Monday, February 28, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

“ அட, என்னப்பா, இது? அவன் தான் கடவுள்னு சொல்லிக்கிறானே! அவனே கண்டுபிடிச்சுக்கட்டுமே!”கேலியோடு இன்னொருத்தன் கூறினான். எல்லாரையும் கோபமாய்ப் பார்த்த சத்ராஜித், “அவன் வேலைகளை நம்மிடம் காட்டக்கூடாது. நம் விஷயத்தில் அவன் தலையீடுஇருக்கக்கூடாது!” என்று தீர்மானமாய்க் கூறினான். “அது எப்படிப்பா முடியும்?? நம் வேலைகள் என்னென்ன? அவன் வேலைகள் என்னென்ன?? முதலில் அதைப் பாருங்களேன். மேலும் எல்லாப் பெரியவர்களும் அவன் கட்சிதான். அப்படி இருக்கையில் அவன் செய்ய நினைப்பதைச் செய்ய விடாமல் நம்மால் தடுக்க இயலுமா?” விராடனின் சந்தேகம்.

“நீ ஒரு கோழை!” பத்ரகன் என்பவன் விராடனைக் குற்றம் சாட்டினான். உயரமும், பருமனுமாகப் பார்க்கவே பயங்கரமாய் இருந்த அவன், “ அந்தக் கண்ணன் நம்மை விட்டு அகலவேண்டும்.” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சீற்றமாய்க் கூறினான். அதுவரை பேசாமல் இருந்த ப்ருஹத்பாலன் அப்போது எழுந்து நின்றான். அவன் ஏதோ பேசப் போகிறான் என்பதை உணர்ந்த அனைவரும் தங்கள் தலைவன் பேசுவதைக் கேட்க அமைதியானார்கள். “விராடன் கூறுவது முற்றிலும் சரி. அவன் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் நமக்குள் ஒருமித்த கருத்து வேண்டும். அதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். நம்முடைய விருப்பத்திற்கேற்பவே அவனைச் செயல்பட வைக்கவேண்டும். அது தான் நமக்கு வேண்டியது. இப்போது நம் திட்டம் தான் என்ன?”

“ம்ம்ம்ம், அவன் தான் என்னவோ அந்தப்பரம்பொருள் என்பது போலவே நடந்து கொள்கின்றானே, அதை முதலில் நிறுத்தவேண்டும். அவனும் ஒரு சாமானியமானவனே என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். “ சத்ராஜித் கூறினான்.

“அது எப்படி முடியும்?” இவர்கள் பேச்சை அறவே வெறுத்தான் விராடன்.

“அந்த கோமந்தக மலைக்கே அவன் திரும்ப்ப் போகட்டும். அவனை இங்கே எவர் அழைத்தனர்! மறந்துட்டேனே, போகும்போதே அவன் தன்னுடைய அந்தக் கறுத்த நீலநிறம் என அனைவராலும் பாராட்டப் படும் அந்த முகத்தையும் கூடவே எடுத்துச் செல்லட்டும்!” பத்ரகன் கிண்டலான தொனியில் சொல்ல அனைவரும் ரசித்துச் சிரித்தனர்.

விராடனுக்கோ இதெல்லாம் சகிக்கவில்லை. “பத்ரகா, மதுரா உனக்கு எப்படித் தாய் மண்ணோ, அப்படியே அவனுக்கும் தாய் மண் தான் !” என்றான்.

“அட, முதலில் அந்த ரதப் போட்டியை நிறுத்தச் சொல் அவனை. அந்த ரதத்தில் பூட்டும் குதிரைகளைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. “ சத்ராஜித் குரலில் வெறுப்பு மேலோங்கியது.

“ஓ, ஓ, பொதுமக்களுக்குப் பிடித்திருக்கிறதே. இதில் உள்ள சாகசத்தையும், விளையாட்டையும் பொதுமக்கள் ரசிக்கின்றனர். இதில் ஈடுபாடுள்ள எவரும் இதை விரும்புவார்கள். ஆகையால் நாம் செய்யக் கூடியது என்னவெனில் ப்ருஹத்பாலன் யுவராஜாவாய் ஆவதற்குக் கண்ணன் தடை ஏதும் சொல்லாமலோ, செய்யாமலோ இருப்பது மட்டுமே. ப்ருஹத்பாலா, உனக்கும் இது போதுமென நினைக்கிறேன்.” விராடன் கேட்டான்.

“நீ கூறுவது சரியே விராடா, ஆனாலும் நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கவேண்டும்.” ப்ருஹத்பாலன் கூறினான்.

“முதல் அடியில் கண்ணனைப் பழிவாங்கி தண்டனை அளிக்கவேண்டும்” என்று பத்ரகன் தன் வாளை உயர்த்திக்கொண்டு ஆவேசத்துடன் கூறினான். பின்னர் அனைவரும் கண்ணனை அழைத்து வரும் வழியைச் சிந்தித்துக் கடைசியில் சாத்யகியை அனுப்பி அவனுடன் கண்ணனை வரவழைத்தனர். எப்போதும் நிழல் போல் தொடரும் உத்தவன் கூட வர சாத்யகி உள்ளூர விரும்பவில்லை. கண்ணனும் அதைப் புரிந்து கொண்டது போல் உத்தவனை வரவேண்டாம் எனத் தடுத்துவிட்டான். கண்ணன் எப்போதும்போல் அமைதியாகவே சலனங்களின்றிக் காணப்பட்டான். அவன் முகமோ கண்களோ குழப்பமான மனநிலையைக் காட்டவில்லை. மிகவும் சந்தோஷமாக அனைவரையும் பார்த்துச் சிரித்தான். அவன் கிரீடத்தில் செருகி இருந்த மயிலிறகும் அவன் சிரிக்கையில் ஒரு ஆட்டம் ஆடித் தன் சந்தோஷத்தைத தெரிவித்துக்கொண்டது. அவன் கழுத்தின் மாலையும்கூடச் சேர்ந்து வண்ணமயமான பூக்களோடும், கிறங்கடிக்கும் நறுமணத்தோடும் தன் சிரிப்பைக் காட்டிக்கொண்டது போல் இருந்தது.

நிராயுதபாணியாக வந்திருந்த கண்ணனைக் கண்ட மற்ற ஆயுதமேந்திய நண்பர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். தர்மசங்கடமாய் இருந்தது அவர்களுக்கு. அனைவரையும் பார்த்துத் தன் மகிழ்ச்சியையும், வணக்கங்களையும் தெரிவித்த கண்ணன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நலம் விசாரித்ததோடு அல்லாமல் தன் தாயின் வழியிலும் , தகப்பன் வழியிலும் சகோதரன் ஆனவனும், தன்னை விடப் பல ஆண்டுகள் மூத்தவன் ஆனவனும் ஆன ப்ருஹத்பாலனை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்துச் சிரித்த கண்ணன் அவன் கால்களைத் தொட்டு நமஸ்கரித்தான்.

“சகோதரர் ப்ருஹத்பாலரே, என்னை இங்கே அழைத்து உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தையும், மரியாதையும் கொடுத்துள்ளீர்கள்.” கண்ணன் குரலில் தெரிந்த பணிவும், விநயமும் அவன் உள்ளார்ந்த நோக்கோடு பேசுவதைத் தெரியப் படுத்தியது.

“ஆம், ஆம், நாம் அனைவரும் கண்ணனைப் பார்க்கவிரும்புகிறோம் என்று கூறிய அடுத்த கணமே கிருஷ்ணவாசுதேவன் நம்மைச் சந்திக்க்க் கிளம்பிவிட்டான்.” என்றான் சாத்யகி. சாத்யகி உள்ளூரக் கண்ணன் அங்கே வர மறுப்பான் எனவும், அப்படி வந்தாலும் அரை மனதோடு வற்புறுத்தலின் பேரிலேயே வருவான் எனவும் நினைத்திருந்தான். ஆனால் அவன் அழைப்புக்காத்திருந்தாற்போல் கண்ணன் உடனடியாகக் கிளம்பியதைக் கண்ட அவனுக்கு உள்ளூரக் கண்ணனைத் தவறாக நினைத்தது குறித்து வெட்கம் வந்தது. கண்ணன் நிராயுதபாணியாகக் கிளம்புவதையும் கண்ட அவன் தன் வாளையும் அங்கேயே ஒரு ஓரமாக வைத்துவிட்டுக் கண்ணனோடு கிளம்பி வந்திருந்தான். “கண்ணா, இந்த ஆசனத்தில் அமர்ந்து கொள்வாய்!” என்று அவனுக்கு உபசாரங்களும் செய்தான். என்ன இருந்தாலும் வ்ருஷ்ணி குலத்தவர் தங்கள் விருந்தோம்பும் வழக்கத்தை மீறக் கூடாது என்ற எண்ணம் அவனிடம். மேலும் தங்களை நம்பி வந்திருக்கும் கண்ணனுக்குத் தகுந்த விருந்தோம்பல் செய்யவேண்டும் என்ற எண்ணமும் எழுந்த்து. ஆனால் கண்ணன் தங்கள் வேண்டுகோள்களை ஏற்பானா?

"சரி, இப்போது உங்களுக்காக நான் எவ்விதத்தில் சேவை செய்வது?" என்றான் கண்ணன்.

எல்லாரும் விழித்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்ததால் யாருக்கும் என்ன சொல்வதெனப் புரியவில்லை எனலாம். அதற்குள் சாத்யகியே,"முதலில் ரதப் போட்டியை நிறுத்து கண்ணா!" என்றான்.

