Saturday, December 3, 2016

வல்லுறு சூதெனும் போர் தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி!

ஆசாரியர் தௌமியரும், ஆசாரியர் சோமதத்தரும் இருவருக்கும் மரபு ரீதியான முறையில் வரவேற்பு அளித்துத் தக்க மந்திர கோஷங்களால் பெருமைப் படுத்தினார்கள்.  யுதிஷ்டிரன் தன் சகோதரர்களுடனும், துரியோதனன் தன் குழுவினருடனும் நுழைவாயிலுக்கருகே பெரியோர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். துரியோதனாதியரும் மற்றக் கௌரவர்களும் தாங்கள் விரித்த பொறியில் பாண்டவர்கள் மாட்டிக் கொண்டதை எண்ணி இறுமாப்புடன் இருந்தனர். மிகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டது எனக்  குதூகலித்தனர். அதைக் கண்ட யுதிஷ்டிரனுக்குத் தனக்குள்ளாகச் சிரிப்பு வந்தது. அவர்கள் தன்னை மாட்டுவதற்கு விரித்த வலையே தனக்கு ஓர் சந்தர்ப்பமாகப் பயன்படப் போவதை அவர்கள் அறிய மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டான். தற்செயலாக அவன் துரியோதனன் அருகே நிற்க நேரிட்டது. உடனே அவன் மனம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு துரியோதனன் மனதை வெல்ல வேண்டும். இந்த சூதாட்டமே தேவையில்லை என்றெல்லாம் எண்ணியது. அதன் மூலம் சமாதானம் பிறக்கட்டுமே! “சகோதரா! இந்தச் சூதாட்டத்தை நாம் ஆடுவது அவ்வளவு முக்கியமா?” என்று துரியோதனனிடம் கேட்டான். அவனை ஈர்க்கும் குரலில், “நாம் இந்தச் சூதாட்டம் இல்லாமலே சமாதானமாக இருக்கலாம்!” என்றும் சொன்னான்.

“இந்த ஆட்டத்தில் என்ன தப்பைக் கண்டாய்? இதை ஆடுவதில் என்ன தவறு?” என்று கேட்டான் துரியோதனன். அதற்கு யுதிஷ்டிரன், “சூழ்ச்சிகளால் நிறைந்த ஓர் சூதாட்டத்தை ஆடுவதை விடப் போர் புரிவது மிகவும் உத்தமமான ஒன்று! இந்தச் சூதாட்டத்தினால் நம் நட்புத் தான் சிதையப் போகிறது!” என்றான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷகுனி தன்னையும் அந்தப் பேச்சில் இணைத்துக் கொண்ட வண்ணம், “மூத்தவனே, ஏன் பயப்படுகிறாய்? சூதாட்டத்திலிருந்து தப்புவதற்கு ஏன் முயல்கிறாய்?” என்று கேட்டான் யுதிஷ்டிரனிடம். அவனைப் பார்த்துக் கருணையுடன் சிரித்தான் யுதிஷ்டிரன். “மாட்சிமை பொருந்திய காந்தார இளவரசர், ஷகுனி அவர்களே, வணக்கம். இந்தச் சூதாட்டத்தின் பாய்ச்சிக்காய்களை எடுத்து ஆடும் ஓர் மனிதன் எவ்வளவு விவேகமுள்ளவனாக இருந்தாலும் விரைவில் ஓர் முட்டாளாகவோ அல்லது தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தவனாகவோ ஆகி விடுகிறான் ஆகவே இந்த ஆட்டத்தை நாம் ஆடவே வேண்டாம்!!” என்றான்.

ஷகுனி ஒரு சீறலுடன் மற்ற அரசர்களையும் அரசகுடும்பத்தினரையும் நோக்கித் திரும்பினான். ஓர் தேர்ந்த வில்லாளியைப் போல் அவன் மற்றவர்களைப் பார்த்து, “ உங்களுக்கெல்லாம் இந்த யுதிஷ்டிரன் ஏன் சூதாட்டத்தை அதுவும் அரசர்கள் ஆடும் இந்த ஆட்டத்தை ஆட மறுக்கிறான் என்பது எளிதாகப் புரிந்திருக்கும். அவன் வாழ்க்கையில் முதல் முதலாக ராஜசூய யாகத்தை நடத்தி அதன் மூலம் ஏராளமான செல்வங்களைச் சம்பாதித்து விட்டான். அதை விட்டுப் பிரிய அவனுக்கு மனமில்லை!” என்றான். அங்கே பரிகாசமும் ஏளனமும் நிறைந்த சிரிப்புக் கிளம்பியது. அதன் பின்னர் ஷகுனி யுதிஷ்டிரன் பக்கம் திரும்பி, “மூத்தவனே! உன் செல்வங்களை நீயே வைத்துக் கொள். இந்தச் சவாலை ஏற்று ஆட்டத்தை ஆட நீ மறுத்தால் விளையாட வேண்டாம்! விட்டு விடலாம்!” என்று தூண்டும் குரலில் கூறினான்.

யுதிஷ்டிரனைப் பார்த்து அவமதிப்பும் அலட்சியமும் துலங்கும்படி சிரிக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றிச் சிரித்தார்கள். ஆனால் யுதிஷ்டிரன் ஷகுனி சொன்ன மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளின் தாக்கத்தை அலட்சியம் செய்துவிட்டுச் சாதாரணமான குரலில், “அப்படி எல்லாம் இல்லை மாட்சிமை பொருந்திய ஷகுனி அவர்களே! நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். எனக்கு எதிலும் பயமோ அச்சமோ இல்லை. ஒன்றே ஒன்றைத் தவிர! அது தான் அதர்மப் பாதையில் செல்வது! அதர்மமாய் நடப்பது! அதோடு எனக்கு செல்வங்களைக் குறித்துக் கவலையும் இல்லை. இவை எல்லாம் சற்றும் முக்கியமில்லாத விஷயங்கள், நான் இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை! மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து அரசர் எனக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்தச் சூதாட்டத்தை நான் ஆடியே ஆகவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே நான் இந்த ஆட்டத்தை ஆடத் தான் போகிறேன். அல்லது நாங்கள் இருவருமாகச் சேர்ந்தே இந்த ஆட்டத்தை வேண்டாம் என்று சவாலைத் திரும்ப பெற்றாக வேண்டும்.” என்றான்.

துரியோதனன் சொன்னான்:”மூத்தவனே! நான் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கலாமா? நான் ஓர் வித்தியாசமான ஆட்டக்காரன். ஆகவே எனக்குப் பதிலாக ஷகுனி மாமாதான் உன்னுடன் ஆடப் போகிறார்.” என்றான். யுதிஷ்டிரன் ஷகுனியையும் அவன் ஆட்டத்தையும் குறித்து நன்கு அறிவான். ஷகுனி ஓர் மந்திரவாதியைப் போல் ஆடி துரியோதனன் பக்கம் வெற்றியைத் தேடித் தருவான். இவன் எனக்கு எதிராக விளையாடினான் எனில் நான் வெல்வது எப்படி? சற்றும் இயலாத ஒன்று! ஹூம்! இந்திரப் பிரஸ்தம் என் கைகளை விட்டுப் போகவேண்டுமெனில் அது விரைவில் நடந்து முடிந்து விடும்!” என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலே சொன்னான்:” துரியோதனா, சகோதரா! இன்று வரை இந்த ஆட்டம் உரியவரால் மட்டுமே விளையாடப் பட்டதாக அறிந்திருக்கிறேன். பிரதிநிதிகளால் மற்றவருக்காக ஆடப்பட்டதை அறியவில்லை. ஆகவே இந்த ஆட்டத்தை நீயே ஆட வேண்டும், பந்தயம் என்ன என்பதையும் பிணையத் தொகையையும் அறிவிக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.

ஷகுனி துரியோதனனின் உதவிக்கு வந்தான். “இதோ பார், யுதிஷ்டிரா! இந்த ஏற்பாட்டில் எந்தவிதமான தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று சொன்னவன் மீண்டும் ஓர் சீறலுடன், “மூத்தவனே, நீ தான் ஏதேதோ சாக்குப் போக்குகள் சொல்லித் தப்பிக்க நினைக்கிறாய்! இந்த ஆட்டத்தை ஆடாமல் தப்பித்து உன் செல்வங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறாய்! எப்படியேனும் போகட்டும்! உனக்கு இந்த ஆட்டத்தை ஆடுவதில் விருப்பமில்லை எனில் வெளிப்படையாகச் சொல்லி விடு! ஏன் ஏதேதோ கூறி தப்பப் பார்க்கிறாய்?” என்று கேட்டான். பின்னர் ஷகுனி கேலியாகச் சிரித்தான். துரியோதனனும் துஷ்சாசனும் கூட அதைக் கண்டு அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டு யுதிஷ்டிரனை அவமதித்தனர்

Friday, December 2, 2016

தெய்வமே துணை!

தர்பார் மண்டபத்துக்குள் அடி எடுத்து வைத்தான் யுதிஷ்டிரன். அந்த தர்பார் மண்டபத்தில் அவன் யுவராஜாவாக இருந்தபோது நிகழ்ந்த சில சந்தோஷமான நிகழ்வுகள், சம்பவங்கள் அவன் மனக்கண்கள் முன்னே தோன்றின. முதன் முதலில் அவனும் அவன் சகோதரர்களும் இந்த தர்பார் மண்டபத்தினுள் நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தான். பல வருடங்கள் முன்னர் அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது அவன் தாய் குந்தியுடன் இங்கே வந்ததையும் அவனையும் அவன் சகோதரர்களையும் பாண்டுவின் புத்திரர்களாக இந்தக் குருவம்சத்தினர் அங்கீகரித்த அந்த நாளும் அவன் நினைவில் வந்தது. அந்த நாட்கள்! எவ்வளவு சந்தோஷமானவை! மறக்கவும் முடியாத நாட்கள் அவை! அதன் பின்னரே அவன் வாலிபப்பருவம் எய்தியதும் இதே தர்பார் மண்டபத்தில் தான் யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்விக்கப்பட்டான் அதை ஒட்டி இந்த ஹஸ்தினாபுரத்தின் அநேக நிகழ்ச்சிகளிலும், கொண்டாட்டங்களிலும் ஓர் யுவராஜாவாக அவன் பங்கேற்றிருக்கிறான். அதன் பின்னர் தான் அவன் இந்தக் குரு வம்சத்தினரின் அரசனாக அறிவிப்புச் செய்யப்பட்டான். பின்னர் துரியோதனனால் அவனும் அவன் சகோதரர்களும் இந்த தர்பார் மண்டபத்திலிருந்து விடைபெற்று வெளியேற்றப்பட்டார்கள்.

