உத்தவன் மனம் திறக்கின்றான்!
உத்தவனின் சிரிப்பும் சரி, வலுக்கட்டாயமாய் வரவழைத்துக்கொண்ட தொனியிலும் சரி கண்ணன் நிம்மதி அடையவில்லை. ஏதோ மறைக்கிறான் உத்தவன், நம்மிடமா? என்று வேதனையுடன், “இல்லை உத்தவா, ஒருவேளை நான் செய்வது எல்லாம் உனக்குச் சம்மதம் என்பதாலேயே உனக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை நான் செய்கிறேனோ எனத் தோன்றுகிறது. அந்த விஷயம் உனக்குப் பெரும் தொந்திரவாயுஅம் இருக்கிறது.” உத்தவன் கண்களைப் பார்த்துக்கொண்டே பேசிய கண்ணன் கண நேரம் அதில் தோன்றி மறைந்த மின்வெட்டைக் கவனித்துக்கொண்டான். “சொல், என் அருமை சோதரா, சொல்.” என்றான். கொஞ்சம் யோசனையுடன், மேலும், “இரு, இரு, உனக்குப் புரிய வைக்க முயல்கிறேன். நாம் கரவீரபுரத்துக்கு வரும்வரைக்கும் நீ எப்போதும்போலவே இருந்தாய். அங்கிருந்து கிளம்புவதற்குள் உனக்குள் ஏதோ நேர்ந்துவிட்டது. அதன் பின்னரே உன்னிடம் மாற்றம். இதுவரை உனக்கு ஏற்படாத ஏதோ ஒரு நிகழ்வு, அதிசயமான சம்பவம், என்னவெனப் புரியவில்லை, அதனால் மாறி விட்டாய்!”
“ஓ, கண்ணா, எனக்கு ஒன்றும் ஆகவில்லை அப்பா. நான் எப்போதுமெ உன்னுடனே இருந்து வந்திருக்கிறேனே!” மீண்டும் முகத்தில் மலர்ச்சியை வலுக்கட்டாயமாய் வரவழைத்துக்கொண்டான் உத்தவன். கிருஷ்ணன் விடவில்லை, “அப்படியா?? நான் உன்னுடனேயே இருக்கும்போதும் உனக்கு என்ன குறை?? என்ன துன்பம் நேரிட்டுவிட்டது?? ஓ, ஓ,ஓ, என் அருமை உத்தவா, என்னால் உன்னை உணர முடிகிறது. நீயும், நானும் பிறந்ததிலிருந்து ஒன்றாய் இருந்து வருகிறோமே, உன்னுடைய ஒரு நிறைவேறாத ஆசையை, அதன் இழப்பை, ஏன் நீயே உன்னிடம் தோல்வி அடைந்துவிட்டாயோ என நீ எண்ணுகிறாய் என்பதையும், நீ என்னிடம் மறைக்கிறாய் அப்பனே! அப்படி நீ எதில் தோல்வி அடைந்து விட்டாய் என்று தான் எனக்குப் புரியவில்லை. இதற்கு முன்னரெல்லாம் நீ இப்படி எதையோ பறி கொடுத்தாற்போல் நடந்து கொண்டதில்லையே?? என்னிடம் மறைக்காதே உத்தவா, உண்மை வெளிவரட்டும்!” கண்ணனின் இந்த வார்த்தைகள் உத்தவனின் நெஞ்சில் அம்பைப் போல் தாக்கின என்றாலும் அதிலிருந்து துன்பமாகிய ரத்தம் சொட்டுச் சொட்டாகக் கசிந்தது. அந்தக் காயத்தைத் தாங்க முடியாத உத்தவன் தன் நெஞ்சை அமுக்கிப் பிடித்துக்கொண்டான். கசிய ஆரம்பித்த ரத்தம் அவன் கண்களின் வழியே கண்ணீராக வர ஆரம்பித்தது.
