Tuesday, November 29, 2016

பின் வருந்துயர்க்கே சிந்தனை உழல்வரோ!

பீஷ்மர் தன் ஊஞ்சல் படுக்கையில் படுத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தார்.. உள்ளூரத் தவித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவனுக்கு அப்போதைய சூழ்நிலை நன்றாகவே புரிந்திருந்தது. குரு வம்சத்தினரின் முக்கியஸ்தர்களில் பலரும் தலைவர்கள் பலரும் யுதிஷ்டிரனோடு இருக்கவே விரும்பி இந்திரப் பிரஸ்தம் வந்து விட்டனர். அங்கே தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக் கொண்டும் விட்டனர். இங்கே இருந்தவர்கள் அனைவரும் துரியோதனனுக்கு ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டவர்கள்; அவனிடம் விசுவாசம் காட்டுபவர்கள்; அவன் ஆணையை மீறாதவர்கள். ஹஸ்தினாபுரத்திலேயே தங்கள் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதால் துரியோதனனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது தவிர வேறு வழி இல்லை அவர்களுக்கு. துரியோதனனின் நண்பர்கள் அனைவரும் பீமன் மட்டும் சூதாட்டத்தின் நடுவில் தலையிட்டான் ஆனால் அவனை எதிர்க்கவும், அவனிடமும் சவால் விடவும் அறை கூவல் விடுக்கவும் தயங்கவே மாட்டார்கள். அவர்கள் அதைத் தான் முடிவும் செய்திருக்கிறார்கள். அதை பீஷ்மர் நன்கறிவார். அவரையும் அறியாமல் ஓர் புன்னகை பிறந்தது. “ம்ம்ம்ம், என்னைச் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல! என்ன செய்யப் போகிறார்கள், பார்க்கலாம்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

அவர் அப்போது தான் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கத் தொடங்கினார். அப்போது பார்த்து விதுரர் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டுக் கொண்டு நுழைந்து விட்டார். விதுரரை அந்த நேரத்தில் அங்கே கண்ட பீஷ்மர் ஆச்சரியம் அடைந்தார். விதுரரே நேரில் வர வேண்டுமானால் விஷயம் மிகவும் முக்கியம். இந்த நேரத்தில் விதுரர் வரக் காரணம் இருந்தால் ஒழிய அவர் வர மாட்டாரே! பீஷ்மர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார். “உள்ளே வா! விதுரா!” என்று அவரை உள்ளே அழைத்தார். விதுரர் தனியாக வரவில்லை. அவருடன் யாரோ ஓர் மனிதன் தன் முகத்தைத் தன் மேல் துண்டால் மறைத்துக் கொண்டு வந்திருந்தான். “யார் இவன்?” என்று பீஷ்மர் கேட்டார். விதுரருடன் வந்தவன் தன்னுடைய முகத்தை மூடியிருந்த துணியை எடுத்தான். பின்னர் கீழே குனிந்து பிதாமஹரை நமஸ்கரித்தான்.

“யுதிஷ்டிரா, குழந்தாய்! நீயா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பீஷ்மர். யுதிஷ்டிரன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் எழுந்து நின்றான். “நீ, இந்த நேரத்தில் இங்கே எதற்கு வந்தாய்? என்ன இது விதுரா! என்ன விஷயம்?” என்று விதுரரிடமும் கேட்டார் பீஷ்மர். “மிக மிக முக்கியமானதொரு விஷயம், பிதாமஹரே! “ என்றார் விதுரர். யுதிஷ்டிரனிடம் திரும்பினார் விதுரர். “யுதிஷ்டிரா, நீ இப்போது தாத்தா அவர்களிடம் என்ன சொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயோ அதைச் சொல்லலாம்.” என்று கூறினார். “நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள், உதவி கேட்கப் போகிறேன்.” என்றான் யுதிஷ்டிரன். “அது இப்போது ஆடப் போகும் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டது.” என்றும் கூறினான்.

“குழந்தாய்! நீ ஏன் இந்தச் சவாலுக்கு ஒத்துக் கொண்டாய்? முட்டாளா நீ?” என்று கோபத்துடன் கேட்டார் பீஷ்மர். பின்னர் அதே கடுமையான குரலில், “ஹஸ்தினாபுரத்துக்கே வரமாட்டோம் என்று மறுப்பதற்கென்ன? நீ மட்டும் வருவதற்கு மறுத்திருந்தால், வராமல் இருந்திருந்தால், துரியோதனன் அதனால் எல்லாம் உங்களுடன் போர் தொடுக்க ஆயத்தம் ஆகி இருக்கப் போவதில்லை. அவனுக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் இல்லை. அப்படியே அவன் போரை அறிவித்திருந்தாலும், அதில் அவன் வெல்லப்போவதும் இல்லை!” என்றார் பீஷ்மர்.

“தாத்தா, நான் பேசலாமா?” யுதிஷ்டிரன் கேட்டான்.

“சொல், குழந்தாய், சொல். உன் மனதில் உள்ளதைச் சொல்! ஆனால் உன்னுடைய பலஹீனத்தினால் நீ நம் அனைவரையும் ஓர் பெரிய ஆபத்தில் மாட்டி விட்டாய்!” என்றார் பீஷ்மர். யுதிஷ்டிரன் கூப்பிய கரங்களுடன், “தாத்தா, நான் ஓர் முட்டாளாக இருக்கலாம். ஆனால் இப்போது நாங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். உங்களால் தான் எங்களைக் காப்பாற்ற முடியும். அதனால் தான் உங்கள் உதவியை வேண்டி இங்கே இந்த நேரத்தில் வந்திருக்கிறேன், தாத்தா!” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன வேண்டும், உனக்கு?” பீஷ்மர் கேட்டார்.

“என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் சூதாட்டத்தின் போது நடுவில் என்ன நடந்தாலும் மதிப்புக்குரிய தாத்தா அவர்கள் குறுக்கிட வேண்டாம் என்பதே ஆகும்! அந்த ஆட்டம் மிக மோசமாக விதிமுறைகளை மீறி விளையாடப் பட்டாலும் நீங்கள் அதைக் குறித்து எதுவும் சொல்ல வேண்டாம்!” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன?” தன் படுக்கையில் எழுந்து அமர்ந்து விட்டார் பீஷ்மர். தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு தான் காண்பது கனவல்லவே என உறுதி செய்து கொண்டார். பின்னர் வறண்ட சிரிப்புடன், “ நான் விழித்திருக்கிறேனா? தூங்குகிறேனா? தூக்கத்தில் கனவுகள் காண்கிறேனா?” என்று கேட்டுக் கொண்டார். “இல்லை தாத்தா, இல்லை! தாங்கள் தூங்கவெல்லாம் இல்லை! நினைவில் தான் இருக்கிறீர்கள். தூங்கவும் இல்லை. ஷகுனி எவ்வளவு மோசமாகச் சூழ்ச்சிகள் எல்லாம் செய்து இந்த விளையாட்டை ஆடினாலும் நீங்கள் நடுவே குறுக்கிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவே நான் இங்கே வந்தேன்.” என்று மீண்டும் சொன்னான் யுதிஷ்டிரன். அதைக் கேட்ட பீஷ்மர் கண்கள் வியப்பில் விரிந்தன. விரிந்த கண்களுடன் அவர், “நீ ஏன் என் தலையீடு இருக்கக் கூடாது என்று விரும்புகிறாய்? என்ன காரணம்?” என்று கேட்டார்.

யுதிஷ்டிரன் சற்று நேரம் மௌனம் காத்தான். பின்னர் மெல்லிய குரலில், “மதிப்புக்குரிய தாத்தா அவர்களே! இந்திரப் பிரஸ்தத்தை விட்டு நாங்கள் கிளம்புவதற்குச் சில நாட்கள் முன்னர் ஆசாரியர் வேத வியாசர் ஓர் தீர்க்க தரிசனத்தைக் கண்டறிந்து என்னிடம் சொன்னார். அதன்படி ஓர் மாபெரும் யுத்தம் நடக்கப் போகிறது என்றும் அந்த யுத்தத்தில் க்ஷத்திரியர்கள் பலரும் உயிரிழப்பார்கள் என்றும் அந்த யுத்தத்தின் மையக்காரணமாக நான் இருப்பேன் என்றும் சொன்னார்.” என்றான் யுதிஷ்டிரன். குரு வம்சத்தின் இரு பெரிய கிளைகளான நீங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் இன்னொருவரை அழிக்க முனைந்தால் அது மாபெரும் யுத்தத்தில் தான் கொண்டு விடும்!” என்றார் பீஷ்மர்.

Monday, November 28, 2016

திருதராஷ்டிரன் வேண்டுகோள்!

பிதாமஹர் பீஷ்மர் திருதராஷ்டிரனைப் பரிதாபமாகப் பார்த்தார். அவன் மேலும் அவருக்குப் பச்சாத்தாபம் பொங்கியது. சின்னக் குழந்தையின் பிதற்றலைப் போன்ற அவன் பேச்சு, நடுங்கும் உதடுகள், உதறும் கைகள் எல்லாமும் சேர்ந்து அவனே ஓர் பரிதாபத்துக்குரிய தோற்றத்தில் காணப்பட்டான். வேறு வழியில்லை, தான் கையாலாகாதவன் என்னும்படி தோற்றமளித்தான். தன் படுக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் பீஷ்மர். “மகனே, நீ கேட்கும் இந்த வேண்டுகோளுக்கு நான் செவி சாய்க்கவில்லை எனில், துரியோதனனும் அவன் நண்பர்களும் என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறார்கள்? ஏன் என்னிடம் மறைக்கிறாய்? அவர்கள் எடுத்திருக்கும் எல்லா முடிவுகளையும் நீ என்னிடம் ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய்?” என்று கேட்டார் பீஷ்மர்.

“அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது எனக்கே புரியவில்லை!” என்றான் திருதராஷ்டிரன். “ஆனால் எனக்குத் தெரிந்த உளவுக்காரர்கள் மூலம் அவன் ஏதோ நடவடிக்கை எடுப்பான் என்ற வரையில் செய்தி கிடைத்திருக்கிறது!”அவனால் மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. பீஷ்மரிடம் மறைக்கவும் அவனால் முடியவில்லை. சொல்லவும் முடியவில்லை! தன் குருட்டுக் கண்களை சஞ்சயன் நின்றிருக்கும் இடம் நோக்கி உத்தேசமாகத் திருப்பினான். “சஞ்சயா! நீயே சொல்! மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பிதாமஹரிடம் அவர்கள் எடுத்திருக்கும் முடிவு பற்றி நீ அறிந்திருப்பதைச் சொல்!” என்று சஞ்சயனை இதில் நுழைத்து விட்டான்.

அதற்கு சஞ்சயன், பீஷ்மரைப் பார்த்து, “பிரபுவே, என்னை மன்னியுங்கள்! நான் உண்மையைத் தான் சொல்லப் போகிறேன். ஆனால் அதையும் என்னைக் கேட்டுக் கொண்டதாலேயே சொல்கிறேன்.” என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சொன்னான். “ஓ, சரி, சரி, சொல், உனக்குத் தெரிந்ததைச் சொல்!” என்று ஆணையிட்டார் பீஷ்மப் பிதாமஹர். மேலும் தொடர்ந்து, “நீ சொல்வதெல்லாம் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடிப்பது எனக்குக் கஷ்டம் இல்லை! எளிதாகக் கண்டு பிடித்துவிடுவேன்.” என்றார். சஞ்சயன், “பாண்டவர்களை அடியோடு அழிக்க அவர்கள் எந்த வழிக்கும் செல்வதாக முடிவெடுத்துவிட்டார்கள். அவர்கள் ஒரே நோக்கம், பாண்டவர்கள் தலைதூக்க முடியாமல் அடியோடு அழிவது தான்!” என்றான். “ஹூம், நான் இதையா கேட்டேன்? ஏன் என் கேள்வியைத் தவிர்க்கிறாய்? நான் இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு அவர்கள் என்ன சொல்கின்றனர்? என் தலையீடு அவர்களுக்குச் சம்மதமா?” என்று நேரிடையாகக் கேட்டார் பீஷ்மர்.

சஞ்சயன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் வணக்கத்துடன், “அதை நான் சொல்ல முடியாது பிரபுவே! மதிப்புக்குரிய மன்னர் சொல்வார்!” என்றான். பீஷ்மர் தன் புருவங்களை நெரித்துக் கொண்டார். “ஓ, அதனால் என்ன பரவாயில்லை. எனக்கு யார் சொன்னாலும் அதைக் குறித்துக் கவலை இல்லை! எனக்குத் தெரிய வேண்டியது அவர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பது ஒன்றே! அதை நீ சொன்னாலும் சரி, திருதராஷ்டிரன் சொன்னாலும் சரி!” என்றார். திருதராஷ்டிரன் அதற்குள்ளாக, “பிதாமஹரே, அந்த இளைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படுகின்றனர்.வேண்டாததை எல்லாம் பேசுகின்றனர்.” என்றான். அவன் கைகள் அதீத உணர்ச்சியில் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் பேச்சும் தட்டுத் தடுமாறிக் கொண்டு வந்தது. மேலும் தொடர்ந்தான் திருதராஷ்டிரன்.

“அவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. மோசமான மூளைக் கோளாறு. அதில் அவர்கள் பேசுவது ஒன்றும் சரியல்ல. உங்கள் அதிகாரத்தையே அவர்கள் மீறப் போகின்றனராம். உங்களை எதிர்த்து அறைகூவல் விடப்போகின்றனராம். இந்த முட்டாள்தனமான முடிவை உணர்ச்சி வசப்பட்டு எடுத்திருக்கின்றனர்.” என்றான் திருதராஷ்டிரன். “ம்ம், நீ மேலே ஒன்றும் சொல்ல வேண்டாம்! நீ விரும்பினால் இந்தக் கதையின் அடுத்த பகுதியை நானே சொல்லி முடிக்கிறேன்.” என்று சீறினார் பீஷ்மர். “அவர்கள் எவ்வளவு மோசமான வழியிலும் செல்ல ஆயத்தமாகி விட்டனர்! அது தானே! இன்னும் சொல்லப் போனால் என்னுடைய கழுத்தை அறுக்கக் கூடத் தயங்க மாட்டார்கள்!” என்று சொல்லியவண்ணம் அலட்சியத்துடனும், கோபத்துடனும் சிரித்தார் பீஷ்மர். பின்னர் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்.

அதன் பின்னர் மேலும் கேட்டார்; “திருதராஷ்டிரா, இந்தக் குரு வம்சத்தினரின் சபை அவ்வளவு மோசமாகி விட்டதா? அதுவும் உன் குமாரன் கைகளுக்கு வந்த பின்னர்? அவன் நண்பர்களுக்கும் அவ்வளவு தைரியம் வந்து விட்டதா? இந்தக் குரு வம்சத்தின் தலைவனையே அதிகாரம் செய்யும் அளவுக்கு அவர்கள் அனைவருக்கும் நெஞ்சில் தைரியம் வந்து விட்டதா? இது சரியல்ல, திருதராஷ்டிரா, சிறிதும் சரியல்ல! உன்னுடைய அன்பினால் அதிலும் நீ குருட்டுத்தனமான பாசம் உன் மகன் மீது வைத்திருக்கிறாய்! அதனால் அந்தப் பாசத்தால், இந்த மகத்தான ராஜசபையின் கண்ணியம், மகத்துவம் எல்லாமும் கெட்டு விட்டது!” என்று துக்கத்துடன் சொன்னார்.

திருதாராஷ்டிரன் நீண்ட பெருமூச்சு விட்டான். “நான் பலஹீனமானவன் தான். உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பலவீனமானவன். என் மகனின் துன்பத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அதை என்னால் சகிக்க முடியவில்லை. இரவுகளில் தூங்க முடியவில்லை. பெரும் துன்பத்தில் ஆழ்கிறேன்.” என்றவனுக்கு மேலே தொடர முடியவில்லை. “திருதராஷ்டிரா, நீ வருத்தத்துடன் இருப்பதை என்னால் உணர முடிகிறது. உன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்பதையும் காண்கிறேன். ஆனால் துரியோதனனுக்கு எதனால் மனக்குறைகள்? என்ன குறை அவனுக்கு? இந்த ஹஸ்தினாபுரம் தான் வேண்டும் என்றான். இப்போது ஹஸ்தினாபுரத்தின் பூரண அதிகாரமும் அவன் கைகளில். இங்கே அவன் தான் தலைவன். அவனுடைய யோசனையின் பேரில் பாண்டவர்களுக்கு உரிமையான இந்த ராஜ்யத்தை துரியோதனனுக்குக் கொடுத்துவிட்டு அவர்களை இங்கிருந்து துரத்தி விட்டாயிற்று. அதுவும் காட்டுக்குள்ளாக. பயங்கரமான காட்டைக் கொடுத்து அனுப்பி இருக்கிறோம். அந்தக் காட்டையே அழித்து அவர்கள் நகரமாக்கி அதைக் காண்போர் கவரும் வண்ணம் சொர்க்க பூமியாக மாற்றி இருக்கிறார்கள் எனில் அது அவர்கள் சொந்த முயற்சிகளின் மூலம். நாம் யாரும் அவர்களுக்கு உதவவில்லை. இப்போது துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை அவர்களிடமிருந்து பிடுங்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறான். இது நியாயமே இல்லை!” என்றார்.

தன் கைகளை விரித்தான் திருதராஷ்டிரன்.”எதுவும் என் கைகளில் இல்லை, பிதாமஹர் அவர்களே! நான் என்ன செய்ய முடியும்?” என்று வேறு வழியில்லாமல் சக்தியற்றுக் கேட்டான். “துரியோதனன் என் புத்திமதிகளைக் கேட்க மாட்டான். அப்படியே அவன் கேட்க நேர்ந்தாலும் அவன் நண்பர்கள் அதைக் கேட்டு அதன்படி நடக்க அவனை அனுமதிக்க மாட்டார்கள்.” அப்போது பீஷ்மர், “சரி, இப்போதே வெகு நேரம் ஆகி விட்டது. இன்னும் ஏதேனும் என்னிடம் சொல்ல வேண்டியது இருக்கிறதா?” என்று கேட்டார். “இவ்வளவு தான்…..” என்று ஆரம்பித்தான் திருதராஷ்டிரன். மீண்டும் அலட்சியமாகச் சிரித்தார் பீஷ்மர். “மகனே, என்ன ஆயிற்று உனக்கு? துரியோதனனின் மிரட்டலை என்னிடம் வந்து சமர்ப்பிக்க உனக்கு வெட்கமாக இல்லையா? அவ்வளவு கோழையாகி விட்டாயா நீ?” என்று கேட்டார்.

“இல்லை, தாத்தா அவர்களே! இல்லை! நானோ துரியோதனனோ உங்களை மிரட்டவே இல்லை. பயமுறுத்தவெல்லாம் இல்லை. துரியோதனன் தற்கொலை செய்து கொண்டு விடுவானோ என்னும் பயம் தான் எனக்குள்!” என்றான் திருதராஷ்டிரன். “இதை மிரட்டல் இல்லை எனில் என்ன சொல்வது? என்னை அச்சுறுத்தத்தானே சொல்லி இருக்கிறான்! நீயும் என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல்லவா? எனக்கு மிகவும் வயதாகிவிட்டது! இதில் எல்லாம் என்னால் உறுதியுடன் இருக்க முடியாது! என்றே நினைக்கிறாய்! ஆகவே என்னை ஒதுங்கி இருக்கும்படிக் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறாய்! இல்லையா!” என்றார் பீஷ்மர். தன் நடுங்கும் கைகளைக் கூப்பியவண்ணம் திருதராஷ்டிரன், “அப்படி எல்லாம் இல்லை, நான் அப்படியெல்லாம் நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை!” என்றான். “என்னை மன்னித்து விடுங்கள்!” என்றும் கேட்டுக் கொண்டான்.

‘நான் மீண்டும் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், தாத்தா அவர்களே! இந்த முட்டாள் பையன்கள் முட்டாள் தனமான ஓர் முடிவையும் நடவடிக்கையும் எடுக்கும்படியான சந்தர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுத்து விடாதீர்கள்!” என்று கேட்டுக் கொண்டான் திருதராஷ்டிரன்.

“எனக்குப் புரிகிறது திருதராஷ்டிரா, நன்கு புரிகிறது. நேர்மையாக நடக்கக் கூடாது என்று சொல்கிறாய்! நேர்மையான வழியில் செல்லக் கூடாது என்கிறாய்! நேர்மையைக் கடைப்பிடிக்கும் மனிதர்களை அநீதியாக நடந்து கொள்ளும் மனிதர்களின் ஆவேசக் கோபத்திலிருந்தும் அது சம்பந்தமான கொடூரமான தாக்குதல்களிலிருந்தும் காப்பாற்றக் கூடாது என்கிறாய்! அல்லவா? இது தானே உன் நோக்கம்? ஒன்று நினைவில் வைத்துக் கொள் திருதராஷ்டிரா! நீ மறந்துவிட்டாய் போலும்! இந்த பீஷ்மன் அச்சம் என்பதையே அறியாதவன். அச்சம் என்றால் என்னவென்று இவனுக்குத் தெரியாது!”

சற்று நிறுத்தியவர் பின்னர் சட்டென வெடுக்கென்று, “சரி, என் ஆசிகள் உனக்கு திருதராஷ்டிரா, இப்போது நீ இங்கிருந்து செல்லலாம்!” என்று உத்தரவு கொடுத்தார்.

Sunday, November 27, 2016

ஐய, இதனைத் தடுத்தல் அரிதோ!

பீஷ்ம பிதாமஹரின் அறை! நான்கு எண்ணெய் விளக்குகள் ஒளி வீசிப் பிரகாசிக்க பீஷ்மர் தன் படுக்கையில் படுத்திருந்தார். ஒரு மல்லன் அவர் கால்களுக்கு எண்ணெய் தடவித் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான். அவர் பல ஆண்டுகளுக்கும் மேலாக குரு வம்சத்தின் அஸ்திவாரமாக, அசையாத் தூணாக நிலையாக நின்று கொண்டு அரச பரம்பரையைத் தாங்கி வருகிறார். அவர் அறியாமல் ஒரு துரும்பு கூட இது வரை அசைந்ததில்லை. எந்தச் சட்டமும் போடப்பட்டதில்லை. ஆனால் இப்போது? பீஷ்மரின் மனதில் சிறு சலனம். ஒரு பெருமூச்சு விட்டார். இனியும் எத்தனை நாட்களுக்கு இப்படி நடக்கும்? சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்தார். இனி அவர் இந்தக் குரு வம்சத்தினருக்குத் தேவை இல்லை. அவருடைய முக்கியத்துவம் குறைந்து வருகிறது. மனதில் வியாகூலம் சூழ்ந்து கொள்ள ஹஸ்தினாபுரத்தை இப்போது தீவிரமாகப் பற்றி இருக்கும் நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மனக்கண்களில் கொண்டு வந்து ஆராய்ந்தார்.

