Friday, September 14, 2012

சத்யவதியின் மனோதிடம்!


ஷாந்தனு சோகத்துடன் இருக்க அதைக் கவனித்த தேவ விரதன் தந்தையிடம் காரணம் கேட்கிறார்.  முதலில் மறுத்த ஷாந்தனு பின்னர் தன் ஆசையையும், அதற்கு நிபந்தனை விதித்த சத்யவதியின் தகப்பனின் கருத்தையும் கூறினான்.  இதைக் கேட்ட தேவ விரதன் தன் தகப்பனின் சந்தோஷமே தன் சந்தோஷம் எனக் கூறித் தான் அரியணை ஏறப்போவதில்லை என்கிறான்.  ஆனால் ஷாந்தனுவோ மகனிடம், “மகனே, நீ அரியணை ஏறவில்லை எனினும் உனக்குப் பிறக்கப்போகும் உன் குமாரர்கள் அவ்விதம் இருப்பார்களா?” என சந்தேகத்துடன் கேட்க, தேவவிரதன், தான் திருமணமே செய்து கொள்ளாமல் கடும் பிரமசரியம் அநுஷ்டிக்கப் போவதாய்க் கடும் சபதம் செய்கிறார்.  இத்தகைய கடும் சபதத்தைக் கேட்ட  வானவர்களும், ரிஷி, முனிவர்களும் தேவ விரதனை வாழ்த்தி, “பீஷ்ம”  “பீஷ்ம” என அழைக்க, அன்று முதல் தேவ விரதனின் பெயர் “பீஷ்மர்” என்று மாறிற்று.  அவரும் அன்று முதல் ஹஸ்தினாபுரத்தின் மேன்மை ஒன்றையே தம் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்கிறார்.  இதன் மூலம் அவருக்கு அவர் விரும்பும்போது உயிரை விடலாம் என்னும் மாபெரும் வரமும் கிடைக்கிறது.  ஆகவே ஷாந்தனு சத்யவதியை மணந்து குழந்தைகள் பெற்ற பின்னர் அந்தக் குழந்தைகளில் ஒருவர் விரைவில் இறக்க, மற்றொருவனுக்குப் பட்டம் கட்டி, அவனும் வாரிசின்றி இறக்கப் பின்னர் அவன் மனைவியருக்கு வேத வியாசர் மூலம் பிறந்த குழந்தைகள் தான் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரர்.  இப்போது அவர்களின் குழந்தைகளாலேயே ஹஸ்தினாபுரத்தில் பல்வேறு பிரச்னைகள்.


சத்யவதி மீனவப் பெண்ணாக இருந்தாலும், அனைத்தையும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் எதிர்கொண்டாள்.  ஷாந்தனுவுடன் ஆன தாம்பத்தியத்தில் பிறந்த பிள்ளைகளில் சித்திராங்கதன்  இளவயதில் இறந்தபோதும், அதன் பின்னர் வாரிசில்லாமல் விசித்திர வீரியன் இறந்தபோதும் அவள் தைரியத்தை விட வில்லை.  பீஷ்மரைத் தன் சபதத்தை விடச் சொல்லிக் கெஞ்சினாள்.  ஆனால் அவரோ திட்டமாக மறுத்திவிட்டார். அதன் பின்னர் வியாசர் மூலமாகப் பிறந்த குழந்தைகளில் திருதராஷ்டிரன் பிறவிக்குருடாகப் பிறந்த போதும், பாண்டுவுக்கு ஏற்பட்ட சாபமும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட மரணமும் அவள் திட நெஞ்சத்தைக் கலங்கவே அடித்தது.  எனினும் பீஷ்மரின் உதவியோடு அனைத்தையும் தாங்கிக் கொண்டாள்.  பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் கடவுள் அவர்கள் குரு வம்சத்துக்கு அளித்த ஈடு இணையில்லாப் பரிசு என ஏற்றுக் கொண்டாள். திருதராஷ்டிரனுக்கோ நூறு குழந்தைகள் பிறந்தன.  அனைவரையும் சமாளித்து வளர்க்கும் பொறுப்பும் அரண்மனை வாசிகளுக்கு ஏற்பட்டது.  பாண்டுவின் ஐந்து புத்திரர்களால் குரு வம்சம் மேன்மை பெறப் போகிறது என்ற நம்பிக்கையும் அவள் மனதில் ஏற்பட்டது.  ஆனால்  திருதராஷ்டிரனின் புத்திரர்களோ பாண்டுவின் புத்திரர்களை எதிரிகளாகவே பார்த்தனர்.   அதோடு அவர்கள் பாண்டுவின் புத்திரர்களை நாட்டை விட்டே வெளியேற்றி வாரணாவதத்துக்கு அனுப்பியதோடு இல்லாமல், அங்கே அவர்கள் மாளிகை எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்த முதிர்ந்த வயதில் இத்தனையையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த சத்யவதிக்கு எல்லாம் வல்ல மஹாதேவனைத் தொழுவதை விட வேறு வழி தெரியவில்லை.  எந்நேரமும் வழிபாடு, பூஜை எனக் காலம் கழித்தாள்.  யாரையும் பார்க்கவிரும்பவில்லை.  எப்போதேனும் வரும் பீஷ்மரையும் விதுரரையும் தவிர மற்றவர்கள் அவள் அருகில் செல்லவே அஞ்சினார்கள்.  ராஜரீக விஷயங்களில் நேரிடையாகத் தலையிடாவிட்டாலும் அவளுடைய கண்கள் அனைத்தையும் கவனித்து அவள் மனதுக்குச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தன.   அதோடு பீஷ்மரும், விதுரரும் நியாமாகத் தான் நடந்து கொள்வார்கள் என்பதிலும் அவளுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை.  அவர்கள் செய்வதை அவள் உள்ளூர ஆதரித்தாள்.  முக்கியமான நேரங்களில், முக்கியமான விஷயங்களில் தன் ஆலோசனைகளையும், உதவியையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி வந்தாள்.  மொத்தத்தில் அவளுடைய உயர்வான நடவடிக்கைகளாலும், அரும் குணங்களினாலும் ஹஸ்தினாபுரத்து அரண்மனை வாசிகள் மட்டுமின்றி மக்களும் அவளை வாழும் தெய்வம் எனத் தொழுது வந்தனர்.  அத்தகைய சத்யவதி இப்போது கண்ணனைக் காணத் தயாராகக் காத்திருந்தாள்.