இவை எல்லாம் நடைபெற்ற சமயங்களில் எல்லாம் இங்கே கூட்டம் கூட்டமாகப் பொதுமக்களும் குரு வம்சத்துத் தலைவர்களும் அமர்ந்திருந்து அவனுக்குத் தக்க மரியாதைகள் செய்து தங்கள் அங்கீகாரத்தைத் தெரிவித்துக் கொண்டனர். இங்கே தான் அவன் ஆட்சி அதிகாரம் குறித்த நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்ய நிர்வாகம் குறித்தும் அறிந்து கொண்டான். இமயமலையிலிருந்து பெருகிப் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கையைப் போல் தர்மத்தின் பாதையில் அவன் செல்லவேண்டியதைக் குறித்தும் தர்மத்தைக் குறித்தும் இங்கே தான் அறிந்து கொண்டான். தர்மத்தின் ஊற்று இந்த தர்பார் மண்டபம் என்பது அவன் முடிவு! சத்தியத்தின் பேரொளி இங்கே பிரகாசித்து வருவதாகவும் எண்ணினான். அப்படிப் பட்ட தர்பார் மண்டபம் இன்று? சதியாலோசனை நடக்கும் இடமாகவும் இழிந்த செயல்களைச் செய்யும் இடமாகவும் சூழ்ச்சிகளின் பிறப்பிடமாகவும் மாறி விட்டது! இதன் ஒளி மங்கி விட்டது! தன் புனிதத்தை இந்த தர்பார் மண்டபம் இழந்து விட்டது.

இங்கே இனி தொடர்ந்து எரியப் போகும் சூழ்ச்சியாகிய அக்னியில் அவன் ஓர் பலியாடாக மாறித் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளப் போகிறான். அது தான் கடவுளின் விருப்பம் போலும்! இதன் மூலம் அவன் தன்னை மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையே மனைவி, தாய், சகோதரர்கள் உள்பட பலி கொடுக்கப் போகிறான். ஆனால் உள்ளுக்குள் அவன் மனம் அவனையும் அவனுடன் கூடச் சேர்ந்து இந்த சூதாட்டம் என்னும் துர்பிரயோக யாகத்தில் பங்கெடுப்பதைப் பாராட்டிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவனும் அவன்  சகோதரர்களும் இதன் மூலம் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புவதை வெளிப்படையாகச் சொல்ல முடியும்! அவர்களுக்குத் தேவையானதும் அதுவே! ஓர் மாபெரும் யுத்தம் ஏற்படுவதைத் தடுத்தாக வேண்டும். அதற்குரிய விலை அவனும் அவன் சகோதரர்கள் மற்றும் குடும்பமும் தான் என்றால் அவன் அவற்றை பலி கொடுக்கவும் தயங்கப் போவதில்லை.

அந்த மாபெரும் சபாமண்டபத்தின் நுழைவாயிலுக்கு எதிரே ஓர் பக்கத்தில் ஓர் மேடையின் மேல் ஐந்து ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. மேடையின் நடுவே போடப்பட்டிருந்த இரு சிங்காதனங்களும் ஒன்று பிதாமஹர் பீஷ்மருக்கும் இன்னொன்று மன்னன் திருதராஷ்டிரனுக்கும் ஆகும். இது கூட அவன் அரசனாகப் பிரகடனம் செய்யப்பட்டபோது செய்த ஏற்பாடு தான். அவனை விட உயர்வான ஸ்தானத்தில் திருதராஷ்டிரனையும் பிதாமஹரையும் வைத்திருந்தான் யுதிஷ்டிரன். அந்த வரிசையிலேயே ஆசனங்களையும் போடச் செய்வான். இப்போதும் அது தொடர்கிறது போலும்! அவர்களுக்கு அடுத்தபடியாகக் கொஞ்சம்கீழ் வரிசையில் போடப்பட்டிருந்த ஆசனங்கள் அனைத்தும் துரியோதனனுக்கும் அவன் குழுவினருக்குமானது ஆகும். துரியோதனனுக்குச் சமமாகப் போடப்பட்டிருந்த அந்த இன்னொரு ஆசனம் ஒருவேளை யுதிஷ்டிரனுக்காக இருக்கும். அவன் தாய் மற்ற சகோதரர்களும் அந்த ஐந்து ஆசனங்களில் அமரலாம். அல்லது திரௌபதி அமரலாம்.

இவர்களுக்கு அருகே கொஞ்சம் சின்ன ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. இருபக்கங்களிலும் காணப்பட்ட அவை ஒன்று துரோணருக்கும் இன்னொன்று கிருபருக்கும் ஆகும். எல்லா ஆசனங்களின் பின்னாலும் ஓர் சாமரம் வீசும் பெண் சிலையைப் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தாள். இவர்களுக்கெல்லாம் சற்றுத் தள்ளிப் பொன்னால் வேயப்பட்ட தகட்டைப் பொருத்தி மான் தோலால் மூடப்பட்டிருந்த ஆசனங்கள் கௌரவர்களின் ராஜகுருவான ஆசாரியர் சோமதத்தருக்கும் இன்னொன்று பாண்டவர்களின் ராஜகுருவான தௌமியருக்கும் ஆகும். அந்த மேடையின் வலது ஓரத்தில் மற்ற ஸ்ரோத்திரியர்கள் அமர்ந்து கொண்டு மத, சாஸ்திர ரீதியான சடங்குகளைச் செய்ய ஏதுவாகத் தயார் நிலையில் இருப்பார்கள். இவர்களை அடுத்துக் குரு வம்சத்தின் மற்றத் தலைவர்களும் அரசகுடியில் பிறந்தவர்களும் அமர்ந்திருப்பார்கள்.

எல்லாவற்றிலிருந்தும் சற்றுத் தள்ளி ஓர் சின்ன மேடை அந்த தர்பார்மண்டபத்தின் நடுவில் காணப்பட்டது. அந்த மேடையில் தந்தத்தால் ஆன சொக்கட்டான் விளையாடும் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பகடை விளையாட்டின் பாய்ச்சிக்காய்கள் அங்கே விரிக்கப்பட்டிருந்த பட்டு விரிப்பில் வீசி விரிக்கப்படும் அந்தக் காய்கள் அடங்கிய ஓர் வெள்ளிச் சொம்பும் அங்கே இருந்தது. ஏற்பாடுகள் அனைத்தையும் பார்த்த யுதிஷ்டிரனுக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது. இந்தப் பாய்ச்சிக்காய்கள் தான் அவன் செய்யப் போகும் மாபெரும் தியாகத்துக்கு ஓர் அடையாளச் சின்னமாக விளங்கப் போகின்றன. இவற்றின் மூலம் தான் அவன் அமைதியையும் சமாதானத்தையும் பெறப் போகிறன். நடக்கப் போகிற நிகழ்ச்சியைக் குறித்த நினைவுகள் அவன் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவன் தங்களுடைய பரம்பரையையே அடகு வைத்துத் தன் சகோதரர்களைக் கொள்ளை அடிக்கப் போகிறான்.  தன்னுடன் அருகே வந்து கொண்டிருந்த  பீமனை ஓர் பார்வை பார்த்தான். அவனுடைய தைரியமான சகோதரன்; அவனுக்குப் பிரியமானவன். யுதிஷ்டிரனுக்கு ஓர் பிரச்னை என்றால் அடுத்த கணமே முன்னுக்கு நிற்பவன். இப்போதும் வந்துவிட்டான்.

ஆனால் பீமனின் முகம் செக்கச்செவேர் எனச் சிவந்து கண்கள் கோபத்தில் ரத்தம் போல் காணப்பட்டன. அடுத்து அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் ஆகிய மூவரும் தலை குனிந்த வண்ணமே வந்தனர். தரையிலிருந்து அவர்கள் கண்களை மேலெடுத்துப் பார்க்கவே இல்லை. அவனிடம் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் காரணத்தால் தங்கள் முடிவு, உள்ளுணர்வு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவனைச் சரண் அடைந்து விட்டார்கள். உண்மையில் அவர்கள் மிகவும் மனவேதனையில் இருந்தனர். அவன் விரும்புவதெல்லாம் தன் சகோதரர்களின் மகிழ்ச்சியைத் தான்! ஆனால் இப்போதோ! ஓர் மாபெரும் புயலில் சூறாவளியில் அவர்களுடைய மகிழ்ச்சியை எல்லாம் அடித்துக் கொண்டு போகும்படி யுதிஷ்டிரனே செய்யப் போகிறான். துரதிர்ஷ்டத்தில் அவர்களை மூழ்கடிக்கப் போகிறான்.

தன் தாய் குந்தியையும், மனைவி பாஞ்சாலியையும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் வைத்துக் கொள்வதே யுதிஷ்டிரனுக்குத் தலையாய கடமை! ஆனால்! அவனே அவர்களைத் துன்பத்திலும் துயரிலும் தாங்கொணா சோகத்திலும் ஆழ்த்திவிட்டான்.  ஆனாலும் இதனால் எல்லாம் அவனுக்கு சங்கடங்கள் ஏதும் இல்லை. எத்தனை எத்தனை ரிஷிகள்! முனிவர்கள்! உண்மையைக் கடைப்பிடிப்பதற்காகவும் கடைப்பிடித்ததற்காகவும் இறக்கும்படி நேரிட்டிருக்கிறது! ததீசி என்னும் புராண காலத்து முனிவர் ஒருவர் தன் முதுகெலும்பையே தேவர்களுக்காகத் தியாகம் செய்திருக்கிறார். அவர் அசுரர்களை வெல்ல வஜ்ராயுதம் தயாரிக்கத் தன் முதுகெலும்பைக் கொடுத்து உதவி இருக்கிறார். இதன் மூலம் தேவர்கள் அசுரர்களை வெல்ல உதவி இருக்கிறார். ஆகவே இந்த தவம் என்னும் நெருப்பில் வேகாமல் எதையும் சாதிக்க இயலாது! அவன் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டுமெனில் இந்தச் சின்னத் தியாகம் அவசியமானதே! இது அவன் நிலைநாட்டப் போகும் அமைதிக்கு முன்னர் ஓர் சின்ன விலையே ஆகும்.

