Saturday, June 11, 2016

த்வைபாயனரின் வெற்றி!

பராசர முனியின் பெயர் உச்சரிக்கப்பட்ட உடனேயே சத்யவதி முகம் சிவந்தாள். நாணம் அவளைச் சூழ்ந்து கொண்டது. தன் கணவன் சக்கரவர்த்தியின் தோளைத் தடவிக் கொண்டே அவள் மெல்லிய குரலில் த்வைபாயனரிடம் கேட்டாள்: பராசர முனிவர் எடுத்துக் கொண்டு உறுதிமொழியைக் கொஞ்சம் சரிவரச் சொல்ல முடியுமா? அவர் சொன்ன அதே வார்த்தைகளில் சொல்ல இயலுமா?” என்றவள் உடனே மன்னன் பக்கம் திரும்பிக் கொண்டு, “பிரபுவே, உங்களுக்கு ஏற்கெனவே பராசர முனிவரையும் அவர் எனக்களித்த ஆசிகளையும் அறிவீர்கள். அவருடைய துணையாக நான் சிறிது காலம் வாழ்ந்ததையும் அறிவீர்கள்!” என்றாள்.

த்வைபாயனர் சற்றும் தயக்கமின்றி மேலும் பேசினார். “என் தந்தை சொன்னது என்னவெனில் அவர் எப்பாடு பட்டேனும் தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுத்து மீண்டும் ரிஷி, முனிவர்கள் வசிக்கும் இடமாக மாற்றி அங்கே இருந்த வண்ணம் ஆர்யவர்த்தத்தில் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க மன்னர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே! அங்கே வசிக்கப் போகும் ரிஷி, முனிவர்கள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். அதற்காகவே உயிர் பிழைக்கவேண்டும் என்பதே அவர் குறிக்கோள். அது நிறைவேற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.”


“ஹூம், த்வைபாயனரே, அது இப்போது ஓநாய்களின் குடியிருப்பாக மாறியதோடல்லாமல் காட்டு மிருகங்கள் வசிக்கும் இடமாகவும் ஆகி விட்டது!” என்றார் காங்கேயர்.  த்வைபாயனர் சிரித்தார். பின்னர் மேலும் தொடர்ந்து, “நல்லது யுவராஜா அவர்களே! என் நண்பன் பைலரின் துணையுடன் நான் அங்கே ஓரிரவு தங்கினேன். ஹஸ்தினாபுரம் வரும் முன்னர் அங்கே தான் தங்கினோம் இருவரும். ஓநாய்கள், கரடிகள் மற்றக் காட்டு மிருகங்கள் எல்லாமும் அங்கே இருக்கின்றன. கூடவே ராக்ஷதர்களும் இருக்கிறார்கள். ராக்ஷசர்கள் எங்களைக் கொன்றே போட்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் ஒளிக்கடவுளான சூரியபகவானின் கருணையால் மஹா அதர்வ ரிஷி ஜாபாலி அவர்களால் காப்பாற்றப்படாவிட்டால்! நாங்கள் இருந்த இடமே தெரிந்திருக்காது! அவர் தான் வந்து எங்களைக் காப்பாற்றினார்.”


“அதெல்லாம் சரி, முனிவரே! அந்த இடத்தைச் சுத்தம் செய்து காட்டை அழித்து மிருகங்களை இன்னும் உள்ளே அடர்ந்த காட்டுக்குள் விரட்டிவிட்டு எல்லாம் செய்யலாம் தான்; ஆனால் அது சாபங்கள் நிறைந்த இடம். அங்கே யுத்தம் நடந்தபோது பல போர் வீரர்கள், ரிஷிகள், முனிகள், பெண்கள் இறந்திருக்கின்றனர். அவர்களின் ஆவிகளெல்லாம் அங்கே அலைவதாகச் சொல்கின்றனர். இரவும் பகலும் அவை புலம்பிக் கொண்டே இருக்கின்றன என்கின்றனர். மனிதர்கள் வசிக்க லாயக்கில்லை என்றும் சொல்கின்றனர்.” என்றார் காங்கேயர்.


