Tuesday, October 26, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

ஜராசந்தனின் திட்டமும், ருக்மிணியின் கலக்கமும்

ஆனால் ருக்மியோ தன் தங்கைக்கு சிசுபாலனை விடவும் சிறந்த மாப்பிள்ளை கிடைக்காது என்றும் தனக்கு இதில் முழு சம்மதம் எனவும் கூறினான். பீஷ்மகன் திட்டவட்டமாய் அதை மறுத்து ருக்மிணி தன் சுயம்வரத்தில் சிசுபாலனைத் தேர்ந்தெடுத்தாளானால் தனக்கு அதில் ஆக்ஷேபணை எதுவும் இல்லை என்று கூறினான். ஜராசந்தன் பீஷ்மகனைப் பார்த்து, “இதோ பாரும் பீஷ்மகரே! சுயம்வரம் தானே! நீர் ஏற்பாடு செய்யும். நடக்கட்டும். சிசுபாலன் கட்டாயம் அதில் பங்கு பெறுவான். வெற்றியும் பெறுவான். நான் கவனித்துக்கொள்கிறேன் அந்த விஷயத்தை. அவனும் ஒரு மாவீரன் என்பதை மறந்தீரோ? அவன் சுயம்வரத்தில் என்ன நிபந்தனை இருந்தாலும் அதை வென்றுவிட்டு உங்கள் மகள் ருக்மிணியின் கரம் பிடிப்பான். சிசுபாலனைத் தவிர வேறு எவரும் அந்தப் போட்டியில் வெல்லாதபடிக்கு நான் கவனித்துக்கொள்கிறேன். நீர் அந்த விஷயத்தை என்னிடம் விட்டுவிடும்.” என்றான். ருக்மியும் ஜராசந்தனுக்கு இசைவாகப் பேசினான். “தந்தையே, நீர் ஒன்றும் கவலைப்படவேண்டாம். பெரும்பாலான அரச குடும்பங்களில் சுயம்வரம் என்பதைப் பெயருக்குத் தான் நடத்துகிறார்கள். ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட அரசகுமாரனோ, அரசனோ வெல்வதற்கு இசைவாக மற்றவர்கள் ஒத்துப்போவதும் வழக்கம் தான். ஆகவே நானும், சக்கரவர்த்தியும் அதைக் கவனித்துக்கொள்கிறோம். தாங்கள் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்றான்.

அரை மனதாக பீஷ்மகன், “சரி, பின்னர் அந்த விஷயத்தை நான் உங்கள் இருவரிடமும் விட்டுவிடுகிறேன்.” என்றான். ஜராசந்தன் அதற்கு, “இந்த விஷயம் நமக்கு மட்டும் தெரிந்ததாய் இருக்கவேண்டும். நான் சிசுபாலனிடம் முதலில் பேசிவிடுகிறேன். சிசுபாலன் சொன்னால் தாமகோஷனுக்கு மறுக்கவும் முடியாது. மகனின் விருப்பத்தைத் தந்தை எப்படி மறுக்க முடியும்?? அதற்குள் நீர் இந்த மழைக்காலம் முடிந்ததும், எல்லா அரசர்களுக்கும் சுயம்வரத்தைப் பற்றிய அழைப்பிதழை முறையாக அனுப்பி வையுங்கள். ஆனால் அந்த அரசர்கள் நாம் தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே. அதைத் தவிர மற்றவர்க்கு அனுப்ப வேண்டாம்!” என்றான். பீஷ்மகன் யோசனையுடன், “ம்ம்ம்ம்ம்???? எனில் உம் பேத்திக்கும், என் மகன் ருக்மிக்கும் திருமணம் நடக்கவேண்டும் என்று சொன்னீர்களே, அது பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான். ஜராசந்தன் அதற்கு மகத நாட்டில் சுயம்வர முறைப்படி மணமகனைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதில்லை என்று கூறிவிட்டு. ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் விவாஹம் முடிந்ததுமே அனைவரும் கிரிவ்ரஜத்துக்கு வந்து ருக்மிக்கும் தன் பேத்திக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப் படும் என்றான். ருக்மி ஆநந்தத்தின் உச்சியில் இருந்தான். ஆனால் அவன் மனைவியோ?????

