Monday, February 18, 2013

கண்ணனும், நண்பர்களும்!


“ஏன் கண்ணா?” என்று சாத்யகி கேட்க, கண்ணன்,  “ நாம் இப்போதைக்கு இந்தப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளாமல் தப்புவதற்குத் தான் அது உதவும். ஆனால் நீண்ட காலத்துக்கு உதவாது.  மேலும் ஆர்யவர்த்தத்தின் அழிவுக்கும்  காரணம் ஆகிவிடுவோம்.  இந்த  வெறுப்புமயமான மனிதர்களின் அந்தரங்கப் பழிவாங்கலில்  இருந்து தப்பலாம். ஆனால்  அவர்கள்  ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு மொத்த  ஆர்யவர்த்தத்தின் அழிவுக்கே காரணமாகிவிடுவார்கள்.  உலக க்ஷேமத்துக்காக நம் முன்னோர்கள் மிகவும் பாடுபட்டுக் கட்டிய இந்த கம்பீரமும், நேர்மையும், அழகும் பொருந்திய தர்மம் என்னும் கட்டிடம் தூள் தூளாகிவிடும்.  எங்கும் வன்முறையும், வெறுப்பும், பழிவாங்கலுமே முன் நிற்கும்.  மனிதர்கள் ஒருவரை ஒருவர் எவ்வகையிலேனும் பழி தீர்த்துக் கொள்ளவே முனைவர்.  எங்கெங்கு காணினும் ஒழுக்கமின்மையே முன் நிற்கும்.  ஒழுக்கத்தைக் குறித்து எவரும் சிந்திக்கக்கூட மாட்டார்கள்.”  என்றான் கண்ணன்.

“கண்ணா, என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை.  பாரத வர்ஷத்தின் இந்த வட பாகத்திலிருந்து பிரிந்து நாம் மேற்குக் கடல் பக்கம் நிம்மதியாக வாழ்வதால் மொத்த உலகும், மனிதர்களும் பாதிக்கப்படுவது எவ்வாறு?”

“இல்லை சாத்யகி, இல்லை.  இந்த வெறுப்பின் ஆழத்திலிருந்து நம்மை நாம் பிரித்துக் கொள்ள இயலாது.  அது சரியும் இல்லை.  வெறுப்பை எல்லாம் மாற்றி அன்புமயமாக்குதலே நம் கடமை.  அதை வெல்வதிலே தான் நம் திறமையும் உள்ளது.  ஒருவேளை இந்தக் கடமையை நாம் ஆற்றும் சமயம் நாமே முழுவதும் அழிந்து போகவும் நேரிடலாம்.  ஆனால் நாம் அதற்கெல்லாம் பயப்படக் கூடாது.  இறைவன் நமக்கு இட்ட கட்டளை இங்கு தர்மத்தை நிலை நாட்டுவது தான்.    இந்த மாபெரும் பணியைச் செய்கையில் நமக்கு இறப்பு நேரிடுமெனில் நாம் அதை முன்னின்று வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும்.   இதை விட்டு பயந்து ஓடுவது சரியில்லை.  அப்படி நாம் இறந்தாலும், நாம் எவ்வகையிலேனும் தர்மத்தை நிலை நாட்டி விட்டே இறப்போம்.  நமக்குப் பின்னர் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு வலிமை மிக்க பாரம்பரியத்தை விட்டுச் செல்வோம்.  பின்னால் புதியதொரு  ரக்ஷகன் தோன்றலாம்.  நாம் விட்டுச் சென்ற பணியை அவன் முடிப்பான். “

“இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுகிறாய் கிருஷ்ணா?” ஷ்வேதகேது கேட்டான்.

“இப்போது எனக்கு நம்பிக்கையின் ஒரு கீற்றுக் கூடத் தென்படவில்லை.  நான் இளவரசியைச் சந்தித்த பின்னர் ஒருவேளை நம்பிக்கை ஒளியே தென்படலாம்.”

சிறுபிள்ளைத்தனமாக நகைத்தான் சாத்யகி.  தொடர்ந்து, “நாம் நம்பிக்கையின் ஒளியை முனிவர்களில் சிறந்தவரான முனிசிரேஷ்டர் வியாசரிடம் காண முடியவில்லை.  மன்னன் துருபதனிடமும் காண முடியவில்லை. இப்போது நாம் அந்த நம்பிக்கையின் கீற்றாவது ஒரு அழகிய இளம்பெண்ணான இளவரசியிடம் கிடைக்கும் என நம்புகிறோம்.  பிரபுவே, கண்ணா,  நீங்கள் விருந்தாவனத்தில் எப்படி இருந்தீர்களோ அதிலிருந்து சற்றும் மாறியதாகத் தெரியவில்லை. “

கிருஷ்ணனுக்குக் கோபம் வரவில்லை.  மாறாக உற்சாகத்துடன் சிரித்தான்.  “சாத்யகி,   மாணவர்களின் ஊக்கத்தைப் பொறுத்தே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையில் விநயம்  ஏற்படும்.   இது ஒரு கெட்டிக்கார மனிதனிடம் இருந்து வருவதை விட ஒரு பெண்ணிடம் இருந்தும் வரலாம்.  வரும்.  அடிக்கடி இப்படி ஏற்படுகிறது.  திரெளபதியின் மூலம் ஏதேனும் நம்பிக்கை ஒளி கிடைக்கிறதா எனப் பார்க்கப் போகிறேன்.”

