Friday, November 22, 2013

குருவின் பேச்சும், துரியோதனன் மறுப்பும்!

"நாகர்களில் சிறந்தவனும், நாகர்களின் தலைவனுமான  கார்க்கோடகனின் கருத்தும் அதுவே, பாட்டனாரே!” என்றான் உத்தவன்.  “அவர் கூறுவது: ‘என் மகன் மணிமான் சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர், செகிதனாவுடன் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமரையும் உபசரிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புகிறான்.  அவர்கள் காம்பில்யத்துக்குச் செல்லும் வழியில் அவர்களை நாககூடம் வரை வந்து செல்லுமாறும் அழைப்பு விடுத்துத் தானே அருகிருந்து அழைத்து வரவும் விரும்புகிறான்.”

“இவை விசித்திரமான செய்திகள்!” திருதராஷ்டிரன் கூறினான்.

அதற்குள்ளாக துரியோதனன் பாய்ந்தான்.  “தந்தையே, இவை தூதுச் செய்திகள் அல்ல!  நமக்கிடப்பட்டிருக்கும் கட்டளைகள்!”  அவன் ரத்தம் கொதித்தது.  தேவையற்ற  இந்த வேண்டுகோள்களை நினைத்து நினைத்து அவன் மனம் கொதித்தான்.  ஆனால் பெரியோர்கள் நிறைந்த சபையில் கடைப்பிடிக்கவேண்டிய குறைந்த பட்ச மரியாதையை அவன் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டி இருந்தது.  அதோடு அவன் யோசனைகளும் கருத்துக்களும் உடனடியாக நிராகரிக்கப்படும் நிலையும் இருக்கிறது. நிராகரிக்கப்படலாம் தான்!  பற்களைக் கடித்தான் துரியோதனன்.  “இது நமக்கு ஏற்பட்ட இழுக்கு!’  கத்தினான் கர்ணன்.  அவன் கோபமும் எல்லை கடந்தது.  தன்னிச்சையாக அவன் கைகளும் உடைவாளுக்குச் சென்றன.

“புஷ்கரத்தை நாம் திரும்பக் கொடுக்கக் கூடாது!” திட்டவட்டமாக அறிவித்தான் துரியோதனன்.  சபைக்குக் கொடுக்க வேண்டிய சிறிதளவு  மரியாதை  இல்லாமல் பேசப்பட்ட இந்தப் பேச்சுக்களைத் தன் ஒரு கையசைவால் நிராகரித்தார் பீஷ்மர். இளைஞர்கள், பேசத் தெரியாமல் பேசுகின்றனர்!  அப்போது மீண்டும் பேச ஆரம்பித்தான் உத்தவன்.

 “மாட்சிமை பொருந்திய பாட்டனாரே!  கிருஷ்ண வாசுதேவனின் செய்தி முடியவில்லை.  அவன் இன்னமும் என்ன சொல்லி இருக்கிறான் எனில், யாதவர்கள் எவருக்கும் குரு வம்சத்தினருடன் போர் தொடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை.  புஷ்கரத்தில் தங்கிய பின்னர் நாங்கள் அனைவருமே காம்பில்யத்தில் நடைபெறப் போகும் சுயம்வரத்திற்குச் செல்லப் போகின்றோம்.  செகிதனாவுக்கும் அழைப்பு வந்திருப்பதால் அவனும் வருவான்.  மணிமானுக்கும் அழைப்புப் போயிருப்பதால் அவனும் வருவான். ஆகவே இயல்பாகவே நாங்கள் எவரும் புஷ்கரத்தில் ஒரு போர் நடைபெறுவதை விரும்பவே இல்லை.”  என்றான்.

தன்னிரு கரங்களையும் விரித்த வண்ணம் பெரிதாகப்புன்னகை புரிந்தான் ஷகுனி.   அவன்”ஓஹோ, அது தான் உங்கள் விருப்பம் எனில் எங்களுடைய விருந்துபசாரத்தை ஏற்பதே அனைத்திலும் சிறந்த வழி!  கிருஷ்ண வாசுதேவனின் விருப்பத்தையும், வேண்டுகோளையும், மாட்சிமை பொருந்திய மன்னர் மறுக்க வேண்டும் என நினைக்க மாட்டார்.  அவர் அதை விரும்பவும் மாட்டார்.  இருவருக்கும் இடையில் சிறந்த நட்பு இருக்கிறதே!” என்றான்.  ஷகுனியை இரக்கத்துடன் பார்த்த பாட்டனர் பீஷ்மர், உத்தவனின் பதிலை எதிர்நோக்கி அவன் பக்கம் திரும்பினார்.  உத்தவனோ, “மன்னா, மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, நாங்கள் எதிர்பார்ப்பது வெறும் விருந்துபசாரம் மட்டும் இல்லை;  அப்படி வெறும் விருந்து உபசாரத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தால்  இந்தச் செய்திகளைக் கிருஷ்ணன் அனுப்பியே இருக்க மாட்டான். “

இதைக் கேட்டதுமே துரியோதனன் தன் மூர்க்கத்தனம் வெளிப்படும் வண்ணம், “அப்போது நாங்கள் கிருஷ்ணனின் வேண்டுகோளை நிராகரிப்பது தவிர வேறு வழியில்லை!” என்றான்.

