Tuesday, April 29, 2014

கண்ணன் இரட்டை வேடம் போடுகிறானா?

அதுமட்டும் இல்லை.  ஒற்றர்கள் அறிந்து வந்து சொன்ன செய்தியால் கூட துருபதன் மனம் கொதித்தான்.  ஹஸ்தினாபுரத்துக்கு உத்தவன் சென்றிருந்தானாம்.  அவன் கேட்ட விலையை ஹஸ்தினாபுரத்துக்காரர்கள் கொடுத்திருக்கின்றனர்.  அவன் கேட்டது புஷ்கரத்துக்கு விடுதலை.  அதற்கு ஹஸ்தினாபுரத்துக்காரர்கள் சம்மதம் கொடுத்திருக்கின்றனர்.  புஷ்கரத்தை மீண்டும் செகிதானாவிடமே ஒப்படைக்க பீஷ்மர் சம்மதித்திருக்கிறார்.  அதற்கு அவர்கள் படைகளின் நிகரற்ற  தலைவன் அந்த துரோணனும் சம்மதம் கொடுத்திருக்கிறான்.  இது எதற்கு?  இந்த மாபெரும் விலையைக் கொடுத்து அவர்கள் என்ன சாதித்திருக்கின்றனர்?  துருபதனுக்கு இதன் மூலம் அவமானம் ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனரா?  இவர்கள் இந்த விலையைக் கொடுத்ததோடு துரியோதனனையும் சுயம்வரத்திற்கு அனுப்பி வைத்திருப்பதைக் கண்டால், நான் இதில் எல்லாம் மயங்கி என் பெண்ணை அந்தக் கொலைகாரனுக்குக் கொடுத்துவிடுவேன் என எதிர்பார்க்கின்றனரா? அது ஒருக்காலும் நடவாது.  ஆரிய வர்த்தத்தின் சிறந்த மன்னர்கள் முன்னால் எனக்கு அவமானம் தேடித் தரப் பார்க்கின்றனரா?  அல்லது, அந்தக் கொலைகார யுவராஜா துரியோதனன் என் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று திருமணம் முடிக்க நினைக்கிறானா?  அதற்குக் கிருஷ்ண வாசுதேவனின் உதவியைக் கேட்டிருக்கிறார்களோ?  இப்போதெல்லாம் தான் சுயம்வரத்தின்போது மணப்பெண்ணைத் தூக்கிச் செல்லும் வழக்கம் இருக்கிறதே!

பார்க்க அத்தனை மதிப்பு வாய்ந்தவனாகவும், நேர்மையாளனாகவும், சரியான பாதையில் செல்பவனாகவும் காட்சி தரும் அந்தக் கிருஷ்ண வாசுதேவன் உண்மையில் இவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனா?  நய வஞ்சகனா? நம்பவே முடியவில்லையே!  யாருமே நம்ப மாட்டார்கள்.  அதிலும் எதற்காக!  இந்த துரியோதனனுக்கு ஆதரவு காட்டுவதற்காகவா?  ம்ஹூம், இல்லை, இல்லை, இருக்காது.  இதை நம்பவே முடியவில்லை.  நம்பவும் கூடாது.  அவன் வாக்களித்தபடி தன்னுடைய அனைத்து யாதவர் தலைவர்களையும் அழைத்து வந்திருக்கிறான்.  சுயம்வரத்திற்காகவும், அதன் போட்டிக்காகவும் மனம் ஒருமித்து ஏற்பாடுகளில் ஆழ்ந்திருக்கும் குரு சாந்தீபனியும் சரி, அவரின் பிரதம சீடரான ஷ்வேதகேதுவும் சரி கிருஷ்ணனிடம் மாறாத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருக்கின்றனர்.  அவ்வளவு ஏன்!  இதுநாள் வரையிலும் நானும் தான் ஒரு மகனிடம் வைக்கும் பாசத்தையும், அன்பையும் அவனிடம் வைத்திருந்தேன்; அல்லது இன்னமும் வைத்திருப்பேனோ?

புஷ்கரத்தைத் திரும்ப வாங்க என்ன பேரம் நடைபெற்றது?  யாதவர்கள் குரு வம்சத்தினருக்காக எந்தப் பாவகரமான செயலைச் செய்வதாகச் சொல்லிப் புஷ்கரத்தைத் திரும்ப பெற்றிருக்கின்றனர்?  வேறு ஏதோ விஷயம் இதில் இருக்க வேண்டும்.  ஆம், கிருஷ்ணன் வேறு ஏதோ உள்ளார்ந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறான்.  ஏனெனில் தன் அத்தையிடமும், அத்தையின் ஐந்து குமாரர்களிடமும் மாறாத பாசமும், அன்பும் கொண்ட கிருஷ்ணன், அவர்களைக் கொன்று ஒழித்த இந்தக் கொலைகார துரியோதனனுக்கு ஆதரவாய்ப் பேசுவதற்கு என முயல்வானா?  அவன் பாசமும் விசுவாசமும் அனைவரும் அறிந்த ஒன்று.  குந்தியைக் கொன்றதன் மூலம் தாயைக் கொன்ற அபகீர்த்திக்கு அல்லவோ அந்த துரியோதனன் ஆளாகிவிட்டான்.  ஆம், ஆம், கடைசியில் அவன் ஏமாந்து தான்போகப் போகிறான்.  அது தான் நடக்கும். அந்த துரியோதனன் இந்த அபச்சாரத்தைச் செய்துவிட்டு அதை ஒப்புக் கொண்டு அடங்கி நடப்பானா?  மாட்டான்.  அது அவன் இயல்புக்கே விரோதம்.  ஆகவே அவன் துரியோதனனுக்கு ஆதரவு கொடுக்க மாட்டான்.  ஆரியவர்த்தத்தின் அனைத்து அரசர்களும் தர்மத்தின் பாதையில் நடக்கின்றனர் எனச் சொல்ல முடியாது.  ஆனால் எவராலும் தூக்கிப் பிடிக்க முடியாத அந்த தர்மத்தின் பாதையைத் தூக்கிப் பிடிக்காவிட்டாலும் கிருஷ்ணன் தவறான பாதையில் செல்ல மாட்டான்.  திசைமாறிச் செல்ல மாட்டான்.  மாறி மாறி வந்து கொண்டிருந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிய துருபதன் சிறிது நேரம் ஊஞ்சலை ஆட்டவே மறந்துவிட்டான்.

அப்போது அங்கே அவன் மந்திரியும், வெகுகாலமாக அவனிடம் மந்திரி பதவியில் இருப்பவனும் ஆன உத்போதனன் வந்தான்.  அவன் சுயம்வரம் நடைபெறப்போகும் அரங்கம் முழுமையாகத் தயார் ஆகிவிட்டதாகவும், மன்னன் துருபதனோ அல்லது இளவரசன் த்ருஷ்டத்யும்னனோ வந்து அதைப் பார்வையிட்டு போட்டிக்கான குறியை எங்கே வைப்பது எனச் சொல்லிவிட்டால் அதையும் முடித்துவிடலாம் என்று பணிவுடன் கூறினான்.  இதனால் மன்னன் மனம் மகிழ்வதற்கு பதிலாய் அவனுக்கு வருத்தமே மேலிட த்ருஷ்டத்யும்னனை அழைத்துச் சென்று செய்யும்படி கூறி விட்டான். அப்போது ஒரு சேவகன் அங்கே வந்து மகத நாட்டுச் சக்கரவர்த்தியின் மகனான சஹாதேவன் துருபதனைப் பார்க்க வேண்டி வந்திருப்பதாய்க் கூறினான்.  எதற்கென துருபதன் விசாரிக்கையில் மகதத்தின் சார்பில் தன் மரியாதைகளையும், பரிசுகளையும், வணக்கத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாய்ச் சொன்னான்.  இதுவும் துருபதனை எளிதில்  எரிச்சலில் ஆழ்த்தியது.  அவன் கோபம் உச்சத்துக்கே சென்றுவிட்டது.  இப்படி சற்றும் எதிர்பாராமல், அசந்தர்ப்பமாக வந்திருக்கும் யுவராஜா சஹாதேவனை என்ன செய்வது எனத் திகைத்தான்.  ஆனாலும் அவனைப் பார்க்க மறுப்பது சரியல்ல. அருகே கிடந்த கிரீடத்தை எடுத்துத் தலையில் சூட்டிக் கொண்டு, வாளை இடுப்பில் செருகிக் கொண்டு அவனைப் பார்க்கக் கிளம்பினான் துருபதன்.

தான் சந்திக்கும் அரசாங்க அறைக்கு வந்த துருபதனுக்குள் சட்டென்று ஓர் எண்ணம் பளிச்சிட்டது.  கிருஷ்ணன் அப்படி இரட்டை வேஷம் போட்டு ஏமாற்ற நினைத்தான் எனில், ஜராசந்தன் இங்கே சுயம்வரத்திற்கு எப்படி வந்திருப்பான்? கிருஷ்ணனின் உள்ளார்ந்த எண்ணம் தெரிந்தது எனில் ஜராசந்தன் சுயம்வரப் போட்டியிலேயே கலந்து கொள்ள மாட்டானே!  அவனும் ஒரு தேர்ந்த வில்லாளிதான். ம்ம்ம்ம்ம்?? யோசனைகளில் மூழ்கிய துருபதனை ஒரு குரல் தட்டி எழுப்பியது.


“மாட்சிமை பொருந்திய மன்னரே! என் தந்தையும் மகதச் சக்கரவர்த்தியுமான ஜராசந்தர் ஒரு அவசரமான செய்தியை என் மூலம் உங்களுக்கு அனுப்பி உள்ளார்.” என்றான் மகத நாட்டுப் பட்டத்து இளவரசன் ஆன சஹாதேவன். அவனை சகல மரியாதைகளுடனும் வரவேற்றான் துருபதன்.  “சக்கரவர்த்தி என்ன சொல்லி அனுப்பினார்?” என்று கேட்டான்.  சஹாதேவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனைப் பாதித்தது.  அவன் ஏதோ முடிவுடன் வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சஹாதேவன் அவனைப் பார்த்து, “ மாட்சிமை பொருந்திய மகத மன்னர், என் தந்தை ஜராசந்தர்,  பாஞ்சால அரசனாகிய நீர் அனுப்பிய அழைப்பைப் பார்த்துவிட்டே இங்கே சுயம்வரத்திற்கு வந்திருக்கிறார்.  ஆகவே அவர் எதிர்பார்ப்பது என்னவெனில்  துருபதன் மகளான திரெளபதி, மகதத்தின் சக்கரவர்த்திக்குப் பேரனும், என் ஒரே மகனுமான மேகசந்தியை அவளுக்கான மணமகனாய்த் தேர்தெடுத்தாக வேண்டும்.  இதன் மூலம் மகதத்திற்கும், பாஞ்சால நாட்டுக்கும் ஆன அரசியல் உறவு பலப்படும். இதுவே என் தந்தை எதிர்பார்ப்பது. “ என்று கூறிய சஹாதேவன் குரலில் இருந்த அதிகாரத் தொனி, அவன் கேட்டது நடந்தே ஆகவேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தது.  தன் கீழுள்ள சிற்றரசர்களோடு உடன்படிக்கை செய்யும்போது நடந்து கொள்ளும் அதிகாரத்தன்மையோடு சஹாதேவன் இப்போதும் நடந்து கொண்டான்.




   

Saturday, April 26, 2014

துருபதனுக்கும் கோபம்!

“என்ன??? வாசுதேவன், துரியோதனனுக்காகப் பரிந்து பேசுகிறானா?  அவன் தகுதிகளை எடுத்து இயம்புவதற்காக துரியோதனன் மனைவியிடம் உறுதி மொழி கொடுத்துள்ளானா?  அவள் கேட்டுக் கொண்டதன் பேரில் கிருஷ்ண வாசுதேவன் இதற்கு இசைந்துள்ளானா?  என்னை என்னவென்று நினைத்தார்கள் அனைவரும்?  இன்றைய தினம் ஒரு முக்கியமான தினம். நன்மைகளை எல்லாம் அள்ளித்தரும் சுபதினம்.  இந்த தினத்தன்று யாரைப் பார்க்கக் கூடாதோ, அந்த மோசமான எதிரியை, திட்டம் போட்டுப் பாண்டவர்களை உயிருடன் எரித்த மோசக்காரனை, நய வஞ்சகனை நான் பார்க்க வேண்டுமா?  ஷகுனியை இன்றா நான் பார்த்தாகவேண்டும்??  அதுவும் இன்றைய தினம்?? அவன் தான் என்னை என்னவென்று நினைக்கிறான்?” கோபமாய்க் கேட்டாள் திரெளபதி.  “இதில் என்ன தப்பு இருக்கிறது திரெளபதி? எனக்கு எதுவும் புரியவில்லையே!  மேலும் கிருஷ்ணன் நீ ஷகுனியைச் சந்தித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான்.” திருஷ்டத்யும்னன் கூறினான்.

“அண்ணா, துரோணரின் முக்கியமான பிரியத்துக்கு உகந்த சீடனையா நான் மணக்கவேண்டும்?  கிருஷ்ண வாசுதேவன் ஏன் இப்படிச் செய்கிறான்?  அவன் நம்மிடமும், அவர்களிடமும் ஒவ்வொரு மாதிரியாக நடந்து கொண்டு இரட்டை வேடம் போடுகிறானோ?  என்ன ஆயிற்று கிருஷ்ணனுக்கு?  ம்ம்ம்ம்ம், அண்ணா, அண்ணா, தந்தையார் இந்த சுயம்வரத்தில் ஆயுதப்போட்டி உண்டென்று அறிவித்தாக வேண்டும்.  ஆம், நான் அதைத் தான் விரும்புகிறேன்.  அவர் அறிவிக்கப் போகும் செய்திக்காகக் காத்திருக்கிறேன்.   அது ஒன்றே இப்படி எல்லாம் தொல்லைகளை மாற்றி மாற்றி அளிக்கும் இந்த இடைத்தரகர்களுக்கு ஒரே பதிலாக அமையும்.” மிதமிஞ்சிய கோபத்தில் திரெளபதியின் முகம் மட்டுமில்லாமல் கழுத்து, கண்கள் என அனைத்தும் சிவந்து காணப்பட்டது.

“இவ்வளவு உணர்ச்சி வசப்படாதே, தங்காய்!  நிதானமாக இரு.  கிருஷ்ண வாசுதேவன்  உன்னை மணக்கப் போகும் வாலிபன் யாராக இருந்தாலும் இந்த சுயம்வரத்தில் கொடுக்கப் போகும் தேர்வில் வெற்றி அடையவேண்டும் என்பதை நன்கறிவான்.  ஆனாலும் மணமகன் உன் இஷ்டப்படி தான் தேர்ந்தெடுக்கப்படும் என்னும் மாயத்தோற்றத்தை எதற்காகவோ உருவாக்க விரும்புகிறான் என்றே எண்ணுகிறேன்.”

“ஆஹா, இவனைப் புரிந்து கொள்வதே மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறதே அண்ணா!  பல சமயங்களிலும் அவன் என்ன செய்யப் போகிறான்,  ஏன் இதைச் சொல்கிறான் என்பதே தெரிவதில்லை.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொருமாதிரியாக நடந்து கொள்கிறான்.  எல்லாவற்றையும் அவன் பொறுப்பில் விட்டுவிடும்படி சில சமயம் சொல்லுவான்.  தந்தையும் அப்படியே விட்டிருக்கிறார்.  நீயும், நானும் கூட அவன் சொன்னதற்குக் கீழ்ப்படிந்தோம். “ எரிச்சல் மீதூறப் பேசினாள் திரெளபதி.

“இதோ, இப்போது சுயம்வரம் நெருங்கி விட்டது.  இந்த சுயம்வரத்தில் போட்டியிட்டு வென்றவருக்குத் தான் நான் மணமாலை சூட்டுவேன் என்பதையும் அவன் நன்கறிவான்.  அப்படி இருந்தும்……..துரியோதனனைக் குறித்த புகழ்ச்சியான வார்த்தைகளைச் சொல்லக் காத்திருக்கும் ஷகுனியை நான் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறான்.  இது எனக்குத் தேவையா? இதைவிட வேறு அவமானம் ஏதுமில்லை எனக்கு.  நான் என்னமோ துரியோதனனுக்கு ஒருக்காலும் மாலையிடப் போவதில்லை.  அண்ணா, உனக்குத் தெரியுமா?  கிருஷ்ணன் என் பக்கமே நிற்பதாக எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறான்.  அதை நீ அறிவாய் அல்லவா?   இது தான் அவன் வாக்குறுதியை நிறைவேற்றும் லக்ஷணமா?  தந்தை என்ன சொல்வார் இதைக் குறித்து? “ திரெளபதியின் கோபம், வெறுப்பு,மனக்கசப்பு ஆகிய அனைத்தும் அந்தப் பேச்சில் எதிரொலித்தது.

“தந்தையைக் குறித்து நீ அறிய மாட்டாயா என்ன?  அவர் மிகுந்த மனச் சோர்வுடன் இருக்கிறார்.  இம்மாதிரி எல்லாம் நடக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை.  குரு வம்சத்தினருக்கு ஒரு மரியாதைக்காக அவர் அழைப்பு அனுப்பினாரே தவிர சுயம்வரத்தில் கலந்து கொள்ள குரு வம்சத்து இளவரசர்கள் வருவார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை.  அவர் மிகப் பக்குவமான மன நிலையில் இருக்கிறபடியால் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு, மிக்க மரியாதையுடனும், கெளரவமான முறையிலும் குரு வம்சத்தினரை வரவேற்று உபசரித்தார்.  அவருக்கும் கிருஷ்ணன் இங்கொன்று அங்கொன்று எனச் சொல்லி இரட்டை வேடம் போடுகிறான் என்பதே சந்தேகமாய் இருக்கிறது.  அவரும் அப்படித் தான் நினைக்கிறார்.”

“சரி அண்ணா, இப்போது நாம் தந்தையிடம் சென்று இதைக் குறித்துக் கலந்து ஆலோசிப்போம்.”  உடனேயே திடீரென ஏற்பட்ட ஒரு உணர்ச்சி வசத்தில், “தன் சித்தப்பா மகன்கள் ஐவரையும், சித்தியையும் கொன்று, உயிருடன் எரித்த குருவம்சத்து இளவரசனை நான் மணந்தே ஆகவேண்டுமா அண்ணா!” என்று வேகமாய்க் கோபத்துடன் கத்தினாள்.