சற்றே தயங்கிய அவன், பின் ஒரு பெருமூச்சுடன் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு, பேச ஆரம்பித்தான். ஆனாலும் அவன் குரல் நடுங்கியது. இனம் புரியாத பயம் அவனை ஆட்டுவிப்பது கண்ணனுக்குப் புரிந்தது. நடுங்கிய குரலில் அவன், “உனக்குத் தெரியவேண்டுமா?? என்ன தெரியவேண்டும்?? இதோ சொல்கிறேன் கேள்! அலுத்துவிட்டது எனக்கு! ஆம், கண்ணா, இந்த வாழ்க்கை, இதன் உல்லாசம், இதன் வெற்றி, தோல்விகள் அனைத்துமே எனக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. இந்த வாழ்க்கையைத் துறந்து தொலைத்துவிட்டு இமயச் சாரலில் பதரிகாசிரமத்தில் சென்று தவம் செய்து அமைதியாக வாழ விரும்புகிறேன். பரபரப்பும், சூழ்ச்சியும் ஒருவரை ஒருவர் அடிக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருப்பதுமான இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் அலுத்துவிட்டது என் சகோதரா!”
கண்ணன் அவனையே இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். “ஏன் அப்பா, ஏன் துறவியாக நினைக்கிறாய்?? ஏன் உனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை?? இந்த வாழ்க்கையை நன்கு நல்ல முறையில் தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து தர்மத்தை நிலைநாட்டவே, வாழ்க்கையின் உந்நதத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டவே, அது எல்லாவற்றிலும் உயர்ந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று என்பதைச் சொல்லவே நாம் இங்கிருக்கிறோம். வெறும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகழிக்க அல்ல! அதை நீயும் நன்கு அறிவாயல்லவா?”
“ஓஓ, கண்ணா, அதெல்லாம் நீ பார்த்துக்கொள் அப்பா. உனக்குத் தான் அதெல்லாம் சரியாய் இருக்கும். நீ ஒரு கடவுள் என்று எல்லாரும் சொல்கின்றனர். ;யார் கண்டார்கள்? உண்மையிலேயே நீ தான் அந்தப் பரவாசுதேவனோ என்னமோ?? நீ வாழ்க்கையை உன் விருப்பத்திற்கேற்ப வளைத்துக்கொண்டு வாழப் பிறந்திருக்கிறாய். உன்னிடம் வாழ்க்கை கைகட்டிச் சேவகம் செய்யும். காலம் உனக்கு ஊழியம் செய்யக் காத்திருக்கிறது. உனக்கு இதெல்லாம் சரியாய் இருக்கும். எனக்கு அப்படி இல்லை! நான் ஒரு சாதாரண மானுடன்.” என்றான் உத்தவன்.
“ஆஹா, இது என்ன சொல்கிறாய் உத்தவா?? வாழ்க்கை வாழ்வதற்கே! நல்லமுறையில் வாழ்ந்து காட்டவே நாம் பிறந்திருக்கிறோம். வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும். ஆசாரியர் பரசுராமரும் நம்மிடம் கோமந்தக மலையில் அதையே சொன்னாரல்லவா? மறந்துவிட்டாயா?? இதுவரையிலும் நீயும், நானும் அப்படித் தானே வாழ்ந்து வந்திருக்கிறோம்?”
“என்னால் இனி இயலாது கண்ணா, தயவு செய்து மேலும் மேலும் பேச்சுக் கொடுத்து என்னை எதாவது உளற வைத்துவிடாதே. நான் துறவு மேற்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். “ அவன் கண்களின் பிடிவாதம் கண்ணனுக்கு இனி என்னை ஒன்றும் கேட்காதே என அறிவுறுத்தின. “உத்தவா, உன்னுடைய துன்பத்தை என்னுடன் பகிர்ந்துகொள்வதே உனக்குத் துன்பமளிக்கும் விஷயம் என்றால் வேண்டாம்!” சட்டென எழுந்து உத்தவனைத் தன்னோடு சேர்த்து அணைத்து ஆறுதலளிக்க விரும்பிய கண்ணனுக்கு மனதில் ஏதோ பொறிதட்டியது. உடனே உத்தவனைப் பார்த்து, “ உத்தவா, நீ எங்கேயானும் அந்த ஷாயிபாவிடம் உன் மனதைப் பறி கொடுத்துவிடவில்லையே?” என்று சந்தேகத்தோடு வினவினான்.
