Wednesday, August 1, 2012

திருதராஷ்டிரனின் நாடகமும், பீஷ்மரின் வருத்தமும்


திரும்பத் திரும்ப பாண்டவர்களிடம் தான் மிகவும் பாசத்துடன் அன்பு செலுத்தியதையே வலியுறுத்திய திருதராஷ்டிரன், தான் எவ்வளவு பெரிய மனதோடு யுதிஷ்டிரனை யுவராஜாவாக்கினான் என்பதைக் கண்ணனுக்கு மறைமுகமாகச் சுட்டிக் காட்டினான்.  யுதிஷ்டிரனும் மிகவும் நல்லவனே;  நேர்மையானவன்;  நல்ல வீரன்; திறமைசாலி;  பெரியோர்களிடத்தில் மரியாதை மிக்கவன்;  அவன் மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் ஒரு மஹா சக்கரவர்த்தியாகி இந்த பாரத தேசத்துக்கே ஆதர்ச அரசனாக இருந்திருப்பான்.  அடுக்கிக் கொண்டே போனான் திருதராஷ்டிரன்.  மேலும் திருதராஷ்டிரன் செய்த ஒரே தவறு அவர்களை வாரணாவதம் போக அநுமதித்ததே என்றும் திரும்பத் திரும்பக் கூறினான்.  இதன் மூலம் தான் தன் மகனோடு சேர்ந்து கொண்டு பாண்டவர்களை வலிய வாரணாவதம் அனுப்பியதை முழுக்க முழுக்க மறைக்க முயன்றான் திருதராஷ்டிரன்.  மேலும் விதி இவ்வாறிருக்கையில் தான் தடுத்திருந்தாலும் இது நடந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது என்று கண்ணனுக்குச் சுட்டிக் காட்டினான்.  அவன் பேச்சு முழுவதும் தன்னையும், தன் குமாரர்களையும் பழிச்சொல்லில் இருந்து காப்பாற்ற முனைவதாகவே இருந்ததைக் கண்ணன் கவனித்துக் கொண்டான்.  அனைத்தும் பொய் என்பதையும் அறிந்து கொண்டான்.

பின்னர் பிதாமகர் பீஷ்மரை தரிசிக்கச் சென்றான் கண்ணன்.  அவனை உண்மையான சந்தோஷத்துடனும், ஆர்வம் கலந்த எதிர்பார்ப்புடனும் பீஷ்மர் வரவேற்றார்.  அருகே விதுரனும் வீற்றிருந்தார்.  இருவருக்கும் அருகே கண்ணனுக்கும் சரியாசனம் போடப் பட்டிருந்தது.  தனக்கென ஆசனத்தைச் சரிசமமாகப் போட்டிருந்ததும் கண்ணன் மனதைக் கவர்ந்தது.  கண்ணன் பீஷ்மரின் இந்தப் பெருந்தன்மையான போக்கில் மனம் நெகிழ்ந்தான்.  அவன் மேலும் தனக்கு இவர்கள் இருவருக்கும் மிக அருகே ஆசனம் போடப்பட்டதில் இருந்து விஷயத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டு தன்னுடன் வந்த சாத்யகியையும், உத்தவனையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றான்.  பீஷ்மரின் கால்களில் வீழ்ந்து வணங்கினான் கண்ணன்.  தன்னுடைய நீண்ட வாழ்க்கையின் அலுப்பும், சலிப்பும் சற்றும் உடலிலும் முகத்திலும் தெரியாவண்ணம் பீஷ்மர் இளமை குன்றாமலேயே காணப்பட்டார்.  திருதராஷ்டிரனை விட வயதில் பல மடங்கு மூத்தவரான அவர் அமர்ந்திருந்த போது முதுகுத் தண்டு சற்றும் வளையாமல் நேரே காணப்பட்டது.  தன் கம்பீரமும் சற்றும் குறையாமல் அமர்ந்திருந்த அவர் தன் கால்களில் விழுந்து வணங்க முயன்ற கண்ணனைத் தன்னிரு கரங்களாலும் தூக்கி அவனை அப்படியே அணைத்துக் கொண்டார்.  “வாசுதேவ கிருஷ்ணா!  உன்னைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  உன்னுடைய சாகசங்களைக் குறித்த சேதிகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. “ என்றார்.

வெளிச்சத்துக்காகக் கண்ணன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவனை வெளிச்சத்தில் உற்று நோக்கினார் பீஷ்மர்.  “ கண்ணா, உண்மையில் நீ உன் வயதுக்கு மிகவும் சிறுவனைப் போலவே காணப்படுகிறாயே?  என்ன செய்து உன் இளமையைத் தக்க வைத்துக்கொள்கிறாய்?” என வினவினார்.  கண்ணன் தன் மரியாதை சற்றும் குறையாமல் சிரித்துக் கொண்டான்.  “உங்களைப் போன்ற தெய்வீகப் பெரியோரின் நல்லாசிகளும், அந்த தெய்வங்களின் கருணா கடாக்ஷமுமே எனக்கு உதவுகிறது.” என்றான். வெளியே நின்றிருந்த உத்தவனையும், சாத்யகியையும் பார்த்து, பீஷ்மர், “அவர்கள் இருவரும் உன்னுடன் வந்த நண்பர்கள் தானே?  அவர்களையும் உள்ளே அழை!” என்று கூறினார்.  விதுரர் உடனே எழுந்து சென்று இருவரையும் உள்ளே அழைத்து வந்தார்.  இருவரும் வந்ததும் விதுரரையும், பீஷ்மரையும் வணங்கிப் பின் கண்ணனுக்கு அருகே இருபக்கமும் நின்று கொண்டனர்.  பின்னரே பீஷ்மர் தன் அருமை விருந்தாளியான கண்ணன் பக்கம் திரும்பி, “நீ இப்போது அமர்ந்து கொள்.  உன்னை நல்லவேளையாக என் கண்களால் நான் பார்க்க நேர்ந்தது.  இல்லை எனில் நம்பி இருக்கவே மாட்டேன்.  உன்னைப் பற்றிய கதைகளைக் கேட்டதில் இருந்து உன்னை உயரமாகவும், ஆஜாநுபாகுவாகவும், எப்போதும் இடைவிடாமல் யுத்தம் செய்பவனாகவும், யுத்தம் செய்து கொண்டிருந்தாலும் சிறிதும் களைப்பற்றவனாகவும் ஒரு ராக்ஷதனை எதிர்பார்த்தேன்.”

