டும், பாட்டியாரே!” என்று வேண்டினான்.

“என் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு, பீமா.” என்றவள் பீமன் அவளையே தீவிரமாகப் பார்ப்பதைக் கண்டு, அவனுக்குள் ஏதோ ஓடுகிறது என்று புரிந்து கொண்டாள். “என்ன விஷயம், பீமா? என்ன யோசிக்கிறாய்? என்னிடம் ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?” என்றும் கேட்டாள்.  பீமன் இதழ்களில் ஒரு குறும்புச் சிரிப்பு நெளிந்தது. “பாட்டியாரே, நான் சொல்லிவிட்டால் அப்புறம் நீங்கள் என்னைக் கோபிப்பீர்கள்.” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சின்னப் பையனைப் போல் சொன்னான் பீமன்.

“ஆஹா, இது என்ன அப்பா புது விஷயமாக இருக்கிறது? நீ எப்போதிலிருந்து என்னுடைய கோபத்தை எல்லாம் லக்ஷியம் செய்ய ஆரம்பித்திருக்கிறாய்? இது என்ன புதுப்பழக்கம்?” என்றாள் ராணி சத்யவதி. “ஆஹா, பாட்டியாரே, பாட்டியாரே, சரி கேளுங்கள், சொல்கிறேன்.  ஆஹா, நீங்கள் மட்டும் என் தாயாக இருந்திருக்கக் கூடாதா?” என்றான் பீமன். இப்போது சத்யவதியினால் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டே, “பொல்லாத பையன் அப்பா நீ! ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்ன காரணம்?” என்று கேட்டாள்.” ஆஹா, அப்படி மட்டும் இருந்தால், பாட்டியாரே, இந்த வெள்ளைத் தலைமயிர் உங்கள் தலையைச் சுற்றிலும் ஒளிவீசும் கிரீடத்தைப் போல் அலங்கரிக்கிறது அல்லவா? அத்தகைய அழகு பொருந்திய மணிமுடி எனக்கும் கிடைத்திருக்கும், வம்சம் வழியாக. ஹூம்!” என்று போலியாக சோகப்பெருமூச்சு விட்டான் பீமன். “பொல்லாதவன், பொல்லாதவன், போடா, போ!” என்று விளையாட்டாக அவன் முதுகில் அடித்தாள் ராணிமாதா.  அதன் பின்னர் பீமன் சற்று நேர சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பின்னர் ராணிமாதாவின் அரண்மனையிலிருந்து வெளியேறினான்.

அடுத்து அவன் சென்றது பீஷ்மரின் மாளிகையை நோக்கி. “ஹா, இந்தப் பொல்லாத பயங்கரமான அறிவு படைத்த கிழவனைச் சந்திக்க வேண்டும்.”  என்ற தனக்குத் தானே முணுமுணுத்த வண்ணம் மாளிகையினுள் நுழைந்தான் பீமன். பீமன் வந்திருப்பதைத் தெரிந்து கொண்ட பீஷ்மர் அவனைத் தான் இருக்கும் அறைக்கே அழைத்து வரச் சொன்னார்.  அரச விருந்துக்கான ஏற்பாடுகளில் அவர் மூழ்கி இருந்தார் என்பதைப் பார்த்த உடனே பீமன் புரிந்து கொண்டான்.  சற்றும் வளையாத திடகாத்திரமான உடலைக் கொண்ட பீஷ்மருக்கு வயதானதன் அறிகுறி அவரின் தலைமயிரிலும், தாடியிலும் மட்டுமே தெரிந்தது.  அதைக் கண்ட பீமனுக்கு எப்போதும் போல் இமயத்தின்  பனி மூடிய சிகரங்களின் நினைப்பே வந்தது.  அவரைப் பார்க்கும் போதெல்லாம் திடமான இமயத்தின் நினைவே அவனுள் தோன்றும். அவர் கால்களில் விழுந்து வணங்கிய பின்னர் கைகளைக் கூப்பிய வண்ணம் அவரெதிரில் மிக மரியாதையுடன் நின்றான் பீமன்.


“என் ஆசிகள், குழந்தாய்!” என்று தன் கம்பீரமான குரலில் சொல்லிக் கொண்டு தன் வலக்கையைத் தூக்கி அவனை ஆசீர்வதித்தார் பீஷ்மர். பீமனும் தான் கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வ சந்நிதி முன் நிற்பது போன்ற பக்தியுடன் நின்றான். “என் முடிவு என்னவென்று தெரியுமா உனக்கு?” நேரடியாகக் கேள்வியைத் தொடுத்தார் பீஷ்மர். அவர் குரலில் ஒரு முரட்டுத்தனமான கம்பீரம் தொனித்தது இப்போது. தன் கைகளைக் கூப்பிய வண்ணமே நின்றிருந்த பீமன், “தெரியும், பாட்டனாரே, அறிவேன்.” என்று மிகப் பணிவுடன் கூறினான்.

“ம்ம்ம்ம், என் முடிவுகளினால் ஏற்படக் கூடிய சிக்கல்களை எதிர்நோக்கும் தைரியம் உன்னிடம் உள்ளதா?”

பீமன் மேலும் விநயத்தோடு, “பாட்டனாரே, சாதாரணமாகவே நான் ஒரு யானையைப் போன்ற பலத்தோடு இருப்பவன்.  இப்போது இவ்விஷயத்தில் உங்கள் ஆதரவும் இருப்பதால் சாதாரணக் காட்டு யானை என்ன? தேவலோகத்தின் ஐராவதத்தின் பலமே என்னிடம் இருக்கும். ஆம் இது நிச்சயம் பாட்டனாரே!” என்றான். “ஆஹா, பீமனிடம் அடக்கமா? இது உண்மையா? ஆம், ஆம், நீ உண்மையாகவே அடக்கமாகத் தான் இருக்கிறாய்.” எல்லோரிடமும் காட்டும் கம்பீரத்தையும் முரட்டுத் தனத்தையும் சிறுபிள்ளை போல் பணிவுடன் நிற்கும் இந்த ராக்ஷச உருவம் படைத்த இளைஞனிடம் பீஷ்மரால் காட்ட முடியவில்லை.  மெல்லப் புன்னகைத்தார்.