அங்கே அமர்ந்திருந்த குருவம்சத்துத் தலைவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனைக் கண்டதுமே தங்கள் கைகளைக் கூப்பியவண்ணம் அவனை நமஸ்கரித்தார்கள். ஒரு சிலர் கீழே விழுந்தும் வணங்கினார்கள். அவர்களில் சிலர் முகங்களில் மகிழ்ச்சியே இல்லாததையும் யுதிஷ்டிரன் கவனித்தான். இன்னும் சிலர் துரியோதனனின் பக்கம் ஆதரவு தெரிவிப்பவர்கள் தங்கள் மகிழ்ச்சியை உள்ளூர வைத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் இருந்தார்கள். துரியோதனன் வெல்வதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை வென்றதும் அதன் செல்வங்களையும் மற்ற பொக்கிஷங்களையும் கொள்ளை அடித்து அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் நோக்கமெல்லாம் துரியோதனன் வெல்ல வேண்டும் என்பதில் தான்.

அங்கிருந்த சூழ்நிலையே இறுக்கமாகக் காணப்பட்டது. எங்கும் அமைதி இல்லை என்பது போல் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலை சிலருக்கு இருந்தாலும் பலரும் அங்கே நடக்கப் போவது நல்லதில்லை என்பதால் காணப்பட்ட மனக்கலக்கத்துடன் இருந்தனர். துரியோதனன், துஷ்சாசனன், ஷகுனி, கர்ணன், அஸ்வத்தாமா ஆகியோர் முன்னே வந்து கொண்டிருந்தனர். சகோதரர்கள் ஐவரையும் பார்த்ததும் வரவேற்கும் பாவனையில் முகமன் கூறினார்கள். துரியோதனன் யுதிஷ்டிரனின் கால்களில் விழுந்து வணங்க அவனைத் தூக்கி நிறுத்தினான் யுதிஷ்டிரன்: “சகோதரா, உன் விருப்பத்திற்கேற்றவண்ணமே எல்லாம் நடைபெறக் கடவுள் அருள் புரியட்டும்!” என்ற வண்ணம் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

Thursday, December 1, 2016

பீஷ்மரின் திகைப்பு!

“யுத்தம் மூளும் என்னும் எண்ணமே என்னை நடுங்க வைக்கிறது, தாத்தா!” என்றான் யுதிஷ்டிரன். “தாத்தா, உங்களுக்குத் தெரியும்! நீங்கள் நன்கறிவீர்கள்! அது ஒரு சிங்கத்தைப் போல் ஆட்களை விழுங்கும் காட்டு மிருகங்களைப் போல் உயிருடன் மனிதர்களை உண்ணும் விலங்குகளைப் போல் வந்து கொண்டிருக்கிறது. பற்பல வீரதீரங்களைச் செய்யும் கதாநாயகர்களின் எலும்புகளால் இந்த வளமான பூமியை நிரப்பிவிடும். உடைந்த ரதங்களும், இறந்த குதிரைகளும் யானைகளுமே எங்கும் காணக்கிடைக்கும். இவற்றை எல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. பெண்களும், குழந்தைகளும் ஆதரவற்று வீடின்றி இருக்க இடமின்றித் திரிவார்கள். பசுக்களும், மற்ற கால்நடைச்செல்வங்களும் அழிக்கப்படும்!”

“குழந்தாய்!, ஆசாரியர் சொல்வதற்கு முன்னரே, அவர் உதவி இன்றியே என்னால் பல்லாண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் போர் வருவதைக் கணிக்க முடிந்தது. குரு வம்சத்தினருக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியவில்லை எனில், அரச நீதியைச் சரிவர அவர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை எனில் வேறு எவரால் இங்கே ஒழுங்கான ஆட்சியை, நேர்மையான ஆட்சியைத் தர முடியும்?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லி நிறுத்தினார் பீஷ்மர். யுதிஷ்டிரன் முழு மனதோடு மனம் நிறைய போர் குறித்த உண்மையான வருத்தத்தோடு தான் இவற்றைச் சொல்கிறான் என்பதைக் கண்டு கொண்டார் பீஷ்மர். இதோ! ஓர் நேர்மையான ஆட்சியாளன்! தர்மத்தின் பாதையைத் தவற விடாதவன்! நேர்மைக்கும்,, நீதிக்கும் தர்மத்தின் வழியில் செல்வதற்கும் என்றே பிறந்தவன்!

“தாத்தா, தாத்தா! என்னை மன்னியுங்கள்! இந்த நேர்மை, நீதி இவற்றை எல்லாம் கடைப்பிடிப்பது என்பது ஓர் தவம் செய்வது போல் ஆகும். யக்ஞம் செய்வது போல் ஆகும். இதற்காக வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களைத் தாங்களே இந்த நேர்மை, நீதி என்னும் புனிதமான அக்னியில் ஆஹுதியாக இடத் தயார் நிலையில் இருக்க வேண்டும். பல இரவுகள் தூக்கமில்லாமல் கழித்த பின்னர் தான் எனக்குப் புரிந்தது தாத்தா! நான் எப்படியேனும் ஆசாரியரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்க வேண்டும். அதை நடக்க விடாமல் முறியடிக்க வேண்டும்! அதற்காக என் உயிரையே கொடுக்க வேண்டி இருந்தாலும் சரி! அவ்வளவு ஏன்? அதற்காக என் மனைவி திரௌபதி, என் அருமைச் சகோதரர்கள், என் தாய், எங்கள் குழந்தைகள் ஆகிய அனைவரின் உயிரையும் விலையாகக் கொடுக்க நேர்ந்தாலும் கொடுத்துவிடத் தயார்!”

“குழந்தாய், உன்னால் போரைச் சகிக்க முடியாது எனில் பின்னர் இங்கே ஏன் வந்திருக்கிறாய்? வருவதற்கு மறுத்திருக்கலாமே!”

“தாத்தா, உங்களுக்குத் தெரியாதா? நான் இங்கே வருவதற்கு மறுத்தால் துரியோதனனின் சவாலை ஏற்க மறுத்தால், பின்னர் அதற்காகவே துரியோதனன் போர் தொடுப்பான்!”

“ஆம், அதுவும் உண்மைதான். அதுவும் எனக்குத் தெரியும்!” என்றார் பீஷ்மர். “அவன் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டான் குழந்தாய்! உன்னிடமிருந்து அனைத்தையும் பிடுங்கிக் கொண்டால் கூட அவன் மனம் திருப்தி அடையுமா தெரியவில்லை! ஆனால் அவன் அவ்வாறு உன்னிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கி விட்டான் எனில்? என்ன செய்யப் போகிறாய்? அதை எவ்வாறு தடுப்பாய்?”

யுதிஷ்டிரன் பணிவுடனும், விநயத்துடனும் தலையைக் குனிந்து கொண்டான். “தாத்தா, அது இறைவன் விருப்பம். இறைவன் விருப்பம் இந்திரப் பிரஸ்தத்தை நாங்கள் ஆளக் கூடாது, துரியோதனன் தான் ஆளவேண்டும் என்றிருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் அதை எப்படி எதிர்ப்போம்? துரியோதனன் என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும்படி விட மாட்டேன். நானே கொடுத்துவிடுவேன். ஒருவேளை அதன் பிறகாவது அவன் மனம் அமைதி அடையலாம். எங்களிடம் அவன் கொண்டிருக்கும் வஞ்சம் மறையலாம். அவனுடைய விஷமத் தன்மை குறையலாம்!”

“என்ன! இந்திரப் பிரஸ்தத்தைக் கொடுத்துவிடுவாயா?” பீஷ்மர் குரலில் ஆச்சரியம் மிகுந்தது.

“ஆம், தாத்தா, நான் அதற்கும் தயார்!”

“ஆஹா, மகனே, உன்னுடைய இந்த விசித்திரமான முடிவுக்கு உன் தாய், சகோதரர்கள் மற்றும் உன் மனைவி பாஞ்சால நாட்டு இளவரசி ஆகியோர் என்ன சொன்னார்கள்? அல்லது சொல்லப் போகிறார்கள்?”

“தாத்தா, என்னுடைய இந்த முடிவு அவர்களுக்கு இன்னமும் தெரியாது! நான் சொல்லவில்லை. சித்தப்பா விதுரர் இந்தச் சவாலை ஒரு அழைப்பாக எங்களிடம் வந்து சொல்லியபோது, நான் என் சகோதரர்களிடம் அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டிருப்பதாகக் கூறி இருந்த உறுதிமொழியிலிருந்து அவர்களை விடுவித்து விட்டேன். என்னை என்னுடைய சொந்த முடிவின் படி நடப்பதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் தான் கேட்கவில்லை; மீண்டும் அவர்கள் அனைவரும் உறுதிமொழி கூறினார்கள்; எனக்கு ஆதரவாகவே செயல்படப் போவதாகச் சொல்லிவிட்டார்கள். இந்த விளையாட்டின் மூலம்……. இல்லை……இல்லை…… சூதாட்டத்தின் மூலம் என்ன நடந்தாலும், நான் எப்படி நடந்து கொண்டாலும், என்னைப் பிரிவதில்லை என்றும் சபதம் செய்து விட்டார்கள்!” என்றான் யுதிஷ்டிரன்.

“குழந்தாய்! உன் கழுத்தில் கத்தியை வைக்க ஏதுவாக நீ அவர்களிடம் உன் கழுத்தைக் காட்டிவிட்டாய்! நீயே விரும்பி ஏற்றுக் கொள்கிறாய்! அது உனக்குப் புரிகிறதா இல்லையா?”

“ஆம், தாத்தா, அதனால் போர் நின்றால் சரி! யுத்தமே வராமல் இருந்தால் சரி!” என்றான் யுதிஷ்டிரன்.

பீஷ்மர் மேலும் கேட்டார்;” குழந்தாய், உன்னால் அதைத் தடுக்க முடியும் என்றா நினைக்கிறாய்? முடியாது, அப்பனே, முடியாது!” என்றவர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் தொடர்ந்து விதுரரிடம் திரும்பி, “விதுரா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“பிரபுவே, சகோதரர்கள் ஐவரிடமும் நான் ஹஸ்தினாபுரம் வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். அழைப்பை ஏற்க வேண்டாம் என்றே கூறினான். ஆனால் யுதிஷ்டிரன் ஓர் வீரனைப் போல் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டான். அவன் மனோபலம் என்னை வியக்க வைத்தது. ஆகவே அவனை இந்த விஷயத்தில் திசை திருப்ப வேண்டாம் என்று இருந்துவிட்டேன். அவன் சமாதானத்திற்காக எரியும் நெருப்பில் குதிக்க நினைக்கிறான். அதற்குத் தயாராக வந்துவிட்டான். அவன் தோல்வியைக் கூட அடையலாம். ஆனால் அவன் செய்யப் போகும் இந்த முயற்சி தகுதியானதே! நேர்மையான ஒன்றே!” என்றார் விதுரர்.