“நான் அங்கே தான் போய் வசிக்கப் போகிறேன்.” என்றார் புன்னகையுடன் த்வைபாயனர். “ ஒரு ஆசிரமமும் உண்டாகும். அது நன்கு வளர்ந்து நூற்றுக்கணக்கான ஸ்ரோத்ரியர்களை நியம, நிஷ்டைகளுடனும், சகலவிதமான நல்லொழுக்கங்களுடனும் உண்டாக்கும். அவர்கள் எடுத்துக் கொள்ளும் சபதங்களை உறுதியுடன் நின்று அவர்களை நிறைவேற்றுமாறு அந்த ஆசிரமச் சூழலை உருவாக்க வேண்டும். மதிப்புக்குரிய காங்கேயரே! இன்று பிரம்ம தேஜஸும்,க்ஷத்திரிய தேஜஸும் பிரிந்து கிடக்கிறது. பிராம்மணர்கள் தவிக்கின்றனர். பிரம்ம தேஜஸோடு, க்ஷத்திரிய தேஜஸும் ஒன்று கலக்க வேண்டும். இல்லை எனில் தர்மத்தையும், நேர்மையையும் எந்த அரசனாலும் சரிவரக் கடைப்பிடிக்க இயலாது. அவனுக்கு வழிகாட்ட எவரும் கிடைக்க மாட்டார்கள். ரிஷிகளும் முனிவர்களும் காடுகளின் அடர்ந்த குகைக்குள் சென்று விடுவார்கள்.  மற்றவர் மிருகங்களைப் போன்ற வாழ்க்கை நடத்துவார்கள்.” என்றார் த்வைபாயனர்.


“ஆஹா, முனிசிரேஷ்டரே, என் தந்தை அப்படி எல்லாம் இல்லை. தன்னால் இயன்ற அளவுக்கு க்ஷத்திரிய தர்மத்தை விடாது கைப்பிடித்து வந்துள்ளார். தன் சக்தியையும் அதிகப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் மற்றவர்களிடம் இதற்கான ஆதரவையோ, ஒத்துழைப்பையோ அவர் பார்க்கவில்லை!” என்றார் காங்கேயர்.


“அது நம் தப்பு, காங்கேயரே! ஆம், நம் தவறு! நாம் கலங்காமல் எவ்விதமான மத, மாற்சரியங்களுக்கும் உட்படாமல் தர்மத்தைக் காக்கவேண்டியது ஒன்றே நம் லட்சியம், நம் கடமை என்று அதற்காகவே உயிர் வாழ வேண்டும். இன்றைய நாட்களில் எந்த மனிதனால் அப்படி வாழ முடிகிறது?”


காங்கேயருக்கு த்வைபாயனர் மறைமுகமாகத் தன்னைச் சாடுகிறாரோ என்னும் சந்தேகம் எழுந்தது. தெரிந்தோ தெரியாமலோ அவர் தன்னைக் குற்றம் சாட்டுகிறார் என்று நினைத்த காங்கேயர் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தார். அவர் உள்ளே பலவிதமான யோசனைகள் ஓடின. அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர் போல த்வைபாயனர் சொன்னார்; “மதிப்புக்குரிய காங்கேயரே, உம்மிடம் பிரம்ம தேஜஸும் காண்கிறேன், க்ஷத்திரிய தேஜஸையும் காண்கிறேன். மதிப்புக்குரிய மஹாராணி என்னிடம் உங்களைக் குறித்து மிகவும் உயர்வாகச் சொன்னார்கள். அதிலும் நீங்கள் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றுவதற்குக் கடினமான வழிகளைக் கூடக் கடைப்பிடிப்பதாய்ச் சொன்னார்கள்.” என்றார்.


மஹாராஜா ஷாந்தனுவுக்குப் பெருமை தாங்கவில்லை. தன் அருமை மகனைப் பெருமையுடன் பார்த்தார். பின்னர் மெல்லிய குரலில், “காங்கேயனால் உண்மைக்கும் சத்தியத்துக்கும் புறம்பாக நடந்து கொள்ள முடியாது!” என்றார்.


