Thursday, June 2, 2011

கல்லும், முள்ளும் பூவாய் மாறியது! கண்ணன் தொடர்!

முட்டாள்களே, கடைந்தெடுத்த முட்டாள்களே, என்ன பேசிக்கொள்கிறீர்கள் இருவரும்?? நீங்கள் இருவருமாக ஷாயிபாவை எனக்கு, உனக்கு என ஏலமா போடுகிறீர்கள்? உங்களில் எவருக்காவது ஷாயிபா என்ன நினைக்கிறாள் என்பதில் அக்கறை உண்டா? அவள் விருப்பத்தைக் கேட்டதுண்டா?? ஷாயிபா உங்கள் இருவரையுமே நினைத்து நினைத்து உருகுவதாய் நீங்கள் இருவரும் நினைப்பது தவறு. அவள் கண்ணனைத் தனக்குக் கணவனாய்த் தேர்ந்தெடுத்துவிட்டாள். கண்ணனும் ஒத்துக்கொண்டு விட்டான். எனக்குத் தான் இதில் மிகவும் வருத்தம், துக்கம்.” படபடவெனப் பேசிய திரிவக்கரையின் குரலில் மிதமிஞ்சிய கசப்பு உணர்ச்சி தெரிந்தது. அங்கிருந்து அகன்றாள் அவள். ஷ்வேதகேதுவும் உத்தவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் முகத்திலும் அசடு வழிந்தது.

“பெண், அற்புதமான ஒரு பிறவி, ஆனால் எவராலும் புரிந்து கொள்ள முடியாத தன்மை படைத்தவள். இவ்வுலகத்தின் படைப்புக்களிலேயே பெண் தான் அதிசயமானவள்!” என்றான் ஷ்வேதகேது.

“கிருஷ்ணா! கிருஷ்ணா! எனக்கு இன்னமும் நம்பமுடியவில்லை. ஆச்சரியமாய் உள்ளதே!” உத்தவன் குரலில் ஆச்சரியம் மிகுந்து காணப்பட்டது.

இங்கே சுபத்ராவைத் தன் தோள்களில் சுமந்து வந்த கிருஷ்ணன் அந்தப் புரத்தில் இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்த வண்ணம், “ சகோதரி, உன்னுடைய இஅந்த மறு பிறப்பைக் குறித்து நான் சந்தோஷம் அடைகிறேன்.” என்றான். அவன் காலடியில் பணிவோடு அமர்ந்தவண்ணம் ஷாயிபா, “என் பிரபுவே, நான் உன் அடிமை. என்னை நீர் சகோதரி என அழைக்காதீர். உம்முடைய கால் தூசிக்குக் கூட நான் சமமாக மாட்டேன். இத்தனை நாட்களாய் உம்மைத் திட்டிக்கொண்டிருந்ததை நினைத்தும், உம்மைக் கொல்ல வேண்டும் என்றே காத்திருந்ததை நினைத்தும் வெட்கம் அடைகிறேன். இந்தப் பாவத்திற்கு என்ன பிராயச் சித்தம் செய்வது?” ஷாயிபாவின் குரலில் சோகம் கப்பி இருந்தது.

“இதைக் குறித்து இனி பேசாமல் இரு ஷாயிபா. நான் உன்னுடைய இந்த மனமாற்றத்திற்கே காத்திருந்தேன். நீ மனம் மாறிவிடுவாய் என எதிர்பார்த்தேன், ஆனால் அது இத்தனை விரைவில் நடக்கும் என நினைக்கவில்லை.” மிதமிஞ்சிய அன்பும், பாசமும் தொனித்தது கண்ணன் குரலில். “ நீ அனைத்தையும் வெற்றி காணவே பிறந்திருக்கிறாய்! நான் சொல்வது சத்தியமான ஒன்று ஷாயிபா! ஆம், நீ வெற்றித் திருமகளே! உன் அளவு கடந்த வெறுப்பையும், கோபத்தையும், எப்படிப்பட்ட வன்முறைக்கும் தயாராய் இருந்த இதயத்தையும் நீ வென்று விட்டாய். உன் கோபம், ஆத்திரம், ஆங்காரம், வெறுப்பு அனைத்தும் சுத்தமாய்க் காணாமல் போனது. பெரிய மஹான்களாலேயே சில சமயம் இயலாத ஒன்று உனக்குக் கை கூடி உள்ளது.முற்றும் துறந்த யோகிகளும் ஞானிகளுக்குமே இயலும் ஒன்றை நீ எளிதில் அடைந்திருக்கிறாய்”

“கண்ணா, இதை நானா செய்தேன்?? எனக்காக நீ அல்லவோ செய்து முடித்திருக்கிறாய்?”
“இல்லை ஷாயிபா, உன் சுயநலம் மறைந்துவிட்டது. அதை நீயே வென்றுவிட்டாய். வேறு எவரும் இல்லை. உன் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நீயே நிச்சயித்துக்கொள்வாயாக!” என்றான் கண்ணன்.