கண்ணன் அவளைக் காண வந்தபோது சத்யவதி, தனக்கென அந்த அரண்மனையில் கட்டப்பட்டிருந்த சங்கர மஹாதேவரின் கோயிலில் அவர் சந்நிதியில் அமர்ந்திருந்தாள்.  இந்த எழுபது வயதிலும், அவளிடம் இன்னமும் இளமையின் மிச்சங்கள் இருந்தன.  இவள் சிறு வயதில் எத்தனை அழகாக இருந்திருப்பாள் எனக் கண்ணனால் ஊகிக்க முடிந்தது.  இந்த எழுபது வயதிலும் அவள் அழகையும், மென்மையான தோலையும் உடல் கட்டுடன் இருந்ததையும் கண்ட கண்ணன் இவளைக் கண்டு ஷாந்தனு மயங்கியதில் வியப்பில்லை என நினைத்தான்.  இத்தனை துக்கத்திலும் ஒளிர்ந்த கண்களையும், நரைத்த தலைமுடி கூட அவளுக்கு ஒரு அழகான கிரீடம் சூட்டியது போன்றிருந்ததையும் கண்டு வியந்தான். கண்ணனைத் தன் பார்வையாலும், புன்னகையாலும் வரவேற்ற அவள் தனக்கருகே இருந்த ஒரு ஆசனத்தில் அவனைச் சைகையாலேயே அமரச் சொன்னாள்.  கண்ணன் அவளை வணங்கிவிட்டு அமரவும், விதுரரையும் உடன் அமரச் சொன்னாள். அவள் காலடியில் விதுரர் அமர்ந்தார்.

Monday, September 10, 2012

பீஷ்மரின் கோபமும், சத்யவதியின் அழைப்பும்


விதுரரிடம் சென்ற அர்ச்சகர்கள் பானுமதியின் நந்தவனத்திலும், அதை ஒட்டிய கெளரி அம்மன் சந்நிதியிலும் தாங்கள் கண்டவற்றைச் சொல்லவே ஆச்சரியமும், திகைப்பும், அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்த விதுரர் தன் நம்பிக்கைக்கு உகந்த நாலைந்து ஆட்களை அழைத்துக் கொண்டு, அங்கே சென்றார்.  சென்றவர் தாம் கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ச்சியோடு அருவருப்பும் அடைந்தார்.  முதலில் பட்டத்து இளவரசனாக முடி சூட்டிக் கொண்ட துரியோதனனை அப்புறப்படுத்த வேண்டும்.  ஆனால் அவன் உடல் வலுவானவன்.  ஆளும் கட்டுமஸ்தாக இரண்டு, மூன்று பேரால் தூக்க முடியாத அளவுக்கு இருக்கிறான்.  மேலும் முந்தைய இரவின் கோலாகலக் கொண்டாட்டங்களின் நினைவோடேயே தூங்கி இருந்த துரியோதனன் இப்போது எழுப்பப் பட்ட போதும் அந்த நினைப்போடயே இருந்தான்.  அதோடு அவனை முழுக்கச் சுயநினைவுக்குக் கொண்டு வரவும் முடியவில்லை.  முந்தைய இரவின் மயக்கத்திலிருந்து அவனை மீட்டு எடுப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும் போல் இருந்தது.  மற்றவர்களை விதுரர் தன் மாளிகைக்கு எடுத்துச் செல்லச் சொல்லி அங்கே அவர்களை அவரே சுயநினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தார்.  துரியோதனன் மிகவும் சிரமத்தோடு அவன் மாளிகைக்கு எடுத்துச் செல்லப் பட்டான்.  அனைத்து இளைஞர்களும், இளம்பெண்களுமே உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்பதால் மெல்ல மெல்லச் செய்தி அனைத்துத் தரப்பினரையும் எட்டியதோடு அது ஒரு கலவரத்தையும் உண்டாக்கும் நிலை தோன்றியது.