"என்னால் எப்படி முடியும்? மதுராவின் உயர்ந்த தலைவரின் கட்டளை அது. எல்லாத் தலைவர்களுமே ஐந்நூறு ரதங்களுக்குக் குறையாமல் தயார் செய்து ரதப் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். பிடிக்காதவர்கள் கலந்து கொள்ளவேண்டாம். அதற்குத் தடை ஏதுமில்லையே!" என்றான் கண்ணன் இளநகையோடு.

"யுத்தம் ஒன்றுக்கு அதுவும் மாபெரும் யுத்தத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதாய்த் தெரிய வருகிறது கண்ணா! உண்மையைச் சொல், நீ அதற்குத்தான் ஏற்பாடுகள் செய்து வருகிறாயா?" ப்ருஹத்பாலன் கோபத்தோடு கேட்டான்.

"அது பெரியவர்களைத் தான் கேட்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு யுத்தம் நடந்தால் அதுவும் தர்மத்திற்கான யுத்தம் என்பதால் நான் எப்போதுமே முன்னால் நிற்பேன். அது தர்மத்திற்கு விரோதமானது என்பது தெரிந்தால் நான் அங்கே செல்லவே மாட்டேன்." என்றான் கண்ணன்.

"தர்மம்? அதர்மம்?? யுத்தத்தில் அவை எங்கிருந்து வந்தன? தர்மயுத்தம் என்றால் என்ன? அதர்ம யுத்தம் என்றால் என்ன? யுத்தம் என்னமோ யுத்தம் தானே! இல்லையா?" என்றான் சாத்யகி.

Wednesday, February 23, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2.ம் பாகம்

ஷ்வேத கேது மேலும் கூறினான்: “கண்ணா, சிசுபாலனை மணக்க ருக்மிணி இஷ்டப்படவில்லை. போட்டி உண்மையானதாய் இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆனால் பெயருக்குத் தான் போட்டி நடக்கப்போகிறது. சிசுபாலன் வெற்றியை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டார்கள். ஜராசந்தன் கூறும் அரசர்களும், இளவரசர்களும் மட்டுமே இந்தச் சுயம்வரத்தில் பங்கு பெறப் போகின்றனர். ஆகவே வேறு யாரும் உண்மையாகப் போட்டியிட்டு ருக்மிணியை அடைவதற்கு வழியில்லை. திட்டம் பூர்த்தி அடைந்து நாலாபக்கங்களிலும் உள்ள நாடுகளுக்கு ருக்மியாலும், அவன் தந்தையாலும் செய்திகள் அனுப்பப் பட்டுவிட்டன. வரப் போகும் வசந்த காலத்தின் வசந்த உற்சவம் ஆரம்பிக்கும் மாக மாதத்தின் பூர்ணிமை தினத்தில் சுயம்வரத்தை நடத்தப் போவதாயும் தீர்மானித்து இருக்கின்றனர். மதுராவின் இளவரசர்கள் எவருக்கும் அழைப்பு அனுப்பப் போவதில்லை. அப்படி அழைத்தால் நீ எங்கேயானும் சுயம்வரத்தில் கலந்து கொண்டு ருக்மிணியைத் தூக்கிச் சென்றுவிடுவாய் என அஞ்சுகின்றனர்.”

“ஓ, நான் அப்படி எல்லாம் ஒரு இளவரசியை மணக்கவிரும்பவில்லை. ஆனால் சுயம்வரத்தில் மணப்பெண் தனக்குப் பிடித்த மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டவள் தானே?” கண்ணன் மெல்ல யோசித்தான்.

“கிருஷ்ண வாசுதேவா, ருக்மிணி உன்னைத் தான் மணக்கவிரும்புகிறாள்.” ஷ்வேதகேதுவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தாலும் தன் குரலைத் தணித்துக்கொண்டு கண்ணனுக்கும் மட்டும் கேட்கும் கிசுகிசுக் குரலில் பேசினான். உத்தவன் இடை மறித்து, “நாங்கள் கோமந்தக மலைக்கு அடைக்கலம் தேடிப் போகையில் கைசிகனின் வேண்டுகோளின் மேல் அங்கே சில நாட்கள் தங்கி இருந்த போதே எனக்கு அது புரிந்துவிட்டது.” என்றான்.

“ஆஹா, நாம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயமாய் உள்ளது உத்தவா! இப்போது நான் திருமணம் பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை. ஜராசந்தனுக்கு கோமந்தக மலைப் பிராந்தியத்தில் நம்மால் ஏற்பட்ட அவமானத்தை அவனால் ஒருபோதும் மறக்க இயலாது. அவன் எப்போது நம்மைத் தாக்கப் போகிறானோ தெரியவில்லை. எப்போதும் நாம் அதற்குத் தயாராக இருக்கவேண்டும்!” என்றான் கண்ணன். “இருக்கலாம் கண்ணா! ஆனால் இளவரசி ருக்மிணி ஒரு தீர்மானத்திற்கு வ்ந்துவிட்டாளென்றால் அதில் உறுதியாக இருப்பாள். அவள் உன்னைத் தவிர வேறு எவரையும் தன் மணாளனாக ஏற்க மாட்டாள்.”

“ஆஹா, அதுவும் அப்படியா?? அப்படிப்பட்ட மன உறுதி கொண்ட ஒரு பெண்ணை என்னைப் போன்ற வெற்று மனிதனுக்குத் திருமணம் செய்து கொடுக்க நாம் அநுமதி கொடுக்கவே கூடாது!” கண்ணன் குரலில் குறும்பு. சிரித்துக்கொண்டே அவன் கூறியதைக் கேட்ட நண்பர்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. “ஓ, ஓ, இத்தகையதொரு அவமரியாதையை யாதவர்கள் ஏற்கவே மாட்டார்கள். மதுராவின் யாதவத் தலைவர்களில் ஒருவர் கூட அழைக்கப்படவில்லை.. நம் மரியாதையே காற்றில் பறந்துவிடும் போலிருக்கிறதே! நம் கெளரவத்தைப் பணயம் வைத்துவிட்டோம்.”

“நம் மரியாதையையும் , கெளரவத்தையும் எவ்வகையில் காப்பாற்ற முடியும் என்பதைக் குறித்து யோசிப்போம். அதற்கு ஒரு வழி இருந்தால் அதை நாம் மறுக்க முடியாது. என் தந்தையிடம் சொல்லி உக்ரசேன மஹாராஜாவை சபையின் முக்கிய அங்கத்தினர்களோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவும் உடனடியாக்க் கூட வேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.

இங்கே ப்ருஹத்பாலனின் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டு மேலே என்ன செய்வது என ஆலோசித்துக்கொண்டனர். இந்தப் புதிய ரதப்போட்டியில் அவர்களால் முழும்னதோடு ஈடுபடமுடியவில்லை. மேலும் கண்ணன் ஏற்பாடு செய்தான் என்பதையும் அவர்களால் மறக்க இயலவில்லை. என்ன ஒரு சுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். இப்போதோ ஆயுதப் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி, வில் பயிற்சி, வாள் பயிற்சி. போதாத்துக்கு அதிரதனையும், மஹாரதனையும் கண்டெடுக்கும் ரதப்போட்டி. ரத்த்தை ஓட்டிக்கொண்டே யுத்தம் செய்யவேண்டுமாம். இந்தக் கண்ணனுக்கு அவன் எப்படியானும் மதுராவின் அரசனாக ஆகவேண்டும் என்ற எண்ணம் போலிருக்கிறது. மேலும் இத்தகைய செயல்பாடுகளால் ஜராசந்தனுக்கு இன்னமும் கோபம் அதிகரித்துவிடுமே.

அதை நினைத்தாலே சிலருக்கு இன்னமும் கலக்கமாக இருந்த்து. மதுராவை முற்றுகையிட்டானென்றால்! எங்கிருந்து வந்தானப்பா இந்தக் கிருஷ்ணன்! அனைவரும் ஒருமித்த கருத்தோடு கண்ணன் வரவை மட்டுமில்லாமல் கண்ணனையே வெறுத்தனர். அவன் என்ன செய்தாலும் அது அவர்களுக்குச் சரியாகப் படவில்லை. ஆனால் எப்படியோ அவனுக்கு ஒரு பெயர் மட்டும் கிடைத்துவிடுகிறதே! அவன் செல்வாக்குக் குறைய மாட்டேன் என்கிறதே! அனைவருக்கும் கண்ணனின் செல்வாக்குக் கண்களை உறுத்தியது. ஆஹா, இவன் மட்டும் வந்து தொலையவில்லை எனில்! இவ்வளவு நாட்கள் ப்ருஹத்பாலன் இந்த மதுராவின் யுவராஜா ஆகியிருப்பான்!! இப்போதோ அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதே!

