Thursday, August 30, 2012

திண்டுக்கல் தனபாலனுக்காக ராஸலீலைப் படங்கள்.

இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.  யமுனைக்கரையில் பெளர்ணமி அன்று நடக்கும் இது. மற்ற விபரங்கள் பின்னர்.  இப்போ அவசரம்.

பானுமதியின் நிறைவேறா ஆசைகள்!


துரியோதனன் குடித்திருந்தாலும் நிதானத்தை இழக்காததோடு, பானுமதியை மேலும் பேசவிடுவதன் ஆபத்தையும் உணர்ந்திருந்தான்.  ஆகவேஅவளிடம், “உனக்கு ராஜாங்க விஷயங்கள் பற்றியோ, அரசியல் குறித்தோ அரசாட்சி குறித்தோ எதுவும் தெரியாது;  புரியாது.  ஆகவே நீ இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதே நல்லது.”  என்றான்.  ஆனால் பானுமதியோ அசைந்து கொடுக்கவில்லை. “எனக்கு இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையோ, புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ எதுவும் இல்லை, ஆர்ய புத்திரரே.  “  தன் கணவன் தன்னைப் பலர் முன்னிலையில் அதட்டியதனால் தான் எதுவும் பாதிக்கப்படாமல் இருப்பதாகவே காட்டிக் கொண்டாள்.  “கண்ணா, நீ அடுத்த பெளர்ணமி வரை இங்கே இருந்தால், நாம் அனைவரும் இங்கே “ராஸ்” விளையாடலாம்.  என்ன சொல்கிறாய்?” என்று கண்ணனிடம் கேட்டாள்.

“பானுமதி, நடக்க முடியாத விஷயங்களைக் குறித்தே பேசுகிறாய்.  என்னால் இங்கே பெளர்ணமி வரையிலும் தங்க முடியாது.  அதோடு நீ சொல்லும் அந்தப் புல்லாங்குழலை நான் விருந்தாவனத்திலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன்.  நான் இப்போது புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு “ராஸ்” விளையாடும் மனநிலையிலும் இல்லை.  அதோடு விருந்தாவனத்தை விட்டு வந்ததும் வாசித்த எந்தப் புல்லாங்குழலிலும் அந்த மாதிரியான இசையும் பிறக்கவில்லை.  அந்தப் புல்லாங்குழலில் ஏதோ மாயம் இருந்திருக்க வேண்டும்.  அதன் இசை அப்படி அனைவரையும் கவர்ந்து இழுத்தது.  இது விருந்தாவனமும் இல்லை, பானுமதி.  இங்கெல்லாம் நம் இஷ்டப்படி நடந்து கொள்ள முடியாது.”  என்றான் கண்ணன். 

பானுமதி, “நான் விருந்தாவனத்தில் இருந்திருக்கக் கூடாதா என எண்ணுகிறேன்.”  என்றாள்.  இதைச் சொல்கையில் அவள் குரல் அடைத்துக் கொண்டது.  கண்ணீர் மல்கியது அவளுக்கு.  தனக்கு அரசகுல வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எவ்வாறேனும் வெளிக்காட்ட விரும்பியவளாகத் தென்பட்டாள்.  கண்ணன் அவளைத் தேற்றும் விதமாக, “பானுமதி, நீ பட்டத்து இளவரசனின் மனைவி.  விரைவில் பட்ட மஹிஷியாகவும் ஆகப் போகிறாய்.  நாம் விரும்புவதெல்லாம் நடக்காது.  நடப்பது அனைத்தையும் நாம் விரும்பவும் மாட்டோம்.  நாம் விரும்பும் அனைத்தும் நமக்குக் கிடைக்கவும் கிடைக்காது.  பானுமதி, இங்கே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளும் எனத் தனியாக ஒரு சட்டம் இருக்கிறது என்பதை நான் நன்கறிவேன்.  அதை நான் மீறினால் தாத்தா பீஷ்மர் மனம் வருந்துவார்.  என்னை என்றென்றும் மன்னிக்க மாட்டார்.  அப்படியெல்லாம் சுதந்திரத்தை நான் இங்கே வந்து எடுத்துக்கொள்ள இயலாது.”  என்றான் கண்ணன்.

“ஆம், நானும் நன்கறிவேன்.  தாத்தா இங்குள்ள கஷ்டமான வாழ்க்கையை மேலும் கஷ்டமாக்குகிறார்.  என்ன செய்யலாம்.  வாசுதேவா, நானும் ஒரு கோபியாகப் பிறந்திருக்கக் கூடாதா என்றிருக்கிறது எனக்கு!” பானுமதி இதைக் கூறுகையில் துரியோதனனின் மாளிகை வந்துவிட்டது.  அந்த அரண்மனை வளாகத்தின் ஒரு கோடியில் அழகானதொரு நந்தவனத்தைத் தாண்டியதும் துரியோதனன் மாளிகை வந்தது.  அந்த நந்தவனம் பானுமதியால் பராமரிக்கப் படுகிறது என்பதை அவள் முகத்தைப்பார்த்ததுமே புரிந்து கொள்ள முடிந்தது.  நந்தவனத்தைப் பார்த்த பானுமதியின் முகத்தில் மகிழ்ச்சிக் கீற்றுகள்.  வெள்ளிக் கூடாரத்தின் அடியிலே அன்னையின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பானுமதி தினமும் தன் ஆடல், பாடல்களால் அன்னையை வழிபட்டு மகிழ்வித்து வந்தாள்.  இங்கே இருக்கையில் அவள் சுதந்திரமாக அவளுடைய பிறந்த நாடான காசியில் இருப்பது போல் இருப்பாள்.  அவள் பேச்சிலிருந்து பானுமதி தினமும் இங்கே கெளரி பூஜை செய்வதாக அறிந்து கொண்டான் கண்ணன்.  பூக்களில் இருந்து தேனை அருந்தும் வண்டுகள் ரீங்காரமிடுவதைப் போல் இனிமை கலந்த குரலில் பானுமதி அனைத்தையும் சொல்வதைக் கண்ணன் ரசித்தான்.  அவள் வெளிப்படையான மனம் அவனுக்குப் புரிந்தது.  அன்புக்கு ஏங்கும் அவள் உள்ளத்தை உணர்ந்து கொண்டான்.  அத்தகைய அன்பு துரியோதனனிடமிருந்து அவளுக்குக் கிட்டவில்லை என்பதையும் புரிந்து கொண்டான்.  என்றாலும் தன் கணவனின் உடல் நலத்துக்காகவும், அவனின் அரசியல் முன்னேற்றங்களுக்காகவும் என பானுமதி செய்து வரும் கெளரி பூஜை கண்ணனை வியப்படைய வைக்கவில்லை.  துரியோதனன் மட்டுமல்லாமல் மற்ற இளவரசர்கள், இளவரசிகளும் என்றாவது தான் பானுமதியின் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதாகவும் அறிந்தான்.

“இந்த ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு அவர்களைத் தவிர மற்றவர்கள் நாகரீகமற்றவர்கள் என்ற நினைப்பு அதிகம். என்னைப் பார்த்தால் அப்படியா இருக்கிறது?” என்றாள் பானுமதி.  “நீ நாகரீகமற்றவள் எனில் நாங்களெல்லாம் எங்கே போவது?” என்றான் கண்ணன்.  பானுமதி உதட்டைப் பிதுக்கிக் கொண்டே தன் கணவனைப் பார்த்துக் கொண்டு, “ஆர்ய புத்திரர் இந்த வழிபாட்டுக்கு ஒரு நாளும் வந்ததில்லை.  எனக்கு அவர் தினமும் வரவேண்டும் என்ற ஆசை.  இந்த பூஜை நடத்துவதே அவர் நன்மைக்குத் தானே!  இன்றைக்கு நீ வந்திருப்பதால் அவரும் வந்திருக்கிறார். இல்லை எனில் நான் எவ்வளவு அழைத்தாலும் வர மாட்டார். எனக்கு அவரிடம் மிகவும் கோபம் வருகிறது.”  என்றாள் பானுமதி.  “ம்ம்ம்ம்.. அவர் தன் நண்பர்களையும், அழைத்து வந்திருக்கிறார்.  ஆனால்……ஆனால் எப்படிப் பட்ட நண்பர்கள்!  கூடவே அவர்களின் மனைவிமார்களும் வந்திருக்கின்றனர்.  ஆனால், கண்ணா, இவர்களெல்லாம் உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கின்றனர்.  அந்தப் பெண்களெல்லாம் உன்னைப் பார்க்கத் துடி துடித்துக் கொண்டிருந்தனர்.  இப்போது வாய்ப்பு நேரவும் உடனே வந்துவிட்டார்கள். உன்னைக் குறித்த நாடோடிப் பாடல்களை என் தந்தையின் சபையில் நான் கேட்டிருக்கிறேன் என்றதும் அவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து அதைக் குறித்து மேலும் சொல்லும்படிக் கேட்டனர்.”  திடீரெனக்கோபம் கொண்டவளாய்க் கிருஷ்ணனைப் பார்த்து, “உன் புல்லாங்குழலை ஏன் விட்டு வந்தாய் கண்ணா?  அடுத்த முறை நீ ஹஸ்தினாபுரம் வந்தால் கட்டாயம் புல்லாங்குழலோடு தான் வரவேண்டும்.”  என்று ஆணையிடுவது போல் கூறினாள்.  

