Friday, December 2, 2011

இனி வாழும் வழியென்னடி தோழி!

பால்குனி மாத ஆரம்பத்தில் அவளுக்கு ஷாயிபா அப்லவன் மூலம் செய்தி அனுப்பி இருந்தாள். தான் ஆசாரியர் ருத்ராசாரியாருடன் கிளம்பி வருவதாக ஆறுதல் கூறி இருந்தாள். இன்னொரு செய்தி மீண்டும் ஷ்வேதகேது மூலம் வந்தது. ஆனால் அனுப்பியது அவனில்லை. பலராமனின் செய்தி அது. ஆம் கிருஷ்ண வாசுதேவனின் அண்ணன் பலராமன் கீழ்க்கண்ட செய்தியை ருக்மிணிக்கு அனுப்பி இருந்தான். ஜாஹ்னு அந்தச் செய்தியை எடுத்துக்கொண்டு தன்னால் இயன்றவரை விரைந்து வந்திருந்தான். செய்தி வருமாறு:

“விதர்ப்பாவின் அரசுக் கிரீடத்தில் ஜொலிக்கும் ரத்தினங்களைப் போன்ற பெண் ரத்தினமும், பீஷ்மகனின் மகளுமான ருக்மிணிக்கு,
ஷூரர்களின் தலைவன் ஒப்புயர்வற்ற தலைவனும் ஆன வசுதேவரின் மூத்த மகனும் கிருஷ்ண வாசுதேவனின் மூத்த சகோதரனும், ஆன பலராமன் ஆசீர்வதித்து எழுதும் மடல்,
ஆசாரிய ஷ்வேதகேதுவிற்கு நீ அனுப்பிய செய்தி கிடைக்கப் பெற்றது. அருமை இளவரசி, கோவிந்தன், உன் கண்ணின் மணி போன்றவன், தன்னுயிரை ஈந்துவிட்டான். அவன் யாதவர்களின் நலத்திற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்டான். அவனுடைய விலை மதிப்பற்ற உயிரைக் கொடுத்ததின் மூலம் எங்களை இவ்வுலகில் மரணம் அழைக்கும்வரை வாழ வழி செய்து கொடுத்திருக்கிறான்.
இளவரசி, கோவிந்தன் இங்கிருந்து கிளம்பும் முன்னர் எங்களிடமிருந்து விடைபெறுகையில், அந்தக் கடைசி நிமிடத்தில் உன்னைத் தான் நினைத்திருந்தான். இந்த பூமியின் அனைத்துக்கடவுளரையும் சாட்சியாக வைத்து அவன் உன்னைத் தன் மணமகளாகத் தேர்ந்தெடுத்ததை எங்களுக்கு அறிவித்தான். தாயே, நாங்கள் அவனுக்கு செய்ந்நன்றிக் கடன்பட்டுள்ளோம். கிருஷ்ணன் எங்களுக்கு அருமையானவன் மட்டுமல்லாமல் எங்கள் உயிர் போன்றவனும் ஆவான். எங்கள் குலதெய்வமும் ஆவான். அம்மா, அப்படிப்பட்ட அவன் உன்னை எங்களிடம் ஒப்புக் கொடுத்திருக்கிறான் எனில் நீயே இனி எங்களுக்கு வாழ வழிகாட்டும் தெய்வம் ஆவாய். எங்கள் வீட்டுப் பெண்தெய்வம் ஆவாய். எங்கள் வம்சம் விருத்தி அடைய நீ எங்களை வாழ்த்த வேண்டும்.

பீஷ்மகனின் மகளே, உன் வீடு இனி எங்கள் இருப்பிடம் ஆகும். நீ எங்கள் வீட்டுப் பெண்ணாகிவிட்டாய். எங்களைக்காக்கும் காவல் தெய்வமாகிவிட்டாய். தயாராய் இரு அம்மா! நாங்கள் கிளம்பி வருகிறோம். உன்னை எவ்வகையிலேனும் மீட்டு எங்களுடன் அழைத்துச் செல்வோம். காத்திரு. எதற்கும் தயாராக இரு!”

