Thursday, June 30, 2016

எதிர்பாராமல் கிடைத்த கூட்டணி!

மௌனமாகவே இருந்த த்வைபாயனர் தன் மனதுக்குள் தன்னுடைய வழிகாட்டியான சூரிய பகவானை வேண்டிப் பிரார்த்தனைகள் செய்தார். அவரை முழு மனதோடு வழிபட்டார். தனக்கு தைரியத்தைக் கொடுக்கும்படியும் வேண்டினார். அங்கிருந்த மற்ற ஸ்ரோத்ரியர்களுக்கும், ஆசாரிய விபூதிக்கும் இப்படி நிலை குலைந்து போயிருக்கும் த்வைபாயனரை தர்மசங்கடத்தில் மூழ்கி இருக்கும் த்வைபாயனரை ரசிக்கத் தூண்டியது. த்வைபாயனரோ தன் மனதினுள், “எல்லாம் வல்ல ஒளிக்கடவுளே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் தன் கண்களைத் திறந்த த்வைபாயனர் அனைவரையும் பார்த்துப் பொதுவாக, “ஆசாரியரே, என்னை மன்னியுங்கள். நான் சொன்னதையும் செய்ததையும் மன்னித்து மறந்துவிடுங்கள்!” என்று சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்தினார். அவர் குரல் முற்றிலும் உடைந்து போயிருந்தது. என்றாலும் சமாளித்துக் கொண்டு தன் கைகளைக் கூப்பி அனைவரையும் வணங்கினார். “நான் செய்த தவம் போதுமானதாக இல்லை. இங்குள்ளவர்களின் மனதை மாற்றும் சக்தி அதற்கு இல்லை! என் கனவுகளை நனவாக்கும் சக்தி அந்தத் தவத்துக்கு இல்லை!” என்று மெல்லிய குரலில் முணுமுணுப்பது போல் கூறினார்.

பின்னர் ஆசாரிய விபூதியின் கால்களிலும் அவர் தந்தையின் கால்களிலும் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். மற்றவர்களின் பாதங்களையும் பணிந்து தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தன்னுடைய தண்டத்தையும், சுரைக்குடுக்கையையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்வதற்காகத் திரும்பினார். அப்போது கிழவர் பிரமிஷ்டர் தன் கைகளை நீட்டி அவரைத் தடுத்தார். மெல்லிய சுருங்கிப் போன தன் கைகளால் அவரைத் தடுத்தவண்ணம், “த்வைபாயனா, திரும்பிச் செல்லாதே! வா! இங்கே வா!” என்று ஜாடை காட்டினார். “நீ ஏன் போகிறாய்? மகனே! இதோ இப்படி உட்கார்!” என்று இடத்தையும் காட்டினார். ஆசாரிய விபூதிக்கோ கோபம் வந்தது. “அப்பா, அப்பா, என்ன காரியம் செய்கிறீர்கள்? அவன் போகட்டும்! அவனைப் போகவிடுங்கள்!” என்று தன் தந்தையின் மேல் கை வைத்துச் சொன்னார். ஆனால் கிழவரோ விபூதியிடம், “இதோ பார் விபூதி! நான் சொல்வதைக் கேள்!” என்று பேச ஆரம்பித்தார். பல்லாண்டுகளாக இந்த வேதம் ஓதும் உலகில் அனுபவப் பட்டுத் தேர்ந்து அதில் தலைமை வகித்து வந்தவர் என்பதால் அவர் குரலில் அதற்கான அதிகாரமும் தொனித்தது. குரலில் ஓர் தீர்மானமும் தெரிந்தது. பரம்பரையாக வந்த ஞானம் அவர் நடத்தையில் தெரிந்தது. ஆகவே விபூதியால் அவரை எதிர்க்க முடியவில்லை. ஸ்ரோத்ரியர்களோடு பழகிப் பழகி அவர்களுக்குத் தலைமை வகித்துக் குலபதியாகவும் கோத்திரத் தலைவனாகவும் இருந்தபடியால் அவர் பேச்சை மீறவும் முடியவில்லை. பிரமிஷ்டர் மேலே பேசினார். “இந்த இளைஞன் சொல்வதில் விஷயம் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் மாற்றங்கள் மட்டும் வந்து விட்டால் ஸ்ரோத்திரியர்கள் மனம் வைத்து மாறி விட்டால், வேதங்களையோ வேதங்களை ஓதுபவரையோ எவராலும் வெல்ல முடியாது! உயர்ந்த இடத்திற்குப் போய்விடும். ஸ்ரோத்திரியர்கள் இதன் மூலம் பழைய பலத்தோடும், வளத்தோடும் நிம்மதியாக வாழ்வார்கள்!”

“என்ன சொல்கிறீர்கள் தந்தையே? உங்கள் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வரலாமா? இவ்வுலகில் யார் வேண்டுமானலும் சொல்லலாம்! நீங்கள் சொல்லலாமா?” என்று விபூதி ஆச்சரியத்துடன் தந்தையைப் பார்த்துக் கேட்டார். “ஆம், நான் தான் சொன்னேன்! ஆனால் காரணமில்லாமல் சொல்லவில்லை! காரண, காரியங்களுடனேயே சொல்கிறேன்.” என்ற கிழவர் சற்று நிறுத்தினார். பின்னர், “நான் இந்தப் பரம்பரையாகத் தொடர்ந்து வரும் பகையில் அந்த மனவேறுபாட்டில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறேன். இன்னமும் இருக்கிறேன். வேதங்களின் தொகுப்பும், அதன் உள்ளடக்கமும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தையே கொண்டு இருந்து வருகிறேன். ஆனால் இதன் மூலம் நாம் சாதித்தது என்ன? இந்தப் பிள்ளை சொல்வது போல் ஸ்ரோத்திரியர்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்பட்டது தான் மிச்சம்! ஒருவருக்கொருவர் விரோதிகளாகவே வாழ்நாளைக் கடந்து வருகிறோம்.இந்தப் பகையால் நாம் மனித குலத்தை முன்னேற்றுவதற்கான வழிகளைக் கண்டறிய விடுவதில்லை. நம்முடைய தபோபலன் அத்தனையும் இந்தப் பகை கவர்ந்து இழுத்து விடுகிறது. ஆகவே எப்பாடுபட்டேனும் இந்தப் பரம்பரைப் பகை ஒழிய வேண்டும்!” என்றார் கிழவர்.

விபூதிக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! இது என்ன விந்தை! பேசுவது தன் தந்தைதானா? த்வைபாயனரையும் தன் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தவருக்கு ஓர் சந்தேகம் ஜனித்தது. ஒரு வேளை……….. ஒரு வேளை………. இந்தப் பிள்ளை தன் அதர்வ வசிய சக்தியைத் தந்தையிடம் பிரயோகம் செய்து விட்டானோ? அவர் தந்தை இப்போது பேசியதெல்லாம் அவர் பூரண நினைவுடன் கூறியவையா? சந்தேகத்துடனேயே அவர் தந்தையிடம், “என்னை இதற்குக் கூப்பிடாதீர்கள் தந்தையே! நான் வேதத்தின் ஓர் பாகம் தான் அதர்வம் என்பதையும் ஒத்துக்கொள்ள மாட்டேன். வேதம் நான்கு பகுதிகளால் ஆனது என்பதையும் ஏற்கப் போவதில்லை!” என்றார் தீர்மானமாக! திரும்பித் தன் மகனைப் பார்த்தார் கிழவர் பிரமிஷ்டர். அவர் கண்கள் மங்கிக் கிடந்தாலும் அதிலும் அவர் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. “மகனே! நீ வாஜ்பேய யக்ஞத்தை நடத்தித் தர ஏன் மறுக்கிறாய்? ஏனெனில் ஒரு சில படித்த அறிவார்ந்த அதர்வ ரிஷிகள், அல்லது ஸ்ரோத்திரியர்கள் யக்ஞத்துக்குத் தலைமை தாங்கும் பிரம்மன் பதவியில் இருப்பார்கள் என்பதும், அவர்களால் அப்போது அதர்வ வேதம் ஓதப்படும் என்பதாலும் தான் அல்லவா?”

“தந்தையே! தாங்கள் தான் எனக்கு வேதம் மூன்றே பகுதிகள் என்றும் எப்போதும் அதன்படியே நிற்கவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள்! இதனோடு ஒருக்காலும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் சொன்னீர்கள். ” விபூதி கூறினார். தன் தந்தையின் அதீத உணர்ச்சிப் பெருக்கைக் கண்ட விபூதி தன் தந்தையைச் சமாதானம் செய்யும் தோரணையில் அவர் தோள்பட்டைகள் மேல் கையை வைத்துக் கொண்டார். அவர் கைகளும் நடுங்கின. அதே சமயம் கிழவரின் தோள்களும் நடுங்கின. “ தந்தையே! த்வைபாயனன் இப்போது போகட்டும். அவனைப் போக விடுங்கள். நாம் இந்த விஷயத்தைக் குறித்து அவகாசம் கிடைக்கையில் நிதானமாகப் பேசி முடிவு செய்வோம்.” என்றார்.

“அவன் ஏன் போக வேண்டும்?” என்றார் கிழவர். குரல் நடுங்கினாலும் அவர் பேச்சைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் தொடர்ந்த கிழவர், “எனக்கு இத்தனை வயது ஆகியும், என் வாழ்நாள் முழுவதும் வேதங்களுக்குச் செலவிட்டும், ஸ்ரோத்திரியர்களின் நலனுக்குச் செலவிட்டும் வந்திருக்கிறேன். ராஜகுருவாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இந்த இளைஞனைப் போன்ற ஓர் ஸ்ரோத்திரியனை நான் கண்டதில்லை. இவனிடம் தீர்க்கமான சிந்தனை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தைக் குறித்தப் பிரகாசமான பார்வை இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் ஏன் நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஓர் இளைஞன் இனித் தோன்றுவானா என்பதே சந்தேகம்! தோன்றப் போவதில்லை!” என்ற வண்ணம் த்வைபாயனரைப் பார்த்தார். மீண்டும் தன் கைகளைக் கண்களின் மேல் வைத்துக் கொண்டு த்வைபாயனரின் முகத்தை மறுபடி மறுபடி பார்த்தார்.  பின்னர் தன் மகனைப் பார்த்து, “மகனே, எழுந்திரு! வாஜ்பேய யக்ஞத்திற்கான உன்னுடைய ஏற்பாடுகளைத் தொடங்கு! நமக்குள்ளே, ஸ்ரோத்திரியர்களுக்குள்ளே இருக்கும் பிரிவினையும், பரம்பரைப் பகையும் அடியோடு ஒழிந்தாலன்றி தர்மம் நிலைக்காது!” என்றவர் த்வைபாயனரைப் பார்த்து, “அப்படி ஒருகால் விபூதி தான் தலைமை தாங்க முடியாது என்று கைவிட்டு விட்டால் நான் மீண்டும் ராஜகுருவாக ஆகிவிடுகிறேன். குரு வம்சத்தினரின் புரோகிதனாக ஆகிவிடுவேன். ஏற்கெனவே நான் இருந்த அந்தப் பதவியைத் தான் என் மகனுக்காக விட்டுக் கொடுத்திருந்தேன். இப்போது இந்த யக்ஞம் நடைபெற மீண்டும் பதவியை ஏற்பேன்! வாஜ்பேய யக்ஞத்தையும் நடத்தித் தருவேன்! ” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அங்கிருந்த மற்ற ஸ்ரோத்திரியர்களுக்கும் கோபம் வந்து விட்டது. ஆனால் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியவரிடம் என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்று தெரியாமல் வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். செய்வதறியாது திகைத்தனர். கிழவர் மீண்டும் தன் நடுங்கும் குரலில் த்வைபாயனரைப் பார்த்து, “மகனே, த்வைபாயனா! எதற்கும் கலங்காதே! மனதைத் தளர விடாதே! உன்னுடைய கொள்ளுப் பாட்டனார் வசிஷ்டரின் ஆசிரமத்தில் நான் இளைஞனாக இருந்தபோது மாணவனாக இருந்திருக்கிறேன். இந்தச் சண்டையில் எனக்கும் பங்கு இருந்தது. ஆனால் நீ சொல்வது சரி தான் மகனே! சஹஸ்ரார்ஜுனனுடன் ஏற்பட்ட மாபெரும் யுத்தம் அனைத்தையும் முற்றிலும் மாற்றி விட்டது. தர்மம் சிதைந்து போகாமல் காப்பாற்றக் கடமைப் பட்டவர்கள் நாம்! அதற்கு நாம் என்ன விலை கொடுத்தாலும் காப்பாற்றியே ஆக வேண்டும். வாஜ்பேய யக்ஞத்தை நான் தலைமை தாங்கி நடத்தித் தருகிறேன். பிரம்மாவாக இருக்கக் கூடிய தேர்ந்தெடுத்த ஞானம் நிறைந்த அறிவார்ந்த அதர்வனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வா!” என்றார்.

பின்னர் விபூதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்தார். அவர் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஆனாலும் அவர் விடாமல், “நான் இந்தப் பகை அடியோடு ஒழிய விரும்புகிறேன். அதன் பின்னர் நான் முன்னோர்கள் வசிக்கும் பித்ரு லோகத்துக்குச் சந்தோஷமாகச் செல்ல முடியும்! என்னுடைய ஆசிகள் உனக்கு எப்போது உண்டு த்வைபாயனா!” என்றார்.  தன் கைகளை நீட்டி ஆசிகளைத் தெரிவித்ததோடு அல்லாமல் அந்தக் கால கட்டத்தில் இரு சிறந்த ஸ்ரோத்திரியர்கள் ஒருவருக்கொரு சந்திக்கையில் சொல்வது போல த்வைபாயனரிடம், “உன் தபோ வல்லமை பல்கிப்-பெருகட்டும்! தபம் சிறக்கட்டும்!” என்றும் வாழ்த்தினார். த்வைபாயனருக்கு நன்றி மீதூறப் பேச்சே வரவில்லை. கிழவர் தன் மகனிடம் திரும்பி, “நான் மிகவும் களைத்திருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் தூக்கம் வேண்டும்! என்னை உள்ளே அழைத்துச் செல்!” என்றார்.

Wednesday, June 29, 2016

ஆசாரிய விபூதியின் குற்றச்சாட்டு!

“வணக்கத்துக்கு உரிய ஆசாரியரே! இன்றைய காலகட்டத்தில் ஸ்ரோத்ரியர்கள் முன்னைப் போல் வைராக்கிய சித்தம் பூண்டவர்களாயும், வேதங்களில் சொல்லப்படும் சாஸ்திர சம்பிரதாயங்களையும், நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்வதிலும் வேதம் சொல்லும்படியான வாழ்க்கையை வாழ்வதிலும் சிரத்தையுடன் ஈடுபட்டிருக்கின்றனரா? எத்தனை ஸ்ரோத்ரியர்கள் பிரமசரிய விரதத்தை முறையாகக் கடைப்பிடிக்கின்றனர்? அதில் எத்தனை பேர் கிருஹஸ்தாஸ்ரமத்துக்குச் செல்கின்றனர்? செல்பவர்கள் அற வாழ்க்கையை வாழ்கின்றனரா? வேதம் சொல்லி இருக்கும் நீதியையும், நியாயத்தையும் கடைப்பிடித்து அதன்படி தங்கள் இல்லற வாழ்க்கையை வாழ்கின்றனரா? தர்மத்தின் பால் வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் எத்தனை பேர்? பிரமசாரியாகத் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்களில் பிரமசரிய விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் எத்தனை பேர்? திருமணம் செய்து கொள்பவர்கள் அனைவரும் அந்தத் திருமண பந்தத்தின் புனிதத்தைக் காப்பாற்றுகின்றனரா?”

“ஆம், நீ இப்படித் தான் பேசுவாய்! ஏனெனில் சஹஸ்ரார்ஜுனனின் கொடூரம் ஆரம்பித்து எங்கும் போர் மூட்டமாக இருந்த போது நீ பிறக்கவே இல்லை! எத்தனை ஸ்ரோத்ரியர்கள் அமைதியான இல்லறத்தில் ஈடுபட்டிருந்தனர். அனைத்தும் அவனால் ஆட்டம் கண்டது!” என்றார் ஆசாரிய தேவயானர். “ஆம், ஐயா! உண்மைதான்! நான் அப்போது பிறக்கவில்லை தான்! ஆனால் அவர்கள் எந்த மண்ணில் புதைக்கப்பட்டார்களோ அதிலிருந்தே வீறு கொண்டு எழுந்து வரவேண்டாமா? மீண்டும் அந்த மண்ணை வளப்படுத்த வேண்டாமா?” அப்போது குறுக்கிட இருந்த ஆசாரிய விபூதியை பிரமிஷ்டர் தன் கையால் சைகை செய்து தடுத்தார். த்வைபாயனரைப் பார்த்து, “நீ எப்படி இதைச் சரி செய்யப் போகிறாய்? இந்த வேர்களில் பிடித்திருக்கும் விஷக்கிருமிகளை ஒழித்து இவற்றைக் காக்க நீ என்ன ஏற்பாடு செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.

“ஐயா, என்னுடன் கழித்த நாட்களில் வருடக் கணக்காக இதைக் குறித்து என் தந்தையும் நானும் பேசியுள்ளோம். கடைசியில் அவர் கண்டு பிடித்தது என்னவெனில் முற்றிலும் புதிய ரத்தம் பாய்ச்சிய, புத்தம்புதிய இளம் ஸ்ரோத்திரியர்கள் மீண்டும் புத்தம்புதிய வைராக்கிய சிந்தையுடன் கூடிய தர்மவாழ்க்கையை மேற்கொண்டால் எல்லாம் சரியாகும் என்பதே அவர் முடிவான கருத்து! தர்மத்தின் பாதுகாவலர்களாக அவர்கள் வாழ வேண்டும்.”

“ஹூம், வேதங்கள், வேதங்கள், வேதங்கள், ஒன்றுக்கும் உதவா வேதங்கள்!” ஆசாரிய விபூதி ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தார். அவர் எப்படியேனும் இந்த இளைஞனின் பேச்சை நிறுத்தி சம்பாஷணையை முடிக்க எண்ணினார். அதற்கான குறுக்குவழியை எல்லாம் கையாண்டார். ஆனால் கிழவர் பிரமிஷ்டர் இப்போதும் குறுக்கிட்டார்! “எப்படி? எப்படி நீ அதைச் செய்து முடிப்பாய்?” என்று மீண்டும் த்வைபாயனரிடம் கேட்டார். “ஸ்ரோத்ரியர்கள் ஓர் மாபெரும் தவ வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். கடுமையான சுயக் கட்டுப்பாடுகளோடு இருக்க வேண்டும். அது மட்டும் போதாது; வேதங்களில் அவை சொல்லும் நியாய, அநியாயங்களில் அவற்றின் உள்ளார்ந்த பொருளைப் பூரணமாக அறிந்தவர்களாக இருத்தல் வேண்டும். அவற்றில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் ஸ்ரோத்ரியர்கள், க்ஷத்திரியர்களையும், வைசியர்களையும் மற்றவர்களையும் இன்னும் யாரெல்லாம் வளங்களையும் முன்னேற்றத்தையும் விரும்புகின்றனரோ அனைவரும் ஒன்று கூடி ஓர் புதிய உலகைப் படைக்கலாம்.”

“அவர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதற்கான வழி எப்படி? அதை விளக்கமாகச் சொல் எனக்கு!” பிரமிஷ்டர் மீண்டும் கேட்டார். கிழவரின் உறுதியும் பிடிவாதமும் கண்டு ஆசாரிய விபூதி அவர்களுக்கும் மற்ற ஸ்ரோத்ரியகளுக்கும் எரிச்சலாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை! ஏனெனில் கிழவர் தனக்கு ஒரு விஷயம் அல்லது ஓர் நபரை மிகவும் பிடித்து விட்டால் எளிதில் அவர்களை விடமாட்டார். முழு விஷயத்தையும் அவர்கள் மூலம் தெரிந்து கொள்ள விரும்புவார். த்வைபாயனர் பேச ஆரம்பித்தார்.

“ஐயா, நான் நம்புவது என்னவெனில், “ கொஞ்சம் நிறுத்திய த்வைபாயனர் அனைவர் முகத்தையும் பார்த்துக் கொண்டார். மேலே தொடர்ந்து, “வாஜ்பேய யக்ஞம் நடக்க வேண்டும், சக்கரவர்த்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த யக்ஞத்தை ஆசாரிய விபூதி அவர்கள் நடத்தித் தர வேண்டும். அதன் மூலம் தர்மக்ஷேத்திரம் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு தர்மத்தின் ஊற்றுக்கண்ணாகச் செயல்படும். அனைத்துக்கும் ஆதாரமாகவும் அனைத்துக்கும் மையமாகவும் தர்மக்ஷேத்திரம் இருக்கும். ஒவ்வொரு ஸ்ரோத்திரியனின் மனமும், அவ்வளவு ஏன், ஒவ்வொரு ஆண், பெண்ணின் மனமும் இதன் மூலம் தூண்டு விடப்படும். க்ஷத்திரிய தேஜஸ் அனைத்தும் பிரம தேஜஸால் கவசம் போல் காக்கப்படும். இத்தனையும் ஆசாரிய விபூதி அவர்களின் தலைமையில் நடைபெறப்போகும் வாஜ்பேய யக்ஞத்தால் ஏற்படும்.” என்று முடித்தார் த்வைபாயனர்.

