Wednesday, May 4, 2011

கண்ணன் வருவான், 2ஆம் பாகம், தேவகியின் துன்பம்!

திரும்பிப் பார்த்தாள் ஷாயிபா. நகரமும், கோட்டையும், அதன் ஒவ்வொரு செங்கல்லையும் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தாற்போல் இருந்தது அவளுக்கு. அந்தச் செங்கல் குவியலில் இருந்து குரல் கேட்டாற்போலும் தோன்றியது. கடுமையான, ஆனால் அதே சமயம் குதூகலம் நிரம்பிய குரல். ஷாயிபாவின் உள் மனம் யாருடைய குரல் என்பதைச் சொல்லிவிட்டது. ஆம், அவனே தான். ஜராசந்தன்! வெற்றியின் சிகரத்தில் இருந்தான் ஜராசந்தன். தர்மம் அழிந்தது. மீண்டும் கூறினான். அந்தக் குரல் உலகின் அனைத்து பாகங்களில் இருந்தும், அதல, சுதல, பாதாளத்திலிருந்தும் எதிரொலித்ததாய்த் தோன்றியது ஷாயிபாவுக்கு. இடிபாடுகள் குவியலாய்க் கிடக்க ஷாயிபா அதன் ஏதோ ஒரு உச்சியில் நின்று கொண்டிருக்கிறாள். அதுவும் தன்னந்தனியாக. ஒரு காலத்தில் இது மதுரா நகரம் எனப்பட்டது. இன்று அடியோடு வீழ்த்தப்பட்டு இடிபாடுகள் நிறைந்த கற்குவியலாக ஆகிக்கிடக்கின்றது. அதோ அவர்கள் யார்?? ஆஹா! ஆசாரியர்கள்!

ஆம், ஆம், கர்காசாரியாரில் இருந்து சாந்தீபனி வரை அனைத்து ஆசாரியர்களும் கைவிலங்கிடப் பட்டு இழுத்துச் செல்லப் படுகின்றனர். மெல்ல மெல்ல சோகமான முகபாவத்தோடு அவர்கள் நடக்கின்றனர். என்றாலும் அவர்கள் கண்களில் உண்மையின் ஒளி, சத்தியத்தின் ஒளி, தர்மத்தின் ஒளி ஜொலிக்கிறது. எவ்வளவு மோசமான நிலையிலும், எப்படி அவமரியாதையாக நடத்தினாலும், எங்கள் தர்மத்திலிருந்து பிறழ மாட்டோம் என அந்தக் கண்களின் ஒளி சொல்லாமற் சொல்லிற்றோ? ஷாயிபா உடலைச் சிலிர்த்துக்கொண்டாள். ஆஹா, இது தானே என் பெரியப்பா வேண்டிக்கொண்டது. இது தான் அவருடைய ஆக்ஞை. இப்போது அவர் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பார். என்னால் இயன்றதைச் செய்துவிட்டேன். அவருடைய ஆன்மா என்னுடைய இந்தச் செயல்களாலும், ஒரு கொடூரமான கொலைகாரனைக் கொன்றதன் பின்னர் கிட்டிய அவனுடைய ரத்தத்தினாலும் புனிதமடைந்திருக்கும். ஆனால் அவளுக்கு என்னமோ தெரியவில்லை. இந்த வெற்றி வெற்றியாகவே தோன்றவில்லை. மனம் சந்தோஷமாக இல்லை. நெஞ்சை அடைத்துக்கொண்டு மூச்சுத் திணறிற்று. கண்கள் காரணமின்றி நீரைப் பொழிந்தன. கிருஷ்ணன் எங்கே?? அவள் ஏதோ ஒரு மோசமான காரியத்தைச் செய்தே விட்டாள். அந்தவரையிலும் அவளுக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அது என்ன?? என்ன செய்தேன்??

