Tuesday, August 27, 2013

கண்ணன் ராக்ஷசவர்த்தம் கிளம்புகிறான்!

அவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்ப விளக்கான மரிஷாவைக் குறித்து அறிய ஆவல்.  ஆகவே கிருஷ்ணனிடம் அவளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தனர்.  ஆனால் சகோதரிகள் இருவருக்குமோ, கிருஷ்ணனைக் கண்டு உத்தவன் என்ன ஆனான் என்று பார்த்து அவனைக் காப்பாற்றி வரச் சொல்ல வேண்டுமென்று ஆவல் அதிகமாக இருந்தது.  அதைச் சொல்லத் துடிதுடித்தனர் இருவரும்.   ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராமல் நாகர்கள் படைத்தலைவர்கள் விடைபெற்றுச் சென்றதுமே இளவரசனும் யுவராஜாவும், அவர்கள் தகப்பனும் ஆன கார்க்கோடகனைப் பார்த்துக் கிருஷ்ணன், “உத்தவன் எங்கே?” என்று கேட்டான்.  பெண்கள் இருவரும் தங்கள் காது வலிக்கும்படி உற்றுக் கேட்டனர்.  “அவன் எங்களை விட்டுச் சென்றுவிட்டான்.” கார்க்கோடகன் பதிலில் தயக்கமும், அவநம்பிக்கையும் மிகுந்திருந்தது.  தான் சொல்வதைக் கிருஷ்ணன் ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற கவலையும் தெரிந்தது.  “எங்கே சென்றான் அவன்?” கிருஷ்ணனுக்கு ஆச்சரியமும், ஆர்வமும் மிகுந்தது.  “இங்கேயே காத்திருக்கும்படியும், அனைவரும் சேர்ந்து துவாரகை செல்லலாம் என்றும் அவனிடம் சொல்லி இருந்தேனே!  உத்தவன் இங்கே தானே காத்திருக்க வேண்டும்!”  கார்க்கோடகனுக்கு இப்போது குழப்பமாக இருந்தது.  “அவன் ராக்ஷசவர்த்தம் சென்றிருக்கிறான்.” என்றான்.

“என்ன? ராக்ஷசவர்த்தத்துக்கா?  ஏன்?” கிருஷ்ணன் கேட்டான். 

“எங்கள் நாகர் தலைவர்ர்க்களில் ஒருவன் ராக்ஷசச் சிறுவன் ஒருவனைப் பிடித்தான். அவன் மூலம் சகோதரி குந்தியும், ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருப்பட்தாகவும், அனைவரும் காட்டின் உள்ளே சென்று ராக்ஷசவர்த்தத்தில் நுழைந்ததாகவும் செய்தி கிட்டியது.”

“நிச்சயமாகத் தான் சொல்கிறாயா?”

“அந்தப் பையன் அரைப்பைத்தியமாகத் தான் இருந்தான்;  ஆனால் அவன் சொன்னதிலிருந்து எங்களுக்கு இப்படித்தான் புரிந்தது.”

“ஆகவே உத்தவன் தானே தனியாக அவர்களைத் தேடிச் சென்றிருக்கிறனா?” கண்ணன் கேட்டான்.

“ஆம், ஆனால் நீ தான் அவ்வாறு போகும்படி சொன்னதாகவன்றோ அவன் எங்களிடம் சொன்னான்!” கார்க்கோடகனின் குழப்பம்  நீடித்தது.  “அது தான் உத்தவன்.  நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை அவனாகவே புரிந்து கொண்டு நிறைவேற்றுவான்.” கண்ணன் குரலில் பெருமையும் உத்தவனிடம் அவன் கொண்ட பாசமும் வெளிப்பட்டது.  இதைக் கேட்ட சகோதரியர் இருவருக்கும் அழுகையைக் கட்டுப்படுத்த  இயலவில்லை.  அவர்கள் அழுவதைக் கேட்டு அனைவரும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தனர்.  கண்ணனும் திரும்பினான்.  அவர்களைக் கண்டதும், “சகோதரிகளே, என்ன ஆயிற்று? ஏன் அழுகிறீர்கள்? “ என்று வினவினான்.  ஆனாலும் தான் சொன்னதற்கும் அவர்கள் அழுவதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பது கண்ணனுக்குப் புரிந்தது.   

ரவிகா குறுக்கிட்டு, “வாசுதேவ கிருஷ்ணா!  அவர்கள் இருவரும் எங்கள் பெண்கள்.  இளவரசிகள்.  இரட்டையர்.  ஒருத்தி கபிலா, இன்னொருத்தி பிங்கலா.” என அறிமுகம் செய்து வைத்தாள்.  “ஆனால் ஏன் இருவரும் இப்படி அழ வேண்டும்?” கண்ணன் குரலில் அவன் கவலை நன்கு தெரிந்தது.  சம்பிரதாயமான மரியாதையை எல்லாம் தூக்கி எறிந்த பிங்கலா, கண்ணனிடம், “சகோதரா, ஓ சகோதரா, அவரை, அவரை ராக்ஷசர்கள் சாப்பிட்டுவிட்டனர்!” என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.  கபிலா உடனே குறுக்கிட்டாள். “இந்தக் கோழைகள் பயந்து கொண்டு அவரோடு துணைக்கும் செல்லவில்லை!” இதை கூறிக்கொண்டே ஆத்திரம் கொப்பளிக்கும் கண்களால் தன் தகப்பனையும், சகோதரனையும் பார்த்தாள்.  அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.


கிருஷ்ணன் இது என்ன என்பது போல் கார்க்கோடகனைப் பார்த்தான்.  அவனைப் புரிந்து கொண்ட கார்க்கோடகன் விளக்க ஆரம்பித்தான்.  ராக்ஷசச் சிறுவன் அங்கே எப்படி வந்தான் என்பதிலிருந்து, அவனோடு உத்தவன் சென்றது வரை அனைத்தையும் விளக்கிக் கூறினான்.  “மாட்சிமை பொருந்திய வாசுதேவா!  உத்தவன் ராக்ஷச வர்த்தம் சென்றுவிட்டான் என்பது உண்மையே! ஆனால் நீ கேட்டுக் கொண்டதாலேயே செல்வதாக அன்றோ அவன் கூறினான்! எங்களால் அங்கே செல்ல முடியாது.  எந்த நாகனும் அவன் நாட்டின் எல்லையைத் தாண்டியதில்லை. ராக்ஷசர்களின் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததும் இல்லை.  அது ஒரு மோசமான நாடு.  அங்கே நுழையும் எந்த மனிதனும் உயிரோடு திரும்பியதாக இல்லை!” என்று முடித்தான்.  


அவன் சொல்வது அனைத்தையும் கிருஷ்ணன் இரக்கத்தோடும், கருணையோடும் கேட்டு வந்தான்.  வழக்கம் போல் புன்சிரிப்பு அவன் உதடுகளில் தாண்டவம் ஆடியது.  “நீங்கள் யாரும் ஏன் உத்தவனோடு செல்லவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!” என்று அமைதியாகவே பதில் சொன்னான்.  அவன் குரலின் தன்மையிலிருந்து அங்கிருந்த ஒவ்வொரு நாகனும் அதைக் கிருஷ்ணன் தங்களுக்காகவே தனிப்பட்ட முறையில் சொல்வதாக எடுத்துக் கொண்டனர்.   அவ்வளவு தயையுடனும்,  அவர்களுக்கு மன்னிப்புக் கொடுக்கும் தன்மையிலும் இருந்த அந்தக் குரலையும் கிருஷ்ணன் சொன்ன மாதிரியையும் கேட்ட அந்த நாகர்கள் அனைவருமே வெட்கித் தலை குனிந்தனர்.  அவர்களால் கிருஷ்ணனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.  இவ்வளவு கருணையைக் காட்டும் ஒருவனுக்கு உதவக் கூடியதொரு அரிய சந்தர்ப்பத்தை உயிருக்குப் பயந்து கொண்டு இழந்துவிட்டோமே என ஒவ்வொருவனும் நினைத்தான்.


ஆர்யகனோ எப்போதும் போல் மெளனமாகவே அனைத்தையும் கேட்டுக் கிரஹித்துக் கொண்டிருந்தான்.  இப்போது கண்ணனிடம், “நான் மட்டும் இன்னும் வயது குறைந்து இளைஞனாக இருந்திருப்பேன் ஆனால், உத்தவனைத் தனியாகச் செல்ல விட்டிருக்க மாட்டேன்.” என்றான்.  அவன் குரலிலும், முகத்திலும் தன் படைத்தலைவர்களும், மகனும், பேரனும் செய்தது சரியல்ல என்னும் தொனி தொனித்தது.  மேலும் தொடர்ந்து, “இப்போதைய இளைஞர்களிடம் வீரத்தை எங்கே பார்க்க முடிகிறது?  அவர்கள் தலையை நன்கு எண்ணெய் தேய்த்துப் போஷாக்குச் செய்து கொண்டு அலங்கரித்துக் கொண்டு விருந்துகளிலும், விழாக்களிலும் ஆடிப்பாடவே அவர்களுக்கு நேரம் போதவில்லை.  இம்மாதிரி வீர, தீரப் பராக்கிரமங்களில் ஈடுபாடு என்பதே இளைஞர்களிடை குறைந்துவிட்டது.  நான் ஒரு இளைஞனாக இல்லாது போனேன்!” குரலில் துக்கம் தொனிக்கக் கூறினான் ஆர்யகன். 

“இப்போது அழுவதில் என்ன பிரயோசனம் பாட்டனாரே?” பிங்கலா தன் பாட்டனிடம் கூறினாள்.  “இவ்வளவு நாட்களில் ராக்ஷசர்கள் அவரைக் கொன்று சாப்பிட்டிருப்பார்கள்.” என்றாள் சோகமாக.  “அவர்கள் அனைவரும் கோழைகள் என்பதை நான் முன்னமே சொன்னேனே, பாட்டனாரே?”கபிலா தொடர்ந்து ஒத்து ஊதினாள்.  கிருஷ்ணனுக்கு இருவரையும் பார்த்துச் சிரிப்பு வந்தது.  அவர்கள் இருவரின் இந்த குணத்தை அவன் மிகவும் மதித்தான் என்பது அவன் பேச்சிலிருந்து தெரிந்தது.  “கவலை வேண்டாம், சகோதரியரே! நாளைக்கு நான் ராக்ஷச வர்த்தம் சென்று உத்தவனை திரும்பக் கூட்டி வருகிறேன்.  பாட்டனாரே, தயவு செய்து நாளைக்கு எந்தக் கொண்டாட்டமும் வேண்டாம்.  அனைத்தையும் ரத்து செய்யுங்கள்.  உத்தவனோடு நான் திரும்பி வந்த பின்னர் கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளலாம்.  ஒருவேளை ஐந்து சகோதர்களும், அத்தை குந்தியும் கூட வரலாம்.  “ சொல்லி விட்டுக் கண்ணன் எழுந்து விட்டான்.   


பிங்கலா விடாமல் புலம்பினாள். “எங்கே?  இத்தனை நாட்கள் அவரைக் கொன்று தின்றிருப்பார்களே!”  உத்தவனை ராக்ஷசர்கள் கொன்று தின்றிருக்கலாம் என்ற நினைப்பை அவர்களால் மாற்றிக்கொள்ள இயலவில்லை.  கண்ணன் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.  பின்னர் இனிமையாகச் சிரித்த வண்ணம் வெகு இயல்பாக, “நான் இருக்கும் வரையிலும் அவனை எவராலும் கொல்ல முடியாது.” என்றவன் சட்டெனத் திரும்பி ஆர்யகனைப் பார்த்தான்.  எப்போதும் தோன்றும் ஒரு விதமான உணர்ச்சி வேகமும் அவனை ஆட்கொள்ளத் தன்னையும் அறியாது அவன் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளைப் பொழிந்தான். “உத்தவனை எவராவது கொன்றிருந்தால் அவன் உயிரோடு இருக்க மாட்டான்!” இதை ஒரு சபதம் போலச் சொன்ன கண்ணனுக்குத் தனக்குள்ளே இன்னொரு மனிதன் இருந்து விதியையே மாற்றி அமைக்கும் இந்தத் தவிர்க்க இயலாத காரியத்தைச் செய்யும்படி கூறுவது போல் உணர்ந்தான்.  அடுத்த கணம் தன் கம்பீரத்தையும், மன உறுதியையும் காட்டும் வண்ணமாகத் தன் உத்தரீயத்தை எடுத்துத் தோள்களில் வீசிப் போட்டவண்ணம் சாத்யகியுடனும், ஷ்வேதகேதுவுடனும் அந்த இடத்தை விட்டு வெளியேறினான். 




Sunday, August 25, 2013

கண்ணன் வந்தான் தேரினிலே!

அவர்கள் இருவரின் தாயான ரவிகா இருவரையும் தேற்ற முனைந்தாள். “ சரி, சரி, அதனால் என்ன இப்போது!  உத்தவன் சென்றான் எனில் அவனை அவன் நண்பனும் சகோதரனும் ஆன கிருஷ்ணன் அனுப்பி வைத்தான்;  அதனால் சென்றான்.  ஆனால் அதற்காக மணிமானும் தன் உயிரைப் பணயம் வைக்க முடியுமா?” என்றாள் ரவிகா. “ஆஹா, ஆஹா, அது தான் நினைத்தேன்!’ கத்தினாள் கபிலா என்பவள். “உத்தவன் அவன் சகோதரன் கிருஷ்ணன் சொன்னதால் சென்றான் என்பது சரிதான்!  தன் சகோதரனின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டித் தன் உயிரையே பணயம் வைத்திருக்கிறான் அல்லவா?  ஆனால் இங்கே???? இதோ உன் அருமை மகன் தன் இன்னுயிரைக் காக்க வேண்டித் தன் இரு சகோதரிகளின் நிலையையும், அவர்கள் உயிரையும் காக்க வேண்டும் என நினைக்கக் கூட இல்லை!”

“நீங்கள் அனைவருமே சுயநலக்காரக் கோழைகள்!” என்றாள் பிங்கலாவும் ஆத்திரம் கொப்பளிக்க.  இவர்கள் திட்டியதைக் கேட்டு மணிமான் மிக வேதனை அடைந்தான் என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. “இருவரும் ஏன் தான் இவ்வளவு முட்டாளாக இருக்கின்றீர்களோ, தெரியவில்லை!” என்றான் கோபத்தோடு. “அப்படி ஒருவேளை உத்தவன் திரும்பி வரவில்லை எனில் ஓரிரு வருடங்களில் நீங்கள் இருவருமே அவனை மறந்துவிடுவீர்கள்.  உத்தவனை விடவும் அருமையான கணவன்மார் உங்களுக்குக் கிடைப்பார்கள்.”

கபிலா அவனை ஆவேசத்துடன் முறைக்கப் பிங்கலாவோ, “நாககூடத்தின் வருங்கால அரசரின் இம்மொழிகளைக் கேளீர் உலகோரே!” என்று கேலியாகக் கூறினாள்.  தாயைப் பார்த்து, “இவன் ஏற்கெனவே எங்களுக்கு வேறு மணமகன்களைத் தேடவும் ஆரம்பித்துவிட்டான்.  உத்தவன் வரப் போவதில்லை என்று நிச்சயம் செய்து கொண்டுள்ளான்.” என்றாள் சீற்றத்தோடு. ரவிகா உடனே குறுக்கிட்டு  “குழந்தாய், என் குழந்தாய்!  அமைதி கொள்வாய்.  நீயும் தான் கபிலா! அமைதி அடைவாய்! இருவருமே மிகவும் உணர்ச்சி வசப் படுகிறீர்கள்.  உத்தவன் திரும்பப் போவதில்லை என்பது நம் அனைவருக்கும் மிக நன்றாகவே தெரியும்.  அது தான் உண்மை; உறுதியும் கூட.  இப்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள் இருவரின் எதிர்காலம் குறித்தே கவலை!  அதற்குத் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்.” என்றாள்.  “நாங்கள் உங்கள் கவலையைக் குறித்தோ, நீங்கள் அனைவரும் சிந்திக்கும் எங்கள் எதிர்காலம் குறித்தோ எந்தக் கவலையும் கொள்ளவில்லை;  இதோ இரண்டு பெளர்ணமிகள் வரை காத்திருந்தோம்.  உத்தவன் வரவில்லை.   இனி உத்தவன் சென்ற வழியைத் தொடர்ந்து செல்வதே எங்கள் வேலை!” என்றாள் பிங்கலா.  அவளைத் தொடர்ந்த கபிலா, “நாங்கள் எங்களைக் கங்கையில் முழுக அடித்துக் கொள்வோம், அல்லது ராக்ஷசவர்த்தத்திற்கே சென்று எங்கள் தலைவனும், இதய நாயகனும் ஆன உத்தவனை எப்படி அந்த ராக்ஷசர்கள் உணவாக உண்டனரோ அவ்வாறே எங்களையும் சாப்பிடக் கொடுப்போம்.” என்றாள்.  ரவிகாவுக்கு வந்த கோபத்திற்கு இருவரையும் ஓங்கி ஒரு அறை கொடுத்துவிடலாமா என்றிருந்தாள்.  ஆனால் அப்போது மணிமான் குறுக்கிட்டான்.