உத்தவன் மன்னன் பக்கம் திரும்பினான். “இனி உங்கள் விருப்பம் மன்னா, வேண்டுகோளை ஏற்பதோ, அல்லது நிராகரிப்பதோ உங்கள் விருப்பம். வாசுதேவனுக்கு இப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்ததால், உங்களால் செய்ய முடியும் என அவன் நினைத்ததால் இந்த வேண்டுகோளை என் மூலம் கேட்டிருக்கிறான்.  சாத்யகி, யாதவ வீரர்களின் பொறுக்கி எடுத்த சிறந்த அதிரதர்களுடன் ஏற்கெனவே புஷ்கரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.  புஷ்கரத்தின் காவலன் செகிதனாவும், நாக நாட்டு இளவரசன் மணிமானும் யமுனையைக் கடந்து புஷ்கரத்துக்குள் நுழையச் சென்று கொண்டிருக்கின்றனர்.”

“என்ன,எங்களை மிரட்டிப் பார்க்கிறாயா?  அதுவும் குரு வம்சத்திலேயே சிறந்தவரை? எங்களை மீறிப் போர் புரிவாயா?” ஆத்திரம் பொங்கக் கேட்டான் துரியோதனன்.  “நாங்கள், யாதவர்கள் போரை விரும்பவில்லை.  குரு வம்சத்தின் சிறந்த மன்னனும், தர்மத்தை நிலை நாட்டுவதில் சிறந்தவருமான பாட்டனார் பீஷ்மரும் சேர்ந்து ஏற்கெனவே நடந்து விட்ட ஒரு தவறைத் திருத்தத் தான் வேண்டுகிறேன்.”

“பாட்டனாரே, நாம் கிருஷ்ணனால் கட்டளை இடப்பட வேண்டுமா?  கூடாது!” என்றான் துரியோதனன்.  பின்னர் ஆசாரியர் துரோணர் பக்கம் திரும்பி, “ஆசாரியரே, புஷ்கரத்தை நோக்கிச் செல்ல நம் படையைத் தயார் செய்யுங்கள்!”என்றான்.  துரியோதனனைப் பார்த்து விசித்திரமாகச் சிரித்தார் துரோணர்.  பின்னர் அவனை ஒரு விசித்திரமான பார்வை பார்த்துக் கொண்டே, “துரியோதனா, நீ சுயம்வரத்துக்குச் சென்று திரெளபதியை உனக்கு மணமகளாக்க விரும்புகிறாய்.  அதே போல் யாதவர்களும் விரும்புகின்றானர்;  அரசன் செகிதனா; இளவரசன் மணிமான். இவர்களும் விரும்புகின்றனர்.  சுயம்வரத்துக்குச் செல்லும் அரசர்களோடு எல்லாம் நீ போர் புரிய முடியுமா?  திரெளபதியை நீ ஜெயிக்க வேண்டுமெனில் சுயம்வரத்தில் தான் போட்டியே தவிர செல்லும் வழியில் இல்லை!” என்றார். ஒரு தந்தை மகனுக்குச் சொல்லும் அறிவுரை என்ற தொனியில் அவர் பேசினாலும் அதிலிருந்த ஏளனம் புரியும்படி அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

“சுயம்வரத்தில் என்ன நடந்தாலும் அது குறித்த கவலை எனக்கில்லை! வாசுதேவனின் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சி செகிதனாவுக்குப் புஷ்கரத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது.  அவன் வேண்டுகோளை நிராகரிப்போம்!” என்று தன் தொடைகளில் கைகளை ஓங்கித் தட்டிய வண்ணம் கூறினான் துரியோதனன்.  துரோணர் தன்னுடைய கம்பீரமான குரலில் ஒரு குருவின் தகுதியுடன் அவனுக்கு ஆலோசனை கூறும் உரிமை தனக்கு இருப்பதால் அவனிடம் திட்டவட்டமாகக் கூறினார்;” தவறாக ஒரு காரியத்தைச் செய்வது வீரத்துக்கு இழுக்கு.  இதன் மூலம் ஒரு நாயகனாக நீ ஆக இயலாது.  தர்மத்தைக் காக்கவென்று சிறிது வளைந்து கொடுப்பதால் எந்தவிதமான அவமானமும் ஏற்பட்டு விடாது!”  என்றார்.




8 comments:

ஸ்ரீராம். said...

இந்தக் காலத்தில் ஆள்பவர்களுக்கு அமைச்சர்கள் இப்படி தைரியமாக அறிவுரையோ, யோசனையோ சொல்ல முடிந்தால்.....?

இராஜராஜேஸ்வரி said...

குருவின் பேச்சும், துரியோதனன் மறுப்பும்!

பரபரப்பான காட்சிகள்..!

இன்னம்பூரான் said...

பீஷ்மரின் கண்ணசைவும், துரோணரின் உரிமைக்குரலும் நீதி சாரம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//” தவறாக ஒரு காரியத்தைச் செய்வது வீரத்துக்கு இழுக்கு. இதன் மூலம் ஒரு நாயகனாக நீ ஆக இயலாது. தர்மத்தைக் காக்கவென்று சிறிது வளைந்து கொடுப்பதால் எந்தவிதமான அவமானமும் ஏற்பட்டு விடாது!”//

துரோணர் சொல்லியுள்ளது நல்ல அறிவுரை. ஆனால் அவன் கேட்பானா?

அடுத்த பகுதியில் பார்ப்போம்.

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், அதெப்படிச் சொல்ல முடியும்? முடியாது. அந்த இடத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள். அவங்க அமைச்சர்களுக்கு எடுத்துச் சொல்லணும். அமைச்சர்கள் தானே இப்போ ஆள்பவர்கள்! :))))

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி

sambasivam6geetha said...

"இ"சார், நன்றி.

sambasivam6geetha said...

வைகோ சார், அடுத்த பகுதியில் பார்ப்போம். :)