Tuesday, January 11, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

இளைஞர்கள் கூடிப் பேசியது தெரிந்த கம்சா தன் கணவன் தேவபாகனிடம் தன் எண்ணத்தைத் தெரிவித்தாள். ஒரு முறைக்கு இருமுறையாக அடுத்துப் பட்டம் ஏறவேண்டியவன் ப்ருஹத்பாலனே என்பதைச் சொல்லி அதை நிச்சயம் செய்துகொண்டு வரும்படிக் கணவனை வற்புறுத்தினாள். ஆனால் தேவபாகனுக்கோ அவள் எண்ணம் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. தன் அண்ணனும், குடும்பத் தலைவனும் ஆன வசுதேவனுக்கு எதிராக யார் எது செய்தாலும் அதை அவன் ஒப்புக்கொள்ளமாட்டான். அது அவன் அருமை மனைவியானாலும் சரி, அவன் பிள்ளைகள் ஆனாலும் சரி. ஆரியர்களுக்கே உரித்தான கெளரவம் குடும்பத்துக்கு மூத்தவனைத் தந்தைக்கு அடுத்த ஸ்தானம் கொடுத்து மதிப்பதும், தந்தையின் காலம் ஆனதும் தந்தையின் இடத்துக்கு அவரை வைத்து மதிப்பதும், அவர் பேச்சுக்கும், செயலுக்கும் மறுப்புச் சொல்லாமல் சொன்னதைச் செய்வதும் தான்! ஆகவே அவன் அந்த மரபை மீற விரும்பவில்லை. மேலும் தன் உடன்பிறந்த அண்ணன் ஆன வசுதேவன் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நன்மையைத் தான் செய்வான் என்ற திடமான நம்பிக்கையும் இருந்தது அவனுக்கு. ஆகவே கம்சா வற்புறுத்தியும் அவன் இதைப் பற்றி ஒரு வார்த்தையும் வசுதேவனிடம் பேசவே இல்லை. கம்சாவுக்குத் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எதிராக இந்த உலகே சதி செய்வது போல் தோன்றியது. அதிலும் ப்ருஹத்பாலன், எத்தகைய அறிவாளியும், திறமையும் வாய்ந்த பிள்ளை! அவனை விட்டால் வேறு எவருக்குத் தகுதி இருக்கிறது மதுராவை ஆள்வதற்கு? என்றோ ஒருநாள் அவன் தான் வரப் போகிறான். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.


அந்த இடையன் கிருஷ்ணனோ தனக்கு அளிக்கப்பட்ட பதவியை ஏற்க மறுத்து ஊரை விட்டே கோழையைப் போல் ஓடி எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான். இந்த இக்கட்டான நிலையில் ப்ருஹத்பாலன் மட்டும் இல்லை எனில் மதுராவின் கதி?? என்ன ஆகி இருக்கும்?? அவனுடைய ராஜதந்திரமான நடவடிக்கையால் அன்றோ மதுரா காக்கப் பட்டது?? இந்த யாதவர்களுக்குத் துளியானும் நன்றி இருக்குமானால் அவனை அரசனாக்கவேண்டும். ம்ம்ம்ம்… அப்படியானும் யாதவ குலங்களிலேயே மிகவும் தலைமை ஸ்தானத்தில் இருக்கும் அந்தகர்களுக்கும், ஷூரர்களுக்கும் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அண்ணன் கம்சன் இருந்தவரையில் அதற்கு வழியே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது என் மகன் ப்ருஹத்பாலனோ தந்தை உக்ரசேனரின் ஆசைக்கு உகந்த பேரன் ஆவான். ஆகவே இதற்குத் தடை சொல்வார் எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ப்ருஹத்பாலனுக்கு உதவியாக இருக்கவேண்டும். கம்சா ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.
ப்ருஹத்பாலனோடு கூட்டுச் சேர்ந்துகொண்ட யாதவர்கள் அனைவரின் குடும்பத்தையும் தனக்கு சிநேகிதமாக்கிக் கொண்டாள். அவர்களில் சாத்யகி முக்கியமானவன். மேலும் உண்மையிலேயே மிகவும் புத்திசாலியும், திறமை வாய்ந்தவனும், முன்னுக்கு வரத் துடிப்பவனுமாக இருந்தான். பலவிதமான யுத்தங்களில் தலைமை வகித்து ஜெயித்து ப்ருஹத்பாலனுக்கு வலக்கையாக விளங்குவது போல் கனவும் கண்டு வந்தான். அவனுடன் பேசி அவன் எண்ணங்களைத் தெரிந்து கொண்ட கம்சா அவனுக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து அவனை ஆதரித்துப் பேசினாள். அதோடு நிறுத்தாமல் உக்ரசேனருக்கு ராஜரீக காரியங்களில் இருந்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ப்ருஹத்பாலனையும், அவனுடைய ராஜதந்திர நடவடிக்கையையும், மதுராவை அவன் காத்ததையும் சொல்லித் தன் தகப்பனின் கவனத்தை அவன் பால் திருப்பவும் முயன்றாள். ஆனால் உக்ரசேனருக்கோ கிருஷ்ணன் ஒருவனைத் தவிர வேறு எவராலும் யாதவ குலத்தைக் காக்கமுடியாது என்ற திடமான எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஆகவே கம்சாவின் பேச்சுக்கு அவர் மதிப்பே கொடுக்கவில்லை. மெல்ல மெல்ல நாட்கள் சென்றன. கோடைக்காலம் போய் மழைக்காலமும் வந்துவிட்டது. கிருஷ்ணன் எங்கே சென்றான், என்ன செய்கிறான் என்று ஒரு தகவலும் இல்லை. உக்ரசேனர் வயது காரணமாயும், மனது காரணமாயும் உடல்நலக்குறைவால் படுத்தார். இதுதான் சமயம் என்று நினைத்த கம்சா மெல்ல மெல்ல அவரிடம் ப்ருஹத்பாலனை அரசனாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வற்புறுத்த ஆரம்பித்தாள்.