Monday, August 27, 2012

பானுமதி மனம் திறக்கிறாள்!


பானுமதி மேலும் கூறினாள்: “ஆகவே கண்ணா, நீர் வரப் போகும் சேதி கிடைத்ததுமே நான் ஆர்யபுத்திரரிடம், உங்களைச் சந்திக்க அனுமதி வாங்கினேன்.  நான் உங்கள் விருந்தாவனத்தின் ஒரு கோபி எனப் பலமுறை கனவு கண்டிருக்கிறேன்.”  ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட பானுமதிக்குத் தான் ஒரு அரசகுமாரியாக இராமல், கோபியாகவே இருந்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் இருப்பதாகக் கண்ணன் நினைத்துக் கொண்டான்.  வெளிப்படையாக துரியோதனனை நேரில் பார்த்துக் கண்ணன்,  “துரியோதனா, நான் இவ்வளவு பயங்கரமான ஆள் என எனக்கே இப்போது தான் தெரிய வந்துள்ளது.  இது தெரிந்திருந்தால் நான் ஹஸ்தினாபுரம் வரவே மிகவும் யோசித்திருப்பேனே.  வந்திருக்கவே மாட்டேனே!”  என்றான் கண்ணன். 

அதற்கு துரியோதனன், “ஓ, இவள் என்னை மிகவும் தொந்திரவு செய்கிறாள்.  அதுவும் நீ வரப் போவதைத் தெரிந்து கொண்ட பின்னர் இவளது தொந்திரவு மிகவும் அதிகம் ஆகிவிட்டது.  உன் வீர, தீர சாகசங்களைத் தவிர்த்து வேறெதுவும் பேச மறுத்துவிட்டாள்.   நீ சிறுவனாக இருந்தபோது மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் களித்திருக்க வேண்டும் கண்ணா,  வீடுகளுக்குள்ளாக இருக்கும் பெண்கள் கூட உன்னை நினைத்தால் பைத்தியமாகி விடுகின்றனரே!  என்னப்பா மாயம் இது!” என்றான்.

“ஆர்யபுத்திரரே, வாசுதேவனிடம் நான் பேசுகிறேனே.  என்னைப்பேச விடுங்கள்.  இத்தனை நாட்களாக நீங்கள் தானே அவருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்.  பின்னால் எனக்கு வாசுதேவனிடம் பேசுவதற்கு இதைப் போன்றதொரு சந்தர்ப்பம் வாய்க்குமோ, வாய்க்காதோ!  வாசுதேவா, நீர் உன் கோபியரை நினைத்துக் கொண்டிருக்கிறீரா அல்லது அடியோடு மறந்துவிட்டீரா?”  பானுமதிக்குத் திடீரென சந்தேகம் வந்தது.

“என்னால் அவர்களை எப்படி மறக்கமுடியும் இளவரசி!  அவர்கள் என் வாழ்வின் ஒரு பகுதி.  என் ஜீவனின் ஒரு அங்கம்.” என்றான் கண்ணன் தன் கண்களால் தொலைதூரத்தில் பார்த்துக் கொண்டு.

“அப்படியா?  எனில் நானும் அந்த கோபியரில் ஒருத்தியாக ஆகி விட்டால்?  வாசுதேவா!  நானும் உன் வாழ்க்கையின் அங்கமாகிவிடுவேன் இல்லையா?”  பானுமதி கேட்டாள்.  அவள் பேச்சு மும்முரத்தில் கிருஷ்ணனை மரியாதையாக அழைப்பதை விட்டு விட்டாள்.  கிருஷ்ணன் அவளிடம், “இளவரசி, நீங்கள் ஏன் கோபியாக வேண்டும்!  நீங்கள் கோபியாக முடியாது.   இந்த அஸ்தினாபுரத்துப் பட்டத்து இளவரசனின் பட்டத்து இளவரசி நீங்கள்.   ஒரு நாள் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் பட்ட மஹிஷியாக ஆகப் போகிறீர்கள்.” என்றான் கண்ணன்.  வேடிக்கை செய்யும் குரலில் கண்ணன் பேசினான்.  ஆனால் பானுமதியோ அதை லட்சியமே செய்யவில்லை.  “ என் பேச்சை ஒதுக்கிவிட்டு வேறு பேச்சுக்கு மாறாதீர்கள்.” என்றவள் தன் உதடுகளைக் கொஞ்சலாகப் பிதுக்கிய வண்ணம் மேலும் கூறினாள்:  “ நான் ஒரு பட்டமஹிஷியாக ஆவேனோ என்னமோ எனக்கு அது பற்றித் தெரியாது.  ஆனால், இந்த உலகம், இந்த மலைகள், செடிகள், கொடிகள், அதில் பூக்கும் பூக்கள், இவை மிகப் பிடிக்கும்.  இந்த அரண்மனையின் அழகிய பூந்தோட்டத்துப் பூக்களின் நறுமணங்களுக்கு நடுவே வீடு கட்டிக் கொண்டு அந்த சுகந்தங்களை நுகர்ந்து கொண்டு வாழ விரும்புகிறேன்.  ஆடலும், பாடலுமாக இனிமையானதொரு வாழ்க்கையையே விரும்புகிறேன்.  வாசுதேவா, விருந்தாவனத்தில் உன் வாழ்க்கை அப்படித் தானே நடந்தது!  ஆம், அப்படித் தான் கேள்விப் பட்டேன்.  உன் புல்லாங்குழலின் இனிமையான இசையைக் கேட்டுவிட்டு கோபியர் எல்லாம் தங்கள் வேலைகளைக் கூட மறந்து உன்னைத் தேடி ஓடோடி வருவார்களாமே!  அவ்வாறே நானும் ஒரு கோபியாக வர விரும்புகிறேன்.”

சிறு குழந்தை போலப் பேசிய அவள் பேச்சுக்கள் கண்ணனுக்குச் சிரிப்பை வரவழைத்தன.  அவன் முகத்தில் ஹஸ்தினாபுரம் வந்ததில் இருந்து இத்தனை நாட்களாகக் காணாத அந்தப் பழைய மயக்கும் சிரிப்புக் காணப்பட்டது. துரியோதனனைப் பார்த்து, வேடிக்கையாக, “துரியோதனா, என்னப்பா இது?  நீ இன்னமும் கவனமாக இருக்க வேண்டும் போலுள்ளதே!  இவள் உன்னை விட்டு விட்டு என்னுடன் வந்துவிடப் போகிறாள். எச்சரிக்கை!”  என்றான் கேலியாக.

“ஓ, ஓ, இவள் ஒரு வாயாடி.  எப்போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  அவள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே கிருஷ்ணா!   பகல் முழுவதும் பேசுவது போதாது என நினைத்து இரவில் தூக்கத்திலும் இப்படித் தான் பேசிக் கொண்டிருப்பாள்.  நகைப்புக்கு இடமாகும் விஷயங்களைக் குறித்தே பேசுகிறாள்.  திடீரென ஒரு நாள் அவள் பைத்தியமானால் ஆச்சரியப் பட முடியாது!”  மிகச் சாதாரணமாக இதைக் கூறிய துரியோதனன், பெரிய குரலில் சிரித்தான்.  உள்ளூர வருந்திய பானுமதி வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், போலியான திகிலுடன், “நான் பைத்தியமா!  இதோ பார், வாசுதேவா!  என்னைப் பார்த்தால் அப்படியா தோன்றுகிறது!” என்று மேலும் தொடர்ந்தாள்.  அவள் மேலே தொடர்ந்து பேசியதைக் கவனித்த கிருஷ்ணனுக்கு பானுமதிக்கும் வலுக்கட்டாயமாக மதுவைப் புகட்டி இருப்பார்களோ எனத் தோன்றியது.

