Sunday, November 10, 2013

உத்தவன் வந்தான்!

விதுரர் தான் கொண்டு வந்த செய்தி முழுவதையும் சொல்லி முடித்ததும், அவருக்கு உத்தரவு கொடுக்கும் பாவனையில்  பீஷ்மர் தலையை அசைத்தார். உடனேயே விதுரர் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் மன்னன் திருதராஷ்டிரன் பக்கம் திரும்பினார்.  “மாட்சிமை பொருந்திய மன்னா!  ஷூரர்களின் தலைவன் ஆன தேவபாகனின் மகனும், கிருஷ்ண வாசுதேவனின் அத்யந்த, அந்தரங்க நண்பனுமான உத்தவன், ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு வந்துள்ளான்.   மாட்சிமை பொருந்திய மன்னர் அதைக் கேட்டு என்ன முடிவெடுக்கலாம் என்பதையும் அந்தச் செய்தி தீர்மானிக்கலாம்.  உத்தவன் வெளியே காத்திருக்கிறான்.  மன்னர் உத்தரவு கொடுத்தால் அவனை உள்ளே அழைத்து வரலாம்.  உத்தவனை அழைத்து வரலாமா?”

அனைவருக்கும் என்ன சொல்வது என்பதே புரியவில்லை. ஒரு க்ஷணம் அனைவரும் திகைத்துத் திக்குமுக்காடிப் போயினர்.  விதுரரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.  துரோணரோ இந்தப் புதிய செய்தியால் ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதத்தின் முன்னேற்றம் என்னவாக இருக்கும் என்ற யோசனையில் அனைவரின் முகத்தையும் மாறி மாறிக் கவனித்துக் கொண்டிருந்தார்.  விதுரரோ, அவரின் வழக்கமான பற்றற்ற தன்மையை விடுத்து அளவிட முடியாத உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிய வண்ணம் அனைத்தையும் செய்வது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.  அப்போது திருதராஷ்டிரன், “ தேவபாகனின் மகன் உத்தவன், எந்த அரசனின் தூதுக்குழுச் செய்தியைத் தாங்கி இங்கே வந்துள்ளான் என்பதை நான் அறியலாமா?” என்று கேட்டான்.  தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லாதவர் போல பீஷ்மர் தன் கைகளால் தன் தாடியைத் தடவிய வண்ணம் அமர்ந்திருந்தார்.

“உத்தவன் இன்று காலை திடீரென வந்தான்;  வந்தவன் என்னுடன் தங்க வேண்டும் என நகருக்கு வெளியிலிருந்து எனக்குச் செய்தி அனுப்பினான்;” என்ற விதுரர் தொடர்ந்து, “ நான் உடனடியாகக் கிளம்பிச் சென்று உரிய மரியாதைகளோடு அவனை நகருக்குள் அழைத்து வந்தேன்.  அவன் யாதவர் குலத்திலேயே சிறந்தவனும், மஹாரதனும், மஹாவீரனுமான கிருஷ்ண வாசுதேவனிடமிருந்து ஒரு முக்கியச் செய்தியைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். “

“ஹூம், கிருஷ்ண வாசுதேவன்!” ஏளனமான தொனியில் கூறிய துரியோதனன், தன் நண்பர்களைப் பார்க்க, கர்ணன் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  அஸ்வத்தாமாவோ கோபத்தோடு விதுரரைக் கொன்றே விடுவான் போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.  விதுரர் இவை எதையும் கவனிக்காதவர் போல மேலே தொடர்ந்தார்.  “ஆனால் பீஷ்மரைச் சந்தித்துச் செய்தியைத் தெரிவிக்கும் முன்னர்,  நம் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மஹாராணி சத்யவதியை தரிசிக்க வேண்டும் என உத்தவன் கூறினான்.  ஆகவே நான் முதலில் அவனை மஹாராணி சத்யவதியிடம் அழைத்துச் சென்றேன்.  அங்கே ராணி அம்மாவுடன் ஆன  சந்திப்பை முடித்த பின்னர், இங்கே ராஜ சபைக்கு உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டி அழைத்து வந்தேன்.  உத்தவனை உள்ளே அழைத்துவர நான் ஏற்கெனவே தாத்தா பீஷ்மரின் அநுமதியைப் பெற்று விட்டேன். “