மேற்கண்ட பலராமனின் செய்தியைப் படித்தாள் ருக்மிணி. அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோடியது அவள் கண்களிலிருந்து. முத்துப் போன்ற கண்ணீர் உருண்டோட, அவள் அவளுடைய அருமை கோவிந்தன் கடைசியாக விடைபெற்றுச் செல்கையில் கூட அவளையே நினைத்திருந்ததை நினைத்து ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாள். அவனுடைய அந்த நினைப்பாலேயே அவள் தெய்வீகத் தன்மை அடைந்துவிட்டாள். அவனுடைய ஸ்பரிசம் கூடத் தேவையாயிருக்கவில்லை. ஆஹா, பலராமன் மட்டும் வரப்போவதில்லை. உத்தவனும் வருவான். ஆசாரிய ஷ்வேதகேது வருவார். யாதவர்களில் வீரர்கள் அனைவருமே வருவார்கள். தங்கள் ரதங்களில் ஏறிக்கொண்டு அந்த அதிரதர்களும், மஹாரதர்களும் தங்கள் சாமர்த்தியத்தை இங்கே காட்டப் போகின்றனர். வந்து அவளை அழைத்துக்கொண்டு அலைகள் மோதியடிக்கும் செளராஷ்டிரக் கடற்கரையில் உள்ள யாதவர்களின் புதிய நகரத்துக்கு அவர்களின் இஷ்டமான பெண் தெய்வமாக நினைத்து ஆராதிக்கப் போகின்றனர். ஒரே நிமிடமே நீடித்த இந்த சந்தோஷம் அடுத்த கணம் தூள் தூளானது. கிட்டத்தட்ட மயங்கும் நிலைக்கு வந்துவிட்ட அவளுக்கு நிலைமையின் உக்கிரம் புரிய ஆரம்பித்தது.

அவளுடைய கிருஷ்ணன் இப்போது உயிருடன் இல்லை. பலராமன் தூக்கிச் செல்வதன் மூலம் சுயம்வரத்திலிருந்து வேண்டுமானால் அவள் தப்பலாம். ஆனால் அவள் பல புதிய மனிதர்களுக்கு இடையில் வசிக்க வேண்டும். முற்றிலும் தெரியாத மனிதர்கள்! ஆனால்….ஆனால்….. இவை எல்லாம் தூசி மாத்திரம்….அவளுடைய கோவிந்தன் மட்டும் இருந்தால் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதில் எந்த சிரமமும் இராதே. ஆனால் இப்போதோ! அவன் எப்போதோ சொல்லி வைத்துவிட்டுச் சென்றதை வைத்து அவர்கள் அவளை அங்கே வாழ அனுமதிப்பார்கள். அப்படித்தானே! ருக்மிணியின் இதயம் கொஞ்சம் “இது தவறு” என இடித்துரைத்தாலும், அவளுக்கே அவளை நினைத்து உள்ளூர வெட்கம் வந்தாலும், ஒரு அரசகுமாரியாக மாறிய அவள் கர்வம் கொண்ட மனம் “அப்படித்தான்” என்றது. ருக்மிணிக்கு இதுவே வசதியாகவும் தெரிந்தது. பலமும் ஆற்றலும் பொருந்திய இந்த யாதவர்கள் வெகு விரைவில் கிருஷ்ண வாசுதேவனையும், அவன் தியாகத்தையும் மறந்துவிடுவார்கள். அதன் பின்னர் அவள் அவர்களின் எவரையேனும் உதவிக்கு ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக்கொண்டு கல்யாணம் ஆகாமலேயே கிருஷ்ண வாசுதேவனின் விதவையாக வசித்துவரவேண்டி இருக்கும். ஒரு நாள் கூடக்கண்ணனோடு மனைவியாக வாழாமலேயே விதவையாக வாழ வேண்டி இருக்கும். ருக்மிணியின் அரச ரத்தம் வழக்கம் போல் தன் நினைப்பையே சரி எனச் சொன்னது. அவள் ஒரு இளவரசி என்பதும் அதிகாரம் செலுத்தியே பழக்கப்பட்டவள் என்பதுமே நினைவில் நின்றது. அவளுடைய சுபாவமான எதிர்ப்புக் குணம் தலை தூக்கியது. அவள் யதார்த்தத்தை உண்மையை மறந்தே போனாள். இல்லை….இல்லை. நான் எவரையும் எதிர்பார்த்து இருத்தல் என்பது ஒருக்காலும் நடவாத ஒன்றாகும். பலராமன் என்னவோ நல்லவர் தான். அவருடைய மற்ற யாதவத் தலைவர்களும் நல்லவர்களாகவே இருக்கலாம். ஆனால் அவளுடைய கோவிந்தன் இல்லாமல் அவள் அவர்களுடன் சென்று வசிப்பது என்பது ஒருக்காலும் முடியாத காரியம்.