அதோ, அங்கே, அங்கே ஒரு உடல் எரிந்து கொண்டிருக்கிறதே! அதன் புகை விண்ணையும் தொடும்போல் இருக்கிறதே! கடவுளே, இது என்ன?? யார் இந்தப்பேரழகி?? ஒரு அரசகுமாரி போல் இருக்கிறாளே? என்ன அழகாக மணப்பெண் போல் சிங்காரித்துக்கொண்டிருக்கிறாள். நெற்றியின் சிந்தூரமே தீ நாக்குப் போல் சுடர் விட்டு ஒளிர்கிறது. ஆனால் அந்த அழகான முகம், அதில் தெரியும் சோகம், இனங்காணமுடியா துக்கம். அட இது என்ன?? இந்தச் சிதையின் மேல் ஏறுகிறாளே? கடவுளே அதில் குதித்துவிடப் போகிறாளே! யார் இவள்?? நான் இவளை ஒரு நாளும் கண்டதில்லையே??............ஆனால் எனக்கு இவளை எப்படியோ தெரியும் எனத் தோன்றுகிறது. எப்படித் தெரியும்?? ஆம், எனக்கு இந்த அரசகுமாரியை நன்றாய்த் தெரியுமே. அவள் பெயர் என்ன?? அட, அதை மறந்துவிட்டேனா? ம்ம்ம்ம்ம்??? அன்று ஒருநாள், ஒருநாள், பல யுகங்களுக்கு முன்னேயா?? தெரியவில்லை, ஒரு நாள் யாரோ நம்மிடம் இவளைக் குறித்துச் சொன்னார்கள் அல்லவா?? இவள் கண்ணனைத் தவிர வேறு யாரையும் மணக்கப்போவதில்லை என சபதம் ஏற்றிருப்பதாய்ச் சொன்னார்களே! ஆம், ஆம், இப்போது நினைவில் வந்துவிட்டது. ஷ்வேதகேது தான் சொன்னான். இவளுக்கும், கண்ணனுக்கும் திருமணம் நடக்க உதவிகள் செய்யவேண்டும் என்று கூடக் கேட்டான் அல்லவோ? ஆஹா, கண்ணனை நான் கொன்றுவிட்டதால், அவனைத் தவிர வேறு எவரையும் மணக்க இஷ்டப்படாத இவள் இந்தத் தீயில் புகுந்து உயிரை விடப் போகிறாளா? இதுவும் நான் செய்த செயலின் விளைவா?

எல்லாருமே கிருஷ்ணனை விரும்புகின்றனர். தங்கள் உயிரினும் மேலாக அவன் மேல் ஆசை வைத்திருக்கின்றனர். அவன் இல்லாவிட்டால் இவர்களால் இருக்க முடியாது என்ரே நினைக்கிறார்கள். ஆனால்…….. ஆனால்………ஆனால்…… கண்ணன் ஒரேயடியாகப் போய்விட்டானே! இப்போது அவனுடன் சேர்ந்து ஷ்வேதகேதுவும் போய்விட்டான். இன்னும் அநேகர் உயிரை விட்டுவிட்டனர். நான் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறேன்?? ஹும்,. நான் செய்த இந்தச் செயலால் என்னை விரும்பிய ஒருவனையும் இழந்தேன். எனக்கு சகோதரனாக இருப்பேன் என்பவனையும் இழந்தேன். இந்தக் கொடுஞ்செயலைச் செய்தது நான் தான். ஆம், நானே தான். கண்ணனைக் கொன்றதோடு அவனோடு சேர்ந்து தர்மத்தையும் கொன்றுவிட்டேனா?

ஆம், ஆம், அப்படித்தான், இந்த என் கரங்களால் அன்றோ கண்ணனைக் கொன்றேன்?? ரத்தம் சொட்டும் கைகள் என் கைகள். ரத்தம் படிந்துவிட்டன. இந்தக் கறையை அகற்றவே முடியாதா? அவள் தொண்டையை அடைத்துக்கொண்டது. ஆனால் அதையும் மீறி அவள் அழ விரும்பினாள். ஆனால் அவளால் அழமுடியவில்லை. அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்துக்கொண்டிருந்தது. அவள் காதுகளில் ஒரு வழிபாட்டுப் பாடல் ஒலித்தது. யாருடைய குரல்?? தேவகி அம்மாவின் குரல். என்ன இது?? தேவகி அம்மாதான் இறந்திருந்தாளே? அப்புறம் எப்படி அவள் குரல் மட்டும் கேட்கிறது? அவள் குரலில் வாழ்கிறாளா?

ஹே நாதா, கிருஷ்ணா, நாராயணா, வாசுதேவா! தேவகி அம்மாவின் குரலேதான்.

2 comments:

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 66 படித்து விட்டேன்
ஏன் இந்த ஷாயிபா இப்படி சொல்கிறாள் என்று ஒன்றும் புரிய வில்லை கீதாம்மா

sambasivam6geetha said...

ப்ரியா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஷாயிபா கடைசியில் திருந்திடுவாளே, படிச்சிருப்பீங்க .