ஷாயிபாவிற்கு வந்த கோபத்தில் கையில் இருந்த அந்தப் பெரிய தாம்பாளத்தை அப்படியே கண்ணன் தலையில் கவிழ்த்துவிடலாமா என நினைத்தாள். ஆனால் கண்ணனோ அவள் கோபத்தை லக்ஷியமே செய்யாமல் ஷ்வேதகேதுவைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஷ்வேதகேது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், அதன் விளைவால் எழுந்த நாணத்தையும் மறைக்கப்பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தான். அம்முயற்சியில் அவனுக்குக் கிட்டிய தோல்வியைச் சிவந்த அவன் முகமும் ஒளிரும் கண்களும் காட்டிக்கொடுத்தன. ஷாயிபாவுக்கு தன்னைக் கண்ட நாள் முதலாகத் தன்னிடம் பேசும்போதெல்லாம் இதே மாதிரி வெட்கமும், குழப்பமும், மகிழ்ச்சியும் கலந்த கலவையானதொரு உணர்வில் ஷ்வேதகேது பேசுவான் என்பது நினைவில் மோதியது. எனில்…… எனில்…….. எனில்……
ஷ்வேதகேது அவளை மறக்கவில்லை. இன்னமும் அவன் அவளைத் தான் நினைத்துக்கொண்டிருக்கிறான். இத்தனைக்குப் பிறகும்??? அதுவும் என் பெரியப்பா ஸ்ரீகாலவனுக்குச் செய்த துரோகத்துக்குப் பின்னரும்?? அதன் மூலம் என்னையும் ஏமாற்றினானே! அதன் பின்னருமா என்னை இன்னும் விரும்புகிறான்???? ஷாயிபாவின் கைகள் நடுங்க, பெரும் முயற்சி எடுத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவள் அங்கிருந்து மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டி நகர்ந்தாள். ஆனாலும் அவள் இதயம் துடிக்கும் துடிப்பு ஓயவே இல்லை. அந்தச் சப்தம் அங்கிருக்கும் அனைவருக்கும் கேட்டுவிடுமோ என அவள் அஞ்சினாள். கீழே விழுந்துவிடாமல் இருக்கப்பெரும் பிரயத்தனம் செய்தாள்.
உணவு முடிந்தது. ஆடவர் அனைவரும் சற்றே ஓய்வு எடுக்க ஓய்வறைக்குச் செல்லப் பெண்கள் சாப்பிட அமர்ந்தனர். ஷாயிபாவால் எதுவுமே உண்ண முடியவில்லை. பரபரப்பிலும் அடுத்து நடக்கப் போவதை எண்ணியும் அவள் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாதவளாயிருந்தாள். உணவு உண்டதும் தன் அறைக்குச் சென்ற ஷாயிபாவால் சற்று நேரம் கூடப் படுக்க முடியவில்லை. கண்களை மூடிச் சிறிது நேரம் தூங்கலாம் என முயன்றால் குறும்பு கூத்தாடும் கண்ணனின் கண்களே எதிரே வந்தன. வேறு ஏதேனும் வேலை செய்யலாம் எனில் வெட்கமும், ஆவலும், ஆசையும் ததும்பிய கோலத்தில் காணப்பட்ட ஷ்வேதகேதுவின் முகம் மட்டுமே தெரிந்தது. செய்வதறியாமல் திகைத்த ஷாயிபாவிற்கு இவர்கள் இருவரும் அன்று அங்கே வரப் போவதை எண்ணியே தலைவலியே வந்துவிட்டது. இனிமேல் முடியாது என நினைத்த வண்ணம் அவர்கள் வரவை எண்ணிக் காத்திருந்தாள் ஷாயிபா.
சற்று நேரத்தில் அறைக்கு வெளியே இருந்த நடைபாதையில் காலடிச் சப்தம் கேட்க ஷாயிபா உற்றுக் கவனித்தாள். சப்தம் அவள் அறைக்கே வந்தது. கதவைத் திறந்தது திரிவக்கரை. சட்டென ஏமாற்றம் ஏற்பட்டாலும் அடுத்த கணம் மீண்டும் ஷாயிபாவின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது. தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை அவளுக்கு. திரிவக்கரையும் நேரத்தை வீணாக்காமல் கண்ணன் அவளை அழைத்துவரச் சொன்னதாய்க் கூறவே, ஒரு கணம் ஏன் நேரில் வந்து அழைத்தால் என்ன? ஆளனுப்பி இருக்கிறானே என்று கண்ணன் மேல் கோபம் வந்தது ஷாயிபாவுக்கு. அடுத்த கணம் அவள் தன்னைச் சமாளித்துக்கொண்டு ஆடைகளையும், நகைகளையும் மாற்றிக்கொண்டு திரிவக்கரையுடன் கிளம்பினாள். வெளியே அரண்மனை உத்தியானவனத்தில் ஒரு மாமரத்தின் அடியில் கிடந்த ஒரு கல்லால் ஆன ஆசனத்தின் மீது அமர்ந்திருந்தான் கண்ணன். அருகே ஷ்வேதகேது.