“தாயே, நீங்கள் அமைதி அடையுங்கள்;  கவலை வேண்டாம்.  நான் தந்தையாரிடம் இந்த இருபெண்களின் நிலைமை குறித்துக் கூறியுள்ளேன்.   பாட்டனாரை இந்த இரு பெண்களின் நிலை குறித்து ஆலோசிக்கும்படிக் கேட்டுக்கொள்ளச் சொல்லி இருக்கிறேன்.  பாட்டனாருக்கும் இவர்கள் நிலை புரியும்.  ஒரு வேளை அவர் இதற்குள் ஆசாரியர் வேதவியாசரிடம் கூட இதைப் பற்றிக் கூறி இருக்கலாம்.” என்றான். பிங்கலா உடனேயே “ஓஹோ, அப்படியா?  பாட்டனாரையும், ஆசாரியரையும் எங்கள் முன் நிறுத்தி அவர்களைக் கேள்விகள் கேட்க வைத்து எங்களைக் குற்றவாளிகளாக ஆக்கப் போகிறாயா?  எங்களுடன் பேசச் சொல்லி இருக்கிறாயா? ஒரு விஷயம் தெரியுமா உனக்கு?  ஆசாரியரே நேரில் எங்களிடம் இரு பெளர்ணமிகள் முடிந்தும் உத்தவன் வரவில்லை என்றால் இந்தக் கோழைகள் நிறைந்த நாககூடத்திலிருந்து எங்களை அழைத்துச் செல்வதாக உறுதி கூறியுள்ளார்.  அதன் பின்னர் நாங்கள் எங்கள் விருப்பப்படி எங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர் மிகவும் உதவி செய்வார். “

“ஆர்யகனின் இளவரசிகள் நாககூடத்தை விட்டு வேற்று நாட்டுக்கா?”  ரவிகாவால் இதை ஜீரணிக்க முடியவில்லை.  “ஆம், நாங்கள் ஆசாரியர் எங்கே அழைத்துச் செல்கிறாரோ அங்கே செல்லப் போகிறோம்.” என ஆமோதித்தாள் பிங்கலா. “எங்கே வேண்டுமானாலும் செல்வோம்;  மற்றோர் புதிய உலகுக்குக் கூட.  அங்கே சென்றால் இங்கே இருக்கிறாப்போல் கோழைகள் நிறைந்திருக்க மாட்டார்கள் அல்லவா!” என்றாள் கபிலா.  மேலும் தொடர்ந்து, “இந்த மகத்தான இளவரசனுக்கு உத்தவன் பின்னால் செல்ல மனமில்லை.  அதற்கு தைரியமும் இல்லை.  கோழைகள், கோழைகள், கோழைகள்!” என்றாள் திரும்பவும் கபிலா.  இருவரும் மீண்டும் அழ ஆரம்பிக்கவே மணிமானுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. தன்னைக் குறித்தும் தன் நிலை குறித்தும் அவனுக்குள் வெட்கமாகவும் இருந்தது.  அவன் ஏதோ தவறு செய்துவிட்டானோ!  அவன் சரியில்லையோ?  நாககூடத்தின் வருங்கால அரசன் ஆன மணிமான் என்ன செய்திருக்க வேண்டும்!  உத்தவனைச் செல்லாமல் தடுத்திருக்க வேண்டுமோ?  அல்லது உத்தவனுடன் கூடச் சென்றிருக்க வேண்டுமோ?   சரி, அதுதான் இயலவில்லை எனில் அவன் சொந்த சகோதரிகள் இருவரையும்  உத்தவனை மறக்கச் செய்ய நினைத்தால், அது கூட இயலவில்லையே அவனால்! அவனால் எதுவும் இயலவில்லை!   ஹூம், இவர்கள் அனைவரிடம் உள்ள ஏதோ  ஒன்று என்னிடம் இல்லை; என்ன அது?  புரியவில்லை. மணிமானுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

சில நாட்களில் ஹஸ்தினாபுரத்தில் இருந்து யாதவ வீரர்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.  இரட்டைச் சகோதரிகள் ஏனோ இதைக் கண்டு உற்சாகமும், நம்பிக்கையும் கொண்டனர்.  எல்லாருக்கும் முன்னால் கிருதவர்மன் தலைமை வகித்து பளபளக்கும் ரதங்களோடும்,   துள்ளி ஓடும் குதிரைகளோடும், மின்னலைப் போன்ற ஆயுதங்கள் தரித்த வீரர்களோடும் வந்து சேர்ந்தான்.  கிருஷ்ணன் வருவதற்கு முன்னால் வரும் பரிவாரங்கள் அவை என்பது புரிந்தது.  ஏகசக்ர தீர்த்தத்தில் இருந்து திரும்பி துவாரகை செல்ல வேண்டியவன் இங்கே வருகிறான்.  துவாரகை செல்லும் வழியில் இங்கேயும் வந்துவிட்டுச் செல்கிறான்.  நாககூடத்தில் அனைவருமே உத்தவனையும், அவனை வழிநடத்திச் சென்ற ராக்ஷசச் சிறுவனையும் மறந்துவிட்டனர்.  ஏனெனில் இத்தனை குதிரைப்படைகளும், ரதங்கள் உள்ள படைகளையும் அன்றுவரை நாககூடம் கண்டதில்லை.  ரத சாரதிகள் வெறும் சாரதிகள் அல்ல.  ரதத்தைச் செலுத்திய வண்ணம் போரிடக் கூடிய திறமை படைத்தவர்கள்.  அவர்களின் வில்லும், அம்புகளும், அம்புகள் இருக்கும் அம்புறாத்தூணியும் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது.  எல்லாவற்றுக்கும் மேல் இவ்வளவு பிரபலமான யாதவத் தலைவர்கள் அனைவரும் நாககூடத்தின் அரசன் ஆன ஆர்யகன் கால்களில் விழுந்து வணங்கி தங்கள் அறிமுகத்தைச் செய்து கொள்வது அவர்களுக்குப் பெருமையாகவும், கெளரவமாகவும் இருந்தது.  யாதவத் தலைவன் ஆன வசுதேவனின் தாய்வழிப் பாட்டனாராக இந்த ஆர்யகன் இருந்ததால் தானே இத்தனை கெளரவம்!  அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கியது.

மணிமானோ மெய்ம்மறந்து, தன்னை மறந்து போய்விட்டான்.  ஆரியர்கள் தங்கள் இனத்தாரிடம் காட்டிய வீராப்பையும், அவர்களின் தொந்திரவுகளையும் குறித்து நிறையக் கேட்டிருந்த மணிமானுக்கு, அவர்களிலும் இத்தனை நல்லவர்கள், வல்லவர்கள் இருப்பது குறித்து ஆச்சரியமாகவே இருந்தது.  இவ்வளவு நட்புணர்வோடு பழகுபவர்கள் இருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை.   அனைவரும் விரைவில் நண்பர்கள் ஆகிவிட்டனர்.  இரட்டைச் சகோதரிகள் மனதிலும் ஒரு ஓரத்தில் நம்பிக்கை புகுந்தது.  இது கிருஷ்ணனின் படை.  அவன் வீரர்கள்.  அவனால் உத்தவன் ராக்ஷசவர்த்தம் அனுப்பப்பட்டிருக்கின்றான் எனில் அதில் ஏதோ பொருள் இருக்கிறது.  அனுப்பி வைத்த கிருஷ்ணனுக்கு அவனை மீட்டுக் கொண்டுவரத் தெரியாதா என்ன!  ஆஹா, கிருஷ்ணன் வந்தே விட்டானாமே!  எப்படி இருப்பான் அவன்?  அதோ கிருஷ்ணன்!

என்ன இவன் இத்தனை கருநீலமாக, மழைமேகம் போன்ற நிறத்தில் இருக்கிறானே!  அவன் உடலின் மஞ்சள் பட்டாடை அந்த நிறத்தை நன்றாகவே எடுத்துக் காட்டுகிறது.  அழகன் என்றால் இவனல்லவோ அழகன்!  தலையில் கிரீடத்தின் மேல் மயில்பீலியால் அலங்காரம்.   தங்கள் தனிப்பட்ட துன்பத்தையும் மறந்து கிருஷ்ணனை வரவேற்கச் சென்ற இரு இரட்டையரும் அவனைப் பார்த்ததுமே தங்களை மறந்தனர்.  வண்ண, வண்ண ஆடைகள் அணிந்து பெரிய பெரிய மணிமாலைகளை ஆபரணமாக அணிந்த நாகர்களும், நாக கன்னிகளும் அனைவருக்குமே கிருஷ்ணனைப் பார்த்ததும் உற்சாகம் கரை புரண்டது.  அனைவரும் உல்லாசமாகச் சிரித்துக் கொண்டும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  எப்போதும் சுருங்கிய முகத்தோடு காணப்படும் ஆர்யகன் முகத்தில் கூடப் புன்சிரிப்பு மலர்ந்தது.  கிருஷ்ணன் பாட்டனார் ஆர்யகனை நமஸ்கரித்துத் தன்னை, “கிருஷ்ண வாசுதேவன்” என அறிமுகம் செய்து கொண்டான்.  அவனையும், அவன் மிகவும் அடக்கமாக விநயத்தோடு கூடிய பணிவு தெரியப்  பாட்டனாரை நமஸ்கரித்ததையும் திறந்த வாய் மூடாமல் பார்த்தனர் இரு சகோதரிகளும்.  இவன் தான் உத்தவனின் நண்பன், சகோதரன், வழிகாட்டி எல்லாமுமா? பொருத்தமானவன் தான்!  இவன் அனைவர் கவனத்தையும் கவர்ந்துவிட்டான் என்பதையும் புரிந்து கொண்டனர்.  ஒரு சங்கு ஒன்று அவன் இடுப்பில் இருந்து தொங்கியது.   அவன் இடத்தோளில் வட்டமாக அதே சமயம் நிறையப் பற்களோடு கூடிய சக்கரம் போன்ற ஒரு ஆயுதம் பளபளத்தது.   அவன் சிரிப்போ, மிக மிக இனிமை;  அனைத்திலும் இனிமை.  உத்தவன் சிரிப்பை விடக் கூட இனிமையோ?  இல்லை இல்லை, உத்தவன் சிரிப்பைப் போல் இனிமை!

அனைவரும் வரவேற்பு முடிந்து அவரவர் இல்லம் திரும்புகையில் கிருஷ்ணன் தான் வந்த ரதத்தில் ஏறாமல் பாட்டனாரின் பல்லக்கு அருகே பேசிக் கொண்டே நடந்து வந்தான்.  உத்தவனின் இந்த அருமை நண்பன் நடந்துகொள்ளும் முறை அவர்கள் இருவரையும் அதிர அடித்தது எனில் அவன் இப்போது வெகு சரளமாக நடந்து கொண்டே பாட்டனாரிடம் பேசுவதும் அதிர்ச்சியாக இருந்தது.  முதல் பார்வையில் அவனைப் பார்க்கையில் எதற்கும் அஞ்சாதவனாக, உணர்வுகளை வெளிக்காட்டாதவனாக, மிகவும் மதிப்புடையவனாகக் காணப்பட்டான்.  ஆனால், போகப் போக வெகு சகஜமாக எப்போதும் பார்த்துப் பேசும் ஒருவனாக ஆகிவிட்டானே!  அதுவும் அவன் கண்கள்!  பாட்டனார் குடும்பத்தினர் அனைவரையும் ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்கையில், அந்தச் சிரிக்கும் கண்களால் அவன் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகப் பார்த்துச் சிரித்து அறிமுகத்தை ஏற்றுக் கொண்டான்.  ஏன், இந்த இரட்டைச் சகோதரிகளை அறிமுகம் செய்கையில் கூட அவன் கண்கள் அவர்களைக் கண்டு கருணையுடன் சிரித்தன.  விரைவில் கண்ணன் சரளமாக அனைவரிடமும் பழக ஆரம்பித்துவிட்டான். அனைவரையும் பார்த்துத் தன் குறும்புச் சிரிப்புடனும், கேலிப் பேச்சுடனும் பேசிக் கொண்டு விளையாடவும் ஆரம்பித்தான்.  அவன் இதழ்களில் எப்போதுமே புன்சிரிப்புக் குடி கொண்டு இருப்பதைக் கவனித்தனர் இருவரும்.  ஆர்யகனிடம் கிருஷ்ணன் என்ன சொன்னான் என்பதே தெரியவில்லை.  ஆனால் ஆர்யகன் சிரித்த சிரிப்பை அவர்கள் வாழ்நாளில் அன்று வரை கண்டதில்லை. ஆஹா, இவன் பாட்டனாரையே சிரிக்க வைத்துவிட்டானே! நிச்சயமாக அதிசயமான மனிதன் தான்!  அற்புதமானவன் தான்!

அனைவரும் ஊர்வலமாகப் பசுபதி நாதர் குடி கொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்றனர்.  கிருஷ்ணன் அங்கே பசுபதிநாதரை வழிபட்டான்.  பின்னர் அரண்மனைக்குக் கிருஷ்ணன் வந்தான்.   படைத்தலைவர்கள் அனைவரும் சென்றதும்,  ஆர்யகன் குடும்பமே அவனைச் சூழ்ந்து கொண்டது.



Thursday, August 22, 2013

பீமன் தந்தையாகப் போகிறான்!

அப்போது அங்கே உணர்ச்சிகள் மிகுந்ததொரு குரலிலே ஏதோ பாடுவது போல் கேட்டது.  திடீரென கேட்ட அந்தக் குரல் அனைவரையும் தூக்கிவாரிப் போட வைத்தது.  பீமன் எழுந்து அமர்ந்து மெல்லிய புன்னகையோடும், உள்ளார்ந்த அன்போடும் அந்தக் குரலைக் கேட்டுப் பதிலுக்குத் தன் குரலாலேயே ஒரு உறுமல் உறுமித் தன் பதிலைத் தெரிவித்தான்.  பீமனுக்கு எப்படி இருந்ததோ மற்றவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது என்பது புரிந்தது.  எவருக்கும் இது பிடிக்கவில்லை.  ஹிடும்பியின் அழைப்பும், பீமனின் பதிலும் அவர்கள் மனதிலே கோபமும், வருத்தமுமே தந்தது.  குந்தியோ வெட்கத்துடனும், அவமானத்துடனும் தன்னிரு காதுகளையும் பொத்தியவண்ணம் தலையைக் குனிந்து கொண்டாள்.  அவளால் இதைக் கொஞ்சம் கூடச் சகிக்க முடியவில்லை.  யுதிஷ்டிரனோ எனில் வழக்கம் போல் கனிந்த ஒரு புன்னகை.  அவன் தம்பி பீமனும், அவனுடைய அழகிய ராக்ஷசி மனைவியும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்ட இந்த மறைமுகச் சைகைகள் அவன் இதழில் புன்னகையை வரவழைத்தன.  பீமனைக் கனிவோடு பார்த்துச் சிரித்தான்.  அர்ஜுனனோ எந்நேரம் சீறுவானோ என்னும்படி கோபப் பார்வை பார்த்தான்.  நகுலனால் தன் வெறுப்பை மறைக்க இயலவில்லை.  சஹாதேவனோ இவ்வுலகிலேயே இல்லையோ என்னும்படியாகத் தன் அசைக்க இயலா நிலைக்கு மீளச் சென்றுவிட்டான். அரைமனதாகத் தன் தாயையும், சகோதரர்களையும் பார்த்துப் பூடகமாகச் சிரித்த பீமன், உத்தவனைப் பார்த்தான். சிரித்துக் கொண்டே அவனிடம், “உத்தவா, என் அருமைத் தம்பி, இந்த இடத்தை விட்டுச் சென்று விடுவதைப் பேசுவது உனக்கு எளிதாக இருக்கலாம்.  ஆனால் ஆனால் தம்பி, மஹாராஜா, வ்ருகோதரனின் ஆட்சியில் முன்னோரான அரசன் விரோசனனால் ஏற்படுத்தப் பட்ட சட்டம் ஒன்று மாற்ற முடியாததாக உள்ளது.  அது என்னவெனில், இந்த ராக்ஷச வர்த்தத்துக்குள் நுழையும் எவரும் திரும்பிச் செல்ல முடியாது என்பதுவே! “ என்றான்.

“ஆஹா, அப்படி எல்லாம் அவனிடம் பேசாதே பீமா!”குந்தி கடுமையைக் காட்டினாள்.  “ஓஹோ, தாயே, நான் என்ன செய்யட்டும்! நான் இப்போது என்றோ இறந்த அந்த ராஜா விரோசனின் ஆவியைத் தட்டி எழுப்பி, அவனால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மாற்றிச் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டாக வேண்டும்.  அதுவும் என் அருமைத் தம்பி உத்தவனின் நலத்துக்காக. “  பீமன் சிரிக்காமல் பேசினான்.  “ஆனால் அது ஒன்றும் எளிதல்ல.” இப்போது அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.  “ஆஹா, அது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை; பீமா, நீ மனது வைக்க வேண்டும்.  அவ்வளவு தான்!” என்றான் யுதிஷ்டிரன் நடுவில் குறுக்கிட்டு. “ஆமாம், என் மூத்தவனே, நீ சொல்வது சரியே.  ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன்.  கிருஷ்ணன் சொன்னாலும் சரி, ஆசாரியர் சொன்னாலும் சரி, அல்லது தாத்தா பீஷ்மரோ, சித்தப்பா விதுரரோ அழைத்தாலும் சரி, இங்கிருந்து இன்னும் ஒரு வருடத்துக்குக் கிளம்புகிற எண்ணம் எனக்கில்லை.  நாம் அனைவருமே இங்கே இன்னும் ஒரு வருடம் இருந்தாக வேண்டும்.” என்று தீர்மானமாகச் சொன்னான் பீமன்.  கோபத்தில் கொதித்தான் அர்ஜுனன். “என்ன ஒரு வருஷமா?  எதற்கு, ஏன் இங்கே ஒருவருடம் இருந்தாக வேண்டும் என்கிறாய்?  என்ன ஆயிற்று பீமா உனக்கு? என்ன தான் சொல்கிறாய் நீ?” கோபத்தில் பொரிந்தான் அர்ஜுனன்.


“ஓஹோ, ரொம்பவே உணர்ச்சி வசப்படாதே என் அருமைத் தம்பி.  நான் சொல்வதைக் கேள்.  எல்லாம் சரியாகத் தான் நடக்கும்.  சரியாகவே இருக்கும்.  இன்னும் ஐந்தாறு மாதங்களில் நான் தந்தையாகப் போகிறேன்.  அதன் பின்னர் குழந்தைக்கு ஆறு மாதமாவது ஆகிற வரையில் ஹிடும்பியை என்னால் பிரிந்து வர முடியாது.  என் உதவி அவளுக்குத் தேவை.  ஆகவே நாம் அனைவருமே அது வரை பொறுத்துத் தான் ஆகவேண்டும்.”


“ஆஹா, பீமா, உனக்குக் குழந்தை பிறக்கப் போகிறதா?  இதை ஏன் முன்னரே சொல்லவில்லை?? “ குந்திக்குத் தன் மருமகள் ஒரு ராக்ஷசி என்பதும், அவளுக்கும் தன் மகனுக்கும் பிறக்கப் போகும் குழந்தையும் ஒரு ராக்ஷசனாகவே இருந்தால் என்ன செய்வது என்பதும் சுத்தமாக மறந்து போய்விட்டது.  முதல் முதலாகப் பேரக்குழந்தையைப் பார்க்கப் போகும் ஆனந்தம் ஒன்றே அவளிடம் வெளிப்பட்டது.  ஒரு தாயாகத் தன் அன்பைக் காட்டியவள், இப்போது ஒரு பாட்டியாகத் தன் பேரக் குழந்தையையும் சீராட்ட எண்ணினாளோ? “ஆஹா, அந்தக் குழந்தை மட்டும் ஆண் மகவாகப் பிறந்தால்??? குரு வம்சத்தினரின் மூத்த பேரக் குழந்தை, அடுத்த யுவராஜா, சக்கரவர்த்தி பரதனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ராஜ்யத்தின் முதல் வாரிசாக ஆவான்.  அவன் தான் அடுத்த ராஜாவாகவும் இருப்பான்.  குரு வம்சத்தினரின் அரியணைக்கு ஒரு வாரிசு பிறக்கப் போகிறது.”  குந்தி மேன்மேலும் சொல்லிக் கொண்டே போனாள்.  “நிச்சயமாய் தாயே, அப்படியே நடக்கும்.  ஆனால், பார்;  உன் அருமை மருமகள் ஏதேனும் தந்திரங்கள் செய்து அந்தக் குழந்தையைப் பெண்ணாகப் பெற்றெடுக்காமல் இருக்க வேண்டுமே!  அப்போது நீ என்ன செய்வாய்?” பீமன் தனக்குள் ஊறிய சிரிப்போடு தாயைப் பார்த்துக் கேட்டான்.  “ பீமா, பீமா, இப்படியான பிரதிகூலமான வார்த்தைகளை ஒருபோதும் பேசாதே!  திக் தேவதைகள் “ததாஸ்து” சொல்லிவிட்டால்? எப்போதும் நற் சூசகங்களைக் கொடுக்கும் வார்த்தைகளையே பேசு!” என்று குந்தி மகனை அடக்கினாள்.