தந்தையிடம், ப்ருஹத்பாலனைப் போன்ற அற்புதமான இளைஞன் கிடைக்கமாட்டான் என்றாள். பாட்டனான உக்ரசேனருக்குச் சேவை செய்ய அவன் துடிப்பதையும் எடுத்துச் சொன்னாள். மதுராவை அவன் காப்பாற்றவில்லை எனில் அழிந்தே போயிருக்கும். இந்த ஒருகாரணத்துக்காகவே மதுராவின் மக்கள் அனைவரும் அவனை விரும்புகின்றனர் என்றாள். தந்தை சொல்வது சரிதான். கிருஷ்ணனுக்கு இல்லாத உரிமையும், அவனுக்கு இல்லாத பதவியுமா? அது சரிதான். ஆனால் இப்போது அவன் இந்த ஊரையும், நாட்டையும் விட்டே போய்விட்டான். போயும் ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறது. எங்கே போனான், என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான் என்பது ஒன்றும் தெரியவில்லை. முதலில் உயிருடன் இருக்கிறானா என்பதே சந்தேகம். அதுவரை மதுரா காவலன் இல்லாத நகராக இருக்க முடியுமா? சொல்லப் போனால் வசுதேவரும் இதைத் தான் விரும்புகிறார். அவருக்கும் ஒன்றும் ஆக்ஷேபணை இருக்கவே முடியாது. ப்ருஹத்பாலன் தான் வேறு யார்? அவரின் தம்பி பிள்ளைதானே? அவர் பிள்ளையானால் என்ன? தம்பி பிள்ளையானால் என்ன? அவருக்கு இருவரும் ஒருவரே. என்னிடம் நேரிலேயே சொல்லிவிட்டார். உக்ரசேன ராஜா மட்டும் ப்ருஹத்பாலன் தான் தன் வாரிசு என அறிவித்தால் அடுத்த நிமிஷமே தானே ஏற்பாடுகள் செய்து அவனை யுவராஜா ஆக்குவதாய்ச் சொல்லிவிட்டார். ஆகவே இன்னும் தாமதம் வேண்டாம். கண்களில் கண்ணீரோடு கம்சா தன் தந்தையிடம் தன் கருத்தைச் சொல்லிக் கெஞ்சினாள். உக்ரசேனருக்கோ, தனக்கு வயதாகிவிட்ட்தும், மரணம் எப்போதுவேண்டுமானாலும் நெருங்கும் என்பதும் புரிந்தது. மேலும் கிருஷ்ணனிடமிருந்தும் நம்பிக்கையான தகவல்கள் ஒன்றுமே வரவில்லையே? கம்சாவேறு பிடுங்கி எடுக்கிறாளே? ஆகட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். நான் யோசிக்கிறேன். என்று தன் அருமைப் பெண்ணைச் சமாதானம் செய்து வைத்தார்.

கர்காசாரியாரைக் கூப்பிட்டு கம்சா ப்ருஹத்பாலனுக்குப் பட்டம் கட்டச் சொல்லுவதைக் குறிப்பிட்டுவிட்டுத் தமக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் சீக்கிரம் நாள் பார்க்கச் சொல்லுமாறும் கூறினார். கர்காசாரியாரோ அதிர்ந்தார். “அரசே, இப்போது தக்ஷிணாயந காலம் நடந்து வருகிறதை அறிவீர் அன்றோ? சுப காரியங்களை தக்ஷிணாயநத்தில் செய்வது வழக்கமே இல்லை. இது என்ன புது வழக்கம்? “ என்றார் கர்காசாரியார்.

4 comments:

priya.r said...

நல்ல பதிவு எல்லாமே எனக்கு புது புது தகவல்கள்

பதிவுக்கு நன்றி கீதாம்மா

priya.r said...

நல்ல பதிவுகீதாம் மா ;
அத்தியாயம் 37 மீண்டும் ஒரு முறை படித்து முடித்து விட்டேன்
ஏற்கனவே படித்த பதிவு தான் ;அதனால் என்ன? மீண்டும் ஒரு முறை படிக்கலாமே !

sambasivam6geetha said...

எண் கொடுக்காமையால் குழப்பம்!:))))))

இராஜராஜேஸ்வரி said...

ஆரியர்களுக்கே உரித்தான கெளரவம் குடும்பத்துக்கு மூத்தவனைத் தந்தைக்கு அடுத்த ஸ்தானம் கொடுத்து மதிப்பதும், தந்தையின் காலம் ஆனதும் தந்தையின் இடத்துக்கு அவரை வைத்து மதிப்பதும், அவர் பேச்சுக்கும், செயலுக்கும் மறுப்புச் சொல்லாமல் சொன்னதைச் செய்வதும் தான்!//
சிறப்பாக சொல்லப்பட்ட செய்தி!