“ஆ, ஆ, நான் அடக்கத்தின் திருவுருவமே பாட்டனாரே. நீங்கள் தாராளமாக நம்பலாம். உங்களிடம் நான் உண்மையைத் தான் சொல்கிறேன். என்னிடம் சிறிதேனும் கர்வமோ, செருக்கோ இருந்ததெனில் நான் பேசி இருப்பதே வேறு விதமாக இருந்திருக்கும்.  என்னிடம் நூறாயிரம், லக்ஷம் யானைகளின் பலம் உள்ளதெனக் கூறி இருந்திருப்பேன்.”

“ம்ம்ம்ம், ராக்ஷசர்களிடம் தங்கி இருந்ததில் உன்னுடைய குணம் மற்றும் வளர்ச்சி சிறிதேனும் முன்னேற்றம் அடைந்திருப்பதாகத் தெரியவில்லை, பீமா!”

“மன்னியுங்கள் பாட்டனாரே, மன்னியுங்கள். என்னிடம் முன்னேற்றம் எதையும் எதிர்பார்க்க முடியாது தான். இதை விட நான் வளரவும் இயலாது.  இதோ பாருங்கள், இப்போதே நான் எவ்வளவு பெரிய உருவத்தோடு இருக்கிறேன்! இதை விட அதிக வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை, பாட்டனாரே!” தன்னையும் தன் உடம்பின் பலமான தசைகளையும் பார்த்து தனக்குள் தானே ரசித்த வண்ணம் கூறினான் பீமன்.  பீஷ்மரின் முகத்தில் இப்போது புன்னகை விகசித்தது. “ம்ம்ம்ம், உன்னைச் சிறிதேனும் மாற்ற வாய்ப்பு இருக்கிறது என எண்ணுகிறேன்.  சரி, சரி, உடனே இங்கிருந்து ஓடிப் போய் விருந்தில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்து கொண்டு விருந்தில் கலந்து கொள்ளச் சரியான சமயத்துக்கு வந்து சேர். அதுமட்டுமல்ல, குழந்தாய், கலவரமோ சச்சரவோ நேர்ந்தால் அதைச் சரியானபடி எதிர்கொள்ளத் தயாராகவும் வா!” என்று கூறினார்.

Wednesday, March 18, 2015

பீமனின் வருத்தம்! ராணிமாதாவின் எச்சரிக்கை!

ராணி சத்யவதியின் மாளிகையில் ராணிமாதா மிகுந்த வருத்தத்திலும் மனக் கஷ்டத்திலும் இருந்தாள்.  வரப் போகும்நாட்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என்பதை அது சூசகமாகக் காட்டியதோ? மிகவும் வருத்தத்துடன் யோசனையில் ஆழ்ந்திருந்த சத்யவதி கூட பீமனின் ராக்ஷச உருவத்தைத் தன் மாளிகையில் கண்டதும் முகம் மலர்ந்தாள். உருவத்தில் என்ன தான் ராக்ஷசத்தனமாக வளர்ந்திருந்தாலும் பீமன் நடத்தையில் இன்னமும் ஒரு குழந்தையைப் போல் தான் இருக்கிறான் என்பதைக் கண்டதும் அவள் மனம் இன்னமும் அவன் பால் கனிந்து நெகிழ்ந்தது. அவனுடைய சந்தோஷமான நடையைப் பார்த்ததுமே அவள் துக்கமெல்லாம் பறந்துவிட்டாற்போல் உணர்ந்தாள். அவனைக் கண்டதினால் ஏற்பட்ட மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் அவள் புன்முறுவலுடனும், கண்களில் அதீத அன்புடனும் பீமனை வரவேற்றாள்.

பீமன் கீழே விழுந்து அவளை வணங்கினான்.  எப்போதும் போல் தன் கைகளை ஆசி கூறும் பாவனையில் வைக்காமல் கீழே குனிந்து பீமனின் முதுகில் அன்புடன் தடவிக் கொடுத்தாள் ராணிமாதா. பீமனைப் பார்த்து, “எங்கே போயிருந்தாய் இத்தனை நாட்களாக? என்ன செய்து கொண்டிருந்தாய் பீமா? மாளிகை எரிந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றீர்களே? நீ மட்டும் அந்த ராக்ஷச உலகில் ஒரு ராக்ஷசியை என்னைக் கேளாமல் திருமணம் செய்து கொண்டு விட்டாய்.  அதோடு ஒரு பிள்ளையையும் பெற்றுக் கொண்டாய். இன்று வரை உன் ராக்ஷச மனைவியையோ, பிள்ளையையோ எனக்குக் கூட்டி வந்து காட்டவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் உன்னுடைய அபூர்வமான நடத்தையால் துரியோதனனைத் திரௌபதியிடமிருந்து விலக்கி விட்டாயே!  அவனைப் பின்வாங்கும்படிச் செய்துவிட்டாயே! நீ எவ்வளவு மோசமான பிள்ளை!” என்று சொன்னாள் சத்யவதி.  ஆனால் அவள் முகம் மலர்ந்தே இருந்தது.  பீமனிடம் விளையாட்டாகப் பேசுவதைப் பார்ப்பவர் புரிந்து கொள்ளும்படியான தொனியிலும் பேசினாள்.

“ஆஹா, பாட்டியாரே, என் அருமைப்பாட்டியாரே, நீர் ராணிமாதா என்பதற்குத் தகுதியானவரே!  ஆயிரம் கண் படைத்தவன் என்று எல்லோராலும் கொண்டாடப்படும் இந்திரனை விட உமக்குப் பல்லாயிரம் கண்கள் இருக்கின்றன போல் தெரிகிறதே! எல்லா விஷயங்களும் உமக்குத் தெரிந்திருக்கிறதே! அந்த சப்தரிஷிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட உம்மளவு ஞானத்தைப் பெற்றிருப்பார்களா? இவ்வளவு மெய்யறிவு படைத்திருப்பார்களா? சந்தேகமே! ஆனாலும், ராணிமாதா, நான் செய்த நல்லவைகள் எதுவும் உம் கண்களில் படாமல் போனது என் துரதிர்ஷ்டமே!”போலியான வருத்தத்துடன் பெருமூச்சு ஒன்றை விட்டான் பீமன். பின்னர் தொடர்ந்து, “ ஆஹா, இது என்னுடைய துரதிர்ஷ்டமன்றி வேறென்ன!  கெட்ட கிரஹங்களின் சேர்க்கையால் எனக்கு இப்படி நேர்ந்திருக்கிறது.” என்று முடித்தான்.