“அமைதி, அமைதி! அமைதியாக இருக்க வேண்டும் கிருஷ்ணையே! எனக்கென்னமோ கிருஷ்ண வாசுதேவனைச் சந்தேகிக்கத் தோன்றவில்லை. அவன் தவறாக ஏதும் செய்வான் என்றும் நினைக்கவில்லை.  ஷகுனியோடு பேசு!  அதுவும் தந்தை அநுமதித்தால் மட்டுமே பேசு.  இதில் என்ன வந்துவிடப் போகிறது!  அதன் பின்னர் வாசுதேவக் கிருஷ்ணனைத் தனிமையில் சந்தித்து உன் உணர்வுகளைக் கூறு.  அவ்வளவு ஏன்? அவனோடு சண்டையே போடு! யார் வேண்டாம் என்றது? “மெல்லப் புன்னகையோடு ஆரம்பித்த த்ருஷ்டத்யும்னன் பின்னர் பெரிய சிரிப்போடு முடித்தான். “அவன் மட்டும் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்திருந்தால்….. உன்னால் இப்படி எல்லாம் கத்தி இருக்க முடியாது.  அவன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.” என்ற வண்ணம் அவன் திரெளபதியோடு தந்தையைச் சந்திக்கச் சென்றான்.

கிட்டத்தட்ட அதே சமயம் அரண்மனையின் வேறொரு அறையில் வெளியே போடப்பட்டிருந்ததொரு ஊஞ்சலில் அமர்ந்த வண்ணம் நதியைப் பார்த்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான் துருபதன்.  அவன் எண்ணங்கள் வேகமாகச் சென்றன என்பது ஊஞ்சல் ஆடிய விதத்தில் இருந்து புரிந்தது.  மிக வேகமாக அதி வேகமாக என்னும்படி ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தான் துருபதன்.  அவனுக்கு மிதமிஞ்சிய கோபம் வந்துவிட்டால் இப்படித் தான் தன்னைத் தானே சமாளித்துக் கொள்ளவும் நிதானத்துக்கு வரவும் இப்படி வேகமாய் ஊஞ்சலில் ஆடுவான்.  இப்போதும் அவன் கோபமாகத் தான் இருந்தான்.  கூண்டில் அடைபட்ட சிங்கத்தின் கோபம் அவனிடம் இருந்தது. புருவங்கள் நெரிந்து கண்கள் சுருங்கிக் காணப்பட்டாலும் அந்தக் கண்களில் தெரிந்த கொலை வெறி அந்த மத்தியான வெயிலில், அந்த வெளிச்சத்தில் அதிபயங்கரமாகக் காணப்பட்டது.  நதியில் விழுந்த சூரியக் கிரணங்களை அவன் பார்த்த பார்வையில் அந்த சூரியனே நேரில் வந்தால் நடுங்கிப் போயிருப்பானோ என்னும்படி ஆக்ரோஷமாகத் தெரிந்தது.  அவன் கைகளோ ஊஞ்சலின் பக்கத்தைப் பிடித்து நெரித்த வண்ணம் இருந்தது.

அரசனுக்குரிய கிரீடம் தலையில் காணப்படவில்லை;  கழட்டிப் பக்கத்தில் வைத்திருந்தான்.  அவன் தோளில் போடும் உத்தரீயமோ கீழே கிடந்தது.  வாளையும் இடுப்பில் இருந்து கழட்டிப் பக்கத்தில் வைத்திருந்தான்.  ஒரு அரசனாகவும், அரச பரம்பரையில் பிறந்து வளர்ந்தவனாகவும் அதன் பாரம்பரியங்களை விடாமல் கடைப்பிடிக்கும் ஒரு அரசனுக்கு இப்படி ஒரு மனோநிலை வந்திருக்க வேண்டுமெனில் அதன் மூல காரணம் என்னவாக இருக்கும்? அவன் உள்மனதுக்குள் நடக்கும் போராட்டங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கப் பெரும்பாடு படுகிறான் என்பதும் தெரிந்தது.

Wednesday, April 23, 2014

திரெளபதியின் கோபம்!

இவர்களிடையே கிருஷ்ணன் தனித்துத் தெரிகிறான்.  அவன் ஒரு தனி ரகம்.  தன்னைத் தானே அவன் “மாட்டிடையன்” என அழைத்துக் கொண்டாலும்,  இங்கு வந்திருக்கும் அனைத்து அரசர்கள், இளவரசர்கள், மாபெரும் சக்கரவர்த்திகளை விட அவன் எல்லாவகையிலும் உயர்ந்தவன்.  அவளுக்குத் தெரிந்த அனைத்து அரசர்களிலும் அவனுக்கு ஈடு, இணை சொல்லக் கூடியவர் எவரும் இல்லை.  என்றாலும் அவன் கிருஷ்ண வாசுதேவன், திரெளபதியை மணந்து கொண்டு அதன் மூலம் அவள்  தந்தைக்கு உதவி செய்யப் போவதில்லை.  ஆனால் அவன் உதவி வேறு வகையில் கிட்டும்.  அவன் தனக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான்.  யாதவர்களிலேயே சிறந்த அதிரதர்களும், மஹாரதர்களும், பலராமன், அக்ரூரர் ஆகியோரின் தலைமையில் அங்கே வந்து கூடி இருக்கின்றனர்.  இவர்கள் அனைவருமே ஆர்யவர்த்தத்தின் மிகச் சிறந்த அரசர்களை விடச் சிறந்த வீரர்கள்.   யாதவர்கள் காம்பில்யத்துக்கு வந்த தினத்தில் அவள் தன் அந்தப்புரத்தின் மேன்மாடத்தில் தான் நின்று கொண்டிருந்தாள்.  யாதவத் தலைவர்கள் அனைவருமே அவள் தந்தையைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லவும், நலம் விசாரிக்கவும் அங்கே வந்தனர்.  அவர்களில் அனைவருக்கும் தலைமை வகித்து வந்த பலராமன் அனைவரிலும் உயரமாக, அனைவரிலும் பலவானாக, உடலும் பருமனாக, அதே சமயம் ஒரு தனிப்பட்ட கெளரவம் தொனிக்கும் வண்ணம் காணப்பட்டான்.  உடன் வந்த அக்ரூரர், தன் வயதுக்கேற்ற மரியாதை தொனிக்கும் வண்ணம், கெளரவமான தோற்றத்தோடு பார்க்கவே மனம் நிறைவாக அதே சமயம் புனிதமான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்படி தன்னடக்கத்துடனும், அதே சமயம் நிதானத்துடனும் வந்தார்.

அவர்களுடன் வந்த அந்த உயரமான இளைஞன், யுயுதனா சாத்யகி என அழைக்கப்பட்டவன், எளிதில் வளையும் தன்மையுள்ள அதே சமயம் உறுதியும் வலுவும் உள்ள உடல்கட்டோடு காணப்பட்டான்.  மிகவும் கெளரவமான உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவன் பார்வையிலும், அவன் நடந்து கொண்ட விதத்திலும் தெரிந்தது.  இப்படி இத்தனை பேர் தனித்துவமாகத் தோற்றமளிக்கும் வண்ணம் வந்த போது கூடக் கிருஷ்ணன் அவர்களில் தனித்துத் தெரிந்தான்.  உன்னதமான ஆற்றலையும், சக்தியையும்  கொண்ட அவனுடைய தனித்துவம் அவன் நடந்து வரும்போதே வெளிப்படும் வண்ணம்  இருந்தது.  எல்லாவற்றிலும் அதிசயமான ஒன்று அவன் உடல் நிறம்.  அது என்ன நிறம்! ஆகாயத்தின் ஆழ்ந்த நீலவண்ணத்தில் அல்லவோ இருக்கிறான்.  அந்த நீல வண்ணத்தில் உடலும், அதற்கேற்ற மஞ்சள் பட்டாடையும், தலையில் சூடிய மயில் பீலிகளும், அவன் பேசும்போதும், தலையை ஆட்டும்போதும் அந்தப் பீலிகள் ஆடுவதும், சிரிக்கும் அந்தக் கண்களும், அதில் காணப்படும் எல்லையற்ற கருணையும், அன்பும், முகத்தில் எப்போதும் காணப்படும் இளமுறுவலோடும், அவனைப் பார்த்தாலே நம் தலையிலிருந்து கால் வரை எல்லாமும் நிறைந்து போகிறது. எந்தக் கவலை இருந்தாலும் பறந்துவிடுகிறது.  அவன் நம்மைப் பார்த்துச் சிரித்தால் தவிர்க்க முடியாமல் நாமும் சிரிக்கத் தான் தோன்றுகிறது.  அந்தச் சிரிப்பிலேயே மனம் லேசாகிறது.  காற்றில் மிதக்கும் எண்ணம் தோன்றுகிறது. அவனுடைய இந்த ஒரு தோற்றமே நம் மனத்தின் அனைத்துக் கசடுகளையும் நீக்கும் வல்லமை பெற்றுள்ளது.  அவன் வாயைத் திறந்து பேசினாலோ! அதில் உள்ள எல்லையற்ற கருணை நம்மை ஆட்கொண்டு முழுக்காட்டுகிறது.

ம்ம்ம்ம், எல்லாவற்றிற்கும் திருஷ்டிப் பரிகாரம் போல கெளரவர்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர்.  மூத்தவன் துரியோதனன், துஷ்சாசனன் மற்றும் அவர்களுடைய சில சகோதரர்களும் வந்திருக்கின்றனர்.  அவர்களுடன் வந்திருக்கும் அங்க நாட்டு அரசன் தேரோட்டி ராதேயனின் மகனாமே.  ஆனால் அவனைப் பார்த்தால் பெரிய உயர்குடிப் பிறப்பில் பிறந்தவன் போல் அழகும், கம்பீரமும் வாய்ந்து காணப்படுகிறான்.  மிகப் பெரிய வில்லாளி எனவும் சொல்கின்றனர்.  அவர்களுடன் வந்திருக்கிறான் அவனும்.  அதுதான் அந்த துரோணாசாரியாரின் மகன், அஸ்வத்தாமா! பார்க்கவே பயங்கரமாக அன்றோ தோன்றுகிறான்.  அவன் எதற்கு இங்கே வந்தான்?  அவன் மட்டுமா?  குரு வம்சத்து இளவல்களே வருவார்கள் எனத் தந்தையும் எதிர்பார்க்கவில்லை;  யாருமே எதிர்பார்க்கவில்லை.  அவர்கள் வரவினால் தந்தைக்கு தர்ம சங்கடம் தான் எனத் தோன்றுகிறது. எல்லா வகையிலும் சிக்கல்கள் நேர்ந்துவிடுமோ என பயப்படுகிறார்.   இத்தனைக்கும் அவ்வளவு பெரிய பழமையான நாட்டிலிருந்து வந்திருக்கும் இந்த இளவரசர்களால் இந்த சுயம்வர நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்னமோ கூடி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.  இருந்தாலும் அவர்கள் வரவு சற்றும் எதிர்பாரா வரவு தான்.


அன்று காலை அவள் சீக்கிரமே எழுப்பப் பட்டாள்.  வைதிகச் சடங்குகளுடன் கூடியதொரு குளியலுக்கு அவளைத் தோழிப் பெண்கள் தயார் செய்தனர். வாசனை மிக்க திரவியங்கள், மஞ்சள் பொடி, கஸ்தூரி, குங்குமப் பூவில் ஊறிய பால் போன்றவற்றை அவள் உடலில் தடவி, எண்ணெய் முழுக்காட்டினார்கள்.  பின்னர் விலை உயர்ந்த பட்டாடைகளை உடுத்த வைத்துத் தங்க ஆபரணங்களினாலும், வைர ஆபரணங்களினாலும், நவரத்தினங்களாலும் அலங்கரித்தனர்.  ஆனால் அவளை அலங்கரிப்பதாக நினைத்து மேலும் அலங்கோலமாக்கினார்கள் என்றே திரெளபதிக்குத் தோன்றியது. கருகருவெனக் கருநாகம் போலப் பளபளப்பாக இருந்த அவள் நீண்ட கரிய கூந்தல் பல பின்னல்களாகப்பின்னப்பட்டு, பல வகையான வண்ணமுள்ள, வாசனை மலர்களால், தேர்ந்த தலை அலங்கார நிபுணர்களால் அலங்கரிக்கப்பட்டது.  அனைவரும் சேர்ந்து அவளை ஒரு தேவதை போல் தோற்றமளிக்கும்படி அலங்கரித்தனர்.  அவள் மனதிலோ தான் தேவதையாகக் காட்சி கொடுக்காவிட்டாலும், தன்னுடைய கம்பீரமும்,  பிரகாசமான முகமும் மங்காமல் காட்சி கொடுத்தால் போதும் என இருந்தது.  இத்தனை அலங்காரத்துக்குப்பின்னர் அவள் குழந்தையிலிருந்து இப்போது வரை தினமும் செய்து வருகிற வழக்கப்படி தன் தந்தையின் காலடிகளில் விழுந்து வணங்கி எழுந்தாள்.

அப்படித் தன் தந்தையை தினம் தினம் வணங்குவதில் அவள் மனம் திருப்தியும் அடைந்து வந்தது.  அவளைப் பொறுத்தவரை அவள் தந்தை சாமானியமானவரே அல்ல;  கடவுளுக்கும் மேலானவர். ஆகவே அவரை வணங்குவது அவளுக்கு முக்கியக் கடமையாகும்.  அன்று அவ்வாறு வணங்குகையில் தந்தையின் முகத்தைப் பார்த்து மிகவும் துயரம் அடைந்தாள் திரெளபதி.  ஆம்; துருபதனின் முகத்தில் சந்துஷ்டி இல்லை.  ஏதோ அதிருப்தியில் அல்லது வருத்தத்தில் ஆழ்ந்து போயிருக்கிறவனாய்த் தெரிந்தது.  அவன் முகபாவம் மிகவும் கடுமையையும் காட்டியது.  துருபதன் உள்ளூர சந்தோஷமாக இல்லை என்பதை உடனேயே திரெளபதி அறிந்து கொண்டாள்.  என்றாலும் அவள் எதையும் கேட்கவில்லை.  தந்தையிடம் சென்று திரும்பிய பின்னர் அவளும் அவளுடைய மூத்த சகோதரன் த்ருஷ்டத்யும்னனும் குரு வம்சத்து யுவராஜாவான துரியோதனனின் சகோதரன் துஷ்சாசனை வரவேற்றனர்.  அவன் விலை உயர்ந்த பல பரிசில்களைக் குரு வம்சத்தினர் சார்பாகக் கொண்டு வந்திருந்தான்.  அந்தப் பரிசில்கள் அனைத்துமே  மற்ற எந்த அரசர்களின் பரிசில்களோடும் ஒப்பிட முடியா அளவுக்கு விலை உயர்ந்தவையாக இருந்தன.

அவனுடன் குரு வம்சத்து ராஜ்ய சபையில் குரு வம்சத்தினரின் வம்சாவளியையும், வீர, தீரப் பிரதாபங்களையும் இப்போதிருக்கும் மன்னன் திருதராஷ்டிரன், யுவராஜா துரியோதனன் ஆகியோரின் புகழையும் பாடும் வழக்கமுள்ள ஒரு அந்தணனும் கூட வந்திருந்தான்.  அவன் தன் வழக்கப்படி இங்கேயும் குரு வம்சத்தினரின் வம்சாவளியையும், பரத குலத்து வழி வந்தவர்கள் என்பதையும் சொல்லிவிட்டு துரியோதனனின் வீரத்தைக் குறித்துப் பாடல்களாகப் பாடினான்.  அவனுடைய வீரம், திறமை, ஆற்றல், மாட்சிமை பொருந்தியதொரு நல்வாழ்க்கை ஆகியவற்றைப் பாடிவிட்டுப் பின்னர் அங்க தேசத்து அரசன் ஆன தேரோட்டி மகன் கர்ணனின் வீரத்தைக் குறித்தும் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினான்.  கர்ணன் மிகச்  சிறந்த வில்லாளி என்பதையும் குறிப்பிட்டுக் கூறினான்.  பின்னர் துரோணாசாரியாரின் ஒரே மகன் அஸ்வத்தாமா, பிரம்மாஸ்திரத்தைக் கற்ற இருவரில் ஒருவன், இன்னொருவன் பாண்டவ புத்திரன் அர்ஜுனன் அவன் மறைந்துவிட்டான்.


இப்போது இவன் ஒருவனுக்கே பிரம்மாஸ்திரப் பிரயோகம் தெரியும்.  மிகச் சிறந்த வீரன், வில்லாளி, நித்ய கர்மானுஷ்டானங்களைத் தவறாமல் செய்யும் அந்தணன் என்றெல்லாம் விவரித்துப் பாடினார்.  இவற்றுக்கெல்லாம் செவி கொடுக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு தன் தலையைத் திருப்பிக் கொண்டு வேறு கவனத்தில் ஆழ்ந்தாள் திரெளபதி.  அவர்கள் சென்ற பிறகு, த்ருஷ்டத்யுமனன் திரெளபதியிடம், ‘யுவராஜா துரியோதனனின் தாய் மாமன் ஷகுனி, காந்தார நாட்டு இளவரசனைக், கிருஷ்ண வாசுதேவன் உன்னிடம் அழைத்து வர விரும்புகிறான். துரியோதனனின் மனைவியான காசி தேசத்து இளவரசி பானுமதி, கிருஷ்ண வாசுதேவனின் இளைய சகோதரியாக ஸ்வீகரிக்கப்பட்டவள்.  அவள் கிருஷ்ண வாசுதேவனிடம் உனக்கும், ஷகுனிக்கும் இடையில் சந்திப்பு ஏற்படுத்த வேண்டி அவனிடம் உறுதிமொழி வாங்கி இருக்கிறாளாம்.  அதன்படி ஷகுனியை உன்னிடம் அழைத்துவரக் கிருஷ்ண வாசுதேவன் விரும்புகிறான்.”

