Monday, December 13, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

 பிக்ரு உதவுவானா?? பலராமனின் குழப்பம்!


“உத்தவா, நாளை அல்லது நாளை மறுநாள் என் தமையன் பலராமன் மன்னன் குக்குட்மின்னோடு குஷஸ்தலைக்குப் போகப் போகிறான்.  எவ்வாறேனும் குஷஸ்தலையை மீட்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.   நீயும் அவர்களோடு செல்.  இதைவிடவும் பெரியதொரு தியாகம் நீ செய்யவேண்டியதில்லை.  அவளை விட்டு நீ பிரிந்திருப்பதே  உன்னுள்ளே மாபெரும் மாற்றத்தை உண்டு பண்ணும்.  நீ குஷஸ்தலையில் இருந்து இங்கே திரும்பும்போது உன்னுடைய இந்தத் தீ அநேகமாய் அணைந்தே போயிருக்கும்.  அதோடு ஸ்வேதகேதுவும் அதற்குள் மதுராவை வந்தடைவார் என எதிர்பார்க்கிறேன்.” என்றான் கண்ணன்.  “ஆஹா, கண்ணா, கடினமான வேலையைக் கொடுக்கிறாயே?? எனினும் நான் செய்து முடிப்பேன். இதனால் என் உயிரே போனாலும் சரி. “ என்றான் உத்தவன்.  “உத்தவா, மாபெரும் காரியங்கள் எல்லாமே ஒருவரின் உயிரைப் பணயம் வைத்தே நிறைவேறுகின்றன.” என்றான் கண்ணன். 

மறுநாளே பலராமனும் உத்தவனும் ரேவதியோடும் குக்குட்மின்னோடும் குஷஸ்தலையை நோக்கிப் பயணப்பட்டார்கள்.  தாமகோஷனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் முதலில் ஆக்ஷேபித்தான்.  ஏனெனில் புண்யாஜனா ராக்ஷஸர்கள் குஷஸ்தலையின் மக்களையும், சின்ன்ஞ்சிறு குழந்தைகளையும் அவர்களின் கடவுளுக்கு உயிர்ப்பலி கொடுத்து வழிபாடுகள் செய்தார்கள்.  ஆகவே இவ்வளவு கடினமான ராக்ஷசர்களை வெல்ல பலராமன் செல்வதில் சம்மதம் இல்லை எனிலும் தன்னிடமுள்ள வீரர்களில் தேர்ந்தெடுத்த சிலரை பலராமனோடு அனுப்பி வைத்தான்.  பலராமனின் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  சாந்தீபனியின் ஐந்து சீடர்களும் அவனோடு வரச் சம்மதித்திருந்தனர்.  கிளம்புவதற்கு உரிய நல்ல நேரம் வந்ததும், அனைவரும்  ஜெயசேன மன்னனால் அளிக்கப் பட்ட ரதங்களில் ஏறிக்கொண்டு பிருகு தீர்த்தம் சென்று அங்கிருந்து படகுகளில் பிரபாஸ க்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றார்கள்.  பிரபாஸத்தின் மன்னனுக்கு ஜராசந்தனை முறியடித்த சகோதரர்களில் மூத்தவன் ஆன பலராமன் அங்குள்ள சோமநாதர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கென வருவதாய்த் தகவல்கள் அனுப்ப்ப் பட்டன.  கோமந்தக மலையில் நடந்த கதையும் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருந்த்து.  மாபெரும் சக்கரவர்த்தி ஜராசந்தனையே வென்ற அந்த இளைஞனைப் பார்க்க மக்கள் பெரும் கூட்டமாய்க் கூடினார்கள்.  பலராமன் பிரபாஸ க்ஷேத்திரத்து மன்னனைப்பார்த்துத் தனிமையில் தான் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினான்.  மன்னனும் யாதவ குலத்தைச் சேர்ந்தவனாய் இருந்ததாலும், கண்ணனையும், பலராமனையும் பற்றி அறிந்து அவர்கள் மேல் கொண்டிருந்த நன்மதிப்புக் காரணமாயும் அவன் பலராமனின் திட்டத்துக்கு ஒப்புக் கொண்டான்.  அதை ரகசியமாய் நிறைவேற்றவும் சம்மதித்தான்.  அதற்கு அவன் விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்று தான்.  குஷஸ்தலை கைப்பற்றப்பட்டதும் அதனுடைய கோட்டையில் குடியிருக்கும் தன்னுடைய தாயாதியான சிற்றரசனை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினான்.  பலராமன் அதற்கும் ஒத்துக்கொண்டான்.

உத்தவனுக்குக் கண்ணன் மதுராவை விட்டு ஒருவேளை வெளியேறினால் பாதுகாப்பான இடமாக குஷஸ்தலை இருக்கும் என்று சொன்னது நினைவில் வந்த்து.  கண்ணன் சொன்னதில் இருந்த உண்மையையும் அவன் உணர்ந்தான்.  மற்ற எந்த இடங்களையும்விட இங்கே இந்த மேற்குக் கோடியில் பத்திரமாயும், பாதுகாப்போடும் இருக்கலாம்.  மத்திய தேசத்து அரசர்களால் அவ்வளவு எளிதில் வர முடியாத இடம் இது.  ஜராசந்தன் இங்கே வரவே மாட்டான்.   ஆகவே எவ்வாறேனும் இதைக் கைப்பற்ற வேண்டிய ஆயத்தங்களைச் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு உத்தவன் வந்தான்.   பலராமன் புண்யாஜனா ராக்ஷசர்களிடமிருந்து கோட்டையைக்கைப்பற்றும் அவசரத்தில் இருந்தான்.   ஆனால் குக்குட்மினும், உத்தவனும் அவ்வளவு அவசரப் படக்கூடாது என்று கூறிவிட்டு நிதானமாய்த் திட்டம் போட்டார்கள்.  உளவறியச் சென்றிருந்த ஒற்றர்கள் அனைவருமே திரும்பி வந்து குஷஸ்தலையைச் சுற்றி மூன்று வளையங்களாகப்பாதுகாப்பு அரண் எழுப்பி இருப்பதாயும், அதை நெருங்குவது என்பது மிகவும் கஷ்டம் என்றும் சொன்னார்கள்.  மேலும் புண்யாஜனா ராக்ஷசர்கள் அதிகம் கடல் பிரயாணம் செய்ததால் தங்கள் கோட்டையைத் தாங்கள் இல்லாத சமயம் வேறு எவரும் நெருங்க முடியாதபடி அரண் கட்டிப் பாதுகாத்தனர்.