துரியோதனன் தன் குருட்டுத் தந்தையிடம் தான் தற்கொலை செய்து கொள்வதாகப் பயமுறுத்தி மிரட்டித் தான் பாண்டவர்களைச் சூதாட்டம் ஆடுவதற்காக அழைப்பு அனுப்ப வைத்தான். தன் மகன் மேல் உள்ள பாசத்தின் காரணமாக குருட்டு அரசனும் ஒத்துக் கொண்டு விட்டான். உண்மையில் அது அரச குலத்தினருக்கு ஒரு சவால் தான். இப்படி ஒரு சவாலை வெளிப்படையாகக் கொடுத்த பின்னர் எந்த அரச குலத்தினரும், உண்மையான க்ஷத்திரியனும் இதை மறுக்க நினைக்க மாட்டான். க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பதாக வாக்குக் கொடுத்தவன் எவனும் இதை மறுக்க முடியாது. இது ஒரு கௌரவப் பிரச்னை! இதை மட்டும் யுதிஷ்டிரன் மறுத்துவிட்டால் பின்னர் சட்டரீதியான போர் தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமையும். ஆகவே போரைத் தடுக்கவே யுதிஷ்டிரன் இதற்கு ஒத்துக் கொண்டு வந்திருக்கிறான்.
பீஷ்மரும் திருதராஷ்டிரன் மனதை மாற்றுவதற்காக விதுரர் மூலம் பலவிதமாக முயற்சித்துத் தான் பார்த்தார். யுதிஷ்டிரனுக்கு அந்த அழைப்பை அனுப்ப வேண்டாம் என்று விதுரரும் வாதாடிப் பார்த்து விட்டார். ஆனால் அந்தக் கோழை மன்னன் திருதராஷ்டிரன் தன் குருட்டுக் கண்களில் இருந்து கண்ணீர் வர பீஷ்மரிடமே கெஞ்சினான். தான் போட்ட கட்டளைக்கு மேல் ஓர் கட்டளை பிறப்பித்துத் தன்னுடைய கட்டளையைச் செல்லாததாக ஆக்கவேண்டாம் என்று வேண்டிக் கொண்டான். அப்படி மட்டும் நடந்து விட்டால் அவன் அருமை மகன் துரியோதனன் தற்கொலை பண்ணிக் கொண்டு செத்துவிடுவான் என்று நம்பினான். விதுரரையே யுதிஷ்டிரனைப் போய்ச் சந்தித்து அழைப்பைக் கொடுத்து அவனை அழைக்குமாறு அனுப்பி வைத்தான் திருதராஷ்டிரன்.

இந்த விஷயத்துக்கு ஏன் விதுரர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை பிதாமஹர் பீஷ்மர் புரிந்து கொண்டார். அவர் ஐந்து சகோதரர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர். அவர்களுக்கு விரோதமான எதையும் செய்ய மாட்டார். அதோடு இந்த அழைப்பு விதுரர் மூலம் அளிக்கப்பட்டால் இதன் பின்னால் சூழ்ச்சியோ தந்திரமோ இருக்காது என்றும் அவர்கள் நம்புவார்கள். இதனால் தான் விதுரரை இந்த முக்கியமான தூது அனுப்பத் தேர்ந்தெடுத்தார்கள். விதுரரும் அதை ஒப்புக் கொண்டார். ஏனெனில் அவர் தலையீட்டால் இந்தப் பிரச்னையின் தீவிரம் குறைந்து சுமுகமாக முடியும் என்று அவரும் நினைத்தார். ஆனால் பிதாமஹர் பீஷ்மருக்கு இந்தச் சவாலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் புரிந்தே இருந்தது. அதை க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாமல் பின்பற்றும் ஐந்து சகோதரர்களும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

இப்போது அவர்கள் இந்தச் சூதாட்டம் ஆடுவதற்காக ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்து விட்டனர். யுதிஷ்டிரன் என்ன செய்யப்போகிறான்? அவன் இதில் வல்லவன் அல்ல! அதுவும் ஷகுனி போன்ற ஓர் தேர்ந்த சூதாட்டக்க்காரனை எதிர்கொண்டு ஜெயிக்கும் அளவுக்கு யுதிஷ்டிரனுக்கு இதில் எதுவும் தெரியாது. துரியோதனனுக்காக ஷகுனி ஆடுகின்றான் எனில் யுதிஷ்டிரனுக்காக யார் ஆடுவார்கள்? எவரும் இல்லையே! இதனால் பாண்டவர்கள் இந்தச் சூதாட்டத்தை ஒத்துக்கொள்ளாவிட்டால் அவர்களைக் கோழை என்றும் க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் என்றும் பொதுவில் சொல்லி விடுவார்கள். பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. ஆட்டம் நடக்கையில் ஷகுனி சூதாட்டத்தில் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அவனை ஏமாற்றுக்காரன் என்று சொல்லி ஆட்டத்தையே நிறுத்தலாம். பாண்டவர்கள் அதற்கு முயற்சிக்கலாம். ஆனால் அப்போதும் துரியோதனன் தரப்பு அரசர்கள் இவர்களைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டார்கள்! முக்கியமாய் அந்தக் கர்ணன்!

துரியோதனனின் தந்திரங்கள் அனைத்தையும் பிதாமஹர் பீஷ்மர் நன்கறிவார்.ஹஸ்தினாபுரத்துக்கு இரண்டு நாட்கள் முன்னர் வந்து சேர்ந்த பாண்டவர்களுக்கும், திரௌபதி மற்றும் குந்தி அனைவருக்கும் பிரமாதமான வரவேற்புக் கொடுத்து உபசரித்திருந்தான் துரியோதனன். அதன் மூலம் பாண்டவர்களுக்குத் தான் தீங்கிழைக்கப் போவதை மக்கள் புரிந்து கொள்ளாமல் தன் செய்கையின் பின்னே மறைந்திருக்கும் விரோத பாவத்தை அவர்கள் அறியா வண்ணம் எந்தத் தப்பும் நடக்கவில்லை; நடக்கவும் போவதில்லை என்று மக்கள் நினைக்கும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறான் துரியோதனன். பீஷ்மருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவர் தலையிட்டு இந்தச் சூதாட்டத்தை ஆடக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கலாம். ஆனால் துரியோதனனின் குழுவினர், முக்கியமாக அவன் தம்பி துஷ்சாசனன், ராதேயன் மகன் கர்ணன், துரோணாசாரியார் மகன் அஸ்வத்தாமா ஆகியோரும் இவர்களின் பின்னே இயங்கும் துரியோதனனின் தாய் மாமன் ஷகுனியின் மூளையும் சேர்ந்து கொண்டு அவருடைய ஆணையைக் கூடத் தடுத்து விடும். அவருடைய இத்தனை வருட வாழ்க்கையில் குரு வம்சத்தின் அரச குலத்தவர் முதல் முறையாக அவரை எதிர்த்து அறைகூவல் விடுகின்றனர். இதற்கு என்ன செய்வது என்று தான் அவருக்குப் புரியவில்லை.

அப்போது மந்திரி சஞ்சயன் அவர் அறைக்குள் திருதராஷ்டிரனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். திருதராஷ்டிரனை பீஷ்மரின் படுக்கைக்கு அருகே ஓர் ஆசனத்தில் அமர வைத்தான். பின்னர் ஓர் கை அசைவில் பீஷ்மருக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த மல்லனை வெளியேற்றினான். அவன் சென்று விட்டதை அறிந்த திருதராஷ்டிரன், “ மதிப்புக்குரிய தாத்தா அவர்களுக்கு என் மரியாதையான நமஸ்காரங்கள்!” என்று வணக்கம் தெரிவித்தான். “என் ஆசிகள், குழந்தாய்!” என்றார் பீஷ்மர். பின்னர் திருதராஷ்டிரனுக்குப் புரியும் வண்ணம் அவன் முதுகிலும் தட்டிக் கொடுத்துத் தன் ஆசிகளைத் தெரிவித்தார். “இரவு இந்நேரத்தில் நீ இங்கே வர வேண்டிய காரணம் என்ன, மகனே! எதற்காக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

மிக மெல்லிய பலஹீனமான குரலில் பேச ஆரம்பித்தான் திருதராஷ்டிரன். “துரியோதனன் தன்னுடைய பணிவான வணக்கத்தை உங்களுக்குத் தெரிவித்து விட்டுத் தாழ்மையான வேண்டுகோளையும் விடுத்திருக்கிறான்!..........” என்று இழுத்தான். “என்ன அவன் வேண்டுகோள்?” என்று பீஷ்மர் கடுமையான தொனியில் கேட்டார். “அதாவது…….. அதாவது………….. தாத்தா அவர்கள்………….. இந்தச் சூதாட்டம் ஆடும்போது நடுவில் குறுக்கிடக் கூடாது…………….”


Saturday, November 26, 2016

துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய்ச்சொல்லை மறுத்துரைத்தோமா!

ஆயிற்று. அனைவரும் ஹஸ்தினாபுரம் செல்வது முடிவாகி விட்டது. நாளை கிளம்ப வேண்டும். அன்று திரௌபதி யுதிஷ்டிரனைத் தனிமையில் சந்திக்க வந்தாள். அவள் உடல் முழுவதும் கோபத்திலும் துக்கத்திலும் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பாகக் காணப்பட்டன. யுதிஷ்டிரன் தன் அறையில் தனிமையில் தான் இருந்தான். திரௌபதி அவனைப் பார்த்த பார்வையைக் கண்டு அவன் உள்ளூர நடுங்கினான். அவன் எதிரே நிதானமாக அமர்ந்தாள் திரௌபதி! திரௌபதியை வேதனையுடன் பார்த்தான் யுதிஷ்டிரன். திரௌபதி கவலையினால் உள்ள வருத்தத்துடன் பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். வழக்கமான புத்திசாலித்தனமோ, கலகலப்போ அவளிடம் இல்லை!

“பாஞ்சால இளவரசியே! என்ன ஆயிற்று உனக்கு? இது என்ன கோபம்? ஏன் இவ்வலவு கோபத்துடன் இருக்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். “கோபமா, ஆரிய புத்திரா, கோபம் என்பது சாதாரண வார்த்தை! எனக்குக் கோபம் இல்லை! சீற்றம். தாங்கொணாச் சீற்றம். சீற்றம் கொண்ட பெண்புலியை ஒத்திருக்கிறேன் இப்போது நான்! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதும் அடுத்து உங்கள் நோக்கம் என்ன என்பதையும் நான் புரிந்து கொண்டு விட்டேன். நீங்கள் ஓர் யுத்தம் நடப்பதை விரும்பவில்லை. என்ன விலை கொடுத்தாலும் அந்த யுத்தத்தைத் தடுக்கவே நினைக்கிறீர்கள். அப்படி எனில், அதாவது நீங்கள் துரியோதனனின் சவாலை ஏற்றுக் கொண்டு இந்த அரசர்களின் விளையாட்டு எனப்படும் சூதாட்டத்தை ஆடி அதில் தோற்றுப் போக முடிவு செய்து விட்டீர்கள். உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும், உங்கள் பேச்சைக் கேட்பதாகவும் நாங்கள் அனைவரும் செய்த சபதத்தால் நீங்கள் எங்களைக் கட்டுப்படுத்தி விட்டீர்கள்!”

“நீங்கள் தான் இந்தக் குடும்பத்துக்கு மூத்தவர்! அது உண்மையே! எங்கள் உடலும், உயிரும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், ஆரிய புத்திரா, உங்களிடம் கொஞ்சமேனும் எங்களுக்காக அனுதாபமோ, நாங்கள் நன்றாக இருக்கவேண்டுமே என்னும் எண்ணமோ இல்லையா? இல்லை என்றே நினைக்கிறேன். போகட்டும்! உங்கள் குழந்தைகளுக்காகவேனும் இது குறித்து சிந்தித்தீர்களா? இல்லை எனில் இந்த நாட்டு மக்களுக்காக? இந்த நாடு மக்கள் அனைவருமே உங்களை நம்பி நீங்கள் நல்லாட்சி தருவீர்கள் என்பதை நம்பி உங்களுக்காக மட்டுமே இங்கே வந்தவர்கள். இந்திரப் பிரஸ்தத்தையே அவரக்ளுக்காக சொர்க்கமாக மாற்றிக்காட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்! நினைவில் உள்ளதா? இந்த மக்களை என்ன செய்வதாக உத்தேசம்?”

“பாஞ்சாலி, நான் மரியாதைக்குரிய பெரியப்பாவின் ஆணையைக் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு ஏற்றாக வேண்டும். அதிலிருந்து நான் தப்ப முடியாது! அது சரியல்ல!” என்றான் யுதிஷ்டிரன். “ஹூம், ஆரியபுத்திரா, இப்போதேனும் சொல்லுங்கள்! ஹஸ்தினாபுரம் செல்ல வேண்டும் என்னும் முடிவை ஏன் எடுத்தீர்கள்? அதற்கு என்ன காரணம்?” என்று கேட்டாள் திரௌபதி.

“இதோ பார் திரௌபதி, என் சகோதரர்கள் மேல் எனக்கூ எவ்வளவு  பாசம் என்றும் அவர்கள் மேல் என் உயிரைக்காட்டிலும் அதிகப் பாசம் வைத்திருப்பதையும் நீ நன்கறிவாய்! அதே போல் என் தாயையும் நான் மதிக்கிறேன் வணங்குகிறேன், அன்பு செலுத்தி வருகிறேன். உன்னிடம் நான் கொண்டிருக்கும் அன்புக்கு அளவு உண்டா? நெஞ்சார உன்னை நேசிக்கிறேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நானே நன்கு அறிய மாட்டேன். என்ன நடக்கப் போகிறதோ! ஆனால் கடைசி வரை தர்மம் எனக்குக் காட்டி வரும் பாதையிலேயே நடக்க உத்தேசித்துள்ளேன். என்னை தர்மத்திலிருந்து பிறழ்ந்தவனாகக் காட்ட வேண்டும் என்பது தான் உன் விருப்பமா? என்னை அப்படி எல்லாம் நீ ஏமாற்ற மாட்டாயே?” என்று கேட்டான். திரௌபதி மனம் உடைந்து அழுது விட்டாள். கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது.

“ஆஹா, இப்படி எல்லாம் வேதனைப்படாதே, திரௌபதி! என்னிடம் முழு நம்பிக்கை வை!” என்றான் யுதிஷ்டிரன்.

“ஆஹா, நம்பிக்கை! அதுவும் உங்களிடம்! உங்களுக்கு யாரிடம் அக்கறை இருக்கிறது? உங்கள் தம்பிகளிடம் கூட இல்லை! உங்கள் பிள்ளைகளிடம்? ம்ஹூம், அதுவும் இல்லை! உங்கள் தம்பிகள் என்ன நினைக்கிறார்கள் இந்த விஷயத்தில் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அப்படி இருந்தும் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வாக்குக்காக உங்களை எதிர்க்காமல் உங்களுடன் இருப்பதாக முடிவு எடுத்திருக்கிறார்கள். சரி, போகட்டும்! வயதான உங்கள் தாயிடம் ஏதேனும் அக்கறை உங்களுக்கு உண்டா? என்னிடம்? என்னை நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை! நம் மகனிடம் கூட உங்களுக்கு அக்கறை இல்லை!” என்ற திரௌபதி சற்று நேரம் நிறுத்திவிட்டு அழுதாள். பின்னர் நீண்ட பெருமூச்சு விட்டு விட்டுத் தொடர்ந்து, “துரியோதனன் மனதில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் இல்லையா? அந்த சூழ்ச்சிக்கார நயவஞ்சக ஷகுனியைக் குறித்தும் உங்களுக்குத் தெரியாதா? நாம் இப்போது ஹஸ்தினாபுரத்துக்கு என்ன காரணத்துக்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டீர்களா? அனைத்தையும் நன்கறிந்திருந்தும் நீங்கள் நம்முடைய விதிக்கு அது அளிக்கப் போகும் மாபெரும் தண்டனைக்கு நம்மை எல்லாம் அழைத்துச் செல்லத் தயாராகி விட்டீர்கள்!”

“உன்னை நீயே துன்புறுத்திக் கொள்ளாதே பாஞ்சாலி! நம் தாய் குந்தி தேவி நம்முடன் வருகிறார். சகோதரர்கள் அனைவருமே வருகின்றனர். ஆகவே நீயும் கூட வருகிறாய்! அவ்வளவு ஏன்! பாஞ்சாலி, நம் ஆசாரியர் தௌம்யரும் நம்முடன் வருகிறார்!” என்றான் யுதிஷ்டிரன்.

திரௌபதி எழுந்து நின்றாள். “ஆஹா, இப்போது மட்டும் வாசுதேவக் கிருஷ்ணன் இங்கிருந்தால்! ம்ம்ம்ம்! குறைந்த பட்சமாக நீங்கள் செய்து கொள்ளப் போகும் இந்தத் தற்கொலையிலிருந்து உங்களைக் காப்பாற்றி இருப்பானே! அவன் கிளம்பும்போது என்ன சொன்னான் என்பது நினைவில் இருக்கிறதா? அவன் சொன்னான்;”மூத்தவரே, துரியோதனனின் வலையில் விழுந்துவிடாதீர்கள்!” என்றான். அவன் புத்திசாலி. விவேகம் உள்ளவன். அவன் மட்டும் இங்கிருந்தான் எனில் இந்தப் பொறியில் நீங்கள் மாட்டிக் கொள்வதைத் தடுத்து நிறுத்தி இருப்பான்.” என்றாள் திரௌபதி.

சொல்லொணாத் துயரில் ஆழ்ந்தான் யுதிஷ்டிரன். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவன் அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய மனைவியும் சகோதரர்கள் நால்வரும் இப்போது வேதனையிலும் ஏமாற்றத்திலும் வெதும்பித் தவிக்கின்றனர். அவன் மரியாதைக்கு உரிய தாயும் அப்படியே இருக்கிறாள். அதுவும் எதற்காக? அவன் செய்திருக்கும் இந்த முடிவினால். தப்பி விட நல்ல வாய்ப்புக் கிடைத்தும் தப்பாமல் குடும்பத்தையும், இந்திரப் பிரஸ்தத்தையும் தியாகம் செய்ய யுதிஷ்டிரன் எடுத்த முடிவினால்! அதனால் தர்மமும் அழிந்து படுமோ? அதையும் தான் விட்டு விட நேருமோ? யுதிஷ்டிரன் குழம்பினான்.

தன் மனக்குமுறல்களால் எழுந்த விம்மல்களை அடக்கிக் கொண்ட திரௌபதி மேலும் சொன்னாள்:”சரி, சரி, ஆரிய புத்திரரே, யோசிக்காதீர். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். நாங்கள் எங்கள் அனைவருடைய உயிரை மட்டுமல்லாமல் நம் அருமைக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விட்டோம். நீங்கள் தான் குடும்பத்திற்கு மூத்தவர் என்னும் அதிகாரத்தின் மூலம் எங்கள் அனைவரையும் சர்வ நாசம் செய்து விடுங்கள். அதற்கான அதிகாரம் உம்மிடம் உள்ளதே!” என்றாள்.

யுதிஷ்டிரனுக்கு எப்போதுமே திரௌபதியைப் பார்த்ததில் இருந்தே அவளிடம் அளவில்லா அன்பும் ஈடுபாடும் உண்டு. அவள் புத்திசாலித்தனத்தையும், உள்ளார்ந்த கர்வத்தையும், விவேகமான நடவடிக்கைகளையும் ரசித்ததோடு அல்லாமல் போற்றிப் பாராட்டவும் செய்தான். இப்போது அவள் இப்படிப் பேசினால்? இத்தனைக்கும் இதன் முக்கியத்துவத்தை அவள் உணர்ந்திருக்கிறாள். யுதிஷ்டிரன் ஏன் இந்த முடிவை எடுத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறாள். வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிவாள். அமைதியும், சமாதானமும் வேண்டுமானால், தர்மம் நிலைத்து இருக்க வேண்டுமானால் துரியோதனனின் சவாலை ஏற்றுக் கொள்வது ஒன்றே சிறந்த வழி! அவனுடைய அரச தர்மம் அவனை ஹஸ்தினாபுரம் நோக்கி இழுக்கிறது. என்ன நடந்தாலும் இந்தச் சவாலைத் துணிந்து ஏற்றுக் கொள் என்று சொல்கிறது. அவன் என்ன செய்வான்? அவன் வேண்டுவதெல்லாம் அமைதியும், சமாதானமுமே!

யுதிஷ்டிரனின் மனது போராட்டங்களால் சுக்குச் சுக்காக நொறுங்கிப் போனது. அவன் உண்மையில் இந்தச் சூதாட்டத்தை ஆடவே விரும்பவில்லை. அவன் அதில் நிபுணனே அல்ல. விளையாட்டாகத் தம்பிகளோடும், மனைவியோடும் எப்போதாவது ஆடும் ஆட்டம் சூதாட்டத்தில் சேர்ந்தது அல்ல! அது வேறு! ஆனால் இப்போது துரியோதனன் அழைத்திருப்பதோ உண்மையான சூதாட்டத்திற்கு! பணயம் வைத்து ஆடும் ஆட்டத்திற்கு! அதிலும் இதை அந்தச் சூழ்ச்சிக்கார ஷகுனியுடன் ஆட வேண்டுமாமே! அதிலும் யுதிஷ்டிரனுக்கு விருப்பமே இல்லை தான்! ஆனால் இப்போதிருக்கும் இந்த மோசமான சூழ்நிலையில் அவன் தப்பிக்க நினைத்தாலும் இயலாது! அவன் ஆடியே ஆகவேண்டும்! வேறு வழியே இல்லை! நினைக்கவே யுதிஷ்டிரன் நடுங்கினான். ஏனெனில் அவன் ஹஸ்தினாபுரம் போக மறுக்கலாம். ஆனால் போரைத் தடுக்க முடியாது. போர் வந்தே தீரும். எங்கும் மக்களும் வீராதி வீரர்களும் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அவன் சகோதரர்கள் இதைத் தான் விரும்புகின்றனர்.

அவனுடைய இந்த நடவடிக்கை அவன் தாய், மற்றும் சகோதரர்கள், மனைவி திரௌபதி ஆகியோருக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. அவர்கள் அனைவரும் வேதனையுடனே இருந்து வருகின்றனர். யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டான்.

மறுநாள் காலை ஆசாரியரும் ஸ்ரோத்திரியர்களும் ஆசிகள் வழங்க நல்ல முஹூர்த்தத்தில் அரச குடும்பத்தினரின் ஊர்வலம் ஹஸ்தினாபுரத்தை நோக்கிப் பயணப்பட்டது. யுதிஷ்டிரன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களையோ துன்பத்தையோ அறியாத இந்திரப் பிரஸ்தத்து மக்கள் இது வழக்கமான ஒன்று. பெரியப்பனைச் சந்திக்க யுதிஷ்டிரன் தன் தாய், மற்றும் குடும்பத்தினருடன் செல்கிறான் என்றே நினைத்துக் கொண்டனர். இதன் மூலம் துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஒற்றுமை ஏற்படும் என்றும் எண்ணிக் கொண்டனர். ஆகவே வாழ்த்தி வழியனுப்பினார்கள். மெல்ல மெல்ல ஹஸ்தினாபுரம் போய்ச் சேர்ந்து விட்டனர் அனைவரும்.