“கிருஷ்ண வாசுதேவன்!” மீண்டும் துரியோதனன் குறுக்கிட்டான்.  “நாம் ஏற்கெனவே முக்கியமான விஷயம் குறித்துக் கலந்து விவாதித்து வருகிறோம்.  அதிலேயே இன்னமும் நம்மால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.  இப்போது நாம் ஏன் நம் விஷயத்தில் கிருஷ்ண வாசுதேவன் குறுக்கிட்டுத் தொல்லைகளை அநுமதிப்பதை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?  நம்முடைய முக்கியமான விவாதத்தில் இன்னமும் சிக்கல்களையே அது ஏற்படுத்தும்.  அவன் ஏன் இதில் தலையிடுகிறான்?  இந்த உத்தவனுக்குக் கொஞ்சம் பொறுத்திருக்க முடியாதா?”  என்றான்.  பீஷ்மரின் தீர்மானமான குரல் துரியோதனனின் பேச்சில் குறுக்கிட்டது.  “குரு வம்சத்தினரின் ராஜசபைக்கு, யாதவ குலத் தோன்றலும், வீரனும் ஆன கிருஷ்ண வாசுதேவனின் எந்தச் செய்தியானாலும் வரவேற்கப் படுகிறது.   விதுரா, தேவபாகனின் மகன் உத்தவனை சபைக்குள் வர அநுமதி கொடு.  அவனை அழைத்து வா.  நாம் அவனைச் சந்திக்க ஆவலோடும், மகிழ்வோடும் காத்திருக்கிறோம்.”  என்றார்.

துரோணாசாரியாரின் தலை மட்டும் அல்ல, மனமும் சுழன்றது.  அவர் தன்னுடைய கடைசி எச்சரிக்கையைக் கொடுக்க நினைத்திருந்தது, விதுரரின் வரவால் தடைப்பட்டு விட்டது.  உத்தவன் வருவதற்கு முன்னால் அதைச் சொல்லிவிடலாம் தான்;  சாதாரண சமயமாக இருந்திருந்தால் அவ்விதம் சொல்லியும் இருப்பார்.  ஆனால்,  ஆனால்……..அவன் கிருஷ்ண வாசுதேவனின் பெயரை அன்றோ கூறியுள்ளான்.  அவர் மனதில்  இந்தச் செய்தி ஏற்படுத்திய தாக்கத்தை என்னவென்று சொல்வது!  குறுகுறுத்தது அவருக்கு.  அனைவரும் அதிசயிக்கத் தக்க விதத்தில் வாசுதேவன் இதில் தலையிடப் போகிறானா?  என்ன நடக்கப் போகிறது?  துரோணர் காத்திருந்தார்.


6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அனைவரும் அதிசயிக்கத் தக்க விதத்தில் வாசுதேவன் இதில் தலையிடப் போகிறானா? என்ன நடக்கப் போகிறது? துரோணர் காத்திருந்தார்.//

நாங்களும் காத்திருக்கிறோம்.

ஸ்ரீராம். said...

வாசுதேவக் கிருஷ்ணன் பெயரைக் கேட்டதுமே முகம் சுளிக்கும் இதே 'துரி' தான் பின்னர் பாரதப் போரில் அவன் படைகளைக் கேட்க அவனை நாடிச் செல்கிறான்! ம்... உத்தவன் கொண்டு வந்திருக்கும் செய்தி என்னவென்று அறியக் காத்திருக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

பரபரப்பான நேரம்..!

sambasivam6geetha said...

வைகோ சார், வாசுதேவன் அப்படி எல்லாம் யோசிக்காமல் செய்வானா என்ன?

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், அது வேறே, இது வேறே! இல்லையா?

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, பரபரப்புத் தான்.