Tuesday, June 28, 2016

ஆசாரியரின் கோபம்!

அப்போது தன் கரகரத்த குரலில், “நீ மூன்று வேதங்களையும் நன்கு கற்றுத் தெரிந்து கொண்டிருக்கிறாயா?” என்று பிரமிஷ்டா கேட்டார். அதற்கு த்வைபாயனர் “ஆம், ஐயா!” என்று தலையை ஆட்டித் தெரிவித்தார். “உனக்குக் கற்பித்தவர்கள் யார்?” என்று மீண்டும் பிரமிஷ்டர் கேட்டதற்கு, “என் தந்தை, மதிப்புக்குரிய பராசர முனிவர்!” என்றார் த்வைபாயனர். “உனக்கு வாஜ்பேய யக்ஞத்தைச் செய்ய வேண்டிய நடைமுறை குறித்துத் தெரியுமா?” என்று மீண்டும் பிரமிஷ்டர் கேட்டார். அதற்கு த்வைபாயனர், “நான் ஒரு சில யக்ஞங்களையும், யாகங்களையும் நடத்தி உள்ளேன். ஆனால் வாஜ்பேய யக்ஞத்தை இன்றுவரை நடத்தியதில்லை!” என்றார். அதற்கு ஆசாரிய விபூதி ஏளனம் தொனிக்கும் குரலில், “உனக்கு வாஜ்பேய யக்ஞத்தை நடத்தத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எனக்கு ஒன்றும் இல்லை. நான் அந்த யக்ஞத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது உறுதி!” என்றார்.

அதைக் கேட்டுத் தலை குனிந்த த்வைபாயனர், “ஆசாரியர்களில் சிறந்தவரே! எனக்கு ஒரு வழி  காட்டுங்கள்! இப்போது நான் ஏற்படுத்தி விட்ட இந்த மோசமான முட்டாள்தனமான சூழ்நிலையிலிருந்து நான் தப்பி வெளிவர உதவுங்கள்! நான் இந்த வாஜ்பேய யாகம் செய்வதிலிருந்து என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.” என்றார். ஆசாரிய விபூதிக்கு இப்போது கோபம் வெளிப்படையாகவே வந்தது. ஆகவே அவர் த்வைபாயனரின் பேச்சில் குறுக்கிட்டு, “ இதோ பார் த்வைபாயனா! உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்து கொள்!  எங்கள் விருப்பம் போல் நாங்கள் செய்து கொள்கிறோம். நான் இந்த ராஜகுரு என்னும் பதவியைத் துறந்து உலகத்தார் முன்னிலையில் சந்நியாசம் ஏற்கப் போகிறேன்.” என்றார்.  “ஆஹா, அப்படி எல்லாம் செய்துவிடாதீர்கள், ஆசாரியரே!” என்ற த்வைபாயனர், தன் கைகளைக் கூப்பிய வண்ணம் அவரிடம், “சக்கரவர்த்தி வாஜ்பேய யக்ஞத்தைச் செய்வது என முடிவு செய்து விட்டார். உங்களால் மட்டும் தான் அதை நிறைவேற்றித் தர முடியும்!” என்று வேண்டினார்.

“அதெல்லாம் இயலாது!” என்று தன் தலையை ஆட்டிய விபூதி மேலும் சொன்னார். “நீ இப்படி நடந்து கொள்வதைப் பார்த்து நான் ஏதோ தந்திரம் செய்து உன்னை வாஜ்பேய யக்ஞத்திலிருந்து விலக்கி விட்டதாகச் சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் நினைப்பார்கள். நீயும் அதற்குத் தான் வழி செய்கிறாய் என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அதோடு என்னுடைய இந்த முதிர்ந்த வயதில் இத்தகைய சூழ்ச்சிகளுகெல்லாம் நான் ஆளாக விரும்பவில்லை!” என்றார். த்வைபாயனர் வேண்டிக்கொள்ளும் பாவனையில் ஆசாரியரைப் பார்த்தார். “மன்னனும் மஹாராணியும் அப்படி எல்லாம் நினைக்க மாட்டார்கள். அதற்கு நான் உத்தரவாதம்! நான் ஏன் விலகிக் கொண்டேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.” என்றார். “த்வைபாயனா! உன்னை விட எனக்கு அவர்களைக் குறித்து நன்கு தெரியும்!” என்றார் ஆசாரியர்.

“இந்த யாகத்தைச் செய்யச் சொல்லவேண்டும் என்று என்னைத் தூண்டியதன் காரணத்தைச் சொல்லவா? அதற்கான அனுமதி கிட்டுமா?”

