Sunday, October 24, 2010

கண்ணன் வ்ருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன!

ஸ்வேதகேது அநுவிந்தனைப் பார்த்து, “நான் கரவீரபுரத்தில் இருந்த சமயம் நீ கிளம்பிவிட்டாய் என்ற செய்திகிடைத்தது. அங்கே கொலைகார ஆதிவாசிகள் இருக்கின்றனர். கோமந்தகமலைக் காடுகளை அவர்களே ஆக்கிரமித்துள்ளனர். உனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என அஞ்சினேன். ஸ்ரீகாலவனின் படைகளை வழிநடத்திக்கொண்டிருந்த எனக்கு அவர்களோடு சிறிது பரிச்சயம் உண்டு. உன்னை எவ்வகையிலேனும் காக்க எண்ணினேன். ஆனால் நல்லவேளையாய் நீ கிளம்பிவிட்ட செய்தி கிடைத்தது. உடனே ஓடோடியும் வந்தேன். உன்னையும், விந்தனையும் இங்கே பார்த்ததும் மனதுக்கு நிம்மதி!” என்றான். அநுவிந்தனுக்குக் கண்ணீரே வரும்போல் இருந்தது. நன்றியினால் அவன் நெஞ்சம் விம்மியது. ஜராசந்தனுக்கும், மற்றவர்களுக்கும் தன் ஆசார்யன் ஸ்வேதகேதுவை அறிமுகம் செய்து வைத்தான். ருக்மி ஸ்வேதகேதுவைப் பார்த்து, “நீ கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்தாயா?” என வினவினான்.

“நான் ஸ்ரீகாலவன் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க நகருக்கு வெளியே சென்றதைப் பார்த்தேன்.” நிதானமாயும் அமைதியாகவும் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமலும் பதிலளித்தான் ஸ்வேதகேது. ருக்மி அநுவிந்தனின் கோரிக்கையான குண்டினாபுரத்துக்கு ஸ்வேதகேதுவும் வரவேண்டும் என்பதை நிறைவேற்றச் சொல்லி வற்புறுத்தினான். ஸ்வேதகேது எதையும் வெளிக்காட்டவில்லை. அவர்களோடு சென்றான். போகும்போதே கோமந்தகமலையில் கண்ணன் அடைந்த வெற்றிகளைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டான். ஸ்வேதகேதுவுக்குக் கரவீரபுரத்தில் நடந்தவை எல்லாம் கண்முன்னே தோன்றின. ஷாயிபாவின் மோகத்திலிருந்து தன்னைக் கண்ணன் விடுவித்ததை எண்ணி ஆச்சரியம் அடைந்தான்.

மேலும் ஷாயிபாவின் துர் ஆங்காரத்தையும் அவள் கண்ணனைப் பழிவாங்க வந்தும், அதற்குச் சற்றும் கலங்காமல் கண்ணன் அதை அமைதியாக எதிர் கொண்டு அவளைச் சமாளித்ததையும் எண்ணி எண்ணி வியப்புற்றான். கண்ணனின் அளவுக்கு மீறிய கருணையால் அவள் தாங்க முடியாமல் அழுததையும் எண்ணிப் பார்த்தான். இதை எல்லாம் எண்ணும்போதே அவன் மனம் துயரத்திலும் ஆழ்ந்தது. இவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட அவன் விரும்பவில்லை. ஷாயிபா எப்படியோ போகட்டும், இனி கண்ணன் பாடு, அவள் பாடு! கண்ணன் எவ்வகையிலேனும் அவளைச் சமாதானம் செய்து கொள்ளட்டும்.

