Wednesday, November 7, 2012

கிருஷ்ணரைக் கண்ட கிருஷ்ணன்! :)


உத்தவனுக்கு நாகர்கள் தலைவன் ஆர்யகனையும் தங்கள் தேடுதலில் சேர்க்க எண்ணம் ஏற்பட்டது.  கிருஷ்ணனிடம் அதைக் குறித்துச் சொன்னான்.  ஆனால் எந்த அளவுக்கு அவனை நம்புவது எனக் கண்ணனுக்குக் குழப்பம் இருந்தது.  ஆனால் காட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கும் நாகர்கள் நன்கு அறிவார்கள் என்பதால் அவர்கள் தேடுவது இன்னும் எளிது என்றான் உத்தவன்.  அப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டுமெனில் எடுத்தே ஆகவேண்டும்;  அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சமாளிக்க வேண்டும் என இருவரும் முடிவெடுத்தார்கள்.  உத்தவன் தானும் காட்டுக்குள் சென்று பாண்டவர்களைத் தேடுவதாகக் கூறினான்.  அதோடு தான் நேரே நாககூடம் செல்வதால் ஆர்யகனை நம்புவதா வேண்டாமா எனச் சோதிக்கவும் வசதியாக இருக்கும் என்றும் கூறினான்.   ஆனால் கண்ணனோ, குறும்புப் புன்னகையோடு, “உத்தவா, நான் உன்னைக் காம்பில்யத்தில் என்னோடு வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.” என்றான்.

கிருஷ்ணனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட உத்தவனும் சிரித்துக் கொண்டே, “நான் எதுக்கு கிருஷ்ணா?  என்னை விட சாத்யகி இளமையானவன்;  வலுவானவன்.  தன் நண்பனாகிய உன் மனதில் ஓடும் புனிதமான எண்ணங்களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுவான்.  நீ அவனிடம் கேட்கக் கூட வேண்டாம்.”  என்றான்.  “நான் உன்னை ஏன் அழைக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டாயே, நீ மிகவும் தந்திரக்காரன் உத்தவா!’ கண்ணன் கலகலவென நகைத்த வண்ணம், “திரெளபதியை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.”  என்றான்.

“ஆஹா, உன் இடத்தில் நானா?  யார் ஒப்புக் கொள்வார்கள்?” உத்தவனுக்கும் அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது.  மேலும் தொடர்ந்து, “கிருஷ்ணா, நான் ஒரு சாமானியமான மனிதன்.  எனக்கு எந்தவிதமான அபிலாஷைகளும் இல்லை.  அதுவும் திருமணத்தில்.  மேலும் திரெளபதியைப் போன்ற ஒரு தீவிரமான கொள்கைப் பிடிப்புக் கொண்ட திடமான உறுதி படைத்த இளவரசியை மணப்பது எனில்  என்னால் இயலாது.  உன்னைப் போல் காட்டில் வளர்ந்த பெண்களை அடக்கி ஆளும் வல்லமை என்னிடம் இல்லை.”

“உத்தவா, எத்தனை நாட்களுக்கு நீ உன்னை என்னிடம் ஒப்புக் கொடுத்திருப்பாய்?  நானும் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டியவன் அல்லவா?  உன் சொந்த வாழ்க்கையை என்னைக் கவனிப்பதிலேயே எத்தனை காலம் கழிக்க முடியும்?  எப்பொழுதும் நீ என்னைக்  கவனித்துக் கொண்டிருக்க முடியாது.  சில சமயங்களில் நானும் உன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.  இல்லையா?”

“என்னைப் பற்றி நினைக்காதே.  இப்போது நாம் செய்ய வேண்டியது பாண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றே.  வேறு சிந்தனைகள் தேவையில்லை.”

“உத்தவா, “ கண்ணன் அழைத்த தொனியில் ஏதோ இருப்பதை உணர்ந்து கொண்ட உத்தவன் என்னவென நிமிர்ந்து பார்க்கக் கண்ணன் அதற்கு, “சகோதரர்கள் ஐவரும் ஒரு வேளை உயிருடன் இருந்தார்களெனில்…….” என இழுத்தான்.  “இருந்தால்?.....” உத்தவன் மேலே தூண்ட, “  துருபதன் மட்டும் அவர் மகளை…….”