விபூதி தேவையில்லை என மறுக்க அவர் தந்தையோ, “நீ சொல்!” என்று கூறினார். அவர் தன் கைகளால் காதுகளை வளைத்துக் கொண்டு மிகவும் கவனமாக இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு இருந்தார். “நல்லது, ஐயா! என் தந்தை பராசர முனிவர் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதில் தெளிவாக இருந்தார். தர்மம்  படு பாதாளத்தில் சென்று விட்டது. ஸ்ரோத்திரியர்களும் சரி, அவர்களின் புரவலர்களும் சரி பல்வேறு விதமான மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் ஒற்றுமையே இல்லை! ஆசிரமங்கள் இருக்கின்றன! ஆனால் பெயரளவுக்குத் தான்! அவை ஒருங்கிணைக்கப்பட்டு நன்கு வளமும், புகழும் பெற வேண்டிக் காத்திருக்கின்றன. அப்படி ஸ்ரோத்திரியர்களாலும் அவர்களின் புரவலர்களாலும் ஆசிரமங்கள் காப்பாற்றப்பட்டு வேதங்கள் ரக்ஷிக்கப்பட்டால் கடவுளருக்கும் நம் மேல் பிரியம் வரும். நம்மைக் காப்பார்கள். இல்லை எனில் வேதங்கள் அழிந்து படும். கடவுளர் நம்மைக் காக்க மாட்டார்கள். வேதங்களுடைய புனிதத் தன்மை அழிந்து படும். தர்மம் அடியோடு நசிந்து விடும். பாபங்கள் மலியும். ஆகவே இவற்றைக் காக்கவேண்டியே என்னுடைய ஒவ்வொரு முயற்சியும் இருக்கிறது!” என்றார் த்வைபாயனர்.

“ஹூம், நீ ஸ்ரோத்ரியர்களை ஏன் குற்றம் சொல்கிறாய்? அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்து வருகின்றனர்!” என்று தேவயானர் என்னும் ஸ்ரோத்திரியர் ஒருவர் கூறினார். “அப்படியா? அவர்கள் முயல்கின்றனரா?” என்று பிரமிஷ்டர் அப்பாவியாய்க் கேட்டார். அதற்கு தேவயானர், “ஆம், ஐயா! அவர்களால் முடிந்ததைச் செய்தே வருகின்றனர். இந்த த்வைபாயனன் இந்தக் காலத்து இளம்பிள்ளை. மற்ற இளைஞர்களைப் போலவே இவனும் அவனுக்கு முன் பிறந்த மூத்தோரைக் குறை சொல்கிறான். தன்னுடைய பரம்பரையின் மூத்தவர்கள் செய்தவற்றைத் தவறு என்கிறான். அப்போது எப்படிப் பட்ட குழப்பம் நிறைந்த சூழ்நிலை? அத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில் ஆசிரமங்களை நிர்மாணிக்கவே ஒவ்வொருத்தரும் என்ன பாடு பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இவனுக்குத் தெரியுமா? அவரவர் உயிரைப் பணயம் வைத்து எவ்விதமான உதவியும் எதிர்பார்க்காமல் செய்திருக்கிறார்கள்!” என்று கோபம் பொங்கும் குரலில் உணர்ச்சிகரமாகப் பேசினார்.

ஆசாரிய விபூதி மௌனமாக உறைந்து போய் அமர்ந்திருந்தார். அவருக்கு உள்ளூரக் கோபம். இந்த இளைஞன் வாதத்தில் திறமையானவனாக இருக்கிறான். வாதத்தில் அனைவரையும் வீழ்த்தி விடுகிறான், இவனுடன் என்ன பேச்சு? இந்தச் சம்பாஷணையை மேலும் மேலும் வளர்த்துவதில் அவருக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அவரால் தன் தந்தையையோ அல்லது மற்ற ஸ்ரோத்திரியர்களையோ இந்தச் சம்பாஷணை வேண்டாம் என்று சொல்லி நிறுத்த முடியாது. ஆகவே செயலற்று அமர்ந்திருந்தார்.


2 comments:

ஸ்ரீராம். said...

வெல்லப்போகிறாரா த்வைபாயனர்? கண்ணன் சத்யபாமா என்ன ஆனார்கள்? அந்த இடம் அங்கு நின்றதே..

sambasivam6geetha said...

பாமா பரிணயம் கிருஷ்ணன் அவளைத் திருமணம் செய்ததோடு முடிந்தது. இந்தப் புத்தகங்கள் கிருஷ்ணாவதாரம் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொன்றைக் குறிக்கும். முதல் புத்தகம் கிருஷ்ண ஜனனம், கம்ச வதம், இரண்டாவது ஜராசந்தன் கொடுமையிலிருந்து தப்பித்து ருக்மிணி கல்யாணம், மூன்றாவது ஐந்து சகோதரர்கள் குறித்து, நான்காவது பீமன், ஐந்தாவது பாமா, ஆறாவது க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாசர், ஏழாவது யுதிஷ்டிரர், கடைசி குருக்ஷேத்திரம். அந்தப் புத்தகம் கிடைக்கலை. மறுபடி வித்யாபவனில் கேட்கணும்.