“தாத்தா, என்னை மன்னியுங்கள்!” என்று மீண்டும் சொன்னான் யுதிஷ்டிரன். கைகளைக் கூப்பிய வண்ணம், “என் தந்தையை விட உங்களைத் தான் அதிகம் அறிவேன். உங்களை மிகவும் மதித்துப் போற்றுகிறேன். இந்த பூவுலகில் நீங்கள் வாழும் கடவுள் என உங்களை வணங்கி வருகிறேன். ஆகவே உங்களிடம் வந்தேன் தாத்தா! நாம் அனைவருமே தினம் தினம் சாந்தி, சாந்தி, சாந்தி எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் பாருங்கள், யுத்தம் நடந்து அதில் சாவதற்குத் தயாராக இருப்பவர்களால் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக வேண்டி உயிர்விடத் தயாராக இருக்க முடிவதில்லை. நான் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக என் உயிரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன் தாத்தா! என்னை மக்கள் அனைவரும் தர்மத்தின் ராஜா என்றும் தர்ம ராஜா என்றும் அழைக்கிறார்கள் அல்லவா? அது உண்மையிலேயே இருக்கட்டும் தாத்தா! வெறும் பெயர் மட்டும் எனக்கு வேண்டாம். உண்மையிலேயே தர்மத்தின் பாதுகாவலனாக தர்ம ராஜாவாக அதை ரக்ஷிக்கும் அரசனாக இருக்க விரும்புகிறேன்.”

பின்னர் சற்று நேரம் மௌனத்தில் கழிந்தது. யுதிஷ்டிரன் தொடர்ந்தான். “ சரி தாத்தா, உங்கள் பொன்னான நேரத்தை நான் ஏற்கெனவே வீணாக்கி விட்டேன். தயவு செய்து எனக்கு இந்த ஓர் உதவியைச் செய்யுங்கள். சூதாட்டத்தின் போது என்ன நடந்தாலும் சரி, அமைதியாக இருங்கள். நீங்கள் தலையிடவே வேண்டாம். ஆட்டம் தந்திரமாகவும் மோசடியாகவும் நடந்தாலும் சரி!”

“இது ஒரு மோசமான கேலிக்குரிய சூழ்நிலை. நம் அனைவரின் கௌரவமே பாழடையப் போகிறது. யுதிஷ்டிரா, நீயோ அல்லது துரியோதனனோ எல்லாவற்றிலும் ஒத்துப் போவதில்லை! இன்று வரை அப்படித் தான்! ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துப் போயிருக்கிறீர்கள்! அது தான் நான் சூதாட்டத்தில் தலையிடக் கூடாது என்பது! இந்த விஷயத்தில் இருவரும் ஒரே மனதுடன் இருக்கிறீர்கள். ஒரு பக்கம் சூழ்ச்சி, நயவஞ்சகம், இன்னொரு பக்கம் நேர்மை, நீதி! போகட்டும்! நல்லது யுதிஷ்டிரா, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். மிக அதிகமாக நேசிக்கிறேன். நீ தர்மத்தின் பாதுகாவலன் மட்டுமல்ல, தர்மத்தின் அடையாளச் சின்னம், வாழும் தர்ம ராஜா! நீ கடைசிவரை அப்படித் தான் இருப்பாய்! மாற மாட்டாய்! உன்னால் மாற முடியாது. என்றும் எப்போதும் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக வாழ்வாய்! சமாதானத்திற்காகவே யுத்தம் செய்வாய்! போகட்டும்! இந்தச் சூதாட்டத்தில் அது சூழ்ச்சியானது என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தும் நான் தலையிடப் போவதில்லை! என்ன நடந்தாலும்! சரிதானே!” என்றார் பீஷ்மர்.  அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியேறியதும் பீஷ்மர் தனக்குள்ளே, “ஓஓ, கடவுளே, கடவுளே, இன்னும் எத்தனை நாட்கள் நான் இந்தக் குரு வம்சத்தினரின் பாரத்தைத் தாங்கியாக வேண்டுமோ, தெரியவில்லையே!” என்றார்.

Tuesday, November 29, 2016

பின் வருந்துயர்க்கே சிந்தனை உழல்வரோ!

பீஷ்மர் தன் ஊஞ்சல் படுக்கையில் படுத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தார்.. உள்ளூரத் தவித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவனுக்கு அப்போதைய சூழ்நிலை நன்றாகவே புரிந்திருந்தது. குரு வம்சத்தினரின் முக்கியஸ்தர்களில் பலரும் தலைவர்கள் பலரும் யுதிஷ்டிரனோடு இருக்கவே விரும்பி இந்திரப் பிரஸ்தம் வந்து விட்டனர். அங்கே தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக் கொண்டும் விட்டனர். இங்கே இருந்தவர்கள் அனைவரும் துரியோதனனுக்கு ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டவர்கள்; அவனிடம் விசுவாசம் காட்டுபவர்கள்; அவன் ஆணையை மீறாதவர்கள். ஹஸ்தினாபுரத்திலேயே தங்கள் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதால் துரியோதனனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது தவிர வேறு வழி இல்லை அவர்களுக்கு. துரியோதனனின் நண்பர்கள் அனைவரும் பீமன் மட்டும் சூதாட்டத்தின் நடுவில் தலையிட்டான் ஆனால் அவனை எதிர்க்கவும், அவனிடமும் சவால் விடவும் அறை கூவல் விடுக்கவும் தயங்கவே மாட்டார்கள். அவர்கள் அதைத் தான் முடிவும் செய்திருக்கிறார்கள். அதை பீஷ்மர் நன்கறிவார். அவரையும் அறியாமல் ஓர் புன்னகை பிறந்தது. “ம்ம்ம்ம், என்னைச் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல! என்ன செய்யப் போகிறார்கள், பார்க்கலாம்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

அவர் அப்போது தான் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கத் தொடங்கினார். அப்போது பார்த்து விதுரர் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டுக் கொண்டு நுழைந்து விட்டார். விதுரரை அந்த நேரத்தில் அங்கே கண்ட பீஷ்மர் ஆச்சரியம் அடைந்தார். விதுரரே நேரில் வர வேண்டுமானால் விஷயம் மிகவும் முக்கியம். இந்த நேரத்தில் விதுரர் வரக் காரணம் இருந்தால் ஒழிய அவர் வர மாட்டாரே! பீஷ்மர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார். “உள்ளே வா! விதுரா!” என்று அவரை உள்ளே அழைத்தார். விதுரர் தனியாக வரவில்லை. அவருடன் யாரோ ஓர் மனிதன் தன் முகத்தைத் தன் மேல் துண்டால் மறைத்துக் கொண்டு வந்திருந்தான். “யார் இவன்?” என்று பீஷ்மர் கேட்டார். விதுரருடன் வந்தவன் தன்னுடைய முகத்தை மூடியிருந்த துணியை எடுத்தான். பின்னர் கீழே குனிந்து பிதாமஹரை நமஸ்கரித்தான்.

“யுதிஷ்டிரா, குழந்தாய்! நீயா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பீஷ்மர். யுதிஷ்டிரன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் எழுந்து நின்றான். “நீ, இந்த நேரத்தில் இங்கே எதற்கு வந்தாய்? என்ன இது விதுரா! என்ன விஷயம்?” என்று விதுரரிடமும் கேட்டார் பீஷ்மர். “மிக மிக முக்கியமானதொரு விஷயம், பிதாமஹரே! “ என்றார் விதுரர். யுதிஷ்டிரனிடம் திரும்பினார் விதுரர். “யுதிஷ்டிரா, நீ இப்போது தாத்தா அவர்களிடம் என்ன சொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயோ அதைச் சொல்லலாம்.” என்று கூறினார். “நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள், உதவி கேட்கப் போகிறேன்.” என்றான் யுதிஷ்டிரன். “அது இப்போது ஆடப் போகும் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டது.” என்றும் கூறினான்.

“குழந்தாய்! நீ ஏன் இந்தச் சவாலுக்கு ஒத்துக் கொண்டாய்? முட்டாளா நீ?” என்று கோபத்துடன் கேட்டார் பீஷ்மர். பின்னர் அதே கடுமையான குரலில், “ஹஸ்தினாபுரத்துக்கே வரமாட்டோம் என்று மறுப்பதற்கென்ன? நீ மட்டும் வருவதற்கு மறுத்திருந்தால், வராமல் இருந்திருந்தால், துரியோதனன் அதனால் எல்லாம் உங்களுடன் போர் தொடுக்க ஆயத்தம் ஆகி இருக்கப் போவதில்லை. அவனுக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் இல்லை. அப்படியே அவன் போரை அறிவித்திருந்தாலும், அதில் அவன் வெல்லப்போவதும் இல்லை!” என்றார் பீஷ்மர்.

“தாத்தா, நான் பேசலாமா?” யுதிஷ்டிரன் கேட்டான்.

“சொல், குழந்தாய், சொல். உன் மனதில் உள்ளதைச் சொல்! ஆனால் உன்னுடைய பலஹீனத்தினால் நீ நம் அனைவரையும் ஓர் பெரிய ஆபத்தில் மாட்டி விட்டாய்!” என்றார் பீஷ்மர். யுதிஷ்டிரன் கூப்பிய கரங்களுடன், “தாத்தா, நான் ஓர் முட்டாளாக இருக்கலாம். ஆனால் இப்போது நாங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். உங்களால் தான் எங்களைக் காப்பாற்ற முடியும். அதனால் தான் உங்கள் உதவியை வேண்டி இங்கே இந்த நேரத்தில் வந்திருக்கிறேன், தாத்தா!” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன வேண்டும், உனக்கு?” பீஷ்மர் கேட்டார்.

“என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் சூதாட்டத்தின் போது நடுவில் என்ன நடந்தாலும் மதிப்புக்குரிய தாத்தா அவர்கள் குறுக்கிட வேண்டாம் என்பதே ஆகும்! அந்த ஆட்டம் மிக மோசமாக விதிமுறைகளை மீறி விளையாடப் பட்டாலும் நீங்கள் அதைக் குறித்து எதுவும் சொல்ல வேண்டாம்!” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன?” தன் படுக்கையில் எழுந்து அமர்ந்து விட்டார் பீஷ்மர். தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு தான் காண்பது கனவல்லவே என உறுதி செய்து கொண்டார். பின்னர் வறண்ட சிரிப்புடன், “ நான் விழித்திருக்கிறேனா? தூங்குகிறேனா? தூக்கத்தில் கனவுகள் காண்கிறேனா?” என்று கேட்டுக் கொண்டார். “இல்லை தாத்தா, இல்லை! தாங்கள் தூங்கவெல்லாம் இல்லை! நினைவில் தான் இருக்கிறீர்கள். தூங்கவும் இல்லை. ஷகுனி எவ்வளவு மோசமாகச் சூழ்ச்சிகள் எல்லாம் செய்து இந்த விளையாட்டை ஆடினாலும் நீங்கள் நடுவே குறுக்கிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவே நான் இங்கே வந்தேன்.” என்று மீண்டும் சொன்னான் யுதிஷ்டிரன். அதைக் கேட்ட பீஷ்மர் கண்கள் வியப்பில் விரிந்தன. விரிந்த கண்களுடன் அவர், “நீ ஏன் என் தலையீடு இருக்கக் கூடாது என்று விரும்புகிறாய்? என்ன காரணம்?” என்று கேட்டார்.