“ஆஹா, பீமா, உன்னைப் பற்றி நான் அறிய மாட்டேனா?  அனைவரும் சேர்ந்து நகருக்குள் நுழைய வேண்டிய ஊர்வலத்திலிருந்து நீ நழுவிச் சென்று உன் பழைய விசுவாசியான பலியாவைப் பார்த்துவிட்டு இங்கே இப்போது வந்திருக்கிறாய்! அல்லவா? இதோ பார் பீமா! ஒரு குரு வம்சத்து இளவரசனைப் போல் நடந்து கொள்!  அதை எப்போது கற்கப் போகிறாய்?”விடாமல் அவனைக் கேலி செய்தாள் ராணி சத்யவதி.

பீமன் விஷமமான புன்முறுவலுடன் ராணிமாதாவை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான். “தாயே, எனக்கு என்ன ஆச்சரியமெனில் குரு வம்சத்து இளவரசர்கள் மற்றோரெல்லாம் எப்போது என்னைப் பார்த்து என்னைப் போல் நடக்கக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பதே!  ஹா, ராணிமாதா, நான் மட்டும் இப்போது பலியாவைப் போய்ப் பார்க்கவில்லை எனில் நான் உயிருடன் ஆரோக்கியத்துடன் வந்திருப்பது தெரியாமலேயே அவன் இறந்தே போயிருப்பான். “ என்று அதே விஷமத்துடன் கூறினான் பீமன்.  அவன் கண்களும் குறும்பில் பளிச்சிட்டன.  “ஓஹோ, அப்படியா விஷயம்? அப்படி எனில் நீங்கள் அனைவரும் விரும்புவது போல் நான் இன்னமும் இறக்காமல் இருக்கப் போகிறேன் என்கிறாயா?” தனக்கு வந்த சிரிப்பை அடக்கிய வண்ணம் கேட்டாள் ராணிமாதா.

“ஆஹா, ராணிமாதா, தாங்கள் இப்படிப் பேசலாமா? இப்படியெல்லாம் தயவு செய்து பேசாதீர்கள்.  யமதர்மராஜனுக்கே உங்களைக் கண்டால் பயம். உங்களை அழைத்துச் செல்ல அஞ்சுகிறான். உங்களை நெருங்கவும் அஞ்சுகிறான்.  என்ன செய்வது?  நாங்கள் எல்லோருமே இந்த விஷயத்தில் எதுவும் செய்யமுடியாமல் ஆகிவிட்டோம்.” பீமனின் இந்தக் குறும்பான பேச்சைக் கேட்டதும் ராணிமாதாவால் இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.  வாய்விட்டுக் கலகலவெனச் சிரித்தாள். சற்று நேரம் சிரித்த ராணிமாதா தன் சிரிப்பை அடக்கியவண்ணம் கொஞ்சம் கவலையுடன் பேச ஆரம்பித்தாள். “பீமா, பீஷ்மன் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதை நீ அறிந்திருப்பாய்.  ஒரு கண நேர பலவீனத்துக்கு ஆட்பட்டு உங்கள் அனைவரையும் வாரணாவதம் அனுப்பியதன் மூலம் உங்களை மரணத்தின் வாசலைப் பார்க்க வைத்ததை நினைத்து நினைத்து வருந்துகிறான்.  இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று இரவும் பகலும் யோசிக்கிறான். நீங்கள் அனைவரும் அந்த மாபெரும் கண்டத்திலிருந்து தப்பி உயிருடன் இன்று இருப்பதற்கு எல்லாம் வல்ல மஹாதேவனே காரணம் என உறுதியாக நம்புகிறான். இப்போதாவது தான் முன்னர் செய்த தவறைத் திருத்த விரும்புகிறான்.  அதற்காக யுதிஷ்டிரனுக்கு உடனடியாகப் பட்டம் சூட்ட விரும்புகிறான்.  அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டான்.” என்றாள்.

“பாட்டியாரே, தாத்தா பீஷ்மர் அவர்களை நாங்கள் யாரும் தவறாகவே நினைக்கவில்லை.  எங்களிடம் அவருக்கு மிகப் பிரியமும், பாசமும் உண்டு என்பதை நாங்கள் நன்கறிவோம். அதோடு அவர் நேர்மையும், நீதியும் உருவெடுத்தவர்.  அது மட்டுமல்ல எங்கள் பெரியப்பா வழிச் சகோதரர்களுக்கும், எங்களுக்கும் இடையில் சகோதரச் சண்டை ஏற்படக் கூடாது என்று அவர் நினைத்தார்.  அதைத் தடுக்கவும் எண்ணினார். “

“குழந்தாய், அவன் அப்படி நினைத்தது இயற்கைதானே?” என்றாள் சத்யவதி.
“தாயே இந்த விவாதத்துக்கு ஒரு முடிவு இல்லை.  துரியோதனனுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள சச்சரவும் முடிந்து போகும் ஒன்றல்ல.  அவன் அதர்மத்தின் உருவம்; நாங்கள் தர்மத்தின் உருவம்.” கொஞ்சம் கர்வத்துடனேயே இதைக் கூறினான் பீமன். இதைப் பார்த்த சத்யவதிக்குப் புன்னகை பிறந்தது. “பீமா, பீமா, நீ மிகவும் கர்வக்காரன், ஆம். ஆனால் என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு, தம்பி. ஒரு முறையாவது ஒத்துக்கொள்!  நீ ஒரு சண்டைக்காரன் தானே?” மீண்டும் விளையாட்டாகக் கேட்டாள் ராணிமாதா.

“ஆஹா, நீங்களுமா? ராணிமாதா, நீங்களுமா இப்படிக் கேட்கிறீர்கள்? நான் இயற்கையிலேயே அமைதியானவனாக இருப்பதாலேயே துரியோதனன் இன்னும் உயிருடன் இருக்கிறான். இல்லை எனில், என்றோ அவனைச் சுக்குச் சுக்காகக் கிழித்திருப்பேன்.” உண்மையிலேயே மனம் வருந்திச் சொன்னான் பீமன். “பீமா, பீமா, உன்னுடைய நடத்தையை மாற்றிக் கொள்ளாதே. வேண்டாத விஷயங்களை நினைக்காதே. நீ உண்மையிலேயே ஒரு நல்ல பிள்ளை. கருணை, தைரியம், வீரம், பெருந்தன்மை ஆகியவை நிரம்பியவன்.  அந்த உன் குணத்தில் மாற்றம் ஏதும் செய்துவிடாதே. மிகப் பெரியதொரு கண்டத்தில் இருந்து தப்பிப் பிழைத்து இப்போது தான் தாய்நாடு வந்திருக்கிறீர்கள். இப்போது உன் பெரியப்பா பிள்ளைகளிடம் சண்டை, சச்சரவு ஏதும் வேண்டாம்.” எச்சரிக்கும் தொனியில் கூறினாள் ராணிமாதா!