அங்கே சென்றதும் மூத்தோர் ஆன பிதாமஹர் பீஷ்மர், பெரியப்பா திருதராஷ்டிரன், பெரியம்மா காந்தாரி, ஆசாரியர் துரோணர், கிருபர் போன்றோருக்கும் குடும்பத்தின் மற்ற மூத்தவர்களுக்கும் மரியாதை செலுத்தி வணங்கினார்கள் அனைவரும். யுதிஷ்டிரனின் இடைவிடா வற்புறுத்தலின் காரணமாக சகோதரர்கள் நால்வரும் பீமன் உட்பட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் துரியோதனனையும், கர்ணனையும் அவரவர் மாளிகையில் சென்று சந்தித்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் வரவழைத்துக் கொண்ட நல்லுறவுடனேயே அரை மனதாக உபசரித்தார்கள். அவர்கள் அனைவருக்குமாகச் செய்திருந்த ஏற்பாடுகளைக் கண்டான் யுதிஷ்டிரன். எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டு கொண்டான். வெளிப்படையாய்ப் பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியாவண்ணம் செய்யப்பட்டிருந்தது.

தன் சகோதரர்கள் அனைவருமே இனம் தெரியாததொரு உணர்வால் பீடிக்கப்பட்டிருப்பதையும், சங்கிலிகளால் கட்டப்பட்டக் காட்டு மிருகங்களைப் போல் உணர்வதையும் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன் அவர்கள் தன்னுடைய இந்த முடிவால் எரியும் அடுப்பைப் போல் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பதையும் உணர்ந்தான். அவன் முடிவு என்னவாக இருந்தாலும் சரி, அது அவர்களுக்குத் துன்பத்தைத் தான் தரப் போகிறது.  ஆனால் இத்தனையிலும் யுதிஷ்டிரனால் எடுக்கப்பட்ட முடிவு மாறவே இல்லை. அவன் மனது அது ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்தது, அது தான் போரைத் தடுக்க வேண்டுமெனில் இந்திரப் பிரஸ்தத்தையும் தியாகம் செய்து விடுவதே ஆகும். அவனால் போர் ஏற்படக் கூடாது, இந்திரப் பிரஸ்தத்தைக் கொடுத்தானும் அவன் போரைத் தடுப்பான். அதன் பின், அதன் பின் அவர்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று விடுவார்கள். காட்டிற்குச் சென்று அங்கே அவர்கள் விரும்பும் வண்ணம் தர்மத்தின் பாதையில் வாழ ஆரம்பிக்கலாம். இது ஒன்றே வழி!

Friday, November 25, 2016

புவிக்காவலர் தம்மிற் சிறந்த நீர் இன்று கர்மம் பிழைத்திடுவீர் கொலோ?

“அப்படியா? அண்ணா, ஆசாரியர் எப்போது தமது தீர்க்கதரிசனத்தை உங்களிடம் தெரிவித்தார்?” பீமன் கேட்டான். “ராஜசூய யாகம் முடிந்ததும் என்னிடம் விடை பெற வந்திருந்தார் அல்லவா! அப்போது தான், அன்று தான்!” என்றான் யுதிஷ்டிரன். யுதிஷ்டிரன் மீண்டும் அந்த நாளை நினைத்து உணர்ச்சிவசப்பட்டதால் அவன் கைகள் நடுங்கின. விதுரரைப் பார்த்துத் திரும்பினவன் கூறினான்: “சித்தப்பா, நீங்கள் இப்போது கொண்டு வந்திருக்கும் அழைப்பு சாமானியமானதில்லை. இது தான் ஆசாரியரின் தீர்க்க தரிசனங்களை உண்மையாக்கப் போவதற்கான முதல் படி!” அவன் முகம் வேதனையைக் காட்டியது. அவனுடைய மிதமிஞ்சிய வேதனையைக் கண்ட அனைவரும் மனம் வருந்தினர். அவன் சொன்ன வார்த்தைகளின் உண்மையை நினைத்து எல்லோருடைய மனமும் வேதனையில் ஆழ்ந்தது.

மிகுந்த மனக்கசப்புடன் பீமன் சொன்னான்:”அண்ணா, நாங்கள் உன்னிடம் விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். எங்களைக் கழுத்தை அறுக்கப் போகிறேன் என்கிறாய்! சரி, அப்படியே ஆகட்டுமே! உன்னுடைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்! இதை விட வேறு என்ன வேண்டும் உனக்கு?”

“உன்னுடைய விசுவாசத்தை வைத்து நான் வியாபாரம் செய்ய நினைக்கவில்லை.இந்தப் பிரச்னை நமக்கும் துரியோதனனுக்கும் இடையில் மட்டும் ஏற்படவில்லை! நம் அனைவரிடமும் இந்தப் பிரச்னை முளைத்துவிட்டது. க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடுமாறு உன்னிடம் நான் சொல்ல மாட்டேன். சொல்லவும் முடியாது!”

“எதிர்காலம் என்பது இருட்டில் இருப்பதாக நினைக்காதீர் அண்ணாரே!” என்றான் அர்ஜுனன். “காலம் ஒரு நாள் மாறும், அப்போது அனைத்துமே மாறும். நல்லவையாகவே மாறும். இப்போது தேவை நம் ஒற்றுமை மட்டுமே. நாம் ஐவரும் ஒற்றுமையுடனே இருப்போம். பலமுறை, பல சமயங்களிலும் உம்முடைய முடிவுகளால் நான்க்அள் வருந்தி இருக்கிறோம். ஆனாலும் உம்மைக் கைவிட்டதில்லை. நீர் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவே செய்திருக்கிறோம்.” விதுரர் தன்னுடைய விசித்திரமானதொரு உணர்வால் யுதிஷ்டிரன் எடுத்திருக்கும் முடிவின் அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார். புனிதமான அக்னியில் தன்னைத் தானே ஆஹூதி கொடுத்துக் கொள்ள அவன் தயாராக இருக்கிறான் என்பதும் தெரிய வந்தது.

“இது மிகவும் மேன்மையானதொரு முடிவு, தீர்மானம், யுதிஷ்டிரா!” என்ற விதுரர் பீமனிடம் திரும்பி, “மூத்தவன் தன்னுடைய அரச தர்மத்தைக் கைவிடாமல் உறுதியாக அதில் இருக்க விரும்புகிறான். அதோடு அவன் விரும்புவதெல்லாம் சமாதானமே! பீமா, உன்னுடைய விருப்பத்தை மீறி அவன் தீர்மானத்தை நீ ஆதரிக்க வேண்டி இருந்தால், நடப்பது என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு அவனை ஆதரிப்பாயா? அவன் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பாயா?” என்று கேட்டார். அப்போது யுதிஷ்டிரன் சொன்னான்.

“சகோதரர்களே, நான் என்னை விட, திரௌபதியை விட உங்கள் நால்வரையும் அதிகமாக நேசிக்கிறேன். நாம் ஐவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் நம்முடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க முடியும். நம் ஒற்றுமையில் தான் அது அடங்கி இருக்கிறது. அதோடு அல்ல. நம் தாய் நமக்கு ஆரம்பத்திலிருந்து அளித்து வரும் உத்வேகம், பாஞ்சால இளவரசியின் ஊக்கம் அனைத்துமே இதற்குக் காரணம். ஆனால் தம்பிகளே, இப்போது நாம் எப்படி முடிவெடுத்தாலும் ஆபத்து நம்மைத் தாக்கக் காத்திருக்கிறது!” என்றான் யுதிஷ்டிரன். “அண்ணா, என்ன நடந்தாலும் சரி, நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடந்து கொள்வோம்!” என்றான் அர்ஜுனன்.

குந்தி சொன்னாள்:”குழந்தைகளா, நீங்கள் ஐவரும் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் இருப்பதாக முடிவெடுத்திருக்கிறீர்கள். இந்த ஒற்றுமையில் தான் உங்கள் பலம் முழுவதும் உள்ளது. படகை நங்கூரம் பாய்ச்சி அசையாமல் வைப்பதைப் போல் உங்கள் ஒற்றுமை தான் உங்களைக் குலைக்காமல் பாதுகாக்கும் கவசம். இதை அறிந்து கொண்டதால் தான் திரௌபதியும் உங்கள் ஐவரையும் மணக்கச் சம்மதித்தாள்.”

இப்போது திரௌபதி சொன்னாள்:” என் கண்ணெதிரே பலவித துர் சகுனங்கள் தெரிகின்றன. நடப்பவை எதுவும் நன்மையாக இருக்காது என்றே தோன்றுகிறது. நானும் உங்கள் ஐவரையும் ஒற்றுமையுடனே இருக்க வைப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். உங்கள் ஒற்றுமை என்னால் குலையக் கூடாது. அப்படிக் குலைந்து விட்டால் என் வாழ்நாளே வீணாகிவிடும். அப்புறம் நான் இங்கே இருக்க மாட்டேன். காம்பில்யத்திற்கே திரும்பிச் சென்றுவிடுவேன்.” என்று உறுதியாகக் கூறினாள். பீமன் மனதில் கோபம் பொங்கியது. அதை அடக்கிக் கொண்டு அவன் பேசினான். “அண்ணா, எங்களை ஓர் கஷ்டமான நிலையில் நிறுத்திவிட்டாய்! மிக மோசமானதொரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு எங்களைக் கொண்டு வந்திருக்கிறாய். அதை ஏற்கும்படி நாங்கள் கடமைப்பட்டு விட்டோம். என்ன செய்யலாம்? ஆசாரியர் முக்காலமும் உணர்ந்த முனிவர்! அவருக்குக் கடந்த காலமும் தெரியும். நிகழ்காலமும் தெரியும், எதிர்காலமும் அறிவார்! அவர் வாயாலேயே ஓர் மாபெரும் போர் வரப்போவதாகத் தெரிந்திருப்பதால் நீ என்னதான் அதைத் தடுக்க முயன்றாலும் அந்தப் போர் வந்தே தீரும்! ஆகவே நாம் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்!” என்றான்.

“நீ யுதிஷ்டிரன் பக்கம் தானே இருப்பாய், பீமா? அதற்கு நீ தயாராகி விட்டாயா?” என்று கேட்டார் விதுரர். “எங்கள் விருப்பம் எல்லாம் ஏற்கெனவே முடிந்து போன ஒன்று. இனி நாங்கள் புதிதாக எதையும் தேர்ந்தெடுக்கப் போவதில்லை, அதுவும் இந்த முடிவு அம்மா குந்தி தேவி முதல்முறையாக எங்களை ஹஸ்தினாபுரம் அழைத்து வந்தபோது எங்களைக் கேட்டுக் கொண்டாள் அல்லவா? அப்போதே முடிந்து விட்டது. அப்போது அம்மா சொன்னாள்: எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் நால்வரும் மூத்தவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எங்கள் நால்வரிடமும் உறுதிமொழி வாங்கிக் கொண்டாள். அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் மூத்தவர் சொல்லைத் தான் கேட்கிறோம். நாங்கள் அந்த வார்த்தையைக் கடைசிவரை காப்பாற்றவும் செய்வோம், அதன் மூலம் நீங்கள் எங்கள் தலையைக் கொய்தாலும் சரி! மூத்தவர் சொல்லே எங்களுக்கு இறுதி முடிவு!”

நகுலன் ஆமோதிப்பாகத் தலையை அசைத்தான். அப்போது யுதிஷ்டிரன், சஹாதேவனைப் பார்த்து, “நீ எல்லோரையும் விட புத்திசாலி, விவேகமானவன். நீ என்ன சொல்கிறாய் அப்பா இதற்கு?” என்று கேட்டான். அதற்கு சஹாதேவன் யோசனையுடன் தன் தலையைத் தடவிக் கொண்டான். “ நாங்கள் எங்களுடைய சத்தியத்தை உடைத்துவிட்டோமானல், தர்மத்தை ஏமாற்றியவர்கள் ஆவோம். தார்மீக ரீதியாகவும் இதுதான் சரி! இல்லை எனில் நாங்கள் தார்மிக பலத்தையும் இழந்தவர்களாவோம்.” அப்போது விதுரர் இடைமறித்தார். “மூத்தவனே, போதும், போதும் இனி இதைக் குறித்து நாம் விவாதிக்க வேண்டாம். இதோ பார், உன் தம்பிகள் நால்வரும் உனக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி கூறிவிட்டார்கள்; உறுதியாகவும் இருப்பார்கள். இந்த விஷயத்தை அவர்கள் உன் கைகளிலேயே விட்டு விட்டார்கள்! நீ சொல்வதே இறுதி முடிவு!” என்றார். அப்போது திரௌபதி, “எனக்கு அதிர்ச்சியில் மிரட்சி ஏற்பட்டு விட்டது. ஆஹா, இப்போது மட்டும் வாசுதேவக் கிருஷ்ணன் இங்கிருந்தால்! அவனுடைய ஆலோசனைகளை ஏற்றால் அதுவே நமக்குச் சரியாக இருந்திருக்கும். நமக்கு அவன் வழிகாட்ட மாட்டானா என எண்ணுகிறேன்.நிலைமை ரொம்பவே மோசம் தான். ஆனாலும் வ்ருகோதர அரசர், தன்னுடைய சத்தியத்தை மறக்காமல் பெரியவருக்கு அதை நிறைவேற்றி கௌரவப்படுத்துவார் என்றே நம்புகிறேன்.” என்றாள்.

யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீருடன், தன் சகோதரர்கள் நால்வரையும் பார்த்தான். தன் தாயையும், மனைவியையும் மாறி மாறிப் பார்த்தான், தன் மனதுக்குள்ளாக அவர்கள் அனைவரும் தன்னிடம் காட்டும் மாறா விசுவாசத்துக்கு நன்றி சொன்னான். “சித்தப்பா, நான் ஓர் பயங்கரமான சபதம் எடுத்திருக்கிறேன். அதன்படி நான் எப்பாடுபட்டாவது ஆசாரியர் சொன்ன தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்கியாக வேண்டும். இது என் வாழ்க்கையின் மிகப் பெரிய சவால். என்ன நடக்கப் போகிறது என்றோ எனக்காக என்ன காத்திருக்கிறது என்றோ நான் அறியேன். ஆனாலும் நான் என் தர்மத்தைக் கைவிட முடியாது. அது என்னை எப்படி நடக்கவேண்டும் என்று சொல்கிறதோ அதன்படி தான் நடப்பேன். பாண்டுவின் புதல்வர்கள் ஐவரும் க்ஷத்திரிய தர்மத்தையும் அரச தர்மத்தையும் மதிக்காமல் நடந்து கொண்டார்கள் என்றோ அதைச் சரிவரக் கடைப்பிடிக்கவில்லை என்றோ யாரும் சொல்லக் கூடாது! தர்மத்திற்கு எதிராகவும் அதற்கு முரணாகவும் உண்மையில்லாமலும் நான் நடந்து கொள்ளவும் மாட்டேன்.”

“உன்னுடைய முடிவு தான் என்ன?” என்று எரிச்சலுடன் கேட்டான் பீமன். “எங்கள் கழுத்தை நீ எப்போது அறுக்கப் போகிறாய் என்பதைச் சரியாகச் சொல்லிவிட்டே செய்!” என்று மேலும் கூறினான். அப்போது யுதிஷ்டிரன் பீமனின் கோபத்தை லட்சியம் செய்யாமல், “உங்கள் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் நான் நெகிழ்ந்து விட்டேன். என்னிடம் நீங்கள், அம்மா குந்தி தேவி மற்றும் பாஞ்சால இளவரசி திரௌபதி ஆகியோர் வைத்திருக்கும் நம்பிக்கையும், பாசமும் பரிவும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது!” என்றவன் தன் தலையைக் குனிந்த வண்ணம் நடுங்கிய குரலில் மேலும் பேசலானான்.

“விதுரச் சித்தப்பா! இதோ என் முடிவு. பெரியப்பா திருதராஷ்டிரனிடம் சொல்லுங்கள். அவர் அழைப்பை ஏற்று நாங்கள் ஹஸ்தினாபுரம் வருகிறோம் என்று சொல்லுங்கள். அவருடைய விருப்பத்துக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும். ஹஸ்தினாபுரம் வந்து அங்கே அவர் கட்டளை என்னவோ அதன்படி நடந்து கொள்கிறோம்.” என்றான். திரௌபதி மிகக் கடுமையாகவும் கோபத்துடனும் கூடிய கண்களுடன் யுதிஷ்டிரனைப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.

“மூத்தவரே, நீர் எங்கள் அனைவரையும் துரியோதனனுக்கு விற்று விட்டீர்கள்!” என்றாள் திரௌபதி.

Thursday, November 24, 2016

மதி மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும் கருமமொன்றே உளதாம்!

அவரவர் எண்ணங்களில் மூழ்கிய அனைவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர்.  அப்போது யுதிஷ்டிரன் அனைவரையும் பார்த்து, “நாம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது!” என்றவன் தொடர்ந்து, “இன்னும் இரண்டு நாட்கள் இந்த விஷயத்தை நாம் நன்கு யோசித்துவிட்டுத் தான் முடிவெடுக்க வேண்டும்!” என்றான்.”ஆம், ஆம், அதுவும் சரியே! நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள், யுதிஷ்டிரா!” என்றார் விதுரர்! ஆனால் பீமனோ மிகக் கடுமையாக, “இன்னும் என்ன யோசிக்கவேண்டுமோ தெரியவில்லை! இது நம்மை அடியோடு அழிக்க, நம் கழுத்தை அறுக்கப் போடப்பட்ட திட்டம் அன்றி வேறில்லை! ஆகவே நாம் இதை மறுக்கவேண்டும், இந்த அழைப்பை ஏற்கக் கூடாது!” என்றான் திட்டவட்டமாக.

அன்றிரவு முழுவதும் யுதிஷ்டிரனுடைய மனம் முழுவதும் எண்ணங்களால் நிரம்பி இருந்தது. எங்கு பார்த்தாலும் இருளாகவே அவனுக்குக் காட்சி அளித்தது. அமைதியையும் சாந்தியையும் கொண்டு வரவே அவன் மிகவும் விரும்பினான். ஆனால் அங்கே அதற்கு இடமில்லாம் போகின்றதே! இனி என்ன செய்வது. “ஆஹா, ஆசாரியர் வேத வியாசரின் தீர்க்க தரிசனமே உண்மையாகி விடுமோ?” என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டவன், “ஆம், சித்தப்பா விதுரர் சரியாகத் தான் சொன்னார். ஷகுனி தனக்கு அனுகூலமாக நல்ல நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறான். இப்போது யோசனை கேட்கவோ சொல்லவோ யாரும் இல்லை! கிருஷ்ணன் ஷால்வனுடன் போர் புரிவதில் முனைந்திருக்கிறான். அவனை விட்டால் நமக்கு வேறு யாரும் இல்லை. ராஜசூய யாகத்துக்கு வந்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அரசர்கள் பலரும் மீண்டும் திரும்பி இங்கே வருவதற்கு சாத்தியமே இல்லை! அவர்களிடமிருந்தும் எவ்விதமான உதவியையும் எதிர்பார்க்கவே முடியாது!” என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டாய் யுதிஷ்டிரன். மீண்டும் மீண்டும் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தான். அவன் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பிக் கொண்டிருக்க, இங்கே போரும், எதிரிகளுமே தெரிகின்றனர். அவன் வீட்டு வாயிலைத் தட்டி அழைக்கின்றனர்.


அவன் தன் கனவுகளில் கண்ட சித்திரங்கள் அவன் மனதை விட்டு அகலவே இல்லை. ஒரு போர்க்களம், எங்கு பார்த்தாலும் உடைந்த ரதங்களின் சக்கரங்கள் ஆங்காங்கே தெரிய, போர் வீரர்களின் உடைந்த கால்களும், கைகளும் ஆங்காங்கே கிடக்க, அவன், யுதிஷ்டிரன் ஆன அவனே மார்பில் ஓர் அம்பு பாய்ந்து கீழே விழுந்து கிடக்க, அந்நிலையிலும் அவனை எவரோ தன் வாளைக் குறுக்கே பாய்ச்சிக் கொல்ல நினைக்க! இந்தக் கனவில் கண்ட காட்சிகளின் நினைவுகளால் யுதிஷ்டிரன் உடல் நடுங்கினான். எங்கு பார்த்தாலும் தாய்மார்கள், சகோதரிகள் அழுது புலம்புகின்றனர். விதவைகளும், குழந்தைகளும் மனம் உடைந்து வீடு, வாசல் இன்றி அநாதையாக அலைந்து திரிகின்றனர். நூற்றுக்கணக்கில் பசுக்களைக் கொல்கின்றனர். அத்தனைக்கும் நடுவில் அவனுக்கு எங்கிருந்தோ அந்தக் குரல் காதில் கேட்கிறது. எங்கோ தொலைதூரத்திலிருந்து கேட்கும் அந்தக் குரல், “சாந்தி, சாந்தி, சாந்தி என்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிரொலிப்பது அவனைக் கேலி செய்வது போல் தோன்றியது யுதிஷ்டிரனுக்கு!

அவன் எழுந்திருக்கையில் அவனுக்கு ஓர் நினைவு தோன்றியது. “ஆசாரியர் சொல்வது சரியே! இந்த மாபெரும் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்த புண்ணியவான் நானாகத் தான் இருக்க வேண்டும். என்னால் தான் இவை நடைபெறப் போகின்றன. நான் என் கடைசிக் காலத்தில் இறைவனுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இவற்றுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.  இந்தச் சூழ்நிலையை ஏற்கும் மனப்பக்குவமோ தைரியமோ என்னிடம் இல்லை! ஆனாலும் நான் என்னுடைய பாரம்பரியத்தைக் காப்பாற்றவே நினைக்கிறேன். என்ன விலை கொடுத்தாலும் அதைக் காப்பாற்றி என் சகோதரர்களுக்கு நான் அளித்தாக வேண்டும். அவர்கள் அதை இழக்கும்படி செய்யக் கூடாது. என்ன செய்வதென்று தான் எனக்குத் தெரியவில்லை. இதிலிருந்து தப்புவதற்கான வழியையும் நானே கண்டுபிடித்தாக வேண்டும்!”