“நீ இன்னமும் சின்னஞ்சிறு பையன் தான்!” என்றார் தேவயானர் சற்றும் பொறுமையின்றி! “இப்போதுள்ள ஸ்ரோத்திரியர்களின் மனோநிலை மாற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை! அதற்கான சிறு தேவையும் இல்லை!” என்றார் கோபமாக. ஆசாரிய விபூதியோ கோபமாகச் சீறினார்! “த்வைபாயனா! உன் பார்வையில் எல்லாமே மாறுபடுகின்றன. நீ என்ன நினைக்கிறாய் எனில், இந்த வாஜ்பேய யக்ஞத்தை ஓர் தலை சிறந்த அதர்வனோடு சேர்ந்து நானும் செய்து முடித்தால் தான் எல்லாம் நன்மையாக முடியும் என்பது உன் கருத்து! உன்னுடைய திட்டம் அப்படித் தான் இல்லையா?” என்று கோபமாகக் கேட்டார். மேலும் தொடர்ந்து ஏளனமாக, அலட்சியம் மீதூறும் குரலில், “இளைஞனே! நீ புதுமையாக நினைக்கும் உன் ஆடம்பரமான எண்ணங்களை உன்னுடனேயே நிறுத்திக் கொள்! நான் மட்டும் ஓர் அதர்வனோடு சேர்ந்து வாஜ்பேய யக்ஞத்தை நடத்திக் கொடுத்தேன் எனில் தர்மம் தலைகீழாகப் புரண்டு விடும்! தர்மமே அற்றுப் போய்விடும்! தெரிந்து கொள்! குழப்பம் தான் மிஞ்சும்!” என்று மேலும் சீறினார். மேலும் எழுந்து செல்லப் போவதன் அறிகுறியாகத் தான் ஆசனத்திலிருந்து எழுந்தும் விட்டார்.

அவரைக் கைகூப்பித் தடுத்தார் த்வைபாயனர். “ஆசாரியரே, கோபம் வேண்டாம். தயை கூர்ந்து ஆசனத்தில் அமருங்கள்!” என்று வேண்டிக் கொண்டார். மேலும் தொடர்ந்து, “ஐயா, நீங்களும் தலை சிறந்த தேர்ந்த அதர்வத் தலைவர் ஒருவருமாகச் சேர்ந்து இந்த யக்ஞத்தைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தால் அது வருங்காலத்துக்கும், நம் பின்னால் வருவோருக்கும் உற்சாகத்தைக் கொடுப்பதோடு புதியதொரு பாரம்பரியத்தையும் உருவாக்கும்.” என்றார் த்வைபாயனர். “குருட்டுத் தனமான ஊகங்களில் மனதை ஈடுபடுத்த வேண்டாம்! இதெல்லாம் நடக்கக் கூடியவையே அல்ல!” என்ற வண்ணம் அலட்சியமாகப் பேசிய ஆசாரிய விபூதி தன் தந்தையைப் பார்த்து எழுந்து செல்லலாம் என்னும் பாவனையில் தலையை அசைத்தார். ஆனால் கிழவர் விடவில்லை! “உனக்கு அதர்வ வேதம் குறித்து என்னவெல்லாம் தெரியும்? எவ்வளவுக்கு நீ அறிவாய்?” என்று மேலும் பேச்சைத் தொடர்ந்தார். தன்னைத் தூக்கி உள்ளே அழைத்துச் செல்ல இருந்த விபூதியைத் தள்ளி நிற்கச் சொல்லியும் உத்தரவிட்டார்.

“வாஜ்பேய யக்ஞம் முடிவடைந்ததும், நான் அதர்வ வேதத்தை முழுவதுமாகக் கற்றுத் தேற வேண்டும், அதற்கேற்ற நல்ல குருவும் கிடைக்கவேண்டும்!” என்று அடக்கத்துடன் கூறினார் த்வைபாயனர். அதற்குள்ளாக ஆசாரிய விபூதி குறுக்கிட்டு, “அதர்வ வேதத்தை வேதங்களின் மற்ற மூன்று தொகுதிகளோடு இணைக்கும் முயற்சிக்கு நான் துணை போகவே மாட்டேன்! இப்போதும் இல்லை! இனி எப்போதும் இல்லை, இல்லை, இல்லை!” என்று வலியுறுத்தும் தோரணையில் இரைச்சலாகக் கூச்சல் போட்டார். பின்னர் தன் தோளில் கிடந்த உத்தரீயத்தை ஒரு சீறலுடன் ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்றிப் போட்டுக் கொண்டு தன் தகப்பனாரைத் தூக்குவதற்காகக் குனிந்தார். பின்னர் திடீரென நினைத்துக் கொண்டவராகத் தலையைத் தூக்கிக் கடுமையுடனும் குரோதத்துடனும் த்வைபாயனரைப் பார்த்து, “உனக்கு வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன். நீ அனைத்து ஸ்ரோத்ரியர்களையும் கவரும் விதமாக அதிலும் ஆரியவர்த்தத்திலேயே சிறந்த ஸ்ரோத்திரியனாக உன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறாய்! உன்னை நிலை நிறுத்தி கொள்வதற்காக இப்படி அனைவர் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் ஓர் பின்னணியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறாய்!” துச்சமாக த்வைபாயனரைப் பார்த்தார் ஆசாரிய விபூதி! இந்தக் கருத்து த்வைபாயனரின் உள்ளத்தை மிக மோசமாகத் தாக்கி விட்டது.

ஆசாரிய விபூதியின் குற்றச்சாட்டு சாட்டை அடியாக விழுந்தது த்வைபாயனருக்கு. தலையைக் குனிந்து கொண்டார். சற்று நேரம் எதுவும் பேசாமல் நினைவுகளில் ஆழ்ந்தார். அப்போது அவர் உடலே நடுங்கியது. திடீரென அவர் உடல்நிலையிலும் மாற்றங்கள் தெரிந்தன. அவர் கண்கள் கண்ணீரைச் சுமந்தன.  தோள்கள் குறுகிவிட்டன. கண்களில் தெரிந்த புத்திசாலித்தனம், அதன் பேரொளி மறைந்தாற்போல் காணப்பட்டது. உதடுகள் துக்கத்தில் நடுங்கின. அனைத்து நம்பிக்கையையும் இழந்தவராகப் பார்க்கவே பரிதாபமாகக் காட்சி அளித்தார். உடல் கூட்டிலிருந்து உயிர் பிரிந்தவர் போலக் காட்சி அளித்தார். அங்கே பரிபூரண அமைதி நிலவியது.

Tuesday, June 28, 2016

ஆசாரியரின் கோபம்!

அப்போது தன் கரகரத்த குரலில், “நீ மூன்று வேதங்களையும் நன்கு கற்றுத் தெரிந்து கொண்டிருக்கிறாயா?” என்று பிரமிஷ்டா கேட்டார். அதற்கு த்வைபாயனர் “ஆம், ஐயா!” என்று தலையை ஆட்டித் தெரிவித்தார். “உனக்குக் கற்பித்தவர்கள் யார்?” என்று மீண்டும் பிரமிஷ்டர் கேட்டதற்கு, “என் தந்தை, மதிப்புக்குரிய பராசர முனிவர்!” என்றார் த்வைபாயனர். “உனக்கு வாஜ்பேய யக்ஞத்தைச் செய்ய வேண்டிய நடைமுறை குறித்துத் தெரியுமா?” என்று மீண்டும் பிரமிஷ்டர் கேட்டார். அதற்கு த்வைபாயனர், “நான் ஒரு சில யக்ஞங்களையும், யாகங்களையும் நடத்தி உள்ளேன். ஆனால் வாஜ்பேய யக்ஞத்தை இன்றுவரை நடத்தியதில்லை!” என்றார். அதற்கு ஆசாரிய விபூதி ஏளனம் தொனிக்கும் குரலில், “உனக்கு வாஜ்பேய யக்ஞத்தை நடத்தத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எனக்கு ஒன்றும் இல்லை. நான் அந்த யக்ஞத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது உறுதி!” என்றார்.

அதைக் கேட்டுத் தலை குனிந்த த்வைபாயனர், “ஆசாரியர்களில் சிறந்தவரே! எனக்கு ஒரு வழி  காட்டுங்கள்! இப்போது நான் ஏற்படுத்தி விட்ட இந்த மோசமான முட்டாள்தனமான சூழ்நிலையிலிருந்து நான் தப்பி வெளிவர உதவுங்கள்! நான் இந்த வாஜ்பேய யாகம் செய்வதிலிருந்து என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.” என்றார். ஆசாரிய விபூதிக்கு இப்போது கோபம் வெளிப்படையாகவே வந்தது. ஆகவே அவர் த்வைபாயனரின் பேச்சில் குறுக்கிட்டு, “ இதோ பார் த்வைபாயனா! உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்து கொள்!  எங்கள் விருப்பம் போல் நாங்கள் செய்து கொள்கிறோம். நான் இந்த ராஜகுரு என்னும் பதவியைத் துறந்து உலகத்தார் முன்னிலையில் சந்நியாசம் ஏற்கப் போகிறேன்.” என்றார்.  “ஆஹா, அப்படி எல்லாம் செய்துவிடாதீர்கள், ஆசாரியரே!” என்ற த்வைபாயனர், தன் கைகளைக் கூப்பிய வண்ணம் அவரிடம், “சக்கரவர்த்தி வாஜ்பேய யக்ஞத்தைச் செய்வது என முடிவு செய்து விட்டார். உங்களால் மட்டும் தான் அதை நிறைவேற்றித் தர முடியும்!” என்று வேண்டினார்.

“அதெல்லாம் இயலாது!” என்று தன் தலையை ஆட்டிய விபூதி மேலும் சொன்னார். “நீ இப்படி நடந்து கொள்வதைப் பார்த்து நான் ஏதோ தந்திரம் செய்து உன்னை வாஜ்பேய யக்ஞத்திலிருந்து விலக்கி விட்டதாகச் சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் நினைப்பார்கள். நீயும் அதற்குத் தான் வழி செய்கிறாய் என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அதோடு என்னுடைய இந்த முதிர்ந்த வயதில் இத்தகைய சூழ்ச்சிகளுகெல்லாம் நான் ஆளாக விரும்பவில்லை!” என்றார். த்வைபாயனர் வேண்டிக்கொள்ளும் பாவனையில் ஆசாரியரைப் பார்த்தார். “மன்னனும் மஹாராணியும் அப்படி எல்லாம் நினைக்க மாட்டார்கள். அதற்கு நான் உத்தரவாதம்! நான் ஏன் விலகிக் கொண்டேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.” என்றார். “த்வைபாயனா! உன்னை விட எனக்கு அவர்களைக் குறித்து நன்கு தெரியும்!” என்றார் ஆசாரியர்.

“இந்த யாகத்தைச் செய்யச் சொல்லவேண்டும் என்று என்னைத் தூண்டியதன் காரணத்தைச் சொல்லவா? அதற்கான அனுமதி கிட்டுமா?”

விபூதி தேவையில்லை என மறுக்க அவர் தந்தையோ, “நீ சொல்!” என்று கூறினார். அவர் தன் கைகளால் காதுகளை வளைத்துக் கொண்டு மிகவும் கவனமாக இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு இருந்தார். “நல்லது, ஐயா! என் தந்தை பராசர முனிவர் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதில் தெளிவாக இருந்தார். தர்மம்  படு பாதாளத்தில் சென்று விட்டது. ஸ்ரோத்திரியர்களும் சரி, அவர்களின் புரவலர்களும் சரி பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் ஒற்றுமையே இல்லை! ஆசிரமங்கள் இருக்கின்றன! ஆனால் பெயரளவுக்குத் தான்! அவை ஒருங்கிணைக்கப்பட்டு நன்கு வளமும், புகழும் பெற வேண்டிக் காத்திருக்கின்றன. அப்படி ஸ்ரோத்திரியர்களாலும் அவர்களின் புரவலர்களாலும் ஆசிரமங்கள் காப்பாற்றப்பட்டு வேதங்கள் ரக்ஷிக்கப்பட்டால் கடவுளருக்கும் நம் மேல் பிரியம் வரும். நம்மைக் காப்பார்கள். இல்லை எனில் வேதங்கள் அழிந்து படும். கடவுளர் நம்மைக் காக்க மாட்டார்கள். வேதங்களுடைய புனிதத் தன்மை அழிந்து படும். தர்மம் அடியோடு நசிந்து விடும். பாபங்கள் மலியும். ஆகவே இவற்றைக் காக்கவேண்டியே என்னுடைய ஒவ்வொரு முயற்சியும் இருக்கிறது!” என்றார் த்வைபாயனர்.

“ஹூம், நீ ஸ்ரோத்ரியர்களை ஏன் குற்றம் சொல்கிறாய்? அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்து வருகின்றனர்!” என்று தேவயானர் என்னும் ஸ்ரோத்திரியர் ஒருவர் கூறினார். “அப்படியா? அவர்கள் முயல்கின்றனரா?” என்று பிரமிஷ்டர் அப்பாவியாய்க் கேட்டார். அதற்கு தேவயானர், “ஆம், ஐயா! அவர்களால் முடிந்ததைச் செய்தே வருகின்றனர். இந்த த்வைபாயனன் இந்தக் காலத்து இளம்பிள்ளை. மற்ற இளைஞர்களைப் போலவே இவனும் அவனுக்கு முன் பிறந்த மூத்தோரைக் குறை சொல்கிறான். தன்னுடைய பரம்பரையின் மூத்தவர்கள் செய்தவற்றைத் தவறு என்கிறான். அப்போது எப்படிப் பட்ட குழப்பம் நிறைந்த சூழ்நிலை? அத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் ஆசிரமங்களை நிர்மாணிக்கவே ஒவ்வொருத்தரும் என்ன பாடு பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இவனுக்குத் தெரியுமா? அவரவர் உயிரைப் பணயம் வைத்து எவ்விதமான உதவியும் எதிர்பார்க்காமல் செய்திருக்கிறார்கள்!” என்று கோபம் பொங்கும் குரலில் உணர்ச்சிகரமாகப் பேசினார்.

ஆசாரிய விபூதி மௌனமாக உறைந்து போய் அமர்ந்திருந்தார். அவருக்கு உள்ளூரக் கோபம். இந்த இளைஞன் வாதத்தில் திறமையானவனாக இருக்கிறான். வாதத்தில் அனைவரையும் வீழ்த்தி விடுகிறான், இவனுடன் என்ன பேச்சு? இந்தச் சம்பாஷணையை மேலும் மேலும் வளர்த்துவதில் அவருக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அவரால் தன் தந்தையையோ அல்லது மற்ற ஸ்ரோத்திரியர்களையோ இந்தச் சம்பாஷணை வேண்டாம் என்று சொல்லி நிறுத்த முடியாது. ஆகவே செயலற்று அமர்ந்திருந்தார்.


Sunday, June 26, 2016

த்வைபாயனரின் வேண்டுகோள்!

மந்திரி குனிக் உடன் வர த்வைபாயனர் தான் தங்கி இருந்த கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த மரத்தோப்பினுள் தான் அவர் தங்கி இருந்தார். அங்கே சென்றபோது அவரைக் காணவும், ஆசிகள் பெறவும் உடல்நிலைக்கான மருந்துகளைப் பெறவும் மக்கள் கூட்டம் அலை மோதியது. மாலைக்கான நித்திய வழிபாடுகள் முடிவடைந்ததும், வந்திருந்தவர்களைக் கவனித்து அவரவர் தேவையை நிறைவேற்றி அனுப்பிய த்வபாயனர் அங்கிருந்த குழந்தைகளோடு தன் உணவைப் பங்கிட்டு உண்டார். பின்னர் வந்திருந்த கூட்டம்  மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. மந்திரி குனிக்கிடம் ஆசாரிய விபூதி அவர்களின் இல்லத்துக்குத் தம்மை அழைத்துச் செல்ல வேண்டினார் த்வைபாயனர். குனிக் த்வைபாயனரை அழைத்துச் சென்றார். ஒரு சில குறுகிய சந்துகளைத் தாண்ட வேண்டி இருந்தது. அதன் பின்னர் ராஜகுருவின் வசிப்பிடம் வந்தது. வீட்டைச் சுற்றிலும் மைதானம் விரிந்து பரந்து கிடந்தது. ஓர் பக்கம் பசுக்களைப் பராமரிக்கும் கோசாலை காணப்பட்டது. கோசாலையில் சுமார் பனிரண்டு பசுக்களுக்கு மேல் இருக்கும் போல் தெரிந்தது. வீட்டுப் பெண்மணிகள் அங்கே அமர்ந்த வண்ணம் பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் அதன் பிற்சேர்க்கையாக ஓர் கட்டிடம் காணப்பட்டது. அங்கிருந்து மாணாக்கர்களின் வேத கோஷங்கள் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தன. வீட்டின் முற்றத்தின் நட்ட நடுவில் ஓர் பெரிய அக்னிக் குண்டம் காணப்பட்டது. அங்கு தான் புனிதமான வேள்விகள் நடக்கின்றன என்பது புரிய வந்தது.

ஆசாரிய விபூதி அந்தச் சமயம் வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஓர் தாழ்வறையில் ப்ரமிஷ்டா என்னும் பெயருடைய தன்னுடைய தொண்ணூறு வயதுத் தகப்பனாருடன் ஓர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். வயது அதிகம் ஆகிவிட்டதால் மிகவும் சுருங்கிக் காணப்பட்ட உடலுடனும், மங்கிய கண்களோடும், தொங்கும் கைகளோடும் காணப்பட்டார் அந்தக் கிழவர். வலக்கை ஆடிக் கொண்டே இருந்தது. இவர்களைத் தவிரவும் மூன்று முதிர்ந்த ஸ்ரோத்ரியர்களும் காணப்பட்டனர். அவர்கள் கங்கைக்கரையில் தங்கள் ஆசிரமங்களை நிர்மாணித்து நடத்தி வந்தனர். ஆசாரிய விபூதியைப் போலவே அவர்கள் அந்த ஆசிரமவாசிகளுக்குத் தலைமை வகித்து வந்தார்கள். இவர்களைத் தவிரவும் ஆசாரிய விபூதியின் இரு மகன்களும் காணப்பட்டனர். அவர்கள் நடுத்தர வயதை எட்டி இருந்தனர். அவர்கள் மூன்று வேதங்களிலும் சிறப்புத் தகுதி பெற்று அதன் சாரத்தை உள்வாங்கி இருந்தனர். சாஸ்திர சம்பிரதாயங்களில் தேர்ந்திருந்தார்கள். ப்ரமிஷ்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பட்டு வஸ்திரம் தரித்து ஆபரணங்கள் பூண்டு தங்கள் உயர்ந்த பதவிக்கான அடையாளங்களோடு காணப்பட்டனர். அவர்கள் மிகவும் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கே திடீரென வந்த மந்திரி குனிகரைக் கண்டதும் அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள். குனிகர் த்வைபாயனர் வந்திருப்பதை அவர்களுக்குத் தெரிவித்தார். அவர்கள் அப்போது அங்கே அவரைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தனர்.

த்வைபாயனர் பிரமிஷ்டரைக் கீழே விழுந்து வணங்கினார். மற்ற முதிர்ந்த ஸ்ரோத்திரியர்களையும் வணங்கிக் கொண்டார். ஆசாரிய விபூதி அவரை வரவேற்கும் தோரணையில், “பராசர முனியின் மகனே! இங்கே அமருக!” என்று உபசரித்தார். தன் இரு மகன்களுக்கும் இடையே இருந்த ஆசனத்தில் த்வைபாயனரை அமரச் சொன்ன ஆசாரிய விபூதி, “இந்தச் சமயம் உங்களை நாங்கள் இங்கே எதிர்பார்க்கவில்லை!” என்று கூறினார். அவர் அப்போது அந்தச் சமயம் அங்கே வந்ததில் தங்களுக்கு இருந்த எரிச்சலைச் சற்றும் மறைக்கவில்லை அவர். த்வைபாயனரை அங்கே பார்த்ததில் எவ்விதமான மனமகிழ்ச்சி இருப்பதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. த்வைபாயனர் தமக்கு அளிக்கப்பட்ட ஆசனத்தை ஏற்கவில்லை. ஆசாரிய விபூதிக்கு எதிரே அவரின் சீடரைப் போலத் தரையில் அமர்ந்து கொண்டார். அவரைப் பார்த்து, “வணக்கத்துக்குரிய குருவே, இன்றைய நிகழ்வுகளுக்குப் பின்னர் என்னுடைய வருகை இங்கே விசித்திரமாகவே காணப்படும்.” என்றார். சற்றே நிறுத்திக் கொண்டு மௌனமாக இருந்த த்வைபாயனர் மேலே பேச ஆரம்பித்தார். “ஆசாரியரே! ஆனால் எப்படி இருந்தாலும் வணக்கத்துக்குரிய ஆசாரிய விபூதி தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு ஸ்ரோத்திரியனைத் திரும்ப அனுப்ப மாட்டார் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு!” என்றார்.

“ஸ்ரோத்ரியர்களுக்காக என் வீட்டுக்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்!” அவருடைய குரலுக்கும் அவர் சொன்ன வார்த்தைகளுக்கும் சற்றும் பொருத்தமே இல்லாமல் பெயருக்குச் சொல்கிறாற்போல் இருந்தது.

த்வைபாயனர் எதையும் கருத்தில் கொள்ளாமல் மேலே பேசினார். “ஆசாரியரே! நீங்கள் தான் எனக்குப் பரிகாரமாகச் செய்யவேண்டிய சடங்குகளைக் குறித்துச் சொல்ல வேண்டும். கங்கைக்கரையின் ஆசிரமங்களைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் கறை நீங்கி அவை முன்னிருந்ததை விடச் சிறப்புடனும் வளமுடனும் இருக்கவேண்டிய பரிகாரங்களைக் குறித்துத் தெரியப்படுத்த வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டார். அப்போது பிரமிஷ்டர் பேச ஆரம்பித்தார். “விபூதி நீ பராசரரின் புதல்வன் என்று கூறினான். நான் அவனைச் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.” என்ற வண்ணம் தன் கண்களுக்கு மேல் வலக்கையை வைத்துக் கொண்டு த்வைபாயனரைக் கூர்ந்து பார்த்தார் கிழவர். மேலும் தொடர்ந்து, “நான் பார்த்தது மஹா முனிவரான வசிஷ்டரின் ஆசிரமத்தில்!” என்றும் கூறினார். ஆசாரிய விபூதிக்கு உடலும் மனமும் இறுக்கமடைந்தது அவர் முகத்திலே தெரிந்தது. த்வைபாயனரைப் பார்த்து அவர், “பரிஹார ஹோமங்களைக் குறித்து என்னிடம் கேட்பதில் என்ன பலன்? அப்படி உனக்கு நீ ஏதேனும் பாவம் செய்துவிட்டதாகத் தெரிந்தால், உனக்குத் தெரிந்திருக்கும் நியதிகளாலேயே அவற்றைச் சரியான முறையில் பரிகாரங்கள் செய்ய உதவும்.” என்றார்.

