Wednesday, October 20, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ஜராசந்தனின் திட்டமும், ஸ்வேதகேதுவின் வருகையும்

எவ்விதமேனும் அந்தக் கண்ணனையும், அவன் கூட்டத்தையும் அடியோடு ஒழிக்கவேண்டும். என்ன செய்யலாம் அதற்கு?? ஜராசந்தன் மேலும் யோசித்தான். கூடியவரைக்கும் தன் நண்பர்களைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் எனவும் விரும்பினான் ஜராசந்தன். முக்கியமாய் சேதி நாட்டரசன் தாமகோஷனையும், விதர்ப்ப நாட்டின் பீஷ்மகனையும் எவ்வகையிலேனும் நம் பக்கம் இருக்குமாறு செய்திடவேண்டும். ஆஹா, இப்போது இந்தக் கிருஷ்ண வாசுதேவனால் இழந்த என் கெளரவத்தையும், மதிப்பையும் எவ்வகையிலேனும் மீட்டுவிடவேண்டும். யோசித்து, யோசித்து, திட்டங்கள் போட்டு, அவை சரிவராதென மீண்டும் திட்டங்கள் போட்டு, இப்படியே நேரம் சென்றது ஜராசந்தனுக்கு. கடைசியில் அவன் கண்ணெதிரே ஒளிக்கீற்றுத் தோன்றியது. அநுவிந்தனிடம் சொல்லி ரதத்தை நிறுத்தச் சொல்லித் தன்னைப் பின் தொடரும் மற்றவர்களுக்காக அங்கேயே காத்திருக்க முடிவு செய்தான். அவசரம் அவசரமாகப் போடப் பட்ட கூடாரத்தினுள் தங்கிய ஜராசந்தனுக்கு ஓய்வு எடுக்கவே மனமில்லை. அங்குமிங்கும் நடந்துகொண்டே பலவிதங்களிலும், பல விஷயங்களையும், பல திட்டங்களையும் யோசித்துக்கொண்டிருந்தான். கடைசியில் ருக்மி வந்து சேர்ந்துகொள்ளும்வரை அந்த இடத்திலிருந்து கிளம்பவேண்டாம் என முடிவெடுத்தான். அன்று இரவும் போய், மறுநாள் பொழுது புலர்ந்தும் வராமல் அன்றைய மாலையிலேயே வந்து சேர்ந்தனர் மற்றவர்கள் அனைவரும். அவர்கள் ஜராசந்தன் இங்கே தங்கி இருப்பான் என எதிர்பார்க்கவில்லை ஆதலால் அவனைக் கண்டதும் குழம்பினார்கள். மேலும் ஜாசந்தன் தோல்வியின் துக்கத்தில் ஆழ்ந்திருப்பான் என எதிர்பார்த்தும் ஏமாந்தனர். இதற்குள்ளாகத் தன்னைச் சமாளித்துக்கொண்ட ஜராசந்தன் எதுவுமே நடவாதது போல் அமைதி காத்தான். தன்னுடைய கம்பீரத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அங்கேயே இரண்டு நாட்கள் தங்கிய அவர்கள், மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்தனர். அனைவருக்கும் தேவையான உணவு, குடிக்க மது எல்லாம் தாராளமாக விநியோகிக்கப் பட்டது. மதுவும், உணவும் வயிற்றுக்குள் சென்றதுமே அவர்களால் தங்கள் அவமானத்தையும், தோல்வியையும் மறக்க முடிந்தது. அனைவரும் தாமகோஷன் செய்த துரோகத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, ஜராசந்தனோ தாமகோஷனை ஆதரித்துப் பேசினான். எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதோடு தாமகோஷன் தலையிடவில்லை எனில் ருக்மிக்கும், தனக்கும் என்ன நேர்ந்திருக்கும் என்றே சொல்லமுடியாது எனவும், அவன் தலையீட்டினாலேயே தாங்கள் இருவரும் தப்பிப் பிழைத்ததாயும், தாமகோஷன் நேர்மையாகவும், உண்மையாகவும் பாடுபட்டதாயும் புகழ்ந்தான். மேலும் பதினாறே வயது நிரம்பிய அந்த இரு இடைச்சிறுவர்களும் இவ்வளவு வீரமும், விவேகமும், சாதுர்யமும் நிறைந்திருப்பார்கள் என்பதையும் எவரும் எதிர்பார்க்கவில்லை என்றும் வசுதேவனின் குமாரர்களின் அதிசய சக்தியாலேயே, முக்கியமாய்க் கண்ணனுக்குள் ஏதோ அபூர்வ சக்தி ஒளிந்திருப்பதாலேயே இவ்விதம் நடந்திருக்கக் கூடும் எனத் தான் நம்புவதாயும் கூறினான். இல்லை எனில் சரியான சமயத்துக்கு எவ்வாறு கடல் வந்து கோமந்தக மலையைச் சூழ்ந்துகொள்ள முடியும்?? நிச்சயமாய் இதில் கண்ணனின் அதிசய சக்தி தான் காரணம்.

