Tuesday, June 21, 2016

ஆசாரிய விபூதியின் எதிர்ப்பு!

அதற்கு த்வைபாயனர், “வாஜ்பேய யக்ஞம் பதினேழு நாட்களில் முடிவடையும் என்பதை ஆசாரியர் அறியாமல் இருக்க மாட்டார். மற்ற விரிவான யாகங்களையும், யக்ஞங்களையும் போல இதற்கு மாதக்கணக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியதில்லை. மெல்ல மெல்ல மஹாராஜாவைப் பயணம் செய்ய வைத்து அழைத்துச் செல்ல முடியும். அவருடைய உடல்நிலைக்குக் கேடு வராமல் கூட்டிச் செல்லலாம். மஹாராஜா விரும்பினால் நான் அவருடன் துணைக்குச் செல்வேன்.” என்றார்.

“இது ஓர் கடுமையான போராட்டங்களும் சவாலும் நிறைந்த ஒன்று. இந்த குருவம்சத்தின் ராஜகுரு என்னும் முறையில் எனக்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை. மஹாராஜா அங்கே செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது!”

“அப்படி இல்லை ஐயா! சூரிய பகவான் மஹாராஜாவின் உயிரைக் காத்து ரக்ஷித்ததின் காரணமே அவர் அந்த ஓநாய்களின் சாம்ராஜ்யத்திற்குச் சென்று அங்கே இப்படியான ஓர் யாகத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகவோ என்றே பல சமயங்களில் நான் நினைக்கிறேன். தர்மக்ஷேத்திரத்தில் மன்னரால் யாகம் செய்யப்பட வேண்டும். மன்னர் யாகத்தைச் செய்யத் தயாரானால் குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருமே அங்கே கூடிவிடுவார்கள். மற்ற அரசர்கள், சிற்றரசர்கள் என்று யாரெல்லாம் ஷாந்தனு மஹாராஜாவைச் சக்கரவர்த்தியாக அங்கீகாரம் செய்திருக்கின்றனரோ அனைவரும் கூடிவிடுவார்கள். மற்ற அரசகுல விருந்தாளிகளையும் எதிர்பார்க்கலாம். அதோடு இல்லாமல் ஸ்ரோத்ரியர்களும் நூற்றுக்கணக்கில் வந்து கலந்து கொள்வார்கள்.

"மேலும் யாகம் அங்கே முடிவடைந்ததும் வந்திருக்கும் ஸ்ரோத்ரியர்களில் பலரும் அங்கே ஆசிரமம் அமைத்துத் தங்கவும் விருப்பம் தெரிவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அப்படி அவர்கள் சொன்னால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! மீண்டும் பிரம்மதேஜஸுக்கும் க்ஷத்திரிய தேஜஸுக்கும் விவாகம் நடைபெறும். இரண்டும் ஒன்றாக இணையும். குருவம்சத்துத் தலைவர்களின் சக்தியால் இது நடைபெறும்.”


ஷாந்தனு காங்கேயன் பக்கம் திரும்பி, “த்வைபாயனரின் விருப்பம் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்!” என்று கூறினார். “தங்கள் கட்டளைப்படியே, தந்தையே!” என்ற காங்கேயர் மேலும் தொடர்ந்து, “நான் இப்போதே மந்திரி குனிகரை வரவழைத்து உடனடியாக நூற்றுக்கணக்கான வேட்டைக்காரர்களையும், வன அலுவலர்களையும் அனுப்பி வைக்கச் சொல்கிறேன். அங்கே காட்டு மரங்களையும், காட்டு மிருகங்களையும் அவர்கள் முறையே வெட்டியும் மிருகங்களை விரட்டியும் அந்த இடத்தைச் சுத்தம் செய்து தரச் சொல்கிறேன். த்வைபாயனரே, குனிகர் உங்களுடன் வந்து அங்கே அனைத்து வேலைகளையும் செய்து தருவார். வாஜ்பேய  யாகம் நடைபெறுவதற்கான வேலைகள் அனைத்தும் நன்கு நடக்கும். கவலை வேண்டாம்!” என்றார் காங்கேயர்.

இதைக் கேட்டதும் த்வைபாயனர், மன்னனையும் காங்கேயரையும் பார்த்து, “ மன்னாதி மன்னா! அப்போது நான் இங்கிருந்து செல்ல விடைபெறுகிறேன். உங்களிடம் நான் சொன்னதைப் போல் என் தந்தையின் சீடர்களை எல்லாம் நான் ஒன்று திரட்ட வேண்டும். ஒருவேளை நான் பராசர கோத்திரக்காரர்கள் அனைவரையுமே அங்கே கொண்டு சேர்க்கலாம். இதை நான் விரைவில் செய்து முடிக்க வேண்டும். ஏனெனில் நான் விண்ணில் கோள்களின் நிலையை ஆராய்ந்தபோது சித்திரா பௌர்ணமிக்கு நான்கு நாட்கள் முன்னதாக வாஜ்பேய யாகம் செய்வதற்கான நல்ல நாள் இருப்பதாகத் தெரிந்தது. ஆகவே விரைவில் நான் அதற்கான ஏற்பாடுகளை முடிக்கவேண்டும்.” என்றார். அப்போது மன்னன் ஷாந்தனு ஆசாரிய விபூதியின் பக்கம் திரும்பி, “ஆசாரியரே, வாஜ்பேய யாகம் செய்வதற்கான பொருட்களை விரைவில் சேகரிக்கத் தொடங்குங்கள்.” என்றான்.