யுதிஷ்டிரன் சற்று நேரம் மௌனம் காத்தான். பின்னர் மெல்லிய குரலில், “மதிப்புக்குரிய தாத்தா அவர்களே! இந்திரப் பிரஸ்தத்தை விட்டு நாங்கள் கிளம்புவதற்குச் சில நாட்கள் முன்னர் ஆசாரியர் வேத வியாசர் ஓர் தீர்க்க தரிசனத்தைக் கண்டறிந்து என்னிடம் சொன்னார். அதன்படி ஓர் மாபெரும் யுத்தம் நடக்கப் போகிறது என்றும் அந்த யுத்தத்தில் க்ஷத்திரியர்கள் பலரும் உயிரிழப்பார்கள் என்றும் அந்த யுத்தத்தின் மையக்காரணமாக நான் இருப்பேன் என்றும் சொன்னார்.” என்றான் யுதிஷ்டிரன். குரு வம்சத்தின் இரு பெரிய கிளைகளான நீங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் இன்னொருவரை அழிக்க முனைந்தால் அது மாபெரும் யுத்தத்தில் தான் கொண்டு விடும்!” என்றார் பீஷ்மர்.

Monday, November 28, 2016

திருதராஷ்டிரன் வேண்டுகோள்!

பிதாமஹர் பீஷ்மர் திருதராஷ்டிரனைப் பரிதாபமாகப் பார்த்தார். அவன் மேலும் அவருக்குப் பச்சாத்தாபம் பொங்கியது. சின்னக் குழந்தையின் பிதற்றலைப் போன்ற அவன் பேச்சு, நடுங்கும் உதடுகள், உதறும் கைகள் எல்லாமும் சேர்ந்து அவனே ஓர் பரிதாபத்துக்குரிய தோற்றத்தில் காணப்பட்டான். வேறு வழியில்லை, தான் கையாலாகாதவன் என்னும்படி தோற்றமளித்தான். தன் படுக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் பீஷ்மர். “மகனே, நீ கேட்கும் இந்த வேண்டுகோளுக்கு நான் செவி சாய்க்கவில்லை எனில், துரியோதனனும் அவன் நண்பர்களும் என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறார்கள்? ஏன் என்னிடம் மறைக்கிறாய்? அவர்கள் எடுத்திருக்கும் எல்லா முடிவுகளையும் நீ என்னிடம் ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய்?” என்று கேட்டார் பீஷ்மர்.

“அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது எனக்கே புரியவில்லை!” என்றான் திருதராஷ்டிரன். “ஆனால் எனக்குத் தெரிந்த உளவுக்காரர்கள் மூலம் அவன் ஏதோ நடவடிக்கை எடுப்பான் என்ற வரையில் செய்தி கிடைத்திருக்கிறது!”அவனால் மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. பீஷ்மரிடம் மறைக்கவும் அவனால் முடியவில்லை. சொல்லவும் முடியவில்லை! தன் குருட்டுக் கண்களை சஞ்சயன் நின்றிருக்கும் இடம் நோக்கி உத்தேசமாகத் திருப்பினான். “சஞ்சயா! நீயே சொல்! மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பிதாமஹரிடம் அவர்கள் எடுத்திருக்கும் முடிவு பற்றி நீ அறிந்திருப்பதைச் சொல்!” என்று சஞ்சயனை இதில் நுழைத்து விட்டான்.

அதற்கு சஞ்சயன், பீஷ்மரைப் பார்த்து, “பிரபுவே, என்னை மன்னியுங்கள்! நான் உண்மையைத் தான் சொல்லப் போகிறேன். ஆனால் அதையும் என்னைக் கேட்டுக் கொண்டதாலேயே சொல்கிறேன்.” என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சொன்னான். “ஓ, சரி, சரி, சொல், உனக்குத் தெரிந்ததைச் சொல்!” என்று ஆணையிட்டார் பீஷ்மப் பிதாமஹர். மேலும் தொடர்ந்து, “நீ சொல்வதெல்லாம் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடிப்பது எனக்குக் கஷ்டம் இல்லை! எளிதாகக் கண்டு பிடித்துவிடுவேன்.” என்றார். சஞ்சயன், “பாண்டவர்களை அடியோடு அழிக்க அவர்கள் எந்த வழிக்கும் செல்வதாக முடிவெடுத்துவிட்டார்கள். அவர்கள் ஒரே நோக்கம், பாண்டவர்கள் தலைதூக்க முடியாமல் அடியோடு அழிவது தான்!” என்றான். “ஹூம், நான் இதையா கேட்டேன்? ஏன் என் கேள்வியைத் தவிர்க்கிறாய்? நான் இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு அவர்கள் என்ன சொல்கின்றனர்? என் தலையீடு அவர்களுக்குச் சம்மதமா?” என்று நேரிடையாகக் கேட்டார் பீஷ்மர்.

சஞ்சயன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் வணக்கத்துடன், “அதை நான் சொல்ல முடியாது பிரபுவே! மதிப்புக்குரிய மன்னர் சொல்வார்!” என்றான். பீஷ்மர் தன் புருவங்களை நெரித்துக் கொண்டார். “ஓ, அதனால் என்ன பரவாயில்லை. எனக்கு யார் சொன்னாலும் அதைக் குறித்துக் கவலை இல்லை! எனக்குத் தெரிய வேண்டியது அவர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பது ஒன்றே! அதை நீ சொன்னாலும் சரி, திருதராஷ்டிரன் சொன்னாலும் சரி!” என்றார். திருதராஷ்டிரன் அதற்குள்ளாக, “பிதாமஹரே, அந்த இளைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படுகின்றனர்.வேண்டாததை எல்லாம் பேசுகின்றனர்.” என்றான். அவன் கைகள் அதீத உணர்ச்சியில் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் பேச்சும் தட்டுத் தடுமாறிக் கொண்டு வந்தது. மேலும் தொடர்ந்தான் திருதராஷ்டிரன்.

“அவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. மோசமான மூளைக் கோளாறு. அதில் அவர்கள் பேசுவது ஒன்றும் சரியல்ல. உங்கள் அதிகாரத்தையே அவர்கள் மீறப் போகின்றனராம். உங்களை எதிர்த்து அறைகூவல் விடப்போகின்றனராம். இந்த முட்டாள்தனமான முடிவை உணர்ச்சி வசப்பட்டு எடுத்திருக்கின்றனர்.” என்றான் திருதராஷ்டிரன். “ம்ம், நீ மேலே ஒன்றும் சொல்ல வேண்டாம்! நீ விரும்பினால் இந்தக் கதையின் அடுத்த பகுதியை நானே சொல்லி முடிக்கிறேன்.” என்று சீறினார் பீஷ்மர். “அவர்கள் எவ்வளவு மோசமான வழியிலும் செல்ல ஆயத்தமாகி விட்டனர்! அது தானே! இன்னும் சொல்லப் போனால் என்னுடைய கழுத்தை அறுக்கக் கூடத் தயங்க மாட்டார்கள்!” என்று சொல்லியவண்ணம் அலட்சியத்துடனும், கோபத்துடனும் சிரித்தார் பீஷ்மர். பின்னர் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்.

அதன் பின்னர் மேலும் கேட்டார்; “திருதராஷ்டிரா, இந்தக் குரு வம்சத்தினரின் சபை அவ்வளவு மோசமாகி விட்டதா? அதுவும் உன் குமாரன் கைகளுக்கு வந்த பின்னர்? அவன் நண்பர்களுக்கும் அவ்வளவு தைரியம் வந்து விட்டதா? இந்தக் குரு வம்சத்தின் தலைவனையே அதிகாரம் செய்யும் அளவுக்கு அவர்கள் அனைவருக்கும் நெஞ்சில் தைரியம் வந்து விட்டதா? இது சரியல்ல, திருதராஷ்டிரா, சிறிதும் சரியல்ல! உன்னுடைய அன்பினால் அதிலும் நீ குருட்டுத்தனமான பாசம் உன் மகன் மீது வைத்திருக்கிறாய்! அதனால் அந்தப் பாசத்தால், இந்த மகத்தான ராஜசபையின் கண்ணியம், மகத்துவம் எல்லாமும் கெட்டு விட்டது!” என்று துக்கத்துடன் சொன்னார்.

திருதாராஷ்டிரன் நீண்ட பெருமூச்சு விட்டான். “நான் பலஹீனமானவன் தான். உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பலவீனமானவன். என் மகனின் துன்பத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அதை என்னால் சகிக்க முடியவில்லை. இரவுகளில் தூங்க முடியவில்லை. பெரும் துன்பத்தில் ஆழ்கிறேன்.” என்றவனுக்கு மேலே தொடர முடியவில்லை. “திருதராஷ்டிரா, நீ வருத்தத்துடன் இருப்பதை என்னால் உணர முடிகிறது. உன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்பதையும் காண்கிறேன். ஆனால் துரியோதனனுக்கு எதனால் மனக்குறைகள்? என்ன குறை அவனுக்கு? இந்த ஹஸ்தினாபுரம் தான் வேண்டும் என்றான். இப்போது ஹஸ்தினாபுரத்தின் பூரண அதிகாரமும் அவன் கைகளில். இங்கே அவன் தான் தலைவன். அவனுடைய யோசனையின் பேரில் பாண்டவர்களுக்கு உரிமையான இந்த ராஜ்யத்தை துரியோதனனுக்குக் கொடுத்துவிட்டு அவர்களை இங்கிருந்து துரத்தி விட்டாயிற்று. அதுவும் காட்டுக்குள்ளாக. பயங்கரமான காட்டைக் கொடுத்து அனுப்பி இருக்கிறோம். அந்தக் காட்டையே அழித்து அவர்கள் நகரமாக்கி அதைக் காண்போர் கவரும் வண்ணம் சொர்க்க பூமியாக மாற்றி இருக்கிறார்கள் எனில் அது அவர்கள் சொந்த முயற்சிகளின் மூலம். நாம் யாரும் அவர்களுக்கு உதவவில்லை. இப்போது துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை அவர்களிடமிருந்து பிடுங்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறான். இது நியாயமே இல்லை!” என்றார்.

