“நேர்மையின்
வடிவம் எனப்படும் பீஷ்மர் அப்போது எங்கே போனார்?
தூய்மைக்கும், நேர்மைக்கும் தன்னை ஒரு அவதாரம் எனக் கூறிக்கொள்வாரே? அப்போது எங்கே போனார்? பரதனின் குலத்தில் பிறந்த
மாபெரும் சக்கரவர்த்தி, அதுவும் குரு வம்சத்தினரின் சக்கரவர்த்தி என்ற பெருமையில் மூழ்கி
இருக்கும் திருதராஷ்டிரர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர்கள் அனைவரும் துரோணர் ஏதோ ஒரு பெரிய அரசனை வென்று
அவன் நாட்டைக் கைப்பற்றி விட்டார் என எண்ணினார்களோ என்னவோ! ஹஸ்தினாபுரத்தில் துரோணருக்கு
அப்படி ஒரு மாபெரும் வரவேற்புக் கொடுத்தனர்.
“ திரெளபதி தொடர்ந்தாள். கிருஷ்ணன் யோசனையில் ஆழ்ந்தான். இவ்வளவு மேன்மையான இதயமும், எண்ணங்களும் கொண்ட ஒரு
இளவரசியின் வேண்டுகோளைத் தட்டுவது என்றால்……. கிருஷ்ணன் மனம் அவனையும் அறியாமல் திரெளபதியின்
பால் கவரப்பட்டது. ஆனால் அதே சமயம் அவளை மணந்து
கொண்டு துருபதனின் நோக்கத்தை ஈடேற்றவும் கிருஷ்ணனுக்கு இஷ்டமில்லை.
திரெளபதியை
நோக்கிய கண்ணன், “ஒருவேளை நான் ஒத்துக் கொண்டதன் பின்னரும்……. தோற்றுப் போனேன் எனில்?”
என வினவினான். திரெளபதியின் முகம் புன்னகையால்
மலர்ந்து விகசித்தது. “உங்களைக் குறித்து நாங்கள்
அனைத்தும் அறிவோம் வாசுதேவரே! நீங்கள் ஒரு
நாளும் தோற்க மாட்டீர்கள்.” என்றாள்.
“ஏன்
அவ்வாறு நினைக்கிறீர்கள் இளவரசி?” கண்ணனும்
புன்னகையோடு கேட்டான்.
“துரோணரின்
சீடர்களில் இரண்டே பேர் தான் வில்வித்தையில் சிறந்து விளங்குபவர்கள். ஒன்று அர்ஜுனன், இன்னொருவன் கர்ணன். குரு சாந்தீபனியின் சீடர் ஆன கிருஷ்ணனின் சக்கரமோ
எல்லாவற்றையும் அடியோடு அழிக்க வல்லது. அந்த
மஹாதேவனின் திரிசூலம் கூட அதன் முன் தோற்கும்.”
“ஓ,
ஓ, மிகவும் மிகைப்படுத்திச் சொல்லி இருக்கின்றனர் இளவரசி. அதுவும் குரு சாந்தீபனி அவர்கள் என்னிடம் மிகவும்
அன்பு பாராட்டுபவர்.” “அப்படி நீர் தோற்றால்
நாங்கள் அதை ஏற்கத்தான் வேண்டும்.” கபடற்ற திரெளபதியின் பேச்சு கண்ணன் மனதைக் கவர்ந்தது.
“இளவரசி,
நான் உங்களுக்கு உதவ வேண்டுமெனில் உங்கள் கையைப் பிடித்து உங்களை மணந்தே ஆகவேண்டுமா? வேறு விதத்தில் உங்களுக்கு உதவ முடியாதா?”
“ஏன்
, என்னை உங்களுக்குப்பிடிக்கவில்லையா? உங்கள்
மனைவியாக ஆக நான் தகுதியற்றவளா?” திரெளபதியின் குறும்பான பேச்சைக் கேட்டுக் கண்ணன்
சிரித்தான்.
“இளவரசி,
நான் ஒரு மாட்டிடையன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என எண்ணுகிறேன். ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஒரே இளவரசியை நான்
எவ்வாறு மணக்கமுடியும்? அதற்கான தகுதியே எனக்கில்லை. அதோடு இந்த ராஜாங்க விஷயங்களுக்காக இளவரசிகளின்
வாழ்க்கையை பேரம் பேசுவதையும் நான் கட்டோடு வெறுக்கிறேன். திருமணம் என்பது ஒரு வியாபாரம் அல்ல. நாம் திருமணம் குறித்துப் பேச வேண்டாம். உங்கள் தந்தையின் சபதம் குறித்துக் கவலைப்படாமல்
உங்களுக்குப் பிடித்த மணமகனை நீங்களே தேர்ந்தெடுங்கள் இளவரசி. திருமணம் என்னும் பந்தம் இல்லாமலேயே நான் துருபதன்
பக்கமே நின்று அவருக்கே உதவிகள் செய்வேன் என்னும் உறுதிமொழியை உங்களுக்கு அளிக்கிறேன். உங்களுக்கும் என்னுடைய உதவிகள் உண்டு இளவரசி, நீங்கள்
என்னை உங்களில் ஒருவனாக நினைக்க வேண்டும்.”