திரெளபதி திகைத்தாள்.  துரோணரின் மிகவும் பிரியமான சீடன் துரியோதனன்.  இப்படி  எவ்வகையிலும் கடக்க இயலாத ஆக்ஷேபணைகள் உள்ள குருவை வைத்துக் கொண்டு  அவரை மீறிக்கொண்டு துரியோதனன் இங்கே வந்ததே அதிசயம், அதோடு , அவனுக்கு இருக்கும் புகழோ மிகுந்து அச்சம் ஊட்டும் வகையிலும் உள்ளது.  இவற்றை வைத்துக் கொண்டு இவன் சுயம்வரத்திற்கு வந்ததே அதிசயம்.  அவனுடைய கபடத்தாலும், இடையறா சூழ்ச்சிகள், சதிகளாலும் ஹஸ்தினாபுரத்தின் தன்மையையே விஷமாக்கி வருகிறான் என்றே அனைவரும் சொல்கின்றனர்.  அதோடு மட்டுமா?  அவனுடைய சித்தப்பா பிள்ளைகளான பாண்டவர்களை நாட்டை விட்டும் துரத்தி இருக்கிறான்.   வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் அவர்களை உயிருடன் எரித்திருக்கிறான்.  எவ்வகையிலும் கட்டுக்கடங்காமல் இருக்கும் அவனுடைய இந்தத் தீயகுணத்தால் அவன் தாத்தா பீஷ்மராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளான்.  இப்போது….இப்போது அவன் மனைவி பானுமதியை அவன் நினைத்ததை முடிக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.  பாவம் அந்த அப்பாவிப் பெண்!  ஹூம், இப்படி எல்லாம் திரெளபதியை வெல்ல முடியாது!  அதை விடவும் அவள் இறந்து போவாள்.  மணமேடையில் அக்னிசாட்சியாக அவன் கரத்தையா பிடிப்பது.  கறைபடிந்த அந்தக் கரங்களைப் பிடித்து அவனுடன் மண உறவு கொள்வதற்கு பதிலாக இறந்துவிடலாமே!



Sunday, April 20, 2014

திரெளபதிக்கு வந்த சந்தேகம்!

நாகர்களும், யாதவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு பாண்டவர்களைக் குறித்துக் கலந்து ஆலோசிக்க விட்டுவிட்டு, நாம் இப்போது காம்பில்யத்தின் அரண்மனையில் அந்தப்புரத்துக்குள் நுழைய வேண்டும். அவ்வளவு எளிதில் நுழைய முடியாது என்றாலும் நமக்குச் சிறப்பாகச் சலுகை அளித்திருக்கின்றனர்.  அதிலும் திரெளபதி இப்போது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறாள்.  அவள் தீர்மானமான முடிவை தைரியமாக சுயமாகச் சிந்தித்து எடுப்பாள் என்பது ஆர்யவர்த்தம் மட்டுமின்றி தூர தூர தேசங்களுக்கும் பரவி இருந்தது.  அப்படிப் பட்டவள் குழம்பி இருக்கிறாள் எனில்?? அதுவும் அவள் கல்யாண விஷயத்தில்.  அரண்மனை அந்தப்புரத்தின் ஒரு ஓரமாக இருந்து கொண்டு திரெளபதியைக் கவனிப்போம்.  தனக்குள்ளாக ஏதோ யோசித்துக் கொண்டும், தலையை ஆட்டிக் கொண்டும், சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தாள் திரெளபதி.  பதினாறு நாட்களாக அவள் சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளும், கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.  இந்த பெளஷ மாசத்தின் பூர்ணிமை நெருங்கும்போது அவள் சுயம்வரம் நடைபெறும்.  அந்த நாள் நெருங்க நெருங்க திரெளபதி கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்ந்தாள். இனம் தெரியா பரபரப்பும் அவளைச் சூழ்ந்து கொண்டது.

ஒவ்வொரு சமயமும் அந்த அந்தப்புரத்தின் மேன்மாடத்திற்குச் சென்று பார்ப்பாள் திரெளபதி.  அப்போது தான் அவளுக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் முழுவதும் காம்பில்யம் தன் சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருப்பது தெரிய வரும்.  தன் ஒருத்தியின் திருமணத்துக்காகத் தன் முகத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டு பல்வேறு விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கும் காம்பில்யம் அவளைத் திகைப்பில் ஆழ்த்தும்.   நகரின் வெளிப்பகுதியில் வந்திருந்த விருந்தினர்களுக்குத் தங்கவென விஸ்தரிக்கப்பட்டிருந்த பகுதியும், ஆங்காங்கே அடிக்கப்பட்டிருந்த கூடாரங்களும், கூடாரத்தின் உச்சியில் தொங்கிய பல்வேறு தேசக் கொடிகளும், மன்னர்களின் நடை பழகுதலும், அவர்களின் உடற்பயிற்சிகள், ஆயுதப் பயிற்சிகளும் அவள் கண்களில் படும்.  குதிரைகளும், யானைகளும், காலாட்படை வீரர்களும் நகரில் நெரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வந்திருக்கும் சுற்றுப்புறத்து மக்கள் மட்டுமின்றி சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் மன்னர்களும் சேர்ந்து கொள்வது.  கங்கைக்கரையிலோ எண்ணிலடங்காப் படகுகளிலும், சிறு சிறு பாய்மரப் படகுகளிலும் வந்திறங்கிய பல்வேறு நாட்டு மன்னர்கள், அவர்களின் நம்பிக்கை கலந்த சிரிப்பொலிகள், பேச்சுக்கள், பல்வேறு விதமான மொழிகள் புழங்கினாலும் ஆர்யவர்த்தத்தின் மொழியை அனைவருமே அறிந்து கொண்டு மற்றவருடன் உரையாடுகையில் அந்த மொழியிலேயே உரையாடியது. என அனைத்தையுமே திரெளபதி தினம் தினம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவை அனைத்தும் நடைபெறுவது தனக்காக என்னும் எண்ணம் அவளிடம் ஒரு பிரமிப்பை உண்டாக்கி இருந்தது.  அவள் திருமணத்திற்காக நடைபெறும் இந்தக் கோலாகலங்களில் ஆழ்ந்த இளம்பெண்களும், இளைஞர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆரவாரங்கள் செய்வதையும் கண்டாள். இப்படி அனைவருமே அவள் திருமணம் குறித்து ஆவலும் மகிழ்வும் கொண்டிருக்க அவள் மனதில் மட்டும் இனம் தெரியாச் சோர்வு.  மகிழ்வு என்பதே இல்லை.  அவள் மனதில் விதம் விதமான சந்தேகங்கள் ஏற்பட்டுக் கலைந்து கொண்டிருந்தன.  இந்த சுயம்வரத்தின் மூலம் உண்மையிலேயே தகுதி வாய்ந்த கணவன் ஒருவன் அவளுக்குக் கிடைப்பானா?  அப்படி ஒரு கணவன் கிடைத்தாலும் அவன் அவள் தந்தையின் லக்ஷியத்தைப் பூர்த்தி செய்வானா?  அதெல்லாம் போகட்டும்! கணவனைத் தேர்ந்தெடுக்கும் இந்த முறையே உண்மையில் சரியான முறைதானா?  இப்படி சுயம்வரம் மூலமும், போட்டிகள் மூலமும் தேர்ந்தெடுக்கும் ஒரு கணவன் உண்மையிலேயே அவள் தந்தைக்கு விசுவாசமாக இருந்து அவர் கோரிக்கையை நிறைவேற்றுவானா? அப்படிப்பட்டவனாக இல்லை எனில் அவன் மனதை மாற்றித் தன்பால் வசீகரித்து அதை நிறைவேற்றச் செய்யும் ஆற்றல் தன்னிடம் இருக்கிறதா? எண்ணிலடங்காக் கேள்விகள் அவளுள் எழுந்து எழுந்து மறைந்தன.  அவள் குறிக்கோளும், அவள் தந்தையின் குறிக்கோளும் சரி சமமானவையே.  இரண்டும் ஒன்றே.  ஆகவே அது நிறைவேறியே ஆகவேண்டும்.

இப்படிப்பட்ட நிச்சயமற்ற மனநிலையில் இருந்த அவளால், திருமணம் குறித்த எந்தவிதமான கோலாகல நிகழ்ச்சிகளிலும் முழுமனதோடு பங்கெடுக்க முடியவில்லை.  தான் தனியே இருந்து தீவிரமாகச் சிந்திக்கவே விரும்பினாள்.  ஆனால் அவளைத் தனியே இருக்க அரண்மனையில் இருப்பவர்கள் விடவே இல்லை.  பகலில் எப்படியோ தனியே இருந்தாலும் அவள் இரவுகளில் சுற்றிலும் தோழிகள் புடைசூழவே இருக்க வேண்டியதாக இருந்தது.  கணக்கில் இல்லாத சடங்குகள் வேறே.  ஒரு இளவரசியின் திருமணம் என்பதால் ஏற்கெனவே கோலாகலம் நிறைந்த அந்த அரண்மனை இந்தச் சடங்குகளை நிறைவேற்றி அவள் திருமணத்தில் எவ்விதக் குறையும் இருக்கக் கூடாது என்று நினைத்து அதற்கேற்பப் பல்வேறு மதச் சடங்குகளையும் வைத்திருந்தனர்.  அவற்றை அவளால் தட்ட முடியவில்லை. அதோடு மட்டுமில்லாமல் குடும்பத்தில் பெரியவர்கள், சிநேகிதர்கள், சிநேகிதிகள், பல்வேறு நாட்டு இளவரசிகள், அரசிகள் எனப் பரிசுகளை எடுத்துக் கொண்டு அவளைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். வாழ்த்துகளையும், பரிசுகளையும் தட்டமுடியாமல் ஏற்க வேண்டி இருந்தது. வரமுடியாத அரசர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் அவளுக்காகப்பரிசுகளை அனுப்பி இருந்தனர்.  அத்தகையோர் அவளை நேரில் பார்த்துத் தங்கள் பரிசுகளை அளிக்க விரும்புவதால் அவர்களையும் அவள் சந்திக்க வேண்டி இருந்தது.

இத்தனையிலும் அவளுக்கு ஏற்பட்டிருந்த முக்கியமான சந்தேகம், தன் தந்தை சுயம்வரத்தில் குரு சாந்தீபனியால் ஏற்பாடு செய்யப்பட்ட கடுமையான போட்டி உண்டு என்பதை அறிவித்துவிட்டாரா இல்லையா என்பது தான்.  அதைக் குறித்து அவளுக்கு இன்னமும் நிச்சயமாக எதுவும் தெரியவில்லை.  போட்டியில் ஜெயிப்பவனைத் தான் தான் மணக்க முடியும் என்பதையும் தந்தையார் தெரிவித்திருக்க வேண்டும்.  இந்த அரசர்கள், இளவரசர்கள் அனைவருமே தான் வெளிப்படையாகத் திறந்த ஒரு சபையில் அவர்களை ஒவ்வொருவராகப் பார்த்துத் தேர்ந்தெடுப்பேன் என நினைத்துக் கொண்டிருக்கலாம்.   அதுவும் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து கொண்டுவிட்டு அவரவருக்குப் பழக்கமான ஆயுதப் பயிற்சியிலோ, மல்யுத்தப் பயிற்சியிலோ வேறு பயிற்சியிலோ தன் திறமையைக் காட்டிவிட்டுத் தங்களை அவள் தேர்ந்தெடுப்பாள் என நினைத்துக் கொண்டிருக்கலாம்.  அப்படி எல்லாம் இல்லை எனவும் பொதுவானதொரு போட்டி உண்டென்றும் தந்தை அறிவித்திருக்க வேண்டும்.  செய்தாரா எனத் தெரியவில்லை.  குரு சாந்தீபனியால் ஏற்படுத்தப் படப் போகும் போட்டி நிச்சயம் கடினமான ஒன்றாகவே இருக்கும்;  சந்தேகமே இல்லை.  சிறந்ததொரு வில் வித்தை வீரனால் மட்டுமே வெல்ல முடியும் ஒன்றாகவும் இருக்கும்.  எப்படி இருந்தாலும் அவரவர் திறமையைக் காட்டும்படியான சாதாரணப் போட்டிகளில் எல்லாம் அவள் மனமும் திருப்தி அடைந்திருக்காது.  இப்படி ஒரு கடினமான போட்டி இருக்கத் தான் வேண்டும்.  அப்போது தான் உண்மையான வீரன் வெளிப்படுவான்.  இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்ததொரு வில் வித்தை வீரனைத் தான் அவள் மணக்க நினைக்கிறாள். சாதாரணமான ஒருவனை அல்ல.

தன் தந்தை இந்த ஆர்யவர்த்தத்திலேயே சிறந்ததொரு அரசனாக இருப்பார் எனக் கிருஷ்ணன் கூறியது உண்மையாகவே ஆகி விட்டது.  இந்த சுயம்வரத்தின் மூலம் தந்தையின் பலம் கூடித்தான் போய்விட்டது. ஆர்யவர்த்தத்திலேயே சிறந்த ஒரு அரசராகவும் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவராகவும் தந்தை விளங்குகிறார்.   இது நன்மைக்கே என்றாலும் இது முழுக்க முழுக்கப் பூர்த்தியாக ஆனாலும் இதிலும் ஒரு சங்கடம் இருக்கத் தான் செய்கிறது.  ஒருவேளை குரு சாந்தீபனியால் ஏற்படுத்தப் போகும் போட்டியில் எவருமே தேறாமால் போய்விட்டால்??  இது பல்வேறு பிரச்னைகளைத் தான் கிளப்பும்.   இந்த அரசர்கள் கல்யாணத்தையும், அரசியலாக்கவே நினைக்கின்றனர்.  அவரவர் ராஜ்ய விஸ்தரிப்புக்காகவும், அரசின் பாதுகாப்புக்காகவும் திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர்.  இப்படிப்பட்ட அரசியல் பேரங்களில் விலைபோகும் பெண் அவள் அல்ல.  திரெளபதி அனைவரிலிருந்தும் மாறுபட்டவள்.   தன்னை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் திரெளபதி.  இந்த அரசர்கள் மூடர்கள்; அவரவர் ராஜ்யத்துக்காக அவளை மணக்க நினைக்கின்றனர்.  ஆனால் அவளோ?  தன் தந்தையின் சபதத்தைப் பூர்த்தி செய்யப் போகும் ஒருவனுக்குத் தான் மாலையிடப் போகிறாள்.  ஆம் அவள் திருமணம் செய்து கொண்டால் அப்படி ஒருவனைத் தான் திருமணம் செய்து கொள்வாள்.  அவள் கணவன் அவள் தந்தைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

   

Saturday, April 19, 2014

கர்ணனின் விசுவாசம்!

“அதோடு ஒரு பிராமணன் க்ஷத்திரியப் பெண்ணையோ, இளவரசியையோ மணப்பது இது ஒன்றும் முதல்முறை அல்லவே!  பலமுறை நடந்திருக்கின்றன.  ஆனால் இங்கே வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், திரெளபதி என்னைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புக் குறைவே என்று தோன்றுகிறது.” இப்படிச் சொன்னபோதிலும் அஸ்வத்தாமாவுக்குள் தன்னைக் குறித்தும், தன் திறமைகள் குறித்தும் இறுமாப்பு நிறைய இருக்கிறது என்பதைக் கர்ணன் அவன் தன்னைப் பார்த்த பார்வையிலிருந்து புரிந்து கொண்டான்.  மேலும் அஸ்வத்தாமா, “இப்போது துரியோதனன் விரும்புவது எல்லாம் அவன் திரெளபதியை மணக்கும் வண்ணம் அவனுக்குள்ள இடைஞ்சல்களை எல்லாம் நான் நீக்கி வழியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்;  திரெளபதியை நான் மணக்காமல் இருந்தால் மட்டும் அவனுக்குப் போதாது.  அவனுக்காக அவளைப் பாதுகாக்கவும் வேண்டும்.  அவனுக்கு அவளை மணமகளாக்க வேண்டும். ஹூம், பார்த்தாயா கர்ணா!  நான் இத்தனை வருடங்களாக அவனோடு பழகி அவனுக்குச் செய்திருக்கும் எண்ணிலடங்காச் செயல்களுக்கு அவன் என்னிடம் காட்டும் நன்றிக்கடன் இது தான்!” என்றான் வெறுப்போடு.

“அஸ்வத்தாமா, அஸ்வத்தாமா!  பொறுமை, பொறுமை!” என அவனை சமாதானம் செய்தான் கர்ணன்.  மேலும், “நீ துரியோதனனிடம் கோபம் கொள்வது அர்த்தமற்றது;  அவனிடம் கோபம் கொள்ளாதே!  அவன் எப்பாடு பட்டாலும் திரெளபதியை மணந்தே ஆக வேண்டும் எனத் தன்னை அதற்கேற்பத் தயார் செய்து கொண்டிருக்கிறான்.  அதோடு அவன் ஏற்கெனவே தனக்கு உரிமையாகக் கிடைக்கவேண்டியவை எல்லாம் கிடைக்காமல் போயிற்று என மனம் வெதும்பியும் இருக்கிறான்.  இந்தத் திருமணம் அரசியல் ரீதியாக அவனுக்கு ஒரு பாதுகாப்பை மட்டும் தராது;  அவன் நிலைமையை மேலும் மேம்படுத்தும்.  அவன் வேண்டியது அவனுக்கு உடனே கிடைத்தாலும் கிடைத்துவிடும்;  அதுவும் அவன் தந்தை உயிருடன் இருக்கையிலேயே அவன் அடைய முடியும் அல்லவா?  அதை நினைத்துப்பார்.  நாம் இருவருமே அவனுக்கு உற்ற நண்பர்கள்.  நாம் இருவருமே அவனுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  அவன் தன் லக்ஷியத்தை எட்டும் தருவாயில் இருக்கிறான்.  இப்போது அவனிடம் சண்டை போட்டு அவனுடைய லக்ஷியத்தை அவன் அடையமுடியாமல் செய்யலாமா?  அவன் ஆசைகளை நசுக்கலாமா?  கொஞ்சம் யோசித்துப் பார்! “ என்றான் கர்ணன்.

“ஹா, உனக்கென்ன!  நீ சொல்வாய்!  அவன் நமக்கு எவ்வளவோ செய்திருக்கிறான் என்பது உண்மைதான்.  ஆனால் பதிலுக்கு நாமும், குறிப்பாக நான் அவனுக்குத் திருப்பி நிறையவே செய்திருக்கிறேன்.  அதை மறவாதே! அது சரி, நீ என்ன திரெளபதியை அடையப் போட்டி போடப் போவதில்லையா?  உனக்கு அந்த எண்ணம் ஏதும் இல்லையா?” கர்ணனிடம் கோபமாகப் பேசினாலும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான் அஸ்வத்தாமா.

