Thursday, June 23, 2011

ஷாயிபாவின் முடிவும், தேவகியின் ஆநந்தமும்.

“அதை நான் நன்கறிவேன் கண்ணா! உன் எதிரிகளில் சிலர் என்னையும் ஒரு துருப்பாகப் பயன்படுத்த எண்ணி இருக்கின்றனர். “

“ஆகவே ஷாயிபா,” கண்ணன் அதே இளநகையோடு தொடர்ந்தான். “ நீ உத்தவனின் மனைவியாகவோ அல்லது ஷ்வேதகேதுவின் மனைவியாகவோ எனக்கு உன்னால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். இருவருமே அருமையான மனிதர்கள் மட்டுமில்லை, தைரியசாலிகளும், வீரர்களும், தர்மத்தின் பாதையிலிருந்து பிறழாமல் நடப்பவர்களும் ஆவார்கள்.”

“ஓ, கண்ணா, கண்ணா! அவர்கள் இருவரில் எவரையும் நான் மணக்க இயலாது. என்னால் இயலுமா? நீயே சொல்! “ ஷாயிபாவின் கண்கள் பளபளத்தன. “அதோடு நீயும் என்னை உன் கருவியாக மட்டுமே பயன்படுத்த எண்ணுகிறாயா?”

“தர்மத்தின் பாதையில் செல்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் அந்த தர்மத்தின் கருவிகளே ஆவார்கள்; நான் தர்மத்தின் பாதையிலேயே செல்ல விரும்புகிறேன். அதற்கெனவே வாழ்கிறேன். நான் வேண்டுவது வேறு எதுவும் இல்லை.”

“ம்ம்ம்ம்?? அந்த இருவரில் எவர் மிக அதிகமாக தைரியசாலியும் வீரனும் ஆவார்கள்? கண்ணா, எவரால் உனக்குப் பயன் அதிகம் கிடைக்கும்? உன் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு ஆணையாகும் கண்ணா, நான் உன் அடிமை என்பதைச் சிறிதும் மறவாதே! நீ என்ன சொல்கிறாயோ அதுவே எனக்கு மிக உயர்ந்த உபதேசம் ஆகும்.”

“உனக்கு இருவரில் எவர் மேல் விருப்பம் உள்ளதோ அவரை மணந்து கொள் ஷாயிபா. இதில் உன் விருப்பமே முக்கியம். “ திடீரென ஏதோ நினைத்துக்கொண்டவன் போல் கண்ணன் குறும்புச் சிரிப்புடன், “என்னை விட்டு விடு.” என்றான்.

ஷாயிபா ஆழ்ந்த யோசனையோடு, “ என் பிரபுவே, உன்னை ஜராசந்தன் அழிக்க இருக்கும் திட்டங்களை வீணாக்கவேண்டும் என ஷ்வேதகேது சொல்வது உண்மையா? அவனால் அது இயலுமா?? மேலும் நான் இங்கிருப்பதை விடவும் குண்டினாபுரத்தில் இருந்தால் உனக்கு வசதியாக இருக்குமோ?”

“ஷாயிபா, ஜராசந்தனை அழிப்பதற்கு நீ மட்டும் உதவினால், உன்னால் அது இயன்றால், இந்த யாதவ குலமும், யாதவர்களும் என்றென்றைக்கும் உனக்குக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். உன்னைப் பெண்தெய்வமாக அவர்கள் குல தெய்வமாக வழிபடுவார்கள்.”

ஷாயிபாவின் கண்கள் பளிச்சிட்டன. அதைக் கண்ட கண்ணனுக்குக் கரவீரபுரத்தில் அதிகாரத்தின் உச்சியில் ஷாயிபா இருந்தபோது அவள் கண்களில் தென்பட்ட அதே உணர்வுகளை இப்போதும் காண்பதாய்த் தோன்றியது. அப்போது அங்கே வாசற்படியில் திடீரென தேவகி அம்மா தோன்றினார். ஏதோ கடுமையானதொரு செய்தியைக் கேட்டதால் மனம் வாடியது போல் அவர் முகம் சோகத்தில் ஆழ்ந்திருந்ததோடு அல்லாமல், கண்களும் நீரைத் தாரையாக வர்ஷித்த வண்ணம் இருந்தன. அவர் பின்னால் திரிவக்கரையும் நின்றிருந்தாள். திரிவக்கரையின் கண்களும் கண்ணீரால் நிறைந்து தளும்பின. அவர்கள் இருவருமே ஷாயிபாவை நோக்கிப் புன்னகை புரிந்து கொண்டிருந்த கண்ணனையும், கண்ணனைப் பார்த்த வண்ணம் கண்கள் சந்தோஷத்தில் தீபமென ஒளிர்விட நின்றிருந்த ஷாயிபாவையுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தேவகி அம்மா மெல்ல, “கண்ணா, இது என்ன? நான் கேள்விப்பட்டது உண்மையா?” என்று கேட்டார்.

