Monday, October 15, 2012

சத்யவதியின் மனோதிடம்--தொடர்ச்சி!


எந்தவிதமான தடங்கல்களோ, யோசனைகளோ இல்லாமல் சத்யவதி நேரடியாகக் கண்ணனிடம் விசாரித்தாள்:”வாசுதேவா, நாளை நீ காம்பில்யத்துக்குப் பயணமாகப் போவதாய்க் கேள்விப் பட்டேன். “அவள் குரலின் வருத்தம் கண்ணனைக் கவர்ந்தது.  “நீ ஹஸ்தினாபுரம் வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.  ஆனால் வேறு ஏதேனும் சந்தோஷமான நிகழ்வுக்காக வந்திருக்கலாம்.  இப்படி துக்கம் விசாரிக்க வேண்டி வந்திருக்க வேண்டாம்.  ஒரு மாபெரும் பிரச்னையில் நாங்கள் இப்போது மூழ்கி இருக்கிறோம்.  இதிலிருந்து எப்படி வெளிவரப் போகிறோம் எனப் புரியவில்லை.”

“ஆம், அன்னையே, நானும் பாண்டவ சகோதரர்கள் ஐவராலும் பரதனால் ஏற்படுத்தப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் புனர்வாழ்வு அடையப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  மீண்டும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அவர்களால் ஏற்படும் எனவும் எண்ணி இருந்தேன்.”

“ஆம், வாசுதேவா, நானும் அவ்வாறே நினைத்தேன்.  ஆனால் கடவுளின் விருப்பம் வேறு மாதிரி இருக்கிறது.  என்ன செய்ய முடியும்!” தொடர்ந்தாள் சத்யவதி.  “வாசுதேவா, நீ துவாரகை சென்றதும் உன் தந்தைக்கும், தாய்க்கும், மற்றும் உன் அண்ணன் பலராமனுக்கும் எங்கள் கனிவான விசாரணைகளைச் சொல்லு.  உன் தந்தையைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகச் சிலரே.  ஏன் உன் தாயும் அதிர்ஷ்டம் செய்தவள் தான்.  உன் பெற்றோரைப் போல் அதிர்ஷ்டம் செய்தவர்கள் மிகக் குறைவு.  நீயும், பலராமனும் அவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததை விடவும் மாபெரும் அதிர்ஷ்டம் வேறென்ன வேண்டும்!”  சத்யவதியின் குரல் தழுதழுத்தது.  அவள் பாசத்தோடும், நேசத்தோடும் வளர்த்து வந்த பாண்டவர்களின் நினைவுகள் அவள் மனதில் வந்து அலைகளைப் போல் மோதின.  அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என எண்ணினாள்.  தன்னைத் தானே சமாளித்துக்கொள்ளப் பார்த்தாள்.

“மாட்சிமை பொருந்திய தாயே, தங்கள் அன்பான விசாரிப்புக்களை நான் என் பெற்றோரிடமும், அண்ணனிடமும் தெரிவிக்கிறேன்.  உங்கள் அன்பான விருந்தோம்பலையும் சொல்லியே ஆகவேண்டும்.”

“கண்ணா, உனக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?”

“ஒரு மகன் இருக்கின்றான் தாயே!”
“யார் மூலம், விதர்ப்ப இளவரசி ருக்மிணி மூலமா?”
“ஆம் தாயே.”
“பெயர் என்ன?”
“ப்ரத்யும்னன்”
“அவனுக்கு என் ஆசிகளைத் தெரிவித்துவிடு கிருஷ்ணா!”
“தங்கள் ஆணைப்படியே தாயே!” கிருஷ்ணன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டான்.
“நாங்கள் உனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம், வாசுதேவா, பானுமதியை மட்டும் நீ காப்பாற்றி இருக்காவிட்டால்!”  இப்போது ஒரு மஹாராணியின் கம்பீரம் அவள் குரலிலும் புகுந்து கொண்டதைக் கண்ணன் ஆச்சரியத்துடன் கவனித்தான்.  தோரணையும் மாறி விட்டது.  “குரு வம்சமே உனக்குக் கடமைப்பட்டிருக்கிறது.  நீ குருவம்சத்தின் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறாய்.”
“ஓஓ, தாயே,  அதெல்லாம் எதுவும் இல்லை,  உங்கள் வரையில் இந்த விஷயம் வெளிவந்துவிட்டதா?”
சத்யவதி புன்னகை புரிந்தாள்:  “வாசுதேவா, இது என் குடும்பம்.  நான் உயிருடன் இருக்கும்வரையில் இதன் சுக, துக்கங்களில் நான் பங்கெடுக்காமல் இருக்க முடியுமா?  என் கவனிப்பைத் தான் நான் தராமல் இருக்கலாமா?  மூத்தவளான என் கவனிப்பு இருந்தே ஆகவேண்டும் இல்லையா!  நாங்கள் உனக்கு எப்படித் திரும்ப இந்த நன்றியைச் செலுத்தப் போகிறோம் என்பதுதான் புரியவில்லை.”