இப்போது உத்தவனுக்கு முன்னர் நாம் நாககூடம் அவசரமாகச் செல்ல வேண்டும்.  




இளவரசிகளான இரட்டையர் இருவரும் உத்தவன் தங்களைப் பிரிந்து சென்றதிலிருந்தே தங்கள் வசமிழந்து, மனம் உடைந்து மிக மிக மோசமாக ஆகிவிட்டனர்.  அவர்கள் இருவருமே தாங்கள் இருவரும் உத்தவன் மனைவியர் ஆகப் போவதாகக் கனவுகள் கண்டு கொண்டிருந்தனர்.  அதற்கு எவ்வகையிலும் எதிர்ப்பு வராது என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.  இப்போதோ அவன் அவர்களை விட்டுவிட்டு சாத்தான்கள் வாழுமிடமான ராக்ஷசவர்த்தம் சென்றுவிட்டான்.  இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு அப்படியும் அடக்கமுடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர்.  இனி உத்தவன் திரும்பி வருவது எங்கே?  அவன் ராக்ஷசர்களால் பக்ஷணம் பண்ணப் பட்டிருப்பான். என்றாலும் அவர்கள் உள் மனதின் ஓரத்தில் ஒரு சிறு நம்பிக்கை.  இரண்டு பெளர்ணமிகள் கடக்கும் வரை உத்தவனுக்குக் காத்திருப்பது. அப்படி அவன் வரவில்லை எனில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது.  இதுவே அவர்கள் எடுத்த முடிவு.


அவர்கள் இருவராலும் புரிந்துகொள்ள இயலாத விஷயம் என்னவெனில், கிருஷ்ணன் ஏன் அவர்களின் மனம் கவர்ந்த உத்தவனைக் காட்டுக்குள்ளே ராக்ஷசர்களின் நடுவே போய்த் தேடச் சொன்னான்? அங்கே ராக்ஷசர்களால் உத்தவன் உணவாக்கப்படுவான் என்பதை அந்தக் கிருஷ்ணன் அறிய மாட்டானா என்ன?  அவனைப் போய் இவர்களெல்லாம் கடவுள் எனக் கொண்டாடுகின்றனரே!  அப்படி அவன் கடவுளாக இருந்தானெனில் உத்தவனை ஏன் ராக்ஷசர்கள் மத்தியில் அனுப்பினான்? அது உத்தவனின் உயிருக்கு உத்தரவாதமில்லா ஒன்று என்று அவன் அறிய மாட்டானா?  இப்படிப்பட்டவனையா கடவுள் என்கின்றனர்? ஹூம், இந்த உத்தவன் என்ன வேண்டுமானும் தன் அருமைச் சகோதரன், நண்பன் ஆன கிருஷ்ணனைக் குறித்துப் பெருமையாகச் சொல்லட்டும்.  ஆனால் நம் வரையிலும் இந்தக் கிருஷ்ணன் ஒரு மோசமான பொல்லாத மனிதன்.  நம் இருவருக்கும் கணவனாக வேண்டிய உத்தவனைத் துணிந்து கொலைக்களமாகிய ராக்ஷச வர்த்தத்துக்கு அனுப்பியவன்.  அவன் திரும்பியே வரமுடியா இடத்துக்கு அவனை அனுப்பி வைக்கப் பார்க்கிறவன்!  இவன் நல்லவனாக எப்படி இருக்க முடியும்!  வாய்ப்பே இல்லை!


இந்தப் பெண்களின் நடவடிக்கையும், அவர்கள் இருந்த  இருப்பையும் பார்த்தால் அவள் பெற்றோருக்கும், சகோதரனுக்கும் மனம் வருந்தியது.  இது சரியில்லை என்பது அவர்களுக்குப் புரிந்தது.  இருவருமே ஒரு மூலையில் போய் முடங்கிக் கொள்கின்றனர்.  ஒருவர் தோள் மேல் இன்னொருவர் கைபோட்டு அணைத்துக் கொள்கின்றனர்.  பெருமூச்சு விட்டபடியோ அல்லது கண்ணீர் வடித்தபடியோ அமர்ந்திருக்கின்றனர்.  அவர்களைச் சமாதானம் செய்ய முடியவில்லை.  சாப்பிட வைக்க முடியவில்லை.  வற்புறுத்திச் சாப்பிட உட்கார்த்தினால் இரண்டொரு கைப்பிடி சாப்பாடைச் சாப்பிடுகையிலேயே அவர்களால் தாங்க முடியவில்லை.  பெரிதாக வெடித்து அழ ஆரம்பிக்கின்றனர்.  அவ்வளவு ஏன்?  பசுபதிநாதரைத் தொழுது வணங்கவோ, சடங்குகளில் கலந்து கொள்வதோ, சடங்குகளோடு கூடிய நடனங்களில் பங்கேற்பதோ முற்றிலும் தவிர்க்கின்றனர்.  அவர்களின் தாயான ரவிகா சில சமயம் அவர்களைக் கடுமையாகக் கடிந்தாலும் சில சமயம் ஆறுதலும் கூறுகிறாள்.  அரண்மனையின் மற்ற நபர்களும் அவர்களை ஆறுதல் படுத்துவதில் முனைந்திருக்கின்றனர். 


ஒருநாள் அந்தப் பெண்கள் கொஞ்சம் மனம் சமாதானம் அடைந்தது போல் காணப்படவே அன்று ரவிகா அவர்களைப் பிடித்துக் கொண்டாள். இருவரிடமும் தன் கோபத்தைக் கடுமையாகக் காட்டினாள்.  “முட்டாள் பெண்களே, உங்களுக்கு அறிவில்லையா?  இப்படியா நாள் தோறும் அழுது கொண்டும், உணவு உண்ணாமலும் இருப்பது? பசுபதி நாதரின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இழந்து விட்டீர்களா?  அவரை விடப் பெரியவர் எவரேனும் உண்டோ?  அவர் அருளினால் உத்தவன் நலமாகவே திரும்புவான்.  அவனுக்கு ஒன்றும் நேராது!” அப்போது அங்கே வந்த அவர்கள் சகோதரன் மணிமானும் அதை ஆமோதித்தான்.  ஆனால் பிங்களாவோ, தாயைப் பார்த்து, “சும்மா எங்களுக்கு சமாதானம் ஏற்பட வேண்டும் எனப் பொய் சொல்லாதீர்கள் தாயே!  உத்தவன் ஒரு நாளும் திரும்பி வரப்போவதில்லை.  ராக்ஷசர்கள் இத்தனை நாட்களில் அவனை நன்கு பக்ஷணம் செய்து  சாப்பிட்டிருப்பார்கள்.  நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?  ஒன்றும் தெரியாதவர்களா?  எங்களை ஏமாற்ற முயல வேண்டாம்.” என்று கடுமையாக எதிர்த்தாள்.


அதைக் கேட்ட கபிலாவோ, ஆமோதிப்பாகத் தலையை ஆட்டியதோடு அல்லாமல், தன் தாயைப் பார்த்து, “அப்படி உத்தவன் திரும்பி வருவான் என நிச்சயமாக உனக்குத் தெரியும் என்றால் ஏன் அவனோடு துணைக்கு உன் அருமை மகனை அனுப்பி வைக்கவில்லை!  அவனையும் அனுப்பி இருக்கலாமே!” என்றவள் திரும்பித் தன் சகோதரனைப் பார்த்து, “ ஆஹா, என் வீரம் நிறைந்த சகோதரரே!  நீர் உங்களைக் குறித்து மட்டும் எண்ணிக் கொள்கிறீர்கள்;  உங்கள் நலத்தை மட்டும்.  ஆனால் நீங்கள் ஒரு கோழை!  பயந்தாங்குளி. நீர் பயந்து நடுங்கி விட்டீர்! உத்தவனோடு துணைக்கு நீங்கள் ஏன் போயிருக்கக் கூடாது?  ஏன் போகவில்லை?” என்றாள்.


Saturday, August 17, 2013

சஹாதேவன் முடிவெடுக்கிறான்!

இந்த கேலிப் பேச்சுக்களை யுதிஷ்டிரன் நிறுத்தவேண்டி சைகை காட்டினான்.  “நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதைச் செய்வதை விட, எது சரியானதோ அதைத் தான் செய்ய வேண்டும்.  நாம் ஆசாரியர் வியாசரிடமிருந்து இப்போது நாம்  செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த ஆலோசனைகள் அவருக்கு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் அவா.”

“நாங்கள் ஆசாரியரைச் சந்தித்தபோது, கிருஷ்ணன் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதை மட்டுமே கண்டு பிடிக்கச் சொன்னான்.” உத்தவன் கூறினான்.

அர்ஜுனன் இடை மறித்து, “ஆசாரியருக்கு நாம் அனைவருமே குழந்தைகள்.  நம்மிடம் பெரிதும் அன்பு வைத்திருக்கிறார் என்பது உண்மையே. “அர்ஜுனன் தனக்குள் தானே ஏதோ யோசித்து முடிவெடுத்திருக்கிறான் என்பதைப் புலப்படுத்தும் வண்ணம் பரபரப்புடன் காணப்பட்டான். மேலும் தொடர்ந்து, “ அதே போல் சித்தப்பா விதுரரும், தாத்தா பீஷ்மரும் நம்முடன் பாசத்துடன் இருந்தாலும், அவர்களின் முதல் கவலை குரு வம்சம் அழியக் கூடாது என்பதும் ஹஸ்தினாபுரத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதுமே. குரு வம்சத்தினரின் மேன்மை ஒன்றே அவர்களுக்கு முக்கியம்.  நாம் அந்த மேன்மை என்னும் நெருப்பை அணையாமல் பாதுகாக்கும் எண்ணெயாக இருக்க வேண்டும் என்பதுவே அவர்கள் எதிர்பார்ப்பு; விருப்பம் எல்லாமும்.  அதை ஜகஜ்ஜோதியாக எரிய வைக்கும் முயற்சியில் நாம் அனைவரும் எரிந்து சாம்பலாக ஆனால் கூட அவர்களுக்கு லட்சியமில்லை.”

“நீ கொஞ்சமும் நியாயமே இல்லாமல் அநியாயமாகப் பேசுகிறாய்.  ஆசாரியருக்கு நம்மிடம் அன்பில்லை என்பதை என்னால் ஏற்க முடியாது.  அதை என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.” யுதிஷ்டிரன் கொஞ்சம் கடுமையான குரலில் சொன்னான்.  “ஆஹா, நான் பேசுவதில் நியாயம் இல்லையா?” அர்ஜுனன் உணர்ச்சித் துடிப்புடன் கேட்டான்.


 “ஆரியர்களுக்குள்ளேயே சிறந்த ஐந்து வீரர்கள் இங்கிருக்கிறோம்.  தாய்களுக்குள்ளேயே சிறந்த தாய், ஐந்து மக்களை வளர்த்த தாய் இதோ இந்தக் குந்தி தேவி! அனைத்திலும் நாம் சிறப்பான தகுதி உள்ளவர்களே!  எனினும் நாம் மகிழ்வோடு இருக்க முடியவில்லை. நாம் எவ்வகையிலாவது செல்வாக்குடன் இருக்க முடியுமா?  முடியாது.  நாம் அதற்கெல்லாம் தகுதி இல்லாதவர்களாக ஆக்கப்பட்டுவிட்டோம்.  அதிலும் இந்த மிக மோசமான காட்டில் நாம் கெட்டுக் குட்டிச்சுவராகத் தான் போகப் போகிறோம்.  ஆம், கெட்டுக் குட்டிச்சுவராக, குட்டிச்சுவராக!” அர்ஜுனனின் மன வேதனையும் கோபமும் ஒருங்கே எதிரொலித்தது. அவனுடைய அளவற்ற கோபத்தின் விளைவே மேற்கண்ட பேச்சுக்களைப் பேசுகிறான் என்றும் இணக்கம் இல்லாமலும்,  வேறு வழியில்லாமலும், இந்நிலையை அவன் ஏற்படுத்திக் கொண்டான் என்பதும் புரிந்தது.

நகுலன் அவனை மிக வேகமாக ஆமோதித்தான். பீமனோ எதற்கும் அசைந்து கொடுக்காமல் மிகப் பெரியதொரு நகைச்சுவையைக் கேட்டாற்போல் அர்ஜுனன் முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினான்.  பெரியதாகச் சிரிக்கவ்வும் செய்தான்.  சஹாதேவன் முகத்திலோ எவ்வித உணர்வுகளும் இல்லாமல் ஒரு பொம்மையைப் போல் அசையாமல் வீற்றிருந்தான். யுதிஷ்டிரன் கொஞ்சம் கருணையுடன் அர்ஜுனனைப் பார்த்துச் சிரித்தான்.  ஒரு பாசமுள்ள தந்தை தன் கோபக்காரப் பிடிவாத குணமுள்ள மகனைப் பார்ப்பது போல் பாசம் பொங்க அர்ஜுனனைப் பார்த்தான். “அர்ஜுனா, நாம் இப்போது நம்முடைய சுய விருப்பங்களைக் குறித்துப் பேசும் நேரம் இதுவல்ல. இதைக் குறித்து இப்போது நினைக்கும் நிலையில் நாம் இல்லை.  நாம் யோசிக்க வேண்டியது இப்போது நம்முடைய கடமை என்ன; அதாவது தர்மம் என்ன என்பது தான்!”  தன் பேச்சுத் திறமையில் நம்பிக்கை வைத்திருக்கும் யுதிஷ்டிரன் அர்ஜுனனின் இந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிவிடாமல் அமைதி காத்ததோடு அல்லாமல் அவன் குரலிலும் அந்த அமைதி தெரிந்தது.


“கிருஷ்ணனை விடப் பெரிய தர்மாத்மாக்கள் இருக்கின்றனரா? அண்ணாரே, இந்த ஆர்ய வர்த்தம் முழுதும் தேடினாலும் தர்மத்தைக் கடைப்பிடிக்கவும், தர்மத்தைக் காக்கவும், கிருஷ்ணனை விட வேறு எவரும் எனக்குத் தெரியவில்லையே!  இப்போது அவன் தானே சொல்லி அனுப்பி இருக்கிறான்?  கிருஷ்ணனின் யோசனையை ஏற்க வேண்டிய கடமை, அதாவது உங்கள் மொழியில் தர்மம் நமக்கு இல்லையா? இவ்வுலகத்து மக்கள் அனைவரின் நன்மைக்காகவும், நியாயங்களுக்காகவும் போராடி வரும் கிருஷ்ணனுக்குத் துணை நின்று அவை அனைத்தையும் காக்க வேண்டியவர்கள் இல்லையா நாம்?  நாம் இப்போது இருக்க வேண்டிய இடம் கிருஷ்ணன் பக்கத்தில் அல்லவோ!”

“பொறுமை அர்ஜுனா, பொறுமை!  இப்போது நாம் அமைதியாகக் கொஞ்சம் பொறுமையுடன் இதைக் குறித்துச் சிந்திப்போம்.  எது உயர்ந்த தர்மம்?? நமக்கு நாமே முடிவெடுப்பதா?  அல்லது பெரியோர்களின் யோசனைக்குக் காத்திருந்து அதற்கேற்றாற்போல் முடிவெடுப்பதா? ஆசாரியர் வியாசர், தாத்தா பீஷ்மர், சித்தப்பா விதுரர் ஆகியோரின் யோசனைகள்…………”

“ஹூம், அவர்கள் இன்னுமா நம்மை நினைவில் வைத்திருக்கப் போகின்றனர்?? என்றோ மறந்திருப்பார்கள்!” நகுலன் அவர்கள் அனைவரும் எதிர்பாராவண்ணம் இடையில் புகுந்து சட்டென்று கோபமாகச் சொன்னான்.

“ஆஹா, நகுலா, நீயுமா?  அப்படி எல்லாம் பேசுவது தப்பு குழந்தாய்! நம் பெரியோரைக் குறித்து நாமே தவறாகப் பேசலாமா?  அதிலும் நம் மரியாதைக்குரிய ராணி, நம்  பாட்டியார் சத்யவதி அவர்கள் நேரிலே பேசிக் கிருஷ்ணனை இந்த வேலைக்கு, அதாவது நம்மைக் கண்டுபிடிக்கும் பெரியதொரு பணிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.  இவை எல்லாம் தாத்தா பீஷ்மருக்கோ, அல்லது சித்தப்பா விதுரருக்கோ தெரியாதிருக்குமா என்ன? நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்.”

“அப்படியே இருக்கட்டும் அண்ணாரே,  இப்போது நாம் நம்மைக் குறித்து யோசித்து நாமே முடிவெடுப்பதன் மூலம் மேலும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் ஆவோம்.  அப்படி நினையுங்களேன்.  நம்முடைய வாழ்க்கைக்கும், நம்முடைய உயிருக்கும் நாமே எஜமானர்களாக இருப்போம்;  இருக்க வேண்டும்.” அர்ஜுனன் மீண்டும் கூறினான்.

“அர்ஜுனா, நமக்கு நாமே சிந்தித்து முடிவெடுப்பது நம் கடமை தான்.  அதை நான் ஒத்துக்கொள்கிறேன்.  ஆனால் அதற்கான சமயம் இதுவல்ல என நினைக்கிறேன்.  இந்த நிமிஷம் அப்படி ஒரு முடிவெடுப்பது சரியானது என எனக்கு நானே சமாதானம் செய்து கொள்ள இயலவில்லை.  அது நம் கடமை என எனக்குத் தோன்றவே இல்லை.  ஆகவே உன்னுடன் இப்போது ஒத்துப் போக இயலவில்லை. “ பேசிக் கொண்டிருந்த யுதிஷ்டிரன் திடீரென ஏதோ நினைத்தவன் போல சஹாதேவன் பக்கம் திரும்பி, “நீ என்ன வாய் மூடி மெளனியாகவே இருக்கிறாய்?  இந்த விஷயத்தில் உன்னுடைய கருத்து என்ன என்பதைக் கொஞ்சம் சொல்லக் கூடாதா?  சொல், உன் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டான்.

