Friday, June 3, 2016

சத்யவதியின் விருப்பம்!

அதற்குள்ளாகத் தன் மகன் உணவே உண்ணவில்லையே என்பது சத்யவதியின் நினைவில் வந்தது. ஆகவே, “மகனே, நான் நீ உணவு உண்ணவில்லை என்பதை மறந்தே போனேனே!” என்று சொல்லிய வண்ணம் தன் கைகளைத் தட்டினாள். வந்த ஊழியர்களிடம் த்வைபாயனருக்குத் தேவையான உணவைக் கொண்டு வரும்படி பணித்தாள். ஊழியர்கள் உணவைக் கொண்டு வந்து தர த்வைபாயனர் அதை உண்ண அமர்ந்தார். சத்யவதி மகனின் அருகே தானும் ஒரு சின்ன ஆசனப் பலகையில் கீழேயே அமர்ந்தாள். பலகையாக இருந்தாலும் அது தங்கத் தகடுகளும், வெள்ளித் தகடுகளும் பொருத்தப்பட்டுக் காணப்பட்டது. தாயும் மகனும் ஒரு சோகமான சூழ்நிலையில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர். அதன் பின்னர் நடந்த சில வித்தியாசமான நிகழ்வுகளின் மாறுபட்ட சூழ்நிலையினால் இப்போது தாயும் மகனும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் எப்படி! தாய் ஒரு மகாராணியாகவும், மகன் அனைத்தும் துறந்த இளம் துறவியாகவும்!

“மகனே! உனக்கு நினைவிருக்கிறதா! நீ என்னை விட்டுப் பிரிந்து செல்கையில் நான் எப்போது உன் வருகையை விரும்புகிறேனோ அப்போது வருவதாகச் சொல்லிச் சென்றாயே! அது நினைவில் இருக்கிறதா? மகனே! நான் உன்னைத் தினந்தோறும் அழைத்த வண்ணமே இருந்தேன்!” என்றாள் மஹாராணி சத்யவதி!

“ஆம், தாயே! நினைவில் உள்ளது! எவ்வாறு மறப்பேன்! அதுவும் என் தாயையா? ஒருக்காலும் இல்லை தாயே! அல்லும், பகலும் நான் உங்களை நினைத்துக் கொண்டே இருந்தேன். நீங்களும் எப்போதுமே என் முன்னிலையில் இருந்தீர்கள். உங்கள் குரல் எனக்குக் கேட்டவண்ணமே இருந்தது. ஒரு முறை ஓநாய்களின் பிரதேசத்தில் கேட்டேன். இன்னொரு முறை மஹா அதர்வ ரிஷியின் ஆசிரமத்தில்! அப்போது “கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய் நீ! ஏன் வரமாட்டேன் என்கிறாய்?” என்று நீங்கள் கேட்டது இன்னமும் என் காதுகளில் ஒலித்தவண்ணம் இருக்கிறது. இறையருளால் அவர்கள் வழிகாட்டுதலில் நானும் உங்களை வந்தடைந்துள்ளேன்!” என்றார் த்வைபாயனர். மேலும் புன்னகையுடன் அவர் சொன்னார்;”நான் கல்பிக்குச் சென்றபோது நம் பழைய வழக்கப்படி ஒரு மண்பானையில் ஆலிலையை வைத்து உங்களுக்கு யமுனைத் தாயின் மூலம் அனுப்பி வைத்தேன்! என்னை மன்னிக்கும்படி அதன் மூலம் கேட்டுக் கொண்டேன்!” என்றார்.

“மன்னிப்பதா! உன்னையா! நானா? எதற்காக மன்னிப்பு மகனே!”

“நான் கல்பியிலிருந்து உங்களை விட்டுச் சென்றது குறித்துத் தான் நீங்கள் கோபமாக இருந்தீர்களே!”

“ஆஹா, மகனே! நான் உன்னைக் கோபிப்பதா! உன்னை எப்படி நான் கோபிப்பேன்! நீ ஒருபோதும் என்னைக்கோபம் அடைய வைத்ததில்லை!”