Tuesday, March 17, 2015

ஹஸ்தினாபுரத்து வீதிகளில் பீமன்!

அவ்வளவில் அங்கிருந்து ரேகா சென்றாள். பின்னர் பலியா பீமனைப் பார்த்து, “சின்ன எஜமான், எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்தான்.  அதைக் கேட்ட பீமனும் தாராள மனதோடு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக வாக்குக் கொடுத்தான்.  பலியா அப்போது பீமனிடம்,” சின்ன எஜமான், எப்படியாவது கிருஷ்ண வாசுதேவனை நான் பார்த்தாக வேண்டும்.  அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும். நீங்கள் நான் கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்து என் பணிவான வணக்கங்களை அவருக்குத் தெரிவிக்க உதவுங்கள். என் வாழ்நாளில் இந்த வாய்ப்பை நான் தவற விட்டால் பின்னர் கிடைப்பது அரிது.”

பீமன் தான் மனதளவில் இதனால் வருந்தியவன் போல் நடித்தான். “ஆஹா, பலியா, இந்தப் பித்துப் பிடித்த மக்கள் கூட்டத்தோடு நீயுமா சேர்ந்துவிட்டாய்? என் அத்தை மகனைப் பார்க்க வேண்டும் என்ற பைத்தியம் உன்னிடமுமா இருக்கிறது?” என்று கேட்டான்.

“ஓஹோ, நீங்கள் எப்படி மறந்தீர்கள் சின்ன எஜமான்?  கிருஷ்ண வாசுதேவனைப் போன்ற மல்யுத்த வீரன் கிடைப்பானா? மிகச் சிறந்த மல்யுத்த வீரனன்றோ!அதிலும் 16 வயதிலேயே மிகத் திறமையான மல்லர்களை வென்றதோடு அல்லாமல், கம்சனையும் கொன்றானே. சாணூரன் எவ்வளவு பிரபலமான மல்லன்? அவனையே வென்றிருக்கிறான் அல்லவா? என்னுடைய மல்யுத்தக் களத்திற்கு அவன் வந்து பார்த்து ஒரு சிறிய போட்டியையும் நடத்தி ஆசீர்வதிக்க விரும்புகிறேன்.”

“சரி, சரி, உன் விருப்பம் போல் ஆகட்டும்.  நாளை சரியான நேரம் பார்த்து கோபுவை அனுப்புகிறேன்.  அவன் வந்து உன்னைக் கிருஷ்ண வாசுதேவனைப் பார்க்க அழைத்துச் செல்வான். ஆஹா, அந்தப் போட்டி!  அதிலே நானே கிருஷ்ண வாசுதேவனுடன் போட்டியிடட்டுமா? அல்லது கோபு? ம்ம்ம்ம்? உன் மகன் சோமேஷ்வர்? யார் சரியாக இருக்கும்? சரி, சர்ரி அதுவும் உன் விருப்பம் போல் ஆகட்டும். உனக்கு ஒன்று தெரியுமா?  அவன் என்னை மிகவும் மதிப்பான். என்னிடம் மரியாதை மட்டுமின்றி அதீதப் பாசமும் காட்டுவான். நானும் அவனை என்னுடைய சிறிய சகோதரனைப் போல் தான் நடத்துவேன்.  அவனும் அப்படியே என்னிடம் நடந்து கொள்வான்.”

“என் மல்யுத்தக்களம் மட்டும் அவனால் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டால், இத்தனை காலம் நான் வாழ்ந்த வாழ்க்கை வீணாகாது.”

பலியாவின் வீட்டிலிருந்து கிளம்பிய பீமன் அங்கிருந்த பெரிய மைதானங்களைத் தாண்டிச் சென்றான். மிகப் பெரிய மைதானங்களால் சூழப்பட்ட அரச மாளிகைகள் அவன் கண்களில் தெரிந்தன. எப்போதும் இல்லாத உற்சாகம் அவன் நடையில் தெரிந்தது.  அதன் காரணமும் அவனுக்குப் புரிந்தது. தாமரையைப் போன்ற அழகான பாதங்களைக் கொண்ட அந்த அரசகுமாரி ஜாலந்திராவை அவன் மீண்டும் பார்க்கப் போகிறான்.  அவன் உடலே மிதந்தது.  காற்றில் பறப்பதைப் போல் உணர்ந்தான்.  ஆம், அந்த அரசகுமாரியின் பாதங்களும் இப்படித் தானே பறக்கும்.  அவள் கூடவே தானும் பறப்பது போல் பீமனுக்குத் தோன்றியது. ஜாலந்திராவின் முகம் அவன் கண்ணெதிரே தோன்றியது.  உடனேயே கங்கையின் படகுத்துறையில் தன் தோள்களின் மேல் அடைக்கலமாகப் படுத்துக் கிடந்த ஜாலந்திராவின் மென்மையான உடலின் ஸ்பரிசம் அவன் நினைவில் வந்து அவனைப் பரவசப் படுத்தியது. அவள் தலை தன் தோள்களில் சாய்ந்து கிடந்ததை நினைத்துக் கொண்டு தன் தோள்களைத் தடவி விட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டான்.

அரண்மனை முற்றம் மக்களால் நிரம்பி இருந்தது.  எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். ஊர்வலத்தோடு வந்த படை வீரர் கூட்டம் மட்டுமின்றி நகர மக்களும் சேர்ந்து வந்ததால் அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.  அனைவரும் பாண்டவர்களையும், கிருஷ்ண வாசுதேவனையும் பார்ப்பதோடு அல்லாமல் அன்று அவர்கள் சார்பில் அளிக்கவிருக்கும் அரண்மனை விருந்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்தோடு அங்கே தங்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே முரசுகளின் முழக்கமும், மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் ஜெய கோஷமும் சமுத்திரத்தில் ஏற்படும் அலை ஓசையை நினைவூட்டியது. அங்கு காணப்பட்ட கோலாகலமும், கொண்டாட்டமும் பீமனுக்குப் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆங்காங்கு காணப்பட்ட பெரு மரங்களின் நிழல்களையும் அவற்றின் கீழே அமர்ந்து இளைப்பாறும் மக்களையும் பார்த்துக்கொண்டே சென்றான் பீமன்.  இந்த மரங்களின் மேல் சிறு வயதில் தான் ஏறி விளையாடியது எல்லாம் அவன் நினைவில் மோதியது.  உற்ற தோழனைப் பிரிந்த நண்பனைப் போல் மீண்டும் அவற்றை ஆவலுடன் பார்த்துக் கொண்டே சென்றான் பீமன்.  அவன் முதலில் சென்றது ராணிமாதா சத்யவதியின் மாளிகைக்கு.  அங்கு போய் ராணிமாதாவை வணங்கிய பின்னரே அவள் ஆசிகளைப் பெற்ற பின்னரே மற்றவரைச் சந்திக்க எண்ணினான் பீமன்.