இரட்டையரில் சின்னவன் ஆன சஹாதேவன் அவ்வளவு நேரமும் வாய் மூடி மெளனியாகவே இருந்தான்.  அரைக்கண் மூடிய நிலையில் தரையைக் குத்திட்டுப் பார்த்த வண்ணம் அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தான். தற்போது தன் கண்களை நன்றாகத் திறந்து யுதிஷ்டிரனையும், மற்ற அனைவரையும் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பைக் காட்டினான்.  பின்னர் மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.  ஒவ்வொரு வார்த்தைகளும் அழுத்தமாக உறுதியாகத் துல்லியமாக வந்து விழுந்தன.  அனைவருமே சஹாதேவன் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தனர்.  அவன் எப்போதுமே அதிகம் பேசக் கூடியவன் அல்ல.  பேசினால் அவன் பேச்சு ஒவ்வொன்றும் அக்ஷர லக்ஷம் பெறும் வார்த்தைகளாகவே அமையும்.  தேவையில்லாமல் பேச மாட்டான்.  பேசினால் அவற்றில் சரியான பொருள் காணப்படும்.  இப்போது அவன் பேச ஆரம்பிக்கவே அனைவருமே அவன் பக்கம் ஆவலுடன் பார்த்தனர். “ நான் விண்ணின் நக்ஷத்திரங்களின் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன்.  வெகு நாட்களாகக் கணித்ததில் ரோஹிணி நக்ஷத்திரத்தின் பாதங்களில் பிறந்த ஒருவர் மூலம் நமக்கு விடிவு பிறக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  நம்மோடு சேர்ந்தவர்களில் ரோஹிணி நக்ஷத்திரப் பாதங்களில் பிறந்த ஒரே மனிதன் நம் வாசுதேவக் கிருஷ்ணன் மட்டுமே.  நம் சகோதரனும் ஆவான்.”

“அதான் உத்தவன் கிருஷ்ணனிடமிருந்து தானே வந்திருக்கிறான்?” அர்ஜுனன் இடைவெட்டினான்.
“அடேய், தந்திரக்காரா, இதை முன்னாடியே என்னிடம் சொல்வதற்கென்ன?” பீமன் கேட்டான்.
“நீ ஒன்றும் என்னிடம் இதை எல்லாம் கேட்கவே இல்லையே? கேட்டாயா?” சஹாதேவன் புன்முறுவலுடன் திருப்பிக் கொடுத்தான்.

“ஆஹா, இப்போது புரிகிறது எனக்கு, தினம் தினம் இரவுகளில் நீ விடிய விடிய விண்ணைப் பார்ப்பதும் கணக்குப் போடுவதும், பெருமூச்சு விடுவதுமாக இருந்ததன் காரணம்.” நகுலன் சொல்கையில், பீமன் இடைமறித்து, “ஆமாம், ஆமாம், அதான் தூக்கமிழந்து சரியான உணவில்லாமல் இளைத்துப் போயிருக்கிறானே, அதனால் தான் என்பதும் புரிகிறது” என்றான்.

 சஹாதேவனின் புத்திசாலித்தனத்திலும், அவன் எடுக்கும் முடிவுகளிலும் பெரும் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கும் யுதிஷ்டிரன் அவனைப் பார்த்து, “இப்போது உன் ஆலோசனை என்ன சஹாதேவா?” என்று கேட்டான்.  நிதானமான, அதே சமயம் உறுதியான குரலில் சஹாதேவன், “இப்போது உத்தவனைத் திரும்பக் கிருஷ்ணனிடம் அனுப்பி வைப்போம்.  அவன் என்ன சொல்கிறானோ அதற்கு நாம் கடமைப் பட்டவர்கள்.  கிருஷ்ண வாசுதேவன் நம்மை அவனுடன் வரச்சொன்னால் நாம் அவனோடு துவாரகை செல்வோம். அதற்குள் இந்த கிரஹங்களின் நிலைமையும் சரியாகி நம் அனைவருக்கும் அநுகூலமான நிலைக்கு வந்துவிடும்.”

“ஓ, சஹாதேவா, உனக்கு எப்படி நன்றி சொல்வது?  எப்போதும் போல் நீ மிக அழகாகச் சொல்லிவிட்டாய்!  நம்மைக் கடவுளர் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனரோ அதை நீ அறிந்து சொல்கிறாய் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. “ யுதிஷ்டிரன் பெருமையுடன் பாராட்டினான்.

“பின்னர் அதற்கு அதிக நாட்கள் ஆகாது.” அர்ஜுனன் குரலில் நிம்மதி தெரிந்தது.  “உத்தவன் நாளைக்கே திரும்பப் போய்க் கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டு பதினைந்து நாட்கள்; அல்லது அதிகம் போனால் ஒரு மாதத்திற்குள் திரும்ப வந்து சொல்லட்டும்!” என்றான் உற்சாகம் கொப்பளிக்க. குந்தியும் அதை ஆமோதித்து உத்தவன் விரைவில் திரும்பிச் சென்று செய்தி கொண்டு வரட்டும் எனக் கூறினாள்.





Wednesday, August 14, 2013

உத்தவனின் தூதும், சகோதரர்களின் கலந்துரையாடலும்!

ஒழுங்கு செய்யப்படாத தாடியையும், நீண்ட தலைமயிரையும் தவிர மற்றப்படி பார்க்க மிகச் சுத்தமாகவும், ஒழுங்கான ஆடைகளோடும் எப்போதும் போல் காணப்பட்ட அர்ஜுனன் முகத்தில் விவரிக்க ஒண்ணாததொரு சந்தோஷம்  குமிழியிட்டது.  “ஆஹா, நீ கடவுளின் தூதுவன் உத்தவா!” என்றான் அர்ஜுனன்.  அவன் குரலிலேயே அவன் மனதின் சந்தோஷம் பிரதிபலித்தது. அவன் உள்ளம் உவகையில் துள்ளிக் குதித்ததை அவனால் மறைக்க இயலவில்லை.   “மிகப் பயங்கரமான இந்த உலகின்  இந்தப் பகுதியிலிருந்து விரைவில் நாங்கள் அனைவரும் வெளியேறுவோம் என நம்புகிறேன்.” என்றான் மேலும்.  நம்பிக்கை கண்களிலும் முகத்திலும் பூரணமாகத் தெரிய யுதிஷ்டிரன் பக்கம் திரும்பிப் பார்த்தான்.   யுதிஷ்டிரனோ தன் கண்களில் எந்தவிதமான அறிகுறியையும் காட்டாமல், முகத்திலும் புன்சிரிப்புக் கூட இல்லாமல் எங்கேயோ நினைவுகளில் மூழ்கிப் போய் இருந்தான்.  மற்ற அனைவரும் யுதிஷ்டிரன் வாய் திறந்து பேசக் காத்திருந்தனர்.  அந்த ஐந்து சகோதரர்களும் ஐந்துவிதமான மனோபாவங்களைக் கொண்டிருந்தனர்.  அவரவர் கருத்துக்களிலும் வேறுபாடுகள்.  உணர்வுகளிலும், இயல்பான நடவடிக்கைகளுமே மாறுபட்டுத் தான் இருந்தன.  என்றாலும் அவர்களின் அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்தவன் யுதிஷ்டிரனின் ஆலோசனையே அங்கே முடிவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. குடும்பத் தலைவன் அவன் தான் என்பதால் அவன் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.  அவன் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

சற்று நேரம் யோசனையில் இருந்த யுதிஷ்டிரன் உத்தவன் பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தான்.  அவன் குரல் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தது.  “உத்தவா, இந்த நாடு கடத்தலை நாங்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டோம்.  ஏனெனில் இது எங்கள் கடமை.  அதோடு தாத்தா பீஷ்மரும், சித்தப்பா விதுரரும் குரு வம்சத்தினரின் நலனைக் காக்க வேண்டியே எங்களை நாட்டை விட்டுச் செல்லச் சொன்னார்கள்.  அதோடு எங்கள் நலனும், முக்கியமாக எங்கள் உயிர் காக்கப்படவேண்டியதும் அதில் அடங்கி இருந்தது.”  சற்றே நிறுத்தினான் யுதிஷ்டிரன்.  அப்போது அர்ஜுனன் குறுக்கிட்டு, “அண்ணாரே, இது குருவம்சத்தினரின் நன்மைக்கு எனத் தாங்கள் சொல்கிறீர்கள். அது சரியே.  ஆனால் குரு வம்சத்தினர் நாம் இல்லை;  நம் பெரியப்பா திருதராஷ்டிரர் அவர்களின் புத்திரர் நூற்றுவரும் மட்டுமே.  அவர்கள் நன்மைக்காக மட்டுமே  நாம் நாட்டை விட்டுக் கடத்தப்பட்டோம்.” என்றான் கொஞ்சம் கோபமாகவே.  ஆனால் யுதிஷ்டிரனோ அர்ஜுனனின் கோபக் குரலை அலட்சியம் செய்துவிட்டு மேலே பேச ஆரம்பித்தான்.  “நாங்கள் வாரணாவதத்தையும் விட்டு சுரங்கப் பாதையில் தப்பி ஓடி வந்தோம்.  ஏனெனில் எங்கள் சித்தப்பா விதுரருக்கு நாங்கள் அப்படி ஓடிப் போய்த் தப்பிக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்.  எங்கள் நன்மையை மட்டுமே மனதில் சுமந்து கொண்டிருப்பவர் அவர்.  அவர் சொல்லைத் தட்ட முடியுமா?  மேலும் அவர்கள் நாங்கள் தப்பி ஓடினால் மட்டும் போதாது.  இறந்துவிட்டோம் என உலகத்தவர் நினைக்கவேண்டும் என்றும் விரும்பினார். அது தான் புத்திசாலித் தனம், விவேகம் என்றும் எண்ணினார்.”

மீண்டும் அர்ஜுனன் குறுக்கிட்டான். “ இங்கே நாம் வசிப்பதை விட இறந்தே போயிருக்கலாம்.  அதைவிடவும் இது கொடுமையாக உள்ளது!” அவன் மனதின் கசப்பு முழுவதும் குரலில் வழிந்தோடியது.  “ஆஹா, இந்த மாதிரி நீ சொல்லலாமா அர்ஜுனா?  நான் ஒருவன் இங்கே அரசனாக ஆட்சி செய்து வருகிறேன் என்பதை மறந்தாயா?  என் ஆட்சி இங்கே நடக்கையில் இங்கே இருப்பதை விடச் செத்துத் தொலைந்திருக்கலாம் என நீ சொல்லலாமா?  அதுவும் இன்னமும் உன்னை என் குடிமக்கள் பக்ஷணம் பண்ண வேண்டும் என நினையாது இருக்கையில் இப்படி நீ சொல்லலாமா?” பீமன் குற்றம் சாட்டும் குரலில் அர்ஜுனனிடம் கூறினாலும் அவன் குரலிலும், முகத்திலும் கண்ணியமும், சிரிப்பும் நிறைந்திருந்தது.  ஒரு பெரிய புன்சிரிப்போடேயே இதைக் கூறினான் பீமன்.  இவை எதையுமே கவனிக்காமல் யுதிஷ்டிரன் மேலும் கூறினான்:” கிருஷ்ணனுக்கு நாங்கள் அனைவரும் துவாரகை வந்து இவ்வுலகத்தினர் அனைவருக்கும் நாங்கள் உயிருடன் இருப்பதை அறிவிக்க வேண்டும் என்னும் கருத்து இருந்தால், அவன் அப்படி நினைத்தால் நாங்கள் அப்படியே செய்கிறோம்.”  மெதுவாக யோசனையுடனேயே இதைக் கூறினான் யுதிஷ்டிரன்.  “ஆனால் நாம் முதலில் ஆசாரியர், முனி சிரேஷ்டர், வியாசரிடமும், சித்தப்பா விதுரரிடமும் அநுமதி வாங்கிக் கொள்ள வேண்டும்.”

“நாம் எப்போதுமே ஹஸ்தினாபுரத்துக் காரர்கள் தான் நாம் செய்வதைத் தப்பு என்றோ சரி என்றோ கூற வேண்டும்;  அவர்கள் நமக்கு எப்போதும் வழிகாட்ட வேண்டும் என நினைக்கக் கூடாது!” அர்ஜுனன் பொறுமையிழந்து காணப்பட்டான்.  அவன் தன் தமையன் இந்தச் சூழ்நிலையை எடுத்துக் கொண்ட விதம் குறித்து மன வருத்தம் அடைந்திருப்பது அவன் குரலில் தெரிந்தது.   “இந்த மோசமான வனப்பகுதிகளில் நாம் இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும்?? துரியோதனனுக்கு நாம் உயிருடன் இருப்பது தெரிந்து நாம் இவ்வாறெல்லாம் கஷ்டப்படுவதைக் கண்டு அவன் சந்தோஷம் அடையும் வரையா?”  அதுவரை வாய் மூடிக் கொண்டிருந்த நகுலன் அப்போது வாய் திறந்தான்.

“மூத்தோரே, நான் இந்தக் காட்டில், மிக மோசமான இந்த இடத்தில் முயல்களுக்குப் பயிற்சி கொடுப்பதை விடவும் துவாரகையின் குதிரைகளுக்குப் பயிற்சி கொடுப்பதை மிக விரும்புகிறேன்.  அதுவும் இந்த முயல்களுக்கு நான் பயிற்சி கொடுத்துக் காப்பாற்றினாலும் இந்த பீமனின் ராக்ஷசக் குடிகளின் வயிற்றுக்குள் அவை போய்ச் சேர்ந்துவிடுகின்றன.  என் பயிற்சியும் வீணாகிறது!”  மிகுந்த வெறுப்புடன் கூறினான் நகுலன்.  “ஆஹா, அப்போது நீ ஏன் ஒரு ராக்ஷசிக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது?  நான் அளிக்கவில்லை?  என்னைப் போல் நீயும் ஒரு ராக்ஷசிக்குப் பயிற்சி அளிக்கலாமே? “பீமன் இடையில் புகுந்தான். ஏதோ பெரிய நகைச்சுவையைக் கண்டுவிட்டது போல் அவன் தனக்குத் தானே உள்ளூரச் சிரிக்கிறான் என்பதும் புரிந்தது.  அவனுடைய இந்த விசேஷமான தனிப்பட்டதொரு கருத்தை நகுலனிடம் கூறியதைக் கேட்ட குந்தி அவனைக் கொஞ்சம் கனிவும், பாசமும் கலந்த கோபம் கொண்டு  அதே சமயம் அவன் பேசியதில் தனக்கு உடன்பாடில்லை என்பதையும் பார்வையாலேயே காட்டினாள்.

தான் அணிந்திருந்த மிருகங்களின் தோலால் ஆன உடையைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்த நகுலனுக்கு ஹஸ்தினாபுரத்தில் இருக்கையில் அணிந்து வந்த பட்டுப் பட்டாடைகளின் நினைவு வந்தது.  இப்போது நம் நிலைமை நல்ல உடை உடுக்கும்படி கூட இல்லையே என்பதை நினைத்துப் பார்த்து அவன் மனம் வெதும்பியது.  அந்தக் கோபம் குரலில் தெரியச் சீறினான்:  “அந்த மஹாதேவன், சாக்ஷாத் பசுபதிநாதன், அவன் நேரிலே வந்தால் கூட உன்னுடைய ராக்ஷசிகளுக்குப் பயிற்சி கொடுக்க மாட்டான்! எவராலும் இயலாத ஒன்று!  ஓஹோ, மஹாதேவா, இறைவனுக்கு எல்லாம் இறைவனே! இவர்கள் எப்படிப்பட்ட ராக்ஷசர்கள்! “ கூறிக்கொண்டே விண்ணை நிமிர்ந்து பார்த்து அங்கே இருந்து நேரடியாகக் கடவுளர்கள் எவரேனும் உடனே தோன்றி அவனுக்கு உதவ மாட்டார்களா என்பதைப் போல் பார்த்தான் நகுலன்.  ஒரு நீண்ட பெருமூச்சும் விட்டான்.  தன் பக்கத்து நியாயத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தான் அர்ஜுனன். “ நான் முடிவு செய்துவிட்டேன்.  துவாரகைக்குச் சென்று அங்கே கிருஷ்ணனின் தோழமையிலும், அவன் மேற்பார்வையிலும் கடவுளரும் அஞ்சும் வண்ணம் பயிற்சிகளை மேற்கொள்ளப் போகிறேன்.” சற்றே நிறுத்திய அர்ஜுனன் மேலும் தொடர்ந்து, “ என்னால் முடியவில்லை!  இந்த ராக்ஷசக் குடியிருப்பு எனக்கு அலுத்து விட்டது.  இங்கே இருந்து கொண்டு மூங்கில்களால் ஆன வில்லில், மூங்கிலால் ஆன அம்புகளை விண்ணில் பறக்கும் பக்ஷிகளின் மேல் குறி பார்த்துப் பழகுவதை நினைத்தாலே என் மனம் வருந்துகிறது;  மிகுந்த வேதனையில் ஆழ்கிறேன்.  அதோடு அல்லாமல் நான் அவ்வாறு பயிற்சி செய்வதைப் பார்த்து இந்த ராக்ஷசக் குடிமக்கள் சிரிக்கின்றனர்;  கேலி செய்கின்றனர். என்னால் அவர்கள் பேசுவதைத் திரும்பப் பேச முடியவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் மொழியில் கேலி பேசுகின்றனர். என்னை அறிவற்றவன், முழு மூடன் என நினைக்கின்றனர்.” அர்ஜுனன் குரலில் அவன் மனவேதனை தெரிந்தது.

“அதனால் என்னப்பா?  இதைவிட உனக்கு வேறு என்ன வேண்டுமாம்?” பீமன் இடை புகுந்தான்.

“எனக்கு வேண்டியது குறித்து நான் நன்கறிவேன்.  ஒவ்வொரு இரவும் எனக்கு என்னுடைய அருமையான வில்லின் நினைவு வந்து மோதுகிறது. அற்புதமான வில்! வெள்ளியைப் போல் பளபளக்கும் அம்புகள், அவற்றின் கூர்முனைகள், அதோடு கூட என்னுடைய வில்லில் நாண் ஏற்றுகையில் ஏற்படும் அருமையான ஒலி ஒரு இன்னிசையைப் போல் என் காதுகளில் ஒலிக்கும்.  என்னுடைய நாண் ஒரு மந்திர சக்தி வாய்ந்த அற்புதமான நாண். “ தன் ஆயுதங்களைக் குறித்த நினைவுகளில் மூழ்கிய அர்ஜுனன் உள்ளூரக் கொண்ட கோபத்தால் சட்டென மெளனம் ஆனான்.  நிதானமும், விவேகமும் கொண்ட யுதிஷ்டிரன் தன் அமைதியான குரலில் ஆனால் அதே சமயம் தீர்மானமான முடிவுடன் பேசினான்.  “நாம் நம்முடைய இப்போதைய நிலை குறித்துப் புலம்பி நேரத்தை வீணாக்க வேண்டாம்.  நம்முடைய சகிப்புத் தன்மையின் ஆழம் எவ்வளவு தூரம் நிலைக்கும் என்பதற்கான ஒரு பரிக்ஷை இது.  இறைவனுக்கெல்லாம் இறைவன் நம்மைப் பரிக்ஷை கொடுத்துச் சோதிக்கிறான்.  எவ்வளவு பொறுமையை நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதை அவன் நம்மைச் சோதிப்பதன் மூலம் கவனிக்கிறான்.  இந்தச் சோதனைக்கு நாம் தயாராக வேண்டும். இதை நாம் எதிர்கொள்ள வேண்டும்.  இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  நாம் கிருஷ்ணனின் அழைப்பை ஏற்று துவாரகைக்குச் செல்ல வேண்டுமா?  அல்லது சித்தப்பா விதுரரின் செய்திக்குக் காத்திருக்க வேண்டுமா என்பதுவே!”