“ஐயா, தாங்கள் என்னை மன்னிக்கவே இல்லை என்பதை நான் உணர்ந்ததால் தான்!.....” என்று நிறுத்திய த்வைபாயனர், மேலே தொடர்ந்து, தன் சிறுபிள்ளைத் தனமான சிரிப்பைச் சிரித்தார். அது பார்க்கக் கவர்ச்சிகரமாக இருந்தாலும் ஆசாரியரின் மனதில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. “நான் உன்னை மன்னித்தால் என்ன? மன்னிக்காவிட்டால் என்ன? அதனால் என்ன நடந்துவிடப் போகிறது?” என்று ஆசாரியர் குரலில் கடுமையுடன் கேட்டார்.

“ஓ, அது எனக்குக் கவலையைத் தருமே ஆசாரியரே! நான் வருந்துகிறேன். வணக்கத்துக்குரிய ஆசாரியரே, என் மன்னிப்பு மட்டும் உண்மையானதாக இருந்தால் கட்டாயம் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள். நானே சரியாக இல்லாதபோது மற்றவர்கள் சரியாகவும் ஒழுங்காகவும் இருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில் எவ்விதமான நியாயமும் இல்லை அல்லவா? என்னை ஒரு வேண்டுகோள் வைக்க அனுமதிப்பீர்களா, வணக்கத்துக்குரிய ஆசாரியரே!” என்று த்வைபாயனர் கேட்டார். ஆசாரியரின் பொறுமை பறி போய்விட்டது. மிகவும் கோபத்துடன் கூடிய கடுமையான குரலில் அவர் பேச ஆரம்பித்தார். “ நீ கேட்பது வாஜ்பேய யக்ஞத்துடன் தொடர்புடையது எனில் நான் ஆரம்பத்திலேயே அதை நிராகரிக்கிறேன்.” என்றார்.

“ஏன் நான் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்? கடவுள் கூடப் பாவம் செய்கிறவர்களின், செய்தவர்களின் குரலைச் செவிமடுக்கிறான்.” அங்கிருந்த அனைவர் முகங்களிலும் ஏளனச் சிரிப்பு ஒன்று காணப்பட்டது. ஆனால் இதில் கிழவர் பிரமிஷ்டர் கலந்து கொள்ளவில்லை. அவர் தன் காதுகளின் மேல் உள்ளங்கையை வைத்து வளைத்துக் கொண்டு த்வைபாயனர் சொல்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் சொல்வதை ஆமோதிப்பதாகத் தலையையும் ஆட்டி மேலே அவரைப் பேசும்படி சைகையில் சொன்னார். அதைக் கவனித்த ஆசாரிய விபூதி, “சரி, சரி, நீ என்ன சொல்லவேண்டுமோ அதைச் சுருக்கமாகச் சொல்!” என்றார். இந்த இளம் துறவியைத் திரும்ப அனுப்பி விட்டுத் தான் உள்ளே செல்ல விரும்பினார் விபூதி! ஆனாலும் வேறு வழியின்றி அங்கே இருந்து அவர் பேச்சைக் கேட்கும்படி ஆகிவிட்டது.

“வணக்கத்துக்கு உரியவரே, ஆசாரியரே! நான் உங்களுக்குச் செய்த பாவத்தைக் கழுவ விரும்புகிறேன். அதற்குப் பரிகாரம் தேட விரும்புகிறேன்.” சற்று நேரம் மௌனமாக இருந்து யாரேனும் ஏதாவது பதில் சொல்வார்களா என எதிர்பார்த்தார் த்வைபாயனர். யாரும் வாயையே திறக்கவில்லை. ஆகவே மேலே தொடர்ந்தார். “ ஆசாரியரை நான் வணங்கிக் கேட்டுக் கொள்வதெல்லாம் வாஜ்பேய யக்ஞம் செய்வதிலிருந்து என்னை விடுவித்துவிட வேண்டும்………..” குறுக்கிட்ட ஆசாரியர், “ஆம், அதன் மூலம் மஹாராணியின் கடுமையையும் கொடுமையையும் நான் எதிர்கொள்ள வேண்டும்.” என்று  சீறினார்.

“ஆஹா, அப்படி எல்லாம் நடவாது ஆசாரியரே! மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தினி கோபம் அடைய மாட்டார். நான் உறுதியாகச் சொல்கிறேன். அதிலும் நான் ஒரு குற்றவாளி,  உயர்ந்த மனிதர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கிய குற்றவாளி என்பது மட்டும் மஹாராணிக்குத் தெரிந்து விட்டால் அவரே நான் வாஜ்பேய யக்ஞத்தில் கலந்து கொள்வதை ஒத்துக்கொள்ள மாட்டார்.  நான் அதற்குத் தகுதி படைத்தவன் அல்ல என்பதை அவர் தெரிந்து கொண்டால் எதுவும் சொல்ல மாட்டார்.” என்றார் த்வைபாயனர்

Friday, June 24, 2016

"இவன் என் மகன்!"

த்வைபாயனர் சற்று நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் வேண்டிக் கேட்கும் தோரணையில் ஆசாரிய விபூதியைப் பார்த்தார். “ஆசாரியரே, இந்தப் பரம்பரைப் பகையை நீக்க வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? புத்தியும், ஞானமும் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்பதே வேதத்தின் சிறப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே! இதனால் வேதங்களின் மதிப்பு ஒரு போதும் குறையப் போவதில்லையே!” என்றார். சக்கரவர்த்தி தன் மெலிந்த கையைத் தூக்கித் தான் பேச வேண்டும் என்பதாக சைகை காட்டினான். பின்னர் ஆசாரிய விபூதியைப் பார்த்த வண்ணம் மெல்லிய குரலில் பேசினான். “ ஆசாரியரே, மதிப்புக்குரிய த்வைபாயனரால் என் உயிர் பிழைத்திருக்கிறது. எனக்கு உயிர் கொடுத்தவர் அவரே! மேலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டதாலேயே நேற்றைய ராஜசபைக் காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறின. அவருடைய விருப்பங்களை நாம் நிறைவேற்றித் தர வேண்டும்.” என்று கூறினான்.

அதற்கு ஆசாரியர், “மன்னா! நீ சொல்வது சரியே! முனிவர்களில் சிறந்தவரான க்ருஷ்ண த்வைபாயனர் சொல்வதை நாம் ஏற்கத் தான் வேண்டும். அவருடைய விருப்பங்களை நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் என்னை அதில் போலியாக ஈடுபடும்படி செய்யாதே! எனக்குள்ளே இருக்கும் நம்பிக்கையை நான் நாசமாக்க நினைக்கவில்லை! வெளிப்பார்வைக்குத் தன் தவறுக்காக வருந்துபவர் போல் தோன்றினாலும் ஆசாரிய விபூதி உள்ளூர வெறுப்புடனும், அவமதிப்புடனும் பேசினார். அவரது பேச்சில் இது மறைமுகமாகப் புகுத்தப்பட்டிருந்தது. காங்கேயர் ஆசாரியர் பக்கம் திரும்பி, “மாட்சிமை பொருந்திய ஆசாரியரே, இப்போதுள்ள ஸ்ரோத்திரியர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்தப் பகையை நீக்கி அதை சுமுகமாக முடித்து வைக்க ஒரு வாய்ப்பு உங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

“அது ஒன்றும் பரம்பரைப் பகை அல்ல, காங்கேயரே! நம்பிக்கை! உண்மையை, சத்தியத்தை நம்புவது! நேர்மையாகவும், உண்மையாகவும் நான் வேதத்தை முழு மனதோடு நம்புகிறேன். மேலும் அது மூன்றே பகுதிகளைக் கொண்டது என்றும் மூன்று வேதங்களே உள்ளன என்றும் நம்பி வருகிறேன். அப்படி இருக்கையில் இந்த அதர்வ வேதத்தை நான் வேதங்களின் ஒரு பகுதியாக எப்படி ஏற்பேன்?” என்று கேட்டார். மேலும் மறுப்பாகத் தலையையும் ஆட்டினார். த்வைபாயனருக்குத் தாம் இருந்த தர்மசங்கடமான நிலை நன்கு புலப்பட்டது. என்றாலும் புன்னகையுடனேயே பேசினார். “ஆசாரியரே, இந்தப் பரம்பரைப் பகை வாஜ்பேய யக்ஞத்திலும் உள்புகவேண்டும் என்பதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த யக்ஞம் ஆசாரிய விபூதி அவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று சொல்கிறாரோ அப்படியே அதன் தலைமைப் புரோகிதர் (அத்வார்யு) செய்து கொடுப்பார். ஆசாரிய விபூதி அவர்களின் இந்த வெளிப்படையான பேச்சை நான் மிகவும் மதிக்கிறேன்; அதில் மகிழ்ச்சியும் அடைகிறேன். மேலும் அவர் ஒன்றும் தவறாக எதுவும் சொல்லவும் இல்லை; செய்யவும் இல்லை; இவர் கூறுவதைத் தான் என் கொள்ளுப்பாட்டனார் வசிஷ்ட முனிவரும் கூறி வந்திருக்கிறார்.”

ஆசாரிய விபூதி மீண்டும் தலையசைத்து மறுப்பைத் தெரிவித்தவர் மன்னனைப் பார்த்தார். வேண்டுதல் கேட்கும் தோரணையில், “மன்னா, எனக்கு இப்போது வயது அதிகம் ஆகிவிட்டது. அதிலும் உன் உடல் நிலை சரியில்லாத சமயத்தில் த்வைபாயனன் வந்து அதிசயங்கள் செய்து உன்னைக் காப்பாற்றிக் கொடுத்த அந்தக் கணத்திலேயே எனக்குப் புரிந்து விட்டது. இனி குரு வம்சத்திற்கு ஆசாரியனாக நான் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அது முடிவுக்கு வந்து விட்டது! ஓர் இளம் துறவி, இளம் முனிவர், அது ஒரு வேளை த்வைபாயனராகவே இருக்கட்டும்! இங்கே ராஜகுருவாக எனக்குப் பின்னர் பொறுப்பேற்கத் தகுதி வாய்ந்தவரே ஆவார்!” என்று முடித்தார். அடக்கத்துடன் குறுக்கிட்ட த்வைபாயனர், “ஆசாரியரே! என்னால் இந்தப் பொறுப்பை நிர்வகிக்க முடியாது! இதை நான் முற்றிலும் ஏற்கப் போவதில்லை. இங்கே ராஜகுருவாக நான் அமர்ந்து விட்டால் எதற்காக நான் இத்தனை பிரயாசைப் படுகிறேனோ அது ஒருக்காலும் நிறைவேறாது. வேதங்களை மீண்டும் புனர் நிர்மாணம் செய்வதும், அதை ஒட்டி தர்ம சாம்ராஜ்யத்தை ஏற்படுத்துவதும், தர்மக்ஷேத்திரத்தைப் புதுப்பிப்பதுமே என் வாழ்க்கை லட்சியங்கள். அதிலிருந்து நான் ஒருபோதும் வழுவ மாட்டேன்!” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மஹாராணி சத்யவதி அவ்வளவு நேரமும் அனைவரின் பேச்சுக்களையும் கேட்டவண்ணம் மௌனமாக அமர்ந்திருந்தாள். அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தாள். இப்போது அவள் திடீரெனத் தன் முக்காட்டை நீக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தாள். அவள் கண்கள் கோபத்தில் ஜ்வலித்தன. முகம் நெருப்பிலிடப்பட்ட தாமிரம் போல் செக்கச் சிவந்திருந்தது. அவள் பேச்சு தீர்மானமாக இருந்தது. “ மாட்சிமை பொருந்திய மன்னா, ஆரிய புத்திரரே! நான் இந்த சம்பாஷணையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நான் ஒரு பெண் தான்; என்னால் வேதங்கள் மூன்று தொகுப்புக்களா அல்லது நான்கு தொகுப்புக்களா என்பதைக் குறித்து விரிவாகப் பேச இயலாது! அவ்வளவுக்கு எனக்குத் தகுதியும் இல்லை!”

அங்கே அமர்ந்திருந்த அனைவருக்கும் மன்னனுக்கும் ஆச்சரியம் மேலிட்டது. அதிலும் எப்போதும் இனிமையாகவும் மென்மையாகவும் பேசும் மஹாராணிக்கு இவ்வளவு கோபமும் வருமா? அவள் குரலில் இத்தனை கடுமையும் காட்டுவாளா? கண்களில் எத்தனை ஆக்ரோஷம்? மன்னன் நிமிர்ந்து அமர்ந்தான். “ஆரிய புத்திரரே, ஸ்ரோத்திரியர்களுக்குள்ளே எத்தனை மனவேறுபாடுகள் இருந்தாலும் அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைச் சொல்லி விடுகிறேன். நானோ என்னுடைய இரு புத்திரர்களோ த்வைபாயனர் இல்லாத எந்த யக்ஞத்திற்கும் வரப்போவதில்லை. நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. வாஜ்பேய யக்ஞம் நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி, த்வைபாயனர் ஏற்படுத்தப் போகும் ஆசிரமம் நன்கு நிர்மாணிக்கப்படுவதைக் காண்பதற்காக நாங்கள் அதிலும் நான் குருக்ஷேத்திரம் செல்லப் போகிறேன். அங்கே கட்டாயம் ஆசிரமம் ஏற்படுத்தப் படவேண்டும்.” சற்றே நிறுத்தினாள் சத்யவதி.

பின்னர் மீண்டும் ஜ்வலிக்கும் கண்களோடு அவள் கூறியதாவது! “மாட்சிமை பொருந்திய முனிவரின் உறுதிமொழி அவருடைய சபதம்” இந்த இடத்தில் அவள் குரல் தழுதழுத்தது. முனிவரின் பெயரை அவளால் கூற முடியவில்லை! சற்றே நிறுத்திவிட்டு……….”அவருடைய கடைசி ஆசை நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று முடித்தாள். அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தார்கள். எவருக்கும் பேச்சே வரவில்லை. அன்று வரை மஹாராணிக்கு இவ்வளவு கோபம் வரும் என்றோ, அவள் கோபமாகப் பேசுவாள் என்றோ மன்னனோ மற்றவர்களோ அறிந்திருக்கவில்லை. அதன் பின்னர் சத்யவதி சும்மா இருக்கவில்லை. ஆசாரிய விபூதியை நோக்கித் திரும்பினாள். “ ஆசாரியரே, நான் ஹஸ்தினாபுரம் வந்ததில் இருந்து நீங்கள் எனக்கு ஆசானாக இருந்து வருகிறீர்கள். எனக்குப் பல விஷயங்களையும் கற்பித்தீர்கள். மேலும் ஆரியபுத்திரருக்கு மிகவும் விசுவாசமாக இருந்து வருகிறீர்கள்.  உங்களுடைய புத்திக்கும் ஞானத்துக்கும், விவேகத்துக்கும் நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறேன். மதிக்கிறேன். ஆனாலும் ஆரிய புத்திரரின் விருப்பங்களுக்கும் மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும். அவர் விரும்புகிறபடியே எல்லாம் நடக்க வேண்டும். நீங்கள் இந்த வாஜ்பேய யாகத்துக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க வேண்டும் என்று நானும் இப்போது விரும்புகிறேன். அது எங்கள் கட்டளையும் கூட. இப்போது ஆரியபுத்திரர் மிகவும் களைத்து விட்டார். ஆகவே சற்று ஓய்வு எடுக்கட்டும். நீங்கள் ஹஸ்தினாபுரத்தின் மற்ற ஸ்ரோத்திரியர்களையும் இது குறித்துக் கலந்து பேசி முடிவு செய்யுங்கள்.” என்ற சத்யவதி தவிர்க்க முடியாத மதிப்புடனும் மரியாதையுடனும் ஆசாரிய விபூதியைப் பார்த்தாள்.

த்வைபாயனர் தன் தாய்க்கு இவ்வளவு கோபம் வரும் என்று தெரிந்திருக்கவில்லை. அவருக்குத் தன் தாயின் இந்த மாபெரும் அன்பு அலை தன்னை மூழ்கடித்துவிட்டதாகத் தோன்றியது. ஆசாரியர் ஏதும் பேசாமல் மௌனமாக எழுந்து மன்னனையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து விட்டு அவ்விடம் விட்டு அகன்றார். த்வைபாயனரும் கிளம்பத் தயார் ஆனார். அங்கிருந்த அப்போதைய சூழ்நிலை மிகவும் இறுக்கமாக இருந்தது. எழுந்து கொண்டு தன் தண்டத்தையும் சுரைக்குடுக்கையையும் எடுத்துக் கொண்ட த்வைபாயனர் மன்னனையும், சத்யவதியையும் ஆசீர்வதிக்கக் கைகளை உயர்த்தினார். அவர் தன் வலக்கையை உயர்த்த இருந்த அதே தருணத்தில் மீண்டும் சத்யவதி குறுக்கிட்டாள். அவர் அவ்வாறு செய்யும் முன்னரே ஆணையிடும் தோரணையில் சத்யவதி பேச ஆரம்பித்தாள். “இப்படி இல்லை!” என்றவள், “கிருஷ்ணா, நீ ஆரியபுத்திரரையும், என்னையும்  தினம் தினம் இங்கிருந்து கிளம்புகையில் ஆசீர்வதித்து விட்டுக் கிளம்புகிறாய். இப்படி ஒரு மரியாதை எனக்கு இனிமேல் தேவையில்லை! நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை!” என்றாள்.

சக்கரவர்த்தி ஷாந்தனுவுக்குக் கண்கள் விரிந்தன. ஆச்சரியம் மீதூற சத்யவதியையே வெறித்தான். இப்படி ஒரு அதிரடியான பேச்சை சத்யவதியிடமிருந்து அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதன் முக்கியத்துவமும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் சத்யவதி அவனைப் பார்த்து, “ஆர்ய புத்திரரே, நமக்குத் திருமணம் ஆகும் முன்னர் நான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன் அல்லவா? எனக்கு ஏற்கெனவே ஓர் மகன் உண்டு என்பதைக் குறித்துத் தெரிவித்திருக்கிறேன். அவன் தந்தையுடன் சென்று விட்டான் என்றும் கூறி இருந்தேன்.” தன் விரல்களை த்வைபாயனரை நோக்கி நீட்டியவண்ணம் சத்யவதி தெரிவித்தாள். “இதோ இவன் தான் அந்த மகன்!”  மன்னன் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சத்யவதிக்கு மன நலம் பாதிக்கப்பட்டு விட்டதோ என்று சம்சயித்தான். ஆனால் சத்யவதியோ, “கிருஷ்ணா, சக்கரவர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிக் கொள்! அவர் உன் தந்தையின் ஸ்தானத்தில் இப்போது இருக்கிறார். உனக்கு ஓர் தெய்வத்தைப் போன்றவர் இவர்!” என்றாள்.

Tuesday, June 21, 2016

ஆசாரிய விபூதியின் எதிர்ப்பு!

அதற்கு த்வைபாயனர், “வாஜ்பேய யக்ஞம் பதினேழு நாட்களில் முடிவடையும் என்பதை ஆசாரியர் அறியாமல் இருக்க மாட்டார். மற்ற விரிவான யாகங்களையும், யக்ஞங்களையும் போல இதற்கு மாதக்கணக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியதில்லை. மெல்ல மெல்ல மஹாராஜாவைப் பயணம் செய்ய வைத்து அழைத்துச் செல்ல முடியும். அவருடைய உடல்நிலைக்குக் கேடு வராமல் கூட்டிச் செல்லலாம். மஹாராஜா விரும்பினால் நான் அவருடன் துணைக்குச் செல்வேன்.” என்றார்.

“இது ஓர் கடுமையான போராட்டங்களும் சவாலும் நிறைந்த ஒன்று. இந்த குருவம்சத்தின் ராஜகுரு என்னும் முறையில் எனக்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை. மஹாராஜா அங்கே செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது!”

“அப்படி இல்லை ஐயா! சூரிய பகவான் மஹாராஜாவின் உயிரைக் காத்து ரக்ஷித்ததின் காரணமே அவர் அந்த ஓநாய்களின் சாம்ராஜ்யத்திற்குச் சென்று அங்கே இப்படியான ஓர் யாகத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகவோ என்றே பல சமயங்களில் நான் நினைக்கிறேன். தர்மக்ஷேத்திரத்தில் மன்னரால் யாகம் செய்யப்பட வேண்டும். மன்னர் யாகத்தைச் செய்யத் தயாரானால் குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருமே அங்கே கூடிவிடுவார்கள். மற்ற அரசர்கள், சிற்றரசர்கள் என்று யாரெல்லாம் ஷாந்தனு மஹாராஜாவைச் சக்கரவர்த்தியாக அங்கீகாரம் செய்திருக்கின்றனரோ அனைவரும் கூடிவிடுவார்கள். மற்ற அரசகுல விருந்தாளிகளையும் எதிர்பார்க்கலாம். அதோடு இல்லாமல் ஸ்ரோத்ரியர்களும் நூற்றுக்கணக்கில் வந்து கலந்து கொள்வார்கள்.

"மேலும் யாகம் அங்கே முடிவடைந்ததும் வந்திருக்கும் ஸ்ரோத்ரியர்களில் பலரும் அங்கே ஆசிரமம் அமைத்துத் தங்கவும் விருப்பம் தெரிவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அப்படி அவர்கள் சொன்னால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! மீண்டும் பிரம்மதேஜஸுக்கும் க்ஷத்திரிய தேஜஸுக்கும் விவாகம் நடைபெறும். இரண்டும் ஒன்றாக இணையும். குருவம்சத்துத் தலைவர்களின் சக்தியால் இது நடைபெறும்.”