மாளிகையின் மேல் மாடியில் ஒரு மண்டபத்தில் ஜராசந்தனும், அவனுடன் வந்த மற்ற அரசர்களும் பீஷ்மகனோடு பேசிக்கொண்டிருந்தனர். அந்த மண்டபத்திற்கு அடுத்து அதை ஒட்டியே ஒரு சிறு தாழ்வாரமும், அதை ஒட்டி ஒரு உப்பரிகையும் இருந்தது. உப்பரிகைக்குக் காற்று வாங்க அரசகுடும்பத்துப் பெண்கள் வருவது வழக்கம் என்பதால் அந்தப் பக்கம் இவர்கள் பார்வையே போகவில்லை. அதே சமயம் அரச குடும்பத்துப் பெண்கள் அங்கே இருக்கலாம் என்ற யோசனையும் எவருக்கும் எழவில்லை. அங்கே இருந்தது, மேற்கண்ட சம்பாஷணைகளின் மூலம் பாதிக்கப் படப்போகும் ருக்மிணியும், ருக்மியின் மனைவியான சுவரதாவும். சுவ்ரதாவின் முகம் இறுகிக் கிடந்தது. தன் மனதில் தோன்றிய உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ள அவள் படாத பாடு பட்டாள்.

ஏற்கெனவே அவளுக்கு கோமந்தக மலைத் தொடரில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ருக்மி கூறியதில் முரண்பாடுகள் தெரிந்தன. வேறு ஏதோ நடந்திருக்கவேண்டும், அதை ருக்மி தன்னிடம் மறைக்கிறான் என்ற வரையில் அவளுக்கு நிச்சயம் இருந்தது. சாதாரணமாய்ப் பெண்களுக்கு என இருந்த ஆவலோடு மட்டுமில்லாமல் தன் கணவனும் சம்பந்தப் பட்டிருப்பதால் அவளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் இருந்தது. ஆகவே, அவள் மெதுவாய் ஒருவரும் அறியாமல் இந்த உப்பரிகைக்கு வந்தாள். அவள் செல்வதை எப்படியோ பார்த்த ருக்மிணியும் அவளோடு சேர்ந்து கொள்ள ருக்மிணியைத் தடுக்க முடியாத சுவ்ரதா அவளையும் அழைத்துச் சென்றாள். ருக்மிணிக்கோ கண்ணனைப் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாமல் மிகவும் கவலையாக இருந்தது.

சஹ்யாத்ரி மலைக்குப் போய்ச் சேர்ந்தானா, அங்கே என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் ஜராசந்தன் அவள் தமையன் ருக்மியையும் அழைத்துக்கொண்டு கண்ணனை வேட்டையாடக் கிளம்பிவிட்டான். கண்ணனுக்காக அவள் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு. மேலும் தன் தமையனும், அவனுடைய தோழர்களும் இந்த வேட்டையில் தோல்வி அடைந்தால் பல விரதங்களையும், பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்வதாயும் உறுதி பூண்டிருந்தாள். ஆகவே அவள் தமையன் வந்து சொன்ன கதையைக் கேட்ட அவள், கண்ணன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்து சந்தோஷம் கொண்டாலும், கண்ணன் தன் தமையனாலும், ஜராசந்தனாலும் மன்னிக்கப்பட்டு தப்பி ஓடிவிட்டான் என்பதை ஏற்கவே முடியவில்லை. அவள் அதில் ஏமாற்றமே அடைந்தாள். மேலும் அவள் தமையன் கண்ணனை எந்த அளவுக்கு வெறுக்கிறான் என்பது ருக்மிணிக்கு நன்கு தெரியும். ஆகவே தன் தமையனும் கண்ணனைத் தப்பி ஓட விட்டான் என்பது அவளுக்கு ஆச்சரியத்தையே அளித்தது.

அவளால் இதை நம்பவே முடியவில்லை. இவ்வளவு பெருந்தன்மையுள்ளவனா ருக்மி?? ம்ஹும் இருக்கவே முடியாது. ம்ம்ம்ம்ம்??? வேறு ஏதோ பெரிய விஷயமாக நடந்திருக்கிறது. ஆனால் எவரும் அதைப் பற்றிப் பேச மறுக்கின்றனர். எல்லாருமே அதை மறைக்கின்றனர். ஆகவே இப்போது தன் அண்ணியோடு ஒத்துப் போய்த் தான் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். சாமர்த்தியமாக சுவ்ரதாவுடன் சேர்ந்து கொண்ட ருக்மிணி தானும் போய் மந்திராலோசனையில் பேசிக்கொண்டதை எல்லாம் கேட்டாள்.


இருவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே பேசினார்கள். ருக்மிணிக்குத் தன் கல்யாணம் சிசுபாலனோடு நிச்சயிக்கப் படுவது அதிர்ச்சியைத் தந்தது. சுவ்ரதாவோ, தனக்கு இளையவள் ஒருத்தியை அதுவும் பெரியதொரு சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியின் பேத்தியைத் தன்னைவிடப் பல விதங்களிலும் உயர்ந்த ஒரு ராஜகுமாரியைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் தன் அருமைக் கணவனின் பச்சைத் துரோகத்தை எண்ணி மனம் நொந்தாள். அவள் முகம் பார்க்கச் சகிக்கவில்லை. அவள் துயரத்தைக் கண்ட ருக்மிணி இதுதான் சமயம் என எண்ணித் தன் அண்ணியை இப்போது தன் பக்கம் திருப்பித் தனக்கு அந்தரங்க சிநேகிதியாக ஆக்கிக் கொள்வதே சிறந்த வழி என்று தீர்மானித்தாள். தீர்மானிப்பதும், அதைக் காரியத்தில் நிறைவேற்றுவதும் ருக்மிணிக்கு ஒன்றே. ஆகவே உடனே அதை அமுலாக்கினாள்.

பரிகாசமும், குறும்பும் கலந்த சிரிப்போடு, “ என் அருமை அண்ணி, உன்னை இப்போது ஜராசந்தனின் பேத்தி முந்தப் போகிறாள். எனக்கு ரொம்ப சந்தோஷம் என்னவென்றால் உனக்கு ஒரு அருமைத் தோழி கிடைக்கப் போகிறாள். ஆனால் அவள் என்னையும் உன்னையும் போல் எப்போதும் சண்டை போடமாட்டாள். உன்னுடன் ஒத்துப் போவாள் பாரேன்!” என்றாள்.

சுவ்ரதாவின் கோபம் எல்லை மீறியது. “பேசாதே! ருக்மிணி, நான் பிறந்ததுமே இறந்திருக்கவேண்டும்! ஏன் பிறந்தேன்?” சுவ்ரதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி அவள் சேலையை நனைத்தது. "ஓஓஓஓ, என் அருமை அண்ணி, உனக்கு வயதாகிவிட்டதல்லவா?? அதுதான் என் அண்ணன் இளமையான இன்னொரு பெண்ணைத் தேடிக்கொள்கிறான் போலும்!" என்றாள் ருக்மிணி. சுவ்ரதா, "உனக்கோ, உன் அண்ணனுக்கோ என்னிடம் உண்மையான பாசமோ, அன்போ சிறிதும் இல்லை. நான் அறிவேன்." என்றாள் சுவ்ரதா. ருக்மிணி இப்போது தன் சிரிப்பை நிறுத்திக்கொண்டு, "அண்ணி, அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நான் உன்னுடன் சிறிது விளையாடினேன். எப்போதுமே உன்னை என் சிநேகிதியாகவே நான் எண்ணி வந்திருக்கிறேன். தாயற்ற எனக்கு உன்னிடம் மிகவும் பாசமும் உண்டு. அன்பும் உண்டு. ஆனால் நீ இதுவரையிலும் என்னிடம் உன் அன்பைக் காட்டவே இல்லையே?? எப்போதுமே என்னுடன் கோபமாகவே இருந்து வந்திருக்கிறாயே?" என்று உண்மையான வருத்தம் தொனிக்கச் சொன்னாள்.

2 comments:

எல் கே said...

ivlo late update

priya.r said...

நல்ல பகிர்வு கீதாம்மா
ஏனோ தெரியவில்லை ! ருக்மிணியின் குறும்புத்தனமான பேச்சு எனக்கு ரொம்ப புடிக்கிறது ;
எனது தோழி ஒருத்தி கூட கொஞ்சம் வம்பு நிறைய குறும்புடன் பேசுவதும் நினைவுக்கு வருகிறது .,
அந்த குறும்பு தோழியை உங்களுக்கும் தெரியும் டீச்சர்