“அர்ஜுனனுக்குக் கொடுத்தால்…..” என உத்தவன் முடித்தான்.  “ம்ம்ம்ம்…. இது என் ஆசைதான்…..நடக்குமோ, நடக்காதோ, எங்கே எனக்குத் தோன்றவில்லை.” என்றான் கண்ணன்.  அவர்களின் படகுப் பயணத்தின் ஓர் நாள் நதிக்கரையில் அவர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்கும் கோஷத்தைக் கேட்க நேர்ந்தது.  வேதங்களின் உச்சரிப்பும், அதை கோஷித்ஹ குரல்கள் இணக்கமாகச் சேர்ந்து ஒலித்த சப்தம் ஒரு இன்னிசையாக ஒலித்ததையும் கேட்டு ஆச்சரியப் பட்டான்.  விசாரிக்கையில் அது தெளம்ய மஹரிஷியின் ஆசிரமம் எனத் தெரிய வந்தது.  அந்தத் தீர்த்தமும் உத்கோசக தீர்த்தம் எனப்பட்டது என்பதையும் அறிந்தான்.   சிறிது நேரத்துக்கெல்லாம் கண்ணன் ஒரு பெரிய படகுத்துறையை அடைந்ததைக் கவனித்தான்.  அதோடு அங்கே பல பெரிய படகுகளும், சிறிய படகுகளும் நிறுத்தப் பட்டிருப்பதையும் கண்டான்.  அந்தப் படகில் வந்தவர்கள் தெளம்ய மஹரிஷியின் ஆசிரமத்தில் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான்.  அவர்கள் படகும் கண்ணன் வேண்டுகோளுக்கிணங்கி அங்கே நிறுத்தப் பட்டது.  படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார்கள்.  அவர்கள் கரையிறங்கியதும் வேத கோஷம் கேட்ட திசையை நோக்கிச் சென்றனர்.  சிறிது நேரத்தில் ஒரு  திறந்த வெளியில் ஒரு பெரிய குடியிருப்பைக் கண்டான்.  அங்கே பல் குடிசைகள் சிறிதும், பெரிதுமாய்க் காணப்பட்டன.  கத்தாழைச் செடிகளும், முட்புதர்களும் சுற்றிலும் வேலியாக அரண் கட்டி இருந்தன.  குடிசைகளுக்கு நடுவே இருந்த திறந்த வெளியில்   விண்ணை நோக்கி எரிந்து கொண்டிருந்த அக்னியும், அதைச் சுற்றி அமர்ந்தவர்களும் தென்பட்டனர்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பாலரும் அங்கே இருந்தனர்.  அவர்களில் நாகர்களும் இருந்தனர்,  நிஷாதர்களும் இருந்தனர்.  அங்கிருந்த மற்றவர்களில் இருந்து நாகர்களின் அலங்காரமும், நிஷாதர்களின் அலங்காரமும் தனித்துத் தெரிந்தது.  சிலர் கைகளில் கோடரி, கதை போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்தனர்.  பெண்கள் குழந்தைகளைச் சுமந்து கொண்டு வந்திருந்தனர்.  அவர்களில் நோய்வாய்ப்பட்டவர்களும் நிறையக் காணப்பட்டனர்.

தெளம்ய மஹரிஷிக்குக் கண்ணன் வரவு அறிவிக்கப் பட்டது.  கண்ணன் தன் ஆசிரமம் தேடி வந்ததைக் கண்டு ரிஷிக்கு மிகவும் சந்தோஷம்.  ஏற்கெனவே ஸ்வேதகேது கண்ணன் காம்பில்யம் செல்லும் வழியில் தெளம்ய ரிஷியின் ஆசிரமத்துக்கு வருவான் எனச் சொல்லி இருந்தான்.  ஆகவே ரிஷியும் கண்ணனை நேரே சந்திக்க ஆவலுடன் இருந்தார்.  இப்போது கண்ணனைக் கண்டதும், அவன் வரவால் தனக்கு மிகப் பெரிய கெளரவம் கிடைத்ததாகக் கருதினார்.  அவரின் ஆனந்தம் எல்லை மீறியது.  கிருஷ்ணனையும், அவன் தோழர்களையும் ஆசீர்வாதம் செய்த பின்னர் அங்கிருந்த யாக குண்டத்தின் முன்னே அமர்ந்த வண்ணம் மந்திரங்களை ஆழ் மனதிலிருந்து ஸ்பஷ்டமாக உச்சரித்துக் கொண்டிருந்த ஒரு மஹா பெரியவரிடம் அழைத்துச் சென்றார் தெளம்ய ரிஷி.