கண்ணனும், ஷாயிபாவும் திரும்பிப் பார்த்தனர். தேவகி அம்மாவை அங்கே கண்டதும் இருவரும் மரியாதையுடன் எழுந்திருந்தனர். தேவகி அம்மாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள். தேவகியுடன் வந்திருந்த சுபத்ரா கண்ணனையும், ஷாயிபாவையும் கண்டதும் மகிழ்வோடு அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றிக் கட்டி அணைத்துக்கொண்டாள். தேவகியின் முகத்தையும் அதில் கண்ட இனம் காணா சோகத்தையும் அவள் சொல்ல முடியாமல் தவிக்கும் கோலத்தையும் கண்ட கண்ணன் எந்தச் செய்தியால் அவள் மனம் இவ்வளவு துன்பப் பட்டிருக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டான். ஷாயிபாவின் பக்கம் திரும்பி, “சகோதரி, ஷாயிபா, அம்மாவிடம் உன் விருப்பத்தைச் சொல்வாயாக. எவரை நீ மணக்கப் போகிறாய் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலில் அம்மா வந்திருக்கிறார்.” என்றான். கண்ணன் குரலில் மட்டுமில்லாமல் முகத்திலும் குறும்பு கூத்தாடியது.

ஷாயிபாவைக் கண்ணன் சகோதரி என விளித்ததால் குழப்பம் அடைந்த தேவகி அம்மா, அந்தக் குழப்பம் மாறாமலேயே ஷாயிபாவிடம், “நீ யாரை மணம் செய்து கொள்ளப் போகிறாய்?” என வினவினார். ஷாயிபாவோ,”அம்மா, தற்சமயம் நான் எவரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. தற்சமயம் திருமணம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. நான் முதலில் கரவீரபுரம் சென்று என் பெரியம்மாவும் கரவீரபுரத்து ராணியுமான பத்மாவதி அம்மாவிடம் என் உளமார்ந்த மன்னிப்பைக் கோரிப் பெற வேண்டும். அவர்களின் மகிழ்வான ஆசிகளைப் பெற வேண்டும். அவர் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் துன்பமான பகுதியாக ஆக்கியதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். என் மனதில் உள்ள வெறுப்பு, ஆங்காரம், துவேஷம், பொறாமை, அளவுக்கு அதிகமான ஆசை, அதிகார மோகம் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும். ஷ்வேதகேதுவின் தலைமையில் குண்டினாபுரம் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கும் பயணிகளோடு நானும் செல்லப் போகிறேன். எனக்குத் தக்கத் துணையை அனுப்புவதாக கோவிந்தன் உறுதியளித்திருக்கிறான். “

தேவகி அம்மாவின் ஆநந்தம் அளவுக்கதிகமாகத் திரிவக்கரையின் பால் திரும்பி, “பொய் சொன்னாயா திரிவக்கரை, மோசக்காரி, என் அருமை மகன், என் கோவிந்தன் என்னை ஒருநாளும் ஏமாற்றவே மாட்டான். என் மகனை நான் நன்கறிவேன்.”
“அம்மா, அம்மா,” கண்ணன் பெரும் சிரிப்போடு சொன்னான்.”உன் மகன் ஒரு நல்ல மனைவியை, மணமகளை எப்போதுமே விட்டுவிடுகிறான்.” அங்கே ஏற்பட்ட பலத்த சிரிப்பு அடங்க வெகுநேரமானது.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வலைச்சரத்தாலும் முக்கியமாக மணிராஜ் வலைப்பூ ஆசிரியர் இராஜ ராஜேஸ்வரி அவர்களாலும் இணைந்தோம்..

இனி தொடர்ந்து வருகிறோம் நண்பரே..

தாங்களும் ஓய்விருக்கும் போது எமது சிவயசிவ - என்னும் வலைத்தளத்திற்கு வருகை தாருங்கள்..

http://sivaayasivaa.blogspot.com

நன்றி..

sambasivam6geetha said...

ராஜராஜேஸ்வரி, வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும், சிவ.சி.மா. ஜானகிராமனின் வரவுக்கும் நன்றி.

திரு ஜானகிராமன் நிச்சயமாய் உங்கள் வலைத்தளத்திற்கு நாளை வருகிறேன். நன்றி.

priya.r said...

இந்த அத்தியாயம் 72 ஐ படித்து விட்டேன் கீதாம்மா

//“தர்மத்தின் பாதையில் செல்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் அந்த தர்மத்தின் கருவிகளே ஆவார்கள்; நான் தர்மத்தின் பாதையிலேயே செல்ல விரும்புகிறேன். அதற்கெனவே வாழ்கிறேன். நான் வேண்டுவது வேறு எதுவும் இல்லை.”//

தர்மொயுபதேசம் மனதில் திரும்ப திரும்ப சொல்லி பார்த்து கொண்டேன் !

சாயிபா வின்ப் முடிவும் நிம்மதி அளிக்கின்றன

பதிவுக்கு நன்றி .