மிகவும் ஆலோசித்த குக்குட்மினும், உத்தவனும் குஷஸ்தலையைத் தாக்கக் கடல்வழியே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தனர்.  அதுவும் கஷ்டம் தான் பல ஆயுதக் கப்பல்கள் அந்த வழியையும் காவல் செய்தன.  என்றாலும் வேறு வழியில்லை என்று நினைத்தனர்.  அவர்கள் யோசனையைச்  செயலாற்றுவதற்குள்ளாகப் பாஞ்சஜனா கப்பல் திரும்புவதாயும் குஷஸ்தலையை வந்தடையும் எனவும் தகவல் கிடைத்தது.  ஆகவே அவர்கள் பாஞ்சஜனாவின் வரவுக்குக் காத்திருந்தனர்.  பாஞ்சஜனாவும் வந்து சேர்ந்தது.  கூடவே பிக்ருவின் பேரன் ஆன குக்குராவும்.  குக்குரா கரைக்குச் சில சாமான்கள் வாங்க வந்தவன் உத்தவனிடம் அழைத்துச் செல்லப் பட்டான். உத்தவனைப் பார்த்த குக்குராவின் சந்தோஷம் எல்லை மீறியது.  கண்ணன், பலராமன், உத்தவன் ஆகியோர் பாஞ்சஜனாவை விட்டுச் சென்றதும் நடந்தவைகளை அவன் கூறினான்.  பாஞ்சஜனா ராக்ஷசனின் உறவினர்கள் இறந்துவிட்டதாயும் இப்போது அவன் பாட்டன் பிக்ருவே கப்பல் தலைவனாகவும், கப்பலின் சொந்தக்காரனாயும் ஆகிவிட்டதையும் அவனுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பதாயும் கூறிய அவன் இதெல்லாம் கண்ணனாலேயே சாத்தியமாயிற்று என்று நன்றியுடன் கூறினான்.

பிக்ருவைச் சந்திக்க பலராமனையும், உத்தவனையும் தன் படகில் அழைத்துச் சென்றான். அவர்களைக்கண்ட பிக்ருவுக்கு ஆச்சரியமாய் இருந்தாலும் அவனுக்கும் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவருக்குமே அவர்களைக் கண்டதும் ஆனந்தம் பொங்கக் கூச்சலிட்டு வரவேற்றனர்.  ஹூக்குவும் ஹூல்லுவும் அவர்களோடு இருந்தனர்.  அவர்களும் தங்கள் பற்கள் தெரிய இவர்களைக் கண்டு சிரித்து வரவேற்றனர்.  அனைவரும் சற்று நேரம் பழைய விஷயங்களைப் பேசி மகிழ்ந்தனர்.  மாலுமிகள் அனைவருமே கண்ணனின் சாகசங்களைப் பாடலாக இயற்றிப் பாடி வந்தனர்.  அவற்றை இப்போது பாடி பலராமனையும் உத்தவனையும் மகிழ்வித்தனர்.  கப்பல் எவ்வாறு தங்கள் கைகளுக்கு வந்தது என்பது பற்றியும் கூறினார்கள்.  பாஞ்சஜனாவின் உறவினர்கள் பிக்ருவையும் அவர்களோடு சேர்ந்த மற்றவர்களையும் கொல்லச் செய்த ஏற்பாட்டையும், அதை முறியடித்து அந்த இரு இளைஞர்களையும் வென்று ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தான் நேசித்த கப்பலைக் கைப்பற்றியதையும் பிக்ரு விவரித்தான்.  பின்னர் கண்ணனைப் பற்றிக் கேட்டான்.

அதுவரை பொறுமையோடு இருந்த பலராமன் இப்போது பொறுமை இழந்து தான் குஷஸ்தலையைப் புண்யாஜனா ராக்ஷசர்களிடமிருந்து மீட்க வந்திருப்பதாயும் கூறிவிட்டு அதற்கு பிக்ருவின் உதவி தேவை என்றும் கூறினான்.  ஆனால் பிக்ருவோ, “புண்யாஜனாவா நம்மால் முடியாதப்பா. மேலும் அவர்கள் எங்களை நன்கறிவார்கள் பாஞ்சஜனாவின் இரு உறவினர்களும் அழிய நாங்கள் காரணம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.  புண்யாஜனா ராக்ஷஸர்கள் எங்களுக்கு எதிரிகள்.  அவர்கள் கப்பலைக் கூட நாங்கள் கடலில் செல்லும்போது கண்டால் விலகிச் சென்றுவிடுவோம்.   .  . “ என்றான் பிக்ரு.

1 comment:

priya.r said...

பதிவுக்கு நன்றி கீதாம்மா .,நீங்கள் ஒரு சரித்திர கதை எழுதலாமே !