Monday, November 25, 2013

உத்தவன் சத்யவதியைச் சந்திக்கிறான்!

ஆசாரியரின் குரலும், பார்வையுமே பார்த்தாலே ஒரு கெளரவத்தைக் கொடுக்கும் வண்ணம் மாறிக்காணப்பட்டது.  அந்த கம்பீரம் குறையாமலேயே அவர், மேலும் பேசினார்; “ துரியோதனா, ஏற்கெனவே உன்னிடம் செகிதனாவைப் புஷ்கரத்திலிருந்து விரட்டி அடித்ததைத் தவறென்று கூறினேன். அரசியல் ரீதியாக அது தவறே.  மாபெரும் தவறு.  ஏனெனில் ஒரு நல்ல நண்பனை நீ விரோதியாக்கிக்  கொண்டு  விட்டாய்.  தவறான முற்றுகை.  புஷ்கரத்தை முற்றுகையிட்டதும் அதை எடுத்துக்கொண்டதும் ஒரு தவறான முன்னுதாரணம்.  இப்போதோ, கிருஷ்ண வாசுதேவன் போன்றதொரு பெரிய தலைவன் சொல்லும் நட்புக் கலந்த அறிவுரையையும் ஏற்க மறுக்கிறாய்.  அதற்கு மதிப்புக் கொடுக்க மாட்டேன் என்கிறாய். கிருஷ்ண வாசுதேவனால்   ஒரு மாபெரும் தவறைச் சரியாக்குவதற்கு, நமக்குக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.  அதை நீ மறுக்கிறாய்.   அடிப்படையில்லாமல் செய்யப் பட்ட ஒரு போரிலிருந்தும், மாற்றக் கூடிய ஒரு அரசியல் சூழ்நிலையிலிருந்தும் கெளரவமாக நம்மை மீட்டுக் கொள்ள இயலும்.  இதையும் நீ காண மறுக்கிறாய்.   வாசுதேவனின் இந்த வேண்டுகோளை ஏற்கும்படி பிதாமகர் பீஷ்மரிடம் நான் பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.”

மிகக் கடுமையாகவும், அதே சமயம் கோபத்தோடும், “எனில் நீங்கள் போர் புரியப் போவதில்லையா?” என்று துரியோதனன் கேட்டான்.  ஆசாரியர் நிதானமாக, “உனக்கு வேண்டுமானால் நீ போர் புரிந்து கொள்.  எனக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.   எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.  பாட்டனார் பீஷ்மரும் என்னைப் போலவே இதே எண்ணத்தோடு இருப்பார் என்று எண்ணுகிறேன்.” என்றார் துரோணர்.

“நீர் சொல்வது அனைத்தும் சரியானதே, ஆசாரியரே!  “என்ற பீஷ்மர் எப்போதும் போல் தன் கரத்தைத் தூக்கி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.  “நாம் தர்மத்தின் பாதையிலிருந்து நழுவக் கூடாது.  காரணமே இல்லாமல் போர் புரியவும் கூடாது.  அநாவசியமாக ஒரு நாட்டை முற்றுகையிடவும் கூடாது.  உத்தவா, என்னுடைய ஆசிகளைக் கிருஷ்ண வாசுதேவனுக்குத் தெரிவிப்பாய்.  புஷ்கரத்தை மீண்டும் அதன் மன்னன் செகிதனாவுக்கே திருப்பிக் கொடுக்கிறோம் எனவும் கூறு.  மேலும் தக்க மரியாதைகளோடு நாங்களும் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமனையும் வரவேற்கும் நிகழ்ச்சியில் செகிதனாவுடன் கலந்து கொள்கிறோம் என்பதையும் தெரிவிப்பாய். "

"ஆசாரியரே, இப்போது தான் நீங்கள் சொன்னீர்கள்.  சுயம்வரத்துக்குச் செல்லும் அரசன், இளவரசன் ஆகியோருடன்  யுத்தம் செய்வது சரியல்ல என்றீர் அல்லவா?” இதைச் சொல்கையில் விதுரனைக் குறிப்பாகப் பார்த்தார் பீஷ்மர்.  “இப்போது யுத்தம் ஒன்றும் இல்லை என்பதால், துரியோதனன், மற்றும் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போகும் அனைத்து இளவரசர்களையும் ஏற்று ஆசீர்வதிப்போம்.  துரியோதனன் செல்வதையும் ஒத்துக் கொள்வோம்.  அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அறியோம்.  அந்தக் கடவுள் என்ன நினைக்கிறாரோ என்பதையும் நாம் அறியோம்.  இறை அருளால், அனைத்தும் நலமாக நடக்கும் என நம்புவோம்.”

ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் துரோணருக்குப் பளிச்சென அனைத்தும் விளங்கிற்று.  துரியோதனனுக்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும்.  அது மிகவும் முக்கியமான ஒன்று.  யாதவர்களில் பொறுக்கி எடுத்த அதிரதர்கள் சுயம்வரத்துக்குச் செல்லுகின்றனர்.  அவ்வளவு அதிரதர்கள் தங்கள் முழு பலத்தையும் காட்டும்போது துரியோதனனால் அவ்வளவு எளிதாக திரெளபதியை சுயம்வரத்தில் வெல்ல முடியாது. கிருஷ்ண வாசுதேவன் திரெளபதியை ஏற்க மறுத்தாலும், பலராமன் ஏற்க மறுத்தாலும் சரி, அல்லது சாத்யகி, கிருதவர்மன் போன்ற திறமைசாலிகளால் கூட ஏற்க முடியவில்லை எனினும் சரி, துரியோதனனுக்கு வெற்றி அடையும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.  அப்படி அவனால் திரெளபதியை வெல்ல முடியவில்லை என்றாலும் அதனால் அவமானம் ஒன்றும் அடையப் போவதில்லை.

 துரோணருக்கு உள்ளூர துரியோதனன் சுயம்வரத்துக்குச் செல்வது பிடிக்கவில்லை என்றாலும் இத்தனையையும் மீறி அவனால் திரெளபதியை வெல்ல முடியாது என்ற அளவில் நம்பிக்கை பிறந்தது.  குரு வம்சத்தின் யுவராஜாவாக, அடுத்த பட்டத்துக்குத் தயார் நிலையில் துரியோதனன் இருக்கும் வரையில் குரு வம்சம் முன்னேற முடியாது.  அதுவும் இப்போதோ கிருஷ்ண வாசுதேவன் போன்ற திறமைசாலிகளின் அதிகார எல்லை விரிவடைந்து கொண்டிருக்கிறது.  ஆர்ய வர்த்தத்தின் பல அரசர்களுக்கும் ஆலோசனைகள் கூறும் தகுதியை கிருஷ்ண வாசுதேவன் அடைந்திருக்கிறான்.  அரியணை இல்லாமல், யுவராஜா பட்டம் இல்லாமல்.  என்றால் அவன் திறமை தான் எவ்வளவு போற்றக் கூடியது!


கிருஷ்ண வாசுதேவனால்  அவன் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கச்சிதமான உடன்பாட்டினால் கிழக்கே மகத நாட்டின் ஜராசந்தன் போர் தொடுத்தாலும், இங்கே காம்பில்யத்தில் துருபதனின் நட்பான உடன்படிக்கையாலும்,  தர்மத்தின் அவதாரமே கிருஷ்ண வாசுதேவன் என நினைக்கும் பீஷ்மப் பிதாமகரின் ஆதரவாலும் கிருஷ்ண வாசுதேவனின் அதிகார எல்லை எவ்வளவு தூரத்துக்குச் செல்லும் என்பதை இப்போதே சொல்ல முடியாது. அதோடு மட்டுமா?  கிருஷ்ணன் தன்னிடம் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தாலும் அவன் இன்னமும் தன் அதிகார எல்லையை விஸ்தரிப்பதோடு அவரை முடிசூடாச் சக்கரவர்த்தியாக ஆக்கிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான் போல் உள்ளது.  ஆகவே கிருஷ்ண வாசுதேவனோடு நட்புரிமை பாராட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்வது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் லட்சியத்துக்குச் சரியாக வராது. மீண்டும் ஒரு புன்னகை புரிந்து கொண்டார் துரோணர்.  துரியோதனனைப் பார்த்தும் இகழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டார்.


பீஷ்மப் பிதாமகரைப் பார்த்து மரியாதையுடன் பேசலானார்: “ பிதாமகரே, புஷ்கரத்தை செகிதனாவுக்கு மீண்டும் கொடுக்கப் போவது உண்மை எனில், கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் உங்களால் அங்கே மரியாதைகளும், விருந்துபசாரமும் கொடுக்கப் போவதும் உண்மை எனில், அங்கே உங்கள் சார்பில் நான் சென்று அந்நிகழ்ச்சிகளை நடத்தித் தரட்டுமா?  எனக்குப் போக அநுமதியைப் பிதாமகர் கொடுப்பார் என எண்ணுகிறேன்.”  என்றார்.

“அப்படியே ஆகட்டும், ஆசாரியரே!  எங்கள் சார்பில் நீர் செல்லலாம்.” என்றார் பீஷ்மர்.

ராஜசபை கலையும்போது அரண்மனை ஊழியர் ஒருவர் வந்து, விதுரரிடம், “ப்ரபுவே, மாட்சிமை பொருந்திய மஹாராணி அம்மா தன் பூஜையை முடித்துக் கொண்டு ஓய்வாக இருக்கிறார்கள். உத்தவனைத் தன்னிடம் அழைத்து வருமாறு உங்களிடம் கூறச் சொன்னார்கள். “ என்றார். உத்தவனைக் குறிப்பாகப் பார்த்தார் விதுரர். உடனடியாக இருவரும் மஹாராணி சத்யவதியைப் பார்க்க அவள் அரண்மனைக்குச் சென்றனர்.