Sunday, March 15, 2015

பலியாவின் திட்டம்!

ரேகா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  அருகில் கேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு அப்போதும் மெல்லிய ரகசியம் பேசும் குரலில்,”பிரபுவே, ஒரு உயர்குடிப் பெண்மணி தங்களைத் தனியே சந்திக்க விரும்புகிறாள். அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.” என்றாள். அதைக் கேட்ட பீமன் போலியான சிரத்தையைக் காட்டினான். விரக்தியுடன் தன் கைகளை விரிப்பது போல் செய்து கொண்டே, “கடவுளே, மஹாதேவா, ஏன் இந்தப் பெண்கள் என்னை இப்படித் துரத்துகின்றனர் என்றே புரியவில்லையே! எனக்கு நிம்மதியே கிடையாதா?” என்று பொய்யான கவலையுடன் கூறினான். பின்னர் ரேகாவைப் பார்த்துத் தன்னுடைய ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்துவது போல் காட்டிக் கொண்டு, அதே சமயம் தெய்வீக வழிகாட்டுதலின்படி நடப்பவன் போல் தன்னைக் காட்டிக் கொண்டான். அதே போலிப் பணிவோடு ரேகாவிடம், “ரேகா, அந்த உயர்குடிப் பெண்மணி ஏன் என்னைச் சந்திக்க விரும்புகிறாள்?” என்று கேட்டான்.

“பிரபுவே, எனக்குத் தெரியவில்ல;  நான் இந்த அளவு மட்டுமே தெரிந்து கொண்டேன்.  அந்தப் பெண்மணி என்னிடம் கூறியதாவது: “ரேகா, நீ உடனே போய் வ்ருகோதர அரசனைப் பார். நான் அவனைச் சந்திக்க விரும்புவதாகக் கூறு. நான் சாவா வாழ்வா என்னும் ஒரு முக்கியமான விஷயத்தின் பேரில் முடிவெடுக்க வேண்டி அவரைப் பார்க்க விரும்புகிறேன்.” என்று சொன்னார்.  எனக்குத் தெரிந்தது இவ்வளவு தான் பிரபுவே!” என்றாள் ரேகா.

பீமனுக்குப் புரிந்து விட்டது.  அவன் முகமே மகிழ்ச்சியில் மலர்ந்து கிடந்தது.  இந்த ஆர்யவர்த்தம் முழுமைக்கும் தேடினாலும் அவனை “வ்ருகோதர அரசன்” என்று அழைப்பவர் ஜாலந்திராவைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.  அவள் ஒருத்திதான் அவனை வ்ருகோதரன் என அழைப்பாள். ஆஹா, அந்தத் தாமரைப் பூப் போன்ற பாதங்களை உடைய அந்த இளவரசி என்னைச் சந்திக்க விரும்புவதன் காரணம் என்னவாக இருக்கும்? ஆனால் எதற்கும் இந்தச் செய்தியைச் சொல்லி அனுப்பி இருப்பது அவள் தானா என்று நிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.

“என்ன? வ்ருகோதரனா?  யார்? அந்த ராக்ஷச அரசனா? அந்த உயர்குடிப் பெண்மணியும் ஒரு ராக்ஷசியா?” என்று வேண்டுமென்றே பீமன் கேட்டான்.

“இல்லை, இல்லை,” அவசரம் அவசரமாக மறுத்தாள் ரேகா.  “அந்த உயர்குடிப் பெண் ஆர்யத்தைச் சேர்ந்தவள் தான்.  ஒரு ராஜகுமாரி! இளம்பெண்; அழகி!” என்றாள். “ஓஹோ, அப்படியா? அப்படி எனில் அவள் திருமணம் ஆனவளா? திருமணம் ஆனவள் எனில் அவள் கணவன் முன்னிலையில் தான் அவளைச் சந்திக்க முடியும்.” அப்போதுள்ள நடைமுறையைச் சொல்வது போல் பாவனை காட்டினான் பீமன். “ரேகா, எங்கள் குருவான வேத வியாசர் திருமணம் ஆன பெண்களைத் தனிமையில் சந்திக்கக் கூடாது என எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.  ஆகவே நான் அவளைத் தனிமையில் சந்திக்க இயலாது. அப்படிப்பட்ட சந்திப்புகள் ஆபத்து நிறைந்தவை.”
இதைக் கேட்ட பலியா சிரித்தான். பின்னர் பீமனிடம், கள்ளத்தனமான ஒரு சிரிப்புடன், “ஆபத்து யாருக்கு சின்ன எஜமானே?  அந்தப் பெண்ணுக்கா? இல்லை அந்த ஆணுக்கா?” என்று விஷமம் தொனிக்கக் கேட்டான். “ஆஹா, இது பதிலளிக்க முடியாத கஷ்டமான ஒரு கேள்வி பலியா!  ஆனால் இந்நிகழ்வில் நான் சம்பந்தப்பட்டவரையிலும் ஆபத்து எனக்குத் தான் நேரும். ஒவ்வொரு நிமிடமும் என்னைக் கவரவும் வசீகரிக்கவும் ஏற்பாடுகள் நடப்பதாக நான் பயப்படுகிறேன்.” இதைச் சொன்ன பீமன் மிகப் பெருங்குரலில் சிரித்தான். பின்னர் ரேகாவைப் பார்த்து, “ரேகா, சரியாகச் சொல், அந்தப்பெண்மணி திருமணம் ஆனவளா?” என்று கேட்டான்.