“நான் பைத்தியம் இல்லை வாசுதேவா!  இதோ இந்த மனிதர் தான் பைத்தியம்.  அதிலும் தான் சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற பைத்தியம்.  எப்போதும் இவர் சிந்தனையில் தான் பட்டத்து இளவரசனாகவும், பின்னர் அரசனாகவும் ஆக வேண்டும் என்ற நினைப்புத் தான்.  அதற்காக இந்த மனிதனைக் கொல்ல வேண்டும்; அந்த மனிதனை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் எனத் திட்டங்கள் போடுகிறார்.  இதற்காக இவருடைய மாமா சகுனியிடமும், ஆருயிர் நண்பர் கர்ணனிடமும் ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்துகிறார்.  மூவரும் கலந்து என்னதான் பேசுவார்களோ!  எப்போதும் யாரானும் ஒருத்தரை ஒழிக்கவோ, அழிக்கவோ திட்டங்கள்.  வேறு விஷயங்களே பேசுவதற்கு இல்லையா என யோசித்து யோசித்து அலுத்துவிட்டேன்.  எல்லாம் வல்ல அந்த மஹாதேவனுக்குத் தான் தெரியும்.  இவர் என்றைக்காவது இதயபூர்வமாக என்னிடம் ஒரு வார்த்தை அன்பாகப் பேசியோ, அல்லது என்னைப் பார்த்துக் காதலுடனோ, அன்புடனோ புன்னகையாவது புரிந்திருப்பாரா?  சந்தேகமே!  நானும் எதிர்பார்த்து அலுத்துவிட்டேன்.  இப்போது சொல் வாசுதேவா, யார் பைத்தியம்!  நானா? இல்லை, ஆர்யபுத்திரரா?”  மூச்சுவிடாமல் பானுமதி பேசி நிறுத்தினாள்.  துரியோதனன் அளவுக்கு மிஞ்சிக் குடித்திருந்தாலும் நிதானத்தை இழக்கவில்லை.  ஆனால் இந்த பானுமதியைக் கொஞ்சம் போல் குடிக்க வற்புறுத்தியதற்கு இவள் இவ்வளவு உளற ஆரம்பித்துவிட்டாளே.  இவளை மேன்மேலும் பேசவிட்டால் தனக்கு ஆபத்து நேரிடுமே.  துரியோதனன் கலவரமடைந்தான். 

“வாயை மூடு, பானுமதி!” என்று அவளை அதட்டினான்.

Wednesday, August 22, 2012

பானுமதியின் அழைப்பும், கண்ணனின் வியப்பும்!


துரியோதனனும் அவன் தம்பியும் மதுபானம் அருந்தி இருப்பார்களோ என்ற சந்தேகம் அவர்கள் நடந்து வந்த விதத்திலிருந்து தெரிய வந்தது.  கிட்டே வந்ததும்,  துரியோதனனின் தடுமாற்றம் நிறைந்த பேச்சால் அது நிரூபணம் ஆயிற்று.   துரியோதனன் கண்ணனிடம், “வாசுதேவா, இதோ என் தேவி இன்று கெளரி பூஜை செய்கின்றாளாம்.  அவள் மட்டுமல்ல;  மற்ற இளவரசிகளும் தான்.  ஆகவே அந்தப் பூஜையில் கலந்து கொள்ள உன்னை அழைக்க வந்துள்ளோம்.”  என்றான்.  கண்ணன், “மன்னித்துக்கொள், துரியோதனா, நான் படுத்துத் தூங்கத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று மறுக்கும் விதமாய்ச் சொன்னான்.  அப்போது பானுமதி கண்ணனை நேரடியாகப் பார்த்து, தன் நாட்டியமாடும் கண்களால் சிரித்தாள்.  அவள் சிரிக்கையில் கண்கள் தனியாகச் சிரித்தன; கன்னங்கள் தனியாகச் சிரித்தன;  உதடுகள் தனியாகச் சிரித்தன.  கண்களோ ஒரு நாட்டிய விழாவையே நடத்தியது.  அதை ரசித்தான் கண்ணன்.  அவள் தன் சிரிக்கும் கண்களால் அவனைப் பார்த்த வண்ணம், “எங்களை  நீங்கள் ஏமாற்றக் கூடாது வாசுதேவரே!  உங்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.  விருந்தாவனத்தின் கோபியரின் கண்ணின் கருமணியே நீர் தாம் என நாங்கள் அறிவோம்.  நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்களல்ல என்பதை இன்று பார்ப்பீர்கள்!” என்றாள்.  அவள் இதைச் சொன்ன விதத்தில் இருந்து அவளை ஏமாற்றி விட்டுத் தப்பும் எண்ணம் கண்ணனுக்கு இருந்தால் அது அறவே நீங்கியது.

“விருந்தாவனம் நிகழ்ச்சிகள் எல்லாம் பழைய பசுமையான காலங்கள்;  அந்தக் காலமே வேறு.  இது வேறு காலம்.  அதோடு நான் இப்போது இருக்கும் நிலையில் விருந்தாவனத்தில் என்னை ஏற்பது சந்தேகமே.  அங்கிருந்த கோவிந்தன் இப்போது இல்லை.  அதோடு நான் இப்போது உங்களுடைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் மனநிலையோடு இல்லவும் இல்லை.” என்றான் கண்ணன்.  தன் கால்களால் சிறு குழந்தையைப் போலவே தரையை உதைத்தாள் பானுமதி.  “இல்லை; இல்லை” என்றாள் பிடிவாதமாக.  “நீர் கட்டாயமாக வருகிறீர். “ சட்டெனக் குரலைத் தழைத்துக்கொண்டு இரக்கமாக, “உமக்கு இங்கே பொழுது சந்தோஷமாகவே கழியவில்லை;  விருந்தாளியான உமக்கு சந்தோஷத்தைக் காட்ட வேண்டியது எங்கள் கடமை.  அதோடு இப்போது தான் துக்க நாட்களும் முடிவடைந்து விட்டனவே.” என்றாள் விடாமல்.  ஒரு அரசகுமாரிக்குரிய கம்பீரமோ, அதிகாரமோ இல்லாமல் சின்னக் குழந்தையைப் போல் நடந்து கொண்டிருந்த பானுமதியின் இயல்பே அதுதான் என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டுவிட்டான்.  ஆகவே அவளுடைய பேச்சுக்களும், நடத்தையும் அவனுக்கு இயல்பாகவே இருந்தன.  தவறாகப் படவில்லை.  அவளோடு சேர்ந்து துரியோதனனும், அவன் கூட வந்த மற்ற சகாக்களும் கண்ணனை வற்புறுத்தினார்கள். 

அதற்கு மேல் அங்கே தாமதிப்பது கண்ணனுக்குச் சரியாகப் படவில்லை. ஆகவே உத்தவனுக்கும் சாத்யகிக்கும் தான் துரியோதனன் மாளிகையில் பானுமதி நடத்தும் கெளரி பூஜையில் கலந்து கொண்டு விரைவில் திரும்புவதாகச் செய்தியை அங்கே விட்டான்.  பின்னர் அவர்களோடு கிளம்பி துரியோதனன் மாளிகையை அடைந்தான்.  சாமர்த்தியம் என நினைத்துக்கொண்டு துரியோதனன் தன் அழகிய மனைவியின் எளிமையான விகல்பமில்லாமல் பழகும் விதத்தின் மூலம் தன்னை வீழ்த்திவிட எண்ணுவதைக் கண்ணன் புரிந்து கொண்டான். தான் சற்றும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் உறுதி கொண்டான்.  பானுமதியின் வெகுளித்தனமான பேச்சுக்களால் கண்ணன் கவரப்பட்டாலும் அதன் மூலம் துரியோதனனுக்கு ஏதேனும் லாபம் கிடைக்குமெனில் அதற்குத் தான் இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணினான்.  பானுமதி  சில மாதங்கள் முன்னர் தான் துரியோதனனை மணந்து கொண்டு ஹஸ்தினாபுரம் வந்திருந்தாள்.  அவளுக்கு இன்னமும் ஹஸ்தினாபுரத்தின் பழக்க, வழக்கங்கள் பிடிபடவில்லை;  தன் நாட்டில் எப்படி இயல்பாக இருப்பாளோ அவ்வாறே தான் இங்கேயும் இருந்து வந்தாள்.  அவள் உடை அணிந்திருந்த விதமும் அவ்வாறே ஹஸ்தினாபுரத்து ராணிமார் உடுத்தும் விதம் போலில்லை.  அவளின் அழகிய உடலின் எழில் பார்ப்போரைக் கவரும் வண்ணம் இருந்தது என்பதோடு நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொள்ளாமல்  மலர்களாலேயே அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.  தலையிலும் மணம் மிக்க மலர்களால் ஆன பின்னலே காணப்பட்டது.  இடுப்பில் மேகலையோ, ஒட்டியாணமோ அக்கால வழக்கப்படி அணியாமல் மலர்களால் ஆன ஒட்டியாணமே காணப்பட்டது.  இந்த அலங்காரங்களோடு அவள் நடந்து வருகையில் வீசிய மணத்தில் இருந்தும், அவள் நடையிலிருந்தும்,  இந்த அழகிய பெண்ணை பிரம்மன் ரத்தத்தோடும், சதையோடும் படைக்கவில்லை;  மணம் வீசும் மலர்களாலேயே படைத்திருக்கிறான் என எண்ணும்படி இருந்தாள்.  அவளைச் சுற்றிலும் சுகந்தம் வீசிக் கொண்டிருந்தது.   கற்பனைக்கெட்டா செளந்தரிய தேவதையான அவள்  ஒரு சிறு குழந்தையைப் போல் சிரித்து விளையாடிக் கொண்டும், காரணமின்றிச் சிரித்துக் கொண்டும் இருந்தாள்.  எதைக் கண்டாலும் வியக்கும் குழந்தைகள் போலவே அவளுக்கும் எல்லாமும் வியப்பாக இருந்தது.  எல்லாவற்றையும் விட அதிசயம் என்னவெனில் கிருஷ்ணனை அன்று தான் முதல் முதலாகப் பார்க்கிறாள் என்றாலும் நெடுநாள் அவனுடனேயே இருந்து நெருங்கிப் பழகியவள் போல் நடந்து கொண்டாள்.