அதே சமயம் தன் தகப்பனின் பேச்சுக்கும், சகோதரனின் வற்புறுத்தலுக்கும் இணங்கி சிசுபாலனைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் அவளால் ஒப்ப முடியாத ஒன்று. ஆகவே அவளுக்கு போஜ நாட்டில் வாழவும் வழியில்லை. உரிமையும் இல்லை. ஆயிற்று; ஏற்கெனவே தந்தைக்கு வயதாகிவிட்டது. வெகு விரைவில் ருக்மி அரசனாகி அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வான். ருக்மிக்குத் தன்னைக் கிருஷ்ணனுக்குக் கொடுக்கும் அளவிற்குப் பெருந்தன்மை எல்லாம் இருந்ததே இல்லை. ஆகையால் அவன் இப்போது பலராமனோடு தான் செல்வதை உள்ளூர விரும்ப மாட்டான். ஆனால் அதே சமயம் ருக்மி விரும்பும் சிசுபாலனிடம் தான் தன்னை ஒப்புக்கொடுக்கப் போவதுமில்லை. அவள் கிருஷ்ண வாசுதேவனின் மணமகள். அவனுக்கென நிச்சயிக்கப்பட்டவள். கிருஷ்ணன் இறந்துவிட்டாலும் அவள் என்றும் அவனுக்குரியவளே. அவளே மரணம் அடைந்தாலும் அப்படித்தான். அவள் இறந்தாலும், இருந்தாலும் அவளுடைய இடம் அவனருகேயே. அவனே இவ்வுலகை விட்டுச் சென்றதன் பின்னர் அவளிருக்க வேண்டிய இடம் இந்த பூமியல்ல. அதுவும் தன்னந்தனியாக இருக்க முடியாது. ருக்மிணி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

அதோ, கோவிந்தன் மேலுலகில் இருந்து என்னை அழைக்கிறான். எனக்காகக்காத்திருக்கிறான். அவனுடைய அன்பை வேண்டிப் பல பெண்கள் அவன் காலடியில் விழுந்தனர். ராதை, விஷாகா, ஆசிகா, ஷாயிபா. எனப் பல பெண்கள். எனினும் அவன் அவளையே தன் மணமகளாய்த் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவளை மட்டுமே. அவள் இந்த பூமியில் ஒரு சாதாரண மானுடனுக்கு மானுடப் பெண்ணாகவே பிறந்தாள்; ஆனால் கிருஷ்ண வாசுதேவன் அவளை ஒரு தேவதையாக அனைவரும் வணங்கும் தெய்வமாக ஆக்கி விட்டான். அவனைப் பொறுத்த வரையில் அவள் ஒரு தெய்வம் என்றார்களே. ஆகவே நான் அப்படியே வாழ்ந்து அப்படியே மறைந்தும் போய்விடுகிறேன். இறந்தாலும் கிருஷ்ண வாசுதேவனின் நிச்சயிக்கப்பட்ட மணமகளாக அதனால் ஏற்பட்டிருக்கும் தெய்வீகத் தன்மையோடு ஒரு தெய்வீகப் பெண்ணாகவே இறப்பேன்.

2 comments:

priya.r said...

இந்த அத்தியாயம் 125 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

ருக்மணியின் மனம் படும் பாட்டை இந்த பதிவில் தெரிந்து கொள்ள முடிந்தது

அழும் ருக்மணிக்கு ஆறுதல் சொல்ல கண்ணன் விரைந்து வர வேண்டுமே

இந்த 125 பதிவுக்கும்,தாங்கள் தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள் கீதாமா!

sambasivam6geetha said...

தொடர்ந்து பின்னூட்ட மழை பொழியும் ப்ரியாவுக்கு வாழ்த்துகளும் நன்றியும்