ஷாந்தனு காங்கேயன் பக்கம் திரும்பி, “த்வைபாயனரின் விருப்பம் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்!” என்று கூறினார். “தங்கள் கட்டளைப்படியே, தந்தையே!” என்ற காங்கேயர் மேலும் தொடர்ந்து, “நான் இப்போதே மந்திரி குனிகரை வரவழைத்து உடனடியாக நூற்றுக்கணக்கான வேட்டைக்காரர்களையும், வன அலுவலர்களையும் அனுப்பி வைக்கச் சொல்கிறேன். அங்கே காட்டு மரங்களையும், காட்டு மிருகங்களையும் அவர்கள் முறையே வெட்டியும் மிருகங்களை விரட்டியும் அந்த இடத்தைச் சுத்தம் செய்து தரச் சொல்கிறேன். த்வைபாயனரே, குனிகர் உங்களுடன் வந்து அங்கே அனைத்து வேலைகளையும் செய்து தருவார். வாஜ்பேய  யாகம் நடைபெறுவதற்கான வேலைகள் அனைத்தும் நன்கு நடக்கும். கவலை வேண்டாம்!” என்றார் காங்கேயர்.

இதைக் கேட்டதும் த்வைபாயனர், மன்னனையும் காங்கேயரையும் பார்த்து, “ மன்னாதி மன்னா! அப்போது நான் இங்கிருந்து செல்ல விடைபெறுகிறேன். உங்களிடம் நான் சொன்னதைப் போல் என் தந்தையின் சீடர்களை எல்லாம் நான் ஒன்று திரட்ட வேண்டும். ஒருவேளை நான் பராசர கோத்திரக்காரர்கள் அனைவரையுமே அங்கே கொண்டு சேர்க்கலாம். இதை நான் விரைவில் செய்து முடிக்க வேண்டும். ஏனெனில் நான் விண்ணில் கோள்களின் நிலையை ஆராய்ந்தபோது சித்திரா பௌர்ணமிக்கு நான்கு நாட்கள் முன்னதாக வாஜ்பேய யாகம் செய்வதற்கான நல்ல நாள் இருப்பதாகத் தெரிந்தது. ஆகவே விரைவில் நான் அதற்கான ஏற்பாடுகளை முடிக்கவேண்டும்.” என்றார். அப்போது மன்னன் ஷாந்தனு ஆசாரிய விபூதியின் பக்கம் திரும்பி, “ஆசாரியரே, வாஜ்பேய யாகம் செய்வதற்கான பொருட்களை விரைவில் சேகரிக்கத் தொடங்குங்கள்.” என்றான்.

ஆனால் ஆசாரிய விபூதி ஏற்கெனவே ஓர் தீர்மானத்துக்கு வந்து விட்டார். ஆகவே வேண்டுமென்றே அவர் மன்னனிடம், “பரத குலத்து அரசனே, குருவம்சத்தில் சிறந்தவனே! எனக்கு வயதாகி விட்டது! என் உடல்நிலையும் முன்னைப் போல் இல்லை! இத்தகைய மாபெரும் பொறுப்பை என்னால் ஏற்க இயலாது! நீ வேறு யாரையேனும் பார்த்துக்கொள்!” என்று முடிவாகச் சொல்லிவிட்டார். அதைக் கேட்ட த்வைபாயனர் வணக்கத்துடன் ஆசாரியர் பக்கம் திரும்பி, “ஆசாரியரே! நீர் குருவம்சத்து ராஜகுருவாகிறீர். வேத சிரோன்மணிகளில் தாங்கள் முக்கியமானவர். கங்கைக்கரையில் இருக்கும் அனைத்து ஆசிரமத்து ஆசாரியர்களும் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். நீங்கள் வழிகாட்டுவதை எதிர்பார்த்திருப்பார்கள். அப்படிப்பட்ட தாங்கள் இவ்வாறு சொல்லலாமா? மன்னன் வாஜ்பேய யாகம் செய்யப் போவதென்றால் அதற்குப் புரோகிதராகவும், ஆசாரியராகவும் இருந்து நீங்கள் அன்றோ வழிகாட்ட வேண்டும்!” என்றார்.

ஆனால் அதற்கு ஆசாரிய விபூதி த்வைபாயனருக்கு நேருக்கு நேர் பதில் கொடுக்காமல் மன்னனைப் பார்த்து, “மன்னா, இப்படி ஒரு கருத்து கங்கைக்கரையின் ஆசிரமங்களைக் குறித்தும் அங்குள்ள ஸ்ரோத்ரியர்கள் குறித்தும் பேசப்படுமானால் வாஜ்பேய யாகத்துக்கு என்னைத் தலைமை தாங்க வைப்பது வீண் வேலை! பயனில்லாதது! என்னால் இயலாது!” என்றார். த்வைபாயனர் அதற்கு, “மன்னிக்க வேண்டும் ஐயா! நான் தங்களைப் புண்படுத்தி இருந்தேனானால் மிகவும் மன்னிக்கவும்.” தன் கைகளைக் கூப்பியவண்ணம் த்வைபாயனர், “நான் என் தந்தையுடன் அங்கே சில நாட்கள் தங்கி இருந்திருக்கிறேன். அப்போது கவனித்ததில் அங்கே பிரமசரிய விரதத்தின் போது எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று பணிவுடனேயே சொன்னார்.

“த்வைபாயனரே, நான் வேதத்தில் கரை கண்டவன் அல்ல! உன்னைப் போல் அதில் மாபெரும் சக்தி படைத்தவனும் அல்ல. அதிசயங்களை நிகழ்த்தவும் முடியாது! “ என்ற ஆசாரிய விபூதி தன் தலையை மறுப்பாக அசைத்த வண்ணம், “நான்கு வேதங்களை அறிந்த சிறந்த பிராமணர்களும், கூடி நடத்தப் போகும் ஓர் மாபெரும் யக்ஞத்தின் அதிகாரியாக என்னால் பொறுப்பேற்க இயலாது. அங்கே அப்போது நான்கு வேதங்களும் ஓதப்படும். என் வாழ்க்கையோ த்ரயி வித்யா எனப்படும் மூன்று வேதங்களைச் சொல்வதில் அடங்கி விட்டது. என்னைப் பொறுத்தவரை வேதங்கள் மூன்று பகுதிகளால் மட்டும் ஆனவை! நான்கு வேதங்களையும் கற்றறிந்தவன் அல்ல நான். தயவு செய்து என்னை இந்த வாஜ்பேய யாகத்தில் பங்கெடுக்கச் சொல்லி வற்புறுத்தாதே!” என்றார்.

Monday, June 20, 2016

த்வைபாயனரின் கோரிக்கை!

அன்று மதியம் த்வைபாயனர் ஹஸ்தினாபுரத்திலிருந்து தான் விடைபெறுவதாகச் சொல்வதற்காக அரசமாளிகைக்குச் சென்றார். சக்கரவர்த்தி ஷாந்தனுவைச் சந்திக்கச் சென்றபோது காங்கேயன் தன் வழக்கமான இடத்தில் அமர்ந்த வண்ணம் தந்தையின் தோள்பட்டையைத் தடவிக் கொடுத்தவண்ணம் இருந்தார். இடப்பக்கமாக மஹாராணி சத்யவதி அமர்ந்திருந்தாள். ராஜகுருவான ஆசாரியர் விபூதியும் அங்கே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். த்வைபாயனர் உள்ளே நுழைந்ததுமே காங்கேயன் அங்கே இருந்த மந்திரி குனிக்கையும் மற்ற ஊழியர்களையும் அறையை விட்டு வெளியேறக் கட்டளையிட்டார். அனைவரும் சம்பிரதாயமாக ஒருவருக்கொருவர் வணங்கிக் கொண்டபின்னர் தன் தந்தையின் தோளை மீண்டும் பிடித்துக் கொண்ட வண்ணம் காங்கேயன் பேச ஆரம்பித்தார். “த்வைபாயனரே, நாளை நீங்கள் இங்கிருந்து விடைப் பெறுகிறீர்கள். நான் தந்தையுடனும், தாயுடனும் நீங்கள் முந்தாநாள் கூறியவற்றைக் குறித்துக் கலந்து ஆலோசித்தேன். தந்தை சரியாகவே சொல்கிறார். நாங்கள் உங்களுக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடனை எவ்வகையிலேனும் தீர்த்தாக வேண்டும். தயவு செய்து சொல்லுங்கள்! நாங்கள் எவ்வகையில் உங்களுக்கு உதவ முடியும்?”

“பிரபுவே, என்னுடைய முதல் விருப்பம் தர்மக்ஷேத்திரத்தில் ஓர் ஆசிரமத்தை ஸ்தாபிப்பது ஆகும்.”

“நாங்கள் இங்கிருந்தே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து விடுகிறோம்.” என்றார் காங்கேயன். “இல்லை, இல்லை, அதற்கு உடனடியாக அவசரம் ஒன்றும் இல்லை. நான் முதலில் யமுனைக்கரையில் இருக்கும் ஆசிரமத்திற்குச் சென்று என் தந்தையின் சீடர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தர்மக்ஷேத்திரத்துக்கு அழைத்து வரப்போகிறேன்.”

“உங்கள் தந்தை, பராசர முனிவர், யமுனைக்கரையில் ஆசிரமத்தில் சீடர்களை விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று ஷாந்தனு கேட்டான். அதற்கு மஹாராணி சத்யவதி பதில் சொன்னாள். “ஆம், ஆம்! நான் அறிவேன் அவர்கள் அனைவரையும். சஹஸ்ரார்ஜுனனால் மதிப்புக்குரிய முனிவரின் ஆசிரமம் அழிக்கப்பட்ட சமயம், பராசர முனிவரின் சீடர்கள் பலரும் கொல்லப்பட்டனர். அங்கிருந்து வெகு சிலரே தப்பினார்கள். அவர்களில் ஒரு சிலர் வெகுகாலமாக அங்கே இருந்தவர்கள். அவர்கள் அக்கம்பக்கம் இருந்தச் சின்னச் சின்ன ஆசிரமங்களில் தங்களுக்கு அடைக்கலம் தேடிக் கொண்டனர்.”என்று மிக மிக மெதுவாகவும், மிருதுவாகவும் மிகவும் யோசித்து யோசித்துக் கூறினாள் சத்யவதி. அப்போது காங்கேயர் த்வைபாயனர் பக்கம் திரும்பி, “உங்கள் தந்தை இந்தக் கலவரத்திலிருந்து எப்படித் தப்பினார்?” என்று கேட்டார்.

“என் தந்தையின் ஆசிரமத்தை அழிக்கவேண்டி சஹஸ்ரார்ஜுனன் வந்த சமயம் அவர் ஆரியத் தலைவர்களிடம் உதவி கேட்டுச் சென்றிருந்தார். அங்கே இல்லை. ஆகவே அவரைக் கொல்லவில்லை. உயிருடன் தப்பினார். ஆனால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதனால் கால் உடைந்தது. என்றாலும் விடாமல் அருகிலுள்ள ஆசிரமங்களுக்கு விடாமல் சென்று தன் சீடர்களைக் கண்டு வருவார். இது நான் பிறந்து வளர்ந்த பின்னரும் தொடர்ந்து நடந்தது. என்னையும் உடன் அழைத்துச் செல்வார். அவருடைய பயணங்களில் அவர் ஆசிரமங்களைச் சென்று அங்கே கற்பித்ததோடு அல்லாமல் நேர்மையாகவும்,எளிமையாகவும் வாழ வேண்டிய அவசியத்தையும் கூறுவார். தானே அப்படி வாழ்ந்தும் காட்டினார். வரும் தலைமுறைக்காக வேதங்களைக் கட்டிக் காத்து ரக்ஷிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார் அவற்றுக்காகவே வாழச் சொல்லுவார். ஆகவே இந்த ஆசிரமங்களுக்கெல்லாம் நான் சென்று அங்குள்ள என் தந்தையின் சீடர்களில் எத்தனை பேருக்கு என்னோடு தர்மக்ஷேத்திரம் வருவதற்கு விருப்பம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”

“ஏன் இப்படி ஒரு சாபம் நிறைந்த இடத்துக்குச் செல்லவேண்டும்? நாம் கங்கைக்கரையில் ஓர் விசாலமான இடத்தைத் தேர்ந்தெடுப்போம். அங்கே நீங்கள் உங்களுக்கென ஓர் ஆசிரமத்தை நிர்மாணித்துக் கொள்ளலாம்.” என்றார் காங்கேயர். த்வைபாயனர் தலையை ஆட்டி மறுத்தார். “கங்கைக்கரையின் ஆசிரமங்கள் தந்தையின் விருப்பத்துக்கு ஒத்தவையாகச் சொல்ல முடியாது. அங்கே நாம் நினைப்பதை அடைய முடியாது!” என்றார். இதைக் கேட்ட ஆசார்ய விபூதி இதைத் தன்னைக் குறித்துச் சொல்லப்பட்டதாக நினைத்தார். ஏனெனில் இத்தகைய கங்கைக்கரை ஆசிரமங்கள் பலவற்றிற்கு அவர் போஷகராக இருந்து வந்தார். ஆகவே த்வைபாயனரை மறுத்துப் பேச நினைத்துப் பின் ஏதோ நினைத்தவராய்த் தன்னை அடக்கிக் கொண்டார். த்வைபாயனர் மேலே தொடர்ந்தார்.

“நேர்மையும் தர்மமும் நிலைக்க வேண்டுமானால், அவை பாதுகாக்கப்படவேண்டுமானால் தர்மக்ஷேத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அது தான் தர்மத்தின் உலகம்! சத்திய லோகம். அங்கே இருப்பவர்கள், இருந்தவர்கள், இனி இருக்கப் போகிறவர்களால் வேதங்கள் மட்டுமல்லாமல் அவை சொல்லும் தர்மமும் காப்பாற்றப்படும்!”  ஆசாரியர் விபூதிக்குத் தாங்க முடியாத எரிச்சலும் கோபமும் வந்தது. இந்த இளம் துறவி சிறிதும் மரியாதை அற்றவன் என்றே எண்ணினார். ஆனால் காங்கேயரோ, “சரி, த்வைபாயனரே! இதில் உங்கள் விருப்பம் தான் முக்கியம்! நான் வேட்டைக்காரர்களையும் காடுகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பலரையும் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் அங்கிருக்கும் காட்டு மிருகங்களை முடிந்தவரை வேட்டையாடிக் கொன்றுக் காட்டு மரங்களை அப்புறப்படுத்தியும் சுத்தம் செய்து கொடுப்பார்கள்.” என்றார்.

“இன்னும் வேறே என்ன செய்ய வேண்டும்? நாங்கள் செய்யவேண்டியது ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்!” என்றான் ஷாந்தனு.

சற்று நேரம் கண்களை மூடி யோசித்த த்வைபாயனர் பின்னர் கண்களைத் திறந்து, “பரத வம்சத்தில் சிறந்த அரசனே! உன்னால் தான் உன்னுடைய குரு வம்சத்தினால் தான் கடைசியாக ஓர் முயற்சி செய்து ஹைஹேயர்கள் ஒழிக்கப்பட்டனர். ஓநாய்களின் சாம்ராஜ்யமாக இருந்த அந்த இடம் இப்போது உன் வம்சத்தின் பெயரால் குருக்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது!” என்றார்.பின்னர் மீண்டும் பேச்சை நிறுத்தி மௌனமானார். அதன் பின்னர் தன் கண்களைத் தரையில் பதித்துக் கொண்டார். அவர் பேசுவதற்கான முயற்சிகளை எல்லாம் ஒளிக்கடவுளிடமிருந்து பெற முயற்சிக்கிறாரோ என்னும்படி தோன்றியது. மீண்டும் பேசிய த்வைபாயனர், “மன்னா, நீங்கள் பல தேசத்து மன்னர்களை எல்லாம் வெற்றி கொண்ட வெற்றி வீரர்! அனைத்து ஆரிய அரசர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட மாபெரும் சக்கரவர்த்தி! ஆனாலும் அடக்கத்தின் காரணமாகவோ அல்லது பணிவின் காரணமாகவோ நீங்கள் சம்பிரதாயமான யக்ஞங்களைச் செய்யவில்லை! ஒரு சக்கரவர்த்தி செய்யக் கூடிய வாஜ்பேய யாகமோ, ராஜசூய யாகமோ அல்லது அஸ்வமேத யாகமோ உங்களால் செய்யப்படவில்லை!”

இதைச் சொன்ன த்வைபாயனர் மீண்டும் பேச்சை நிறுத்தி மௌனமானார். அனைவரும் அவர் அடுத்துச் சொல்வதற்காகக் காத்திருக்கையில் அவர் மேலும் பேசுவார்; “ மாட்சிமை பொருந்திய மன்னா! வேதங்களால் அவற்றின் வைத்திய முறையால் உங்கள் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கிறது.இது சூரிய பகவானின் கட்டளை என்றே நான் எண்ணுகிறேன். தர்மக்ஷேத்திரம் உங்களால் உங்கள் வம்சத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்பது சூரிய பகவானின் கட்டளை! ஆகையால் நீங்கள் மேலே சொன்ன யாகங்களில் ஏதேனும் ஒன்றை தர்மக்ஷேத்திரத்தில் நடத்தித் தர வேண்டும். அது தான் முறையானதும் சரியானதும் என்று என் எண்ணம்.” என்று சொல்லி நிறுத்தினார் த்வைபாயனர். ஆசாரிய விபூதியால் இதற்கு மேலும் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. த்வைபாயனன் தன் வலையை மிகப் பெரிதாக விரித்து மன்னனை அதில் ஆழ்த்த நினைக்கிறான் என்று எண்ணினார். “ஆஹா, இது என்ன? மன்னர் இப்போதிருக்கும் நிலையில் அவ்வளவு தூரம் தர்மக்ஷேத்திரம் வரை பிரயாணம் செய்ய முடியுமா அவரால்? இது நடக்கக் கூடியதே இல்லை!” என்றார்.


Tuesday, June 14, 2016

சித்திராங்கதன் யுவராஜா ஆனான்!

ஆனால் சாமானிய மக்கள் உயர்பதவியில் இருப்போரின் இந்தக் கலக்கங்களையும் அவர்களின் பேச்சுக்களையும் விமரிசனங்களையும் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. அவர்களுக்குத் தேவை அவர்கள் மன்னன் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பதே. இப்போது மன்னன் உடல் நலம் பெற்று விட்டிருக்கிறதே அவர்களுக்குப் போதும். அவர்கள் நேசிக்கும் மன்னன் பூரண உடல் நலத்தோடு இருக்கிறான்.மற்றபடி நமக்குத் தேவையானது எல்லாம் அந்த இளம் துறவியின் ஆசிகள் மட்டுமே.

இங்கே அரண்மனையில் ஒன்பதாம் நாள் சிகிச்சை முடிவடைந்தது. த்வைபாயனர் கைலாகு கொடுத்துத் தாங்கிக் கொள்ள மன்னன் ஷாந்தனு தன் படுக்கையிலிருந்து மெல்லக் கால்களைக் கீழே பூமியில் பதித்தான். கால்கள் நடுங்கின. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு த்வைபாயனரின் துணையுடன் சில அடிகள் அந்த அறையிலேயே நடந்தான். அன்றைய தினத்துச் சிகிச்சை முடிவடைந்து மறுநாள் பத்தாவது நாள் சிகிச்சையும் முடிந்தது. அன்று தான் ராஜசபை கூட இருந்தது. அங்கே வசித்து வந்த மற்ற ஸ்ரோத்ரியர்கள், குரு வம்சத்துத் தலைவர்கள் மற்ற அரச பதவியிலிருக்கும் வீரர்கள் என அனைவரும் ராஜசபையில் பங்கெடுக்க ஒன்று கூடினார்கள். அனைவர் மனதிலும் பதட்டத்துடன் கூடியதொரு எதிர்பார்ப்பு இருந்தது. மன்னன் ஒரு ஆசனத்தில் அமர்த்தப்பட்டு சேவகர்களால் தூக்கி வரப்பட்டான். அங்கே கூடியிருந்த அனைவரும் மன்னன் காலில் விழுந்து நமஸ்கரிக்க ஓடோடிப் போனார்கள். பின்னர் மன்னன் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர்.

ஆசாரியரும் அரண்மனை புரோகிதருமான விபூதி அவர்களும் மற்றத் தலைவர்களான ஸ்ரோத்ரியர்களும் மன்னனையும் நாட்டையும் வாழ்த்தி ஆசிகளை வழங்கி மந்திர கோஷங்களைச் செய்தார்கள். அதன் பின்னர் அனைவர் கண்களையும் கருத்தையும் கவர்ந்து கொண்டிருந்த யுவராஜா காங்கேயன் இந்த ராஜசபை கூட்டப்பட்டதின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் எடுத்துரைத்தார்.

“மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தி, பரத வம்சத்து அரசர்களிலே சிறந்தவர், என் தந்தை மஹாராஜா ஷாந்தனு அவர்கள் உடல் நலம் தேறி வருகிறார். பிரதிபேஸ்வரர் அருளாலும் மற்றக் கடவுளர் அருளாலும் அவர் பூரண உடல் நலமும் பூரண ஆயுளும் பெறட்டும்!”

“சில வருடங்கள் முன்னர் நான் ஒரு சில சபதங்களை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் மதிப்புக்குரிய தந்தை ஷாந்தனு அவர்கள் மஹாராணி சத்யவதியை மணப்பதற்காக அத்தகைய சபதங்களை ஏற்றேன். அதை நான் முறைப்படி ராஜசபையில் அனைவருக்கும் முன்னால் தெரிவிக்காதபடியால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி நினைத்துக் கனவுகள் காண்கிறாப்போல் ஆகிவிட்டது. பலவிதமான வதந்திகள் பரவுவதற்குக் காரணமாகி விட்டது. இப்போது இந்த ராஜசபை கூட்டப்பட்டதன் காரணமே நான் எடுத்துக்கொண்ட சபதங்களைப் பற்றிக் கூறி உண்மை என்ன என்று அனைவருக்கும் புரிய வைப்பதற்கே அல்லால் வேறில்லை.”