“ஓ, தாயே, இதைக் குறித்துச் சிந்தனையே செய்யாதீர்கள்.  இதையே யோசித்துக் கொண்டிருந்தால் சூழ்நிலை தலைகீழாகவும் மாறிவிடலாம்.   இதை முற்றிலும் மறந்துவிடுங்கள்.  பாவம், பானுமதி,  ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்.   கணவன் சொல்வதைத் தட்டக்கூடாது என்ற பாடம் மட்டுமே அறிந்திருக்கிறாள்.  அவள் மேல் தவறு எதுவும் இல்லை.  அவளைக் குற்றம் சொல்லாதீர்கள்.   அவள் மனது தூய்மையானது.  ஒருநாள் மஹா பெரிய அறிவாளியாகவும், சிறந்ததொரு பெண்மணியாகவும் வருவாள்.  பொறுத்திருந்து பாருங்கள்.”

“இது துரியோதனனின் வேலைதான் என்பதை நீ நிச்சயமாக அறிந்திருக்கிறாயா?”

“தாயே, இதன் பின்னர் யார் இருக்கிறார்கள், அல்லது யார் இருந்தார்கள் என்பதை நான் அறிய மாட்டேன்.  ஆனால் அவள் சிறு பெண்ணாக இருந்தபோதில் இருந்தே, என்னைக் குறித்துக் கேள்விப் பட்டு என் பரம ரசிகையாக இருந்து வந்திருக்கிறாள்.  இதை நன்கறிந்த யாரோ அவளை நன்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டனர். என்னை அவர்கள் பக்கம் இழுக்க ஒரு வலை விரித்துப் பார்த்திருக்கிறார்கள்.”
“உன்னை இழுக்க வலை விரித்தார்களா?  என்ன காரணத்துக்காக?”
“ம்ம்ம்ம் பட்டத்து இளவரசனுக்குத் துணைபோகவேண்டி இருக்கலாம்.  அதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்.”
“அப்படியா? உண்மையாகவா சொல்கிறாய்?”
“ஆம், தாயே,  இது உண்மையே.  ஆனால் இந்த கொடுமைக்கு எல்லாம் பானுமதியைத் தேர்ந்தெடுத்தது தவறு.  அவளால் இதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு அன்பான இளைய சகோதரியாக எனக்குப் பரிசுகள் அனுப்பி வைத்திருக்கிறாள்.  நானும் ஏற்றுக் கொண்டு அவளுக்கு உண்மையானதொரு சகோதரனாக இருப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளேன்.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு நன்றி...

ரொம்ப நாட்கள் ஆகி விட்டதே... அங்கும் மின்வெட்டு அதிகமோ...?

sambasivam6geetha said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், இங்கு மின்வெட்டு அதிகம் தான். மின்சாரம் கிடைக்கும் நேரம் பார்த்துக்கொண்டு வீட்டு வேலைகளை முடிக்கவே சரியாய் இருக்கு. :(((

ஆனால் நான் கடந்த ஒருமாதமாகப் பிள்ளையார் சதுர்த்திக்கு அப்புறமாய் ஊரில் இல்லை. டெல்லி போயிருந்தேன். என்னோட எண்ணங்கள் பதிவிலே பாருங்க; புரியும். :)))))

ஸ்ரீராம். said...

ஒரு குடும்பத்து மூத்த உறுப்பினராகவும், கம்பீரம் சேர்த்து மகாராணியாகவும் சத்தியவதி பேசுவது அழகு.