“ஓ, அப்படி எனில் என்னைப் பார்த்து ஏமாந்துவிட்டீர்களா தாத்தா பீஷ்மரே?” கண்ணன் பீஷ்மரின் பெருந்தன்மையான போக்கிலும், அவரின் உண்மையான அன்பிலும் மனம் நெகிழ்ந்து போயிருந்தான். “இல்லை, குழந்தாய், இல்லை.  முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் உள்ள பெருமையும், அதில் நம்பிக்கை உடையவர்களையும் இந்நாட்களில் பார்க்கவே அரிதாக இருக்கையில் அப்படி இருக்கும் உன்னை நான் பார்க்க நேர்ந்தது என் அதிர்ஷ்டமே!” என்றார் பீஷ்மர்.  அவர் குரலின் இறுக்கம் அவர் மன வேதனையைக் காட்டிக் கொடுத்தது.   கண்ணன் புரிந்து கொண்டான்.  “ஐயா, தங்கள் துக்கம் எனக்குப் புரிகிறது.  நீங்கள் யுதிஷ்டிரன் மேல் பெருமளவு நம்பிக்கை வைத்திருந்தீர்கள்.  ஆனால் அவன் இப்போது இல்லை.  இறந்துவிட்டான்.”   பீஷ்மர் கண்ணனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.  அவர் தன் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டிருப்பான் என்று நினைத்தவரைப் போலக் காணப்பட்டார்.  சற்று நேரத்தில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட பீஷ்மர் கண்ணனிடம், “ஆம் கண்ணா, நான் யுதிஷ்டிரனிடம் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன்.  அவன் பாண்டுவைப் போலவே நம்பிக்கைக்கு உகந்தவனாக இருந்தான்.  மக்களை மிகவும் நேசித்தான்.  ஒரு அன்பான, நீதி, நேர்மை தவறாத அரசனாக வந்திருக்க வேண்டியவன்;  என் துரதிருஷ்டம் அவனை இழக்க நேர்ந்தது.  அவன் இறந்துவிட்டான். “  அந்தக் கிழவரின் கண்களில் இருந்து கங்கை பெருக்கெடுத்து ஓடினாள்.

“மரியாதைக்குரிய தாத்தா அவர்களே, இந்த மோசமான சூழ்நிலையைச் சமாளித்துக்கொண்டு மீண்டும் முன்போல் ராஜ்ய பாரத்தை ஏற்பவர்களுக்கு வலுவூட்டும் வண்ணம் நீங்கள் பணியாற்ற வேண்டிய வலிமையை எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் உங்களுக்கு அருளட்டும்.” கண்ணன் முழு மனதோடு பிரார்த்திக்கிறான் என்பதை அவன் குரலும், முகமும் கூறின.  அந்த நிமிடமே பீஷ்மருக்குத் தன் முன்னே அமர்ந்திருப்பவன் சாதாரணமான ஒருவன் அல்ல என்பது புரிந்தது.  அவன் குரலில் காட்டிய பரிதாப உணர்ச்சியும், அவன் கண்களில் தெரிந்த கருணையும், பீஷ்மரின் துயரத்தைப் புரிந்து கொண்ட முகபாவனையும், பீஷ்மருக்குத் தன் முன்னே அமர்ந்திருப்பது முன்பின் தெரியாத ஒரு வேற்று மனிதன் அல்ல என்றும், தன்னை, தன் துயரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் ஓர் அருமையான இளைஞன் என்றும் அவனைத் தான் முழு மனதோடு நம்பலாம் என்பதையும் உணர்ந்து கொண்டார்.  கண்ணனுக்கும் தன்னம்பிக்கையும், தன்னைத் தானே சுதாரித்துக்கொள்ளும் தன் சுபாவமும் மீண்டும் அவனிடம் வந்திருந்ததால் இது எளிதாயிற்று.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒருவரை ஒருவர் எவ்வளவு அழகாக புரிந்து கொள்கிறார்கள்....

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி...



பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

ஸ்ரீராம். said...

பீஷ்மரின் காலில் விழுந்து வணங்கினான் கண்ணன்...

ஆச்சர்யமூட்டும் வரிகள். மனித ரூபத்தில் இருந்தாலும் பரமாத்மா இப்படி ஒரு செயல் செய்ததாகப் படித்திருக்கிறேனா, நினைவில்லை. மரியாதையும், அனுசரணையுடனுமான வார்த்தைகளுடன் பிதாமகரும் கண்ணனும் உரையாடுவது இனிமையாய் இருக்கிறது.