Thursday, September 6, 2012

காந்தாரியின் கவலை!


காந்தாரி ஒரு பணிப்பெண்ணை அழைத்து இதற்குள்ளாக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பானுமதியைத் தன் படுக்கையிலேயே தனக்கு அருகே போடச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தாள்.  “வாசுதேவா,  குரு வம்சத்திற்குப் பேருதவி செய்திருக்கிறாய்.  இதை என்னால் மறக்க முடியாது.  யார் கண்டார்கள், இதன் மூலம் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம் பிறக்கலாம்,  மாறுதல்கள் அடையலாம்.  பாவம்!” என்றாள்.  காந்தாரியின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்ட கண்ணன் அங்கிருந்து சென்றான்.  பானுமதி நடந்தவை எதையும் அறியாதவளாக ஒரு குழந்தையைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.  என்னதான் மகன்கள் மேல் அளவுக்கதிகமான பாசம் இருந்தாலும் காந்தாரிக்கு இந்தச் செயல்களின் எதிர்வினைகளை எண்ணிப்பார்க்கவே பயமாக இருந்தது. இவை எல்லாம் எங்கே போய் முடியுமோ எனக் கவலை அடைந்தாள். 

காலையில் பானுமதி எழுந்திருக்கவே இல்லை என்பதைக்கண்ட காந்தாரி, பணிப்பெண்ணிடம் சொல்லிக்குளிர்ந்த நீரை எடுத்து வந்து அவள் முகத்தைத் துடைத்துக்கண்களில் அடிக்கச் செய்தாள்.  இதனால் கண் விழித்த பானுமதி தான் எங்கிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் ஆயின.  அவளுக்குத் தான் தன் மாமியாரின் படுக்கையில் படுத்திருப்பதையும், அருகே அமர்ந்திருக்கும் மாமியாரையும் பார்த்ததும் அதிர்ச்சி தாங்கவில்லை. அதுவும் நேற்றைய மாலை அலங்காரங்களைக்களையாமலேயே அவள் படுத்து உறங்கி இருக்கிறாள்.  அதுவும் மாமியாரின் மாளிகையில் அவர்களின் படுக்கை அறையில் அவர்களின் படுக்கையில்.  இது எங்கனம் நேர்ந்தது? “தாயே, தாயே, இது என்ன?  எனக்கு என்ன ஆயிற்று?  நான் எப்படி இங்கே வந்தேன்?” கேட்டுக்கொண்டே பானுமதி காந்தாரியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.  “குழந்தாய்! அழாதே, உனக்கு எதுவும் ஆகவில்லை.  நல்லவேளையாகக் கிருஷ்ண வாசுதேவன் உன் நிலைமையைக் கவனித்து விட்டு உன்னை இங்கே எப்படியோ கொண்டு வந்து சேர்த்தான்.  இல்லை எனில் குரு வம்சத்தின் பட்டத்து இளவரசியின் நிலைமையால் மொத்த நாடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கும்.  பரத வம்சத்தில் இருந்து ஆரம்பித்துத் தொடரும் இந்த மாபெரும் அரசகுலம் பேரிடியில் மூழ்கிப் போயிருக்கும்.  இறை அருளால் அவ்விதம் நேரவில்லை.”

பானுமதி செய்வதறியாது அழ ஆரம்பித்தாள்.  “தாயே, தாயே, என் தாயே, நான் என்ன செய்வேன்!  என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே!  ஆர்யபுத்ரர், உங்கள் மூத்த குமாரர், என் அருமைக் கணவர், எவ்வகையிலேனும் கிருஷ்ணனை நான் கவர்ந்து என் பக்கம் இழுக்க வேண்டும் என மூர்க்கமாக ஆணை பிறப்பித்திருந்தார்.  அம்மா, நான் அறிவேன், கிருஷ்ண வாசுதேவனுக்கு என்னிடம் ஒரு சகோதரிக்கு உள்ள அன்பே என்று.  ஆனால், …ஆனால்,… தாயே எனக்கிடப்பட்ட கட்டளையை நான் மீற முடியவில்லையே!  என்னால் இயன்றதை நானும் செய்தேன்.  ஆனால் கண்ணனுக்கு என் மேல் உள்ள அன்பின் காரணமே வேறு என்பதை உங்கள் குமாரர் புரிந்து கொள்ளவில்லையே!  வலுக்கட்டாயமாக மது புகட்டப் பட்டேன்.  அதன் பின்…..அதன் பின்…..அம்மா, ஐயோ, நான் இனி எப்படி அனைவரையும் பார்ப்பேன்!”  பானுமதி குலுங்கிக் குலுங்கி அழுதாள். 