“என் பிரபுவே! நீ என்ன சொல்கிறாயோ அப்படியே நான் செய்ய வேண்டியவளாகிறேன்.” என்றாள் ஷாயிபா.

“இல்லை, இல்லை, உன் விருப்பம் என்னவோ அதை நீ நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். உன் விருப்பத்திற்கு மாறாக நீ எதுவும் செய்ய வேண்டாம்.”

“என் கடவுளே, நீ தான் எனக்கு வழிகாட்ட வேண்டும். நீ காட்டும் வழியில் நான் நடக்கிறேன்.”

“சரி, நான் யாரை மணப்பது நல்லது என நீ நினைக்கிறாய் கண்ணா?” ஷாயிபா கேட்டாள். விருப்போ வெறுப்போ தொனிக்கவில்லை அவள் குரலில்.

“நீ யாரை மணக்க விரும்புகிறாய் ஷாயிபா? ஷ்வேதகேதுவையா? ;உத்தவனையா?” கண்ணன் கேட்டான்.

“ஹூம், ஷ்வேதகேது எனக்குத் துரோகம் செய்தான்.” அவளையும் அறியாமல் ஷாயிபாவின் குரலில் வெறுப்பும், கசப்பும் எட்டிப் பார்க்கச் சட்டெனத் தன்னைச் சமாளித்துக்கொண்டாள் ஷாயிபா. திடீரென ஒரு எண்ணம் அவளை மின்னல் போல் தாக்கக் குறும்புப் புன்னகையுடன், “என் பிரபுவே, இந்த இருவரில் ஒருவரையா நான் மணக்கவேண்டும்?? ஏன் மூன்றாவதாய் ஒருவரை நானே தேர்ந்தெடுக்கக் கூடாது?” என்று கேட்டாள். “ஓ, தேர்ந்தெடுக்கலாமே? ஒரே ஒரு நிபந்தனை. அவன் உன்னை உன் வாழ்நாள் முழுதும் சந்தோஷமாய் வைத்திருக்க வேண்டும்.” என்றான் கண்ணன்.

“ஓ,ஓஓ, கண்ணா? அவன் என்னை வாழ்நாள் முழுதும் சந்தோஷமாய் வைத்திருப்பான் என எனக்கு உறுதியாய்த் தெரியும். ஆனால்….ஆனால்.,… அவனைத் தேர்ந்தெடுக்க நீ எனக்கு உதவுவாயா? நீ எனக்கு உன் வாக்குறுதியைக் கொடு.” ஷாயிபாவின் தொனி சற்றே பழைய மயக்க வைக்கும் குரலில் மாறியதோ?? ஆனால் கண்ணனோ சற்றும் தயங்காமல், “நீ யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடு, ஆனால் என்னை மட்டும் விட்டுவிடு.” என்று கூறிவிட்டான்.

“ஏன் உன்னைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?” உள்ளடக்கிய கோபத்தோடு கேட்டாள் ஷாயிபா. “நான் உன்னுடைய அடிமை. நான் ஏற்கெனவே தேர்ந்தெடுத்துவிட்டேன்.” ஷாயிபாவின் குரலில் பழைய ஆத்திரம் தென்பட்டதோ? கண்ணன் அசரவில்லை. “இதோ பார் ஷாயிபா, நான் உன்னை ஒரு சகோதரன் என்ற அளவிலே தான் சந்தோஷத்தைத் தர முடியும். நான் இவ்விதம் இருப்பதே நன்மை பயக்கும்.” என்றான். “ஏன் என்னை உன் மனைவியாக ஏற்க இயலாதா?” ஷாயிபா கேட்டாள்.