பீஷ்மர் காதுகளையும் இந்தச் செய்தி போய் எட்டியது.  கோபத்திலும், ஆத்திரத்திலும் கொதித்துப் போனார் பீஷ்மர்.  தன் வாழ்நாள் முழுதும் பிரமசரியம் காத்து ராஜ்யத்தின் நலனைத் தவிர வேறொன்றை நினையாத அவருக்கு இப்படி எல்லாம் நடந்தது கேட்டதில் இருந்து  இந்த சாம்ராஜ்யத்தின் கதி என்ன என்ற கவலை உண்டானது.  இன்னமும் தனது அதிகாரத்திலேயே இருக்கும் சபையைக் கூட்டி, தன் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.  சபையின் முக்கிய அதிகாரிகள் அந்தக் கட்டளைகளால் திக்கு முக்காடிப் போனார்கள்.  துரியோதனனும், ஒரு மாதத்திற்குக் குருக்ஷேத்திரம் சென்று அங்கே ஆன்மீகச் சிந்தனைகளில் இருந்து தவம் செய்து தங்கள் தண்டனையைக் கழிக்க வேண்டும்.  மற்ற இளைஞர்கள் ஒரு வருடம் பதரிகாசிரமம் செல்ல வேண்டும்.   பானுமதியுடன் காசியிலிருந்து வந்திருந்த அவள்  உறவினர்களான இளவரசிகள் இருவரையும் காசிக்கே திரும்பி அனுப்பச் சொல்லிக் கட்டளையிட்டார்.  மற்ற இளம்பெண்கள் சந்திராயன விரதம் அநுஷ்டிக்க வேண்டும்.  அதுவும் ஒரு வருஷத்துக்குக் குரு வம்சத்தினரின் குருக்களில்  தலைமை வகிப்பவரின் மேற்பார்வையில்  அந்த விரதம் எல்லாவிதமான நியம நிஷ்டைகளோடு கடுமையாக அநுஷ்டிக்கப்படவேண்டும். பானுமதியின் அழகான நந்தவனம் அடியோடு அழிக்கப்பட்டு, அவள் ஏற்படுத்தி இருந்த கெளரி அம்மன் சந்நிதிக்குப் பதிலாக அங்கே கூடவே அவள் கணவன் ஆன சங்கரமஹாதேவனையும் குடி ஏற்றினார்.  அந்த இடமே ஒரு உண்மையான கோயிலாக ஆயிற்று.  கோபுரங்கள் எழுப்ப ஆணை பிறப்பிக்கப் பட்டது.  தன்னுடைய மோசமான விதியை நினைத்து நொந்து அழுது கொண்டிருந்த பானுமதிக்குக் கடுமையான ஜ்வரம் ஏற்பட்டுத் தன் நினைவை இழந்தாள்.

கண்ணன் ஹஸ்தினாபுரத்தை விட்டுக் கிளம்புவதற்கு முதல் நாள் விதுரர் அவனைக் காண வந்தார். வந்தவர், மாதேவியான சத்யவதி கண்ணனைப் பார்க்க விரும்புவதாய்ச் சொன்னார்.  கண்ணனுக்கே ஆச்சரியமாக இருந்தது.  அந்தக் குருவம்சத்தின் மஹாராணியான சத்யவதி இப்போதெல்லாம் தன்னை யாரும் வந்து பார்ப்பதை விரும்புவதில்லை எனவும், அவசியம் நேர்ந்தால் தன் மூத்தாள் மகனான பீஷ்மரையோ அல்லது தன் சொந்த மகனான வியாசரையோ மட்டுமே பார்ப்பாள் எனவும், விதுரருக்கு மட்டும் பிரத்யேக அநுமதி என்றும் கேள்விப் பட்டிருந்தான்.  ஆகவே இது தனக்குக் கிடைத்த மிகப்  பெரிய கெளரவம் என எண்ணினான்.  கூடவே அவளுடைய பூர்வீகமும் நினைவில் வந்தது.