துரியோதனன் மாளிகைக்குச் செல்லும் வழியில் நடந்த சம்பாஷணைகளில் அவளே அதிகம் பேசினாள்.  கண்ணனிடம், “உங்களைப் பற்றிய சகலமும் அறிவேன்;  அதோடு பூர்ண சந்திரோதய காலத்தில் யமுனைக்கரையில் கோபியரோடு நீங்கள் ஆடிய ராஸ் குறித்தும் அறிவேன்.  அப்படி ஒரு பூர்ண சந்திரோதயம் நீங்கள் இங்கிருக்கையில் ஏற்பட்டால், எங்களுக்கும் அந்த நடனவகையைச் சொல்லிக் கொடுங்கள்.  நாங்களும் கோபியரைப் போலவே ஆடிப் பாடிக் களிப்போம்.”  என்றாள்.  “நீ எவ்வாறு இதை எல்லாம் அறிந்தாய்?  எல்லாம் முடிந்து போய்ப் பழைய கதையாகிவிட்டதே!”  என்றான் கண்ணன்.    சட்டெனத் தன் தோளில் கை வைத்த அவளை வியப்பாகப் பார்த்தான் கண்ணன்.  ஓர் அரசகுமாரி, அதுவும் பட்டத்து இளவரசனனின் மனைவிக்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல;  ஆனால்…ஆனால்….இவள்…..ம்ம்ம்ம்ம்…. இவளின் பளிங்கு போன்ற முகத்தைப் பார்த்தாலே இவள் செய்வது தவறல்ல எனத் தோன்றுகிறதே.  கண்ணன் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  அவளோ விஷமமாகச் சிரித்த வண்ணம், “எனக்கு எல்லாம்  தெரியும்.  நீங்கள் நினைக்கிறாப் போல் நான் அசடு எல்லாம் இல்லை.  மத்ரா எரிக்கப் பட்ட சில நாட்களிலேயே இசைக்கலைஞர்கள் ஒரு குழுவாக எல்லா இடங்களுக்கும் சென்றவர்கள் எங்கள் காசி ராஜ்யத்திற்கு வந்தனர்.  மத்ராவிலிருந்து வந்திருப்பதாய்ச் சொல்லிக் கொண்ட அவர்கள் கண்ணன் எப்படி யாதவ குலத்தைக் காத்து ரக்ஷித்தான் என்பதைப் பாடலாகப் பாடி என் தந்தையின் சபையினரையும், தந்தையையும் மகிழ்வித்தனர்.  அப்போது நானும் எல்லாப் பெண்களோடு உப்பரிகையில் இருந்த வண்ணம் அனைத்தையும் பார்த்துக் கேட்டு ரசித்தேன்.  முக்கியமாக உங்களுடைய ராஸ் நடனமும் அதை நீங்கள் கோபியரோடு சேர்ந்து ஆடுவீர்கள் என்பதும், அதுவும் பூர்ண சந்திரன் உதயமாகும் தினத்தன்று என்பதையும் கேட்டிருக்கிறேன்.  ஓ,  அந்தப்பாடல்களில் சில இன்னமும் என் நினைவில் மங்காமல் இருந்து வருகின்றன.  எனக்குப் பொழுது போகாமல் இருக்கையில் பாடிப் பார்ப்பேன்.  அப்போதிலிருந்து உங்களை எவ்வாறேனும் சந்திக்க வேண்டும் என்ற  ஆவல் எனக்கு இருந்து வந்தது. “  பானுமதி கொஞ்சம் நிறுத்தி கண்ணனைத் தன் தேடும் கண்களால் ஆழமாகப் பார்த்தாள். 

Monday, August 20, 2012

ஹஸ்தினாபுரத்திலும் ஒரு கோபிகையா? கண்ணன் ஆச்சரியம்!


துரியோதனன் எப்படியானும் கண்ணனைத் தன் நண்பனாக்கிக்கொள்ள கடும் முயற்சிகள் செய்தான்.  கண்ணனும் அதைப் புரிந்து கொண்டிருந்தான்.  ஹஸ்தினாபுரத்தில் தங்கி இருந்த சமயத்தில் கண்ணன் துரியோதனனுடன் அங்குள்ள கோயில்களைத் தரிசிப்பதிலும், அவனைச் சந்திக்க வந்த மக்களைச் சந்தித்து உரையாடுவதுமாகப் பொழுதைக் கழித்தான்.  மேலும் நாடு துக்கத்தில் ஆழ்ந்திருந்த சமயம் என்பதால் எந்தவிதமான கொண்டாட்டங்களும் நடைபெறவில்லை.  பாண்டவர்கள் இறந்து மூன்று மாதங்கள் முடிந்தபின்னரே வழக்கம்போல் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கலாம் என அறிவிப்புச் செய்யப் பட்டது.   கண்ணன் சென்ற சமயம் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருந்தபடியால் கண்ணனுக்கு தடபுடலாக அரச விருந்து அளிக்கப்பட்டது.  அப்போது காந்தாரியைச் சந்தித்த கண்ணன் மரியாதை நிமித்தம் அவளை வணங்கினான்.   தன் எதிர்காலக் கணவனுக்குக் கண் தெரியாது என்ற செய்தியை அறிந்ததில் இருந்தே தன் கண்களைக் கட்டிக் கொண்டு தானும் குருடாகி விட்ட காந்தாரி அவனை வியக்க வைத்தாள் எனில், அவள் பேச்சும், செய்கைகளும், நடவடிக்கைகளும் அவள் பெற்ற பிள்ளைகளின் செயல்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்பதையும் கண்ணன் கவனித்தான்.   அங்கே தான் கண்ணன் முதல் முதலாக ஹஸ்தினாபுரத்திலும் தனக்காக ஒரு கோபிகா ஸ்த்ரீ காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து ஆச்சரியம் அடைந்தான்.