அதற்குள்ளாக சத்யவதியின் கட்டளையின் பேரில் ஒரு சேடிப் பெண் சிறிய இளவரசர்கள் இருவரையும் அங்கே அழைத்து வந்தாள்.சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் அங்கே வந்தார்கள். சித்திராங்கதனுக்குப் பதினோரு, பனிரண்டு வயதுக்குள்ளும், விசித்திர வீரியன் பத்து வயதுக்குள்ளும் இருந்தனர். அவர்கள் இருவரும் வெளுத்து சோகையாக மெல்லிய உடல் வாகுடன் காணப்பட்டனர். ஆனால் அரசகுமாரர்களுக்கே இருக்கும் அதீதமான கர்வத்துடன் காணப்பட்டனர். அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை த்வைபாயனருக்கு!

இவர்களின் சின்னச் சின்ன ஆசைகள் கூட நிறைவேற்றி வைக்கப்படும் என்பதையும் புரிந்து கொண்டார். வந்த குழந்தைகள் அரை மனதாகத் தங்கள் தாய்க்காக தாய்க்கு எதிரே தங்கள் இருகைகளையும் கூப்பி வணங்கினார்கள். ஆனால் தங்கள் தாய் அந்தப் பிச்சைக்காரத் துறவியோடு சமமாகக் கீழே அமர்ந்திருந்ததை அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஒரு மஹாராணியான தங்கள் தாய் இந்தப்பிச்ச்சைக்காரனுக்குச் சமமாக உட்காருவதா? அவர்கள் முகத்திலேயே அந்த ஏமாற்றம் தெரிந்தது.

இது எதையுமே கண்டு கொள்ளாமல் சத்யவதி திரும்பித் தன் இரு குமாரர்களையும் பார்த்து, “குமாரர்களே, இது கிருஷ்ண த்வைபாயனர்! பராசர முனிவரின் புதல்வர்!” என்று அறிமுகம் செய்து வைத்தாள். மேலும் தொடர்ந்து, “பராசர முனிவரின் ஆசிகளால் தான் நான் உங்கள் தந்தை ஆர்யபுத்திரர் ஷாந்தனுவைத் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. த்வைபாயனன் சிறியவன் தான். ஆனால் தன் தந்தையிடமிருந்து அவருடைய தவம் செய்யும் ஆற்றலையும், விசாலமான அறிவையும் பெற்றிருக்கிறான். அவன் கால்களில் விழுந்து வணங்கி அவன் ஆசிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றும் அறிவுறுத்தினாள். இருவரும் கொஞ்சமும் சிரத்தையே இல்லாமல் தாய் சொல்வதற்காக மீண்டும் கைகளைக் கூப்பி அவரை வணங்கினார்கள்.

சித்திராங்கதன் தன் தாயிடம் திரும்பி, “அம்மா, இவர் தானே தந்தையைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்? இந்தத் துறவியைத் தானே பெரியண்ணா காங்கேயர் விரட்டி விட்டார்?” என்று கேட்டான். மனதைப் புண்படுத்தும் இந்த அவமதிப்பான பேச்சைச் சற்றும் பொருட்படுத்தாமல் த்வைபாயனர் சிறுவர்கள் இருவருக்கும் புன்னகையுடன் ஆசிகளை வழங்கினார்.

“இவருக்கு உன்னிடம் என்ன வேண்டுமாம், அம்மா?” என்று விசித்திர வீரியன் கேட்டான். சத்ய்வதியின் முகத்தில் கோபத்தையும் எரிச்சலையும் கண்ட த்வைபாயனர் உடனே குறுக்கிட்டார். “இளவரசே, எனக்கு மஹாராணியிடமிருந்தோ அல்லது மற்ற எவரிடமிருந்தோ எதுவும் வேண்டாம். நான் எதுவும் கேட்டுப் பெற வரவில்லை. அங்கே யுவராஜா காங்கேயரிடம் நான் சொன்ன மாதிரி நான் எதையும் கேட்டுப் பெற இங்கே வரவில்லை; கொடுத்துச் செல்லவே வந்திருக்கிறேன்.” என்றார்.

“எங்களுக்கு உன்னால் என்ன கொடுக்க முடியும்?” அகங்காரத்துடன் கேட்டான் சித்திராங்கதன்.