ஒரு மீனவப் பெண்ணான மத்ஸ்யகந்தி (சத்யவதியின் அப்போதைய பெயர்) குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் பிள்ளை இந்த உலகுக்கே குருவாக இருப்பான் எனவும், அவனால் பலவிதமான நன்மைகள் அனைவருக்கும் ஏற்படும் எனவும் சொல்லிக் கொண்டு தன் படகில் ஏறிய பராசரரை அக்கரைக்குக் கொண்டு போக நினைத்துத் துடுப்பு வலித்துக் கொண்டிருந்தாள்.  ஆனால் மேலே விண்ணையே பார்த்துக் கொண்டிருந்த பராசரரோ, அந்தக் குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டதால், சத்யவதியையே அந்தக் குழந்தையைத் தன்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி கேட்டார்.  மத்ஸ்யகந்தி தயங்க, “கவலைப்பட வேண்டாம்;  இதன் மூலம் அவள் எதிர்காலத்துக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாது.” என உறுதியளித்தார் பராசரர்.  அருகே இருந்த ஒரு தீவில் இருவரும் இணைந்தனர்.  ரிஷியின் மூலம் என்பதால் உடனே ஒரு பிள்ளையும் பிறந்தது.  அந்தப் பிள்ளை கறுப்பாக இருந்ததாலும், தீவில் பிறந்ததாலும் க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரை வைத்துப் பராசரர் தன்னுடன் பிள்ளையை அழைத்துச் சென்றார்.  மத்ஸ்யகந்தி பிள்ளையை நினைக்கையில் அவன் வருவான் என்னும் உறுதிமொழியுடன் பிள்ளை அழைத்துச் செல்லப்பட்டு, குருக்ஷேத்திரத்தில் உள்ள பராசரருடைய ஆசிரமத்தில் வளர்க்கப் பட்டு சகல கலைகளும் போதிக்கப்பட்டார்.

வசிஷ்டரின் பாரம்பரியத்தில் வந்த அந்தப் பிள்ளைதான் பின்னால் முனிவர்களுக்குள் சிரேஷ்டமானவன் என அனைவராலும் புகழப்பட்ட வேத வியாசர்.  இதன் பின்னர் தன் கன்னித்தன்மையை மீண்டும் பெற்ற மத்ஸ்யகந்தி ஒரு நாள் கங்கைக்கரையோரம் உலவிக்கொண்டிருந்தாள். அப்போது வேட்டையாடிவிட்டு அங்கே இளைப்பாற வந்த மன்னம் சாந்தனு அவளைக்கண்டதும் அவள் அழகில் மயங்கினான்.  அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவளிடம் காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளச் சம்மதம் கேட்டான்.  ஆனால் அவளோ தன் தகப்பன் சம்மதிக்க வேண்டும் என்று கூற, மன்னன் அந்த மீனவனைப் பார்த்து மத்ஸ்யகந்தியை மணக்கச் சம்மதம் கேட்கிறான்.  மீனவனோ தன் மகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே பட்டம் என்ற உறுதிமொழியைக் கொடுத்தால் உடனே மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாய்ச் சொல்கிறான்.  ஷாந்தனு மனம் வருந்தி அரண்மனைக்குத் திரும்புகிறான்.  ஏனெனில் அவனுக்கு ஏற்கெனவே கங்கையுடன் திருமணம் ஆகி ஏழு பிள்ளைகள் பிறந்து ஏழையும் கங்கைக்குக் கொடுத்து எட்டாவது பிள்ளையை மட்டும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.  அந்தப் பிள்ளையின் பெயர் தேவ விரதன்.  எல்லாக்கலைகளையும் கற்றதோடு அல்லாமல் கங்கையின் வெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டிருந்தான்.  பரிபூர்ண ராஜ அம்சத்தோடு எல்லாவிதமான மக்களின் கருத்தையும் கவர்ந்து மக்களின் பேரபிமானத்துக்குப் பாத்திரமாகி விளங்கினான்.  அவனை விடுத்து வேறொருவனை மன்னன் ஆக்குவதை நாட்டு மக்களே எதிர்ப்பார்கள்.  அதோடு ஷாந்தனுவுக்கும் அது சம்மதம் இல்லை.

Thursday, September 6, 2012

காந்தாரியின் கவலை!