அர்ஜுனனின் கோபம் எல்லை மீறியது.  பொறுமையிழந்த அவன், “சித்தப்பா விதுரர் ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரரின் மனோநிலைக்கு ஏற்பவே நடந்து கொள்வார்.  அவர் அதைத் தான் நம்பி முடிவெடுப்பார்.  நான் சொல்கிறேன், கேளுங்கள் அண்ணாரே,  பெரியப்பா திருதராஷ்டிரரின் மனம் நம் பால் மாறி இருக்கும் என நினைக்கிறீர்களா?  நிச்சயம் மாறாது! அவர் அன்பு மகன் துரியோதனனின் மனம் வருந்தும்படியானதொரு கருத்தையோ, முடிவையோ அவர் எடுக்க மாட்டார். அவரால் முடியாது.  துரியோதனனோ நமக்கு உரியதை நமக்குத் தரச் சம்மதிக்கப் போவதில்லை.  அவன் தரவும் மாட்டான்.  ஆகவே நாம் கிருஷ்ணனின் யோசனையை ஏற்போம்.  துவாரகைக்குச் செல்வோம்;  அல்லது இந்தப் பரந்து விரிந்த உலகின் வேறு எங்காவது ஒரு பகுதிக்குச் செல்வோம்.  அங்கே நம் ஆற்றலால், நம் அனைவரின் ஒற்றுமையால் நமக்காக ஒரு அன்பான உலகைச் சிருஷ்டிப்போம்.  நம்முடைய எதிர்காலத்தை நாமே நல்ல முறையில் செதுக்குவோம். அற்புதமானதொரு உலகைப் படைப்போம்.” யுதிஷ்டிரன் அர்ஜுனனைப் பார்த்த பார்வையில் அவனைக் கண்டிக்கும் தொனி தெரிந்தது.  வாய் திறந்து எதுவும் பேசாமலேயே தன் பார்வையாலேயே அவனைக் கண்டித்தான் யுதிஷ்டிரன்.  அர்ஜுனன் மிகுந்த மனக்கசப்போடு, “யோசியுங்கள் அண்ணாரே, கற்பனை செய்து பாருங்கள்.  இந்த ஆர்ய வர்த்தத்திலேயே சிறந்ததொரு வில் வித்தை வீரன், விண்ணில் பறக்கும் பறவைகளை வீழ்த்திப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.”  சட்டென மாறியதொரு மனோநிலையில் கிட்டத்தட்டக் கெஞ்சலாக அர்ஜுனன் கூறினான்.  “நாம் செல்லலாம் அண்ணாரே, அந்த மஹாதேவன் கருணையாலும், நம் அனைவரின் வீரத்தாலும் நாம் நமக்கென ஒரு அழகான சாம்ராஜ்யத்தையே சிருஷ்டிக்கலாம்.  இங்கிருந்து முதலில் செல்லலாம்.”

“ஆஹா, அர்ஜுனா, நான் ஏற்கெனவே ஒரு சாம்ராஜ்யத்தை உனக்காகவே வென்றிருக்கிறேனே!  இது போதாதா?  இன்னும் ஏன் எதிர்பார்க்கிறாய்?” பீமன் கூறினான்.

“ஆமாம், ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யம் தான்.  அந்த சாம்ராஜ்யத்தில் நீ எப்போதெல்லாம் எங்கேனும் வெளியே செல்கிறாயோ, அப்போதெல்லாம் உன் குடிமக்களால் நாங்கள் சாப்பிடப் படுவோமோ என அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அப்படிப்பட்டதொரு சாம்ராஜ்யம்!” இகழ்ச்சியுடன் கூறினான் அர்ஜுனன்.


Friday, August 9, 2013

கண்ணன் துவாரகைக்கு அழைக்கிறான்!

பீமன் தன் சகோதரர்களையும், தாயையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயன்றான்.  அவர்களுக்கு எந்தவிதமான மனக்குறைகளும் நேராதபடிக்கு கவனம் எடுத்துக் கொண்டான்.  ராக்ஷசர்களால் தன் குடும்பத்தினருக்கு எவ்விதத் தீங்கும் நேரிடக் கூடாது என்பதில் மிகுந்த கண்டிப்புக் காட்டினான்.  அதே சமயம் ஹிடும்பிக்கு ஒரு நல்ல கணவனாகவும் இருந்தான்.  அவளையும் மகிழ்வித்தான்.  நன்கு உணவு எடுத்துக்கொண்டான்.  தன் ராக்ஷசக் குடிகளிடம் தேவையான நேரத்தில் தேவையான அதிகாரத்தைக் காட்டினான்.  அந்த இனத்தவரையே அடக்கி ஆண்டான் என்றாலும் பொருந்தும்.  அவர்களை நிறைய வெளியிடங்களுக்குப் பயணப்பட வைத்து அவர்களின் விளையாட்டுக்களில் பங்கேற்று கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகத்தைப் புகட்ட முனைந்தான்.  இனம், மொழி, கலாசாரம் கடந்ததொரு மனோபாவத்துடன் பல அரிய செயல்களைச் செய்தான் எனலாம். எந்தவிதமான வேறுபாட்டையும் அவனால் காட்ட இயலவில்லை.  ஆனால் தன் சகோதரர்களுக்கும், தாய்க்கும் இந்த ராக்ஷசர்கள் எங்கோ அயல் தேசத்திலிருந்து வந்த புதியதொரு இனத்தவர் என்ற எண்ணம் இருப்பதையும், அதே எண்ணம் ராக்ஷசர்களுக்கும் தன் குடும்பத்தினரிடம் இருப்பதையும் பீமன் நன்கு அறிந்து வைத்திருந்தான்.

ஆனால் தன் சகோதரர்களிடமும், தாயிடமும் அவன் காட்டிய பெரும் ஆர்வம் மிகுந்த பாசமும், அன்பும் மட்டுமில்லாது குந்தியிடமும், யுதிஷ்டிரனிடமும் அவன் காட்டிய மரியாதையும், பணிவும் விநயமும் ராக்ஷசர்களை ஆச்சரியப் பட வைத்தது.  அதோடு அல்லாமல் பீமனின் சகோதரர்களையும், தாயையும் வேறு வழியில்லாமல் ராக்ஷசர்களும் மிக்க மரியாதையுடனும், பணிவுடனும், கெளரவமாகவும் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளானார்கள்.  அன்றிரவு அர்ஜுனனுடன் படுத்துக் கொண்ட உத்தவன் ஒரு மரக்கட்டையைப் போல் தூங்கினான்.  அவன் விழித்து எழுந்த போது சூரியனின் ரச்மி அந்தக் குடிசையைச் சுட்டெரிக்க ஆரம்பித்திருந்தது.  அர்ஜுனனை அங்கே காணவில்லை.  அவன் ஏற்கெனவே எழுந்து கீழே இறங்கிப் போயிருக்கக் கூடும் என நினைத்த உத்தவன் தானும் கீழே இறங்க நூலேணியைத் தேடினான்.  கீழே இறங்கிய அவன் தன் அத்தை மகன் தனக்காக அங்கே காத்திருப்பதையும் கண்டான்.  “சகோதரா, உத்தவா, வா என்னுடன்.  இந்த நதியில் நீராடி உன் காலைக்கடன்களை விரைவில் முடித்துக்கொள்வாய்!  நீ எங்களுக்காகக் கொண்டு வந்திருக்கும் செய்திகளைக் கேட்க நாங்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்.”

உத்தவன் நதிக்குக் குளிக்கச் செல்கையில் அவன் சென்ற கரைக்குச் சற்று தூரத்தில் காணப்பட்ட வேறொரு படித்துறையில் சில ராக்ஷசப் பெண்களோடு ஹிடும்பியும் குளித்துக் கொண்டிருந்ததைக்கண்டான்.  அவள் தலையைக் கட்டியிருந்த கயிறுகளின் பிணைப்புகள் நீக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல் முகத்தில் பூசியிருந்த வண்ணக் கலவையும் முழுதும் நீரால் கழுவப் பட்டு முகத்தின் உண்மையான தோற்றம் தெரிந்தது.  அவளுடைய இந்தப் புதிய தோற்றத்தில் அவள் ஒரு பெண் என்பதற்கான வளைவு, நெளிவுகளை மறைக்க இயலவில்லை அவளால் என்பதையும், என்னதான் அவள் ஒரு கம்பீரமான தோற்றமுள்ளவளாக இருந்தாலும் பெண்மை ஆங்காங்கே தலை காட்டியதையும், அத்தனையையும் மீறி அவள் ஒரு பெண் சிங்கம் போலவே காட்சி அளித்தாள் என்பதையும் உத்தவன் கண்டான்.  ஆஹா, இவள் பீமனுக்குத் தக்கதொரு மனைவியே.  அதனால் தான் பீமனும் இவளைத் தயங்காமல் மணந்திருக்கிறான்.  உத்தவனுக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நதியில் குளித்துத் தன் காலை அநுஷ்டானத்தையும் முடித்த உத்தவன், திரும்பி வந்து குந்தியுடன் தனக்காகக் காத்துக் கொண்டிருந்த ஐந்து சகோதரர்களையும் அடைந்தான்.  அனைவரும் பேசிக் கொண்டே அந்தக் குடியிருப்பிலிருந்து சற்றுத் தள்ளிக் காணப்பட்ட ஒரு சிறு குன்றை அடைந்தனர்.  உத்தவனைக் காத்து அழைத்து வந்த நிகும்பனைக் கூப்பிட்டு பீமன் தங்களுக்குக் காவல் இருக்கச் செய்தான்.  எவரேனும் வருவது தெரிந்தால் தன்னை அழைக்கும்படியும் உத்தரவு கொடுத்தான்.  மரங்களின் நிழலில் அவர்கள் அனைவரும் அமர்ந்தனர்.  பீமன் மட்டும் தனியாகப்போய் அங்கிருந்த புல்வெளியில் ஒருக்களித்துப் படுத்த வண்ணம் உத்தவனின் கதையைக் கேட்கத் தயாரானான்.  அவன் மூளை வெகுவேகமாகச் செயல்படுகிறதோ என்னும் வண்ணம் அந்தப் பேச்சுக்களையும் கேட்ட பீமன் அவ்வப்போது தனக்குள் சிரித்துக் கொண்டான்.  அவன் மனதில் ஏதேனும் வேடிக்கையான எண்ணங்கள் உதயம் ஆகி இருக்கலாமோ என்னமோ!  அப்போது தன் மெல்லிய குரலில் யுதிஷ்டிரன் உத்தவனைப் பார்த்து, “உத்தவா, நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றதிற்குப் பின்னர் நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகக் கூறுவாய்!” என்று கேட்டான்.

“ஆனால், அதன் முன்னர், கிருஷ்ணன் எப்படி இருக்கிறான் என்பதைச் சொல்லிவிடு உத்தவா!” அத்தை குந்திக்குத் தன் மருமகனைக் குறித்த கவலை.  “அதோடு தாத்தா பீஷ்மர் எப்படி இருக்கிறார் என்பதையும் சொல்!  ஆ, மறந்துவிட்டேனே, என் அருமை மைத்துனர் விதுரர், மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ராணி அம்மா சத்யவதி, இன்னும், இன்னும் என் மூத்தாரான திருதராஷ்டிரர், அவர் மனைவி!.... எல்லோரையும் குறித்துச் சொல் உத்தவா!  அனைவரும் நலம்தானே?”

“ஆமாம், ஆமாம், முதலில் நீ பெரியப்பா திருதராஷ்டிரர், அவர் மனைவி காந்தாரி, சகோதரர் சகுனிமாமா, அவர்கள் புத்திரர்கள் நூற்றுவர் அனைவர் குறித்தும் அம்மாவிடம் சொல்லிவிடு அப்பா!  அம்மாவுக்கு அவரின் அன்பான மைத்துனர் குறித்தும் அவர் குடும்பம் குறித்தும் அவர்கள் நலன் குறித்தும் அதிகக் கவலை!  இன்னும் சொல்லப் போனால் நம் அனைவரின் பாதுகாப்பையும் நலனையும் விட அம்மா அவர்களின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் தான் கவலைப்படுகிறார்!”  பீமன் கேலிக்குரலில் சிரித்துக் கொண்டே கூறினான்.

‘என் குழந்தாய்!  உன் எதிரிக்குக் கூடக் கேடு எண்ணாதே!’ மிகக் கடுமையான குரலில் கொஞ்சம் அதட்டலாகவே குந்தி பீமனிடம் சொன்னாள்.  மேலும் தொடர்ந்து, “யாருக்குத் தெரியும்!  என்றாவது ஒரு நாள் எல்லாம் வல்ல மஹாதேவன் கிருபையால் அவர்கள் அனைவரின் கல்லைப் போன்ற மனதிலும் ஈரம் கசியலாம்!” என்றாள் குந்தி!

“ஹூம், ஆனால் நானோ அவர்கள் அனைவரும் செத்துப் போக வேண்டும் என்றே எண்ணுகிறேன்.” பதிலடி கொடுத்த பீமன் அதே சமயம் யுதிஷ்டிரனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான்.  அவன் தன் தாயைக் கேலி செய்கிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது.  அவனைப் பார்த்துச் சற்றே தயையுடன் சிரித்த யுதிஷ்டிரன், “ நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக் கொண்டு உத்தவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிரு பீமா! உத்தவனிடமிருந்து எல்லாவற்றையும் நாம் கேட்போம்.  அப்போது அவனே நம் பெரியவர்கள் எப்படி இருக்கின்றனர், என்ன செய்கின்றனர் என்ற செய்தியையும் சேர்த்தே சொல்லி வருவான்.” என்றான்.   உத்தவனுக்கு அவர்கள் ஒருவரிடம் ஒருவர் கொண்டிருந்த பாசமும், அன்பும் வலை போல் பின்னிக் கொண்டு அனைவரையும் அந்த வலை ஒன்றாகப் பிணைத்திருப்பதும் கண்கூடாகத் தெரிந்தது.  ஒரு அன்பான, அனைவரையும் ஆதரவு காட்டி அரவணைத்துச் செல்லும் தாய்! உண்மையுள்ள, கடமை தவறாத அதே சமயம் மிகப் பெருந்தன்மையானதொரு அண்ணன் யுதிஷ்டிரன், அடுத்துபீமன், ஒரு விளையாட்டு வம்புக்காரப் பையன், அவனுக்கு இவ்வளவு வயது ஆனதிற்குக் குழந்தை போல் இருக்கிறான்.  இப்போதும் இந்தப் புல்வெளியில் படுத்துக் கொண்டு சோம்பல் முறித்துக் கொண்டு ஆனந்தமாகக் காணப்படுகிறான்.  அடுத்து அர்ஜுனன், அமர்ந்திருப்பதே நேராக ஒரு வளையாத கம்பி போல் காணப்படுகிறது.  அசையாமல் அப்படியே அமர்ந்திருக்கும் அவனுடைய புத்திசாலிக் கண்கள் மட்டும் பேசுபவர்கள் அனைவரிடமும் ஒருவர் மாற்றி ஒருவர் படிந்து மீண்டு வருகின்றன.  நகுலன் அடுத்து அமர்ந்து கொண்டு குந்திக்கு என்ன தேவை என்பதைக் கவனித்து நிறைவேற்றத் தயார் நிலையில் காணப்படுகிறான்.  சஹாதேவன் இவர்கள் அனைவரிடம் இருந்தும் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு, தரையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.  அவன் கண்கள் நிலை குத்தி பூமியைப் பார்த்த வண்ணம் இருந்தாலும், அவன் கவனம் அனைத்துமே ஒருமித்து அந்தப் பேச்சில் இருக்கிறது என்பதும், அவன் எந்தவிதமான உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருப்பதையும் பார்த்த உத்தவன் இவனை எவராலும் அசைக்க இயலாது என்பதைப் புரிந்து கொண்டான். அதே போல் அர்ஜுனனைப் பார்த்ததுமே அவனின் ஆண்மை நிரம்பிய கம்பீரமான தோற்றமும், எப்போதுமே கவனமாகத் தயார்நிலையில் இருப்பதும், அவன் புத்திசாலித்தனமும் உத்தவனைக் கவர்ந்தது.

உத்தவன் தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொன்னான்.  நடந்தவைகளை அப்படியே விவரித்தான்.  கிருஷ்ணனைக் குறித்தும் தான் அறிந்தவரை கூறினான்.  சத்யவதியைக் கிருஷ்ணன் சென்று பார்த்ததையும், ஐந்து சகோதரர்களின் பாதுகாப்புக் குறித்து சத்யவதி பட்ட கவலையைக் குறித்துக் கிருஷ்ணன் அறிந்து கொண்டதையும் தெரிவித்தான்.  ஆசாரியர் வியாசரைச் சந்திக்கக்கிருஷ்ணன் சென்றதையும் கூறினான்.  அவன் இந்த ராக்ஷசர்களின் உலகுக்கு வர நேர்ந்ததையும் விவரித்தான்.  அவனை எப்படியானும் வறுத்துத் தின்ன வேண்டுமென ராக்ஷசர்கள் செய்த முயற்சிகளை எல்லாம் விவரித்தான்.  பீமன் மட்டும் சரியான நேரத்துக்கு அங்கே வந்திருக்காவிட்டால் மரத்தின் மேலே இருந்து தான் கீழே இறங்கி வந்து அவர்கள் கைகளில் மாட்டிக் கொண்டு வறுத்துத் தின்னப்பட்டிருப்பான் என்பதையும் கூறினான்.  கிருஷ்ணன் விரைவில் காம்பில்யத்திலிருந்து நாககூடம் வரப்போவதையும் சொல்லி முடித்தான்.  யாதவத் தலைவர்கள் ஹஸ்தினாபுரத்தில் இருப்பவர்களும் விரைவில் இங்கே வருவார்கள்.   கிருஷ்ணன் அனைவருமே சேர்ந்து துவாரகைக்குச் சென்றுவிட வேண்டும் என விரும்புகிறான் என்பதை உத்தவன் தெரிவித்தான்.  அவர்கள் அனைவரும் இந்த நரகத்திலிருந்து தப்பி துவாரகைக்கு வந்துவிட வேண்டும் என்பதே கிருஷ்ணனின் விருப்பம் என்றும் கூறினான்.