“மதிப்புக்குரிய பேரரசரே! ஒரு மனிதன் சபதம் எடுப்பதும் அதன்படி நடப்பதும் மிகவும் போற்றுதலுக்கு உரிய ஒன்று. ஆனால் மனிதர்களை அப்படி நடந்து கொள்ள வைப்பது தான் நேர்மையின் பாதையில் நடக்க வைப்பது தான் மிகவும் கடினமான ஒன்று!” என்றார் த்வைபாயனர். “நீங்கள் சொல்லுவதை நான் புரிந்து கொள்கிறேன்.” என்றார் காங்கேயர். “நான் உண்மையின் வழியில் சத்தியத்தின் பாதையில் செல்ல விரும்புகிறேன். ஆனால் மற்ற மனிதர்களை அவ்வாறு மாற்றுவது கடினம் என்பதை அறிந்திருக்கிறேன். என்னால் மாற்றவும் இயலவில்லை!” என்றார் காங்கேயர்.


“மதிப்புக்குரிய காங்கேயரே, நீங்கள் என்னை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்! ஆகவே நான் துணிவோடு இத்தகைய ஆலோசனையைக் கூறுவதை தயவு செய்து மன்னியுங்கள். தவ வாழ்க்கையில் ஒருவன் ஈடுபடுவது மிகவும் சிறந்தது தான்; இல்லை எனவில்லை. ஆனால் மனிதரை அப்படி மாற்றுவது அத்தகைய தவ வாழ்க்கையில் ஈடுபடச் செய்வது அதை விடச் சிறப்பானது!” என்றார் த்வைபாயனர். “ஆமாம்,” என்று மெல்லிய குரலில் கூறிய காங்கேயர் தனக்குத் தானே பேசிக் கொள்பவர் போல, “அனுதினமும், அல்லும், பகலும் என்னை வாட்டிக் கொண்டிருப்பது எதுவெனில், நான் எடுத்துக் கொண்டிருக்கும் சபதத்தை எவரும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான்! அதன் மூலம் நான் மிகவும் துன்பம் அடைகிறேன்.” என்றார்.


“நீங்கள் உங்கள் சபதங்களை நிறைவேற்றுவதில் உண்மையாக இருக்கிறீர்கள், காங்கேயரே! அதில் முனைப்போடு ஈடுபடுகிறீர்கள். ஆனால் உங்கள் மனதில், ஆழ் மனதில் எரிந்து கொண்டிருக்கும் சத்திய தீபம், அதன் ஒளி இங்குள்ள பலர் மனங்களையும் சென்றடையவில்லை. எவரும் புரிந்து கொள்ளவில்லை. நான் அறிந்தவரையில் நான் கேள்விப்பட்ட வரையில் குரு வம்சத்துத் தலைவர்களால் உங்கள் தலைமையை இழப்பது என்பதைச் சகிக்க முடியவில்லை. அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை! அதை நினைக்கவே அவர்கள் நடுங்குகின்றனர்.” என்றார் த்வைபாயனர். காங்கேயருக்கு த்வைபாயனர் சொல்ல வந்ததின் உட்கருத்து நன்கு புரிந்து விட்டது. சற்று நேரம் பூமியைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

பின்னர் மெல்ல தலையைத் தூக்கிக் கொண்டு, மனப்பூர்வமான குரலில் பேசினார். “ நான் தவறாக நினைத்து வந்திருக்கிறேன். ஆம்! இன்று வரை எனக்கு இது புரியவில்லை. இந்த விஷயம் என் தந்தை, என் தாய் மற்றும் நான் எங்கள் மூவருக்கிடையே உள்ள ஒரு விஷயம் என்றே நினைத்திருந்தேன். அது தவறு என்று புரிகிறது. ஆம், மக்கள் பேசுவார்கள் தான்! நிறையப் பேசுவார்கள். எல்லாவிதமான காரணங்களையும், காரியங்களையும் சுட்டிக் காட்டுவார்கள். நியாயங்கள் அலசப்படும். அவை என் மேலும் என் தாய் மேலும் அநாகரிகமான முறையில் பாயும்! இத்தனைக்கும் என்னைப் பெற்ற மகனாகவே நினைக்கிறாள் இந்தத் தாய்! அவளைக் குற்றம் சுமத்துவார்கள்!” என்றார் காங்கேயர்.


