Wednesday, October 19, 2011

தங்களுக்கோர் துன்பமுறாமற் காப்பேன்!

"அப்படி எல்லாம் பேசாதே கிருஷ்ணா! உன்னால் மட்டுமே எங்களைக் காக்க முடியும். உன்னால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்த முடியும். " கத்ரு கூறினான். அதற்குக்கிருஷ்ணன், " நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியுள்ளேன்; நம்பிக்கை ஒன்றால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்த முடியும். திரும்பவும் அதையே கூறுகிறேன். நம்பிக்கை இல்லை எனில் கடவுளரால் கூட அற்புதங்களை நிகழ்த்த இயலாது. " ஷங்கு கூறினான். "கண்ணா, எங்களுக்கு உன்னிடம் நம்பிக்கை உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்று கூறு." என்று கூற அனைவரும் ஒருமித்த குரலில் அதை ஆமோதித்தார்கள். "வாசுதேவா, இதற்கு முன்னால் நடந்தவைகளை எல்லாம் தயவு செய்து மறந்துவிடு. நாம் அனைவரும் மரணம் நம்மைப் பிரிக்கும்வரையில் ஒன்றுபட்டிருப்போம்." சாத்யகி திடமான குரலில் உறுதி அளித்தான். வசுதேவரும், உணர்ச்சிமயமான குரலில், " குழந்தாய், கிருஷ்ணா, நீ எங்களைப் போதுமான அளவு சோதித்துவிட்டாய். போதும் அப்பா. உன் சோதனைகளை நிறுத்திக்கொள். யுத்தம் செய்வதைத் தவிர இப்போது வேறு வழி இல்லை. நீ தான் அதற்குத் தலைமை தாங்க வேண்டும். ஜராசந்தனையும் காலயவனனையும் வேறு எவராலும் எதிர்கொள்ள இயலாது."

"மாட்சிமை பொருந்திய மன்னா, மரியாதைக்குரிய தந்தையே, நம்மிடம் நம்பிக்கை மட்டும் இருந்ததெனில் நாம் சுதந்திரமாக வாழலாம். பயமின்றியும் வாழலாம்." கண்ணன் கூறினான். அவன் குரல் மெதுவாக இருந்தாலும் அதில் உறுதி தொனித்தது. அனைவரும் மேலே என்ன செய்ய வேண்டுமெனக்கேட்டார்கள். "காலயவனனிடமோ ஜராசந்தனிடமோ நம்மை ஒப்புக்கொடுக்காமல் நாம் இறக்கத் தயாராக இருக்கிறோமா? சொல்லுங்கள், தயாராக இருக்கிறோமா?" கண்ணன் கேட்டான். "வேறு வழியும் இருக்கிறதா? காலயவனனையோ, ஜராசந்தனையோ எதிர்கொள்ளாமல் நாம் தப்பித்து சுதந்திரமாக வாழ வழி இருக்கிறதா? அந்த வழியைச் சொல் கிருஷ்ணா! " சாத்யகி கேட்க, "ஜராசந்தனிடமும், காலயவனனிடமும் மாட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என ஏளனமாக சத்ராஜித் கூறினான். "சுதந்திரமாய் வாழவேண்டுமானால் நான் ஒரு வழியைக் காட்டுவேன்; அந்த வழி தான் நம் முடிவாக இருந்தாலும், அது ஒன்றே நம்மைச் சுதந்திரமாக வாழவும் வைக்கும்." கண்ணன் கூறினான். "சொல் கிருஷ்ணா, என்ன அது சீக்கிரம் சொல்! நம்மை நாமே சிதையை மூட்டி எரித்துகொண்டால் தான் சுதந்திரமாக இருக்கமுடியுமெனில் அதற்கும் தயார். நம் மானமும், மரியாதையும் அப்படியாவது காப்பாற்றப்படும்." உக்ரசேனர் கூறினார். தாம் அனைவரோடு கலந்து ஆலோசித்தே இம்முடிவை எடுத்ததாகவும் கூறினார். பலியாடுகளாக மாற எவருமே தயாராக இல்லை என்றும் கூறினார்.

"அரசே, கேளுங்கள். நாம் நம் மூதாதையர் காலந்தொட்டு, ஜன்ம, ஜன்மாந்திரமாக வாழ்ந்து வரும் இந்த மதுராவை விட்டு, இந்த யமுனைக்கரையை விட்டுவிட்டு, நம் புராதன மாளிகைகளை விட்டு விட்டு, நம் சொந்த மண்ணை விட்டுவிட்டு, இங்கிருந்து செல்ல வேண்டும். மாமா கம்சனுக்குப் பயந்து யாதவத் தலைவர்கள் ஓடோடி ஒளிந்து கொண்டார்களே அப்படி இல்லை இது; வாழவேண்டும்; சுதந்திரமாக வாழவேண்டும்; தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும். என்ற புனிதமான எண்ணத்திற்காக இங்கிருந்து கிளம்ப வேண்டும்." கண்ணன் திட்டவட்டமாய்க் கூறினான். அமைதி! எங்கும் அமைதி. எவரும் எதுவும் பேசவில்லை. மூச்சு விட்டால் கூட சத்தத்தை ஏற்படுத்துமோ என அனைவரும் பயந்து கொண்டு மூச்சுவிட்டனர். கண்ணன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டனர். கண்ணன் மேலும் கூறினான்.