தன் கைகளை விரித்தான் திருதராஷ்டிரன்.”எதுவும் என் கைகளில் இல்லை, பிதாமஹர் அவர்களே! நான் என்ன செய்ய முடியும்?” என்று வேறு வழியில்லாமல் சக்தியற்றுக் கேட்டான். “துரியோதனன் என் புத்திமதிகளைக் கேட்க மாட்டான். அப்படியே அவன் கேட்க நேர்ந்தாலும் அவன் நண்பர்கள் அதைக் கேட்டு அதன்படி நடக்க அவனை அனுமதிக்க மாட்டார்கள்.” அப்போது பீஷ்மர், “சரி, இப்போதே வெகு நேரம் ஆகி விட்டது. இன்னும் ஏதேனும் என்னிடம் சொல்ல வேண்டியது இருக்கிறதா?” என்று கேட்டார். “இவ்வளவு தான்…..” என்று ஆரம்பித்தான் திருதராஷ்டிரன். மீண்டும் அலட்சியமாகச் சிரித்தார் பீஷ்மர். “மகனே, என்ன ஆயிற்று உனக்கு? துரியோதனனின் மிரட்டலை என்னிடம் வந்து சமர்ப்பிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? அவ்வளவு கோழையாகி விட்டாயா நீ?” என்று கேட்டார்.

“இல்லை, தாத்தா அவர்களே! இல்லை! நானோ துரியோதனனோ உங்களை மிரட்டவே இல்லை. பயமுறுத்தவெல்லாம் இல்லை. துரியோதனன் தற்கொலை செய்து கொண்டு விடுவானோ என்னும் பயம் தான் எனக்குள்!” என்றான் திருதராஷ்டிரன். “இதை மிரட்டல் இல்லை எனில் என்ன சொல்வது? என்னை அச்சுறுத்தத்தானே சொல்லி இருக்கிறான்! நீயும் என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல்லவா? எனக்கு மிகவும் வயதாகிவிட்டது! இதில் எல்லாம் என்னால் உறுதியுடன் இருக்க முடியாது! என்றே நினைக்கிறாய்! ஆகவே என்னை ஒதுங்கி இருக்கும்படிக் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறாய்! இல்லையா!” என்றார் பீஷ்மர். தன் நடுங்கும் கைகளைக் கூப்பியவண்ணம் திருதராஷ்டிரன், “அப்படி எல்லாம் இல்லை, நான் அப்படியெல்லாம் நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை!” என்றான். “என்னை மன்னித்து விடுங்கள்!” என்றும் கேட்டுக் கொண்டான்.

‘நான் மீண்டும் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், தாத்தா அவர்களே! இந்த முட்டாள் பையன்கள் முட்டாள் தனமான ஓர் முடிவையும் நடவடிக்கையும் எடுக்கும்படியான சந்தர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுத்து விடாதீர்கள்!” என்று கேட்டுக் கொண்டான் திருதராஷ்டிரன்.

“எனக்குப் புரிகிறது திருதராஷ்டிரா, நன்கு புரிகிறது. நேர்மையாக நடக்கக் கூடாது என்று சொல்கிறாய்! நேர்மையான வழியில் செல்லக் கூடாது என்கிறாய்! நேர்மையைக் கடைப்பிடிக்கும் மனிதர்களை அநீதியாக நடந்து கொள்ளும் மனிதர்களின் ஆவேசக் கோபத்திலிருந்தும் அது சம்பந்தமான கொடூரமான தாக்குதல்களிலிருந்தும் காப்பாற்றக் கூடாது என்கிறாய்! அல்லவா? இது தானே உன் நோக்கம்? ஒன்று நினைவில் வைத்துக் கொள் திருதராஷ்டிரா! நீ மறந்துவிட்டாய் போலும்! இந்த பீஷ்மன் அச்சம் என்பதையே அறியாதவன். அச்சம் என்றால் என்னவென்று இவனுக்குத் தெரியாது!”

சற்று நிறுத்தியவர் பின்னர் சட்டென வெடுக்கென்று, “சரி, என் ஆசிகள் உனக்கு திருதராஷ்டிரா, இப்போது நீ இங்கிருந்து செல்லலாம்!” என்று உத்தரவு கொடுத்தார்.

Sunday, November 27, 2016

ஐய, இதனைத் தடுத்தல் அரிதோ!

பீஷ்ம பிதாமஹரின் அறை! நான்கு எண்ணெய் விளக்குகள் ஒளி வீசிப் பிரகாசிக்க பீஷ்மர் தன் படுக்கையில் படுத்திருந்தார். ஒரு மல்லன் அவர் கால்களுக்கு எண்ணெய் தடவித் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான். அவர் பல ஆண்டுகளுக்கும் மேலாக குரு வம்சத்தின் அஸ்திவாரமாக, அசையாத் தூணாக நிலையாக நின்று கொண்டு அரச பரம்பரையைத் தாங்கி வருகிறார். அவர் அறியாமல் ஒரு துரும்பு கூட இது வரை அசைந்ததில்லை. எந்தச் சட்டமும் போடப்பட்டதில்லை. ஆனால் இப்போது? பீஷ்மரின் மனதில் சிறு சலனம். ஒரு பெருமூச்சு விட்டார். இனியும் எத்தனை நாட்களுக்கு இப்படி நடக்கும்? சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்தார். இனி அவர் இந்தக் குரு வம்சத்தினருக்குத் தேவை இல்லை. அவருடைய முக்கியத்துவம் குறைந்து வருகிறது. மனதில் வியாகூலம் சூழ்ந்து கொள்ள ஹஸ்தினாபுரத்தை இப்போது தீவிரமாகப் பற்றி இருக்கும் நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மனக்கண்களில் கொண்டு வந்து ஆராய்ந்தார்.

துரியோதனன் தன் குருட்டுத் தந்தையிடம் தான் தற்கொலை செய்து கொள்வதாகப் பயமுறுத்தி மிரட்டித் தான் பாண்டவர்களைச் சூதாட்டம் ஆடுவதற்காக அழைப்பு அனுப்ப வைத்தான். தன் மகன் மேல் உள்ள பாசத்தின் காரணமாக குருட்டு அரசனும் ஒத்துக் கொண்டு விட்டான். உண்மையில் அது அரச குலத்தினருக்கு ஒரு சவால் தான். இப்படி ஒரு சவாலை வெளிப்படையாகக் கொடுத்த பின்னர் எந்த அரச குலத்தினரும், உண்மையான க்ஷத்திரியனும் இதை மறுக்க நினைக்க மாட்டான். க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பதாக வாக்குக் கொடுத்தவன் எவனும் இதை மறுக்க முடியாது. இது ஒரு கௌரவப் பிரச்னை! இதை மட்டும் யுதிஷ்டிரன் மறுத்துவிட்டால் பின்னர் சட்டரீதியான போர் தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமையும். ஆகவே போரைத் தடுக்கவே யுதிஷ்டிரன் இதற்கு ஒத்துக் கொண்டு வந்திருக்கிறான்.
பீஷ்மரும் திருதராஷ்டிரன் மனதை மாற்றுவதற்காக விதுரர் மூலம் பலவிதமாக முயற்சித்துத் தான் பார்த்தார். யுதிஷ்டிரனுக்கு அந்த அழைப்பை அனுப்ப வேண்டாம் என்று விதுரரும் வாதாடிப் பார்த்து விட்டார். ஆனால் அந்தக் கோழை மன்னன் திருதராஷ்டிரன் தன் குருட்டுக் கண்களில் இருந்து கண்ணீர் வர பீஷ்மரிடமே கெஞ்சினான். தான் போட்ட கட்டளைக்கு மேல் ஓர் கட்டளை பிறப்பித்துத் தன்னுடைய கட்டளையைச் செல்லாததாக ஆக்கவேண்டாம் என்று வேண்டிக் கொண்டான். அப்படி மட்டும் நடந்து விட்டால் அவன் அருமை மகன் துரியோதனன் தற்கொலை பண்ணிக் கொண்டு செத்துவிடுவான் என்று நம்பினான். விதுரரையே யுதிஷ்டிரனைப் போய்ச் சந்தித்து அழைப்பைக் கொடுத்து அவனை அழைக்குமாறு அனுப்பி வைத்தான் திருதராஷ்டிரன்.

இந்த விஷயத்துக்கு ஏன் விதுரர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை பிதாமஹர் பீஷ்மர் புரிந்து கொண்டார். அவர் ஐந்து சகோதரர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர். அவர்களுக்கு விரோதமான எதையும் செய்ய மாட்டார். அதோடு இந்த அழைப்பு விதுரர் மூலம் அளிக்கப்பட்டால் இதன் பின்னால் சூழ்ச்சியோ தந்திரமோ இருக்காது என்றும் அவர்கள் நம்புவார்கள். இதனால் தான் விதுரரை இந்த முக்கியமான தூது அனுப்பத் தேர்ந்தெடுத்தார்கள். விதுரரும் அதை ஒப்புக் கொண்டார். ஏனெனில் அவர் தலையீட்டால் இந்தப் பிரச்னையின் தீவிரம் குறைந்து சுமுகமாக முடியும் என்று அவரும் நினைத்தார். ஆனால் பிதாமஹர் பீஷ்மருக்கு இந்தச் சவாலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் புரிந்தே இருந்தது. அதை க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் பின்பற்றும் ஐந்து சகோதரர்களும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

இப்போது அவர்கள் இந்தச் சூதாட்டம் ஆடுவதற்காக ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்து விட்டனர். யுதிஷ்டிரன் என்ன செய்யப்போகிறான்? அவன் இதில் வல்லவன் அல்ல! அதுவும் ஷகுனி போன்ற ஓர் தேர்ந்த சூதாட்டக்க்காரனை எதிர்கொண்டு ஜெயிக்கும் அளவுக்கு யுதிஷ்டிரனுக்கு இதில் எதுவும் தெரியாது. துரியோதனனுக்காக ஷகுனி ஆடுகின்றான் எனில் யுதிஷ்டிரனுக்காக யார் ஆடுவார்கள்? எவரும் இல்லையே! இதனால் பாண்டவர்கள் இந்தச் சூதாட்டத்தை ஒத்துக்கொள்ளாவிட்டால் அவர்களைக் கோழை என்றும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் என்றும் பொதுவில் சொல்லி விடுவார்கள். பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. ஆட்டம் நடக்கையில் ஷகுனி சூதாட்டத்தில் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அவனை ஏமாற்றுக்காரன் என்று சொல்லி ஆட்டத்தையே நிறுத்தலாம். பாண்டவர்கள் அதற்கு முயற்சிக்கலாம். ஆனால் அப்போதும் துரியோதனன் தரப்பு அரசர்கள் இவர்களைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டார்கள்! முக்கியமாய் அந்தக் கர்ணன்!