ஆம், அந்த விருந்தில் தான் துரியோதனனின் மனைவியான பானுமதியைக் கண்ணன் சந்தித்தான்.  ஏற்கெனவே அவள் அழகைக் குறித்துப் பலரும் பாராட்டிப் பேசியதைக் கண்ணன் கேட்டிருந்தாலும் பதினேழே வயது நிரம்பிய பானுமதியின் அபார அழகைக் கண்டு கண்ணன் வியந்தான்.  அவளின் மாசற்ற எழிலும்,  கொடி போன்ற உடலும்,  கனவு தேங்கிய அந்த நீண்ட கண்களும் அவனைக் கவர்ந்தன.  அவள் உள்ளம் பளிங்கு போல் மாசற்று இருந்தது என்றும், அப்போது தான் புத்தம்புது மணப்பெண்ணாக வந்திருந்த அவள் தன் கணவன் மேல் அளவற்ற பாசம் கொண்டிருக்கிறாள் என்பதும் கண்ணனுக்குப் புரிந்தது.  ஆனால்?? ஆனால்?? துரியோதனன் இதற்குத் தகுதி வாய்ந்தவனா?  கண்ணன் மனம் வேதனையுற்றது.  அவள் நடக்கையிலேயே ஒரு அழகான மயில் ஆடி ஆடி வருவது போல் நடனம் ஆடிக்கொண்டே வந்தாள்.  காசி மாநகரத்து அரசனின் குமாரியான அவள் எந்தவிதமான கட்டுத்திட்டங்களுக்கும் தன் பிறந்த வீட்டில் ஆட்படாமல் சர்வ சுதந்திரத்துடன் இருந்து வந்தவள், இங்கு வந்து தாத்தா பீஷ்மரின் கட்டுப்பாடு மட்டுமில்லாமல், துரியோதனனின் கட்டுப்பாட்டிற்கும் அடங்கி நடக்க வேண்டி இருப்பதைக் கண்ணன் நினைவு கூர்ந்தான்.   என்றாலும் அவள் சர்வ சாதாரணமாகவே நடந்து கொண்டாள்.  எல்லாரையும் பார்த்துச் சிரித்து, எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டாள்.  சாதாரணமாக ஓர் அரசகுமாரி அப்படி எல்லாம் நடந்து கொள்வது அரச குடும்பத்தில் அனுமதிப்பதில்லை;  ஆனால் பானுமதி நடந்து கொள்வதோ வெகு இயல்பாக இருந்தது.  அவளை அடக்கி, ஒடுக்கி, “ நீ பேசாமல் இரு!” என்று கண்டிப்புச் செய்வது கடினமாகவே கண்ணனுக்குத் தோன்றியது.  அவள் நடந்து கொண்ட மாதிரியில் எந்தப் பெரியவர்களுக்கும் அவமரியாதையோ, அகெளரவமோ செய்யும் நோக்கம் இல்லை என்பதையும் கண்ணன் கண்டு கொண்டான்.  செடியிலேயே தானாகப் பூக்கும் மலருக்கும்,  மொட்டாகப் பறித்த பின்னர் கட்டிய மாலையில் தண்ணீர் தெளித்துப் பூக்க வைப்பதற்கும் உள்ள வேறுபாடு கண்ணன் அறியாதது அல்லவே!  கள்ளங்கபடு அறியாத குழந்தை எந்தவிதமான வேற்றுமுகமும் இல்லாமல் அனைவரிடமும் சென்று விளையாடும் பாங்கையே கண்ணன் அவளிடம் கண்டான்.

அவளைப் பார்த்ததுமே இவள் ஓர் அபூர்வப் பிறவி எனக் கண்ணன் கண்டு கொண்டான்.  அழகை நேசிக்கும் கண்ணன் அவள் அழகை வியந்தான்.  அதே சமயம் தனக்கு உணவு பரிமாறுகையில் அவள் ஒரு தெய்வத்துக்கு நிவேதனம் படைக்கும் மனப்பாங்கோடு உணவளித்ததையும் கவனித்தான்.  தன்னைப் பார்த்தே அறியாத இந்தச் சின்னஞ்சிறு பெண் தன் மேல் ஏன் இத்தனை பக்தி செலுத்துகிறாள்?  விருந்து முடிந்து அனைவரும் விடைபெற்று வெளியேறுகையில் அவள் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.  கண்ணனைப் பார்த்துத்  தெரிந்தவள் போல் சிரித்தாள்.  அந்த ஹஸ்தினாபுரத்தின் மற்ற இளவரசிகள் அனைவரும் பவ்யமாகவும்,மரியாதையாகவும் வாய்மூடி மெளனிகளாக நின்று கொண்டிருக்க, பானுமதி மட்டும் கண்ணனிடம், “உங்களுக்கு இங்கே எல்லாம் செளகரியமாக உள்ளதா?  குறை ஒன்றும் இல்லையே?” என்று அன்போடு விசாரித்தாள்.   அனைவருக்கும் தூக்கிவாரிப் போடக் கண்ணன் அவள் தைரியத்தை உள்ளூர மெச்சினான்.  எப்போதும் போல் சிரிப்பு நடனமிடும் தன் கண்களால் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “ இங்கே அனைவருமே என் மீது மிகவும் அன்பு காட்டுகின்றனர்.  அப்புறம் அசெளகரியம் எப்படி ஏற்படும்?  அதுவும் இன்று நீ உணவு பரிமாறியதில் நான் வழக்கத்தை விட அதிகமாகவே உணவு உண்டேன். வேறென்ன சொல்வது?” என்றான்.  அவளுடன் பேசுகையில் தான் ஹஸ்தினாபுரத்தில் இல்லை என்றும்,  விருந்தாவனத்தில் கோபிகையுடன் பேசிக் கொண்டிருப்பது போலவும் கண்ணன் உணர்ந்தான்.  மேலும் அவளிடம் பேசலாமா, வேண்டாமா என எண்ணுகையில் தாத்தா பீஷ்மர் அருகே நின்று கொண்டு வெறித்த கண்களோடு தன்னையே பார்ப்பதைக் கண்ட கண்ணன் மேலே பேசாமல் பீஷ்மரைத் தொடர்ந்து தன் மாளிகைக்குச் செல்ல வேண்டியது தான் என எண்ணினான்.

கண்ணன் தன் மாளிகைக்குத் திரும்பினாலும்,  அவன் மனதில் துரியோதனன் மனைவி பானுமதியின் கண்களும், முகபாவமும் அவள் ஏதோ தன்னிடம் முக்கியமாய்ப் பேச வேண்டும் என எண்ணுகிறாள் என்பதை உணர்த்தின.  மறுநாள் உத்தவனையும், சாத்யகியையும் விதுரர் விருந்துக்கு அழைத்திருக்க அவர்கள் இருவரும் சென்றிருந்தனர்.  திரும்பவில்லை.  மாளிகையில் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டு வந்தன.  அவர்களுக்குக் காத்திருந்த கண்ணன் நேரமாகிவிட்டதால், தான் தூங்கப் போகலாம் என எண்ணிக் கொண்டு படுக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.  அப்போது அவன் அறை வாசலுக்கு அருகே யாரோ சத்தமாகப் பேசிக் கொண்டும் சிரித்துக்கொண்டும் வருவது தெரிய வந்தது.  வந்தது ஒருத்தர் அல்ல;  நாலைந்து பேர் இருக்க வேண்டும்.  கண்ணன் அவசரம் அவசரமாகக் களைந்து வைத்த தன் கிரீடத்தையும், மாலையையும் அணிந்த வண்ணம், அறை வாயிலுக்குச் சென்று பார்க்க துரியோதனன், துஷ்சாசனன் இருவரும் பானுமதியோடும் மற்ற இரு இளவரசிகளோடும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.  கண்ணன் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவர்கள் நெருங்கிக்  கொண்டிருந்தனர்.

Monday, August 6, 2012

கண்ணனின் வாக்குறுதி!


“ஆம், கிருஷ்ணா, நான் நிச்சயமாக அப்படித் தான் நம்பினேன்.   சில காலம் சென்றபிறகு அவர்களுக்கு ஏற்றதொரு அரசைச் சரியானபடி அமைத்துக் கொடுக்கவும் எண்ணினேன்.  ஆனால்……..ஆனால்…….”  பீஷ்மரால் மேலே பேச முடியவில்லை.  துக்கத்தில் தொண்டை அடைத்தது அவருக்கு.

கிருஷ்ணன் விதுரரை நோக்கித் திரும்பினான். “விதுரரே,  பாண்டவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் முழுமனதோடு நம்புகிறீர்களா?” எனக் கேட்டான்.

“அப்படித் தான் சொல்லப்படுகிறது, வாசுதேவா!”  விதுரர் இரு கரங்களையும் கூப்பியவண்ணம் பவ்யமாகக் கூறினார்.

“என்றால், என்ன பொருள் விதுரரே?  நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?”

“ஐயா,  எல்லாம் அவன் செயல்!  நம் கைகளில் ஒன்றும் இல்லை.”  தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம் மேல் நோக்கி வணங்கிய விதுரர் மீண்டும், “உயிரற்ற உடல்கள் கிடைத்தன.  அந்த உடல்கள் அடையாளம் காணமுடியாவண்ணம் எரிந்து போயிருந்தன.”

