Friday, June 7, 2013

நாகர்களின் நடுவே உத்தவன் தொடர்ச்சி!

நீங்கள் மத்ரா நகருக்குச் சென்றிருக்கீறீர்களா?” என்று உத்தவன் கேட்டான்.

உன் பாட்டியைத் திருமணம்செய்து கொள்கையில் உன் தாத்தா மத்ராவில் குடியிருக்கவில்லை.  பின்னர் நான் மத்ரா ஒரே ஒருமுறை உன் பெரியப்பா வசுதேவன் பிறந்த போது போனேன்.”   ஆர்யகனோடு பேசிக் கொண்டே நாகர்களையும் கவனித்த உத்தவனுக்கு  இந்த நாகர்கள் மிகவும் எளிமையானவர்கள் என்பது புரிந்தது. அதோடு ஆரியர்கள் அளவுக்கு  நாகரிகம் தெரியாதவர்கள். இங்குள்ள மண்ணாலான குடிசைகளிலும், செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளிலும் வசிக்கின்றனர் . இவர்களுக்குக் காட்டில் தானாகவே விளையும் பார்லி, பருப்பு வகைகள், பழங்கள், காய்கள் போன்றவையே உணவு. அதோடு மிருகங்களையும் அவ்வப்போது வேட்டையாடுகின்றனர்.   அவர்களின் உடைப்பழக்கமும் ஆரியர்களிலிருந்து மாறுபட்டு இருந்தது.  அங்கிருந்தபெண்களில் பலருக்கு மேலாடை இல்லை.  ஆண்களும் மேலாடை ஏதுமின்றி இடுப்புக் கீழ்ப்பாகத்தை மட்டுமே மறைத்துக் கொண்டுள்ளனர்.   ஆரியர்களிடம் இம்மாதிரியான வழக்கம் பாபம் எனக் கருதப்படும்.  ஆகவே முதலில் உத்தவன் மேலாடை இல்லாத பெண்கள் சர்வ சகஜமாக உலா வருவதும், ஆண்களோடு எந்தவிதமான கூச்சமும் இன்றிக் கலந்து பழகுவதும் காணவே அதிர்ச்சி அடைந்தான்.  இது மன்னிக்க முடியாத குற்றமாக ஆரியர்களிடையே கருதப்படும். 



ஆனால் இந்த மக்கள் வெகுளியானவர்கள், வாழ்க்கையை சந்தோஷமாகக் கழிப்பவர்கள், எல்லாரும் சொல்வது போல் எந்தவிதமான கெட்ட எண்ணங்களும் இல்லாதவர்கள் என்பதைப் புரிந்து கொண்டான் உத்தவன். 
பழகவும் எளிமையானவர்களாக இந்த நாகர்கள் இருப்பதை உத்தவன் கவனித்தான்.  அவர்களின் மதகுருமார்கள் வேத வியாசருக்குப் பெரிய மரியாதை கொடுத்து வரவேற்றதையும் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.  இருவரின் வழிபாட்டு முறைகளிலும் காணப்படும் பெருத்த வேறுபாடுகளையும் கண்டான்.  நாகர்களின் மாபெரும் கடவுளான பசுபதியை அவர்கள் முறைப்படி மலர்கள், இலைகள், நீர் போன்றவை அளித்து வழிபட்ட நாகர்கள், இன்னொரு பக்கம் வேத வியாசரும் அவரின் சீடர்களும் ஹோமகுண்டத்தில் அக்னி வளர்த்து ஹோமம் செய்து யாகங்கள் செய்வது எதற்கும் தடை சொல்லவில்லை. அவரவர் வழக்கப்படி அவரவர் செய்தனர்.  திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த நாகர்களின் கடவுள் பசுபதியின் கோயிலுக்கு  முன்னால் வேத வியாசர் மந்திரங்களைச் சொல்லி அக்னி வளர்த்து தினசரிக் கடமையான ஹோமம் செய்கையில் நாகர்களின் மத குருமார்கள் அங்கேயே அருகே அமர்ந்து உற்சாகத்துடனும், முழுக் கவனத்துடனும் அனைத்தையும் கவனித்து வந்தார்கள்.  


