Thursday, August 30, 2012

பானுமதியின் நிறைவேறா ஆசைகள்!


துரியோதனன் குடித்திருந்தாலும் நிதானத்தை இழக்காததோடு, பானுமதியை மேலும் பேசவிடுவதன் ஆபத்தையும் உணர்ந்திருந்தான்.  ஆகவேஅவளிடம், “உனக்கு ராஜாங்க விஷயங்கள் பற்றியோ, அரசியல் குறித்தோ அரசாட்சி குறித்தோ எதுவும் தெரியாது;  புரியாது.  ஆகவே நீ இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதே நல்லது.”  என்றான்.  ஆனால் பானுமதியோ அசைந்து கொடுக்கவில்லை. “எனக்கு இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையோ, புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ எதுவும் இல்லை, ஆர்ய புத்திரரே.  “  தன் கணவன் தன்னைப் பலர் முன்னிலையில் அதட்டியதனால் தான் எதுவும் பாதிக்கப்படாமல் இருப்பதாகவே காட்டிக் கொண்டாள்.  “கண்ணா, நீ அடுத்த பெளர்ணமி வரை இங்கே இருந்தால், நாம் அனைவரும் இங்கே “ராஸ்” விளையாடலாம்.  என்ன சொல்கிறாய்?” என்று கண்ணனிடம் கேட்டாள்.

“பானுமதி, நடக்க முடியாத விஷயங்களைக் குறித்தே பேசுகிறாய்.  என்னால் இங்கே பெளர்ணமி வரையிலும் தங்க முடியாது.  அதோடு நீ சொல்லும் அந்தப் புல்லாங்குழலை நான் விருந்தாவனத்திலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன்.  நான் இப்போது புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு “ராஸ்” விளையாடும் மனநிலையிலும் இல்லை.  அதோடு விருந்தாவனத்தை விட்டு வந்ததும் வாசித்த எந்தப் புல்லாங்குழலிலும் அந்த மாதிரியான இசையும் பிறக்கவில்லை.  அந்தப் புல்லாங்குழலில் ஏதோ மாயம் இருந்திருக்க வேண்டும்.  அதன் இசை அப்படி அனைவரையும் கவர்ந்து இழுத்தது.  இது விருந்தாவனமும் இல்லை, பானுமதி.  இங்கெல்லாம் நம் இஷ்டப்படி நடந்து கொள்ள முடியாது.”  என்றான் கண்ணன். 

பானுமதி, “நான் விருந்தாவனத்தில் இருந்திருக்கக் கூடாதா என எண்ணுகிறேன்.”  என்றாள்.  இதைச் சொல்கையில் அவள் குரல் அடைத்துக் கொண்டது.  கண்ணீர் மல்கியது அவளுக்கு.  தனக்கு அரசகுல வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எவ்வாறேனும் வெளிக்காட்ட விரும்பியவளாகத் தென்பட்டாள்.  கண்ணன் அவளைத் தேற்றும் விதமாக, “பானுமதி, நீ பட்டத்து இளவரசனின் மனைவி.  விரைவில் பட்ட மஹிஷியாகவும் ஆகப் போகிறாய்.  நாம் விரும்புவதெல்லாம் நடக்காது.  நடப்பது அனைத்தையும் நாம் விரும்பவும் மாட்டோம்.  நாம் விரும்பும் அனைத்தும் நமக்குக் கிடைக்கவும் கிடைக்காது.  பானுமதி, இங்கே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளும் எனத் தனியாக ஒரு சட்டம் இருக்கிறது என்பதை நான் நன்கறிவேன்.  அதை நான் மீறினால் தாத்தா பீஷ்மர் மனம் வருந்துவார்.  என்னை என்றென்றும் மன்னிக்க மாட்டார்.  அப்படியெல்லாம் சுதந்திரத்தை நான் இங்கே வந்து எடுத்துக்கொள்ள இயலாது.”  என்றான் கண்ணன்.