கண்ணனைக் குறித்துச் சில அவதூறான செய்திகளைப் பரப்ப முனைந்தனர் ப்ருஹத்பாலனும், அவன் நண்பர்களும். ஆனால் அதில் அவர்களுக்கு முழு வெற்றி கிட்டவில்லை. அவர்கள் கூறுவதை எல்லாம் மக்கள் காதில் வாங்கிக்கொண்டு கடைசியில், கண்ணனின் புகழே பாடினார்கள். எவ்வளவு அற்புதமானவன் கண்ணன்! என்று நினைத்து நினைத்து மகிழ்ந்தார்கள். இன்னும் சில வயதான மக்கள் கண்ணனிடம் நேரடியாக இவற்றை எல்லாம் பேசுங்கள். தன் மேல் தவறு இருந்தால் கண்ணன் மாற்றிக்கொள்ளுவான் என்று உபதேசம் செய்தார்கள். இது இன்னமும் அவர்கள் ஆத்திரத்தை அதிகரித்த்து. யாரானும் சிலராவது இருக்கமாட்டார்களா கண்ணனை எனக்குப் பிடிக்காது என்று கூற மாட்டார்களா? சத்ராஜித் ஒருவனே கண்ணனுக்கு எதிராகப் பேசினான். கம்சன் இறந்த்தும், மதுராவுக்குத் திரும்பிய யாதவத் தலைவர்களில் அவனும் ஒருவன்.

கண்ணனை ஒரு கொடுங்கோலனாகவே சித்தரித்தான் அவன். இன்னொரு கொடுங்கோலன் தேவையா நமக்கு? என்று அனைவரையும் வினவினான். தன்னுடைய பெரிய வாளை அநாயாசமாய்ச் சுழற்றிக்கொண்டே சத்ராஜித் பேசினான். இன்னொருவன் , “உன் எண்ணங்களை அவன் பூர்த்தி செய்வான்!” என்று கொஞ்சம் கோபம் கலந்த குரலில் கிண்டல் செய்தான். இன்னொருவனோ ,”என்ன இருந்தாலும் கம்சனைக் கொன்றானே, அதை மறக்க இயலாது!” என்றான். அதற்கு சத்ராஜித், “கம்சனை அவன் கொல்லவில்லை என்றால் கம்சன் கண்ணனைக் கொன்றிருப்பானே!” என்றான்.

“சரி, அவன் என்னதான் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் நாம்?” என்று விராடன் என்பவன் கேட்டான்.

Monday, February 21, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

"கண்ணா, கண்ணா, ராதை உன்னைக் காண துடிதுடித்துக்கொண்டிருப்பாள். அதை மறவாதே!"

இல்லை அண்ணா, ராதையைத் தவிர்க்கவேண்டியே நான் செல்லவில்லை. "

"தம்பி உன் மனம் என்ன கல்லா?? இவ்வளவு கடினமானவனாக நீ எப்போது மாறினாய்? "

"இல்லை அண்ணா, இல்லை. நான் இப்போது அங்கே போனால் என்னைக் கண்டதும் அவர்கள் நிச்சயமாய்ச் சந்தோஷம் அடைவார்கள். ஆனால் அது எத்தனை நாளைக்கு?? கொஞ்ச நாட்கள் தானே? நான் அங்கேயே இருக்க முடியாதே! திரும்பவேண்டியவன் அல்லவா? நான் திரும்புகையில் மீண்டும் அவர்களோடு இருக்கமுடியாது என்பதில் அவர்களுக்கு மனம் துன்பத்தை அடையும். என்னைப் பிரிய முடியாமல் துன்பப் படுவார்கள். அதனால் தான் அவர்களுக்குத் துன்பத்தைத் தரவேண்டாம் என்பதாலேயே நான் போக மாட்டேன் என்று கூறுகிறேன். அவர்கள் மனத்தை திரும்பத் திரும்ப துன்புறுத்த நான் விரும்பவில்லை. "

"உனக்கு இதயமே இல்லையா கண்ணா? உன்னை அவ்வளவு அதிகம் நேசிக்கிறவர்களைப் பிரிய உனக்குக்கஷ்டமாய் இருக்காதா? அதை நீ உணர்ந்ததே இல்லையா?"

"நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். அதனால் தான் அவர்கள் துன்பத்தை என்னால் உணர முடிகிறது. அவர்களைப்பற்றித் தான் நினைக்கிறேன். என்னைப் பற்றி அல்ல. "

"ஆஹா, ஆஹா, என்ன அருமையான நினைவுகள் உனக்கு?? உன் மனதுக்கு இனியவர்களை நீ இப்படித்தான் நினைக்கிறாயா? அதாவது அவர்களைப் போய்ப் பார்க்கமாட்டாய்! அவர்களுக்கு ஆறுதல் கூற மாட்டாய்! அதுவும் நீ அங்கிருந்து கிளம்பி எவ்வளவு நாட்கள் ஆகிறது?? என்ன, ஏது என விசாரிக்கக் கூட மாட்டாய்?"

"அண்ணா, இன்று அவர்கள் மனம் புண்பட்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும், பழைய நினைவுகள் இனிமையானவையாக இருந்தன அன்றோ? அவர்களுக்கு என்னை நினைக்கையில் அவர்களின் கண்ணின் கருமணி போல் உயர்வான கோவிந்தன் என்றே என்னை நினைப்பார்கள். அந்த கோவிந்தன்...... கோவிந்தன்....... இப்போது, அண்ணா, இப்போது அவர்கள் என்னைப் பார்க்கையில் அந்த கோவிந்தனையா பார்ப்பார்கள்? இல்லை அண்ணா, இல்லை, அவர்கள் பார்க்கப் போவது கிருஷ்ண வாசுதேவனை. கோவிந்தனை அவர்கள் காணமாட்டார்கள். ஜராசந்தனை ஓட ஓட விரட்டிய, ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்ற கிருஷ்ண வாசுதேவனைத் தான் காணப் போகின்றனர். அவர்கள் கண்ணின் கருமணியான கோவிந்தனை யாரோ எவரோ அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு விட்டனர் என்பதை உணர்வார்கள். அந்த கோவிந்தன் அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் எவ்வாறு ஒரு மாபெரும் பொக்கிஷமாக மாற்றிக் கொண்டிருந்தான், இவன் யாரோ, எவரோ என நினைப்பார்கள். கோவிந்தனுக்காக அவர்கள் பாடிய பாடல்களை இப்போது பாட நினைத்து இந்தச் சூழ்நிலைக்கு அவை பொருந்தாதவை என அடக்கிக்கொள்வார்கள். நான் அவர்களுக்கான கோவிந்தனாக இருக்கவே விரும்புகிறேன் அண்ணா, அதுவும் அந்தச் சின்னஞ்சிறு இடைச்சிறுவன் கோவிந்தனாக. வேறு யாராகவும் இல்லை. ராதைக்கு ஏற்ற கானாவாக. கிருஷ்ண வாசுதேவனாக அல்ல."

"அப்போ நான் மட்டுமா போவது?? என்னை மட்டும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?"

"அண்ணா, நீர் எப்போதுமே ஒரு பெரிய அண்ணனாகவே இருந்து வந்திருக்கிறீர். எப்போதுமே அவர்களுக்கு ஓர் உற்ற நண்பனாக, அவர்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் கொடுப்பவராகவே இருந்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் யமுனையைத் திரும்பக் கொண்டு வந்து விருந்தாவன வாசிகளை மகிழ்வித்தீர்களானால் அதை விடச் சிறந்த பரிசு அவர்களுக்கு வேறு ஏதும் இருக்கப் போவதில்லை. உங்களை அவர்கள் ஜென்மஜென்மத்திற்கும் போற்றிக்கொண்டிருப்பார்கள். "

"கண்ணா, எனக்குத் தெரியும், உன்னை ஒரு விவேகமான காரியம் செய்ய வைப்பது மிகக் கடினம் என்று அறிவேன். உன்னிடமிருந்து அதை நான் எதிர்பார்த்திருக்க முடியாது." பலராமன் குரலில் கசப்பு மிகுந்திருந்தது.

"அண்ணா, என் அண்ணா, விருந்தாவன வாசிகளுக்காக நீர் தான் விவேகமானஒரு செயலைச் செய்ய வேண்டும். அது உங்களாலேயே முடியும். உங்கள் கலப்பையை எடுத்துச் செல்லுங்கள். யமுநையை என்ன ஏது என விசாரித்து மீண்டும் விருந்தாவனத்தை மகிழ்விக்க வர வையுங்கள். விருந்தாவனத்தின் அனைத்து கோபர்களும், கோபியர்களும் உம்மைத் தங்கள் கடவுளாக எண்ணி வழிபடுவார்கள். "

"அவ்வளவு தானா? அவர்களுக்காக ஒரு வார்த்தை, ஒரு சொல் கூட நீ சொல்லப் போவதில்லையா?"

"ஏன் இல்லை? இருக்கிறதே! அவர்களிடம் சொல்லுங்கள். நான் என்றென்றும் அவர்களுடையவனே. அவர்களுக்காகவே வாழ்கிறேன், அவர்களுள் இருப்பதும் நான் தான். எப்போதும் அவர்கள் நினைவாகவே இருக்கிறேன். நான் எங்கே இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் விருந்தாவனமே என் தாய் மண் என்பதை நான் மறக்கவே மாட்டேன் என்பதைச் சொல்லுங்கள். அங்கே நான் நிரந்தரமாக வசிக்கிறேன் என்றும் கூறுங்கள்." என்றான் கண்ணன்.