"ஜராசந்தனுக்கும் முன்னால் காலயவனன் மதுராவை அடைந்துவிடுவான். ஆனாலும் அதற்கு இன்னமும் ஒரு மாதம் முழுதும் பிடிக்கும். ஆகவே நமக்கு வேண்டிய நேரம் கிடைக்கிறது. மதுராவை விட்டு நாம் அனைவரும் கிளம்புவோம். இந்த மதுராவின் ஆண், பெண், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், ஆடுமாடுகள், கால்நடைகள், வேலையாட்கள், குதிரைகள், யானைகள் என நம் சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு இங்கிருந்து கிளம்புவோம். அதுவும் காலயவனன் மதுராவை அடையும் முன்னர் கிளம்பவேண்டும்."

"எல்லாம் சரி அப்பா! எங்கே போவோம்? எங்கே தங்குவோம்? நம்முடைய அண்டை நாடுகள் எதுவுமே நம்மை அடைக்கலம் கொடுத்துக்காப்பாற்றும் அளவுக்கு வலுவுள்ளவர்கள் அல்ல; ஜராசந்தனின் கோபத்தை அவர்கள் எதிர்கொள்ளத் தயங்குவார்கள். காலயவனன் வேறு சேர்ந்து கொண்டான்.:" கத்ரு கூற, கண்ணன் தொடர்ந்து, "நான் ஒரு நாட்டைக் கண்டறிந்திருக்கிறேன். அந்த நாட்டின் அரசனும்,மக்களும் நம்மை முழு மனதோடு வரவேற்றுத் தங்க வைப்பார்கள். நமக்கு அன்பான வரவேற்புக் கிடைக்கும். என் பெரிய அண்ணா பலராமன் அரசன் குக்குட்மினுக்காக குஷஸ்தலையை வெற்றி கொண்டார். மிக அழகான அந்த நாடு செளராஷ்டிரக் கடற்கரையில் வியாபித்துள்ளது. அரசர் குக்குட்மின் தம் ஒரே மகள் ரேவதியையும், ராஜ்யத்தையும் அண்ணா பலராமரிடம் ஒப்படைக்கக் காத்திருக்கிறார். அங்கே நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இருக்கலலம். ஜராசந்தனிடமிருந்தும் காலயவனனிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றிக்கொண்டு நமக்கு நாமே மன்னராக வாழலாம்."

இதைக் கேட்ட சத்ராஜித் ஆக்ஷேபித்தான். குஷஸ்தலை எங்கோ உள்ளது. அங்கெல்லாம் செல்ல முடியாது என மறுத்தான். கண்ணன் சிறு சிரிப்போடு, "யமப்பட்டினத்தை விட அருகே தான் உள்ளது" என்றான். எவருமே சிறிது நேரம் பேசவே இல்லை. கிருஷ்ணன் மேலே பேசினான். " உங்களால் மதுராவை விட்டுக் கிளம்ப இயலாதெனில் இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்திற்கேற்ப நடக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மரணத்தை எதிர்கொள்ள மட்டும் தயாராக இருக்க வேண்டாம்; நம் எதிரி நம்மை அழிக்கும் முன்னர் நம் பெண்டிரை எல்லாம் நெருப்பிலிட்டு எரித்துவிடத் தயாராக வேண்டும். இல்லை எனில் அவர்கள் கைகளில் மாட்டிக்கொண்டு அந்தப் பெண்கள் அவதிப்படுவார்கள். அவ்வளவு ஏன்? குழந்தைகளைக் கூட நாம் அழித்துவிடவேண்டும். அந்தக் காட்டுமிராண்டிகள் கைகளால் நம் குழந்தைகள் இறப்பதைவிட நாமே கொன்றுவிடலாம்.."

"ஆனால் நான் உங்களுக்கு எதிர்காலம் பற்றிய நல்லதொரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறேன். உங்கள் ரதங்களைத் தயார் செய்து கொண்டு கிளம்பத் தயாராகுங்கள். உங்கள் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், பசுக்கள், குதிரைகள், யானைகள் அனைத்தும் தயாராகட்டும். மதுரா நகரை அதன் விதியைத் தன்னந்தனியே சந்திக்கத் தயார் செய்துவிட்டு ஒரு வீரனைப் போல் கிளம்புங்கள். அடைக்கலம் தேடி ஓடும் பலவீனமான மனிதனைப் போல் அல்ல. ஒரு அகதியாக அல்ல. புதியதொரு ராஜ்யத்தை ஸ்தாபிக்கப் போகும் அரசனைப் போல் வீரத்தோடு கிளம்புங்கள்."

1 comment:

priya.r said...

ஆமாம் ., கண்ணன் எது சொன்னாலும் சரியாக இருக்கும் ;எல்லோரும் கண்ணன் சொல்படி கேளுங்களேன்!!

பதிவுக்கு நன்றி கீதாமா