Friday, April 26, 2013

உத்தவன் தேடக் கிளம்பி விட்டான்.


வெகு நாட்களாக நாம் உத்தவனைக் காணவே இல்லை.  அவன் எங்கே போனான், என்ன செய்கிறான் என்பதை இப்போது பார்ப்போமா?  உத்தவன் பார்க்க மிகவும் ஒன்றும் தெரியாதவனாகவும், அவ்வளவு விரைவில் முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுபவனாகவுமே இருந்தான்.  எனினும் சில சமயங்களில் அவன் எடுக்கும் முடிவுகள் ஆச்சரியகரமானதாக இருக்கும்.  அதே சமயம் அந்த முடிவின்படி நடந்து கொள்ளவும் ஆரம்பிப்பான்.  இப்போது அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கும் தருணம் இது.  கிருஷ்ணன் அவனிடம் எப்போது பாண்டவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்றும், அரக்கு மாளிகையிலிருந்து தப்பி எங்கோ ஒளிந்து வாழ்ந்து வரலாம் என்னும் சந்தேகத்தைத் தெரிவித்தானோ அப்போதே அவன் தங்கள் தந்தைமார்களின் தாய்வழிப் பாட்டன் ஆன நாகர்களின் அரசன் ஆர்யகனைச் சந்திக்க முடிவு செய்தான்.  ஆர்யகன் கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட இடங்களில் செழித்துக் காணப்பட்ட காடுகளுக்குள்ளாக வசித்து வந்தான்.  ஆகவே அவனால் மட்டுமே அரக்கு மாளிகை எரிக்கப் பட்டபோது அங்கிருந்து தப்பிய பாண்டவர்களை ஒளித்து வைத்துக் காப்பாற்ற இயலும்.

தெளமிய முனிவரின் ஆசிரமத்தில் நடந்த வேத வியாசரின் சந்திப்பின் போது வியாசர் அடுத்து நாககூடம் செல்லப் போவதை அறிந்தான் உத்தவன்.  முனி சிரேஷ்டரின் மூலம் இந்தப் புதிரின் விடையை அவிழ்க்க முடிவு செய்த உத்தவன் அனைவரும் உறங்கிய பின்னர் அன்று வியாச முனியைத் தனிமையில் சந்தித்து அவருடன் தானும் நாககூடம் வர அனுமதி கேட்டான்.  உத்தவனின் நோக்கத்தை அறிந்தோ என்னமோ வியாசர் உடனடியாகச் சம்மதம் கொடுத்துவிட்டார்.   ஜைமினி மஹரிஷியின் தலைமையில் வியாசரின் முக்கியமானப் பத்து சீடர்களும், நாகர்களின் முக்கியத் தலைவர்களும் உடன் வர வியாசரின் குழு அங்கிருந்து கிளம்பிப் படகுகளின் மூலமாக மூன்று நாட்களில் ஏக சக்ரதீர்த்தக்கரையை அடைந்தது.  வியாசருக்கு ஆரியர்களிடம் மட்டுமில்லாமல், நாகர்கள், நிஷாதர்கள் போன்ற அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்த செல்வாக்கை உத்தவன் நன்கறிந்தான்.  வியாசரின் வரவை அறிந்த மக்கள் அந்த அந்த ஊரின் நதிக்கரைகளில் கூடி இருந்து வியாசரை வரவேற்று நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றதோடு அல்லாமல் அவருக்கும், சீடர்களுக்கும் வேண்டிய உணவு, உடை போன்ற வசதிகளையும் தந்து பெருமைப் படுத்தினார்கள்.  வியாசரும் அவ்வப்போது படகில் இருந்து கீழே இறங்கி மக்களை ஆசீர்வதித்தும், அவர்களின் விருந்தோம்பலை ஏற்றும், தக்க உபதேசங்களைச் செய்தும், அவர்களின் குறைகளைக் கேட்டும் அவர்களை உற்சாகப் படுத்தி வந்தார்.