பலராமன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். அவன் சென்றதும் மதுராவிற்கு ஷ்வேதகேது திரும்பிவிட்ட செய்தி கிடைத்தது. கிருஷ்ணனைச் சந்தித்தான் ஷ்வேதகேது. குண்டினாபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தான். ஜராசந்தனும், அவனுடைய நண்பர்களும் சேர்ந்து இப்போது புதியதொரு திட்டத்தைப் போட்டிருப்பதாய்க் கூறினான். மேலும் சிசுபாலனுக்கு இளவரசி ருக்மிணியை மணமுடிப்பதன் மூலம் சேதிநாட்டுக்கும், விதர்ப்ப நாட்டிற்கும் இடையே புதியதொரு உறவை சிருஷ்டிக்க முயல்வதையும் கூறினான். தாமகோஷனின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஜராசந்தன் மிக மிகச் சாமர்த்தியமாக அவன் தன்னுடைய கண்காணிப்பிலிருந்தும் தன்னுடைய ஆட்சியிலிருந்தும் விலகிவிடாதபடிக்கு நெருக்கமான சூழ்ச்சி வலையைப் பின்னி வருவதாய்த் தெரிவித்தான். ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் திருமணம் முடிந்ததும், ருக்மிக்கும் ஜராசந்தனின் பேத்தியான அப்நவிக்கும் திருமணம் நடக்கப் போவதாய்ப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதையும் தெரிவித்தான். இந்தத் திருமணத்தின் மூலம் ருக்மிக்குக் கம்சன் வகித்த முக்கியப்பதவி கிடைக்கக் கூடும் எனவும் கூறினான்.

என்றாலும் இந்தப் பேச்சு வார்த்தைகளை சம்பிரதாயத்தின்படி நியாயப் படுத்தவும், மற்ற நாட்டு அரசர்களைத் திருப்திப் படுத்தவும், சுயம்வரம் என்ற ஒன்றை ஏற்படுத்தப் போவதாயும், முன் கூட்டியே மற்ற அரசர்களுக்கு சிசுபாலனே தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என ரகசியமாக அறிவுறுத்தப்படும் என்பதையும் கூறினான். அதுவும் சுயம்வரத்திற்கான அழைப்பு ருக்மிக்கு மிகவும் நெருங்கிய அரசர்கள், இளவரசர்கள் போன்றவர்களுக்கே அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்தான். பொதுவாக சுயம்வரங்களில் போட்டி முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டால் போட்டியில் ஜெயிப்பவரையே இளவரசி மாலையிடுவாள் என அறிவிப்பது வழக்கம். சில சமயங்களில் போட்டி எதுவும் இல்லாமல் இளவரசி வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களின் வீரதீரப் பிரதாபங்களைக் கேட்டுக்கொண்டு அவற்றின் மூலம் தனக்குப் பிடித்த மணமகனைச் சுயமாய் அவளே தேர்ந்தெடுக்கலாம் என்பதும் உண்டு. ஆனால் இங்கே அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை. மணமகன் யார் என்பது தீர்மானிக்கப் பட்டுவிட்டது. முன் கூட்டித் தீர்மானிக்கப்பட்ட சுயம்வரம் என்ற ஒன்று நிகழ்ச்சிக்குச் சாட்சிகளாகவே மற்ற விருந்தினர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் தெளிவாய் எடுத்துக் கூறினான் ஷ்வேதகேது.

Monday, February 14, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

இவர்கள் அனைவரின் மனதிலும் சந்தோஷத்தை ஆழ்த்தும்படியாக பலராமனின் வெற்றிச் செய்தி கிடைத்தது. அதே சமயம் அந்தச் செய்தி கம்சாவுக்கும் , அவள் மகன் ப்ருஹத்பாலனுக்கும், அவன் நண்பர்களுக்கும் ஆத்திரமூட்டியது என்பதிலும் சந்தேகம் இல்லை. பலராமன் வெற்றி அடைந்ததோடு அல்லாமல் குஷஸ்தலையையும் கைப்பற்றிவிட்டான். புண்யாஜனா ராக்ஷசர்களை அழித்து, கிரிநகரத்தில் மீண்டும் குக்குட்மினை அரசனாக்கிவிட்டான். இப்போது மதுரா திரும்பிக்கொண்டிருக்கிறான். மதுரா நகரமே பலராமனின் வரவுக்கு எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தது. சில நாட்களில் பலராமனும் வந்துவிட்டான். மொத்த நகரும் பலராமனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளித்தது.


பலராமன் பார்க்கவே ஒரு ராக்ஷசன் போல் இருந்தான். அவன் உயரமும், உடல் வலுவும் அனைவரையும் திகைக்க வைத்த்து. குஷஸ்தலையைத் தனியாக வென்றதின் காரணமாகவோ என்னவோ அவன் இப்போது உற்சாகபானத்தை மறைவாக எடுத்துக்கொள்ளாமல் அனைவர் முன்பும் எடுத்துக்கொண்டான். மேலும் அதில் ஆர்வமுள்ளவர்களுக்கு உபசாரமும் செய்தான். குஷஸ்தலை வெற்றியைப் பற்றிப் பேசுகையில் ரேவதியை நினைத்துக்கொண்டே அவளாலேயே எல்லாமும் என்பது போல் பேசினான். உத்தவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துக்கொண்டான். கண்ணன் இதை எல்லாம் கவனித்தும் கவனியாதவன் போல் இருந்தான். உள்ளூர அவனுக்கு மகிழ்ச்சியே. பலராமனின் குணத்திற்கும் அவன் உயரம், உடல்வலு போன்றவற்றிற்கும் ஈடுகொடுக்கக் கூடியதொரு பெண்ணை அவன் கடைசியாக்க் கண்டு பிடித்துவிட்டதில் கண்ணனுக்கு மகிழ்ச்சியே. இந்தப் பெண்மணி பலராமனைத் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடுவாள். அவனைப் பற்றிய கவலை இனி இல்லை.

சில நாட்கள் சென்றதும் சில ஆட்களை மதுராவிலிருந்து குஷஸ்தலைக்கு அனுப்பி அந்த நகரைப் புநர் நிர்மாணம் செய்ய உதவ வேண்டும் என்று கட்டளை இட்டனர். அவர்களிடமே பலராமன் தன் செய்தியை ரேவதிக்கு அனுப்பி வைத்தான். இந்த அதிகப்படியான அலைச்சலில் சற்றே கறுத்திருந்த உத்தவன், அதே சமயம் தசைப்பிடிப்புக்களோடு உறுதியும், வலிமையும் பொருந்திக் காணப்பட்டான். எனினும் அவன் மெளனம்! வியப்புக்குள்ளாகிய மெளனம்! எப்போதும் ஒரு நிழல் போல் கண்ணனைத் தொடர்ந்து கொண்டு அவன் விரும்பியதை விரும்பிய வண்ணம் செய்வதைத் தவிர வேறு பேச்சே அவனிடம் எழவில்லை. ஆனாலும் அவனுடைய கூரிய கண்களுக்கு அவன் தாய் கம்சாவின் நடவடிக்கைகள் தப்பவில்லை. கம்சா எப்போது ஷாயிபாவிற்கு ஆதரவாய் நடக்க ஆரம்பித்தாள்? ஆச்சரியம் தாங்கவில்லை உத்தவனுக்கு. அதோடு கம்சா ஷாயிபாவிற்கு ஆதரவு மட்டும் காட்டவில்லை என்றும் மெல்ல மெல்ல கண்ணனுக்கு ஒரு வலுவான எதிரியாக அவளை மாற்றிக்கொண்டிருந்தாள் என்பதையும் புரிந்து கொண்டான். ஷாயிபாவின் மனவருத்தத்தை எல்லாம் கண்ணனின் மேல் கோபமாய் மாற்றி வந்தாள் கம்சா. இதைக் கண்ட அவனால் சும்மா இருக்க முடியவில்லை. தன் தாயைப் பார்க்க ஒரு முறை அந்தப்புரம் சென்ற அவன் ஷாயிபாவிற்கு அநாவசியமாக அவன் தாய் அளித்துவரும் ஆதரவையும் அன்பையும் சந்தேகப்படுவதாய்க் கூறினான். மேலும் அவள் ஷ்வேதகேதுவிற்கு நிச்சயம் செய்யப்பட்டவள் என்றும் சுட்டிக் காட்டினான். ஷாயிபாவின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தை ஆதரித்துப் பேசி அவளுக்குச் சலுகைகள் காட்டவேண்டாம் எனவும் கிட்டத் தட்ட எச்சரிக்கை செய்தான்.

கம்சா காத்திருந்தது இதற்காகத்தானே! உத்தவன் இம்மாதிரி பேசியதும் உடனே அவள் கண்கள் மழையென வர்ஷித்தன. தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள். அவளைப் போன்றதொரு பிறவி இனி பிறக்கக் கூடாது. அவள் செய்த பாவம் தான் என்ன? ஏன் எல்லாக் கடவுளரும் அவளை இப்படி வஞ்சிக்கின்றனர்?? அவள் என்னமோ எல்லாக் கடவுளரையும் நம்பத்தான் செய்கிறாள். ம்ஹும், அவ்வளவு ஏன்? அவள் தந்தையை அவள் எப்படிக் கவனித்துக்கொள்கிறாள்? என்றாலும் மற்றக் குழந்தைகளிடம் காட்டும் அன்பை அவள் தந்தை அவளிடம் காட்டுவதில்லை. ப்ருஹத்பாலன் எவ்வளவு அருமையான பிள்ளை?? அவன் குணத்திற்கும் வீரத்திற்கும் எதுதான் தகுதி இல்லை?? எதை வேண்டுமானாலும் கொடுக்கலாமே! ஆனால் அவனுக்கு நியாயமாய்க் கிடைக்கவேண்டியவை கூடக் கிடைக்காமல் போகிறது. இந்த உலகமே அவனை வஞ்சிக்கிறது. கடைக்கண்களால் உத்தவனைப் பார்த்துக்கொண்டாள் கம்சா. இதை விட்டால் பிறிதொரு சமயம் கிட்டாது என்பதைப் பூரணமாய் உணர்ந்தவளாய் மேலே பேச ஆரம்பித்தாள்.