சில நாட்கள் பிரயாணத்தின் பின்னர் அவர்கள் குண்டினாபுரத்திற்கு வந்து சேர்ந்தனர். அரசன் பீஷ்மகன் அனைவரையும் அன்போடும், மரியாதையோடும் வரவேற்றுத் தக்க மரியாதைகளைச் செய்தான். ஜராசந்தன் நிலையில் வேறொருவர் இருந்தால் அவமானத்தால் மனம் புழுங்கிச் செத்தே போயிருப்பார்கள். ஆனால் ஜராசந்தன் கண்ணனைப் பழிவாங்க வேண்டித் தன்னைச் சமாளித்துக்கொண்டான். அவன் தன் கதையை ஒரு மாதிரியாகத் தேவையான விஷயங்களை மட்டும் சொல்லி பீஷ்மகனை அதையே உண்மை என நம்ப வைத்தான். பல சம்பவங்கள் மறைக்கப் பட்டன. ஆனால் மறக்காமல் சேதி நாட்டரசன் தாமகோஷனின் நல்லெண்ணத்தையும், அவனுடைய விசுவாசத்தையும், பெருந்தன்மையையும் தன்னையும் கண்ணனையும் ரத்தம் சிந்த வைக்காமல் காப்பாற்றியதையும் கூறினான். பாவம் வசுதேவன், தன்னுடைய அருமைக் குமாரர்கள் இருவரையும் இழந்திருப்பான். தாமகோஷனின் நல்லெண்ணத்தைத் தான் புரிந்து கொண்டு அந்த இரண்டு இடைச்சிறுவர்களையும் பெருந்தன்மையோடு மன்னித்து விட்டு விட்டதாயும் கூறினான். அவன் அவ்வாறு செய்யவில்லை எனில் அவன் சக்கரவர்த்தி என்பதற்கு என்ன பொருள்??? இம்மாதிரியான சிறுபிள்ளைத் தனமான வேலைகளில் ஈடுபடும் சிறுவர்களை ஒரு சக்கரவர்த்தியான தான் மன்னிக்கவோ, மறக்கவோ செய்யாமல் தண்டிப்பது அழகல்லவே! நல்லவேளையாக தாமகோஷன் சரியான சமயத்துக்கு இதைச் சுட்டிக் காட்டினான். அவன் இல்லை எனில் தானும் தவறு செய்திருக்கலாம்.

ஜராசந்தன் இந்தக் கதையைச் சொன்ன விதத்திலும், அதை அவன் திரும்பத் திரும்பக் கூறிய விதத்திலும், ருக்மிக்கே நடந்தது இதுதான் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. மேலும் ஜராசந்தன் பீஷ்மகனைப் பார்த்து, “பீஷ்மகா, கண்ணனோ, பலராமனோ அரசர்கள் அல்ல. குறுநில மன்னர்கள் கூட இல்லை. ஷூரர்களின் தலைவன் ஆன வசுதேவனின் பிள்ளைகள். அவர்களோடு பொருதுவது நம் சாம்ராஜ்யத்தின் பெருமைக்கு இழுக்கன்றோ?? நாம் அந்த விஷயத்தை மறந்துவிட்டு வேறு உருப்படியான காரியங்களைக் கவனிக்கலாம்.” என்று ரொம்பவே பெருந்தன்மை குரலில் தொனிக்கக் கூறினான். கூறும்போதே அவன் மனம் பதறியது. உடலே எரிந்தது. ஆனால் பீஷ்மகனோ அவற்றை உண்மை என்றே நம்பி, “மாமன்னரே, நாம் இப்போது என்ன செய்யலாம்?? எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?” என்று ஆலோசனை கேட்டான். “நாம் மன்னர்கள், மாமன்னர்கள், சாம்ராஜ்யச் சக்கரவர்த்திகள், குறுநில மன்னர்கள் அனைவரும் ஒற்றுமையாக வலிமையானதொரு சமூகத்தை உருவாக்கவேண்டும். அந்த இடைச்சிறுவர்களின் பின்னால் போய் அவர்களை வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும்.”