“என்னால் உங்களுக்குக் கடவுளின் உதவியைப் பெற்றுத் தர முடியும். வேதங்களின் உதவியுடன். என்றென்றும் நிலைத்திருக்கும் வேதங்களின் உதவியால் கடவுளரை அழைத்து உங்களுக்கு அவர் உதவியைப் பெற்றுத் தர முடியும்!” என்றார் த்வைபாயனர்.

ஆனால் அதற்குள்ளாக சத்யவதி இருவரையும் அங்கிருந்து போகச் சொல்ல அரை மனதாக இருவரும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் இருவரும் சென்றதும் அங்கிருந்த ஊழியர்களையும் வெளியே அனுப்பினாள் சத்யவதி. பின்னர் த்வைபாயனரிடம், “கிருஷ்ணா! நான் மிகப் பெரிய இக்கட்டானதொரு நிலையில் இப்போது இருக்கிறேன். ஆர்யபுத்திரர் ஷாந்தனுச் சக்கரவர்த்தி எப்படியேனும் உயிர் பிழைத்து எழ வேண்டும்; என்னிரு மகன்களின் எதிர்காலம் அவர் உயிர் பெற்று எழுவதில் தான் இருக்கிறது!” என்றாள். இப்போது அவள் ஒரு மஹாராணியாகக் காட்சி அளிக்கவில்லை. பழைய மீனவப் பெண் தன் அருமை மகனிடம் தன் துயரங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட ஒரு தாயாக மாறி விட்டாள்.

“மகனே, நீயும் உன் தகப்பனாரும் கல்பியிலிருந்து சென்ற பின்னர் ஒரு நாள் நான் ராஜா ஷாந்தனுவின் கண்களில் பட்டேன். அவர் என்னை மணக்க விரும்பினார். அப்போது உன் பாட்டனார் ஜாருத் ஷாந்தனு மஹாராஜாவிடம், என் வயிற்றில் பிறக்கும் ஆண் மக்களே சிங்காதனம் ஏறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதலில் ஷாந்தனு அதை ஏற்கவில்லை. ஏனெனில் அவருக்கு காங்கேயன் என்னும் புத்திசாலியும் வீரனும் ஆன மகன் ஏற்கெனவே இருந்தான். அவனுக்கு யுவராஜாவாகப் பட்டமும் சூட்டப்பட்டிருந்தது. ஆகவே ஷாந்தனு மஹாராஜா கவலையுடன் இருந்தார். ஆனால் உன் பாட்டனாரோ பிடிவாதமாக என் குழந்தைகளே பட்டம் ஏற வேண்டும் என்றும் யுவராஜா காங்கேயன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அறிந்த காங்கேயன் தான் சிங்காதனம் ஏறுவதில்லை என்று சபதம் செய்தான்.”

“ஆனாலும் திருப்தியுறாத என் தந்தை அவனுக்குத் திருமணம் ஆனால் குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகளால் சிங்காதனத்துக்கு மீண்டும் போட்டி உருவாகும் என்று சொல்ல காங்கேயன் தான் திருமணமே செய்து கொள்வதில்லை என்றும் சபதம் செய்தான்! அது ஷாந்தனு ராஜாவுக்கு முதலில் வருத்தமாக இருந்தாலும் என் மேல் கொண்ட தீராத ஆசையால் அதற்குச் சம்மதித்து என்னைத் திருமணமும் செய்து கொண்டார். எனக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்திருக்கின்றன. அவர்கள் பிறந்த நாளில் இருந்து நான் ஷாந்தனு ராஜாவிடம் சிங்காதனம் சித்திராங்கதனுக்குத் தான் என அறிவிக்கும்படி கேட்டு வருகிறேன். அவரும் அப்படிச் செய்வதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள்ளாக உடல் நலமில்லாமல் படுத்துவிட்டார்! ராஜ்யசபையில் என் மகன் சித்திராங்கதன் தான் பட்டம் ஏறுவான் என்றும் காங்கேயன் தன் சபதத்தைக் கடைப்பிடிப்பான் என்றும் ஆர்யபுத்திரர் வாயிலாக அறிவித்தால் தான் எனக்கு நிம்மதி!”

1 comment:

ஸ்ரீராம். said...

என்ன ஒரு சுயநலம்... இந்நிலையிலும்!