Saturday, April 20, 2013

கண்ணன் என் ஆசான்!



“பொறுமையை இழக்காதீர்கள் மன்னரே.  உங்களுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்கவேண்டும் என்பதே உங்கள் சபதம்.  உங்களை வலுவான நிலையில் நிறுத்திக் கொண்டு துரோணரை இருந்த இடம் தெரியாமல் செய்வதில் உங்கள் சபதம் நிறைவேறியதாகாதா? யோசியுங்கள்.”

கண்ணன் பேசிய தொனியும், அவன் குரலும், அவன் முகத்தில் தெரிந்த உறுதியும், உண்மையும் துருபதன் மனதைக் கவர்ந்தது.  சிறு பிள்ளை போல் பால்வடியும் முகம் கொண்ட இந்த இளைஞன், என்னவெல்லாம் சொல்கிறான்!  அவனுடைய அதிகாரத்தை எப்படி எல்லாம் அழகாய்க் காட்டுகிறான்.  பிறருக்குத் துன்பமோ, வருத்தமோ விளைவிக்காமல் தன் பேச்சை ஒப்புக்கொள்ள வைக்கிறானே.  இவனுடைய சக்தியை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  துருபதன் மனம் கண்ணன் பால் சென்றது.  கண்ணனின் யோசனைக்கு அவன் ஒத்துக் கொண்டான். அவன் மனம் கண்ணனின் சொற்களால் சமாதானம் அடைந்தது.

“எனில் என் சபதம் நிறைவேறும் என உறுதியாகச் சொல்கிறாயா? “ துருபதன் கேட்டான். 

“நிச்சயமாய்.  நான் உறுதியாகச் சொல்கிறேன்.  நானும் இருந்து உங்கள் சபதம் நிறைவேறுவதைப் பார்க்கப்போகிறேனே!’
“நீயும் சுயம்வரத்தில் கலந்து கொள்வாயா கண்ணா?”  துருபதன் மனம் இன்னமும் கண்ணனையே மருமகனாக ஏற்க விரும்பியது.  

“அப்போது அதற்கு ஏற்ற மனநிலையில் நான் இருந்தேன் எனில் பங்கேற்பேன்.  இல்லை எனில் இல்லை. ஆனால் மன்னரே, யாராக இருந்தாலும் இந்தப்போட்டியில் ஜெயிப்பவர்கள் சிறந்த வில்லாளியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.”

துருபதன் யோசனையுடன் கண்ணனையே பார்த்தான். அவன் மனம் எந்தத் திசையில் செல்கிறது என்பதையோ, அவன் மனதின் ஆழத்தையோ துருபதனால் உணரமுடியவில்லை.    திடீரென அவன் ராஜ்யாதிகாரம் அதிகரித்து விட்டதைப் போலவும், சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாகவும் தன்னை உணர்ந்தான் துருபதன்.  இந்த நம் இளைய விருந்தாளியின் கூற்றுக்கேற்ப திரெளபதியின் சுயம்வரம் மட்டும் நடந்து முடிந்தால்?? இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கும் இந்தத் துன்ப நிலை மாறி துரோணரைப் பழிவாங்க மட்டுமின்றி ஆர்யவர்த்தத்திலேயே வல்லமை பொருந்தியதொரு அரசனாகவும் திகழலாம்.  நன்றியுடன் கண்ணனைப் பார்த்தான் துருபதன்.

“வாசுதேவா, நீ கூறியபடியே திரெளபதியின் சுயம்வரத்தை நடத்துகிறேன்.  நீ கூறியவற்றில் மட்டுமில்லாமல் உன்னிடம் எனக்கு மிக்க நம்பிக்கை உள்ளது.  அப்படி ஒருவேளை இந்த சுயம்வரத் திட்டத்தின் மூலம் தோல்வியையே அடைந்தாலும் எனக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப் போவதில்லை.”

கிருஷ்ணன் சிறு புன்னகையோடு, “இந்த சுயம்வரம் மட்டும் தோல்வி அடைந்தால், இவ்வுலகிலேயே அனைத்தையும் இழந்தவனாக நான் மட்டுமே இருப்பேன்.  எனக்குத் தான் தோல்வி.”

“அனைத்தையும் இழந்துவிடுவாயா? வாசுதேவா, நீ என்ன சொல்கிறாய்?”

“ஆம், மன்னரே,   உங்கள் நட்பை முதலில் இழப்பேன்.  திரெளபதிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போனவன் ஆவேன்.  இந்தப் பரந்த பரதகண்டத்தின் அனைத்து இளவரசர்கள், அரசர்கள் முன்னிலையில் யாதவர் குலத்துக்கே அபக்கியாதியைத் தேடிக் கொடுத்தவன் ஆவேன்.  யாதவ குலமே அவமானம் அடையும்.”

பின்னர் தனக்குத் தானே மெதுவாக, “பின்னர் கிருஷ்ணன் எதற்கு இவ்வுலகில் தோன்றி இருக்கிறான்?  தர்மம் எங்கே காக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் அதற்குத் தக்கப் பாதுகாப்புக் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டுவது ஒன்றே அவன் பிறந்ததன் காரணம்.”

மிகவும் ஆவலுடனும், அன்புடனும் கிருஷ்ணனின் தோள்களில் தன்னிரு கரங்களையும் வைத்துக் கொண்டே துருபதன், “ வாசுதேவா, நீ என்ன சொல்கிறாயோ, அதன்படியே செய்கிறேன்.  உன் ஆலோசனையை அப்படியே ஏற்கிறேன்.  அவ்வப்போது உன் ஆலோசனைகளை உத்போதனனுக்கும், ஷ்வேதகேதுவுக்கும் வழங்கி வா. “

“இன்னொரு ஆலோசனையும் உள்ளது மன்னரே!”
“என்ன அது?”

“நாளையே அறிவிப்புச் செய்யுங்கள்.  திரெளபதிக்கு சுயம்வரம் நடத்தப் போவதாகவும், அந்தச் சுயம்வரம் அடுத்த வருடம் சைத்ர மாதத்தில் நடக்கப் போவதாகவும் அறிவியுங்கள்.  உடனடியாக இதைச் செய்யுங்கள்.”

மிகுந்த கிளர்ச்சியுடன் காணப்பட்ட துருபதன், “அப்படியே செய்கிறேன் வாசுதேவா!” என்றான்.

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“நீயும் சுயம்வரத்தில் கலந்து கொள்வாயா கண்ணா?” துருபதன் மனம் இன்னமும் கண்ணனையே மருமகனாக ஏற்க விரும்பியது.

“அப்போது அதற்கு ஏற்ற மனநிலையில் நான் இருந்தேன் எனில் பங்கேற்பேன். இல்லை எனில் இல்லை.ஆனால் மன்னரே, யாராக இருந்தாலும் இந்தப்போட்டியில் ஜெயிப்பவர்கள் சிறந்த வில்லாளியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.” -கண்ணன்//

மிக அழகான காட்சிகள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

துருபதனை விதியின் பாதைக்கு இழுக்கும் கண்ணன்!

அப்பாதுரை said...

க்ருஷ்ணன் தனக்குத் தானே பேசிக்கொள்வது nice touch. ரொம்பவும் ரசித்தேன். (ஏனோ தெரியவில்லை என்டிஆரின் க்ருஷ்ணர் வேஷப் புன்னகை நினைவுக்கு வந்தது.)