“இல்லை, பிரபுவே, இல்லை.  அந்தப் பெண்மணி திருமணம் ஆகாதவளே!” என்றாள் ரேகா. பீமன் கேட்கும் தொனியில் அவளுக்கும் இப்போது சிரிப்பு வந்தது. ஆனால் பீமனோ, “ஓஹோ, அப்படியா விஷயம்! இது இன்னும் ஆபத்தான ஒன்றாகுமே! சரி, ரேகா, நீ போய் அந்தப் பெண்ணிடம் ஒவ்வொரு நாளும் ஒரு இளம்பெண்ணைத் தான் காலை உணவாக வ்ருகோதர அரசன் சாப்பிடுவான் என்று சொல்லிவிடு!” என்று சற்றும் சிரிக்காமல் சொன்னான். அவன் மனதில் அப்போது துருபதன் மாளிகையில் ஜாலந்திராவுடன் தான் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வந்து சென்றன.  அந்த நினைவில் அவன் முகமும் கண்களும் விகசித்தன. இதைப் பார்த்த பலியாவும், ரேகாவும் அடக்க முடியாமல் சிரித்தனர்.

“நீங்கள் அவளை எங்கே, எப்போது சந்திக்கிறீர்கள், பிரபுவே? அந்தப் பெண்மணி உங்களை உடனடியாக அவசரமாகச் சந்திக்க விரும்புகிறாள்.”

“ஹா, நான் இளம்பெண்களை அதுவும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களைத் தனிமையில் ரகசியமாகச் சந்திப்பதில்லை. அது என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து விடும். கொஞ்ச நஞ்சம் இருக்கும் புகழும் மங்கி விடும்.”

“இல்லை பிரபுவே, அந்தப் பெண்மணி நீங்கள் அவளைச் சந்திப்பீர்கள்; கட்டாயம் சந்திப்பீர்கள். என்று உறுதியாக நம்புகிறாள். வ்ருகோதர அரசர் எப்போதுமே துயரிலும் கஷ்டத்திலும் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்டவராம்.”

“ஓ, அது தெரியும் எனக்கு. நான் எப்போதுமே அப்படித்தான். ஆனால் ஒவ்வொரு சமயமும் இம்மாதிரி உதவிகளைச் செய்துவிட்டுப் பின்னர் நான் தான் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டு விடுகிறேன்.” என்று சொன்ன பீமன் பின்னர் தன் மனதை மாற்றிக் கொண்டவன் போல, “சரி, சரி, இந்த விஷயத்தில் ஒரு விலக்கு அளித்தாகவேண்டும். அந்தப் பெண்மணியை நடு இரவைக் குறிக்கும் முரசுகள் ஒலிக்கும் நேரம் இங்கே பலியாவின் வீட்டுக்கு வந்து விடச் சொல்லு. ம்ம்ம்ம்ம்? உன்னுடைய அந்த உயர்குடிப் பெண்ணுக்கு இப்படித் தன்னந்தனியாக நட்ட நடு இரவில் இங்கே தனியாக வருவதற்கு உண்டான தைரியம் இருக்கிறதா?  வருவாளா அவள்?”

“கட்டாயம் வருவாள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்றாள் ரேகா. “அவளுடன் துணைக்கு நானும் வருவேன்.” என்று முடித்தாள். அப்போது பலியா அவளைப் பார்த்து, “நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன். ராணி மாதா சத்யவதி படுக்கச் சென்ற பின்னர் சிறிது நேரத்திற்கெல்லாம் மாலா இங்கே திரும்பி வருவாள்.  அப்போது நடு இரவுக்குச் சற்று முன்னர் இருக்கும்.மாலாவிடம் நான் உனக்காகவும், அந்த உயர்குடிப் பெண்ணுக்காகவும் காத்திருக்கச் சொல்கிறேன். காத்திருந்து உங்களை அழைத்து வரச் சொல்கிறேன்.ராணி மாதாவின் மாளிகைக்குப் பின்புறம் உள்ள தோட்டத்துக் கதவருகே நீங்கள் காத்திருங்கள். உங்களை வழிநடத்தி அழைத்து வர சோமேஷ்வரும் அங்கே தயாராகக் காத்திருப்பான்.: என்றான் பலியா.

Tuesday, March 10, 2015

பானுமதியின் வளர்ப்புத் தாய் ரேகா பீமனைச் சந்திக்கிறாள்!

சற்று நேரம் யோசிப்பது போல் பாவனை செய்த பீமன் திடீரெனத் தோன்றியது போல் ஒரு குறும்புச் சிரிப்புடன் மீண்டும் பலியாவைப் பார்த்தான். “பலியா, கௌரவர்கள் மனம் மாறும் முன்னர் அவர்களை ஹஸ்தினாபுரத்திலிருந்து அனுப்ப நீ உதவி செய்வாயா? உன் உறவினர்களை இவ்விஷயத்தில் நம்பலாமா?” என்று விஷமத்துடன் கேட்டான்.

“சின்ன எஜமான், நிச்சயமாக அவர்களை நம்பலாம்.  நான் ஏற்கெனவே இது குறித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்திருக்கிறேன். தேவைப்பட்டால் எங்கள் உயிரைக் கூட உங்களுக்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம்.” என்றான் பலியா உணர்ச்சி பொங்க. பின்னர் கொஞ்சம் தயக்கத்துடன், “எஜமான், துரியோதனனுக்குக் கீழ் குடிமக்களாக வாழ்வதில் எங்களுக்கு இஷ்டம் இல்லை.  அது மிகவும் கஷ்டமான ஒன்று.  மேலும் அவன் மாமன் ஆன ஷகுனியின் ஒற்றர்கள் எங்கும் நிறைந்திருக்கின்றனர். நீங்கள் அனைவரும் இப்போது உயிருடன் திரும்பி வரவில்லை எனில் எங்களில் சிலர் மீண்டும் எங்கள் தாயகமே திரும்பி இருப்போம்.  சிலர் அதற்குத் தயாராகவும் இருந்தார்கள்.”

“ம்ம்ம்ம்ம், எத்தனை மாட்டுவண்டிகள் உன்னிடமும், உன் உறவினர்களிடமும் உள்ளன?  மொத்த எண்ணிக்கையை மட்டும் கூறு பலியா!”

“200க்கும் மேல் இருக்கும், எஜமானே!”

“உன் உறவினர்களை அவரவர் மாட்டு வண்டிகளோடு துஷ்சாசனிடம் நாளை மறுநாள் அதிகாலையில் அனுப்பி வைக்க முடியுமா உன்னால்?”