ஜராசந்தன் சிரித்துக்கொண்டே இதைச் சொன்னதைக் கேட்டதும், அவனோடு கூட வந்திருந்த மன்னர்களும், இளவரசர்களும், அவனுடைய வற்புறுத்தலின் பேரிலேயே தாங்கள் அனைவரும் ஜராசந்தனுக்குத் துணை போய் சஹ்யாத்ரி மலைத் தொடரில் கண்ணனையும், பலராமனையும் வேட்டையாட நேர்ந்தது என்பதை மறப்பதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பீஷ்மகன், “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கு இப்போது அவசியமும் ஏற்பட்டுள்ளது. கம்சன் இறந்ததன் மூலம் மதுரா நகரம் சக்கரவர்த்தி ஜராசந்தனின் ஆட்சியிலிருந்து விலகிச் சென்று விட்டதை நாம் அறிவோமே?” என்றான். “ஓஓ, அது ஒன்றும் பிரமாதம் இல்லை, வெகுநாட்களுக்கு அவர்களால் மதுராவைக் காக்க முடியுமா?? கவலை வேண்டாம், பீஷ்மகரே, நான் சொல்ல வந்த விஷயமே வேறு. நாம் நம் குடும்பங்களை உறவு கொள்ள வைப்பதன் மூலமே நம்மிடையே உள்ள பந்தத்தை இறுக்கிக் கொள்ள முடியும். எனக்கு ஒரு பேத்தி இருக்கிறாள். அவளை ருக்மிக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். “ என்றான் ஜராசந்தன்.

ருக்மிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது என்றாலும் இந்த வேண்டுகோள் அவனுக்குத் திருப்தியை அளித்தது. கம்சன் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றிருந்தானோ அதைவிடக் கூட முக்கியத்துவமும், அதிகாரமும் தனக்குக் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தான். பீஷ்மகனோ வெளிப்படையான இந்த வேண்டுகோளால் அதிர்ச்சியே அடைந்தான். ஒருவேளை தாமகோஷன் தன் குமாரன் சிசுபாலனுக்கு ருக்மிணியைக் கேட்டிருந்தால் இவ்வளவு அதிர்ச்சி ஏற்பட்டிருக்காதோ? அதை ஒருவாறு ஏற்கலாம். ஜராசந்தன் எங்கே? நம் குமாரனுக்கு அவனுடைய மகன் வயிற்றுப் பேத்தியைத் திருமணம் செய்து வைப்பதாவது?? பீஷ்மகன் வெளிப்படையாகவே ஜராசந்தனிடம், “உங்கள் பேத்தியை வேறு சக்தி வாய்ந்த மன்னருக்கோ, இளவரசனுக்கோ திருமணம் செய்து வைப்பீர்கள் என்றல்லவோ எண்ணினேன்?” என்று கூறினான். அவனால் இன்னமும் உறுதியாக இந்த வேண்டுகோளை ஏற்கமுடியவில்லை. ஜராசந்தன் உண்மையைத் தான் சொல்கிறானா என நிச்சயம் செய்து கொள்ள விரும்பினான்.

ஜராசந்தன் மெல்ல, மெல்லத் தன் திட்டத்தை வெளியிட்டான்.

“பீஷ்மகரே, தாமகோஷனின் மகன் சிசுபாலனுக்கு உங்கள் அருமை மகள் ருக்மிணி மிகப் பொருத்தமாய் இருப்பாள். என் பேத்தியை உங்கள் குமாரனுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். ஆகவே மேற்கே சிசுபாலன், மத்தியில் நீர், கிழக்கே நான் மூவரும் சமமான அந்தஸ்துப் பெற்று அவரவர் சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிக் கொள்ளலாம். நம் உறவு பலப்பட இதுதான் சரியான தீர்வு. நாம் மூவரும் நெருங்கிய உறவு பூண்டிருந்தோமானால் நம்மை எதிர்க்க நினைப்பவர் அஞ்சுவார்கள்.” இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த செளப நாட்டு அரசன் ஷால்வனுக்கு ஜராசந்தனின் திட்டம் வெள்ளிடை மலையெனத் தெரிய வந்தது. தாமகோஷன் ஜராசந்தனோடு உறவு பூண இருந்தது அவனுக்குத் தெரியும். இப்போது கண்ணனோடு சேர்ந்து நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறான் தாமகோஷன். அவன் நம்பிக்கைத் துரோகம் என வெளிப்படையாய்க் காட்டிக்கொள்ளாவிட்டாலும், ஜராசந்தனும் அதை மூடி மறைத்தாலும் உண்மை என்னவோ அதுதான். ஆகவே தாமகோஷன் ஜராசந்தனின் பேத்தியைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டான்.