Thursday, August 8, 2013

ஐந்து சகோதரர்களுடன் உத்தவன்!

“நீ எப்படி உணர்கிறாய்? உனக்குள் என்ன தோன்றுகிறது?”  உத்தவன் கேட்டான்.


“நான் சரியாகவே இருக்கிறேன்.  சரியாக இருப்பதாகவே உணர்கிறேன்.  நான் நன்றாய்ச் சாப்பிடுகிறேன். நல்லதொரு அரசனாக இந்த ராக்ஷசர்களை வழி நடத்துகிறேன்.  நல்லதொரு கணவனாக, விசுவாசமுள்ளவனாக என் மனைவியிடம், ஹாஹா, அழகான ராக்ஷச மனைவியிடம் நடந்து கொள்கிறேன். என்ன ஒரு கஷ்டம்னா, அவள் தலையிலே கட்டிக் கொண்டிருக்கும் பல்வேறு கயிறுகள் தான் வெறுப்படையச் செய்கின்றன. “இதை மிக ரகசியமாக பீமன் கூறினான்.

அவர்கள் இருவரும் அடர்ந்த காட்டுக்குள்ளே சென்று கொண்டிருந்தனர்.  முடிவில் அவர்கள் ஒரு பெரிய சுற்றிலும் மரங்கள் சூழ்ந்ததொரு குடியிருப்பை அடைந்தனர். மரங்கள் சூழ்ந்திருக்க உயரத்தில் மரங்களின் கிளைகளுக்கு  நடுவே அழகான குடிசை மூங்கிலாலும், புற்களாலும் கட்டப்பட்டு ஆங்காங்கே காணப்பட்டது. ஒவ்வொரு குடிசையும் மரங்களால் சூழப்பட்டிருந்தது காணக்கிடக்காத காட்சியாக இருந்தது.  உத்தவன் அதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். மரங்களின் உயரத்திலே கட்டப்பட்டிருந்த குடிசைகள் அனைத்தையும் பார்த்து வியப்புடன் பறவைகளைப் போல மரங்களின் மேலே குடிசை கட்டவேண்டிய அவசியம் என்ன எனத் தோன்றியது அவனுக்கு.  அதை உடனே பீமனிடம் கேட்கவும் கேட்டான்.  “இந்தக் கூடுகள்  ஏன் இப்படிக் கட்டப்பட்டிருக்கின்றன!” என உத்தவன் பீமனிடம் கேட்டான்.

“ஓ, உத்தவா, என் ராக்ஷசக் குடிமக்கள் வசிப்பதற்குத் தான்.  அனைத்து ராக்ஷசர்களும் மரங்களின் மேலே கட்டப்பட்டிருக்கும் இந்தக் குடிசைகளிலேயே வாழ்கின்றனர்.  ஒவ்வொரு இரவும், குடும்பம் மொத்தமும் மரத்தின் மேலேறி அவரவர் குடிசைக்குச் சென்று தூங்குவார்கள்.  தரையில், அதாவது பூமியில் குடிசை கட்டிக் கொண்டு வாழ்ந்தாலோ தூங்கினாலோ இரவில் இனம் தெரியா எதிரிகளால் கொல்லப்பட்டுவிடுவோம் என அச்சம் அவர்களுக்கு நிறைய உண்டு.  இவர்களைப் போல் நரமாமிசம் தின்னும் வேறொரு ராக்ஷசக் கும்பலுக்குப் பலியாகி அவர்கள் இவர்களைத் தின்றுவிட்டால்?” என்றான் பீமன்.  அந்தப் பரந்த மரங்கள் அடர்ந்த வெளியின் வேறோர் எல்லையில் காணப்பட்ட பெரியதொரு மரத்தோப்பையும், அதில் கட்டி இருந்த குடிசையையும் காட்டினான் பீமன்.  அவன் முகம் மிகப் பெருமையில் மலர்ந்தது.


 “ இதோ!  இங்கே தான் இந்த இடங்களிலே தான் எங்கள் தாய் குந்தியும், மற்ற ஐந்து சகோதரர்களும் வசிக்கின்றனர்.  அவர்கள் எப்போதாவது தான் கீழே இறங்குவார்கள்.  நானும் அவர்களைக் கீழே இறங்குவதில் இருந்து தடை செய்திருக்கிறேன்.  அதுவும் நான் இல்லாத சமயம் எனில் அவர்கள் மேலேயே இருக்க வேண்டும் என்றும் கண்டிப்பாகக் கூறி இருக்கிறேன்.  ஏனெனில் இந்த ராக்ஷசர்களை நம்ப முடியாதப்பா!  திடீரென அவர்களுக்கு என் தாய், சகோதரர்களின் நரமாமிசத்தை ருசிக்கும் ஆவல் தோன்றிவிட்டால் என்ன செய்வது!  அதுவும் சில சமயங்களில் அவர்கள் என் தாய் குந்தியைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே!  அவர்கள் மனதுக்குள்ளாகவே அவளின் மிருதுவான தசையையும் அதன் ருசியையும் அனுபவிக்கிறார்களோ என எனக்குத் தோன்றும்! “ என்ற பீமன் சற்றுத் தொலைவில் இருக்கும் ஒரு பெரிய மரத்தைச் சுட்டிக் காட்டினான்.  அதன் அடர்ந்த கிளைகள் கொஞ்சம் ஆங்காங்கே வெட்டப்பட்டு இடம் உண்டாக்கப்பட்டுச் சற்றுப் பெரியதொரு குடிசை அங்கே காணப்பட்டது.  “ஆஹா, அதோ பார் உத்தவா!  அது தான் என் அரச மாளிகை! அரண்மனை!” என்று பெருமை பொங்கச் சொல்லிவிட்டுக் கடகடவெனச் சிரித்தான்.


அந்தக் குடிசைகளின் எதிரே அவர்கள் இருவரும் வந்து நின்றனர்.  அப்போது பீமன் உத்தவன் அதிசயிக்கத் தக்கதொரு காரியத்தைச் செய்தான்.  காட்டில் சற்று முன்னால் பீமன் புரிந்த கர்ஜனையைக் கேட்டு நடு நடுங்கிய உத்தவன் இப்போது பீமன் அப்படியானதொரு கர்ஜனையைச் செய்யக் கண்டான்.  ஆனால் இரண்டுக்கும் இருந்த வித்தியாசம் தெள்ளத் தெளிவாக இருந்தது.  காட்டில் பீமன் கோப கர்ஜனை செய்தான் எனில் இங்கேயோ விளையாட்டாக, உல்லாசமாக, களிப்பாக, அழைக்கும் விதமாகக் கர்ஜித்தான்.  மேலிருந்த குடிசைகளின் வாயில் திறந்து உத்தவனுக்கு அறிமுகம் ஆன அத்தை குந்தியின் முகம் முதலில் தெரிந்தது.  சற்று நேரத்திலேயே மற்ற நான்கு சகோதரர்களின் முகமும் அருகே தெரிந்தன.


“தாயே, இதோ உத்தவன் வந்திருக்கிறான்!”பீமன் அவர்களின் தாய்மொழியில் குந்தியிடம் சொன்னான்.  “உத்தவன் நம்முடன் தங்கி இருந்து நம்முடன் இந்தக் காட்டு வாசத்தை அனுபவிக்கவேண்டி வந்திருக்கிறான்.  நமக்கெல்லாம் துணையாக இருக்கப் போகிறானாம்.  நீங்கள் அனைவரும் கவலை இன்றிக் கீழே இறங்கி வாருங்கள்!” என்றான் பீமன்.  பீமனின் அழைப்பு கர்ஜனையைக் கேட்ட ஹிடும்பி, உடனேயே அங்கிருந்து தன் உணர்வுகள் அனைத்தும் தெரியும்படியான மெல்லியதொரு இசையை இசைத்தாள்.  அதில் எந்த மொழி வார்த்தைகளும் இல்லை எனினும் அவளின் வரவேற்பையும் கணவனைக் காணும் ஆவலும், ஆசையும், அன்பும் எதிரொலித்தன.  பீமன் கீழே இருந்தே அவளைப் பார்த்த வண்ணம் தன் பெரிய கரங்களை உயரத்தூக்கி ஆட்டினான்.  சப்தமாகச் சிரித்த வண்ணம், “ஹிடும்பி, கீழே இறங்கி வா!’ என தனக்குத் தெரிந்த கொச்சையான  ராக்ஷச மொழியில் கூறினான்.  “இது வரையிலும் நாங்கள் ஐந்து சகோதரர்கள் தான் இருந்தோம்.  இனி நாங்கள் அறுவர்!” என்றும் அதே மொழியில் அவளிடம் கூறினான்.


உத்தவனுக்கு இன்னமும் தான் காண்பது கனவா, நனவா என்ற சந்தேகம் தீரவே இல்லை.  அவர்களின் மதிய உணவு நேரம் முடிந்து விட்டிருந்தது.  ராக்ஷசர்கள் சாதாரணமாக சூரிய அஸ்தமனத்துக்கு முன்னரே உணவு உண்டு விட்டு மரங்களின் மேல் ஏறி அவரவர் குடிசையை அடைந்துவிடுவார்கள்.  ஏனெனில் இருட்டி விட்டால் மரங்களின் மேல் ஏறுவதில் சிரமம் இருக்கும்.   ஆகவே அத்தை குந்தி அனைவரையும் உடனடியாகப் படுக்கப்போகச் சொன்னாள்.  எல்லாப் பேச்சுக்களையும் மறுநாள் வைத்துக் கொள்வோம்.  இப்போது இந்தக் கடுமையான பயணத்தினாலும், மரத்தின் மேலேயே இரண்டு நாட்களுக்கும் மேல் தங்கி இருந்ததிலும் மிகக் களைப்படைந்திருந்த உத்தவனுக்கு நீண்ட தூக்கம் அவசியம் எனவும் கூறினாள்.  ஆஹா, அத்தை குந்தி உண்மையிலேயே மிகவும் தாயன்பு கொண்டவளே.  அவளுக்கு நிகர் அவளே!  உத்தவனுக்கு மனதில் பெருமிதம் பொங்கியது.  அவன் வந்ததுமே மிகப் பலவீனனாகவும், தூக்கம் நிறைந்தவனாகவும் காணப்பட்டதை உணர்ந்து விட்டாளே!  ஆகவே ஐந்து சகோதரர்களையும் மிகக் கண்டிப்பாக உத்தவனுக்குத் தூக்கமும், ஓய்வும் தேவை என வற்புறுத்தி விட்டாள்.


யுதிஷ்டிரன் அந்த மரத்தின் மேலே, மிக மேலே இருந்த ஒரு குடிசையில் தன் தாய் குந்தியுடன் வசித்து வந்தான்.  நகுலனும், சஹாதேவனும் இன்னொரு குடிசையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.  ஆகவே அர்ஜுனன் தனியாக வசித்ததால் உத்தவனுக்கு அவனுடன் தங்கிக் கொள்ள இடம் கிடைத்தது.  மேலே குடிசையில் வசிப்பவர்கள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் வசதியாகக் கயிறுகளால் உறுதியாகப் பிணைக்கப்பட்டுக் கட்டப்பட்டதொரு நூலேணி பயன்பட்டது. ஒவ்வொரு குடிசையிலிருந்தும் அத்தகையதொரு நூலேணி தொங்கியது. குந்தியால் அந்த ஏணியில் ஏற முடியாது என பிள்ளைகளில் எவரானும் ஒருவர் மாற்றி ஒருவர் அவளைத் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு மேலே ஏறுவதையோ அல்லது கீழே இறங்குவதையோ செய்தனர்.  உத்தவனுக்கு விரைவிலேயே ஐந்து சகோதரர்களும் இயற்கைக்குப் புறம்பானதொரு உலகிலே, இயற்கைக்கு மாறானதொரு வாழ்க்கையை வாழ்வது தெரிந்தது.  பீமனைத் தவிர மற்ற சகோதரர்கள் நால்வரும், குந்தியும், அந்த ராக்ஷசர்களிடம் எந்தவிதமானதொரு தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டு அவர்களுக்குள்ளேயே பழகிக் கொண்டு வாழ்ந்தனர்.


யுதிஷ்டிரன் கடுமையானதொரு முகபாவத்துடன் அதிகம் பேசாமல், பெரும்பாலும் மெளனத்தையே கடைப்பிடித்தான்.  அர்ஜுனனுக்கோ அவனுடைய வில்லும், கற்களால் கூர்மையாக்கப்பட்ட நுனியுடன் கூடிய அம்புகளையும் தவிர வேறே எந்த நோக்கமும் இருப்பதாய்த் தெரியவில்லை.  அதோடு அவனுடைய ஒரே கவலை தான் மட்டுமின்றித் தன் மற்ற நான்கு சகோதரர்களும், தாய் குந்தியும் பாதுகாப்புடனும், பத்திரத்துடனும் இருக்கவேண்டும் என்பதுவே.  நகுலனோ தன் தாய்க்குச் சேவை செய்வதிலேயே இன்பம் கண்டு கொண்டிருந்தான்.  ஒரு நொடிக்கு ஒரு முறை குந்திக்கு என்ன தேவை என்பதைக் கவனித்துப் பார்த்துச் செய்து கொடுத்தான்.  சஹாதேவன் தன் சகோதரர்களுக்குப் பணிவிடை புரிந்ததோடல்லாமல், ஒழிந்த நேரங்களில் அர்த்தமுள்ள மெளனத்தோடு கூடிய நீண்ட யோசனையுடனும், இரவுகளில் கண் விழித்து நக்ஷத்திரக் கூட்டங்களையும் அதன் மாறுபடும் போக்குகளையும் கவனித்துக் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பான்.  இந்த நான்கு சகோதரர்களும், அவர்கள் தாயும் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர்.  ராக்ஷசர்களின் மொழியைக் கற்க எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை.  அதில் அவர்களுக்கு சிரத்தையுமில்லை.  அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்பவும் இல்லை.  தங்களுடைய அன்றாடப் பழக்கவழக்கங்களை இந்த மாறுபாடான சூழ்நிலையால் குலைந்து போகாமல் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளாமல் இருக்கவே பிரயத்தனப்பட்டனர்.  பீமன் மட்டுமே அவர்களில்  தனித்து மாறுபட்டுக் காணப்பட்டான்.

Monday, August 5, 2013

தொடர்ந்து சொல்கிறான் பீமன்!

“அது சரி, அந்த மதகுரு என்னவானான்?”

“அவன் இறந்துவிட்டானப்பா மறுநாளே!” என்றான் பீமன்.

“ஆஹா, இப்படியெல்லாம் நடக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை;  இப்படியெல்லாம் நடந்தது என்று கேட்டதும் இல்லை.  சரி, அப்புறமாய் நீ என்ன செய்தாய்?”

“நான் என்ன செய்தேனா?  நீ என்னையா கேட்கிறாய்? உத்தவா, ஹிடும்பியை என் மனைவியாக்கிக் கொண்டேன்.” இதை பீமன் சொன்னதைப் பார்த்தால் அவன் வாழ்நாளின் லக்ஷியமே ராக்ஷசப் பெண்ணோடு நடந்த திருமணம் தான் என நினைக்கும்படியும் இது மிக இயல்பான ஒன்றே என எண்ணுமாறும் இருந்தது.  “ஆஹா, கடவுளே, ஏ மஹாதேவா!  இது என்ன  கூத்து!  அத்தை குந்தியும், உன் பெரிய சகோதரனும் இதற்கு என்ன சொன்னார்கள்?”

“ஆஹா, அவர்கள் என்ன சொல்ல முடியும்?  முகத்தை முறுக்கிக் கொண்டு கோணிக்கொண்டனர்!  ஹா, கேள் உத்தவா, என் தாய் குந்தி, அழகான எலும்புகளால் ஆன மாலையை அணிந்த, முன் பக்கம் துருத்திய பற்களோடு கூடிய என் மிக அழகான ராக்ஷச மனைவியை நிமிர்ந்துகூடப் பார்க்க மறுத்துவிட்டார்.  என் அண்ணா யுதிஷ்டிரருக்கோ அவருடைய புனிதமான மனசாட்சியின் உறுத்தல் தாங்கவில்லையாம்.  அர்ஜுனனும், நகுலனும் மிகவும் வெறுப்படைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டனர்.  கடைசியில் சஹாதேவன் தான் என் உதவிக்கு வந்தான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? “நாம் இவ்வுலகில் மற்றவர்களிடமிருந்து மறைந்து வாழ இதைவிடச் சிறந்த வழியும், இடமும் வேறு இல்லை. “ என்றான்.  அவன் எவ்வளவு புத்திசாலி என்பது தான் தெரியுமே உனக்கு.  உடனே தாய் குந்தியும் ஒத்துக் கொண்டுவிட்டார். வேறு வழியே இல்லையே உத்தவா!”

“ஆகக் கூடி நீ ராக்ஷசவர்த்தத்தின் தலைவனாக, ராக்ஷசர்களின் மாபெரும் அரசனாக ஆகிவிட்டாய்!” என்றான் உத்தவன்.  “ஆமப்பா, ஆம்.  நீ என்ன நினைக்கிறாய்?  அவர்களின் தலைவனாக ஆக என்னை அழைக்கவில்லை எனில் நான் ஹிடும்பியைத் திருமணம் செய்து கொண்டிருப்பேன் என எண்ணுகிறாயா?  இல்லை அப்பா இல்லை.  ஆனால் அதன் பின்னர் தான் என் கஷ்டங்களே ஆரம்பித்தது. அவர்களுடைய வழக்கப்படி ஹிடும்பனின் தலையைக் கொய்து தனியே எடுத்து விட்டு அவன் உடலை நெருப்பில் வாட்டி எனக்காகத் தயாரிக்கப் போகும் ராக்ஷசர்களின் சடங்குகளோடு கூடிய விருந்தில் கலக்க வேண்டும் என முனைந்தார்கள்.  நான் அப்போது அவர்கள் பேச்சின் குறுக்கே புகுந்து அவர்களைத் தடுத்தேன். ஹிடும்பனின் தலையைக் கொய்து உடலை நெருப்பில் வாட்ட நான் அனுமதிக்கவே இல்லை.  அவன் உடலைத் தீயூட்டும் போது நான் அருகேயே இருந்தேன்.  அவன் உடலின் கடைசித் துளி சதையும், கடைசி எலும்பும் முற்றிலும் நெருப்பில் எரிந்து சாம்பலாகும் வரையும் நான் அந்தப் பக்கம் இந்தப்பக்கம் திரும்பவில்லை.  ஆனால் அந்த ராக்ஷசர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு ரொம்பவே வருத்தம், ஒரு அருமையான விருந்து கை நழுவி விட்டதே என அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார்கள்.  என்னையும் சூழ்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.  அவர்களுக்குள்ளேயே இதில் மனவேறுபாடுகளும் இருந்தன. “

“அவர்களில் வயதான இரு பெரியவர்கள் இது மதச் சடங்குகளை அவமதிக்கும் நோக்கத்தோடு கூடியதொரு செயல்;  இதை அநுமதிக்கக் கூடாது;  பின் விளைவுகள் ஏற்படலாம்” என அழுத்தம் திருத்தமாகக் கூறிப் பார்த்தனர்.  நான் அவர்கள் இருவரையும் அருகே அழைத்து ஒருவரோடு ஒருவர் மண்டையை வேகமாக மோதவிட்டுப் பின் என் முதல் அரச கட்டளையைப் பிறப்பித்தேன். “இனி எவனாவது ஒருவன் மனித மாமிசம் சாப்பிடுகிறான் என்றாலோ கைதியாகப் பிடித்து வருபவர்களை உயிரோடு நெருப்பில் வாட்டித் தின்றாலோ அவனை ஒரு உயரமான மரத்தில் தலைகீழாகத் தொங்க விட்டு அவன் சாப்பிட்டது அனைத்தையும் வெளியே வாந்தியெடுக்குவரை தொங்க விடப்படுவான்.  மேலும் எந்த மதகுருவானவர் இந்த நர மாமிசத்தைச் சாப்பிடுவதைப் பெரிய விருந்தாக நடத்துகிறாரோ அவர் மண்டையும் உடைக்கப்படும். “ என்று கட்டளை பிறப்பித்தேன்.”