யோசிக்க யோசிக்க இதற்கான தீர்வு ஓர் மெல்லிய கீற்றாக அவனுள் தோன்றியது. அவன் தன்னுடைய மனோபலம் முழுவதையும் நேர்மையான வாழ்க்கை வாழ்வதில் செலவழித்து வந்திருக்கிறான். இந்தப் போரை மட்டும் எப்பாடுபட்டாவது நிறுத்த வேண்டும். அதனால் யுதிஷ்டிரனுக்குத் தனிப்பட்ட முறையில் என்ன பாதகம் நேர்ந்தாலும் நேரட்டும்!அவனுக்குத் தெரியும்! அவன் சகோதரர்கள், அவன் மனைவி திரௌபதி, அவன் தாய் குந்தி போன்றோர் அவன் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்பதை அவன் நன்கறிவான். அவர்கள் மனதில் இந்திரப் பிரஸ்தத்தை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்காக துரியோதனன் செய்யும் சூழ்ச்சிகளில் இது ஒன்று என்னும் எண்ணம் இருக்கலாம்; அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் அவன் அமைதியைத் தான் விரும்புகிறான். இந்திரப் பிரஸ்தத்தை அவன் ஆண்டால் என்ன, துரியோதனன் ஆண்டால் என்ன? அரச தர்மமும்  க்ஷத்திரிய தர்மமும் கடைப்பிடிக்கப்பட்டால் போதுமே! தர்மம் காப்பாற்றப் பட்டால் போதுமே!

திடீரென அவன் கண்ணெதிரே இதற்கான தீர்வு தோன்றியது. நெருப்பில் எரியும் வாள் ஒளிவீசிப் பிரகாசிப்பது போல் தோன்றியது. அவன் அதை இறுகப் பற்றிக் கொண்டான். போருக்கான காரணங்களையும் சாத்தியங்களையும் அடியோடு ஒழிக்க விரும்பினான். ஆசாரியர் வேதவியாசரின் தீர்க்க தரிசனத்தைப் பொடிப் பொடியாகச் சுக்கு நூறாக ஆக்கி விடுவது என்றும் அதைச் சவால் விட்டுத் தான் வெல்ல வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டான். மூன்றாவது நாளாக அவர்கள் இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க வழிதேடிச் சந்தித்த வேளையில் யுதிஷ்டிரன் தனக்குள்ளாக ஒரு முடிவை எடுத்து விட்டான். அவனைப் பார்த்த விதுரர், “குழந்தாய், என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?” என்று வினவினார். “உங்கள் ஆலோசனை என்ன, சித்தப்பா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று யுதிஷ்டிரன் கேட்டான்.

விதுரர் சொன்னார்: “குழந்தாய்! என்னுடைய ஆலோசனையும் புத்திமதியும் இது தான். இப்போது ஹஸ்தினாபுரம் செல்லாதே! இந்த மோசமான வேளை ஓர் புயலைப் போல் கடந்து செல்லட்டும். நீ இப்படிச் சொல்லிவிடு. அதை உண்மையாகவும் ஆக்கிவிடு. நீ இந்த இக்கட்டான சமயத்தில் வாசுதேவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அதற்காகச் செல்லப் போவதாகவும் ஹஸ்தினாபுரம் வர இயலாது என்றும் சொல்லிவிடு! என்ன சொல்கிறாய் நீ இதற்கு?” என்று கேட்டார். அதற்கு பீமன், “நான் இப்படி எல்லாம் நொண்டிச் சாக்குச் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டேன். உண்மையாகவே என்னுடைய அருமையான மஹாரதிகளை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ரதப்படையோடு வாசுதேவக் கிருஷ்ணனுக்கு உதவச் செல்வேன்!” என்றான்.

அதற்கு யுதிஷ்டிரன் அவனிடம், “அது அவ்வளவு எளிதல்ல, தம்பி! இந்த அழைப்பை நாம் ஏற்பதா, இந்தச் சவாலை நாம் சந்திப்பதா வேண்டாமா என்பது அவ்வளவு எளிதில் முடிவு செய்யக் கூடியதில்லை. இதோ பார் பீமா, என் அருமைச் சகோதரர்களே, நீங்கள் நால்வருமே என்னுடைய பேச்சையே கேட்பதாகவும் எனக்குக் கீழ்ப்படிந்து என் ஆணைகளை நிறைவேற்றுவதாகவும் நான் கொடுத்த வாக்குறுதிகளை உங்கள் வாக்குறுதிகள் போல் நினைத்து மதிப்புக் கொடுத்து நிறைவேற்றுவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். உறுதி எடுத்திருக்கிறீர்கள். என்னுடைய வழிகாட்டுதலின் படி நடப்பதாகவும் சொல்லி இருக்கிறீர்கள். ஆகவே இந்த உறுதிமொழியை உடைக்காவிட்டால் இந்தப் பிரச்னையை நம்மால் சரியான வழியில் தீர்மானிக்க முடியாது. ஆகவே, என் அருமைச் சகோதரர்களான உங்கள் நால்வரையும் இந்த உறுதிமொழியிலிருந்து நான் விடுவித்து விட்டேன். பீமா, நீ தான் இந்திரப் பிரஸ்தத்தின் நிர்வாகத்திற்கு ஏற்ற தக்க மனிதன் ஆவாய்! இந்த அர்சை நீ ஏற்று நிர்வாகம் செய்வாய்! நான் ஓர் அரசனாக இருப்பதற்குத் தகுதியானவனே இல்லை. நான் காட்டிற்குச் செல்லப் போகிறேன்.” என்றான் முடிவாக.

அனைவரும் அதிர்ந்தனர். குந்தி நீண்ட பெருமூச்சு விட்டாள். “மூத்தவனே, இது என்ன பேச்சு? என்ன சொல்கிறாய் நீ?” என்று பரிதாபமான குரலில் கேட்டாள். கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. “உங்கள் அனைவரையும் ஒன்றே போல் வளர்த்தேன். நீங்கள் ஐவரும் எந்நாளும் எப்போதும் ஒன்றாகவே இருப்பீர்கள் என்னும் எண்ணத்தையே நான் நினைத்து உங்களுக்கும் அந்த எண்ணத்தையே விதைத்து வந்தேன். நீங்கள் ஐவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பீர்கள் என்று நினைத்தேன். நம்பினேன். திரௌபதியும் நீங்கள் அனைவரும் ஒரே பந்தத்தினால் பிணைக்கப்பட்டு இருப்பதைப் பிரிக்கக் கூடாது என்பதற்காகவே உங்கள் ஐவரையும் மணக்கச் சம்மதித்தாள். இப்போது நீங்கள் ஐவரும் பிரிந்து விட்டால், ஆஹா, அதை என்னால் தாங்க முடியாது. இது நாள் வரை நான் உங்களுக்குச் செய்தது எல்லாம் வீணாக வியர்த்தமாக ஆகிவிடும். தர்ம சாம்ராஜ்யத்தை எழுப்ப வேண்டும் என்று நீங்கள் ஐவரும் காணும் கனவு, நேர்மையான, நீதி பரிபாலனம் தவறாத நல்லாட்சி என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும்!” என்றாள்.

“ஆம், தாயே, ஆம்! நான் அதை நன்கறிவேன்.” என்று மிக்க வேதனையுடன் கூறிய யுதிஷ்டிரன் தன் முடிவில் உறுதியாகவே இருந்தான். “மாபெரும் பிரச்னை வந்து விட்டது. ஏற்கெனவே ஆசாரியர் வேத வியாசர் தீர்க்கதரிசனமாகக் கூறியது என்னவெனில் ஒரு மாபெரும் யுத்தம் ஒன்று ஏற்படப் போகிறது என்பதே! அந்த யுத்தத்தில் க்ஷத்திரியர்கள் பலர் கொல்லப்படுவார்களாம். இவை எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக நான் இருப்பேனாம். என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் சிலவற்றாலேயே இந்தப் போர் ஏற்படுமாம்.” இதைச் சொல்கையிலேயே யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீர் வழிந்து ஓட அதைத் துடைத்த வண்ணம் அவன் மேலே பேசினான். “உங்கள் அனைவரின் மனங்களையும் உணர்ச்சிகளையும் அழித்து ஒழிக்கவோ உங்கள் இதயத்தை உடைக்கவோ எனக்கு இஷ்டமில்லை. அது எனக்கு மிகுந்த வலியைத் தரக்கூடிய ஒன்று. ஆனாலும் நான் இதை மீண்டும் மீண்டும் மிகக் கவனமாகச் சிந்தித்துப் பார்த்தேன். நான் ஆசாரியர் வேத வியாசரின் தீர்க்க தரிசனத்தை எதிர்த்துச் சவால் விடத் தயாராகி விட்டேன். அவருடைய தீர்க்க தரிசனம் பொய்யாக விரும்புகிறேன். இதை உங்களுடன் சேர்ந்தே செய்யத் தான் ஆவல். ஆனால் நீங்கள் யாரும் சம்மதிக்காவிட்டாலும் நான் தனியாக இதை எதிர்கொள்வேன். நீதி தேவன் தர்ம தேவன் எனக்களித்திருக்கும் ஆன்மிக பலத்தின் மூலம் அதைச் சேர்த்துக் கொண்டு இதை நான் எதிர்கொள்ளத் தயாராக ஆகிறேன்.”

Tuesday, November 15, 2016

சதுரெனக் கொள்ளுவரோ? இதன் தாழ்மையெலாமவர்க்கு உரைத்துவிட்டேன்!

சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான் யுதிஷ்டிரன். “ஆஹா, ஆசாரியர் சொன்னவை எல்லாம் அப்படியே பலிக்கப் போகிறது!” என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டான். அனைவரும் யுதிஷ்டிரனின் கருத்தை அறியக் காத்திருந்தனர். அவன் விதுரரிடம் கேட்டான். “சித்தப்பா, இந்த அழைப்பிற்குக் காரணம் என்ன? இந்த ராஜசூய யாகம் நடக்கையில் மாதக்கணக்காக அவர்கள் இங்கே தங்கி இருந்தனரே. அப்போதெல்லாம் இது குறித்து எதுவும் சொல்லவே இல்லை! இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் எங்களை இப்படி அழைக்கிறார்கள்?” என்று கேட்டான். விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் தன் தலையை ஆட்டிய விதுரரைப் பார்த்து பீமன், “இந்திரப் பிரஸ்தத்தை எங்களிடமிருந்து பிடுங்க இது ஓர் கருவி” என்று பளிச்சென்று கூறினான். “அப்படியும் இருக்கலாம்.” என்று குறுக்கிட்டான் பொதுவாகப் பேசவே பேசாத சகாதேவன். “அப்படி ஒரு வேளை இந்த அழைப்பை ஏற்று சூதாட்டத்திற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை எனில் எங்களை மற்ற அரசர்களோடு ஒப்பிட்டு அவர்கள் முன்னால் ஏளனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தவும் திட்டம் போட்டிருக்கலாம்!” என்று முடித்தான்.

“ஆம், கட்டாயமாக இந்த அழைப்பின் பின்னால் ஏதோ ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது!” என்றாள் திரௌபதி!. “என்ன அது, சித்தப்பா?” என்று கேட்டாள் விதுரரிடம். “ம்ம்ம்ம்ம், அது ஓர் துரதிர்ஷ்டமான வருத்தமான கதையாகத் தெரிகிறது. யுதிஷ்டிரன் துரியோதனனை மற்ற அரசர்கள் மற்றும் பெருந்தனவந்தர்கள் கொடுக்கும் பரிசுப் பொருட்களைக் கணக்கிட்டு வாங்கி வைக்கும் பொறுப்பில் ஈடுபடுத்தினான். இங்கே வந்து குவிந்த பரிசுகளைக் கண்ட துரியோதனன் மனம் பொறமைத் தீயில் வெந்து போய் விட்டது. இப்போது இத்தனை செல்வம் உங்களுக்குக் குவிந்திருப்பதைக் கண்டு அவற்றை எல்லாம் பிடுங்க நினைக்கிறேன் என்றே எனக்குத் தோன்றுகிறது!” என்றார் விதுரர். அப்போது திரௌபதி குறுக்கிட்டு, “அவனும் அவன் தந்தையைப் போலவே குருடாகிவிட்டான் போலும்!” என்று வெடுக்கெனச் சொன்னாள்.

“நாங்கள் அனைவரும் ஹஸ்தினாபுரம் திரும்பியதும், அவன் அங்கே ஓர் புயலையே கிளப்பி விட்டு விட்டான். உணவு உண்ண மறுத்துவிட்டான். உங்கள் செல்வம் அனைத்தும் தன்னைச் சேர வேண்டும் என்றும் அவை உடனே எப்படியேனும் வருவதற்கு வழி செய்யவில்லை எனில் தன்னைத் தானே கொன்று கொள்ளுவதாக அச்சுறுத்தினான். அவனுடைய இந்தப் பைத்தியக்காரத் தனமான நோயைக் குணப்படுத்த நாங்கள் எவ்வளவோ முயன்றோம்! ஆனால் எங்களால் முடியவில்லை. கிட்டத்தட்ட அவன் ஓர் பைத்தியக்காரன் போலவே செயல்பட்டான். நான் அவனுடைய செயல்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தேன். அவனை எவ்வளவோ எச்சாரித்தேன்.”

“நான் அவனிடம் சொன்னேன்:’துரியோதனா, உன் ஆவலைத் தெரிந்து கொண்டு உன் விருப்பம் பூர்த்தி அடைவதற்காகவே யுதிஷ்டிரனை ஹஸ்தினாபுரத்தை விட்டுக் கொடுக்கச் சொல்லி அவனும் விட்டுக் கொடுத்துவிட்டான். இதை விட இன்னும் அதிகமாக அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாய்! நீ கேட்பது தவறு!” என்று எடுத்துச் சொன்னேன். வழக்கம் போல் அவன் என்னை உங்களிடம் நான் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அல்லாமல் என்னை நன்றி கெட்டவன் என்றும் மோசமாகத் திட்டினான். குற்றம் கூறினான். அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? ‘சித்தப்பா! யார் அந்தப் பாண்டவர்கள்? அவர்கள் ஐவருக்கும் இவ்வளவு செல்வமா? இந்தச் செல்வத்துக்கு அவர்கள் தகுதியானவர்களா? இல்லை; இல்லவே இல்லை! இந்திரப் பிரஸ்தமும், அதன் அத்தனை சொத்துக்களுக்கும் நானே ஏகபோக அதிபதி! அவை அனைத்தும் என்னைச் சேர்ந்தவை. தந்தை வழியில் எனக்கு உரிமையானவை! என்ன நான் சொல்வது சரிதானே! பழைய சம்பிரதாயங்களும் சட்டங்களும் அதைத் தானே சொல்கின்றன! வயதில் இளையவர்களால்  சம்பாதிக்கப் பட்ட சொத்து முழுவதும் குடும்பத் தலைவனுக்கு மட்டுமே உரிமையானது என்று தானே நம்முடைய பழைய சம்பிரதாயங்களும் சட்டங்களும் சொல்கின்றன? அப்படி இருக்கையில் அவை என் தகப்பனுக்கு உரியவை. அவருக்குப் பின்னால் என்னை வந்தடைய வேண்டும்!” என்கிறான்.” என்றார் விதுரர்.

“நான் என்ன சொன்னேன், அண்ணா?” என்று யுதிஷ்டிரனைப் பார்த்துக் கேட்ட பீமன் மேலும் தொடர்ந்து, “நான் முன்னாலேயே சொன்னேன் அல்லவா? துரியோதனன் நம்மை நிம்மதியாக இந்திரப் பிரஸ்தத்திலும் வாழ விட மாட்டான் என்று சொன்னேன் அல்லவா?” என்றான். இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த குந்தி விதுரரிடம் திரும்பி, “பிதாமஹர் இதற்கு என்ன சொல்கிறார்?” என்று கேட்டாள்.

விதுரர் அதற்கு, “பிதாமஹர் துரியோதனனின் இந்த அடாவடியான பேச்சுக்களுக்குச் செவி சாய்க்கவே இல்லை. முதலில் மன்னர் திருதராஷ்டிரனும் இவற்றுக்குச் செவி சாய்க்காமல் தான் இருந்தார். ஆனால் அவர் மனம் பலஹீனமானது. அதிலும் துரியோதனன் மேல் அதீதப் பாசம் வைத்திருக்கும் அவரால் தன் மகன் வருத்தத்துடன் இருப்பதைத் தாங்க முடியவில்லை. அவரால் அவன் கஷ்டம் பொறுக்க முடியவில்லை. முதலில் துரியோதனனிடம் கோபமாகப் பேச ஆரம்பித்தவர் பின்னர் ஷகுனியின் தந்திரமான திட்டமிடுதலுக்கு ஒப்புக் கொண்டு விட்டார்.” என்றார். “அவர்கள் அனைவரும் உண்மையிலேயே மிகப் பொல்லாதவர்கள் தான்!” என்றான் பீமன்.

“ஆம், குழந்தாய்! இந்தச் சூதாட்டம் என்னும் திட்டத்தை நுழைத்ததே அந்த காந்தார நாட்டு ஷகுனி தான். மிகச் சாமர்த்தியமாக உங்களை இதில் நுழைத்துவிட்டான். இந்த விளையாட்டுக்கு ஓர் அரசன் என்னும் முறையில் யுதிஷ்டிரனை அழைக்க வேண்டும் என்றும் அவனால் மறுக்க முடியாது என்றும் ஷகுனி கூறினான். பின்னர் அவன் கூறியது தான் இன்னமும் அதிர்ச்சி! துரியோதனனுக்குப் பதிலாக யுதிஷ்டிரனும் ஷகுனி சூதாட்டம் ஆடுவானாம்! “ என்ற விதுரர் மேலும் கூறினார். “அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இந்த அழைப்பு ராஜா திருதராஷ்டிரன் பெயரால் விடுக்கப்படுகிறது. அவருடைய அழைப்பை நீ ஏற்க மறுக்க முடியாது அல்லவா? அதோடு இந்தச் சூதாட்டத்தில் ஷகுனி ஏமாற்று வேலைகள், தந்திர வேலைகள் செய்து உன்னைத் தோற்கடிக்கப் போகிறான். நீயும் தோற்றுப் போனதோடு அல்லாமல் அனைத்தையும் இழந்து நிற்கப் போகிறாய்!” என்றார் விதுரர்.

“ஆஹா, சித்தப்பா? நாம் ஏன் அந்த அழைப்பை ஏற்க வேண்டும்? மறுத்தால்?” திரௌபதி கேட்டாள்.

“மறுக்கலாம் குழந்தாய்! ஆனால் அதன் பின்னர் துரியோதனன் என்ன செய்வான் தெரியுமா? யுதிஷ்டிரனைக் கோழை என்பான். அவன் மேல் குற்றம் சுமத்துவான். க்ஷத்திரியர்களுக்கே அவன் செயல் ஓர் அவமானகரமானது என்று சொல்லுவான். உங்கள் அனைவரையும் அவமானம் செய்து வெட்கத்தில் தலை குனியச் செய்வதோடு அல்லாமல் இத்தகைய கோழையான நீங்கள் எப்படி ராஜசூய யாகம் செய்யலாம் என்றும் கேள்விகள் எழுப்புவான்!”

“துரியோதனன் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்! எனக்குக் கவலை இல்லை!” என்ற பீமன் மேலும் மனோதிடத்துடன் பேசினான். “இதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் நான் இந்த அழைப்பை ஏற்க மறுக்கிறேன். எங்கள் நற்பெயர், புகழ், கீர்த்தி அனைத்துமே இம்மாதிரிச் செயல்களில் இல்லை. மாறாக நாங்கள் செய்த வீர, தீர சாகசங்களில் தான் இருக்கிறது! அதன் மூலமே நாங்கள் புகழ் பெற்றோம்!” என்றான்.

“அவசரப் படாதே பீமா!” என்றார் விதுரர். “துரியோதனன் யுதிஷ்டிரனைக் கோழை என்று அழைப்பதோடு மட்டும் திருப்தி அடைய மாட்டான். அவன் தன்னுடைய நண்பர்களும் உங்கள் ஐவரின் எதிரிகளுமான தந்தவக்கிரனையும் மற்ற அரசர்களையும் துணைக்கு அழைத்து இந்திரப் பிரஸ்தத்தைக் கைப்பற்ற முயல்வான். “

“அப்படி எனில் அவன் ஓர் மாபெரும் யுத்தத்துக்கு எங்களை அழைக்கிறான். நாங்கள் அதற்குத் தயாராகவே இருக்கிறோம்.” என்றான் பீமன். “அது அவ்வளவு எளிதல்ல மகனே!” என்றார் விதுரர். “உங்கள் நண்பர்கள் அனைவரும் இப்போது சமீபத்தில் தான் அவரவர் நாடு திரும்பி இருக்கின்றனர். ஆகவே இப்போது போர் ஏற்பட்டால் அவர்களால் உடனடியாத் திரும்பி வந்து உங்களுக்கு உதவ முடியாது. காலம் பிடிக்கும். அதிலும் வாசுதேவக் கிருஷ்ணன் இப்போது தன் கவனத்தையும் தன் கரங்களையும் ஷால்வன் பக்கம் திருப்பி இருக்கிறான். யாதவர்களும் அவனோடு தங்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே துரியோதனனுக்கு உங்களிடம் போர் தொடுக்கவோ அல்லது உங்களை அடக்கவோ இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது!” என்றார் விதுரர். “அவனால் அவ்வளவு தூரம் எல்லாம் செய்ய முடியாது, சித்தப்பா!” என்றான் பீமன் திடமாக.

ஆனால் விதுரர் மறுத்தார். “ஆனால் உனக்குத் தெரிந்திருக்குமே! இந்த விளையாட்டு அரசர்களின் முக்கிய விளையாட்டு என்றும் அரசர்களின் முக்கியத்துவமும் அவர்களின் மதிப்பும் இந்த விளையாட்டில் முழு மனதோடு ஈடுபட்டு வெல்வதில் உள்ளது என்பதும் உனக்குத் தெரிந்திருக்காமல் முடியாது! உண்மையில் இது சூதாட்டம் தான்! ஆனாலும் அரசர்களுக்கு நடுவே இதைச் சூதாட்டம் என்று எங்கே சொல்கின்றனர்?  இப்போது இந்த ஆட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், அனைத்து அரசர்களிடையேயும் உங்கள் மதிப்புக் குறைந்து நீங்கள் வலுவற்றவர்களாவீர்கள்! உங்கள் அதிகாரம் செல்லுபடியாகாமல் போய் விடும்! அதோடு இதில் சம்பந்தப்படாத மற்ற அரசர்களும் நீங்கள் இப்படி மறுத்ததன் மூலம் ஓர் போரை அர்த்தமற்ற போரை உருவாக்கி விட்டீர்கள் என்று குற்றம் சுமத்துவார்கள். தோல்விக்குப் பயந்து போரை வரவேற்று விட்டீர்கள் என்பார்கள். இந்த விளையாட்டை விளையாடி இருந்தால், வெற்றியோ, தோல்வியோ எதிர்கொண்டிருந்தால் இந்தப் போரே வந்திருக்காதே என்பார்கள்!” என்று விளக்கினார் விதுரர்.

Monday, November 14, 2016

சூது களித்திடச் செய்யும் மந்திரமொன்று மனத்திடைக் கொண்டான்!