“தாத்தா அவர்களே, குரு வம்சத்துக்கு என்ன நிகழப் போகிறது?  துரியோதனன் யுவராஜாவாகி இருப்பதோடு, சகுனி அவனுக்கு ஆலோசகனாகவும் இருக்கிறானே!  இதன் விளைவு எப்படி இருக்கப் போகிறது?” என்று கண்ணன் வினவினான்.  மேலும் அவன் கூறியது:  “நான் ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே இந்தக் குரு வம்சத்தின்னரின் ஆட்சியில் அடங்கி இருப்பதால் இதைக் குறித்துக் கவலைப்படுகிறேன் தாத்தா.  குரு வம்சம் மட்டுமல்ல, ஆர்யவர்த்தமும் இவர்கள் கரங்களில் பாதுகாப்புடன் இருக்குமா?  அவ்வாறு இவர்கள் செயல்படுவார்களா?”  சட்டெனத் தன் குரலைத் தழைத்துக் கொண்டு ரகசியம் பேசுவது போன்ற மெல்லிய குரலில் கண்ணன் தொடர்ந்தான்.  “ ஒரு முறை நாம் அதர்மத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு விட்டோமெனில் பின்னர் நம்மால் அதிலிருந்து தப்பவே முடியாது.  வரக்கூடிய எதிர்காலம் மொத்தமும், இப்போதிலிருந்தே அதற்கான மோசமான விலையைக் கொடுக்க நேரிடும்.”

பீஷ்மர் கண்ணனின் இந்த நுண்ணறிவையும் எதிர்காலத்தைக் கணிக்கும் தன்மையையும் கண்டு வியந்தார்.  இவ்வளவு இளைஞனுக்குள் இவ்வளவு திறமை என்பதோடு எதிர்காலம் குறித்த கவலையும் இருக்கிறதே!  கண்ணன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்தார்.  எதிர்காலம் பயங்கரமாகவே தெரிந்தது அவருக்கு.  கண்ணனின் வார்த்தைகளிலிருந்து வரக்கூடிய ஆபத்தைப் புரிந்து கொண்ட அவர், இப்போதே அதற்கான அடையாளங்களும், ஏற்பாடுகளும் தொடங்கி விட்டது என்பதையும் உணர்ந்தார்.  பீஷ்மருக்கே உடல் நடுங்கியது. 

“அந்த மஹாதேவன் தான் இந்தக் குரு வம்சத்தைக் காக்க வேண்டும், கண்ணா.  நான் அவனைத் தான் மிகவும் நம்புகிறேன்.  மேலும் குழந்தாய், பொய் வெளியிலேயே வெகுநாள் உலவ முடியாது . உண்மை வெகு நாட்கள் பதுங்கிக் கொண்டிராது.  ஒருநாள் வெளிப்பட்டு தன் முகத்தைக் காட்டிவிடும். ஆனால் ஒரு வேளை அதற்குச் சில காலம் ஆகலாம்.  யார் கண்டது?” பீஷ்மர் கண்ணன் கேட்டதுக்குப்பதில் எதுவும்சொல்ல விரும்பாததால் சட்டெனப் பேச்சை மாற்றினார்.  “என் வாழ்நாளின் எஞ்சி இருக்கும் நாட்களை இந்தக் குரு வம்சத்தை பத்திரமாகப் பாதுகாப்பதில் ஈடுபடப் போகிறேன்.  என் வாழ்க்கையின் லக்ஷியமே அதுதான்.  இவ்வளவு காலமாக இதற்காகவே நான் வாழ்ந்து வருகிறேன்.  என் விருப்பம் போல் வாழ்நாளை முடித்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருவதே இந்தக் குரு வம்சத்தின் உயர்வுக்காகவே.”

பீஷ்மர் மெளனமாகத் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.  ஒருவேளை தரையில் அவர் தன் வாழ்நாளின் கடினமான பகுதியை மீண்டும் கண்டு கொண்டிருக்கிறாரோ என்னும்படி அவர் முகத்தின் உணர்வுகள் மாறி மாறிச் சென்றன.  கண்ணன், “ஆம் தாத்தா, அந்த மஹாதேவன் நிச்சயம் உங்கள் குரு வம்சத்தைக் காத்து நிற்பார்.   உங்கள் வாழ்க்கையின் லக்ஷியமும் பூர்த்தி அடையும்.” என்ற கண்ணன் மேலே பேசுவதில் பீஷ்மருக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கத்தைப் புரிந்து கொண்டான்.  ஆகவே “நான் கிளம்புவதற்கு அநுமதி கொடுங்கள் தாத்தா அவர்களே!” என உத்தரவு கேட்டான். 

“சரி, வாசுதேவா, நீ உன் அரண்மனைக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள்.  எங்களைச் சந்தித்து விட்டாய்.  இங்கே சில நாட்கள் கழித்த பின்னர் நீ மீண்டும் துவாரகை தான் செல்லப் போகிறாயா?”

“இல்லை.  காம்பில்யத்துக்கு அரசன் துருபதன் எங்களை  முக்கியமாய் என்னை அழைத்துள்ளான்.  பாஞ்சால தேசத்துக்குச் செல்ல வேண்டும்.”

கண்கள் விரிய கண்ணனைப் பார்த்த பீஷ்மர், “அவன் எங்கள் எதிரியாயிற்றே.   என்ன காரணத்துக்காக நீ அங்கே செல்லப் போகிறாய்?”
“பாஞ்சால அரசன் ராஜ தர்மத்தை மீறாமல் இருக்கிறானா என்பதைப் பார்க்கவே செல்கிறேன்.  எல்லாரும் அப்படித் தான் சொல்கின்றனர்.  அது உண்மைதானா எனப் பார்க்கப் போகிறேன்.”  கிருஷ்ணன் வெளிப்படையாகத் தன் எண்ணத்தைச் சொன்னான். 

“எனக்கு வாக்குக் கொடு கிருஷ்ணா!  குரு வம்சத்தினருக்கு எதிராக  பாஞ்சால நாட்டு மன்னனுடன் உடன்பாடு ஏதும் செய்து கொள்வதில்லை என்று எனக்கு வாக்குக் கொடு!” பீஷ்மர் கேட்டார்.

“அப்படியே தாத்தா! ஆனால் இது துரியோதனனைப் பொறுத்திருக்கிறது.  அவன் நேர்வழியில் சென்றானானால் நானும் அவ்விதமே நடந்து கொள்வேன்.  அவன் அதர்மமாக நடந்தால்…………”  கிருஷ்ணன் தன் பேச்சை முடிக்கவில்லை என்றாலும் பீஷ்மர் புரிந்து கொண்டார்.  கிருஷ்ணன் எழுந்து நின்று தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம், “  குரு வம்சத்தினரின் சிறந்த மனிதரான உங்களைச் சந்தித்ததன் மூலம் இன்று நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டேன்.  உங்களோடான இந்தச் சந்திப்பு இறை முன் நின்று பேசியது போன்ற உணர்வையே எனக்குத் தருகிறது. “  உண்மையான பணிவோடும், உண்மையான பக்தியோடும் கண்ணன் இதைக் கூறினான் என்பது அனைவருக்கும் புரிந்தது.  பீஷ்மர் தன்னிரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதிக்க, கிருஷ்ணனும், உத்தவனும், சாத்யகியும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்.

Saturday, August 4, 2012

பீஷ்மர் மனம் திறக்கிறார்!


“வாசுதேவா,  கடவுள் என்னை மிகவும் சோதிக்கிறார்;  அதுவும் இந்த எழுபதைக் கடந்த முதிர்ந்த வயதில் சோதனை அதிகமாகவே உள்ளது.  நானும் இந்த  ஹஸ்தினாபுரத்தின் பாரத்தை என் தோள்களில் சுமந்து கொண்டு இறக்கி வைக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.  இதோ வந்துவிட்டது அந்த நல்ல நாள் என நினைக்கும் ஒவ்வொரு சமயமும் விதிவசத்தால் வேறு ஏதேனும் பேரிடர் வந்து விடுகிறது.  என் சுமை இன்னமும் அதிகமாக எனக்குக் கனக்கிறது. “

“தாத்தா அவர்களே!  தாங்கள் ஓங்கி உயர்ந்த இமயத்தைப் போன்ற வலிமையும், உறுதியும் மிக்கவர் ஆவீர்.  உம்முடைய திட சங்கல்பமும், வைராக்கியமும், எடுத்து காரியத்தைத் திடமாக முடிக்கும் தீர்மானமும் என் போன்ற இளைஞர்களுக்கு உம்மிடம் கற்க வேண்டியதொரு முக்கியமான பாடமாகும்.  நீர் எங்களுக்கெல்லாம் ஓர் உதாரண புருஷர் ஆவீர்;  எப்போதும் தர்மத்தைக் காக்கும் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கும் ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் மூலம் நாங்கள் கற்கிறோம்.”

“கிருஷ்ணா!  ஆனால் என்னால் இனிமேலும் இந்த பாரத்தைச் சுமக்க முடியாது அப்பா.  நான் பெரிதும் நம்பியிருந்த ஐந்து சகோதரர்களும் இறந்து விட்டனர்.”  சோகத்தின் காரணமாக நீண்ட பெருமூச்சு விட்டார் பீஷ்ம பிதாமகர். 
“ஐயா, நான் கேட்பது தவறெனில் மன்னிக்கவும்.  நீங்கள் இங்கு இருக்கையிலேயே எப்படி அவர்கள் வெளியேற்றப் பட்டார்கள்?”