“இத்தனை பெரிய ராஜாக்கள், மஹாராஜாக்கள், சக்கரவர்த்திகள் நிறைந்த சபையிலே என்னை யார் கவனிக்கப் போகின்றனர்?    நான் எதிலும் சேராதவன்!” கர்ணன் தன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டே பேசினான்.  “ஆஹா, அப்படிச் சொல்லாதே கர்ணா!  நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாயோ, அத்தனைக்கு இளமையோடும், கம்பீரத்தோடும், எந்தப் பெண்ணையும் கவர்ந்திழுக்கும்படியாகத் தான் இருக்கிறாய்.  அதோடு நீயும் மிகச் சிறந்த வில் வித்தை வீரன் அல்லவா?   உன் வீரத்தில் தான் என்ன குறை ? திரெளபதி மட்டும் கண்ணுக்கு அழகானவனாகவும், அதே சமயம் வீரம் மிக்கவனாகவும் ஒருவனைத் தேர்ந்தெடுக்க எண்ணினாள் எனில் உன்னைவிடச் சிறந்த இளைஞன் எவரும் இங்கே இல்லை.  நிச்சயமாக இதில் எந்த ராஜா, மஹாராஜாக்களும் உன்னுடன் போட்டியிட முடியாது. “ உண்மையான மனப்பாங்குடன் அஸ்வத்தாமா தன்னைக் குறித்துச் சொன்னது கர்ணன் மனதில் பதிந்ததோடு அல்லாமல்  அவன் கண்களில் நீரையும் வரவழைத்தது.

“ஆனால் நான் துரியோதனனோடு போட்டி போட விரும்பவில்லை, அஸ்வத்தாமா!   அதிலும் நான் எத்தகைய ஒரு நிலைமையில் இருந்தேன் என்பதை நீயும் அறிவாய்!  அப்படிப்பட்ட ஒரு தெளிவற்ற நிலைமையில் இருந்து என்னை மீட்டு, அங்க தேசத்துக்கு அரசனாக்கி, என்னையும் ஒரு அரசனாக ஆக்கிப் பார்த்தது யார்!  துரியோதனன் அல்லவோ!  என் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நான் விசுவாசமாகவே இருப்பேன்.  அப்படியும் என் நன்றிக்கடன் தீராது.  இதனால் என்ன நேர்ந்தாலும் சரி!  நான் இப்போது சொல்வது அனைத்தும் சத்தியமான வார்த்தைகள்!  இந்த என் வாக்குறுதியை நான் எப்பாடுபட்டாயினும் காப்பாற்றுவேன்.  இப்போதே பார் அஸ்வத்தாமா, உன்னிடத்தில் நான் இருந்து இப்படி ஒரு கோரிக்கையை துரியோதனன் கேட்டிருந்தால் கட்டாயமாய் அதை உடனடியாக நிறைவேற்றி  இருப்பேன். அதோடு நீ ஒரு விஷயத்தை மறந்து விட்டாய் அஸ்வத்தாமா!  குரு வம்சத்து யுவராஜாவை விட்டுவிட்டு நம்மைத் தேர்ந்தெடுப்பார்கள் என நீ நினைக்கிறாயா?  இந்தத் திருமணத்தின் மூலம் குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டுக்கும் நன்மை விளையுமெனில் நாம் ஏன் அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும்?”

“அதெல்லாம் சரி கர்ணா!  ஆனால் சுயம்வரத்தில் வில் வித்தையில் போட்டி இருந்தால்,  உன்னைத் தவிர வேறு எவர் அதில் வெல்வார்கள்?”

“ஆம், என்னால் முடியும் தான்! ஆனால் அதை விட முக்கியமான ஒன்று எனக்கு நன்கு தெரியும்.  அது என்னவெனில் நான் ஒரு தேரோட்டியின் மகன். அரச குலத்தவர் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது.  அப்படி நான் இந்த சுயம்வரத்தில் வில் வித்தைப் போட்டியில் பங்கேற்றேன் எனில் அதுவும் துரியோதனனுக்காகத் தான் இருக்கும்.  மூவுலகிலும் சிறந்த தேர்ந்த ஒரு வில் வித்தை வீரன் தன்னுடைய கட்டளைக்கு அடங்கியவன் என்பதை அவன்  இங்கே வந்திருக்கும் ஆர்யகுல அரசர்களுக்குத் தெரிவிக்கலாம் இல்லையா!”

“கர்ணா, கர்ணா, உன் பலவீனமே இது தான்.  நீ எப்போதும் ஒரு தேரோட்டியின் மகன் என்பதை மறப்பதே இல்லை.  நீ தேரோட்டியால் வளர்க்கப்பட்டவன்! இதற்கு மேல் உன் ஆசைகளையும் அபிலாஷைகளையும் மேம்படுத்திக் கொண்டு உயர வரப் பார்ப்பாய்!  உனக்கு இதைவிட அதிகமாக நினைக்கவே தோன்றவில்லையா?  இது தான் உன்னிடம் மிகப் பெரிய தொந்திரவு!”

“அஸ்வத்தாமா, தேரோட்டியின் மகன் தானே நான்!  அது தானே உண்மை!  உண்மையை மறைக்கவோ, மறக்கவோ இயலுமா?  எனக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்.  விலைமதிக்க முடியா இந்த நட்புக்கு நான் எப்படி நன்றி செலுத்தவேண்டும் என்பதை அறிவேன்.   என்னிடம் என்ன இருந்தது?? இப்போது இருப்பவை அனைத்தும் துரியோதனன் கொடுத்தது தானே!   இதை மறந்தேன் எனில் நான் நன்றி கெட்டவன் ஆகிவிடுவேன்.  அஸ்வத்தாமா, உனக்கும் தான் சொல்கிறேன்.  உனக்கும் துரியோதனன் நிறையவே செய்திருக்கிறான்.  அதை நீயும் மறவாதே!  அவனிடம் நன்றியில்லாமல் பேசாதே!”

கர்ணனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அஸ்வத்தாமா!  அவன் முகம் எல்லாம் வியர்த்தது.  தனக்குள்ளே ஏதோ யோசிப்பவன் போல் நின்றிருந்தவன் தன்னை உலுக்கி விட்டுக் கொண்டு சொன்னான்: “உண்மைதான் கர்ணா!  நீ சொல்வது சரியே!  துரியோதனன் கேட்கும் வாக்குறுதியை நான் திரெளபதிக்கு அளித்தே ஆகவேண்டும்.  இல்லை எனில் செய்ந்நன்றி மறந்தவன் ஆவேன்.” என்றான்.

“போ, போய் உன் வாக்குறுதியை அவனுக்கு அளித்து அவனை சந்தோஷம் அடையச் செய்!  செய்வாய் என நம்புகிறேன். “ மிக மிக இனிமையாகப் பேசினான் கர்ணன்.  “சரி, சரி, அது தான் நீ கேட்பது எனில் அதை நான் செய்கிறேன்;  செய்துவிடுகிறேன்.  இப்போது உனக்குத் திருப்தியா?  ஆனால் ஒன்று!  இதுதான் நான் துரியோதனன் சொல்வதைக் கேட்பது கடைசிமுறையாக இருக்கும். இனி நான் அவன் சொல்வதைக் கேட்க மாட்டேன்.” என்று திட்டவட்டமாக அறிவித்தான் அஸ்வத்தாமா.

“நண்பா, என் அருமை நண்பா, அஸ்வத்தாமா!  நாம் துரியோதனன் பக்கமே எப்போதும் நிற்க வேண்டும்.  அவனுக்கு உதவியாக.  எத்தனை முறைகள் என்பதை எல்லாம் இப்போதே சொல்ல இயலாது.  அவன் ஒவ்வொரு முறையும் எப்படியோ இக்கட்டுகளில் மாட்டிக் கொள்கிறான்.  அவனிடமிருந்தே அவனை நாம் காப்பாற்றியாக வேண்டும்.”  என்றான் கர்ணன்.
********************************************************************************
நாக நாட்டு இளவரசன் ஆன மணிமான் உத்தவனோடு காம்பில்யம் வந்ததும் தனக்குக் கிடைத்த வரவேற்புகளைப் பார்த்துவிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.  அவன் இப்போது முன்னைப் போல் உல்லாசியாக இல்லை.  தன் மைத்துனன் ஆன உத்தவனால் ஒரு நல்ல வீரனாக, ஆயுதப் பயிற்சிகளில் தேர்ந்தவனாக ஆகிவிட்டிருந்தான்.   உத்தவனும் அவனை மிகச் சிறந்த வீரனாக ஆக்குவதாக உறுதி கொடுத்திருந்தான்.  புஷ்கரத்தில் நடந்த கோலாகலங்களிலும் கலந்து கொண்ட மணிமான், கிருஷ்ணன், பலராமன் ஆகியோரின் உபசரணைகளிலும் அன்பிலும் திக்குமுக்காடித் திணறினான்.   அவன் மரீஷாவின்  அண்ணன் பேரன் என்பதில் யாதவர்களும் அவனிடம் மிகவும் அன்பாகவும் பக்ஷமாகவும் இருந்தனர்.  அனைத்து அதிரதர்களுடனும் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டான்.

தன் நாக இனத்துப் படைகள் இந்த ஆர்ய வர்த்தத்தின் மாபெரும் அரசர்களோடும், அவர்களின் வீரர்களோடும் இணைந்து ஒன்றாக இருப்பதில் அவன் உள்ளூர மகிழ்ச்சி அடைந்தான்.  அவனுக்கு திரெளபதியின் சுயம்வரத்தில் ஆர்வம் ஏதும் இல்லை;  அவள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும்.  அவனுக்கு ஆக்ஷேபணை இல்லை.  அவனுக்கு அவனுடைய நாக நாட்டுப் பெண்களே போதும்.  இந்த மாபெரும் ஆர்யவர்த்தத்தின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியெல்லாம் தேவையே இல்லை.  இருவருக்கும் எவ்வகையிலும் ஒத்துப் போகாது என்பதையும் அவன் நன்கறிவான். ஆரிய அரசர்களோடு கலந்து பழகுவதில் அவனுக்குக் கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.  அவன் மக்களுக்கு ஆரியர்களின் ஊடுருவல் இனி இருக்காது;  அவர்கள் நம் நண்பர்கள் என்னும் ஒரு பாதுகாப்பு உணர்வை அவனால் கொடுக்க முடியும்.  இதுவே அவனுக்கு மிக மகிழ்ச்சியை அளித்தது.  அப்போது சிகுரி நாகா அவனுடைய படைகளின் தலைமைத் தளபதி அங்கே வந்தான்.  அவனிடம், “ஐந்து சகோதரர்களையும் குறித்து ஏதேனும் தெரிந்ததா?” என மணிமான் கேட்டான்.  எல்லாக் கூடாரங்களையும் தான் நன்கு அலசிப் பார்த்துவிட்டதாக சிகுரி நாகன் தெரிவித்தான்.   “எங்கேயும் இல்லை என்றா சொல்கிறாய்?  இது என்ன?  கிருஷ்ணனுக்கு நான் என்ன பதிலைக் கொடுப்பேன்?  சரி, நீயும் வா, அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வருவோம். “ என்று மணிமான் சிகுரி நாகனையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணனைப் பார்க்கக் கிளம்பினான்.

 

Monday, April 14, 2014

அஸ்வத்தாமாவும் போட்டியிடுகிறான்!

சுயம்வரத்தையே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதாக ஜராசந்தன் கூறினான். என்றாலும் அவன் மனதுக்குள்ளாக இது நடக்கும் காரியமா என்ற சந்தேகமே இருந்தது.  இவ்வாறு நடந்தால் என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பார்த்தான்.  இங்கே குரு வம்சத்து இளவல்கள் வந்திருக்கின்றனர். அவர்களோடு ஒரு சிறிய ஆனால் வலுவான படை வந்துள்ளது.  யாதவர்களிலும் வல்லமை படைத்த யாதவர்களாகப் பொறுக்கி எடுத்துக் கிருஷ்ணன் அழைத்து வந்திருக்கிறான்.  பாஞ்சால வீரர்களைக் குறித்தோ எதுவுமே சொல்ல வேண்டியதில்லை.  இது அவர்கள் நாடு என்பதோடு ஏற்கெனவே அவர்கள் வலிமை பெற்றே விளங்குகின்றனர்.  ஜராசந்தனுக்குக் கவலை அளிக்கும் விஷயமே அவர்களின் அதிகாரப் பரவலும், வலிமையும் தானே.  அதற்காகத் தானே அவர்களைத் தன்னோடு திருமண பந்தத்தின் மூலம் இணைக்க விரும்புகிறான்.

 இவர்களின் வலிமை போதாது என வந்திருக்கும் அரசர்கள் அனைவருமே கிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக ஆகிவிட்டனர்.  அவன் எடுக்கும் முடிவைத் தான் அவர்கள் ஆதரிப்பார்கள்.  இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு சுயம்வரத்தை உடைக்க நினைக்கும் ஜராசந்தனைத் தாக்கினால்??  ஜராசந்தனுக்குத் தோல்வி தான் கிட்டும்.  ஆகவே அவன் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று.  துருபதனை எவ்வகையிலேனும் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்க வைத்து ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவேண்டும். அப்படி அவன் மறுத்தால் அடுத்த கணமே ஜராசந்தன் இங்கிருந்து தன் நாட்டுக்குப் பறந்துவிட வேண்டும்.  வெறும் கையோடா?  இல்லை…இல்லை,… திரெளபதியைத் தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.  ஜராசந்தன் தனக்குள் தீர்மானித்து விட்டான்.

தன் மகனைப் பார்த்து, “துருபதன் என்னை ஏமாற்றாமல் இருக்க வேண்டும். சஹாதேவா, அவனிடம் தீர்மானமாய்ச் சொல்லிவிடு.  அவனுடைய உளறல்களை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்காதே!  எப்படியாயினும் திரெளபதி மேகசந்தியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்;  இல்லை எனில் துருபதன் ஜராசந்தனை எதிர்கொள்ளும்படி இருக்கும்;  போர்க்களத்தில்! என்று திட்டவட்டமாய்த்தெரிவித்து விடு.” இத்தோடு அந்த சபை கலைந்ததற்கு அடையாளமாய் ஜராசந்தன் தலையை அசைத்தான்.


இப்போது குரு வம்சத்தினர் இருக்கும் கூடாரத்தின் பக்கம் போய் அவர்கள் முயற்சி எல்லாம் எம்மட்டில் இருக்கிறது எனப் பார்ப்போமா?  கர்ணன், அஸ்வத்தாமா இருவருமே துரியோதனனுக்கு மிக நெருங்கியவர்கள்.  ஆகையால் துரியோதனனின் கூடாரத்துக்கு அருகிலேயே அவர்கள் இருவரும் கூடாரம் அடித்துத் தங்கி இருந்தனர்.  கர்ணன் சூரிய வழிபாடு செய்பவன்.  அதோடு அவன் தன்னுடைய வழிபாட்டு விஷயங்களிலும், அநுஷ்டானங்களிலும் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டான்.  எங்கே இருந்தாலும் சூரிய வழிபாட்டையும், அநுஷ்டானங்களையும் மிகச் சரியாகச் செய்து முடித்துவிடுவான். அன்றும் காலை எழுந்ததும் முதல்வேலையாக  கங்கையில் குளித்துவிட்டு சூரியனுக்கு அர்க்யம் விடுவதைச் செய்து முடித்தான்.  அவன் தினம் தினம் ஏழைகளுக்கு தானம் செய்துவிட்டுத் தான் தன்னுடைய உணவை உட்கொள்ளுவது என்று ஒரு நியமம் வைத்திருந்தான்.  அது போல் அன்றும், அங்கேயும் ஓர் மரத்தடியில் அமர்ந்த வண்ணம் கண்களில் எதிர்ப்பட்ட ஏழை மக்களுக்குத் தன்னால் இயன்ற தானங்களைச் செய்து கொண்டிருந்தான்.


குரு வம்சத்து துரியோதனனின் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் கர்ணன் முகத்தில் ஒளிர்ந்ததொரு அபூர்வமான ஒளி அவன் நேர்மையிலும், உண்மையிலும் பற்றுள்ளவன் என்பதைச் சொல்லாமல் சொன்னது.  அவன் கண்களோ வைரமணிகளைப் போல் ஜொலித்தன.  அதில் சூழ்ச்சியையோ, வஞ்சகத்தையோ காணமுடியவில்லை.  எவரையும் நேருக்கு நேர் சந்தித்துப்பேசும் ஆற்றலையே கொண்டிருந்தன அந்தக் கண்கள்.  தானம் அளிக்கையில் அவன் முகமோ கருணையின் சொரூபமாகவே மாறி எல்லையில்லா அன்பையும், கருணையும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. இதழ்களில் தோன்றிய முறுவல் அந்த அன்புக்கும், கருணைக்கும் மேலும் மெருகு கூட்டிக் கொண்டிருந்தது.  ஏழைகளையும், இல்லாதவர்களையும், முடவர்களையும், குருடர்களையும் பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு மனமார உதவ வேண்டும் என்னும் நினைப்பைத் தவிர்த்து வேறொன்றும் இல்லாதவனாகத் தோன்றினான்.  அப்போது துரியோதனனின் கூடாரத்திலிருந்து அஸ்வத்தாமா வெளி வந்தான்.  தூக்கிக் கட்டிய கொண்டையும், கையில் வில்லோடும் அம்புறாத்தூணியோடும் வந்த அவன் புருவங்கள் நெரிந்து சிந்தனையில் இருப்பதைக் காட்டின.  கர்ணன் தன் தானங்களை அளித்து முடிக்கும்வரை பொறுமையுடன் காத்திருந்தான் அவன்.  பின்னர் இருவருமாக உணவருந்த அமர்ந்தனர்.