அந்த மாமரத்தடி கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது என்றும் கண்ணன் தன் பொழுதை எல்லாம் இங்கேதான் கழிப்பான் என்றும் அவள் அறிந்திருக்கிறாள். நல்ல மழைக்காலத்திலும், கடும் பனிக்காலத்திலும் தவிர மற்ற நேரங்களில் திருமணம் ஆகாத இளைஞர்கள் இம்மாதிரி வெட்டவெளியிலேயே தங்கள் இரவுகளையும் கழித்தனர். அங்கேயே தூங்கவும் செய்தனர். அப்படிக் கண்ணன் தூங்கும் இடம் இதுதான் எனவும் எப்போதும் கூடவே உத்தவனும் இருப்பான் என்பதையும் ஷாயிபா ஏற்கெனவே அறிந்திருந்தாள். இந்த இடத்திற்குத் தான் நடு இரவில் வந்து கண்ணனைக் கொல்லவும் உத்தேசித்திருந்தாள். அவள் சிந்தனையைத் தடை செய்வது போல் கண்ணன் குரல் கேட்டது.
“இதோ பார் சகோதரி! உன்னுடைய பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவரைச் சாதாரணமானவராக எண்ணாதே. எனக்கு குருவாகவும், ஆயுதப் பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் இருந்தவர். இவர் அறியாத அஸ்திர, சஸ்திர வித்தைகளே இல்லை. இப்போது குண்டினாபுரத்தில் ஒரு ஆசிரமம் அமைக்க மன்னனிடம் அநுமதி பெற்றிருக்கிறார். அங்கிருக்கும் இளம் போஜர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் சாஸ்திரப் பயிற்சியும், மற்றும் எல்லா வித்தைகளையும் கற்பிக்கப்போகிறார். தற்சமயம் உன்னுடைய பொறுப்பை நான் ஏற்றிருப்பதால் உன்னை மணக்க என் அநுமதி வேண்டி வந்துள்ளார். இவருக்கு உடனடியாக மனைவிதேவையாம். அதுவும் உன்னைத் தான் மணப்பாராம். வேறு எவரையும் மணக்க மாட்டாராம். சற்றும் பொறுக்க இயலாது என்கிறார்.”
கண்ணனின் குரலில் இனம் காண இயலாததொரு மகிழ்வு. இவற்றைக் கூறிய கண்ணன் கலகலவெனச் சிரித்தான். ஷாயிபாவுக்கு ஆத்திரம் பொங்கியது. இப்போது தன் திருமணத்தைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. அதுவும் இந்தப்பாதகன், துரோகி, ஷ்வேதகேதுவின் முன்னிலையில் அதைக் குறித்து ஆலோசிக்கவும் பேசவும் அவள் சற்றும் தயாராக இல்லை. ஆனால் கண்ணன் கண்களில் இவை எதுவுமே படவில்லையா? அவன் மேலும் சொன்னான்:”இப்போது திரிவக்கரைக்கும் எனக்கும் வேறு வேலைகள் இருக்கின்றன. ஆகையால் உங்கள் இருவரையும் இங்கே விட்டுவிட்டு நாங்கள் எங்கள் வேலைகளைப் பார்க்கப்போகிறோம்.” கூறிய வண்ணம் கண்ணன் ஷ்வேதகேதுவைப் பார்த்து, “ஆசானே, உமக்கு ஏதேனும் தொந்தரை எனத் தோன்றினால் ஷாயிபாவுடன் அவளையும் கூட்டிக்கொண்டு நீர் இங்கிருந்து தப்பிச் செல்ல்லாம். ஹாஹாஹா, ஆனால் நான் பின் தொடர்ந்து வந்து உம்மைக் குரல் வளையை நெரித்துவிட்டு இவளைத் திரும்பக் கொண்டு வருவது என்றெல்லாம் செய்ய மாட்டேன். கலங்காதீர். இனி உம் பாடு, இவள் பாடு. வா திரிவக்கரை. நாம் செல்ல்லாம்.” கூறியவண்ணம் சிரித்துக்கொண்டே கண்ணன் திரிவக்கரையை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.
1 comment:
இந்த அத்தியாயம் எண் 59 படித்து விட்டேன்
ஷாயிபா வின் நோக்கம் தான் என்ன
போக போக தான் தெரியுமோ
கண்ணா ! சாயிபாவுக்கு நல்ல புத்தியை கொடுப்பாயாக
Post a Comment