Monday, September 3, 2012

பானுமதி காப்பாற்றப் பட்டாள்!


"நான் அதை விருந்தாவனத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் பானுமதி.  அது இப்போது என்னிடம் இல்லை.” கண்ணன் சிரித்துக் கொண்டே கூறினான் என்றாலும் அவன் பார்வை எங்கோ தொலைதூரத்தில் நிலைத்து நின்றது.  அவன் கண்களுக்கு முன்னால் ராதாவின் அழகிய உருவம் தோன்றியது.  ஒரு கணம் அதிலேயே மனதை நிலைக்கவிட்ட கிருஷ்ணன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “ஆம், விருந்தாவனத்தில் இருக்கிறது.  அது எங்கோ எங்கோ தொலைதூரத்தில் உள்ளது.  என்னால் இப்போது எட்டமுடியாத தூரம்.”   கடந்து சென்ற காலத்தின் நினைவுகள் மனதில் மோதக் கூறினான் கண்ணன்.  “பானம் ஏதேனும் அருந்துகிறாயா கண்ணா?” என உபசரித்தாள் பானுமதி.  கண்ணன் மறுத்தான்.  அங்கிருந்த நாலைந்து இளைஞர்களும், இளம்பெண்களும் அளவுக்கதிகமான மதுவை அருந்திவிட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டு ஆடிப் பாடியதைக் கண்ணன்கவனித்துக் கொண்டே நடந்தான்.  துரியோதனனும், பானுமதியும் கெளரி அம்மனின் சந்நிதிக்குக் கண்ணனை அழைத்துச் சென்றார்கள்.

அப்போது பூஜை முடிந்து ஆரத்தி எடுக்கும் நேரமாக இருந்தது.  இவர்கள் வரவுக்குக் காத்திருந்த இரு இளம்பெண்கள் இவர்களைக் கண்டதும், ஆரத்திப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டே ஆரத்தி எடுக்க ஆரம்பித்தனர்.  ஆரத்தி முடிந்து அனைவரும் அம்மன் மேல் பூக்களைச் சொரிந்து பிரார்த்தனைகள் செய்து கொண்டனர்.  அங்கிருந்த எல்லாரும் மீண்டும் மது அருந்த ஆரம்பிக்கக் கண்ணன் ஒதுங்கியே நின்றான்.  அங்கே அன்னையின் சந்நிதியின் முன்னர் ஆடல், பாடல் ஆரம்பித்தது.  அனைவருமே தனித்தனியாகவும், ஜோடியாகவும், குழுவாகவும் ஆட ஆரம்பித்தனர்.  பானுமதியும் மிகவும் நன்றாகவே பாடி ஆடினாள் என்பதைக் கண்ணன் கவனித்தான்.  ஆடத் தெரியாத இளைஞர்கள் சுற்றி நின்று தம்கைகளைத் தட்டி ஆர்ப்பரித்து உற்சாகப் படுத்தினார்கள்.  ஆனால் அவர்களால் ஆடலின் முக்கியக் காரணம் மாறுகிறதோ எனக் கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அதற்கேற்ப எவரோ சிருங்கார ரசம் தொனிக்கும் பாடலைப் பாட ஆரம்பிக்க தெய்வீகமான சூழ்நிலை மாறத் தொடங்கியது.   கண்ணனுக்குள் சந்தேகம்.  தினம் தினம் பானுமதி செய்யும் பூஜையில் இப்படி இருந்திருக்குமா என்ன?  இந்தக் கூட்டத்துக்குள் சேராமல் ஒதுங்கி நின்று ஆராய்ந்த கண்ணனுக்கு துரியோதனன் இதைத் திட்டமிட்டு நடத்துகிறானோ என சந்தேகம் ஏற்பட்டது.  ஏனெனில் அவன் கண்ணன் பக்கம் பானுமதியை அனுப்பிக் கண்ணனை மேலும் மேலும் உபசரிக்க வைத்தான்.  பானுமதியும் வெகுளியாகவும் கண்ணன் மேல் இயல்பாக அவளுக்கு ஏற்பட்டிருந்த பாசத்தாலும் இதைக் கவனிக்கவில்லை.

பானுமதியை ஒரு துருப்புச் சீட்டாகத் தனக்கு எதிராக துரியோதனன் பயன்படுத்துகிறான் என்ற சந்தேகம் கண்ணனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் வலுத்து வந்தது.  அதற்கேற்றாற்போல் அங்கு நடந்த நிகழ்வுகளைக் கவனித்த கண்ணனுக்குக் குடிவெறியில் இங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றியது.  அங்கிருந்து விலகிச் செல்ல அவன் மனம் அவனுக்கு ஆணையிட்டாலும், குழந்தை போல் பழகிய பானுமதிக்குத் தீங்கு ஏதேனும் நேரிட்டுவிடுமோ என அஞ்சினான் கண்ணன்.  அவளுக்குப் பாதுகாப்பாக துரியோதனன் இந்தச் சமயம் இருக்க மாட்டானோ எனக் கவலை கொண்டான்.  எவ்வாறேனும் அவளைக் காத்து அவள் அந்தப்புரத்தில் சேர்க்கவேண்டும் என எண்ணினான்.  ஆனால் அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று அப்போது நடந்தது.  துரியோதனன் விளக்குகளை அணைக்க ஆணையிட்டான்.  விளக்குகள் அணைந்ததும்  கண்ணன் மேல் ஒரு பெண் வந்து விழுந்தாள்.  அவளைத் தாங்கிப் பிடித்த கண்ணன் அவள் பானுமதிதான் என்பதைப் புரிந்து கொண்டான்.  அளவுக்கு அதிகமாய் மது புகட்டப் பட்டிருந்தாள் பானுமதி.  கண்ணனை இறுகக் கட்டிக் கொண்டாள்.  நிலைமை தலைக்கு மேல் போவதைக் கண்ணன் உணர்ந்தான்.  பானுமதி மூலம் தன்னை அவனுக்கு என்றென்றும் அடிமையாகக் கட்டிப் போட நினைக்கிறானா துரியோதனன்.  பானுமதிக்கு நினைவுகள் திரும்பி இந்த விபரம் புரிந்தால்???