“இதோ பார் ஷாயிபா. என்னால் சந்தோஷப் படக்கூடிய ஒரு பெண்ணை நான் மனைவியாக அடைய முடியுமா என்பதே எனக்குத் தெரியவில்லை. எப்படி ஆனாலும் கரவீரபுரத்தின் இளவரசியைப் போன்ற ஒரு பெண்ணை மனைவியாக அடைந்து அவளை மகிழ்வோடு என்னால் வைத்திருக்க இயலுமா?? தெரியாது. உண்மையில் நான் எனக்குச் சொந்தமில்லை. பலருக்கும் நான் சொந்தம்; பலருக்கும் நான் கடமைப்பட்டவன். எல்லாவற்றுக்கும் மேல் தர்மம் என ஒன்று இருக்கிறதே அதற்கு நான் அடிமை. தற்சமயம்,,,ம்ம்ம்ம்?? என்னால் சரியாகச் சொல்ல இயலவில்லை; எத்தனை வருஷங்கள் ஆகுமோ புரியவும் இல்லை; ஆனால் இப்போது என்னால் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுத் திருமணம் புரிந்து கொள்ள இயலாது. “ கண்ணன் முகத்தில் அதுவரை விளையாடி வந்த இளநகையும் குறும்பும் எங்கோ போனது. கண்ணன் எங்கோ தூரத்தில் பார்ப்பது போல் கண்கள் செருகத் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

சற்றே தீவிரமான குரலில் கண்ணன், “ஷாயிபா, உன் உடலில் அரச பரம்பரையின் ரத்தம் ஓடுகிறது. நான் சொல்வதை நீ புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன். இங்கே, இந்த மதுராவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் ஆபத்தில் வாழ்கிறேன். எனக்கு மட்டுமல்ல, இந்த மதுராவும், இதன் யாதவர்களுமே பெருத்த ஆபத்தில் இருக்கின்றனர். மதுராவின் வாயிலில் இந்நகரையும் அதோடு சேர்த்து யாதவர்களையும் விழுங்க வேண்டி அதர்மம் காத்துக்கொண்டிருக்கிறது பல வருடங்களாய். அதற்கு முதல் பலி நான் தான். என்னை அழிக்க வேண்டிப் பல தேசத்து அரசர்களோடும் சக்கரவர்த்திகளோடும் உடன்படிக்கையும் நட்பும், ஏற்படுத்திக்கொண்டு பெரிய பெரிய திட்டங்கள் போடப் படுகின்றன. அவ்வளவு ஏன்?? மதுரா நகரிலேயே எனக்கு எதிராகச் சதித்திட்டங்கள் போடப் படுகின்றன. இத்தனை நபர்களின் அன்பு இருந்தும், நான் இந்த மாபெரும் யுத்தத்தில் தன்னந்தனியாகப் போராட வேண்டியவனாய் இருக்கிறேன். ஒரு சிலரே ஆனாலும் அவர்கள் காட்டும் வெறுப்பை என்னால் சகிக்க இயலவில்லை.”

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

பெண், அற்புதமான ஒரு பிறவி, ஆனால் எவராலும் புரிந்து கொள்ள முடியாத தன்மை படைத்தவள். இவ்வுலகத்தின் படைப்புக்களிலேயே பெண் தான் அதிசயமானவள்!” என்றான் ஷ்வேதகேது.//

அருமையான கருத்து.

பித்தனின் வாக்கு said...

amma i reading your blog regularly. due some problem in system i unable to post a comment. sorry.
we came to know lot of details about lord krishna by your article

priya.r said...

இந்த அத்தியாயம் 71 படிச்சாச்சு., பதிவுக்கு நன்றி கீதாம்மா

எதிர்பாராத திருப்பம் ;அப்போ ஷாயிபா அந்த இரண்டு பேருக்கும் இல்லை தானே
இதை தான் போன அத்தியாயத்திலே சொன்னோம் ! ஷாயிபாவின் விருப்பம் முக்கியம் என்று :)

கண்ணனாகவே இருந்தாலும் அவன் மானிடர்களை போல விருப்பு வெறுப்புகளை பற்றி பேசுவது
கதையை தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக கொண்டு போக வைக்கிறது
பதிவுக்கு நன்றி கீதாம்மா

selvam said...

I am eagerly waiting for your next post.

selvam said...

I am eagerly waiting for your next post.

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

sambasivam6geetha said...

வாங்க பித்தனின் வாக்கு, படித்து வருவதற்கு சந்தோஷம்.

sambasivam6geetha said...

நன்கு அலசி, ஆராய்ந்து படிப்பதற்குப் பாராட்டுகள் ப்ரியா. நன்றியும்.

sambasivam6geetha said...

வாங்க செல்வம், முதல் வரவுக்கு நன்றி. ஊரில் இல்லை, அதோடு வீட்டிலும் விருந்தினர். இணையத்துக்கு வந்தால் மெயில் பார்ப்பதோடு சரி. இனி சரியாகும் என நம்புகிறேன்.

priya.r said...

எத்தனை தடவை படித்தாலும் படிக்க படிக்க நன்றாக இருக்கிறது !

பதிவுக்கு நன்றி