“எனக்கு உன்னை நன்றாகத் தெரியும் குழந்தாய்!  நீயாக இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டாய் என்பதை நானும் நன்கறிவேன்.  நீ மிகவும் சிறிய பெண்.  இப்படி எல்லாம் யோசித்து நடக்கக் கூட உனக்குத் தெரியாது.  அவ்வளவுக்கு மன முதிர்ச்சி உன்னிடம் இல்லை;  ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள் பானுமதி!  ஒரு பெண் தன் கணவனுக்காகக்கூட இம்மாதிரியான காரியங்களைச் செய்யக் கூடாது.  தன் சுயமரியாதையும், சுய கெளரவத்தையும் தள்ளி வைத்துவிட்டு இம்மாதிரிக் கணவனுக்காக அவன் நண்பர்களைக் கவர நினைக்கும் பெண் கடைசியில் கணவனுக்கு மட்டுமில்லை; அந்த நண்பர்கள்; மற்றும் அவளுக்கும் அவளே எதிரியாகிவிடுவாள்.  நல்லவேளையாக , இங்கே வாசுதேவனைக் கவரச் சொல்லி உன் கணவன் கட்டளை;  இதுவே வேறு எவராகவேனும் இருந்திருந்தால், என்ன நடந்திருக்குமோ!  கவனமாக இரு பெண்ணே!”  என்றாள் காந்தாரி.
மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்தது.  காலை இளங்கதிர்கள் அங்கே நுழைந்து விடியல் எனக் கட்டியம் கூற ஆரம்பித்தன.  நேற்றுச் செய்த வழிபாட்டை இன்று அதிகாலையில் புனர் வழிபாடு செய்து முடிக்க வேண்டி இரண்டு அர்ச்சகர்கள் வரவே, அங்கிருந்து பானுமதியின் தோட்டத்தையும், கெளரி அம்மன் சந்நிதியையும் மேற்பார்வை பார்க்கும் அதிகாரிகள், அர்ச்சகர்களை அழைத்துக் கொண்டு கெளரி அம்மன் சந்நிதிக்குச் சென்றனர்.  அங்கே அவர்கள் பார்த்த காட்சி அதிர அடித்தது. ஆண்களும், பெண்களும் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் இருந்த நிலையோ! கண்களைக் கூசும் வண்ணம் இருந்தது.  வழிபாடு நடந்த இடத்தில் இப்படியா?  திகைத்துப் போய்ப் பார்த்தவர்கள் மேலும் திகைக்கும் வண்ணம் அங்கே துரியோதனனின் உருவமும் தென்பட்டது.  ஆஹா, பட்டத்து இளவரசருமா இப்படி?  இப்போது என்ன செய்யலாம்?  பயந்துவிட்டனர் அந்த அதிகாரிகள்.  தாங்கள் இதைப் பார்த்ததாய்க் காட்டிக் கொள்ளலமா வேண்டாமா?  அல்லது சத்தம் போடாமல் போய்விடலாமா?  ஆனால்,  இந்த நேரம் கட்டாயமாய்ச் செய்ய வேண்டிய புனர் வழிபாட்டைச் செய்யாமல் சென்றால் கோயில் நடைமுறையை அவமதித்ததாக ஆகிவிடுமோ?  அர்ச்சகர்களுக்கும் தயக்கம்.  இவர்கள் எவரையும் தொட்டுத் தூக்கி அப்புறப்படுத்திவிட்டுப் பின்னர் சுத்தம் செய்து வழிபாடுகளை முடிக்கும் அளவுக்கு தைரியம் அவர்கள் எவரிடமும் இல்லை.  ஏனெனில் அனைவருமே உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள்.  பின்னால் ராஜாங்கக் குற்றமாகலாம்.

யோசித்த அர்ச்சகர்கள் நேரே சென்றது விதுரரிடம்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி அம்மா... தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

//நல்லவேளையாக , இங்கே வாசுதேவனைக் கவரச் சொல்லி உன் கணவன் கட்டளை; இதுவே வேறு எவராகவேனும் இருந்திருந்தால், என்ன நடந்திருக்குமோ!//

அதுதானே...

தெரிந்த பகுதிகளைப் படிப்பதை விட இது மாதிரி அதிகம் அறியப் படாத பகுதிகளைப் படிப்பதில் சுவாரஸ்யம் கூடுகிறது. எந்தக் காலத்திலும் அரசியல் என்பது எந்த கேவலத்தையும் செய்யத் தூண்டும் போலும். ஆனாலும் போரில் துரி மரணித்த போது மாவீரன் என்று தேவர்கள் பூமாரிப் பொழிந்தார்கள் இல்லை? அது தனி செக்ஷன் போலும்!

அப்பாதுரை said...

காந்தாரி திருதாஷ்டிரனின் செய்கைகளை பொறுத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வி தோன்றுகிறது.