இந்தக் கேள்வி பீஷ்மரின் ஏற்கெனவே புண்பட்ட மனதை வெகு வேகமாய்த் தாக்கியது.  பாண்டவர்கள் வெளியேறத் தான் சம்மதித்து விட்டாற்போல் கிருஷ்ண வாசுதேவன் நினைக்கிறானா என்ன?? பீஷ்மரால் இதைத் தாங்க முடியவில்லை.  சூழ்நிலையின் கைதியாகத் தான் ஆகிவிட்டதை எப்படி இவனுக்கு எடுத்துக் கூறுவது?  பாண்டவர்களை வெளியேற்றக் கூடாது என்பது தான் தன் கருத்து எனத் தெரிந்திருந்தும், வெளியே சென்றார்களானால் அவர்களுக்கு ஆபத்து நேரிடும் எனத் தான் நம்புவதை அறிந்த பின்னரும் நானும் திருதராஷ்டிரனுக்கும், அவன் மக்களின் வற்புறுத்தலுக்கும் ஆளாகிச் சம்மதிக்க நேர்ந்ததே!  ஆஹா, இதில் என் தவறும், என் குற்றமும் உள்ளதே!  மஹாதேவா!  நான் என்ன செய்வேன்!  என்ன சொல்வேன்!  இதை எப்படித் தாங்குவேன்?  சரி, உள்ளது உள்ளபடி கிருஷ்ணனிடம் சொல்ல வேண்டியது தான்.


தன் கருணைக்கண்களால் தன்னையே பார்த்துக்கொண்டு, அமர்ந்திருந்த கிருஷ்ணனைப் பார்த்தார் பீஷ்மர்.  அவருடைய தர்ம சங்கடமான நிலைமை புரிந்தது போல் கண்ணன் அவரைத் தேற்றும் பாவனையில் ஆறுதலாகப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.  “கண்ணா, கிருஷ்ண வாசுதேவா, பாண்டவர்கள் வெளியேற்றப் படவில்லை.” என்ற பீஷ்மர் நீண்டதொரு பெருமூச்சுடன் மேலும் தொடர்ந்தார். “  அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வெளியேறினார்கள்.  யுதிஷ்டிரனுக்கு இங்கே உள்ள சங்கடமான சூழ்நிலை புரிய வைக்கப் பட்டது.  அவனும் அதனை உணர்ந்து கொண்டான்.  நாங்களும் செய்வதறியாது திகைத்து இருப்பதை அவன் அறிந்திருந்தான்.  அவன் மட்டும் யுவராஜா பதவியிலிருந்து விலகவில்லை எனில்?.............என்ன நடந்திருக்குமோ, சொல்ல முடியாது.   ஒரு மாபெரும் சகோதர யுத்தம் நடந்திருக்கும்;  ரத்தம் சிந்தியிருக்கும்;  உயிர்கள் பலி வாங்கப் பட்டிருக்கும்.  அதோடு மட்டுமா?  பாண்டவர்களைக் கொன்றிருப்பார்கள்.”  இதைச் சொல்லும்போது ரகசியம் பேசும் குரலில் சொன்னார் பீஷ்மர்.

“உங்களால் அதைத் தடுத்திருக்க முடியாதா?”  கண்ணன் கேட்டான்.

விதுரரைப் பார்த்த பீஷ்மர் “விதுரனும், நானும் அதைக்குறித்து நீண்ட காலமாக யோசித்து வந்திருக்கிறோம்.  ஆனால் சகுனியும், துரியோதனனும் அவர்கள் வலையை மிகவும் விஸ்தாரமாக விரித்து வைத்திருக்கின்றனர்.  வலிமை மிக்கவனான கர்ணனை அவர்கள் பக்கம் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.  கர்ணனின் வீரமும், வலிமையும் குறித்து நான் கூற வேண்டியதில்லை;   அவ்வளவு ஏன்?  ஆசாரியர் துரோணரின் ஒரே மகனான அஸ்வத்தாமாவும் துரியோதனாதியர் பக்கம் தான் இருக்கிறான்.  துரோணாசாரியார் நமக்கு ஆசாரியர் மட்டுமல்ல,  படைகளை நடத்திச் செல்லும் தளபதியும் கூட.   அவரோ தன் ஒரே மகனிடம் மிகவும் அன்பு வைத்தவர் என்பதோடு குமாரனின் முகம் கோணப் பொறுக்காதவர்.  அவர் மகன் பக்கம் தான் இருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?  பின்னர் என்ன!  இவர்கள் இருவரும் துரியோதனாதியர் பக்கம் என்றில் முதல் ஆசான் கிருபாசாரியாரைப் பற்றிக் கேட்க வேண்டுமா?  தன் மைத்துனன் ஆன துரோணர் பக்கமும், அவர் மகன் பக்கமும் தான் நிற்பார்.  ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், துரோணருக்குப் பாண்டவ சகோதரர்கள் மேல் பாசமும், பிரியமும் அதிகம்.  அப்படி இருந்தும் அவர் இதில் தலையிட்டுக் கொள்ளவில்லை.  எந்தவிதமான சமாதானமும் பேச வரவில்லை.  ரத்தம் சிந்தும் யுத்தம் ஒன்று ஆரம்பித்திருந்தால் என்னால் தடுப்பதும் கஷ்டமாய் இருந்திருக்கும்;  அதில் யார் பக்கம் கலந்து கொள்வது என்ற குழப்பமும் அதிகமாய் இருக்கும்.”

பின்னர் மிகவும் வருந்திய குரலில் தன்னைத் தானே நொந்து கொள்ளும் விதமாய் பீஷ்மர் கூறினார்:  “இப்போது புதியதொரு தலைமுறை உத்வேகத்துடன் கிளம்பி இருக்கையில் என் போன்ற கிழவர்கள் பேச்சிற்கு ஏது மதிப்பு?  நான் கிட்டத்தட்ட இறந்தவன் போல்தான்.  அவர்களுக்குத் தேவைப்படுகையில் என்னை எழுப்பி யோசனை கேட்பார்கள்.  தேவை இல்லை எனில் ஒதுக்கிவிடுவார்கள்.  எல்லாமும் அவரவர் வசதி தானே!”  இதைச் சொல்கையில் பீஷ்மரின் குரலின் சோகம் கண்ணனை உலுக்கி எடுத்தது. 

“உங்களுடைய அதிகாரத்தை நீங்கள் சரிவரப் பயன்படுத்தினால்,  பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பி இருந்தால்;   உங்களை விடவும் அதிகாரமும், செல்வாக்கும் உள்ளவர்கள் இந்த ஹஸ்தினாபுரத்திலேயே இருக்க முடியாது.  அது போகட்டும், தாத்தா அவர்களே, ஐந்து சகோதரர்களும் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், பிரச்னைகள் தீர்ந்து விடும் என நீங்கள் நம்பினீர்களா?”  கண்ணன் கேட்டான்.

Wednesday, August 1, 2012

திருதராஷ்டிரனின் நாடகமும், பீஷ்மரின் வருத்தமும்


திரும்பத் திரும்ப பாண்டவர்களிடம் தான் மிகவும் பாசத்துடன் அன்பு செலுத்தியதையே வலியுறுத்திய திருதராஷ்டிரன், தான் எவ்வளவு பெரிய மனதோடு யுதிஷ்டிரனை யுவராஜாவாக்கினான் என்பதைக் கண்ணனுக்கு மறைமுகமாகச் சுட்டிக் காட்டினான்.  யுதிஷ்டிரனும் மிகவும் நல்லவனே;  நேர்மையானவன்;  நல்ல வீரன்; திறமைசாலி;  பெரியோர்களிடத்தில் மரியாதை மிக்கவன்;  அவன் மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் ஒரு மஹா சக்கரவர்த்தியாகி இந்த பாரத தேசத்துக்கே ஆதர்ச அரசனாக இருந்திருப்பான்.  அடுக்கிக் கொண்டே போனான் திருதராஷ்டிரன்.  மேலும் திருதராஷ்டிரன் செய்த ஒரே தவறு அவர்களை வாரணாவதம் போக அநுமதித்ததே என்றும் திரும்பத் திரும்பக் கூறினான்.  இதன் மூலம் தான் தன் மகனோடு சேர்ந்து கொண்டு பாண்டவர்களை வலிய வாரணாவதம் அனுப்பியதை முழுக்க முழுக்க மறைக்க முயன்றான் திருதராஷ்டிரன்.  மேலும் விதி இவ்வாறிருக்கையில் தான் தடுத்திருந்தாலும் இது நடந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது என்று கண்ணனுக்குச் சுட்டிக் காட்டினான்.  அவன் பேச்சு முழுவதும் தன்னையும், தன் குமாரர்களையும் பழிச்சொல்லில் இருந்து காப்பாற்ற முனைவதாகவே இருந்ததைக் கண்ணன் கவனித்துக் கொண்டான்.  அனைத்தும் பொய் என்பதையும் அறிந்து கொண்டான்.