“ஓஹோ, அப்படி எனில் இப்போது அவர்கள் நர மாமிசம் உண்பதை நிறுத்தி விட்டனரா?” உத்தவன் குரலில் கேலி இருந்தது.

“இன்னும் எல்லாரும் நிறுத்தாவிட்டாலும் பலரும் நிறுத்தி விட்டனர்.  கொஞ்சம் கொஞ்சமாகத் தானே நிறுத்த முடியும்!  ஆனால் நீ நேரில் பார்த்தமாதிரியும் நடக்கிறது தான்.  இந்தக் காட்டிலேயே வெகு தூரம் சென்று அவர்கள் மனதுக்குப் பிடித்த வண்ணம் நர மாமிசம் உண்டுவிட்டு வருகிறவர்களும் உண்டு.  அவர்கள் அந்த ருசிக்குப் பழகி விட்டார்கள்.  உடனடியாக நிறுத்துவது மிகக் கடினமான ஒன்று!” என்றான் பீமன்.

“அது சரி, ஹிடும்பி உன்னைச் சாப்பிட வேண்டும் என ஆசைப்படவில்லையா?” உத்தவன் கேட்டான்.

“ஓஹோ, உத்தவா, நீ அவளை நன்கு அறியவில்லை. அவள் என்னை மிகவும் நேசிக்கிறாள். அதற்கு ஈடு, இணையே இல்லை.  ஹிடும்பனின் மண்டை ஓட்டை வெயிலில் காய வைத்திருக்கின்றனர்.  அதை எடுத்து என் இடுப்பில் கட்ட வேண்டும் என்பது அவள் எண்ணம்.  நான் ஹிடும்பனை வென்று இந்த ராக்ஷசவர்த்தத்தின் தலைவன் ஆனதுக்காக எனக்குக் கொடுக்கப்படும் விருது அது என்பது அவள் கருத்து.  என்னை மிகவும் தொந்திரவு செய்தாள்.  நான் மறுத்தேன்.  விடாமல் பிடிவாதம் பிடித்தாள்.  அந்த மண்டை ஓட்டைச் சுக்குச் சுக்காக நொறுக்கிவிடுவேன் என பயமுறுத்தினேன்.  உடனே மிகப் பரிதாபமாக அழ ஆரம்பித்துவிட்டாள்.  அவளுக்கு என்ன பயம் என்றால், அந்த மண்டை ஓடு என்னோடு உடலில் பொருத்தப்படவில்லை எனில் ஹிடும்பனின் துர் ஆவி என்னிடம் வந்து என்னை அடியோடு அழித்துவிடும் என்பது அவள் அச்சம்.  ஆகவே ஒரு விசுவாசமான மனைவியாகவே அவள் என் நலத்தைக் குறித்து கவலைப்பட்டு அழ ஆரம்பித்தாள்.  அதை என்னிடம் சொல்லவும் சொன்னாள்.”

“என்ன, ஹிடும்பனின் ஆவி உன்னை அழிக்குமா?” உத்தவன் குரலில் ஆச்சரியம் மிகுந்திருந்தது.

“அப்பனே, இவர்களின் நம்பிக்கைகளே அலாதியானவை.  உன்னால் புரிந்து கொள்ள முடியாது உத்தவா!  ஹிடும்பி அந்த மண்டை ஓட்டை நான் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என விரும்பியது அவள் அண்ணனின் மேல் உள்ள பாசத்தால் அல்ல;  அந்த மண்டை ஓடு ஒரு கட்டுக்குள்ளாக வைக்கப்படாவிட்டால் ஹிடும்பனின் ஆவி மேல் உலகிலிருந்து எழுந்து வந்து என்னை அடியோடு அழித்துவிடும் என்பது அவள் எண்ணம்; நம்பிக்கை.” என்று முடித்தான் பீமன்.

“பின் நீ என்னதான் செய்தாய் அந்த மண்டை ஓட்டை?”

“நாங்கள் ஒரு சமரச உடன்படிக்கை செய்து கொண்டோம்; அதாவது கணவனும், மனைவியுமாக.  உத்தவா, அவள் ஒரு அபூர்வமான அதே சமயம் நல்ல மனைவி, உன்னிடம் நான் சொன்னேன் அல்லவா?  அது முற்றிலும் உண்மை.  மிக மிக என்னிடம் விசுவாசமாகவும் அன்புடனும், பாசத்துடனும் இருந்து வருகிறாள்.  ஆனாலும் எனக்கு ஒரு சின்னச் சந்தேகம்;  நான் எப்போவானும் உடல் நலக் கோளாறுடனோ அல்லது பலவீனமாக ஆனேன் என்றாலோ அவள் என்னை வறுத்துத் தின்று விடுவாளோ என்ற எண்ணம் இருந்தது.  என் தசையும், கொழுப்பையும் ருசிக்கும் ஆவல் அவளிடம் இருந்ததோ என எண்ணினேன்.”

“அது சரி அப்பா, அப்படி என்ன சமரச உடன்படிக்கை செய்து கொண்டாய்?  அதைச் சொல்லவே இல்லையே!”

“அவள் அந்த மண்டை ஓட்டைப் படுக்கையில் தன் தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றேன்.  அப்போது அந்த மண்டை ஓடு அவளுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவள் தமையனின் ஆவியும் இரவு, பகல் அவளுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் மண்டை ஓட்டிலிருந்து எழுந்து வந்து என்னைத் தாக்காது.  இல்லை எனில் எனக்குக் கெடுதல் சம்பவிக்கும். என்றேன்.  அவள் முழு மனதோடு ஒப்புக்கொண்டு விட்டாள்.”

“அத்தை குந்தியும், மற்ற நால்வரும் இதற்கெல்லாம் என்ன நினைக்கின்றனர்?  என்ன சொன்னார்கள்?”

“குந்தி தேவிக்கு, அதான் என் தாய்க்கு என்னைப் பாராட்டுவதா, இந்த ராக்ஷசர்களிடமிருந்து காப்பாற்றியதற்காக, அல்லது இப்படி ஒரு ராக்ஷசியைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்ததிற்கு நொந்து கொள்வதா எனப் புரியவில்லை.  பெரிய சகோதரர் யுதிஷ்டிரருக்கோ இவை அனைத்தும் நமக்களிக்கப்பட்ட ஒரு தண்டனை;  இதைக் கடுமையான தவத்தின் மூலமே சரியாக்க இயலும் என்ற எண்ணம்.  அர்ஜுனனோ எப்போதுமே தவிப்புடன் இருந்து வருகிறான்.  இங்கே கிடைக்கும் மூங்கில்களில் இருந்து விற்களும், அம்புகளும் செய்து கொண்டிருக்கிறான்.  அவற்றை வைத்து விற் பயிற்சியும் செய்கிறான்.  ஆகாயத்தில் உயரே உயரே பறக்கும் பறவைகளுக்கு குறி வைத்து வீழ்த்துகிறான்.  இவை அனைத்தும் அவனுக்கு அலுத்துவிட்டால் இங்குள்ள கோரைப்புற்களினால் குழாய்கள் செய்கின்றான்.  வாத்தியம் போல அவற்றில் வாசித்துப் பழகுகிறான்.  இந்த ராக்ஷசர்கள் தங்களைச் சாப்பிட மாட்டார்கள் என்பது நிச்சயம் ஆனதாலோ என்னவோ அவ்வப்போது ஆடியும், பாடியும் பழகிக் கொள்கிறான். நகுலனும் சந்தோஷமாக இல்லை.  அவனும் தவிப்போடு தான் இருக்கிறான். இங்குள்ள மான்கள், முயல்கள், நாய்கள் போன்றவற்றைப் பழக்கி வருகிறான்.  அவன் அவற்றைப் பழக்கி முடிப்பதற்குள்ளாக அவை எல்லாம் இந்த ராக்ஷச ஜனங்களின் வயிற்றுக்கு உணவாகச் சென்று விடுகின்றன.  அதை அவனால் தடுக்க முடியவில்லை.  சஹாதேவன் ஒருவனே மிக புத்திசாலி.  இப்படி எல்லாம் எங்களுக்கு நடப்பதற்கு ஏதோ ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது என முழு மனதோடு நம்புகிறான்.  நாங்கள் இனியும் கஷ்டம் அனுபவிக்காமல் இந்த இடத்திலேயே கொஞ்ச காலம் வாழ்வதற்கு உண்டான வழியையும், எங்கள் கஷ்டங்களைத் தடுக்கும் வழியையும் நன்கு ஆலோசித்துக் கொண்டு இருக்கிறான். “

Saturday, August 3, 2013

பீமனின் சாகசங்கள் தொடர்ச்சி!

“உன்னுடைய இந்தத் தன்னலம் நிறைந்ததொரு தாக்குதலுக்கு அந்த ராக்ஷசக் குடியினரின் வரவேற்பு எப்படி இருந்தது?” உத்தவன் கேட்டான்.  “ஹா, அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அப்பா.  நான் ஹிடும்பனைக் கொன்றுவிட்டேன் என்பது தெரிந்ததுமே அவர்கள் அனைவரும் என் கால்களில் விழுந்துவிட்டனர்.  அந்த ஹிடும்பனின் ஆவி மட்டுமில்லாமல், அவர்களின் பூர்வ முன்னோரான விரோசனனின் ஆத்ம பலமும் என்னிடம் புகுந்திருப்பதாக நினைத்து விட்டார்கள்.  இன்றளவும் அப்படியே நினைக்கின்றனர்.  “


“ஓஹோ, இப்படித் தான் நீ அவர்களின் அரசனாக ஆன கதையா?” உத்தவன் கேட்டான்.


“ஹிஹிஹி, இல்லை உத்தவா, இதில் உள்ள மிக மிக வேடிக்கையான சம்பவமே இனி தான் வரப்போகிறது.  ஹிடும்பியும் என் கால்களில் விழுந்தாள்.  என் பாதங்களைப் பிடித்துக் கொண்டாள்.  அவள் பிடியில் மிகுந்த மரியாதையும், என்னிடம் அவள் கொண்டிருந்த அளவு கடந்த நன்மதிப்பும் தெரிந்தது.  பொதுவாக ராக்ஷசப் பெண்களே தங்கள் தந்தையையோ, சகோதரனையோ எவனாவது வென்றாலோ, கொன்றாலோ அவனையே மிக பலவான் எனக் கருதி நேசிக்கத் தொடங்குவார்கள்.  இங்கேயோ அதுதான் பொதுவானதொரு விதியாகவும் அமைந்துவிட்டது.  ஹிடும்பியைத் திருமணம் செய்து கொள்பவன் அவள் சகோதரன் ஹிடும்பனை வெல்பவனாக இருக்க வேண்டும் என்பது இங்குள்ள நிபந்தனை.  ஆகவே இப்போது என் காலடிகளில் மிகவும் சக்தி வாய்ந்ததொரு ராக்ஷசி, நான் கோரும் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டு விழுந்து கிடக்கிறாள்.” இதைச் சொல்லிவிட்டு பீமன் சிரித்ததைப் பார்த்தால் ஒரு விளையாட்டுச் சிறுவன் விளையாட்டுக்களில் முதலிடம் பெற்றால் எப்படி சந்தோஷம் அடைவானோ அது போல் காணப்பட்டது.  மேலும் தொடர்ந்து, “ஆனால் அம்மா குந்தியோ இதையெல்லாம் பார்த்துத் திகைத்து பிரமித்துப் போய்விட்டாள்.  ஒரு ராக்ஷசி அவள் மருமகளாக வந்ததை நினைத்து அவள் திகைப்பு இன்னமும் நீங்கவில்லை.”  கடகடவெனச் சிரித்தான் பீமன்.  


“ஆனால் அவர்கள் உன்னை இந்த ராக்ஷசவர்த்தத்தின் தலைவனாக ஏற்றுக் கொண்டதை நினைத்தால் எனக்கு இன்னமும் ஆச்சரியமாகவே இருக்கிறது.”  என்றான்  உத்தவன்.  “ஓஹோ, உத்தவா, அப்படி எளிதாக எதுவும் நடக்கவில்லையப்பா.  கடுமையான தேர்வுகளை நான் எதிர்கொள்ள நேர்ந்தது.” என்றான் பீமன்.


“எப்படிப்பட்ட தேர்வுகள் அவை?” உத்தவன் கேட்டான்.  “அதை ஏன் கேட்கிறாய் அப்பா!  ஒரு மிகப் பெரிய விருந்து ஏற்பாடு செய்தார்கள்.  நான் அரசனாக ஒத்துக்கொள்ளும் முன்னர் அந்த விருந்து நடந்தது.  அதில் அனைத்து உணவு வகைகளையும் தயாரித்தனர்.  என்னவெல்லாமோ போட்டுத் தயாரித்திருந்தார்கள்.  எல்லாவற்றையும் மலை போல் ஓரிடத்தில் குவித்திருந்தார்கள்.  அதன் முன்னே என்னை அமர வைத்தனர்.  எனக்கு எதிரே ஒரு ராக்ஷச குண்டன் அமர்ந்தான்.  அவன் அவர்களின் மதகுருவாம். அவன் என்னை மிகவும் உபசரித்தான்.  வெளிப்படையாகப் பார்த்தால் நான் பசியில்லாமல் நன்கு உண்ண வேண்டும் என்றே அவன் சொல்வதாகத் தெரியும்.  ஆனால் அவர்கள் உள் நோக்கம் அதுவல்ல. எல்லாரும் உணவருந்த ஆரம்பித்ததும், அவனும் உண்ண ஆரம்பித்தான்.  அவன் உண்ணும் ஒவ்வொரு கவளமும் ஒரு பெரிய பாறை போல் இருந்தது என்றால் பாரேன்.  என்னையும் அவ்வாறே உண்ண வற்புறுத்தினான். அவனுடைய ஒவ்வொரு கவளத்திற்கும் ஏற்றாற்போன்றதொரு கவளத்தை நானும் உண்ண வேண்டும்.”


“அவன் ஏன் அப்படிச் செய்தான்?”


“அங்கே தான் சூக்ஷ்மமே இருக்கிறது அப்பா.  இது வெறும் விருந்தோம்பல் இல்லை.  நான் ஒரு அரசனாக ஆக முடியுமா, அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா எனச் சோதிக்கும் ஒரு போட்டி இது.” பீமன் தனக்குள்ளே நகைத்துக் கொண்டான்.  “ஒவ்வொரு ராக்ஷசனும் இந்தப் போட்டியையே கவனித்தார்கள்.  ஆகவே நான் அவர்கள் விரும்பின வண்ணமே நடந்து கொண்டேன்.  அவன் அது தான் அவர்கள் மத குரு எனக்கு ஒரு கவளம் கொடுத்தான் எனில் நான் ஒரு கவளத்தை அவனுக்குத் திரும்பக் கொடுத்தேன்.  இது கொஞ்ச நேரம் நடந்தது.  அவன் நன்றாய்த் தின்பவன் தின்று கொழுத்தவன் என்பது தெரிந்தது.  அவனைப் போன்ற ஒருவனை நான் பார்த்ததில்லை;  அதே போலவே என்னைப் போன்றவனையும் அவன் பார்த்திருக்க முடியாது.  உத்தவா, உனக்குத் தான் தெரியுமே, நான் சாதாரணமாகவே நான்கு பேர் உண்ணும் உணவை உண்ணக் கூடியவன் என! இப்போதோ நான் தீர்மானமே செய்துவிட்டேன். என் வயிற்றை மெல்ல மெல்ல இந்த உணவால் நிரப்பியாகவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டும் விட்டேன்.  ஆகவே, என் எதிரே அமர்ந்திருந்தவனால் இனி ஏதும் சாப்பிட முடியாது என்னும் நிலை வரும் வரைக்கும் நானும் அவனும் மாறி மாறி ஒருவருக்கொருவர் உணவைப் பரிமாறிக் கொண்டோம்.  ஒரு நிலையில் அவனுக்கு வயிறே வெடித்துவிடுமோ என்ற சந்தேகம் வந்திருக்க வேண்டும்.”


“சற்று நேரத்தில் அவனால் இயலவில்லை.  உணவைத் துப்பிக் கொண்டும், ஏப்பங்களைப் பெரிதாக விட்டுக் கொண்டும் அவனுடைய பெருத்த வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டும் இருந்தான்.  பீமனால் மீண்டும் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெருங்குரலெடுத்துச் சிரித்தான்.  அவன் கண்ணெதிரே அந்தப் பழைய நிகழ்ச்சிகள் அனைத்தும் மீண்டும் தோன்றினவோ என்னும்படி இருந்தது அவன் முகபாவம்.  “அவன் கண்களில் நீர் வர ஆரம்பித்துவிட்டது.  அவனால் இனி ஒரு சின்னக் கவளம் கூட உண்ண முடியாது என்று தோன்றியது.  ஆனால் நான் என் விருந்தோம்பலை நிறுத்தவே இல்லை.  மீண்டும் மீண்டும் அவனுக்கு உணவை உபசாரம் செய்தேன். கவளங்களாக உணவை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றேன்.  அவனால் இயலவில்லை என்று தெரிந்தும் அவன் வாயில் உணவைத் திணித்தேன்.  என் வாயில் ஒரு கவளம் போட்டுக் கொண்டால் அவனுக்கும் ஒரு கவளத்தை ஊட்டி விட்டேன். மற்ற ராக்ஷசர்கள் அனைவரும் உணவு உண்ணுவதை நிறுத்திவிட்டார்கள்.  அனைவரும் எங்களைச் சூழ்ந்து கொண்டு எங்களுக்குள் நடக்கும் இந்தப் போட்டியின் முடிவு என்ன என்று காண ஆவலோடு காத்திருந்தார்கள்.”