துரியோதனனின் தந்திரங்கள் அனைத்தையும் பிதாமஹர் பீஷ்மர் நன்கறிவார்.ஹஸ்தினாபுரத்துக்கு இரண்டு நாட்கள் முன்னர் வந்து சேர்ந்த பாண்டவர்களுக்கும், திரௌபதி மற்றும் குந்தி அனைவருக்கும் பிரமாதமான வரவேற்புக் கொடுத்து உபசரித்திருந்தான் துரியோதனன். அதன் மூலம் பாண்டவர்களுக்குத் தான் தீங்கிழைக்கப் போவதை மக்கள் புரிந்து கொள்ளாமல் தன் செய்கையின் பின்னே மறைந்திருக்கும் விரோத பாவத்தை அவர்கள் அறியா வண்ணம் எந்தத் தப்பும் நடக்கவில்லை; நடக்கவும் போவதில்லை என்று மக்கள் நினைக்கும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறான் துரியோதனன். பீஷ்மருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவர் தலையிட்டு இந்தச் சூதாட்டத்தை ஆடக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கலாம். ஆனால் துரியோதனனின் குழுவினர், முக்கியமாக அவன் தம்பி துஷ்சாசனன், ராதேயன் மகன் கர்ணன், துரோணாசாரியார் மகன் அஸ்வத்தாமா ஆகியோரும் இவர்களின் பின்னே இயங்கும் துரியோதனனின் தாய் மாமன் ஷகுனியின் மூளையும் சேர்ந்து கொண்டு அவருடைய ஆணையைக் கூடத் தடுத்து விடும். அவருடைய இத்தனை வருட வாழ்க்கையில் குரு வம்சத்தின் அரச குலத்தவர் முதல் முறையாக அவரை எதிர்த்து அறைகூவல் விடுகின்றனர். இதற்கு என்ன செய்வது என்று தான் அவருக்குப் புரியவில்லை.

அப்போது மந்திரி சஞ்சயன் அவர் அறைக்குள் திருதராஷ்டிரனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். திருதராஷ்டிரனை பீஷ்மரின் படுக்கைக்கு அருகே ஓர் ஆசனத்தில் அமர வைத்தான். பின்னர் ஓர் கை அசைவில் பீஷ்மருக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த மல்லனை வெளியேற்றினான். அவன் சென்று விட்டதை அறிந்த திருதராஷ்டிரன், “ மதிப்புக்குரிய தாத்தா அவர்களுக்கு என் மரியாதையான நமஸ்காரங்கள்!” என்று வணக்கம் தெரிவித்தான். “என் ஆசிகள், குழந்தாய்!” என்றார் பீஷ்மர். பின்னர் திருதராஷ்டிரனுக்குப் புரியும் வண்ணம் அவன் முதுகிலும் தட்டிக் கொடுத்துத் தன் ஆசிகளைத் தெரிவித்தார். “இரவு இந்நேரத்தில் நீ இங்கே வர வேண்டிய காரணம் என்ன, மகனே! எதற்காக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

மிக மெல்லிய பலஹீனமான குரலில் பேச ஆரம்பித்தான் திருதராஷ்டிரன். “துரியோதனன் தன்னுடைய பணிவான வணக்கத்தை உங்களுக்குத் தெரிவித்து விட்டுத் தாழ்மையான வேண்டுகோளையும் விடுத்திருக்கிறான்!..........” என்று இழுத்தான். “என்ன அவன் வேண்டுகோள்?” என்று பீஷ்மர் கடுமையான தொனியில் கேட்டார். “அதாவது…….. அதாவது………….. தாத்தா அவர்கள்………….. இந்தச் சூதாட்டம் ஆடும்போது நடுவில் குறுக்கிடக் கூடாது…………….”


Saturday, November 26, 2016

துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய்ச்சொல்லை மறுத்துரைத்தோமா!

ஆயிற்று. அனைவரும் ஹஸ்தினாபுரம் செல்வது முடிவாகி விட்டது. நாளை கிளம்ப வேண்டும். அன்று திரௌபதி யுதிஷ்டிரனைத் தனிமையில் சந்திக்க வந்தாள். அவள் உடல் முழுவதும் கோபத்திலும் துக்கத்திலும் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பாகக் காணப்பட்டன. யுதிஷ்டிரன் தன் அறையில் தனிமையில் தான் இருந்தான். திரௌபதி அவனைப் பார்த்த பார்வையைக் கண்டு அவன் உள்ளூர நடுங்கினான். அவன் எதிரே நிதானமாக அமர்ந்தாள் திரௌபதி! திரௌபதியை வேதனையுடன் பார்த்தான் யுதிஷ்டிரன். திரௌபதி கவலையினால் உள்ள வருத்தத்துடன் பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். வழக்கமான புத்திசாலித்தனமோ, கலகலப்போ அவளிடம் இல்லை!

“பாஞ்சால இளவரசியே! என்ன ஆயிற்று உனக்கு? இது என்ன கோபம்? ஏன் இவ்வலவு கோபத்துடன் இருக்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். “கோபமா, ஆரிய புத்திரா, கோபம் என்பது சாதாரண வார்த்தை! எனக்குக் கோபம் இல்லை! சீற்றம். தாங்கொணாச் சீற்றம். சீற்றம் கொண்ட பெண்புலியை ஒத்திருக்கிறேன் இப்போது நான்! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதும் அடுத்து உங்கள் நோக்கம் என்ன என்பதையும் நான் புரிந்து கொண்டு விட்டேன். நீங்கள் ஓர் யுத்தம் நடப்பதை விரும்பவில்லை. என்ன விலை கொடுத்தாலும் அந்த யுத்தத்தைத் தடுக்கவே நினைக்கிறீர்கள். அப்படி எனில், அதாவது நீங்கள் துரியோதனனின் சவாலை ஏற்றுக் கொண்டு இந்த அரசர்களின் விளையாட்டு எனப்படும் சூதாட்டத்தை ஆடி அதில் தோற்றுப் போக முடிவு செய்து விட்டீர்கள். உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும், உங்கள் பேச்சைக் கேட்பதாகவும் நாங்கள் அனைவரும் செய்த சபதத்தால் நீங்கள் எங்களைக் கட்டுப்படுத்தி விட்டீர்கள்!”

“நீங்கள் தான் இந்தக் குடும்பத்துக்கு மூத்தவர்! அது உண்மையே! எங்கள் உடலும், உயிரும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், ஆரிய புத்திரா, உங்களிடம் கொஞ்சமேனும் எங்களுக்காக அனுதாபமோ, நாங்கள் நன்றாக இருக்கவேண்டுமே என்னும் எண்ணமோ இல்லையா? இல்லை என்றே நினைக்கிறேன். போகட்டும்! உங்கள் குழந்தைகளுக்காகவேனும் இது குறித்து சிந்தித்தீர்களா? இல்லை எனில் இந்த நாட்டு மக்களுக்காக? இந்த நாடு மக்கள் அனைவருமே உங்களை நம்பி நீங்கள் நல்லாட்சி தருவீர்கள் என்பதை நம்பி உங்களுக்காக மட்டுமே இங்கே வந்தவர்கள். இந்திரப் பிரஸ்தத்தையே அவரக்ளுக்காக சொர்க்கமாக மாற்றிக்காட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்! நினைவில் உள்ளதா? இந்த மக்களை என்ன செய்வதாக உத்தேசம்?”

“பாஞ்சாலி, நான் மரியாதைக்குரிய பெரியப்பாவின் ஆணையைக் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு ஏற்றாக வேண்டும். அதிலிருந்து நான் தப்ப முடியாது! அது சரியல்ல!” என்றான் யுதிஷ்டிரன். “ஹூம், ஆரியபுத்திரா, இப்போதேனும் சொல்லுங்கள்! ஹஸ்தினாபுரம் செல்ல வேண்டும் என்னும் முடிவை ஏன் எடுத்தீர்கள்? அதற்கு என்ன காரணம்?” என்று கேட்டாள் திரௌபதி.

“இதோ பார் திரௌபதி, என் சகோதரர்கள் மேல் எனக்கூ எவ்வளவு  பாசம் என்றும் அவர்கள் மேல் என் உயிரைக்காட்டிலும் அதிகப் பாசம் வைத்திருப்பதையும் நீ நன்கறிவாய்! அதே போல் என் தாயையும் நான் மதிக்கிறேன் வணங்குகிறேன், அன்பு செலுத்தி வருகிறேன். உன்னிடம் நான் கொண்டிருக்கும் அன்புக்கு அளவு உண்டா? நெஞ்சார உன்னை நேசிக்கிறேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நானே நன்கு அறிய மாட்டேன். என்ன நடக்கப் போகிறதோ! ஆனால் கடைசி வரை தர்மம் எனக்குக் காட்டி வரும் பாதையிலேயே நடக்க உத்தேசித்துள்ளேன். என்னை தர்மத்திலிருந்து பிறழ்ந்தவனாகக் காட்ட வேண்டும் என்பது தான் உன் விருப்பமா? என்னை அப்படி எல்லாம் நீ ஏமாற்ற மாட்டாயே?” என்று கேட்டான். திரௌபதி மனம் உடைந்து அழுது விட்டாள். கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது.

“ஆஹா, இப்படி எல்லாம் வேதனைப்படாதே, திரௌபதி! என்னிடம் முழு நம்பிக்கை வை!” என்றான் யுதிஷ்டிரன்.

“ஆஹா, நம்பிக்கை! அதுவும் உங்களிடம்! உங்களுக்கு யாரிடம் அக்கறை இருக்கிறது? உங்கள் தம்பிகளிடம் கூட இல்லை! உங்கள் பிள்ளைகளிடம்? ம்ஹூம், அதுவும் இல்லை! உங்கள் தம்பிகள் என்ன நினைக்கிறார்கள் இந்த விஷயத்தில் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அப்படி இருந்தும் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வாக்குக்காக உங்களை எதிர்க்காமல் உங்களுடன் இருப்பதாக முடிவு எடுத்திருக்கிறார்கள். சரி, போகட்டும்! வயதான உங்கள் தாயிடம் ஏதேனும் அக்கறை உங்களுக்கு உண்டா? என்னிடம்? என்னை நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை! நம் மகனிடம் கூட உங்களுக்கு அக்கறை இல்லை!” என்ற திரௌபதி சற்று நேரம் நிறுத்திவிட்டு அழுதாள். பின்னர் நீண்ட பெருமூச்சு விட்டு விட்டுத் தொடர்ந்து, “துரியோதனன் மனதில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் இல்லையா? அந்த சூழ்ச்சிக்கார நயவஞ்சக ஷகுனியைக் குறித்தும் உங்களுக்குத் தெரியாதா? நாம் இப்போது ஹஸ்தினாபுரத்துக்கு என்ன காரணத்துக்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டீர்களா? அனைத்தையும் நன்கறிந்திருந்தும் நீங்கள் நம்முடைய விதிக்கு அது அளிக்கப் போகும் மாபெரும் தண்டனைக்கு நம்மை எல்லாம் அழைத்துச் செல்லத் தயாராகி விட்டீர்கள்!”