அந்தக் குறிப்பிட்ட வருடம் திரௌபதி யுதிஷ்டிரனுடன் வசிக்க வேண்டிய வருடமாக அமைந்திருந்தது. ஆகவே அவளுக்கு யுதிஷ்டிரனின் தவிப்பும், அமைதியின்மையும் நன்கு புலப்பட்டது. எங்கோ கவனமாக ஏதோ சிந்தனையாக அருகிலிருக்கும் அனைத்தையும் மறந்தவனாக அடிக்கடி யுதிஷ்டிரன் தனிமையில் நேரத்தைக் கழிப்பதைக் கண்டாள். ராஜசூய யாகத்தின் மூலம் எதிர்பார்த்த சமாதானமோ, அமைதியோ, சாந்தியோ நிலவவில்லை என்பதே யுதிஷ்டிரனுடைய பெரும் கவலையாக இருந்தது. அந்தக் கவலை அவன் மனதில் பாரமாகத் தெரிந்தது. பாண்டவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் அரசர்களின் நட்போ அல்லது அவர்களுடன் சேராமல் தனித்திருப்பதாக அறிவித்த அரசர்களின் நட்பின்மையான போக்கோ, ஏதோ ஒன்று யுதிஷ்டிரனின் மனதை மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அது உள்ளுக்குள்ளாக ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது. ஆனால் திரௌபதியின் இந்தக் கண்டுபிடிப்பைக் குடும்பத்தின் மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரும் கொண்டாட்டமான, சந்தோஷமான மனோநிலையில் இருந்ததோடு அல்லாமல் சிசுபாலனைக் கண்ணன் கையாண்ட விதத்தையும் அவனை அடியோடு ஒழித்துக் கட்டியதையும் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிசுபாலன் கங்கை மைந்தரான பீஷ்ம பிதாமஹரை மிகவும் கேவலமான வார்த்தைகளால் அவமானம் செய்ததுக்கு அவனுக்கு இம்மாதிரியான தண்டனை அளிக்கப்பட்டது தகுதியானதே என்னும் எண்ணம் அவர்களிடம் இருந்தது.

ஆனால் இதை எல்லாம் குறித்துப் பேசுவதற்கு யுதிஷ்டிரன் தயாராக இல்லை. அதையும் திரௌபதி கவனித்தாள். ஆனால் யுதிஷ்டிரனோ தன் எண்ணங்களில் மூழ்கி இருந்தான். அவனுடைய ஒரே எண்ணம் க்ருஷ்ண த்வைபாயனரின் தீர்க்க தரிசனமான நிகழ்வுகளை எவ்வகையில் பொய்யாக்குவது என்பது ஒன்றே. அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம் திடீரென இரு ரதசாரதிகள் வந்து, ஹஸ்தினாபுரத்திலிருந்து அமைச்சர் விதுரர் மஹாராஜா யுதிஷ்டிரரைக் காண வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள். யுதிஷ்டிரன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஹஸ்தினாபுரத்தில் மட்டுமல்ல விதுரர் குரு வம்சத்தினர் அனைவராலும் மிகவும் மதிக்கப் பெற்றார். அவருக்கெனக் குறிப்பிட்ட அந்தஸ்து இருந்தது. அவர் ஓர் முக்கியமான அமைச்சராக இருந்ததோடு முக்கியமான முடிவுகளையும் அவர் மூலம் எடுக்கப்பட்டு வந்தன. காசி தேசத்து இளவரசிகள் இருவரும் க்ருஷ்ண த்வைபாயனரோடு கூடி நியோக முறையில் திருதராஷ்டிரனையும், பாண்டுவையும் பெற்ற போது மூத்தவளிடம் இன்னொரு முறை கூடுமாறும் இம்முறை குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் திடமாகவும் பிறக்க வேண்டும் என்றும் சத்யவதி வேண்டுகோள் விடுத்திருந்தாள்.

ஆனால் காசிதேசத்து மூத்த இளவரசியோ தான் மீண்டும் வியாசரிடம் செல்வதற்கு அச்சமும் அதிருப்தியும் கொண்டு தன் அந்தரங்கத் தோழியும் தன் அந்தரங்கச் சேடியுமான பெண்ணைத் தயார் செய்து விதுரரிடம் அனுப்பி வைத்துவிட்டாள். க்ருஷ்ண த்வைபாயனரைக் கண்டு அஞ்சாமலோ அல்லது வெறுப்பைக் காட்டாமலோ வேண்டா வெறுப்பாகவோ இல்லாமல் அந்தப் பெண் முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்க, க்ருஷ்ண த்வைபாயனரும் தர்மத்தின் காவலனாக ஓர் மகன் பிறப்பான் என்ற ஆசிகளுடன் அந்தப் பெண்ணை ஏற்றுக்கொண்டிருந்தார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையே விதுரர் என்பதால் திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவுக்கும் இவர் சகோதர முறையிலும் ஆகிவிட்டது. மேலும் விதுரர் முழுக்க முழுக்க திருதராஷ்டிரனோடு சேர்ந்தே வளர்ந்து வந்ததால் திருதராஷ்டிரனிடம் இயல்பாகவே அவருக்குப் பாசமும் பற்றும் இருந்து வந்தது. அதே போல் திருதராஷ்டிரனும் பாசம் காட்டினான்.

விதுரர் பார்ப்பதற்குத் தன் தாயைப் போன்ற முகத்தோற்றதுடன் காணப்பட்டாலும் குணாதிசயங்கள் தந்தையான க்ருஷ்ண த்வைபாயனரைப் போலவே ஒழுக்கசீலராகவும், நல்ல உயர்ந்த பண்புகளுடனும் காணப்பட்டார். சிறு வயதிலிருந்தே தர்மத்தின் நெறிகளைக் கடைப்பிடிப்பதிலும், அதீத புத்திசாலியாகவும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்குடனும் எந்நேரமும் குரு வம்சத்து அரசர்களின் நல் வாழ்க்கை குறித்துமே சிந்தித்துச் செயலாற்றி வந்தார். குரு வம்சத்தினரின் நன்மையே தன் நன்மை என்று முற்றிலும் நம்பினார். வயதாக ஆக அரசியலிலும் நிர்வாகத்திலும் நிபுணராக ஆகிவிட்டார் விதுரர். நீதி சாஸ்திரத்தில் விதுரரை மிஞ்சியோர் இல்லை என்னும்படியாகப் பெயர் பெற்று விளங்கினார். மக்களின் மனோபாவத்தைப் புரிந்து கொள்வதிலும் மனிதரின் குணாதிசயங்களைப் புரிந்து கொள்வதிலும் சிறந்து விளங்கினார். ஆகவே ஹஸ்தினாபுரத்து அரசியலில் விரைவில் முக்கிய இடத்தைப் பெற்றதோடு அல்லாமல் அந்த அரசவையில் முக்க்கியமான  பிரதான மந்திரியாக விளங்கி வந்தார்.

அவரிடமிருந்த விசித்திரமான உணர்வின் மூலம் அவரால் அடுத்தவர்களின் உணர்வுகளை அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்தவரின் நியாயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவர் அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதோடு அல்லாம் அனைவராலும் மதிக்கப்பட்டார். அவ்வளவு ஏன்? ஒருவரையும் லட்சியம் செய்யாத துரியோதனன் குடும்பத்தினர் கூட விதுரரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டார்கள். அரச குடும்பம் முழுவதுமே அவரைப் போற்றியது. ஆனாலும் அவர் மனதில் துரியோதனனின் மரியாதை எல்லாம் அவன் நினைத்த காரியம் முடியும்வரைதான் என்னும் எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஏனெனில் ஏற்கெனவே அவர் பாண்டுவின் குமாரர்களை பீஷ்மரும் சத்யவதியும் ஏற்றுக் கொண்டு அரண்மனையில் அவர்களை இளவரசர்களாக அங்கீகரித்தபோது விதுரரின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. வெளிப்படையாகவே விதுரர் இதை ஆதரித்தார். அதோடு இல்லாமல் தங்கள் உயர்ந்த பண்புகள் மூலமும் அனைவரிடமும் அன்பாகவும் பரிவாகவும் பேசி அனைவருடனும் அனுசரணையாக நடந்ததன் மூலமும் இளவயதிலிருந்தே பாண்டவரக்ளிடம் தனியான அபிமானத்தைக் காட்டி வந்தார் விதுரர். அவர்கள் ஐவருமே அவரின் அன்புக்குப் பாத்திரமானார்கள். அவர்களும் அவரை ஓர் தந்தைக்கு மேல் மதித்துக் கொண்டாடினார்கள்.

விதுரர் தன்னால் இயன்றவரையிலும் துரியோதனாதியருக்கும், பாண்டவருக்கும் இடையிலான பிரச்னைகளைப் பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்த்து இருபாலாரும் ஒருவர் மீது ஒருவர் நட்புடன் இருக்கும்படி செய்யப் பிரயத்தனங்கள் செய்தார். இதனால் துரியோதனனுக்கு அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் குறைந்து போய் அவனும் அவன் சகோதரர்களும் அவரை ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்தனர். துரியோதனன் பாண்டவரை வெறுப்பது போல் விதுரரையும் வெறுக்க ஆரம்பித்துவிட்டான். மேலும் அவர் சேடிப்பெண்ணின் பிள்ளை என்றும் ஏளனம் செய்தான். வேலைக்காரியின் பிள்ளைக்கு அமைச்சர் பதவியா என்று அகந்தையுடன் கேட்டான். அவர்கள் தந்தையான திருதராஷ்டிரனிடம் விதுரருக்கு இருந்த செல்வாக்கின் காரணமாகவே தங்கள் தந்தையும் பாண்டவர்கள் பக்கம் பேசுவதாக கௌரவர்கள் அனைவரும் நினைத்தார்கள்.

அதிலும் கௌரவர்களின் தாய் மாமன் ஆன ஷகுனி அவர்களோடு நிரந்தரமாகத் தங்க ஹஸ்தினாபுரம் வந்ததிலிருந்து துரியோதனாதியரின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஷகுனியே பொறுப்பாக இருந்தான். அதோடு இல்லாமல் விதுரரைக் குறித்தும் அவன் கீழ்த்தரமாகப் பேசி அவரும் தங்கள் வரையில் ஓர் வல்லமை மிக்க எதிரியே என்று சொல்லி வந்தான். இதனால் எல்லாம் துரியோதனனுக்கும் அவன் குழுவினருக்கும் விதுரரிடம் நம்பிக்கையும் இல்லை; அவரை மதிக்கவும் இல்லை. அவர்களுடைய தந்திரமான, சூழ்ச்சித் திறன் மிக்க நடவடிக்கைகளின் ஊடேயும் விதுரருக்கு பிதாமஹர் பீஷ்மரிடமும், ராஜமாதா சத்யவதியிடமும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. திருதராஷ்டிரனிடம் வாழ்நாள் முழுவதும் நட்போடு இருக்கவே விதுரர் விரும்பினார். ஆனால் திருதராஷ்டிரனோ விதுரரையும் அவர் காட்டிய சுயநலம் அற்ற அன்பையும் புறம் தள்ளிவிட்டுத் தன் மகனுடைய கட்சியில் சேர்ந்து கொண்டான். துரியோதனனோ தன் தந்தைக்குத் தன் மீது இருந்த அன்பைத் தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டான்.

இத்தகைய சூழ்நிலையில் தான் ராஜசூய யாகத்தில் கலந்து கொண்ட பின்னர் ஹஸ்தினாபுரம் திரும்பிய விதுரர் மீண்டும் இந்திரப் பிரஸ்தத்துக்கு வந்தார். அவர் வருகையின் மூலம் தவிர்க்க முடியாததொரு பேரிடரைத் தாங்கள் சந்திக்கப் போகிறோம் என்றும் இனி வரும்நாட்கள் குழப்பங்கள் நிறைந்தவையாக இருக்கும் என்றும் யுதிஷ்டிரனுக்குத் தோன்றியது. விதுரரின் வருகை அதைத் தான் முன்கூட்டியே தெரிவிப்பதாக நினைத்தான். என்றாலும் முறைப்படி தங்கள் சித்தப்பனுக்கு சகோதரர்கள் ஐவரும் மரியாதையாகவும் அன்புடனும் வரவேற்பு அளித்தார்கள் விதுரரும் ஐந்து சகோதரர்களையும் தனித்தனியாகக் கட்டி அணைத்து ஆசி கூறித் தானும் குந்தியின் கால்களில் விழுந்து ஆசிகளை வாங்கிக் கொண்டார். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் பார்த்து நலம் விசாரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சற்று நேரத்தில் அவர் உணவு உண்டு முடித்து ஓய்வுக்காகத் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றார். அங்கே அவரைப் பாண்டவரக்ள் ஐவரும் குந்தி தேவியுடனும், திரௌபதியுடனும் சென்று சந்தித்தார்கள். அப்போது விதுரரின் முகத்தில் காணப்பட்ட சிரிப்பு காணாமல் போய்விட்டது. அவர் கண்களில் பதட்டமும் கவலையும் கலந்ததொரு விசாரமான போக்குக் காணப்பட்டது.
யுதிஷ்டிரன் விதுரரைப் பார்த்து, “சித்தப்பா, தங்கள் வருகையின் காரணம் என்ன? எதன் காரணமாகத் தாங்கள் இங்கே வருகை புரிந்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள்?” என்று கேட்டான். விதுரர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார். பின்னர் யுதிஷ்டிரனைப் பார்த்து, “ஒரு செய்தியை உன்னிடம் சொல்லத் தான் வந்திருக்கிறேன். ஆனால் அந்தச் செய்தியை என் மூலம் அனுப்பி வைத்ததற்கு நான் வருந்துகிறேன். மிக வருந்துகிறேன்.” என்றார். அந்த அழகான அமைதியான ஒருவருக்கொருவர் அன்பினால் பிணைக்கப்பட்டிருந்த குடும்பத்தைப் பார்த்த விதுரர் இவர்கள் சந்தோஷம் எல்லாம் ஒரு கணத்தில் இல்லாமல் போய்விடப்போகிறதே! மிகப் பெரிய பேரிடர் இவர்களைச் சூழ்ந்து கொள்ளப் போகிறதே! என்று வருந்தினார். ஆனால் பீமனோ தைரியமாக அவரைப் பார்த்து, “என்ன விஷயம் சித்தப்பா? சொல்லுங்கள்!” என்றான். அவன் வரையில் எதையும் எதிர்கொள்ளத் தயாராகி விட்டான்.

“மாட்சிமை பொருந்திய மன்னர், உங்கள் பெரியப்பா திருதராஷ்டிர மன்னர் உங்கள் அனைவரையும் ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்திருக்கிறார்.”

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் மிகுந்தது. பீமன் கண்கள் விரிய விதுரரைப் பார்த்து, “ஏன், சித்தப்பா? ஏன்?” என்று கேட்டான். விதுரரோ நீண்ட பெருமூச்சு விட்டார். “குழந்தாய்! அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை! எப்படிச் சொல்வது என்றே புரியவில்லை!” என்று மிகுந்த வருத்தம் தொனிக்கக் கூறினார். “காரணத்தைச் சொல்லுங்கள் சித்தப்பா! நாங்கள் இதற்கெல்லாம் மிகவும் பழகி விட்டோம். ஹஸ்தினாபுரத்திலிருந்து கெட்ட சகுனங்களோடு கூடிய அழைப்பு எங்களுக்கு வருவது இது ஒன்றும் முதல் தடவை அல்லவே!” என்று பீமன் விடாமல் கேட்டான்.

“உனக்கு மயன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சபா மண்டபத்தைப் பார்த்ததில் இருந்து துரியோதனனுக்கு அதைப் போன்ற போலித் தோற்றம் கொடுக்கும் சபாமண்டபம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது. அப்படி ஒன்றை ஜயந்த் என்னுமிடத்தில் துரியோதனன் கட்டிவிட்டு அதைப் பார்க்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறான்.” என்றார் விதுரர். ஆனால் பீமனுக்கு இதில் சமாதானம் ஆகவில்லை. “வெறும் சபாமண்டபத்தைப் பார்த்துக் கருத்துச் சொல்வதற்காக துரியோதனன் எங்களை அழைத்திருக்க மாட்டான்! அதுவும் இதற்காக உங்களை ஏன் அவன் அனுப்ப வேண்டும்? சித்தப்பா, இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. உண்மையான காரணம் என்ன?” என்று கேட்டான் பீமன்.  அதற்கு விதுரர் சொன்னார்: “அவன் உண்மையாக உங்களை அழைத்திருப்பது அரசர்களின் பொழுதுபோக்கான சதுரங்கம் எனப்படும் சொக்கட்டான் ஆடுவதற்காக! இன்னும் சொல்லப்போனால் அந்த ஆட்டத்தில் உங்களிடம் அவன் சவால் விடுக்கிறான். அவனை வென்று காட்ட வேண்டும் என்பதே அவன் சவால்! எந்த க்ஷத்திரிய அரசனாலும் இதை மறுக்க முடியாது!” என்று சோகம் கொப்பளிக்கக் கூறினார் விதுரர்.

“என்ன அரசர்களின் விளையாட்டான சொக்கட்டான் ஆடவேண்டுமா?” யுதிஷ்டிரனுக்குள் ஆச்சரியம் முகிழ்த்தது. ஆனால் பீமன் முகம் கோபத்தில் சிவந்தது. அர்ஜுனனோ யோசனையில் முகத்தைச் சுருக்கிக் கொண்டான். திரௌபதி தாங்கொணாக் கோபத்தில் ஆழ்ந்தாள். அர்ஜுனன் யோசனையுடன், “அண்ணா அவர்கள் இந்த விளையாட்டில் நிபுணரே இல்லையே! அதோடு இல்லாமல் இதை நாம் விளையாடுவது வேறு மாதிரியில்! சூதாட்டம் போல் அவர்கள் ஆடுவார்கள். நாம் அப்படிப் பழகவில்லையே! ஆகவே நம்மிடம் இத்தகையதொரு சவாலை விடுத்தது தேவையற்றது: அநீதியானது!” என்றான். உடனே பீமன், “நாம் ஏன் ஹஸ்தினாபுரம் போக வேண்டும்? நாம் போக மறுத்துவிடுவோம். அதிலும் இந்தச் சூதாட்டம் ஆடச் சம்மதிக்கக் கூடாது. இதெல்லாம் அந்த ஷகுனியின் சூழ்ச்சிதான்! நாம் இங்கே சந்தோஷமாகவும் அநேகச் செல்வங்களோடும் மகிழ்ச்சியாக வாழ்வது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. ஆகவே அந்த சூழ்ச்சிக்கார ஷகுனி இப்படி ஒரு வழியைக் கண்டுபிடித்து நம்மைத் தோற்கடித்து நம் செல்வங்களை எல்லாம் பிடுங்கப் பார்க்கிறான். இதற்கு ஒருநாளும் நாம் ஒத்துக் கொள்ளவே கூடாது!” என்றான். “யுதிஷ்டிரா, மகனே! நீ இதற்கு என்ன சொல்லப் போகிறாய்? என்று கேட்டார் விதுரர்.

Sunday, November 13, 2016

குழப்பத்தில் யுதிஷ்டிரன்!

யுதிஷ்டிரனுக்கு மிகவும் சோர்வாகவும் மனதில் வருத்தமும் ஏற்பட்டது. நீண்ட மன அழுத்தத்தில் தவித்தான். ஒரு மாபெரும் யுத்தம் வரப் போகிறது என்பதும் அந்த யுத்தம் தங்கள் குரு வம்சத்தினரிடையேயே ஏற்படப் போகிறது என்றும் உணர்ந்தான். அந்த எண்ணமே அவனை நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்தது. தனக்குத் தானே பேசிக் கொண்டான். “ ஏ, கடவுளே! இது என்ன சோதனை! நான் எப்படி சமாதானத்தையும், அமைதியையும் நிலை நாட்டப் போகிறேன்! ராஜசூய யாகத்துக்கு வந்த முனிவர்கள் அனைவரும் சமாதானமும் அமைதியும் நிலவப் பிரார்த்தனைகள் செய்தனர். ஆனாலும் இங்கே சமாதானம் என்பதே இல்லையே! அமைதி எங்கே கிடைக்கும்? உண்மையில் பீமன் சொல்வது போல் ஒரு மாபெரும் யுத்தத்துக்கும் இன்னொரு மாபெரும் யுத்தத்துக்கும் இடையில் தான் அமைதியும் சமாதானமும் உறைந்திருக்கின்றன.”

யுதிஷ்டிரன் கண்கள் மேல் நோக்கிச் சென்றன. அங்கே ஏதேதோ காட்சிகளைக் காண்பவன் போல் அவன் முகம் மாறி மாறி உணர்வுகளைக் காட்டியது. அவன் ஒவ்வொருவராக நினைத்தான். சற்றும் கருணையோ, இரக்கமோ இல்லாமல் ஆரிய வர்த்தத்தையே எரித்துச் சாம்பலாக்கிய கார்த்தவீரியன், அவனுக்கு முன்னால் மஹரிஷி பரசுராமர், க்ஷத்திரியர்களிடம் கொண்ட கோபத்தால் க்ஷத்திரிய குலத்தையே அழிக்க வேண்டியும் அவர் எல்லைக்குள் நுழைந்தவர்களை எதிர்த்தும் செய்த போர்கள்! அதன் மூலம் அமைதியை நிலைநாட்ட முயன்றாரா? அது மட்டுமா? ஏன் நம், பரத குலத்தில் குரு வம்சத்தில் தோன்றிய நம் முப்பாட்டன் ஷாந்தனு! அவரும் தான் எத்தனை எத்தனை போர்களைச் சந்தித்திருக்கிறார்! எத்தனை அரசர்களைத் தனக்குக் கீழே கொண்டு வந்திருப்பார்! தன்னுடைய சக்கரவர்த்தி பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எத்தனை மக்களின் ரத்தம் ஆறாக ஓடி இருக்கிறது! மகதத்தின் ஜராசந்தன்! எத்தனை கொலைகளில் ஈடுபட்டிருக்கிறான்! எத்தனை அரசர்களைத் துரத்தித் துரத்திக் கொன்றிருக்கிறான்! தன்னுடைய ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்காக மதுராவையே எரித்துச் சாம்பாலாக்கி யாதவர்களை அங்கிருந்து துரத்தினான்! அவனுடைய ஆவல் பூர்த்தி அடையவேண்டும் என்பதற்காக நூறு அரசர்களைப் பிடித்து அக்னிக்கு இரையாக்கி யாகம் செய்ய நினைத்தான்!