அஸ்வத்தாமா எதுவோ சொல்லத் துடிப்பதைக் கர்ணன் உணர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.  அஸ்வத்தாமாவாலும் வெகு நேரம் பொறுக்க முடியவில்லை.  பட்டென வெடித்தான். “கர்ணா, துரியோதனனின் சுயநலத்துக்கு அளவே இல்லாமல் போகிறதே!” என்று ஒரு நீதிமானுக்குரிய சீற்றத்தோடும், நேர்மையைத் தொனிக்கும் குரலோடும் கூறினான் அஸ்வத்தாமா.  கர்ணன் பொறுமையாக, “என்ன ஆயிற்று அஸ்வத்தாமா? நீயே இவ்வளவு கோபப்படும்படியாக ஏதோ நிச்சயம் நடந்திருக்கிறது.  அது என்ன?  ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறாய்?” என்று கேட்டான். “ ஹூம், துரியோதனன் மிக மிக அவசரமாக என்னை இப்போது கூப்பிட்டனுப்பினான் அல்லவா?  அதன் காரணம் என்னவென உனக்குத் தெரியுமா?”  அஸ்வத்தாமா  கேட்கக் கர்ணன் அதே சிநேகமான தொனியில், “தெரியாது, அஸ்வத்தாமா, நிதானமாகச் சொல்வாய்!”  என்றான்.  “அவன் என்னை ஒரு சபதம் எடுத்துக்கொள்ள அழைத்திருக்கிறான்.  அதைக் கேட்டாலே சிரிப்பாய். அவ்வளவு நகைப்புக்கிடமான செயல் அது!  அதோடு மிகுந்த சுயநலம் கொண்டதும் கூட!” பொரிந்து தள்ளினான் அஸ்வத்தாமா.  அவனால் அவனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியின் காரணமாக சாப்பாடைக் கூட ஒழுங்காய்ச் சாப்பிட முடியவில்லை.  தடுமாறினான். அவன் தொண்டையை அடைத்தது.   கர்ணன் இவை எல்லாவற்றுக்கும் பழக்கப்பட்டவனாகவே இருந்தான்.  அவன் அஸ்வத்தாமாவைப் போல் பதற்றம் கொள்ளவே இல்லை.  நிதானமாகவே இருந்தான்.

அதோடு அவன் நண்பர்கள் இப்படி அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது அவன் வரையில் புதிதும் இல்லை.  எப்போதும் நடக்கும் ஒன்றுதான்.  எரிமலை வெடிக்குமா, வெடிக்குமா எனக் காத்திருந்து கடைசியில் எதுவும் இல்லாமல் போகும்;  அது போல இவர்களும் இப்படித் தான் ஒருவருக்கொருவர் வெடித்துச் சிதறுவார்கள் என நினைத்தால், கடைசியில் ஒன்றும் இருக்காது.  கர்ணன் அஸ்வத்தாமாவிடம், “நிதானமாக நடந்தது என்ன என்பதைச் சொல்லு.” என்றான்.  “திரெளபதியை அடையக் கிருஷ்ண வாசுதேவனின் உதவியை துரியோதனன் எதிர்பார்க்கிறான்.” என்று ஆரம்பித்தான் அஸ்வத்தாமா.  தொடர்ந்து, “ ஆனால்…..ஆனால்….. இந்த யாதவர்கள், ஒருக்காலும் இதற்கு ஒப்ப மாட்டார்கள்.  ஏனெனில் தந்தையார் துருபதனிடமும், திரெளபதியிடமும் விரோதம் பாராட்டுகிறார் அல்லவா? ஆகவே துரியோதனன் யாதவர்களிடம் வாக்குக் கொடுக்க வேண்டுமாம்; அதாவது  துரோணாசாரியார் இப்படிச் சொல்ல வேண்டுமாம்: “குரு வம்சத்துத் தளபதியான நான் பாஞ்சால இளவரசி திரெளபதி குரு வம்சத்து மருமகளாய் ஹஸ்தினாபுரம் வந்தால் அவளிடம் விரோதம் பாராட்ட மாட்டேன்; ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேற மாட்டேன். “ என்றெல்லாம் என் தந்தை வாக்குக் கொடுக்க வேண்டுமாம்.  அதை துரியோதனன் யாதவர்களிடம் சொல்லி அவர்கள் உதவியை வாங்கிக் கொள்வானாம்.  என் தந்தையும், நானும் அவனுக்கு அவ்வளவு மட்டமாகவா போய்விட்டோம்.  நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?” குமுறினான் அஸ்வத்தாமா.  அவன் தொண்டையை துக்கம் அடைத்தது.

“அது சரி, அப்பா,  அதற்கு நீ என்ன செய்வாய்? உன்னை ஏன் கூப்பிடுகிறான்?” என்று அஸ்வத்தாமாவைச் சமாதானம் செய்யும் குரலிலேயே கேட்டான் கர்ணன்.  ஆனால் பொறுமை இழந்திருந்த அஸ்வத்தாமாவுக்குக் கர்ணனின் நிதானம் எரிச்சலையே வரவழைத்தது.  மாறாக அவன், “பொறுமையின்றிப் பேசாதே கர்ணா.  நிதானமாகப் பேசு! திரெளபதி குரு வம்சத்து மருமகளாக ஹஸ்தினாபுரம் வரும்போது  என் தந்தை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லக் கூடாதாம். அதற்காக நான் என் உயிரைக் கொடுத்தாவது என் தந்தையைப் போகாதிருக்கச் செய்வேன் என சபதம் கொடுக்க வேண்டுமாம். இந்த துரியோதனன் அதற்குத் தான் என்னை அழைத்திருக்கிறான். ஆரம்பத்திலிருந்தே அஸ்வத்தாமாவின் இந்தக் கோபத்தை விளையாட்டாகவே எடுத்துக் கொண்ட கர்ணன், இப்போதும் விளையாட்டாகவே அவனிடம், “அப்போது நீ ஏன் இந்த சபதம் எடுத்துக் கொள்ளத் தயங்குகிறாய்?  எடுத்துக் கொள்ள வேண்டியது தானே!” என்று கேட்டான்.

“ஆஹா, என்ன சொன்னாய் கர்ணா?  நான் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?  என் தந்தையின் விரோதியான ஒருவனின் மகளை துரியோதனன் மணந்து கொள்ள  வேண்டி, நான் என் தந்தையின் விரோதத்தைக் கூடப் பாராட்டாமல் இருக்க வேண்டுமா?  இதன் மூலம் அவருக்கு ஏற்படும் அவமானங்களை நான் சகித்துக் கொள்ள வேண்டுமா? அதற்கு சபதம் எடுக்க வேண்டுமா?  ஏன் , எதற்கு?  நான் அப்படி ஒரு சபதம் எடுத்துத் தான் தீர வேண்டும் எனில் துரியோதனனுக்காக இல்லை,  விரோதி என்றும் பாராது, அந்த இளவரசியை மணக்க  என் தந்தையின் சம்மதம் கிடைத்துவிட்டால் நானே மணந்து கொண்டுவிடுவேனே!  துரியோதனனுக்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? இவனுக்காக என் தந்தை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்லக் கூடாது எனில் எனக்காகவும் செல்லாமல் இருக்கலாமே!”

கடகடவெனச் சிரித்த கர்ணன், “ அது சரி, அஸ்வத்தாமா, உண்மையாகவே நீ பாஞ்சால இளவரசியை மணந்து கொள்ள விரும்புகிறாயா? என்று கேட்டான்.  “ஏன் கூடாது?   நான் எதில் குறைந்தவன்?  மாபெரும் வீரரும், குரு வம்சத்தினரின் ஆசாரியரும் ஆன துரோணரின் ஒரே பிள்ளை என்னும் தகுதி மட்டுமில்லாமல் ற என் வில் வித்தையின் சிறப்பை நீ அறிவாய்!  என் வீரத்தைக் குறித்தும் நீ நன்கு அறிவாய்! இங்குள்ள அனைத்து அரசர்களும் எதிர் வந்தாலும் அனைவரையும் எதிர்கொள்ளும் ஆற்றல் எனக்கிருக்கிறது என்பதை நீ நன்கறிவாய்!  இத்தனை அரசர்களை விடவும், நான் நல்ல தகுதி வாய்ந்த மணமகனாக திரெளபதிக்கு அமைவேன்.  அது சர்வ நிச்சயம்!” என்றான் அஸ்வத்தாமா!

Friday, April 11, 2014

ஜராசந்தனின் கோபம் --தொடர்ச்சி!

ஹூம், அவனும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்து இந்தக் கிருஷ்ணனை எப்படியானும் வெல்ல நினைத்தான்.  இதற்காகவே ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களுக்கும் சேர்த்து ஒரு பாடமாக இருக்கட்டும் என மத்ராவையே எரித்துச் சாம்பலாக்க முனைந்தான்.  ஆனால்!! அதிலும் இவனுக்குத் தோல்வி தான்! எப்படியோ அந்தக் கிருஷ்ணன் அதைத் தெரிந்து கொண்டு அனைத்து யாதவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டான்!  இப்படி கிருஷ்ணனை வெல்ல வேண்டி அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் ஜராசந்தனுக்கே எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது.  ஆனால் அந்தக் கிருஷ்ணன்!  அனைவரும் போற்றி வணங்கும் ஒரு கடவுளாக, நாயகனாக ஆகிவிட்டான்.  அனைவர் கண்களிலும் ஜராசந்தனின் கொடூரம் தான் தெரிகிறது.   இதனால் ஜராசந்தன் வேறு வழியின்றி மகதம் திரும்பிச் செல்லவும் நேரிட்டது.  அங்கே இத்தனை வருடங்களைக் கழிக்கவும் நேரிட்டு விட்டது.  ஆனால் ஜராசந்தன் இத்தனை வருடங்களாக வீணே கழிக்கவில்லை.  துருபதனுக்கும், துரோணாசாரியாருக்கும் இடையில் உள்ள தீராப்பகையைப் புரிந்து கொண்டு துருபதனை துரோணரின் மேல் இன்னும் ஆத்திரமும், கோபமும் கொள்ள வைத்திருக்கிறான்.  அவன் நினைத்த மாதிரி மட்டும் நடந்துவிட்டால், அவனுக்கே வெற்றி கிடைக்கும்.  அந்த வெற்றியும் காம்பில்யத்துக்கும், ஹஸ்தினாபுரத்துக்கும் இடையில் நடைபெறப் போகும் மாபெரும் போரில் அடங்கி உள்ளது.  இதில் தான் அவனுடைய எதிர்கால வெற்றியே அடங்கி உள்ளது.

மிகவும் யோசித்து அவன் கடைப்பிடித்த ஒரு கொள்கையால் இன்று அது அவன் பேரன் மேகசந்திக்கும், திரெளபதிக்கும் திருமணம் நடக்கலாம் என்னும் நிலைமைக்கு வந்துள்ளது.   இதற்காக அவன் எவ்வளவு திட்டங்கள் போட்டான்!  எத்தனை கஷ்டப்பட்டு துருபதனைத் தன் வழிக்குக் கொண்டு வந்திருக்கிறான்!  குரு வம்சத்தினரை அடியோடு அழிக்காவிட்டாலும் இந்தத் திருமணத்தின் மூலம் அவர்களைப் பலஹீனம் அடையச் செய்ய முடியும். அதற்காகத் தானே இத்தனை பாடுபட்டிருக்கிறான் ஜராசந்தன்!  அவன் வாழ்நாள் முழுவதும் அவன் காத்திருந்தது ஆர்யவர்த்தத்தைத் தன் பிடிக்குள் கொண்டு வருவதற்கே.  அதற்கான சமயம் இப்போது வந்துவிட்டது.  திரெளபதி மட்டும் மேகசந்தியை மணந்தால், வெகு எளிதாக குரு வம்சத்தினரை பலம் குன்றச் செய்துவிட முடியும்.  ஆர்யவர்த்தத்தின் இதயம் போன்ற பகுதி அவன் பிடிகளுக்குள் வந்துவிடும்.  ஆயிற்று; ஜராசந்தனுக்கும் வயதாகி வருகிறது. இதுவே அவன் கடைசி வாய்ப்பு.  இப்போது இல்லை எனில் இனி எப்போதும் இல்லை.  ஆகவே முழு மூச்சுடன் முயன்றே ஆகவேண்டும்.  விடக் கூடாது. ஜராசந்தன் பற்களைக் கடித்துக் கொண்டான்.

ஆனால்…ஆனால்…. இந்த துருபதனை எவ்வளவு தூரம் நம்பலாம்? அழுத்தமான ஆள் அவன்.  மனதில் இருப்பதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டான்.  நழுவி  விட்டான் எனில்? ஜராசந்தனுக்கு அதுதான் கவலையாகவும் இருந்தது.  ஏனெனில் ஜராசந்தன் அவனிடம் பேசிய போதெல்லாம் அவன் பிடி கொடுத்தே பேசவில்லை.  திருமண பந்தத்தை உறுதி செய்து கொள்ளலாம் என ஜராசந்தன் கேட்டபோதெல்லாம் பதிலே கொடுக்கவில்லை.  ஆனால் தனக்கு ஆர்வம் இருப்பதாக மட்டும் காட்டிக் கொண்டான்.  முடிவு எதுவும் சொல்லவில்லை; அப்படி இருக்கையிலேயே அவன் செய்த காரியம் ஜராசந்தனுக்குள் கோபாக்னியை மூட்டியது தான்! அந்தக் கிருஷ்ண வாசுதேவனுக்குப் பெண்ணைக் கொடுக்கப் போவதாக துருபதன் முடிவு செய்து விட்டான் என்னும் தகவல் அவனுக்குக் கிட்டியது.  ஜராசந்தன் கொந்தளித்தான்.   அவன், மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தன் தன் பேரன் மேகசந்திக்கு என நிச்சயம் செய்ய விரும்பும் பெண்ணை அந்த மாட்டிடையன், ஜராசந்தனின் ஜன்ம எதிரி அவனுக்கா கொடுக்கப் போகிறான்!  இது அவனுக்குப் பிடிக்காத விஷயம் என்பதை துருபதன் அறிய மாட்டானா? கிருஷ்ணனும், ஜராசந்தனும் பகைவர்கள் என்பதை இந்த நாடே அறியுமே!

ஆனால் அதற்குள்ளாகக் கிருஷ்ண வாசுதேவன் திரெளபதியை மணக்க மறுத்துவிட்டான் என்னும் செய்தி கிடைத்தது.  அப்புறம் தான் ஜராசந்தனுக்குக் கொஞ்சம் ஆறுதல் ஆயிற்று.  என்ன இருந்தாலும் அந்தக் கிருஷ்ண வாசுதேவன் ஜராசந்தனை நன்கு அறிந்தவன்.  அவன் தன் பேரனுக்காக திரெளபதியைப் பெண் கேட்டதும், நிச்சயம் செய்ய இருந்ததும் அவன் அறியாமலா இருந்திருப்பான்!  அதனால் தான் மீண்டும் மகதச் சக்கரவர்த்தியோடு ஒரு பிளவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என மறுத்திருக்கிறான் போலும்!  அதன் பின்னர் தான் அவனுக்கும் துருபதனிடமிருந்து சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டிய அழைப்பும் வந்தது.  அப்போது தான் ஜராசந்தனுக்கும் கொஞ்சம் நிம்மதி வந்தது.  உடனே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டான்.   இந்த ஆரிய அரசர்களே விசித்திரமானவர்கள். அவர்கள் பெண்ணின் திருமணத்தை இப்படி எல்லாம் விசித்திரமான வழிகளிலே நிச்சயம் செய்ய விரும்புகின்றனர்.  அதனால் என்ன?  அதுவும் அந்தப்பெண்ணிற்குப் பிடித்திருக்கவேண்டுமாம். அவளே தேர்ந்தெடுப்பாளாம் தனக்கு ஏற்ற மணமகன் இவன் தான் என!  ஹாஹாஹா,  என் அருமைப் பேரன் மேகசந்தியின் திறமைக்கும், வீரத்துக்கும் அந்தப் பெண் அவனை மறுக்க முடியுமா என்ன?    என்ன இருந்தாலும் இது ஜராசந்தனுக்குக் கொஞ்சம் பிடிக்கவில்லை தான்.  ஆனால் துருபதனிடம் பேசி அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டும்.  சின்னக் குழந்தைகளைப்போல் நடந்து கொள்கின்றனர் இந்த ஆரியர்கள்!

எல்லாம் சரி.  இந்த வாசுதேவக் கிருஷ்ணன் இப்போது இங்கே ஏன் வந்துள்ளான்?  ஜராசந்தனுக்கு அவன் வருகை குறித்துக் கேட்டதிலிருந்தே இனம் தெரியாத தவிப்பாக இருந்தது.  அந்த மாட்டு இடையன் திரெளபதி எல்லா தேசத்து அரசர்கள், ராஜகுமாரர்கள் கூடி இருக்கும் பெரிய சபையில் அவனைத் தேர்ந்தெடுத்து மாலை இடுவாள் என்னும் ஆசையில் வந்திருக்கிறானோ!  அப்படி மட்டும் நடந்து விட்டால்!  அந்த இடையனை எதுவுமே செய்ய முடியாது.  அவன் அதிகாரம் ஓங்கி விடும்.  ஹூம் ஆனால் அவன் தான் இவளை ஏற்கெனவே திருமணம் செய்ய முடியாது என மறுத்திருக்கிறானே! அப்படியும் மீண்டும் விரும்புவானா என்ன?  இருக்கலாம்.  இந்த இடையனுக்கே இம்மாதிரி அனைவரும் ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் அனைவரும் பிரமிக்கத் தக்க விதத்தில் நிகழ்ச்சிகள் நடந்தால் பிடிக்கும்.  இதை எல்லாம் ஒரு பெரிய வெற்றி எனக் கொண்டாடுவான். அனைவருமே கொண்டாடுவார்கள்.  குண்டினாபுரத்தில் பீஷ்மகன் இந்த இடையனுக்கு அமரக் கூட இடம் கொடுக்கவில்லை.  அப்படி இருந்தும் அவனுக்கு ஒரு சக்கரவர்த்திக்கு உரிய மரியாதைகளும், வரவேற்பும் கிடைத்தது.  அவனும் ருக்மிணியைத் தூக்கிச் சென்றான்.  அப்போது அவன் ஒரு சாதாரண யாதவத் தலைவனாக மட்டுமே இருந்தான்.  ஆனால் இப்போதோ!  அவனுடைய இந்த நீண்ட நாள் எதிரி ஒரு வலிமை மிக்க வீரனாக, எல்லா பலமும் உள்ளவனாக அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் காந்த சக்தி கொண்டவனாக அவன் சொன்னால் அதை உடனே நிறைவேற்றும் இளைஞர்கள் கொண்ட படையைக் கொண்டவனாக சர்வ சக்தி படைத்தவனாக அல்லவோ மாறிவிட்டான்.