திருதராஷ்டிரனுடைய பாட்டியும், சந்தனுவின் ராணியுமான சத்யவதி தன்னுடைய வழக்கமான சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள்.  அந்த முதுமைப் பிராயத்திலும் ஒளிர்ந்த அவள் அழகுத் தோற்றம் பார்ப்பவர் மனதில் கண்ணியத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தி அவள் சாந்தமான முகபாவம் அமைதியையும் ஏற்படுத்தியது.  தன் நளினமான கையசைவால் விதுரரையும், உத்தவனையும் வரவேற்றாள் ராணி சத்யவதி.  மஹாராணியை உத்தவன் பார்ப்பது இது இரண்டாம் முறை.  அவள் இளமையில் வசீகரமாக இருந்தது போலவே இப்போது முதுமையிலும் குறையாத வசீகரத்துடன் அனைவரையும் கவர்ந்து கொண்டிருப்பதை உத்தவனால் உணர முடிந்தது.   திடமும், உறுதியும் கொண்ட அவளின் நல்ல மனோபாவத்தால் அம்பிகையின் கருணையைப் போல் அவளிடமும் கருணை நிறைந்திருந்தது.  உத்தவன் அவளைக் குனிந்து வணங்கும் அந்தச் சிறிய நேரத்துக்குள்ளாக அவன் மனதில் அவளின் வாழ்க்கைச் சித்திரம் முழுதும் ஓடியது.

ஒரு காலத்தில் மீனவளாக இருந்த இந்தப் பெண்மணி தன் அழகால் சந்தனுவை வசீகரித்து மணந்து ராணியானதும் அல்லாமல், இப்போது அனைவரும் வணங்கும் புனிதவதியாகவும் ஆகிவிட்டாளே, இவளுடைய தரிசனத்துக்காகப் பலர் காத்திருக்கையில் தனக்கு இவள் தரிசனம் கொடுத்து விட்டாளே என்ற நினைப்பில் கண்களும் கசிந்தன உத்தவனுக்கு.

“தேவபாகனின் மகனே! எப்படி இருக்கிறாய்?  நலமாக இருக்கிறாயா?  நீ நாக நாட்டில் இருந்து வருவதாய்க் கேள்விப் பட்டேனே! உன் மாமனாரும் மற்றோரும் நலமா?” என்று தன் மாறாத இனிமைக் குரலில் கேட்டாள் ராணி சத்யவதி.  “அனைவரும் நலம் தாயே!  அரசர் கார்க்கோடகர் தன் நமஸ்காரங்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்.  இளவரசிகளான என் இரு மனைவியரும் தங்கள் நமஸ்காரங்களை உங்களுக்குத் தெரிவித்தனர்.  வசீகரமாய்ச் சிரித்தாள் சத்யவதி.  அந்தச் சிரிப்பைக் கண்ட உத்தவன், இவள் இளமையில் இந்தச் சிரிப்பால் எத்தனை பேரை வசீகரித்திருப்பாள் என எண்ணினான்.  எல்லாவற்றுக்கும் மேல் இந்தச் சிரிப்பு ஒன்றாலேயே ராஜா சந்தனுவை இவள் ஆட்சி செய்திருப்பாள் எனவும் எண்ணினான்.

“என்ன செய்தி கொண்டு வந்தாய்?” குறிப்பாய்க் கேட்டாள் ராணி சத்யவதி.  உத்தவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான சம்பவங்களின் கோர்வை ரசிக்கவைக்கிறது ..!

ஸ்ரீராம். said...

ஒரு காரியம் நடப்பதைப் பற்றிப் பேசும்போது எத்தனை விஷயங்களை யோசிக்கிறார்கள் என்பது மட்டுமின்றி, அவரவர் அவரவர் தகுதி, பார்வைக்கேற்ப யோசிக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“நாம் தர்மத்தின் பாதையிலிருந்து நழுவக் கூடாது. காரணமே இல்லாமல் போர் புரியவும் கூடாது. அநாவசியமாக ஒரு நாட்டை முற்றுகையிடவும் கூடாது. உத்தவா, என்னுடைய ஆசிகளைக் கிருஷ்ண வாசுதேவனுக்குத் தெரிவிப்பாய். புஷ்கரத்தை மீண்டும் அதன் மன்னன் செகிதனாவுக்கே திருப்பிக் கொடுக்கிறோம் எனவும் கூறு. மேலும் தக்க மரியாதைகளோடு நாங்களும் கிருஷ்ண வாசுதேவனையும், பலராமனையும் வரவேற்கும் நிகழ்ச்சியில் செகிதனாவுடன் கலந்து கொள்கிறோம் என்பதையும் தெரிவிப்பாய். "//

பீஷ்மர் மிகவும் அழகாகப்பேசியுள்ளார்.

பகிர்வுக்கு நன்றிகள்.