அவர்களுக்குள்ளேயே இருந்த தந்திர மந்திரங்களில் சிறந்த மதப் பூசாரிகள் கூட வியாசரிடம் தங்கள் நோய் குணமாக நாகர்கள் மருந்து கலந்த பாலை வாங்கிக் கொண்டதற்குத் தடை சொல்ல வில்லை.  அனைத்தும் நடந்து முடியும் வரை வயதான மன்னன் ஆர்யகன் தன் பல்லக்கிலேயே அமர்ந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்தான்.  இது ஒரு வேளை வேத வியாசரின் வசீகரத்தால் இருக்குமோ?  எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைக் காண தூர தூரங்களிலிருந்தெல்லாம் ஓடோடி வருகின்றனர்.  அவரின் பாதத்தில் நமஸ்கரிப்பதையே பெரிய விஷயமாகக் கருதுகின்றனர்.  அவரைப்போற்றி ஆராதிக்கின்றனர்.  ஏகச்சக்கரத்துக்கு அவர் வந்து விட்டதை அறிந்ததுமே மன்னன் அவருக்கு நாககூடம் வரும்படி அழைப்பு விடுத்தான்.  வியாசர் வரும்போதெல்லாம் தன்னுடைய பழைய சக்தி அனைத்தும் மீண்டும் தனக்குள் திரும்புவதாக உணர்வதோடு அல்லாமல் அவன் பெரிய குடும்பத்தினரும் அனைவருமாகச் சேர்ந்து சில காலம் கழிக்க முடியும்.  மேலும் நாகர் குடிமக்களும் வேத வியாசரை ஒரு ஆரியனாக, அந்நியராகக் கருதவில்லை.  தங்களில் ஒருவராகவே கருதினர். 

ஒவ்வொரு நாளும் தூரதூரங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் வந்து வியாசரைத் தரிசித்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் சென்றது.  தினசரி பெரிய அளவில் ஹோமங்கள் நடந்தன.  பால் சேகரிக்கப்பட்டு மண் குடுவைகளில் ஊற்றப்பட்டு மூலிகை இலை போடப்பட்டு மக்களுக்குக் கொடுக்கப் பட்டது.  அதோடு அல்லாமல் வேத வியாசர் தன் கரங்களால் அனைவருக்கும் நெற்றியில் புனிதச் சாம்பலைத் திருநீறாக இட்டுவிட அதிசயங்கள் நடக்க ஆரம்பித்தன.  கண் தெரியாதவர்களுக்குக்கண் தெரிய ஆரம்பித்தது.  நடக்க இயலாதவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.  உடலில் ஒருவித ரோகம் பிடித்துப் பேய் பிடித்தது போல் காணப்பட்டவர்கள் ஒளியுடன் கூடிய முகத்தையும் ரோகம் அற்ற தேகத்தையும் பெற்றனர்.  அன்றாடம் நடக்கும் விருந்துகளின் போது வேத வியாசரே தன் கரஙக்ளால் மக்களுக்கு உணவு பரிமாறினார்.  மக்களின் சந்தோஷக் கூச்சலைக் கேட்டு அனுபவித்த் வண்ணம் ஆர்யகனுடனும், கார்க்கோடகனுடனும் அமர்ந்திருப்பார் வேத வியாசர்.

அனைவருக்கும் உத்தவன் மரிஷாவின் பேரன் என்ற செய்தி எட்டியது.  உத்தவனைச் சுற்றி நாகர்களின் சிறந்த தலைவர்கள் உடலில் போருக்கான வண்ணங்களைத் தீட்டிய வண்ணம் கைகளில் பல ஆயுதங்களை ஏந்தி அவனுக்கு மெய்க்காவலர்கள் போல் சூழ்ந்து கொண்டு உத்தவன் எங்கு சென்றாலும் கூடவே சென்றனர்.  இது உத்தவனுக்கு மிகுந்த தர்ம சங்கடமாக இருந்தது.  அனைவரும் அவனை அன்புடன் நடத்தினாலும், வீரர்களில் இளையவர்கள் அனைவரும் உத்தவனைத் தங்கள் கதாநாயகனாகவே நினைத்தனர்.  உத்தவனின் அழகான கட்டமைப்புடன் கூடிய உடலும், அவனின் விசாலமான கண்களும், தலையில் அணிந்திருந்த கிரீடமும், கைகளில் அவன் சுமந்திருந்த வில்லும், அம்புகளோடு கூடிய  அம்புறாத்தூணியும் பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.   பெண்களோ எனில் வெகுநாட்களாகக் காணாமல் போய்த் திரும்பக் கிடைத்திருக்கும் ஒரு மகனைக் கண்டால் தாய்மார்கள் எவ்வளவு உவகை கொள்வார்களோ அவ்வளவு உவகையுடனும், பாசத்துடனும் அவனை நடத்தினார்கள்.  மொத்தத்தில் நாகர்களிலிருந்து வித்தியாசமானவனாகத் தெரிந்தாலும் அவர்களுக்குள்ளே இவன் தங்கள் ரத்தம் என்னும் உணர்வு மிகுந்திருந்தது.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியாசருக்கு சக்தி அவ்வளவு உள்ளது...!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அன்றாடம் நடக்கும் விருந்துகளின் போது வேத வியாசரே தன் கரஙக்ளால் மக்களுக்கு உணவு பரிமாறினார். மக்களின் சந்தோஷக் கூச்சலைக் கேட்டு அனுபவித்த் வண்ணம் ஆர்யகனுடனும், கார்க்கோடகனுடனும் அமர்ந்திருப்பார் வேத வியாசர்.//

சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

sambasivam6geetha said...

வாங்க டிடி, நன்றி.

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், நன்றி.

அப்பாதுரை said...

பார்லி?