“ஓ, அது எளிது.  அனுப்பி வைப்பேன்.  ஆனால் எதற்காக எஜமானே!”

ஏதோ ரகசியம் காப்பவன் போல் இருந்தது பீமன் முகம்.  அவன் ஏதோ நாடகம் ஆடப் போகிறான் என்பது பலியாவுக்குப் புரிந்தது. “அவர்கள் அனைவரும் துஷ்சாசனிடம் சென்று இப்படிச் சொல்லவேண்டும்.”ஐயா, தாங்கள் அனைவரும் காந்தார நாட்டுக்குச் செல்வதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் உடைமைகளை எடுத்துச் செல்லத் தயாராக வண்டிகளுடன் வந்துள்ளோம்.” என்று சொல்ல வேண்டும், பலியா! புரிகிறதா?” என்று பீமன் கள்ளச் சிரிப்போடு கூறினான். இப்போது பலியாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஆஹா, சின்ன எஜமான்! இது நல்ல வேடிக்கை தான்.  பார்க்கவே மிகவும் ரசமாக இருக்கப் போகிறது. ஆனால், எஜமான், துஷ்சாசன் உங்களுக்கு யார் சொன்னது நாங்கள் காந்தாரம் போகப் போவதாய் என்று கேட்டுவிட்டால்? என்ன செய்வது?  அவர்கள் அப்போது இதிலிருந்து தப்புவது எவ்வாறு?”

பீமன் சற்று யோசித்தான். பலியாவின் முதுகில் தட்டிக்கொடுத்த வண்ணம் கூறினான்:” இது தாத்தா அவர்களின் கட்டளை என அவனிடம் சொல்லச் சொல்லு பலியா.ஹாஹாஹா, அப்படிச் சொல்லிவிட்டால் யாருக்குத் தாத்தாவிடம் போய் அவரைக் கேட்கும் தைரியம் வரும்? அவர் உண்மையாகவே இப்படி ஒரு கட்டளை இட்டாரா எனக் கேட்கும் எண்ணமே அவர்களுக்குத் தோன்றாது.” என்ற வண்ணம் சிரித்தான். பீமனின் சிரிப்பை பலியாவும் எதிரொலித்தான். அப்போது அங்கே அசைந்து அசைந்து வந்த மாலா பீமன் சாப்பிட்ட வாழை இலையை எடுக்க வேண்டி அங்கே வந்தவள் இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பின்னர் மெதுவாக பலியாவிடம், “தந்தையாரே, இளவரசி பானுமதியின் வளர்ப்புத் தாய் ரேகா உங்களைப் பார்க்க வேண்டி வந்திருக்கிறாள்.  உடனே உங்களை அவசரமாகப் பார்க்க வேண்டுமாம்.  வெளியே காத்திருக்கிறாள்.” என்னும் செய்தியைச் சொன்னாள்.

“ஆஹா, அவள் எதற்காக என்னைப் பார்க்க வரவேண்டும்? என்னிடம் என்ன வேலை அவளுக்கு? என்னுடைய சின்ன எஜமான் திரும்பிச் செல்லும்வரை அவளைக் காத்திருக்கச் சொல்லு.  இப்போது என்னால் அவளைப் பார்க்க முடியாது.” என்றான் பலியா. “இல்லை தந்தையே, சின்ன எஜமான் இங்கே இருக்கையிலேயே அவள் உங்கள் இருவரையும் பார்க்க விரும்புகிறாள். சின்ன எஜமானுக்கு ஏதோ அவசரச் செய்தி சொல்ல விரும்புகிறாள் போலும்.” என்றாள்.

பீமனுக்கு ஆச்சரியம் மிகுந்தது. “அவளுக்கு என்னிடம் என்ன வேலை? ஆஹா, துரியோதனன் ஏதோ தந்திர வேலைகளில் இறங்கி இருக்கிறான் போலும்.  இது நிச்சயம் அவன் தந்திரம் தான். என்னவென்று தான் பார்த்துவிடுவோம்.  உடனே அவளை உள்ளே வரச் சொல்!” என்றான் பீமன். மாலா உடனடியாக ரேகாவை உள்ளே அனுப்பிவிட்டுத் தான் வெளியேறினாள். ரேகா உள்ளே வந்தவள் பலியாவையும், பீமனையும் கீழே விழுந்து வணங்கிவிட்டு பீமன் சொன்னதன் பேரில் அவர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்து கொண்டாள்.

“நீ தான் பானுமதியின் வளர்ப்புத் தாயா?” என்று பீமன் கேட்க ரேகா அதை ஆமோதித்தாள்.

“ஹஸ்தினாபுரத்துக்கு எப்போது வந்தாய்?” பீமன் கேட்க, “காசி இளவரசி துரியோதனனை மணந்து கொண்டு ஹஸ்தினாபுரம் வந்தபோது நானும் வந்தேன் இளவரசே!” என்றாள்.

“ம்ம்ம், உனக்கு என்னிடம் என்ன வேண்டும்?” என்றான் பீமன்.

Wednesday, March 4, 2015

பலியா வாய் திறக்கிறான், தொடர்ச்சி!

அங்கே எவருமில்லை என்றாலும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான் பலியா. பின்னர் மெல்லிய குரலில் பீமனிடம் பேச ஆரம்பித்தான்:”துரியோதனன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான்.  ஏன் தெரியுமா? உன் அண்ணன் யுதிஷ்டிரன் இங்கு வந்து ஹஸ்தினாபுரத்துக்கு முடிசூட்டப்பட்ட பின்னர் அவருக்குக் கீழே யுவராஜாவாகத் தான் செயல்படமுடியாது என்றும், அல்லது வேறொரு சிறிய நாட்டின் ராஜாவாகக் கூடத் தன்னால் யுதிஷ்டிரனுக்குக் கீழ் அவனுக்குக் கட்டுப்பட்டு அரசாள விருப்பமில்லை என்றும் சொல்கிறான்.  அப்படிச் செய்யும்படி அவனைக் கூறினால், அவன் தற்கொலை செய்து கொண்டு விடுவானாம்!” இதைக் கேட்ட பீமனின் கண்கள் ஒரு சின்ன நாட்டியத்தையே ஆடிக் காட்டின. அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“பலியா, அவன் ஒருக்காலும் தற்கொலை எல்லாம் செய்து கொள்ள மாட்டான். நான் உறுதியாகச் சொல்கிறேன், கேள்! அப்படியே அவன் தற்கொலை செய்து கொண்டானெனில் எனக்கு மகிழ்ச்சியே. அவனுக்கு நான் பட்டிருக்கும் கடனைத் திரும்பச் செலுத்த விரும்புகிறேன். எவ்விதத்திலாவது! வாரணாவதத்தில் நாங்கள் ஆறு பேரும் உயிருடன் எரிக்கப்பட்டபோது, அதைச் செய்தது அவன். எங்களை உயிருடன் கொல்ல முயற்சித்தான். அது சரி, தாத்தா பீஷ்மர் அவர்கள் இதைக் குறித்து என்ன சொல்கிறார்கள்?  அவர் என்ன நினைக்கிறார்?”