இவன் உண்மையில் ஒரு அரசனே இல்லை. துவாரகையை இவன் ஆளவும் இல்லை;  ஆனால் இவன் என்னமோ மாபெரும் சக்கரவர்த்திக்குரிய அனைத்து மரியாதைகளையும் அன்றோ பெற்று வருகிறான். ஆர்ய வர்த்தத்தின் அனைத்து அரசர்களாலும் பேசப்படுவதோடு அல்லாமல் அவனை , இந்த மகதச் சக்கரவர்த்தியான ஜராசந்தன், பீஷ்மன், துருபதன் போன்றோருடனும் இணைத்து சமமாக அன்றோ பேசுகின்றனர். இப்படி மன்னர்களும், சக்கரவர்த்திகளும் பேசுவது மட்டும் இல்லாமல் சாமானிய மக்களுக்கோ இவன் ஒரு கடவுளாகவே கண்களுக்குத் தெரிகிறான்.  இவனை விழுந்து வணங்கி இவன் ஆசிகளுக்கும், தரிசனத்துக்கும் காத்திருக்கின்றனர்.

Thursday, April 10, 2014

ஜராசந்தனின் கோபம்!

“குழந்தாய், நம்முடைய துரிதமான நடவடிக்கைகளால் அவர்களைத் திகைக்க வைத்து ஆச்சரியப்பட வைத்து நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதே வெற்றிக்கு முக்கியமான அடிப்படைத் தேவைகளாகும்.  நம்முடைய வீரர்களிலேயே சிறந்தவர்களாகப் பொறுக்கி எடுத்துக் கொண்டு நீ நினைத்ததை நிறைவேற்று.  ஆனால் ஒரு விஷயம், கவனமாகக் கேள், நீ உன் முயற்சியை ஆரம்பித்துவிட்டாயானால் பின்னர் பின்வாங்கக் கூடாது. தயக்கமே இல்லாமல் முழு முயற்சியுடன் உன் வேலையைச் செய்யவேண்டும். “ தன் அருமைப் பேரனுக்கு ஊக்கமளிக்கும் வண்ணம் இதைச் சொன்ன ஜராசந்தன் சற்று யோசித்தான். பின்னர் அதே யோசனையுடனேயே, “குழந்தாய், நீ இந்த முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கையில் நாங்கள் சுயம்வர மண்டபத்திற்குச் செல்லும் வழியில் உள்ள சாலைச் சந்திப்பில் காத்திருப்போம்.  உன் வேலையை முடித்துக் கொண்டு வெற்றி கிட்டியதும் நீ உன் சங்கை எடுத்து வெற்றி முழக்கம் செய்வாயாக!  நாங்கள் அதைக் கேட்டதும் உன்னோடு வந்து மகதம் செல்லும் ராஜபாட்டையில் சேர்ந்து கொள்கிறோம்.  கவனமாகச் செய்ய வேண்டும்.” என்று முடித்தான்.

இவை அனைத்தையும் ரகசியமாகவே தன் மகனும், பேரனும் மற்ற நெருங்கிய படைத்தலைவர்களும் கேட்கும்படி சொல்லிக் கொண்டிருந்தான் ஜராசந்தன்.  அப்போது அவனுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசன் விதண்டன் என்பவன் தன் மகன் தண்டனோடு ஜராசந்தனின் கூடார வாயிலுக்கு வந்தான். அவன்  உள்ளே வந்ததுமே அவனிடம் மிகுந்த கோபத்தைக் காட்டிய ஜராசந்தன் அவன் தாமதமாக வந்ததன் காரணத்தையும் கேட்டான்.  தாங்கள் அனைவரும் முன்கூட்டியே வந்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்க விதண்டன் தாமதமாக வந்தது ஜராசந்தனால் சகிக்க முடியவில்லை.  ஆனால் அவன் பதிலளித்ததுமோ!  ஜராசந்தனின் கோபம் கொதிநிலைக்கே போய் விட்டது.  தன்னிரு கரங்களையும் கூப்பி ஜராசந்தனை வணங்கிய விதண்டன் தன் மகனையும் வணங்கச் சொல்லி ஜாடை காட்டினான்.  பின்னர் கைகள் கூப்பிய வண்ணமே, “பிரபுவே, நாங்கள் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பினோம்.  ஆனால் இங்கே வரும் வழியில் பெரும் கூட்டம் எங்கள் வழியை மறித்துவிட்டது.  அந்தப் பெரும் கூட்டத்தை எதிர்த்துக் கொண்டு எங்களால் இங்கே வர இயலவில்லை.  கூட்டம் கலைந்ததும் தான் வர முடிந்தது. “ என்றான்.

“அப்படிப் பெரும் கூட்டத்தைக் கூட்டியவர் யாரோ? என்ன நடந்தது அங்கே? ” என ஜராசந்தன் அலக்ஷியமாகவே வினவினான்.  “சக்கரவர்த்தி, கிருஷ்ண வாசுதேவனும், அவன் அண்ணன் பலராமனும் சக்கரவர்த்தி துருபதனின் அழைப்புக்கு இணங்க அவன் மாளிகைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுடன் யாதவத் தலைவர்கள், அதிரதர்கள், மஹாரதர்கள் எனக் கூட்டமாக வந்தனர்.  அவர்கள் அனைவரும் அவரவர் கூடாரம் சென்ற பிறகே எங்களுக்கு வழி கிட்டியது.” என்றான்.

“ஹூம், கிருஷ்ணா!  கிருஷ்ணா! கிருஷ்ண வாசுதேவன்!  மாட்டு இடையன்!  அவனுக்கும் அழைப்புப் போயிருக்கிறதா என்ன?  அவன் ஒன்றும் அரசனோ, சக்கரவர்த்தியோ இல்லையே?  அவனுக்கு , அந்த இடையனுக்கு இங்கே என்ன வேலை?  எதற்காக வந்திருக்கிறானாம்?”

“என் கடவுளே, பிரபுவே, இந்தக் கிருஷ்ண வாசுதேவன் மற்ற எந்த அரசர்களை விடவும் அதிகச் செல்வாக்குப் பெற்றிருப்பதோடு அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து விடுகிறான்.  பெரிய மஹாராஜாக்கள், சக்கரவர்த்திகள் அவனைப் பார்த்தால் தேன் குடித்த வண்டைப் போல் ஆனந்தக் கூத்தாடுகின்றனர். உதாரணமாக விராடன், போஜன், சுநீதன், மற்றும் சில குரு வம்சத்து இளவரசர்கள் அனைவருமே அவனைச் சென்று எதிர்கொண்டு அழைத்து வரவேற்றிருக்கின்றனர் என்றால் பாருங்களேன்!  அவன் செல்லும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடுகிறது.  அவன் கூடார வாயிலில் மக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து அவன் தரிசனம் பெற விரும்புகின்றனர். அவனைக் கண்டதும், கடவுளையே நேரில் கண்டது போல் மகிழ்ந்து போவதோடு அல்லாமல் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து அவனிடம் இருந்து ஆசிகளையும், வாழ்த்துகளையும் வேண்டி நிற்கின்றனர்.  இதில் வயது, வித்தியாசமே பார்ப்பதில்லை.  எப்போது அவனைப் பார்த்தாலும், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜயமங்களம்!’ என்று மங்கள கோஷங்களும், வெற்றி முழக்கங்களும் செய்கின்றனர்.”

“எங்கே தங்கியுள்ளான்?”

“இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் தான் இருப்பதாகத் தெரிகிறது.  அவனோடு 20க்கும் மேற்பட்ட யாதவ அதிரதர்கள் வந்திருப்பதாகப் பேசிக் கொள்கின்றனர்.”

“இத்தனை பேர்களா? ம்ம்ம்ம்ம்ம்?  எதற்காக இத்தனை அதிரதர்கள்?  அந்த இடையன் என்ன செய்யப் போகிறானாம்?  அவன் எண்ணம் தான் என்ன?”

“தெரியவில்லை பிரபுவே.  சொல்வதற்கு மிகவும் கடினமானது.  அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பது யாருக்கும் தெரியவும் இல்லை. ஆனால் பெரும் கூட்டத்தைக் கவர்ந்து தன்பால் இழுக்கும் வல்லமை அவனிடம் உள்ளது.  அதை வைத்து அவன் தான் அனைத்தையும் மறைமுகமாக நடத்தி வருகிறானோ என்று தோன்றுகிறது.”

“ம்ம்ம்ம்ம்ம்… நகரத்தின் வாயிலுக்கே சென்று துருபதன் அவனை வரவேற்றானாமா?” என்று ஜராசந்தன் கேட்டான்.

“இல்லை என்றே எண்ணுகிறேன்.  ஏனெனில் கிருஷ்ண வாசுதேவனே துருபதனுக்கு நேரில் வந்து வரவேற்க வர வேண்டாம் எனச் செய்தி அனுப்பி விட்டதாய்க் கேள்விப் பட்டேன்.  இளவரசன் த்ருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் சென்றிருக்கின்றனர்.  இந்த யாதவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?  நகரத்துக்குள் நுழைந்ததுமே முதல்வேலையாகத் தங்கள் கூடாரங்களுக்குக் கூடச் செல்லாமல், துருபதனை அவன் அரச மாளிகையில் நேரில் சந்தித்து அவனுக்குத் தங்கள் மரியாதையைத் தெரிவிக்க வேண்டிச் சென்றனர்.  அதுவும் கால்நடையாகவே!”

“ம்ம்ம்ம்,…. அவன் திரெளபதியை வென்று மணமுடித்துவிடுவானோ?” ஜராசந்தனுக்கு ஆவல் மீதூறியதோடு அல்லாமல் கிருஷ்ணன் போட்டிக்கு வந்தானெனில் தன் பேரன் கதி என்ன என்னும் கவலையும் ஏற்பட்டது.  தன் புருவங்களை நெரித்தபடி யோசித்தான்.  “இல்லை, பிரபுவே, ஏற்கெனவே திரெளபதியை மணக்க துருபதன் விடுத்த வேண்டுகோளைக் கிருஷ்ண வாசுதேவன் நிராகரித்துவிட்டான்.  உங்களுக்கும் இது தெரியுமே! “ என்றான் விதண்டன்.  “ஆம், ஆம், கேள்விப் பட்டேன்.  ஆனால் அதை நான் நம்பவில்லை.  ம்ம்ம்ம்ம்??? சஹாதேவா, நீ எதற்கும் துருபதனை நேரில் சென்று சந்தித்து விடு.  அவன் மகள் திரெளபதி நம் அருமை இளவரசன் மேகசந்தியைத் தான் மணமகனாய்த் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை வற்புறுத்திச் சொல்லிவிடு.  அப்படி அவளாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் நம் வேலை பெரிதும் குறையும்.  பல சங்கடங்களைத் தவிர்க்கலாம். “

சஹாதேவன் இடைமறித்து, “தந்தையே, இல்லை, அப்படி நடக்கும் என நிச்சயமாகச் சொல்ல முடியாது.  ஏனெனில் கிருஷ்ண வாசுதேவன் குரு வம்சத்து இளவரசர்களோடு ஏதோ ரகசிய உடன்படிக்கை போட்டிருப்பதாக அறிகிறேன்.  குரு வம்சத்தினர் போரிட்டு ஜெயித்த புஷ்கரத்தை அதன் சொந்தக்காரன் ஆன செகிதனாவுக்கே திரும்பக் கொடுக்கும்படி கிருஷ்ண வாசுதேவன் கேட்டுக் கொண்டுள்ளான்.  அதன்படி செகிதனாவுக்குப் புஷ்கரம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டது.  இதன் மூலம் குரு வம்சத்து இளவல் துரியோதனனுக்குச் சாதகமாகவே சுயம்வரத்தில்  கிருஷ்ணன் முடிவெடுப்பான் என்கின்றனர்.  புஷ்கரத்தைத் தன் சொந்தக்காரன் ஆன செகிதனாவுக்குத் திரும்பக் கொடுத்ததற்கு துரியோதனனுக்கு திரெளபதியைப் பரிசாகப் பெற்றுத்தரக் கிருஷ்ணன் இசைந்திருக்கிறான் என்கின்றனர்.”

ஜராசந்தனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.  அவனுக்குள் திகைப்பு ஒரு பக்கம்.  இவ்வளவு நடந்திருக்கிறதா என்னும் ஆச்சரியம் இன்னொரு புறம்.  ஹூம், இந்தக் கிருஷ்ண வாசுதேவன்! ஒவ்வொருமுறையும் ஆர்யவர்த்தத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டித் தன் சக்கரவர்த்திப் பதவியை உறுதிப் படுத்திக் கொள்ள ஜராசந்தன் முயலும்போதெல்லாம் இவன் எங்கிருந்தோ குறுக்கே வந்துவிடுகிறான்.  அவன் வேலைகளுக்கும், வெற்றி அடைவதற்கும் மாபெரும் தடைக்கல்லாக நிற்கின்றான். இவன் எங்கிருந்து வந்து சேர்ந்தான் இப்போது!  இங்கும் வந்துவிட்டானே!  ஜராசந்தன் மனம் கொதித்தது.  பழைய நினைவுகள் மேலெழுந்து அவன் கண் முன்னே இப்போது தான் நடப்பவை போல் தோன்றின.  இந்தக் கிருஷ்ண வாசுதேவன் சிறுவனாக இருக்கும்போதே ஜராசந்தனின் அருமை மருமகன் ஆன கம்சனைக் கொன்றான்.  அவன் மகள் இருவரையும் விதவைகளாக்கினான்.  ஆர்ய வர்த்தத்தில் ஜராசந்தனின் ஆதிக்கம் அதிகரித்து அவன் செங்கோல் நிலைபெற்று நிற்கப் பெருமளவு உதவி இருப்பான் கம்சன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்.  அதைக் கெடுத்தது இந்தக் கிருஷ்ண வாசுதேவன் தான்.  கோமந்தகத்திலும் இவனால் ஜராசந்தனுக்குப் பெரிய அளவில் தோல்வியே கிடைத்தது.  அதோடு அவன் பெரிதும் நம்பி இருந்த சேதி நாட்டு அரசனோடு ஆன உடன்படிக்கையும், விதர்ப நாட்டு அரசனோடு ஆன உடன்படிக்கையும் இவனாலேயே கெட்டது.  இரண்டையும் இவன் கெடுத்து ருக்மிணியைக் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே தூக்கி வந்துவிட்டான்.   அதுவும் எப்படி!  ஜராசந்தன் கண்ணெதிரிலேயே சுயம்வர மண்டபத்துக்குச் செல்ல இருந்த இளவரசி ருக்மிணி  கிருஷ்ண வாசுதேவனால் தூக்கிச் செல்லப்பட்டாள். ஜராசந்தன் மிகவும் யோசித்து முடிவெடுத்துப் போடும் திட்டங்கள் அனைத்தையுமே இவன் ஒருவனாகவே கெடுத்து விடுகிறான்.


Sunday, April 6, 2014

திரெளபதிக்கு ஆபத்து!

துரியோதனன் தன்னைத் தயார் செய்து கொள்ளட்டும். அதற்குள்ளாக நாம் இந்தப் புதிய நகரத்தை ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிடுவோமா?  ஆங்காங்கே பற்பல கூடாரங்கள்; கூடாரங்களின் உச்சியில் பறந்த கொடிகளில் இருந்து அவை எந்த நாட்டைச் சேர்ந்தது என அனுமானிக்கும்படி இருந்தது.  ராஜநடை போட்டவண்ணம் பல இளவரசர்கள், அரசர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அவரவர் செல்வாக்கை நினைத்துப்பெருமிதமும் கொண்டிருந்தனர்.  அதிக அளவில் ஆரிய வர்த்தத்து அரசர்களே கலந்து கொண்டிருந்தாலும் ஒரு சில நாகர்கள், மகத நாட்டு அரசர்கள் என்றும் காணப்பட்டனர்.  மகத நாட்டு அரசர்கள் தங்கி இருந்த பகுதி தனித்துத் தெரிந்தது.  அவர்கள் ஆரியர்களோடு கலக்கவில்லை;  ஆரிய கலாசாரத்தை அவமதிப்பது போல் ஏளனமும் கேலியும் பொங்கப் பார்த்ததோடு அல்லாமல் தங்களுக்குள் பேசிச் சிரித்தும் கொண்டார்கள்.  அவர்களின் கூடாரங்களுக்கு நடுவே ஒரு பெரிய கூடாரம் தனித்துத் தெரிந்தது.


அதில் யாரோ முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணம் தோன்றும்படி அதனருகில் நெருங்குகையில் அனைவரும் மெதுவாகப் பேசிக் கொண்டனர்.  மிக மரியாதையோடு நடந்து கொண்டனர்.  இதிலிருந்து அங்கே இருப்பவர் யாரோ மிகப் பிரபலமானவர் என்பது தெரிய வருகிறது.  கொஞ்சம் அப்படிச் சுற்றிப் போய் அந்தக் கூடாரத்தை எட்டிப் பார்த்து யாரெனத் தெரிந்து கொள்வோமா? ஆஹா! கெட்டது குடி! வந்திருப்பது ஜராசந்தன் அல்லவோ! ஆம், ஆம், தன் பேரனுக்காகச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போகிறான் என்றொரு பேச்சு இருந்தது அல்லவா?  அதனால் தான் வந்திருக்கிறான் போலும்.  அவன் கூடாரத்தைச் சுற்றிலும் அவனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்கள், தேவைப்பட்டால் அவனுடைய ராணுவத்திலே தளபதிகளாகவும் பணியாற்றுபவர்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது.  அவர்கள் தான் சுற்றிலுமுள்ள கூடாரங்களில் தங்கி இருக்கின்றனர்.  ஆனால் இவர்கள் அனைவரும் ஒரு குழுவாகத் தங்களுக்குள்ளேயே பேசிச் சிரித்துக் கொள்கின்றனரே!  ஆர்யவர்த்தத்து சாம்ராஜ்யம் ஒன்றின் இளவரசியை மருமகளாக ஏற்றுக்கொண்டால் இவர்களின் போக்கு எப்படி இருக்கும்?