“இனி அவனால் உண்ண முடியாது என்னும் நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் நான் அவனை விடவில்லை.  மேலும், மேலும் உணவைக் கொடுத்துத் தின்னச் சொன்னேன்.  வேண்டாம் என அவன் சொல்லாமல் இருக்கும் வண்ணம் அவன் வாய் திறக்கையிலேயே உணவைத் திணித்தேன்.  ஒரு கட்டத்தில் அவனால் உண்ண முடியாமல் உணவைத் துப்பி விட்டான்.  நானோ அவனுக்கு ஒரு கவளம் உணவைக் கொடுத்துக் கொண்டே எனக்கு இரண்டு கவளமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். “ ஏதோ பெரிய நகைச்சுவையைச் சொல்வது போல பீமனின் முகத்தோடு சேர்ந்து அவன் கண்களும் சிரித்து நாட்டியமாடின.  “தன் கெளரவத்தைக் காத்துக்கொள்ள வேண்டி அவன் உணவை உண்ண விரும்பினாலும் அவனால் முடியவில்லை.  உணவைத் துப்பினான் அல்லது தூக்கி எறிந்தான்.  பின்னர் தாக்குப் பிடிக்க இயலாமல் மயங்கி விழுந்தான்.  அவன் வயிற்றைக் கைகளால் குத்திக் கொண்டான். அங்குமிங்கும் புரண்டான். உருண்டான்.  ராக்ஷசர்கள் அனைவருக்கும் இதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.  அவர்கள் அன்று வரையிலும் அவன் இவ்வாறு சாப்பாடு வேண்டாம் என மறுத்துப் பார்த்ததே இல்லை.  ஆகவே மிகுந்த திகைப்பும் ஏற்பட்டது.  நான் அவர்களை அழைத்து அவனைத் தூக்கிச் செல்லுமாறு பணித்தேன்.  ஏனெனில் அவனால் தானாக எழுந்து செல்ல இயலாது என்பது புரிந்தது.   பின்னர் நான் பாட்டுக்கு இதைக் கவனிக்காதவன் போல, உணவில் பெரு விருப்பம் கொண்டவன் போல உண்ண ஆரம்பித்தேன். அவர்களுக்கு மேலும் திகைப்பு ஏற்பட்டது.”


“என் எதிரே என் காலடிகளில் விழுந்து வணங்கினார்கள்.  அவர்கள் மொழியில் என்னை அரசனாக ஏற்றுக் கொண்டதைச் சொல்லி ஜயகோஷம் இட்டார்கள்.  ராஜா விருகோதரன் என எனக்கு நாமகரணமும் செய்தனர்.  தெய்வீகமான முன்னோரான விரோசனன் தான் திரும்ப வந்திருக்கிறான் என முழு மனதுடன் நம்பினார்கள்.  உத்தவா, இந்த ராக்ஷசர்களுக்கு முன் நான் பீமன் அல்ல;  ராஜா விருகோதரன்.  விரோசனனே உயிருடன் திரும்பி வந்துவிட்டான் என நம்புகின்றனர்.  அந்த நிமிடத்தில் அவர்கள் என்னை அவர்கள் அரசனாக ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் அவர்கள் கட்டை விரலைக் கீறிக்கொண்டு என் நெற்றியில் ரத்தத்தால் திலகமும் வைத்தார்கள்.”


Thursday, August 1, 2013

பீமனின் சாகசங்களும், உத்தவனின் நடுக்கமும்!--தொடர்ச்சி!

“எங்களிடம் குண்டாந்தடிகளைத் தவிர வேறு ஆயுதங்கள் ஏதும் இல்லை. என்ன செய்வது எனப் புரியவில்லை.  எங்கள் தாய் குந்தியை நடுவில் விட்டு இருபக்கமும் சகோதரர்கள் நால்வரையும் சூழ்ந்து கொள்ளச்சொன்னேன். அவர்களைப் பின்னே விட்டு முன்னே மறைத்த வண்ணம் நான் நின்று கொண்டேன்.  தாயை சகோதரர்களைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சில அடிகள் முன்னெடுத்து வைத்தேன். அங்கே ஹிடும்பன் இருந்தான். பயங்கரமான ராக்ஷசன் அவன். அவனால் இயன்ற அளவுக்குப் பெருங்குரலெடுத்துக் கத்தினான்.  கர்ஜித்தான். அதைக் கண்ட நான் சிறிதும் அஞ்சாமல் நானும் திரும்பக் கர்ஜித்தேன்.  அவனுக்கு என் குரலாலேயே பதிலடி கொடுத்தேன்.  அதைக் கண்ட என் தாய் குந்தி மயங்கி விழ, பாவம் சஹாதேவன் அவனுக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டி அவளை மயக்கத்திலிருந்து எழுப்ப முயன்றான்.  இப்போது ஹிடும்பனோடு அவன் கூட்டத்தினரும் சேர்ந்து கர்ஜித்தனர்.  பெரிய இடி முழக்கம் போல் கேட்டது அது.  அதைக் கேட்ட நான் கர்ஜித்த கர்ஜனையில் அந்தக் காடே அதிர்ந்தது.  உத்தவா, நான் இப்படி எல்லாம் கர்ஜிப்பேன் என நானே நினைக்கவில்லை.  நீ நேரில் பார்க்கவில்லையே அந்தக் காட்சியை!  காட்டு மிருகங்கள் கூடக் குறிப்பாகக் காட்டின் ராஜாவான சிங்கமே நடுங்கியது அந்தக் கர்ஜனையால்.” இதைச் சொல்கையில் பீமனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இவ்வளவு அவ்வளவு அல்ல. உத்தவனைப் பார்த்து மகிழ்வோடு சிரித்தான்.

“நான் தான் காலையில் கேட்டேனே உன் கர்ஜனையை!  அது கொடுக்காத அச்சமா?  அப்போதே நான் மயங்கியும் விழுந்திருப்பேன். என்னவோ சமாளித்துக் கொண்டேன்.  அது போகட்டும்! பின்னர் என்ன நடந்தது?  எப்படித் தப்பினீர்கள் இந்த ராக்ஷசர்களிடமிருந்து?” உத்தவன் மீண்டும் கேட்டான்.  பீமன் தொடர்ந்தான். “அவர்கள் மீண்டும் மீண்டும் ஊளையிட்டனர்.  நான் திரும்பத் திரும்ப கர்ஜித்தேன்.  அவர்களும் நிறுத்தவில்லை;  நானும் நிறுத்தவில்லை.  அவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.  இப்படி ஒருவனை அவர்கள் அன்று வரை சந்தித்ததில்லை.  ஆகவே என்னருகே நெருங்கவும் அச்சமாக இருந்தது அவர்களுக்கு.  ஆனாலும் சமாளித்துக் கொண்ட ஹிடும்பன், கூரிய கல்முனை கொண்ட தன் ஈட்டியை என் மேல் தாக்கக் குறி பார்த்தான்.  ஈட்டியால் தாக்கியும் விட்டான்.  ஆனால் நான் ஒரு பெருங்குதி குதித்து அதிலிருந்து தப்பினேன். பெருங்கூச்சலுடன் கர்ஜித்துக் கொண்டே ஹிடும்பனை நோக்கிப் பாய்ந்தேன். அதை மிக வேகமாகச் செய்தேன்.  அதனால் சாதாரணமாக அனைவரையும் பயமுறுத்தும் அந்த ராக்ஷசர்கள் தாங்களே பயந்து போனார்கள்.  பயத்தில் சில அடிகள் பின்னே சென்றார்கள்.” பீமனின் கண்கள் சந்தோஷத்தில் ஒரு நாட்டியமே ஆடின.  “ஆஹா, நீயா இதைச் செய்தது?  எப்படி நீ இவ்வளவு பயமுறுத்துபவனாக மாறினாய்?  சாதாரணமாக நீ மிகவும் கருணையுள்ளவனாக இருப்பாயே!” என உத்தவன் கேட்டான்.

“ஆஹா, உத்தவா, உன் சகோதரனை நீ இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.  உனக்கு எவரையானும் பயமுறுத்த வேண்டுமெனில் என்னிடம் விட்டு விடு.  இதைக் கேள், அந்த ராக்ஷசர்கள் பின் வாங்கியதும், அதை, அந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்.  ஒரு பெரிய பாறை, கிட்டத்தட்டப் பத்து நபர்கள் ஒன்று சேர்ந்து முயன்றால் தான் தூக்க முடியும்.  அப்படிப்பட்ட பாறை ஒன்று என் முன்னர் கிடந்தது. நான் என் பலத்தை எல்லாம் பிரயோகித்து அந்தப் பாறையைத் தூக்கி, ஹிடும்பனைத் தாக்கினேன்.  அவ்வளவு பெரிய பாறையால் தாக்கப்பட்ட ஹிடும்பனின் மண்டை உடைந்தது.  மிகவும் பயத்தோடு கூடிய கேட்பவர் மெய் சிலிர்க்கக் கூடிய ஒரு கத்தலோடு அவன் கீழே விழ, ராக்ஷசர்கள் அனைவரும் பயந்து கூக்குரலிட்டுக் கொண்டு அவர்களும் கீழே விழுந்துவிட்டனர்.  ஹிடும்பன் ராக்ஷசர்களிலேயே மிகவும் வலிமை வாய்ந்தவன்.  உயரமாகவும் இருந்தான்.  ஆனாலும் பார் உத்தவா, அவன் என் தோள்களுக்குக் கீழ் தான் வருவான்.  அவனை அடக்க இதை விட வேறு வழி எனக்குத் தெரியவில்லை.  நல்லவேளையாக உன்னைக் காப்பாற்ற என்னைப் போன்றதொரு சகோதரன் உனக்குக் கிடைத்தானே, உன் நல்ல நேரம் அது!” மீண்டும் ஹாஹாஹாவெனக் குரலெடுத்துச் சிரித்தான் பீமன்.

உத்தவன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே மேலும் அவன், “ அந்த ராக்ஷசர்கள் பயத்தில் ஓட்டமாக ஓடி விட்டனர். அப்படியும் ஒருத்தனைக் கால்களைப் பிடித்து நிறுத்தி விட்டேன்.  அவனை அப்படியே தூக்கிச் சுழற்றி ஒரு மரத்தில் ஓங்கி அடித்துவிட்டேன். ஓடிய சிலர் நின்று அங்கே நடப்பதைக் கவனித்தார்கள்.  பின்னர் நடந்தது தான் அதிசயம், ஆச்சரியம்! கேள் உத்தவா, அவர்களிடம் ஒரு பெரிய மாறுதல் சில கணங்களிலேயே ஏற்பட்டது.  ஹிடும்பனை அவர்கள் அனைவரும் ஏதோ மந்திரவாதி,  மந்திர, தந்திரங்களில் தேர்ந்த பலசாலி என்றே எண்ணி வந்தனர்.  அவன் வலிமை அவர்களுக்குள் ஒரு பயத்தையும், அதன் மூலம் மரியாதையையும் ஏற்படுத்தி இருந்தது.  ஆனால் இப்போதோ, அவனே கொல்லப்பட்டு விட்டான்.  இது அவர்களுக்கு ஆச்சரியத்தை மட்டுமில்லாமல் என் மேல் மிகுந்த பயம் கலந்த மரியாதையையும் ஏற்படுத்தியது.  அவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர்.  தங்கள் ஆயுதங்களை பூமியில் எறிந்துவிட்டுக் கீழே விழுந்து என்னை வணங்கினார்கள்.  “ பீமனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.  தன் வெற்றியைக் குறித்த பெருமிதமும் அவன் குரலில் தெரிந்தது.

“எப்படி அது நடந்தது?” உத்தவனுக்குள் ஆச்சரியம் மிகுந்தது.

“இந்த ராக்ஷசர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது.  அவர்களின் முன்னோரான விரோசனனின் முழு பலத்தையும் அவர்களின் தலைவன் வழி வழியாகப் பெற்றுக் கொண்டு வருகிறான் என பரிபூரணமாக நம்புகின்றனர். அவனை எவராலும் வெல்ல முடியாது எனவும் நம்புகின்றனர்ர்.  ஆனால் எப்போது அவனால் எதிரிகளை எதிர்க்க முடியாமல் தோற்கிறானோ, அப்போது அவர்களுக்கு அவனிடம் நம்பிக்கை பிறப்பதில்லை.  நம்பிக்கையை அந்தத் தலைவன் இழந்துவிடுகிறான்.  இது குறித்து நான் ஏற்கெனவே பல முறை கேட்டிருக்கிறேன்.  அதாவது ஒரு தலைவனின் பலம் போய்விட்டதெனில் அவனை இவர்கள்  நீ கூறினாயே இரண்டு கைதிகளை உயிரோடு வறுத்துச் சாப்பிட்டார்கள் என.  அவ்வாறே தங்கள் பலம் குறைந்த தலைவனையும், வறுத்துவிடுகின்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தத் தலைவன் உடலைப் பங்கிட்டு உண்கின்றனர்.  இதன் மூலம் அந்தத் தலைவனின் பலம் முழுவதும் அவர்களில் எவனாவது ஒருவனுக்கு வரும் என்றும் நம்புகின்றனர்.  ஆகவே இப்போது ஹிடும்பனை விட நான் பலசாலி, வலிமை மிகுந்தவன் என்பது நிரூபணம் ஆனவுடன் அவர்களின் மொத்த விசுவாசமும் என்மேல் திரும்பிவிட்டது. எவராலும் வெல்ல முடியாத அவர்கள் தலைவனை நான் வென்றதும் என் மேல் அவர்கள் நம்பிக்கையும் விசுவாசமும் திரும்பிவிட்டது.  நான் எவராலும் வெல்ல முடியாதவன் ஆகிவிட்டேன்.” என்று கூறிய பீமன் மீண்டும் சிரித்தான்.

“நீ என்ன செய்தாய் அவர்களை?”  உத்தவன் கேட்டான்.

“ஹா, ஹா, அதைக் கேட்கிறாயா?  நான் அவர்களிடம் சென்று சிலரை நன்கு உதைத்துத் தள்ளினேன்.  பின்னர் அவர்களின் ஆயுதங்களைச் சேகரித்து என் சகோதரர்களிடம் விநியோகம் செய்தேன்.  பின்னர் அவர்களை எல்லாம் கயிற்றால் பிணைத்து, ஹிடும்பனின் வாசஸ்தலத்திற்கு, என்னை அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டேன். “

“உண்மையாகவா?  அவர்கள் அனைவருமே உனக்குக் கீழ்ப்படிந்தனரா?” உத்தவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஒரே ஒரு ராக்ஷசன் மட்டுமே ஏதோ தந்திரம் செய்ய நினைத்தான்.  நான் அதனைக் கண்டுகொண்டு அவனை அப்படியே மேலே தூக்கிச் சுழற்றித் தரையில் ஓங்கி அடித்தேன்.  அவ்வளவு தான்.  அவன் உயிர் பிரிந்தது. “ அந்நிகழ்வை இப்போது எண்ணிச் சிரிப்பது போல் இருந்தது பீமனைப் பார்க்கையில்.  “பின்னர் வேறு எவருமே என்னிடம் அவர்கள் தந்திரத்தைக் காட்டவில்லை. உனக்குத் தெரியுமா, உத்தவா?  நான் தேவைப்படும்போது எவ்வளவு பயங்கரமானவனாக ஆகிறேன் என?” பொய்யானதொரு பயங்கரத்தைக் காட்டிய வண்ணம் உத்தவனைப் பார்த்துச் சிரித்த பீமன் மேலும் தொடர்ந்தான்.” என் மூத்த சகோதரன், யுதிஷ்டிரனுக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை.  அவர் என் நடத்தையால் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.  மிருகத்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதைச் சுட்டிக்காட்டி என்னை மிகவும் கண்டித்து விட்டார்.  ஹா, ஹா, நான் மட்டும் அப்படி மிருகத்தனமாக நடக்காவிட்டால், இதைச் சொல்லிக் கண்டிக்க அவர் உயிருடன் இருந்திருக்கவே மாட்டார்;  அதை நினைத்துப் பார்க்கவில்லை, பார் உத்தவா!  மறந்து விட்டார் அதை!” பீமனால் சிரிப்பை மீண்டும் மீண்டும் அடக்க இயலவில்லை.

“இறந்து போன ஹிடும்பனின் கதி என்ன ஆயிற்று!” உத்தவன் கேட்டான்.  “ஓ, அவன் உடலை நான்கு ராக்ஷசர்கள் தூக்கிக் கொண்டு வந்தனர். நாங்கள் அவன் குடியிருப்புக்கு அந்த உடலைத் தூக்கிச் சென்றோம்.” என்றான் பீமன்.

“ஓஹோ, அப்படியா? ஹிடும்பனின் குடியிருப்புக்கு நீ சென்றாயா?” எனக் கேட்டான் உத்தவன். “ஆம், சென்றோம்.  அந்த ஊர்வலத்திற்கு நான் தான் தலைமை தாங்கினேன்.  நான் முன்னே சென்றேன்.  வழியெங்கும் என்னுடைய கர்ஜனையை நிறுத்தவில்லை.  நாங்கள் அங்கே சென்றதும் எங்களுடன் வந்த ராக்ஷசர்கள் ஹிடும்பன் இறந்துவிட்டான் என்ற துக்கச் செய்தியை அங்கே பரப்பினார்கள்.  அனைவருக்கும் துக்கம் ஏற்பட்டது. மொத்த கிராமத்து ராக்ஷசர்களும் துக்கம் அநுஷ்டித்தனர்.  அவர்கள் அனைவரும் இப்படித் துருத்திய பற்களோடும், உதடுகளில் பொருத்தப்பட்ட வண்ண மரச்சில்லுகளோடும் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது.  அப்போது தான் வந்தாள் ஹிடும்பி.  ஹிடும்பனின் சகோதரியாம் அவள்.  அவளும் ஒரு ராக்ஷசிதான்.  உடல் முழுவதும் வண்ணம் அடித்துக் கொண்டு, தலையில் பின்னப்பட்ட சிறு சிறு பின்னல்களும், அதில் கட்டப்பட்டிருந்த கயிறுகளோடும், எலும்புகளால் ஆன மாலையையும் தரித்துக் கொண்டு வந்தாள். அவள் இதயமே உடைந்து நொறுங்கி விட்டது போல் தன் சகோதரன் ஹிடும்பனைப் பார்த்து அவள் அழுத அழுகை இருக்கிறதே! “ பீமன் சற்று நிறுத்தினான்.