சற்று நேரம் அர்ஜுனன் தான் பேசவேண்டியதை யோசித்துப் பின்னர் பேசத் தொடங்கினான். அவன் நிதானமாகப் பேசுவதில் இருந்து தான் அதன் முக்கியத்துவத்தை உத்தவன் உணர்ந்து கொண்டான். “உத்தவா, எங்கள் பெரியப்பாவின் மக்களுக்கு எங்களைக் கண்டால் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மனப்பூர்வமாய் வெறுக்கின்றனர். அதுவும் எங்கள் மூத்தவரான யுதிஷ்டிரர் யுவராஜா ஆனதை துரியோதனனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்குச் சேரவேண்டிய உரிமையை அவர் பிடுங்கிக் கொண்டதாகவே நினைக்கிறான். தன் தந்தை திருதராஷ்டிரன் இப்படிப் பிறவிக் குருடாகப் பிறந்ததை அவனால் ஏற்கவும் முடியவில்லை; அதற்காகத் தந்தையை அவன் மன்னிக்கப் போவதும் இல்லை. ஏனெனில் அவர் பிறவிக் குருடராகப் பிறந்ததன் காரணமாகவே அரசுக்கட்டில் ஏறமுடியவில்லை. எங்கள் தந்தையான பாண்டு அரசரானார். திருதராஷ்டிரனுக்குச் சேரவேண்டியதைப் பாண்டு பிடுங்கிக் கொண்டு எங்களிடம் கொடுத்துவிட்டார் என்றே எண்ணுகிறான். “ அர்ஜுனன் மீண்டும் சிரித்தான்.
“ம்ம்ம்ம்… உன் தந்தை தானே குருவம்சத்தில் கடைசி அரசராக இருந்தார். மக்கள் போற்றும் நல்ல அரசராகவும் ஆட்சிபுரிந்தார். “ உத்தவன் தொடர்ந்தான். “நம் நாட்டின் அரசகுல வழக்கப்படி யார் அரசராக இருந்தார்களோ அவர்களின் மூத்தமகனே அடுத்த அரசனாக முடியும்; ஆகவேண்டும். அதோடு வயதில் மூத்தவரே அரியணை ஏறுவதும் வழக்கம். அப்படிப் பார்த்தாலும் யுதிஷ்டிரனுக்கே அந்தத் தகுதி இருக்கிறது. ஆகவே இது முறைகேடானது அல்ல.”
“உண்மைதான். அதனால் தான் தாத்தா பீஷ்மர் அவர்கள் மூத்தவனான யுதிஷ்டிரனை யுவராஜாவாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் எங்கள் பெரியப்பாவின் குமாரர்களுக்கு இது பிடிக்கவில்லை; அவர்கள் யுதிஷ்டிரனை ஒத்துக்கொள்ளவும் இல்லை.” அர்ஜுனனுக்குத் தன் தகப்பனைக் குறித்துக் கொஞ்சம் பெருமையும் ஏற்பட்டது.
“எப்படிப் பார்த்தாலும் நீங்கள் பாண்டுவின் புத்திரர்களே அரசாளத் தகுதி படைத்தவர்கள். “ உத்தவன் கூறினான். “பிரச்னையே அது தான்.” அர்ஜுனன் புன்னகை புரிந்தான். “எங்கள் பெரியப்பாவின் குமாரர்கள் எங்களை வெறுக்கின்றனர். எங்கள் திறமையை வெறுக்கின்றனர். நாங்கள் எல்லாவற்றிலும் திறமைசாலிகளாக இருப்பதையும் வெறுக்கின்றனர். நாங்கள் ஹஸ்தினாபுரத்துக்காக நடந்த சில போர்களில் கலந்து கொண்டு ஹஸ்தினாபுரத்துக்கு செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்ததை அவர்களால் சகிக்க முடியவில்லை. இதனால் நாட்டு மக்களுக்கு எங்கள் மேல் அளவற்ற அபிமானம் இருப்பதையும் அவர்களால் பொறுக்க முடியவில்லை. குறிப்பாக பீமனை அவர்கள் எப்படியேனும் கொல்லவே முயன்றார்கள். ஏனெனில் ஒவ்வொரு முறையும் எங்களை அவர்கள் அவமானம் செய்ய நினைத்தபோதெல்லாம் பீமன் அவர்களை முட்டாளாக்கிவிட்டுச் சிரிப்பான். “
“அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அல்லவா?” உத்தவன் கொஞ்சம் நடுநிலையோடு பேசினான். “ஏனெனில் நீங்கள் ஐவருமே திறமைசாலிகளாகவும், தைரியசாலிகளாகவும், அனைவராலும் விரும்பப் படுபவர்களாகவும் இருக்கின்றீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்கே பொறாமை வருகிறதே.”
“சகோதரா, உத்தவா! நாங்கள் அரச குடும்பத்தில் பிறக்காமல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். “ பெருமூச்சு விட்டான் அர்ஜுனன். “அப்போது நாங்கள் ஐவரும் துவாரகைக்கு வந்து உன்னோடும், கிருஷ்ணனோடும், பலராமனோடும் எங்கள் வாழ்நாட்களை கழிக்கலாம். இன்பமயமாக இருந்திருக்கும்.”
“நீங்கள் எங்களைத் தேடி வந்தால் நாங்கள் கட்டாயமாய் முழுமனதோடு உங்களை வரவேற்போம்.” உத்தவன் குரலில் ஒரு ஆதுரம் தொனித்தது. “அதிலும் கிருஷ்ணனுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உன்னை அதிகமாய் நேசிக்கிறான். உன்னுடன் கழித்த இனிய நாட்களை அவன் மறக்கவில்லை.”
அர்ஜுனன் மன்னிப்புக் கேட்கும் குரலில், “பீமனுக்கு கிருஷ்ணனும், பலராமனும் செய்திருக்கும் உதவிகளை நாங்கள் மறக்க முடியுமா? மதுராவில் இருக்கையில் கழிந்த அந்த ஆனந்தமயமான நாட்கள். நானும், கிருஷ்ணனும் அருகருகே படுத்துக் கொண்டு இரவு முழுதும் பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் விண்ணில் சுக்கிரோதயம் கூட ஆகிவிடும். அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.” அர்ஜுனன் கண்கள் அந்தப் பழைய நினைவுகளில் ஆழ்ந்தது. “பீமனின் வெகுளித்தனத்தையும், அவனுடைய நல்ல குணத்தையும் மறக்க இயலுமா? அவனும் எங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறான்.” உத்தவன் ஆமோதிக்க, அர்ஜுனன் கொஞ்சம் யோசனையோடு கூறினான். “ஹஸ்தினாபுரத்தை விட்டு நாங்கள் எப்போதோ வெளியே செல்ல எண்ணினோம். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் தாத்தா பீஷ்மரின் அன்பு எங்களைக் கட்டிப் போட்டு வருகிறது. நாங்கள் இங்கிருந்து கிளம்பினால் அவர் மனம் உடைந்து போவார்.”
“ஏன்? உங்கள் பெரியப்பா குமாரர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவரால் இயலவில்லை எனில் உங்களுக்கென ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்துத் தனியாக உங்களை அனுப்பி வைக்கலாமே? அவருக்கு அத்தகைய அதிகாரம் இல்லையா என்ன? இம்மாதிரி தினம் தினம் நீங்கள் படும் அவஸ்தைகளுக்கும், மன வேதனைகளுக்கும் ஒரு முடிவு வருமே! அவர் அதைச் செய்யலாமே!” உத்தவன் கொஞ்சம் கோபமாகவே சொன்னான்.
No comments:
Post a Comment