காந்தாரி ஒரு பணிப்பெண்ணை அழைத்து இதற்குள்ளாக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பானுமதியைத் தன் படுக்கையிலேயே தனக்கு அருகே போடச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தாள்.  “வாசுதேவா,  குரு வம்சத்திற்குப் பேருதவி செய்திருக்கிறாய்.  இதை என்னால் மறக்க முடியாது.  யார் கண்டார்கள், இதன் மூலம் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம் பிறக்கலாம்,  மாறுதல்கள் அடையலாம்.  பாவம்!” என்றாள்.  காந்தாரியின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்ட கண்ணன் அங்கிருந்து சென்றான்.  பானுமதி நடந்தவை எதையும் அறியாதவளாக ஒரு குழந்தையைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.  என்னதான் மகன்கள் மேல் அளவுக்கதிகமான பாசம் இருந்தாலும் காந்தாரிக்கு இந்தச் செயல்களின் எதிர்வினைகளை எண்ணிப்பார்க்கவே பயமாக இருந்தது. இவை எல்லாம் எங்கே போய் முடியுமோ எனக் கவலை அடைந்தாள். 

காலையில் பானுமதி எழுந்திருக்கவே இல்லை என்பதைக்கண்ட காந்தாரி, பணிப்பெண்ணிடம் சொல்லிக்குளிர்ந்த நீரை எடுத்து வந்து அவள் முகத்தைத் துடைத்துக்கண்களில் அடிக்கச் செய்தாள்.  இதனால் கண் விழித்த பானுமதி தான் எங்கிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் ஆயின.  அவளுக்குத் தான் தன் மாமியாரின் படுக்கையில் படுத்திருப்பதையும், அருகே அமர்ந்திருக்கும் மாமியாரையும் பார்த்ததும் அதிர்ச்சி தாங்கவில்லை. அதுவும் நேற்றைய மாலை அலங்காரங்களைக்களையாமலேயே அவள் படுத்து உறங்கி இருக்கிறாள்.  அதுவும் மாமியாரின் மாளிகையில் அவர்களின் படுக்கை அறையில் அவர்களின் படுக்கையில்.  இது எங்கனம் நேர்ந்தது? “தாயே, தாயே, இது என்ன?  எனக்கு என்ன ஆயிற்று?  நான் எப்படி இங்கே வந்தேன்?” கேட்டுக்கொண்டே பானுமதி காந்தாரியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.  “குழந்தாய்! அழாதே, உனக்கு எதுவும் ஆகவில்லை.  நல்லவேளையாகக் கிருஷ்ண வாசுதேவன் உன் நிலைமையைக் கவனித்து விட்டு உன்னை இங்கே எப்படியோ கொண்டு வந்து சேர்த்தான்.  இல்லை எனில் குரு வம்சத்தின் பட்டத்து இளவரசியின் நிலைமையால் மொத்த நாடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கும்.  பரத வம்சத்தில் இருந்து ஆரம்பித்துத் தொடரும் இந்த மாபெரும் அரசகுலம் பேரிடியில் மூழ்கிப் போயிருக்கும்.  இறை அருளால் அவ்விதம் நேரவில்லை.”

பானுமதி செய்வதறியாது அழ ஆரம்பித்தாள்.  “தாயே, தாயே, என் தாயே, நான் என்ன செய்வேன்!  என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே!  ஆர்யபுத்ரர், உங்கள் மூத்த குமாரர், என் அருமைக் கணவர், எவ்வகையிலேனும் கிருஷ்ணனை நான் கவர்ந்து என் பக்கம் இழுக்க வேண்டும் என மூர்க்கமாக ஆணை பிறப்பித்திருந்தார்.  அம்மா, நான் அறிவேன், கிருஷ்ண வாசுதேவனுக்கு என்னிடம் ஒரு சகோதரிக்கு உள்ள அன்பே என்று.  ஆனால், …ஆனால்,… தாயே எனக்கிடப்பட்ட கட்டளையை நான் மீற முடியவில்லையே!  என்னால் இயன்றதை நானும் செய்தேன்.  ஆனால் கண்ணனுக்கு என் மேல் உள்ள அன்பின் காரணமே வேறு என்பதை உங்கள் குமாரர் புரிந்து கொள்ளவில்லையே!  வலுக்கட்டாயமாக மது புகட்டப் பட்டேன்.  அதன் பின்…..அதன் பின்…..அம்மா, ஐயோ, நான் இனி எப்படி அனைவரையும் பார்ப்பேன்!”  பானுமதி குலுங்கிக் குலுங்கி அழுதாள். 