ஆனால் எல்லோரும் நினைத்தது என்னவோ ஜராசந்தன் இறந்துவிட்டான் எனில் அதோடு தொல்லைகள் எல்லாம் ஒழிந்தன, இனி அமைதி தான்! சமாதானம் தான் என்றே நினைத்தனர். ஆனால் நடந்தது! அவன் நண்பன் சிசுபாலன் முழுதும் வெறுப்பைச் சுமந்து கொண்டு வந்து இங்கே காட்டியதில் இன்னொரு போர் வரும்போல் இருந்தது தடுக்கப்பட்டு சிசுபாலனைக் கொன்றதில் முடிந்தது. இப்போது!  ஜராசந்தனுக்கும், சிசுபாலனுக்கும் நெருங்கிய நண்பன் ஆன ஷால்வன் இதற்குப் பழி வாங்குகிறான். சௌராஷ்டிரத்தை முற்றுகை இட்டிருக்கிறான். எப்படியோ ஒற்றர்கள் அறியாமல் உள்ளே நுழைந்து கிராமப்புறங்களை எரித்து வருகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ண வாசுதேவனின் தந்தை வசுதேவரைக் கடத்திச் சென்றிருக்கிறான். கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான்; அல்லது கொன்றே விட்டானா என்பது தெரியவில்லை! நிச்சயமாக யாதவர்கள் அனைவருமாகச் சேர்ந்து அவனை நசுக்கிவிட, அழித்துவிடத் தான் முனைவார்கள். அவனைத் தோற்கடிப்பதோடு அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். ஷால்வன் முற்றிலும் அழிய வேண்டும்! அதுவரை ஓயப் போவதில்லை! ஆனால் ஒரு விதத்தில் அவர்கள் செய்ய இருப்பதும் சரியானது என்றே தோன்றுகிறது.

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் யுதிஷ்டிரன். ‘துரியோதனன் அழியும் வரை நமக்கு நிம்மதி இல்லை. ஆரியவர்த்தமும் சமாதானமும் அமைதியும் நிரம்பிய பகுதியாக இருக்காது என்று என் சகோதரர்கள் நால்வரும் நினைக்கின்றனர். அதை நம்புகின்றனர். அவனுடன் போர் நடத்த வேண்டும் என்றும் அவனைத் தோற்கடித்து வெற்றி பெற வேண்டும் என்றும் எண்ணுகின்றனர். ஆனால்!!! ம்ம்ம் இது ஒரு பக்கம் இருக்க ஆசாரியர் வேதவியாசரின் தீர்க்க தரிசனம்! திகைப்பை உண்டாக்குகிறது. மாபெரும் போர் நடக்கப் போவதாகவும் அந்தப் போரின் முக்கிய காரணகர்த்தாவாக நான் இருப்பேன் என்றும் சொல்கிறார்! என்ன தான் நடக்கப் போகிறது?” யுதிஷ்டிரன் மனதுக்குள் புலம்பினான். மீண்டும் அவன் யோசனைகள் தொடர்ந்தன. அவனால் துரியோதனனைப் பார்த்துப் பரிதாபப் பட முடிந்தது.

“பாவம் அந்த துரியோதனன்! அவன் வாழ்நாளில் நினைத்தது எதுவும் நடக்கவில்லை! அவன் எனக்கு முன்னாலேயே பிறந்திருக்க வேண்டும்! ஆனால் ஏதோ ஒரு விபத்தினால் எனக்குப் பின்னர் பிறந்தான். அதோடு முடிந்ததா? அவன் தந்தை பிறவிக்குருடாகப் போய்விட்டார். ஆகவே அவன் ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரிய அரியணைக்கு உரியவன் அல்ல என்று பெரியோர் முன் மரபுகளை ஒட்டி முடிவெடுத்து விட்டனர். பிறவிக்குருடனுக்குப் பிள்ளையாகப் பிறந்தது அவன் குற்றமா என்ன? இப்போது அவன் தனக்குரியவை என்று நினைக்கும் அந்தப் பரம்பரை அரச பதவியை நம்மிடமிருந்து அதாவது எங்கள் ஐவரிடமிருந்தும் பிடுங்க நினைக்கிறான். அவனுக்குத் தான் அந்த அரச பதவி உரியது என்று எண்ணுகிறான். இதில் தவறு சொல்ல முடியாது எனினும் பீமன், மிகவும் தைரியமும் புத்திசாலியும் ஆன பீமன், நாம் ஒரு மாபெரும் போருக்குத் தயார் ஆகவில்லை எனில் சமாதானம் என்பதே கிடைக்காது என்கிறான்.”

யுதிஷ்டிரன் மனதில் மேலும் மேலும் சிந்தனைகள் ஓடின. ஆனால் அவன் சிந்தனைகள் சுய பச்சாத்தாபத்திலேயே போய் முடிந்தன. தன்னைத் தானே வருத்திக் கொண்டான். மனதில் அவன் மேலேயே அவனுக்குக் கசப்பு உணர்வு தோன்றியது. தனக்குத் தானே மீண்டும் பேசிக் கொண்டான். “ஹூம், என்னிடம் இப்போது அமைதிக்கும், சமாதானத்துக்கும் மட்டுமின்றி போருக்கும் தைரியம் இல்லை; மனதில் வலு இல்லை! ஆகவே ஆசாரியர் கூறியபடி நான் இயற்கையாகவே ஒரு மாபெரும் போர் நடக்க அச்சாக இருக்கப் போகிறேன் போலும், ஆதாரமாக ஆகிவிடுவேன் போலும்! இதிலிருந்து எப்படியாவது வெளியேறியாக வேண்டும்! எப்படித் தப்புவது இதிலிருந்து? துரியோதனன் மனதில் இருக்கும் அந்த வெறுப்பு என்னும் எரிமலையை நான் எப்படி அணைப்பேன்! அவனை சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்படி எப்படிச் சொல்லுவேன்? அவனை சமாதானத்திற்கு எப்படித் தூண்டி விடுவேன்? அவனோ தனக்கென உரிய பரம்பரை அரியணை, ஆட்சி உரிமை தன்னை விட்டுப்போனதற்கு நான் தான் காரணம் என நினைக்கிறான். அதனால் தான் தனக்கு மறுக்கப்பட்டு விட்டது என எண்ணுகிறான்.”

“என் சகோதரர்களோ என்னை ஒரு தந்தையைப் போல் மரியாதையும் அன்பும் செலுத்தி நடத்தி வருகின்றனர். அதோடு இல்லாமல் என்னிடம் அளவற்ற விசுவாசமும் காட்டுகின்றனர். எப்படி ஆனாலும் சரி, அவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கவே மாட்டார்கள்!”

“என் சகோதரர்கள் நினைக்கிறதெல்லாம் துரியோதனன் அவர்களுக்கு என்று உரிய உரிமையைப் பறிக்க நினைக்கிறான் என்பதே! அவர்களுக்கு அந்த உரிமையை முற்றிலும் மறுக்கிறான் என்பதே! ஆம், அவர்கள் சொல்வதும் சரிதானே! ஹஸ்தினாபுரம் வேண்டுமானால் பரம்பரை வழி வந்ததாக இருக்கலாம். இந்திரப் பிரஸ்தம் அப்படி இல்லையே! இது எங்கள் சொந்த முயற்சியில் உருவான நகரம். இதை நாங்கள் ஐவரும் சேர்ந்தே உருவாக்கினோம்! இதை விட்டுக் கொடு என்று நான் எப்படி என் தம்பிகளிடம் சொல்ல முடியும்?”

“ஆஹா! அப்படி மட்டும் நான் சொல்லிவிட்டேன் எனில், என் தம்பிகள் மட்டுமல்ல, எங்கள் அருமைத் தாய் குந்திதேவியும், என் மனைவி திரௌபதியும் கூட என்னை விட்டு விலகி விடுவார்கள். கௌரவ சகோதரர்களுக்காக இந்திரப் பிரஸ்தத்தை விட்டுக் கொடுக்க அவர்கள் யாரும் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு மாபெரும் யுத்தம் வரப் போகிறது என்னும் கசப்பான நிச்சயமான உண்மையை அவர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பேன்? ம்ம்ம்ம், வேதங்கள் என்னவோ சொல்கின்றன! அமைதியும் சமாதானமும் தான் அனைத்தும் என்றும் அது தான் முக்கியம் என்றும் சொல்கின்றன! ஆனால் அவை எங்கே இருக்கின்றன?”

மக்களிடம் அதுவும் ஆண்களிடம் க்ஷத்திரிய ஆண்களிடம் இயல்பாகவே போர்க்குணம் நிரம்பித்தான் இருக்கிறது. இந்தப் போருக்காக அவர்கள் எத்தனை ஆயத்தங்கள் செய்கின்றனர்! குதிரைகள், ரதங்கள், ரத சாரதிகள், வில்லாளிகள், அவர்களுக்குத் தேவையான வில், அம்புகள், கோடரிகள், தண்டாயுதங்கள் என இத்தனை வகை ஒரு போரை வெல்லப் பயன்படுத்தப்படுகின்றன. இதிலே தெய்விகப் பண்புகள் வேறே இருப்பதாகச் சொல்கின்றனர். இதை ந்டைமுறையில் எப்படிக் கொண்டு வருவது? எப்படிக் கைவிடுவது?”

அமைதிக்கான பிரார்த்தனை மந்திரங்களை மெல்லிய குரலில் யுதிஷ்டிரன் முணுமுணுத்தான்.
“ சொர்க்கம் அமைதியாக இருக்கிறது: அது போல் ஆகாயமும்!
அந்த அமைதியும் சமாதானமும் நானாக இருக்கக் கூடாதா?
இந்த உலகம் அமைதியாக இருக்கிறது; மௌனமாக இருக்கிறது; புற்களின் மெல்லிய ஓசையும் நீரின் சலனமும் கூட இல்லாமல் அமைதி நிலவுகிறது.
இந்த அமைதி என்னுடையதாக இருக்கக் கூடாதா? அது நானாக இருக்கலாகாதா?
வேதங்கள் அமைதியைச் சொல்கின்றன! எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என்கின்றன!அதே போல் கடவுளரும் கூட அமைதியாகவே இருக்கின்றனர்.
அந்த அமைதி என்னுடையதாக இருக்கக் கூடாதா? அது நானாக இருக்கலாகாதா?
அந்த அமைதியும் சாந்தமும் என்னுடையதாக இருந்தால்; அந்த அமைதியை வைத்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.
இவ்வுலகின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அதைப் பகிர்ந்தளிப்பேன். மிருகங்களுக்கும் அந்த சாந்தியை அளிப்பேன்.
அந்த அமைதி மட்டும் என்னுடையதாக இருந்தால்
எங்கும் சாந்தி, சாந்தி சாந்தி நிலவட்டும். சாந்தி, சாந்தி, சாந்தி!
“ஹூம், எல்லாமே கேலிக்கூத்தாகிவிட்டதே!” என யுதிஷ்டிரன் நினைத்தான். “சாந்தி எப்படி என்னிடம் வரும்? அது எப்படி எனக்குச் சொந்தமாகும்? துரியோதனனின் வெறுப்பு மட்டுமின்றி அவனைக் குறித்த என் சகோதரர்களின் வெறுப்பும் கூடக்களையப்பட வேண்டும். அதை நான் வெற்றி கொள்ள வேண்டும். அப்போது தான் சாந்தி எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கிட்டும். ஆஹா! என்னால் மட்டும் ஆசாரியரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்க முடிந்தால்! அது கனவாகி விடுமோ! ஏ, கடவுளே! கடவுளே! இதிலிருந்து எப்படித் தப்புவேன்? இதிலிருந்து வெளியேறும் வழி என்ன?” யோசித்து யோசித்து அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டாலும், ஏதோ ஓர் எண்ணம் மின்னலைப் போல் தோன்றியது! “இந்தப் பிரச்னையின் ஆணிவேரே பரம்பரை வாரிசாக யார் இருக்க வேண்டும் என்பது தான்! ஆகவே நான் ஆசாரியரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்க வேண்டுமெனில் இந்த வாரிசு என்னும் முறையை அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டும். வாரிசு நாங்கள் தான் என்றே சொல்லக் கூடாது! இந்த எண்ணத்தை என் தம்பிகள் மனதிலும் விதைக்க வேண்டும்!”

Friday, November 11, 2016

எதிர்காலம் குறித்து வியாசரின் கணிப்பு!

பீமனால் கடோத்கஜன் சொன்னவை எல்லாம் ஆரியர்களின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.அங்கிருந்த பெரியோர் எல்லாம் சிரித்தனர். இளையவர்கள் சந்தோஷத்தில் ஆனந்தக் கூத்தாடினார்கள். “தந்தையே, நீங்கள் அவ்வாறு செய்ய என்னை அனுமதித்திருந்தால் அம்மாவுக்கும் சந்தோஷமாக இருந்திருக்கும்!” என்றான் கடோத்கஜன் மீண்டும். பிரியும் நேரம் வந்ததும் தன் தந்தையின் கால்களைத் தன் தலைமேல் ஏற்றுத் தந்தையை கௌரவப் படுத்தினான் கடோத்கஜன். செல்வதற்குத் திரும்பியவன் என்ன நினைத்துக் கொண்டானோ மீண்டும் திரும்பி பீமனைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போனான். “தந்தையே, இதை மறவாதீர்கள்! நினைவில் இருத்துங்கள். அடுத்த முறை உங்கள் எதிரிகளைக் கொல்ல வேண்டுமெனில் என்னை அழையுங்கள்!” என்று ரகசியமாக முணுமுணுத்தான். “அப்படியே ஆகட்டும் மகனே!” என்ற வண்ணம் வாஞ்சையுடன் மகனைத் தடவிக் கொடுத்தான் பீமன். ஒரு புன்னகையுடன் கடோத்கஜன் பிரிந்து சென்றான்.

மறுநாள் எழுந்திருக்கும்போதே யுதிஷ்டிரனுக்குத் தான் இத்தனை நாட்கள் ஏதோ கனவுலகில் இருந்தாற்போலவும் அந்தக் கனவுலகிலிருந்து இப்போது நனவுலகுக்கு வந்து விட்டாற்போலவும் இருந்தது. அதிலும் கனவிலிருந்து உலுக்கி எழுப்பப்பட்டு இந்த உலகின் சுய ரூபத்தைத் தன்னைக் காணும்படி செய்துவிட்டாற்போல் எண்ணினான். இப்போதிருக்கும் இந்த உலகில் வீர தீர சாகசங்களைச் செய்யும் கதாநாயகர்கள் இல்லை, ரிஷி, முனிவர்களைக் காணவில்லை. எந்நேரமும் போர்த் தினவு எடுத்துத் திரியும் அரசர்களோ, போர் வீரர்களோ காணப்படவில்லை. தங்கள் தங்கள் சுய அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிப் போருக்கு அலையும் மனிதர்களே இல்லை. சற்று நேரம் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரனுக்கு திடீர் என உண்மை உறைத்தது. தான் இப்போது க்ஷத்திரிய தேஜஸ் என்னும் பாரம்பரியச் சிறையில் மாட்டி இருக்கிறோம் என்பது புரிந்தது. அவனுக்கு ராஜசூய யாகம் செய்யவே இஷ்டம் இல்லை.

ஆனால் அவன் அதைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டான். ஏனெனில் க்ஷத்திரியர்களுடைய பாரம்பரியமும், பழக்க, வழக்கங்களும் அவன் ஓர் மன்னன் அதிலும் பேரரசன் என்பதும் அதைச் செய்யும்படி அவனை வற்புறுத்தியது. சக்கரவர்த்தி என்னும் பெயரை அவன் பெற வேண்டும் என்பதை அவன் குடும்பத்தினர் அனைவரும் விரும்பினார்கள். யுதிஷ்டிரன் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட வேண்டும் என எண்ணினார்கள். அதிலும் வாசுதேவக் கிருஷ்ணனுக்குக் கூட அந்த ஆசை இருந்தது. இத்தனைக்கும் அவன் விவேகம் நிறைந்தவன், வீரம் நிரம்பியவன், தொலைநோக்குப் பார்வை கொண்டவன், அந்த தன்னுடைய பார்வையைச் சற்றும் ஒளிக்காமல் கூறும் திறமை உள்ளவன், தர்மத்திற்கு அழிவு ஏற்படும் என்பதை உணர்ந்த அந்தக் கணமே அதைக் காக்கப்போராடுபவன்! அதர்மத்தை முற்றிலும் அழிப்பவன்!

இதை எல்லாம் யோசித்து யோசித்து மனம் குழம்பிய யுதிஷ்டிரன் அன்றிரவு வெகு நேரம் தூங்காமல் யோசனைகளிலேயே இருந்தான். இங்கே நடக்கும் ஒவ்வொரு காரியமும், செயலும் அவன் பெயராலேயே அவன் சம்மதத்தை எவ்வகையிலோ பெற்றுக் கொண்டே நடந்து வருகிறது. அப்படி இருக்கையில் அதற்கு அவன் தானே பொறுப்பு! தான் பொறுப்பில்லை என்று அவன் சொல்ல முடியுமா? ராஜசூய யாகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைதியையும், சமாதானத்தையும் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளோடு தான் முடிந்தது. திரும்பத் திரும்ப அனைத்து ஸ்ரோத்திரியர்களாலும், “ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி!” என்பது உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும், சமாதானத்திற்காகவும் தானே ஜராசந்தனையும் சிசுபாலனையும் கூடக் கொல்ல நேரிட்டது! ராஜசூய யாகத்தை எந்தக் காரணத்திற்காக நடத்த வேண்டும் என நினைத்தார்களோ அது நடக்கவே இல்லை. ராஜசூய யாகம் நடக்கும்போது எங்கு அமைதி காக்க முடிந்தது? எங்கு சமாதானம் பேச முடிந்தது? அமைதியையும், ஒத்திசைவையும் கொண்டு வர வேண்டிய ராஜசூய யாகமானது நடந்து முடியும்போது இங்கு வந்தவர்களெல்லாம் இரு குழுக்களாகப்பிரிந்து இரு குழுக்களிடையேயும் ஆழமான தீவிரமான, கடுமையான வெறுப்பு அல்லவோ தலை தூக்கி விட்டது! இப்போது அந்தக் குழுக்கள் இரண்டும் ஒன்றை மற்றொன்று கடுமையாகத் தாக்கும் எண்ணத்தில் காத்திருக்கின்றனர். இது நல்லதா?

மனம் நிறையச் சஞ்சலத்துடன் இருந்த யுதிஷ்டிரன் தன்னையும் அறியாமல் தூங்க ஆரம்பிக்க, கனவா, நனவா என்றே புரியாத அரை விழிப்பு நிலையில் தான் ஓர் போர்க்களத்தில் காயம்பட்டுக் கீழே விழுந்து கிடப்பதாகக் கண்டான். அந்த நிலையில் அவன் எவரோ வந்து தன்னை வாளால் தாக்கப் போவதாக எதிர்பார்த்துக் கொண்டு கிடந்தான். அதே நேரம் அவனுக்கு எங்கோ தொலை தூரத்திலிருந்து சாந்தி நிலவவேண்டும் என்னும் பிரார்த்தனைக்குரல்கள் தனித்துக் கேட்டுக் கொண்டிருந்தன. அந்தக் குரல்கள் திரும்பத் திரும்ப ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி! என்றே சொல்லிக் கொண்டிருந்தன. அவன் இப்போது என்ன செய்ய வேண்டும்? பெரிய அளவில் மனிதரை மனிதரே கொன்று தீர்க்கும் அந்தப் போர் என்னும் காட்டுத் தீயை அணைக்க வேண்டாமா? அதற்கு அவன் தயார் செய்து கொள்ள வேண்டுமா? அதைவிடப் பயனுள்ளதாக எதுவும் அவனால் செய்ய முடியாதா? இன்னும் நன்மைகள் செய்ய முடியாதா? யோசனைகளில் குழம்பிய யுதிஷ்டிரன் களைப்பில் உறங்க ஆரம்பித்தான்.

யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுச் செல்வதற்காக ஆசாரியர் வேத வியாசர் வந்திருந்தார். அவர் பாதங்களைக் கழுவி பூஜை செய்து வழிபட்டான் யுதிஷ்டிரன். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் மனம் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தது. அவனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் வியாசர். அவரைப் பார்த்து, “ஆசாரியரே, தயவு செய்து நான் உங்களை ஒன்று கேட்கலாமா? எதிர்காலம் குறித்து நீங்கள் என்ன காண்கிறீர்கள்? அதை எனக்குச் சொல்ல முடியுமா? இது எனக்குப் பேருதவியாக இருக்கும். நீங்கள் முக்காலமும் உணர்ந்த ஞானி என்பதை நான் நன்கறிவேன். ஆகவே எங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.” என்றான்.

“உன் மனதிலுள்ள பாரத்தை இறக்கி வை யுதிஷ்டிரா, குழந்தாய், எதற்கும் கவலைப்படாதே!” என்று அன்பு கனியச் சொன்னார் வியாசர். தலை குனிந்து யோசித்துக் கொண்டிருந்த யுதிஷ்டிரன், “ஆசாரியரே, சிசுபாலனின் மரணம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவுகள்???? எதிர்காலத்தில் ஓர் மாபெரும் போராக மாறுமோ? போர் ஒன்று எதிர்காலத்தில் ஏற்படுமோ?” என்று கேட்டான். வியாசர் கண்களை மூடிக் கொண்டார்.  அவர் தனக்குள்ளே எதிர்காலம் குறித்த காட்சிகளைக் காண்கிறாரோ என்னும்படி தோன்றியது. பின்னர் கண்களைத் திறந்து மிக மெல்லிய குரலில், “மகனே, நான் காண்பது இனிமையான காட்சிகள் அல்ல! சிசுபாலன் மரணம் ஓர் முடிவல்ல! ஆரம்பம்! க்ஷத்திரிய குலத்துக்கே அழிவு ஏற்படப்போகிறது, படுகொலைகள் நடக்கப்போகின்றன. க்ஷத்திரியர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கப் போகிறார்கள். கம்சன், ஜராசந்தன், சிசுபாலன் ஆகியோரின் ஆவிகள் இந்தப் புண்ணிய பூமியிலே சுற்றிக் கொண்டு அதன் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் போகின்றன. ரத்தம் குடிக்கும் அவர்கள் இச்சை பூர்த்தியாகும் வரை இது நடக்கப் போகிறது!” என்றார் வருத்தத்துடன்.

“இத்தகைய பேரழிவை நான் எவ்வாறு தடுப்பேன், ஆசாரியரே! அது என் கடமை அல்லவோ? இதைச் செய்வதற்காக நான் காத்திருக்கிறேன். இதற்காக இதைத் தடுப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்.” என்றான். வியாசரின் கண்கள் மீண்டும் தொலை தூரத்தில் பார்த்தன. அவர் மீண்டும் எதிர்காலத்தை அப்போது நடக்கப் போவதைத் தன் மனக்கண்களால் கண்டு கொண்டிருந்தார். “மகனே, இந்தப்பேரழிவின் மையக்காரணமாக நீ தான் இருக்கப் போகிறாய்! உன்னைச் சுற்றியே அனைத்தும் நடைபெறப் போகிறது!” என்றார்.