இரவு தங்கும் இடத்தில் ஹோமம் செய்ய வியாசர் மறக்கவில்லை.  தன் வெண்கலக் குரலால் வேத மந்திரங்களை முழக்கிய ஜைமினி மஹரிஷியும், யாகங்களை முன்னின்று நடத்திய வியாசரின் சீடர்களும் அனைவர் மனதிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தினர்.  அஸ்வினி தேவர்களை வேண்டிக் கொண்டு வியாதியஸ்தர்களுக்குப் பெருமளவு மருத்துவ உதவியும் செய்தனர்.  மேலும் அனைவருக்கும் வியாசர் நேரிலேயே தன் கைகளால் உணவு அளித்தது அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கை ஒளி தோன்றியது.  ஏகசக்ர தீர்த்தத்தில் இருந்து அனைவரும் கால்நடையாகவே நாககூடத்துக்குச் சென்றனர்.  செல்லும் வழியெங்கும் நாகர்கள் கூடி இருந்து அவர்களை வரவேற்று நமஸ்கரித்து மரியாதை செய்தனர்.  சிறு வயதில் இருந்தே வியாசரைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான் உத்தவன்.  எனினும் அவரின் பெருமையை இப்போதே நன்கு உணர்ந்தான்.  அவருடைய இருப்பே அனைவர் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்களை ஒரு அதிசயமாக உணர்ந்தான்.  எத்தனை வருடங்கள் எனச் சொல்ல முடியாத வருடங்களாக வியாசர் கங்கையின் கரைகளிலும், யமுனையின் கரைகளிலும் ஆசிரமம் ஆசிரமமாகச் சென்று அங்குள்ள ரிஷி, முனிவர்களுக்கு உபதேசித்து வந்தார்.  ஆரியர்களை ஒரு நல்வழிப் படுத்தி வந்ததோடு காடுகளிலேயே வசித்த நாகர்களையும் நன்முறையில் திருப்பி அவர்களையும் ஆரியர்களின் பாதையில் மெல்ல மெல்ல மாற்றி வந்தார். 

நான்கு நாட்கள் நடைப்பயணத்தின் பின்னர் அவர்கள் நாககூடம் வந்தடைந்தனர்.  ஆர்யகன் தன் பேரன் ஆன கார்க்கோடகனுடன் வியாசரையும் அவர் குழுவையும் எதிர்கொண்டு அழைத்தான்.  நூறு வயதைத் தாண்டிய ஆர்யகனைப் பார்க்கக் கொஞ்சம் பயமாகவே இருந்தது.  உடலில் எலும்பும், தசைகளும் இருக்க வேண்டிய அளவை விடக் கொஞ்சமாகவே இருந்தன.   முடக்கு வாதத்தால் வளைந்த கால்கள், நீண்ட எலும்புகள் துருத்திக் கொண்டு தெரியும் கைகள்,  உயிர்க்களையே இல்லாத சுருங்கிய முகம், மஞ்சள் வண்ணக் கண்கள், ஆனால் அந்தக் கண்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டே இருந்தது எப்படி இருந்தது எனில்   அவன் மூளை மட்டும் எப்போதும் தயார் நிலையில், எந்தவிதமான சூழ்நிலையையும் ஈடு கொடுக்கும் விதத்தில் இருக்கிறது என்பதைக் காட்டின.  கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட  அந்தப் பிரதேசத்தில் அவன் வைத்தது தான் சட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவன் கண்கள். ஆறு மனைவிகளும், பதினோரு பிள்ளைகளையும் கணக்கற்ற பேரப்பிள்ளைகளையும் பெற்றிருந்த ஆர்யகன், பார்க்க எலும்புக்கூடாக உயிரோடு நடமாடும் பிணம் போன்று தெரிந்தாலும் இன்னமும் அந்த உலகை அவனே கட்டி ஆண்டு கொண்டிருந்தான் என்பதும், அவன் சொல்லை மீறி அங்கு எதுவும் நடக்காது என்பதும் தெரிந்தது.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆர்யகனின் மூளை மட்டும் அப்படி இருந்ததால் அப்படியோ...?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனால் அந்தக் கண்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டே இருந்தது எப்படி இருந்தது எனில் அவன் மூளை மட்டும் எப்போதும் தயார் நிலையில், எந்தவிதமான சூழ்நிலையையும் ஈடு கொடுக்கும் விதத்தில் இருக்கிறது என்பதைக் காட்டின. //

கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

படிச்சாச்சு.

அப்பாதுரை said...

ஆர்யகனைப் பற்றிப் படித்த நினைவே இல்லை.

போன பதிவில் கேட்க நினைத்தேன்: அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்களுக்கும் கண்ணனுக்கும் தொடர்பு எப்படி சாத்தியாமானது என்று நினைக்கிறீர்கள்? இந்தக் கதையின் போக்கில் கண்ணன் என்கிற வசதியற்ற மாட்டிடையன், அல்லது அறம் பேணும் பண்புள்ள அரசன் பாண்டவர்களுடன் எப்படித் தொடர்பு கொண்டிருப்பான்?