அவர்கள்
பேச்சு திடீரென நின்றது. கண்ணன் திரும்பிப்
பார்த்தபோது துருபதன் வந்து கொண்டிருந்தான்.
அவன் ஏதோ முக்கியமான அதிர்ச்சியான விஷயத்தைக் குறித்துக் கேள்விப் பட்டு அந்த
அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே இங்கே வந்து கொண்டிருக்கிறான் எனக் கண்ணனுக்குத் தோன்றியது. எப்போதையும் விட இப்போது மிகவும் கடுமையாகவும்,
பயங்கரமாகவும் அவன் முகம் காட்சி அளித்தது.
தன் மகனைப் பார்த்து, “த்ருஷ்டத்யும்னா, ஷிகன்டின் மறைந்துவிட்டான்!” என்று
அறிவித்தான். அவன் குரலில் தாள முடியாத கோபம்
இருந்ததை அனைவரும் உணர்ந்தனர். த்ருஷ்டத்யும்னன்,
சத்யஜித், திரெளபதி மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கள் இருக்கையிலிருந்து எழுந்தே விட்டனர்.
“என்ன, உண்மையாகவா?” எனக் கேட்க, துருபதனும், “ஆம்,
உண்மைதான். ஷிகன்டின் மறைந்து விட்டான். அவன் எங்கெல்லாம் ஒளிந்திருக்கக் கூடும் என்பதை
அறிந்த அங்கெல்லாம் அவனைத் தேடினேன். ஆனால்
அவன் எங்கும் காணப்படவில்லை. எப்படி மறைந்தான்
என்பதற்கான அடையாளங்களும் கிடைக்கவில்லை.”
சோர்வுடனும், மனக் கலக்கத்துடனும், அங்கிருந்த மரம் ஒன்றைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த
மேடையில் துருபதன் அமர்ந்து கொண்டான். “அவன்
பிறந்திருக்கவே வேண்டாம்!” என்று வேதனை மிகுந்த குரலில் கூறிவிட்டுத் தன் தலையைத் தன்னிரு
கரங்களாலும் பிடித்துக் கொண்டான். அவன் கண்கள்
கண்ணீரால் நிரம்பியது. கிருஷ்ணன் நிலைமையை
உணர்ந்தவனாய் எதுவுமே பேசாமல், எதுவுமே கேட்காமல் அங்கிருந்து மெல்ல வெளியேறினான்.
8 comments:
மிகவும் சுவாரஸ்யமான கதைப்பகுதியை அழகாக அருமையாக வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
/// ஒருவேளை நான் ஒத்துக் கொண்டதன் பின்னரும்……. தோற்றுப் போனேன் எனில்? ///
கண்ணனின் கேள்விகளே தனி...
// “அவன் பிறந்திருக்கவே வேண்டாம்!” என்று வேதனை மிகுந்த குரலில் கூறிவிட்டுத்.......//
அவன் பிறப்பின் காரணம் அவர்களுக்கும் தெரிந்ததுதானே... அப்புறம் ஏன் இப்படிப் பேசுகிறார்?
திரௌபதி-கண்ணன் லேசான உல்லாச உரையாடல் சுவையாக இருந்தது.
வை.கோ. சார், வருகைக்கு நன்றி.
வாங்க டிடி, அதான் கண்ணனின் தனிச் சிறப்பே. :))))
ஸ்ரீராம், இந்தக் கிருஷ்ணாவதாரம் தொடர்களின் மூலம் தர்க்கரீதியாக இப்படி நடைபெற்றிருக்கலாம் என்பதையே முன்ஷிஜி சுட்டிக் காட்டுகிறார். ஆகவே முன்னாலேயே ஷிகன்டினைப் பற்றி அவங்களுக்குத் தெரியலை என்ற கோணத்திலேயே காட்டி இருக்கிறார். அடுத்து ஷிகன்டின் செய்யப் போவதை நினைச்சால் ஆச்சரியமா இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்.
திரெளபதி-கண்ணனுக்குள் இப்படி ஒரு பேச்சு இருந்ததா எனச் சிலர் முகம் சுளிக்கையில் நீங்க ரசித்தது சந்தோஷமாக இருந்தது.
உண்மையில் வியாச பாரதத்தில் இப்படி இல்லை. :))))))
கண்ணன்-த்ரௌபதி உரையாடல் அட்டகாசம்.
கண்ணன்-த்ரௌபதி உரையாடல் அட்டகாசம்.
Post a Comment