“ஆஹா, என் கடவுளே! நான் என்ன செய்வேன்!” என்ற யுதிஷ்டிரன் கண்களிலிருந்து கண்ணீர் பொழிந்தது. தழுதழுத்த குரலில் அவன், “இந்த மாபெரும் சோகத்திலிருந்து தப்புவதற்கு வேறு வழி இருக்கிறதா ஆசாரியரே!” என்று கேட்டான். “அது உன்னால் இயலாத ஒன்று, மகனே! விதியை வெல்ல எவராலும் இயலாது!” என்று சோகத்துடனேயே கூறினாலும் வியாசர் அதை சர்வ நிச்சயமாகக் கூறினார். “ஆசாரியரே, என்னை நானே ஒப்புக் கொடுத்தால், மரணத்தை விரும்பி வரவேற்றால், அல்லது நான் சந்நியாச தர்மத்தை மேற்கொண்டால்?இந்த உலக வாழ்க்கையைத் துறந்தால்?” என்று கேட்டான் யுதிஷ்டிரன். வியாசர் பதிலே பேசவில்லை. மௌனமாக இருந்தார். அவர் மௌனத்தைப் பார்த்த யுதிஷ்டிரன், “இந்தப்பிரச்னை, இந்தப் பேரழிவுக்குக் கால நிர்ணயம் இருக்கிறதா ஆசாரியரே! எத்தனை வருடங்கள் ஆகும் இது சரியாவதற்கு? அல்லது இந்த அழிவு காலத்தை நாங்கள் எத்தனை வருடம் அனுபவிப்போம்?” என்று கேட்டான்.

மீண்டும் தன் கண்களை மூடிய வியாசர் பின்னர் திறந்து கொண்டு, “பதின்மூன்று வருடங்கள்!” என்றார். யுதிஷ்டிரன் அதைக் கேட்டு நடுங்கினான். மீண்டும் தன் கேள்வியையே திரும்பக் கேட்டான். “ஐயா, இந்தப் பேரழிவிலிருந்து இந்தப் பெரும் புயலிலிருந்து நாங்கள் எப்படித் தப்புவது என்பதைக் கொஞ்சம் சொல்லுங்கள். எங்களுக்கு வழி காட்டுங்கள்!” என்று கெஞ்சினான். தன் தலையை ஆட்டி மறுப்புத் தெரிவித்தார் வியாசர். “உன்னால் முடியாது என்றே நான் நம்புகிறேன் மகனே! சரியான நேரம் வருகையில் அதற்கான வழியை எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள், பிரளய காலத்தில் அனைவரும் ஒடுங்கும் ஒரே தேவன் ஆன மஹா ஈசன், அந்த சாட்சாத் மஹேஸ்வரன் உனக்குத் தக்க ஆலோசனைகள் சொல்லி வழிகாட்டுவார்!” என்று முடித்துவிட்டார். பின்னர் வியாசர் எழுந்து விட்டார். வேதனை பொறுக்க முடியாமல் தன்னுள் எழுந்த விம்மலையும் அழுகையையும் அடக்கிக் கொண்டு யுதிஷ்டிரன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான்.

இரண்டு நாட்கள் சென்றன. விடியற்காலை வேளை. விடிவெள்ளி முளைத்துச் சிறிது நேரமே ஆகி இருந்தது. இந்திரப் பிரஸ்தத்தில் அனைவரும் காலை உறக்கத்தில் ஆழ்ந்திருக்க அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு சில ரதங்கள் வேகமாக ஓடோடி வரும் சப்தமும் குதிரைகள் சடார், சடார் என நிறுத்தப்படும் சப்தமும், ரதங்களின் சக்கரங்கள் க்ரீச்சிட்டுக் கொண்டு நிற்கும் சப்தமும், குதிரைகளை அடக்கும் ரத சாரதிகளின் குரல்களும் கலந்து குழப்பமாக ஒலித்தன. அரச மாளிகையின் வாயிலில் அந்த ரதங்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் வந்திருப்பவர்களை நகுலனும், சஹாதேவனும் வரவேற்று அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் குரல்களும் யுதிஷ்டிரனுக்குக் கேட்டது. சற்று நேரத்தில் நகுலனே யுதிஷ்டிரனை நோக்கி ஓடோடிச் சென்றான். “அண்ணாரே, துவாரகைக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாட்சிமை பொருந்திய நம் மாமன் வசுதேவர் ஷால்வனால் சிறைப்பிடிக்கப்பட்டார். ஷால்வன் அவரைக் கொன்று விடலாம் அல்லது கொன்றிருக்கலாமோ என்று அஞ்சப்படுகிறது. அதோடு இல்லாமல் அந்த ஷால்வன் சௌராஷ்டிர நாட்டிற்குள் நுழைந்து பல கிராமங்களுக்குத் தீயிட்டு அழித்து வருகிறான் என்றும் சொல்கின்றனர்.” என்று பதட்டத்துடன் கூறினான்.

“கிருஷ்ண வாசுதேவன் எங்கே? அவனிடம் செல்வோம் வா!” என்றான் யுதிஷ்டிரன்! “சஹாதேவன் கிருஷ்ணனிடம் தகவல் சொல்லச் சென்றிருக்கிறான்.” என்றான் நகுலன். கிருஷ்ணன் தங்கி இருக்கும் இடத்திற்கு அவர்கள் இருவரும் சென்றபோது, கிருஷ்ணன் தன் ரத சாரதி தாருகனைக் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் செய்யும்படி கட்டளை இட்டுக் கொண்டிருந்தான். யுதிஷ்டிரன் கவலையுடன் கிருஷ்ணனை நோக்கி ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டு, “சகோதரா, இது என்ன? என்ன நடக்கிறது? நான் கேள்விப்படுவது என்ன? அவை உண்மையா?” என்று வினவினான். “ஆம், மூத்தவரே, என் தந்தை அந்த ஷால்வனால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவன் சௌராஷ்டிரத்தின் கிராமங்களையும் எரித்துச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறான். நான் உடனே கிளம்பியாக வேண்டும்!” என்றான். அதற்குள்ளாக மற்றவர்களும் அங்கே வந்துவிட அனைவரும் கிருஷ்ணனுக்கு உதவியாகத் தாங்களும் வருவதாகச் சொன்னார்கள்.

ஆனால் கிருஷ்ணனோ, “வேண்டாம், எனக்கு உங்கள் எவருடைய உதவியும் இப்போது தேவை இல்லை. இந்தச் சூழ்நிலையை நான் என் வழியிலேயே மாற்றி அமைத்துக் கொள்கிறேன். இந்தப் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள்!” என்று கூறிவிட்டான். அதற்குள்ளாக ரதங்கள் தயாராகிவிட்டதற்கான அடையாளமாக ரத சாரதிகள் சங்குகளை முழங்கினார்கள். விடைபெறும்போது யுதிஷ்டிரனைக் கட்டி அணைத்துக் கொண்டான் கிருஷ்ணன். யுதிஷ்டிரன் கண்களில் நீர் நிறைந்தது, “சகோதரா, இன்று நான் ஓர் சக்கரவர்த்தி என அனைவராலும் அழைக்கப்பட்டால் அதற்கான காரணகர்த்தா நீ மட்டும் தான். உனக்கு நான் எவ்வகையில் நன்றி சொல்வேன் என்றே தெரியவில்லை!” என்றான்.

“அதெல்லாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். நீ உன் சொந்த வழியில் சென்று தான் இந்திரப் பிரஸ்தத்தை வலிமையானதாக ஆக்கி இருக்கிறாய்! ஆனால் ஒன்று நினைவில் கொள்!” என்ற கிருஷ்ணன் மெல்லிய குரலில், “துரியோதனனைப் பற்றி உயர்வாக நினைக்காதே! நீ புகழும் பெயரும் அடைவதை அவனால் பொறுக்க முடியாது. அதற்காகவே உன்னை அவன் மன்னிக்கவே மாட்டான். அவனால் துன்பம் அடையாமல் பார்த்துக் கொள். அவன் வலையில் விழுந்துவிடாதே! கவனமாக இரு!” என்றான். கிருஷ்ணன் தன் ரதத்தின் மேலே ஏறிக் கொண்டு குதிரைகளின் தலைக்கயிற்றைத் தானே வாங்கிக் கொண்டு குதிரைகளை விரட்டினான். குதிரைகளோ கிருஷ்ணன் மனதைப் புரிந்து கொண்டாற்போல் விரைந்தன. கிருஷ்ணனைத்  தொடர்ந்து மற்ற யாதவ அதிரதிகளும் மஹாரதிகளும் பின் தொடர்ந்து சென்றனர். அந்த இடமே ரதங்களின் ஓட்டத்தால் புகை மண்டலம் ஆகி அனைவர் கண்களையும் மறைத்தன.



Thursday, November 10, 2016

விடைபெறும் விருந்தினர்!

ஜராசந்தனும், சிசுபாலனும் கொல்லப்பட்டு விட்டதோடு முடிந்திருந்தால் யுதிஷ்டிரன் வாழ்க்கை நன்றாகவே போயிருக்கும். ஆனால் அதோடு முடியவில்லையே! பார்ப்போர் வியந்து அச்சமுறும் வண்ணம் வெளிப்பட்ட கிருஷ்ணனின் அபார சக்தி ஜராசந்தனின் தோழர்கள் அனைவரையும் திகைத்துப் பயப்பட வைத்தது. அவர்கள் தந்தவக்கிரன் தலைமையில் இந்திரப் பிரஸ்தத்தை விட்டே வெளியேறி விட்டார்கள். அந்தச் சூழ்நிலையை முழுவதும் கிருஷ்ணன் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துவிட்டான். ஆகவே தந்தை இறந்ததால் வருந்திக் கொண்டிருந்த சிசுபாலனின் மகனை அணைத்து ஆறுதல் சொல்லி அவன் மரணத்தின் நியாயங்களை எடுத்துக் கூறினான். சிசுபாலனின் உடல் அரச மரியாதைகளோடு எரிக்கப்படுவதற்கு ஆவன செய்தான். சிசுபாலனுடைய நெருங்கிய உறவினர்கள் அனைவரும் சிசுபாலன் இறந்த பின்னரும் ராஜசூய யாகம் போன்ற புனிதமான யாகம் நடக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்று அங்கிருந்து வெளியேறினார்கள். அதன் பின்னர் சிசுபாலனின் மகன் ஆசாரியர் வியாசரின் அறிவுரைப்படியும் ஆசிகளின் படியும் சேதி நாட்டு மன்னனாகப் பொறுப்பேற்க வைக்கப்பட்டான். அங்கு கூடி இருந்த மற்ற அரசர்களும், பேரரசர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அந்த ராஜசூய யாகத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவருக்குமே யுதிஷ்டிரனின் பெருந்தன்மையான போக்கும், அமைதியான சுபாவமும், நேர்மையும், கருணையும் பொருந்திய அணுகுமுறையும் மிகவும் பிடித்திருந்தது. அனைவருமே யுதிஷ்டிரனைப் போற்றினார்கள். அனைவர் மனதிலும் ஓர் அழுத்தமான இடத்தை யுதிஷ்டிரன் பிடித்து விட்டான். ராஜசூய யாகம் தொடர்ந்து நடைபெற்றாலும் அதில் பழையபடி எவருக்கும் ஆர்வமோ, விருப்பமோ இல்லை! அனைவரும் வேறு வழியில்லாமலேயே அதில் கலந்து கொண்டாற்போல் காணப்பட்டனர். அதன் கவர்ச்சியும், அதன் முக்கியத்துவமும் குறைந்து போய் அனைவர் மனதிலும் ஓர் ஆழ்ந்த வருத்தமே காணப்பட்டது. வெளிப்பார்வைக்கு அதை மறைத்துக் கொண்டு அனைவரும் புன்னகையைப் போர்த்திய வண்ணம் நடமாடினார்கள்.

அந்தச் சூழ்நிலையைக் கொஞ்சமாவது மாற்றியவர் எனில் அது வேத வியாசர் மட்டுமே! மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அவரது தரிசனத்தைப் பெற்றுப் போய்க் கொண்டிருந்தனர். அவர் தொட்டாலே நோய் குணமாகும் என்று நம்பிய மக்கள் அங்கே வந்து தங்களை நோயிலிருந்து காப்பாற்ற வேண்டி அவர் தொட்டுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள். குழந்தைகள் வழக்கம்போல் அவர் அளிக்கும் உணவுக்காகக் காத்திருந்து உண்டனர். மன்னர்களும், பேரரசர்களும் அவர் ஆசிகளுக்குக் காத்திருந்தனர். புனிதமான வேதத்தைக் காப்பாற்றுவதற்காக ஸ்ரோத்திரியர்கள் தபஸ் இருந்து அதன் புனிதத்தை அதிகப்படுத்தி இருந்தனர். அதற்கு முழு முதல் காரணமே வேத வியாசரும் அவரால் தொகுத்து உலகுக்கு அளிக்கப்பட்ட வேத மந்திரங்களுமே ஆகும். அனைவரும் முழு மனதுடன் பாரம்பரிய வழக்கங்களை விடாமல் கடைப்பிடித்து அதன் புனிதத்தைக் காப்பாற்றினார்கள். தர்மத்தின் வழியில் அவர்கள் சென்றால் தான் தர்மம் நிலைக்கும் என்றும் தர்ம சாம்ராஜ்யம் ஏற்படும் என்றும் திரும்பத் திரும்ப அவர்கள் மனதில் படும்படி வேத வியாசர் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார். அதோடு இல்லாமல் ஸ்ரோத்திரியர்கள் தங்கள் தவ வாழ்க்கையிலிருந்து சற்றும் பிறழாமல் வாழ வேண்டும் என்றும் அப்போது தான் அவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்புக் கிடைக்கும் என்றும் மக்கள் அவர்களை நம்பி மதித்துப் போற்றத் தொடங்குவார்கள் என்றும் புரிய வைத்தார். திரும்பத் திரும்ப காயத்ரி மந்திரத்தை ஓதுவதன் மூலம் கடுமையான சுயக்கட்டுப்பாடுகள் அவர்களுக்குள் ஏற்படும் என்று சொல்லிச் செய்ய வைத்தார்.

ஒரு வழியாக ராஜசூய யாகமும் முடிவுக்கு வந்தது. புனிதமான அக்னியை முறைப்படி அணைத்தார்கள். தந்தவக்கிரனோடு செல்லாமல் யாகம் முடியும் வரை அங்கேயே தங்கி இருந்த மற்ற அரசர்கள் அனைவரும் விடைபெறும் முகமாக யுதிஷ்டிரனை வந்து சந்தித்து வணங்கி நின்றார்கள். இந்த யாகத்தை முடித்ததன் மூலம் யுதிஷ்டிரன் ஒரு சக்கரவர்த்தியாக அங்கீகரிக்கப்பட்டான். அவனும் தன் பங்குக்கு அந்த அரசர்களுக்கு விலைமதிக்க முடியாப் பல பரிசுகளை அளித்து கௌரவித்தான். அவர்களைத் தன் நாட்டின் எல்லை வரை சென்று மரியாதை கொடுத்து அனுப்பி வைக்கும்படி தன் தம்பிகளை அனுப்பி வைத்தான். வசுதேவரும் பலராமனும் தங்களுடன் வந்த யாதவ மஹாரதிகளுடன் அங்கிருந்து கிளம்பினார்கள். கிருஷ்ணன், உத்தவன், சாத்யகி ஆகியோர் சில நாட்கள் அங்கே இந்திரப் பிரஸ்தத்தில் தங்கிச் செல்வதாகத் திட்டம். தாத்தா பீஷ்மரும் ஹஸ்தினாபுரத்திலிருந்து வந்திருந்த மற்ற விருந்தாளிகளும் கூட அங்கேயே தங்கி அந்த மாளிகை மற்றும் சபாமண்டபத்தின் சித்திர, விசித்திரங்களைப் பார்த்துக் களிக்க நினைத்துத் தங்கி விட்டார்கள். மயன் கட்டிக் கொடுத்திருந்த அந்த மாளிகையும் அதன் சபா மண்டபமும் போல் இந்தப் பாரில் எங்கும் காணமுடியாது என்னும் வண்ணம் அதி அற்புதமாக அமைந்திருந்தது.

துரியோதனன் விடைபெறுகையில் தன்னுடைய வழக்கமான விசித்திரப் புன்னகையுடன் விடைபெற்றான். ஆகவே துரியோதனன் விடைபெறுகையில் யுதிஷ்டிரன் தன்னுடைய கௌரவ சகோதரர்கள் இனி தங்கள் ஐவருடனும் நட்புடனும், பாசத்துடனும் பழகுவார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால் நடந்ததே வேறு! அந்த விசித்திரமான சபையில் பீமனுடனும், திரௌபதியுடனும் துரியோதனன் நடந்து கொண்டு சுற்றிப் பார்த்து வருகையில் ஓர் இடத்தில் துரியோதனன் சமதரை என்று நினைத்துக் கால் வைக்க அது ஓர் குளமாக இருந்தது. முழுக்க முழுக்க உடையெல்லாம் நனைந்து விட்டது. இன்னொரு இடத்தில் குளம் என நினைத்து உடைகளை அதி கவனமாக மேலே தூக்கிக் கொண்டு நடந்தால் அது சமதரையாகக் காட்சி அளிக்கிறது. இப்படித் தான் துரியோதனன் ஓர் சுவரில் போய் முட்டிக் கொண்டு விட்டான். அங்கே ஓர் வாசல் இருப்பது போல் தோற்றமளிக்க அவ்வழியாக வெளியேற வேண்டும் என்று நினைத்துச் சென்ற துரியோதனன் சுவரில் முட்டிக் கொண்டான். அதைக் கண்ட பீமனுக்கும் திரௌபதிக்கும் அடக்கமுடியாமல் சிரிப்பு வர இருவரும் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டனர். துரியோதனன் மனதில் மிகவும் ஆழமான வருத்தம் ஏற்பட்டது. அவன் குரோதம் அதிகம் ஆனது. அதிலும் திரௌபதிக்கு முன்னால் தான் அவமானப்பட்டதை நினைத்து நினைத்து வருந்தினான்.

இது இவ்வாறிருக்க கடோத்கஜன் விடைபெற்றுச் சென்றதும் ஓர் குறிப்பிடத் தக்க சம்பவம் ஆகிவிட்டது. அவன் எப்போதுமே உற்சாகம் குறையாமல் இருப்பான். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு விடுவான். அனைவரையும் குறித்துத் தவறாக நினைக்கும் சுபாவமே இல்லை. அந்த அரச குடும்பத்திற்கே மிகவும் பிடித்தமானவனாக அருமையானவனாக ஆகி விட்டான். எல்லோருக்குமே அவனைப்பிரிவதில் வருத்தம் ஏற்பட்டது. இந்திரப் பிரஸ்தத்தின் வாழ் மக்களில் சிலரும் கடோத்கஜனுடன் பழகியதில் அவனை மிகவும் விரும்பத் தொடங்கி விட்டனர். அவன் ராக்ஷஸர்கள் வாழும் அவனுடைய ராஜ்யப் பகுதிக்குச் செல்வதற்கு ஏகப்பட்ட தடங்கல்கள், இடையூறுகள்! எப்படிச் செல்வது என்னும் கலக்கம். ஏனெனில் படகில் செல்ல வேண்டிய இடங்களுக்குப் படகுக்காரர்கள் ராக்ஷசர்களை ஏற்றிச் செல்ல மறுத்தார்கள். கடோத்கஜனோடு சேர்த்துப் பனிரண்டு ராக்ஷசர்கள் வந்திருந்தார்கள்.  ஒருவரையும் ஏற்றிச் செல்லவில்லை படகோட்டிகள்.

பார்த்தான் கடோத்கஜன்! “நான் ஏன் படகில் போக வேண்டும்?” என்றவன் தன் நண்பர்களைப் பார்த்து, “நாம் நீர்வழிப் பயணம் செய்ய வேண்டாம்! அது புனிதமானதல்ல!” என்று சர்வ நிச்சயமாகச் சொல்லி விட்டான். அதில் அவன் உறுதியாகவும் இருந்தான். “நாம் காட்டு வழியிலேயே செல்லலாம்; ஆனால் நான் அதோ அந்தச் சிற்றப்பாவைக் கடத்தி வரப் போகிறேன்.” என்ற வண்ணம் சஹாதேவனைச் சுட்டிக் காட்டினான். பின்னர் குறும்புடன் சிரித்த வண்ணம் அனைவரையும் பார்த்து, “அவரைத் திரும்ப அழைத்துச் செல்ல நீங்கள் எல்லோரும் வந்து தானே ஆக வேண்டும்!” என்றான். கடோத்கஜன் சஹாதேவனுடன் சில மாதங்களைக் கழித்திருந்தான். சஹாதேவன் தென்னாட்டுப் பக்கம் திக்விஜயம் சென்ற போது கடோத்கஜனும் அவனுடன் சென்றிருந்தான். அப்போது பழகியதால் அவனுக்கு சஹாதேவன் மேல் பிடிப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே சஹாதேவன் கடோத்கஜனுக்கே உரியவன் என்னும் எண்ணம் அவன் மனதில் பதிந்திருந்தது.

ஆனால் ஏற்கெனவே சஹாதேவனுடன் சில வில்லாளிகளும் சேர்ந்து கடோத்கஜன் காட்டு வழியில் செல்லும்போது துணைக்குச் செல்ல வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் காட்டு வழியைத் தாண்டினதும் கடோத்கஜன் அவனுடைய ராக்ஷச நாட்டுக்குள் புகுந்துவிடலாம். ஆகவே அதுவரை அவனுக்குத் துணை போவதற்கு சஹாதேவன் தயாராக இருந்தான். தன் தந்தையைப் பிரியும்போது கடோத்கஜனின் கண்கள் குறும்பிலும் சந்தோஷத்திலும் பிரகாசித்தன. தன் தந்தையை ஓர் குழந்தையைத் தடவிக் கொடுப்பதைப் போல் மென்மையாகத் தடவிக் கொடுத்தான். இம்மாதிரியான ஓர் அன்பை இது வரை குந்தி தான் பீமனிடம் காட்டி இருக்கிறாள். தாய் என்னும் முறையில் மென்மையாகத் தடவிக் கொடுப்பாள். வேறு எவரும் இப்படிச் செய்ததில்லை. இன்று கடோத்கஜன் அவ்வாறு செய்தான். பின்னர் அவன், “தந்தையே, உங்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. நீங்கள் என்னுடன் ராக்ஷசவர்த்தம் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். அம்மாவும் அதையே சொல்லி அனுப்பினாள். இப்போது நீங்கள் மிகவும் சந்தோஷத்துடன் ராக்ஷசவர்த்தம் வர விரும்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறாள்.” என்றான்.