“எனக்கு உன்னை நன்றாகத் தெரியும் குழந்தாய்!  நீயாக இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டாய் என்பதை நானும் நன்கறிவேன்.  நீ மிகவும் சிறிய பெண்.  இப்படி எல்லாம் யோசித்து நடக்கக் கூட உனக்குத் தெரியாது.  அவ்வளவுக்கு மன முதிர்ச்சி உன்னிடம் இல்லை;  ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள் பானுமதி!  ஒரு பெண் தன் கணவனுக்காகக்கூட இம்மாதிரியான காரியங்களைச் செய்யக் கூடாது.  தன் சுயமரியாதையும், சுய கெளரவத்தையும் தள்ளி வைத்துவிட்டு இம்மாதிரிக் கணவனுக்காக அவன் நண்பர்களைக் கவர நினைக்கும் பெண் கடைசியில் கணவனுக்கு மட்டுமில்லை; அந்த நண்பர்கள்; மற்றும் அவளுக்கும் அவளே எதிரியாகிவிடுவாள்.  நல்லவேளையாக , இங்கே வாசுதேவனைக் கவரச் சொல்லி உன் கணவன் கட்டளை;  இதுவே வேறு எவராகவேனும் இருந்திருந்தால், என்ன நடந்திருக்குமோ!  கவனமாக இரு பெண்ணே!”  என்றாள் காந்தாரி.
மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது.  காலை இளங்கதிர்கள் அங்கே நுழைந்து விடியல் எனக் கட்டியம் கூற ஆரம்பித்தன.  நேற்றுச் செய்த வழிபாட்டை இன்று அதிகாலையில் புனர் வழிபாடு செய்து முடிக்க வேண்டி இரண்டு அர்ச்சகர்கள் வரவே, அங்கிருந்து பானுமதியின் தோட்டத்தையும், கெளரி அம்மன் சந்நிதியையும் மேற்பார்வை பார்க்கும் அதிகாரிகள், அர்ச்சகர்களை அழைத்துக் கொண்டு கெளரி அம்மன் சந்நிதிக்குச் சென்றனர்.  அங்கே அவர்கள் பார்த்த காட்சி அதிர அடித்தது. ஆண்களும், பெண்களும் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் இருந்த நிலையோ! கண்களைக் கூசும் வண்ணம் இருந்தது.  வழிபாடு நடந்த இடத்தில் இப்படியா?  திகைத்துப் போய்ப் பார்த்தவர்கள் மேலும் திகைக்கும் வண்ணம் அங்கே துரியோதனனின் உருவமும் தென்பட்டது.  ஆஹா, பட்டத்து இளவரசருமா இப்படி?  இப்போது என்ன செய்யலாம்?  பயந்துவிட்டனர் அந்த அதிகாரிகள்.  தாங்கள் இதைப் பார்த்ததாய்க் காட்டிக் கொள்ளலமா வேண்டாமா?  அல்லது சத்தம் போடாமல் போய்விடலாமா?  ஆனால்,  இந்த நேரம் கட்டாயமாய்ச் செய்ய வேண்டிய புனர் வழிபாட்டைச் செய்யாமல் சென்றால் கோயில் நடைமுறையை அவமதித்ததாக ஆகிவிடுமோ?  அர்ச்சகர்களுக்கும் தயக்கம்.  இவர்கள் எவரையும் தொட்டுத் தூக்கி அப்புறப்படுத்திவிட்டுப் பின்னர் சுத்தம் செய்து வழிபாடுகளை முடிக்கும் அளவுக்கு தைரியம் அவர்கள் எவரிடமும் இல்லை.  ஏனெனில் அனைவருமே உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள்.  பின்னால் ராஜாங்கக் குற்றமாகலாம்.

யோசித்த அர்ச்சகர்கள் நேரே சென்றது விதுரரிடம்.

Monday, September 3, 2012

பானுமதி காப்பாற்றப் பட்டாள்!


"நான் அதை விருந்தாவனத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் பானுமதி.  அது இப்போது என்னிடம் இல்லை.” கண்ணன் சிரித்துக் கொண்டே கூறினான் என்றாலும் அவன் பார்வை எங்கோ தொலைதூரத்தில் நிலைத்து நின்றது.  அவன் கண்களுக்கு முன்னால் ராதாவின் அழகிய உருவம் தோன்றியது.  ஒரு கணம் அதிலேயே மனதை நிலைக்கவிட்ட கிருஷ்ணன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “ஆம், விருந்தாவனத்தில் இருக்கிறது.  அது எங்கோ எங்கோ தொலைதூரத்தில் உள்ளது.  என்னால் இப்போது எட்டமுடியாத தூரம்.”   கடந்து சென்ற காலத்தின் நினைவுகள் மனதில் மோதக் கூறினான் கண்ணன்.  “பானம் ஏதேனும் அருந்துகிறாயா கண்ணா?” என உபசரித்தாள் பானுமதி.  கண்ணன் மறுத்தான்.  அங்கிருந்த நாலைந்து இளைஞர்களும், இளம்பெண்களும் அளவுக்கதிகமான மதுவை அருந்திவிட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டு ஆடிப் பாடியதைக் கண்ணன்கவனித்துக் கொண்டே நடந்தான்.  துரியோதனனும், பானுமதியும் கெளரி அம்மனின் சந்நிதிக்குக் கண்ணனை அழைத்துச் சென்றார்கள்.