ஆஹா! பட்டத்து இளவரசன் ஆன துரியோதனன் குரு வம்சத்தினரின் கெளரவத்தைக் கொஞ்சமானும் காப்பாற்றுவான் என எண்ணினால்!  இப்படி ஒரு பட்டத்து இளவரசனா?  ஆஹா, தாத்தா பீஷ்மர் எங்கே, இவர்கள் எங்கே!  அவருடைய பாரம்பரியம் தான் எங்கே, இவர்கள் தான் எங்கே!  இந்த வயதிலும் தான் எடுத்த சபதத்தைக் காக்க வேண்டி பிரமசரியம் அநுஷ்டித்து, நாட்டின் மேன்மை ஒன்றே தன் லக்ஷியம் என்றிருக்கும் அவர் எங்கே, இவர்கள் எங்கே!  ஆனால், இப்போது யோசிக்கும் நேரம் இல்லை;  உடனடியாக பானுமதியை இங்கிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்ல வேண்டும்.  கண்ணன் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் அவளைத் தூக்கி எடுத்துத் தோளில் சார்த்திக் கொண்டான்.  பானுமதி ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.  அவளுக்கு நேர்ந்தது என்னவென அறிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை.  கண்ணன் மெல்லத் தோட்டத்தை நோக்கி நடந்தான்.  நக்ஷத்திரங்களின் வெளிச்சத்திலேயே வழியைக் கண்டு பிடித்துக் கொண்டு சென்றான்.  துரியோதனன் இந்த அழகான மனைவியைச் சரியானபடி நடத்தவில்லையே.  இவளின் அழகும், இளமையும் துரியோதனனால் வீணாகின்றதே.  கண்ணனுக்கு வருத்தமாகவே இருந்தது.  என்றாலும் இந்த ஒன்றுமறியா பேதைப் பெண்ணின் மானத்தைக் காத்து ஆகவேண்டும்.  கண்ணன் ஒரு நிமிஷம் யோசித்தான்.  ஆம், இவளை அவள் மாமியாரான காந்தாரியின் பார்வையில் விடுவதே சரி.

திருதராஷ்டிரன் மாளிகையை அடையாளம் கண்டு கொண்டு நடந்தான் கண்ணன்.  வாயில்காவலனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு கெளரி பூஜையின் போது திடீரென பானுமதியின் உடல்நலம் குன்றியதாகவும், ஆகையால் மஹாராணி காந்தாரியின் பார்வையில் இவள் இருக்க வேண்டும் என அழைத்து வந்ததாகவும் கூறினான்.  காவலாளிக்கு பட்டத்து இளவரசனின் மனைவிக்கு நேர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தாலும் துரியோதனனின் நடவடிக்கைகள் நன்கு பரிச்சயம் என்பதால் எதுவும் பேசாமல் இன்னொரு சேடிப் பெண்ணை அழைத்து வந்தான்.  அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு காந்தாரி தூங்கிக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்று அவளை அழைத்து வந்தாள்.  கண்ணன் இருந்த இடத்துக்கு வந்த காந்தாரி தன் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தாலும் வந்திருப்பது கண்ணன் என்பதை அறிந்து, “கண்ணா, என்ன இந்த நேரம் இங்கே வந்திருக்கிறாய்?” என அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு வினவினாள்.

காவலனையும், சேடிப்பெண்ணையும் அப்பால் போகச் சொல்லிவிட்டுக் கண்ணன் காந்தாரியிடம் நடந்தவற்றை விவரித்தான்.  கெளரி பூஜை என ஆரம்பித்தது சிருங்கார ஆட்டபாட்டங்களில் மாறிப் போனதையும் பானுமதிக்கு நேரவிருந்த ஆபத்தையும் சொன்னதோடு,  ஒருவேளை தான் கொண்டு வரவில்லை எனில் பானுமதி காலையில் தோட்டத்தில் தன்னினைவின்றிக் கிடந்திருப்பாள் என்பதையும் கூறினான்.  இதன் மூலம் பானுமதியின் நற்பெயர் கெடுவதோடு ஹஸ்தினாபுரத்தின் அரசர்களின் மேல் மக்களுக்கு இருந்த மரியாதையும் கூடக் குறைந்துவிடும் என்பதைச் சுட்டிக் காட்டினான்.  பானுமதியின் மேல் தவறில்லை எனவும், துரியோதனன் மேலும், மேலும் அவளிடம் அன்பு காட்டுவது போல் நடித்து அவளுக்கு மதுவைப் புகட்டினான் என்பதையும் கூறினான்.  இவள் ஒரு குழந்தையைப் போல் கள்ளங்கபடு அற்றவளாக இருக்கிறாள். தனக்கு என்ன நேரவிருந்தது என்பதையும் இவள் அறிவாள் இல்லை. என்றான் கண்ணன். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி... தொடருங்கள்...

ஸ்ரீராம். said...

இதுவரை படிக்காத, கேள்விப்படாத இடங்கள்.