"வாசுதேவா, இந்தத் தீர்த்தம் மட்டுமின்றி நாங்களும் அதிர்ஷ்டக்காரர்களே.  இதோ இவர் யார் தெரிகிறதா?  வேத வியாசர்.  கண்ணா, நீயும் அதிர்ஷ்டக்காரனே.  வேத வியாசர் விஜயம் செய்திருக்கும் சமயம் நீயும் இங்கே வந்திருக்கிறாய்."  என்றார்.

கண்ணன் வியப்பின் உச்சிக்கே போனான் என்று சொன்னால் அது மிகையல்ல.  இது வரையிலும் இப்படி ஒரு ஆச்சரியத்தை அவன் சந்தித்ததில்லை.  "மஹரிஷி, என்றும், ஆசாரியர் என்றும் அனைவராலும் மிகவும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட வேத வியாசரைக் கண்ணன் சந்தித்தே விட்டான்.  தர்மத்தின் இருப்பிடம், அதன் அஸ்திவாரம், அனைத்து முனிவர்களும், ரிஷிகளும், மாணவமணிகளும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடும் ஒருவர்.  இதோ அவர் முன்னிலையில் தான் நிற்கிறோமே.  கண்ணன் மிக மரியாதையுடன் சாஷ்டாங்கமாக வேத வியாசர் முன்னால் விழுந்து நமஸ்கரித்தான்.  வேத வியாசரின்  அகன்ற கண்கள் ஒரு கணம் வியப்பைக் காட்டின;  மறுகணம் அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாகக் கண்களில் கருணை ததும்பியது.  கிருஷ்ணன் தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டான்.

"நான்,  வாசுதேவ கிருஷ்ணன்,  ஷூரர்களின் தலைவரான வசுதேவரின் மகன், தங்களை வணங்குகிறேன், மஹரிஷியே!  இதோ இவன் உத்தவன், என் சித்தப்பா தேவபாகனின் மகன்.  இவன் என் நண்பன் யுயுதானன், சாத்யகனின் மகன்  சாத்யகி."


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

தலைப்புதான் புரியவில்லை.

sambasivam6geetha said...

வாங்க டிடி, தொடர்வதற்கு நன்றி.

ஸ்ரீராம், வியாசருக்கு வியாசர் என்ற பெயர் பின்னாட்களில் தான் ஏற்பட்டது. அவர் பெயர் க்ருஷ்ண த்வைபாயனர்.

வ்யாஸாய விஷ்ணுரூபாய! :))))))

ஸ்ரீராம். said...

நன்றி... நான் இன்னும் படிக்கணும்!! :)) நீங்கள் சொன்னபிறகு கொஞ்சம் நினைவுக்கு வருகிறது!

sambasivam6geetha said...

நன்றி... நான் இன்னும் படிக்கணும்!! :)) //

வாங்க ஸ்ரீராம், இப்போ என்னோட முறை. எனக்கு நீங்க சொல்றது புரியலை. வியாசர் புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றைத் தொகுத்ததாலேயே வியாசர் என அழைக்கப் பட்டார். இதை எங்கே படிச்சேன்னு நினைவில் இல்லை. :(நிறையப் படிக்கிறதாலே ஏற்படும் குழப்பம் இது!:(((

திரெளபதிக்கும் கிருஷ்ணா/ கிருஷ்ணை என்றே பெயர். துருபதன் மகள் என்பதால் திரெளபதி என அழைக்கப் பட்டாள். :))))) கரு நிறத்து அழகி. :))))

ஸ்ரீராம். said...

'நீ இன்னும் வளரணும் தம்பி....' என்ற அர்த்தத்தில் என்னை நானே சொல்லிக் கொண்டேன்.. இன்னும் நிறையப் படிக்கணும் அரைகுறை அறிவு வேலைக்காகாது என்று அர்த்தம்! (ம்... என் வாயாலேயே சொல்லிக் கேட்கணும் உங்களுக்கு....:)))]

sambasivam6geetha said...

ஹிஹிஹி, நிஜம்மாவே புரியலை. :)))

நீ இன்னும் வளரணும் தம்பி...//

காம்ப்ளான் குடிங்க. :))))))))