“உன்னை நீயே துன்புறுத்திக் கொள்ளாதே பாஞ்சாலி! நம் தாய் குந்தி தேவி நம்முடன் வருகிறார். சகோதரர்கள் அனைவருமே வருகின்றனர். ஆகவே நீயும் கூட வருகிறாய்! அவ்வளவு ஏன்! பாஞ்சாலி, நம் ஆசாரியர் தௌம்யரும் நம்முடன் வருகிறார்!” என்றான் யுதிஷ்டிரன்.

திரௌபதி எழுந்து நின்றாள். “ஆஹா, இப்போது மட்டும் வாசுதேவக் கிருஷ்ணன் இங்கிருந்தால்! ம்ம்ம்ம்! குறைந்த பட்சமாக நீங்கள் செய்து கொள்ளப் போகும் இந்தத் தற்கொலையிலிருந்து உங்களைக் காப்பாற்றி இருப்பானே! அவன் கிளம்பும்போது என்ன சொன்னான் என்பது நினைவில் இருக்கிறதா? அவன் சொன்னான்;”மூத்தவரே, துரியோதனனின் வலையில் விழுந்துவிடாதீர்கள்!” என்றான். அவன் புத்திசாலி. விவேகம் உள்ளவன். அவன் மட்டும் இங்கிருந்தான் எனில் இந்தப் பொறியில் நீங்கள் மாட்டிக் கொள்வதைத் தடுத்து நிறுத்தி இருப்பான்.” என்றாள் திரௌபதி.

சொல்லொணாத் துயரில் ஆழ்ந்தான் யுதிஷ்டிரன். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவன் அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய மனைவியும் சகோதரர்கள் நால்வரும் இப்போது வேதனையிலும் ஏமாற்றத்திலும் வெதும்பித் தவிக்கின்றனர். அவன் மரியாதைக்கு உரிய தாயும் அப்படியே இருக்கிறாள். அதுவும் எதற்காக? அவன் செய்திருக்கும் இந்த முடிவினால். தப்பி விட நல்ல வாய்ப்புக் கிடைத்தும் தப்பாமல் குடும்பத்தையும், இந்திரப் பிரஸ்தத்தையும் தியாகம் செய்ய யுதிஷ்டிரன் எடுத்த முடிவினால்! அதனால் தர்மமும் அழிந்து படுமோ? அதையும் தான் விட்டு விட நேருமோ? யுதிஷ்டிரன் குழம்பினான்.

தன் மனக்குமுறல்களால் எழுந்த விம்மல்களை அடக்கிக் கொண்ட திரௌபதி மேலும் சொன்னாள்:”சரி, சரி, ஆரிய புத்திரரே, யோசிக்காதீர். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். நாங்கள் எங்கள் அனைவருடைய உயிரை மட்டுமல்லாமல் நம் அருமைக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விட்டோம். நீங்கள் தான் குடும்பத்திற்கு மூத்தவர் என்னும் அதிகாரத்தின் மூலம் எங்கள் அனைவரையும் சர்வ நாசம் செய்து விடுங்கள். அதற்கான அதிகாரம் உம்மிடம் உள்ளதே!” என்றாள்.

யுதிஷ்டிரனுக்கு எப்போதுமே திரௌபதியைப் பார்த்ததில் இருந்தே அவளிடம் அளவில்லா அன்பும் ஈடுபாடும் உண்டு. அவள் புத்திசாலித்தனத்தையும், உள்ளார்ந்த கர்வத்தையும், விவேகமான நடவடிக்கைகளையும் ரசித்ததோடு அல்லாமல் போற்றிப் பாராட்டவும் செய்தான். இப்போது அவள் இப்படிப் பேசினால்? இத்தனைக்கும் இதன் முக்கியத்துவத்தை அவள் உணர்ந்திருக்கிறாள். யுதிஷ்டிரன் ஏன் இந்த முடிவை எடுத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறாள். வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிவாள். அமைதியும், சமாதானமும் வேண்டுமானால், தர்மம் நிலைத்து இருக்க வேண்டுமானால் துரியோதனனின் சவாலை ஏற்றுக் கொள்வது ஒன்றே சிறந்த வழி! அவனுடைய அரச தர்மம் அவனை ஹஸ்தினாபுரம் நோக்கி இழுக்கிறது. என்ன நடந்தாலும் இந்தச் சவாலைத் துணிந்து ஏற்றுக் கொள் என்று சொல்கிறது. அவன் என்ன செய்வான்? அவன் வேண்டுவதெல்லாம் அமைதியும், சமாதானமுமே!

யுதிஷ்டிரனின் மனது போராட்டங்களால் சுக்குச் சுக்காக நொறுங்கிப் போனது. அவன் உண்மையில் இந்தச் சூதாட்டத்தை ஆடவே விரும்பவில்லை. அவன் அதில் நிபுணனே அல்ல. விளையாட்டாகத் தம்பிகளோடும், மனைவியோடும் எப்போதாவது ஆடும் ஆட்டம் சூதாட்டத்தில் சேர்ந்தது அல்ல! அது வேறு! ஆனால் இப்போது துரியோதனன் அழைத்திருப்பதோ உண்மையான சூதாட்டத்திற்கு! பணயம் வைத்து ஆடும் ஆட்டத்திற்கு! அதிலும் இதை அந்தச் சூழ்ச்சிக்கார ஷகுனியுடன் ஆட வேண்டுமாமே! அதிலும் யுதிஷ்டிரனுக்கு விருப்பமே இல்லை தான்! ஆனால் இப்போதிருக்கும் இந்த மோசமான சூழ்நிலையில் அவன் தப்பிக்க நினைத்தாலும் இயலாது! அவன் ஆடியே ஆகவேண்டும்! வேறு வழியே இல்லை! நினைக்கவே யுதிஷ்டிரன் நடுங்கினான். ஏனெனில் அவன் ஹஸ்தினாபுரம் போக மறுக்கலாம். ஆனால் போரைத் தடுக்க முடியாது. போர் வந்தே தீரும். எங்கும் மக்களும் வீராதி வீரர்களும் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அவன் சகோதரர்கள் இதைத் தான் விரும்புகின்றனர்.

அவனுடைய இந்த நடவடிக்கை அவன் தாய், மற்றும் சகோதரர்கள், மனைவி திரௌபதி ஆகியோருக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. அவர்கள் அனைவரும் வேதனையுடனே இருந்து வருகின்றனர். யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டான்.

மறுநாள் காலை ஆசாரியரும் ஸ்ரோத்திரியர்களும் ஆசிகள் வழங்க நல்ல முஹூர்த்தத்தில் அரச குடும்பத்தினரின் ஊர்வலம் ஹஸ்தினாபுரத்தை நோக்கிப் பயணப்பட்டது. யுதிஷ்டிரன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களையோ துன்பத்தையோ அறியாத இந்திரப் பிரஸ்தத்து மக்கள் இது வழக்கமான ஒன்று. பெரியப்பனைச் சந்திக்க யுதிஷ்டிரன் தன் தாய், மற்றும் குடும்பத்தினருடன் செல்கிறான் என்றே நினைத்துக் கொண்டனர். இதன் மூலம் துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஒற்றுமை ஏற்படும் என்றும் எண்ணிக் கொண்டனர். ஆகவே வாழ்த்தி வழியனுப்பினார்கள். மெல்ல மெல்ல ஹஸ்தினாபுரம் போய்ச் சேர்ந்து விட்டனர் அனைவரும்.

அங்கே சென்றதும் மூத்தோர் ஆன பிதாமஹர் பீஷ்மர், பெரியப்பா திருதராஷ்டிரன், பெரியம்மா காந்தாரி, ஆசாரியர் துரோணர், கிருபர் போன்றோருக்கும் குடும்பத்தின் மற்ற மூத்தவர்களுக்கும் மரியாதை செலுத்தி வணங்கினார்கள் அனைவரும். யுதிஷ்டிரனின் இடைவிடா வற்புறுத்தலின் காரணமாக சகோதரர்கள் நால்வரும் பீமன் உட்பட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் துரியோதனனையும், கர்ணனையும் அவரவர் மாளிகையில் சென்று சந்தித்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் வரவழைத்துக் கொண்ட நல்லுறவுடனேயே அரை மனதாக உபசரித்தார்கள். அவர்கள் அனைவருக்குமாகச் செய்திருந்த ஏற்பாடுகளைக் கண்டான் யுதிஷ்டிரன். எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டு கொண்டான். வெளிப்படையாய்ப் பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியாவண்ணம் செய்யப்பட்டிருந்தது.

தன் சகோதரர்கள் அனைவருமே இனம் தெரியாததொரு உணர்வால் பீடிக்கப்பட்டிருப்பதையும், சங்கிலிகளால் கட்டப்பட்டக் காட்டு மிருகங்களைப் போல் உணர்வதையும் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன் அவர்கள் தன்னுடைய இந்த முடிவால் எரியும் அடுப்பைப் போல் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பதையும் உணர்ந்தான். அவன் முடிவு என்னவாக இருந்தாலும் சரி, அது அவர்களுக்குத் துன்பத்தைத் தான் தரப் போகிறது.  ஆனால் இத்தனையிலும் யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட முடிவு மாறவே இல்லை. அவன் மனது அது ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்தது, அது தான் போரைத் தடுக்க வேண்டுமெனில் இந்திரப் பிரஸ்தத்தையும் தியாகம் செய்து விடுவதே ஆகும். அவனால் போர் ஏற்படக் கூடாது, இந்திரப் பிரஸ்தத்தைக் கொடுத்தானும் அவன் போரைத் தடுப்பான். அதன் பின், அதன் பின் அவர்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று விடுவார்கள். காட்டிற்குச் சென்று அங்கே அவர்கள் விரும்பும் வண்ணம் தர்மத்தின் பாதையில் வாழ ஆரம்பிக்கலாம். இது ஒன்றே வழி!