பின்னர் பிதாமகர் பீஷ்மரை தரிசிக்கச் சென்றான் கண்ணன்.  அவனை உண்மையான சந்தோஷத்துடனும், ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புடனும் பீஷ்மர் வரவேற்றார்.  அருகே விதுரனும் வீற்றிருந்தார்.  இருவருக்கும் அருகே கண்ணனுக்கும் சரியாசனம் போடப் பட்டிருந்தது.  தனக்கென ஆசனத்தைச் சரிசமமாகப் போட்டிருந்ததும் கண்ணன் மனதைக் கவர்ந்தது.  கண்ணன் பீஷ்மரின் இந்தப் பெருந்தன்மையான போக்கில் மனம் நெகிழ்ந்தான்.  அவன் மேலும் தனக்கு இவர்கள் இருவருக்கும் மிக அருகே ஆசனம் போடப்பட்டதில் இருந்து விஷயத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டு தன்னுடன் வந்த சாத்யகியையும், உத்தவனையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றான்.  பீஷ்மரின் கால்களில் வீழ்ந்து வணங்கினான் கண்ணன்.  தன்னுடைய நீண்ட வாழ்க்கையின் அலுப்பும், சலிப்பும் சற்றும் உடலிலும் முகத்திலும் தெரியாவண்ணம் பீஷ்மர் இளமை குன்றாமலேயே காணப்பட்டார்.  திருதராஷ்டிரனை விட வயதில் பல மடங்கு மூத்தவரான அவர் அமர்ந்திருந்த போது முதுகுத் தண்டு சற்றும் வளையாமல் நேரே காணப்பட்டது.  தன் கம்பீரமும் சற்றும் குறையாமல் அமர்ந்திருந்த அவர் தன் கால்களில் விழுந்து வணங்க முயன்ற கண்ணனைத் தன்னிரு கரங்களாலும் தூக்கி அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்.  “வாசுதேவ கிருஷ்ணா!  உன்னைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  உன்னுடைய சாகசங்களைக் குறித்த சேதிகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. “ என்றார்.

வெளிச்சத்துக்காகக் கண்ணன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவனை வெளிச்சத்தில் உற்று நோக்கினார் பீஷ்மர்.  “ கண்ணா, உண்மையில் நீ உன் வயதுக்கு மிகவும் சிறுவனைப் போலவே காணப்படுகிறாயே?  என்ன செய்து உன் இளமையைத் தக்க வைத்துக்கொள்கிறாய்?” என வினவினார்.  கண்ணன் தன் மரியாதை சற்றும் குறையாமல் சிரித்துக் கொண்டான்.  “உங்களைப் போன்ற தெய்வீகப் பெரியோரின் நல்லாசிகளும், அந்த தெய்வங்களின் கருணா கடாக்ஷமுமே எனக்கு உதவுகிறது.” என்றான். வெளியே நின்றிருந்த உத்தவனையும், சாத்யகியையும் பார்த்து, பீஷ்மர், “அவர்கள் இருவரும் உன்னுடன் வந்த நண்பர்கள் தானே?  அவர்களையும் உள்ளே அழை!” என்று கூறினார்.  விதுரர் உடனே எழுந்து சென்று இருவரையும் உள்ளே அழைத்து வந்தார்.  இருவரும் வந்ததும் விதுரரையும், பீஷ்மரையும் வணங்கிப் பின் கண்ணனுக்கு அருகே இருபக்கமும் நின்று கொண்டனர்.  பின்னரே பீஷ்மர் தன் அருமை விருந்தாளியான கண்ணன் பக்கம் திரும்பி, “நீ இப்போது அமர்ந்து கொள்.  உன்னை நல்லவேளையாக என் கண்களால் நான் பார்க்க நேர்ந்தது.  இல்லை எனில் நம்பி இருக்கவே மாட்டேன்.  உன்னைப் பற்றிய கதைகளைக் கேட்டதில் இருந்து உன்னை உயரமாகவும், ஆஜாநுபாகுவாகவும், எப்போதும் இடைவிடாமல் யுத்தம் செய்பவனாகவும், யுத்தம் செய்து கொண்டிருந்தாலும் சிறிதும் களைப்பற்றவனாகவும் ஒரு ராக்ஷதனை எதிர்பார்த்தேன்.”

“ஓ, அப்படி எனில் என்னைப் பார்த்து ஏமாந்துவிட்டீர்களா தாத்தா பீஷ்மரே?” கண்ணன் பீஷ்மரின் பெருந்தன்மையான போக்கிலும், அவரின் உண்மையான அன்பிலும் மனம் நெகிழ்ந்து போயிருந்தான். “இல்லை, குழந்தாய், இல்லை.  முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் உள்ள பெருமையும், அதில் நம்பிக்கை உடையவர்களையும் இந்நாட்களில் பார்க்கவே அரிதாக இருக்கையில் அப்படி இருக்கும் உன்னை நான் பார்க்க நேர்ந்தது என் அதிர்ஷ்டமே!” என்றார் பீஷ்மர்.  அவர் குரலின் இறுக்கம் அவர் மன வேதனையைக் காட்டிக் கொடுத்தது.   கண்ணன் புரிந்து கொண்டான்.  “ஐயா, தங்கள் துக்கம் எனக்குப் புரிகிறது.  நீங்கள் யுதிஷ்டிரன் மேல் பெருமளவு நம்பிக்கை வைத்திருந்தீர்கள்.  ஆனால் அவன் இப்போது இல்லை.  இறந்துவிட்டான்.”   பீஷ்மர் கண்ணனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.  அவர் தன் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டிருப்பான் என்று நினைத்தவரைப் போலக் காணப்பட்டார்.  சற்று நேரத்தில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட பீஷ்மர் கண்ணனிடம், “ஆம் கண்ணா, நான் யுதிஷ்டிரனிடம் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன்.  அவன் பாண்டுவைப் போலவே நம்பிக்கைக்கு உகந்தவனாக இருந்தான்.  மக்களை மிகவும் நேசித்தான்.  ஒரு அன்பான, நீதி, நேர்மை தவறாத அரசனாக வந்திருக்க வேண்டியவன்;  என் துரதிருஷ்டம் அவனை இழக்க நேர்ந்தது.  அவன் இறந்துவிட்டான். “  அந்தக் கிழவரின் கண்களில் இருந்து கங்கை பெருக்கெடுத்து ஓடினாள்.

“மரியாதைக்குரிய தாத்தா அவர்களே, இந்த மோசமான சூழ்நிலையைச் சமாளித்துக்கொண்டு மீண்டும் முன்போல் ராஜ்ய பாரத்தை ஏற்பவர்களுக்கு வலுவூட்டும் வண்ணம் நீங்கள் பணியாற்ற வேண்டிய வலிமையை எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் உங்களுக்கு அருளட்டும்.” கண்ணன் முழு மனதோடு பிரார்த்திக்கிறான் என்பதை அவன் குரலும், முகமும் கூறின.  அந்த நிமிடமே பீஷ்மருக்குத் தன் முன்னே அமர்ந்திருப்பவன் சாதாரணமான ஒருவன் அல்ல என்பது புரிந்தது.  அவன் குரலில் காட்டிய பரிதாப உணர்ச்சியும், அவன் கண்களில் தெரிந்த கருணையும், பீஷ்மரின் துயரத்தைப் புரிந்து கொண்ட முகபாவனையும், பீஷ்மருக்குத் தன் முன்னே அமர்ந்திருப்பது முன்பின் தெரியாத ஒரு வேற்று மனிதன் அல்ல என்றும், தன்னை, தன் துயரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் ஓர் அருமையான இளைஞன் என்றும் அவனைத் தான் முழு மனதோடு நம்பலாம் என்பதையும் உணர்ந்து கொண்டார்.  கண்ணனுக்கும் தன்னம்பிக்கையும், தன்னைத் தானே சுதாரித்துக்கொள்ளும் தன் சுபாவமும் மீண்டும் அவனிடம் வந்திருந்ததால் இது எளிதாயிற்று.