தங்களுடைய பெருமையிலும், வீரத்திலும் தாங்களே ஆழ்ந்து போயிருக்கும் இந்தச் சிற்றரசர்களில் பெரும்பாலோர் மல்யுத்தத்தில் சிறந்தவர்கள் என்பது தெரிகிறது.   ஆர்யவர்த்தத்து அரசர்களையும், இளவரசர்களையும் போல் பட்டுப் பட்டாடைகளையும், ரத்தினங்கள், முத்துக்கள் பதித்த கிரீடங்களையும் அணியாமல், ஆபரணங்களைப் பூணாமல் வெற்று மார்புடன் தங்கள் உடல்கட்டைக் காட்டப் பிரியப்பட்டவர்களைப் போல் நடை போட்டார்கள். நடுவில் இருந்த ஜராசந்தனின் கூடார வாயிலில் போவதும், வருவதுமாக இருக்கும் நபர்களைப் பார்த்தால் அங்கே ஏதோ முக்கியமானதொரு விஷயம் பேசப்படுகிறதோ என்னும் எண்ணம் தோன்றுகிறது.  கொஞ்சம் உள்ளே எட்டித் தான் பார்த்துவிடுவோமா?  மெல்ல, மெல்ல எவ்விதமான ஓசையும் எழுப்பாமல் வாருங்கள்.  ஏற்கெனவே ஜராசந்தன் கோபத்தில் இருப்பான். ஆகவே நாம் வேறு அவன் கோபத்தை அதிகமாக்க வேண்டாம்.

இதோ உள்ளே வந்துவிட்டோம். கூடாரத்தின் நடுவே  நல்ல உடல்கட்டோடும், வலிமையுடனும் கூடிய மல்யுத்த வீரர்களின் மெய்க்காவலில்  ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான் ஜராசந்தன்.  அவனைச் சுற்றிலும் அவனுடைய முக்கிய ராணுவத் தளபதிகள் ஆன சிற்றரசர்கள் சூழ்ந்து அமர்ந்திருந்தனர்.  அவன் அருகே வலப்பக்கம் அவன் மகன் சஹாதேவன் என்னும் பெயர் கொண்டவன் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகே சுயம்வரத்தில் திரெளபதியை வெல்ல வேண்டி வந்திருக்கும் ஜராசந்தனின் பேரன் மேகசந்தி அமர்ந்திருந்தான்.  ஜராசந்தனின் இளமைப் பருவத்தில் எப்படி இருப்பான் என்பதைக் காட்டும்படியாக இருவருமே ஜராசந்தனின் அச்செடுத்த பிரதி போல் இருந்தனர்.  இந்த வயதிலும் துடிதுடிப்புடன் காணப்பட்ட ஜராசந்தன்  முகத்தில் காணப்பட்ட தந்திரமும், சூழ்ச்சியும் மட்டும் இவர்கள் முகங்களில் காணப்படவில்லை.   தன் மகனைப் பார்த்துத் தன் வழக்கமான அதிகாரத் தொனியில் , “ நீ உடனே சென்று துருபதனைப் பார் சஹாதேவா!  அவனிடம் நான் ஏன் இங்கே வந்திருக்கிறேன் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடு. திரெளபதியும், மேகசந்தியும் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும். அதன் பின்னர் நம்முடைய திட்டங்களைக் குறித்து விரிவாகப் பேசலாம். பிரசாரங்கள் செய்வது குறித்த பற்பல உத்திகளைக் குறித்தும் விவாதிக்கலாம். “

“ஆனால், தந்தையே!  அவனுக்குத் திரெளபதியை மேஹசந்திக்கு மணமுடிக்கும் உத்தேசம் இருக்கிறதா? அப்படி இருந்தால் சுயம்வரம் என ஏற்பாடுகள் செய்து இத்தனை அரசர்கள், சிற்றரசர்கள், இளவரசர்களை வரவழைக்க வேண்டாமே!  சற்று யோசியுங்கள் தந்தையே!”

இத்தனை வயது ஆகியும், மகன் திருமணத்துக்குத் தயார் என்னும் நிலையிலும், தன் மகன் தன்னைக் கண்டு பயப்படுவது ஜராசந்தனுக்கு உள்ளூர மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  எனினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல். அலக்ஷியமாகச் சிரித்தான்.  “ஹூம், இந்த ஆரிய அரசர்களைக் குறித்துப் புதிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது மகனே!  அவர்கள் தங்கள் குமாரிகளை ஏதோ தேவதைகள் என்றே நினைக்கின்றனர்.  அவர்களின் திருமணங்களும் பெரிய சபையில் பல அரசர்கள், சிற்றரசர்கள் கூடி இருக்க நடைபெற வேண்டும் என எண்ணுகின்றனர்.  முட்டாள்கள்!  அனைத்துமே அர்த்தமற்ற, பொருளற்ற நடைமுறை!”

என்றாலும் சஹாதேவனுக்குச் சந்தேகமே இருந்தது.  “தந்தையே, அந்த இளவரசி தன் தந்தையின் விருப்பத்தின்படி மணமகனைத் தேர்ந்தெடுப்பாள் என்பதை நிச்சயமாக அறிவீர்களா?  நான் அறிந்தவரையிலும் அவள் மிக தைரியமான பெண் என்றும், சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பாள் என்றும் அறிகிறேன்.” இதைக் கொஞ்சம் பயத்துடனேயே சொன்னான் சஹாதேவன். ஆனால் ஜராசந்தன் அவன் நினைத்ததற்கு முற்றிலும் மாறாக அவனை ஆதரித்தான்.  “நீ சொல்வது சரியே மகனே!  பல சுயம்வரங்களிலும் பார்த்துவிட்டேன்.  இந்தச் சுயம்வரங்களிலே இந்த இளவரசிகள் மிகவும் கட்டுப்பாடு இழந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எவனையோ ஒருவனை மணமகனாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.  இவர்களை நம்ப முடியாது தான்!” என்றான்.

“தந்தையே, இப்போது திரெளபதியும் அப்படியே செய்தாளென்றால்?”

“என் பேரன் மேகசந்தியை அந்த திரெளபதி நிராகரிப்பாளா?  ஆஹா, இத்தகையதொரு அவமானத்தை நான் ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்.  “ திடீரென நினைவுக்கு வந்தவன் போல் அவன் சஹாதேவனைப் பார்த்துக் கிட்டே வரச்சொல்லி, அவனிடம் கண்களால் ஜாடை காட்டினான். “சஹாதேவா, சுயம்வரம் நடந்தாலும், சரி இல்லை எனினும் சரி.  நம் மகத தேசத்துக் குதிரைகள் விரைவாகச் செல்லக் கூடியவை.  அதை மறக்காதே. அவை திரெளபதியை மட்டுமில்லை;  துருபதனையும் சேர்த்தே மகதத்தின் தலைநகரம் ராஜகிருஹத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். நினைவூட்டுகிறேன் உனக்கு!” என்றான்.  சுற்றிலும் கூடி இருந்த தளபதிகள் இதைக் கேட்டதும் மிகப் பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் ரசித்துச் சிரித்தனர்.  இதன் பின்னர் சிறிது நேரம் அனைவரும் தங்களுக்குள்ளாக ரகசியமாகவே பேசிக் கொண்டனர்.  நம்மால் சரியாகக் கேட்கமுடியவில்லை.  இன்னும் கொஞ்சம் அருகே செல்வோமா?  இதோ மேகசந்தி ஏதோ சொல்கிறானே!  கொஞ்சம் அருகே சென்றால் தான் நன்றாகக் கேட்கும்.

மிக மெதுவாக மேகசந்தி பேசினான். “யக்ஞசாலையிலிருந்து சுயம்வர மண்டபத்திற்கு வரும் வழியில் திரெளபதிக்குக் காவல் ஏதும் இல்லை எனக் கேள்விப் பட்டேன். ஒரு சில பண்டிதர்களும், அவளுக்குத் தோழிகளான சில இளவரசிகளும் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.  அது தான் சரியான சமயம் திரெளபதியைத் தூக்கிச் செல்ல.  அப்போது நாம் அந்தக் கூட்டத்தில் அனைவரையும் விரட்டி விட்டு அவளைத் தூக்கிச் செல்வது எளிது.  எவரும் ஆயுதம் தரித்தவர் அங்கே இருக்க மாட்டார்கள். “

Friday, April 4, 2014

மாமனும், மருமகனும் தனிமையில் ஆலோசனை!

தன்னுடைய உடலைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்த ஆட்களைப்போகச் சொல்லிவிட்டு துரியோதனன் தன் மாமனிடம் “அந்த மாட்டிடையன் என்ன சொன்னான்?” என்று கேட்டான்.”திரெளபதியிடம் என்னை அழைத்துச் செல்வதாக அளித்த உறுதியைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி இருக்கிறான்.  ஆனால்  உன்னைத் தேர்ந்தெடுக்குமாறு திரெளபதியைச் சம்மதிக்க வைப்பது மிகக் கடினம் என்று சொல்கிறான்." என்ற ஷகுனி துரியோதனன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைக் கண்டு  மகிழ்ச்சி அடைந்தானோ என்னும்படி அவன் முகத்தில் சிரிப்புத் தெரிந்தது.  தன்னிரு கைகளையும் தேய்த்துவிட்டுக் கொண்டே துரியோதனனைக் கூர்ந்து பார்த்தான். “ஓஹோ, அப்படி எனில் அவனுடைய தந்திரத்தையும், சூழ்ச்சிகளையும் அந்த இடையன் ஆரம்பித்துவிட்டான் என்று சொல்லுங்கள்!” என்றான் துரியோதனன். “ஏன் கஷ்டமாக இருக்குமாம்?? என்ன காரணமாம்?” என்றும் கேட்டான்.

“துரியோதனா, துரியோதனா!  எவ்வளவு முறை பேசுகையில் கொஞ்சம் நாக்கை அடக்கிப் பேசு; அக்கம்பக்கம் பார்த்துக் கொள் என்று சொல்லி இருக்கிறேன்.  மீண்டும் மீண்டும் அவனை நீ இடையன் என்றே அழைக்கிறாய்!” உள்ளூர சந்தோஷத்துடனே பேசிய ஷகுனி வேண்டுமென்றே இடையன் என்பதற்கு அழுத்தம் கொடுத்தான்.  “அவன் கிருஷ்ண வாசுதேவன், மனிதர்களில் சிறந்தவன், அவனைப் பார்க்க அவனோடு பேச, அவனோடு நட்பு பூண எத்தனை எத்தனை ராஜாக்கள், இளவரசர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு அவனுடைய ஒரு பார்வைக்காகக் காத்திருக்கின்றனர் என்பது தெரியுமா? அவனைக் கண்டதுமே அனைவரும் மரியாதை செய்கின்றனர்.  இனியொரு முறை அவனை, இடையன் என அழைக்காதே!” என்றான் ஷகுனி.  “ஹா, அவன் ஒரு காலத்தில் இடையர்களோடு இடையனாகத் தானே இருந்தான்! இப்போது மட்டும் என்ன புதிதாக வந்திருக்கிறது?   மாறிவிட்டானா என்ன?” மிகவும் ஏளனம் தொனிக்கத் தன் மனதிலுள்ள இழிவை எல்லாம் அந்தப் பேச்சிலே காட்டிப் பேசினான் துரியோதனன்.

“மருமகனே, இதோ பார்!  உனக்கு அவன் நட்பு வேண்டுமா?  அல்லது எதிர்ப்பு வேண்டுமா என்பதை நீ தீர ஆலோசித்து முடிவு செய்யும் வேளை வந்துவிட்டது.  ஒரு வழியாகக் கிருஷ்ணனை நண்பனாக ஏற்பதா, எதிரியாக ஏற்பதா என்பதை விரைவில் முடிவு செய்.  அவன் இப்போது அதிகாலையில் அருணோதயத்துக்குப் பின்னர் எழும்பும் உதயசூரியனைப் போல் ஜொலிக்கிறான்.  விரைவில் அதிவேகமாக மேலெழும்புவான்.  அவனுடைய நட்பு உனக்கு வேண்டுமெனில் அவனைத் துதித்துப் பாடக் கற்றுக்கொள்!” ஒரு முட்டாள் மாணவனுக்குக் கற்பிக்கும் கருணையுள்ள ஆசிரியன் எப்படிக் கவனமாகப் பாடம் எடுப்பானோ அவ்வாறு துரியோதனனைப் பார்த்து உள்ளூரச் சிரித்துக் கொண்டே ஷகுனி கூறினான்.  “சரி, சரி, அப்படியே ஆகட்டும்;  இனி ஒரு முறை அவனை நான் இடையன் என அழைக்கவில்லை.  ஆனால் எப்படியோ என் நாக்கில் அந்த வார்த்தை வந்துவிடுகிறது.  என்ன செய்வேன்! என்னையும் மீறி வருகிறது.  இனி அப்படி வராமல் பார்த்துக்கொள்கிறேன்.  அது போகட்டும், திரெளபதியைச் சம்மதிக்க வைப்பது கஷ்டம் என ஏன் சொல்கிறான்?”

“ஏனெனில் நீ துரோணரின் மாணாக்கன்.  துரோணரின் நேரடி மாணவனை திரெளபதி தேர்ந்தெடுப்பது கஷ்டம் என்று கிருஷ்ணன் நினைக்கிறான். துரோணருக்கும் அது பிடிக்காது எனச் சொல்கிறான்.“ சூழ்ச்சி நிறைந்த கண்கள் தந்திரச் சிரிப்புச் சிரிக்கப் பேசிய ஷகுனி மேற்கொண்டு, “ஆம், அப்படித்தான் மாட்சிமை பொருந்திய கிருஷ்ண வாசுதேவன் சொல்லுகிறான்.” என்று கிருஷ்ண வாசுதேவன் என்னும் பெயருக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கூறினான்.  இதன் மூலம் தான் கண்ணனை இடையன் என்று சொல்வதை ஆக்ஷேபிப்பதை உறுதி கூறுவது போல் காட்டிக் கொண்டான் ஷகுனி.  “ஹூம், மாமா அவர்களே, ஆசாரியர் எப்படியாவது ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். நான் இங்கே சுயம்வரத்தில் கலந்து கொள்ள வரப்போவதை அவர் அறிந்திருக்கிறார் அல்லவா?  சுயம்வரத்தில் நான் கலந்து கொள்வதையும் அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.  பிறகு என்ன?” துரியோதனன் கொஞ்சம் கடுமையான குரலிலேயே கூறினான்.

“ஆஹா, மருமகனே, மருமகனே, அங்கே தான் நீ தவறு செய்கிறாய்!  நீ சுயம்வரத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததன் மூலம் உன் ஆசாரியர் ஒன்றும் துருபதனோடு நட்புப் பாராட்டப் போவதில்லை.  அவ்வாறு அவர் கூறவும் இல்லை.  அவர் சம்மதம் கொடுத்ததன் அர்த்தம் அதுவல்ல;  ஒருவேளை நீ திரெளபதியை சுயம்வரத்தில் வென்று ஹஸ்தினாபுரத்து அரண்மனைக்கு மருமகளாய் அழைத்து வந்தாயானால், ஹஸ்தினாபுரத்தை விட்டே வெளியேற அவர் தயங்க மாட்டார் எனக் கிருஷ்ண வாசுதேவன் நினைக்கிறான்.” என்றான் ஷகுனி.  “ஒருவேளை திரெளபதி ஆசாரியர் துரோணருக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இருக்கக் கூடாது என்னும் உறுதிமொழியைக் கேட்டால்???......”

“ஹூம், மாமா, மாமா, அந்த மாட்டு இடையன்….மன்னியுங்கள், அந்தக் கிருஷ்ணன் தேவையில்லாத பிரச்னைகளைக் கிளப்புகிறான்; உருவாக்குகிறான்.” துரியோதனன் பற்களைக் கடித்தான்.  ஷகுனி அதை லக்ஷியம் செய்யாமல் தொடர்ந்தான். “கிருஷ்ண வாசுதேவன் சொல்கிறான். ஒருவேளை துருபதனுக்கும், துரோணருக்கும் இடையில் உள்ள சச்சரவுகளிலும், சண்டைகளிலும் நீ துரோணரின் பக்கமே இருக்க வேண்டும் என துரோணர் கருதுவதாகச் சொல்கிறான்.  அவன் அப்படித் தான் நினைக்கிறான்.”

துரியோதனனின் பொறுமை முற்றிலும் அவனைக் கைவிட்டது.  கோபத்தோடு அவன் தன் தொடைகளில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டான். “மாமா, மாமா, அந்த இடையன்…..மன்னியுங்கள் வாசுதேவ கிருஷ்ணன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு சும்மாவா வந்தீர்கள்?  அவனிடம் நீங்கள் நேரிடையாகச் சொல்வதற்கென்ன?? துரியோதனன் திரெளபதியைக் கட்டாயமாய் மணக்கப் போகிறான் என்று.  அதற்குத் தயார் நிலையில் வந்திருக்கிறான் என்று. சொல்வதற்கென்ன மாமா?  போங்கள், மாமா போங்கள்.  உடனே சென்று அந்த இடையனிடம், ம்ம்ம்ம்ம் வாசுதேவனிடம், நான் திரெளபதியை மணந்து கொண்டுவிட்டால், என் மாமனாரான துருபதனுக்குத் தான் பக்ஷமாக இருப்பேன் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்.  துரோணர் அதன் பின்னர் குரு வம்சத்துக்கு ஆசாரியராக இருந்தாலும் சரி; இல்லை என்றாலும் சரி.  அவர் ஹஸ்தினாபுரத்தை விட்டே வெளியேறினாலும் எனக்குக் கவலை இல்லை. இதை அந்தக் கிருஷ்ணனிடம் போய்ச் சொல்லுங்கள் மாமா!”

“மருமகனே, மருமகனே, நீ அந்தப் பாஞ்சால இளவரசியைக்குறித்துப் புரிந்து கொள்ளவில்லை என்றே எண்ணுகிறேன்.  அவள் ஒரு சாமானியப் பெண்ணாக/இளவரசியாகத் தெரியவில்லை.  மன உறுதியும், திட வைராக்கியமும் கொண்டவளாகத் தெரிகிறாள்.  அவள் நீ சொல்வதை ஏற்றுக்கொள்வாள் என்று தெரியவில்லை.  அதற்கு அவள் தயாராக இருக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன்.  மேலும் கிருஷ்ண வாசுதேவன் என்ன நினைக்கிறான் எனில், “அவள் ஒரு வேளை உன்னை இப்படி வற்புறுத்தலாம்; அவள் ஹஸ்தினாபுரத்துக்கு மருமகளாக வர நேர்ந்தால், அஸ்வத்தாமாவே தன் உயிரைக் கொடுத்தாவது துரோணரை அங்கிருந்து வெளியேறுவதிலிருந்து தடுக்க வேண்டும் என வற்புறுத்தலாம் என்றெல்லாம் கிருஷ்ண வாசுதேவன் சொல்கிறான். “

“ஆஹா, நான் ஹஸ்தினாபுரத்தின் யுவராஜா?  என்னுடைய வார்த்தைகளுக்கு இங்கே மதிப்பே இல்லையா?”  துரியோதனன் கேட்டான்.