“என் குழந்தாய்! நான் எப்படி வருவேன்? கொஞ்சம் யோசித்துப்பார்! இங்கே எத்தனை பேர்களை நான் கவனிக்க வேண்டி இருக்கிறது என்பதைப் பார்த்தாய் அல்லவா?” என்றான். “ஆம்,” என்று ஒத்துக் கொண்டான் கடோத்கஜன். தொடர்ந்து, “நீங்கள் என்னுடன் வருவதைத் தான் விரும்புவீர்கள்! எனக்கு நன்கு தெரியும். ஆனால் இந்தப் பெரியப்பாவும் சிற்றப்பாக்களும் அதை விரும்ப மாட்டார்கள். அவர்களால் நீங்கள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நீங்கள் அவர்களுடன் தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் ஒரு விஷயம் தந்தையே! நான் அம்மாவிடம் புகார் செய்யப் போகிறேன். ஏன் தெரியுமா? உங்கள் எதிரிகளை நான் அழிக்க நீங்கள் அனுமதி கொடுக்கவே இல்லையே! அதற்காக!” என்றான். பீமன் சிரித்தவண்ணம் விளையாட்டாக மகன் முதுகில் தட்டிக் கொடுத்தான். அவனுக்கும் கடோத்கஜனை மிகவும் பிடித்திருந்தது. என்ன இருந்தாலும் முதல் மகன் ஆயிற்றே! “உன் அம்மாவிடம் சொல்லு! நீ என் பேச்சுக்குக் கட்டுப்பட்டு எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தாய் என்பதைச் சொல்! அவளுக்கு சந்தோஷமாக இருக்கும்!” என்றான் பீமன்.

கடோத்கஜனுக்கோத் தன் தந்தைக்குத் தான் செய்யாமல் விட்ட உதவியின் மேலேயே கண் இருந்தது. தந்தையின் எதிரிகளைக் கண்டு பிடித்து அவர்களைத் தான் கொல்லவில்லையே என்று நினைத்தான். “ஹூம்! எவ்வளவு நேரம் வீணாகப்போனது! நீங்களும் தான் எவ்வளவு சப்தம் போட்டீர்கள்! அதிலும் உங்கள் எதிரி உங்களைத் தாக்கத் தயாராக இருக்கையில்! உங்களைக் கொல்ல முயற்சித்த போது! எனக்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தால், அவனைச் சுத்தமாக முடித்திருப்பேன். அவன் மேல் குதித்து அவனைக் கீழே தரையில் தள்ளி, அவன் கழுத்தை நெரித்து, என் நகங்களால் அவன் இருதயத்தைக் கிழித்து வெளியே எடுத்து”… என்று செய்து காட்டினான்.


Wednesday, November 9, 2016

சிசுபாலன் வதம்!

இப்போது சிசுபாலனின் பிறப்பைக் குறித்துக் கொஞ்சம் பார்த்துவிடுவோம். முன்ஷிஜி இது குறித்துச் சொல்லவில்லை என்றாலும் மஹாபாரதத்தில் இது குறித்து வருகிறது. சேதி நாட்டு அரசன் வசுதேவரின் இன்னொரு சகோதரியைத் திருமணம் செய்து கொள்கிறார். வசுதேவரின் ஒரு சகோதரி ப்ரீத்தா என்ற குந்தி, ஹஸ்தினாபுரத்தின் பாண்டுவைத் திருமணம் செய்து கொண்டாள். குந்தி சிறு வயதிலேயே குந்திபோஜனால் வளர்க்கப் பட்டதால் குந்தி என அழைக்கப்பட்டாள். சிசுபாலனின் தாய் பெயர் ஸுஸ்ரவதா ஆகும். இவளுக்கும் சேதி மன்னனுக்கும் காலக் கிரமத்தில் ஓர் பிள்ளைக் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை மற்றக் குழந்தைகளைப் போல் இல்லாமல் மூன்றவது கண்ணோடும், இரண்டு அதிகப்படியான கரங்களோடும் பிறந்தான். இதோடு அல்லாமல் அவன் குழந்தைகளைப் போல் அழாமல் கழுதை போன்ற குரலில் கத்தினான். இதைக் கேட்ட மன்னனும், ராணியும் குழந்தையை எங்காவது கொண்டு விட்டு விட முடிவு செய்தனர். ஆனால் அப்போது ஓர் அசரீரி கேட்டது.

அந்த அசரீரி சேதி நாட்டு மன்னனிடம், “ஓ, மன்னா! உன் பிள்ளையை நீ கைவிட வேண்டாம். நீயே வளர்த்து வா. அவன் வீரனாக இருப்பான். வலுவானவனாகவும் இருப்பான். கவலை வேண்டாம். அவனுக்கு இறப்பு இப்போது இல்லை. அவன் இறப்பு எப்போது என்பது ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அவன் யாரால் மரணம் அடையப் போகிறானோ அந்த மனிதனும் ஏற்கெனவே பிறந்து விட்டான்! “ என்றது. அதைக் கேட்ட சிசுபாலனின் தாய் அந்தக் குரல் வந்த திக்கை நோக்கி வணங்கிக் கைகளைக் கூப்பிய வண்ணம், “ஏ, அசரீரியே, நான் உன்னை வணங்குகிறேன். என் மகனைக் கொல்லப் போகிறவன் யார்? அவன் தெய்விகத் தன்மை வாய்ந்தவனா? அல்லது வேறு ஏதேனும் உயிர்வகையைச் சேர்ந்தவனா? அவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.” என்றாள். அதற்கு அந்த அசரீரி, “நீ குழந்தையைப் பார்க்க வருகிறவர்களின் மடியில் இந்தக் குழந்தையை வை. யார் மடியில் இவன் இருக்கையில் அதிகப்படியான மூன்றாவது கண்ணும், இரண்டு கரங்களும் மறைகின்றனவோ அவன் தான் இவனைக் கொல்லப் போகிறான்.” என்று அடையாளம் காட்டியது.

துவாரகையில் இருந்த பலராமனும் கிருஷ்ணனும் தங்கள் இன்னொரு அத்தைக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தியும் அந்தக் குழந்தை விசித்திரமாக மூன்று கண்களோடும், நான்கு கரங்களோடும் இருப்பதையும், குழந்தையை மடியில் வைத்துக் கொள்ளும்போது யாருடைய மடியில் குழந்தை இருக்கையில் அதிகப்படியான உறுப்புகள் மறைகின்றனவோ அவன் தான் குழந்தையைக் கொல்வான் என்று அசரீரி சொன்னதையும் கேள்விப் பட்டனர். தங்கள் அத்தையைக் காணச் சேதி நாட்டுக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்று உபசரித்த சுஸ்ரவதா முதலில் பலராமன் மடியில் குழந்தையை வைத்தாள். ஏதும் நடக்கவில்லை. பின்னர் சந்தோஷத்துடன் கிருஷ்ண வாசுதேவனின் மடியில் குழந்தையை வைக்க அதிகப்படியான கைகளும், கண்ணும் மறைந்தன. அதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள் சிசுபாலனின் தாய். பின்னர் துயரம் தாங்க முடியாமல் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவக் கிருஷ்ணா, இந்த அத்தைக்கு நீ ஓர் வரம் கொடுக்க வேண்டும். உன்னால் முடியாதது இல்லை. என்னைப் போன்ற துன்பப்பட்டவர்களுக்கு நீ செய்யும் உதவியை நான் நன்கறிவேன். ஆகவே எனக்கு ஓர் உதவி செய்!” என்று கேட்டுக் கொண்டாள். கிருஷ்ணனும் சம்மதிக்க, அவள், “கிருஷ்ணா, சிசுபாலன் என்ன குற்றம் செய்தாலும் நீ எனக்காகப் பொறுத்துக் கொண்டு அவனை மன்னித்துவிடு! இந்த வரத்தைத் தான் நான் கேட்கிறேன்.” என்றாள். அதற்குக் கிருஷ்ணனும், “அத்தை, சிசுபாலனின் நூறு குற்றங்கள் வரை நான் பொறுத்துக் கொள்வேன். நூற்றுக்கும் மேல் அவன் குற்றம் செய்தான் எனில் என்னால் பொறுக்க முடியாது. அவனை அழித்துவிடுவேன்.” என்றான். இத்தகைய பின்னணியில் தான் இப்போது கிருஷ்ணனுக்கும் சிசுபாலனுக்கும் யுதிஷ்டிரனின் சபையில் வாதம் நடக்கிறது.
சிசுபாலன் பீஷ்மர் சொன்னதைக் கேட்டுச் சிரித்தான். “வாசுதேவன்! மனிதர்களுள் சிறந்தவனா? யார் சொன்னது? ஏ, கிழவா? நீ சொல்கிறாயா? உனக்கு வயதாகி விட்டது! அதனால் மனமும் உடலும் தளர்ச்சியுற்று விட்டது. ஓர் அரசவைக் கவிஞன் தன் மன்னனைப் புகழ்ந்து பாடுவது போல் நீயும் வாசுதேவக் கிருஷ்ணனைப் புகழ்கிறாய். அப்படி உனக்குச் செய்ய வேண்டுமெனில் இதோ இங்கே வருகை புரிந்திருக்கும் எத்தனையோ மன்னர்களையும் பேரரசர்களையும் பற்றிப் பாடலாமே! இவர்கள் எதில் குறைந்து விட்டார்கள்? இதோ இந்த துருபதன், பாஞ்சால அரசன்! அதோ அந்தக் கர்ணன், அங்க நாட்டு அரசன், மிகச் சிறந்த வில்லாளி அவன் நண்பனும் உன் பேரனுமான ஹஸ்தினாபுரத்து மன்னன் துரியோதனன்! இவர்கள் அனைவரும் எதில் குறைந்து விட்டனர்? துரியோதனனை விடவா இந்தக் கிருஷ்ணன் வீரத்தில் சிறந்துவிட்டான்?”

“சிசுபாலா! நீ இப்போது கோபத்தில் இருக்கிறாய்! மனிதர்களின் முதல் எதிரியே இந்த ஆத்திரமும், கோபமும் தான்! ஆத்திரம் உன் கண்களை மறைக்கிறது. கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்து அவனைக் கௌரவப் படுத்தியதன் மூலம் எங்களுக்குத் தனிப்பட்ட லாபம் ஏதும் கிடைத்துவிடவில்லை. அதோடு யாருடைய தயவிலும் நான் வாழவும் இல்லை; வாழ விரும்பவும் இல்லை! மேலும் நீ உத்தரவு போடுவதால் நான் என்னுடைய நேர்மையான வழியிலிருந்து சிறிதும் தவறவோ விலகவோ மாட்டேன். நான் நேரான வழியில் தான் செல்கிறேன். நீ எவ்வளவு வலிமையும், அதிகாரமும் பொருந்தி இருந்தாலும் உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது!” என்றார் பீஷ்மர்.

அப்போது சிசுபாலனின் அருகே நின்றிருந்த சுனித் என்னும் ஓர் அரசன், “ஏ, கிழவா, கங்கையின் மைந்தனே! நீ பாவம் நிரம்பியவன். உன்னிடம் பாவம் மட்டுமே இருக்கிறது. சிசுபாலன் சொன்னதைப் போல் நீ கொல்லப்பட வேண்டியவனே! உன்னைக் கொன்றே ஆகவேண்டும்!” என்றான் பற்களைக் கடித்த வண்ணம்!

“இளம் அரசனே, உன் வயதை விட என் அனுபவம் அதிகம்! உன்னுடைய பயமுறுத்தல்களுக்கு அடி பணிந்து கொண்டு உயிரோடு இருப்பதைக் காட்டிலும் நானும் இறப்பதையே விரும்புகிறேன். விரும்புவேன்.” என்ற வண்ணம் எழுந்து நின்ற பீஷ்மரின் உயரம் பிரமிக்கும்படியாக இருந்தது. “நான் உண்மை தான் பேசுகிறேன்; பேசுவேன். நேர்மையான பாதையில் சத்தியத்தின் வழியில் நடக்கிறேன்;நடப்பேன். நான் சொல்வது இது தான்! அது என்னவெனில்: வாசுதேவக் கிருஷ்ணன் நம் அனைவரையும் விட அனைத்திலும் சிறந்தவன்; மிகச் சிறந்தவன். வீரம், துணிவு, வல்லமையில் மிகச் சிறந்தவன். கற்பதில் சிறந்தவன்; அபார ஞானம் பெற்றவன்! தர்மத்திற்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன்.” என்றார் பீஷ்மர்.

“ஆஹா, இந்தக் கோழை இடையனுடன் நான் தனியாக வைத்துக் கொள்கிறேன். அதற்கு உரிய நேரம் வந்தாலும் இப்போது முன் செய்ய வேண்டியது, ஏ, கிழவா, உன்னைக் கொல்ல வேண்டியது தான்! அதன் பின்னர் உன் அருமைப் பேரன்மார் ஐவரையும் கொல்ல வேண்டும். அவர்கள் தானே சூழ்ச்சிகள் பல செய்து இந்த மாயவலையில் என்னைச் சிக்க வைத்திருக்கிறார்கள். ஆகையால் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! அதிலும் இந்த இடையனை நம் அனைவரிலும் சிறந்தவன் என்று சொல்லி அவனுக்கு முதல் மரியாதை செய்ததை ஏற்க வைத்தார்களே, அதை என்னால் ஒருநாளும் மன்னிக்க முடியாது!” அவ்வளவில் தன் இடையிலிருந்து வாளை உருவினான் சிசுபாலன். அவனுடைய நண்பர்களும் அப்படியே செய்தனர். அனைவரும் உருவிய வாளோடு பீஷ்மர் மேல் பாயத் தயார் ஆனார்கள். பீஷ்மரிடமோ, சகோதரர்கள் ஐவரிடமுமோ அல்லது கிருஷ்ணனிடமோ ஆயுதங்கள் ஏதும் கைவசம் இல்லை. அவர்கள் அனைவரும் சம்பிரதாயமான சடங்குகளில் பங்கேற்க வேண்டி இருந்ததால் ஆயுதங்களைக் கைவசமும் வைத்துக் கொள்ளவில்லை. ஆயுதங்களைத் தரிக்கவும் இல்லை!
அங்கிருந்த எவர் கவனத்தையும் சிதறடிக்காமல், ஒருவர் கவனத்தையும் கவராமல் மெல்ல மெல்ல சிசுபாலனுக்கு நேர் எதிரே கிருஷ்ணன் போய் நின்றான். மெல்லப் பேச ஆரம்பித்தான். அவன் குரல் மென்மையாகவும் மிருதுவாகவும் அதே சமயம் கண்டிப்பு நிறைந்தும் காணப்பட்டது. “சிசுபாலா! சேதி நாட்டு மன்னா! உனக்கு மாட்சிமை பொருந்திய பிதாமகர் பீஷ்மரிடமோ அல்லது பாண்டவ சகோதரர்களிடமோ எத்தகைய முன் விரோதமும் இல்லை என்பதை நான் நன்கறிவேன். உனக்கு விரோதம் என்னுடன் தான். என்னுடன் மட்டுமே! நீ என் சகோதரன். அத்தை வழி சகோதரன். ஆனாலும்!!.....நீ எங்களைத் துரத்தினாய்! என்னை மட்டுமல்ல! எங்கள் யாதவ குலத்தையே துரத்தினாய்! எங்களை விஷம் போல் வெறுத்தாய்! நாங்கள் ப்ரக்ஜ்யோதிஷம் சென்றிருந்தபோது துவாரகையை எரித்தாய். என் தந்தை அஸ்வமேத யாகம் செய்ய யத்தனிக்கையில் யாகக் குதிரையைக் கவர்ந்து சென்றாய்!”

கடகடவெனச் சிரித்தான் சிசுபாலன். “ஆம் யாகக் குதிரையைக் கவர்ந்து சென்றேன். அதற்கு இப்போது என்ன வந்தது? துவாரகையையும் நான் தான் எரித்தேன்! அதற்கென்ன இப்போது?” என்று சிரித்தான் மீண்டும். “ஹூம், இந்தத் தீமைகளை நீ தான் செய்தாய் என்று நன்கறிந்தும் நான் உன்னை இத்தனை நாட்கள் சும்மா விட்டு விட்டேன். எப்போதோ தண்டித்திருக்க வேண்டும். அதை நான் செய்தும் இருப்பேன். ஆனால் உன் அன்னைக்கு, என் அத்தை மாட்சிமை பொருந்திய மஹாராணி சுஸ்ரவதாவுக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். உன்னுடைய நூறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தேன். ஆனால் இனியும் இல்லை! நீ உன்னுடைய எல்லையைத் தாண்டி விட்டாய். எல்லை மீறிச் சென்று விட்டாய்!”

அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்ந்து போகும் வண்ணம் கிருஷ்ணன் முற்றிலும் மாறினான். கிருஷ்ணனின் சுயரூபமே முற்றிலும் மாறிவிட்டது. ஆரம்பத்தில் தயையுடனும் கருணையுடனும் பேசிய குரல் இப்போது கடுமையாக மாறி விட்டது. அவன் முகம் சொல்லவொண்ணாப் பிரகாசத்துடன் காணப்பட்டதோடு அல்லாமல் முகத்தைச் சுற்றிலும் ஓர் ஒளிவட்டம் தெரிந்தது. கம்பீரமும், தெய்விகமும் அந்த முகத்தில் இயல்பாகக்குடி இருந்தது. இந்த நேர்த்தியான அழகான மனிதனில் எவரோ புகுந்து விட்டது போல் தெய்விகம் புகுந்திருந்தது அவனிடம். அவன் இப்போது கடவுளாகவே மாறிவிட்டான். ஒவ்வொரு மனிதர்களின் ஒவ்வொரு செயலையும் அவனே நிறைவேற்றி வைக்கிறான் என்பதை யாரும் விளக்காமலேயே அனைவரும் புரிந்து கொண்டனர். ஆனாலும் சிசுபாலன் இது எதையும் குறித்துக் கவலை கொள்ளாமல், “நான் உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறேன், மாட்டிடையா! பொறு!” என்ற வண்ணம் தன் வாளை உருவினான். வீசினான். அவன் நண்பர்களும் அப்படியே கிருஷ்ணனைக் கொல்வதற்கென வாளை உருவிய வண்ணம் பாய்ந்தனர். பீமன் கிருஷ்ணனைக் காப்பதற்கென ஓர் அடி முன்னெடுத்து வைத்தான். ஆனால் கிருஷ்ணன் தன் ஒரே சைகையால் அவனை விலகி இருக்கச் செய்தான்.

“சிசுபாலா!” என்று அழைத்த இந்தக் குரல் கிருஷ்ணனின் குரலா? இல்லை, இல்லை. அவன் வாயிலிருந்து தான் வந்தன. ஆனாலும் இந்தக் குரல் இப்போது ஓர் தவிர்க்கவே முடியாத அதிகாரம் படைத்த குரலாகவன்றோ காண்கிறது! “நீ இப்போது பாண்டவசகோதரர்களின் விருந்து உபசாரங்களை மட்டும் அவமதிக்கவில்லை. அவர்களின் மொத்த விருந்தினர்களையும் சேர்த்தே அவமதித்திருக்கிறாய்! அதோடு இல்லை. மாட்சிமை பொருந்திய பிதாமஹர் பீஷ்மரை அவமதித்திருக்கிறாய்! அவமானம் செய்திருக்கிறாய்! அனைத்து ஆரியர்களாலும் மதித்துப் போற்றி வணங்கும் ஒருவரை அவமானம் செய்து விட்டாய்! இந்தப் புனிதமான யாகம் நடைபெறும் இடத்தைக் கொடூரமான செயல்கள் செய்யும் இடமாக ஒரு போர்க்களமாக மாற்றி விட்டாய்!” என்று கிருஷ்ணன் கடுமையான குரலில் சொன்னான். அனைவரும் கிருஷ்ணன் மேல் வைத்த கண்களை எடுக்கவே இல்லை.

கிருஷ்ணன் தொடர்ந்தான். “ஒரு காலத்தில் நான் விதர்ப்ப நாட்டு ராஜகுமாரி ருக்மிணியை உன் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டி வந்தது. அதே போல் இப்போது நான் தர்மத்தை உன்னிடமிருந்து காப்பாற்றப் போகிறேன். அதர்மமான உன் செயல்களுக்கு முடிவு கட்டப் போகிறேன்.” சிசுபாலன் ஓர் சிரிப்பை உதிர்த்தான். “வெட்கம் கெட்ட மாட்டிடையா! உன்னால் என்ன செய்ய முடியும்? ஹூம் எனக்கென நிச்சயிக்கப்பட்டிருந்த இளவரசியை நீ தூக்கிக் கொண்டு ஓட்டம் காட்டினாய்! உனக்கு அதை நினைத்தால் வெட்கமாக இல்லையா? இன்னொருவனின் மணப்பெண்ணை நீ அபகரித்தாய்!” என்றான். தன் வாளை உயர்த்தியவண்ணம் சிசுபாலன் ஓரடி எடுத்து வைத்தான். கிருஷ்ணனிடம் ஆயுதங்களே இல்லையே என அனைவரும் பதை பதைத்தனர். கிருஷ்ணனின் எதிரிகளோ சந்தோஷம் அடைந்தனர். சஹாதேவனிடமிருந்த வாளை பீமன் உருவிக் கொண்டான். அப்போது அனைவரும் அதிசயிக்கும் ஓர் விஷயம் நடந்தது.

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! என்று ஒரு சப்தம் கேட்டது. அனைவர் கண்களும், காதுகளும் அந்தச் சப்தம் கேட்ட திசையை நோக்கின. ஒளி வீசிப் பிரகாசித்த வட்டமான ஓர் தட்டுப் போன்றது ஆனால் வட்டவடிவ முனைகளில் கூராகச் செதுக்கப்பட்டிருந்தது அனைவர் கண்களுக்கும் தெரிந்தது. அங்கே இருந்த சூரிய ஒளி பட்டு அது பளபளவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பதே தெரியாமல் அது விர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனச் சப்தம் போட்டுக் கொண்டும் பறந்தும் வந்தது. நேரே கிருஷ்ணனின் தலைக்கு மேலே சுற்ற ஆரம்பித்தது.  கிருஷ்ணன் பாய்ந்து அதைத் தன் கரங்களால் பிடித்தான்.  கிருஷ்ணனின் வலக்கரத்தில் அது இப்போது இருந்தது. யாரும் என்ன நடக்கிறது என்பதை ஊகித்து உணரும் முன்னர் கிருஷ்ணன் அதை சிசுபாலன் மீது ஏவி விட்டான். அந்த ஆயுதம் இப்போது சிசுபாலனும் அவன் நண்பர்களும் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாகப் பறந்தது. பயந்து போன சிசுபாலன் கொஞ்சம் நகர்ந்து கொண்டு தன் கைகளிலிருந்த வாளைக் கீழே போட்டான். வாள் கீழே விழுந்து சப்தம் எழுப்பியது. அந்தச் சக்கரம் வேகமாக வந்து சிசுபாலனின் தலையை மட்டும் அறுத்துக் கீழே தள்ளிவிட்டுப் பின்னர் மீண்டும் கிருஷ்ணனின் கைகளுக்குச் சென்று விட்டது. சிசுபாலன் தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கமாகக் கீழே விழுந்தான்.