“உத்தவா, நீ என்ன கண்ணனின் அடிமையா? ஆம்,ஆம், அப்படித்தான். நீ உன் சொந்த சகோதரர்களை விட்டுவிட்டு தேவகியின் பிள்ளைகளுக்குத் தொண்டு செய்வதை உன் வாழ்நாள் இன்பமாய் நினைக்கிறாய். இயற்கைக்கு விரோதமான உன் போக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. உன் சொந்த சகோதரன் ஆன ப்ருஹத்பாலனுக்காக ஒரு துரும்பையேனும் நீ கிள்ளிப் போட்டிருக்கிறாயா? உன் சகோதரனின் நியாயமான உரிமைக்காகக் கண்ணனிடம் போய்ப் பேரம் பேசவேண்டி இருக்கும். அதைத் தான் நீ செய்கிறாய் இப்போது. அவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?? நீ ஒரு மூடன், விவேகமற்றவன். “ கம்சா தொடர்ந்தாள். “கிருஷ்ணன் உனக்கு ஒரு போதும் சகோதரனாகவோ நண்பனாகவோ ஆகமாட்டான். அவனுக்கு அவனுடைய சொந்தக் காரியங்கள் தான் முக்கியம். அதோடு அவனுடைய புகழ், பெருமைக்காக எதுவேண்டுமானாலும் செய்வான். அவ்வளவு ஏன்? அவனுக்குப் புகழ் கிட்டும் எனில் இந்த மதுராவையே அவன் தியாகம் செய்துவிடுவான். புகழ் வெறி பிடித்தவன்!” ஆழ்மனதில் கண்ணன் மேல் இருந்த வெறுப்பு கம்சாவின் முகபாவத்திலும் குரலிலும் நன்றாய்த் தெரிந்தது.

“இதோ பார், குழந்தாய், என்னைப் பார், உன் தாயார் கூறுகிறேன் அப்பா, கேட்டுக்கொள், “ என்ன நினைத்தாளோ, கம்சாவின் குரல் திடீரென மென்மையானது. “ என் குழந்தாய், உண்மையாகவும் சத்தியமாகவும் கூறு, இந்தக் கண்ணன் உன் சகோதரனின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கிறானே? நீ அதற்கு உதவி செய்வாயா?” அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த உத்தவன் வாய் திறந்தான்:” தாயே, ஒரு நல்ல மனதுள்ள சரியான நபருக்குக் கண்ணன் ஒருபோதும் கெடுதல் செய்ய மாட்டான். நினைக்கக்கூட மாட்டான்.”

“எனில் ப்ருஹத்பாலன் நல்லவன் அல்ல, சரியான நபர் அல்ல என்கிறாயா?”

“அவன் சரியான நபராக இருந்தால், கண்ணன் அவனை யுவராஜாவாக மட்டுமல்ல, இந்த ராஜ்யத்தின் அரசனாகக் கூட முடிசூட்டுவான். அம்மா, ஏன் தாயே? ப்ருஹத்பாலன் கண்ணனின் பக்கம் நின்று தர்மத்திற்காகப்போரிடக்கூடாதா?”

“பாவி, மஹாபாவி, எவ்வளவு கொடூரமான மனம் உனக்கு?? நீ ஒரு ஏமாற்றுக்காரன், சூழ்ச்சிக்காரன், நயவஞ்சகன். உன் சொந்த சகோதரனுக்கு துரோகம் நினைக்கிறாயே?”

உத்தவன் மனவேதனை அவன் கண்களில் தெரிந்த்து. எனினும், “தாயே, ப்ருஹத்பாலன் அரசனாவதில் எனக்குத் திருப்தியே. ஆனால் அவன் அதற்குத் தகுதி உள்ளவனாய்த் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் எனவும் விரும்புகிறேன்.” அவ்வளவில் திரும்பினான் உத்தவன்.

கண்ணனிடம் வந்து நடந்தவைகளை நடந்தபடியே விவரித்தான் .
“எனக்கு ஏற்கெனவே சித்தி கம்சாவும், ப்ருஹத்பாலனும் எனக்கு எதிராகப் புகார்கள் வைத்திருக்கின்றனர் என்று புரிந்துவிட்டது. அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதும் புரிந்தது. பாவம், தாத்தா, அவரை நாம் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டோமோ? ம்ம்ம்ம்ம்?? நாம் உயிரோடு திரும்பிவிட்டதைச் சித்தி கம்சாவும், அவர்கள் மகன் ப்ருஹத்பாலனும் அவன் நண்பர்களும் விரும்பவில்லை!” கண்ணன் கண்களில் மீண்டும் குறும்பு.

அப்போது விருந்தாவனத்தில் இருந்து செய்தி வந்திருந்தது. நந்தகோபனும், யசோதையும் கண்ணன், பலராமன், உத்தவன் மூவரையும் பார்க்கவேண்டும் என ஆசைப்படுவதாய்ச் செய்தி வந்திருந்தது. மேலும் யமுனைத்தாய் கோபம் கொண்டு ஊருக்குள் புகுந்து அனைத்தையும் நாசம் செய்துவிட்டதாயும் கோபர்களும் கோபியர்களும் யமுனைத்தாயைக் கண்ணன் வந்து தான் சமாதானம் செய்யமுடியும் என நம்புவதாயும் ஆகவே மூவரும் வரவேண்டும் என்றும் செய்திகள் வந்திருந்தன. பலராமன் உடனே போகத் துடித்தான். ஆனால் கண்ணனோ எந்த அவசரமும் படவில்லை. பலராமன் அழைப்புக்கும் அவனைச் சென்று வருமாறும் தான் ரதப் போட்டிக்குத் தயார் செய்வதில் மும்முரமாய் இருப்பதாயும் கண்ணன் கூறினான். பலராமனோ கண்ணன் வராமல் தான் போகப் போவதில்லை என்று தீர்மானமாய்க் கூறிவிட்டான்.

“என் அருமை அண்ணாரே, நீங்களே சென்று வாருங்கள். நதித்தாயை நீங்களே சமாதானம் செய்யலாம். நான் வரவேண்டும் என்பதில்லையே, உங்களுக்கும் கோபம் கொண்ட பெண்களைச் சமாதானம் செய்வதில் பயிற்சியும் உள்ளதல்லவா?” கண்ணன் கண்கள், முகம் எல்லாம் குறும்பு வழிந்தோடியது.

“கண்ணா, நீ பெண்களை வெற்றிகொள்ளவேண்டும் என நினைக்கவில்லைதான். அதை நான் நன்கறிவேன். ஆனால் பெண்கள் அவர்களாக வந்து உன்னிடம் தோல்வியைத் தழுவுவதில் ஆநந்தம் கொள்கின்றனர். ஆகவே நீ வந்து யமுனைத்தாயை சமாதானம் செய்வாய்!”

“ஓஹோ, அண்ணாரே, எதுவுமே தெரியாதது போல் நடிக்கிறீரே? செளராஷ்டிரக் கரையில் உமக்காகக் காத்திருக்கும் இளம்பெண்ணை மறந்த்து ஏனோ?”

“கண்ணா, உனக்காகவும் மனம் உடைந்த ஒரு பெண் காத்திருக்கிறாள் என்பதை மறவாதே! உன்னைத் தங்கள் பிள்ளை போல் வளர்த்த கோபியரை நான் கூறவில்லை என்பதையும் நன்கறிவாய், ராதை அங்கே உன்னைக் காணவேண்டும் என்ற எண்ணத்திலேயே உயிரை வைத்துக்கொண்டிருக்கிறாள். அதை மறவாதே!”

கண்ணன் மனம் கனிந்திருந்ததை அவன் குரலே கூறியது. குரலிலும் இனம் தெரியாத்தொரு பவித்திரமான பக்தி பூர்வமான உணர்வு:”அதனால் தான் நான் வரவில்லை என்கிறேன்.”

"ஏனெனில் நான் இப்போது கிருஷ்ணவாசுதேவன், அவர்கள் பார்த்த ராதையின் கண்ணனோ, ராதையின் கண்மணியான கோவிந்தனோ அல்ல."

Thursday, February 10, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

ஷாயிபாவின் குரலில் தெரிந்த கசப்பும், வெறுப்பும் அனைவரையும் திகைக்க வைத்தது. “அவனுக்கா, அவனுக்கு நன்மை, தீமை, நல்லவர், கெட்டவர் எதுவும் தெரியாது! “ என்றாள் ஷாயிபா. மேலும் தொடர்ந்து, “ கரவீரபுரத்தில் என் பெரியப்பா ஸ்ரீகாலவ வாசுதேவரை மக்கள் அனைவரும் கடவுளாகவே வழிபட்டு வந்தனர். அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தான் உங்கள் மகன். ஸ்ரீகாலவ வாசுதேவரை கடவுள் இல்லை என மக்களிடம் கூறி அவர்கள் அவரை வழிபடுவதைத் தடுத்த உங்கள் மகனின் குழந்தைப் பிம்பத்தை நீங்கள் கடவுளாக வழிபட்டு வருகிறீர்கள். அவன் என்ன கடவுளா?? அல்லது நீங்கள் அவனைக் கடவுள் என நம்பி வழிபடுகிறீர்களா? இது என்ன நியாயம்?” கோபமும், ஆங்காரமும் குமுறியது ஷாயிபாவின் குரலில்.