“நான் என் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்றும் ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்கு உரிமை கோர மாட்டேன் என்றும் சபதம் எடுத்திருக்கிறேன்.”

கூடி இருந்த அனைவரும் மூச்சுக்கூட விடாமல் கவனித்தனர். அனைவர் கண்களுக் காங்கேயனையே பார்த்திருந்தன. அவர் மேலும் தொடர்ந்தார். “மேலும் நான் எடுத்துக்கொண்ட இன்னொரு சபதம் நான் உயிருடன் இருக்கும் வரையில் ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் யார் மன்னனாக வீற்றிருந்தாலும் அவர்களுக்காகப் பாடுபடுவேனே அன்றி வேறு எதற்காகவும் அல்ல!”

“குரு வம்சத்துத் தலைவர்களின் மனோநிலை நான் அறிந்தது தான். அவர்கள் விருப்பம் என்னவென்பதையும் அறிந்திருக்கிறேன். அவர்கள் அனைவருக்கும் என் தந்தைக்குப் பின்னர் இந்த ஹஸ்தினாபுரத்து அரியணையில் நான் வீற்றிருக்க வேண்டும் என்பதே! அதை நான் நன்கறிவேன். அவர்கள் அன்புக்கும் ஆசைக்கும் நான் தலைவணங்குகிறேன். உண்மையில் அவர்கள் அன்பு என்னை நெகிழச் செய்து விட்டது. ஆனாலும் நான் அப்படிச் செய்ய முடியாதவனாக இருக்கிறேன்.”

“மதிப்புக்குரிய மாமன்னர், நான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில் என் அருமைச் சகோதரன் சித்திராங்கதனை யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்து வைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதைக் கேட்டு யாரும் எதற்காகவும் கலங்க வேண்டாம். நான் இங்கே தான் இருப்பேன். இந்த அரியணையில் அமரும் மன்னனைப் பாதுகாக்கும் முதல் ஆள் நானாகத் தான் இருக்கும்.”

இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவர் கண்களிலும் கண்ணீர் ததும்பியது. யாருக்கும் எதுவும் பேச முடியவில்லை. பின்னர் மெல்ல மெல்லத் தங்களைச் சுதாரித்துக் கொண்ட அவர்கள் ஒரு குரலாக, “ஜெய காங்கேயா!” என்று கோஷம் எழுப்பினார்கள். ஆனாலும் அவர்களில் ஒரு சிலருக்கு மனம் சமாதானம் அடையவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவுமே நினைத்தனர். எல்லாம் அந்த மஹாராணி சத்யவதியின் உள் வேலைதான் என்றும் அவள் முன்னால் தாங்கள் சிறியவர்களாக்கப்பட்டுவிட்டதாகவும் நினைத்தனர். ஹஸ்தினாபுரத்தின் அதிகாரம் அனைத்தும் சின்னஞ்சிறு இளைஞன் ஒருவன் கைகளுக்குப் போய்விட்டது. அதன் மூலம் ஹஸ்தினாபுரத்தை அதிகாரம் செய்யப்போவது சத்யவதி தான். இவ்வளவு நாட்கள் யுவராஜாவாக இருந்து வந்த காங்கேயனுக்கு சந்தேகத்துக்கு இடமின்றி இனி இங்கே வேலை ஏதும் இல்லை! இனி அவன் அவ்வளவு தான்!

இங்கே காங்கேயன் தொடர்ந்து கொண்டிருந்தார். “நான் உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவெனில் மன்னனின் இந்த முடிவுக்கு நீங்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும். அவர் விருப்பம் இறைவனின் விருப்பம் ஆகும். நான் தான் அடுத்த மன்னன் ஆகவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டு என்னை தர்மசங்கடப் படுத்தாதீர்கள். நான் என்னுடைய சபதங்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதில் உறுதியாக இருக்கிறேன். எனக்குக் கொடுத்த அதே மதிப்பையும் விசுவாசத்தையும் சற்றும் குறைவின்றி சித்திராங்கதனுக்கும் கொடுக்க வேண்டும். உங்கள் எவரிடமிருந்தும் அதிருப்திக் குரல் ஏதும் வருவதை நான் விரும்பவில்லை. நான் எப்போதும் ஹஸ்தினாபுரத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்தி வாழ்வேன் என்றும் ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமரும் மன்னன் யாராக இருந்தாலும் அவருக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பேன் என்று என் தந்தைக்கு நான் வாக்குக் கொடுத்துள்ளேன். என் உயிருள்ளவரை நான் அப்படியே இருந்து வருவேன். இறைவனின் விருப்பம், கட்டளை ஆகியவற்றின் படி அமைந்திருக்கும் இந்த ஹஸ்தினாபுரத்தின் அதிகாரமும் செல்வாக்கும் சிறிதும் மங்காமல் நான் உயிருள்ளவரை சீருடனும் சிறப்புடனும் பாதுகாத்து வருவேன்.”

அதன் பின்னர் ஆசாரிய விபூதி சடங்குகளைச் செய்ய எழுந்தார். சித்திராங்கதன் முறைப்படி யுவராஜாவாக அறிவிக்கப்பட்டு அக்னி சாட்சியாக அங்கீகரிக்கப்பட்டான். தன் படுக்கையில் சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த மஹாராஜா ஷாந்தனு படுக்கையிலிருந்தபடியே மகனை ஆசீர்வதித்தான். தன் கைகளாலேயே யுவராஜாவுக்கு உரிய கிரீடத்தைச் சித்திராங்கதனுக்குச் சூட்டினான்.  தன் முகத்தில் ஓர் அரைப்புன்னகையுடன் கண்களை இமைக்காமல் அமைதியாகப் பார்த்த வண்ணம் த்வைபாயனர் அமர்ந்திருந்தார். தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார். “சூரிய பகவானே, ஒளிக்கடவுளே, என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு உனக்கு மிகவும் நன்றி. இப்போது இனிமேல் ஹஸ்தினாபுரத்தின் அதிகாரம் ஸ்திரப்பட்டு விடும். இதன் மூலம் தர்ம சாம்ராஜ்யம் தழைக்க வழி வகுக்கும். என் அன்னையும் மனம் மகிழ்ச்சியுறுவாள்.”

நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஏவலாட்கள் தூக்கிவரப் படுக்கையில் கிடத்தப்பட்ட மன்னன், காங்கேயன், சித்திராங்கதன், விசித்திர வீரியன் புடைசூழத் தன் அறைக்குச் சென்றான். கூடி இருந்த மக்கள் அனைவரும் மன்னன் சென்றதும் ஓடோடியும் வந்து த்வைபாயனரின் கால்களில் விழுந்து ஆசிகளை வேண்டினார்கள். சிலர் அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். வயது முதிர்ந்த ஸ்ரோத்ரியர்களில் சிலர் த்வைபாயனருக்கு ஆசிகளை வழங்கினார்கள். கொஞ்சம் சிரமத்தோடு மந்திரி குனிகர் வழி ஏற்படுத்திக் கொடுக்க த்வைபாயனர் தன் தங்குமிடமான பிரதிபேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதற்காக அரண்மனை வளாகத்தை விட்டு வெளியேறினார். கூடி இருந்த கூட்டம் அவரைத் தொடர்ந்தது. மஹாராணி சத்யவதி தன் மகன் த்வைபாயனரை அரண்மனை விருந்து உண்டு போகவென அழைத்தாள். ஆனால் அதை மிக்க மரியாதையுடன் த்வைபாயனர் ஏற்க மறுத்துவிட்டார். அவர் சொன்னார். “கோயில் வளாகத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் நான் கொடுக்கப் போகும் உணவுக்காகக் காத்திருப்பார்கள். அவர்களை ஏமாற்றிவிட்டு இங்கே நான் உணவு உண்ண மாட்டேன்.”

Sunday, June 12, 2016

ஹஸ்தினாபுரத்தில் பதட்டம்!

மன்னன் உடல் நிலை தேறி எழுந்து நடமாட ஆரம்பித்திருப்பதோடு பேசவும் செய்கிறான் என்னும் செய்தி காட்டுத்தீயைப் போல் நகரெங்கும் பரவியது. சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு எல்லாம் இந்தச் செய்தி சென்றது. கூட்டம் கூட்டமாக மக்கள் அரச மாளிகை நோக்கிப் படை எடுத்தனர். இந்த வித்தையை/அல்ல விந்தையைச் செய்தது ஓர் இளம் துறவியாமே! அந்தத் துறவியையும் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மக்களிடையே பல்கிப் பெருகியது. துறவி அரண்மனையில் வசிக்கவில்லை  என்பதும் பிரதிபேஸ்வர் கோயிலில் வசிப்பதும் தெரிந்து கோயிலுக்குச் சென்று மக்கள் த்வைபாயனரின் தரிசனத்தையும் ஆசிகளையும் பெற்றனர்.

கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் நோயால் அவதிப்படுபவர்களாகவும், வாழ்க்கையில் அளப்பரிய துன்பத்தை அனுபவித்தவர்களாகவுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் மன்னனை மந்திர வித்தையால் குணப்படுத்திய முனிவர் தங்களையும் குணப்படுத்துவார் என்னும் நம்பிக்கையுடன் வந்திருந்தனர். மிகவும் பரிதாபமாக அவர்கள் த்வைபாயனரிடம் தங்களை குணப்படுத்துமாறு கெஞ்சினார்கள். த்வைபாயனரும் அவர்களிடம் கருணை காட்டினார். அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட த்வைபாயனர் அனைவரின் புலம்பலையும் கருணையுடன் கேட்டு அவர்களை ஆசீர்வதித்தார். நோயுற்றவர்களுக்கு மூலிகைக் கஷாயத்தைக் கொடுத்தார்.


கூட்டம் மிக அதிகமாக இருந்தது. அவரைப் பார்க்க கோயிலுக்கு வந்த மந்திரி குனிகருக்கும், அவருடன் வந்த ஊழியனுக்கும் வழியே கிட்டாத அளவுக்குக் கூட்டம் இருந்தது. அரச காரியமாக வந்திருப்பதைச் சொல்லி மக்களை நகர்ந்து போகச் சொல்லி வழி உண்டாக்கித் தந்தனர். இரவில் த்வைபாயனர் படுக்கும் இடம் மட்டுமே காலியாக இருந்தது. மற்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் நெரிந்தது. த்வைபாயனர் அந்தக் கூட்டத்திலும் எப்படியோ நதிக்குச் சென்று நீராடித் தன் நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொள்வார். பின்னர் கோயிலுக்குத் திரும்புவார்.

மன்னனுக்குச் சிகிச்சை அளித்து வந்த நாட்களில் அவர் பகலில் உணவு உண்ணாமல் சிகிச்சையை முடித்துக் கொண்டு கோயிலில் தான் தங்குமிடம் வந்த பின்னரே ஒரே வேளை உணவு உண்டு வந்தார். இதற்குள்ளாக த்வைபாயனரைக் கவனித்துக்கொள்ள அரச குலத்தோரால் நியமிக்கப்பட்ட மந்திரி குனிகருக்கு த்வைபாயனரின் உணவு எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து விட்டது. அதோடு இல்லாமல் இந்த  இளம் துறவி அங்கே பசியோடு உணவுக்குக் காத்திருக்கும் சிறு குழந்தைகளுக்கு உணவு அளித்த பின்னரே தான் உண்ணுகிறார். நாளுக்கு நாள் இந்தக் குழந்தைகள் கூட்டமும் பெருகி வருகிறது.

மறுநாளே அரசரின் அறிவிப்புப் பறையறைந்து நாடு முழுவதும் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைக் கேட்ட குடிமக்கள் மிகவும் மனக்கிளர்ச்சிக்கு உள்ளானர்கள். அறிவிப்புத் தெரிவித்தது என்னவெனில்..

“நம் அனைவரின் வணக்கத்துக்கு உரியவரும், பரத வம்சத்திலே மிகச் சிறந்தவரும், ஆன குருவம்சத்து மன்னாதி மன்னர் ஷாந்தனு அவர்கள் தன் அன்பான குடிமக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவெனில். அவர் இப்போது பூரண உடல் நலம் பெற்று வருகிறார். ஆகவே மக்கள் கவலை அடைய வேண்டாம். நாளை மஹா பிரதிபேஸ்வரின் கருணையால் மன்னாதி மன்னர் மாடத்தில் அமர்ந்த வண்ணம் குடிமக்களுக்குத் தன் தரிசனத்தைத் தருவார். மேலும் பரத வம்சத்தின் சிறந்த அரசரான ஷாந்தனு மன்னர் விரைவில் ராஜசபையைக் கூட்ட வேண்டும் என்று விரும்புகிறார்.

 ராஜசபை நாளை மறுநாள் கூடுகிறது. சூரிய உதயம் ஆகி ஆறு கடிகைகள் ஆன பின்னர் ராஜசபை கூடும். அந்த சபையில் யுவராஜா காங்கேயர் தான் எடுத்துக் கொண்டிருக்கும் சபதங்களை அறிவிப்பார். அனைவர் முன்னிலையிலும் சபதங்களை ஏற்கும் அவர் தான் யுவராஜா பதவியிலிருந்து விலகுவதையும் அறிவிப்பார். இளவரசர் சித்திராங்கதன், நீண்ட காலம் வாழ வேண்டும், வாழ்க, வளர்க! அவர் நாளை முதல் யுவராஜாவாகப் பொறுப்பேற்பார்.


மேலும் இங்கே இப்போது வந்திருக்கும் இளம் துறவி த்வைபாயனர், துறவிகளுக்குள்ளேயே தூய்மையானவர், தன்னுடைய மந்திர வித்தையால் மன்னனை முற்றிலும் குணமாக்கியவர், மன்னனுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர் அவரும் நாளைய ராஜசபையின் மாபெரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்.”


இந்த அறிவிப்புப் பலருக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியது. யுவராஜா காங்கேயரை ஆதரித்து வந்த குரு வம்சத் தலைவர்களுக்கு இந்த அறிவிப்பு மாபெரும் இடியாக அமைந்தது. அவர்களில் பலரும் அடுத்து யுவராஜா காங்கேயனே மன்னன் ஆகவேண்டும் என்று அதற்காக ரகசியமாக ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தனர். யுவராஜா காங்கேயன் அரியணை ஏற மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பதைக் குறித்துச் சிறிதும் கவலை இல்லாமல் அவர்கள் அதை ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். இப்போது இந்த அறிவிப்பு வந்திருக்கிறதெனில் அதற்குச் சூழ்ச்சியே காரணம். மஹாராணியாக இப்பொது இருக்கும் சத்யவதியின் சூழ்ச்சிகளாலேயே இது நடக்கிறது என்றும் அவள் காரணமாகவே சித்திராங்கதனை யுவராஜாவாக ஆக்க மன்னன் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நினைத்தனர்.

Saturday, June 11, 2016

த்வைபாயனரின் வெற்றி!

பராசர முனியின் பெயர் உச்சரிக்கப்பட்ட உடனேயே சத்யவதி முகம் சிவந்தாள். நாணம் அவளைச் சூழ்ந்து கொண்டது. தன் கணவன் சக்கரவர்த்தியின் தோளைத் தடவிக் கொண்டே அவள் மெல்லிய குரலில் த்வைபாயனரிடம் கேட்டாள்: பராசர முனிவர் எடுத்துக் கொண்டு உறுதிமொழியைக் கொஞ்சம் சரிவரச் சொல்ல முடியுமா? அவர் சொன்ன அதே வார்த்தைகளில் சொல்ல இயலுமா?” என்றவள் உடனே மன்னன் பக்கம் திரும்பிக் கொண்டு, “பிரபுவே, உங்களுக்கு ஏற்கெனவே பராசர முனிவரையும் அவர் எனக்களித்த ஆசிகளையும் அறிவீர்கள். அவருடைய துணையாக நான் சிறிது காலம் வாழ்ந்ததையும் அறிவீர்கள்!” என்றாள்.

த்வைபாயனர் சற்றும் தயக்கமின்றி மேலும் பேசினார். “என் தந்தை சொன்னது என்னவெனில் அவர் எப்பாடு பட்டேனும் தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுத்து மீண்டும் ரிஷி, முனிவர்கள் வசிக்கும் இடமாக மாற்றி அங்கே இருந்த வண்ணம் ஆர்யவர்த்தத்தில் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க மன்னர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே! அங்கே வசிக்கப் போகும் ரிஷி, முனிவர்கள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். அதற்காகவே உயிர் பிழைக்கவேண்டும் என்பதே அவர் குறிக்கோள். அது நிறைவேற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.”


“ஹூம், த்வைபாயனரே, அது இப்போது ஓநாய்களின் குடியிருப்பாக மாறியதோடல்லாமல் காட்டு மிருகங்கள் வசிக்கும் இடமாகவும் ஆகி விட்டது!” என்றார் காங்கேயர்.  த்வைபாயனர் சிரித்தார். பின்னர் மேலும் தொடர்ந்து, “நல்லது யுவராஜா அவர்களே! என் நண்பன் பைலரின் துணையுடன் நான் அங்கே ஓரிரவு தங்கினேன். ஹஸ்தினாபுரம் வரும் முன்னர் அங்கே தான் தங்கினோம் இருவரும். ஓநாய்கள், கரடிகள் மற்றக் காட்டு மிருகங்கள் எல்லாமும் அங்கே இருக்கின்றன. கூடவே ராக்ஷதர்களும் இருக்கிறார்கள். ராக்ஷசர்கள் எங்களைக் கொன்றே போட்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் ஒளிக்கடவுளான சூரியபகவானின் கருணையால் மஹா அதர்வ ரிஷி ஜாபாலி அவர்களால் காப்பாற்றப்படாவிட்டால்! நாங்கள் இருந்த இடமே தெரிந்திருக்காது! அவர் தான் வந்து எங்களைக் காப்பாற்றினார்.”


“அதெல்லாம் சரி, முனிவரே! அந்த இடத்தைச் சுத்தம் செய்து காட்டை அழித்து மிருகங்களை இன்னும் உள்ளே அடர்ந்த காட்டுக்குள் விரட்டிவிட்டு எல்லாம் செய்யலாம் தான்; ஆனால் அது சாபங்கள் நிறைந்த இடம். அங்கே யுத்தம் நடந்தபோது பல போர் வீரர்கள், ரிஷிகள், முனிகள், பெண்கள் இறந்திருக்கின்றனர். அவர்களின் ஆவிகளெல்லாம் அங்கே அலைவதாகச் சொல்கின்றனர். இரவும் பகலும் அவை புலம்பிக் கொண்டே இருக்கின்றன என்கின்றனர். மனிதர்கள் வசிக்க லாயக்கில்லை என்றும் சொல்கின்றனர்.” என்றார் காங்கேயர்.


“நான் அங்கே தான் போய் வசிக்கப் போகிறேன்.” என்றார் புன்னகையுடன் த்வைபாயனர். “ ஒரு ஆசிரமமும் உண்டாகும். அது நன்கு வளர்ந்து நூற்றுக்கணக்கான ஸ்ரோத்ரியர்களை நியம, நிஷ்டைகளுடனும், சகலவிதமான நல்லொழுக்கங்களுடனும் உண்டாக்கும். அவர்கள் எடுத்துக் கொள்ளும் சபதங்களை உறுதியுடன் நின்று அவர்களை நிறைவேற்றுமாறு அந்த ஆசிரமச் சூழலை உருவாக்க வேண்டும். மதிப்புக்குரிய காங்கேயரே! இன்று பிரம்ம தேஜஸும்,க்ஷத்திரிய தேஜஸும் பிரிந்து கிடக்கிறது. பிராம்மணர்கள் தவிக்கின்றனர். பிரம்ம தேஜஸோடு, க்ஷத்திரிய தேஜஸும் ஒன்று கலக்க வேண்டும். இல்லை எனில் தர்மத்தையும், நேர்மையையும் எந்த அரசனாலும் சரிவரக் கடைப்பிடிக்க இயலாது. அவனுக்கு வழிகாட்ட எவரும் கிடைக்க மாட்டார்கள். ரிஷிகளும் முனிவர்களும் காடுகளின் அடர்ந்த குகைக்குள் சென்று விடுவார்கள்.  மற்றவர் மிருகங்களைப் போன்ற வாழ்க்கை நடத்துவார்கள்.” என்றார் த்வைபாயனர்.


“ஆஹா, முனிசிரேஷ்டரே, என் தந்தை அப்படி எல்லாம் இல்லை. தன்னால் இயன்ற அளவுக்கு க்ஷத்திரிய தர்மத்தை விடாது கைப்பிடித்து வந்துள்ளார். தன் சக்தியையும் அதிகப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் மற்றவர்களிடம் இதற்கான ஆதரவையோ, ஒத்துழைப்பையோ அவர் பார்க்கவில்லை!” என்றார் காங்கேயர்.


“அது நம் தப்பு, காங்கேயரே! ஆம், நம் தவறு! நாம் கலங்காமல் எவ்விதமான மத, மாற்சரியங்களுக்கும் உட்படாமல் தர்மத்தைக் காக்கவேண்டியது ஒன்றே நம் லட்சியம், நம் கடமை என்று அதற்காகவே உயிர் வாழ வேண்டும். இன்றைய நாட்களில் எந்த மனிதனால் அப்படி வாழ முடிகிறது?”