“ஆஹா, அவை எதுவுமே நடக்காது யுவராஜா! நீங்கள் விரைவில் சித்திராங்கதனை யுவராஜாவாக அறிவிப்புச் செய்துவிடுங்கள். அதன் பின்னர் யாரும் எவரும் எதுவும் பேச மாட்டார்கள்” என்றார் த்வைபாயனர்.
அதற்கு ஷாந்தனு, “இந்த குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவரும் நான் இருக்கையிலேயே இப்படி எல்லாம் நடந்து கொண்டால், நான் பித்ருலோகம் போய்விட்டேன் எனில் இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ, செய்வார்களோ! தெரியவில்லை!” என்று சோகத்துடன் கூறினார். அதற்கு காங்கேயர் இன்னமும் மெதுவான குரலில், “ஆம், நீங்கள் சொல்வது சரியே! குரு வம்சத்துத் தலைவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து இருக்கின்றனர். ஒரு குழுவினர் என்னைத் தலைவனாகவும் அடுத்த அரசனாகவும் ஏற்க நினைக்கின்றனர். இன்னொரு குழுவினர் சித்திராங்கதனை அரசனாக ஏற்க விரும்புகின்றனர். இதன் மூலம் குரு வம்சத்தினரிடையே பரஸ்பரச் சண்டை தான் மூளும். ஹஸ்தினாபுரம் போர்க்களமாகி விடும்!” என்றார்.


“அவர்களின் வியாகூலத்தை நீ தான் தீர்க்க வேண்டும் மகனே!” என்றான் ஷாந்தனு.


“தந்தையே, தாங்கள் அனுமதித்தால் நாளைக் கழித்து மறு நாள் ராஜசபையைக் கூட்டலாம். அந்த சபையில் சித்திராங்கதனை யுவராஜாவாக அறிவிப்புச் செய்துவிடலாம். நான் என்னுடைய சபதத்தை அனைவரும் நிறைந்திருக்கும் அந்த ராஜசபையில் அறிவிக்கிறேன். அதோடு அல்லாமல், நான் என்றென்றும் ஹஸ்தினாபுரத்துக்கும், குரு வம்சத்தினருக்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றைப் பாதுகாக்கப் பாடுபடுவேன் என்றும் என்றும் என்னுடைய முழு உதவியும் ஹஸ்தினாபுரத்துக்கும் குரு வம்சத்தினருக்கும் உண்டு என்பதையும் சொல்லிவிடுகிறேன். இந்த சாம்ராஜ்யம், மஹாராஜா பரதனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சாம்ராஜ்யம் வழிவழியாகத் தொடரவும் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன் என்றும் சபதம் இடுகிறேன். அதற்காக என்ன விலை இருந்தாலும் கொடுப்பேன். ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் குருவம்சத்தினர் எவர் அமர்ந்தாலும் இது தான் என்னுடைய நிலைப்பாடு. இத்தகையதொரு சபதத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.” என்றார் காங்கேயர்.


“மதிப்புக்குரிய காங்கேயர் சரியாகச் சொல்லுகிறார். இவர் தான் தர்மத்தின் பாதுகாவலர். ஒளி பொருந்திய தர்ம வாள் இவர் தான்! இவர் தர்மத்தின் திருவுருவம்!” என்றார் த்வைபாயனர். “த்வைபாயனர் நம்மை விட்டுச் செல்வதற்கு முன்னால் ராஜசபையைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய் மகனே!” என்றான் ஷாந்தனு. “என்னால் இனி அதிக நாட்கள் இங்கே தாமதிக்க முடியாது. இன்னும் மூன்று நாட்களில் நான் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல நினைக்கிறேன்.” என்றார் த்வைபாயனர்.


“தந்தையின் கட்டளை அதுவெனில்,” என்ற காங்கேயர், “நாளை மறுநாள் ராஜசபை கூட்டப்படும். அதற்குள்ளாக மதிப்புக்குரிய பராசர முனிவரின் மகன் த்வைபாயனர் கூறியது போல் தந்தையும் சிறிதளவாவது நடக்க ஆரம்பித்து விடுவார்.” என்றார் காங்கேயர்.

1 comment:

ஸ்ரீராம். said...

நினைத்ததை முடிப்பவன்,, இல்லை, இல்லை ர்...

கங்கை மைந்தருக்கு த்வைபாயனர் பற்றிய உண்மை எப்போது தெரியும்?