ஜராசந்தன் இரட்டை வேடம் போடுவதில் வல்லவன். மிக மிகச் சாமர்த்தியமாய்த் தன்னை ஒரு நியாயவான் போலவும், தோல்வியைத் தான் ஒப்புக்கொள்வதில் பின்வாங்காதவன் போலும், நீதியை மதிப்பவன் போலும், தர்மத்திற்குக் கட்டுப்படுபவன் போலும் காட்டிக் கொண்டான். ஆகவே தவறு பூராவும் தன்மேலேயே என்பது போலக் காட்டிக்கொண்டான். தாமகோஷனையும், கண்ணனையும் அவனும் அவதூறாய்ப் பேசவில்லை. வேறு எவரையும் பேசவும் அநுமதிக்கவில்லை. அவனுடைய இந்தக் கபட நாடகம் நன்கு பலித்தது. மெல்ல மெல்ல அவனுடைய நண்பர்களான வேற்று நாட்டரசர்களும், இளவரசர்களும் ஜராசந்தனின் பெருந்தன்மையிலும், மன்னிக்கும் மாபெரும் மனத்தையும் கண்டு மனம் நெகிழ்ந்தனர். இவ்வளவு மாபெரும் தோல்விக்குப் பின்னும், தன்னைத் தோற்கடித்தவனின் வீரத்தையும், விவேகத்தையும் புகழ்ந்து துதிக்கும் இத்தகையதொரு மாமன்னன் நமக்கு நண்பனாய்க் கிடைத்ததே தாங்கள் அனைவரும் செய்த பெரும்பேறு என அனைவரும் நினைத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஜராசந்தனை அவர்கள் புதிய கண்ணோட்டத்தோடு பார்த்ததோடு அல்லாமல், அவன் மேல் பெரும் மதிப்பையும், மரியாதையையும் காட்டினார்கள். தோல்வியின் வீழ்ச்சியினால் துவண்டு கிடந்த தங்கள் மனத்தையும் இத்தகையதொரு மாபெரும் பெருந்தன்மையைக் கண்டு தேற்றிக்கொண்டார்கள்.

அடுத்த நாள் அனைவரும் அருகே இருந்த ஒரு சிறிய நாட்டில் தங்க நேர்ந்தது. அந்தச் சிற்றரசன் திடீரெனக் கூட்டமாய் வந்த பேரரசர்களைக் கண்டு ஒரு பக்கம் திகைத்தாலும், மறுபக்கம் அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். அனைவரும் அங்கேயே நான்கு நாட்கள் தங்கி அந்தச் சிற்றரசனின் விருந்தோம்பலிலும், அங்கே உள்ள காடுகளில் வேட்டையாடியும் பொழுதை மகிழ்வோடு கழித்தனர். நான்காம் நாள் மாலை நேரத்தில் தூரத்தில் ஒரு புழுதிப் புயல் தென்பட்டது. சமீபத்தில் புழுதிப் புயல் எங்கேனும் அடித்ததா?? அனைவரும் அந்தத் திசையையே பார்த்துக்கொண்டிருந்தனர். கரவீரபுரம் இருக்கும் திசையிலிருந்து அந்தப் புழுதிப் புயல் வந்து கொண்டிருந்தது. மெல்ல, மெல்ல அவர்கள் பக்கம் நகர்ந்த அந்தப் புழுதிப் புயல் வெகு விரைவில் ஒரு ரதமாய்த் தெரிந்தது. அதை ஓட்டி வந்தவன் தேர்ந்த ரத சாரதி என்பதும் புலப்பட்டது. யார் இந்த மஹாரதன்?? ஆஹா, வேறு யாருமே இல்லை! ஸ்வேதகேது! ஆம் ஸ்வேதகேது தான் கண்ணனைப் பிரிந்ததில் இருந்து நிற்காமல், இரவு, பகல் பாராமல் ரதத்தை ஓட்டிக்கொண்டு இங்கே வந்து சேர்ந்திருக்கிறான். அதுதான் இவ்வளவு விரைவிலும் வந்திருக்கிறான் போலும்!
விந்தனும் அநுவிந்தனும் தங்கள் குருவைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

2 comments:

எல் கே said...

updates koncham seekiram podunga

priya.r said...

கதை நன்றாக போகிறது கீதாம்மா
கதையின் பரபரப்பு எங்களையும் தொற்றி கொண்டு அடுத்து என்ன என்று கேட்கவும் வைக்கிறது
ஆமாம் ;ஏன் மூன்று நாட்களாக தங்களை வலைபூ(ப்ளாக்) பக்கமே பார்க்க முடியவில்லை ;
எங்கள் கிருஷ்ணர் அருளில் நீங்கள் நலம் தானே