காங்கேயருக்கு த்வைபாயனர் மறைமுகமாகத் தன்னைச் சாடுகிறாரோ என்னும் சந்தேகம் எழுந்தது. தெரிந்தோ தெரியாமலோ அவர் தன்னைக் குற்றம் சாட்டுகிறார் என்று நினைத்த காங்கேயர் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தார். அவர் உள்ளே பலவிதமான யோசனைகள் ஓடின. அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர் போல த்வைபாயனர் சொன்னார்; “மதிப்புக்குரிய காங்கேயரே, உம்மிடம் பிரம்ம தேஜஸும் காண்கிறேன், க்ஷத்திரிய தேஜஸையும் காண்கிறேன். மதிப்புக்குரிய மஹாராணி என்னிடம் உங்களைக் குறித்து மிகவும் உயர்வாகச் சொன்னார்கள். அதிலும் நீங்கள் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றுவதற்குக் கடினமான வழிகளைக் கூடக் கடைப்பிடிப்பதாய்ச் சொன்னார்கள்.” என்றார்.


மஹாராஜா ஷாந்தனுவுக்குப் பெருமை தாங்கவில்லை. தன் அருமை மகனைப் பெருமையுடன் பார்த்தார். பின்னர் மெல்லிய குரலில், “காங்கேயனால் உண்மைக்கும் சத்தியத்துக்கும் புறம்பாக நடந்து கொள்ள முடியாது!” என்றார்.


“மதிப்புக்குரிய பேரரசரே! ஒரு மனிதன் சபதம் எடுப்பதும் அதன்படி நடப்பதும் மிகவும் போற்றுதலுக்கு உரிய ஒன்று. ஆனால் மனிதர்களை அப்படி நடந்து கொள்ள வைப்பது தான் நேர்மையின் பாதையில் நடக்க வைப்பது தான் மிகவும் கடினமான ஒன்று!” என்றார் த்வைபாயனர். “நீங்கள் சொல்லுவதை நான் புரிந்து கொள்கிறேன்.” என்றார் காங்கேயர். “நான் உண்மையின் வழியில் சத்தியத்தின் பாதையில் செல்ல விரும்புகிறேன். ஆனால் மற்ற மனிதர்களை அவ்வாறு மாற்றுவது கடினம் என்பதை அறிந்திருக்கிறேன். என்னால் மாற்றவும் இயலவில்லை!” என்றார் காங்கேயர்.


“மதிப்புக்குரிய காங்கேயரே, நீங்கள் என்னை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்! ஆகவே நான் துணிவோடு இத்தகைய ஆலோசனையைக் கூறுவதை தயவு செய்து மன்னியுங்கள். தவ வாழ்க்கையில் ஒருவன் ஈடுபடுவது மிகவும் சிறந்தது தான்; இல்லை எனவில்லை. ஆனால் மனிதரை அப்படி மாற்றுவது அத்தகைய தவ வாழ்க்கையில் ஈடுபடச் செய்வது அதை விடச் சிறப்பானது!” என்றார் த்வைபாயனர். “ஆமாம்,” என்று மெல்லிய குரலில் கூறிய காங்கேயர் தனக்குத் தானே பேசிக் கொள்பவர் போல, “அனுதினமும், அல்லும், பகலும் என்னை வாட்டிக் கொண்டிருப்பது எதுவெனில், நான் எடுத்துக் கொண்டிருக்கும் சபதத்தை எவரும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான்! அதன் மூலம் நான் மிகவும் துன்பம் அடைகிறேன்.” என்றார்.


“நீங்கள் உங்கள் சபதங்களை நிறைவேற்றுவதில் உண்மையாக இருக்கிறீர்கள், காங்கேயரே! அதில் முனைப்போடு ஈடுபடுகிறீர்கள். ஆனால் உங்கள் மனதில், ஆழ் மனதில் எரிந்து கொண்டிருக்கும் சத்திய தீபம், அதன் ஒளி இங்குள்ள பலர் மனங்களையும் சென்றடையவில்லை. எவரும் புரிந்து கொள்ளவில்லை. நான் அறிந்தவரையில் நான் கேள்விப்பட்ட வரையில் குரு வம்சத்துத் தலைவர்களால் உங்கள் தலைமையை இழப்பது என்பதைச் சகிக்க முடியவில்லை. அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை! அதை நினைக்கவே அவர்கள் நடுங்குகின்றனர்.” என்றார் த்வைபாயனர். காங்கேயருக்கு த்வைபாயனர் சொல்ல வந்ததின் உட்கருத்து நன்கு புரிந்து விட்டது. சற்று நேரம் பூமியைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

பின்னர் மெல்ல தலையைத் தூக்கிக் கொண்டு, மனப்பூர்வமான குரலில் பேசினார். “ நான் தவறாக நினைத்து வந்திருக்கிறேன். ஆம்! இன்று வரை எனக்கு இது புரியவில்லை. இந்த விஷயம் என் தந்தை, என் தாய் மற்றும் நான் எங்கள் மூவருக்கிடையே உள்ள ஒரு விஷயம் என்றே நினைத்திருந்தேன். அது தவறு என்று புரிகிறது. ஆம், மக்கள் பேசுவார்கள் தான்! நிறையப் பேசுவார்கள். எல்லாவிதமான காரணங்களையும், காரியங்களையும் சுட்டிக் காட்டுவார்கள். நியாயங்கள் அலசப்படும். அவை என் மேலும் என் தாய் மேலும் அநாகரிகமான முறையில் பாயும்! இத்தனைக்கும் என்னைப் பெற்ற மகனாகவே நினைக்கிறாள் இந்தத் தாய்! அவளைக் குற்றம் சுமத்துவார்கள்!” என்றார் காங்கேயர்.


“ஆஹா, அவை எதுவுமே நடக்காது யுவராஜா! நீங்கள் விரைவில் சித்திராங்கதனை யுவராஜாவாக அறிவிப்புச் செய்துவிடுங்கள். அதன் பின்னர் யாரும் எவரும் எதுவும் பேச மாட்டார்கள்” என்றார் த்வைபாயனர்.
அதற்கு ஷாந்தனு, “இந்த குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவரும் நான் இருக்கையிலேயே இப்படி எல்லாம் நடந்து கொண்டால், நான் பித்ருலோகம் போய்விட்டேன் எனில் இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ, செய்வார்களோ! தெரியவில்லை!” என்று சோகத்துடன் கூறினார். அதற்கு காங்கேயர் இன்னமும் மெதுவான குரலில், “ஆம், நீங்கள் சொல்வது சரியே! குரு வம்சத்துத் தலைவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து இருக்கின்றனர். ஒரு குழுவினர் என்னைத் தலைவனாகவும் அடுத்த அரசனாகவும் ஏற்க நினைக்கின்றனர். இன்னொரு குழுவினர் சித்திராங்கதனை அரசனாக ஏற்க விரும்புகின்றனர். இதன் மூலம் குரு வம்சத்தினரிடையே பரஸ்பரச் சண்டை தான் மூளும். ஹஸ்தினாபுரம் போர்க்களமாகி விடும்!” என்றார்.


“அவர்களின் வியாகூலத்தை நீ தான் தீர்க்க வேண்டும் மகனே!” என்றான் ஷாந்தனு.


“தந்தையே, தாங்கள் அனுமதித்தால் நாளைக் கழித்து மறு நாள் ராஜசபையைக் கூட்டலாம். அந்த சபையில் சித்திராங்கதனை யுவராஜாவாக அறிவிப்புச் செய்துவிடலாம். நான் என்னுடைய சபதத்தை அனைவரும் நிறைந்திருக்கும் அந்த ராஜசபையில் அறிவிக்கிறேன். அதோடு அல்லாமல், நான் என்றென்றும் ஹஸ்தினாபுரத்துக்கும், குரு வம்சத்தினருக்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றைப் பாதுகாக்கப் பாடுபடுவேன் என்றும் என்றும் என்னுடைய முழு உதவியும் ஹஸ்தினாபுரத்துக்கும் குரு வம்சத்தினருக்கும் உண்டு என்பதையும் சொல்லிவிடுகிறேன். இந்த சாம்ராஜ்யம், மஹாராஜா பரதனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சாம்ராஜ்யம் வழிவழியாகத் தொடரவும் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன் என்றும் சபதம் இடுகிறேன். அதற்காக என்ன விலை இருந்தாலும் கொடுப்பேன். ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் குருவம்சத்தினர் எவர் அமர்ந்தாலும் இது தான் என்னுடைய நிலைப்பாடு. இத்தகையதொரு சபதத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.” என்றார் காங்கேயர்.


“மதிப்புக்குரிய காங்கேயர் சரியாகச் சொல்லுகிறார். இவர் தான் தர்மத்தின் பாதுகாவலர். ஒளி பொருந்திய தர்ம வாள் இவர் தான்! இவர் தர்மத்தின் திருவுருவம்!” என்றார் த்வைபாயனர். “த்வைபாயனர் நம்மை விட்டுச் செல்வதற்கு முன்னால் ராஜசபையைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய் மகனே!” என்றான் ஷாந்தனு. “என்னால் இனி அதிக நாட்கள் இங்கே தாமதிக்க முடியாது. இன்னும் மூன்று நாட்களில் நான் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல நினைக்கிறேன்.” என்றார் த்வைபாயனர்.


“தந்தையின் கட்டளை அதுவெனில்,” என்ற காங்கேயர், “நாளை மறுநாள் ராஜசபை கூட்டப்படும். அதற்குள்ளாக மதிப்புக்குரிய பராசர முனிவரின் மகன் த்வைபாயனர் கூறியது போல் தந்தையும் சிறிதளவாவது நடக்க ஆரம்பித்து விடுவார்.” என்றார் காங்கேயர்.

Friday, June 10, 2016

த்வைபாயனரின் யோசனை!

“மன்னர் மன்னா! சிறிது காலம் முன்னர் வரை க்ஷாத்ர தேஜஸும், பிரம்ம தேஜஸும் ஒன்றையொன்று பிரிக்க முடியாமலேயே இருந்து வந்திருக்கிறது. அனைத்து ரிஷிகளிடமும் க்ஷாத்திர தேஜஸும் இருந்திருக்கிறது. பிரம்ம தேஜஸும் இருந்து வந்துள்ளது. அப்படியான ரிஷிகளிடம் பாடம் கற்கும் க்ஷத்திரிய அரசர்கள் நீதி பரிபாலனத்தில் சிறந்தவர்களாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது அவை ஒன்றையொன்று சாராமல் பிரிந்து விட்டன. சஹஸ்ரார்ஜுனனோடு நடத்திய யுத்தத்தின் பின்னர் இவை எல்லாம் அடியோடு மாறி விட்டன. முன் போல் இவை ஒன்று சேரவேண்டும். அப்போது தான் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், நியமங்களையும் விதிகளையும் சரிவரக் கடைப்பிடிக்க முடியும்!”

காங்கேயனுக்கு இது பிடித்தமானதாகத் தெரிந்தது. ஆகவே அவர் தலையை அசைத்துத் தம் சம்மதத்தைத் தெரிவித்தார். மேலும் வாய்மொழியாகவும், “ஆம், த்வைபாயனரே, அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அதை நாம் திரும்பக் கொண்டுவர வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?” என்றும் கேட்டார்.

அதற்கு த்வைபாயனர், “யுவராஜா, என் தந்தை பராசர முனிவர் அடிக்கடி சொல்வது என்னவென்றால், ஸ்ரோத்ரியர்கள் தங்கள் வாழ்க்கையில் முழு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வேதம் ஒன்றுக்காக மட்டும் வாழ்ந்து வர வேண்டும். ஆனால் அப்படியான பிராமணோத்தமர்கள் இப்போது அரிதாகவே காணப்படுகின்றனர். அனைவரும் தங்கள் நியம, நிஷ்டைகளை மறந்து வருகின்றனர். பிராமணர்கள் ஒழுங்காக இருந்து அனைத்தையும் கற்பித்தாலன்றி க்ஷத்திரியர்களால் நாடாள இயலாது! ஆக அவர்களும் தங்கள் உண்மையான கடமைகளை மறந்துவிட்டனர்.” என்று என் தந்தை சொல்வார்.” என்றார் த்வைபாயனர்.

தன் தலையை ஆட்டி ஆமோதித்த வண்ணம் காங்கேயன் சொல்வார்:” நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே, த்வைபாயனரே!  ராஜரிஷிகளாகவே இருந்த மனுவின் நாட்களும் வைவஸ்வனின் நாட்களும் காலப்போக்கில் மறந்து மறைந்துவிட்டன. இப்போதுள்ள க்ஷத்திரியர்களுக்கு தவத்தின் வலிமை தெரியவில்லை. அதற்காக வாழ்வதுமில்லை. அதிகாரங்களைக் கைப்பற்றி நாடுகளை ஆளவே விரும்புகின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களில் தங்கள் காலத்தைக் கழிக்கவே விரும்புகின்றனர். போட்டியிலும், பொறாமையிலும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு காலத்தைக் கழிக்கின்றனர். அவர்களிடம் போய் நீதி, நேர்மை, ஒழுக்கம், தர்மம் என்றெல்லாம் பேசினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள்!”

காங்கேயன் தன் கைகளைத் தன் தந்தையின் தோள்களின் மேல் அன்புடன் வைத்துக்கொண்டு தடவிக் கொடுத்தார். “தந்தைக்கு என்ன செய்வது என்று புதிராக இருக்கிறது. குழம்பிப் போய் இருக்கிறார். க்ஷத்திரியர்கள் தங்கள் அரச தர்மத்தை எல்லாம் கைவிட்டு எத்தனையோ காலங்கள் ஆகின்றன. எல்லாம் ஒவ்வொன்றாய்க் கெட்டுப் போக ஆரம்பித்தாயிற்று. இது எங்கே போய் முடியப் போகிறது என்பதே புரியவில்லை. இதை யார் எப்படி நிறுத்தப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை!”

கருணையுடனும், தயையுடனும் புன்னகைத்தார் த்வைபாயனர்.

“ஆர்யவர்த்தமும் அதன் மக்களும் இன்னமும் கெடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மதிப்புக்குரிய மன்னர் மன்னரிடமும், யுவராஜாவான உங்களிடமும் இருக்கிறது, பிரபுவே! நீங்கள் இருவரும் மனம் வைத்தால் அதைத் தடுத்து நிறுத்தலாம்.”

“ம்,, அப்படி நடக்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனாலும் சில சமயங்களில் எனக்கே தர்மத்தின் படி வாழ்வது என்பது ஒரு சவாலாகத் தோற்றமளிக்கிறதே! என்ன செய்வது?” என்று ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறினார் காங்கேயன். “கவலை வேண்டாம் யுவராஜா!” என்று சொன்ன த்வைபாயனர் அவர் வயதுக்கு மீறிய விவேகத்துடன் காணப்பட்டார். அதே விவேகத்துடன் அவர் மேலும் கூறுவார்:” இருள் அதிகம் ஆகும்போது தான் வெளிச்சம் பிறக்கிறது. தர்மம் தானே எழுந்து நிற்கும்; அதற்கு வேண்டிய வலிமையையும், வல்லமையையும் சேகரித்த பின்னர் அது தானே எழுந்து நிமிர்ந்து நிற்கும்.” என்றார்.

“நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லுங்கள். தந்தையும் தன்னால் இயன்றதைக் கட்டாயமாய்ச் செய்வார்.” என்றார் யுவராஜா காங்கேயன். தன்னை விட வயதில் மிகச் சிறியவராக இருக்கிறார் இந்த இளம் துறவி. ஆனாலும் இவரிடம் அளப்பரிய மதிப்பும், மரியாதையும் உண்டாகிறதே என நினைத்துக் கொண்டார் காங்கேயன்.


“வழி மிக எளிதானது யுவராஜா அவர்களே! நீங்களும், நானும், இன்னும் நூற்றுக்கணக்கான பிரமசாரிகளும் பிரமசரிய விரதம் ஏற்கையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுத்திருந்தோம்.
நான் நல்லனவற்றையே நினைத்துக் கொண்டு தீயனவற்றை மறந்துவிடுவேன்
நான் உண்மையையே கடைப்பிடிப்பேன். பொய்யை வெறுத்து ஒதுக்குவேன்.
ஞானத்தையும் விவேகத்தையும் போற்றுவேன்; அறியாமையை ஒதுக்குவேன்.
சத்தியப் பாதையில் செல்வேன்; பொய்யின் பாதையை ஒருக்காலும் நாட மாட்டேன்.
எளிமையான வாழ்க்கையை வாழ்வேனே அன்றி ஆடம்பர வாழ்க்கையை விரும்ப மாட்டேன்."

"யுவராஜா, இவற்றை எல்லாம் நாம் ஒருக்காலும் மறக்காமல் கடைப்பிடித்து வந்தோமானால் ஒளிக்கடவுளான சூரிய பகவான் நமக்கு நல்லனவற்றை எல்லாம் அருளித் தருவார். அவர் கண்கள் ஒரு கணம் மெல்ல மங்கியது போல் காணப்பட்டது. அவர் மேலும் அடக்கத்துடன் கூறினார்:” என்னால் இயன்றவரையிலும் இவற்றை எல்லாம் கடைப்பிடிக்க நான் முயற்சி செய்து வருகிறேன். கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் தான். ஆனால் என்னால் இயன்றவரை முயல்கிறேன். முயற்சியை நான் ஒரு போதும் கைவிடவில்லை!” என்று சொல்லிய வண்ணம் சுற்றிலும் பார்த்தவண்ணம் தன் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தினார் த்வைபாயனர்.

சூரியனின் மெல்லிய கிரணங்கள் அந்த அறைக்குள் நுழைந்து அலாதியானதொரு சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. கதவுகள் வழியாகவும், சாளரங்கள் வழியாகவும் நுழைந்த வெளிச்சத்தைக் கண்ணுற்ற த்வைபாயனர் சூரியக் கடவுளை வழிபடும் விதமாகக் காயத்ரி மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். பின்னர் மேலும் பேசினார்.

“தோல்விகள் மேல் தோல்விகளைக் கண்டாலும் என் நம்பிக்கைக்கு அசைவில்லை. என்  தந்தை பராசர முனிவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழி வீணாகிப் போய்விடக் கூடாது!” இதைச் சொன்ன த்வைபாயனர் தனக்குள்ளே மீண்டும் தன்னம்பிக்கை கிளர்ந்து எழுந்ததை உணர்ந்தார்.

Wednesday, June 8, 2016

ஷாந்தனுவின் வேண்டுகோள்!

சிகிச்சை ஆரம்பித்து எட்டு நாட்கள் ஆகி இருந்தன. எட்டாம் நாள் சக்கரவர்த்தி ஷாந்தனு மெல்ல எழுந்து அமர்ந்ததோடு அல்லாமல் தன்னைச் சுற்றி என்ன நடந்தது, இப்போது என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான். மெல்ல மெல்லப் பேசவும் செய்தான். ஆனாலும் குரலில் பலஹீனம் இன்னமும் தெரிந்தது. அவனால் வழக்கமான குரலில் பேச முடியவில்லை. அன்று மத்தியானம் சிகிச்சை முடிவடைந்ததும் த்வைபாயனர் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்து அக்னியை அணைத்தார். பின்னர் கோயிலுக்குச் செல்வதற்காகக் கிளம்பினார்.

சக்கரவர்த்தி ஷாந்தனு மென்மையான கரடித்தோலால் செய்யப்பட்ட படுக்கையில் சாய்ந்த வண்ணம் படுத்திருந்தான். அவனருகே அவனுடைய ஆசை மனைவி மஹாராணி சத்யவதி அமர்ந்து கொண்டு மன்னனின் தோளை மெதுவாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். அவள் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது. அதோடு அவள் உள் மனதில் தன் மகன் கிருஷ்ண த்வைபாயனரின் சக்தியைக் குறித்துப் பெருமிதமும் ஏற்பட்டிருந்தது. தன் மகன் மகாப் பெரிய சாதனையைச் செய்துவிட்டான் என்று அவளுக்குப் புரிந்தது. படுக்கையின் தலைமாட்டில் விசிறி வீசும் பெண்கள் நின்று கொண்டு இயந்திரம் போல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.


படுக்கையின் வலப்பக்கம் போட்டிருந்த ஆசனத்தில் யுவராஜா காங்கேயன் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் இப்போது பதட்டமும், வியாகூலமும் குறைந்திருந்தது. அமைதி தெரிந்தது. த்வைபாயனரின் மேல் அலாதியான மதிப்பும் ஏற்பட்டிருந்தது. அவரால் இத்தனை காலம் செய்து வந்த வைத்தியங்களில் குணமடையாத தன் தந்தை இப்போது த்வைபாயனரின் மந்திர வித்தைக்குக் குணமானது குறித்து இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தவிதமான மருந்துகளுக்கும் குணமாகாத தன் தந்தை இப்போது குணமாகி இருக்கிறார். இந்த இளைஞனுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.

ஆனால் அதே சமயம் ஆசாரியரும், ராஜகுருவுமான விபூதி அவர்கள் யுவராஜா காங்கேயன் அருகே அமர்ந்திருந்தவர் த்வைபாயனரை அவநம்பிக்கையுடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார். இங்கே நடந்த அதிசயத்தினால் அவர் அதிர்ச்சி அடைந்திருந்தார். இப்படியும் நடக்க முடியும் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் அந்த இளைஞன் சொன்ன மந்திரங்கள் பெரும்பாலும் அவர் அறிந்தவையே! அவரால் சொல்லப்பட்டவையே! அவரும் மந்திர வித்தையை நன்கு கற்று அதில் தேர்ச்சி பெற்றவரே! ஆனால் இந்த இளைஞன் முன்னால் அவர் திறமை தோற்கடிக்கப்பட்டு விட்டதே!