ஷகுனியின் சூழ்ச்சி நிறைந்த சிரிப்பு அவன் முகத்தில் விரிந்தது.  கண்களிலும் அதே தந்திரமான சிரிப்புத் தெரிய அவன் கூறினான்:”இதோ பார் மருமகனே, துரியோதனா! இந்த உலகத்தில் சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றுவதில் நம்பிக்கைகளைப் பாதுகாப்பதில் வல்லவர்கள் நல்லவர்கள் இருக்கின்றனர். ஆனால் நீ அவர்களில் ஒருவனாக இல்லை!  உன் வார்த்தைகளை எவர் நம்புவார்கள்? அதோடு வாசுதேவனும் அதைத் தான் சொல்கிறான்.  திரெளபதி உன் வாக்குறுதியை ஏற்கமாட்டாள் என்று திண்ணமாய்க் கூறுகிறான்.”

“ஆர்யவர்த்தத்தின் மிகப் பெரிய சக்கரவர்த்தியான பரதனின் வழித் தோன்றலான குருவம்சத்து யுவராஜாவின் வார்த்தைகளை நம்புவதில் ஒரு மாட்டிடையனுக்கு இவ்வளவு சந்தேகமா?” துரியோதனன் முகம் கோபத்தில் சிவந்தது.  அவன் உடலே நடுங்கியது.

“உஷ், உஷ், உஷ்ஷ்ஷ், துரியோதனா!  துரியோதனா!” வாயில் விரலை வைத்து துரியோதனனை எச்சரித்தான் ஷகுனி.  “மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறுகிறாய்.  அதை மற!  அதைச் சொல்லாதே!  இந்த யாதவர்களின் பலம் உனக்குப் புரியவில்லை.  ஆர்யவர்த்தத்தின் பல ராஜாக்கள், மஹாராஜாக்களை விட செல்வத்திலும்,வலிமையிலும் இவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.   அதோடு இல்லாமல் இங்குள்ள அரசர்கள் அனைவரும் அவன் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்றனர்.  அனைவரையும் அவன் பார்வையாலேயே அடக்கி ஆள்கிறான்.”

போலியான பணிவுடன் சிரித்தான் துரியோதனன். அதே போலித் தனம் மாறாமல், “சரி, சரி, நான் உண்மையைத் தானே சொன்னேன்!  சொல்லக் கூடாதெனில் இனி சொல்லவில்லை.  அதுவும் இங்கே அது குறித்துப் பேசுவதில்லை.  விந்தையான உலகம் இது!  அற்பனிலும், அற்பனான ஒரு இளைஞனுக்கு இந்த உலகம் முழுவதும் கட்டுப்படுகிறது.  என்ன ஆச்சரியம்! ஆச்சரியம்!  அனைவரையும் அவன் அடக்குகிறானா?  என்னதான் வேண்டுமாம் அவனுக்கு?”

“அஸ்வத்தாமாவை விட்டு இதற்கெனப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளச் சொல்கிறான்.”

“சரி, சரி, சரி மாமா. நான் அஸ்வத்தாமாவிடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறேன்.  யாரையானும் அனுப்பி அவனை இங்கே வரவழையுங்கள். “ இதைச் சொல்லிக் கொண்டே துரியோதனன் மீண்டும் பாயில் படுத்துக் கொண்டு தனக்கு எண்ணெய் தடவி உருவி விட்டுக்கொண்டிருந்த மல்யுத்த வீரர்களையும் உள்ளே வரச் சொல்லி அழைத்தான்.



Wednesday, April 2, 2014

துரியோதனனின் ஆசைகளும், நிராசைகளும்

அத்தோடு முடிந்தது என்று விட முடியுமா?  துரியோதனன் எவ்வளவு முயற்சி எடுத்து கிட்டத்தட்டத் தன் உயிரையே பணயம் வைத்தல்லவோ அந்த ஏற்பாடுகளைச் செய்தான்.  அதை நினைக்கையிலேயே அவன் முகம் விகசித்துப் புன்னகையில் மலர்ந்தது.  அந்தத் திட்டம் தான் எத்தனை அருமையாகச் செயல்படுத்தப்பட்டது!  என்ன இருந்தாலும் ஷகுனி மாமாவைப் போல் சிறந்தவர் உண்டா!  அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமா!  அந்த யக்ஷன் ஸ்தூனகர்ணனுக்கும் தான்.  எவ்வளவு திறமையாகத் திட்டம் போட்டு அரக்கினாலேயே மாளிகை கட்டி,  அதிலேயே கந்தகத்தையும் சேர்த்துக் குழைத்து, ஆஹா!  என்ன அருமையான திட்டம்! பாண்டவர்கள் குடியிருக்க அற்புதமானதொரு மாளிகை கட்டப்பட்டது.  அதை அறியாமல் அவர்களும் அங்கே குடி போய், மாளிகையே தீப்பற்றி எரிந்து ஒருவழியாகச் செத்தொழிந்தனர்.  இதை நிறைவேற்றிய புரோசனனுக்கும் நன்றி சொல்ல வேண்டும் தான்.  ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகையில் அவன் உயிரையும் சேர்த்து எடுத்துக் கொண்டுவிட்டது இந்தத் திட்டம்.   தான் மேற்கொண்ட கடமைக்காகத் தன் இன்னுயிரையும் கொடுத்துவிட்டான் புரோசனன்.

இவை அனைத்துக்கும் பின்னர்  தானே துரியோதனன் யுவராஜாவாக ஆக முடிந்திருக்கிறது.  அதற்காக எத்தனை பாடுபட்டிருக்கிறான்.  அவன் எடுத்துக் கொண்ட லக்ஷியத்தின் முதல் படியை இப்போது தான் எட்டியுள்ளான். ஆனாலும் அவனுடைய பேராவல் இன்னமும் முற்றுப் பெறவில்லை.  அவன் யுவராஜாவாக ஆவதற்குப் போடப்பட்ட வழிகள் சாமானியமானவையா! முட்கள் நிரம்பிய பாதையில் பயணித்தன்றோ அவன் யுவராஜாவாக ஆகி உள்ளான்.  ஆனாலும் அவனை நம்புபவர்கள் யாருமில்லை.  அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் முறியடிக்கப்படுகின்றன.  அவன் போடும் திட்டங்களும் பெரும்பாலும் தவறாகப் போகின்றன.  அவனுடைய மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய குரு துரோணர் அவரும் அவனை நம்பவில்லை போல் தெரிகிறது.  அவனுக்கு உதவி செய்பவராக அவர் இல்லை.  அன்றைய தினம் சபாமண்டபத்தில் துரியோதனனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தான் புஷ்கரத்தை செகிதனாவுக்குத் திருப்பிக் கொடுக்கும் யோசனையை ஆதரித்தார். ஹூம்!   இதன் மூலம் அவன் அடைந்த மாபெரும் வெற்றியை ஒரு முட்டாள்தனமான செயலாக மாற்ற நினைக்கிறாரோ!  அவர் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவருடைய இந்த மாற்றத்தை  துரியோதனனால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

நிராசையிலும், மனக்கசப்பிலும் ஆழ்ந்து போன அவன் ஒரு மாறுதலை வேண்டிக் காத்திருந்தான். அவன் வாழ்க்கையின் ஒரு புத்தம்புதிய அத்தியாயம் திறக்கக் காத்திருந்தான்.  அந்தக் கசப்பான நாட்கள் ஒவ்வொன்றும் கடக்கக் கஷ்டமாக இருக்கும் சமயங்களில் எல்லாம் அவன் மரணத்தின் தேவன் யமனிடம் கூடப் பிரார்த்தித்துக் கொள்ளத் தயங்கவில்லை.  ஏ, யமதர்மராஜனே, என் பாட்டனார், பீஷ்ம பிதாமகர், கொள்ளுப்பாட்டியார் சத்யவதியார் இன்னும், இன்னும், அவ்வளவு ஏன், என் தந்தை, வெறும் தலையாட்டி  பொம்மையாக அரியணையில் வீற்றிருக்கும் திருதராஷ்டிரனைக் கூட நீ எடுத்துக் கொண்டு விடு.  இவர்களால் என் வாழ்க்கை பாழானது போதும். இனியாவது என்னை நிம்மதியாக வாழவிடு என்றெல்லாம் பிரார்த்தித்திருக்கிறான்.  இவ்விதம் நிராசையில் ஆழ்ந்திருக்கையில் தான் நம்பிக்கையின் ஒளி ஒரு கீற்றுப் போல் பிரகாசிக்க ஆரம்பித்தது.  பாஞ்சால அரசன் துருபதன் தன் மகளுக்குச் சுயம்வரம் வைத்திருப்பதாகச் செய்தி கிடைத்ததோடு அல்லாமல் அதற்குக் குரு வம்சத்தினருக்கு அழைப்பும் விடுத்திருந்தான்.  உடனடியாக அவன்  பாஞ்சாலம் வந்து சுயம்வரத்தில் கலந்து கொண்டு திரெளபதியை வெல்ல வேண்டும் என்றே நினைத்தான்.  இதற்கு துரோணரின் விருப்பத்தைக் கேட்க வேண்டாம் என்றிருந்தான். தேவைப்பட்டால் கூட அவரிடம் இது குறித்துக்கலந்து ஆலோசிக்கக் கூட அவன் விரும்பவில்லை.

அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்;  அவன் சுயம்வரத்தில் வென்று திரெளபதியின் கரங்களைப் பிடிப்பான் என.  அப்படி மட்டும் நடந்து விட்டால்! ஆஹா, இந்தப் பாட்டனார் பீஷ்மரின் பேச்சையும் அதிகாரத்தையும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கவே வேண்டாம்.  அவர் ஒப்புக் கொண்டாலும் சரி ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி அவன் தான் ஹஸ்தினாபுரத்தின் அங்கீகரிக்கப்பட்ட அடுத்த அரசனாக இருப்பான்.  ஹூம், தந்தையார் இருந்தால் என்ன?  அவருக்கோ வயதும் ஆகி விட்டது.  கண்களும் தெரியப் போவதில்லை. அவரை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு அவன் அரசனாகவே ஆகிவிடலாம். அவனுடைய அரச பதவி; அவன் நீண்டநாட்கள் ஆசைப்பட்டது கிடைத்துவிடும்.  இதன் மூலம் அவன் தன்  ராஜ்யாதிகாரத்தையும், பதவியையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.  அதன் பின், அதன் பின்!  அதன் பின்னர் என்ன!  அடுத்து அவன் சக்கரவர்த்தி ஆவது தான்!  அதற்கான வழிகள் இப்போதே அவன் கண்களில் தெரிகின்றன.  அவன் சக்கரவர்த்தி ஆகப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.  ஆனால் அவன் முதலில் செய்ய வேண்டியது, அவன் முன்னோர் ஆன பரதன் செய்தது போல் ஓர் அஸ்வமேத யாகம் செய்து விட வேண்டும். அப்படித் தானே பரதன் சக்கரவர்த்தி ஆனான்.  ஆகவே அவனும் அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும்.

இப்போது கிரஹ நிலைமைகள் கூட அவனுக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும்.  பிடிவாதக்காரர் ஆன ஆசாரியர் துரோணர் கூட விட்டுக் கொடுத்து விட்டார். ஹூம், திறமைகளே இல்லாத, அவன் மனைவி பானுமதி கூட அவனுக்காகக் கிருஷ்ணனிடம் பேசி அவன் நட்பைப் பெற்றுத் தருவதாக உறுதி கூறி இருக்கிறாள்.  அந்த மாட்டிடையன், அவனுக்குத் தான் இந்த ஆர்யவர்த்தத்தில் எவ்வளவு செல்வாக்கு! ஹூம், எப்படியோ போகட்டும். அவன் இத்தனை நேரம் துரியோதனன் பக்கம் வந்திருப்பான்.  தன்னுடைய சாமர்த்தியத்தை நினைத்துத் தானே சிரித்துக் கொண்டான் துரியோதனன். "அந்த ஐந்து சகோதரர்களும் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் கிருஷ்ணன் உதவியோடு என்னென்னவெல்லாம் செய்திருப்பார்கள்!   இப்போது அவர்கள் இல்லை;  ஆகவே கிருஷ்ணன் என் பக்கம் தான் இருப்பான். நிச்சயமாக சர்வ நிச்சயமாகப் பாஞ்சால இளவரசி என்னைத் தான் தேர்ந்தெடுப்பாள்.   அதில் சந்தேகமே இல்லை. "

" என்னை விடப் பெரிய துணைவன் அந்தப் பாஞ்சால இளவரசிக்குக் கிடைத்து விடுவானா?  ஒரு காலத்தில் சக்கரவர்த்தி பரதன் ஆட்சி செய்த அரியணையில் என்னோடு அமர அந்தப் பாஞ்சால இளவரசி கொடுத்து வைத்திருக்க வேண்டுமே.  ஆர்ய வர்த்தத்தையே ஆண்ட சக்கரவர்த்தி பரதனின் குலத்து வாரிசுக்குத் துணைவியாக ஆகப் போவது அவளைப் பொறுத்தவரை பெரிய விஷயம்.  குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்துக்கு அடுத்த சக்கரவர்த்தியாகப் போகும் அவனை விடப் பெரிய அரசனைப் பாஞ்சால இளவரசிக்குத் தேடிக் கண்டு பிடிக்கத் தான் முடியுமா! " அவன் மன ஓட்டம் அவன் மனைவி பானுமதியைச் சுற்றி ஓடியது.  அவள் அந்த மாட்டிடையன் கண்ணனிடம் வாக்குறுதியெல்லாம் வாங்கி வந்துவிட்டாள்.  துரியோதனனின் தகுதியை நிரூபிக்க ஷகுனிக்கு ஏற்றதொரு தருணத்தை ஏற்படுத்தித் தருவதாகவன்றோ சொல்லி இருக்கிறான். " சின்னப் பெண் தான் இந்த பானுமதி.  ஆனால் எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்கிறாள்.  உண்மையிலேயே நல்ல பெண் தான். திரெளபதியை மணந்துவிட்டேன் என நான் அவளை மறக்க மாட்டேன்;  ஆம் நிச்சயமாக .  அவள் செய்திருக்கும் இந்த மாபெரும் உதவிக்கு நன்றியுடன் அவளையும் ஒரு மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்வேன்.  இது  உறுதி!"

ஆனால், துரியோதனனைப் பொறுத்தவரை இந்தக் கண்ணனை நம்ப முடியுமா என இன்னமும் சந்தேகமாகவே இருக்கிறது.  அவன் பாண்டவர்களிடம் மிகவும் பிரியம் கொண்டவன்;  அவர்களுக்கிடையே எல்லையில்லாப் பாசம் உள்ளது. அவனுக்கு நிச்சயமாகப் பாண்டவர்களின் மறைவுக்கு துரியோதனன் காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.  ஏன் நினைக்கவே நினைப்பான்.  துரியோதனன் தான் பாண்டவர்களைத் தன் பாதையிலிருந்து அகற்றி இருப்பான் என்பதைப் புரிந்து கொண்டே இருப்பான்.  அவனால் துரியோதனனுக்கு உதவி செய்ய இயலுமா?  சந்தேகம் தான்;  எனினும் கொடுத்த வாக்குறுதியைக் கண்ணன் தவற விட்டான் என்ற பேச்சுக்கே இடமில்லை.  அது ஒன்று தான் நம்பிக்கை அளிக்கிறது.  அதிலும் தான் தங்கையாக வரித்துக் கொண்ட பானுமதிக்குக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து அவன் பின் வாங்க மாட்டான் என்றே துரியோதனன் நம்பினான்.  இந்த சாமர்த்தியசாலியான கண்ணனின் நம்பிக்கையை வென்ற அவன் மனைவி பானுமதியும் நிச்சயம் சாமர்த்தியசாலி தான்.

இவ்வளவையும் யோசித்த வண்ணம் தனக்கு உருவி விட்டுப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் வீரர்களைப் பார்த்தான் துரியோதனன்.  அவர்கள் தங்கள் கடமையே கண்ணாக இருந்தனர்.  நேரமோ சென்று கொண்டிருந்தது.  திடீரென துரியோதனனுக்கு அலுப்பும், சலிப்பும் மேலிட்டது.  ஷகுனி மாமா சென்றவர் ஏன் இன்னும் வரவில்லை.  அந்த மாட்டிடையன் ஏதேனும் தந்திர, மந்திரங்கள் பண்ணிவிட்டானா?  கண்ணனைப் பார்க்கச் சென்றிருந்தான் ஷகுனி.  தன் மாமன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான் துரியோதனன்.  காலடிச் சப்தம் கேட்டது.  ஷகுனியின் காலடிகள் போலத் தான் தெரிந்தன.  "ஆம், ஆம், இவ்வளவு சப்தமாகவும், வேகமாகவும் காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டு ஷகுனியைத் தவிர வேறெவரும் வர மாட்டார்கள்.  அதோடு வேகமாக மூச்சு விடும் சப்தமும் கேட்கிறதே!  இதுவும் ஷகுனி மாமாவுடையது தான். அப்பாடா, ஒரு வழியாக வந்துவிட்டார்.  ஹூம், இந்த ஷகுனி மாமா ஒவ்வொரு நாளும் இன்னமும் குண்டாக ஆவதோடு அல்லாமல் அத்தனைக்கு அத்தனை தந்திரமுள்ளவராகவும் மாறி வருகிறார். " ஷகுனி உள்ளே நுழைந்தான்.  ஒரு புன்னகையுடன் அவனை வரவேற்றான் துரியோதனன்.  ஷகுனி உண்மையிலேயே மிகவும் பருமனாக ஆகிவிட்டிருந்தான்;  அதோடு அவன் முகத்துக்கு அந்தக் கண்கள் மிகச் சிறியனவையாக இருந்தாலும் தந்திரத்திலும், சூழ்ச்சியிலும் அவை தேர்ந்தவை என்பதை அவனுடைய ஒரு பார்வையே காட்டியது.  அவன் சிரிப்பில் நல்லெண்ணத்தைக் காட்டினாலும் அதன் பின்னணியில் தந்திரமும், சூழ்ச்சியும் ஒளிந்திருக்கிறது என்பதை அந்தக் கண்கள் தெளிவாகக் காட்டின.