தேவகி பொறுமையை இழக்கவில்லை. “ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது குழந்தாய்! உன் புரிதல் சரியில்லை. நடக்கும் நிகழ்வுகளை நீ பார்க்கும் கோணமும் சரியில்லை. போனால் போகிறது. அடுத்த முறை அவனை நீ சந்திக்கும்போது இதைப் பற்றிக் கேட்டுவிடு. அவன் செய்யும் செயல்களினாலேயே அனைத்து மக்களும் கண்ணனை ஒரு கடவுளாக, அதுவும் வாழ்விக்க வந்த இறைவனாக நினைக்கின்றனர். அதில் ஏதும் தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஏன், நீயும் உன் பெரியப்பாவைக் கடவுளாய் வழிபட்டு வந்ததில் அவரிடம் பரிபூரண பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்ததைத் தவறென நான் கூற மாட்டேன்.”

“அவரைத் தான் உங்கள் மகன் கொன்றுவிட்டானே!” பெருங்குரலெடுத்துக் கத்தின ஷாயிபா தன்னை அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த கம்சா இப்போது ஷாயிபாவைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளைத் தேற்றினாள். “அழாதே, பெண்ணே, அழாதே, படைத்தவன் என்ன எழுதினானோ அதை எவரால் மாற்ற இயலும்? நீ என்னுடன் வா. “ என்று கூறித் தானும், தன் தந்தையும் தங்கி இருக்கும் மாளிகையின் அந்தப்புரத்துக்கு அவளை அழைத்துச் சென்றாள். மறுநாள் அனைத்து விஷயங்களும் தெரிந்து கொண்ட கண்ணன் ஷாயிபாவைப் பார்க்க வந்தான். அவன் வந்தபோது வசுதேவரின் மாளிகையின் மேல் மாடத்தில் நின்றகொண்டிருந்த ஷாயிபா தன் பார்வையை எங்கோ தொலைதூரத்துக்குச் செலுத்திய வண்ணம், தன் ஆநந்தமயமான பழைய வாழ்க்கையின் நினைவுகளில் ஆழ்ந்து போயிருந்தாள் ஷாயிபா. சற்று நேரம் அவளையே கூர்ந்து பார்த்த வண்ணம் இருந்த கண்ணன், “ஷாயிபா, உனக்காக ஒன்று கொண்டு வந்துள்ளேன்.” என்றான் மென்மையாக.

“என்ன அது?” வேகமாய்த் திரும்பிய ஷாயிபாவின் குரலிலும், முகத்திலும் ஆக்ரோஷம்.

“உனக்கு என் தாயாரான தேவகி என் குழந்தை பொம்மையை வைத்து வழிபடுவது பிடிக்கவில்லை எனக் கேள்விப்பட்டேன். எனக்கும் தான் பிடிக்கவில்லை. அதுவும் நான் இத்தனை பெரியவன் ஆன பிறகும் அவள் அவ்வாறு செய்வது பிடிக்கவில்லை. ஆனால் பிறந்ததும் உடனே என்னைத் துறந்த என் தாய் நான் பிறந்தபோது எப்படி இருந்தேனோ அந்தப் பிறந்த கோலத்தின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாள். அதனால் அந்த பொம்மையை வைத்து வழிபடுகிறாள். இதை என்னால் தடுக்க இயலாது. அவளுக்கு அது நிம்மதியையும், ஆநந்தத்தையும் தருகிறது. போகட்டும், இதோ, இங்கே பார்! உன் பெரியப்பாவைப் போலவே தங்கத்தில் ஒரு உருவச்சிலை செய்யச் சொல்லிக் கொண்டு வந்துள்ளேன். ஒருவேளை நீ விரும்பினால் இந்தச் சிலைக்கு நீ உன் பெரியப்பாவுக்குச் செய்து வந்த வழிபாடுகளைச் செய்து வரலாம்.” திரிவக்கரை தன் கையில் சுமந்து கொண்டு வந்திருந்த ஒரு வெள்ளிப்பெட்டியைத் திறந்து அதனுள் இருந்த சிலையை வெளியே எடுத்துக் கண்ணன் கைகளில் கொடுக்க அவனும் அதை வாங்கி ஷாயிபாவிடம் நீட்டினான்.

“பாவி, மஹாபாவி, என் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டாயே! அவர் உயிரோடு இருந்தபோது அவரைக் கொன்றுவிட்டு, என் வாழ்க்கையைச் சூன்யமாக்கிவிட்டு இப்போது ஒரு தங்கப் பொம்மையை வைத்து என்னை விளையாடவா சொல்கின்றாய்? உயிரற்ற இந்தப் பொம்மையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்?” ஷாயிபாவின் கோபம் எல்லை மீறியது. ‘ஏன், ஷாயிபா? இந்த உருவச் சிலையை வைத்து நீ உன் பெரியப்பாவிற்குச் செய்த அனைத்து வழிபாடுகளையும் நன்கு நடத்தலாமே? உன்னுடைய மாறாத பக்தியினால் இந்தச் சிலைக்கும் உயிர் வந்தாலும் வந்துவிடும். “ கண்ணன் மென்குரலில் சொல்லக் கிரீச்சிட்டாள் ஷாயிபா.

“மோசக்காரா, நயவஞ்சகா, நீ ஒரு ஏமாற்றுக்காரன்!”

கண்ணனுக்கோ அவள் கோபம் வேடிக்கையாய் இருந்த்து. கண்களில் குறும்பு கூத்தாட, “ஆ, என்னை அப்படித் தான் சொல்லுவார்கள். ஆனாலும் நான் என்னதான் செய்தேன்? ஒன்றுமே இல்லை! வெண்ணெய் திருடினேன், பாலைக் குடிப்பேன், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பேன். அதிலே அவங்க பிள்ளைகளும் தானே அடங்குவாங்க. அப்படியும் என்னைத் திருடன் என்றார்கள். அது சரிதான் இல்லையா? அப்போது அவர்கள் சொன்னது சரியே. ம்ம்ம்ம்?? இப்போ நீ சொல்லுவதும் சரியாக இருக்கலாம். இல்லையா? சரி, சரி, ஷாயிபா, மிகக் கஷ்டப்பட்டு உன் பெரியப்பா போலவே சிலை செய்யச் சொல்லி வாங்கி வந்துள்ளேன். இதை நாசம் செய்துவிடாதே. என்ன இருந்தாலும் அவர் இப்போது உயிரோடு இல்லை. இறந்துவிட்டார். இறந்துவிட்டவர்கள் என்னதான் கொடுமைக்காரராய் இருந்தாலும் நாம் மரியாதை காட்டவே வேண்டும். அவமதிக்கக் கூடாது. மேலும் அவர் உன் மேல் காட்டிய பாசத்துக்கும், அன்புக்கும் அளவே இல்லை. சொந்த மகளை விட அதிகப் பாசத்தோடு உன்னை வளர்த்து ஆளாக்கி இருக்கிறார் இல்லையா?” என்றான் கண்ணன்.

கண்ணனின் சாந்தமான போக்கினால் குழப்பமடைந்த ஷாயிபாவுக்கு இன்னும் அதிகமாய் அழுகை வந்த்து. “ நீ சொல்கிறாயா இவற்றை என்னிடம்?? துரோகி, நீ தானே அவரைக் கொன்றாய்? கொன்றுவிட்டு இப்போது என்னிடம் இப்படி எல்லாம் பேச உனக்கு வெட்கமாய் இல்லை?” மீண்டும் அழ ஆரம்பித்தாள் ஷாயிபா.


“இதோ பார், இதை வாங்கிக்கொள், அழாதே, அழுகையை நிறுத்து முதலில். இதை ஸ்தாபிக்க நல்லதொரு இடம் தரும்படி அம்மாவிடம் சொல்லி விடுகிறேன். உனக்கு இஷ்டமிருந்தால் இந்த உருவச் சிலையை நீ வழிபடும் சமயம் உன்னோடு நானும் கலந்து கொள்கிறேன். “

"ஏமாற்றுக்காரா, வேஷக்காரா, என்னை என்னவென்று நினைத்தாய்? இப்படி எல்லாம் செய்தால் நான் உன்னை மன்னித்துவிடுவேன் என்றா நினைக்கிறாய்? எனக்குப் புரிந்துவிட்டது, நீ அதற்காகவே இதை எல்லாம் எனக்குச் செய்கிறாய்! நீ என்ன செய்தாலும் உன்னை என்னால் ஒரு நாளும் மன்னிக்கவே முடியாது.”


“அடாடா, நீ என்னை மன்னிக்கவே வேண்டாம் ஷாயிபா. ஆனால் இந்த உருவச்சிலை என்ன பாவம் செய்த்து? இதை வைத்துக்கொண்டு உன் வழிபாட்டை நடத்து!”