ஹஸ்தினாபுரத்தின் ஸ்ரோத்ரியர்களுக்குள்ளே அவர் தான் இன்றளவும் தலைவராக இருந்ததோடு அல்லாமல் அதன் மூலம் கிடைத்து வந்த பெரிய மரியாதைகளையும், மதிப்பையும் அவர் அனுபவித்து வந்தார். அதர்வ வேதம் வேதங்களின் தொகுப்புத் தான் என்று யாரேனும் சொல்லி வந்தால் அவர்களைக் கொஞ்சமும் மதிக்க மாட்டார். எவரோடும் ஒத்துப் போக மாட்டார். அதர்வ வேதத்தைக் கொண்டாடுபவர்களைத் தம் விரோதியாகவே பார்ப்பார். அவர் தினமும் மன்னனின் படுக்கைக்கு அருகே அமர்ந்து கொண்டு அங்கு நடக்கும் சாஸ்திர ரீதியான சடங்குகளை மேற்பார்வை செய்து வந்தார். அது அவர் கடமை. ஒரு ராஜகுருவாக மன்னனுக்குச் செய்ய வேண்டிய கடமை! ஆகவே அவர் அங்கே அமர்ந்திருக்க நேர்ந்தது. இல்லை எனில் இந்த இளைஞன் அதர்வ வேதத்தை அந்த மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்ததுமே அவர் அறையை விட்டே வெளியேறி இருப்பார். அவர் சிறிதும் இதை எதிர்பார்க்கவே இல்லை. அதர்வ மந்திரத்தை இந்த இளைஞன் உச்சரித்துக் கொண்டே அதில் சொல்லி இருக்கும் மந்திர மூலிகைகளைக் கொண்டு மன்னனுக்கு சிகிச்சை அளிக்கப் போகிறான் என்று அவர் நினைக்கவே இல்லை!


த்வைபாயனர் கோயிலில் பார்த்த இளைய மந்திரி குனிக் என்பவரும் அங்கே படுக்கைக்கு அருகே அதன் காலடியில் நின்று கொண்டிருந்தார். அவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தினாலும் ஆர்வமிகுதியினாலும் த்வைபாயனர் செய்ததைப் பாராட்டியதோடு அல்லாமல் இதன் மூலம் த்வைபாயனருக்கு என்ன விதத்தில் லாபம் கிட்டப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டினார். ஹஸ்தினாபுரத்தின் மேல் த்வைபாயனருக்கு என்ன விதத்தில் உரிமை இருக்கப் போகிறது என்றும் இந்தக் காரியத்தின் மூலம் அவர் அடையப்போகும் லாபத்தின் அளவு குறித்தும் அவர் சிந்தித்தார்.

த்வைபாயனர் இவை எதையும் கவனிக்காமல் அறையை விட்டு வெளியேற ஆயத்தமானார். வெளியேறும் முன்னர் அவர் காங்கேயனிடம் அறையில் உள்ள ஊழியர்களை அப்புறப்படுத்தும்படி மெதுவாகச் சொன்னார். உடனே சைகை மூலம் அறையிலிருந்து ஊழியர்களையும், மந்திரி குனிக்கையும் அப்புறப்படுத்தினார் காங்கேயன். அறையில் எவரும் அந்நியர் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்ட த்வைபாயனர் மன்னனைப் பார்த்து, “சக்கரவர்த்தி, பரத குலத்துச் சிறந்த அரசே! நாளை ஒன்பதாம் நாள் என்னுடைய சிகிச்சை முடிவடைகிறது. அதன் பின் நீங்கள் கொஞ்சம் எழுந்து நடக்கலாம். இனிமேல் நாளைக்குப் பின்னர் என் உதவி உங்களுக்குத் தேவையாக இருக்காது!” என்றார்.


ஷாந்தனு பதிலே சொல்லாமல் தன் கைகளைக் கூப்பி அவரை வணங்கினான். பின்னர் த்வைபாயனரிடம், “நான் எவ்வண்ணம் உங்களுக்குப் பரிசளிப்பேன்? என் நன்றியை எப்படித் திருப்பிக் காட்டுவேன்? த்வைபாயனரே! தயை கூர்ந்து சொல்லுங்கள்!” என்றான். அவன் குரலில் நன்றி நிரம்பி வழிந்தது. “பரிசா?” என்று கேட்டுவிட்டுச் சிறுபிள்ளையைப் போலப் பெரிதாகச் சிரித்தார் த்வைபாயனர். “பரிசை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன், அரசே! எனக்கு அதை வைத்து எப்படிப் பயன்பெறுவது என்பதே தெரியாது. அதோடு சக்கரவர்த்தி, அந்தப் பரிசை நான் ஏற்றுக் கொண்டேன் ஆனால், என்னுடைய தவமெல்லாம் வீணாகிவிடுமே!  என் தவம் வீணானால் நான் சொல்லும் மந்திரங்களுக்குப் பொருளே இல்லை. அவையும் தங்கள் சக்தியை இழந்துவிடுமே! பரிசெல்லாம் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நான் எதுவும் புதிதாகவோ அதிசயமாகவோ செய்து விடவில்லை. எல்லாம் வல்ல ஒளிக்கடவுள் என்னை வழிநடத்தி ஹஸ்தினாபுரம் கொண்டு சேர்த்தார். அதோடு அல்லாமல் உங்களை குணப்படுத்தும் சக்தியையும் எனக்கு உவந்தளித்தார். அவர் இதை எனக்கு மட்டுமல்ல பலப் பல ஸ்ரோத்ரியர்களுக்குச் செய்து தான் வருகிறார்.”


மன்னன் சைகை காட்ட காங்கேயன் மன்னனின் வாய்க்கருகே தன் காதை வைத்துக் கொண்டு தகப்பன் மெல்ல மெல்லப் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டார். தந்தை என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொண்ட காங்கேயர் த்வைபாயனரிடம் திரும்பி, “தந்தை உங்களுக்கு எவ்வகையில் உதவி செய்தால் உங்களுக்குப் பயனாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்.” என்றார். அதற்கு த்வைபாயனர், “பரத குலத்தில் சிறந்தவரே, யுவராஜா, என்னை மாபெரும் நன்றிக்கடனில் மூழ்க அடிக்காதீர்கள். ஏற்கெனவே எனக்கு நீங்கள் அபாரமான தன்னம்பிக்கையைக் கொடுத்து விட்டீர்கள். ஒளிக்கடவுளான சூரிய பகவானின் கருணா கடாட்சம் என் மேல் நிறைய இருக்கிறது என்பதைக் காட்டிக் கொடுத்துள்ளீர்கள். நான் என்ன செய்கிறேனோ அதற்கு அவன் துணை இருக்கிறது என்பதையும் புரிய வைத்துள்ளீர்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? எனக்கு வாழ்க்கையில் உள்ள ஒரே ஒரு குறிக்கோள், தர்மம் நிலைபெற்று வாழ வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில் தர்மத்தின் ஆட்சி நடக்கவேண்டும் என்பதே ஆகும். நம் முன்னொர் கடைப்பிடித்த அந்த தர்ம வாழ்க்கை மீண்டும் வரவேண்டும்.”


“என் தந்தை அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் ஒரு அரசனாக, சக்கரவர்த்தியாகத் தன் தர்மத்தைக் கைவிடாது காப்பாற்றி வந்திருக்கிறார்., தர்மத்தின் வழியினில் நடந்து வந்திருக்கிறார்.” என்றார் காங்கேயன்.

சக்கரவர்த்தியின் உதடுகள் புன்னகை செய்ய முயன்று தோற்றுப் போய்க் கொஞ்சம் கோணிக் கொண்டன. எனினும் மன்னனின் முகபாவத்திலிருந்து அவன் புன்னகை செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டனர். தான் பேச விரும்புவதை ஜாடை மூலம் தெரிவித்த மன்னன், மெதுவான குரலில், “தர்மம் அழிந்து தான் வருகிறது!” என்று ஒத்துக் கொண்டான்.


“மன்னா, அது யார் தவறும் அல்ல! சஹஸ்ரார்ஜுனன் ஒரு காட்டுத்தீயைப் போல் வந்து புகுந்து அனைத்தையும் அழித்துச் சாம்பலாக்கி விட்டான். அவன் வழியில் குறுக்கிட்டவர் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அடியோடு அழித்துவிட்டான்.” என்ற த்வைபாயனர் தான் சொல்வது அனைத்துக்கும் ஒரு குறியீடு இருக்கிறது என்பதை மன்னன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அழுத்தம் திருத்தமாகப் பேசினார். “அவனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆரியர்களால் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளவே போராட வேண்டி இருந்தது. இதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் மன்னா! ஏனெனில் இந்தப் போரில் நேரடியாக ஈடுபட்ட உங்களுக்கு இது நன்றாகவே புரியும். மற்றவர்களை விட நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எத்தனையோ ஆசிரமங்கள் அழிக்கப்பட்டு விட்டன. வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அதற்குச் சம்மதிக்காதவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். நேர்மையான மனிதர்கள் செய்வதறியாமல் ஓர் தெளிவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். ஆரியர்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போனதோடல்லாமல் பழைய விதிகள், நியமங்கள், நீதிகள் அனைத்தும் மறக்கப் பட்டு விட்டன. அவற்றைக் கடைப்பிடிப்பவர் இன்று இல்லை!”


“இதற்கு நான் அல்லது நாம் என்ன செய்யவேண்டும்?”மன்னன் ஆர்வமுடன் கேட்டான். த்வைபாயனரின் பேச்சில் அவன் முழுமையாக ஈடுபட்டுவிட்டதை அவன் முகம் காட்டியது.

Monday, June 6, 2016

மன்னன் கண் திறந்தான்!

ராஜகுருவான ஆசாரிய விபூதி என்பார் அங்கே ஓர் ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். கைகளில், கழுத்தில் எண்ணற்ற ஆபரணங்கள். கைகளின் எல்லா விரல்களிலும் மோதிரங்கள். கழுத்தில் கனமானதொரு சங்கிலி! அவர் அரசகுரு என்பதை அறிவிக்கும் வண்ணம் ஓர் பட்டுத்துணியிலான உருமால்! அவரும் சளைத்தவர் அல்ல. மந்திர வித்தையில் தேர்ந்தவரே! ஆனாலும் கொஞ்சம் இகழ்ச்சியோடும், கொஞ்சம் வெறுப்போடும் உள்ளே நுழைந்த இளம் துறவியைப் பார்த்தார். இவனால் என்ன செய்ய முடியும்? நாம் செய்ய முடியாத அதிசயத்தை இவன் செய்துவிடுவானா? அதையும் தான் பார்ப்போமே!

 த்வைபாயனர் அனைத்தையும் கண்டும் காணாதவராகத் தன் வேலையிலேயே மும்முரமானார். ஊழியர்கள் கொண்டு வந்த கொடுத்த பொருட்களை வைத்துச் சிறிய அக்னிகுண்டம் ஒன்றை உருவாக்கினார். அதை மன்னனின் படுக்கைக்குச் சற்று அருகேயே நிர்மாணித்தார். பின்னர் அக்னியை உருவாக்கி அக்னிதேவனுக்கு வழிபாடுகள் செய்து ஆஹுதி கொடுத்தார்.
பின்னர் அங்கே எரிந்து போய்ச் சாம்பலானவற்றை எடுத்துக் கைகளில் வைத்த வண்ணம் மன்னன் அருகே வந்தார். அந்தச் சாம்பலை மன்னனின் நெற்றி, உடல், மார்பு, கைகள், கால்கள், கன்னங்கள் எனப் பூசினார். பூசுகையிலேயே அவருடைய வாய் மந்திரங்களைச் சரியான உச்சரிப்பில் உச்சரித்துக் கொண்டிருந்தது.

மஹா அதர்வ ரிஷி பைலருக்கு எப்படிச் செய்தாரோ சற்றும் பிசகாமல் அப்படியே இங்கே மன்னனுக்கும் செய்தார். முதலில் வேதத்தின் முதல் மூன்று தொகுப்புக்களிலிருந்த மந்திர வித்தைக்கான மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தவர், பின்னர் மஹா அதர்வ ரிஷி பைலரை எழுப்புவதற்குச் சொன்ன மந்திரங்களைச் சொன்னார். மெல்ல மெல்ல அவருடைய மந்திர சப்தம் அந்த அறையை நிறைத்தது. எங்கும் ஓர் பவித்திரமான உணர்வு சூழ்ந்து கொள்வதை அனைவருமே உணர்ந்தார்கள். அடுத்து யமதர்மனை வழிபட்டு அவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொண்ட த்வைபாயனர் தன் பையிலிருந்து மந்திர மூலிகைகளை எடுத்தார். அவற்றிலிருந்து சாறு பிழிந்து கொஞ்சம் போல் நீர் கலந்து மன்னனின் உதடுகளைப் பிரித்து மெல்ல மெல்ல அவன் வாயில் புகட்டினார். கைகள் இந்த வேலைகளைச் செய்ய அவர் மனமும் வாயும் ஒருமித்து மந்திர வித்தைக்கான மந்திரங்களைச் சொல்வதிலே ஈடுபட்டிருந்தது. அவர் அந்த மந்திரங்களின் உண்மைத் தன்மையை முற்றிலும் உணர்ந்து மனப்பூர்வமாக ஒன்றிப் போய் மந்திரங்களைச் சொல்லச் சொல்ல அந்த அறையின் ஒட்டு மொத்த சூழ்நிலையுமே மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது.


அந்த அறைக்குள் நுழைந்த சூரிய ஒளியே புதியதொரு தேஜஸோடு பிரகாசிக்க ஆரம்பித்தது. மீண்டும் அக்னிகுண்டச் சாம்பலை எடுத்து மன்னனின் உடல் முழுதும் பூசி விட்டார் த்வைபாயனர். அவர் குரல் அந்த அறையையே நிறைக்க அனைவரும் அந்த மந்திரங்களால் கட்டுண்டவர்கள் போல் வாய் திறக்காமல் அப்படியே நின்றனர். அமர்ந்திருந்தவர்கள் சற்றும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். த்வைபாயனரின் கண்கள் அசையாமல் சக்கரவர்த்தி ஷாந்தனுவையே பார்த்துக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து தெரிந்த ஒளி மன்னனை எப்போது வேண்டுமானாலும் எழுப்பி விடும் என்பது போல் இருந்தது. த்வைபாயனரின் கண்களையும் அவற்றிலிருந்து பெருகிய ஒளி மன்னனை நோக்கிப் பாய்ந்ததையும் அது மன்னனை எப்போது வேண்டுமானாலும் எழுப்பி விடும் என்பதையும் மஹாராணி சத்யவதியால் புரிந்து கொள்ள முடிந்தது.

 ஏனெனில் அவள் தன் மகனின் இந்தச் சக்தியைக் குறித்து ஏற்கெனவே அறிவாள். அவள் மனம் பின்னோக்கிச் சென்றது. த்வைபாயனர் ஆறு வயதுக் குழந்தையாக இருக்கையில் கல்பியில் அவளோடு இருக்கும்போது யமுனைக்கரையில் வந்து நின்று கொண்டு தன் தந்தையை அழைப்பார் அல்லவா? அப்போது அவர் முகமும் கண்களும் இப்படித் தான் ஜொலித்தன! தன் முழுமனதோடு தன் தந்தையை அங்கே வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி த்வைபாயனர் விடுத்த அழைப்புக் குரல் எப்படி அவர் தந்தையின் காதுகளில் போய் விழுந்து அவரும் கல்பிக்கு வந்து த்வைபாயனரை அழைத்துச் சென்றாரோ அதே போல் இப்போதும் நடக்கப் போகிறது என்று சத்யவதி உறுதியாக நம்பினாள்.


எல்லாருடைய கண்களும் த்வைபாயனரின் மேல் பதிந்திருந்தன. அவர் உடல் சற்று நேரத்தில் விரைப்பாகி விட்டது. தன் முழு சக்தியையும் பிரயோகித்துத் தன் குரலில் கொண்டு வந்திருப்பதைப் போல் காணப்பட்டார் அவர். அவர் உடலின் சக்தியும் உள்ளத்தின் பலமும் ஒன்று சேர்ந்து அந்த மந்திரப் பிரயோகங்கள் மூலம் மன்னனுக்குப் போய்ச் சேருகின்றன என அனைவருக்கும் புரிந்தது. தன் ஒருமித்த சக்தியனைத்தையும் கண்களில் கொண்டு வந்த த்வைபாயனர் அந்த ஒளி விடும் கண்களில் வீசும் ஒளிரேகைகள் மூலம் மன்னனின் உடலுக்குள் அவற்றைப் பாய்ச்சி அவனைத் தன்னிலைக்குக் கொண்டு வர முயல்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டனர். மந்திர சப்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. அனைவரும் மூச்சுக்கூட விடாமல் அடுத்து என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதோ அதிசயம் நடக்கப் போகிறது என்பதை அனைவரும் உணர்ந்தார்கள்.


மன்னன் அசைவின்றிக் கிடந்தான். மந்திர சப்தங்கள் உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அனைவரின் கண்களும் மன்னன் மேலும் த்வைபாயனர் மேலும் மாறி மாறிச் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென மன்னனின் கண் இமைகள் படபடத்தன. கண்ணுக்குள்ளே கருமணிகள் உருண்டன. அதுவரையிலும் மூச்சுவிடுவதற்குப் போராடிக் கொண்டிருந்த மன்னனின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது. ஆனால் இன்னமும் கண்களைத் திறக்கவில்லை! என்றாலும் இப்போது அவன் மயக்கத்தில் இல்லை என்பதையும் நீண்ட ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயிற்று!

மீண்டும் ஒருமுறை அக்னிச் சாம்பல் மன்னன் உடலில் பூசப்பட்டது. மணிமந்திர  ஔஷதம் மன்னன் வாயில் புகட்டப்பட்டது. அப்போது மன்னன் லேசாகக் கண்களைத் திறந்தான். சுற்றும் முற்றும் பார்த்த அவன் கண்கள் காங்கேயனின் மேல் வந்து நிலைத்தன. பின்னர் அசதி தாங்காமல் அந்தக் கண்கள் தானாக மூடிக் கொண்டன.  ஆயினும் மன்னன் மீண்டும் வலுக்கட்டாயமாகத் தன் கண்களைத் திறந்து தன் படுக்கைக்கு அருகே அமர்ந்திருக்கும் மஹாராணி சத்யவதியைப் பார்த்தான். அவளைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலை அசைத்தான். பின்னர் மீண்டும் கண்களை மூடியவன் அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் என்பது அவனுடைய சீரான மூச்சிலிருந்து தெரிந்தது.


அன்றைய தினத்துக்கான மந்திர ஓதல் முடிவடைந்தது. த்வைபாயனர் மனதுக்குள் சந்தோஷத்துடன் சம்பிரதாயமான முறையில் அக்னி குண்டத்து நெருப்பை அணைத்தார். தன்னுடைய தண்டத்தையும் சுரைக் குடுக்கையையும் எடுத்துக் கொண்டார். தன் கண் பார்வையினாலும், சைகைகளினாலும் மஹாராணியிடம் விடைபெற்றுக் கொண்டவர் அப்படியே சைகைகளின் மூலமே காங்கேயனிடமும், சித்திராங்கதன், விசித்திர வீரியன் ஆகியோரிடமும் விடைபெற்றுக் கொண்டார். அறையை விட்டு மெல்ல வெளியேறினார். மக்கள் அனைவருக்கும் அரண்மனையில் நடந்த இந்த அதிசயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அனைவரும் மாளிகை வாயிலில் கூடினார்கள்.

அரண்மனையை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்த இளம் துறவியைப் பார்த்து ஆவலுடனும் மரியாதையுடனும் நமஸ்கரித்தார்கள். அனைவரும் மிக்க மரியாதையுடன் அவரைப் பார்த்து வணங்கினார்கள். ஆனால் துறவியோ நடந்த நிகழ்ச்சிகளினால் மிகவும் களைத்துப் போயிருந்தார். அவர் உடலிலிருந்த சக்தி அனைத்தையும் இழந்தவர் போல் காணப்பட்டார். அதோடு இல்லாமல் நடந்த அதிசயத்தினால் அவருமே வாயடைத்துப் போயிருந்தார். அங்கு கூடி நின்ற கூட்டத்தைக் கூடக் காணாமல் அதைப் பற்றிய சிந்தனையே சிறிதும் இல்லாமல் தன் தலையைக் குனிந்து கொண்டு மனதிலும் உடலிலும் அடக்கம் நன்கு தெரியத் தான் தங்கி இருந்த கோவில் வளாகத்தை நோக்கி நடந்தார்

Sunday, June 5, 2016

த்வைபாயனருக்குப் பரிட்சை!

“தாங்கள் பயப்படுகிறீர்களோ, தாயே! மன்னிக்கவும் மஹாராணி! யுவராஜா காங்கேயர் தன் சபதத்தை நிறைவேற்ற மாட்டார் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அதனால் தான் ராஜசபையில் அனைவர் எதிரிலும் அதை அறிவித்தாக வேண்டும் என்கிறீர்களா?” என்று த்வைபாயனர் கேட்டார்.

“இல்லை மகனே, காங்கேயன் சொன்ன வண்ணமே செய்து முடிப்பான். அவன் சபதத்திலிருந்து ஒருக்காலும் பிறழ மாட்டான். அவன் மிகவும் நேர்மையானவன். உண்மையை விரும்புவான். நியாயமான, நேர்மையான பாதையில் செல்ல விரும்புவான். என்னை அவன் ஒருபோதும் சிற்றன்னையாகக் கருதியதே இல்லை. சொந்தத் தாயாகவே கருதுகிறான். அவன் தன் தந்தையிடம் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை! அவனுக்குத் திருமணத்திற்குப் பல தேசத்து ராஜகுமாரிகளைக் கொடுப்பதாகச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவன் திருமணம் செய்து கொள்ள இன்று வரை சம்மதிக்கவில்லை. அதோடு இல்லாமல் அவன் என் மகன்களைத் தான் ராஜரீக காரியங்களிலும், போர்ப்பயிற்சிகளிலும் ஈடுபடுத்திக் கற்றுக் கொடுத்து வருகிறான்.”

“பின் என்ன கஷ்டம் தாயே! வழி தான் தெளிவாக இருக்கிறதே!”