குரல் தழுதழுக்க, “கண்ணா, என்னை எதுவும் கேட்காதே!” என்ற உத்தவன் கண்ணன் தோள்களில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டான். “ஆஹா, எவ்வளவு பெரிய முட்டாள் நான், கடைசியில் அந்த மன்மதனின் கணைகள் உன்னையும் தாக்கிவிட்டனவா??உத்தவா, உன்னுடைய உணர்வு என்னவாயிருக்கும் என்பதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது!” கண்ணன் வருத்தத்துடன் மேலும் கூறினான். “அவள் ஸ்வேதகேதுவுக்கென வாக்குக்கொடுக்கப்பட்டவள். இருவரின் யாரேனும் ஒருவர் விரும்பாமல் இருந்தால் தவிர நீ அவர்கள் இருவரிடையிலும் புகுந்து அவளை உன்னவளாக்கிக்கொள்ள இயலாது. ஆனால் உனக்கு இப்போது அவள் மேல் அன்பும், ஆசையும் அளவுக்கதிகமாய்ப் போய்விட்டது. அவளில்லாமல் உன்னால் இப்போது உயிர் வாழமுடியாது. அவளோ உனக்குக் கிடைப்பது அரிதிலும் அரிது. ஆஹா, இப்போது புரிகிறது, நீ ஏன் துறவு மேற்கொள்ள விரும்பினாய் என்று.”
“வேண்டாம், கண்ணா, வேண்டாம், மேலும் மேலும் பேசாதே! உன் அன்பினாலும், ஆதரவினாலும் என்னைக் கொல்கிறாயே! நான் உனக்கு உண்மையான நண்பனாக, சகோதரனாக நடந்து கொள்ளவில்லையே; இன்னொருவருக்கு எனப் பேசப்பட்ட பெண்ணை நினைத்துக்கொண்டு பாவம் செய்துவிட்டேனே. எனக்குப் பைத்தியம் தான் பிடித்துவிட்டது. “ உத்தவன் இப்போது விம்மி விம்மி அழவே ஆரம்பித்தான். “முட்டாள் மாதிரிப் பேசாதே உத்தவா! இது இயற்கை. உன்னால் மட்டுமல்ல, ஞாநிகளும், ரிஷி, முனிவர்களாலுமே தடுக்க இயலாத ஒன்று. உனக்கு நீயே கடுமையாகத் தண்டனை விதித்துக்கொள்ளாதே. இந்தப் பெண்ணாசை இருக்கிறதே, அது மட்டும் வந்துவிட்டால் ஒவ்வொரு ஆணும் நெருப்பாகத் தன்னை எரித்துக்கொள்வான். காமனின் கணைகளால் இவன் தாக்கப்பட்டிருக்கிறான் என்பதை ஒரு மாபெரும் அடையாளமாக இந்தப் பெண்கள் மாற்றிவிடுகிறார்கள். இதிலிருந்து எவரும் தப்பியதில்லை.” என்றான் கண்ணன்.
“நான் அந்த நெருப்பால் எரிக்கப் படுவதையோ, வெறும் அடையாளச்சின்னம் பெறுவதையோ விரும்பவில்லை கண்ணா, முழுதும் எரிந்து சாம்பலாகவே விரும்புகிறேன். உனக்கு என்ன தெரியும்?? என்னுடைய உணர்வுகளை நீ புரிந்து கொள்வாயோ மாட்டாயோ?? கோகுலத்திலும் , விருந்தாவனத்திலும் உன்னை விரும்பியவளை எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல், ஒரு சிணுக்கம் கூடக் காட்டாமல் விட்டுவிட்டு நீ வந்துவிட்டாய். என்னால் அப்படி எல்லாம் முடியாதப்பா!”
“தப்பு உத்தவா, நீ சொல்வது தவறு.” என்றான் கண்ணன். அவன் குரல் அமைதியாகவும் நிதானமாகவும் வந்தது. உத்தவன் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தான்.
1 comment:
நல்ல பதிவு கீதாம்மா தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
Post a Comment