“தயவு செய்து அவளை உன் வாழ்க்கைத் துணையாக ஏற்க வேண்டாம் கண்ணா.  அவள் பிறப்பிலிருந்து இன்று வரை வெறுப்புக்கடலில் மூழ்கிப் பழிவாங்கும் எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.”  சாத்யகி கெஞ்சினான்.

“நம்பிக்கை இழக்காதே சாத்யகி.   நான் பார்த்துப் பேசியதன் பின்னரும் திரெளபதி வெறுப்புக்கடலில் மூழ்கிப் பழி வாங்கும் நோக்கில் இருந்தாளெனில் நான் தோல்வி அடைந்தவன் ஆவேன். அனைவரிடமும் நீங்கள் கூறுவதை நான் நம்புகிறேன்.  அது வெறும் வாய்ப் புகழ்ச்சியாக இருந்தாலும்; “ கண்ணன் சிரித்தபடி, “கண்ணன் இருக்குமிடத்தில் தர்மம் இருக்கும். என நீங்கள் அனைவரும் கூறுவீர்கள் அல்லவா?  யதோ கிருஷ்ணா,  ததோ தர்மா!”

அனைவரையும் விட ஆர்வத்தில் தூண்டப் பட்ட திருஷ்டத்யும்னன் அன்று மாலை கண்ணனைச் சந்திக்க வந்தான்.  முதலில் அவன் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.  அன்று மாலை மன்னனால் விருந்தாளிகளோடு கலந்து கொள்ள இயலாது.  திடீரென நோய்வாய்ப் பட்டுவிட்டார்.  அன்று மாலை திருஷ்டத்யும்னனால் கூட விருந்தாளிகளைக் கவனிக்கவோ உபசரிக்கவோ இயலாது.  ஷிகண்டினின் மாமனார் ஆன ஹிரண்யவர்மர் முக்கியமான ஆலோசனைகளுக்காக தூதர்களை அனுப்பியுள்ளார்.  விஷயம் மிகவும் அவசரமும், முக்கியத்துவமும் நிறைந்தது.  மாட்சிமை பொருந்திய துவாரகையின் விருந்தாளிகளுக்கு ஆக்ஷேபணை இல்லை எனில் இன்று மாலை எங்களால் உங்களை உபசரிக்க இயலாமையைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.  இதுவே திருஷ்டத்யும்னன் கொண்டு வந்த செய்தி.  கிருஷ்ணனுக்கு எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல்  ஒரு மன்னின் தூதர்கள் வந்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.  எனினும் அவனும் அன்று ஓய்வையே நாடியதால் திருஷ்டத்யும்னனுக்கு சம்மதம் கூறினான்.  ஆனால்…….ஆனால்…. கண்ணன் மனதை ஏதோ உறுத்தியது.  இந்த ஷிகண்டினின் விஷயத்தில் ஏதோ மர்மம் உள்ளது.  எல்லாமே ஒரு மர்மமான சூழ்நிலையில் பரம ரகசியமாக நடப்பதாகத் தோன்றியது.  என்னவாக இருக்கும்??  எதுவாக இருந்தாலும் இது கண்ணனுக்கு அவசியம் இல்லை.  ஆம், அவசியமே இல்லைதான்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// மாணவர்களின் ஊக்கத்தைப் பொறுத்தே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையில் விநயம் ஏற்படும் ///

இன்றைய நிலையில் இது கூட இல்லை...!

sambasivam6geetha said...

வாங்க டிடி, ஆமாம், இன்றைய நிலையில் ஆசிரியர், மாணவர்க்கிடையேயான உறவுமுறையே சரியில்லை. :(

ஸ்ரீராம். said...

'நமக்கென்ன' என்று போகாமல் இருக்கக் காரணம் சொல்லும் கண்ணனின் பேச்சில் தர்மம் நிற்கிறது. தொலைநோக்குத் தெரிகிறது.

//கிருஷ்ணனுக்குக் கோபம் வரவில்லை. மாறாக உற்சாகத்துடன் சிரித்தான். “சாத்யகி, மாணவர்களின் ஊக்கத்தைப் பொறுத்தே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையில் விநயம் ஏற்படும்//

ஆஹா....

ஷிகண்டினின் மாமனார்...?

sambasivam6geetha said...

ஆமாம், ஷிகண்டினின் மாமனார் தான். கொஞ்சம் பொறுங்கள். ஷிகன்டின் பாத்திரத்தைத் தர்க்கரீதியாக அணுகலாம்.