ஆனால் ஆசாரிய விபூதி ஏற்கெனவே ஓர் தீர்மானத்துக்கு வந்து விட்டார். ஆகவே வேண்டுமென்றே அவர் மன்னனிடம், “பரத குலத்து அரசனே, குருவம்சத்தில் சிறந்தவனே! எனக்கு வயதாகி விட்டது! என் உடல்நிலையும் முன்னைப் போல் இல்லை! இத்தகைய மாபெரும் பொறுப்பை என்னால் ஏற்க இயலாது! நீ வேறு யாரையேனும் பார்த்துக்கொள்!” என்று முடிவாகச் சொல்லிவிட்டார். அதைக் கேட்ட த்வைபாயனர் வணக்கத்துடன் ஆசாரியர் பக்கம் திரும்பி, “ஆசாரியரே! நீர் குருவம்சத்து ராஜகுருவாகிறீர். வேத சிரோன்மணிகளில் தாங்கள் முக்கியமானவர். கங்கைக்கரையில் இருக்கும் அனைத்து ஆசிரமத்து ஆசாரியர்களும் உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். நீங்கள் வழிகாட்டுவதை எதிர்பார்த்திருப்பார்கள். அப்படிப்பட்ட தாங்கள் இவ்வாறு சொல்லலாமா? மன்னன் வாஜ்பேய யாகம் செய்யப் போவதென்றால் அதற்குப் புரோகிதராகவும், ஆசாரியராகவும் இருந்து நீங்கள் அன்றோ வழிகாட்ட வேண்டும்!” என்றார்.

ஆனால் அதற்கு ஆசாரிய விபூதி த்வைபாயனருக்கு நேருக்கு நேர் பதில் கொடுக்காமல் மன்னனைப் பார்த்து, “மன்னா, இப்படி ஒரு கருத்து கங்கைக்கரையின் ஆசிரமங்களைக் குறித்தும் அங்குள்ள ஸ்ரோத்ரியர்கள் குறித்தும் பேசப்படுமானால் வாஜ்பேய யாகத்துக்கு என்னைத் தலைமை தாங்க வைப்பது வீண் வேலை! பயனில்லாதது! என்னால் இயலாது!” என்றார். த்வைபாயனர் அதற்கு, “மன்னிக்க வேண்டும் ஐயா! நான் தங்களைப் புண்படுத்தி இருந்தேனானால் மிகவும் மன்னிக்கவும்.” தன் கைகளைக் கூப்பியவண்ணம் த்வைபாயனர், “நான் என் தந்தையுடன் அங்கே சில நாட்கள் தங்கி இருந்திருக்கிறேன். அப்போது கவனித்ததில் அங்கே பிரமசரிய விரதத்தின் போது எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று பணிவுடனேயே சொன்னார்.

“த்வைபாயனரே, நான் வேதத்தில் கரை கண்டவன் அல்ல! உன்னைப் போல் அதில் மாபெரும் சக்தி படைத்தவனும் அல்ல. அதிசயங்களை நிகழ்த்தவும் முடியாது! “ என்ற ஆசாரிய விபூதி தன் தலையை மறுப்பாக அசைத்த வண்ணம், “நான்கு வேதங்களை அறிந்த சிறந்த பிராமணர்களும், கூடி நடத்தப் போகும் ஓர் மாபெரும் யக்ஞத்தின் அதிகாரியாக என்னால் பொறுப்பேற்க இயலாது. அங்கே அப்போது நான்கு வேதங்களும் ஓதப்படும். என் வாழ்க்கையோ த்ரயி வித்யா எனப்படும் மூன்று வேதங்களைச் சொல்வதில் அடங்கி விட்டது. என்னைப் பொறுத்தவரை வேதங்கள் மூன்று பகுதிகளால் மட்டும் ஆனவை! நான்கு வேதங்களையும் கற்றறிந்தவன் அல்ல நான். தயவு செய்து என்னை இந்த வாஜ்பேய யாகத்தில் பங்கெடுக்கச் சொல்லி வற்புறுத்தாதே!” என்றார்.

1 comment:

ஸ்ரீராம். said...

இப்போது என்ன ஆகும்?