“தாத்தா பீஷ்மர் எப்போதும் போல் உங்கள் பக்கமே நிற்கிறார்.  உன் அண்ணனை அவர் இந்த ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் ஏற்றி வைக்க விரும்புகிறார்.  அவருடைய அந்த முடிவில் உறுதியாகவும் இருக்கிறார். சகோதரச் சண்டையைத் தவிர்க்க வேண்டியே உங்களை நாட்டை விட்டு வெளியேற்றினார்.  ஆனால் அவர் அதன் பின்னர் அதற்காக மிகவும் வருந்தினார். அவருக்கு அதில் மகிழ்ச்சியே இல்லை.  தாம் செய்த அந்த மாபெரும் தவறுக்கு அவர் பிராயச்சித்தமும் செய்ய விரும்புகிறார்.”

“ஓஹோ, பெரியப்பா திருதராஷ்டிரர்?  அவர் என்ன நினைக்கிறார்?”

“எப்போதும் போல் ஊசலாடும் மனதுடன், பலவீனமான மனதுடன் இருக்கிறார். பிரச்னைகள் வந்தால் கண்ணீரைப் பெருக்கி விடுகிறார். அதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.”

“ம்ம்ம், துஷ்சாசனன், கர்ணன், அஸ்வத்தாமா? இவர்கள் நிலைப்பாடு என்ன? வரவேற்பு வைபவத்தில் கூட அவர்கள் காணப்படவில்லை.”

“உன் சகோதரன் யுதிஷ்டிரன் இங்கே அரசனாக முடிசூட்டப்படும் அதே தருணம் கர்ணனும், அஸ்வத்தாமாவும் இங்கிருந்து வெளியேறி விடுவார்களாம். அது மட்டுமல்ல, குழந்தாய்!  துஷ்சாசனன், தாத்தா பீஷ்மரையும் மிரட்டுகிறான். என்னவென்று தெரியுமா?  உன் அண்ணனை மட்டும் ஹஸ்தினாபுரச் சிம்மாதனத்தில் ஏற்றிவிட்டால் அவனும் அவன் சகோதரர்கள் நூற்றுவரும் தங்கள் தாய்வழிப்பாட்டனின் நாடான காந்தாரத்துக்குச் சென்று விடுவார்களாம்.  இங்கே திரும்பவே மாட்டார்களாம்.”

“ஓ, அப்படியா? அப்போது அது மிகவும் நல்லது பலியா! இது மட்டும் நடக்குமென்றால்!  ஆஹா, நாம் அவர்கள் விரைவில் ஹஸ்தினாபுரம் விட்டு வெளியேற உதவி செய்து விடுவோம். ம்ம்ம்ம், பட்டாபிஷேஹ வைபவத்தை எதிர்க்கப் போகின்றனராமா?”

“எப்படி முடியும் அவர்களால்?” முகத்தில் சிரிப்பு அலைமோதக் கேட்டான் பலியா. “தாத்தா அவர்கள் நிச்சயம் செய்து விட்டார். அரசாணையும் பிறப்பித்துவிட்டார். ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரனை அரசனாக்கும் முன்னரோ, அதன் பின்னரோ நடக்கும் எவ்விதமான அசம்பாவிதங்களுக்கும் யார் பொறுப்போ அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.”

“ம்ம்ம்ம்ம், சரி, குரு வம்சத்து அரசகுலப் படையினர்? தளபதிகள்? சேனாபதிகள்? வீரர்கள்? அவர்கள் நிலை என்ன?”

“தாத்தா அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து விளக்கமாகப் பேசி அனைவரிடமும் உன் அண்ணனை அரசனாக்குவதற்கும், அவனுக்குக் கீழ் விசுவாசமாகப் பணி புரிவதற்கும் உறுதி மொழி வாங்கி விட்டார்.”

“ஆஹா, நல்லது, நல்லது!”

“ஆனால் சின்ன எஜமான், நீங்கள் அவர்கள் அனைவரையும் உங்கள் சாதுர்யத்தால் தோற்கடித்து விட்டீர்கள்!” பலியாவின் முகம் பெருமையால் ஜொலித்தது. “உங்களுடன் ஒரு வலிமை பொருந்திய படையை அழைத்து வந்திருக்கிறீர்கள். உங்கள் படைபலத்தைக் காட்டி விட்டீர்கள்.  அதிலும் அதற்குத் தலைவர்களாகக் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமனையும் அழைத்து வந்து விட்டீர்கள். இவர்களை எதிர்த்து எவர் நிற்பார்கள்? எவராலும் எதிர்க்க முடியாத இவர்களை நீங்கள் உங்களுடன் அழைத்து வந்தது உங்கள் சாதுர்யத்தையே காட்டுகிறது.”

“ஓ, அது நிச்சயம் என்னுடைய சாதுர்யம் தான்.  நான் தான் அதைச் செய்தேன்.” பீமன் தன்னுடைய முன் யோசனையை நினைத்துத் தனக்குள்ளே மகிழ்ந்தான்.  நான் தான் கிருஷ்ண வாசுதேவனை எங்களுடன் கிளம்பி வருவதற்கு வற்புறுத்தினேன்.  அதோடு மட்டும் இல்லை; எங்கள் மாமனார் ஆன துருபதனிடம் எவ்வளவு படை வீரர்களைத் தர முடியுமோ அவ்வளவு வீரர்களைத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.  ஏனெனில் இங்குள்ள எங்கள் எதிரிகள் எங்கள் மேல் அவர்கள் சுட்டு விரலைக் கூட வைக்கக் கூடாது.  அப்படி வைத்தார்கள் எனில்…………….நான் அவர்களை………….” தன் இரு கரங்களாலும் அவர்கள் தலைகளை உடைப்பது போல் பாவனை செய்தான் பீமன்.