அப்போது பூஜை முடிந்து ஆரத்தி எடுக்கும் நேரமாக இருந்தது.  இவர்கள் வரவுக்குக் காத்திருந்த இரு இளம்பெண்கள் இவர்களைக் கண்டதும், ஆரத்திப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டே ஆரத்தி எடுக்க ஆரம்பித்தனர்.  ஆரத்தி முடிந்து அனைவரும் அம்மன் மேல் பூக்களைச் சொரிந்து பிரார்த்தனைகள் செய்து கொண்டனர்.  அங்கிருந்த எல்லாரும் மீண்டும் மது அருந்த ஆரம்பிக்கக் கண்ணன் ஒதுங்கியே நின்றான்.  அங்கே அன்னையின் சந்நிதியின் முன்னர் ஆடல், பாடல் ஆரம்பித்தது.  அனைவருமே தனித்தனியாகவும், ஜோடியாகவும், குழுவாகவும் ஆட ஆரம்பித்தனர்.  பானுமதியும் மிகவும் நன்றாகவே பாடி ஆடினாள் என்பதைக் கண்ணன் கவனித்தான்.  ஆடத் தெரியாத இளைஞர்கள் சுற்றி நின்று தம்கைகளைத் தட்டி ஆர்ப்பரித்து உற்சாகப் படுத்தினார்கள்.  ஆனால் அவர்களால் ஆடலின் முக்கியக் காரணம் மாறுகிறதோ எனக் கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அதற்கேற்ப எவரோ சிருங்கார ரசம் தொனிக்கும் பாடலைப் பாட ஆரம்பிக்க தெய்வீகமான சூழ்நிலை மாறத் தொடங்கியது.   கண்ணனுக்குள் சந்தேகம்.  தினம் தினம் பானுமதி செய்யும் பூஜையில் இப்படி இருந்திருக்குமா என்ன?  இந்தக் கூட்டத்துக்குள் சேராமல் ஒதுங்கி நின்று ஆராய்ந்த கண்ணனுக்கு துரியோதனன் இதைத் திட்டமிட்டு நடத்துகிறானோ என சந்தேகம் ஏற்பட்டது.  ஏனெனில் அவன் கண்ணன் பக்கம் பானுமதியை அனுப்பிக் கண்ணனை மேலும் மேலும் உபசரிக்க வைத்தான்.  பானுமதியும் வெகுளியாகவும் கண்ணன் மேல் இயல்பாக அவளுக்கு ஏற்பட்டிருந்த பாசத்தாலும் இதைக் கவனிக்கவில்லை.

பானுமதியை ஒரு துருப்புச் சீட்டாகத் தனக்கு எதிராக துரியோதனன் பயன்படுத்துகிறான் என்ற சந்தேகம் கண்ணனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் வலுத்து வந்தது.  அதற்கேற்றாற்போல் அங்கு நடந்த நிகழ்வுகளைக் கவனித்த கண்ணனுக்குக் குடிவெறியில் இங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றியது.  அங்கிருந்து விலகிச் செல்ல அவன் மனம் அவனுக்கு ஆணையிட்டாலும், குழந்தை போல் பழகிய பானுமதிக்குத் தீங்கு ஏதேனும் நேரிட்டுவிடுமோ என அஞ்சினான் கண்ணன்.  அவளுக்குப் பாதுகாப்பாக துரியோதனன் இந்தச் சமயம் இருக்க மாட்டானோ எனக் கவலை கொண்டான்.  எவ்வாறேனும் அவளைக் காத்து அவள் அந்தப்புரத்தில் சேர்க்கவேண்டும் என எண்ணினான்.  ஆனால் அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று அப்போது நடந்தது.  துரியோதனன் விளக்குகளை அணைக்க ஆணையிட்டான்.  விளக்குகள் அணைந்ததும்  கண்ணன் மேல் ஒரு பெண் வந்து விழுந்தாள்.  அவளைத் தாங்கிப் பிடித்த கண்ணன் அவள் பானுமதிதான் என்பதைப் புரிந்து கொண்டான்.  அளவுக்கு அதிகமாய் மது புகட்டப் பட்டிருந்தாள் பானுமதி.  கண்ணனை இறுகக் கட்டிக் கொண்டாள்.  நிலைமை தலைக்கு மேல் போவதைக் கண்ணன் உணர்ந்தான்.  பானுமதி மூலம் தன்னை அவனுக்கு என்றென்றும் அடிமையாகக் கட்டிப் போட நினைக்கிறானா துரியோதனன்.  பானுமதிக்கு நினைவுகள் திரும்பி இந்த விபரம் புரிந்தால்???