அவன் கைகளில் இருந்து அந்தச் சிலையைப் பிடுங்கிக்கொண்டாள் ஷாயிபா. தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். “ஆம், நான் இதை பத்திரமாய்ப் பாதுகாப்பேன். இதற்கு வழிபாடுகள் செய்வேன். ஏன் தெரியுமா? அதன் மூலம் உன்னுடைய துரோகத்தை நான் மறக்காமலும், உன்னை நான் மன்னிக்காமலும் இருக்கவே. உன்னை எந்நாளும் நான் மன்னிக்கவே மாட்டேன்.” என்றாள் ஷாயிபா. மீண்டும் கண்ணன் குறும்புச் சிரிப்போடு அவளிடம், “சரி, சரி, இன்னும் ஒரே ஒரு விஷயம் இருக்கிறது உன்னிடம் சொல்ல.” என்றான்.

நினைத்தேன். இத்தனை நேரம் நீ என்னிடம் அன்பு காட்டிப் பேசியபோதே அதில் ஏதோ உள் விஷயம் இருக்கிறதென நினைத்தேன். இல்லை எனில் நீ என்னிடம் இப்படிப் பேசி இருக்கமாட்டாயே!” என்றாள் ஷாயிபா.

“திரிவக்கரை சில நல்ல அழகான துணிமணிகளையும், ஒரு சில ஆபரணங்களையும் கொண்டு வந்திருக்கிறாள். நீ உன் பெரியப்பாவுக்குப் பூஜைகள் செய்யும்போது இந்த அல்ங்கோலமான ஆடையோடா செய்யப் போகிறாய்? உன் பெரியப்பாவும் ஒரு மகாராஜாவாய் இருந்தவர். நீயும் ஒரு இளவரசி. ஆகவே உன் தகுதிக்கு ஏற்ற இந்த ஆடைகளையும் அணிந்து கொண்டு, ஆபரணங்களைப் பூட்டிக்கொண்டு உன் வழிபாடுகளை நடத்து!’ என்று சில பட்டாடைகளையும், ஆபரணங்களையும் ஷாயிபாவிடம் நீட்டினான் கண்ணன்.


வெடுக்கென்று அவன் கைகளிலிருந்து அவற்றைப் பிடுங்கி அப்படியே சுருட்டிக் கண்ணன் முகத்திலேயே வீசி எறிந்தாள் ஷாயிபா. மெளனமாயும், நிதானமாயும் அவற்றை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி எடுத்தான் கண்ணன். நிமிர்ந்த கண்ணன் கண்களிலோ, முகத்திலோ கோபத்தின் அடையாளமே தெரியவில்லை. சிரித்தவண்ணமே, கண்ணன்,”என்ன ஆயிற்று உனக்கு? நீ கரவீரபுரத்தில் எவ்வளவு சிறப்பாகவும், அழகாகவும் உன்னை அலங்கரித்துக்கொண்டு இந்த வழிபாடுகளை நடத்துவாய்? இங்கே மட்டும் ஏன் இப்படி?” ஒரு க்ஷணம் கண்ணன் தன்னைக் கண்டு பரிகசிக்கிறானோ என்று எண்ணிய ஷாயிபா அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தையும், மனப்பூர்வமாகவே கண்ணன் பேசுவதையும் உணர்ந்து கொண்டாள்.


“சரி, சரி, நான் இவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உனக்காக அல்ல, என் பெரியப்பாவின் வழிபாட்டுக்காக. அவருக்காக. “ என்றாள், “நான் சொல்லுவதும் அதுவே!” என்றான் கண்ணன். “நீ ஒன்றும் முழுமனதோடு இதைச் சொல்லவில்லை என்பதை நான் அறிவேன்.” இப்படிச் சொன்னாலும் ஷாயிபாவின் உள் மனதில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அது வரையில் பேசாமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த திரிவக்கரைக்கு நடந்தவைகளைப் பார்க்கவும் கேட்கவும் ஷாயிபாவின் மேல் கோபம் அதிகரித்த்து. அவளைப் பார்த்து, “நான் மட்டும் கிருஷ்ண வாசுதேவனாக இருந்திருந்தால் இத்தனை நேரம் உன்னை அடித்தே கொன்றிருப்பேன்.” என்றாள். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் ஷாயிபாவின் சுபாவம் அவளுக்குப் புரியாததோடு பிடிக்கவும் இல்லை. கண்ணன் அவசரம், அவசரமாக, “ திரிவக்கரை சொல்வதை எல்லாம் நினைத்துக்கொண்டு வருந்தாதே ஷாயிபா. அவள் கண்ணனாக இருந்திருந்தால், திரிவக்கரையே இருந்திருக்க மாட்டாள். என்ன இருந்தாலும் ஷாயிபா ஷாயிபாதான். அவளுக்கு நிகரில்லை. சரி, நான் இங்கே இருப்பது உனக்குப் பிடிக்கவில்லை என்பதால் நான் கிளம்புகிறேன்.” என்றான் கண்ணன்.

முதலில் அதைச் செய், என்னைத் தனிமையில் விடு! என்றாள் ஷாயிபா. அவள் கடுகடுப்பான மனநிலைக்கு மீண்டும் சென்றுவிட்டாள்.

Monday, February 7, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

எல்லாவற்றையும் விட ப்ருஹத்பாலனுக்கும், அவன் நண்பர்களுக்கும் ஆத்திரமடைய வைத்த ஒரு விஷயம் கண்ணனிடம் இருந்த அந்த காந்த சக்திதான். அனைவரையும் பார்த்த மாத்திரத்தில் தன் பக்கம் இழுத்தான் கண்ணன். அவனைக் கண்டவர் ஆணோ, பெண்ணோ, பறவைகளோ, மிருகங்களோ, அவ்வளவு ஏன் செடி, கொடிகளும், மரமும், மலையும், நதியும், கடலும் கூட அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை போல் தென்பட்டன என்றால் மிகையில்லை. அதுவும் தினம் காலை அவன் நதியில் குளிக்கச் சென்றால் அவன் வரும் நேரத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் கண்ணன் தரிசனத்திற்குக் காத்துக்கிடக்கிறது. மஹாதேவர் கோயிலுக்குக் கண்ணன் சென்றால் அங்கே மஹாதேவரை வணங்குவதையும் விட்டுவிட்டு மக்கள் கூட்டம் அவனை மொய்த்துக்கொள்கிறது. பெண்களோ எனில் தேவகியின் அந்தப்புரத்திற்குக் கண்ணன் வரும் நேரம் அங்கே குழுமுகின்றனர் . இளைஞர்களும், மற்ற ஆண்களும், கண்ணன் மல்யுத்தப் பயிற்சி செய்யும் இடத்திலும், ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளும் இடத்திலும் கூடுகின்றனர். அவன் சொல்வதை வேதவாக்காய் நினைக்கின்றனர்.

ப்ருஹத்பாலன் எப்போதையும் விட அமைதியாகிவிட்டான். சாத்யகிக்கோ தன் நண்பனும், பட்டத்து இளவரசனாகப் போக இருந்தவனும் ஆன ப்ருஹத்பாலனின் திறமை மீது அவநம்பிக்கை கொண்டுவிட்டான். கண்ணன் எதிர்பார்க்கும் குணங்கள் எதுவும் தன்னிடமோ தன் நண்பர்களிடமோ இல்லை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டான். ப்ருஹத்பாலன் இனி பட்டத்து இளவரசன் ஆவது கடினம் என்றே தோன்றியது. ஆனால்
ப்ருஹத்பாலனின் கவலையே வேறு! அவன் மதுராவின் அரசனாக முடிசூட்டிக்கொண்டு ஜராசந்தனின் நட்பைப் பெற்று சுகமாய் வாழலாம் என நினைத்துக்கொண்டிருந்தான்,; அந்த எண்ணத்தில் கண்ணன் மண்ணைப் போட்டுவிட்டானே! கண்ணன் ஜராசந்தனையே ஜெயித்து ஓட ஓட விரட்டிவிட்டான் என்ற குதூகலத்தில் ஆழ்ந்திருக்கும் மதுரா நகரம் இனி ப்ருஹத்பாலனை நினைக்குமா?

ஆஹா, நான் மட்டும் ஜராசந்தனிடம்…….. சட்டென ஒரு பயம் தாக்கியது ப்ருஹத்பாலனுக்கு. கிருஷ்ணன் இருக்குமிடத்தை ஜராசந்தனுக்குச் சொன்னதும், கிருஷ்ணனைக் காட்டிக்கொடுத்ததும், தான் தான் என்பதை எவரேனும் கண்டு பிடித்துத் தன்னைக் காட்டிக்கொடுத்துவிட்டால்?? அவன் தாயான கம்சாவிற்கோ, அசூயையிலும், அதன் விளைவாக எழுந்த ஆத்திரத்திலும் என்ன செய்வதென்றே புரியவில்லை. தன் பிரியத்துக்கு உகந்த மகன் ஆன ப்ருஹத்பாலன் இனி அரியணை ஏறமுடியும் என்பது கனவு என்று புரிந்துவிட்டது அவளுக்கும். திடீரென எங்கிருந்தோ வந்து தன் கனவுகள் அனைத்தையும் சுக்குநூறாக ஆக்கிய கண்ணன் மேல் இனம் தெரியாத துவேஷமும் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையைச் சரியாகவும் நிதானமாகவும் கையாளவேண்டும். அதற்குத் தகுந்த நபர் சாத்யகிதான். கம்சாவிற்கு மீண்டும் கண்ணன் மேல் கோபம் மூண்டது.