“ஆம், நானும் நன்கறிவேன்.  தாத்தா இங்குள்ள கஷ்டமான வாழ்க்கையை மேலும் கஷ்டமாக்குகிறார்.  என்ன செய்யலாம்.  வாசுதேவா, நானும் ஒரு கோபியாகப் பிறந்திருக்கக் கூடாதா என்றிருக்கிறது எனக்கு!” பானுமதி இதைக் கூறுகையில் துரியோதனனின் மாளிகை வந்துவிட்டது.  அந்த அரண்மனை வளாகத்தின் ஒரு கோடியில் அழகானதொரு நந்தவனத்தைத் தாண்டியதும் துரியோதனன் மாளிகை வந்தது.  அந்த நந்தவனம் பானுமதியால் பராமரிக்கப் படுகிறது என்பதை அவள் முகத்தைப்பார்த்ததுமே புரிந்து கொள்ள முடிந்தது.  நந்தவனத்தைப் பார்த்த பானுமதியின் முகத்தில் மகிழ்ச்சிக் கீற்றுகள்.  வெள்ளிக் கூடாரத்தின் அடியிலே அன்னையின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து பானுமதி தினமும் தன் ஆடல், பாடல்களால் அன்னையை வழிபட்டு மகிழ்வித்து வந்தாள்.  இங்கே இருக்கையில் அவள் சுதந்திரமாக அவளுடைய பிறந்த நாடான காசியில் இருப்பது போல் இருப்பாள்.  அவள் பேச்சிலிருந்து பானுமதி தினமும் இங்கே கெளரி பூஜை செய்வதாக அறிந்து கொண்டான் கண்ணன்.  பூக்களில் இருந்து தேனை அருந்தும் வண்டுகள் ரீங்காரமிடுவதைப் போல் இனிமை கலந்த குரலில் பானுமதி அனைத்தையும் சொல்வதைக் கண்ணன் ரசித்தான்.  அவள் வெளிப்படையான மனம் அவனுக்குப் புரிந்தது.  அன்புக்கு ஏங்கும் அவள் உள்ளத்தை உணர்ந்து கொண்டான்.  அத்தகைய அன்பு துரியோதனனிடமிருந்து அவளுக்குக் கிட்டவில்லை என்பதையும் புரிந்து கொண்டான்.  என்றாலும் தன் கணவனின் உடல் நலத்துக்காகவும், அவனின் அரசியல் முன்னேற்றங்களுக்காகவும் என பானுமதி செய்து வரும் கெளரி பூஜை கண்ணனை வியப்படைய வைக்கவில்லை.  துரியோதனன் மட்டுமல்லாமல் மற்ற இளவரசர்கள், இளவரசிகளும் என்றாவது தான் பானுமதியின் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதாகவும் அறிந்தான்.

“இந்த ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு அவர்களைத் தவிர மற்றவர்கள் நாகரீகமற்றவர்கள் என்ற நினைப்பு அதிகம். என்னைப் பார்த்தால் அப்படியா இருக்கிறது?” என்றாள் பானுமதி.  “நீ நாகரீகமற்றவள் எனில் நாங்களெல்லாம் எங்கே போவது?” என்றான் கண்ணன்.  பானுமதி உதட்டைப் பிதுக்கிக் கொண்டே தன் கணவனைப் பார்த்துக் கொண்டு, “ஆர்ய புத்திரர் இந்த வழிபாட்டுக்கு ஒரு நாளும் வந்ததில்லை.  எனக்கு அவர் தினமும் வரவேண்டும் என்ற ஆசை.  இந்த பூஜை நடத்துவதே அவர் நன்மைக்குத் தானே!  இன்றைக்கு நீ வந்திருப்பதால் அவரும் வந்திருக்கிறார். இல்லை எனில் நான் எவ்வளவு அழைத்தாலும் வர மாட்டார். எனக்கு அவரிடம் மிகவும் கோபம் வருகிறது.”  என்றாள் பானுமதி.  “ம்ம்ம்ம்.. அவர் தன் நண்பர்களையும், அழைத்து வந்திருக்கிறார்.  ஆனால்……ஆனால் எப்படிப் பட்ட நண்பர்கள்!  கூடவே அவர்களின் மனைவிமார்களும் வந்திருக்கின்றனர்.  ஆனால், கண்ணா, இவர்களெல்லாம் உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கின்றனர்.  அந்தப் பெண்களெல்லாம் உன்னைப் பார்க்கத் துடி துடித்துக் கொண்டிருந்தனர்.  இப்போது வாய்ப்பு நேரவும் உடனே வந்துவிட்டார்கள். உன்னைக் குறித்த நாடோடிப் பாடல்களை என் தந்தையின் சபையில் நான் கேட்டிருக்கிறேன் என்றதும் அவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து அதைக் குறித்து மேலும் சொல்லும்படிக் கேட்டனர்.”  திடீரெனக்கோபம் கொண்டவளாய்க் கிருஷ்ணனைப் பார்த்து, “உன் புல்லாங்குழலை ஏன் விட்டு வந்தாய் கண்ணா?  அடுத்த முறை நீ ஹஸ்தினாபுரம் வந்தால் கட்டாயம் புல்லாங்குழலோடு தான் வரவேண்டும்.”  என்று ஆணையிடுவது போல் கூறினாள்.  

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு நன்றி...

"ராஸ்" விளையாட்டு என்றால்...? கொஞ்சம் விளக்கி இருக்கலாமே...