ஆஹா! பட்டத்து இளவரசன் ஆன துரியோதனன் குரு வம்சத்தினரின் கெளரவத்தைக் கொஞ்சமானும் காப்பாற்றுவான் என எண்ணினால்!  இப்படி ஒரு பட்டத்து இளவரசனா?  ஆஹா, தாத்தா பீஷ்மர் எங்கே, இவர்கள் எங்கே!  அவருடைய பாரம்பரியம் தான் எங்கே, இவர்கள் தான் எங்கே!  இந்த வயதிலும் தான் எடுத்த சபதத்தைக் காக்க வேண்டி பிரமசரியம் அநுஷ்டித்து, நாட்டின் மேன்மை ஒன்றே தன் லக்ஷியம் என்றிருக்கும் அவர் எங்கே, இவர்கள் எங்கே!  ஆனால், இப்போது யோசிக்கும் நேரம் இல்லை;  உடனடியாக பானுமதியை இங்கிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்ல வேண்டும்.  கண்ணன் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் அவளைத் தூக்கி எடுத்துத் தோளில் சார்த்திக் கொண்டான்.  பானுமதி ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.  அவளுக்கு நேர்ந்தது என்னவென அறிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை.  கண்ணன் மெல்லத் தோட்டத்தை நோக்கி நடந்தான்.  நக்ஷத்திரங்களின் வெளிச்சத்திலேயே வழியைக் கண்டு பிடித்துக் கொண்டு சென்றான்.  துரியோதனன் இந்த அழகான மனைவியைச் சரியானபடி நடத்தவில்லையே.  இவளின் அழகும், இளமையும் துரியோதனனால் வீணாகின்றதே.  கண்ணனுக்கு வருத்தமாகவே இருந்தது.  என்றாலும் இந்த ஒன்றுமறியா பேதைப் பெண்ணின் மானத்தைக் காத்து ஆகவேண்டும்.  கண்ணன் ஒரு நிமிஷம் யோசித்தான்.  ஆம், இவளை அவள் மாமியாரான காந்தாரியின் பார்வையில் விடுவதே சரி.

திருதராஷ்டிரன் மாளிகையை அடையாளம் கண்டு கொண்டு நடந்தான் கண்ணன்.  வாயில்காவலனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு கெளரி பூஜையின் போது திடீரென பானுமதியின் உடல்நலம் குன்றியதாகவும், ஆகையால் மஹாராணி காந்தாரியின் பார்வையில் இவள் இருக்க வேண்டும் என அழைத்து வந்ததாகவும் கூறினான்.  காவலாளிக்கு பட்டத்து இளவரசனின் மனைவிக்கு நேர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தாலும் துரியோதனனின் நடவடிக்கைகள் நன்கு பரிச்சயம் என்பதால் எதுவும் பேசாமல் இன்னொரு சேடிப் பெண்ணை அழைத்து வந்தான்.  அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு காந்தாரி தூங்கிக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்று அவளை அழைத்து வந்தாள்.  கண்ணன் இருந்த இடத்துக்கு வந்த காந்தாரி தன் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தாலும் வந்திருப்பது கண்ணன் என்பதை அறிந்து, “கண்ணா, என்ன இந்த நேரம் இங்கே வந்திருக்கிறாய்?” என அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு வினவினாள்.

காவலனையும், சேடிப்பெண்ணையும் அப்பால் போகச் சொல்லிவிட்டுக் கண்ணன் காந்தாரியிடம் நடந்தவற்றை விவரித்தான்.  கெளரி பூஜை என ஆரம்பித்தது சிருங்கார ஆட்டபாட்டங்களில் மாறிப் போனதையும் பானுமதிக்கு நேரவிருந்த ஆபத்தையும் சொன்னதோடு,  ஒருவேளை தான் கொண்டு வரவில்லை எனில் பானுமதி காலையில் தோட்டத்தில் தன்னினைவின்றிக் கிடந்திருப்பாள் என்பதையும் கூறினான்.  இதன் மூலம் பானுமதியின் நற்பெயர் கெடுவதோடு ஹஸ்தினாபுரத்தின் அரசர்களின் மேல் மக்களுக்கு இருந்த மரியாதையும் கூடக் குறைந்துவிடும் என்பதைச் சுட்டிக் காட்டினான்.  பானுமதியின் மேல் தவறில்லை எனவும், துரியோதனன் மேலும், மேலும் அவளிடம் அன்பு காட்டுவது போல் நடித்து அவளுக்கு மதுவைப் புகட்டினான் என்பதையும் கூறினான்.  இவள் ஒரு குழந்தையைப் போல் கள்ளங்கபடு அற்றவளாக இருக்கிறாள். தனக்கு என்ன நேரவிருந்தது என்பதையும் இவள் அறிவாள் இல்லை. என்றான் கண்ணன்.