சாத்யகி கம்சா நினைத்தது போல் விரைவில் நிதானத்துக்கு வந்துவிட்டான். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். தன் நண்பர்களை ஒன்று திரட்டினான். சரியான சமயம் வந்ததும் கண்ணன் மேல் தாக்குதல் நடத்திக்கொள்ளலாம் என்றும், அதுவரை பொறுமையைக் கடைப்பிடித்துக்கொண்டு நாமும் மல்யுத்தப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி என்று கலந்து கொள்வோம் என்று கூறினான். அனைவருக்கும் இந்த யோசனை பிடித்தது. ஆகவே அவர்களும் அனைவருடனும் கலந்து கொண்டு எல்லாப் பயிற்சிகளையும் மேற்கொண்டார்கள். முக்கியமாய் ரதம் விரைவாக ஓட்டும் பயிற்சி. ப்ருஹத்பாலன் அதில் தீவிரம் காட்டி வந்தான்.

அந்தப்புரத்தில் ஷாயிபாவுக்கு புது இடமும், புதிய சூழ்நிலையும், புதிய மனிதர்களும் கண்டாலே பிடிக்கவில்லை. ஆத்திரமாய் வந்தது. அவளை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றவேண்டி தேவகி அம்மாவும், திரிவக்கரையும் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தோல்வியைத் தழுவும் வண்ணம் அவள் மாறவோ, மனதை மாற்றிக்கொள்ளவோ மறுத்தாள். என்றாலும் அவள் மனதையும் கவர்ந்த ஒரு விஷயம் தேவகி அம்மா பாலகிருஷ்ணனுக்கு வழிபாடு செய்து வந்தது. அவள் சித்தப்பன் ஆன ஸ்ரீகாலவனுக்கு இப்படி ஒரு உள்ளார்ந்த ஈடுபாட்டுடனேயே அவளும் வழிபாடுகளைச் செய்து வந்திருந்தாள். அவ்வளவு ஈடுபாட்டுடன் இந்த பாலகிருஷ்ண விக்ரஹத்திற்கு தேவகி அம்மா வழிபாடுகள் செய்கிறார்களே! அதையே ஆச்சரியத்துடன் கவனிப்பாள் ஷாயிபா. என்றாலும் அவள் தன் நாக்கையே சாட்டையாகப் பாவித்து அனைவரையும் ஓட ஓட விரட்டினாள். தன் வார்த்தைகளால் அனைவரின் மனதையும் புண்ணாக்கினாள். தேவகி அம்மாவிடம் கடுமையைக் காட்டுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தாலும் ஷாயிபா அவளையும் விட்டு வைக்காமல் தன் அதிகப் பிரசங்கித் தனமான கேள்விகளாலும், கடுமையான குதர்க்கப் பேச்சுக்களாலும் அவள் மனதையும் புண்ணாக்க முயன்றாள். ஆனால் தேவகியோ அனைத்தையுமே தன் அன்பும், கருணையும், கனிவும் நிறைந்த பேச்சாலேயே சமாளித்தாள். ஷாயிபா எவ்வளவு மோசமாய் அவளை நடத்தினாலும் அதைப் பொறுத்துக்கொண்டு அவளிடம் அன்பு பாராட்டினாள்.

திரிவக்கரையோ ஷாயிபாவிடம் ஒரு சிநேகிதியாகவே நடந்து கொண்டாள். ஷாயிபா தன் பழைய வாழ்க்கையை நினைத்துக்கொண்டு அழும்போதெல்லாம் அவளை நன்றாக வாய்விட்டு அழும்படி செய்தாள் திரிவக்கரை. அவள் துன்பப் பட்டு மனம் வருந்தினால் அவளிடம் அப்போது ஒரு வார்த்தை கூடப் பேசாமலேயே அவளுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்தாள். ஷாயிபா திரிவக்கரையிடம் கோபத்தைக் காட்டினாள் என்றால் அவள் அதை லக்ஷியமே செய்யவில்லை. ஆனால் ஷாயிபா கண்ணனைப் பற்றி ஒரு வார்த்தை தப்பாய்க் கூறிவிட்டால் போதும்! பொங்கி எழுவாள் திரிவக்கரை. கண்ணன் நிகழ்த்திய அற்புதங்களை எடுத்துச்சொல்லுவாள். அவனுடைய நேர்மையை, அவன் எவ்வாறு தர்மத்திலிருந்து பிறழாமல் இருக்கிறான் என்பதை, அவன் எவ்விதம் கூனும், அழகற்றவளாயும் இருந்த தன்னை ஒரு அழகான பெண்ணாக மாற்றினான் என்பதை! சொல்லச் சொல்ல அலுக்காது திரிவக்கரைக்கு. மேலும் ஷாயிபாவுக்குக் கோபம் வந்து கண்ணனைக் குறித்து அவதூறான சொற்களைப் பேசிக் கத்த ஆரம்பித்தால் திரிவக்கரையும் அவள் குரலுக்கும் மேல் குரலெடுத்துக் கத்த ஆரம்பிப்பாள். கடைசியில் இருவருக்குமே களைப்பும், அலுப்பும் வர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். ஷாயிபாவிற்கோ சுயப் பச்சாத்தாபத்தில் மனம் நைந்து போக தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பிப்பாள். திரிவக்கரை தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு ஷாயிபாவையும் ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்ற ஆரம்பிப்பாள்.

கண்ணன் இரு நாட்களுக்கு ஒருமுறை அங்கே வந்து நலம் விசாரிப்பான். திரிவக்கரையை இப்போது தேவகியின் அந்தப்புரத்திலேயே தங்க வைத்திருந்தான். ஒருநாள் கம்சாவும் ஏதோ வேலையாக அங்கே வந்திருக்கையில் ஷாயிபா தன் வழக்கமான அலக்ஷியத்துடனும், கர்வம் பொங்கவும், தேவகியைப் பார்த்து, “இந்தப் பொம்மையை எத்தனை நாட்கள் அம்மா வைத்து வழிபாடு செய்வீர்கள்? உங்கள் பொன்னான நேரத்தை இந்தப் பொம்மையைக் குளிப்பாட்டுவதிலும், அலங்கரிப்பதிலும், உணவு ஊட்டுவதிலும் செலவு செய்கின்றீர்களே?” என்றாள்.

“குழந்தாய், அது என் கடவுள்! என் உயிர்! என் ஜீவன்!” தேவகிக்கு ஷாயிபாவின் இந்த நடவடிக்கைகளும், அவள் கேள்விகளும் இப்போது மிகவும் பழகி விட்டது. “யாரம்மா இந்தக் கடவுள்? இந்த பொம்மைக்குழந்தையா உங்கள் கடவுள்?” மீண்டும் அலட்சியமாய் ஷாயிபா. தேவகி பொறுமையாக, “ இவன் என் மகன் என்பது உனக்குத் தெரியுமே ஷாயிபா!” என்றாள். “ஓ,ஓ, நான் நன்றாய் அறிவேன் அம்மா. இந்தப் பொம்மை ஒரு சின்ன்ஞ்சிறு குழந்தைப் பொம்மையாக அல்லவோ உள்ளது? உங்கள் மகன் நன்கு வளர்ந்து இளைஞனாக ஆகிவிட்டாரே!”

தேவகியின் ஈடுபாட்டையும், பக்தியையும் பற்றி அறிந்திருந்த மற்றப் பெண்களுக்கு ஷாயிபாவின் இந்தக் கேள்வி கொஞ்சம் அச்சத்தையே உண்டாக்கியது. ஆனால் தேவகி அதே நிதானத்தோடு, “எனக்கு அவன் எப்போதுமே குழந்தைதான் ஷாயிபா. அவன் பிறந்தபோது நான் அவனை இவ்வாறே கண்டேன். உனக்குத் தெரியும் அல்லவா? அவன் பிறந்ததும், கோகுலத்திற்குச் சென்றுவிட்டான் என்றும், அங்கே யசோதையிடம் வளர்ந்தான் என்பதும், பதினாறு வருடங்கள் நான் அவனைக் கண்களால் கண்டது கூட இல்லை என்பதும், நீ அறிவாய் அல்லவா? அப்போது அந்த மீளாத் துயரத்திலிருந்து என்னை மீட்டது இந்தக் குழந்தை விக்ரஹம் தான். இவனை இவ்வகையில் நான் அநுதினமும் வழிபட்டு வந்திருக்காவிட்டால் இன்று உயிரோடு இருந்து கொண்டு உன்னுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன்.”

“இருக்கலாம் அம்மா, ஆனால் இந்தப் பொம்மைக் கண்ணனைப் பார்த்தால் கண்ணன் இப்போது எப்படி இருக்கிறானோ, அதைப் பற்றிச் சுட்டிக்காட்டுவதாகத் தெரியவே இல்லையே! போகட்டும், இத்தனை புத்திசாலி ஆன அவன் ஏன் இன்னமும் உங்களை இந்தப்பொம்மைக்கு வழிபாடு செய்து வருவதை அநுமதித்து வருகிறான்? அவன் தான் நேரிலேயே வந்துவிட்டானே?”

“குழந்தாய், கண்ணனுக்குத் தெரியும் எது நன்மை, எது தீமை என்பது!” தேவகி பொறுமையாய்ச் சொல்ல ஷாயிபா ஏளனமாய்ச் சிரித்தாள்.

“அவனுக்கா? அவனுக்கு நன்மை, தீமை, நல்லவர், கெட்டவர் எதுவும் தெரியாது!” என்றாள்.


இந்தக் கண்ணன் கதை திரு கே.எம். முன்ஷி அவர்கள் எழுதிய கிருஷ்ணாவதார் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப் படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன். நன்றி.