மேலும் தாமகோஷனின் மனைவி, ஷ்ருதஷ்ரவா, வசுதேவருக்கு சொந்தத் தங்கை. அவள் தன் தமையனைக் கொடுமை செய்த கம்சனின் மாமனார் வீட்டுப் பெண்ணைத் தன் மருமகளாய் ஏற்பாளா என்பதும் சந்தேகமே. மேலும் அண்ணன் மகன் என்பதால் இயல்பாகவே கண்ணனிடம் பாசம் இருக்கும். ஆகவே தன் பேத்தியை ருக்மிக்குக் கொடுத்து சிசுபாலனுக்கும் ருக்மிணியைத் திருமணம் முடிக்கச் சொல்வதன் மூலம், சேதி நாட்டரசனைத் தன் கையை விட்டுப் போகாதபடிக்கு ஜராசந்தன் பார்த்துக்கொள்ளப் போகிறான். அந்த ருக்மிணியின் அழகும் எல்லா அரசவைக் கவிஞர்களும் கவிகளால் பாடுகின்றனராமே? அவ்வளவு அழகாம், சாமர்த்தியசாலியாம், புத்திசாலியாம், ஆனால் கொஞ்சம் துடுக்குக்காரி என்கிறார்கள். இருந்தால் என்ன?? ஜராசந்தன் நினைத்தால் நினைத்தது தான். இனி விடமாட்டான். சிசுபாலனுக்கும் ருக்மிணிக்கும் திருமணம் நடந்தே தீரும். ம்ம்ம்ம்ம்ம் சிசுபாலனுக்கு அதிர்ஷ்டம் தான்.

ருக்மிக்கும் இந்தத் திட்டம் பிடித்திருந்தது. ஷால்வனைப் போல் அவன் ஆராயாவிட்டாலும் சிசுபாலனுக்குத் தன் தங்கையைத் திருமணம் செய்து கொடுக்கும் எண்ணத்தை முழுமனதோடு ஆதரித்தான். அவனை விடப்பொருத்தமான இளவரசன் ருக்மிணிக்குக் கிடைக்கமாட்டான் என்றும் கூறினான். ஜராசந்தனும் அதை ஆமோதித்தான். ஆனால் பீஷ்மகன் அவ்வளவு எளிதில் சம்மதம் சொல்லவில்லை. தன் தகப்பன் கைசிகனுக்கு இது பிடிக்காது என்று வெளிப்படையாகச் சொன்னதோடு, விதர்ப்ப அரசகுமாரிகள் அனைவருமே சுயம்வரத்தின் மூலமே தங்கள் கணவனைத் தாங்களே தேர்ந்தெடுப்பார்கள் என்றும், இம்மாதிரியான நிபந்தனைத் திருமணங்களை, அரசியல் காரணங்களுக்காக ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினான். மணமகனின் வீரத்தையும், அவன் செல்வாக்கையும் பார்த்தே விதர்ப்ப அரசகுமாரிகள் மாலையிடச் சம்மதிப்பார்கள் என்றும் கூறினான்.

2 comments:

எல் கே said...

பழைய காலத்துல பெண்களுக்கு முழு உரிமை இந்தியாவில் இருந்திருக்கு

priya.r said...

ஏன் கண்ணனை இன்னும் காணவில்லை !
எப்போது கண்ணனை காண்பிக்க போகிறீர்கள்!