“இல்லை, மகனே! காங்கேயனைப் பொறுத்தவரை எல்லாம் சரிதான். ஆனால் இந்தக் குரு வம்சத்தின் மற்றத் தலைவர்கள்! அவர்கள் அனைவரும் தங்கள் பாரம்பரியத்தில் மிக்க பெருமை கொண்டவர்கள்; கர்வம் மிக்கவர்கள்! ராஜசபையில் அனைவர் எதிரிலும் காங்கேயனின் சபதம் குறித்த அறிவிப்புச் செய்வதற்கு முன்னரே ஆர்யபுத்திரர் ஷாந்தனு மஹாராஜா பித்ரு லோகம் சென்றுவிட்டாரெனில்! ம்ஹூம், அப்போது உள்ள நிலைமையைக் குறித்து எதுவும் சொல்ல முடியாது மகனே! குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவரும் காங்கேயனுக்குத் தான் ஆதரவு தெரிவிப்பார்கள். அவர்கள் ஆதரவு கிட்டிவிட்டதெனில் காங்கேயனைத் தவிர வேறு எவரும் அரியணை ஏறவே முடியாது. ஏனெனில் அவர்கள் அவ்வளவு செல்வாக்குப் படைத்தவர்கள். ம்ம்ம்ம், உன் தந்தை, மஹான் பராசர முனிவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்! மகனே! அவருடைய மந்திர வித்தையின் மூலம் ஷாந்தனு மஹாராஜாவைக் குணப்படுத்தும்படிக் கெஞ்சிக் கேட்டிருப்பேன். ஆனால், மகனே, எனக்கு என்னவோ தோன்றுகிறது! அவருடைய அந்தச் சக்தி அவர் மூலமாக உனக்கும் வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.”

“எனக்குத் தெரியவில்லை, தாயே! என்னிடம் அந்த சக்தி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை!” அடக்கத்துடன் கூறிய த்வைபாயனர் மேலும், “என்னுடைய தூது வெற்றிகரமாக முடியவேண்டும் என்பது கடவுளரின் விருப்பமாக இருந்தால், தாயே சக்கரவர்த்தியின் உடல்நலத்தைக் குணப்படுத்தும் பொறுப்பில் எனக்கு அவர்கள் உதவி கட்டாயமாய்க் கிட்டும்.”

“மகனே, நான் காங்கேயனை அழைத்து உன்னை ஆர்யபுத்திரரின் படுக்கைக்கு அருகே கொண்டு விடச் சொல்கிறேன்.” என்றாள் சத்யவதி!

உடனே காங்கேயர் அங்கே வரவழைக்கப்பட்டார். அவரிடம் சத்யவதி, த்வைபாயனரைச் சுட்டிக் காட்டி, அவர் பராசர முனிவரின் மகன் என்றும் அவரும், த்வைபாயனரும் வேதங்களை நன்கு கற்று கற்பிப்பதாகவும் அதில் உள்ளபடியே வாழ்க்கை நடத்துவதாகவும், அவற்றுக்காகவே வாழ்ந்து வருவதாகவும் கூறினாள். மேலும் அவர்களின் வேத மந்திரங்களால் அவர்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்றும் கூறினாள். மேலும் தன் இனிய குரலில் அவள் கூறியதாவது:” நான் ஏன் அவரைத் திரும்பக் கூப்பிட்டேன் தெரியுமா! ஏனெனில் அவர் உணவே பல நாட்களாக உண்ணவில்லை என்பதை அறிந்தேன். அதனால் அழைத்தேன். அதெல்லாம் போகட்டும்! இப்போது நாம் ஏன் த்வைபாயனரை வைத்து ஆர்யபுத்திரரின் உடல்நலம் மேம்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது? அவருடைய மந்திர வித்தையையும் முயன்று பார்க்கட்டுமே! அதில் நமக்கு எவ்விதமான நஷ்டமும் இருக்கப் போவதில்லை!” என்றாள்.

காங்கேயனுக்குத் தன் தந்தையின் உடல்நலம் குறித்து நன்கு தெரியும். அவர் உடல் நலம் இனிமேல் முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியங்களே இல்லை என்பதையும் அறிவார். ஆனாலும் தன் சிற்றன்னையின் வேண்டுகோளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். ஏனெனில் சிற்றன்னையின் விருப்பம் பூர்த்தி செய்யப்படவில்லை என்னும் குறை அவளுக்கு இருக்க வேண்டாம். ஒருவேளை தன் விருப்பம் பூர்த்தியாகி இருந்தால் சக்கரவர்த்தி உயிர் பிழைத்திருப்பார் என்று அவள் எண்ணலாம் அல்லவா?

ஆகவே காங்கேயர் சம்மதித்தார். சத்யவதி ஒரு ஊழியனைக் கூப்பிட்டு த்வைபாயனரை கங்கை நதியின் கரைக்கு அரண்மனைக்கருகிலேயே இருக்கும் கரைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினாள். அங்கே த்வைபாயனர் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு சூரிய பகவானையும் வேண்டிக் கொண்டு காயத்ரி மந்திரத்தையும் ஜபித்தார். காயத்ரியைத் தன் உதவிக்கு அழைத்தார். வெளிப்பார்வைக்கு அமைதியாகவும் தன்னை அடக்கிக் கொண்டவராகவும் இருந்தாலும் த்வைபாயனர் உள்ளுக்குள்ளே உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அவரை மாபெரும் உணர்ச்சிக்கடலில் தள்ளி இருந்தது. அவர் தந்தையின் மரணம்; ஓநாய்களின் பிடியிலிருந்தும் ராக்ஷசர்களின் பிடியிலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பியது; இறந்து கொண்டிருப்பவர்களைப் பிழைக்கவைக்கும் மஹா மந்திரத்தைத் தற்செயலாக அதர்வ மஹாரிஷியின் மூலம் தெரிந்து கொள்ள நேர்ந்தது; எல்லாவற்றுக்கும் மேல் அதர்வ ரிஷியின் ஆசிரமத்திலிருந்து உயிருடன் தப்பியது; விசித்திரமான சம்பவங்கள் மூலம் மிகவும் விசித்திரமான முறையில் அவர் தாயுடன் சந்திப்பு நேர்ந்தது; தாய் மூலம் குரு வம்சத்து சக்கரவர்த்தியை இப்போது குணப்படுத்த வந்திருப்பது! இவை எல்லாமே தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்னும் தன் முயற்சி வெற்றி பெற்று விடும் என்பதை உணர்த்துவதாகவே த்வைபாயனர் நினைத்தார். அதற்கு ஹஸ்தினாபுரத்து உதவி கிட்டும் என்றும் மனமார நம்பினார். ஆஹா! இது எல்லாம் நடந்திருப்பது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் கருணையினால் அல்லவோ! கடவுளர் அனைவரும் தம் மேல் தங்கள் கருணாகடாட்சத்தைப் பொழிவது குறித்து த்வைபாயனருக்கு மனம் விம்மியது.

த்வைபாயனர் சக்கரவர்த்தி ஷாந்தனு படுத்துக் கிடந்த அறைக்குள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். மெதுவாக மனதுக்குள்ளாகத் தங்கள் குல முன்னோர்களான பராசரர், சக்தி, வசிஷ்டர் அனைவரையும் பிரார்த்தித்துக் கொண்ட த்வைபாயனர் பிருகு முனிவரையும் ஆங்கிரஸ முனிவரையும் கூட மறக்காமல் பிரார்த்தித்துக் கொண்டார். பின்னர் தாம் குருவாக ஏற்றுக் கொண்ட மஹா அதர்வ ரிஷி ஜாபாலியையும் மானசிகமாக வணங்கிக் கொண்டார். ஒளிக்கடவுளான சூரியனை வேண்டிக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேல் தன்னை இந்த அளவுக்குத் தக்கவனாக மாற்றி இருக்கும் மாபெரும் வேதங்களின் துணையை வேண்டினார். தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணித்திருப்பதால் அவற்றின் உதவி தனக்குக் கிட்டும் என்றும் நம்பினார்.

அங்கே வந்த தன் தாயைப் பார்த்தார். அவள் முகத்தில் தன் மகன் மீதிருந்த நம்பிக்கை தெரிந்தது. த்வைபாயனருக்கு அது கவலையைத் தந்தது. ஒரு வேளை அவர் தோற்று விட்டால்! “ஆஹா, கடவுளே, நான் இந்தப் பரிட்சையில் தோற்று விட்டேன் எனில் என் தாய் மனம் புண்படுவாள். அவள் இதயம் சுக்கு நூறாகி விடும். அவள் முகத்தில் புன்னகையை இனி ஒரு போதும் பார்க்கவே முடியாது!” தான் தோற்கக் கூடாது என்று உறுதி பூண்டார் த்வைபாயனர். இல்லை. இல்லை. த்வைபாயனன் தோற்க மாட்டான். தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். கடவுளர் அனைவரும் விரும்புவதற்கேற்ப தர்மக்ஷேத்திரம் புனர் நிர்மாணம் அடைய வேண்டும். பழைய வளத்தைப் பெற வேண்டும். அது நடக்கவேண்டுமெனில் தான் தோற்கக் கூடாது!

தன்னம்பிக்கையுடன் அறைக்குள்ளே நுழைந்தார் த்வைபாயனர். அவருடன் யுவராஜா காங்கேயனும், சத்யவதியும், மற்ற ஊழியர்களும் பின்னால் வந்தனர். ஏற்கெனவே அங்கிருந்த பழைய ஸ்ரோத்ரியர்கள் இந்த இளந்துறவி யுவராஜனால் விரட்டப்பட்டுச் சென்றவன் மீண்டும் உள்ளே வந்திருக்கிறானே என அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.  தங்களுடைய அதிகாரத்தை ஏகபோக உரிமையை அவன் பிடுங்கிச் செல்ல வந்திருப்பதாகவே நினைத்தார்கள். வருடக்கணக்காகத் தங்களுடைய கடுமையான உழைப்பினால் கிடைத்திருக்கும் இந்தப் பிரத்தியேக உரிமையை இப்போது இன்று வந்த இவன் பிடுங்கிக் கொண்டு விடுவானோ? இவனால் எப்படி வெல்ல முடியும்?

Friday, June 3, 2016

சத்யவதியின் விருப்பம்!

அதற்குள்ளாகத் தன் மகன் உணவே உண்ணவில்லையே என்பது சத்யவதியின் நினைவில் வந்தது. ஆகவே, “மகனே, நான் நீ உணவு உண்ணவில்லை என்பதை மறந்தே போனேனே!” என்று சொல்லிய வண்ணம் தன் கைகளைத் தட்டினாள். வந்த ஊழியர்களிடம் த்வைபாயனருக்குத் தேவையான உணவைக் கொண்டு வரும்படி பணித்தாள். ஊழியர்கள் உணவைக் கொண்டு வந்து தர த்வைபாயனர் அதை உண்ண அமர்ந்தார். சத்யவதி மகனின் அருகே தானும் ஒரு சின்ன ஆசனப் பலகையில் கீழேயே அமர்ந்தாள். பலகையாக இருந்தாலும் அது தங்கத் தகடுகளும், வெள்ளித் தகடுகளும் பொருத்தப்பட்டுக் காணப்பட்டது. தாயும் மகனும் ஒரு சோகமான சூழ்நிலையில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர். அதன் பின்னர் நடந்த சில வித்தியாசமான நிகழ்வுகளின் மாறுபட்ட சூழ்நிலையினால் இப்போது தாயும் மகனும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் எப்படி! தாய் ஒரு மகாராணியாகவும், மகன் அனைத்தும் துறந்த இளம் துறவியாகவும்!

“மகனே! உனக்கு நினைவிருக்கிறதா! நீ என்னை விட்டுப் பிரிந்து செல்கையில் நான் எப்போது உன் வருகையை விரும்புகிறேனோ அப்போது வருவதாகச் சொல்லிச் சென்றாயே! அது நினைவில் இருக்கிறதா? மகனே! நான் உன்னைத் தினந்தோறும் அழைத்த வண்ணமே இருந்தேன்!” என்றாள் மஹாராணி சத்யவதி!

“ஆம், தாயே! நினைவில் உள்ளது! எவ்வாறு மறப்பேன்! அதுவும் என் தாயையா? ஒருக்காலும் இல்லை தாயே! அல்லும், பகலும் நான் உங்களை நினைத்துக் கொண்டே இருந்தேன். நீங்களும் எப்போதுமே என் முன்னிலையில் இருந்தீர்கள். உங்கள் குரல் எனக்குக் கேட்டவண்ணமே இருந்தது. ஒரு முறை ஓநாய்களின் பிரதேசத்தில் கேட்டேன். இன்னொரு முறை மஹா அதர்வ ரிஷியின் ஆசிரமத்தில்! அப்போது “கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய் நீ! ஏன் வரமாட்டேன் என்கிறாய்?” என்று நீங்கள் கேட்டது இன்னமும் என் காதுகளில் ஒலித்தவண்ணம் இருக்கிறது. இறையருளால் அவர்கள் வழிகாட்டுதலில் நானும் உங்களை வந்தடைந்துள்ளேன்!” என்றார் த்வைபாயனர். மேலும் புன்னகையுடன் அவர் சொன்னார்;”நான் கல்பிக்குச் சென்றபோது நம் பழைய வழக்கப்படி ஒரு மண்பானையில் ஆலிலையை வைத்து உங்களுக்கு யமுனைத் தாயின் மூலம் அனுப்பி வைத்தேன்! என்னை மன்னிக்கும்படி அதன் மூலம் கேட்டுக் கொண்டேன்!” என்றார்.

“மன்னிப்பதா! உன்னையா! நானா? எதற்காக மன்னிப்பு மகனே!”

“நான் கல்பியிலிருந்து உங்களை விட்டுச் சென்றது குறித்துத் தான் நீங்கள் கோபமாக இருந்தீர்களே!”

“ஆஹா, மகனே! நான் உன்னைக் கோபிப்பதா! உன்னை எப்படி நான் கோபிப்பேன்! நீ ஒருபோதும் என்னைக்கோபம் அடைய வைத்ததில்லை!”

அதற்குள்ளாக சத்யவதியின் கட்டளையின் பேரில் ஒரு சேடிப் பெண் சிறிய இளவரசர்கள் இருவரையும் அங்கே அழைத்து வந்தாள்.சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் அங்கே வந்தார்கள். சித்திராங்கதனுக்குப் பதினோரு, பனிரண்டு வயதுக்குள்ளும், விசித்திர வீரியன் பத்து வயதுக்குள்ளும் இருந்தனர். அவர்கள் இருவரும் வெளுத்து சோகையாக மெல்லிய உடல் வாகுடன் காணப்பட்டனர். ஆனால் அரசகுமாரர்களுக்கே இருக்கும் அதீதமான கர்வத்துடன் காணப்பட்டனர். அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை த்வைபாயனருக்கு!

இவர்களின் சின்னச் சின்ன ஆசைகள் கூட நிறைவேற்றி வைக்கப்படும் என்பதையும் புரிந்து கொண்டார். வந்த குழந்தைகள் அரை மனதாகத் தங்கள் தாய்க்காக தாய்க்கு எதிரே தங்கள் இருகைகளையும் கூப்பி வணங்கினார்கள். ஆனால் தங்கள் தாய் அந்தப் பிச்சைக்காரத் துறவியோடு சமமாகக் கீழே அமர்ந்திருந்ததை அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஒரு மஹாராணியான தங்கள் தாய் இந்தப்பிச்ச்சைக்காரனுக்குச் சமமாக உட்காருவதா? அவர்கள் முகத்திலேயே அந்த ஏமாற்றம் தெரிந்தது.

இது எதையுமே கண்டு கொள்ளாமல் சத்யவதி திரும்பித் தன் இரு குமாரர்களையும் பார்த்து, “குமாரர்களே, இது கிருஷ்ண த்வைபாயனர்! பராசர முனிவரின் புதல்வர்!” என்று அறிமுகம் செய்து வைத்தாள். மேலும் தொடர்ந்து, “பராசர முனிவரின் ஆசிகளால் தான் நான் உங்கள் தந்தை ஆர்யபுத்திரர் ஷாந்தனுவைத் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. த்வைபாயனன் சிறியவன் தான். ஆனால் தன் தந்தையிடமிருந்து அவருடைய தவம் செய்யும் ஆற்றலையும், விசாலமான அறிவையும் பெற்றிருக்கிறான். அவன் கால்களில் விழுந்து வணங்கி அவன் ஆசிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றும் அறிவுறுத்தினாள். இருவரும் கொஞ்சமும் சிரத்தையே இல்லாமல் தாய் சொல்வதற்காக மீண்டும் கைகளைக் கூப்பி அவரை வணங்கினார்கள்.

சித்திராங்கதன் தன் தாயிடம் திரும்பி, “அம்மா, இவர் தானே தந்தையைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்? இந்தத் துறவியைத் தானே பெரியண்ணா காங்கேயர் விரட்டி விட்டார்?” என்று கேட்டான். மனதைப் புண்படுத்தும் இந்த அவமதிப்பான பேச்சைச் சற்றும் பொருட்படுத்தாமல் த்வைபாயனர் சிறுவர்கள் இருவருக்கும் புன்னகையுடன் ஆசிகளை வழங்கினார்.

“இவருக்கு உன்னிடம் என்ன வேண்டுமாம், அம்மா?” என்று விசித்திர வீரியன் கேட்டான். சத்ய்வதியின் முகத்தில் கோபத்தையும் எரிச்சலையும் கண்ட த்வைபாயனர் உடனே குறுக்கிட்டார். “இளவரசே, எனக்கு மஹாராணியிடமிருந்தோ அல்லது மற்ற எவரிடமிருந்தோ எதுவும் வேண்டாம். நான் எதுவும் கேட்டுப் பெற வரவில்லை. அங்கே யுவராஜா காங்கேயரிடம் நான் சொன்ன மாதிரி நான் எதையும் கேட்டுப் பெற இங்கே வரவில்லை; கொடுத்துச் செல்லவே வந்திருக்கிறேன்.” என்றார்.

“எங்களுக்கு உன்னால் என்ன கொடுக்க முடியும்?” அகங்காரத்துடன் கேட்டான் சித்திராங்கதன்.

“என்னால் உங்களுக்குக் கடவுளின் உதவியைப் பெற்றுத் தர முடியும். வேதங்களின் உதவியுடன். என்றென்றும் நிலைத்திருக்கும் வேதங்களின் உதவியால் கடவுளரை அழைத்து உங்களுக்கு அவர் உதவியைப் பெற்றுத் தர முடியும்!” என்றார் த்வைபாயனர்.

ஆனால் அதற்குள்ளாக சத்யவதி இருவரையும் அங்கிருந்து போகச் சொல்ல அரை மனதாக இருவரும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் இருவரும் சென்றதும் அங்கிருந்த ஊழியர்களையும் வெளியே அனுப்பினாள் சத்யவதி. பின்னர் த்வைபாயனரிடம், “கிருஷ்ணா! நான் மிகப் பெரிய இக்கட்டானதொரு நிலையில் இப்போது இருக்கிறேன். ஆர்யபுத்திரர் ஷாந்தனுச் சக்கரவர்த்தி எப்படியேனும் உயிர் பிழைத்து எழ வேண்டும்; என்னிரு மகன்களின் எதிர்காலம் அவர் உயிர் பெற்று எழுவதில் தான் இருக்கிறது!” என்றாள். இப்போது அவள் ஒரு மஹாராணியாகக் காட்சி அளிக்கவில்லை. பழைய மீனவப் பெண் தன் அருமை மகனிடம் தன் துயரங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட ஒரு தாயாக மாறி விட்டாள்.

“மகனே, நீயும் உன் தகப்பனாரும் கல்பியிலிருந்து சென்ற பின்னர் ஒரு நாள் நான் ராஜா ஷாந்தனுவின் கண்களில் பட்டேன். அவர் என்னை மணக்க விரும்பினார். அப்போது உன் பாட்டனார் ஜாருத் ஷாந்தனு மஹாராஜாவிடம், என் வயிற்றில் பிறக்கும் ஆண் மக்களே சிங்காதனம் ஏறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதலில் ஷாந்தனு அதை ஏற்கவில்லை. ஏனெனில் அவருக்கு காங்கேயன் என்னும் புத்திசாலியும் வீரனும் ஆன மகன் ஏற்கெனவே இருந்தான். அவனுக்கு யுவராஜாவாகப் பட்டமும் சூட்டப்பட்டிருந்தது. ஆகவே ஷாந்தனு மஹாராஜா கவலையுடன் இருந்தார். ஆனால் உன் பாட்டனாரோ பிடிவாதமாக என் குழந்தைகளே பட்டம் ஏற வேண்டும் என்றும் யுவராஜா காங்கேயன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அறிந்த காங்கேயன் தான் சிங்காதனம் ஏறுவதில்லை என்று சபதம் செய்தான்.”

“ஆனாலும் திருப்தியுறாத என் தந்தை அவனுக்குத் திருமணம் ஆனால் குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகளால் சிங்காதனத்துக்கு மீண்டும் போட்டி உருவாகும் என்று சொல்ல காங்கேயன் தான் திருமணமே செய்து கொள்வதில்லை என்றும் சபதம் செய்தான்! அது ஷாந்தனு ராஜாவுக்கு முதலில் வருத்தமாக இருந்தாலும் என் மேல் கொண்ட தீராத ஆசையால் அதற்குச் சம்மதித்து என்னைத் திருமணமும் செய்து கொண்டார். எனக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்திருக்கின்றன. அவர்கள் பிறந்த நாளில் இருந்து நான் ஷாந்தனு ராஜாவிடம் சிங்காதனம் சித்திராங்கதனுக்குத் தான் என அறிவிக்கும்படி கேட்டு வருகிறேன். அவரும் அப்படிச் செய்வதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள்ளாக உடல் நலமில்லாமல் படுத்துவிட்டார்! ராஜ்யசபையில் என் மகன் சித்திராங்கதன் தான் பட்டம் ஏறுவான் என்றும் காங்கேயன் தன் சபதத்தைக் கடைப்பிடிப்பான் என்றும் ஆர்யபுத்திரர் வாயிலாக அறிவித்தால் தான் எனக்கு நிம்மதி!”